All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

Page 2 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 508
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 8
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 508
Topic starter  
 
 
மௌனம் - 9
 
ஆர்கே ப்ரொடக்ஷனை ரகோத்தமன் பொறுப்பெடுத்து பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவர்கள் நிறுவனத்தில் அப்போது எடுத்த படத்தில் அபிராமி தான் நாயகி.
 
 
பட சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காக முதலில் சந்தித்துக் கொண்ட போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து இருந்தது. அடுத்தடுத்து அபிராமி இதே நிறுவனத்தில் மூன்று படங்கள் நடித்து முடிக்கும் முன் அவர்களின் காதலும் பிரிக்க முடியாத நிலையை அடைந்து இருந்தது.
 
 
ஒரு படப்பிடிப்பிற்காக அபிராமி கொடைக்கானல் சென்றிருக்க.. அந்த வருட நவராத்திரி கச்சேரிக்காக அவரின் குடும்பம் மொத்தமும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தனர். 
 
 
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊர்களில் உள்ள கோவிலில் கச்சேரிகள் ஏற்பாடாகி இருக்க.. கார் மற்றும் விமானத்தில் மாறி மாறி பயணித்துக் கொண்டு இருந்தனர். நவராத்திரியின் இறுதி நாளில் ஒரு கார் விபத்தில் துரதிஷ்டவசமாக மொத்த குடும்பமும் உயிரை விட்டிருந்தது.
 
 
இந்த விபத்து பற்றி அறிந்த நொடி அபிராமி அடித்துப் பிடித்து அங்கிருந்து கிளம்பி ஊர் வந்து சேர்வதற்குள் அரை உயிராகி விட்டிருந்தார். அங்கு படப்பிடிப்பில் உடன் இருந்த ரகோத்தமன் அபிராமியை கை தாங்கலாக அழைத்து வந்த புகைப்படம் தான் அன்றைய தலைப்புச் செய்தியாக மறுநாள் தினசரிகளின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருந்தது. 
 
 
முன்பே இருவரைப் பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தாலும் அதை உறுதி செய்வது போலான சாட்சிகள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. இப்போது கிடைத்த புகைப்படத்தை வைத்து தங்கள் சந்தேகம் உறுதியானதாக பல ஊடகங்களும் மார் தட்டிக் கொண்டிருந்தது.
 
 
இப்போது போல் அன்றைய நாளில் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் 24 மணி நேரமும் கேமராவுடன் வளைய வரவில்லை என்றாலும் ஊடக புகைப்படக் கலைஞர்கள் முக்கியமான இடங்களில் எப்போதுமே இருப்பார்கள்.
 
 
அதிலும் விமான நிலையங்களிலும் படப்பிடிப்பு தளங்களிலும் எப்போதுமே யாராவது ஓரிரு புகைப்பட கலைஞர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அப்படி தான் இன்றும் அபிராமியின் வீட்டினர் பற்றிய தகவல் தெரிந்தவுடன் அவர் வீட்டின் முன்பும் விமான நிலையத்தின் முன்பும் குவிந்திருந்தவர்களுக்கு தீனி போடும் வகையில் வந்து இறங்கினர் இருவரும்.
 
 
அழுதழுது வீங்கிய முகத்துடன் தலை கலைந்து சோர்வாக நடைதளர்ந்து ரகோத்தமன் மேல் சாய்ந்த படி அபிராமி நடந்து வர, தன்னோடு சேர்த்து அபிராமியை அத்தனை அன்பாகவும் அக்கறையாகவும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார் ரகோத்தமன்.
 
 
இதை தினசரியில் பார்த்த வேதவல்லி கொந்தளித்துக் கொண்டிருந்தார். முன்பே அவருக்கும் இந்தச் செய்தி லேசாக தெரிந்திருந்தாலும் அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை தன்னை மீறி என்ன நடந்து விடப் போகிறது என்ற எண்ணம் தான் அவருள் நிறைந்திருந்தது.
 
 
தன் அண்ணன் மகளான புஷ்பாவை ரகோத்தமனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் வேதவல்லியில் விருப்பமாகவும் திட்டமாகவும் இருந்தது. இந்த வருட இறுதிக்குள் அவர்களின் திருமணத்தை முடித்து விட அவர் நினைத்திருக்க.. அதை கெடுப்பது போலான இந்த செய்தியும் புகைப்படமும் ஊர் முழுக்க அன்று பேசு பொருளாக மாறி இருந்தது. 
 
 
அதில் தினசரியை கசக்கி தூர எறிந்தவர் “எவ்வளவு திமிரு இருந்தா கட்டின பொண்டாட்டி மாதிரி அவன் கூட உரசிட்டு வருவா..!” என்று கேவலமாக திட்டியவர் “இவனை சொல்லணும், இவனுக்கு எங்கே போச்சு அறிவு..?” என்று மகனையும் திட்டிக் கொண்டே அமர்ந்திருக்க.. இதையெல்லாம் அவருக்கு பின் தூணுக்கு அருகே நின்று கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா. 
 
 
சிறுவயதிலேயே அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவோடு இவர்களின் திருமண பேச்சு வார்த்தையும் தொடங்கி விட்டிருக்க.. அப்போதிலிருந்தே ரகோத்தமனை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு வளர்ந்திருந்தார் புஷ்பா.
 
 
அதில் அபிராமியோடு சமீபமாக ரகோத்தமனை இணைத்து வைத்து பரவும் செய்திகள் பற்றி அவருக்கும் தெரிய வந்திருந்ததில் மனம் வாட, நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார் புஷ்பா.
 
 
அவருக்கும் ஓரளவு ரகோத்தமனின் மனம் புரிந்து இருந்தது. இத்தனை வருடத்தில் உரிமையாக ஒருமுறை கூட ரகோத்தமன் பார்வை புஷ்பாவின் மேல் படிந்ததே இல்லை. இதெல்லாம் சேர்ந்து புஷ்பாவுக்கு ஒரு வகையில் பயத்தை கொடுத்துக் கொண்டே இருக்க.. இன்று அதை உறுதியாக்குவது போல் இப்படி ஒரு செய்தி.
 
 
அபிராமியை அவர் பார்க்கும் விதமும் தன் கையணைப்பிற்குள் அவரை வைத்திருக்கும் விதமும் காணும் போதே புஷ்பாவின் கண்ணீர் உடைப்பெடுத்தது. 
 
