All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 528
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 16
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 1 day ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 528
Topic starter  
1784177780-IMG-20260716-WA0002.jpg
 
 
மௌனம் - 17
 
வேதவல்லியின் இரண்டாவது மகன் ராஜேந்திரன் ரகோத்தமன் போல் குணம் கொண்டவன் இல்லை. எளிதாக சொல்வது என்றால் வேதவல்லியின் ஆண் உருவம் என்று சொல்லலாம்.. 
 
 
தனக்குத் தேவை என்றால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ரகம். இந்த உலகில் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்ளும் ஜீவன்.
 
 
அவர்கள் இருப்பதோ திரைத்துறை. எல்லாம் எளிதாக கிடைக்கக்கூடிய இடம்.. ஒரு சிலர் எந்த எல்லைக்கும் சென்று தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய துறை.
 
 
ரகோத்தமன் எப்படி இந்த விஷயத்தில் கொஞ்சமும் சறுக்காமல் இன்றுவரை தன் வாழ்க்கையை சீராக கொண்டு செல்கிறாரோ.. அதற்கு நேர் எதிரான வாழ்க்கை முறை தான் ராஜேந்திரனுடையது.
 
 
மது, மாது என்று அவன் தனி ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்க.. ஆரம்பத்தில் இதெல்லாம் நமக்கு சரிவராது என்று சொல்லி திருத்த முயன்ற ராதாகிருஷ்ணன் கூட அவன் இனி திருந்தாத பிறவி என்று புரிந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தான்.
 
 
அதிசயத்திலும் அதிசயமாக ஊரில் உள்ள அத்தனை பேரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்கும் வேதவல்லி தன் இளைய மகனை இந்த விஷயத்தில் கண்டிக்கவே இல்லை. ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான் போகப் போக சரியாகிவிடும், இல்லை அவனுக்கென ஒரு வாழ்க்கை அமைந்தால் தானாக மாறி விடுவான் என்று அக்மார்க் அம்மாவாக மாறி உளறிக் கொண்டிருந்தார்.
 
 
இது எந்த நிலைக்குச் சென்றது என்றால் தன் தேவைக்கோ இல்லை வேறு வழி இல்லாமலோ வாய்ப்புக்காக வளைந்துக் கொடுக்கும் நடிகைகளில் தொடங்கி பின் தன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்றாலே தன்னை தனியே கவனிக்க வேண்டும் என்று நடிகைகளை நிர்பந்திக்கும் நிலைக்கு மாறி இருந்தார் ராஜேந்திரன்.
 
 
இதெல்லாம் அரசல் புரிசலாக தெரியவந்த போது ரகோத்தமன் கண்டிக்க முயல.. அவரை துளியும் மதிக்காமல் வார்த்தைகளில் வரைமுறையில்லாமல் அவன் பேசியதில் வெறுத்து ‘உன் வாழ்க்கை, உன் விருப்பம்’ என்பது போல் எப்படியோ போ என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார் ரகோத்தமன்.
 
 
இந்த நிலையில் தான் மலையாளத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த காவ்யாவை ரகோத்தமன் தன் அடுத்த படத்தின் நாயகியாக தேர்வு செய்திருந்தார்.
 
 
இருபது வயதேயான இளம் பெண். கேரள மண்ணுக்கே உரிய பொலிவும் அழகும் காவ்யாவினிடத்தில் கொட்டிக்கிடந்தது. முதல் படம் நடித்து முடிப்பதற்கு முன்பே தமிழில் அவருக்கு நான்கு படங்கள் முன்பதிவு ஆகி இருந்தது.
 
 
அந்த அளவு அழகும் திறமையும் உள்ள நடிகை காவ்யா. பெண் என்று ஒரு பொம்மைக்கு சேலை கட்டி நிற்க வைத்தாலே இமைக்காமல் அதை பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜேந்திரன் இத்தனை அழகு பதுமையாக தங்கள் நிறுவனத்தில் ஒரு பெண் நடித்துக் கொண்டிருக்கும் போது சும்மாவா இருப்பார்..
 
 
ஆனால் உலக மகா அதிசயமாக யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்கு அவரின் ஆசை அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாறி இருந்தது. இருவருக்கும் கிட்டத்தட்ட பனிரெண்டு வயது வித்தியாசம் இருந்தது.
 
 
அதில் அடிக்கடி காவ்யாவை படப்பிடிப்பு தளங்களிலோ இல்லை தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் போதோ சந்தித்து ராஜேந்திரன் பேச.. ரகோத்தமனின் தம்பி என்ற முறையிலும் அவரும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பவர் என்ற முறையிலும் இயல்பாகவே பேசி பழகத் தொடங்கினார் காவ்யா.
 
 
இப்படியே சில நாட்கள் செல்ல.. ராஜேந்திரன் தன் விருப்பத்தை காவ்யாவிடம் தெரிவிக்க.. அவரோ பெரும் திகைப்போடு அடுத்த நொடியே அதை மறுத்தார். ஏனெனில் மலையாள திரை உலகின் துணை இயக்குனராக வளர்ந்து கொண்டிருக்கும் ஜிதின் என்பவனை காதலித்துக் கொண்டிருந்தார் காவ்யா.
 
 
இதை அறிந்த நொடி கோபமாக காவ்யாவை பார்த்த ராஜேந்திரன் “உனக்கு விருப்பமான்னு எல்லாம் நான் கேட்கலை, நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கறேன்.. நம்ம கல்யாணம் கூடிய சீக்கிரம் நடக்கும் அவ்வளவுதான்..” என்று சிறு மிரட்டலாகவே சொல்லிவிட்டு செல்ல.. திரைத்துறையில் இது போலான பல இடைஞ்சல்களை சந்தித்துக்கொண்டிருந்த காவ்யா இதையும் அது போல் ஒன்றாகத்தான் அப்போது பார்த்தார்.
 
 
ஆனால் நாளாக ஆக ராஜேந்திரனின் தொந்தரவு அதிகமாக தொடங்கியதில் ரகோத்தமனிடம் சென்று தன் நிலையை விளக்கினார் காவ்யா. இதில் அவரை கவலைப்பட வேண்டாம் எனக் கூறிய ரகோத்தமன் தன் தம்பியை அழைத்து கண்டிக்க முயல.. “என் வாழ்க்கையில் நீ தலையிடாதே.. உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கிட்ட இல்லை, அதேபோல என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்..” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிச் சென்று விட, ராதாகிருஷ்ணனுக்கு விவரத்தை தெரிவித்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் ரகோத்தமன். 
 
 
தன் கணவன் மூலம் விவரம் அறிந்த வேதவல்லி மகனை கூப்பிட்டு விசாரிக்க.. “அதெல்லாம் எதுவும் இல்லை ம்மா.. எல்லா நடிகைகளையும் போல தான் கொஞ்ச நாள் பழகிட்டு நான் கழட்டி விட்டுடுவேன்.. ஆனா இவ ஓவர் சீன் போடுறா, அதான் கொஞ்சம் நானும் விளையாடி பார்க்கறேன்..” என்று அவர் சொல்லிச் சென்றிருக்க.. அதை உண்மை என்று நம்பிக் கொண்ட வேதவல்லியும் அதன் பின் ராஜேந்திரனை கண்டு கொள்ளவில்லை. 
 
 
இதில் நாளுக்கு நாள் ராஜேந்திரனின் தொல்லை அதிகமாகிக் கொண்டே செல்ல.. செய்வதறியாது திகைத்த காவ்யா ரகோத்தமன் நிறுவனத்தில் நடிக்கும் படம் முடிவடைந்த உடனேயே தன் காதலனை கேரளாவில் மணந்து கொண்டிருந்தார்.
 
 
யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென கோவிலில் வைத்து நடந்து முடிந்து இருந்த திருமணத்தைப் பற்றிய செய்தியை கண்ட நொடி ராஜேந்திரன் பெரும் ஆத்திரத்திற்கு ஆளானார். 
 
