பிரேமம் - 4
பேச்சுச் சுவாரஸ்யத்தில் ஷ்ராவனியை தவற விட்டிருந்த ரேஷ்மா இவர்களைத் தேடி கொண்டு இங்கு வந்து சேரவும், ஸ்ரீராம் தன் கையை விலக்கி கொண்டு ஷ்ராவனியை தண்ணீரில் விழ செய்யவும் சரியாக இருந்தது.
அதில் திகைத்து அப்படியே ஒரு நொடி நின்றவள், பின் பதறிக் கொண்டு ஷ்ராவனியை நோக்கி ஓடவும் ஸ்ரீராம் திரும்ப வெளிபக்கம் வரவும் சரியாக இருக்க.. “ஏய் பைத்தியமா உனக்கு..? எவ்வளவு திமிர் இருந்தா இப்படிச் செஞ்சு இருப்பே..?” எனக் கோபமாகக் குரல் எழுப்பினாள் ரேஷ்மா. அதில் தன் வேக நடையை நிறுத்தி அவளை ஒரு பார்வை பார்த்தவன், பதிலேதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
இதில் அவனைத் திட்டி கொண்டே தண்ணீரை ரேஷ்மா நெருங்கவும், திடீரென உள்ளே விழுந்த அதிர்விலிருந்து மீண்டு ஷ்ராவனியே நீந்தியவாறு மேலே வரவும் சரியாக இருந்தது.
“ராஸ்கல்.. காட்டுமிராண்டி..” என்றெல்லாம் தன் முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடியே வசைபாடி கொண்டே வந்தவளை வேகமாக நெருங்கினாள் ரேஷ்மா.
இப்போது இவளிடம் ஏதாவது கேட்டால் அவன் மேல் உள்ள கோபம் முழுக்க தன் மேல் திரும்பும் என்றுணர்ந்து அமைதியாகவே ஷ்ராவனியை அழைத்து கொண்டு சென்றாள் ரேஷ்மா.
ஏற்கனவே தன் விசாராணை சம்பந்தமாக வந்த வேலை முடியாமல் கடுப்பில் இருந்தவனைத் தன் பங்குக்கு வேறு கொஞ்சம் எரிச்சல்படுத்தி இருந்தாள் ஷ்ராவனி. “இ பிச்சி ராக்காஷி எந்துக்கனி நா வெண்ட்ட படுத்துன்னாயோ..?” (இந்தப் பைத்திய ராட்சசி எதுக்கு என் பின்னால் வருது..?) என்ற கேள்வியோடு சென்று தன் புல்லட்டில் ஏறியவனுக்கு அதன் பின் அதைப் பற்றி யோசிக்கக் கூட நேரமே இல்லாமல் போனது.
**************
கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது..
காலை வழக்கம் போல் தயாராகிக் கொண்டிருந்தவனை அவனின் அலைபேசி அழைக்க.. அதை எடுத்து பார்த்தவனின் முகம் யோசனைக்குச் சென்றது.
“என்ன காலையிலேயே கமிஷனர் கூப்பிடறார்..?” என்றெண்ணியவாறே எடுத்து “ஹலோ..குட்மார்னிங் சார்..” என்றான் ஸ்ரீராம்.
“குட்மார்னிங் மிஸ்டர் ராம்.. உங்ககிட்ட மினிஸ்டர் பேசணுமாம்..” என எடுத்தவுடன் அவர் விஷயத்திற்கு வரவும், “ஒகே சார்..” என நிலைமை உணர்ந்து உடனடியாகப் பதிலளித்து இருந்தான் ஸ்ரீராம்.
சில நொடிகளில் அவரும் இணைப்பில் இணைக்கப்பட.. “ம்க்கும்” என ஒரு சிறு கணைப்போடு பேச்சை துவங்கினார் மத்திய அமைச்சர் மாணிக்கவேல். “குட் மார்னிங் சார்..” என்று மரியாதையாகத் துவங்கினான் ஸ்ரீராம்.
“ஹ்ம்ம்.. உங்களுக்கு வேணும்னா இது குட் மார்னிங்கா இருக்கலாம், ஆனா எனக்கு இல்லை மிஸ்டர் ஸ்ரீராம்..” என்ற கவலை தோய்ந்த மாணிக்கவேலின் குரலில் மற்ற இருவரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது.