 
புகைப்படம் வந்ததற்கே அத்தனை அமர்க்களம் செய்து கொண்டிருந்த வேதவல்லி, அடுத்தடுத்து நடந்ததில் எரிமலையாகி போனார். அபிராமியின் குடும்பத்தினருக்கு ஒரு மகனாக முன் நின்று அத்தனை கடமைகளையும் செய்திருந்தார் ரகோத்தமன்.
 
 
கொஞ்ச நஞ்சம் சந்தேகத்தோடு பேசிக்கொண்டிருந்த அத்தனை பேரின் வாயையும் தன் செயலின் மூலம் நீங்கள் நினைப்பது தான் சரி என அடைத்திருந்தார் ரகோத்தமன். 
 
 
இதில் வீட்டையே வேதவல்லி போர்க்களமாக மாற்றி இருக்க.. அவரை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன். இனி ஒரு நாளும் தாமதிக்கக்கூடாது அடுத்த முகூர்த்தத்திலேயே ரகோத்தமன் புஷ்பாவின் திருமணம் நடந்தாக வேண்டும் என்று வேதவல்லி முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்க.. விவரம் அறிந்து ரகோத்தமன் ஒரேடியாக அதை மறுத்தார்.
 
 
“உன்கிட்ட இங்கே யாரும் அனுமதி கேட்டு நிற்கலை, உனக்கு கல்யாணம் புஷ்பா கூட மட்டும் தான்.. ஒழுங்கா வந்து தாலி கட்டி குடும்பம் நடத்தும் வழியை பாரு..” என்று விட்டு அதற்கான ஏற்பாடுகளை வேதவல்லி கவனித்துக் கொண்டிருக்க.. இனிமேலும் அமைதியாக இருக்க விரும்பாத ரகோத்தமன் வேதவல்லி குறித்திருந்த முகூர்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பே அபிராமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.
 
 
அன்றே ஊடகங்களிலும் புகைப்படங்களோடு அந்தச் செய்தி வருமாறு ரகோத்தமன் ஏற்பாடு செய்துவிட்டு இருக்க.. தனக்கு எதிராக நின்ற மகனை மன்னிக்க முடியாமல் ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தார் வேதவல்லி. 
 
 
திருமணத்தை வீட்டிற்கு தெரியாமல் செய்து கொண்டு இருந்தாலும் அபிராமியை அழைத்துக்கொண்டு அவர் முதலில் வந்ததென்னவோ தன் வீட்டிற்கு தான். ஆனால் வாசலிலேயே நிறுத்தி இருவரையும் அவமானப்படுத்தி வேதவல்லி விரட்டி விட, இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்து இருந்த ரகோத்தமன் துளியும் கவலைப்படாமல் அபிராமியோடு வெளியேறி விட்டார்.
 
 
இது அபிராமிக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. தனக்குத்தான் உறவென யாரும் இல்லை என்றாகிவிட்டது, ரகோத்தமனாவது தன் உறவுகளோடு இருக்க வேண்டும் என நினைத்தார் அபிராமி. ஆனால் தன்னாலே அவர் உறவுகளை விட்டு பிரிந்து இருக்கும் நிலை உருவாகியது அவரை மனதளவில் பெரிதும் வருத்தியது.
 
 
இதில் ரகோத்தமனே எதிர்பாராத ஒன்று தயாரிப்பு நிறுவனத்திற்கு இனி அவர் வரவே கூடாது என வேதவல்லி சொல்லியது. ஆரம்பத்தில் இதை எதிர்பாராமல் திகைத்து நின்றாலும், பின் பரவாயில்லை என்று ஒதுங்கிக்கொண்டார் ரகோத்தமன். 
 
 
அபிராமிக்கு தான் இதெல்லாம் மனதை வலிக்க செய்துக் கொண்டே இருந்தது. தன்னால் அவரின் உரிமைகளை எல்லாம் விட்டு ஒதுங்கி இருப்பது போல் தோன்ற.. அதையும் அபிராமி சொல்லாமலே புரிந்து கொண்டிருந்த ரகோத்தமன் “எனக்கு உன்னை விட வேற எதுவுமே முக்கியம் கிடையாது அபி.. இன்னைக்கு பணம் இல்லைனா நாளைக்கு சம்பாதிச்சுக்கலாம்! ஆனா நீ அப்படி இல்லை..” என்று காதலோடு பேசி அபிராமியை சமாதானம் செய்திருந்தார் ரகோத்தமன். 
 
 
இதில் தன்னிடம் உள்ள சொத்துக்களை வைத்து ரகோத்தமனை ஏதாவது தொழிலை தொடங்க அபிராமி சொல்ல.. “ம்ஹூம் இது உன் சொத்து.. உனக்கானது, நான் எனக்கான பாதையை தேடிக்கறேன்..” என்றிருந்தார் ரகோத்தமன்.
 
 
“இது நம்மோடது, உனக்கு எனக்குன்னு ஏன் பிரிக்கறீங்க..?” என அபி சொல்லியும், அதை ஏற்றுக் கொள்ளாத ரகோத்தமன் அபியை பேசி வழக்கம் போல் சமாதானம் செய்துவிட்டு தனக்கான வருமானத்தை ஏற்பாடு செய்யும் வேலைகளை ஒரு புறம் செய்து கொண்டிருந்தார்.
 
 
இதற்கு இடையில் அவர்களின் காதல் திருமண வாழ்க்கை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அத்தனை அழகாக சென்று கொண்டிருந்தது. வழக்கமான வசதியான பெற்றோர்களின் மனநிலையிலேயே ரகோத்தமனின் வருமானத்தை தடை செய்தால், அவர் விரைவாக தங்களை தேடி வந்து விடுவார் என நினைத்திருந்த வேதவல்லியின் எண்ணத்தை இங்கு பொய்யாக்கி இருந்தார் ரகோத்தமன். 
 
 
நான்கைந்து மாதம் கடந்த பிறகும் ரகோத்தமன் வீட்டிற்கு வராததோடு அபிராமியுடன் சந்தோஷமாக வாழ்வதையும் அறிந்து கொண்ட வேதவல்லிக்கு அவர்களை எப்படி பிரிப்பது என்று எண்ணம் தான் மனம் முழுக்க நிறைந்திருந்தது. 
 
 
ராதாகிருஷ்ணனுக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. பெற்றோர்களாக ரகோத்தமனுக்கு ஒரு வாழ்வை இவர்கள் முடிவு செய்து வைத்திருந்தாலும் அது வேண்டாம் என எண்ணித் தானாக ஒரு வாழ்க்கையை அவர் தேடிக் கொண்டிருந்தார். 
 
