ஜானகி மந்திரம் 40
மறுநாள் காலை 10 மணி.
கண்டாலா SSG கல்லூரி வளாகம் திருவிழா போல அல்லோல கல்லோலப்பட்டு கொண்டிருந்தது.
2004-ல் படிப்பை முடித்து வெளியேறிய அந்த பேட்ச் மாணவர்கள், ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தார்கள்.
2010-ல் இன்ஸ்டாகிராமோ, வாட்ஸ்அப்போ கிடையாது. ஆர்க்குட்டும் பேஸ்புக்கும் பிறந்திருந்தாலும், முகத்தை பார்த்து பேசி ஆண்டுகள் பல கடந்துவிட்டிருந்தன. தொலைந்துபோன தொடர்புகள் திடீரென நேரில் கிடைத்த உற்சாகத்தில், கல்லூரி கேட் கதவுகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் குழந்தைகளாக
மாறியிருந்தார்கள்.
"டேய் விக்கி! அன்னைக்கு எலும்பும் தோலுமா திரிஞ்ச, இப்போ தொப்பையோட பளபளன்னு சேட்டு மாதிரி வர்ற?"
"ஹேய் பூஜா! ரெண்டு குழந்தைக்கு அப்புறம் ஆளே மாறிட்டடி... புருஷன் என்ன பண்றாரு?"
"மச்சான் கெளதம்! அரியர் வச்சு சுத்துனவன், இப்போ சொந்தக் கார்ல வந்து இறங்குற? பிசினஸ் பிச்சிகிட்டு போகுதா?"
"ஏய் மாலினி! உன் பொண்ணு க்யூட்டா இருக்கிறாளே, உன்ன மாதிரியே இல்லையே! மாமியார் டார்ச்சர்லாம் இப்போ ஓகேயா?"
"டேய் கார்த்தி! காலேஜ்ல கெத்தா சுத்திட்டு இருந்த இப்போ பாப்பாவுக்கு டயபர் வாங்குற குடும்பஸ்தன் ஆயிட்டயடா! நேரக் கொடுமை!"
காலம் ரொம்ப கெட்டிக்காரத்தனமான எடிட்டர். ஏழு வருடங்களில் அவர்களின் உடலமைப்பிலும், வாழ்க்கையிலும் தன் இஷ்டத்திற்கு ரீ-எடிட் செய்திருந்தது. காலம் செய்திருந்த மாற்றங்களை, நண்பர்கள் ஒருவரையொருவர் நக்கலாகவும், உரிமையோடும் கிண்டல் செய்து பேசினார்கள்.
கட்டிப்பிடிப்புகளும், கைகுலுக்கல்களும், உரத்த சிரிப்புகளுமாக பழைய நினைவுகள் தூசி தட்டப்பட்டன.
காலேஜ் பிரின்சிபால் ஓய்வுபெற்று விட்டதால் அவர் வரவில்லை. ஆனால், சற்றே முதிர்ச்சியடைந்த முகங்களோடு பேராசிரியர் வர்மா, பேராசிரியர் குல்கர்னி மற்றும் மேடம் சோனாலி ஆகியோர் வந்திருந்தார்கள். பழைய மாதிரி கலாய்க்காமல், மாணவர்கள் அவர்களின் காலை தொட்டு கும்பிட்டு ஆசி பெற்றார்கள். சிலர் தங்களின் பழைய வகுப்பறைக்குள் நுழைந்து, தாங்கள் அமர்ந்திருந்த மர டெஸ்குகளையும் சேர்களையும் தடவிப் பார்த்தார்கள். 6 வருடங்களுக்கு முன்பு மரத்தில் செதுக்கி வைத்திருந்த பெயர்களை தேடிப்பிடித்து, அதன் அருகே நின்று போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்.
ரீயூனியனுக்கு ஒரு Unwritten Rule அட்மின்ஸ் ஏற்படுத்தி இருந்தனர். குழந்தைகள் வரலாம், ஆனால் கணவன் அல்லது மனைவியை எக்காரணம் கொண்டும் கூட்டிக்கொண்டு வரக் கூடாது! கல்லூரி நினைவுகளின் சுதந்திரமான காற்றில் குடும்பக் கட்டுப்பாடோ, பார்ட்னரின் முறைப்போ குறுக்கிடக் கூடாது என்பது இந்த பேட்ச் ரியூனியன் ரூல்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் லேப்களும் கேண்டினும் பூட்டப்பட்டிருந்தன.
