உயிர் – 6
மிர்னா உதயச்சந்திரனிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு தன் நடையை நிறுத்திய அபய் அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்க... மிர்னாவின் இத்தனை திட்டுகளுக்கும் ஒரு வார்த்தை கூடப் பதில் அளிக்காமல் உதயச்சந்திரன் அமைதியாகவே நின்றிருந்தான்.
அவளே கத்தி கத்தி ஓய்ந்து போய் “உன்கிட்ட எல்லாம் பேசுறது சுத்த வேஸ்ட்...” எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, அப்போதும் கூட அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவன் மிர்னாவின் பின்னேயே வெளியேறினான்.
அவர்கள் இருவரும் கார் பார்க்கிங் செல்லும் வழி காண பாதையை நோக்கி அவர்களின் அருகில் இருந்த கதவின் வழியே வெளியேறியதால் இருவருமே அபய் அங்கு வந்ததைக் கவனிக்கவில்லை.
ஆனால் தான் வந்ததில் இருந்து அனைத்தையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தவனின் புருவங்கள் யோசனையோடு சுருங்கியது. அவற்றைப் பற்றிச் சிந்தித்தபடியே தன் அறைக்குள் நுழைந்தவன் தன்னோடு வந்த விக்கியை பார்த்து திரும்பவும்,
“புரியுது பாஸ்... அவனுடைய பேரு முதல் கொண்டு எல்லாத் தகவல்களையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்க முன்னே கொண்டு வந்து வைக்கிறேன்...” எனக் கற்பூரமாகப் பதிலளித்தவனை ஒரு நக்கலான பார்வை பார்த்தவன்,
“ஒரு ஆணியும்...” என்றபடியே அபய் விக்கியை பார்த்துச் சைகை செய்ய... இஞ்சி தின்றது போலானது விக்கியின் முகம். “அவன் பேரு உதயச்சந்திரன் என்பதில் இருந்து அவன் யாரு என்ன என எல்லா வெங்காயமும் எனக்குத் தெரியும்... ஓவர் ஸ்மார்ட்டா இருக்காதே விக்கி, அது உனக்குச் சூட்டாகாது... நான் சொல்றதை மட்டும் செய்...” என்றவன்,
“கிட்டத்தட்ட நான்கு நாட்களாக ரோஹித்தும் சுபி குட்டியும் என் கண்ணில்படவே இல்லை... அவங்க எங்கே என்னன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்...” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் போக,
“ஒருத்தன் அறிவாளியா இருந்தா உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே... அவனை இப்படி மொக்கை செய்ய வேண்டியது... பொறாமை பாஸ், உங்களுக்கு என் மேலே...” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட விக்கியின் கண்கள் அபய் சென்ற திசையைப் பார்த்து தன் தாடையை யோசனையாகத் தடவி கொண்டே ஏதோ சிந்தித்தபடி சில நொடிகள் நின்றிருந்தவன் உடனே அங்கிருந்து வெளியேறினான்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் அபய் முன் வந்து அவன் கேட்ட விவரங்களோடு நின்றான் விக்கி.
“அவங்க ரெண்டு பேரும் மூணு நாள் முன்னே மும்பை கிளம்பி போயிட்டாங்களாம் பாஸ்... நம்ம ஹோட்டலில் இருந்து தான் கேப் புக் செஞ்சு கொடுத்து இருக்காங்க ஏர்போர்ட் போக...” என்று தான் சேகரித்த தகவலை கூறியவனை அபய் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்,
“புரியுது பாஸ், அதுக்குள்ளேயா இவ்வளவு தகவலை சேகரிச்சேன்னு தானே பார்க்கறீங்க...” எனப் பெருமையோடு தலையைக் கோதிக் கொண்டவன்,
“நான் கூட வெளியில் போய் அலைய வேண்டி இருக்கும்னு நினைச்சேன்... ஆனா ரிசப்ஷன்ல இருக்க நம்ம ஆளுகிட்ட சும்மா ஒரு பிட்டுப் போட்டேன்... அப்போ தான் நான் வெளியே போய்க் கஷ்டபட எந்த அவசியமும் இல்லைன்னும் அவங்களுக்குக் கேப் புக் செஞ்சு கொடுத்ததே நம்ம லட்டு குட்டி தானும் தெரிய வந்தது...” என ரொம்பவே தன்னைப் பெருமையாகப் பேசிக் கொண்டு சென்றவனை, எதுவும் பேசாமல் அபய் பார்த்துக் கொண்டு இருக்க... என்ன பாஸ் என்பது போல விபுரியாமல் விக்கி பார்த்தான்.
