பிரேமம் – 2
இவர்கள் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு மாணவிகள்.. கல்லூரிக்கு வந்த பின் அவர்களுக்கே உரிய விதத்தில் கழிந்தது இக்குழுவின் நேரம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இதற்கிடையில் கொஞ்சம் வகுப்பு எனச் செல்ல.. உணவு இடைவெளிக்கு முந்தைய வகுப்பு அவர்களுக்கு ப்ரீயாக இருந்தது.
அதை எடுத்துக் கொண்டிருந்த பெண் பேராசிரியர் பேறுகால விடுமுறையில் செல்ல.. அதற்குப் பதில் யாரோ புதிதாக வருவதாக இருந்தது. ஒரு வாரமாகவே இதைப் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டு தான் இருந்தது.
“ஹே.. நம்ம தீபு மேம் இடத்துக்கு யார் வந்தாலும் அவங்களைப் போல வராது.. எவ்வளவு பிரெண்ட்லி அவங்க..” என்பது போன்ற பசங்களின் புலம்பல்களும் “வேணும்னா மேம்க்குப் பதில் ஹேண்ட்சமா யாராவது சார் வந்தா அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம்..” என்பன போன்ற பெண்களின் ஆர்வங்களும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.
அப்போது தன் ஐடிகார்ட் தொலைந்து போனதால் மற்றொன்றை வாங்க அலுவலக அறை வரை சென்றிருந்த ஸ்வேதா உற்சாகமாக ஓடி வந்து வகுப்பின் முன்னே நிற்க.. அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
“அழகான மேம்மா.. இல்லை ஹேண்ட்சமான சாரான்னு நீங்க சண்டை போட்டுக்கவே வேண்டாம்..” என்று அவள் தொலைக்காட்சி தொகுப்பாளினி போலப் பேச துவங்கவும், “ஏன் யாருமே வர போறது இல்லையா..?” என்றனர் கோரசாக அனைவரும்.
“அதான் இல்லை.. செம்ம சூப்பரா ஒரு மேமும், அதை விடச் செம்மையா ஒரு சாரும் வந்து இருக்காங்க..” என்றாள் விழிகள் விரிய.. “என்ன இரண்டு பேரா..? அதெப்படி..?” என்று பல குரல்கள் எழவும், “நம்ம அந்தோணி சார் ரிசைன் செஞ்சுட்டாராம்..” என்றாள் ஸ்வேதா.
“என்ன..? ஏன்..? எதுக்கு..? ஓ அதான் அவர் மூணு நாளா வரலையா..?” என்றெல்லாம் அங்கங்கே குரல்கள் கேட்க.. “என்ன விஷயம் ஏன் எதுக்குன்னு எல்லாம் எனக்குத் தெரியாது டார்லிங்க்ஸ்.. இப்போ நமக்குப் புதுசா இரண்டு ப்ரபசர்ஸ் வந்து இருக்காங்க.. இரண்டு பேருமே பார்க்க செமையா இருக்காங்க.. அவ்வளவு தான்..” என்றவள் தன் இடத்தில் சென்று அமர.. வகுப்பில் சலசலவெனப் பேச்சுக்கள் எழுந்தது.
அதேநேரம் ஷ்ராவனியின் அருகில் வந்து அமர்ந்த ஸ்வேதா, “மச்சி.. நீ தேடின டிரீம் பாய் உன்னைத் தேடி வந்தாச்சுன்னு நினைக்கறேன்..” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
“என்னடி உளர்றே..?” என ஷ்ராவனி கேட்கவும், “நீ உன் ட்ரீம்ல வந்தவனைப் பற்றிச் சொன்னியே.. அதே போலச் செம ஹேண்ட்சம் புதுச் சார்.. அதுவும் நீ சொன்ன மாதிரியே வாலன்டைன்ஸ் டே அன்னைக்கு சரியா இங்கே வந்து இருக்காரு.. யோசிச்சு பாரு..” என்று கூறி கண் சிமிட்டினாள் ஸ்வேதா.
