மௌனம் - 29
அன்று காலை பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. அபிராமி வழக்கம் போல் தன் காலை பூஜையில் கவனமாக இருக்க.. பூ பறிப்பதற்காக வெளியில் வந்த நந்தினி அங்கு இருந்த பைகளை யோசனையாக பார்த்தாள்.
வாயிலுக்கு நேரெதிரே இரண்டு பெரிய பைகள் வைக்கப்பட்டு இருப்பதை யோசனையாக பார்த்தவள், நேராக வந்து அபிராமியிடம் விஷயத்தை சொல்ல.. அவரும் எழுந்து வந்து என்னவென பார்த்தார்.
அதை பற்றி வாயிற்காவலாளி கந்தனிடம் அபிராமி விசாரிக்க.. அவர் புஷ்பா வந்து சென்ற விஷயத்தை கூறினார். கந்தன் இங்கே பல வருடங்களாக வேலை செய்பவர் என்பதால் அவருக்கு அனைவரையும் நன்றாகவே தெரியும். அதில் அவர் சிறு தயக்கத்தோடு சொல்லி முடிக்கவும் “எப்போ வந்தாங்க..?” என்றார் அபிராமி.
“ஒரு மணி நேரம் முன்னே மேடம்..” என அவர் சொல்லவும், அபிராமி அமைதியாக இருக்க.. “நான் கூட உள்ளே கொண்டு போய் வைக்கவான்னு கேட்டேன் மேடம், ஆனா அவங்க தான் வாசலிலேயே வெச்சுடுங்க.. அவங்க தேவைப்பட்டா எடுத்து உள்ளே வெச்சுக்கட்டும்னு சொன்னாங்க..” என்று தானாகவே கந்தன் சேர்த்து கூறவும், சரி என்ற தலையசைப்போடு அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் அபிராமி.
வரவேற்பு அறையில் அமர்ந்து நந்தினி அதற்குள் இருப்பது என்னவென்று பார்க்க.. அது அனைத்தும் மானஸாவின் பொருட்களாக இருந்தது. அவளின் கல்லூரி புத்தகப் பை, சில உடைகள், மானஸாவின் அலைபேசி என்று அவளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மட்டுமே அதில் இருக்க.. இப்போது என்ன செய்வது என்பது போல் நந்தினி அபிராமியை நிமிர்ந்து பார்த்தாள்.
“அப்படியே அங்கே இருக்கட்டும் நந்தும்மா, மானு எழுந்து வந்ததும் அவ என்ன செய்யணும்னு முடிவு செஞ்சுக்கட்டும்..” என்று விட்டு அபிராமி சமையலறைக்குள் சென்றுவிட, புஷ்பாவை எண்ணி உண்டான கவலையோடு அங்கேயே அமர்ந்து விட்டாள் நந்தினி.
புஷ்பாவின் மீதெல்லாம் அவளுக்கு எந்த ஒரு கோபமும் எப்போதுமே இருந்ததில்லை. சில வீடுகளில் இது போல் வாழ்க்கையை இழந்து அடைக்கலம் தேடி வரும் நாத்தனாரையும், அவரின் மகளையும் வேறாக பார்த்து ஒதுக்கி வைக்கும் எத்தனையோ விஷயங்கள் பற்றி அவளும் கேள்விப்பட்டு இருக்கிறாள்..
ஆனால் ஒரு நாளும் புஷ்பா அப்படியெல்லாம் இவர்களிடம் நடந்து கொண்டதே இல்லை.. மற்ற இரு பிள்ளைகளை பார்ப்பது போல் தான் நந்தினியையும் பார்த்தார், ஒரு சகோதரியை போல தான் சித்ராவிடம் பழகுவார்..
அபிராமிக்கு அவர் செய்தது மிகப்பெரிய பாவம் என்றாலும் தன்னிடம் அவர் நடந்து கொண்டதில் எந்த ஒரு தவறையும் சொல்லி விடவே முடியாது. இதையெல்லாம் யோசித்தபடியே நந்தினி அமர்ந்திருக்க.. அதே நேரம் அவசரமாக கிளம்பி வெளியில் வந்தான் விநாயக்.
