உயிர் – 1
ஓம் ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா
நாள்தோறும் உன்னையே நான் பாட வேண்டும்
நான் பாட உந்தன் அருள் ஆசி வேண்டும்
முழுதாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கால் பதித்தவன் தனக்குப் பின்னால் கேட்ட ஒலியில் திரும்பி பார்க்க...
வயதானவர் ஒருவரின் அலைபேசி அவருக்குத் தன் இருப்பை நினைவுபடுத்த அதை ஆன் செய்தவர், “ஆமா கண்ணு... டெல்லி வந்து இறங்கிட்டேன்...” என அந்தப் பக்கமிருந்த யாரோடோ பேசியபடி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அதைக் கண்டவனின் மனதில் ‘இந்திய மனம்’ என்ற எண்ணம் தோன்றிய நொடி முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது. அதேநேரம் வேறு ஏதோ நினைவு எழுந்ததில் முகம் ஒரு நொடி கசங்கியது. உடனே இத்தனை வருட அனுபவத்தில் அதை மறைத்தபடி கம்பீரமான தன் வேக நடையைத் தொடர, பத்திரிகையாளர்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள முயலவும், நொடியில் அவனுடைய பாதுகாவலர்கள் ஒரு பாதுகாப்பு அரண் போல் சுற்றி நின்று யாரும் அருகில் வராமல் தடுத்தனர்.
அவன் பிசினஸ் டைகூன் அபய் வரகுணன், தன் தொழில் சாம்ராஜியத்தை இந்திய மண்ணிலும் நிலை நாட்ட தன் ஜாகையைத் தற்போதைக்கு இந்தியாவிற்கு மாற்றிக் கொண்டு இங்கு வந்துள்ளான்.
தன்னைத் தொடர்ந்தபடி கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டு இருந்த பத்திரிகையாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்தவன் தன் பின்னாலேயே கேள்வி கேட்டபடி ஓடி வந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு, “கமான் க்விக்... ஷார்ட்டா கேளுங்க... " என நின்றான்.
"திடீரென்று நீங்க இங்கே தொழில் தொடங்க என்ன காரணம்...?!" எனக் கேட்கபட,
"இது என் தாய் நாடு... அது தான் காரணம்... " என்று ஒரு சிறு புன்னகையோடு கூறினான்.
"இத்தனை வருஷமா இங்கே வராம இருந்த நீங்க இப்போ வந்திருக்கறதில் எதாவது உள்நோக்கம் இருக்கா...?"
“அப்படி என்ன இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க...?” என்று கேள்வியை அவர்கள் பக்கம் திருப்பியவன், "நேரம் தான் காரணம்... அப்போ கிடைக்கலை... இப்போ கிடைச்சது..." என்றான். ஆனால் அவன் மனசாட்சியோ ‘அப்படியா...?!’ எனக் கேள்வி எழுப்பியது.
“ஒரு முறை நீங்க இந்தியா வர மாட்டேன்னு சொன்னதா நியூஸ் வந்ததே...?” என ஒருவர் கேட்க, தன் ரேபான் கிளாஸை ஒற்றைக் கையால் கழற்றி அவரைப் பார்த்தவன், "வர மாட்டேன்னு தான் சொன்னேன்... வரவே மாட்டேன்னு சொல்லலையே..." என்றவன் கண்ணாடியை கண்ணுக்கு கொடுத்தபடியே தன் வேக நடையோடு டெல்லி ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினான்.
அன்று இரவு தான் தங்கியிருந்த அந்த நட்சத்திர உணவு விடுதியில் இரவு உணவுக்கான ஆர்டரை கொடுத்து விட்டு தன் கையில் இருந்த போனில் கண்களைப் பதித்து இருந்த அபய்யின் கவனத்தைப் பக்கத்து மேஜையில் இருந்து வந்த மழலை குரல் கலைத்தது.