“இந்த இரண்டு லைன் தெரிஞ்சுக்கிட்டு வர உனக்கு டென் மினிட்ஸ்...” என்று கேட்கவும், விக்டருக்கு சப்பென்று போனது. அதானே உங்களைத் திருப்தி படுத்தவே முடியாது... இதை நான் ஒரு நிமிஷத்துல செஞ்சு முடிச்சு இருந்தாலும் இதுக்கா ஒரு நிமிஷம்னு கேட்கிற ஆளாச்சே...” என வாய்விட்டே புலம்பினான்.
“அப்போ நீ அவ்வளவு லேட்டா ஒவ்வொரு வேலையும் செய்றேன்னு அர்த்தம்...” என விக்கிக்கு கொஞ்சமும் சலிக்காமல் சாதாரணமாகப் பதில் அளிப்பது போலவே கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தான் அபய்.
அதில் போலியாக அபய்யை முறைத்தவன், “இப்போவே இந்த அவமானத்தைத் துடைக்க, மும்பாயில் இருக்க ரோஹித் வீட்டு விலாசத்தில் இருந்து அத்தனை துண்டு துக்கடா சமாச்சாரங்களையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்க முன்னே கொண்டு வந்து வைக்கலை... என் பேரு விக்கி தி கிரேட் இல்ல...” என்று தொடையைத் தட்டி சபதம் செய்து விட்டு நகர முயன்றவனைச் சொடுக்கிட்டு நிறுத்தினான் அபய்.
“நான் கேட்டேனா...? உனக்கு எதுக்கு இந்தத் தேவை இல்லாத வேலை... ஆல்ரெடி சொன்னது தான்...” என்றவனை என்ன என்பது போல விக்கி பார்க்க... “டோர் கிளோஸ்...” என்பது போலச் சைகை செய்தான்.
“வேண்டாம் பாஸ்... வேண்டாம், இதுக்கு மேலே அசிங்கப்பட நான் தயாரா இல்லை...” எனக் கோபமாக நடப்பது போல வேகமாகக் கதவை நோக்கிச் சென்றவன்
“மதிய நேரம் ஆயிடுச்சு... இன்னும் லஞ்ச் ஆர்டர் செய்யலையா பாஸ்...” எனக் கேட்டபடி அங்கிருந்து மெதுவாக அவனைப் பார்க்கவும், அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த புன்னகையை வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான் அபய்.
“இவ்வளவு தானாடா உன் ரோஷம்...? சாப்பாடை பார்த்தா மத்ததெல்லாம் காணாமல் போய்டுமா...?” என்றபடியே எழுந்தவன், ‘நீயே ஆர்டர் செய்” என்பது போலச் சைகையில் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
“பின்னே சோறு தான் முக்கியம் பாஸ்... எனக்கும் பசிக்கும்ல...” என மெல்ல முணுமுணுத்தபடி மெனு கார்டில் ஆர்டர் செய்தான் விக்கி.
அன்று திட்டமிட்டபடி படக்குழு மொத்தமும் மும்பை கிளம்பி விட்டு இருந்தனர். அபய்க்கு வேலைகள் இன்னும் இங்கு இருந்ததால் நான்கு நாட்கள் கழித்தே அவன் மும்பைக்குக் கிளம்பினான்.
மும்பை சென்று இறங்கியவனுக்கு அவன் தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளைச் சரியாக இருக்க, அதற்கு நடுவில் மிர்னாவை பற்றியோ அவளைப் பார்க்க வேண்டும் என்றோ எந்த எண்ணமும் இல்லாமல் போக, தன் போக்கில் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.
ஒரு மாதம் சென்றிருந்த நிலையில் ஒரு நாள் மாலை தன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அபய் சிக்னலுக்காகக் காத்திருந்த போது எதிர்பாராமல் அவன் கண்களில் எதிரில் இருந்த ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த ரோஹித்தும் அவனை அணைத்துப் பிடித்தபடி உடன் வந்து கொண்டிருந்த பெண்ணும் கண்ணில் பட்டனர்.
