உயிர் – 19
சரியாக அதே நேரம் சொல்லி வைத்தார் போல விக்கி மிருக்குப் பிடித்த உணவு பார்சலோடு வீட்டிற்குள் நுழைந்தான். “நீங்க சொன்னது எல்லாம் இதுல இருக்குப் பாஸ்” என்றபடி அங்கிருந்து உணவு மேஜை மேல் அதை வைத்தவன்,
“நான் கிளம்புறேன் ஈவ்னிங் பங்ஷனுக்குத் தேவையான அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் டன்... ஆனாலும் நான் கூட இருந்து எல்லாம் சரியா நடக்குதான்னு பாக்கணும்” என்று கூறியவன் அபய்யிடம் விடை பெற்று சென்று விட்டான்.
எப்போதும் போல இப்போதும் தன் தேவை அறிந்து அதைத் தான் வாய்விட்டு சொல்லாமலே செய்து முடித்திருந்தவனைக் கண்டு நெகிழ்ந்த மனதை ‘இதில்லாம் சொல்லாமலே செய்யத் தெரிந்தவனுக்கு அன்று ஏன் அது புரியாமல் போயிற்று’ என்ற எண்ணம் தோன்றவும், மெல்ல நெகிழ தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியவள் எவ்வளவு பசித்த போதும் சென்று சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.
வழக்கம் போலச் சிலபல கெஞ்சல்கள் கொஞ்சல்களுக்குப் பிறகு அதற்கு அவளிடம் இருந்து சில பதில் அடிகள் என நடந்து இறுதியில் தான் நினைத்த காரியத்தைச் செய்தே பழக்கப்பட்ட அபய் இப்போதும் அவளை உணவருந்த வைத்துவிட்டு தான் ஓய்ந்தான்.
உணவருந்தி விட்டு சென்று படுத்த மிருவும் இருந்த அலைச்சலிலும் அசதியிலும் உடனே உறங்கி போனாள். இங்குச் சோபாவில் படுத்த அபய்யும் அப்படித்தான் வெகு விரைவாகவே உறங்கிப் போனான்
வெகு நேரத்திற்குப் பிறகு உறக்கம் கலைந்து புரண்ட மிரு மணியைப் பார்க்க... அது ஐந்து மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்டு பதறி எழுந்தவளுக்கு மாலை செல்ல வேண்டிய விழா நினைவுக்கு வர “எப்படி இத்தனை நேரம் உறங்கினோம்!?’ என்று தன்னையே கடிந்து கொண்டு தயாராக முனைந்தவள், ஏதோ தோன்ற ஹாலில் சென்று எட்டிப் பார்க்க... அவள் எதிர்பார்த்தபடியே அங்கு அபய் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனை எழுப்பினாள்.
அவனுமே உடனே நிலைமை புரிந்து அவளிடம் எந்தச் சீண்டல்களையும் வைத்துக் கொள்ளாமல் அவசரமாகத் தயாராக அவன் வீட்டிற்குச் சென்றான். இருவருக்குமே தன்னை மறந்த ஒரு ஆழ்ந்த தூக்கம், பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் கிடைத்திருந்தது. அதுவே இருவர் மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சியை உண்டு செய்ய... அதே உற்சாகத்தோடு தயாராகத் தொடங்கினர்.
அரைமணியில் தயாராகிய அபய் மிரு தயாராகிவிட்டாளா எனப் பார்க்க வீட்டிற்குள் நுழைய...
அந்த இளம் பாசி வண்ண லெஹங்காவில் அழகாகத் தயாராகி வந்து நின்றவளின் மேல் பதித்த பார்வையை அபய்யால் விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.
இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தவனின் கண்கள் அந்த லெஹங்காவின் இடைவெளியில் வெளிப்பட்ட பட்டு போன்ற அவளின் இடையிலேயே பதிந்து இருந்தது. கண்கள் அறிந்த அதன் மென்மையை அறிந்து கொள்ளக் கைகள் துறுதுறுத்த போதும் தன்னைப் பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டிருந்தான் அபய்.
அவனை மேலும் பொறுமை இழக்க செய்வது போல அந்த இடையில் அலங்காரத்திற்காகப் போடப்பட்டிருந்த முடிச்சு அவ்வப்போது உரசிக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு அந்த முடிச்சின் மேல் அத்தனை பொறாமையாக இருந்தது. தனக்கே தனக்கான உரிமையை அது எடுத்துக் கொள்வது போல எண்ணம் தோன்றியவுடன் இப்போதே அதை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு வெறியே எழுந்தது அவனுள்.