 
இதுவரை அவரின் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்த நடிகைகளை மட்டுமே அதிகம் பார்த்திருந்த ராஜேந்திரனுக்கு காவ்யாவின் மறுப்பே பெரும் கோபத்தை தூண்டி விட்டிருக்க.. அதில் தான் ‘உன்னை என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து காண்பிக்கிறேன் பார்..!’ என்கிற ரீதியில் அதன் பின்னான அவரின் அத்தனை செயல்களும் இருந்தது.
 
 
இதில் இப்போதே வாழ்க்கையில் சாதிக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒன்றும் இல்லாத ஒரு துணை இயக்குனரை காதலித்து தன்னை வேண்டாம் என்று காவ்யா மறுத்தது ராஜேந்திரனின் தன்மானத்தை சீண்டி விட்டிருந்தது. ‘தன் பண பலம் என்ன..? பின்புலம் என்ன..? தன்னை ஒருத்தி வேண்டாம் என்பதா..!’ என்ற கண்மண் தெரியா ஆத்திரமே காதல் என அவரை நம்ப வைத்திருந்தது. 
 
 
அதில் காவ்யா மறுக்க எந்த வகையிலும் அவகாசமோ வாய்ப்போ கொடுக்கவே கூடாது என்று நினைத்து தன்னை சுற்றி இருப்பவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் காவ்யா தான் தன் வருங்கால மனைவி என்று வேண்டுமென்றே அவர் பரப்பிக் கொண்டிருக்க.. அதற்கு காவ்யாவின் இந்த பதிலடி அவர் கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது.
 
 
இதில் உண்டான அவமானத்தில் அடுத்தவரை எப்படி எதிர்கொள்வது என தெரியா மனநிலையோடு ராஜேந்திரன் அறைக்குள்ளேயே முடங்கிக் கொள்ள.. இத்தனை நாள் அவர் போட்ட ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களும், இவனுக்கு இப்படி ஒரு நிலையா என்று நினைத்தவர்களும், இவனுக்கு இதெல்லாம் நல்லா வேண்டும் என சந்தோஷித்தவர்களும் மாறி மாறி அவரை அலைபேசியில் அழைத்து அக்கறையாக பேசுவது போலும் நலம் விசாரிப்பது போலும் இதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க.. இது தன் வாழ்நாளில் மிகப்பெரிய கரும்புள்ளி என்று நினைத்த ராஜேந்திரன் முட்டாள்தனமாக முடிவெடுத்து அன்று தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருந்தார்.
 
 
அவருடையது காதலும் இல்லை அதில் அவர் தோல்வி அடையவும் இல்லை என்று தெரியாமலேயே தன் மூர்க்க தனத்திற்கும் முட்டாள் தனத்திற்கும் அவர் உயிரை பலி கொடுத்திருக்க.. மானஸாவின் போதாத நேரமாக அன்று தான் அவள் பிறந்திருந்தாள்.
 
 
மருத்துவமனையில் குடும்பத்தோடு அனைவரும் காத்திருக்க.. உள்ளே இருந்து பெண் குழந்தை பிறந்திருப்பதாக நர்ஸ் வந்து சொல்லிய அதே நேரம் இங்கு ராதாகிருஷ்ணனின் அலைபேசி அலறியது. அதை எடுத்தவர் தன் அலுவலக அறையிலேயே ராஜேந்திரன் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தியை கேட்டறிந்து அங்கேயே நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விட்டார்.
 
 
தன் வளர்ப்பு இங்கு சரியில்லாமல் போனதின் பலனாக ராஜேந்திரன் உயிரை மாய்த்துக் கொண்டதை புரிந்து கொள்ளாத வேதவல்லி முட்டாள்தனமாக மானஸா பிறந்த நேரம் தன் ஆருயிர் மகன் இந்த உலகை விட்டு சென்று விட்டதாக மூடத்தனமாக நம்பினார்.
 
 
அதோடு ராதாகிருஷ்ணனும் நெஞ்சு வலியில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட, தன் மகனையும் கணவனையும் ஒரே நாளில் பலி கொடுக்க பிறந்தவள் மானஸா என்று ஒன்றுமறியா அந்தப் பிஞ்சின் மேல் பழியை சுமத்தி அவளை இல்லாத கொடுமைகள் எல்லாம் செய்யத் தொடங்கினார் வேதவல்லி.
 
 
சின்ன குழந்தை என்றும் பாராமல் வார்த்தைகளால் தினமும் மானஸாவை வேதவல்லி வதைக்க தொடங்கி இருக்க.. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ரகோத்தமன் கோபமாக வேதவல்லியை கத்திவிட்டு இருந்தார்.
 
 
இதுவரை தன்னை இப்படியெல்லாம் பேசாத மகன் இன்று தனக்கு எதிராக நின்று குரலை உயர்த்தி பேசுவது கூட இவள் பிறந்த நேரம் தான் என்று புரிந்து கொண்ட வேதவல்லி மூச்சை பிடித்துக் கொண்டு பெருங்குரல் எடுத்து கத்தியதில் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
 
 
அதில் பதறி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி கொண்டு வரவே பத்து நாள் போராட்டமாகிப்போனது. அப்போதே தம்பியையும் அதன் பின் அந்த கவலையிலேயே தந்தையையும் இழந்து இருந்த ரகோத்தமனுக்கு அடுத்து அன்னையையும் இழந்து விடுவோமோ என்ற பயம் மனதில் பரவ.. மருத்துவர்கள் சொல்லியிருந்தது போல் அவர் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் பின் வாயையே திறக்காமல் இருக்க பழகிக் கொண்டார். 
 
 
முன்பே சித்ராவும் புஷ்பாவும் வேதவல்லியின் முன் அப்படித்தான். இப்போது அந்த பட்டியலில் ரகோத்தமனும் இணைந்து கொள்ள.. தன்னைக் கேட்க இனி யார் என்ற பெரும் திமிரோடு வேதவல்லியின் அராஜகமும் அதிகாரமும் அங்கு கோள்ளோச்ச தொடங்கியது. 
 
 
இதில் அப்போதே நடைப்பழகத் தொடங்கி இருந்த குழந்தை தன் எதிரில் வந்தாலே அவளை அபசகுணம் தன் உயிரையும் எடுக்க பார்க்கிறாள் என்றெல்லாம் தினமும் அவர் பேசிக்கொண்டே இருந்ததை கேட்க முடியாமல் மானஸாவை ஊட்டி கான்வென்டில் கொண்டு போய் சேர்த்து விட்டிருந்தார் ரகோத்தமன்.
 
 
இதில் புஷ்பாவுக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால் இப்படியே குழந்தை தினமும் அவரின் வெறுப்பை எதிர்கொண்டு வளர்வது சரி இல்லை என்று புரிய வைத்து, புஷ்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்திருந்த ரகோத்தமனுக்கும் சிறு பிள்ளையை இப்படி விட்டுப் பிரிந்து இருக்க வேண்டியதை எண்ணி வருத்தமாகத்தான் இருந்தது. 
 
 
ஆனால் அவருக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதில் பள்ளிப் பருவம் முழுக்க மானஸா விடுதியில் தங்கி தான் படித்தாள். எப்போதாவது விடுமுறைக்கு வரும் நாட்களில் கூட அவளுக்கு வீடு என்பது பெரும் நரகம் தான். 
 
 
சிறுவயதில் புரியாமல் தானாக வேதவல்லியின் முன் சென்று நின்று பலமுறை அவரின் வெறுப்பையும் தீயில் தோய்த்தது போலான வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டு காரணமே புரியாமல் அழுது கொண்டிருந்தவளுக்கு ஓரளவு வளரத் தொடங்கிய பின் காரணம் புரிந்ததில் வேதவல்லியின் முன் வருவதையே முழுவதுமாக தவிர்க்க தொடங்கி விட்டாள் மானஸா.
 
 
அவள் வீட்டில் இருந்தால் பெரும்பாலும் தன் அறைக்குள்ளேயே தான் முடங்கி கிடப்பாள். எங்காவது கிளம்பி செல்ல வேண்டும் என்றால் மட்டுமே அறையில் இருந்து வெளியில் வருபவள், அப்போதும் கூட புஷ்பாவிடம் வேதவல்லி வரவேற்பறையில் இல்லை என்பதை பத்து முறையாவது கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே வருவாள்.
 