இருந்தாலும் வந்திருந்தவர்கள் சும்மா இருக்கவில்லை. கேண்டீன் மர பெஞ்சுகளின் மீது அமர்ந்து, அன்னைக்கு 'கட்டிங் சாயா' பாண்டு மாமா டீ ஊற்றிக் கொடுத்த பழைய நாட்களை நினைவுகூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பூட்டியிருந்த லேப் ஜன்னல் வழியே உள்ளே எட்டிப்பார்த்து, அங்கே இருந்த மைக்ரோஸ்கோப்புகளையும் டெஸ்ட் டியூப்களையும் காட்டி பழைய கதைகளை பேசினார்கள். சிலர் தங்கள் பழைய க்ரஷ் வந்தால், அவர்களை தனியாக தள்ளி கொண்டு போய், (இருங்க பதட்டப்படாதீங்க) கைகுலுக்கி, "அன்னைக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன் ஆனா சொல்லவே இல்லை..." என்று வெட்க புன்னகையோடு பழைய கணக்குகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரீயூனியனுக்கு ஆர்கனைஸ் செய்த குழுவின் தலைவரான சிக்கியும், அவனது டீமும் சும்மா இருக்கவில்லை. முன்கூட்டியே நண்பர்களிடையே தலைக்கு இவ்வளவு என்று கலெக்ஷன் போட்டு, அருமையான லஞ்ச், கூல்ட்ரிங்க்ஸ், டீ காபி மற்றும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வெளியிலிருந்து ஸ்பெஷலாக ஆர்டர் செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
காலேஜ் காலத்தில் ‘ஜெய் பஜ்ரங் பலி’னு கெத்தா சுத்துன சிக்கி, இன்னைக்கு ஒரு பிரைவேட் ஃபைனான்ஸ் கம்பெனில கலெக்ஷன் ஆபீசரா சேல்ஸ் டார்கெட்டுக்காக மேனேஜர்கிட்ட நாள் முழுக்க திட்டு வாங்குற பஞ்ச பரதேசியா மாறியிருந்தான்!
"கல்யாணத்துக்கு அப்புறம் கெத்தெல்லாம் கலைஞ்சு போய் மாசம் பொறந்தா EMI கட்டி கட்டியே பிரஷர் வந்திருச்சுடா..." என்று அவன் புலம்பிய புலம்பலில், அத்தனை பரிதாபமும் சிரிப்பும் கலந்திருந்தது!
அலைந்து திரிந்து மீண்டும் ஒரே கூட்டுக்கு வந்த பறவைகளை போல, ரீயூனியனுக்கு வந்தவர்கள் அவரவர் காதல், கல்யாணம், குடும்பம் என்கிற சொந்த விக்கெட்டுகள் விழுந்த கதைகளை பேசி முடித்ததும், அங்கிருந்த மொத்த கூட்டத்தின் அட்டென்ஷனும் அந்த ஒரு காதலின் மீதுதான் லேண்ட் ஆனது! ...
மனோ - மைதிலி காதல்!
கல்லூரி டேஸ்ல கேர்ள்ஸ் எல்லாத்தையும் பொறாமைப்பட வைத்த, பாய்ஸ் எல்லாத்தையும் 'இப்படி ஒரு லவ் நமக்கு செட்டாகாதான்னு' ஏங்க வச்ச, மொத்த கேம்பஸ்யும் புரட்டிப்போட்ட.... அந்த ஐகானிக் ஜோடியை பற்றி அவர்களால் பேசாமல் இருக்க முடியவில்லை.
"டேய்... மனோவும் மைதிலியும் என்ன ஆனாங்கடா?"
"அவங்க லவ் சேரவே இல்லையாமே?"
"மனோ அன்னைக்கு ஆக்சிடென்ட்டுக்கு அப்புறம் எங்க போனான், என்ன ஆனான் சொல்லிட்டு யாருக்குமே தெரியலையாம்..."
"அவ்வளவு deep love டா அது... இப்படிப் ஆயிடுச்சே!"
"மைதிலி இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையாமே, நிஜமாவா?"
அனைவரையும் பிணைக்கும் ஒரே பொது கவிதையாக மாறினாள் மைதிலி; விடுபட்ட ஹைக்கூ வரியாக மாறினான் மனோ.
ஒரு காலத்தில் முழு வளாகத்தையும் தன் வசீகரத்தால் கட்டிப்போட்ட மனோ இப்போது எங்கே? மைதிலி இப்படி இருக்கிறாளே! இதெல்லாம் தான் அன்றைய ட்ரெண்டிங் டாக்.
