All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 25

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

அத்தியாயம்: 25

 

மீண்டும் புயல் காற்றில் கொடி பறப்பது போல் வந்த குறுஞ்செய்தி கோகோவிற்கு அழைப்பு விடுக்க வைத்தது இளவேந்தனை. 

 

"இன்னைக்கி என்ன பண்ணி வச்சி ரிபேக்காட்ட திட்டு வாங்கின." 

 

"நா எதுவுமே பண்ணல அத்தான். ஆனா என்னோட கெட்ட நேரம்ன்னு நினைக்கிறேன். என்னோட ராஜ மாதாட்ட திட்டு வாங்கிக்கிட்ட இருக்கேன்." என்றாள் சோகமாக.

 

"முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு. கெட்ட நேரம் நல்ல நேரம்ன்னு நீ பண்ணி வச்சதுக்கு அது மேல பழிய போடாத."

 

"இன்னைக்கி ஒரு ஆர்ட் கேலரி சம்மந்தமா ஒரு மீட்டிங்."

 

"லேட்டா போய்த் திட்டு வாங்குனியா?" 

 

"நா பேசுறத நீங்க முழுசாவே கேக்க மாட்டேங்கிறிங்க அத்தான்." எனக் குறைபட, 

 

"சரி சொல்லு." 

 

"கரெக்ட்டான டயத்துக்கு தான் போனேன். ஆக்சலி எனக்கும் அந்த மீட்டிங்கும் சம்மந்தமே கிடையாது. 'சீட் காலியா இருக்கு. கூட்டமா இருந்தாத்தா க்ளைண்ட் மனச குளிர வைக்க முடியும்' ன்னு சொல்லி வனிஷா என்ன ஹால்குள்ள உக்கார வச்சா. சரி நானும் நாற்காலில உக்காந்து என்னோட ராஜ மாதா இங்கிலீஷ்ல பேசுற அழக ரசிச்சி பாத்திட்டு இருந்தேன். 

 

அப்ப என்னோட லாப்டாப் என்னோட அனுமதியே இல்லாம சத்தம் குடுத்திருச்சி. ஒரு ஃப்லோல நல்லா பேசிட்டு இருந்தவங்க டிஸ்டர்ப் ஆகிட்டாங்க போல. அவங்க மட்டுமில்லாம வந்தவங்களும் டென்ஷனாகி எழுந்து போய்ட்டாங்க. நா சும்மா தா இருந்தேன். ஆனாலும்... ச்ச... இப்படி ஆயிடுச்சி." 

 

"வேலைய விட்டுத் தூக்கிட்டாளா."

 

"இல்ல. நிறைய வேல குடுத்திருக்காங்க." 

 

"புரியுற மாறிச் சொல்லு கோகிலா."

 

"என்னால தான் க்ளைண்ட் காண்டாகிட்டாங்க. அதுனால அந்த ஆர்ட் கேலரி ஈவென்ட்ட எங்கிட்ட குடுத்து அத சரியா பண்ணலன்னா வேலைய விட்டு அனுப்பிடுவேன்னு மிரட்டிருக்காங்க அத்தான்." என்க சிரித்தான் இளா. 

 

"எனக்கு உதவி பண்ணுங்க அத்தான். ஒரு ஈவென்ட்ட நடத்த என்னென்ன பண்ணனும்." எனக் கொஞ்சும் குரலில் கேட்க, வழக்கம்போல் உதவினான்.

 

என்ன நடந்ததென்றால்...

 

கோகோவிற்கு நன்றி சொல்லிய ரிபேக்காவின் புன்னகைத்து முகம் ப்ரியங்காவிற்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும். அவள் வனிஷாவிடம் கண் காட்ட, அவள் கோகோவின் லேப்டாப்பில் எதையோ நோண்டி வைத்தாள். சரியாக க்ளைண்ட்டை பேச அழைக்கும் நேரம் அவர்களின் தொண்டு நிறுவனத்தைக் கெட்ட கெட்ட வார்த்தைகளால் மராத்தியில் திட்டுவது போன்ற ஆடியோ ப்ளே ஆகியது. 

 

அதைக் கேட்ட க்ளைண்ட் கோவமாகி வெளியே செல்ல, ரிபேக்கா கோகோவை காற்றில் கந்தல் துணியாய் பறக்க விட்டாள். 

 

ப்ரியங்கா, "எதுக்கு இந்த வேஸ்ட் லக்கேஜ்ஜ இன்னும் நம்ம கூட வச்சிருக்கனும். துரத்தி விடு." என்க மனம் வரவில்லை ரிபேக்காவிற்கு. 