 
தங்களை ஒதுக்கி வைத்து விட்டு ரகோத்தமன் இப்படி திருமணம் செய்து கொண்டதில் ஆரம்பத்தில் ராதாகிருஷ்ணனுக்குமே கொஞ்சம் மன வருத்தம் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்றதும் வேதவல்லியின் பேச்சும் செயல்களும் தான் என்ற புரிதல் இருந்ததால், விரைவாகவே மகனை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் தயாராக விட்டார் ராதாகிருஷ்ணன். 
 
 
 ஆனால் வேதவல்லி அப்படியெல்லாம் இல்லை. இப்போதும் மகனை ஏற்றுக் கொள்ள அவர் தயார் தான்.. ஆனால் மகனை மட்டுமே..! அபிராமியை விட்டு எப்போது ரகோத்தமன் வந்தாலும் இருகரம் கொண்டு அவரை வரவேற்பார் வேதவல்லி. 
 
 
இதற்கிடையில் அபியின் விஷயம் அறிந்து புஷ்பா மனமுடைந்து இருந்த நேரங்களில் கூட வேதவல்லி அத்தனை நம்பிக்கை கொடுத்திருந்தார். நிச்சயம் ரகோத்தமனுக்கு உன்னுடன் தான் திருமணம் நடக்கும்.. அதை நான் நடத்திக் காண்பிப்பேன் என்றெல்லாம் அவர் பேசியிருக்க.. தன் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இருந்த புஷ்பா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் மனதளவில் தளர்ந்து போனார். 
 
 
சாப்பிடாமல் உறங்காமல் அவர் அழுது கொண்டே இருக்க.. அப்போதும் கொஞ்சமும் சூழ்நிலையை உணர்ந்து புஷ்பாவை தேற்ற முயலாமல் மீண்டும் மீண்டும் போலியாக ஒரு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டே இருந்தார் வேதவல்லி.
 
 
“இதெல்லாம் காதலே இல்லை.. அவ அழகு மேலே இருக்க ஒரு மயக்கம், சீக்கிரம் அதெல்லாம் வெறுத்துப் போய் திரும்ப வந்துடுவான்.. ஒரு நடிகை கூட எல்லாம் யாராலும் குடும்பம் நடத்த முடியாது, நீ வேணும்னா பாரு.. ஒரு மாசத்தில் நீங்க சொன்னது தான் சரின்னு வந்து என் காலில் விழுவான்..” என்று அவர் பேசி இருக்க.. சிறு வயதில் இருந்தே அத்தையின் பேச்சை பெரிதாக நம்பி வாழ்ந்து கொண்டிருந்த புஷ்பாவுக்கு இதுவும் அப்படித்தான் நடக்கும் என்று தோன்றியது. 
 
 
அதில் வேதவல்லியின் பேச்சை நம்பி அவர் காத்திருக்க.. நான்கு மாதம் கடந்த பிறகும் ரகோத்தமன் திரும்ப வரவே இல்லை. இதில் இனி தன் வாழ்வு ரகோத்தமனோடு இல்லை எனப் புரிந்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார் புஷ்பா.  
 
 
அதேநேரம் இங்கு அபி தாய்மையுற்று இருந்தார். இருவருக்கும் அது அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது. இரு பக்க உறவுகளும் இல்லாமல் வாழ்க்கையை தொடங்கி இருந்தவர்களுக்கு, தங்களுக்கென வரும் புது உறவு, தங்களின் காதலின் சாட்சி, அதோடு பெரியவர்கள் இனி குழந்தைக்காகவாவது தங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் அபிராமி எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. அப்படி எதுவுமே நடக்கவில்லை.
 
 
அபிராமியின் வற்புறுத்தலினால் ரகோத்தமன் தன் வீட்டிற்குச் சென்று தனக்கு குழந்தை பிறக்க போகும் விஷயத்தை பகிர்ந்து கொள்ள.. “அதை ஏன் இங்கே வந்து சொல்லிட்டு இருக்கே.. ஊருக்குள்ள எத்தனையோ நாய் குட்டி போடுது, அதையெல்லாம் தெரிஞ்சு வெச்சுட்டு நான் என்ன செய்யப் போறேன்..?” என்று எகத்தாளமாக பேசியிருந்தார் வேதவல்லி. 
 
 
இதில் அதிகம் மனம் காயப்பட்டு போன ரகோத்தமன், அதன்பின் இங்கு வரவே இல்லை. அபிக்கு 5 மாதமாகி இருந்தது. தன் வீட்டினர் இருந்திருந்தால் இப்போது ஐந்தாம் மாதம் பூ முடித்திருப்பார்கள்.. அப்படி தனக்கு யாரும் இல்லாததில் உண்டான கவலையோடு அன்று முழுக்க மனம் கனக்க.. அமைதி வேண்டி கோவிலுக்கு சென்றிருந்த அபிராமியை எதேச்சையாக பார்த்தனர் புஷ்பா மற்றும் அவளது அன்னை ராதா.
 
 
மெல்லியப்பட்டு சேலை தலை நிறைய மல்லிகைப்பூ பெரிய பொட்டு வகிட்டில் குங்குமம் தாய்மையோடான பூரிப்பு முகத்தில் படர்ந்து இருக்க.. பூஜையை முடித்துக் கொண்டு மெல்ல நடந்து கொண்டிருந்தவளின் முன் தன் முந்தானையை விரித்தபடி அழுகையோடு வந்து நின்றார் ராதா. 
 
 
அவரை புரியாமல் பார்த்தார் அபிராமி, அழுகையோடு நின்றிருந்த ராதாவையும் புஷ்பாவையும் கண்ட அபிராமிக்கு ஏனோ சட்டென கடந்து செல்ல முடியவில்லை. அடுத்து பேச வராமல் அபிராமி அப்படியே இருவரையும் பார்த்திருக்க.. “உன் முன்னே மடியேந்தி நிற்கறேன் ம்மா.. எனக்கு மடிப்பிச்சை போடுவியா..!” என்றார் கண்ணீரோடு ராதா. 
 
 
அதில் ஏதோ வேண்டுதல் என்று புரிந்து கொண்ட அபிராமி “அம்மா நான் பணம் எதுவும் பெருசா கொண்டு வரலைங்களே..” என்றவாறே வேகமாக தன் வளையலை கழட்ட முயல.. “எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் ம்மா.. என் பொண்ணுக்கு வாழ்க்கை பிச்சை போடுவியா..?” என்றார் மீண்டும் அவள் முன் முந்தானையை விரித்து பிடித்தபடியே ராதா.
 
