All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நின்னு நின்னுகா பிர...
 
Notifications
Clear all

நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!! - (Story Thread)

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 606
Topic starter  
1793968990-IMG-20261106-WA0000.jpg
 
 
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
 
 
மெல்லிய ஒலியில் கசிந்து கொண்டிருந்த பாடலோடு சேர்த்து அங்குக் கம்பீரத்தோடு நின்று இருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும் ரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
புதன்கிழமையின் அந்தக் காலை நேரத்தில் அதிகக் கூட்டம் இல்லாததால் எந்த அவசரமோ பதட்டமோ இல்லாமல் பார்த்தசாரதியின் முன் பொறுமையாகக் கை கூப்பி நின்று இருந்தவனின் மனதில் அப்படி ஒரு அமைதி.
 
 
ஏனோ ஒவ்வொரு முறையும் இந்த பார்த்தசாரதியை காணும் போதெல்லாம் அவனுள் கடவுளை காணும் நிறைவுக்குப் பதில் தன் குடும்பத்து பெரியவரை காணும் ஒரு நிறைவே ஏற்படும். அந்த முறுக்கி விடப்பட்ட மீசையும் அதில் படிந்திருக்கும் வெண்மையும் அவர் நிற்கும் தோற்றமும் எனக் காண்போருக்கு அப்படித் தோன்றுவதில் தவறே இல்லையே..!
 
 
அப்படியே அவரைக் கண் குளிர ரசித்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரிதாக எந்த வேண்டுதலோ கோரிக்கைகளோ இல்லை. அவரைக் காண்பதே போதுமென்பது போன்ற ஒரு நிறைவே இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு அவரை காண்கிறான்.. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து பார்க்கும் போது விட்டு போன சொந்தத்தை பார்ப்பது போல் தோன்ற அப்படியே இமைக்க மறந்து நின்று விட்டான் ஸ்ரீராம்.
 
 
வெகு நேரத்திற்கு பின் இன்று இங்குப் பணி மாற்றலாகி வந்து இருப்பவன் என்பதால் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என விழி மூடி தன் வேண்டுதலை அந்த பார்த்தசாரதியின் பாதத்தில் வைத்து விட்டு விழிகளைத் திறக்கவும், சரியாக அதே நேரம் திருமாலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அவனுக்காகவே அந்த ஆராதனை எடுத்தது போல் இருக்க.. ஸ்ரீராமின் மனதில் அப்படி ஒரு நிறைவு.
 
 
அதைக் கண்ணார கண்டு விட்டு மன நிறைவோடு வெளியில் வந்தவன் பிரகாரத்தைச் சுற்றி வந்து வேதவல்லி தாயாரை வணங்கி விட்டு அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டான் ஸ்ரீராம்.
 
 
அதேநேரம் தன் படை பரிவாரங்களோடு கோவிலுக்குள் நுழைந்தாள் ஷ்ராவனி. பட்டுப்பாவாடை தாவணியில் இடை வரை நீண்டிருந்த கூந்தலை மேலே மட்டும் கிளிப் செய்து படர விட்டு மல்லி சரம் இரு தோள்களிலும் ஊஞ்சலாட கையில் அர்ச்சனை தட்டுடன் நடந்தவளை கடந்து செல்பவர்களின் பார்வை அவள் மேல் சில முறை படிந்தே மீண்டது.
 
 
அந்த விசேஷம் எதுவுமற்ற சாதரான வார நாளில் வழக்கமாக வரும் வயதானவர்களையும் பெண்களையும் தவிரப் பெரிதாக எந்தக் கூட்டமும் அங்கில்லை. கொடி மரத்திடம் தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு அர்ச்சனை சீட்டோடு உள்ளே சென்றவள் தான் வாங்கி இருந்த துளசி மாலையைக் கொடுத்து பூஜையை முடித்துக் கொண்டு வெளியில் வரவும், அதுவரை உடன் வந்த ஷ்ராவனியை அங்கு காணாது திகைத்தனர் தோழிகள்.
 