அந்த முடிச்சை அவிழ்த்து எறிய வேண்டும் என்ற பொறாமையோடு முறைத்துக் கொண்டிருந்தவனின் மனசாட்சி ‘அதற்காகவா ராசா...? நீ முடிச்சை அவிழ்க்க நினைக்கறே...?!’ எனக் கேள்வி கேட்க ‘ஆமா... ஆமா...’ என்று வீம்பாக அதற்கு மனதிற்குள்ளேயே பதிலளித்துக் கொண்டிருந்தான். இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்ற ஒரு நிலையில்...
வேகமாக அவளை நெருங்கி அந்த மெல்லிடையைத் தன் வன்மையான கரங்களைக் கொண்டு அழுந்த பற்றி இழுத்து வளைத்து இருந்தான் அபய். இதைக் கொஞ்சமும் எதிர்பாரால் கிளம்புவதற்கான மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மிர்னா மலர் சரங்களைப் போல் அவன் மேல் மோதி திகைத்து விழித்து நின்றாள்.
இடையின் மென்மையை அறிந்தவன் அடுத்து அவளின் இதழின் மென்மையை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அந்தப் பட்டு இதழ்களை அவள் சமாளித்து நின்று தன்னிடம் இருந்து விலகும் முன் நொடியும் தாமதிக்காது சிறை செய்திருந்தான்.
திடீரென அபய் அணைத்ததால் திகைத்து அவன் மேல் மோதி நின்றிருந்த மிர்னா அவனிடமிருந்து விலக எண்ணி அவன் தோள்களில் கைகளை வைத்து தள்ளிக் கொண்டு இருந்தவளின் மலர்க் கரங்கள் அடுத்து அவன் செய்த செயலில் அப்படியே நின்றது.
அவனின் அதிரடியான பல தாக்குதல்களை மட்டுமே அறிந்தவள் அவள், அதிலும் இந்தச் சில நாட்களாகத் தொடர்ந்து அவனின் அதிரடிகளைப் பார்த்துக் கொண்டே இருப்பவளுக்கு இப்போதைய அவனின் மென்மையும் ரசனையுமான அணுகுமுறை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்வசம் இழக்க செய்து கொண்டிருந்தது.
அதில் அவனை விலக்க எண்ணி அதற்கான முயற்சிகளில் இறங்கி இருந்தவளின் மலர் கரங்கள் அவளையும் அறியாமல் அவனை இறுக அணைத்து அவனின் செயல்களுக்கு எதிர்வினையாற்ற செய்திருந்தது..
தனக்குள் அவளின் அருகாமையில் பேயாட்டம் போடும் உணர்வுகளின் தாக்கத்தினால் அவளை அணைத்து இதழ்களைச் சிறை செய்து விட்டானே தவிர, அவளின் விருப்பமின்றி இப்படி நடந்து கொண்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டவன் அவளிடமிருந்து விலக எண்ணிய நொடி தன் செயல்களுக்கு எதிர்வினையாற்ற தொடங்கியிருந்த மிர்னாவை கண்டு இன்பமாக அதிர்ந்தவன் மேலும் அவளுள் மூழ்கத் தொடங்கியிருந்தான்.
10 வருடங்களுக்கு முன் காதலித்து இருந்தாலும் முத்தம் வரை எல்லாம் சென்றதில்லை அபய். அவனிடம் எப்போதுமே இருக்கும் நேர்மையான குணமும் ஒழுக்க நெறியும் அவனை காதல் என்பதை அழகாகக் கையாள வைத்ததைத் தவிர அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல தூண்டியது இல்லை.
மிர்னாவுமே தன்னவன் மேல் தளும்பத் தளும்பக் காதல் கொண்டு இருந்தாலும் அன்று இருந்த சூழல் அவளை அதை வேறு எதையும் உணரச் செய்யவில்லை.
எனவே இதுவே இருவருக்கும் இதில் முதல் அனுபவம். வாழ்வின் முதல் இதழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இருவராலும் அவ்வளவு எளிதாக விலக முடியவில்லை. அவன் தன் உரிமைக்கும் உணர்வுக்குமான தேடலை அவளிடம் நடத்திக் கொண்டிருக்க... அவளோ தன் தனிமைக்கும் தவிப்புக்குமான தேடலை அவனிடம் நடத்திக் கொண்டிருந்தாள்.