 
இதில் புரியாமல் திகைத்து அபிராமி இருவரையும் பார்க்கவும், “எனக்கு இவ ஒரே பொண்ணு.. என் வாழ்க்கையே இவ தான்.. இந்த நாலு மாசத்தில் மூணு முறை தற்கொலை முயற்சி செஞ்சுட்டா.. ஒவ்வொரு முறையும் காப்பாற்றி கொண்டு வரதுக்குள்ளே என் உயிர் போய் உயிர் வருது.. எந்த நிமிஷம் எதை செஞ்சுப்பாளோன்னு மனம் பதட்டத்திலேயே இருக்கு, இவளை நினைச்சு உண்டான கவலையிலேயே நெஞ்சு வலி வந்து இவங்க அப்பா படுத்துட்டாரு.. கோவில்னு பார்க்கறேன், இல்லை உன் காலில் விழுந்து கேட்டு இருப்பேன்.. எனக்கும் என் பொண்ணுக்கும் நீதான் ம்மா தாலி பிச்சை கொடுக்கணும்..” என்று அவர் பேசிக் கொண்டிருந்த எதுவுமே அபிராமிக்கு புரியவில்லை. 
 
 
அவள் இன்று இருந்த மனநிலையில், இது வேறு குழப்பத்தை கொடுக்க.. இருவரையும் புரியாமல் பார்த்தவாறே நின்றிருந்தார் அபிராமி. இதுவரை ரகோத்தமன் இவர்களைப் பற்றி எதுவுமே பேசி இருக்கவில்லை. அதில் அபிராமிக்கும் எதுவும் தெரியவில்லை.
 
 
ஆனால் சம்பந்தமே இல்லாமல் தன்னிடம் வந்து இப்படி பேசிக் கொண்டிருந்தவர்களை யோசனையாக பார்த்தவள், சுற்றும் ஒற்றும் பார்த்தவாறே “அம்மா உங்க மன வருத்தம் எனக்கு புரியுது, ஆனா ஏதோ தவறு நடந்திருக்குன்னு நினைக்கறேன்.. நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசறீங்க..” என அவள் சொல்லி முடிக்கவும் “இல்லைம்மா தவறு எதுவும் நடக்கலை, நீ யாருன்னு தெரிஞ்சு தான் வந்து பேசறேன்.. நான் ரகோத்தமனோட மாமி..’ என அவர் சொல்லி முடிக்கவும் தான் அபிராமிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. 
 
 
அதில் அவள் லேசாக தடுமாறவும் சட்டென புஷ்பா வந்து அபிராமியை தாங்கி பிடித்திருந்தாள். இருவரும் நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள.. புஷ்பாவின் விழிகள் அபிராமியின் மேடிட்டு இருந்த வயிற்றின் மேல் படிந்து மீண்டது. 
 
 
அழுதழுது சிவந்து வீங்கி போயிருந்த முகமும் அந்த கண்களில் இருந்த ஏக்கமும் அபிராமியை வெகுவாக அசைத்துப் பார்க்க.. அதே நேரம் “சின்ன வயசில் இருந்து இவ அத்தை ரகோத்தமன் தான் உன் புருஷன்னு சொல்லி சொல்லியே வளர்த்து இவளை இப்படியாக்கி வெச்சு இருக்காங்க.. அது நடக்கலைனதும் இவ நடைப்பிணமா மாறிட்டா.. வாயும் வயிருமா இருக்கும் உன்கிட்ட இப்படி கேட்கறது சரி இல்லைன்னு எனக்கு தெரியும்.. ஆனா எனக்கு வேற வழி இல்லைம்மா, எனக்கு தாலி பிச்சை கொடும்மா.. இவ உயிரை காப்பாற்றி கொடும்மா..” என்று அவர் அழுகையோடு கைகூப்பி கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார் அபிராமி. 
 
 
*****
 
 
இரவு எட்டு மணி அளவில் வீடு திரும்பிய ரகோத்தமன் இருளிள் மூழ்கி இருந்த வீட்டை கேள்வியாக பார்த்தபடியே உள்ளே நுழைந்தார். விளக்குகளை அவர் ஒளிர விட, கண்ணீர் வழியும் முகத்தோடு கன்னத்தில் கை வைத்தபடி அபிராமி சோபாவில் அமர்ந்திருப்பது தெரிந்தது. 
 
 
அதில் திடுக்கிட்டவர் “அபி என்னாச்சும்மா..? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கே..!” என்று பதட்டத்தோடு நெருங்கி கேட்கவும், கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்தவர் இதுவும் பேசாமல் சட்டென இடையோடு ரகோத்தமனை சேர்த்து அணைத்து கொள்ள.. என்னவென புரியாவிட்டாலும் அவளுக்கு இப்போது தேவை இந்த அணைப்பு என்று மட்டும் புரிந்து ரகோத்தமன் அமைதியாக அபிராமியின் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
 
அன்று முழுக்க அபிராமி கொஞ்சமும் சரியில்லை.. வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை, சாப்பிடவில்லை கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருக்க.. எதையோ நினைத்து கலங்கி போய் அமர்ந்திருந்தார்.
 
 
என்ன நடந்திருக்கும் என புரியாமல் ரகோத்தமனுக்கு எதை எதையோ நினைத்து மனம் பதைத்தது. ஆனால் அவளாக சொல்ல விரும்பாத போது கேட்டு தொந்தரவு செய்ய விரும்பாமல் தன் அருகாமை இப்போது அபிராமிக்கு எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து அமைதியாக உடன் இருந்தார். 
 
 
இரண்டு நாட்கள் இப்படியே செல்ல.. மூன்றாம் நாள் காலை அவர் முன் வந்து நின்றார் அபிராமி. அவர் காத்திருந்த நேரம் வந்துவிட்டது என புரிய நிமிர்ந்து அபிராமியின் முகம் பார்த்த ரகோத்தமன் “என்னம்மா சொல்லு..” எனவும் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’ என்றாள் மெல்லிய குரலில் அபிராமி. 
 
 
“இது என்ன புதுசா இருக்கு, முன்னெல்லாம் பேச இப்படி அனுமதி கேட்டு இருக்கியா என்ன..?” என்றார் சிறு புன்னகையோடு ரகோத்தமன். ஆனால் பதிலுக்கு சிரிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்ற அபிராமியின் உடல் மொழியே பெரிதாக ஏதோ சரியில்லை என அவருக்கு புரிய வைத்திருந்தது.
 
 
அதில் ரகோத்தமன் அமைதியாகவே அபிராமியின் முகம் பார்த்து அமர்ந்திருக்க.. எதையோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக பல நிமிடங்கள் இருந்த அபிராமியை கண்டவருக்கு மனம் பிசைந்தது.
 