 
“நம்ம கூடத் தானே டி வந்தா..? அதுக்குள்ளே எங்கே போனா..?” என்று ஸ்வேதா கேட்கவும், ‘அந்த பெரிய உண்டியலின் பின்னே ஏதாவது வேண்டி கொண்டு நிற்கிறாளா..?’ என மலர் சென்று தேட.. அங்கும் அவள் இல்லாததை கண்டு அனைவரும் திருதிருக்க.. “இரு வரேன்..” என்றவாறு முன் பக்கம் சென்ற காயத்ரியின் எண்ணத்தைக் கொஞ்சமும் பொய்யாக்காமல் அங்கிருந்த சொர்கவாசலின் மூடப்பட்ட பெரிய கதவின் முன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தன் மடியில் இருந்த பிரசாத பொட்டலங்களைக் கண்கள் மின்ன பிரிக்க முயன்று கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
“தெரியும்டி நீ இங்கே தான் இருப்பேன்னு..” எனப் பல்லை கடித்த காயத்ரி, அவள் எதிர்பாராத நேரத்தில் சட்டென ஷ்ராவனியின் கையில் இருந்த வடையைப் பறித்துக் கொண்டு ஓடினாள்.
 
 
ஆசையோடு வாயின் அருகில் கொண்டு சென்று சாப்பிட இருந்த நேரத்தில் காயூ இப்படிச் செய்யவும் அதில் கடுப்பானவள், “ஹே.. காயூ நில்லு டி.. ஒழுங்கா பார்சலை கொடுத்துடு.. கையில் சிக்கின அடி பின்னிடுவேன்..” எனத் தன் பிரசாதம் வாங்கிச் சாப்பிடும் திட்டம் தடைப்பட்டதில் உண்டான கடுப்போடு தாவணியைத் தூக்கி பிடித்தப்படி விரட்ட.. “முதலில் மற்ற சன்னிதானம் வந்து எங்க கூடச் சாமி கும்பிடு.. அப்பறம் எல்லாருமே சேர்ந்து போய்ச் சாப்பிடலாம்..” என்று திரும்பி பார்க்காமலேயே சொல்லியவாறு ஓடினாள் காயத்ரி.
 
 
கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்து வாசனை காலை கட்டி இழுத்தாலும் அந்தப் பக்கம் போகத் துடித்த கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு இங்கு ஓடி வந்து விட்டிருந்த ஷ்ராவனி, சூடான புளியோதரையும் நெய் மணக்கும் சக்கரை பொங்கலையும் மிளகு வடையும் சாப்பிட எண்ணியிருந்த தன் கனவை தடை செய்பவளின் மேல் உண்டான ஆத்திரத்தோடு வேதவல்லி தாயாரின் சன்னிதானத்தின் படிகளை ஏறிக் கொண்டிருந்தவளின் கவனம் முழுவதும் காயூவின் மேலேயே இருந்ததின் பலனாகப் படி இறங்கி கொண்டிருந்த ஸ்ரீராமை கவனிக்கத் தவறினாள் ஷ்ராவனி.
 
 
அதில் பலமாக அவன் மேல் மோத.. ஷ்ராவனியின் கையில் இருந்த பாதிப் பிரித்தும் பிரிக்காமலும் இருந்த சக்கரை பொங்கல் மொத்தமும் ஸ்ரீராமின் மேல் விழுந்து சிதறியது.
 
 
மேல் படியில் இறங்க கால் வைக்கும் போதே ஓடி வரும் காயத்ரியை கண்டு விட்டிருந்தவன் ஓரமாக நின்றுக் கொள்ள.. அவளின் கவனம் பாதையில் இருந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போனது. அதில் மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தவன், இரண்டு படி இறங்குவதற்குள் அடுத்து வந்தவளின் இத்தகைய மோதலை எதிர்பார்க்கத்தோடு தன் வெள்ளை சட்டையின் மேல் விழுந்த பிரசாதத்தைக் கண்டு உண்டான அதிர்வோடு “தேவுடாஆஆ..” என்றிருந்தான்.
 