“இன்னையோட முப்பது நாள் ஆகுது.. வீட்டில் பூஜைக்கு எல்லா ஏற்பாடுகளும் நடக்குது.. மனசெல்லாம் அப்படி ஒரு வலி.. கோபம்..” என்றவரின் குரலே அவரின் மன வருத்தத்தைப் புரிய வைக்க.. “இன்வஸ்டிகேஷன்.. போயிட்டு இருக்கு சார்..” என்றார் கமிஷனர்.
“ப்ளீஸ் மிஸ்டர் பாஸ்கரன்.. எல்லார்கிட்டேயும் சொல்ற அதே பதிலை என்கிட்டேயும் சொல்லாதீங்க.. எனக்குத் தேவை ரிசல்ட்..” என்றார் மாணிக்கவேல்.
“பிராஸஸ் போயிட்டு இருக்கு சார்.. சீக்கிரம் நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் உங்களைத் தேடி வரும்..” என்றான் ஸ்ரீராம். “இதைச் சொல்லவா உங்களை என் இன்ப்ளூயன்ஸ் யூஸ் செஞ்சு ஸ்பெஷல் பெர்மிஷனோட இங்கே வர வெச்சேன்.. உங்க டிபார்ட்மெண்ட்ல நீங்க தான் ஸ்பீட் அண்ட் பெஸ்ட்னு எல்லாம் சொன்னாங்க.. ஆனா நீங்க வந்து இத்தனை நாள் ஆச்சு இன்னும் எந்த ஒரு தகவலும் எனக்கு வரலை.. இதுக்கா உங்களை வர வெச்சேன்..” என்றார் எரிச்சலோடு மாணிக்கவேல்.
அவரின் அந்த வார்த்தையில் சட்டெனக் கோபம் எழ.. “நேனா அடிகினா..” (நானா கேட்டேன்) எனத் துவங்கி அப்படியே நிறுத்தி “நான் உங்களை டிரான்ஸ்பர் செய்யச் சொல்லி கேட்கலை.. உங்க தேவைக்கு நீங்க செஞ்சதுமில்லாம இப்போ இதைச் சொல்லி என்னை அதிகாரம் வேற செய்யறீங்களா..?” என்றான் ஸ்ரீராம்.
அதில் அந்தப் பக்கமிருந்து ஒரு ஆழ்ந்த அமைதியே நிலவ.. கமிஷனருக்கு தான் தர்ம சங்கடமாய்ப் போனது. ஏனெனில் அவர் தான் மாணிக்கவேலிடம் ஸ்ரீராமின் பெயரை பரிந்துரைத்தது.
சில நிமிடங்களுக்கு மூவரிடமும் மௌனமே நீடிக்க.. “அருமை பெருமையா பெற்று வளர்த்த ஒரே மகளை இப்படி அல்பாயுசில் துள்ள துடிக்க அள்ளி கொடுத்துட்டு இருக்க வலியில் ஏதோ பேசிட்டேன் தம்பி.. மன்னிச்சிடுங்க.. இன்னைக்கு என் மகளுக்கு முப்பது கும்பிடறாங்க.. காலையில் இந்தக் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டு கிளம்பி போன பொண்ணு இராத்திரி எல்லாம் திரும்ப வரவே இல்லை..
தேடி அலைஞ்சு கலைச்சு போன நேரம் பொணமா வந்து சேர்ந்தா.. ஒரு அப்பாவா என் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா..? அந்த வலியில்.. காலையில் இருந்து கதறிட்டு இருக்க என் மனைவியைப் பார்த்த வருத்தத்தில் ஏதோ பேசிட்டேன்.. மனசில் வெச்சுக்காதீங்க.. வலி தம்பி வலி.. புத்திர சோகம் போல ஒரு வலி வேற எதுவுமில்லை.. எனக்கு அரசியலில் ஆயிரம் எதிரிங்க.. ஆனா இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன்..? யாரு..? எதுக்கு..?
இப்படிச் செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியணும்.. அதான் உங்களை இங்கே வர வெச்சேன்.. கோபத்திலும் வருத்தத்திலும் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்கங்க.. உங்களால தான் இது முடியும்னு தான் உங்களை இங்கே வர வெச்சேன்.. எப்படியாவது என் மகளுக்கு எமனானவனை மட்டும் என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திடுங்க தம்பி..” என்றார் அதீத வலியோடான குரலில்.