வருடகணக்காகவா ஒருவனை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் போகும்? ஆயிரத்துக்கு மேல் கொண்ட ஒரு பேட்ச்சில், ஒருவருக்கு கூடவா அவனை பற்றிய சின்ன இன்ஃபர்மேஷன் கூட தெரியாமல் இருக்கும்? அவன் ஏன் நண்பர்களை தொடர்பு கொள்ளவில்லை? ஆள் அப்படியே காற்றில் கரைந்து மாயமாய் மறைந்துபோனானா? அல்லது உயிரோடு இருக்கிறானா இல்லையா?
விடையே இல்லாத கேள்விகளும், அதை சுற்றி படர்ந்த குழப்பங்களும் தான் அன்று அந்த வளாகத்தில் இருந்தவர்களின் உரையாடல்களை ஒரு கனத்த புதிராக மாற்றியிருந்தன.
டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன் கேமராவோடு உலா வந்துகொண்டிருந்தான். அவனுக்கு இது வெறும் பழைய நண்பர்களின் கெட்-டுகெதர் மட்டும் இல்லை; உயிரோட்டமான ஒரு சினிமா கதைக்கான களம்!
உண்மையில், அவனது தேடல் அங்கே கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கவில்லை. தூங்காமல் நைட்டே ஸ்பாட்டுக்கு வந்து விட்டான். லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய நொடியிலிருந்தே அவனது விசாரணைகள் தொடங்கிவிட்டன. காலேஜ் சமயத்தில் எடுத்திருந்த குரூப் போட்டோவில் மனோவை ஜூம் பண்ணி, நிறைய பிரிண்ட் எடுத்து வைத்திருந்தான். அங்கிருந்த டீக்கடைக்காரர், ஆட்டோ டிரைவர்கள் என அனைவரிடமும் மனோவின் போட்டோவை காட்டி விசாரித்து, அவன் காண்டாக்ட் நம்பரை கொடுத்துவிட்டு வந்திருந்தான்.
காலேஜில் விசாரிப்பதை விட இந்த மாதிரி இடங்களில் விசாரித்தால் தான் கூடுதல் தகவல் கிடைக்கும் என்பதை அவனுடைய கணிப்பு.
"இந்தக் கதைக்கு என்னதான்டா கிளைமாக்ஸ்?" - அவனுள் இருந்த இயக்குநனின் தவிப்பு அவனை சும்மா இருக்க விடவில்லை.
மனோவை பற்றி ஏதாவது ஒரு சின்னக் கிளூ சிக்காதா, இந்த லவ் ஸ்டோரியோட அந்த மிஸ்ஸிங் க்ளைமாக்ஸ் முடிச்சு அவிழாதா என்கிற வெறியோடு, ஆளாளிடம் பேட்டி எடுப்பது போல விசாரணையை தொடர்ந்தபடி கேம்பஸை சுற்றி வந்துகொண்டிருந்தான்.
பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் நால்வரும் ஒரு கோடியில் தனியாக நின்று கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே புனேவில் மனோவை தேடும்போதே பாபியை இவர்கள் சந்தித்துவிட்டதால், மற்றவர்களை போல அங்கே பெரிய ஆரவாரமோ கட்டிப்பிடிப்புகளோ இல்லை. மாறாக, நால்வரின் முகத்திலும் அதே பழைய கவலை மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
அவர்கள் மற்ற நண்பர்களை பார்க்கும்போது சம்பிரதாயமாக சிரித்தாலும், அந்தச் சிரிப்பின் அடியில் ஒரு மெல்லிய நிசப்தமும் ஏமாற்றமும் அப்பட்டமாக தெரிந்தது. நால்வரின் பார்வைகளும் அவ்வப்போது தங்களை அறியாமலேயே கல்லூரி வாசலை நோக்கியே போயின.
"டேய்..." சந்தீப் மெதுவாக தன் சிரிப்பை நிறுத்திவிட்டு பாபியின் தோளைத் தொட்டான்.
"நம்ம குரூப்ல எல்லாரும் இருக்கோம்டா... ஆனா மனோ மட்டும் இல்ல... மனச என்னமோ போட்டு புரட்டி எடுக்குது."
அந்த ஒரு வார்த்தையில் அங்கே நின்றிருந்த நால்வரின் போலி சிரிப்பும் சட்டென அடங்கியது.
"அவன் இல்லாம இந்த கெட்-டுகெதரே எனக்கு முழுசா இல்லாத மாதிரி இருக்கு பாபி," என்றான் பிரேம், நெஞ்சில் கனத்த பாரத்தோடு.