அதில் நிமிர்ந்து அங்குப் பார்க்க, குண்டு குண்டு கண்களும் புசுபுசு கன்னங்களுமாக ஒரு மூன்று வயது அழகிய தேவதை அமர்ந்து கொண்டு தனக்கு எதிரில் அமர்ந்திருந்த தன் தாயிடம் ஏதோ சந்தேகங்கள் கேட்பதும் அதைப் பற்றித் தானே ஆராய்ச்சி செய்வதுமாக தன் மழலை மொழியில் மிழற்றிக் கொண்டிருந்தது.
தற்செயலாகத் திரும்பி பார்த்த அபய்யால் அதன் பிறகு அந்த ஏஜ்சலின் மேல் பதித்த பார்வையைத் திருப்ப முடியாமல் போக, ஒரு சின்னச் சிரிப்போடு அதன் சேட்டைகளைத் தன்னை மறந்து ரசித்திருந்தான்.
"வாட் ஹப்பேண்ட் அபய்... இந்தியாவில் கால் வெச்சதும் அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற பழக்கம் உனக்கும் வந்துடுச்சா...?!" எனத் தனக்குள்ளேயே கேட்டு கொண்டவன், பார்வையைத் திருப்ப முயன்றாலும் அந்தச் சின்னச் சிட்டு அதற்கு விடவில்லை.
அந்த அழகிய பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு அதற்கு முன்பு அமர்ந்திருந்த அவரின் தாய் தடையாக இருக்க... தன் இருக்கையைச் சற்று பின்னோக்கி இழுத்து போட்டு குட்டி தேவதையை ரசிக்கும்படி வாகாக அமர்ந்து கொண்டான் அபய்.
ஆங்கிலம் இந்தி தமிழ் என்று மூன்று மொழி கலந்து அது மிழற்றுவதைக் காண காண திகட்டவில்லை அபய்க்கு, "மம்மா..." என அந்தக் குட்டி அழைக்கவும், "ம்ஹூம் அம்மா..." என அதன் தாய் திருத்த,
‘பரவாயில்லையே இப்போது கூடத் தாய் மொழியை விடாது இருக்காங்களே...!’ என்ற ஆச்சரியமும் அப்பெண்ணின் மேல் ஒரு நல்ல எண்ணமும் தோன்றியது.
"ஹான்... ஹான்... ஒகே ஒகே..." என்ற குட்டி, மேஜை மேல் இருந்த தன் தாயின் போன் ஒலிப்பதை பார்த்து "அம்மா போன்..." எனப் போன் அழைப்பதை சுட்டி காட்டியது.
அதை எடுத்து ஆன் செய்தவர், "ஆமா டின்னர் தான் சாப்பிடறோம்... இல்லை வொர்க் இருந்தது அதான்..." எனப் பேசிக் கொண்டு இருந்தவர், "அதானே பார்த்தேன்... இன்னும் கேட்கலையேன்னு நினைச்சேன், இந்தா உன் பேபியையே நீ கொஞ்சு..." என்றபடி போனை நீட்ட, அதற்காகவே காத்திருந்த சிட்டு பாய்ந்து அதைப் பறித்துக் காதில் வைத்து "பப்பா..." என்றது குதுகலத்தோடு.
இருவரும் ஏதேதோ பேசி கொண்டு இருக்க, "நோ பப்பா... மம்மா தான்..." எனத் தொடங்கிய குட்டி "ம்ம்..." என அதன் தாய் போலியாக முறைக்கவும், நாக்கை கடித்து முகத்தைச் சுருக்கி, "அம்மா..." எனத் திருத்தி கொண்டே தன் பேச்சை தொடர்ந்தது.
அதனிடம் சொல்லி கொண்டு அதன் தாய் கை கழுவ எழுந்து செல்லவும், குட்டி போனை வைத்தவுடன் அதன் முன் சென்று நின்றிருந்தான் "ஹாய்..." என்ற அழைப்போடு அபய்.