 
தான் ஒருவன் மேல் மோதி இருக்கிறோம் என்பதை விட.. தன் சக்கரை பொங்கல் வீணாகி போன கடுப்பில் மேலும் ஓட துவங்கியவளின் காதில் ஸ்ரீராமின் இந்த வார்த்தைகள் விழவும், அது அவளுக்கு தவறான அர்த்தத்தில் புரிய.. திரும்பி ‘பளார்’ என ஸ்ரீராமை அறைந்திருந்தாள் ஷ்ராவனி.
 
 
தன் சட்டையில் கொட்டியிருந்த பிரசாதத்தைத் தட்டி விட்டு கொண்டிருந்தவன் ஷ்ராவனியின் இந்தச் செயலில் திகைத்து நிமிர.. “ராஸ்கல்.. என்ன சொன்னே..? தைரியம் இருந்தா மறுபடியும் சொல்லு..?” என்றவாறே மீண்டும் அவனை அடிக்க முயன்றவளின் கையைப் பற்றி நிறுத்தியிருந்தான் ஸ்ரீராம்.
 
 
தன்னை கேவலமாக திட்டியதோடு கையை வேறு பிடித்திருந்தவனை ஆத்திரத்தோடு முறைத்தவள் “ஹவ் டேர் யூ.. கையை விடு மேன்..” என்றவளை அவளுக்கும் மேல் முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனின் பிடியில் இருந்த அழுத்தம் வலியை கொடுக்க.. “ச்சீ.. கையை விடு, எவ்வளவு திமிரு இருந்தா கோவிலில் நின்னுட்டு இப்படி ஒரு வார்த்தையைப் பேசி இருப்பே..? இதில் என் கையை வேற பிடிக்கற..!” என்றாள் எரிச்சலும் வெறுப்புமாக.
 
 
“நான் என்ன சொன்னேன்..?” என்று பல்லை கடித்துக் கொண்டு ஸ்ரீராம் கேட்கவும், “ஏன் உனக்குத் தெரியாதா..? அதை நான் வேற சொல்லணுமா..?” என ஆத்திரத்தோடு அவள் சொல்லவும், ஷ்ராவனியின் தோழிகள் அவளருகில் வரவும் சரியாக இருந்தது.
 
 
“ஷ்ரவு.. என்னடி இதெல்லாம்..? விடு..” என அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல அவர்கள் முயல.. “சும்மா இருங்க டி.. இவன்.. இவன் என்ன சொன்னான்னு தெரியுமா..? ராஸ்கல் இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது.. இப்போவே போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லலை..” என்று தன் கைபேசியை கொடுக்குமாறு ஸ்வேதாவிடம் சைகையில் சொன்னவாறே எகிறியவளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் அவளின் தோழிகள் திணறி கொண்டிருந்தனர்.
 
 
ஆனால் அதே நேரம் ஷ்ராவனியின் ஆத்திரத்திற்குக் கொஞ்சமும் குறையாத ஆத்திரத்தோடு கண்கள் சிவக்க இன்னும் அவளின் கையைப் பற்றி இருந்த பிடியை விடாமல், இன்னும் அழுத்தம் கொடுத்து “நான் என்ன சொன்னேன்னு கேட்டேன்..” என்றான் ஸ்ரீராம்.
 
 
“ராஸ்கல் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு..? நீ சொன்னதே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன், இதில் நான் வேற அதை மறுபடியும் சொல்லணுமா..?” என்றாள் அவனிடம் சிக்கி இருக்கும் தன் கைகளை விடுவிக்க முயன்றவாறே ஷ்ராவனி.
 
 
“அதான் கேட்கறேன்.. அப்படி நான் என்ன சொன்னேன்..?” என்று மீண்டும் கடித்த பற்களுக்கு இடையே கேட்டான் ஸ்ரீராம். அதில் அவன் தாடை இறுகுவதில் இருந்தே அதீத கோபத்தை ஸ்ரீராம் கட்டுபடுத்த முயல்வது தோழிகளுக்கு புரிய.. ஷ்ராவனியை எப்படியாவது அங்கிருந்து இழுத்து செல்ல முயன்றனர். 
 