மணிஷ் தலையைக் குனிந்துகொண்டான். "நாங்க புனே பூரா சுத்தித் தேடிட்டோம் பாபி. அவன் பழைய வீடு இருந்த ஏரியா, பிரண்ட்ஸ் சர்க்கிள்னு எங்கயுமே அவனப் பத்தின ஒரு சின்னக் குறிப்புக்கூட கிடைக்கலடா. ஆளு அப்படியே காத்துல கரைஞ்ச மாதிரி போயிட்டான். அவன் உயிரோட இருக்கானா, இல்ல..."
"டேய்! வாய மூடுரா!" பாபி அதட்டினான். அவனது குரலில் கோபத்தை விட பயமே அதிகமிருந்தது.
"அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. அவன் எங்கயோ இருக்கான். வேற ஏதோ ஒரு சூழ்நிலையில நம்மகிட்ட பேசாம இருக்கான்... அவ்ளோதான்," என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது போலச் சொன்னான் பாபி.
சந்தீப்: "ஆனா இவ்வளவு நாள் இப்படி அவன் நம்ம கூட பேசாம, கண்டுக்காம இருக்க வாய்ப்பே இல்லை. அந்த விஷயம் தான் மனசு ரொம்ப உறுத்துது?"
பாபி: "அந்த டிரஸ்ட் அக்கவுண்ட் பேங்க் ரூட்டை வச்சு அட்ரஸ் கண்டுபிடிக்க ட்ரை பண்ணீங்களா... அதுல ஏதாச்சும் கிளூ கிடைச்சதா ?"
சந்தீப் பெருமூச்சு விட்டான்.
"இன்னும் அந்த டிரான்ஸாக்ஷன் ரூட்டை தான் டிரேஸ் பண்ணிட்டு இருக்கோம். ஆனா செக்யூரிட்டி ரீசன்ஸ்னால பேங்க்ல டீடைல்ஸ் தர மாட்டேங்குறாங்க. ட்ரை பண்ணிட்டு தான் இருக்கோம்... ஆனா இதுவரைக்கும் எந்த தகவலும் சிக்கலடா."
நால்வரும் சில நொடிகள் மௌனமாயினர்.
"அவன் மைதிலியை தேடிப்போன அன்னைக்கு அந்த ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா... இன்னைக்கு அவன் நம்ம கூட கெத்தா நின்று இருந்திருப்பான்லடா..." பிரேம் முணுமுணுத்தான்.
"இப்போ அதை பேசி என்ன பண்றது?" என்று பாபி குரல் தழுத்தழுக்க ஆரம்பித்து,
"நேத்து நைட் மைதிலிக்கு கால் பண்ணி பேசினேன்டா... அவ இன்னைக்கு வர்றா. மனோவை பத்தி நேத்து சொன்னபோதே அவ அப்படியே நொறுங்கிப்போயிட்டா. நம்ம எல்லாருக்கும் கல்யாணமாகி, குடும்பம்னு செட்டில் ஆயிட்டோம்... ஆனா அவ இன்னமும் அவனை மனசுல வச்சுக்கிட்டு யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம தனியாவே வாழ்ந்துட்டு இருக்காடா. அவ இன்னும் அவனை மறக்கல... இன்னைக்கு அவ நேர்ல வந்து என் முன்னாடி நிக்கும்போது, அவ முகத்தை நான் எப்படி பார்க்க போறேனோ? அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்த போறேன்னு எனக்கு உண்மையாவே தெரியலடா..." என்று முடித்தான்.
சந்தீப் பெருமூச்சு விட்டு, வானத்தை பார்த்தபடி தன் கலங்கிய கண்களை மறைக்க முயன்றான்.
"அவங்க ரெண்டு பேரோட காதலுக்கும், நல்ல மனசுக்கும் நிஜமாவே ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கணும். ஆனா விதி இப்படி நடுவுல வந்து எல்லாத்தையும் பாழாக்கிடுச்சே... இவன் இப்போ எங்க, எந்த நிலைமையில இருக்கான்னுகூட தெரியாம நாம இப்படி நிக்கிறோமே..."
சந்தீப் சொல்லி முடிப்பதற்குள், அங்கிருந்த நால்வரின் கண்கள் ததும்பிக் வழிந்தன.
வார்த்தைகள் எதுவும் வரவில்லை.
பிரேம் தன் கையால் முகத்தை மூடிக்கொள்ள, மணிஷ் பாபியின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டான். வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், தொலைந்துபோன தன் நண்பனுக்காகவும், காதலில் தோற்றுப்போய் நிற்கும் தோழிக்காகவும் அந்த நான்கு பேரும் கலங்கிக் கொண்டிருந்த அந்த நொடி, அங்கிருந்த அத்தனை பேரையும் தாண்டி அவர்களின் உண்மையான நட்பை பிரதிபலித்தது.
பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் நால்வரும் கண்ணீரோடு தவித்துக் கொண்டிருந்த அந்த வேளையில்,
சஞ்சுவும் இந்துவும் அவர்களை நோக்கி வந்தார்கள்.
சஞ்சு ஸ்லீவ்லெஸ் அனார்கலியிலும், இந்து கலர்ஃபுல் இந்தோ-வெஸ்டர்ன் பாலாஸோ குர்தியிலும் 2010-ன் நேர்த்தியான நவீனப் பெண்களாக காட்சி அளித்தார்கள்.
நால்வரின் கலங்கிய கண்களையும், அங்கே படர்ந்திருந்த அழுத்தமான அமைதியையும் பார்த்ததும் சஞ்சுவுக்கு நிலைமை புரிந்தது.
சஞ்சு: ஃபீல் பண்ணாதீங்கடா... எல்லாம் நம்ம கையை மீறி நடந்து போச்சு. நாம என்ன பண்ண முடியும்? ஏதாவது அப்டேட் உண்டா?
பாபி கலங்கிய கண்களை கர்ச்சீப் எடுத்து ஒற்றிக்கொண்டே மனோவை இதுவரை கண்டுபிடிக்க முடியாததையும், நேற்றிரவு மைதிலி போனில் உடைந்து பேசியதையும் அவர்களிடம் கூறினான்.
கேட்டதும் சஞ்சுவின் முகத்தில் வேதனை படர்ந்தது.
"இடைப்பட்ட காலத்தில் அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நாங்க எவ்வளவோ வற்புறுத்தினோம்... அவ ஏதேதோ சாக்கு சொல்லி சமாளிச்சுட்டாடா... அதான் நடக்காம போயிருச்சு. மனோவின் wherabouts-ம் தெரியல. இன்னும் எவ்வளவு நாள் தனியாவே இருக்க முடியும்? சொன்னா கேட்கவே இல்லை" - சஞ்சு குரல் தடுமாற சொன்னாள்.
இந்து தன் பெருமூச்சை அடக்க முடியாமல், " மனோவை மறக்க முடியாமதான் அவ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நாங்க பீல் பண்ண கூடாதுன்னு, அவ பீல் பண்ணாத மாதிரியும், இந்த விஷயத்தை நெனச்சு கவலைப்படாத மாதிரியும், அவ நடிச்ச நடிப்பிருக்கே, அவளுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம். இந்த உலகத்துல நல்லவங்களுக்குத்தானே இப்படி எல்லாம் நடக்குது... அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் லைட்டா, கொஞ்சம், கொஞ்சூண்டு நல்லது நடந்திருக்கலாம்..." என்று கலங்கினாள்.
அப்போது சஞ்சுவின் மொபைல் போன் அடித்தது. கால் ஃபிரம் மைதிலி.
சஞ்சு காலை அட்டென்ட் செய்து: "ஹேய் சுட்கி! எங்கடி இருக்க? நாங்க எல்லாரும் காலேஜ்லதான் இருக்கோம். உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்?" - என்று கேட்க,
"சஞ்சு... on the way டி. டாக்ஸில வந்துகிட்டு இருக்கேன். வழியில் செம ட்ராபிக். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல லேண்ட் ஆயிடுவேன்!" என்றாள் மைதிலி.
"சீக்கிரம் வாடி... பசங்க எல்லாரும் வந்துட்டாங்க," என்று போனை வறுத்த சஞ்சு,
"மைதிலி கார்ல வந்துகிட்டு இருக்காளாம், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவா," என்று எல்லோருக்கும் அப்டேட் கொடுத்தாள்.
சொல்லிவிட்டு போனை துண்டித்த நொடி, அவளது நெஞ்சினுள்ளே ஏதோ ஒன்று விண்விண்ணென்று தெறித்தது.
'மனோ வந்துட்டானா? அவனைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சதா?'—இந்தக் கேள்வி தொண்டைக்குழி வரை வந்து, வார்த்தைகளாக உதட்டோரம் முட்டி நின்றது. போனை மறுபடியும் காதில் வைத்து, சஞ்சுவிடம் ஒரே ஒரு வார்த்தை கேட்டுவிட துடித்தது மனசு.
ஆனால், கேட்கவில்லை. கஷ்டப்பட்டு அந்த ஆவலை, தவிப்பை, நெஞ்சின் அடியாழத்தில் அமுக்கி அடக்கிக்கொண்டாள்.