அதில் அவர் முன்பு பேசியதில் உண்டான கோபம் மெல்ல குறைய.. “முடிஞ்ச இடத்தில் இருந்து துவங்க கூடாது சார்.. முதலில் இருந்து துவங்கணும்.. அதான் லேட் ஆகுது.. ஆனா ரிசல்ட் சரியா வரும் சார் டோன்ட் ஒர்ரி..” என்றிருந்தான் ஸ்ரீராம்.
“அது போதும் தம்பி எனக்கு..” என்றவர் அழைப்பை துண்டித்து விட.. அவர் தன்னை அப்படி ஒருமையில் அழைத்துப் பேசியது ஸ்ரீராமுக்கு துளியும் பிடிக்கவில்லை என்றாலும் இன்றைய அவரின் மனநிலையை மனதில் வைத்தே அமைதி காத்தான்.
*********
கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த ஷ்ராவனியின் பார்வையில் அவள் வரைந்து வைத்த ஓவியம் பட்டது. அதில் அன்று அவள் கனவில் கண்டிருந்ததை அப்படியே வரைந்திருந்தாள். சிறு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முகம் தெரியாமல் வரி வடிவமாய்த் தெரிந்ததைக் கொண்டு வரைந்திருந்தவளுக்கு ஏனோ அன்று வந்தது ஒரு சாதாரணக் கனவு என நினைத்து அதை கடந்து போக முடியவில்லை.
அன்று தன் கரம் பற்றிக் காதலை சொன்னவன் குரலில் இருந்த காதலும் மென்மையும் அன்பும் அப்படிக் கடந்து போக விடாமல் ஷ்ராவனியை தொல்லை செய்து கொண்டிருந்தது. காலமெல்லாம் நம்மோடு வாழ போகும் ஒருவன் பெரியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன் பின் தெரியாதவனாக இருப்பதை விட.. ஒருவரையொருவர் புரிந்த காதல் திருமணமாக இருந்தால் அது வாழ்க்கையை அழகாக்கும் என்பது ஷ்ராவனியின் எண்ணம்.
அதனாலேயே காதல் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுள் ஆழ பதிந்து போய் இருந்தது. ஆனால் ஏனோ இதுவரை அவள் மனதை கவர்வது போல யாரையுமே அவள் பார்க்கவில்லை.
சில கதாநாயகர்களையும் மாடல்களையும் பார்க்கும் போது இளம் பெண்களுக்கே உண்டாகும் க்ரஷ் அவளுக்குமே உண்டு தான்.. ஆனால் அதைக் கடந்து யாரும் ஷ்ராவனியின் மனதை கவரவில்லை.
அப்படியிருக்கையில் ‘கனவில் வந்த ஒருவன் சொன்ன வார்த்தைகளும் காதலும் இந்த அளவிற்கு மனதை அசைத்து பார்க்குமா..!’ என்ற கேள்வி இத்தனை நாட்கள் கடந்தும் இன்றும் அவளுள் பெரிதாக இருந்தது.
அன்று வந்தவன் பேசியதெல்லாம் எழுத்து மாறாமல் மனப்பாடமாக இன்றும் மனதில் அப்படியே நிலைத்து நிற்குமளவிற்கு அவன் தன் மனதில் ஆழ பதிந்து போய் இருப்பது புரிய... ‘இதெல்லாம் சாத்தியமா..?!’ என்ற வியப்பே அவளுள் பெரிதாக இருந்தது.
இதே நினைவோடு நின்றிருந்தவளின் விரல்கள் தன் கையில் இருந்த முதுகு புறம் மட்டுமே தெரியுமளவிற்கான ஓவியத்தை மென்மையாக வருடி கொண்டிருக்க.. அவளின் தோழிகள் வந்து கல்லூரிக்கு நேரமாவதாக அறையின் கதவை தட்டி அழைக்கவும் ஓவியத்தைச் சட்டென மறைத்து வைத்து விட்டு கதவை திறந்தாள் ஷ்ராவனி.
அன்று சூர்யா வந்ததிலிருந்து அவள் சொல்லி இருந்தது எல்லாம் அவர்களை பொறுத்தவரை அவனோடு பொருந்தி போகவே அவனையே ஷ்ராவனியின் கனவு காதலனாக எண்ணி அவளின் தோழிகள் கேலியும் கிண்டலுமாக இருவரையும் சேர்த்து வைத்து பேசி கொண்டிருந்தனர்.