 
ஆனால் அது புரிய வேண்டியவளோ சண்டை கோழியாக சிலிர்த்து கொண்டு அவனிடம் குதித்து கொண்டிருக்க.. அவளின் அத்தனை அலைப்பறையையும் தன் ஒற்றை பிடியில் கட்டுபடுத்தியவாறு அசையாமல் நின்று இருந்தான் ஸ்ரீராம்.
 
 
அதற்குள் இவர்களைச் சுற்றி சிறு கூட்டம் கூடி விட்டிருக்க.. “நீ நினைக்கறது போலத் தம்பி தப்பா எதுவும் பேசலைம்மா..” என்றிருந்தார் அங்கு வெகு நேரமாக அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர்.
 
 
அதில் அவரைத் திரும்பி முறைத்தவள், “உங்களுக்கு ஏன் அது தப்பா தெரிய போகுது.. அவன் பெண்களைத் தானே கேவலமா பேசினான்..” என்று அடுத்து அவரிடம் சண்டைக்குத் தயாரானாள் ஷ்ராவனி.
 
 
“இல்லை பாப்பா.. நாங்க ரொம்ப நேரமா இங்கே தான் இருக்கேன்.. நீ அவர் மேலே இடிச்சும், அவரோட சட்டையைப் பாழாக்கியும் கூட அவர் உன்னை எதுவுமே சொல்லலை..” என்று அவரோடு அமர்ந்திருந்த மற்றொரு பெரியவரும் சொல்ல.. “எது..? எதுவும் சொல்லலையா..? இதை விடக் கேவலமா வேற என்ன சொல்லணும்..?” என்றவளை “அதான் கேட்கறேன்.. நான் அப்படி என்ன சொன்னேன்..?” என்ற ஸ்ரீராமின் அதே உணர்வற்ற குரல் அவளின் பேச்சை இடையிட்டு இருந்தது.
 
 
“இப்போ என்ன நான் என் வாயால சொல்லணும்.. அதானே..! ஓகே சொல்றேன், நல்லா கேட்டுக்கோ, நீ.. நீ என்னை.. என்னை பார்த்து தே.. தே..” என்று அதீத உணர்ச்சிவசத்தில் தடுமாறியவளை “தேவுடா.. தே.. வு.. டா.. கேட்டுச்சா..? தேவுடா.. இட் மீன்ஸ் ஓ மை காட்.. ஜஸ்ட் எமோஷன்ல வர ஒரு வர்ட்.. அவ்வளவு தான்.. புரிஞ்சுதா..?” என அவளை அதற்கு மேல் பேச விடாமல் இடையிட்டு தானே பேசி முடித்து அதே வேகத்தில் ஷ்ராவனியின் பிடித்திருந்த கையை ஒரு வேகத்தோடு உதறி விட்டுச் சென்றிருந்தான் ஸ்ரீராம்.
 
 
அவன் சொல்லி சென்ற வார்த்தைகளில் “தே.. வு.. டான்னா.. கடவுளேவா..?” என்று ஒருமுறை தனக்குள்ளேயே சொல்லி பார்த்து கொண்டவள், பார்வையை அருகில் இருந்த பெரியவரின் பக்கம் திருப்ப.. ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தனர் பெரிதாக நாமம் போட்டிருந்த அவர்கள் இருவரும்.
 
 
“ஓ..” என்ற சிறு தோள் குலுக்கலோடு அதை விட்டவள், “ம்ப்ச்.. என் பொங்கல் எல்லாம் வேஸ்டா போச்சு..” என்று படியில் சிதறி இருந்தவற்றைப் பார்த்தவாறே புலம்பி விட்டு திரும்பி இப்போது அது தான் முக்கியம் என்பது போல காயூவை முறைக்க.. அவளோ ‘இப்போதிருக்கும் இந்த மனநிலையில் இவளிடம் சிக்கினாள் ஒரு வழியாக்கி விடுவாள்..!’ எனப் புரிந்து “ஷ்ரவு நீ வா நாம பிரெஷா மறுபடி பிரசாதம் வாங்கிக்கலாம்.. தீர்ந்துட போகுது.. வா.. வா..” என அவளின் கையைப் பற்றி அதற்கு மேல் யோசிக்க விடாமல் இழுத்துக் கொண்டு செல்ல.. மற்றதை எல்லாம் மறந்து கண்கள் மின்ன அவள் பின்னே சென்றாள் ஷ்ராவனி.
 