இதில் மிருவின் இடையில் அழுந்த பதிந்திருந்தவனின் கரங்கள் மேலும் மேலும் தன் அழுத்தத்தைக் கூட்டி அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டே செல்ல... அவளோ தன் இடது கரத்தை அவனின் கழுத்தில் பதித்து வலதுகரம் கொண்டு அவன் கேசத்தில் அழுத்தத்தைக் கூட்டி மேலும் அவனைத் தன்னுள் புதைத்துக் கொள்ள முனைந்தாள்.
பாவை அவளின் இடையின் மென்மையை உணர்ந்தவனின் கரங்கள் அவளின் ஒட்டுமொத்த மென்மையையும் அறிந்து கொள்ள எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
நிச்சயமாக இருவரும் அவர்களாக விலகப் போவதில்லை என்பது தெரிந்தது போலும் திடீரென வெளியில் படார் என்ற சத்தத்துடன் ஏதோ விழ, அதில் தன் உணர்வு பெற்றவர்கள் சட்டென விலகவும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்குத் தயக்கமும் தடுமாற்றமும் எழுந்து அவர்களைத் தவிர்க்க செய்தது.
மூச்சுக் காற்றுக்கு ஏங்கிய போது கூட விளங்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் மற்றவருக்கு மூச்சை கொடுத்துத் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தான் செய்த, செய்யத் துணிந்த செயல் என்னவென்று விளங்க அபய்க்கு தன் செயலை எண்ணி எந்த ஒரு வெட்கமும் அசிங்கமும் ஏற்படவில்லை.
காரணம் தன்னவளிடமே தான் உரிமை எடுத்துக் கொண்டது அவனுக்குத் தவறாகத் தோன்றவில்லை. ஒருவேளை அவளின் சம்மதம் இல்லாமல் அதிரடியாகச் செயல்பட்டது வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம் ஆனால் அவள் தன்னை விலக்காது, தனக்குப் பதில் அளித்தது அவன் மனதில் எந்தவித குற்றவுணர்வும் இன்றி ஒரு உல்லாசத்தைக் கொண்டு வரவே செய்தது.
ஆனால் மிரு அதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு மனநிலையில் இருந்தாள். என்னதான் அவன் மேல் மலையளவு காதல் மிருவின் மனதில் இருந்தாலும் தன்னை வேண்டாம் என்று விட்டு விலகிச் சென்றவனிடம் இப்படிக் காதலோடு சரணடைந்ததை அவளால் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவன் அருகாமையும் நெருக்கமும் நிச்சயம் தன்னை இது போலத் தடுமாற்றங்களைக் கொண்டு வர செய்யும் என்று தெரிந்து தான் ஆரம்பம் முதலே அவனை தன்னை நெருங்க விடாமல் சிடுசிடுத்து தூர நிறுத்திக் கொண்டிருந்தாள்.
இன்று அதையெல்லாம் மீறி இப்படி நடந்து கொண்டதில் வெட்கித் தலை குனிந்தவள் அபய்யை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாமல் தன்னைப் பற்றி அவன் என்ன நினைத்திருப்பான் என்ற எண்ணம் தோன்றவும் கழிவிரக்கத்தில் அவளுக்கு கண்கலங்க தொடங்கியது.
அவள் கூறவில்லை என்றாலும் தன் உயிரானவளை புரிந்துக் கொள்ள முடியாதவனா அபய். சொல்லாமலே அவள் நிலை என்ன என்று புரிந்தவன் அதற்கு மேல் அங்கு நின்று மீண்டும் அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் தான் கீழே காத்திருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறி விட்டான். அபய் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளின் கண்களில் காதலும் வலியும் சேர்ந்து வந்தது.
ஒருவாராக இருவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கியபடி விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். கோலாகல கொண்டாட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கைக் கண்டு அதன் பிரமாண்டத்தையும் அங்கு வருகை தந்திருந்த பெரிய மனிதர்களின் அணிவகுப்பிலும் மலைத்து தான் போனாள் மிர்னா.
படத் துவக்க விழா மற்றும் நாயகன் நாயகியின் அறிமுகம் இயக்குனரின் அறிமுகம் படத்தைப் பற்றிய வந்திருந்த விருந்தினர்களின் சிறு புகழாரம் மற்றும் அபய்யை புகழ்ந்து பேசுவது என இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விழா தொடர்ந்து கொண்டே இருந்தது.