அதை முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்.. இல்லை என ஒதுக்கவும் முடியாமல்.. இடைப்பட்ட ஒரு நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
சில நேரங்களில் இவன் தான் அவன் என்று உறுதிபடுத்துவது போல் தோன்றினாலும் இன்னும் சில நேரங்களில் அப்படி இல்லையோ என்ற சந்தேகமும் ஷ்ராவனியை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. அவளின் இந்தக் குழப்பமான மனநிலை புரியாமல் இருவரையும் சேர்த்து வைத்து பேசுவதே அவளின் தோழிகளின் முக்கிய வேலையாக இருந்தது.
இதை அவ்வபோது சூர்யாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். வகுப்பிலும் படிப்பிலும் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் ஷ்ராவனியின் குறும்பு தனங்களைப் பற்றி அறிந்திருந்தவனுக்கு அவளின் அவ்வபோதான இந்த குறுகுறு பார்வைக்கான அர்த்தம் தான் புரியவில்லை.
ஆர்வமாகவும் ஆராய்ச்சியாகவும் தன் மேல் படியும் அவளின் பார்வைக்கான காரணம் புரியாமல் யோசனையானான் சூர்யா. அதேநேரம் சூர்யா இங்கு வேலையில் சேர்ந்த போது உடன் சேர்ந்த பெண் பேராசிரியையான சீதாவுடன் ஷ்ராவனி குழுவினருக்கு ஒரு அழகான நெருக்கம் உருவாகி கொண்டிருந்தது.
அமைதியும் அழகுமாக அளவான மேக்கப்போடு மடிப்புக் கலையாமல் காட்டன் சேலை அணிந்து வரும் சீதாவை மொத்த கல்லூரிக்குமே பிடிக்கும். அதிர்ந்து பேச தெரியாதது போல் அவர் எடுக்கும் வகுப்புகள் கூட மாணவர்களின் விருப்ப வகுப்புகளாக இந்தக் குறுகிய காலத்தில் மாறி போய் இருந்தது.
என்ன தான் புன்னகையோடு வலம் வந்தாலும் மலர்ந்து சிரிக்காத அவரின் இதழ்களும் ஏதோ சோகத்தைச் சுமந்து கொண்டிருப்பது போன்ற அவரின் விழிகளும் முதல் நாளே ஷ்ராவனியின் மனதை ஏதோ செய்ய.. அவளாகவே போய்த் தொடர்ந்து பேச்சு கொடுத்தே இந்த நட்பை உருவாக்கி இருந்தாள்.
முதலில் தவிர்க்க துவங்கிய சீதாவால் கூட ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் நட்பையும் நெருக்கத்தையும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாமல் போனது.
பல வருடங்களுக்குப் பிறகான இது போன்ற நட்பும் கலகலப்பும் ஏதோ ஒரு வகையில் சீதாவின் மனதுக்கு அமைதியை கொடுக்க.. அவருமே இவர்களின் நெருக்கத்தையும் குறும்பையும் விரும்பத் துவங்கினார். சின்னச் சின்னக் கேலி கிண்டல்களோடு துவங்கி இவர்களுக்குள்ளான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
*************
தன் சொந்த ஊரில் உள்ள பிறந்த வீட்டு வழியிலான குல தெய்வத்தை வணங்க தன் மச்சினன் மகன் ராஜீவ், தன்னுடைய அண்ணி சுதா மற்றும் அவர்களின் இரு மகள்களான சுரேகா மற்றும் பிரகதியோடு வந்திருந்த ஜானகி, முதல் நாளே ராஜீவ் மூலம் சிறப்புப் பூஜைக்குக் கொடுத்து விட்டு பூஜையை நிறைவாக முடித்துக் கொண்டு வந்து பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்தாலும் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாக நடந்து முடிந்த பூஜை கொடுத்திருந்த மனநிறைவோடும் அதைப் பற்றிய பேச்சோடும் இவர்கள் அமர்ந்திருக்க.. பிரகதி வீடியோ காலில் ஸ்ரீராமை அழைத்துத் தாங்கள் வந்த வேலை சிறப்பாக முடிந்ததை எல்லாம் சொல்லி கொண்டிருக்க.. அதேநேரம் ரத்தினவேலும் பூரணியும் அவர்களுக்கு அருகில் பூஜையை முடித்துக் கொண்டு வந்து அமர்ந்தனர்.