அவனை நிமிர்ந்து ‘யார் நீ?’ என்பது போலப் பார்த்து விட்டு மீண்டும் சாப்பிட, "உங்க பேர்..." எனக் கேட்டவனை கண்டு முகம் சுருக்கி கோபத்தோடு பார்த்தவாறே,
"ஸ்டேன்ஜர்ஸ்கிட்ட எல்லாம் பேசக்கூடாதுன்னு எங்க மம்மா சொல்லியிருக்காங்க..." எனச் சொல்ல, "அம்மா..." எனத் திருத்தியவனை, ‘உனக்கெப்படி தெரியும்!’ என்பது போல் பார்த்து வைத்தது.
மனதிற்குள் அவரை நினைத்து மெச்சி கொண்டவன், "ஆனா எங்க அம்மா அப்படியெல்லாம் எனக்குச் சொல்லி தரலை... ஐம் அபய்... அபய் வரகுணன்..." என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் முன் கைகளை நீட்ட, ‘நீ யாரா வேணா இருந்துட்டு போ...’ என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டது.
அதன் செய்கையில் புன்னகை வர, இதுவரை தன்னைக் கண்டதும் வியப்பதும், மேலே விழுந்து பழகத் துடிப்பதுமாகவே பார்த்து பழகியவனுக்கு இந்தக் குழந்தையின் செயல் மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஏனோ அந்த ஏஜ்சலை கண்ட நொடியிலேயே அவனுக்கு அவ்வளவு பிடித்துப் போனது. ஏதோ ஒன்று அவனை அந்தக் குழந்தையை நோக்கி இழுத்தது.
அப்போது அந்தக் குட்டி தேவதையின் அம்மா திரும்பி வர, அவருக்கு வழி விட்டு ஒதுங்கியவன், அவர் முகம் கண்டு மெலிதாக அதிர்ந்தான். ஆம் அங்கு நின்று கொண்டு இருந்தது மிர்னாலினி, அவனின் மினி.
இங்கு இப்படி ஒரு சந்திப்பை இத்தனை வருடங்கள் கழித்துச் சற்றும் எதிர்பார்த்திராதவன் ஒரு நொடி செய்வதறியாது திகைத்து நின்றாலும் பின் தன்னை மீட்டுக் கொண்டு வேகமாக அங்கிருந்து விலகி சென்றுவிட்டான்.
தன் இடத்தில் சென்று அமர்ந்தவனுக்கு மீண்டும் அந்தப் பக்கம் பார்க்க சற்றும் எண்ணம் இல்லை. ஆனால் தன்னையும் மீறி தன் கண்கள் அந்தப்பக்கம் பாய முயல்வதைத் தடுக்க எண்ணியவன், அந்த மேஜையின் மற்றொரு இருக்கையில் அவர்கள் அமர்ந்திருந்ததற்கு நேர் எதிர்ப்புறமாகப் பார்த்தபடி அமர்ந்து கொண்டான்.
மனம் முழுவதும் இருந்த அதிர்வும் திடுக்கிடலும் நீங்கிய பிறகே அந்த வித்தியாசம் அபய்யின் மனதில் பதிந்தது. ஆம் ஒரு நொடியே ஆனாலும் தனக்கு எதிர்ப்பாராமல் அவளைக் கண்டதும் எழுந்த அதிர்வு அவளுக்கு ஏன் எழவில்லை என்பது தான் அது.
ஒருவேளை தன்னைக் கவனிக்கவில்லையா...?! என்று என்னும் போதே, ‘இல்லை தான் விலகி வழி விடக் காத்து நின்றிருந்தாளே அப்போது நிச்சயம் பார்த்து தான் இருப்பாள்...’ என்ற எண்ணம் எழுந்தது.
‘மறந்துவிட்டு இருப்பாளோ...?!’ என நினைத்தவனுக்கு, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ‘அத்தனை எளிதில் மறக்கக் கூடிய உறவா இது...?! நீண்ட நெடிய பத்து வருடங்கள் தான் என்றாலும், நிச்சயம் மறந்து இருக்க வாய்ப்பில்லை’ என்கிற ரீதியில் எண்ணம் செல்ல, அதையே சிந்தித்துக் கொண்டு இருந்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகியது.