 
அப்படியே நாட்கள் செல்ல.. பள்ளி படிப்பை முடித்துவிட்டு இதோ கல்லூரியில் அவள் சேர்ந்த பிறகும் தன் தந்தையிடம் கேட்டது வெளியூரில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்படி தன்னை சேர்த்து விடுமாறு தான்.. ரகோத்தமனுமே அப்படித்தான் நினைத்திருந்தார். ஆனால் புஷ்பா தான் இந்த முறை இது வேண்டாமென்று முடிவாக நின்றார். 
 
 
இன்னும் மூன்று நான்கு வருடங்கள் மட்டுமே மகள் தங்களோடு இருக்கப் போகிறாள். அதன் பின் திருமணம் செய்து இன்னொரு வீட்டிற்கு தான் அனுப்ப வேண்டும்.. அதுவரையாவது அவள் என்னோடு என் வீட்டில் இருக்கட்டும் என புஷ்பா கேட்கும் போது அதை ரகோத்தமனால் மறுக்க முடியவில்லை.
 
 
ஆனால் மானஸா மறுத்தாள். அவளுக்குமே தன் பெற்றோரோடு தன் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைகள் நிறையவே இருந்தாலும் அதையும் மீறி வேதவல்லியை பற்றிய பயம் தான் நிறைய இருந்தது. அதில் அவள் மறுக்க புஷ்பா கெஞ்ச என்று பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் தன் பெற்றோரின் ஆசைக்காக இங்கு இருக்க சம்மதித்தாள் மானஸா.
 
 
பெரும்பாலும் விடுதியிலேயே தங்கி இருந்ததால் அவளுக்கு அபிராமி பற்றியோ விநாயக் பற்றியோ தெரிய வராமலே இருந்தது. மானஸா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது விடுமுறைக்கு வந்திருந்த நேரத்தில் ரகோத்தமனோடு அவள் வெளியில் சென்றிருக்க.. அங்கு அபிராமியும் விநாயக்கும் வந்திருந்தனர். 
 
 
அவர்களை சற்று தள்ளி மறைவாக நின்று பெரும் நெகிழ்வோடு ரகோத்தமன் பார்த்துக் கொண்டிருக்க.. ‘யார் இவர்கள்..?’ என்று புரியா குழப்பத்தோடு அவர் அருகில் நின்றிருந்தாள் மானஸா.
 
 
அந்த நேரத்தில் அபிராமி கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து தேறி வந்திருந்தார். அதில் லேசாக உடல் மெலிந்து கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு அன்று வெளியில் வந்திருந்தவரை கண்ட ரகோத்தமன் பெரிதாக உணர்ச்சி வசப்பட்டு இருந்ததின் விளைவாக அவரின் கண்கள் கூட லேசாக கலங்கி இருந்தது.
 
 
இதில் “யாருப்பா அவங்க..?” என மானஸா அவர்களையே பார்த்தபடி கேட்டு விட்டு இருக்க.. “உனக்கு தெரியாது இல்லை, அது தான் உன் அண்ணா.. இது உன் பெரியம்மா..” என்று அறிமுகம் செய்து வைத்தார் ரகோத்தமன். “என்ன அண்ணாவா..! எனக்கு நிது அண்ணா மட்டும் தான்..” என அவள் தொடங்கவும் “இல்லை, இவன் தான் பெரியவன் நிதினுக்குமே இவன் அண்ணா தான்..” என்றவரை அவள் குழப்பமாக பார்க்க.. “இன்னொரு நாள் அப்பா உனக்கு விளக்கமா சொல்றேன்..” என்று கூறியிருந்தார் ரகோத்தமன்.
 
 
மகள் விடுமுறைக்கு வரும் நேரங்களில் புஷ்பா எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மானஸாவை வீட்டில் இருக்க அனுமதிப்பவர், மற்ற நேரங்களில் பெரும்பாலும் தன்னோடு தயாரிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்.
 
 
அங்கு அவளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.. தன் மனம் போல் ஏதாவது வரைந்து கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு நேரத்திற்கு சாப்பிட்டு அங்கேயே உறங்கிக் கொண்டிருப்பவளை மாலை தான் வீட்டிற்கு அழைத்து வருவார் ரகோத்தமன். 
 
 
அந்த வார இறுதியில் அதேபோல் மீண்டும் மகளை அவர் அழைத்துக் கொண்டு செல்ல.. எதிரில் தன் இரு சக்கர வாகனத்தில் விநாயக் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் மானஸா ரகோத்தமனை அழைத்து “அப்பா அங்கே பாருங்க அண்ணா..” என்று காண்பிக்க.. “எங்கே..?” என்று ஆர்வமாக திரும்பி பார்த்தார் ரகோத்தமன். 
 
 
ஒரு நொடியில் வேகமாக அவர்களை அவன் கடந்து சென்று விட்டிருந்தாலும் இன்று அவனை இந்த நொடி பார்த்ததே போதும் என்பது போல் அவர் முகம் மலர்ந்து இருந்தது. அதை கண்டு “உங்களுக்கு அண்ணாவை ரொம்ப பிடிக்கும் இல்லைப்பா..” என மானஸா கேட்டிருக்க.. அவள் தலையை ஆதூரமாக பிடித்து அசைத்தவர் “என் குட்டி பொண்ணுக்கு இவ்வளவு தெரியுதா..!” என்றார்.
 
 
“உங்க குட்டி பொண்ணுக்கு அவங்க அப்பாவை நல்லா தெரியும், அவருக்கு எது பிடிக்கும்னு என்னால் புரிஞ்சுக்க முடியும்..” என்று அவள் சொல்லவும் தன் தோளோடு சேர்த்து மகளை பிடித்துக் கொண்டவர், அன்று அலுவலகத்தில் வைத்து தான் அவர் வாழ்வில் நடந்தவை பற்றி எல்லாம் அவள் வயதுக்கு எவ்வளவு சொல்ல வேண்டுமோ.. எவ்வளவு சொன்னால் புரியுமோ அதை மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தார். 
 
 
ஆனால் அதற்கே அத்தனை திகைப்போடு அமர்ந்து விட்டிருந்தாள் மானஸா. இவ்வளவிலும் அவள் மனதில் பதிந்தது விநாயக் தன் பெரிய அண்ணன், தந்தைக்கு மிகவும் பிடித்தமானவன், தன்னைப்போலவே வேதவல்லிக்கு விநாயக்கையும் பிடிக்காது, தன்னை போலவே தந்தையை விட்டு பிரிந்து வளர்கிறான் என்பது மட்டுமே..!
 
 
இப்படியே நாட்கள் செல்ல.. எப்போதாவது எங்காவது வெளியில் செல்லும் போது ஓரிருமுறை தூரத்தில் இருந்து விநாயக்கை பார்த்திருக்கிறாள் அவ்வளவுதான்..
 
 
அடுத்த வருடம் அவள் விடுமுறையில் வந்திருந்த போது அவளின் பள்ளி தோழி ஸ்ரீக்கு பிறந்தநாள். தன்னோடு விடுதியில் தங்கி படிக்கும் நெருங்கிய தோழி அவள், அதனால் அங்கு சென்றாக வேண்டும் என மானஸா நினைக்க.. பிறந்தநாள் பார்ட்டியோ இரவு எட்டு மணிக்கு தான் தொடங்குவதாக இருந்தது. 
 
 
அனைத்தும் முடிய பதினொரு மணிக்கு மேல் ஆகிவிடும் என ஸ்ரீ கூறவும், “அவ்வளவு நேரம் எல்லாம் என்னால் இருக்க முடியாது ஸ்ரீ, கேக் வெட்டி முடிக்கவும் கிப்ட் கொடுத்துட்டு நான் கிளம்பறேன்..” என்று மானஸா சொல்லவும், “அதெல்லாம் முடியாது, என் பார்ட்டிக்கு வந்துட்டு சாப்பிடாம போவியா நீ..? அப்போ உன் கிப்ட்டும் எனக்கு வேண்டாம்..” என அவள் கோபித்துக் கொள்ளவும் வேறு வழியில்லாமல் இறுதிவரை இருப்பதாக சம்மதித்தாள் மானஸா.
 