“இன்னைக்கு நல்ல அலங்காரம் இல்லை பூரணி..? மனசே நிறைவா இருக்கு..” என்றவருக்கு ஆமோதிப்பாய் தலையசைத்த பூரணியும் அப்படியே மற்ற பணிகளைப் பற்றிப் பேசி கொண்டிருக்க.. அவருக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாலும் வேலுவின் பார்வையும் கவனமும் எதிரில் இருந்த ஜானகியின் மீதே யோசனையாகப் பதிந்திருந்தது.
விழிகளைச் சுருக்கி நெற்றியை நீவி எல்லாம் யோசித்துப் பார்த்தவர், தன்னால் கண்டுபிடிக்க முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் “ஏத்தா நீ இந்த ஊரா.. எங்கேயோ பார்த்தது போல இருக்கு, யார் வீட்டுப் பக்கம் தாயி..?” என்று ஜானகியிடம் கேட்டே விட்டார்.
அதில் அவர் பக்கம் திரும்பிய ஜானகி, “இது தான் நான் பிறந்து வளர்ந்த ஊருங்க.. ஆனா ரொம்ப வருஷம் முன்னேயே ஆந்திரா பக்கம் போயிட்டோம்..” எனவும், “பொறந்த ஊரா.. யாரு வீட்டு பொண்ணுத்தா நீ..” என்றவரை கண்டு புன்னகைத்தவர் “அப்பா எல்லாம் நாப்பது நாப்பத்தி அஞ்சு வருஷம் முன்னேயே எங்களை விட்டு போயிட்டாங்க.. உங்களுக்குச் சொன்னாலும் ஞாபகம் இருக்குமா தெரியலை.. அப்பா பேரு ராமமூர்த்தி அம்மா பேரு கல்யாணி..” என்றார் ஜானகி.
அதைக் கேட்டதும் லேசாகப் பரபரப்பானவர், “வரதராஜன் தங்கச்சியாமா நீ..” என்றார் வேலு. அதில் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தங்களை நினைவு வைத்திருப்பவரை ஆச்சர்யமாகப் பார்த்தவாறே ஜானகி ‘ஆம்’ எனத் தலையசைக்க.. வேகமாக எழுந்து சென்று “அம்மா ஜானகி.. என்னைத் தெரியலையா உனக்கு..?” என்றார் வேலு.
அவரை யோசனையாகப் பார்த்தவருக்குச் சட்டென வேலுவை நினைவுக்கு வரவில்லை. “உங்க அண்ணன் வரதராஜன் எப்போவும் என் கூடத் தான் இருப்பான்..” என்று அவர் ஜானகிக்கு நினைவுபடுத்த முயல.. “வேலுண்ணா..” என ஆச்சர்யமும் ஆனந்தமுமாகக் குரல் கொடுத்திருந்தார் ஜானகி.
“நானே தான் ஜானுமா.. நீயே தானா இது.. உன்னை எல்லாம் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு.. எப்படி இருக்கே..? வரதா எப்படி இருக்கான்.. இப்போ எங்கே இருக்கீங்க..?” என்று இடைவிடாது பேசிக் கொண்டே சென்றார் வேலு.
பூரணியே இப்படி வாய் ஓயாமல் பேசும் தன் கணவனை அதிசயமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். “ரொம்ப நல்லா இருக்கோம்ண்ணே.. நீ எப்படி இருக்கே..” எனத் துவங்கி சந்தோஷ பேச்சு நீள.. ஜானகி இங்கு வந்த காரணம் முதற்கொண்டு அனைத்தையும் கேட்டு அறிந்தவர், இங்கு யாரையும் தெரியாது தங்குவதற்கும் பெரிதாக வசதிகள் எதுவுமில்லை என்பதால் அவர்கள் போட்டிருந்த திட்டப்படி ஜானகி இப்போதே ஊருக்குக் கிளம்புவதாகக் கூற.. இத்தனை வருடங்களுக்கு பின் வந்திருக்கும் இவர்களை இப்படியே அனுப்பச் சம்மதிக்கவே முடியாது என ஒற்றைக் காலில் நின்றார் வேலு.
ஜானகியை சிறு வயதில் இருந்தே வேலுவிற்கு மிகவும் பிடிக்கும். தன் சொந்த தங்கை போலவே கவனித்துக் கொள்வார்.. வேலுவிற்கு உடன்பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது.. வரதராஜனும் வேலுவும் சிறு வயது முதலே நெருக்கமான நண்பர்கள். ஒரு கட்டத்தில் வரதராஜனின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்று விட.. தங்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பும் வரதராஜனுடையதாகியது.