எங்குத் திரும்பினாலும் பிரபலங்கள்... பிரபலங்கள்... பிரபலங்கள்.... அவ்வளவு எளிதாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத மிகப்பெரிய பிரபலங்கள் கூட வந்திருந்து விழாவை சிறப்பித்தது அபய்யின் உயரத்தை பறைசாற்றுவது போல இருந்தது.
ஒரு சிலர் இந்தப் படத்தைப் புகழ்வது போல அவனிடம் தங்களுக்கு அடுத்தப் படத்தில் வாய்ப்புக் கொடுக்கக் கோரி பேசிவிட்டு செல்ல... ஒரு மென்னகையோடு அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தானே தவிர அவன் முகத்தில் கர்வமும் திமிரும் எங்குமே தென்படவில்லை.
அவளுமே இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறாள் என்றாலும் தொழில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தவிர வேறு எதிலும் கலந்து கொள்ள அவள் சம்மதிப்பது இல்லை என்பதனால் இத்தனை பிரபலங்களைப் அவள் ஒன்றாக ஒரே இடத்தில் பார்த்ததில்லை. அதிலும் அனைவரும் அவனிடம் காட்டும் மரியாதை அவளை மலைக்க வைத்தது.
தன்னை மீறி ஒரு ரசனையான பார்வையோடு அபய்யையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமோ அவனின் இந்த இயல்பான புன்னகையை வெகுவாக ரசித்து ‘இது தான் மாமூ உன்னோட ஸ்பெஷல்’ எனக் கொஞ்சிக் கொண்டது.
ஒருவழியாக இவை அனைத்தும் முடிய இரவு 8 மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்குப் பின்புறமாக இரவு உணவும் பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கிருந்து அனைவரும் அங்குச் சென்று ஆடல் பாடல் எனக் கொண்டாட்டமாக இருக்கத் துவங்கினர்.
தன் பணி பட விழாவோடு முடிவடைந்தது என்பதனால் ‘இத்தோடு வீட்டிற்குக் கிளம்பி விடலாமா!?’ என்று மிரு எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கதாநாயகன் அவளைச் சாப்பிட வருமாறு அழைக்க என்ன சொல்வது எனத் தெரியாமல் தயங்கியவள் அவனோடு அங்குச் சென்றாள்.
பார்ட்டி ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம் எனக் கலை கட்டிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் ஜரூராக உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அனைத்தையும் பார்வையிட்டவள் ஒரு ஓரமாக நின்று கதாநாயகனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அப்போது மதுக் கோப்பைகளோடு அவளை நெருங்கிய பேரரிடமிருந்து தவிர்க்க முடியாமல் வழக்கம் போல ஒரு கிளாசை எடுத்துக் கொண்டாள் மிரு. மற்றவர்களோடு பேசி கொண்டு இருந்தாலும் மிருவின் மேல் ஒரு கண்ணைப் பதித்திருந்த அபய் இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
விழா நடந்த வரை சரி, அதன் பிறகு அபய் எப்போது இங்கு உள்ளே வந்தானோ அந்த நிமிடத்தில் இருந்து இனிப்பை மொய்க்கும் ஈயாக மாறி அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொள்ள... அவனும் தவிர்த்து விலக முடியாத சூழ்நிலையில் அவர்களோடு சிரித்துச் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மிரு வழக்கமாக மற்றவர்களின் கண்ணை உறுத்தாமல் யாரும் கேலி பேசாமல் இருப்பதற்காகப் பார்ட்டி நடக்கும் சமயங்களில் ஒரே ஒரு மதுக் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அந்தப் பார்ட்டி முழுவதும் சிப் செய்வது போலச் சமாளித்து விடுபவள் தனக்குச் சொந்தமான ஒன்றை தான் உரிமை கோர முடியாத நிலையில் தள்ளி இருப்பதையும் யார் யாரோ சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருப்பதையும் தாளமுடியாமல் கையில் இருந்ததை ஒரே மடக்காகக் குடித்து முடித்திருந்தாள்.
அபய் அத்தோடு சும்மா இருந்திருந்தால் அவளும் அத்துடன் நிறுத்தி இருப்பாளோ என்னவோ...! ஆனால் விதியின் விளையாட்டால் அவனைப் பெண்கள் தங்களோடு நடனமாட அழைக்க, அவனும் அந்த அழைப்பை ஏற்று ஆடத் தொடங்கியிருந்தான். நான்கு பெண்கள் அவனைச் சுற்றி நின்று ஆட...
சாரி கே பால் ஸா கபி மேட்ச் கியா ரே
கபி சோடு தியா தில் கபி கேட்ச் கியா ரே...