அதன் பின் விழிகள் பளபளக்க தோழிகளைப் பார்த்த ஷ்ராவனி, “அப்படியும் இருக்குமோஓஓ..” என ராகம் போட்டு இழுக்க.. “இருக்குமேஏஏஏ..” என்றனர் அவர்களும் அவளைப் போலவே.
இவர்களால் அலுவலகம் சென்று பார்க்க முடியாது என்பதால் இங்கு வர போகும் புதிய பேராசிரியரை காணும் ஆவலோடு ஷ்ராவனி காத்திருக்கத் துவங்கினாள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருந்த நபர் வருவதற்குப் பதில் மதிய உணவு இடைவேளை தான் வந்தது.
கல்லூரி கேன்டீனில் கூடி இருந்தது ஷ்ராவனி கேங். ஒருவரை ஒருவர் கேலி செய்து வம்பு இழுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர்களை விட்டு சற்று தள்ளியே மற்றவர்கள் அமர்ந்து இருந்தனர்.
அது மரியாதையா இல்லை பயமா என அவர்களே சொன்னால் தான் உண்டு. அது ஷ்ராவனியின் பிறந்தநாளுக்கான டிரீட்.. பல ஐட்டங்கள் அணிவகுத்து இருக்க.. அனைத்தையும் கலந்து கட்டி உண்டுக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்கள் “இந்த டிரீட் எங்களுக்கா.. இல்லை உனக்கா டி..?” எனக் கேட்க.. “ஹிஹி.. இதில் என்னடி சந்தேகம்.. எனக்குத் தான்..” என்றவளை அடிக்க மற்றவர்கள் பாய.. “ஹே.. ஹே.. வெயிட்.. வெயிட்.. எனக்குத் தான் பர்த்டே.. ஆனா டிரீட் உங்களுக்குத் தான்னு சொல்ல வந்தேன்..” என்று கூறி சமாளித்தாள் ஷ்ராவனி.
“வாய்.. வாய்..” என ஷ்ராவனியின் அருகில் இருந்த மலர் அவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவாறு சொல்லவும், “அதான் மச்சி ஷ்ரவு ஸ்பெஷல்..” என்றாள் ரேஷ்மா.
“எது வாயா..?” என்று கேலியாக ஸ்வேதா கேட்கவும், “ஆமா.. இல்லைனா இப்படி ஒரு கனவும், அதில் அப்படி ஒரு ஹீரோவும் வந்து இருப்பாரா..” என காயூ சொல்லவும் “அதுவும் அப்படி ஒரு சீன்.. அவ்வ்வ்...” என அனைவரும் கோரசாகக் குரல் கொடுத்ததில் அந்த இடமே அவர்களைத் திரும்பி பார்த்தது.
“ஷ்ஷ்.. சும்மா இருங்கடி..” என விழிகளை உருட்டி ஷ்ராவனி அவர்களை அடக்க முயலவும், அவளின் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. அதில் தன் அன்னை பூரணியின் எண்ணை பார்த்ததும் உடனே எடுத்திருந்தவள், “ஹ்ம்ம் சொல்லு தாய்கிழவி.. இப்போ தான் நீ பெத்த மகராசி நியாபகம் உனக்கு வருதா..?” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து வெளியில் சென்று மரத்தின் கீழ் நின்று பேச துவங்கினாள் ஷ்ராவனி.
“என்ன பாப்பா இப்படிப் பேசுற.. உன் பொறந்த நாளுக்குப் பூஜைக்கும் அன்னதானத்துக்கும் அப்பா கொடுத்து இருந்தாங்க.. அதான் லேட்டாகிடுச்சு..” என்றவரின் குரலில் இருந்த வருத்தத்தைக் கண்டவள், “ம்மாஆஆ.. சும்மா சொன்னா கூட உடனே பிலீங்க்ஸ் ஆப் இந்தியாவா மாறிடாதே..” என்று ஷ்ராவனி கண்டிப்பு குரல் எழுப்பவும், “இல்லை.. இல்லை..” என்று உடனே தணிந்து வந்தார் ஷ்ராவனியின் அன்னை.