ஒரு கட்டத்தில் வரதராஜன் தன் வேலை விஷயமாக ஆந்திராவுக்குச் செல்ல வேண்டி வர.. தன் ஒரே தங்கையைத் தனியே விட்டு செல்ல விரும்பாமல் கூடவே அழைத்துச் சென்று விட்டார்.
அதன் பின் இங்கிருக்கும் நிலம் வீடு எனப் பார்க்க எப்போதாவது வரதராஜன் வந்து சென்று கொண்டிருந்தார். சில வருடங்களிலேயே அதையும் விற்று விட்டு சென்றவர் அதன் பின் வருவது குறைந்து போய் ஒரு கட்டத்தில் முற்றிலும் நின்றே போனது.
அப்போதெல்லாம் அலைபேசி இல்லாததால் தொடர்பும் பின் அப்படியே துண்டிக்கப்பட்டு நின்று போய் இருந்தது. இன்று இப்படி எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்ததை அப்படியே விட மனமில்லாமல் ஜானகியையும் வரதராஜனின் மகள் மற்றும் மனைவியையும் வற்புறுத்தி தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் வேலு.
ராஜீவ் அவர்களை வீடு வரை சென்று இறக்கி விட்டுத் தாங்கள் அருகில் இருந்த நகரத்தில் எடுத்திருந்த அறையில் தங்கி கொள்வதாகச் சொல்லி விட்டு கிளம்பி விட.. அவன் பழக்கம் இல்லா இடத்தில் தங்குவதற்குத் தயங்குவதைப் புரிந்து கொண்ட வேலுவும் ராஜீவ்வை தடுக்க முயலவில்லை.
***********
மந்திரி மாணிக்கவேலின் மகளான அனுஷாவின் வழக்கை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்த ஸ்ரீராம், இதைப் பற்றி இன்னும் தெளிவான விவரங்களைக் கேட்டறிய கமிஷனர் பாஸ்கரன் வீட்டிற்குச் சென்று இருந்தான்.
அவரிடம் ஆரம்பம் முதல் நடந்தவற்றைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்க வேண்டி இருந்தது. கமிஷ்னரும் இன்று தன் வீட்டில் யாருமில்லை என்பதால் இருவரும் எந்த தொந்தரவுமில்லாமல் அமர்ந்து பேச வசதியாக இருக்குமென்று வர வழைத்திருந்தார்.
இருவரும் அதைப் பற்றி மாடியில் இருந்த வரவேற்பறையில் அமர்ந்து பேசி கொண்டிருக்க.. ஒரு மணி நேரத்திற்கு பின் சூடாகக் குடிப்பதற்கு எதையாவது தயாரித்துக் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு கமிஷனர் இறங்கி செல்ல.. தன் அன்னைக்கு அழைத்துப் பேசியவாறே எழுந்து சென்று பால்கனியில் நின்றான் ஸ்ரீராம்.
வாடா மச்சான்..
என அவன் பேசுவதையும் மீறி ஹை டெசிபளில் பாட்டு சத்தம் கேட்க.. பார்வையை எதிர் வீட்டின் பக்கம் திருப்பினான் ஸ்ரீராம்.
நம்ம கச்சேரிதான்
ரொம்ப உற்சாகமா
களக்கட்டுதடிச் செல்லமே
அங்குப் பல வண்ண விளக்குகள் மின்னி மின்னி மறைய ஒரு இளமை பட்டாளமே சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தது.
நானும் துச்சாதனா
ஹா இல்ல துரியோதனா
துயில் உறியட்டுமா உன்னையே
என ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களை அப்படியே பார்த்தவாறு தன் அலைபேசியை அணைத்தான் ஸ்ரீராம்.
நீ தொட்டதெல்லாம் ஹிட்டு
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கேது சென்சார் கட்டு
உன் பேச்சுச் சத்தம் கேட்டு
அட தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு
அதே நேரம் சூடான காபியோடு வந்த கமிஷனர் ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு மற்றொன்றை பருகியவாறு திரும்பியவர், ஸ்ரீராமின் கவனம் முழுக்க எதிர் வீட்டில் இருப்பதைக் கண்டு, “உனக்கு டிஸ்டர்ப்பா இருந்தா நாம இந்தக் கிளாஸ் டோர் கிளோஸ் செஞ்சுடலாம் ராம்..” என்றார்.