 
ஸ்ரீயின் தந்தை அரசியலில் பெரும் புள்ளி. பிறந்தநாள் விழாவும் மிகப் பெரிய அளவில் தான் ஏற்பாடாகி இருந்தது. அவரின் கடற்கரை பங்களாவில் பார்ட்டி நடந்து கொண்டிருக்க.. அதையெல்லாம் சற்று வியப்பாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா.
 
 
அவள் வீட்டில் இப்படி பிறந்தநாள் பார்ட்டி எல்லாம் கொண்டாடியது இல்லை. வசதிக்கு குறைவில்லை என்றாலும் கொண்டாட்டங்கள் அங்கு குறைவே..! சிறு வயதிலேயே விநாயக் தன் பிறந்த நாளை கொண்டாட விரும்பாமல் மறுத்து விட்டிருக்க.. அதன் பின் நிதினுக்கு மட்டும் அப்படி செய்வது சரியாக இருக்காது என்று நினைத்த புஷ்பா கோவிலில் பூஜை கொடுத்து விடுவார். 
 
 
மானஸாவின் பிறந்தநாளை எப்படியும் வேதவல்லி கொண்டாட விடமாட்டார்.. அதோடு அவளின் பிறந்தநாள் பெரும்பாலும் பள்ளி நாட்களில் வருவதால் ரகோத்தமனும் புஷ்பாவும் கிளம்பி சென்று அவளோடு இருந்து அங்கேயே பிறந்த நாளை சிறிய அளவில் கொண்டாடி விட்டு வருவார்கள்.. 
 
 
இதில் இத்தனை பெரிய மனிதர்களை அழைத்து பெரும் கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த பிறந்தநாள் பார்ட்டியை அவள் புதிதாக பார்த்துக் கொண்டிருக்க.. “ஹே சாரி மானு, உன்னை தனியா விட்டுட்டேனா..!” என்று வந்து நின்றாள் ஸ்ரீ. 
 
 
“அதெல்லாம் இல்லை ஸ்ரீ, நீ போ உன் கெஸ்ட்டை பார்.. நான் இங்கே ஓகே தான்..” என அனுப்பி வைத்தவள், தனக்கென கொடுக்கப்பட்ட பழச்சாறுடன் சற்று தள்ளி ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
மானஸா இங்கு இன்று வர முக்கிய காரணமே பெரும்பாலும் வீட்டில் இருக்க அவள் விரும்புவதில்லை என்பதாலேயே..! வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே வீட்டில் இருப்பாள். அவளின் மிக நெருங்கிய தோழி ஸ்ரீ, அவளின் பிறந்தநாள் விழாவுக்கு வரவில்லை என்றால் நன்றாக இருக்காது என்பதோடு, அவளுக்கும் சில மணி நேரங்கள் அந்த வீட்டில் இருந்து வெளியில் இருக்க கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு இது.. 
 
 
அதனாலயே நேற்று ரகோத்தமனிடம் கேட்ட போது கூட அவர் “என்ன அவ்வளவு நேரமா..?” என்று திகைத்தவர், “கேக் வெட்டி முடிச்சதும் கிளம்பி வந்துடு கண்ணா..” என்றார். 
 
 
“இல்லைப்பா ஸ்ரீ கோவிச்சுக்குவா.. நான் அங்கேயே இருந்துட்டு வரேன்..” என்றதும் “வீட்டில் தானே இருப்பீங்க..!” என அப்போதும் ரகோத்தமன் கேட்க “வேற எங்கேப்பா நான் போக போறேன்..? வீட்டுக்குள்ளே தான் பார்ட்டி, அது முடியவும் நான் போன் செய்யறேன்.. இல்லைனாலும் நீங்க பத்து மணிக்கு மேலே டிரைவர் அங்கிளை அனுப்புங்க, நான் கிளம்பி வந்துடறேன்..” என்று அவள் வாக்கு கொடுத்து விட்டு வந்திருந்தாள். 
 
 
இதையெல்லாம் யோசித்தப்படி அவள் அமர்ந்திருக்க.. திடீரென அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. யாரோ முக்கிய அரசியல் பிரமுகர் வருகை தந்திருக்க.. குறிப்பிட்டு இருந்த நேரத்தை விட அரை மணி நேரம் முன்பாகவே கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்படவும், ஒவ்வொருவராக பரிசு பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 
 
 
அதன் பின் அங்கங்கு சிறு சிறு குழுக்களாக தனக்குத் தெரிந்தவர்களோடு விருந்தினர்கள் ஒதுங்கிவிட, பெரியவர்கள் எல்லாம் கீழ்தளத்திலும் இளைஞர்களை எல்லாம் மேல் தளத்திலும் என்று தானாகவே ஒதுங்கிக் கொண்டனர்.
 
 
இதில் பல பெரிய வீட்டு பார்ட்டிகளில் நடக்கும் அத்தனையும் பரிமாறப்பட, அதை தவிரவும் கட்டுப்பாடின்றி வளரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் போல வளர்ந்திருந்த ஸ்ரீயின் அண்ணனும் அவன் நண்பர்களும் மற்றவர் அறியாமல் எடுத்திருந்த போதை பொருள் அவர்களை வேறு ஒரு உலகத்தில் சஞ்சரிக்க செய்திருந்தது.
 
 
அப்படியே பேசி சிரித்து அமர்க்களம் செய்தபடி வெளியில் வந்தவர்களின் பார்வை அங்கு மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனியே அமர்ந்திருந்தவளின் மேல் பதிந்தது. பதினேழு வயதுக்கே உரிய அழகோடு இன்று புஷ்பா தனி கவனம் எடுத்து மகளை அலங்கரித்து அனுப்பி இருந்த வெங்காய சருகு நிற லெஹங்காவில் அழகு பதுமையாக இருந்தவளை கண்டவர்கள், ரசனையோடு பார்க்க தொடங்கி பின் அது ஆர்வமாகி, தங்களை மறந்த நிலையில் இருந்த அந்த ஐவர் குழுவை அவளை நோக்கி ஈர்த்தது.
 
 
அதேநேரம் கீழே யாரோ வந்திருப்பதாக ஸ்ரீயை அவள் அன்னை அழைத்திருக்க.. அவளும் இறங்கி சென்று விட்டிருந்தாள். அதில் மெல்ல அவளிடம் சென்று அவர்கள் பேச்சுக் கொடுக்க.. அவளோ இப்படி சட்டென யாரோடும் பழகிவிடும் குணம் உடையவள் இல்லை என்பதால் லேசாக ஒதுங்கி செல்ல தொடங்கினாள்.
 
 
அவளின் அந்த ஒதுக்கம் அவர்களை சீண்டிப் பார்த்தது. அதில் மானஸாவை வம்பு இழுக்க தொடங்கினர். அது அவளுக்கு சங்கடத்தை கொடுக்க.. மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றாள் போதும் என்ற உணர்வோடு வேகமாக எழுந்தவள், பதட்டத்திலும் அவசரத்திலும் வீட்டிற்குள் செல்லும் படியில் இறங்குவதற்கு பதிலாக வீட்டிற்கு வெளியில் செல்லும் வழியில் இறங்கி இருந்தாள்.
 
 
அது வீட்டின் பின்பக்க வாயிலாக இருந்தது மேலும் சோதனையாகி போக.. பயத்தில் மருண்டு விழித்தவள், ஆள் அரவமற்ற இடத்தில் தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க எண்ணி அங்கிருந்து வேகமாக மானஸா ஓட, அவளின் செயல்கள் எல்லாம் அவர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்ததில் போதை தலைக்கேற என்ன செய்கிறோம் என தெரியாமல் அவளை வீதியில் விரட்டிக் கொண்டு சென்றனர்.  
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 528
Topic starter  
1784177976-IMG-20260716-WA0003.jpg
 
 
மௌனம் - 18
 
இதுவரை தனியே வெளியே சென்றே பழக்கம் இல்லாத மானஸாவின் முதல் அனுபவமே மிக பயங்கரமாக இருந்தது. பயம், பதட்டம், இருள் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கலக்கம் எல்லாம் ஒன்று சேர, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வழி எந்தப் பக்கம் என்று கூட தெரியாமல் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருந்தாள் மானஸா.
 