 
********************
 
 
கோவிலில் இருந்து வந்து தன் உடையை மாற்றிக் கொண்டு கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி. மெல்ல எதுவோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறே தலைவாறி கொண்டிருந்தவளையே கன்னத்தில் கை வைத்தப்படி பார்த்துக் கொண்டிருந்தனர் அவளின் தோழிகள்.
 
 
‘சற்று நேரத்தில் அங்கு வைத்து எவ்வளவு அமர்க்களம் செய்து விட்டாள்..!’ என்ற எண்ணமே அவர்களின் மனதில் ஓடி கொண்டிருக்க.. அதற்குக் காரணமானவளோ அதைப் பற்றிய எண்ணமே துளியும் இல்லாமல் தன் போக்கில் ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தாள்.
 
 
இன்று ஷ்ராவனியின் பிறந்தநாள்.. அதற்குத் தான் காலையிலேயே குளித்துத் தயாராகி நல்ல பிள்ளையாகக் கோவிலுக்குச் சென்றிருந்தாள். சாமி கும்பிடவெல்லாம் இல்லை.. அவளின் தந்தையின் கட்டளையின் படி உடை அணிந்து கோவிலின் முன் நின்று படம் எடுத்து அவருக்கு அனுப்பி வைக்க தான்.. ஆனால் அங்கு இப்படி ஒரு கலவரத்தை இவள் உண்டாக்குவாள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
 
 
இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் ‘நீ ஒரு ஓரமா உட்கார்ந்து புளியோதரையையே சாப்பிடுமா..’ என அவளைத் தொல்லை செய்திருக்கவே மாட்டாள் காயத்ரி. அப்படிச் செய்ததின் பயனாக மற்ற தோழிகளிடம் முறைப்பை பெற்றுக் கொண்டது தான் மிச்சம்.. இந்த நிமிடம் வரை பிறந்தநாள்காரி ஒரு ஐம்பது பைசா சாக்லேட்டை கூடக் கண்ணில் காண்பிக்கவில்லை.
 
 
ஆனால் ஷ்ராவனி இந்த நேரத்தில் இப்படித் தான் நடந்து கொள்வாள் என யாராலேயும் கணிக்கவே முடியாது.. அது அவளைப் படைத்த பிரம்மனுக்கே பிரம்ம பிரயத்தனம் தான்..’ என்று எண்ணியவளுக்கு நேற்று இரவு நடந்தது மனதில் ஓடியது.
 
 
அந்த அறையே இருளில் மூழ்கி இருக்க.. மெல்ல ஒரு மெழுகுவர்த்தி மட்டும் திடீரென உயிர்பெற்றது. அப்படியே அது அசைந்து வர.. ஆங்காங்கு இருந்து மூன்று உருவங்கள் எழுந்து வந்து இருளில் ஒரு கட்டிலின் அருகில் குழுமியது.
 
 
‘ஆரம்பிக்கலாமா..?!’ என்பது போல் ஒரு தலையசைப்போடு நால்வரும் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு உறங்கி கொண்டிருந்த உருவத்தின் போர்வையைப் பிடித்து இழுக்க.. அந்த மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில் முகம் மலர்ந்து விசிகிக்க உறங்கி கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
“ஹாப்பிப் பர்த்டே..” என்று கோரஸாக நால்வரும் குரல் கொடுத்தவாறே அவளை எழுப்ப முயல.. அவளோ இந்த உலக நினைவே இல்லாதது போல் வெட்க புன்னகையோடு இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.
 