 

இவளைத் தன்னிடம் யாரோ அனுப்பியிருக்க வேண்டும். யார் அது என்று தெரியும் வரை கோகோ இங்குத் தான் இருக்க வேண்டும் என்று ப்ரியங்காவை அடக்கினாள்.

 

அந்த ஈவன்ட்டை கோகோவிடம் ஒப்படைத்து, ‍"இந்த ஈவெண்ட சிறப்பா பண்ணா அந்தச் சாரிட்டி ஓனர் மிஸஸ் மாதரிக்கா நமக்கு க்ளைண்ட்டாக வாய்ப்பிருக்கு. அப்படி வந்தா அது உன்னோட முதல் க்ளைண்ட் அகௌண்ட்." என்க.

 

'எது! முதல் க்ளைண்டா!. இதோ வர்றேன்.' என்ற கோகோ தீயாய் இறங்கி விட்டாள் மிஸஸ் மாதரிக்காவை பிடிக்க.  

 

இரவு பகலாக அதற்கான பணியில் இருந்தவள் சத்யாவை சைட் அடிப்பதை கூட மறந்து விட்டாள் என்றால் பாருங்களேன். 

 

"அப்படிலாம் ஒன்னுமில்ல இல்ல. நா சைட் அடிச்சிட்டு தான் இருக்கேன். என்ன ஒன்னு நைட்டு அவங்கூட சேந்து சாப்பிட முடியல. அவ்ளோ தான். மத்தபடி ட்ரெயின்ல பேசிட்டேதா போவோம். 

 

விருது வாங்குறது என்னோட கனவு. பட் சத்யாவ சைட் அடிக்கிறது என்ன கடமை. கடமைய கொஞ்ச காலம் தள்ளிப் போட்டிருக்கேன். அவ்ளோ தான். இந்த ஈவெண்ட் முடியவும் முழு நேரமும் சைட் அடிப்பேன்." என்ற கோகோ, 

 

‘லேட்டாச்சி சத்யா. ப்ளீஸ்.’ என்று தினமும் அவனின் வீடு புகுந்து குளிக்கிறேன் என்ற பெயரில் காலைப் பொழுதைக் கலவரப்பொழுதாக மாற்றி விட்டுத் தான் செல்வாள். 

 

"எல்லாமே பாக்க அட்ராக்டிவ்வா இருந்தாத்தா தான் ஆர்ட் கேலரிய பாக்க கூட்டம் வரும். இது என்னோட திறமைய கட்டவிழ்த்து விட வேண்டிய நேரம்." எனக் கங்கணம் கட்டிக் கொண்டு லேப்டாப்பில் மூழ்கிக் கிடந்ததன் பலன் நேற்று கிடைத்துள்ளது.

 

அவளின் முதல் ப்ராஜெக்ட் அது. பயமும் படபடப்பும் கோகோவிற்கு இருந்ததோ இல்லையோ இளவேந்தனுக்கு இருந்தது. 

 

என்ன செய்து வைத்துள்ளாள் என்று அறிய காலையில் அவளுக்கு அழைக்க, அது ஏற்கப்படவில்லை. 

 

‘பக்கி. நேத்து ஈவெண்ட் எப்படி நடந்ததுன்னு ஒரு வார்த்த சொல்றாளா பாரேன். வரவர இவளுக்கு நம்ம உதவி தேவப்படலயோ! புதுசா யாரையும் பிடிச்சிட்டாளா!’ எனப் புலம்பியபடி வேலைக்குச் சென்றான்.

 

இளா ப்ரஜித்துடன் ‘பேக்டரி விசிட்’டில் இருந்தான். முன்னே நடந்து கொண்டிருந்த ப்ரஜித்தின் பின்னால் செல்லாமல், தனியாகக் கலண்டு கொண்டு தொழிற்கூடத்தை விட்டு வெளியே வந்தவன், கோகோவிற்கு அழைத்துப் பேச, பாவம் அது துகிராவின் பார்வையில் விழுந்தது.

 

யாருக்கும் கேட்கா வண்ணம் ‘நேற்று நடந்தது என்ன’ என விசாரித்துக் கொண்டிருக்க, அவனின் அருகில் சென்று வெகுநேரமாக நின்றாள் துகிரா. அவனோ காதைக் கோகோவிடம் கொடுத்தால், குறுநகையுடன் அவளின் சாதனைகள் கேட்டுக்கொண்டிருந்தான்.