சில கேள்விகளுக்கு போன் உரையாடல்கள் தகுதியானவை அல்ல. மனோவின் பெயரை போன் ஸ்பீக்கரில் கேட்டு, அது தரும் அதிர்ச்சியைத் தாங்கும் வலிமை இப்போது அவளது உடம்பில் இல்லை. ஏமாற்றமோ அல்லது நம்பிக்கையோ... எதுவாக இருந்தாலும் அதை நேருக்கு நேர், தன் நண்பர்களின் கண்களைப் பார்த்துத் தெரிந்துகொள்வதுதான் நியாயம்.
டாக்ஸி கண்ணாடி வழியே தெரிந்த சாலை மெல்ல மறைந்து போக, கல்லூரி வளாகத்தில், தனக்காக என்ன மாதிரியான நிஜம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத அறியாமை ஒருபுறம்... அவன் முகத்தை பார்த்துவிடும் ஏக்கம் மறுபுறம். 'வருவானா... மாட்டானா?' என்கிற ஒற்றைக் கேள்வி, விடையற்ற தியானம் போல அவளது யோசனைகளை ஆழமாக விழுங்கி கொண்டிருந்தது.
இதற்கிடையே, மைதிலி காரில் வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்டதும் பாபியின் முகத்தில் வேதனையையும் தாண்டி ஒரு மெல்லிய நெகிழ்ச்சி படர்ந்தது.
"வரட்டும்... வரட்டும்... அவளை பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா?" - பாபி ஒரு பெருமூச்சோடு வானத்தை வெறித்துப் பார்த்தபடி சொன்னான்.
"அன்னைக்கு ஆக்சிடென்ட் நடந்த அப்புறம், அவ ஆஸ்பத்திரிக்கு வர்றேன்னு கதறினப்போ நான்தான் அழுத்தமா தடுத்து ஊருக்கு போகச் சொன்னேன். அவகிட்ட கடைசியா போன்ல பேசின அந்த நிமிஷத்தோட சரி... அதுக்கப்புறம் இந்த ஏழு வருஷத்துல அவளை நேர்ல பார்க்கவே இல்லைடா. இன்னைக்கு அவளைப் பார்க்குறதுக்காக என் மனசு எவ்வளவு தவிச்சுகிட்டு இருக்குன்னு எனக்குத்தான் தெரியும்..."
சஞ்சு பாபியின் தோளை ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள்.
சற்றுத் தள்ளி, பழைய DSG குரூப் பெண்கள்—ஸ்ரேயா, சலோனி, பிரணவி, தன்வி, திஷா, மஹிமா—தனியாக ஒரு குரூப்பாக நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை பார்த்ததும் சஞ்சுவுக்கும் இந்துவிற்கும் லைட்டா சந்தேகம் வந்தது.
"என்னடி இந்து... DSG கேர்ள்ஸ் அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் தனியாவே நிக்குறாங்க? பழைய மாதிரியே தெனாவட்டா திரியுறாங்களா, இல்ல ஏதாச்சும் மாறியிருக்காங்களா? பிரணவியை மட்டும் லாஸ்ட் வீக் ஒரு மேரேஜ்ல பார்த்து பேசினேன்... புலம்பி தள்ளினாள்", என்றாள் சஞ்சு.
"வா... போய் பேசி தான் பார்ப்போமே. பழசையெல்லாம் மனசுல வச்சுக்காம சும்மா நலம் விசாரிப்போம்," என்று இந்து சஞ்சுவை அழைத்து கொண்டு அவர்களிடம் சென்றாள்.
அங்கே போய் பேசியபோதுதான் தெரிந்தது... அவர்கள் முந்தைய மாதிரி இல்லை! "My life, My Rules" ன்னு தெனாவட்டாக திரிந்தவர்களை வாழ்க்கையின் கரடுமுரடான அனுபவங்கள் நிறையவே மாற்றியிருந்தன.
எல்லாருக்கும் திருமணமாகிவிட்டிருந்தது. குடும்பக் கஷ்டங்கள், கணவனின் பிசினஸ் நஷ்டம், மாமியார் கொடுமை, குழந்தை வளர்ப்பு எனப் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளில் சிக்கி சின்னா பின்னமாகியிருந்தார்கள். படிக்கும்போது பணக்கார திமிரில் சுற்றிய முகங்களில், இப்போது வாழ்க்கையின் வடுவும் களைப்பும் அப்பட்டமாக தெரிந்தன.