சற்றும் எதிர்பாராமல் தான் கண்ட அக்காட்சியில் சில நிமிடங்கள் அதிர்ந்து உறைந்த அபய். பின் தன்னை நிதானித்துக் கொண்டு தான் கண்டது நிஜம் தானா...?! எனத் தெரிந்து கொள்ள எண்ணி மீண்டும் அங்குப் பார்க்கவும், அங்கு யாரையும் காணவில்லை.
தன் பார்வையைச் சுழல விட்டவனுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு காரில் ரோஹித்தும் அந்தப் பெண்ணும் ஏறுவது தெரிந்தது. தன் காரை எதிர் பக்கமாக வளைத்துத் திருப்பிக் கொண்டு அந்தக் காரின் அருகில் செல்ல எண்ணி அபய் முயலுகையில் அதற்குள் ரோஹித் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
அதைப் பின் தொடர்ந்து அந்த மாலை நேரத்து போக்குவரத்தின் காரணமாகச் சற்று இடைவெளி விட்டே தொடர்ந்தவன் ரோஹித்தும் அப்பெண்ணும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைவது தெரிய, சற்றும் யோசிக்காமல் அவனும் அங்கு உள்ளே நுழைந்தான்.
நட்சத்திர உணவகங்களுக்கே உரிய முறையில் இருள் கவிழ்ந்து மெல்லிய ஒளி மட்டும் சிந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் தானும் சென்று ஒரு ஓரமாக இருந்த இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து அபய், அவனுக்கு இரண்டு மேஜைகளில் தள்ளி அமர்ந்திருந்த ரோஹித்தையும் அப்பெண்ணையும் கண்காணித்ததில் அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை நெருக்கமும் அன்பும் இருப்பது ஐயம் இன்றி தெளிவாகியது.
அதிலும் அப்பெண்ணை ரோஹித் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்வதிலும் அவளுக்கு உணவு பரிமாறுவதிலும் இருந்த காதலை அபய்யால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.
ரோஹித்துக்குக் கொஞ்சமும் குறையாத வகையில் அப்பெண்ணும் அவனிடம் அதே காதலோடு இருப்பதும் அபய்க்கு பார்க்கும் போதே புரிந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்து போக... கை முட்டிகள் இறுக அமர்ந்து இருந்தவனுக்கு ரோஹித்தின் முகத்தை அடித்து உடைக்க வேண்டும் என்ற அளவுக்கு வேகமும் வெறியும் எழுந்தது.
கண்முன்னே மிர்னாவுக்கு ரோஹித் இழைத்துக் கொண்டிருந்த துரோகத்தைக் காண முடியாதவன் இதற்கு மேல் இங்கு ஒரு நொடி தாமதித்தாலும் நிச்சயம் ரோஹித்தின் உயிர் அவன் உடலில் தங்காது என்பது புரிய... இது மிர்னாவிற்கு வேறு வகையில் துன்பத்தை அளிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவனின் மனம் உலைகளனாகக் கொதித்துக் கொண்டிருந்தது. கண்முன்னே நடக்கும் துரோகத்தைக் கண்டும் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டு வந்ததை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவன் மேல் கை வைத்தால் மிர்னா வருந்துவாள் என்ற ஒரே காரணம் மட்டுமே அங்கு அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தது. இதே யோசனைகளோடு வீடு சென்று சேர்ந்தவனுக்கு இரவெல்லாம் தூக்கம் என்ற ஒன்று இல்லாமல் தூர போனது.
மனம் முழுவதும் ஏதேதோ எண்ணங்கள் அலைக் கழிக்க இரவு முழுவதும் அறையின் நீள அகலங்களைத் தன் நடையால் அளந்து கொண்டிருந்தான். ஒரு துளி கூடத் தூக்கம் இல்லாமல் கழித்த இரவு கூட அவனுக்கு எரிச்சலை தரவில்லை, மனம் முழுவதும் மண்டிக் கிடந்த கோபமும் வெறுப்பும் அதைக் காட்ட முடியாத துயரமும் அவன் மிர்னாவுக்கு இழைக்கும் துரோகத்தைக் கண்ணார கண்ட பின்னும் கைகளைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய நிலையும் சேர்ந்து ஒரு வித எரிச்சலையும் ஆத்திரத்தையும் உண்டு செய்ய... பாவம் வேலை செய்பவர்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான்.