இப்போது இவரிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா..! இல்லையா..? என்று புரியா ஒரு குழப்பமான மனநிலையோடே நந்தினி அவனைப் பார்க்க.. சமீபமாக அவள் இப்படியான குழப்பத்தோடே தன்னை பார்த்து வைப்பதில் உண்டான எரிச்சலோடு அவளைப் பார்த்துவிட்டு என்னவென்று கூட கேட்காமல் விநாயக் வெளியேற முயல.. அதற்குள் மகனுக்கு சூடாக பாலை கொண்டு வந்த அபிராமி “இதையாவது குடிச்சுட்டு போ, சீக்கிரம் கிளம்புவேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..!” என்றார்.
“முன்னேயே ஷெட்யூல் போட்டு செய்யற வேலையா ம்மா என்னோடது..? திடீர்னு ஒரு அவசரம்..” என்றவன், அவரோடு பேசியபடியே அந்த பாலை குடித்து முடித்திருந்தான். மகனிடம் அங்கு இருந்த பொருட்களை காண்பித்து அபிராமி நடந்ததை சொல்ல.. “மானுகிட்ட கொடுங்கம்மா..” என்றதோடு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் விநாயக்.
அதிலேயே இது அவள் முடிவு எடுக்க வேண்டிய ஒரு விஷயம், இதில் நாம் தலையிடக்கூடாது என சொல்லாமல் மகன் சொல்லி சென்றது புரிய.. சிறு புன்னகையோடு சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டார் அபிராமி.
இதையெல்லாம் அறியாத மானஸா அப்போதே உறக்கம் கலைந்து எழுந்து வந்து அவள் அறையின் பால்கனியில் நின்றாள். விழிமூடி லேசாக முகத்தை உயர்த்தி அந்த காலை நேர காற்றை அனுபவித்து அவள் நின்றிருந்ததை சற்று தள்ளி இருந்த காரில் அமர்ந்து விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.
வீட்டில் இருந்து வெளியே வந்த விநாயக் பார்வையில் அந்த கார் விழ, உள்ளே இருப்பது யார் என புரிந்து கொண்டவன் அமைதியாகவே அவரை கடந்து சென்றான்.
இது மானஸாவின் பல வருட பழக்கம். அவளுக்கு தினமும் எழுந்தவுடன் சில நிமிடங்களாவது இப்படி வெளிக்காற்றை சுவாசித்தபடி சூரிய ஒளி முகத்தில் பட வந்து நிற்க வேண்டும். அதேபோல் இன்றும் அவள் வந்து நிற்க.. ஐந்து நாட்களுக்குப் பிறகு மகளின் முகம் எங்காவது தெரிந்து விடாதா..? என்ற ஏக்கத்தோடு, எப்படியாவது இன்று அவளை பார்த்துவிட்டே கிளம்ப வேண்டும் என்ற முடிவுடன் அமர்ந்திருந்த புஷ்பா, மகளின் முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
மெல்லிய சிறு புன்னகை அவள் முகத்தில் படர்ந்திருக்க.. அந்த காலை நேரத்தை அவள் ரசித்து நின்றிருந்த கோலம் அத்தனை அழகாக இருந்தது. இரவு உடையில் லேசாக தலை கலைந்து எந்த ஒப்பனையும் இல்லாமல் நின்றிருந்தாலும், மானஸாவின் முகத்தில் ஏதோ தனி ஒரு அழகு மிளிர்ந்தது.
வீட்டில் இருந்தாலும் சரி விடுதியில் இருந்தாலும் சரி, எப்போதும் நிரந்தரமாக அவள் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் படர்ந்து இருக்கும். மகளின் முகத்தை அப்படியே பார்த்து, பழகி இருந்தவருக்கு இன்று அதெல்லாம் காணாமல் போய் ஒரு அமைதியும் சந்தோஷமும் அந்த முகத்தில் மிளிர்வது போல் இருந்தது.
இதில் இமைக்காமல் மானஸாவின் முகத்தையே நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த புஷ்பா, அவள் தங்களோடு இருந்ததை விட, இங்கு நிம்மதியும் சந்தோஷமுமாக இருப்பதை வலியோடு உணர்ந்தார்.