அதன் பின் அவரிடம் பேசிக் கொண்டிருந்தவள் எந்தக் கோவிலுக்குச் சென்றார்கள் அன்னதானத்தில் என்னவெல்லாம் போட்டார்கள் என்பதில் துவங்கி அவளின் அன்னை உடுத்தி சென்ற புடவையின் நிறம் வரை விசாரித்து அதில் சில குறைகள் சொல்லி பேசி கொண்டிருக்க.. அனைத்திற்கும் அவரும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
“பாப்பா.. அப்பா பேசணுமாம்..” என்ற அன்னையின் குரலில் அவ்வளவு நேரம் இருந்த குரல் அப்படியே மாற அலைபேசி கை மாறியதை உணர்ந்தவள் “ப்பா..” என்றாள் மரியாதையுடனான குரலில். “நல்லா இருக்கீயா பாப்பா.. பொறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போனீயா..?” என்று வரிசையாக இப்போது ரத்னவேல் கேள்வி கேட்க துவங்கி இருக்க.. “இருக்கேன் பா.. போனேன் பா.. போட்டோ கூட உங்களுக்கு..” எனத் துவங்கவும், “ஹ்ம்ம்.. ம்ம்.. பார்த்தேன்.. பூஜைக்குக் கொடுத்தீயா..?” என்று அவர் குறுக்கு விசாரணை செய்ய.. அனைத்திற்கும் ஒற்றை வார்த்தையிலேயே பதில் அளித்துக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
அவரிடம் பேசிக் கொண்டே திரும்பியவளின் பார்வையில் தூரத்தில் வருண் நிற்பது தெரியவும், மனதில் உண்டான ஒரு சிறு எதிர்பார்ப்போடு அவனையே ஷ்ராவனி பார்த்துக் கொண்டிருக்க.. அவளின் கவனம் பேச்சில் இல்லாமல் எதிரில் இருப்பவனின் மேல் மொத்தமாகத் திரும்பியது.
அதேநேரம் மகளின் குரலை கொண்டே அவள் ஏதோ பிசியாக இருப்பதைப் புரிந்து கொண்ட வேலு “சரி பாப்பா.. அப்பா அப்பறமா பேசறேன்.. நீ உடம்பை பார்த்துக்கோ..” என்று விட்டு இணைப்பை துண்டிக்கவும் வருண் மேல் பதித்த பார்வையைத் துளியும் அகற்றாமல் நின்று இருந்தவள் அவனை வேகமாக நெருங்கும் பவித்ராவையும் அவளைக் கண்டதும் முகம் மலர.. எதையோ பேசியவாறே தன் கையில் இருந்த பையை அவளிடம் கொடுப்பவனையும் கண்ட நொடி ஷ்ராவனியின் மனதில் லேசாக எழுந்த வலி கண்களைக் கலங்க செய்ய.. இருக்கும் இடம் உணர்ந்து அதை வெளியே வர விடாமல் தடுத்தவள் அப்படியே கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு வருணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் அவளைத் தேடிக் கொண்டு அவளின் படைகள் அங்கு வந்து விட.. தன் பார்வையை வேகமாகத் திருப்பிக் கொண்டவள், எதையும் காண்பித்து கொள்ளாமல் அவர்களோடு பேசியப்படியே அங்கிருந்து நகர்ந்தாள் ஷ்ராவனி.
ஷ்ராவனி வெகு நேரமாக எதிர்பார்த்திருந்த அவளின் புதிய பேராசிரியரான சூர்யா இவர்களின் வகுப்பிற்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள.. அவனைக் கண்ட நொடி இமைக்கக் கூட மறந்து தன் கனவில் பார்த்த உருவத்தோடு நேரில் நிற்பவனை ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
முகமோ நிறமோ கனவின் இருளில் தெரியவில்லை என்றாலும் அந்த உயரம் உடற்கட்டு பொறுமையும் மென்மையுமாகப் பேசும் விதம் என இருவருக்கும் பல ஒற்றுமைகள் தெரிந்தன. அப்போது தான் சூர்யா தன் பெயரை சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்க.. கனவில் காதலை சொன்னவன் தன் விரல்களில் அணிவித்த SS என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரம் நினைவுக்கு வர.. சடாரென நிமிர்ந்து அமர்ந்தாள் ஷ்ராவனி.