 

 

பார்த்தாள், அவன் திரும்பிப் பார்க்கவில்லை என்றதும் சென்று ப்ரஜித்திடம் போட்டுக் கொடுத்து விட்டாள் துகிரா. 

 

"வேந்தன் பீஏ வா வேலை பாக்குறாறா இல்ல வாட்ச் மென் வேல பாக்குறாறா. வாட்ச் மேன் வேலையா இருந்தாலும் வேலை நேரத்துல கேட் பக்கத்துல நின்னுட்டு ஃபோன்ல யார்கிட்டயோ கடல போட்டுட்டு இருக்குறது தப்பில்லயா ப்ரஜித்." என வத்தி வைக்க.

 

"மிஸ்டர் இளவேந்தன் என்ன பண்ணிட்டு இருக்கிங்க?." என்ற காட்டமாக ப்ரஜித்தின் குரல் தான் ஃபோனை ஆஃப் செய்து பேண்ட் பாக்கெட்டிற்குள் போட வைத்தது. 

 

ஆனாலும் கோகோவிடமிருந்து 'என்னோட சாகச கதைய பாதிலயே நிப்பாட்டுறது தப்பு அத்தான்.' என மெஸ்ஏஜ் வர, ப்ரஜித் அவனை முறைத்தான்.

 

"எங்கிட்ட வேல பாத்திட்டே பார்ட் டயம்மா இன்னும் எத்தன பேருக்குத் தா வேல பாப்பிங்க வேந்தன்." என நக்கலாகக் கேட்டான். 

 

"ஸாரி ஸார்." என்றபடி நிற்க, நம் கோகோ தான் பொறுமை என்ன விலை என்று கேக்கும் ரகமாயிற்றே. அனுப்பிய மெஸ்ஏஜிற்கு பதில் வரவில்லை என்றதும் அழைப்பு விடுக்கத் தொடங்கினாள்.  

 

"யாரு?... உன்னோட பழைய முதலாளியா?" 

 

"இல்ல ஸார்."

 

"அப்றம்"

 

"இது நா கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு." என்றான் துகிராவை பார்த்தபடி‌. 

 

அன்றைய நிகழ்விற்கு பின் அவளின் ஆர்வம் தன் மீது திரும்பியுள்ளது என்பதை உணர்ந்தவனுக்கு சந்தோஷ சாரல் என்று தான் சொல்ல வேண்டும். 

 

ஆனாலும் இந்த ஸ்மித்தா அவ்வபோது, தான் முதலாளியின் மாமியார் என்று போடும் அதிகாரத்தையும் அதற்கு மறுப்பு தெரிவிக்காது நிற்கும் துகிராவையும் பார்க்கும் சாரல், மணலில் விழுந்து வடு தெரியாது மறைந்து விடுகிறது. 

 

அத்தோடு அன்று தகுதியைப் பற்றிப் பேசி, சஜித்துடன் திருமணம் எனக் கூறியபோது உண்டான வலியை அவளுக்கே திரும்பித் தர நினைத்து, கோகோவிற்கும் தனக்கும் திருமணம் என்றான். 

 

அது சரியாக வேலை செய்தது. ஏனென்றால் அவன் சொன்னதும் விழிகள் அவளையும் அறியாது கோடிடத் தொடங்கியது. அதை அவனுக்குக் காட்டாது வேகமாக அங்கிருந்து சென்று விட, 

 

"மேரேஜ்..." என்றான் ப்ரஜித் இளவேந்தன் ஏற்ற இறக்கமாகப் பார்த்த படி. 

 

"ஏ நான் பண்ணிக்க கூடாதா சார்?."  

 

"தாராளமா பண்ணிக்கங்க வேந்தன். ஆனா இது என்னோட ஆஃபிஸ் டயம். உங்க வருங்கால மனைவி கூடக் காதல வளக்க என்னோட டயத்த எடுத்துக்குற உரிமைய யாரு குடுத்தா?."

 

"ஸார்." 

 

"ஆறு மணிக்கு மேல நல்ல நேரம் இருக்கு. அப்ப உங்க அன்ப பரிமாறிக்கங்க. இப்ப வாறிங்களா வேலைய பாக்கலாம்." என்றபடி விட்ட இடத்திலிருந்து பார்வையிடத் தொடங்க, அவனின் மனைவி வந்தாள் கோவமாக. 

 

"நா உங்கிட்ட பேசனும் ப்ரஜித்." என்றபடி அவனின் முன் வந்து நிற்க.   

 

அதைக் கண்ட இளவேந்தனுக்கு சிரிப்பு வந்தது. 