‘இன்று நிச்சயம் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்’ என்ற எண்ணத்தோடு அலுவலகம் கிளம்பி சென்று கொண்டிருந்தவனின் பார்வையில் மீண்டும் பட்டனர் ரோஹித்தும் அப்பெண்ணும்.
ரோஹித்தின் காரில் இருந்து இறங்கி செல்லும் பெண்ணுக்கு காரின் உள்ளே அமர்ந்தபடி ரோஹித் பறக்கும் முத்தம் ஒன்றை அளிப்பதும் அதைக் கண்டு அப்பெண் நாணி சிவப்பதுவாக நின்றிருந்த காட்சி கண்களில் பட...
அது இப்போதிருக்கும் ஆத்திரத்தை மேலும் எரிமலையாக்க எங்கே வெடித்துச் சிதறி விடுவோமோ என்ற அளவிற்கு ஆனது அபய்யின் நிலை. இப்போது ரோஹித்தை நேருக்கு நேர் சந்தித்தால் அது எத்தகைய விளைவில் கொண்டு சென்று விடும் எனக் கொஞ்சம் யோசிக்க முடியாதவன், அப்பெண்ணிடம் பேசி பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தான்.
அவளை “இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாட கொஞ்சமும் அசிங்கமாக இல்லையா உனக்கு... நீயும் ஒரு பெண் தானே, எப்படி இப்படிச் செய்ய மனம் வந்தது...” எனக் கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்த விரும்பாமல் ரோஹித் கிளம்புவதற்காகக் காத்திருந்தவன், பின் அந்த அழகிய பொட்டிக் முன் சென்று தன் காரை நிறுத்தி விட்டு இறங்க முயல்கையில் அவ்வழியே சென்ற காரில் மிர்னா அமர்ந்திருப்பது தெரிந்தது.
முதலில் மிர்னாவிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என்ற எண்ணமே அப்போது தான் அவனுக்குத் தோன்றியது. நேற்று பார்த்த காட்சியிலேயே மனம் உழன்று கொண்டிருந்ததில் இதைப் பற்றி மிர்னாவிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. உடனே மிர்னாவை தொடர்ந்து சென்றான் அபய்.
பத்து நிமிட பயணத்தில் வந்த மூன்றடுக்கு வளாகத்தில் சென்று காரை நிறுத்தியவள் இறங்கி உள்ளே செல்வதைக் கண்டு அவளைப் பின் தொடர்ந்து முதல் மாடிக்கு சென்றவன், ஒரு அலுவலகத்திற்குள் அவள் நுழைவதை கண்டு அவளைப் பின்தொடர்ந்தான்.
அங்கு அவளுக்குக் கிடைக்கும் மரியாதையைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டபடியே ஒரு அறைக்குள் அவள் செல்வதையும் அந்த அறையின் கதவில் இருந்த பெயர் பலகையையும் கண்டவனுக்கு இது மிர்னாவின் அலுவலகம் என்பதே அப்போது தான் தெரிந்தது.
அடுத்த நொடி தன்னைத் தடுக்க வந்தவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அறைக்குள் புயலெனப் பிரவேசித்து இருந்தான் அபய். அப்போதே வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள் தீடீரென கேட்ட சத்தத்தில் நிமிர, தன் அறைக்குள் அபய் அனுமதி இன்றி நுழைந்ததும், அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக இருந்த பையன் அவன் பின்னே ஓடி வந்து நிற்பதும் தெரிய... அவனைப் போ என்பது போலச் சைகை காட்டியவள் ‘என்ன?’ என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம என்ன செஞ்சுட்டு இருக்கே நீ...?” என்று எடுத்த எடுப்பில் அபய் தன் கோபத்தை மிர்னாவிடம் காட்டவும், அதற்கு நேர்மாறாகக் கொஞ்சமும் கோபப்படாமல் அமைதியாக என்னைச் சுத்தியா...?! என்பது போலப் பார்வையைத் தன்னைச் சுற்றி சூழல விட்டவள், ‘இப்போ என்ன சொல்ல வர்ற...?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்குத் துரோகம் நடக்குது மினி... உன்னை அவன் ஏமாத்திக்கிட்டிருக்கான்...” எனப் படபடத்தவனைக் கண்டு “எவன்...?” என்றாள் கொஞ்சமும் பதட்டம் இல்லாத அமைதியான குரலில்.