**
இத்தனை களேபரங்களும் வீட்டில் நடக்கும் போது நிதின் அங்கே இல்லை, துபாய் சென்றிருந்தான்.
திடீரென பதினைந்து நாள் பயணமாக தன் நண்பர்களோடு செல்லப்போவதாக அவன் வந்து நின்ற போது மகனை வருத்தத்தோடு பார்த்தார் ரகோத்தமன்.
‘நந்தினி மனம் என்னவென்று தெரியாமல் தேவையின்றி இவன் மனதில் ஆசையை வளர்த்து தவறு செய்த விட்டோமோ..?’ என்று அவருக்கு கவலையாக இருந்தது. அதற்கேற்றார் போல் நிதினின் முகம் அத்தனை வெறுமையாக இருந்தது.
அன்றைய வேதவல்லியுடனான வாக்கு வாதத்திற்கு பிறகு நிதின் வீட்டில் அதிகம் இருப்பதில்லை. அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்தவராக ரகோத்தமன் எதுவும் கேட்காமல் இருந்துவிட, புஷ்பா தான் மிகவும் தவித்து போனார்.
இதில் திடீரென தன் பயணத்தை பற்றி நிதின் வந்து சொன்னதும் ரகோத்தமன், எந்தத் தடையும் சொல்லவில்லை. அவன் மன ஆறுதலுக்கு இப்படி ஏதாவது தேவை என்று புரிந்து கொண்டவராக அவர் அமைதியாக இருந்துவிட.. வழக்கம் போல் வேதவல்லி தான் குதித்துக் கொண்டிருந்தார்.
“நீ எல்லாம் என்ன ஆம்பளை பிள்ளை..? நீ கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய பொண்ணை இன்னொருத்தன் தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சுருக்கான்.. ஆனா அதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாம இப்படி ஊர் சுத்தக் கிளம்பிட்டே..” என்று அவர் ஆத்திரத்தில் கத்த.. “வேற என்ன செய்ய சொல்றீங்க..? அருவாளோட போய் அவளை வெட்டி போட்டுட்டு வரவா..? இல்லை அவனை வெட்டிட்டு அவளை தூக்கிட்டு வரவா..!” என்றான் நிதின்.
இதைக் கேட்டு சித்ரா தான் மிகவும் பதறிப் போனார். கொஞ்சமும் யோசிக்காமல் வேதவல்லி ‘எங்கே அப்படியே செய்..!’ என்று அவனுக்கு கட்டளையிட்டு விடுவாரோ..! என்று தவித்துக் போனவராக, எதுவும் இடையில் பேச முடியாமல் சித்ரா பார்த்திருக்க.. புஷ்பா தான் மனம் தாங்க முடியாமல் “நிது என்ன பேச்சு இது..?” என்று கண்டிப்போடு கேட்டிருந்தார்.
“வேற என்ன செய்ய சொல்றீங்க..? எங்கிருந்தாலும் வாழ்கன்னு வேணும்னா பாடட்டுமா..!” என அவன் வெறுப்பாக கேட்க, “இப்போ எதுக்கு அவனை சமாதானம் செய்யறே..? அவன் கோபம் நியாயமானது தானே..!” என்றார் வேதவல்லி.
அவரின் பேச்சு புஷ்பாவுக்கு பயத்தை கொடுத்தது. ‘எங்கே இப்படியே பேசி கோபத்தை தூண்டி அவனை தேவையில்லாத எதையும் செய்ய வைத்து விடுவாரோ..!’ என்று பயந்தார். இதில் ரகோத்தமன் இடையிட்டு நிதினை அங்கிருந்து வேறு எந்த பேச்சுக்களும் இல்லாமல் கிளம்ப செய்திருந்தார்.
அதில் இங்கு அதன் பின்பு நடந்த எந்த ஒரு கலவரமும் அவனுக்குத் தெரியாமலே போனது. ஏற்கனவே மன வருத்தத்தில் இருப்பவனை மேலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் புஷ்பா, மகனிடம் அனைத்தையும் மறைத்து விட்டார்.