‘தன்னைப் போல் அவள் எதிர்ப்பாராமல் தன்னைக் காணவில்லை, இதற்கு முன்பே தன்னைப் பார்த்து விட்டு இருக்கிறாள்...!” எனச் சரியாகக் கணித்தான்.
நிஜமும் அது தான், அபய் இந்தியாவில் தொழில் தொடங்க போவதாக அறிவித்ததெல்லாம் மிர்னாவிற்குத் தெரியாது தான், ஆனால் இன்று காலை வந்து இறங்கியவனைச் சுடசுட பேட்டி கண்டு அத்தனை தொலைக்காட்சிகளும் ஒளிப்பரப்பியதை கண்டவள்,
இந்தியாவில் வேறு ஏதாவது மாநிலத்தில் இருந்தாலாவது இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனலாம், ஆனால் இருவரும் டெல்லியில் இருக்கும் போது எதிர் எதிரே எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வேண்டி வரலாம் என்று புரிந்து ஓரளவிற்குத் தன்னை அதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டாள்.
ஆனால் அப்படி ஒரு சந்திப்பு இன்றே நிகழும் என்பதும் இருவரும் தங்கி இருப்பது ஒரே ஹோட்டல் என்பதும் அவளுமே எதிர்ப்பாராதது தான்.
அவளும் அவளின் குட்டி தேவதை சுபிக்ஷாவும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் தான் ரெஸ்டாரண்ட்னுள் நுழையும் அபய்யை கண்டாள் மிரு.
முதலில் சற்று திடுக்கிட்டவள், காலை முதலே ஓரளவு தயார்ப்படுத்தி வைத்திருந்த மனதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டாள். முன்பு இருந்தது போல அபய்யை கண்டதும் கோபம் கொள்ளவோ இல்லை சண்டையிடவோ இப்போது தோன்றவில்லை அவளுக்கு. இங்கு இப்படி ஒருவன் இருப்பது போலக் கூடக் காண்பித்துக் கொள்ளாமல் கடந்து போகவே எண்ணி இருந்தாள்.
உணவகத்தில் இருக்கும் எத்தனையோ நபர்களில் இவனும் ஒருவன் என்றே எண்ணி அதைச் செயல்ப்படுத்த நினைத்து இருந்தவள் கொஞ்சமும் எதிர்ப்பாராதது அபய் சுபிக்ஷாவிடம் பேசிக் கொண்டு இருந்தது.
அதைக் கண்டு அதிர்ந்தவள், அபய் தன் குழந்தையிடம் பேசுவதை விரும்பாமல் அதைத் தடுப்பதற்காகவே அவசரமாக அவர்களை நெருங்கினாள்.
அதே நேரம் தன்னை எதிர்ப்பாராமல் கண்டதும், அபய்யின் கண்களில் வந்த திடுக்கிடலை கண்டு கொண்டவளின் மனம் திருப்தியாக உணர்ந்தது.
அந்த உணர்வு எதனால் வந்தது என்று அவளுக்குமே ஒரு தெளிவு இப்போது வரை இல்லை... அபய் இன்னும் தன்னை மறக்காமல் இருக்கிறான் என்பதனால் வந்த உணர்வா...?! இல்லை தன்னைக் கண்டதும் அதிரும் அளவிற்கு அவனைப் பாதித்து இருக்கிறோம் என்ற நினைவு தந்த திருப்தியா...?!
அது எதுவாகவாவது இருந்து விட்டு போகட்டும், ஆனால் வெகு வருடங்களுக்குப் பிறகு மிருவின் மனம் ஒரு நிம்மதியை உணரத்தான் செய்தது.
அபய் என்னதான் அவர்கள் பக்கம் பாய முயன்ற பார்வையைப் பெரும்பாடுபட்டுத் தடுத்தாலும் அவர்களை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் மனதை அவனால் தடுக்க முடியவில்லை.