 
அதில் கடுப்பானவர்கள் அவளைப் பிடித்து உலுக்கி எழுப்பவும், “ஹே ஹாண்ட்சம்.. என்னை விட்டு எங்கே போறே..?” என்று கையை காற்றில் துழாவியவாறு உளறிக் கொண்டிருந்தவளை பிடித்து எழுப்பி அமர வைக்க முயல.. அவளோ விழியை கூட திறக்காமல், “ஹே ஹேண்ட்சம் உன் பேர் என்ன..?” எனக் கொஞ்சல் குரலில் கேட்க.. அவள் காதில் “ஊஊஊ..” என கோரசாகக் கத்தினர் நால்வரும். அதில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் ஷ்ராவனி.
 
 
தன் கனவு கலைந்த எரிச்சலில் சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களைக் கண்டு கடுப்பானவள், “எங்கே இருந்து தான் எனக்குன்னு வந்து சேருவீங்களோ..! ஊருல இருக்க மொத்த வில்லிங்களும் என் ரூம்ல தான் இருக்காளுங்க.. இப்போதான் என் ஹேண்ட்சம் எனக்கு லவ்வை சொன்னான்.. அப்படியே ஜாலியா அவன் கூடக் கொஞ்ச நேரம் இருக்க விடறீங்களா..? அவன் பேர் கூடத் தெரியலை.. முகத்தைக் கூடப் பார்க்கலை..” என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து அவர்களை அடிக்கத் துவங்கினாள் ஷ்ராவனி.
 
 
“ஏன் டி சொல்ல மாட்டே.. எங்கே பன்னிரண்டு மணிக்கு தூங்கிடுவோமோ இல்லை கேம் விளையாடி டைம் மிஸ் ஆகிடுமோன்னு எல்லாம் யோசிச்சு உனக்குச் சத்தம் கூடக் கேட்க கூடாதுன்னு வைப்ரேட்ல நாங்க அலாரம் வெச்சு எழுந்து வந்தா.. இவ நல்லா குறட்டை விட்டு தூங்கி கனவு கண்டுட்டு நம்மளை வில்லிங்கறா..” என்று மலர் குறைபட்டுக் கொண்டாள்.
 
 
“வாங்கடி நாம போய்த் தூங்குவோம்.. அவ நிம்மதியா கனவு காணட்டும்..” என்று ஸ்வேதா எழுந்து கொள்ள முயல.. “அடியேய் மெண்டலுங்களா.. இப்போ அரைத் தூக்கத்தில் கனவு மயக்கத்தில் இப்படிப் பேசறவ நாளைக்கு அப்படியே மாற்றி சரியான நேரத்துக்கு விஷ் கூடச் செய்யலை நீங்க எல்லாம் என்ன பிரெண்ட்னு கேட்டு காதுல ரத்தம் வர அளவுக்கு அடுத்த வருஷ பர்த்டே வரைக்கும் பேசுவா.. இதெல்லாம் நமக்குத் தேவையா..?” என்று ரேஷ்மா எச்சரிக்கவும், மற்ற மூவரும் அங்கேயே திகைப்போடு நிற்க.. அது என்பது போல நால்வரையும் கெத்தாகப் பார்த்துக் கொண்டே கேக் மேல் இருந்த மெழுகுவர்த்தியை ஊதினாள் ஷ்ராவனி.
 
 
அதன் பின் ஒருவழியாகக் கொண்டாட்டத்தை முடித்து விட்டு அமர்ந்தவர்களுக்குத் தன் கனவை ஷ்ராவனி விவரிக்க.. வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள், “ஆள் எப்படி இருந்தாரு மச்சி..?” என்றனர்.
 
 
“ம்ப்ச்.. எங்கே அந்த இடம் முழுக்க இருட்டா இருந்தது.. பிரபோஸ் செஞ்ச அப்பறம் என் கையைப் பிடிச்சு நடக்கும் போது தான் அந்த ஹான்ட்சம் முகத்துல லேசா வெளிச்சம் விழற நேரமா பார்த்து என்னைச் சரியா நீங்க எழுப்பிட்டீங்க..” என்று குறைபட்டு கொண்டாள் ஷ்ராவனி.
 