"ஏண்டா அன்னைக்கு காலேஜ்ல அவ்வளவு திமிருத்தனமாவும், மத்தவங்களை அசிங்கப்படுத்தியும் நடந்துக்கிட்டோம்?" என்கிற குற்ற உணர்ச்சியும் வருத்தமும் அவர்களின் உரையாடலில் வெளிப்பட்டது.
2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடாரென கீழே சரிந்தது. அதிக விலைக்கு வாங்கி சேர்த்திருந்த நூறு கிளைகளின் ஸ்டாக் மதிப்பு ஒரே அடியில் பாதியாக குறைய, பிசினஸ் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
அதை ஈடுகட்ட, புதிய மாடல்கள் செய்யவும், விரிவாக்கத்திற்காக வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்கவும் முயற்சித்த இடத்தில் மேலும் தவறான கணக்கு வழக்குகள். கார்ப்பரேட் நகைக்கடைகளின் கடுமையான போட்டி, வங்கி வட்டிச் சுமை என எல்லாமே சேர்ந்து கழுத்தை நெரிக்க, வங்கியினர் ஸ்ரேயா அப்பா ரத்தன்குமாரின் சொத்துக்களை முடக்க தொடங்கினர்.
அப்பாவின் கடன்களையும், பாரம்பரிய பிராண்டையும் காப்பாற்ற வேறு வழியின்றி, மும்பையின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் முதலாளியின் மகனுக்கு ஸ்ரேயாவை திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆனால், அந்த பணம் அவளது வாழ்க்கையை காப்பாற்றவில்லை. அவள் கணவன் ஒரு சைக்கோ. சந்தேகப் புத்தியும் பணத் திமிரும் கொண்ட அவனுடன் நரக வேதனையை அனுபவித்த ஸ்ரேயா, இறுதியில் டைவர்ஸில் வந்து நின்றாள். அப்பாவின் பிசினஸையும் காப்பாற்ற முடியாமல், தன் சொந்த வாழ்க்கையையும் தொலைத்துவிட்டாள்.
நூறு கிளைகள் இருந்த இடத்தில், இப்போது ஏதோ மிச்சமிருக்கும் மூன்று ஜூவல்லரி ஷாப்களை மட்டுமே அவளும் அவளது வயதான தந்தையும் கஷ்டப்பட்டு மேனேஜ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
காலம் தன் கையில் வைத்திருக்கும் சாட்டையால் யாரை, எப்போது, எப்படி அடிக்கும் என்பதே தெரியாது. ஸ்ரேயா அதை புரிந்துகொள்ள ரொம்ப நாட்களாகவில்லை இங்கே
மிகவும் தர்மசங்கடத்தோடு நின்றிருந்தாள்.
சஞ்சுவையும் இந்துவையும் பார்த்ததும் அவளது முகம் சுருங்கி, குற்ற உணர்ச்சியோடு கண்கள் தரையை பார்த்தன. அன்னைக்கு மைதிலியையும் இவர்களையும் ஒதுக்கி வைத்து, அசிங்கப்படுத்திய அத்தனை சம்பவங்களும் நினைவுக்கு வந்து அவளை குறுக வைக்க, பேசுவதற்கு வார்த்தைகளின்றி தயங்கி தயங்கி நின்றாள்.
மைதிலியையும் மனோவையும் பற்றிப் பேச்சு வந்தபோது, சலோனி சங்கடத்தோடு கேட்டாள்: "மைதிலியும் மனோவும் வரலையா?"
சஞ்சு பெருமூச்சு விட்டாள். "அவன் எங்க இருக்கான்னே யாருக்கும் தெரியல... மைதிலி on the way..."
ஸ்ரேயா தன் தயக்கத்தை உடைத்து, "மனோவுக்கு என்ன ஆச்சு சஞ்சு?" என்று கேட்க... லோனாவாலா விபத்து தொடங்கி, இன்றுவரை அவன் முகவரி தெரியாமல் போயிருப்பது வரை நடந்த அத்தனை சம்பவங்களையும் சஞ்சு சுருக்கமாக விவரித்தாள்.
கேட்கக் கேட்க, ஸ்ரேயாவின் கால்களுக்கு அடியிலிருந்த பூமி நழுவுவது போலிருந்தது.
கல்லூரி நாட்களில் மைதிலியின் மீது கொண்ட பொறாமையினாலும், மனோவை தன் வசப்படுத்த முடியாத ஆத்திரத்தினாலும் தான் செய்த அத்தனை சதிகளும், அசிங்கமான வேலைகளும் அவளது மனக்கண் முன் வரிசையாக வந்து போயின. 'தான் விதைத்த அந்த நஞ்சுதான் இந்த இரண்டு பேரின் வாழ்க்கையையும் இன்று இந்தச் சூனியத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதா?' என்ற எண்ணம் அவளது நெஞ்சில் அனலாய் உருண்டது.