என்று ஹை டெசிபலில் பாடல் ஒலிக்க, அதே அளவு உற்சாகத்தோடு ஆடத் துவங்கி இருந்தான் அபய். அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடி முடித்ததும், அடுத்து ஓருவர் மாற்றி ஒருவர் அவனோடு ஆட முற்பட... இல்லை போதுமெனத் தவிர்க்க நினைத்தவனின் பார்வை சற்றுத் தொலைவில் நின்று பொறாமையில் பொசுங்கி கொண்டிருந்த மிருவை பார்த்ததும் உல்லாசத்தில் துள்ள... அவளை வெறுப்பு ஏற்றுவதற்கு என்றே மீண்டும் அவர்களோடு சேர்ந்து தனித்தனியாக ஆடத் தொடங்கினான்.
இப்போது நான்கு பெண்களோடு சேர்ந்து அபய் நடுவில் நின்று ஆடுவது மாயக்கண்ணன் போல அந்த டிஜேவுக்குத் தோன்றியதோ என்னவோ...!? பாகுபலியில் வரும் கண்ணா நீ தூங்கடா என்ற பாடலை அவன் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மாறிமாறி ரீமிக்ஸ் செய்து ஒலிக்க விட, அதற்கு ஏற்ற அசைவோடு ஒவ்வொரு பெண்ணும் அவனோடு சேர்ந்து இணைந்து ஆடத் தொடங்கினார்கள்.
இதைக் காண காண தன் பொருள் தன் கண்முன்னேயே பறி போவதை பொறுக்க மாட்டாமல் மேலும் அருகில் இருந்த டேபிளில் இருந்த மதுக் கிண்ணங்களை எடுத்து 2... 3... 4... எனக் காலி செய்து கொண்டிருந்தாள் அவள் அறியாமலேயே...!!
ஒரு கட்டத்தில் அவள் அளவுக்கு மீறி மதுவை குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு இதற்கு மேல் அவளோடு விளையாட நினைக்காமல் போதும் என்பது போல அனைவரிடமும் கைகாட்டி சிரித்துக் கொண்டே அங்கிருந்து இறங்கி வந்த அபய் மிருவிடம் டான்ஸ் என்று கூறி கையை நீட்ட...
அவளும் சென்றமுறை போல மறுத்து ஏதும் பேசாமல் உடனே அந்தக் கையைப் பற்றிக் கொண்டு மேடை ஏறி இருந்தாள். இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அபய் ஒரு புன்னகையோடு அவளை அணைத்துப் பிடித்தபடி டிஜேவை பார்த்துத் தமிழ் சாங்ஸ் என்று கூற... அவர்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருந்தது போல அந்தப் பாடல் ஒலிக்கத் துவங்கியது
ஓ... குளிரும் பனியும் என்னைச் சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
மிருவின் பின்னால் அபய் நின்று கொண்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி அந்தப் பாடலுக்கு ஏற்ப இருவரும் ஒரே விதமாக உடலை மட்டும் அசைக்க...
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
இருவரும் கைகளைப் பிணைந்தபடி பறவை போல ஒரே நேரத்தில் வலது கையையும் இடது கையையும் மாறிமாறி அசைத்துப் பறப்பது போலச் செய்து, பின் மெல்ல குனிந்து நிமிர்ந்து ஆடிக் கொண்டிருக்க...
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்...
இந்த இடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டென ஆடிக் கொண்டிருந்தவளை குனிந்து தன்னோடு இறுக்கி பிடித்துத் தூக்கியவன் அவளை அந்த ‘தேய்கிறேன்ன்ன்ன்ன்’ என்ற வார்த்தையில் வரும் இசைக்கு ஏற்ப சுழற்ற தொடங்கவும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
ஓ... காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே
மழையில் நனையும் பனி மலரை போல
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
மெல்ல தன் கரங்களில் இருந்தவளை சுழற்றி முடித்த அபய் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னோடு சேர்த்து அணைத்தபடியே கீழே இறக்கவும், அப்படியே அவனின் பரந்த மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டே மிரு அந்த வரிகளுக்கு ஏற்ப அவன் மேல் சாய்ந்தவாறு ஆடத் துவங்கியவளை இன்னும் இறுக்கமாகத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி அபய்யும் அவளின் அசைவுகளுக்கு ஏற்ப ஆடினான்.
ஓ.ஓ.ஓ . உலகை தழுவும் நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்...