 
அபிராமியின் கையை இறுகப்பிடித்துக் கொண்டவர் “எதுவா இருந்தாலும் சொல்லு..” எனவும் கண்கள் கலங்க ரகோத்தமனை பார்த்த அபிராமி “எனக்கு.. எனக்கு ஒரு வாக்கு கொடுப்பீங்களா..?” என்றார். 
 
 
“வாக்கா.. என்ன வாக்கு..?” என அவர் நெற்றியை சுருக்கவும் “நான் என்ன சொன்னாலும் மறுக்காம செய்வேன்னு எனக்கு வாக்கு கொடுங்க..” என்று அபிராமி அவர் முன் தன் வலது கையை நீட்ட.. கூர்மையாக அபிராமியின் முகத்தைப் பார்த்தவர் “என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும் அபி, நீ சொல்லி நான் எதையும் மறுக்க மாட்டேன்..” என்றார்.
 
 
அதில் பேச வராமல் திணறிய அபிராமி உடைப்பு எடுக்க முயன்ற கண்ணீரை கட்டுப்படுத்தியவாறே “எனக்கு தெரியும், ஆனாலும் இப்போ எனக்கு நீங்க வாக்கு கொடுங்க.. இந்த விஷயத்தில் நிச்சயம் நான் சொல்றதை கேட்பேன்னு சொல்லுங்க..” என்று மீண்டும் கையை நீட்ட.. “அப்படி என்ன சொல்ல போற அபி..?” என்றார் சற்று அழுத்தமான குரலில் ரகோத்தமன்.
 
 
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அபிராமி கையை மட்டும் நீட்டிக் கொண்டிருக்க.. “உன்கிட்ட எதுவோ சரியில்லை.. நீ இப்படி எப்போவும் இருந்ததில்லை.. என்கிட்ட உனக்கு எதிர்பார்ப்புகளே கிடையாது, அப்படிப்பட்ட நீ இன்னைக்கு இப்படி கேட்கறேனா நிச்சயம் நான் அதுக்கு மறுப்பு தான் சொல்லுவேன்னு உனக்கு தெரிஞ்சுருக்கு இல்லையா..!” என்றார் அபிராமியின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி ரகோத்தமன். 
 
 
தன்னை இந்த அளவு புரிந்து வைத்திருப்பவரை எண்ணி மேலும் அபிராமியின் மனம் பாரமாக.. கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி வழிந்து கொண்டிருக்க.. “அபி..” என்றார் சற்று அழுத்தமான குரலில் ரகோத்தமன். 
 
 
அதில் கண்ணீர் விழிகளோடு ரகோத்தமனை பார்த்தார் அபிராமி. “உனக்கு இத்தனை வலிகளையும் வருத்தத்தையும் கொடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் நாம பேச வேண்டாம்..” என்றார் முடிவான குரலில் ரகோத்தமன். 
 
 
“இல்லை, எனக்கு பேசணும்.. பேசியே ஆகணும், நான் வாக்கு கொடுத்துட்டேன்..” என்றார் அபிராமி. “வாக்கா யாருக்கு..? நீ என்ன வாக்கு கொடுத்தே..! நான் என்ன வாக்கு உனக்கு கொடுக்கணும்..?” என்று துண்டு துண்டாக அபிராமி பேசியதை எல்லாம் இணைத்து குழப்பத்தோடு கேட்டார் ரகோத்தமன். 
 
 
அதில் நீண்ட ஒரு பெருமூச்சை எடுத்து விட்டபடியே ரகோத்தமனை தீர்க்கமாகப் பார்த்த அபிராமி “நீங்க.. நீங்க உங்க மாமா பொண்ணு புஷ்பாவை கல்யாணம் செஞ்சுக்கணும்..” என்றிருந்தார். 
 
 
அதில் உண்டான அதிர்வோடு “என்ன சொன்னே..?” என்று ரகோத்தமன் எழுந்து நின்று விட, “நான் குழந்தை மேலே சத்தியம் செஞ்சு கொடுத்துட்டு வந்துட்டேன்.. உங்களை அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு..” என்றார் அபிராமி. 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 508
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
 
MNKN - 9
 
 
 
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 18 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 508
Topic starter  
 
 
மௌனம் - 10
 
அபிராமி சொன்னதை கேட்ட நொடி அத்தனை அதிர்வோடு எழுந்து நின்றிருந்தார் ரகோத்தமன். “என்ன.. என்ன சொன்னே..?” என அவர் மீண்டும் தன் காதில் விழுந்ததை நம்ப முடியாத குரலில் கேட்க, அட்சரம் பிசகாமல் அதையே சொன்னார் அபிராமி. 
 
 
இதில் அப்படியே தளர்ந்து இருக்கையில் ரகோத்தமன் அமர்ந்துவிட, அவரை அப்படி ஒரு நிலையில் அபிராமியால் பார்க்கவே முடியவில்லை. 
 
 
“எப்படி..? எப்படி அபி.. இப்படி ஒரு வாக்கை கொடுத்துட்டு உன்னால் வர முடிஞ்சது..!’ என்ற கேள்வி மட்டுமே அவர் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருக்க.. அவர் முகமே அந்த தவிப்பை வெளிப்படுத்தியது. இதில் மேலும் தளர்ந்து போனார் அபிராமி. 
 
 
‘அன்று அவர் இருந்த மனநிலையா.. இல்லை சூழ்நிலையா.. அதுவுமில்லையெனில் அவரின் தலையெழுத்தா..!!’ என்று தெரியவில்லை ‘எப்படி அவர்களுக்கு இப்படி ஒரு வாக்கை கொடுத்துவிட்டு வந்தோம்..?’ என இந்த நொடி வரை அபிராமி எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
 
 
அதன் தாக்கமே அவரை உள்ளுக்குள் கொன்று கொண்டிருக்க.. அதனாலேயே இத்தனை நாள் எதையும் பேசாமல் தனக்குள்ளேயே தவிர்த்துக் கொண்டிருந்தார் அபிராமி. ஆனால் எத்தனை தான் தள்ளிப் போட்டாலும் பேசி தானே ஆக வேண்டும்..? கொடுத்த வாக்கு இல்லை என்றாகாதே..! அதுவும் “பேச்சு மாறிட மாட்டியே..! உண்மையா தானே சொல்றே..? உன் குழந்தை மேலே சத்தியமா சொல்லு..” என ராதா அத்தனை தவிப்பும் பதட்டமுமான குரலில் தன்னிடம் கேட்ட போது ‘ஆம்’ என வயிற்றின் மேல் கையை வைத்து அவர் சொல்லியது, இந்த நொடி வரை அபிராமியை குத்தி கிழித்து கொண்டிருக்கிறது. 
 