 
அவர்களும் விடாமல் பெரும் சிரிப்பும் கேலியாமாக சத்தமாக கத்தியப்படி அவளை விரட்டிக் கொண்டிருக்க.. பயத்தில் அவளுக்கு ஏதேதோ செய்தது. “கடவுளே கடவுளே..!” என்று முணுமுணுத்தபடியே எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணீர் வழிய அவள் ஓடிக் கொண்டிருந்தாள்..
 
 
இன்று இங்கு வந்து இருக்கவே கூடாது, நல்லபடியாக வீடு போய் சேர்ந்து விட்டால் போதும் என்றெல்லாம் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தவள், இருளான ஒரு சந்தில் ஓடிக்கொண்டிருக்க.. கால் இடறி அவள் கீழே விழவும் அந்த வீதியைக் கடந்து விநாயக் நடந்து செல்வது தெரிந்தது.
 
 
அதில் தன் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி “அண்ணாஆஆஆ..” என்று பெருங்குரல் எடுத்து மானஸா கத்தி இருக்க.. அலைபேசியில் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தவன் யாரோ அழைத்தது போலான குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
 
 
அவன் பின்னே யாரும் இருப்பது போலே தெரியவில்லை. அதில் மேலும் அவன் நடக்க தொடங்கவும், அருகில் இருந்த சந்தில் இருந்து சிலர் சிரிப்பும் கேலியுமாக பேசிக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது. 
இதில் நெற்றியை சுருக்கியவன் சற்றுமுன் ஒரு பெண் குரல் கேட்டது போல் இருந்ததை எண்ணி, அப்படியே நான்கடி பின்னுக்கு நகர்ந்து சந்திற்குள் பார்க்க.. அங்கு மானஸா விழுந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ள முயன்று கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அதேநேரம் இருளில் ஒரு சிலர் அவளை நெருங்குவதும் தெரிய, நொடியில் சூழ்நிலை புரிய.. வேகமாக அங்கு விரைந்தவன் மானஸாவை கை கொடுத்து தூக்க.. அவனைக் கண்டதில் உண்டான நிம்மதியோடும் தைரியத்தோடும் “அ.. அண்ணா.. ஆஆ..” என்று மீண்டும் அவனை அழைத்தபடி இறுக விநாயக்கை அணைத்துக் கொண்டிருந்தாள்.
 
 
அவளின் அழைப்பும் இந்த அணைப்பும் அவனை திகைக்க செய்திருக்க.. அதை அப்போதைக்கு புறம் தள்ளி வைத்து விட்டு அவளை நோக்கி ஓடி வந்தவர்களை முறைப்பாகப் பார்த்தவன் “என்னடா செஞ்சுட்டு இருக்கீங்க..?” என்றான். 
 
 
“ஹாங் பார்த்தா தெரியலை, ஓடி பிடிச்சு விளையாடறோம்..” என அதில் ஒருத்தன் நக்கலாக சொல்லவும் “ஓஹோ, ஓட கால் இருக்கணும் இல்லை.. ஓட விட்டு வெளுத்துடுவேன் ஜாக்கிரதை..” என்றான் அழுத்தமானக் குரலில் அவர்களை முறைத்துக் கொண்டே விநாயக்.
 
 
“ஹை தோடா..!” 
 
 
“நாங்க அப்படியே பயந்துட்டோம்..!” 
 
 
“இவர் பெரிய..” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையை படு நக்கலாக சொல்ல.. இறுதியாக பேசியவன் ‘பெரிய’ என்று சொல்லி அடுத்து என்ன சொல்ல வந்தானோ அதற்குள் விநாயக்கின் முஷ்டி அவன் வாயை உடைத்து இருந்தது.
 
 
ஓங்கி ஒரே குத்து தான் விட்டிருந்தான். அதற்கே அவன் வாயில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் வெளிவந்திருக்க.. நான்கு பற்கள் வேறு கீழே உடைந்து விழுந்து இருந்தது. இதை கண்டு மற்றவர்கள் மிரண்டு நின்றிருக்க.. “உங்களைப் போல வாய் வீராப்பு பேசறவன்னு நினைச்சுட்டீங்களா..! வாயை உடைச்சுட்டு தான்டா பேசுவேன்..” என்று அவன் கர்ஜித்த விதத்தில் அவர்களுக்குள் குளிர் பரவியது. 
 
 
“எவ்வளவு திமிரு இருந்தா, ஒரு பொண்ணை இப்படி பப்ளிக்கா விரட்டிட்டு வருவீங்க.. இதில் அத்தனை பேரும் போதையில் வேற இருக்கீங்க.. போலீஸ்காரன்கிட்டேயே உங்க வேலையை காட்டறீங்களா..?” என்று இதழ் மடித்து ஒருவித ஆத்திரத்தை அடக்கிய குரலில் அவன் பேசிக் கொண்டே செல்ல.. “என்னது போலீசா..?” என அங்கிருந்தவர்கள் மிரண்டனர்.
 
 
அதுவரை அவன் கைவளைவில் பாதுகாப்பாக இருந்த மானஸா கூட ‘போலீசா..!’ என்ற அதிர்வோடு தான் விநாயக்கின் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்த்திருந்தாள்.
 
 
அடுத்த நொடி நால்வரும் சிதறி ஒவ்வொரு திசையில் ஓட பார்க்க.. அதற்கு வாய்ப்பே அளிக்காமல் மானஸாவை சற்று தள்ளி நிறுத்தி இருந்தவன், புயல் வேகத்தில் சுழன்று ஒவ்வொருவரையும் அடித்து சாய்த்து இருந்தான். எல்லாம் இப்போதே கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்திருக்கும் சின்ன பிள்ளைகள். 
 
 
இவனின் முறுக்கிய தேகத்தின் வேகத்திற்கு முன் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதோடு அவர்கள் போதையிலும் வேறு இருக்க.. வெகு சீக்கிரமாகவே விநாயக் தன் வேலையை முடித்துக் விட்டிருந்தான். 
 
 
வலி தாங்காமல் வீதியில் சுருண்டு ஒவ்வொருவரும் முனகிக் கொண்டிருக்க.. “பொறு** ராஸ்க** இந்த வயசுலேயே இதெல்லாம்..” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவன், பார்வையில் கோழிக்குஞ்சாக நடுங்கி இருளில் நின்றிருந்த மானஸா விழவும், அப்படியே தன் வார்த்தைகளை உள் இழுத்துக் கொண்டவன், தன் அலைபேசியை எடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்தான். 
 
 
அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து தன்னை முறைப்படி அறிமுகம் செய்து கொண்டவன், இங்கு இப்படி ஒரு சூழ்நிலை என்பதை சொல்லி வந்து இவர்களை அள்ளிச் செல்லுமாறும், இது சம்பந்தமாக வேறு ஏதேனும் அவன் எழுதி கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ வேண்டி இருந்தால், நாளை காலை காவல் நிலையத்திற்கு வருவதாகவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன், சுற்றும் முற்றும் பார்க்க.. அங்கு ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. 
 
 
வேகமாக அங்கே சென்று எதையோ தேடியவன், நீண்ட ஒரு கயிறை எடுத்துக் கொண்டு வந்தான். நால்வரையும் எழுந்து ஓட முடியாதபடி அங்கு இருந்த மரத்தோடு சேர்த்து கட்டி வைத்தவன், அதன் பின்பே மானஸாவின் பக்கம் திரும்பினான். 
 
 
அவளோ உடல் நடுக்கம் இன்னும் கொஞ்சமும் குறையாமல் அழுகையோடு அப்படியே அருகில் இருந்த சுவரைப் பிடித்தபடி நின்றிருக்க.. அந்த நிலையில் அவளைக் கண்டவனின் மனம் ஏதோ செய்தது. 
 