 
“ஓ.. வாவ்.. உன் இத்தனை வருஷ கனவு நிறைவேற போகுது மச்சி.. மறுபடி படுத்து தூங்கு.. கனவுல வர ஹீரோ யாரு என்னன்னு சரியா தெரிஞ்சுக்கோ.. முக்கியமா பேர் என்னன்னு கேளு..? அப்பறம் ஆள் எங்கே இருந்தாலும் நாம தட்டி தூக்கிடலாம்..” என்று மலர் கூறவும், “எஸ் பேபிஸ்.. காதலிச்சு தான் கல்யாணம் செய்வேன்ற என் லட்சியம் கூடிய சீக்கிரம் நிறைவேற போகுது.. காத்துல கலந்து எங்கேயோ இருந்த மை ஹாண்ட்சம் என்னைத் தேடி என் கனவுல வர துவங்கிட்டான்.. இனி அதை நிஜமாக்குறது தான் நம்ம அடுத்த டார்கெட்.. பை பேபிஸ்.. என் ராஜகுமாரன் எனக்காக கனவில் வெயிட்டிங்..” என்று விட்டு மீண்டும் போர்வைக்குள் அடைக்கலமானாள் ஷ்ராவனி.
 
 
“அவனவன் எவ்வளவு பெரிய லட்சியத்தை வெச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான்.. இந்தப் பக்கிக்கு லட்சியத்தைப் பார்த்தீயா..” என்று கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர் அவளின் தோழிகள்.
 
 
அதை எண்ணி பார்த்து கொண்டிருந்த காயத்ரியை “என்னடி கனவா..?” என்று பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள் ஷ்ராவனி. “யாருக்கு எனக்கா..?” என முறைப்போடு துவங்கியவள், முழுதாகத் தயாராகித் தன் முன் நின்றிருந்தவளை அதிசயமாகப் பார்த்தவாறு திரும்பி நேரத்தை பார்க்க.. அது அவர்கள் வழக்கமாகக் கிளம்பும் நேரத்திற்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு என்றது.
 
 
“என்னடி அதிசயமா இருக்கு வழக்கமா நாங்க தான் ரெடி ஆகிட்டு உன்னைக் கிளம்புடின்னு கெஞ்சணும்.. இன்னைக்கு என்ன புதுசா..?” என்றாள் காயத்ரி. “அது.. இன்னைக்கு என் ஹேண்ட்சம் என் கண்ணில் படலாம் இல்லையா..! அதான்.. சரி, சரி.. சீக்கிரம் வாங்க நேரமாகுது..” என்றவளை கொலைவெறியோடு பார்த்தவர்கள் “ஏன் இன்னைக்கு நேரில் வந்து உன்னைப் பார்க்கறேன்னு உன்கிட்ட கனவில் சொன்னாரா..?” என்றனர்.
 
 
“இல்லையே..!” எனத் தோள் குலுக்கியவளை முறைத்தவர்கள், “அப்பறம் என்ன நம்பிக்கையில் டி கிளம்பறே..?” எனவும், “இவ்வளவு நாளா எங்கே இருக்கான்னே தெரியாம இருந்த என் ஆளு இன்னைக்குன்னு பார்த்து என் கனவில் வந்து இருக்கான்னா என்ன அர்த்தம்..?” என்று கேட்டு இடைவெளி விட.. அவளையே அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தனர் நால்வரும்.
 
 
அவர்களிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்த்தவள், அப்படி எதுவும் வராமல் போகவும், “சுத்த வேஸ்ட் டி நீங்க.. இத்தனை நாள் வராத கனவு இன்னைக்கு ஏன் வரணும்..? அதுவும் இன்னைக்கு என்ன நாளு..?” என்று எடுத்து கொடுக்க.. “உன் பர்த்டே..” என்றிருந்தாள் ரேஷ்மா.
 
 
“ஹ்ம்ம் உன் தலை.. இன்னைக்கு பிப்ரவரி 14.. இன்னைக்குன்னு என் கனவில் வந்து லவ் சொல்லி இருக்கான்னா என்ன அர்த்தம்..?” எனவும், அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருக்க.. “என் கனவு கண்ணன்.. காதல் நாயகன்.. நேரில் வர போறான்னு தானே அர்த்தம்.. பிப்ரவரி 14ல் பிறந்துட்டு எங்கே காதலே இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டி வருமோ..!
 