எத்தனை சிரமம் இருந்தாலும் கடமையே கண்ணாக உழைத்துக் கொண்டிருந்த நந்தினி, இப்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு செல்வதில்லை. நிதின் ஊரிலேயே இல்லை, சமீபத்திய நிகழ்வு தந்த சோர்வில் ரகோத்தமனும் வீட்டிற்குள்ளேயே சுருண்டு கொண்டிருந்தார்.
இதில் அத்தனை வேலைகளும் தடைப்பட்டு நிற்க.. ரகோத்தமனை தொடர்பு கொள்ள முயன்று முடியாத டில்லிபாபுவிடமிருந்து வேதவல்லிக்கு அழைப்பு வந்தது.
இரண்டு நாட்களாக இதைப் பற்றி அவருக்கு தகவல் தந்து கொண்டு தான் இருந்தார் டில்லிபாபு. இதில் இப்போது ஏன் அழைக்கிறார் எனப் புரிந்து அதில் உண்டான எரிச்சலோடு “என்னய்யா உனக்கு..?” என வெறுப்போடு வேதவல்லி அலைபேசியை எடுத்து கத்தவும், “மேடம் இங்கே அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கணும்.. யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்து இருக்காங்கன்னு தெரியலை, என்ன பிராஜெக்ட் ஷுட்டிங் எங்கே எதுவும் தெரியலை.. இரண்டு நியூ டைரக்டர் வந்து வெயிட் செய்யறாங்க..” என அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக.. “இப்போ என்ன என்னை வந்து அங்கே உட்கார்ந்து வேலை பார்க்க சொல்றியா..?” என்று எரிந்து விழுந்தார் வேதவல்லி.
“அதில்லை மேடம்..” என்று தொடங்கியவருக்கு அடுத்து என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை. ஏனெனில் இதெல்லாம் தெரிந்த ஒரே ஆள் நந்தினி. இரண்டு நிறுவனங்களின் அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாள்.
நிதின் கூட அவன் பார்க்கும் நிறுவனத்தின் தகவல்களை மட்டுமே அறிந்து வைத்திருப்பான். மற்றபடி நந்தினியின் விஷயத்தில் தலையிடுவது இல்லை, ஆனால் நந்தினி அப்படியல்ல.
அதில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அவளிடம் இருந்து சரியான தகவலையும் விவரத்தையும் அறிந்து வேலைகளை முடித்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது அவள் ஒதுங்கிக் கொண்டு எதுவாக இருந்தாலும் ரகோத்தமனிடம் கேட்டுக் கொள் என சொல்லிவிட்டு இருக்க.. அவரையோ சமீபமாக தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
இதில் என்ன செய்வது என்று புரியாமல் தயங்கி தான் வேறு வழியே இல்லாமல் வேதவல்லிக்கு அழைத்து இருந்தார் டில்லிபாபு. ஏனெனில் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு அவரால் பதில் சொல்லவே முடியவில்லை.
ஏன் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது..?
இன்று என்னை பேச்சுவார்த்தைக்கு வர சொல்லி இருந்தார்கள்.. அவர்கள் ஏன் வரவில்லை..?
என் கதையை அவர்களிடம் கொடுத்திருந்தேன்.. ஹீரோவிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.. அது என்னவானது..?
என்று தினம் நான்கு பேராவது கேட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இதில் கையை பிசைந்து கொண்டு டில்லிபாபு வேதவல்லியின் பதிலுக்காக காத்திருக்க.. பல வருடங்களுக்கு முன்பே இதிலிருந்து எல்லாம் ஒதுங்கிக் கொண்டிருந்த வேதவல்லிக்கு எதை பற்றிய முழுமையான தகவலும் தெரியாது.
அதோடு அதை எல்லாம் மொத்தமாக அறிந்து வைத்திருப்பது நந்தினி என்று தெரிய வந்த கோபமும் சேர்ந்து கொள்ள.. எந்த பதிலும் சொல்லாமல் பட்டென அழைப்பை துண்டித்து விட்டு ரகோத்தமனை தேடிச் சென்றார் வேதவல்லி.