 
அதில் இரண்டு எட்டில் அவளை நெருங்கியவன், “ஹேய் பேபி கேர்ள் ரிலாக்ஸ், எல்லாம் ஓவர்.. யூ ஆர் இன் சேஃப் ஹான்ட்ஸ்..” என்றவனை அவள் மீண்டும் தாவி அணைத்துக் கொள்ள.. சிறு திகைப்போடு அவளை பார்த்தான் விநாயக்.
 
 
இந்த நொடி வரை அவள் உடல் நடுங்கி கொண்டிருக்கவும், சின்ன பெண் அளவுக்கு அதிகமாக பயந்து இருக்கிறாள் என புரிய.. ஆதரவாக அவளின் தலையை வருடியவன், “ஒண்ணுமில்லைமா.. பயப்படாதே, நான் உன் கூட இருக்கேன்.. உன் வீடு எங்கே இருக்கு..?” என்று மென்மையான குரலில் பேசினான் விநாயக்.
 
 
“வீ.. வீ.. அ.. அ.. ண்.. ணா..” என அவள் திக்கி திணற பயந்து போய் இருப்பதில் பேச முடியாமல் சிரமப்படுவதாக நினைத்தவன் “உனக்கு வீடு பக்கத்துலேயா..?” என்றான். 
 
 
இதுவரை அவள் வாழ்நாளில் பார்த்தே இல்லாத ஒரு அதிர்வை கண்டிருந்ததில் உண்டான அதிர்வு லேசாக நீங்கி, தன்னை சார்ந்த ஒருவனை பார்த்து விட்ட நிம்மதி மெல்ல அவளுள் படர தொடங்கி இருக்க.. அவனுக்கு தன்னை யார் என்றே தெரியவில்லை என புரிந்த நொடி அவளுக்கு மேலும் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது. 
 
 
சிறுவயதில் இருந்து தேள் கொடுக்குப் போலான வார்த்தைகளை மட்டுமே கேட்டு வளர்ந்து இருந்தது.. அனைவரும் வீட்டில் இருக்க, இவள் மட்டும் விடுதியில் இருந்தது எல்லாம் சேர்ந்து யாருக்கும் தன்னை பிடிக்காது யாருக்கும் தான் முக்கியம் இல்லை என்ற எண்ணமே அவளின் தன்னம்பிக்கையை வெகுவாக அசைத்துப் பார்த்திருந்தது. 
 
 
அதில் மேலும் அவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் திணற.. “ஒண்ணுமில்லைமா, ஏன் இவ்வளவு பயப்படறே..? எல்லாம் சரியாகிடுச்சு, முதலில் இங்கே இருந்து நாம கிளம்புவோம் வா..” என்று அவள் அங்கு நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே மேலும் பயப்படுகிறாளோ என நினைத்து விநாயக் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
அவனுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவளும் உடன் செல்ல.. நடக்கத் தொடங்கியவுடன் லேசாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்த விநாயக் முயல.. அவளோ மேலும் அவனோடு இறுக்கமாக ஒன்றி கொண்டாள். 
 
 
இதில் ஒற்றைப் புருவத்தை கேள்வியாக உயர்த்தியவன் “உன் பேர் என்ன..?” எனவும் “மா.. மா..” என்று அவள் திணற.. “இன்னும் என்ன பயம் உனக்கு..?” என ஏதோ கேட்க முயன்றவனுக்கு, அப்போதே ‘அவளுக்கு பேசும் போது இப்படியாகும் பிரச்சனை இருக்குமோ..!’ எனத் தோன்றியது.
 
 
வேறு எதுவும் அதை பற்றி கேட்காமல் “உன் வீடு எங்கே..?” எனவும் சிறு தயக்கத்திற்கு பிறகு அவள் வீடு இருக்கும் பகுதியை கூறினாள் மானஸா. அதில் அவன் நடை அப்படியே நிற்க.. “அவ்வளவு தூரமா..! அப்போ இங்கே இந்த நேரத்தில் என்ன செய்யறே நீ..?” என்றவனின் குரலில் லேசாக கடுமை சேர்ந்து இருந்தது. 
 
 
இதுவரை எதிர்பாராமல் எப்படியோ அவர்களிடம் சிக்கிக் கொண்டாள் என நினைத்திருந்தவன், ‘ஒருவேளை தெரிந்தே விரும்பி அவர்களோடு வந்திருப்பாளோ..!’ என்று நினைத்து குரலில் கடுமையைக் கொண்டு வந்திருக்க.. “ப்.. ப்.. ரெ.. ண்.. ட்.. பர்த்.. டே..” என்று தொடங்கி எப்படியோ நடந்த அனைத்தையும் அவள் சொல்லி முடித்திருக்க.. அவனுக்கு பாவமாக போனது. 
 
 
கோழிக் குஞ்சாக தன் கரங்களில் நடுங்கிக் கொண்டிருப்பவளை காணும் போதே ஏதோ ஒரு உணர்வு அவனை அசைத்துக் கொண்டிருக்க.. ‘இந்த நேரத்தில் அவன் மட்டும் இந்த பக்கம் வராமல் போயிருந்தால், அவள் நிலை என்னவாகி இருக்கும்..?’ என்று தான் அவனுக்கு அந்த நொடி தோன்றியது.
 
 
இங்கு இருக்கும் துஷ்யந்த்தின் பீச் ஹவுஸில் நண்பர்கள் எல்லாம் இன்று கூடியிருந்தனர். சமீபமாக துஷ்யந்த் நடித்த ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதை கொண்டாட மாலையிலிருந்து அனைவரும் இங்கு இருக்க.. இன்று நண்பர்களே சேர்ந்து சமைக்கலாம் என்ற விபரீத முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் இறங்கி இருக்க.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உணவு செய்ய முனைந்ததில் சில பொருட்கள் தேவைப்பட்டது.
 
 
அதை வாங்குவதற்காகவே வெளியில் வந்திருந்தான் விநாயக். இரண்டு தெரு தள்ளி இருந்த சூப்பர் மார்க்கெட் செல்ல வந்திருந்தவன், தர்ஷனும் உடன் வருவதாக சொல்லி தன் காரை எடுக்க முயலவும் “வண்டியெல்லாம் வேண்டாம், நான் அப்படியே ஒரு வாக் போய் வாங்கிட்டு வரேன், அதுக்குள்ளே நீ இங்கே இருக்க பஞ்சாயத்தை பார்..” என தன் இருசக்கர வாகனத்தை கூட எடுக்காமல் காலாரா நடந்து வந்து கொண்டிருந்த போது தான் மானஸாவை கண்டான். 
 
 
ஒருவேளை தர்ஷனுடன் காரில் சென்றிருந்தால் இவளை பார்த்து இருக்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்திருக்காது. அப்போது இந்த பெண்ணின் நிலை என்னவாகி இருக்கும் என்று தான் அவன் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
 
 
அதில் லேசாக மானஸா அவன் சட்டையை பிடித்து இழுக்க.. ‘என்ன..?’ என்பது போல் அவள் முகத்தை திரும்பிப் பார்த்தான் விநாயக். “உங்களுக்கு என்னை தெரியலையா..? “ என்று அவள் கேட்க.. விழிகளை சுருக்கியவன் “என்ன..?’ எனவும் “நா.. நான் சொன்னேனே, நீங்கள் கவனிக்கலையா..?” என்று மீண்டும் அவள் கேட்கவும் “என்ன சொன்னே..?” என்றான் விநாயக்.
 
 
“நா.. நா.. இ.. ல்.. லை.. நீ.. நீங்க..” என்று அவன் பார்வை தன் மேல் கூர்மையாக பதிந்திருப்பதில் உண்டான தடுமாற்றத்தோடு அவள் அடுத்த வார்த்தை வராமல் அவனை தயக்கமாக பார்க்கவும், “அவசரப்படாம.. பயப்படாம.. பொறுமையா பேசு..” என்றான் அப்போதும் மென்மையாகவே விநாயக்.
 