 
எங்கே என் லட்சியம் நிறைவேறவே ஏறாதோன்னு பயந்துட்டு இருந்தேன்.. ஆனா என் கனவை எல்லாம் நினைவாக்க எனக்காகவே பிறந்தவன் வந்துட்டான்..” என்று கண்கள் மின்ன பேசி கொண்டிருந்தவளை கண்டவர்கள் அவளின் சந்தோஷத்தை கேள்விக்குறியாக்க விரும்பாமல் அவளோடு இணைந்து கொள்ள.. எதிர்பார்ப்பும் துள்ளலுமாகக் கல்லூரிக்கு கிளம்பினாள் ஷ்ராவனி.
 
 
***********************
 
 
இங்குப் புயல் வேகத்தில் கோவிலில் இருந்து வீடு திரும்பி இருந்த ஸ்ரீராமின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. வேலை மாற்றலாகி சென்னை வந்திருப்பவன், முதல் நாளை அவனுக்கு விருப்பமான பார்த்தசாரதியை தரிசித்து விட்டு மன நிறைவோடு துவங்க நினைத்திருக்க.. மனநிம்மதியையே கெடுப்பது போல் ஒரு நிகழ்வு நடந்திருந்தது.
 
 
‘எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது அவளைப் பார்க்கும் வரை..! அதன் பின்..?’ என்று எண்ணும் போதே ஷ்ராவனியின் முகம் நினைவுக்கு வர.. ஆத்திரத்தோடு “ராக்காஷி.. பிச்சி ராக்காஷி..” (ராட்சசி.. பைத்தியம் பிடிச்ச ராட்சசி) என்றான் பல்லை கடித்துக் கொண்டே.
 
 
கொஞ்சம் கூட நிதானமோ புரிந்து கொள்ளும் தன்மையோ இல்லாமல் அவள் நடந்து கொண்ட விதமும் யோசிக்காமல் அறைந்திருந்ததும் ஆத்திரத்தை உண்டாக்க.. இறுதியாக அவன் மேல் தவறில்லை என்று தெரிந்த பின்னும் அவள் குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை என்பது நினைவுக்கு வர.. “தத்தம்மா..” (யூஸ்லெஸ்) என வெறுப்போடு சொல்லியவாறு குளியலறைக்குள் நுழைந்தான் ஸ்ரீராம்.
 
 
மனதின் கோபமும் வெறுப்பும் தணியும் வரை அப்படியே உடையைக் கூட மாற்றாமல் ஷவருக்கு அடியில் நின்றிருந்தான் ஸ்ரீராம். தன் மேல் அனைத்தையும் கொட்டியும் விட்டு அறைந்தும் இருந்தவளை அந்த நொடியே கன்னம் பழுக்கத் திரும்பக் கொடுத்திருப்பான் தான்.. ஆனாலும் ஒரு பெண்ணிடம் தன் கோபத்தைக் காண்பிக்கக் கூடாதென்றே முயன்று பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
ஆனால் அவனின் பொறுமையைச் சோதிப்பதை போல் மேலும் மேலும் அவள் பேசிக் கொண்டே இருக்க.. இதற்கு மேல் தாங்காது இனி ஒரு நொடி அங்கு நின்றாலும் எங்கே அடித்து விடுவோமோ என்றே வேகமாக அங்கிருந்து விலகி வந்திருந்தான் ஸ்ரீராம்.
 
 
தன் முதல் நாளை மட்டுமல்ல அன்றைய மொத்த நாளையும் பாழாக்கியவளை மனதிற்குள் திட்டி தீர்த்தவாறே ‘இனி வாழ்வில் அவளைப் பார்க்கவே கூடாது..!’ என்ற உறுதியான எண்ணத்தோடு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினான் க்ரைம் பிராஞ்ச் அசிஸ்டெண்ட் கமிஷனராக இங்கு மாற்றலாகி வந்திருக்கும் ஸ்ரீராம சந்திர அல்லூரி.


   
ReplyQuote

You cannot copy content of this page