“SS.. அப்படினா ஒரு எஸ் ஷ்ராவனி.. இன்னொரு எஸ் சூர்யா..” என்று மெல்லிய குரலில் ஷ்ராவனி சொல்ல.. சரியாக அவள் பக்கம் திரும்பி பார்த்தான் சூர்யா. அதில் சட்டெனத் தன் பார்வையைத் தழைத்து கொண்டவள் அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க.. ஒரு புன்னகையோடு திரும்பி கொண்டான் சூர்யா.
**********************
இரவு களைத்து போய் வீடு திரும்பிய ஸ்ரீராம் சோர்வோடு அப்படியே சோபாவில் சாய்ந்தான். ஆசைப்பட்டு விரும்பி சேர்ந்திருந்த வேலையில் இத்தனை வருடத்தில் இப்படி ஒரு மோசமான நாளை ஸ்ரீராம் பார்த்ததே கிடையாது.
எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் அசால்ட்டாகக் கையாள்பவன், ஆனால் இன்று ஒரு சிறு பிரச்சனையின் நுனியை கண்டுபிடிக்க ஒரு நாள் முழுமையாகச் செலவானது.
சாப்பிடவோ ஓய்வெடுக்கவோ நேரமில்லாமல் முதல் நாள் முதல் வேலையையே முடிக்காமல் கிளம்பக் கூடாது என்ற எண்ணத்தோடு அதை முடித்து விட்டே கிளம்பி இருந்தான் ஸ்ரீராம்.
அந்தக் களைப்பும் சோர்வும் தீர அப்படியே விழிகள் மூடி பின்னால் சரிந்தவன், “நா ஜீவிதம்லோ சால செட்ட ரோஜு..” (என் வாழ்க்கையிலேயே ரொம்ப மோசமான நாள்) என ஸ்ரீராம் சொல்லும் போதே காலையில் பார்த்த பெண்ணின் முகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
எவ்வளவு அழகாக அமைதியாகத் துவங்கிய நாள் என்று எண்ணும் போதே அதை மொத்தமாகக் கெடுத்தவளின் மேல் ஆத்திரம் பொங்கியது. அதே அமைதியான மனநிலையோடு கிளம்பி சென்று இருந்தால் ஒருவேளை அனைத்தையும் எளிதாகக் கையாண்டு இருப்பானோ என்னவோ..! காலையிலேயே மொத்தமாக மூட் அவுட் ஆனதனால் தான் இது எனப் புரிய.. “ராக்காஷி.. பிச்சி ராக்காஷி..” என்றான் பல்லை கடித்துக் கொண்டே ஸ்ரீராம்.
அதன் பின் இதே யோசனையில் இருக்க விரும்பாமல் வேகமாக எழுந்து குளிக்கச் சென்றான் ஸ்ரீராம். திரும்ப வந்து அந்த முன் இரவின் குளிர் காற்றை ரசித்தவாறு பால்கனியில் நின்றிருந்தவனின் மனதை லேசாக்குவது போல் அவனைப் பார்த்துச் சிரித்தது அங்குப் பூத்திருந்த சின்னச் சிகப்பு ரோஜா.
அதைக் கண்டு விட்டவனின் மனதின் களைப்பெல்லாம் காணாமல் போக... இதழில் தவழ்ந்த மென்னகையோடு மெல்ல அதை வருடி கொடுத்தான் ஸ்ரீராம். அதன் அழகும் நிறமும் அவனைக் கொள்ளை கொள்ள.. ரசனையோடு அதை விரல் கொண்டு வருடியவனின் மனதில் தன் வீட்டின் நினைவு உலா வர துவங்கியது.