 
‘இன்னும் பிறக்காத என் குழந்தையின் மேல் நான் சத்தியம் செய்து விட்டு வந்திருக்கிறேன்.. எப்படி என்னால் இதை செய்ய முடிந்தது..? எப்படி என் உயிரான ரகுவை என்னால் விட்டுக் கொடுக்க முடிந்தது..? அப்போ நான் ரகுவின் மேல் வைத்திருப்பது உண்மையான காதல் இல்லையா..!’ என்றெல்லாம் மருகிக் கொண்டு இருந்தவருக்கு, இது எல்லாமே ராதா தன் அனுபவத்தின் மூலம் பேசிப் பேசியே அபிராமியை வளைத்து இருந்த செயல் என அந்த நொடி வரை புரியவில்லை.
 
 
இப்போதும் ரகோத்தமனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியாமல் தவிப்பும் தடுமாற்றமுமாக கண்ணீர் வழிய கைகளை பிசைந்தபடி அபிராமி நின்றிருக்க.. அவரை அந்த நிலையில் காண முடியாமல் தன் வலிகளையும் வருத்தங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு “அபி..” என்றார் குரல் தழுதழுக்க ரகோத்தமன். 
 
 
அந்த அழைப்பிற்கே முற்றிலும் உடைந்து போன அபிராமி ரகோத்தமனை அணைத்து கொண்டு கதறிவிட, அவரின் முகத்தில் இருந்தே அபியின் மனதை ஓரளவு படித்து விட்டிருந்த ரகோத்தமனாலும் அவரை கண்டிக்க முடியவில்லை.
 
 
வார்த்தைகளின்றி தன் மணையாளை அமைதிப்படுத்த ரகோத்தமன் முயன்று கொண்டிருக்க.. பல நிமிடங்களுக்குப் பிறகு கண்ணீரோடு விழிகளை உயர்த்தி ரகோத்தமனை பார்த்த அபி “என்னை மன்னிச்சுடுங்க, எனக்கு வேற வழி தெரியலை..” என்று கையெடுத்து கும்பிட்டார்.
 
 
இதற்கு மேலும் கேட்காமல் இருக்க முடியாமல் “எப்படி.. எப்படி அபி உன்னால் என்னை இன்னொருத்தருக்கு விட்டுக் கொடுக்க முடிஞ்சது..? உன்னால் அது முடியும்னு நீ நினைக்கறியா..?” என தன் மேலான அபியின் காதலின் ஆழத்தை உணர்ந்து இருந்தவர் மனதை மறைக்காமல் கேட்டு விட, மீண்டும் உடைந்து அழ மட்டுமே முடிந்ததேத் தவிர வார்த்தைகளால் அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை. 
 
 
இதில் அன்றைய நாள் அப்படியே அழுகையும் சமாதானமுமாக செல்ல.. மறுநாள் மீண்டும் அபிராமி இதே பேச்சை தொடங்கவும், ரகோத்தமனுக்கு கோபம் வந்துவிட்டது. “இன்னொரு முறை இந்த வீட்டில் இந்த பேச்சு இருக்கக் கூடாது..” என அவர் கண்டிப்பான குரலில் கூறி விட, தவிப்போடு அவரைப் பார்த்த அபிராமி “ஆனா, நான் சத்தியம் செஞ்சு கொடுத்துட்டேனே..! அதுவும் குழந்தை மேலே..” என்றார். 
 
 
“என் கோபமே அது தான் அபி.. எப்படி உன்னால் இப்படி ஒரு சத்தியத்தை செய்ய முடிஞ்சது..? அதுவும் நம்ம குழந்தை மேலே, நம்ம காதலின் சாட்சியவன்.. அவன் மேலே சத்தியம் செஞ்சு நீ என்னை இன்னொருத்திக்கு விட்டு கொடுப்பியா..? பைத்தியக்காரத்தனமா இல்லை..” என கத்தினார் ரகோத்தமன்.
 
 
“பைத்தியம் தான், நான் பைத்தியம் தான்.. எப்படி இதை செஞ்சேன்னு எனக்கே புரியலை.. ஆனா நான் செஞ்ச சத்தியம் அதுவும் கோவிலில் வைச்சு, இதை காப்பாத்தலைனா குழந்தைக்கு ஏதாவது..” என பேசிக் கொண்டே செல்ல.. வேகமாக அபிராமியின் வாயை தன் கரம் கொண்டு மூடியிருந்தவர் “என்னை அடிக்க வெச்சுடாதே அபி, போதும் உன் உளறல் எல்லாம்..” என்றார்.
 
 
“ஐயோ என் நிலைமை உங்களுக்கு புரியலையே..! என் குழந்தை..” என்று அவர் மீண்டும் புலம்ப.. “அப்போ நான்.. என்னை பத்தி யோசிக்க மாட்டியா..! நான் என்ன காய்கறியா..? யாரோ கேட்டதும் இந்தா எடுத்துக்கோன்னு தூக்கி கொடுக்க.. எனக்கும் மனசு இருக்கு, அது முழுக்க நீ மட்டுமே இருக்கே.. என்னால் உன் பைத்தியக்காரத்தனமான வாக்குக்கு எல்லாம் தலையாட்ட முடியாது..” என்று கோபமாகவே தன் முடிவை கூறியிருந்தார் ரகோத்தமன். 
 
 
இதில் வேறு எதுவும் பேச முடியாமல் உடைந்து அழுதார் அபிராமி. அவரை அப்படி அழவிட்டு செல்லவும் ரகோத்தமனால் முடியவில்லை. அருகில் சென்று அமர்ந்து சமாதானம் செய்ய.. “நான் ஏன் அப்படி செஞ்சேன்னு எனக்கு புரியலை.. நிஜமாவே புரியலை, அவங்க சொன்ன அந்த உயிரை காப்பாற்றிக் கொடு.. அந்த வார்த்தை என்னை ஏதோ செஞ்சது, திடீர்னு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் வலி எனக்கு தானே தெரியும்.. அவங்களுக்கும் அப்படி ஒரு நிலைமை வந்திடக் கூடாதுன்னு நினைச்சேன், அதில் தான் நான் சரி உங்ககிட்ட பேசி பார்க்கறேன்னு சொன்னேன்.. ஆனா அதுக்கு பிறகு..” என்றவருக்கு நிஜமாகவே அடுத்தடுத்து நடந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வரவே இல்லை. 
 