 
அதில் உண்டான தைரியத்தோடு “நான் உங்க தங்கச்சி தான், என்னை உங்களுக்கு தெரியலையா..?” என்று மானஸா கேட்டிருக்க.. “தங்கச்சி..?” என்று புரியாமல் விழிகளை சுருக்கினான் விநாயக். அவனின் செயலில் மேலும் மனதளவில் அடிப்பட்டு போனவள், “அப்.. அப்பா.. அப்பா தான்.. நீங்க அண்ணான்னு..” என்று திணற “யாரு உங்க அப்பா..?” என்றான் கூர்மையாக அவளையே பார்த்தப்படியே குரல் இறுக விநாயக்.
 
 
அதுவரை அவன் தன்னிடம் இருந்த விதத்திற்கும் இந்த கேள்வியை கேட்கும் போது பார்த்த விதத்திற்கும் உள்ள வித்தியாசம் மானஸாவுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
அதில் உண்டான பெரும் தயக்கத்தோடு “ர.. ரகோ..” என்று அவள் சொல்லிக் கூட முடிக்கவில்லை வேகமாக அவளை உதறி கொண்டு தள்ளி நின்றிருந்தான் விநாயக். 
 
 
இதில் பயந்து போய் மானஸா அவனை பார்க்க.. கோபமாக அவளை முறைத்துப் பார்த்தவன், வேறு எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து செல்ல முயல.. இதை கொஞ்சமும் எதிர்பாராமல் திகைத்து நின்ற மானஸா அழுகையோடு அவனை பின்தொடர்ந்தாள்.
 
 
வீதி முனைவரை சென்றவன், அவள் தன் பின்னே வருவதில் உண்டான எரிச்சலோடு நின்று திரும்பிப் பார்த்து “கொஞ்ச நேரத்துக்கு முன்னே அவங்க வாங்கினதை பார்த்தே இல்லை, இன்னொரு அடி எடுத்து என் பின்னே வெச்சே.. உனக்கும் அதே மாதிரி விழும்..” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு செல்ல.. மானஸாவுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. 
 
 
ஆனால் இது அவளுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத இடம். இங்கு அவனைத் தவிர அவளுக்கு வேறு யாரையும் தெரியாது. ஸ்ரீ வீடு இப்போது எந்த பக்கம் என்று கேட்டால் கூட அவளுக்கு சொல்லத் தெரியாது. அப்படி இருக்க..இருளில் எவ்வளவு நேரம் தனியே நின்றிருக்க முடியும்..? இதற்கு விநாயக் அடித்தால் கூட பரவாயில்லை என்று எண்ணி அவன் பின்னே மானஸா செல்ல முயல.. அவன் பொறுமை பறந்தது. 
 
 
“ஏய் என்ன உங்க அப்பா சொல்லி இந்த ட்ராமா எல்லாம் நடக்குதா..? என்னை வெச்சு விளையாடறீங்களா..!” என அவன் கோபமாக கத்த.. “இல்.. இல்லையில்லை அண்ணா..” என்றவள் அவனின் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தி “இல்லை..” என்று வேகமாக தலையசைக்க.. “பொதுவாவே எனக்கு பொறுமை கொஞ்சமும் இல்லை.. அதை சோதிக்காதே..!” என்று விட்டு அவன் மீண்டும் செல்ல.. அழுகையோடும் தயக்கத்தோடும் பல அடிகள் இடைவெளி விட்டே அவனை மீண்டும் பின்தொடர்ந்தாள் மானஸா.
 
 
இதில் ஆத்திரத்தில் திரும்பி விநாயக் அவளை அடிப்பது போல் கையை ஓங்கிக் கொண்டு வர, மானஸா பயத்தில் அப்படியே மடிந்து அங்கு அமர்ந்துவிட்டாள். அதே நேரம் தர்ஷனிடம் இருந்து விநாயக்கிற்கு அழைப்பு வந்தது. 
 
 
அதை எடுக்காமல் அவன் தவிர்க்க.. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்ததில் எரிச்சலானவன் எடுத்து “என்னடா..?’ என்று பல்லை கடிக்கவும் “ஏன் மச்சி பக்கத்தில் இருக்க சூப்பர் மார்க்கெட் தானே போறேன்னு சொன்னே..! ஃபேக்டரிக்கே போயிட்டியோ..?” என்றான் இவன் மனநிலை புரியாமல் அவன் கேலியாக.
 
 
“மரியாதையா சொல்றேன் போனை வைச்சுடு..” என அவன் இருக்கும் ஆத்திரத்தில் வார்த்தைகளை அழுத்தத்தைக் கூட்டி சொல்லவும், மறுவார்த்தை பேசாமல் அழைப்பை துண்டித்திருந்த தர்ஷனுக்கு எதுவோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
 
 
ஆனால் விநாயக் தன் வேலையில் கவனமாக இருக்கும் போது யாராவது தொந்தரவு செய்தால் இப்படித்தான் பேசுவான் என்பதால் பெரிதாக வேறு எதையும் யோசிக்காமல் அவன் தன் நண்பர்களிடம் சென்று “இங்கே இருக்கறதை வைச்சு செஞ்சுடுவோம், அவன் இப்போதைக்கு வரமாட்டான்..” என்றிருந்தான்.
 
 
இங்கு தன் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளை காணும் போதே அவனுக்கு மனம் ஏதோ செய்தது. சற்று முன் நடந்ததில் இருந்து இப்போது வரை மீண்டிடாதவளை தன் கோபம் வேறு பயம் கொள்ள செய்திருப்பது புரிந்து, தன்னை முயன்று அமைதிப்படுத்திக் கொண்டவன் “இங்கே பார், யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாம, கொஞ்சமாவது யோசி.. இத்தனை வருஷமும் இல்லாத சொந்தம் இப்போ எப்படி வரும்..? புரியுதா உனக்கு..!” என பல்லை கடித்துக்கொண்டு கேட்கவும், பதிலின்றி அவனைப் பார்த்து அழுகையில் தேம்பிக் கொண்டு இருந்தாள் மானஸா.
 
 
யார் மேலோ உள்ள கோபத்தில் இந்த சின்ன பெண்ணை வருத்துவது புரிய, நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவன், அவள் அருகில் மண்டியிட்டு அமர.. அவளோ அழுதால் கூட திட்டுவானோ என்று பயந்து தன் இரு கரங்களைக் கொண்டு வாயை இறுக்கமாக பொத்திக் கொண்டாள். 
 
 
தன்னைக் கண்டு அவள் பயப்படுவது மேலும் அவனுக்கு வருத்தத்தை கொடுக்க.. சற்று முன் தன்னிடம் அத்தனை உரிமையாக அவள் நின்றிருந்த நிலை நினைவுக்கு வரவும், “லுக்..” என்று தொடங்கியவன் பின் “உன் பெயர் என்ன..?” என்றான். 
 
 
“மா.. மான்..” என்றவள் அழுகையுடன் பேசியதில் ‘ஸா’ வெளியில் வராமலே போனது. அதில் உண்டான புன்னகையோடு “மான்..! புள்ளி மானா நீ..?” என்று தன்னை மீறி அவன் கேட்டு விட்டிருக்க.. ‘ஹாங்..’ என்று மருண்டு விழித்தாள் மானஸா.
 
 
அதில் தன்னையே ஆச்சரியமாக நினைத்தவன், ‘எப்படி இவ்வளவு கோபத்திலும் இவளிடம் தன்னால் புன்னகையோடு பேச முடிகிறது..?’ என்று மனதிற்குள் யோசித்தவாறே “மானு இங்கே பாரு..” என்றவன், நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு “நேரமாகுது வீட்டுக்கு போ..” என்றான். 
 
 
“என.. க்கு.. எனக்கு.. வழி தெரியாது..” என அவள் சொல்லவும், “இங்கே எப்படி வந்தே..?” என்றான் விநாயக். “கா.. காரில்.. ஆ.. ஆனா.. டிரைவர் பத்து மணிக்கு தான் வருவாரு..” என அவள் திக்கி திணறி மெதுவாக பேசி முடிக்கவும், மணியை பார்த்தான் விநாயக். 
 
 
அது இப்போதே ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க.. மேலும் ஒரு மணி நேரம் அவள் காத்திருக்க வேண்டி வரும் என்று புரிந்து, “அப்போ கால் செஞ்சு சீக்கிரம் வர சொல்லு..” என்றான் விநாயக். 
 