“எல்லாம் உன்...” என்று தொடங்கியவன், அதற்கு மேல் அந்த வார்த்தையைத் தொடர பிடிக்காமலா இல்லை தொடர முடியாமலா என்று அவனுக்கே தெரியாமல் சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ரோஹித்” என்றான் பல்கலை கடித்தபடி.
ரோஹித் என்பதில் வியப்பாகப் புருவத்தை உயர்த்தியவள், “எப்படி...?” என்றாள் புரியாத குரலில், “ஆமா ரோஹித் தான்... உனக்குத் துரோகம் செஞ்சுட்டு இருக்கான்... குத்துக் கல்லாட்டம் நீ இருக்கும் போது இன்னொருத்தி கூடச் சுத்திட்டு இருக்கான்...” என மீண்டும் படப்படத்தவனைக் கண்டு ஒரு எள்ளல் புன்னகையைச் சிந்தியவள் “சோ” என்றாள்.
“வாட், சோ வா...? ஆர் யூ மேட்... மினி..” என அழைத்து மீண்டும் பேசத் துவங்கியவனைக் கை உயர்த்தித் தடுத்து நிறுத்தியவள், “என் பேரு மிர்னா... கால் மீ மிர்னா...” எனவும், “ஷிட்... இது இப்போ ரொம்ப முக்கியம்...” என எகிறியவனுக்கு, “எனக்கு முக்கியம் தான் மிஸ்டர்... மூணாவது மனஷன் எல்லாம் என்கிட்டே உரிமை எடுத்துக்க நான் அனுமதிக்க மாட்டேன்...” என்றாள்.
“யாரு நா... நான் மூணா...” என்று ஆத்திரத்தோடு கேட்டவனின் கேள்வியைக் கூட முடிக்க விடாமல், “ரோஹித் எனக்குத் துரோகம் பண்ணினா அது எங்க இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்... இதில் நீங்க எங்கே வரீங்க மிஸ்டர்...” எனக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி கேட்க,
“என்ன உளறல் மினி இது... உன்னுடைய வாழ்க்கை பிரச்சனை இது...” எனப் பேசத் துவங்கியவனை மீண்டும் கையுயர்த்தித் தடுத்தவள் “அதே தான் நானும் சொல்றேன்... இது என்னோட வாழ்க்கை, எதுவா இருந்தாலும் எனக்கு என் வாழ்க்கையை வாழ தெரியும்...
சம்பந்தமே இல்லாம இதில் நீங்க ஏன் நுழையறீங்க...? என்னைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட நீங்க யார் சார்...?” என ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து நிதானத்தோடு கேட்டவளை கண்டவனுக்கு இதற்கு என்ன பதில் அளிப்பது எனத் தெரியவில்லை.
‘புரிந்து பேசுகிறாளா...?! இல்லை புரியாமல் பேசுகிறாளா...?! என்ன உளறல் இது, என் மேல் இருக்கும் கோபத்தைக் காட்ட இதுவா நேரம்... அவளின் வாழ்க்கை இங்குப் பிரச்சனை ஆகி கொண்டிருக்கும் போது அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்காமல் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறாளே...!!’ என ஒரு வித சலிப்பு மனதிலே எழ,
“நான் சொல்ல வருவது உனக்குப் புரியுதா...! இல்லையா...?” என மீண்டும் படபடக்கத் துவங்கியவனை அதே நிதானத்தோடு எதிர்க் கொண்டவள், “நல்லாவே புரியுது மிஸ்டர், ரோஹியை ரக்ஷனா கூடப் பாத்திருக்கீங்க அவ்வளவு தானே... இப்போ என்ன அதுக்கு...” எனக் கேட்டவளை கண்டு திகைத்தவன்
“ரக்ஷனா... அந்தப் பொண்ணு பேரு ரக்ஷனா வா...?! அப்போ அவளைப் பத்தி உனக்கு முன்பே தெரியுமா...? தெரிஞ்சே அமைதியா இருக்கீயா...?! ஏன்டா அப்படி என்ன தேவை உனக்கு, இப்படி எல்லாம் சகித்துக் கொண்டு நீ வாழ வேண்டிய அவசியமென்ன...? நீ அப்படிப்பட்ட ஆள் இல்லையே, ஏன் இப்படி...