 
அந்த அளவு அவரின் மனம் மறுத்துப் போயிருந்தது. சிறுவயதில் இருந்தே ராதாவின் குணத்தை அறிந்திருந்தவர் என்பதால் எப்படியெல்லாம் பேசி தனக்கு சாதகமாக ஒரு வேலையை சாதித்துக் கொள்வார் என ரகோத்தமனுக்கு நன்றாக தெரியும்.
 
 
இதில் அவர் ஏதோ விளையாடுகிறார் என்பதும் ரகோத்தமனுக்கு தெளிவாக புரிந்தது. அதே நேரம் புஷ்பாவின் மீதும் அவருக்கு கோபம் எழாமல் இல்லை. எந்த நம்பிக்கையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இத்தனை வருடம் அவர் காத்திருந்தார்..? 
வீட்டில் பெரியவர்கள் என்றால் ஆயிரம் பேசுவார்கள், ஆனால் ஒரு வளர்ந்த பெண்ணாக அவரால் தன் கணவனாக வரப்போகிறவன் என எண்ணிக்கொண்டிருப்பவனின் மனதை கூட அறிந்து கொள்ள முடியவில்லையா என்ன..?  
 
 
இத்தனை வருடத்தில் அவரிடம் அப்படி ஒரு பார்வையோ.. இல்லை ஒரு வார்த்தையோ என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்குமா..! இன்னும் சொல்லப்போனால் ராஜேந்திரன் புஷ்பாவிடம் பேசும் அளவிற்கு கூட இதுவரை ரகோத்தமன் பேசியது இல்லை.
 
 
ஏனெனில் ரகோத்தமனுக்கு ராதாவின் குணம் பிடிக்காது. அதனால் அவரின் குடும்பம் சம்பந்தப்பட்ட யாரிடமும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. ரகோத்தமன் இப்படி இருக்க புஷ்பா தனக்கு மணமான பிறகும் உயிரை மாய்த்துக் கொள்வது, மீண்டும் அபிராமியிடம் பேச முயல்வது எல்லாம் அவருக்கு வெறுப்பை கொடுத்தது. 
 
 
இதில் இருவருக்குள்ளும் நிறைய வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. வாக்குவாதம் என்பது இங்கு எப்படி இருந்தது என்றால், தயவு செய்து இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளுமாறு ஒரே ஒரு வரி மட்டும் தான் அபிராமியின் பக்கம் இருந்து வரும். 
அதன் பிறகு ஒன்று கோபத்தில் ரகோத்தமன் ஏதாவது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்து விடுவார், இல்லை எனில் அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்து விடுவார். ஆனால் இதற்கே அபிராமி அன்று முழுக்க அழுது கரைவார்.
 
 
இருவராலும் அவர்களுக்குள் இருந்த காதலின் வீரியத்தால் பெரிதாக சண்டை கூட போட்டுக் கொள்ள முடிந்ததில்லை. இப்படியே நாட்கள் செல்ல.. ரகோத்தமன் அறியாமல் அபிராமியை சந்திக்க ராதா முயன்றதெல்லாம் தோல்வியில் முடிந்தது. 
 
 
ஏனெனில் அன்றைய நாளுக்குப் பிறகு ரகோத்தமன் அபிராமியை தனியே எங்கும் அனுப்புவதில்லை. இதிலேயே இரண்டு வாரங்கள் கடந்து இருக்க.. வேதவல்லி மாடிப்படியில் உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இருப்பதாக தகவல் வந்தது. 
 
 
இதில் கவலையான ரகோத்தமன் வேதவல்லியை காணச் செல்ல.. உடன் வருவதாக கேட்க நினைத்தாலும் அபிராமிக்கு தயக்கமாக இருந்தது. ‘அன்று தன்னை அத்தனை பேசி வெளியே தள்ளியவர், இன்று மட்டும் ஏற்றுக் கொள்ளவாப் போகிறார்..?’ என தோன்ற அமைதியாகவே இருந்து விட்டார். 
 
 
இதெல்லாம் புரிந்ததாலோ என்னவோ..! ரகோத்தமன் கூட அபிராமியை வாவென அழைக்கவில்லை. அவருக்கும் தன் அன்னையின் குணம் பற்றி தெரியும் தானே..! அதோடு இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனையில் மீண்டும் அவர்கள் முன் அபிராமியை கொண்டு சென்று நிறுத்த விரும்பாமல் தனியாகவே கிளம்பி சென்றார் ரகோத்தமன்.
 
 
ஆனால் அவர் நினைத்ததற்கும் மேலாக அங்கு வேதவல்லி நிலை இருந்தது. அவர் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லிவிட, அவர் மேலான கோபம் எல்லாம் பின்னுக்கு சென்று ஒரு அன்னையாக வேதவல்லியின் முகம் பார்க்க வெகுவாக துடித்தார் ரகோத்தமன். 
 
 
அதற்கும் வேதவல்லி அனுமதிக்கவில்லை. ரகோத்தமனை பார்க்கவே மறுத்து விட, ஒரு நாள் முழுக்க அந்த அறைக்கு வெளியிலேயே காத்திருந்தார் ரகோத்தமன். 
 
 
நேரமாக ஆக பரபரப்பாக மருத்துவர்கள் அங்கு வந்து செல்வதும் கவலையான முகங்களோடு ராதாகிருஷ்ணனிடம் எதுவோ சொல்வதுமாக இருக்க.. மனதளவில் பெரிதும் தவித்துப் போனார் ரகோத்தமன். 
 
 
கிட்டதட்ட வேதவல்லியின் இறுதி நொடிகள் இதுவென தொடர்ந்து சொல்லப்பட்டு கொண்டிருக்க.. அவரை ஒரு முறையாவது பார்த்து பேசி விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது. 
 
 
அதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் ரகோத்தமன் எடுத்துக் கொண்டிருக்க.. “அம்மா தான் உன்னை பார்க்க விரும்பலைன்னு சொல்லிட்டாங்களே..! திரும்பத் திரும்ப ஏன் அவங்களை தொந்தரவு செய்யறே?” என்று கத்தி இருந்தான் ராஜேந்திரன். 
 
 
இதில் ரகோத்தமன் கோபப்படாமல் அமைதியாகவே அந்த சூழ்நிலையை கையாள முயல.. ராதாகிருஷ்ணனுக்கு தான் கொஞ்சம் சங்கடமாகி போனது. அதில் பெரிய மகனுக்காக பேசி பார்ப்பதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், அடுத்த 15 நிமிடத்தில் வெளியில் வந்து ரகோத்தமனை உள்ளே செல்லுமாறு கூறினார். 
 