“நீயும் உன் மகனும் என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க..? நமக்குன்னு ஒரு கம்பெனி இருக்குன்னு ஞாபகமாவது இருக்கா..! அவன் எனக்கு என்ன வந்ததுன்னு எங்கேயோ ஊர் சுத்த போயிட்டான், நீ ஏதோ கப்பலே கவிழ்ந்த மாதிரி கன்னத்தில் கை வெச்சுட்டு மூலையில் உட்கார்ந்து இருக்கே.. நம்மை நம்பி படம் எடுக்க வந்தவங்களுக்கு யார் பதில் சொல்றது..? அந்த வீணா போனவன் என்னன்னா இந்த கம்பெனியே அந்த ஓடிப்போனவ தலைமையில் தான் நடக்கற மாதிரி ஒரு படம் காட்டறான்..” என்று வானத்திற்கும் பூமிக்குமாக அவர் குதித்துக் கொண்டே இருக்க.. அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத நிதானத்தோடு தன் அன்னையை ஏறிட்டுப் பார்த்திருந்த ரகோத்தமன் “இதுதான் நம்ம கம்பெனியோட உண்மையான நிலவரம் ம்மா, கடந்த ஐந்து வருஷமா கம்பெனி இப்படித்தான் நடந்துட்டு இருக்கு யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் பசி தூக்கம் இல்லாம ஓடி உழைச்சிட்டு இருந்த ஒருத்தியை தான் இனி கம்பெனிக்குள்ளே வரக்கூடாதுன்னு நீங்க சொல்லி இருக்கீங்கன்னு இனியாவது புரிஞ்சுக்கோங்க..” என்றார்.
“அவளுக்கு தான் எல்லாம் தெரியும், அவ தான் எல்லாம் செஞ்சானா.. அப்புறம் நீயும் உன் பிள்ளையும் எதுக்கு தண்டமா..?” என்று அவர் எரிச்சலோடு கேட்கவும், “நாங்க தான் எல்லாம் செய்யணும்னா அப்புறம் நீங்க எதுக்கும்மா..?” என்றார் ரகோத்தமன்.
அதில் திகைத்து நின்ற வேதவல்லி “என்ன..? என்ன பேசறேன்னு உனக்கு புரியுதா..! வர வர இந்த வீட்டில் எனக்கு மரியாதை இல்லாம போச்சு, எல்லாம் அவன் சொல்லி கொடுத்ததா..!” என்று மீண்டும் தொடங்க.. அதே நேரம் அங்கு வந்து நின்றான் நிதின்.
“ச்சீ, இந்த வீட்டுக்குள்ளே வந்தாலே கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை.. எப்போவும் கூச்சலும் குழப்பமுமா இருக்க இது வீடா..? இல்லை சந்தை கடையா..!” என அவன் எரிச்சலோடு கேட்டுவிட்டு அங்கிருந்து செல்ல.. அவன் சென்ற திசையை முறைத்துக் கொண்டு நின்றார் வேதவல்லி.
**
அடுத்த ஒரு மணி நேரத்தில் நந்தினி வெளியில் செல்ல தயாராகி அபிராமியின் முன் வந்து நின்றாள். “ஒரு வேலை விஷயமா பிரண்ட்ஸ்கிட்ட கேட்டு இருந்தேன் அத்தை, இன்னைக்கு அது சம்பந்தமா வர சொல்லி இருக்காங்க.. நான் போயிட்டு வந்துடறேன்..” என்று நந்தினி கூறவும், அபிராமிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இத்தனை நாள் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவள் இப்படி ஒரு மாதமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பது அவருக்குமே வருத்தமாக தான் இருந்தது. விநாயக்கிடம் கூட சென்ற வாரத்தில் ஒரு நாள் இதைப்பற்றி அபிராமி பேசியிருந்தார்.
“நாம என்னம்மா இதில் செய்ய முடியும்..? அவ தான் முடிவு எடுக்கணும், சில விஷயங்களில் நாம தள்ளி இருப்பது தான் சரி.. எந்த முடிவா இருந்தாலும் அவ எடுக்கட்டும், நாம துணை இருக்கலாம்..” என்று மகன் சொல்லிவிட, அவருக்கும் அது தான் சரி என தோன்றியது.