இந்தியா செல்வது என்ற முடிவை எடுத்த போதே சில பல நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது, சிலரை நேரில் சந்திகும் நிலை வரலாம் என்று .எண்ணி அப்படி வரும் போது அதை எப்படி எதிர் கொள்ளவது என்றெல்லாம் மனதை போட்டு அலட்டிக் கொள்ளாமல் அப்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தவன் வந்த அன்றே அதுவும் இவளையே நேரில் சிந்திப்போம் என்று கனவிலும் எண்ணவில்லை..
அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில், குழந்தையோடு இருக்கும் அவளைப் பார்க்கும் போது மனதில் ஒரு பக்கம் ஏதோ ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாலும் இன்னொரு பக்கம் லேசாக ஏதோ ஒன்று கனமாக அழுத்துவது போல இருந்தது.
இது தான் அவனின் ஆழ்மன எண்ணமாகவும் ஆசையாகவும் இத்தனை நாட்களாக இருந்தது என்றாலும், அதை நேரில் காணும் போது ஏனோ மனம் சற்று கனக்க தான் செய்தது.
அவளின் நினைவுகள் மணலில் எழுதிய எழுத்துக்கள் அல்லவே காற்று வந்து கலைத்து விட்டுச் செல்ல, கரும்பலகையில் கிறுக்கிய கிறுக்கல்களும் அல்லவே துணியைக் கொண்டு துடைத்து அழித்து விட, அது அவனின் மனமென்னும் கல்வெட்டில் செதுக்கிய சிற்பம் அல்லவா...! அத்தனை எளிதாக அழிக்கவோ மறக்கவோ முடியாது.
ஆரம்பத்தில் தன்னைத் துரத்தும் அவளின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்தவன் தன்னைத் துரத்தும் அந்த நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அதிகம் ஓடி ஓடி உழைக்கத் தொடங்கினான்.
அதோடு சேர்ந்து வேறு ஒரு வைராக்கியமும் அவனை உழைத்து முன்னேற வேண்டும் என்ற வெறியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டதில், மினியின் நினைவுகள் சற்று இல்லை ரொம்பவே பின்னுக்குத் தள்ளப்பட்டது என்னவோ உண்மை தான்.
பிறகு உண்மையிலேயே வேலைகளில் மூழ்கி அவளை மறக்க துவங்கியிருந்தவனுக்கு இல்லையில்லை அப்படி எண்ணி இருந்தவனுக்கு ஓய்வாக அமரும் ஒரு சில நிமிடங்கள் கூட மனதின் ஓரம் மின்னி மறையும் அந்த முகம் அது அத்தனை எளிதல்ல என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.
மனதோடு நடத்திய பல வருட போராட்டத்திற்குப் பிறகு அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்து சந்தோஷமாக வாழ மாட்டாளா என்ற ஏக்கமும் கவலையும் மனதை அறிக்கத்தான் செய்தது. அப்படி அமைய வேண்டும் என்பதும் தான் அவன் ஆசையாக இருந்தது.
ஆனால் அப்படி நடந்து தான் இருக்கிறது என்பது நிதர்சனமாய்க் கண் முன் தெரிய வர, அதைக் கண்டு சந்தோஷத்தில் குதுகலிக்க வேண்டிய மனமோ, கொஞ்சம் ஏதோ ஒரு புரியாத உணர்வில் துவள தான் செய்தது.
‘இப்போ ஏன் இப்படி இருக்க...?! வேற நீ என்ன எதிர் பார்த்த உனக்காகப் பத்து வருஷமா கிழக்கே போகும் ரயில் ராதிகா போல ரயில் பின்னே எழுதாம பிளைட் பின்னே எழுதி அனுப்பிக் காத்து இருக்கணும்னு நினைச்சியா...?!’ என அவன் மனசாட்சி நக்கல் செய்ய,
‘சேச்சே... அவளுக்கு நல்ல வாழ்கை அமையணும்னு தான் நான் நினைச்சேன்...’ என அதற்குப் பதிலளித்துக் கொண்டு இருந்தவனை,
“ஹே... பப்பா...” என்ற அந்தக் குட்டி தேவதையின் குரல் கலைத்தது. அதில் தன் வைராக்கியத்தை எல்லாம் விட்டு ஆர்வமும் படபடப்புமாகத் திரும்பி அவர்களைப் பார்த்தான் அபய்.