ஸ்ரீராமுக்குச் செடிகள் வளர்ப்பதில் தனி ஆர்வம் உண்டு. அவனின் பொழுதுகள் பெரும்பாலும் செடி கொடிகளோடு தான் போகும்.. அங்கு வைசாக்கில் அவர்கள் வீட்டை சுற்றி நிறைய இடங்கள் இருப்பதால் அவன் விருப்பம் போல் பல வித வண்ணங்களில் மலர்களை வைத்துப் பராமரித்துக் கொண்டிருந்தான்.
அதை எண்ணும் போதே இங்குக் கிளம்புவதற்கு முன் தன் அன்னையோடு நடந்த உரையாடல் ஸ்ரீராமின் நினைவிற்கு வந்தது.
**********
கண்முன் பல வண்ணங்களில் பூத்து குலுங்கி கொண்டிருந்த மலர்களை ரசித்தவாறே அதற்குப் பூவாளியில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அனைத்தும் முடிந்து வீட்டிற்குள் நுழைய முயன்றவனின் பார்வையில் முழுதாக மலராமலும் அதே நேரம் மொட்டாக இல்லாமலும் இடை நிலையில் இருந்த சிகப்பு நிற ரோஜாவும் அதன் மேல் பன்னீர் தெளித்தது போல் ஆங்காங்கே படிந்து இருந்த தண்ணீரும் பட.. அதன் அழகு அவனைக் கவர்ந்து இழுத்தது.
மெல்ல அதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், அதை ஒரு ரசனையோடு மெதுவாக வருடி கொடுத்து ரசித்துக் கொண்டிருக்க.. “ஒர்ரி நா தேவுடா.. இப்புடைனா நா புத்ருடுக்கு பிரேமா வச்சிந்தே..” (ஹப்பா ஆண்டவா.. இப்போவாவது என் பிள்ளைக்குக் காதல் வந்ததே) என்று நிம்மதி பெருமூச்சோடு நெஞ்சில் கை வைத்தவாறே அங்கு வந்து நின்றார் ஜானகி.
அவரைச் சிறு புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பி கொள்ள.. “அரேய் ஏன்ட்டிரா இ நவ்வு.. (டேய்.. என்ன இப்படிச் சிரிப்பு) (இவர்கள் இருவரிடையே நடக்கும் பேச்சுகள் மொத்தமும் தெலுங்கில் இருப்பதால் அதைத் தமிழில் நாம் பார்க்கலாம்) அப்போ அப்படி எதுவும் இல்லையா..?” என்றார் ஜானகி.
“ஏன்ட்டம்மா இதி.. (என்னமா இது) பூவை ரசிக்கக் காதல் வரணும்னு என்ன மா அவசியம்.. ரசனை இருந்தா போதாதா..!” என்றான் ஸ்ரீராம். “அப்போ ஒண்ணுமே இல்லையா..?” என்று சிறு பிள்ளை போல் கேட்டவரை கண்டு “ம்ஹும்..” என்றான் புன்னகையோடு.
“ஒர்ரி நா மலையப்ப ஸ்வாமி.. (திருப்பதி மலையில் இருக்கும் ஏழுமலையான்) என் பிள்ளைக்கு எப்போ தான் நல்ல புத்தி வருமோ..” என்று வானத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவரை லேசாக முறைத்தவன் “அப்போ உங்க பிள்ளைக்குப் புத்தியே இல்லைன்னு சொல்றீங்களா..” என்றான்.