வேதவல்லி திரும்ப நந்தினியை அந்த நிறுவனத்திற்குள் அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்க மாட்டார் என அபிராமிக்கும் தெரிந்தே இருந்தது. அதில் அவளே அடுத்து என்னவென முடிவு செய்யட்டும் என்று இவர்கள் காத்திருக்க.. இப்போது நந்தினி வேலை தேடுவதாக வந்து நிற்கிறாள்.
அவளுக்காக அதேபோல் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக உருவாக்கித் தரவும் அபிராமி தயார் தான். ஆனால் அதை சொல்லி நந்தினியின் முயற்சியிலும் விருப்பத்திலும் தலையிடுவது சரியில்லை என்று நினைத்தவராக, அமைதியாகவே “சரி நல்லபடியா போயிட்டு வாடா, உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்..” என்றார்.
நந்தினியும் எப்படியாவது தனக்கு இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே கேப் பிடித்து மெட்ரோ ஸ்டேஷனுக்குச் சென்று இறங்கினாள்.
அதேநேரம் குளித்து தயாராகி கீழே வந்த மானஸாவை அன்போடு வரவேற்று அபிராமி சாப்பிட வைத்தார். அதன் பின் மெதுவாக அங்கிருந்த பைகளை சுட்டிக்காட்டி அவர் விவரம் சொல்லவும், அதைச் சென்று எடுத்துப் பார்த்தவள் உள்ளிருந்தவைகள் எல்லாம் அவளுக்கு தேவையானவைகளாக மட்டுமே இருக்க.. சிறு தயக்கத்தோடு திரும்பி அபிராமியை பார்த்து “இதெல்லாம் இங்கே இருக்கட்டுமா ம்மா..? நான் இதையெல்லாம் எடுத்துக்கலாமா..!” என்றாள்.
அதில் புன்னகையோடு அவளின் தலையை அன்பாக வருடிவிட்டவர் “இது என்னடா கேள்வி.. இதெல்லாம் உனக்கு தேவைன்னு தானே, உங்க அம்மா கொண்டு வந்து கொடுத்திருக்காங்க.. அப்புறம் என்ன என்கிட்ட அனுமதி எல்லாம் கேட்கறே, உனக்கு என்ன தோணுதோ செய்..” என்று விட்டு அவர் எழுந்து உள்ளே சென்றுவிட, தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள் மானஸா.
இங்கு மெட்ரோ ஸ்டேஷனில் நந்தினி தனக்கான ட்ரெயின் வருவதற்காக காத்திருக்க.. அவளின் விழிகள் சுற்றுப்புறத்தை மெதுவாக அலசியது. இது அவளின் முதல் மெட்ரோ பயணம். பெரும்பாலும் காரிலேயே செல்வதால் மெட்ரோவில் செல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு வந்ததில்லை.
அதில் அந்த இடம் அங்கு வரும் மக்கள் என்று அனைத்தையும் நந்தினி பார்த்துக் கொண்டிருக்க.. திடீரென அவள் விழிகள் ஒரு இடத்தில் நிலையாக அப்படியே நின்றது. அங்கு விநாயக், ஒரு பெண்ணுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தான்.
ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து மாடர்னாக அவள் இருந்தாள். இருவரும் எதையோ தீவிரமாக பேசியபடியே வர, அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. ‘இது தான் அவருக்கு அவசர வேலையா..? இந்த பொண்ணை பார்க்க தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்தாரா..!’ என்று மனதிற்குள் கேள்வி எழ, கோபமாக அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நந்தினி.
அதேநேரம் விநாயக்கும் அவளை பார்த்திருக்க.. அவன் புருவங்கள் கேள்வியாக வளைந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் நேராக அவளிடம் வந்து நின்றவன், “என்ன இங்கே..?” எனவும், “ஒரு வேலை விஷயமா போயிட்டு இருக்கேன்..” என்ற நந்தினியின் பார்வை அவன் அருகில் நின்ற பெண்ணின் மேல் ஒருமுறை படிந்து மீண்டது.
சரி என்ற தலையசைப்போடு நின்ற விநாயக் அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அதேபோல் அவன் ஏன் இங்கே வந்தான் என்பதையும் சொல்லவில்லை. இதில் நந்தினிக்கு லேசான மனசுணக்கம் உண்டானது.