அவள் மனதில் இருப்பதை அந்த வரிகளின் மூலம் மிரு நடனத்தில் வெளிப்படுத்திவிட, அடுத்து தன் மனதில் இருப்பதை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துவது அபய்யின் முறையானது.
இப்போது ஒரு குழந்தையைத் தன் கையில் ஏந்தும் பாவனையில் இரு கரங்களில் அவளைத் தூக்கி தன் முகத்தோடு முகம் தேய்க்க அணைத்தபடி ஆடியவன் மெல்ல அவளின் உடலை கரங்களில் வைத்தபடியே இரண்டாக மடிப்பது போல மடித்துப் பின் விரித்து என ஆடி முடிக்கவும், அங்குச் சந்தோஷக் கூச்சல் எழுந்து அடங்க வெகு நேரம் ஆனது.
அந்தச் சத்தத்திலேயே தன் உணர்வு வரப் பெற்ற மிரு மெல்ல தான் செய்து கொண்டிருக்கும் செயல் உணர்ந்து அங்கிருந்து விலகி வெளியே செல்லத் துவங்கினாள்.
மிரு செல்வதைக் கவனித்த அபய்யும் ஒரு புன்னகையையும் தலை அசைப்பையும் மெல்ல தந்தவாறே அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பி அவளின் பின்னோடு ஓடி வந்து இணைந்து கொள்ள... அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள் தன் போக்கில் நடக்கத் துவங்கவும் அவளைக் காருக்கு அழைத்து இந்த நேரத்தில் ஒரு வாக்குவாதத்தை நடத்த விரும்பாதவன் அளக்காக அவளைத் தூக்கிச் சென்று காரில் அமர வைத்திருந்தான்.
அதைத் தடுக்கவும் வெறுக்கவும் முடியாத அளவிற்கு அவளின் உள்ளே சென்றிருந்த மது தன் வேலையைக் காட்டத் துவங்கி இருக்க அமைதியாகக் கண்மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள் மிரு.
வீடு வந்த பிறகும் கண்மூடி தன் நினைவின்றிக் கிடந்தவளை தன் கரங்களிலேயே ஏந்திக் கொண்டு அவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் கதவில் இருந்த பூட்டை திறப்பதற்காக மிருவை இறக்கி தன்னோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் கதவைத் திறக்க முயன்று கொண்டிருக்க... அதில் விழி திறந்து பார்த்த மிரு மேலும் அவனோடு ஒன்றி நின்று கொண்டாள்.
அவளின் அந்தச் செய்கையில் பழைய மிரு அவனின் கண்முன் தெரிய ஒரு புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் அபய். உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்துவிட்டு அவளைப் படுக்கை அறையில் கொண்டு விட நினைத்து அழைத்துச் சென்றவனைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியவள்
“ஏன் இப்படிச் செஞ்ச மாமூ..?” எனத் துக்கமும் வேதனையுமாக அவன் முகம் பார்த்து கேட்கவும், தன் மார்பில் சாய்ந்து நின்றபடி கேட்பவளின் இந்தக் கேள்வி எதைக் குறித்து எனப் புரியாமல் திகைத்தவன்
“நான் என்ன செஞ்சேன் லட்டு..?” என்றான் புரியாமல், “உனக்கு நிஜமா எதுவுமே புரியலையா...?! இல்ல நீ புரிஞ்சுக்க விரும்பலையா...?!” என்றவளின் வேதனை அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய,
இப்போது அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்று புரிந்து கொண்டவன் “இப்போ எதுக்கு இந்தப் பேச்சு லட்டு... ரெஸ்ட் எடு வா..” என அவளை அங்கிருந்து நகர்த்திக் ,கொண்டு போக முயன்றான். அதற்கு வாய்ப்பளிக்காமல் அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தவள் “உனக்கு என்னைப் பிடிக்குமா...?” என்று கேட்டாள்.
“எனக்கு என் லட்டுவ ரொம்பப் பிடிக்கும்டி..” என்று கூறியவன் மெல்ல அவளின் நெற்றியில் தன் இதழ் பதிக்க... “பொய்... பொய் சொல்ற மாமூ உனக்குப் பிடிச்சிருந்தா அப்படி நீ செஞ்சிருக்க மாட்ட மாமூ..” என்றவளின் கண்கள் வேதனையில் கலங்க தொடங்கியது.