“நான் எப்போடா அப்படிச் சொன்னேன்..? நல்ல புத்தி இல்லைன்னு தானே சொன்னேன்..” என்று சலிக்காமல் மகனை வம்புக்கு இழுத்தார் ஜானகி. “ஓஹோ.. உங்க பார்வையில் எது நல்ல புத்தி மா..” என்று ஸ்ரீராம் கேட்கவும், “வெளியே போய்ப் பாரு பாபு.. உன் வயசு பசங்க எல்லாம் வாழ்க்கையை எப்படி என்ஜாய் செய்யறாங்கன்னு.. இருபத்து நாலு மணிநேரமும் கையில போன்.. கேர்ள் பிரெண்ட் கூட ஊர் சுத்தறதுன்னு.. நீ என்னடான்னா வேலை வேலைன்னு ஓட வேண்டியது.. இல்லைனா இதோ இப்படிச் செடி கொடின்னு இருக்க வேண்டியது.. எனக்கும் என் பிள்ளை குழந்தை குட்டின்னு குடும்பமா இருக்கறதை பார்க்கணும்னு ஆசை இருக்காதா நயினா.. இந்த மே வந்தா உனக்கு முப்பது ஆகப் போகுது..” என்று கேலியில் துவங்கினாலும் ஜானகியின் குரலில் அப்படி ஒரு வருத்தம் எட்டி பார்த்தது.
அதைச் சரியாகப் புரிந்து கொண்டவன் ஜானகியை தன்னோடு சேர்த்து பிடித்தப்படி “என்ன மா இது.. நீங்க சொல்றதை பார்த்தா நான் எண்ணமோ கல்யாணம் வேண்டாம்னு சொல்றது போல இருக்கு..? நான் செஞ்சுக்கறேன்னு தானே சொல்றேன்.. நீங்க தானே லேட் ஆக்கறீங்க..” என அவரின் மனநிலையை மாற்ற முயன்றான்.
“அதே பாபு நா பாத.. (என் வலி) நீ பொறுப்பை என்கிட்ட கொடுத்துட்ட.. ஏன்னே தெரியாம தட்டி போகுது.. அதான் நீயா ஒரு பொண்ணைக் காதலிக்கறேன்னு கையை மட்டும் காட்டுயா.. பெல்லின்னி எலா தாம் தூமனி சேஸ்தான்னு சூடு..” (கல்யாணத்தை எப்படித் தூள் கிளப்பறேன்னு பாரு) என்றார் ஜானகி.
“இ கதநே ஒது.. (இந்தக் கதையே வேண்டாம்) நீங்க ஒரு பொண்ணைக் கையைக் காட்டுங்க.. நான் அவளைக் கல்யாணம் செஞ்சுட்டு அப்பறமா எப்படி காதலிக்கறேன்னு பாருங்க.. எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது மா..” என்று செல்லமாக அன்னையின் கன்னத்தில் தட்டி விட்டு சென்றவனைக் கவலையும் குழப்பமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜானகி.
அவரும் இரண்டு வருடமாகத் தன் ஒரே மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஏனோ தெரியவில்லை சரியாக எதுவுமே அமையவில்லை. அழகும் கம்பீரமாகவும் இருக்கும் தன் மகனுக்கு எதில் குறை..! பணம் இல்லையா..? படிப்பில்லையா..? அனைத்தும் இருந்தும் ஏன் இப்படித் தட்டி செல்கிறதெனப் புரியா திகைப்பே ஜானகியினுள்.
ஸ்ரீராம் என்று தனக்குப் பெண் பார்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தானோ அன்றிலிருந்து இவரின் பொறுப்பு கூடி போனது. அவனுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெண்ணைத் தேடி கண்டு பிடிப்பதற்குள் ஓய்ந்து போனார் ஜானகி.
இன்றைய காலக் கட்டத்தில் தான் பார்த்துக் கை காண்பிக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் தாலி கட்ட மகன் தயாராக இருப்பது அவன் தன் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் உணர்த்த.. அதற்கு ஏற்றது போல் ஒரு மனைவியை மகனுக்குத் தேட எண்ணியவர், இதுவரை அவர்களின் சுற்று வட்டாரத்தில் தேடாத இடமில்லை.
ஜானகி எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களோடும் பெண் கிடைப்பது கடினமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் ஜாதகப் பொருத்தம் ஒத்து வராமல் போனது.