எதுவாயிருந்தாலும் உன் சுயமரியாதையை யாருக்காகவும் விட்டு கொடுக்கும் ஆளில்லையே... என்னடா நடக்குது உன் லைஃப்ல...” என நிஜமான கவலை தோய்ந்த குரலில் தன் மினியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என அறிந்து கொள்ளும் கவலையோடு அவளை நெருங்கியவனிடம் இருந்து நாற்காளியோடு நகர்ந்தவள்,
“உங்கள் லிமிட்ல நீங்க இருங்க மிஸ்டர்... ஆபீஸ் உள்ளே என்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்ததே முதல் தப்பு... ஏதோ சமூகத்தில் பெரிய மனுஷன் என்ற பேர் இருக்கும் ஒரே மரியாதைக்காக உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன்... என்னோட வாழ்க்கையைப் பத்தி கேள்வி கேட்கவும் கவலைப்படவும் உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தா...? நீங்க இதில் தலையிடாதீங்க...” என்றவள்
மீண்டும் அவன் பேசத் துவங்கவும் அதைக் கேட்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து எழுந்து வெளியில் செல்ல முயல, அவளின் கைகளைப் பற்றித் தடுத்தவன்
“மினி என் மேலே உனக்கு இருக்கிற கோபம் எனக்கு நல்லாவே புரியுது, அதை வெளிப்படுத்துவதற்கான நேரம் இது இல்ல டா... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் உன்னுடைய வாழ்க்கை இப்ப பிரச்சனையா இருக்கு, அதில் தான் இப்போ நம்ம கவனம் இருக்கணும்... உன் வாழ்க்கையை மறுபடியும் நாம மீட்டு எடுக்கணும்...” என்று புரிய வைக்க முயல,
“குட் ஜோக்... என் வாழ்க்கை பிரச்சனையாகிறது பத்தி நீங்க கவலைப்படாறீங்க...” என ஒரு கசந்த முறுவலுடன் பேசியவளின் வார்த்தையில் லேசாக ஒரு வலி எட்டிப் பார்த்ததோ என அவன் யோசிக்கும் முன்பே அந்த வலி காணாமல் போய் அவள் கண்களில் ஒரு திமிர் வந்து அமர்ந்திருந்தது.
மிர்னாவின் வார்த்தைகளைக் கேட்ட நொடி அபய்யின் முகம் சற்று இருண்டு தான் போனது. ஆனால் நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவன் “ஆமா, நான்தான்... நான்தான் கவலைப்படறேன், உன்னைப் பற்றியும் உன் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட அத்தனை அதிகாரமும் உரிமையும் எனக்கு இருக்கு...
இல்லைன்னு உன்னால மறுக்க முடியாது... விடு இப்ப அந்தக் கதையெல்லாம் எதுக்கு, ரோஹித் அந்தப் பெண்ணுடன் பழகுவது உனக்குத் தெரியுமா...? நீ பேசுறதை பாத்தா முன்பே தெரியும் போலத் தான் இருக்கு... சொல்லு தெரியுமா...?! தெரியாதா...?!” மேலும் நகர முயன்றவளை நகர விடாமல் தடுத்து பிடித்தபடி அபய் கேள்வி எழுப்பினான்.
அவனை நிதானத்தோடு எதிர்கொண்டவள் “தெரியும்” என்றாள் எங்கோ பார்வையைப் பதித்தபடி, மிர்னாவின் வார்த்தைகளிலிருந்து இதை முன்பே யூகித்து இந்தாலும் ஒரு நொடி திகைத்து நிற்க தான் செய்தான் அபய்.
“தெரிஞ்சும் ஏன் அமைதியா இருக்க...?” எனக் கூர்மையாக அவள் முகத்தையே பார்த்தபடி கேட்கவும், “வேற என்ன செய்யணும்...?” என்று அவள் கேள்வி எழுப்பினாள்.
“இது என்ன கேள்வி மினி நிச்சயமாகச் சட்டை பிடித்து அவனைக் கேள்வி கேட்க உனக்கு அத்தனை அதிகாரமும் இருக்கு... அவனை நாலு போடு போட்டு கூடத் தடுத்து இருக்கலாம், இதெல்லாம் நீ ஏன் செய்யலை... கணவனே கண்கண்ட தெய்வம்னு அவன் கால்ல விழுந்து கிடக்கிற ஆள் நிச்சயமா நீ கிடையாது, அது எனக்கு நல்லாவே தெரியும்...