 
“என் ஃபோன் அங்கே..” என அவள் திணறவும் கையில் பை எதுவும் இல்லாமல் அவள் இருப்பது அப்போதே புரிய.. “அந்த வீடு எங்கே இருக்கு..?” என்றான் விநாயக். ‘தெரியவில்லை’ என்பது போல் அவள் தலையசைக்க.. அவன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது. 
 
 
ஆனாலும் சற்று சத்தமாக பேசினால் கூட அவள் மிரண்டு விடுகிறாள் எனப் புரிந்து வெகுவாக இழுத்து பிடித்த பொறுமையோடு தன் அலைபேசி எடுத்து அவளிடம் நீட்டினான் விநாயக்.
 
 
அதையும் அவள் வாங்காமல் அவனை பரிதாபமாக பார்க்க.. “இப்போ என்ன..?” என்றான் விநாயக். “எனக்கு.. எனக்கு யார் நம்பரும் தெரியாது..” என அவள் அழுகை எட்டிப் பார்க்கும் குரலில் சொல்லவும், விநாயக்கிற்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
 
 
 
இதில் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், தன் அலைபேசியில் இருந்து சட்டென நந்தினிக்கு அழைத்திருந்தான். ஆனால் அன்று பார்த்து அவள் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அவனுக்கு தகவல் வரவும் யோசனையாக விழிகளை சுருக்கியவன், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பின் வேறு யாருக்கும் அழைக்க பிடிக்காமல் அவளை யோசனையாக பார்க்க.. மானஸாவும் செய்வதறியாது அவனை பார்த்தாள்.
 
 
இரண்டு நிமிடம் தீவிரமாக யோசித்தவன் பின் “நான் உன்னை வீட்டில் விடட்டுமா..?” எனவும் வேகமாக சரியென அசைந்தது அவள் தலை. இதற்காகத்தான் அவன் பின்னே வந்திருக்கிறாள் எனப் புரிந்து “சரி எழுந்திரு..” என்றான் விநாயக்.
 
 
அவளும் சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல் எழுந்து நிற்க.. அவளின் அந்த செயலில் லேசாக மென்னகை உண்டாக சிறு இடைவெளி விட்டு அவளோடு நடந்தவன், தர்ஷனுக்கு அழைத்தான். “சொல்லு மச்சி..” என்று அவன் கேட்கவும் “என் பைக் சாவி எடுத்துட்டு வெளியே வா..” என்று சொல்லி அடுத்து தர்ஷன் எதுவும் கேட்க கூட வாய்ப்பு கொடுக்காமல் அலைபேசியை அணைத்து இருந்தான் விநாயக்.
 
 
அதில் தன் காதில் இருந்த அலைபேசியை எடுத்து கேள்வியாக பார்த்த தர்ஷன் “என்னை என்னன்னு தான்டா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்..? “ என்று புலம்பியவாறு அவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து நிற்க.. அடுத்த மூன்று நிமிடங்களில் மானஸாவோடு அங்கு வந்தான் விநாயக். 
 
 
சிறு பெண்ணாய் அழகு பொம்மை போல் அவன் பின்னே நடந்து வருபவளையே யோசனையாக தர்ஷன் பார்க்க.. “அங்கே என்ன சிலை மாதிரி நிற்கறே..? சாவிய கொடு..” என்றான் விநாயக்.
 
 
‘யார்..? என்ன..?’ என்று கேட்கத் தோன்றினாலும் அவன் வேலை சம்பந்தமான ஏதோ ஒன்றாக இருந்தால் பதில் வராது என்று புரிந்து தர்ஷன் அமைதியாகவே சாவியை கொடுக்க.. மானஸாவை வண்டியில் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் விநாயக்.
 
 
அடுத்த சில நிமிடங்களில் ரகோத்தமன் வீட்டிற்கு இரண்டு வீடு முன்னதாகவே விநாயக் தன் வாகனத்தை நிறுத்தி இருக்க.. மெல்ல இறங்கி அவன் முகம் பார்த்து “தேங்க்ஸ் அண்..” என்று தொடங்கியவள், அவன் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தினாள்.
 
 
‘கிளம்பு’ என்பது போல் அவன் தலையசைக்க.. ‘சரி’ என்ற தலையசைப்போடு அவளும் அங்கிருந்து நகர முயல, “ஒரு நிமிஷம்..” என்றவன் “முடிஞ்ச வரைக்கும் தனியா எங்கேயும் போகாதே.. வீட்டில் யாராவது இருந்தா துணைக்கு கூட்டிட்டு போ.. இல்லை கொஞ்சம் வளர்ந்த பிறகு தனியா போ..” என அவன் இறுக்கமான குரலிலேயே கூறினாலும் அதில் அவள் மேலான அக்கறை லேசாக ஒட்டிக்கொண்டு இருந்தது.
 
 
அதற்கும் மானஸா சரி என்று தலையை மட்டும் அசைக்க.. மீண்டும் ‘போ’ என்பது போல் அவன் விழியசைத்தான். அதில் மெல்ல அடிமேல் அடிவைத்து தன் வீட்டை நெருங்கியவள், கேட்டில் கை வைக்கச் சென்று பின் ஷாக் அடித்தது போல் வேகமாக அதை இழுத்துக்கொண்டு அப்படியே மதில் சுவர் பக்கம் ஒதுங்கி மறைவாக நின்றாள். 
 
 
தன் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு அவள் உள்ளே சென்ற பின் கிளம்ப நினைத்து காத்திருந்த விநாயக் மானஸாவின் செயல்கள் புரியாமல் விழிகளை சுருக்கி பார்க்க.. அவளோ உள்ளே லேசாக எட்டிப் பார்ப்பதும் பின் தன்னை மறைத்துக் கொள்வதுமாகவே நிற்க.. என்னவென்று புரியாமல் அவள் அருகில் சென்று அவன் வண்டியை நிறுத்தினான்.
 
 
அவனைக் கண்டு மேலும் மருண்டவள், ‘வேகமாக இங்கிருந்து போங்க..!’ என்பது போல் கையை அசைக்க.. எதற்கு என்று புரியாமல் விநாயக் விழிகளை சுருக்கும் போதே உள்ளிருந்து வேதவல்லியின் பெரும் குரல் கேட்டது. 
 
 
மானஸாவின் பயம் ஏன் என்று இப்போது புரிய.. “வா வண்டியில் ஏறு..” என்றான் சட்டென விநாயக். அவன் அப்படி சொல்வான் என்று எதிர்பாராத மானஸா திகைத்து விநாயக் முகத்தை பார்க்கவும் ‘வா’ என்பது போல் அவன் மீண்டும் விழியசைக்க.. யோசிக்காமல் சென்று அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் மானஸா. 
 
 
சற்று தள்ளி இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லர் அழைத்துச் சென்றவன், அங்கு அவளை அமர வைத்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து மெல்ல விசாரிக்க.. எந்த தயக்கமும் ஒளிவு மறைவுமின்றி அனைத்தையும் அழுகையோடு பகிர்ந்து கொண்டிருந்தாள் மானஸா.
 
 
இதையெல்லாம் கேட்டவனுள் அத்தனை ஆத்திரம் கனன்றது. ‘எத்தனை கொடூரமான பிறவி.?’ என்று வேதவல்லியை பற்றி அருவருப்பாக நினைத்தவன், ‘இந்த சின்ன பெண்ணை மனதளவில் எவ்வளவு நோகடித்து இருக்கிறார்..?’ என்று கோபத்தோடு எண்ணியவாறே அவளை சமாதானம் செய்தான். 
 
 
இந்த வார்த்தைகள் எல்லாம் அவளின் இத்தனை வருட வலியை ஒன்றுமில்லாமல் செய்து விடாது என்று புரிந்தாலும், தன்னைப் போலவே வேதவல்லியால் பாதிக்கப்பட்ட இன்னொரு ஜீவன் என்ற எண்ணமே மானஸாவை தனக்கு நெருக்கமானவளாக அவனை நினைக்க செய்திருந்தது.
 
 
 
 
 
 
 

This post was modified 1 day ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 528
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 17 & 18
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page