அதோ இதோவென ஒவ்வொன்றையும் தட்டி கழித்ததில் இரண்டு வருடங்கள் ஓடி போய் இருக்க.. ஜானகியின் மனதிலோ கவலை மேகங்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் செடிகள் உண்டு என ஸ்ரீராம் என்னவோ எந்தக் கவலையும் இல்லாமல் தான் இருக்கிறான்.
இதனாலேயே ஸ்ரீராமாகப் பார்த்து யாரை அழைத்து வந்தாலும் சரியெனத் தலையாட்டும் அளவிற்கு இறங்கி வந்திருந்தார் ஜானகி. ஆனால் அவரின் மகனோ தன் மனையாளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தன் அன்னைக்கே என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
காலங்கள் செல்வதை எண்ணி கவலையும் மகனுக்குப் பொறுத்தமான பெண் அமைய வேண்டுமே என்ற வேண்டுதலும் தினமும் அவரை வருத்தி கொண்டிருக்க.. கோவிலுக்குச் சென்று மனதார வேண்டிக் கொண்டு வீடு திரும்பியவரின் முன் சென்னைக்கான மாற்றல் பற்றிய தகவலோடு வந்து நின்றான் மகன்.
“எனக்கு என்னமோ உன் மனைவி சென்னையில் தான் இருக்கான்னு தோணுது பாபு..” என மகனின் பிரிவை எண்ணி கலங்குவதை விடத் தன் வேண்டுதல் அங்காவது அப்படியாவது நிறைவேறுமோ என்ற எதிர்பார்ப்பே ஜானகியிடம் பிரதானமாக இருந்தது.
“அப்படி இருப்பான்னு தோணினா என் கூடவே வந்து தேடி கொடுங்க..” என அவரின் எண்ணத்திற்கு முற்று புள்ளி வைத்தான் ஸ்ரீராம். “ஒர்ரி நா தேவுடா.. எக்கடன்ச்சி ஒச்சி நாக்கு புட்டாவுரா.. நா பாபோய்..” (எங்கிருந்து எனக்குன்னு வந்து பிறந்தடா யப்பா..) எனத் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தார் ஜானகி.
*************************
இன்று அதெல்லாம் நினைவுக்கு வரவும், ஒரு புன்னகையோடு தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அன்னையிடம் பேச சென்றான் ஸ்ரீராம். அப்படியே நேரம் செல்ல.. அன்னையிடம் பேசி விட்டு சாய்ந்து படுத்தவன் அப்படியே உறங்கி போனான்.
பதினொரு மணியளவில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல விடாமல் பசி வயிற்றைக் கிள்ள.. எழுந்து அமர்ந்தவன் எதையாவது ஆர்டர் செய்ய நினைக்க.. பல பெரிய ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது முடித்துக் கொள்ளப்பட்டு இருந்தது. அதில் மேலும் சோர்ந்து போனவன் பாலை காய்ச்சி குடிக்க நினைக்கப் பசியோ இப்போது தான் தன் விஸ்வரூபத்தைக் காண்பிக்கத் துவங்கியது.
அப்போதே காலையில் இருந்து தான் எதுவுமே சாப்பிடாதது நினைவுக்கு வரவும், யோசிக்காது அருகில் இருக்கும் ஏதேனும் கையேந்திபவனைத் தேடி கிளம்பி விட்டான் ஸ்ரீராம்.
அவன் வசிப்பது பெசன்ட் நகரில் கடற்கரையைப் பார்த்தது போல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என்பதால் சுற்றிலும் சாலையோர உணவகங்களுக்குப் பஞ்சமே இல்லை. அதில் ஒன்றில் சென்று தன் இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் அங்கிருந்த போக்குவரத்து காவலரின் அருகில் மூன்று பெண்கள் நிற்பதை கண்டு யோசனையானான்.
கிட்டத்தட்ட பன்னிரெண்டரை மணியை நெருங்கும் நேரத்தில் இருளில் நிழலுருவமாய்த் தெரிந்தவர்களை ஸ்ரீராம் நெருங்கவும் அவர்கள் காவலரோடு ஏதோ வாக்குவாதத்தில் இருப்பது புரிய.. வண்டியை அவர்கள் அருகில் நிறுத்தினான் ஸ்ரீராம்.