ஸ்ரேயா சுலபத்தில் உடைந்து அழக்கூடியவள் அல்ல. கல்லூரி நாட்களில் அவளிடம் இருந்த அந்த அசுரத்தனமான திமிரும் அகந்தையும் எல்லாரையும் மிரள வைக்கும். ஆனால், வாழ்க்கையின் அனுபவங்களும், குடும்பப் பிரச்சினைகளும், இப்போது இந்த அதிர்ச்சிச் செய்தியும் சேர்ந்து அவளது தற்காப்பு சுவர்களை அடியோடு தகர்த்திருந்தன.
அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.
உடலெல்லாம் நடுங்க, சஞ்சு, இந்து மற்றும் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாபி, சந்தீப், பிரேம், மணிஷ் என அனைவரையும் பார்த்து தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.
"தயவுசெய்து... தயவுசெய்து என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்கடா!" - அவளது குரல் விம்மலில் உடைந்தது.
"அன்னைக்கு சின்னத்தனமான ஈகோவுல நான் பண்ணின அத்தனை தப்பும் இப்போ என் முன்னாடி வந்து என்னை சாகடிக்குது. மனோவுக்கும் மைதிலிக்கும் இந்த நிலைமை வர்றதுக்கு நான் தான் முழுக்காரணம். மைதிலி இப்போ வர்றா இல்லை? அவ வந்ததும் அவ கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கக்கூட நான் தயாரா இருக்கேன்! Iam sorry!" என்று ஒரு காலத்தில் தெனாவட்டாக சுற்றிய ஸ்ரேயா, இன்று அத்தனை பேரின் முன்னாலும் கெஞ்சி அழுதுகொண்டிருந்தாள்.
DSG குரூப் பெண்கள் அனைவரும் திகைப்பாக ஸ்ரேயாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சஞ்சுவும் இந்துவும் ஒரு கணமும் யோசிக்கவில்லை. உடனே முன்னே வந்து, கண்ணீரோடு நின்றிருந்த ஸ்ரேயாவின் கைகளை பற்றிக் கொண்டார்கள்.
"ஏய் ஸ்ரேயா... லீவ் இட் டி!" என்றாள் சஞ்சு மிகவும் மிருதுவான குரலில்.
"அன்னைக்கு நாம எல்லோருமே சின்னப் பசங்க. வயசுக்கோளாறுல எது சரி, எது தப்புன்னு தெரியாம பண்ணின விஷயங்கள் அது. அதை இன்னமும் மனசுல வச்சுக்கிட்டு இப்படி உன்னை நீயே சித்ரவதை பண்ணிக்காத. நடந்தது நடந்து போச்சு... இனிமே அதை மாத்த முடியாது இனிமயாவது ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கலாமே," என்று அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
பாபியும் நட்புணர்வுடன் அருகில் வந்து, "ஆமா ஸ்ரேயா... பழைய கதையையெல்லாம் தோண்டி குறை சொல்ல இங்க யாருமே வரல. மைதிலியும் இதையெல்லாம் மனசுல வச்சுக்கிற ஆள் இல்லை. நீ அழாத," என்றான் பெருந்தன்மையோடு.
விஷத்தை விதைத்த இடத்திலும் பூக்களை மட்டுமே தூவும் அந்த நண்பர்களின் அன்பை கண்ட கணத்தில், ஸ்ரேயாவின் இதயத்தின் அடியாழத்தில் உறைந்துகிடந்த பனிப்பாறைகள் சடசடவென உடைய தொடங்கின. காலத்தின் வடுக்களோடு அலைந்து திரிந்த அந்த பெண்ணின் மனதிலிருந்த அத்தனை கசப்புகளும் அகன்று, ஒரு மெல்லிய அமைதியும், விவரிக்க முடியாத நெகிழ்ச்சியும் அவளை முழுமையாக ஆட்கொண்டன.
ஸ்ரேயா: நீங்கல்லாம் மன்னிச்சிட்டீங்க!! ஆனா மைதிலி என்னை மன்னிப்பாளா தெரியலையே..
இந்து அதற்கு பதில் சொல்வதற்குள்,
கல்லூரியின் பிரதான கேட் வழியே ஒரு கார் வழுக்கிக் கொண்டே நுழைந்து, பார்க்கிங்கில் வந்து நின்றது.
காரின் கதவு திறக்க... மைதிலி காரை விட்டு கீழே இறங்கினாள்!
தொடரும்