உனக்குத் துரோகம் செய்கிறான்னு தெரிந்தும் நீ அமைதியா இருக்க வேண்டிய அவசியம் என்ன...?” என்று கேட்டவனை ஒரு விரக்தியான பார்வையும் நக்கலான புன்னகையோடும் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தன் பார்வையை ஒரு நொடி அழைத்துக் கொண்டான்.
மீண்டும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவனை நேரிடையாக வந்து தாக்கியது மிர்னாவின் வார்த்தை “துரோகம்... பெண்ணோட வாழ்க்கை இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீங்க...!! அதுவும் என்னோட வாழ்க்கை எனக்கு ரோஹித்தால் இழைக்கப்பட்ட துரோகம்...” எனச் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் கூறி தலையை ஆட்டியபடியே ஏதோ யோசிப்பது போலச் செய்தவள்
“ஆனா இதையெல்லாம் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்குனு ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தீங்களா மிஸ்டர் அபய்...” என அந்த மிஸ்டரில் அளவுக்கு அதிகமான அழுத்தத்தைக் கூட்டி கூறியவளின் கோபம் அந்த வார்த்தைகளின் மூலமே அபய்க்கு நன்கு தெரிந்தது.
“ஓ காட் நீ புரிஞ்சு பேசறீயா புரியாம பேசறீயா...?! விளையாடாதே உன்னுடைய கோபத்தை வெளியில் காட்டுவதற்கான நேரம் இது இல்ல, புரிஞ்சுக்கோ... நீ இப்பவே இதற்கான நடவடிக்கைகளில் இறங்கலைனா மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்... உனக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்லாமல் போகும்...” என மேலும் கூட ஏதோ சொல்ல முயன்றவனைத் தன் பலம் கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளியவள், அவனின் கைகளில் இருந்து விடுபட்டு வெளி வந்து, ஆத்திரமாக அவனை முறைத்தபடி
“ஷட் ஆப்... ஜஸ்ட் ஷட் ஆப்... என்னைப் பத்தி பேசறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது... என் வாழ்க்கையை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்னு எத்தனை முறை சொல்றது... ஆமா ரோஹித் அவளோட பழகுறது எனக்கு ரொம்ப நல்லா தெரியும், நல்லாவே தெரியும்... இப்போ அதுக்கு என்ன செய்யலாம்னு சொல்றீங்க,
எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்லை... நான் எதுக்குக் கோவப்படணும் நான் எதுக்கு ரோஹித்தை கேள்வி கேட்கணும்... பழகறாங்களா பழகிட்டு போகட்டும், எனக்குத் தெரியாம ஒன்னும் மறைக்கலையே எனக்குத் தெரிஞ்சே தான் இரண்டு பேரும் பழகுறாங்க...” என்று கோபமாகக் கத்தியவளைக் கண்டு திகைத்து நின்றான்.
‘இவளுக்குத் தெரிந்து இருவரும் பழகுகிறார்களா...?! அதை இவளும் அனுமதிக்கிறாளா...?!’ என மனதிற்குள் கேள்வி ஓட... மிர்னாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவனின் இயல்பு குணம் தலை தூக்கவும் அவ்வளவு நேரம் கோபத்திலும் ஆத்திரத்திலும் படபடப்பிலும் தனக்கு மிகவும் நெருக்கமானவளின் வாழ்க்கையைப் பற்றிய பயத்திலும் பதட்டத்திலும் பேசிக் கொண்டிருந்தவன்,
அதற்கு நேர்மாறான மனநிலையோடு “அப்போ ரோஹித் அவளோட பழகறதில் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல... அவங்க இரண்டு பேர் பழகறது உனக்கு நல்லாவே தெரியும், ரைட்...” எனக் கேட்க,
அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் தன் கைகளை இறுக கட்டிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நின்று கொண்டாள் மிர்னா.
அவளை ஒவ்வொரு அடியாக நெருங்கியவன், “அப்போ நீயும் யார் கூடப் பழகினாலும் ரோஹித்துக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்... அப்படித் தானே பேபி...?!” எனவும், ‘இது என்ன புதுக் கதை’ என்பது போல முகத்தில் கேள்வியோடு அவளை ஏறிட்டுப் பார்க்க...
“அப்போ வாங்க பழகலாம்...” என ஒரு குறும்புப் புன்னகையோடு கூடிய கண் சிமிட்டலோடு கேட்டிருந்தான் அபய்.