அப்போதே அந்தக் காவலரை காலையில் தான் பார்த்த வழக்கு சம்பந்தமாக சந்தித்தது நினைவுக்கு வர.. “ஏதாவது பிரெச்சனையா குமார்..?” என்றான் ஸ்ரீராம். நடு இரவில் வந்து ரகளைச் செய்து கொண்டிருந்தவர்களிடம் உண்டான எரிச்சலோடு குரல் வந்த திசையில் திரும்பியவன், அங்கு ஸ்ரீராமை கண்டதும் சட்டென உண்டான பணிவோடு, “டிரங்க் அண்ட் டிரைவ் சார்.. வண்டியை என் மேலேயே கொண்டு வந்து இடிச்சுட்டாங்க..” என்றார்.
அதேநேரம் வீதியில் செல்லும் எவனோ கதை கேட்க வந்திருப்பதாக நினைத்து திரும்பி பார்க்காமலேயே “வந்துட்டானுங்க.. என்னாச்சு.. மண்ணாச்சுன்னு..” என்று தனக்குள்ளேயே சொல்லியவாறு பல்லை கடித்த ஷ்ராவனி, குமாரிடம் இழுத்து பிடித்த பொறுமையோடு “தண்ணி எல்லாம் எதுவும் இல்லைண்ணா.. லேசா ஸ்லிப் ஆகிடுச்சு..” என்றாள்.
அந்தக் குரலில் யோசனையானவன் அதுவரை காவலர் மேல் இருந்த கவனத்தை இருளில் நின்றிருந்தவளின் மேல் திருப்பிக் கூர்மையாகக் கவனிக்க..
“ஏய்.. யாரை பார்த்து குடிகாரின்னு சொல்றே..?” என்று அங்கிருந்த இரு சக்கர வண்டியில் சாய்ந்து நின்றிருந்த ஒரு பெண் குழறலோடும் தள்ளாட்டத்தோடும் இவனை பார்த்து கேட்கவுமே, குமார் சொல்வதில் உள்ள உண்மை ஸ்ரீராமுக்குப் புரிந்தது.
“தண்ணியைப் போட்டுட்டு வண்டியை ஓட்டிட்டு வந்துட்டுக் கலாட்டா செய்துங்க சார்..” என்றார் குமார் சலிப்பாக. அதில் வண்டியை ஸ்டாண்ட் போட்டு இறங்க முயன்ற ஸ்ரீராமின் பார்வை குமார் அருகில் இருந்தவளின் மேல் பதிய.. அதே நேரம் லேசாக முகம் திருப்பியவளின் மேல் தெரு விளக்கின் வெளிச்சம் பட்டதில் அவளை அடையாளம் கண்டவன், “ராக்காஷி...” என்றான் மெலிதான முணுமுணுப்போடு.
அதில் ஸ்ரீராம் எதுவோ தன்னிடம் கேட்பதாக நினைத்து குமாரின் கவனம் மொத்தமாக அவன் பக்கம் திரும்ப.. “தண்ணி கேஸ் தான்.. டவுட்டே வேண்டாம்.. லேட் நைட் நீங்க ஹாண்டில் செய்யாதீங்க, லேடி காப்பை வர சொல்லுங்க..” என்று விட்டு வண்டியை விருட்டென்று கிளப்பிக் கொண்டு கிளம்பினான் ஸ்ரீராம்.
ஸ்ரீராமின் அந்த வார்த்தையில் ஆத்திரத்தோடு “எவன்டா அவன்..?” எனத் திரும்பியவள் கண்டது வேகமாகப் புல்லட்டில் செல்பவனின் முதுகை தான். “மவனே நீ மட்டும் என் கையில் சிக்கின கைமா தான் டா..” என்று முணுமுணுத்தவாறு, இருளில் மறைந்தவன் சென்ற திசையையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஷ்ராவனி.