அவளின் கண்ணீரை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லாது போக, “அது அப்படி இல்லைடி.... அன்னைக்கு அப்படி நான் போனதற்கான காரணம் வேற...” என்றவன், அதை இப்போது விளக்கக் கூடிய நிலையிலும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையிலும் அவள் இல்லை என்று உணர்ந்து “அதை விடு, இப்ப நீ ரெஸ்ட் எடு..” என்று மீண்டும் நகர முயன்றான்.
“இல்ல எனக்கு நல்லா தெரியும், உனக்கு என்னைப் பிடிக்காது... உன் மனசுல நான் இல்லை... அப்படி இருந்திருந்தா நிச்சயம் நீ இப்படிச் செஞ்சுருக்க மாட்டே மாமூ, நான் கொஞ்சம் கூட அழகா இல்லையா..? சொல்லு மாமூ என்கிட்ட என்ன குறை, ஏன் உனக்கு என்னை பிடிக்காம போச்சு...?” என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்துத் தேம்பத் தொடங்கினாள்.
“பேபி... பேபி... நீ என் உயிர் டி, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் டி... உன்கிட்ட எந்தக் குறையும் இல்லை, தப்பு எல்லாம் என் மேலதான்... தப்பு செஞ்சவன் நான்தான் பேபி..” என்றவனின் கண்களும் கலங்கத்தான் செய்தது.
அபய்யின் வார்த்தைகளில் மெல்ல விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள், “நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்குமா மாமூ...?” என்று கேட்க, அந்தச் சிறு குழந்தை போன்ற பாவனையில் தன்னைத் தொலைத்தவன் “ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி அவள் கண்களிலும் கன்னத்தில் முத்தமிட்டான்.
“எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் மிரு.
அப்படியே அவனை அணைத்து பிடித்தபடியே நெற்றியை பற்றிக் கொண்டவள் “எனக்கு ஒரு மாதிரி இருக்கு மாமூ” என்று முகம் சுழித்தப்படி கூறியவளை கண்டு போலியாக முறைத்தவன் “உன்னை யார் குடிக்கச் சொன்னது...?” என்று கடிந்து கொண்டான்.
“உன்னை யாரு அவங்க கூட ஆட சொன்னது...?” எனத் திரும்ப அவளும் அவனைக் கடிந்து கொண்டாள். “அப்போ நீ வந்து ஆட வேண்டியது தானே...” என்று செல்லமாக அவளோடு சண்டையிடவன், மிருவை படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தவன் அவளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்க எண்ணி நகர,
அவனது கைகளைப் பற்றித் தடுத்தவள், ”பார்த்தியா நீ பொய் தானே சொன்னே...?” என்று கேட்டபடி உதடு பிதுக்கி அழ தயாராகவும் என்ன பொய் எனப் புரியாமல் புருவம் சுருக்கிய அபய்யை கண்டு “என்னைப் பிடிக்கும்னு பொய் தானே சொன்னே” எனக் கேட்டபடியே அழ தயாரானவளின் செய்கை சிறுகுழந்தையின் செய்கை போலத் தோன்றவும் ஒரு சிறு புன்னகையோடு அவளின் அருகில் அமர்ந்தான்.
“நிஜமாவே உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி நெற்றியில் அழுந்த தன் முத்திரையைப் பதிக்கவும் அவன் அமர்வதற்காகவே காத்திருந்தவள் போலச் சட்டெனத் தாவி அவனின் பரந்த மார்பில் தன் முகத்தைப் புதைத்து அவனை அணைத்தபடி அவனோடு இழைந்தவாறே படுத்துக் கொண்டாள் மிரு.
அவளின் இந்தச் செய்கையில் வாஞ்சையான ஒரு புன்னகை தோன்ற, நிச்சயமாக உறங்கும் வரை அவளின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செய்கைகள் தொடரும் என்று புரிந்து கொண்டவன் இது எல்லாம் அவளின் உள்ளே சென்றிருக்கும் அந்த அரக்கனின் அட்டகாசம் என்பது புரிய, முதலில் இவளை உறங்க வைப்பது தான் சரி வரும் என்று எண்ணி மெல்ல அவள் முதுகை தடவிக் கொடுத்து உறங்க வைக்க முயன்றான்.
“அப்போ காட்டு” என்ற குரல் திடீரென ஒலிக்கவும், “என்ன காட்டணும்...?” என்றவனின் கேள்விக்கு விழியை மட்டும் உயர்த்தியவள், ”உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு காட்டு” என்றாள்.