‘என்கிட்ட மட்டும் ஏன் என்னன்னு கேட்டாங்க.. அவங்க மட்டும் எதுவும் சொல்லலை, என்கிட்ட ஏன் சொல்லணும்னு நினைக்கிறாங்களா..?’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டவளாக விநாயக்கை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள் நந்தினி.
ட்ரெயின் வருகிறதா என்று பார்ப்பது போல் நின்றிருந்தாலும் விநாயக் அவளின் முக திருப்பலை கவனித்தே இருந்தான். ‘உனக்கும் நான் ஏன் இங்கே வந்தேன்னு தெரிஞ்சுக்கணும்னா, வாயை திறந்து என்கிட்ட கேளு.. நான் உன்கிட்ட கேட்டேன் இல்லை, அதே போல..!’ என்று நினைத்தவன் தானாக எதையும் சொல்லவே இல்லை.
இதில் தவிப்பாக நந்தினி அவர்கள் இருவரையும் பார்ப்பதும் பின் பார்வையை திருப்பிக் கொள்வதும் மீண்டும் அடுத்த நொடியே பார்ப்பதும் என்று நின்றிருக்க.. அவர்கள் செல்ல வேண்டிய ட்ரெயினும் அங்கு வந்து சேர்ந்தது.
மூவரும் அதில் ஏறிக்கொள்ள.. காலை நேரம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே கூட்டம் இருந்தது. இன்று வேலைக்கு செல்லும் பலர் அதிகம் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து இது என்பதால் நெருக்கியடித்து நின்றிருந்தனர்.
நந்தினிக்கு இது முதல் அனுபவம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சிரமத்தை அனுபவித்தாள். எங்கே பிடித்து எப்படி நிற்க வேண்டும் என்பதில் தொடங்கி, மற்றவர் நகர்ந்து செல்லும் போது இடித்து விட்டு செல்வதில் தடுமாறி விழாமல் நிற்பது வரை அவளுக்கு எல்லாமே சிரமமாக தான் இருந்தது.
இதை கவனித்திருந்த விநாயக், சட்டென அங்கு இருந்த கம்பிக்கு அருகில் நந்தினியை நகர்த்தி நிறுத்தி அவளுக்கு இருபுறமும் தன் கையை அணைவாக வைத்துக் கொண்டான். இப்போது அவன் கை வளைவுக்குள் நிற்பது போல் நந்தினி விநாயக் முகத்தைப் பார்த்தபடி நின்றிருக்க.. அவன் பார்வையும் அவள் முகத்தில் தான் பதிந்திருந்தது.
அந்தக் கூட்டத்தில் இது மற்றவர் பார்வைக்கு வித்தியாசமாக தெரியாது என்றாலும் நந்தினிக்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஏதோ இருவரும் இத்தனை பேர் முன்பு நெருங்கி நின்றிருப்பது போல் இருக்க.. விழிகளை தயக்கமாக சுழற்றினாள் நந்தினி.
அவள் மனதை உணர்ந்தது போல் மெல்லிய புன்னகையோடு பார்வையை திருப்பிக் கொண்டவன், அப்படியே பயணிக்க.. அவர்களுக்கு அருகில் நின்றிருந்த யாராவது ஒருவர் அவ்வப்போது அசைந்தோ, இடித்தோ இவர்களை மேலும் நெருங்கி நிற்க செய்து கொண்டிருந்தனர்.
அதில் அவ்வப்போது இருவரின் உடல்களும் லேசாக உரசி கொண்டிருக்க.. அவர்கள் முகங்கள் அத்தனை நெருக்கமாக வந்தது. நூலிழை இடைவெளியில் இருவரின் இதழ்களும் இருக்க.. நந்தினிக்கு தான் அந்த நொடிகள் பெரும் தவிப்பை அவளுள் விதைத்துக் கொண்டிருந்தது.
நந்தினி விழிகளை உயர்த்தி அவனை பார்க்கவும், விநாயக் இதழ்களில் ரகசிய புன்னகை நெளிந்தது.