அங்கு இருபத்தி எட்டு வயதிற்குள் மதிக்கக் கூடிய ஒரு அழகிய இளைஞன் வட இந்திய தோற்றத்தோடு நின்றிருந்தான். அந்தச் சின்னச் சிட்டு அவன் மீது தாவி குதித்து ஏறி முகமெங்கும் முத்தமழை பொழிய... அதைக் கண்ட அபய்யின் மனமெங்கும் ஏக்கம் அலை அலையாகப் பரவியது.
‘ரோஹித்... வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்...” என்று சின்னவளுக்குக் குறையாத குதுகலத்துடன் பெரியவளும் குதுகலிக்க... அதைக் கண்ட அபய்யின் கண்களில் ஒரு சிறு வலியும மனதில் வெறுமையும் படர்ந்தது.
“உங்க ஞாபகமாவே இருந்தது அதான்...” என்றவாறே ரோஹித் அங்கிருந்து போகலாமா என்பது போலத் தலையசைப்பில் கேட்க, பதிலுக்குத் தலையசைத்துத் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்ட மிரு,
“உங்கன்னு பொய் சொல்லாத, உன் பேபி ஞாபகம்னு சொல்லு...” என நொடித்துக் கொண்டாள்.
“ஹே நிஜமா பெரிய பேபி ஞாபகமும் தான் டா... கிளம்பி போய் நாலு நாள் ஆச்சே...” என்று கூறிக் கொண்டு வந்தவன் ஒரு சிறு இடைவெளி விட,
அவனை நம்பாத பார்வை பார்த்த மிரு போலியாக முறைக்க, “எங்க யாருகிட்ட வம்பு இழுத்து வெச்சு இருக்காளோன்னு ஒரே பக்கு பக்குன்னு இருந்ததா... அதான் அடிதடி வரை போறதுக்குள்ள கிளம்பி வந்துட்டேன்...” என்று சிரிக்காமல் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் மிரு.
“சுஷு... உங்க அம்மா காளி அவதாரம் எடுக்கறதுக்குள்ள நாம எஸ் அகிடுவோமா...?” என்று குழந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்தவனையும் அவர்களுக்குள் இருந்த அன்னியோனியத்தையும் உணர்ச்சி துடைத்த கண்களோடு பார்த்துக் கொண்டு இருந்தான் அபய்.
இதற்கு மேல் அங்கு இருக்கவோ அதைப் பார்க்கவோ விரும்பாதவன் அவள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பாது விலகி செல்ல முயல, அத்தனை நேரம் அவனுக்கு எதிராகப் பேசிய மனசாட்சியோ, ‘உன்னை நினைவு இல்லாதது போல நடந்து கொண்டவளை அப்படியே விட்டு விட்டா செல்வது...?’ என்று கேள்வி எழுப்பியது.
அதை ஒதுக்கி தள்ளி எழுந்து வெளியே செல்ல முயன்றவனின் கால்கள் அவன் அனுமதி இல்லாமல் அவர்களை நோக்கி சென்றது. அதற்குள் அபய்யின் இயல்பு குணம் தலை தூக்கி இருக்க...
கதவை நோக்கி நகர்ந்தவர்களின் வழியை மறித்தது போல வந்து நின்றவன், “ஹாய் டார்லிங்...” எனக் கண்களில் டன்டன்னாகக் குறும்பும் இதழில் விரிந்த புன்னகையுமாகக் கூற, இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திராத மிரு அதிர்ந்து நின்றவள், ஒரு திடுக்கிடலோடு ரோஹித்தை திரும்பி பார்த்தாள்.