அட செட்டிநாடு சிக்கன்
உன்ன ருசிப்பார்க்கவா
தெனம் சேர்த்துவச்ச
ஆசையெல்லாம் தீரத்தீர
“இவ்வளவு சத்தம் உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகாதா சார்..?” என்றவனைச் சிறு புன்னகையோடு பார்த்தவர், “எனக்குப் பழகி போச்சு.. இந்தக் காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தானே.. இப்போ எல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் வாழ்க்கைன்னு நினைக்கறாங்க.. கொஞ்சம் கூட வாழ்கையைப் பற்றிய பயமோ கவலையோ யாருக்கும் இல்லை..” என்றார் கமிஷனர்.
ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
கமிஷனர் தன் நெடு நாள் ஆதங்கத்தைக் கொட்ட ஆள் கிடைத்த எண்ணத்தில் பேசிக் கொண்டிருக்க..
ஸ்ரீராமின் கவனமோ
என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீப்போடுப்போடு சக்கப்போடு
என்ன போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
என்று ஆடி கொண்டிருந்த ஷ்ராவனியின் மேலேயே வெறுப்போடு பதிந்திருந்தது.
இன்றோடு கல்லூரி முடிந்திருக்க.. நாளை முதல் பரீட்சைக்குப் படிப்பதற்கான விடுமுறை இவர்களுக்கு விடபட்டிருந்தது. நாளையில் இருந்து ஒவ்வொருவராக வீட்டிற்குச் செல்ல துவங்கி விடுவார்கள்..
இதன் பின் பரீட்சை அன்றே சந்திப்பார்கள் என்பதால் இந்த வருடம் முடிய போவதை கொண்டாடவே ஊருக்குக் கிளம்புவதற்கு முன் நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி ஆடிக் கொண்டிருந்தனர். ஷ்ராவனியின் போதாத நேரமோ என்னவோ அவள் கையில் இருந்த கண்ணாடி கிளாசில் இருந்த பிஸ் (fizz) ஸ்ரீராமின் கண்களுக்கு வேறு மாதிரி தெரிந்தது..
***********
மறுநாள் காலை அலுவலகம் சென்று கொண்டிருந்த ஸ்ரீராம் ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்த.. அவன் அலைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தவன், தன் உயிர் நண்பன் ஸ்ரீனிவாச ராவ் ஆந்திராவில் இருந்து அழைக்கவும் ப்ளூ தூத்தில் இணைத்து பேச துவங்கினான்.
“ஹலோ மாவா..” (ஹலோ மச்சான்) என்று துவங்கி அங்கு இதே துறையில் பணியில் இருப்பதால் ஸ்ரீனிவாச ராவ் தான் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கை பற்றிப் பேச.. அப்படியே அவர்களின் பேச்சு நீண்டது.
சிக்னல் மாறி வாகனங்கள் நகரத் துவங்க.. தானும் வண்டியை எடுத்தவன், சில அடிகளில் மீண்டும் வாகனங்கள் எல்லாம் அப்படியே நிற்பதை கண்டு ‘ஏமி ஐந்தி..?’ (என்ன ஆச்சு) என யோசனையானான்.
சில நிமிடங்கள் கடந்தும் கூட வாகனங்கள் நகர்வது போலத் தெரியாததால் மற்றவர்களைப் போல் இருந்த இடத்தில் இருந்தே புலம்பி கொண்டு இல்லாமல் இறங்கி சென்றவன் அங்கு ஷ்ராவனி ஒருவனின் சட்டையைப் பிடித்துச் சண்டை போட்டு கொண்டிருப்பதைக் கண்டு “அரே.. ஏன்டிரா இதி.. எக்கட போயினா இ அம்மாயினா..?!” (அட.. என்னடா இது.. எங்கே போனாலும் இந்தப் பொண்ணா..?) என்று அதிர..
ஸ்ரீராம் சொன்னது எழுத்து மாறாமல் அந்தப் பக்கம் இணைப்பில் இருந்தவனின் காதில் விழ.. “அம்மாயினா..! எவர்ரா அதி..?” (பொண்ணா..! யாருடா அது..?) என்று ஆர்வமாக வினவ.. “ஹாங்.. அதி ஒக்க பிச்சி ராக்காஷி..” (ஆங்.. அது ஒரு பைத்தியகார ராட்சசி) என்றவாறு இணைப்பை கடுப்போடு துண்டித்திருந்தான் ஸ்ரீராம்.