வண்டி செல்லும் வேகத்தில் அவள் மேல் விநாயக் அழுத்தமாக உரசி விலக.. நந்தினிக்கு பெரும் அவஸ்தையானது. அவளின் நிலை புரிந்தாலும் கொஞ்சமும் விலகாமல் அப்படியே நின்று அவளை மேலும் சோதித்து கொண்டிருந்தான் விநாயக்.
இதில் நந்தினி இயல்பாக நிற்க முடியாமல் தடுமாறி, பாதத்தை அழுந்த ஊன்றி தன்னை சமாளித்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருக்க.. அதை கண்டு கொண்டவனோ அவ்வபோது வேண்டுமென்றே நந்தினியின் கன்னத்தோடு கன்னம் இழைய விட்டு அவளின் தவிப்பை ரசித்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் இதற்கு மேல் முடியாது என தோன்றினாலும் அவளுக்கு விலக தோன்றவில்லை. தன்னவனின் இந்த நெருக்கம் இன்னும் இன்னும் வேண்டுமென மனம் சண்டித்தனம் செய்ய.. அவனை அப்படியே அணைத்து கொள்ள பரபரத்த மனதை அடக்க வெகுவாக சிரமபட்டுப் போனாள் நந்தினி.
அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி யூடியூப்பில் பாடல்களை மெல்லிய சத்தத்தில் கேட்டு கொண்டிருந்தவர், திடீரென நந்தினியின் மனதை பிரதிபலிப்பது போல் அடுத்த பாடலை ஒலிக்க செய்தார்.
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே …ஏ…மனம் ஏங்குதே
மீண்டும் வாழ.. மனம் ஏங்குதே
அந்தப் பாடல் அவளின் நிலையை மேலும் சோதிக்க.. அவனை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை இங்கும் அங்கும் அலைய விட்டவள், விநாயக் பார்வையில் உண்டான உறுத்தலில் மெல்ல விழிகளை உயர்த்த.. அந்த கண்களில் அத்தனை குறும்பு கொப்பளித்தது.
அவனின் விழிகளில் ஈர்க்கப்பட்டவர்களாக அப்படியே அசையாமல் அவன் முகத்தை பார்த்தபடியே நந்தினி நின்றுவிட, திடீரென விநாயக்கின் ஒரு கரம் நந்தினியின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து இழுத்தது. இதில் திடுக்கிட்டவளாக அவள் சுற்றும் முற்றும் பார்க்க.. “இப்படியே நிற்க எனக்கும் ஆசை தான், ஆனா அடுத்து நாம இறங்கணுமே..!” என்றான் அவளின் காது மடலில் லேசாக தன் இதழ்கள் உரச விநாயக்.
இதில் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல் நந்தினி அவன் சொல்வதை எல்லாம் செய்ய.. அவளை பத்திரமாக தன் கை வளைவிலேயே வைத்து ட்ரெயினில் இருந்து கீழே இறக்கி விட்டிருந்தவன், “ஓகே நீ கிளம்பு, வீட்டுக்கு திரும்ப போகும் போது கேப் புக் செஞ்சுக்கோ.. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது, டேக்கேர்..” என அவளிடம் சொல்லி கையசைத்து விட்டு திரும்பினான் விநாயக்.
அதே நேரம் விநாயக்கோடு வந்திருந்த பெண் சற்று தள்ளி நின்று அவனிடம் சைகையில் ஏதோ சொல்ல.. அதன் பின் வேறு எந்த பேச்சும் இல்லாமல் வேகமாக அந்தப் பெண்ணை நோக்கி விநாயக் நகர.. அந்த நொடி இவர்களை பார்த்து விட்டு அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் அவசரமாக ஓடுவது தெரிந்தது.
அவர்களை இரு பக்கமும் இருவரும் விரட்டிக் கொண்டு ஓட.. அதன் பின்பே அந்தப் பெண்மணியும் போலீஸ் என்று புரிய.. ‘அப்போ வேலை விஷயமா தான் வந்திருக்காங்களா..!’ என்று நினைத்துக் கொண்டவளாக மெல்ல நடக்க தொடங்கினாள் நந்தினி.