 

'நா ஆஃபிஸ் டயத்துல பர்ஷ்னல் கால் பேசினேன்னு திட்டினாரு. இப்ப அவரோட பர்ஷ்னலே நேர் வந்து நின்னு இன்டர்வியூ குடுக்குதே. அதுவும் கைக்கட்டி.' என நினைத்துக் கொண்டவன். 

 

"நா யூனிட்ட பாக்க போறேன் ஸார். நீங்கக் கேரி ஆன்." என நக்கலாகச் சிரித்தபடி சொல்லி நகர்ந்தவன் தூர நின்று இருவரும் சண்டை காட்சியைப் பார்க்கலானான். 

 

"என்ன வேணும் உனக்கு? எதுக்கு இங்க வந்த?." என்றான் காட்டமாக.

 

ஏனெனில் தொழிற்சாலைக்குள் அதுவும் ஆளை உருக்கும் வெப்பத்தில் எல்லாம் அவள் வந்ததே இல்லை. இதுவரை ஒன்றோ இரண்டோ முறை வந்திருக்கிறாள். அதுவும் இவனுடன் திருமணமாவதற்கு முன் நண்பனைக் காண அலுவலக அறைக்கு. 

 

இப்போது நேரில் வந்து நிற்கிறாள். 

 

ஏன்?

 

"உனக்குக் கோகோவ தெரியுமா.?"

 

"எது கோகோவா. அப்படின்னா!" என்றான் புருவம் சுருக்கி. 

 

"ம்ச்... கோகிலா. அது ஒரு பொண்ணு."

 

"ஓ... கோகோன்னா பொண்ணா. நாங்கூட மிட்டாய் பேருன்னு நினைச்சேன்." என்றவனை அவள்‌ முறைக்க. 

 

"நீ சொல்லித்தான் அது பொண்ணுன்னே எனக்குத் தெரியுது."

 

"எப்படி உனக்கு அவ கூடப் பழக்கம்?"

 

"வாட்!! பழக்கமா!! என்ன உளறிட்டு இருக்க. கிளம்பு இங்க இருந்து. அப்றம் போட்டிருக்குற மேக்கப்பு எல்லாம் உருகி ஊத்திடப் போது." என்றபடி நடக்க, அவனின் முன் வந்து கரம் விரித்தாள் ரிபேக்கா. 

 

"ப்ரஜி விளையாடாத. உன்னோட மேனரிசத்த காப்பி பண்ண மாறி ஒருத்தி வந்து நிக்கிறா. யாரு அனுப்பி வந்தான்னு இவ்ளோ நாளா சந்தேகத்தோட இருந்தேன். பட் இன்னைக்கி தான் க்ளியர் ஆச்சி நீ தா அவள அனுப்பிருக்க."

 

'எது!! யாருன்னே தெரியாத பொண்ண இவா முன்னாடி அனுப்பி வச்சேன்னா!' என்பது போல் பார்த்தவன்,

 

"உனக்கு இப்ப என்ன வேணும்?." 

 

"அவள உனக்கு எப்படி தெரியும்.? எப்படியும் நமக்கு டிவர்ஸ் கிடைச்சிடும்‌ன்னு உனக்காக அவள வர வச்சிருக்கியா!"

 

"நல்ல கற்பனை வளம். மண்டைல மூளை இருக்க வேண்டிய இடத்துல வளமான மண்ணு இருந்தா இப்படித்தா யோசிக்க தோனும்." என நக்கலாகக் கூறிய விலகி நடக்க, விடுவாளா அவள். 

 

அவனின் பின்னாலேயே சென்றவள், "என்னோட மெயில் பாஸ்வேர்டுல இருந்து பேங்க் பாஸ்வேர்டு வரை உனக்கு அத்துப்படி. ஒரு செக்யூரிட்டி அலார்ட் கூட வராம என்னோட ஐடில இருந்து உன்னால மெயில் அனுப்ப முடியும். உனக்கும் கோகோக்கும் என்ன சம்மந்தம்." என ஆவேசமாகக் கேட்டவளை ஆர்வத்துடன் பார்த்தான் ப்ரஜித். 

 

ஏனெனில் ரிபேக்காவின் கண்ணிலும் பேச்சிலும் இருந்தது,

 

பொறாமை….

 

மயக்கம் தொடரும்...

 

கருத்துக்களை பகிர: 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments/

This topic was modified 9 hours ago by VSV 11 – கள் விழி மயக்கம்

   
ReplyQuote

You cannot copy content of this page