“நாளைக்குக் காட்றேன் இப்போ தூங்கு..” என்று அபய்யை கண்டு சிணுங்க துவங்கியவள், “ம்ஹும்.. இப்பவே காட்டு, நீ காட்டினால் தான் தூங்குவேன்..” என்று கூறவும், ‘இது என்னடா வம்பாப் போச்சு’ என மானசீகமாகத் தலையில் கை வைத்த அபய், “மினி பேபி குட் கேர்ள் தானே... இந்த மாமூ சொன்னா கேட்பா தானே.... இப்போ நல்ல பிள்ளையா தூங்குவாளாம் காலையில மாமூ அவளை எனக்கு எவ்ளோ பிடிக்கும்ன்னு காட்டுவேணாம் சரியா” என்று தாடையைப் பற்றிச் சிறு குழந்தையைக் கொஞ்சுவது போலக் கொஞ்சி அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.
“நான் குட் கேர்ள் தான்... ஆனா நீதான் பேட் பாய், அதான் நான் கேட்கிற எதையும் செய்யவே மாட்டேன்றே..” என்று அவள் குறைபட்டுக் கொள்ள...
“என்ன அப்படி நீ கேட்டு நான் செய்யாம போயிட்டேன்..?!” என்று அபய் சற்றுக் கோபம் கொள்ளவும் “அப்படியா எல்லாமே செஞ்சீயா...?” என்று ஏற்ற இறக்கத்தோடு புருவம் மற்றும் விழிகளை அசைத்து கேட்டவளை ரசித்துக் கொண்டே “கண்டிப்பா செய்வேன்” என்றான்.
“அப்போ கிஸ் மீ” என்றாள் மிரு. அதில் திகைத்தவன் “என்னது?” என்று மறுபடியும் கேட்க, “கிஸ் மீ மாமூ... நீ தான் எல்லாமே செய்வே இல்லை, கிஸ் மீ” என்றாள்.
‘அடியே உன்னை’ என்று மானசீகமாகப் பல்லைக் கடித்தான் அபய். மாலை கொடுத்த இதழொற்றலில் தொடங்கி அதன் பிறகு ஆடிய நடனம் இப்போது வரை அவள் தன்னோடு இழைந்து கொண்டு இருப்பது எனக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் வசம் இழந்து தடுமாறிக் கொண்டே இருந்த போதும் அவளின் இந்த நிலையை மனதில் கொண்டு தன்னை வெகுவாகச் சிரமப்பட்டுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தவன் அவளின் கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் தடுமாறிப் போனான்.
அவனுக்கு நன்றாகவே தெரியும் தன் மேலான அவளின் காதல் தான் இத்தனை வருடங்களாக உள்ளுக்குள்ளேயே பொத்தி பொத்தி வைக்கப்பட்டிருந்தது எல்லாம் இன்று தன்னை மறந்த நிலையில் அவளையும் மீறி வெளியில் வந்து கொண்டிருக்கிறது என்று...! ஆனால் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அவன் தயாராக இல்லை.
அபய் அவன் நினைவுகளில் மூழ்கியிருக்க, மெல்ல விசும்பலோடான அழுகை சத்தம் கேட்டு தன் பார்வையைத் திருப்பியவன் அங்கு மிரு அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதறிப் போனவன் அவளைச் சமாதானம் செய்ய முயலவும், “உனக்கு என்னைப் பிடிக்கல...” என மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்துக் கடைசியாக முடிக்கும் போது “அதனாலதான் எனக்குக் கிஸ் பண்ண மாட்டேன்ற...” என்று கூறி முடித்திருந்த நொடி அவளின் இதழ்கள் மிக வேகமாகச் சிறை எடுக்கப்பட்டிருந்தது.
மிருவின் அழுகையையும் வேதனையையும் பொறுக்க முடியாமலே அவள் கேட்டதைக் கொடுத்து விட்டால் அவள் உறங்கி விடுவாள் என்ற எண்ணத்தில் இதைத் தொடங்கியிருந்த அபய் பின் விலக நினைக்க... ஆனால் அதற்கு வாய்ப்பளிகாத மிரு அவனை மேலும் மேலும் தன்னோடு சேர்த்துக் தனக்குள் புதைத்துக் கொள்ளத் தொடங்கினாள்.
இன்னும் மன்னிக்கப் படாமலும் பேசித் தீர்க்கப் படாமலும் இருந்த அவர்களின் பிரச்சனை அனைத்தும் அப்படியே இருக்க... வாழ்க்கை மட்டும் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றிருந்தது.