 
இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதோ..! இறுதிவரை வேதவல்லியை பார்த்து பேசவே முடியாதோ..!! என்று தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்த ரகோத்தமன், அத்தனை பதட்டத்தோடு உள்ளே நுழைய.. அவரைக் கண்டதும் விழிகளை மூடிக்கொண்டார் வேதவல்லி.  
 
 
தலையில் அவ்வளவு பெரிய கட்டுடன் ஐசியூவில் படுத்திருப்பவரை காணும் போதே ரகோத்தமனுக்கு மனம் பிசைந்தது. “அம்மா..” என தவிப்போடு அவர் அழைக்கவும், மெதுவாக விழிகளை திறந்தவர் “என்னை அப்படி கூப்பிடாதே..!” என்றார். 
 
 
“அம்மா ப்ளீஸ், இன்னும் என் மேலே இருக்க கோபம் உங்களுக்கு போகலையா..?” என அவர் கேட்க “நான் கோபமா இருக்கேன்னு தெரிஞ்ச உனக்கு, அதை எப்படி போக வைக்கணும்னு தெரியலையா என்ன..?” என்றார் சோர்வான குரலில் வேதவல்லி.
 
 
இதில் ஒரு நொடி அமைதியான ரகோத்தமன், பின் “இப்போ எதுக்கும்மா இந்த பேச்சு..?” என்று தணிந்து வரவும், “வேற எப்போ பேச சொல்றே..? அதான் இனி நான் பேசவே போறதில்லைன்னு டாக்டர் சொல்றாங்களே..!” என்று அவர் சொல்லவும், பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் ரகோத்தமன்.
 
 
இப்படியே பேச்சு செல்ல.. மெதுவாக வேதவல்லியின் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திவைத்துக் கொண்ட ரகோத்தமன் “அம்மா ப்ளீஸ் அமைதியா இருங்க, உங்களுக்கு சீக்கிரம் சரியாகிடும்..” எனக் கூற, “நீ என்ன டாக்டரா..? அவங்க தான் முடியாது சீக்கிரம் செத்துவிடுவேன்னு சொல்லிட்டாங்களே..!” என்றார் வேதவல்லி.
 
 
“அப்படியெல்லாம் இல்லைம்மா, உங்களுக்கு எதுவும் ஆகாது.. நீங்க வேணும்னா பாருங்க சீக்கிரம் எல்லாம் சரியாகி வீட்டுக்கு வந்துடுவீங்க..” என மீண்டும் ரகோத்தமன் சொல்ல.. “எனக்கு போலி நம்பிக்கையை கொடுக்காதே ரகு.. உன்னால் முடிஞ்சா என் கடைசி ஆசையை நிறைவேத்த பார்..” என்றார் வேதவல்லி. 
 
 
ஓரளவு அவர் எதை பேசப்போகிறார் எனப் புரிந்து இருந்தாலும் இனி அதைப் பற்றி பேச வேண்டாம் என வேறு சமயங்களில் காறாராக சொல்வது போல் ரகோத்தமனால் இந்த நிமிடம் சொல்ல முடியவில்லை. அதில் அவர் அமைதியாகவே நிற்க.. 
 
 
“என்ன ஆசைன்னு கூட கேட்க மாட்டியா ரகு..?” என்று வருத்தத்தோடு கேட்டார் வேதவல்லி. இதில் வேறு வழி இல்லாமல் “சொல்லுங்கம்மா..” என்றார் ரகோத்தமன். 
 
 
“எனக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும்..” என்று வேதவல்லி கூறவும், “ஆனா அம்மா எனக்கு கல்யாணம் தான் ஆகிடுச்சே..” என்றார் ரகோத்தமன். “நான் எதைப் பத்தி பேசறேன்னு உனக்கு நல்லா தெரியும் ரகு.. நீ புஷ்பாவை கல்யாணம் செஞ்சுக்கணும், இது எனக்காக.. நம்ம குடும்பத்துக்காக.. நம்ம குடும்ப கௌரவத்துக்காக.. அவ உனக்காக உயிரை விடும் அளவுக்கு உன் மேலே உயிரா இருக்கா.. இப்படி ஒருத்தி வாழ்க்கையில் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்..” என்று வேதவல்லி மூச்சு வாங்க சோர்வான குரலில் பேசிக் கொண்டே செல்ல.. “அபிராமியும் அப்படித்தான் ம்மா..” என்றிருந்தார் ரகோத்தமன். 
 
 
இதைக் கேட்டு வேதவல்லியின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. “நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன சொல்றே ரகு..? அவளை பத்தி என்கிட்ட பேசாதே.. என் கடைசி ஆசையை நான் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன், ஆனா அதை நிறைவேற்ற உனக்கு தோணலை.. சரி விடு..” என்றார் முகத்தை திருப்பிக் கொண்டு வேதவல்லி. 
 
 
இதில் செய்வதறியாது தவித்துப் போனார் ரகோத்தமன். அதற்குள் நர்ஸ் வந்து ரகோத்தமனை வெளியில் அனுப்ப முயல.. மீண்டும் பரபரப்பாக மருத்துவர்கள் உள்ளே செல்வதும் வெளியில் வருவதுமாக இருந்தனர். இதை பார்க்க பார்க்க அவருள் ஒரு குற்ற உணர்ச்சி உருவானது. 
 
 
அதை அதிகமாக்குவது போல் ரகோத்தமனை முறைத்துக் கொண்டு அங்கே நின்றிருந்த ராஜேந்திரன் “நீ எல்லாம் ஒரு பிள்ளையா..? அம்மாவோட கடைசி ஆசையை கூட நிறைவேற்ற மாட்டேன்னு சொல்றே..!” என்று திரும்பத் திரும்ப பேச.. ‘ஒரு கட்டத்தில் தான் நல்ல பிள்ளை இல்லையோ..!’ என ரகோத்தமனுக்கே தோன்றி விட்டது. 
 
 
இதில் தலையை நிமிர முடியாமல் ரகோத்தமன் அப்படியே இரு கைகளால் நெற்றியை தாங்கியபடி அமர்ந்து விட, ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த நர்ஸ் “இங்கே ரகு யாரு..? உங்களை பாக்கணும்னு கேட்கறாங்க..” என்றார்.
 
 
காலை முதல் அத்தனை தவித்து நின்றிருந்த ரகுவுக்கு வேதவல்லியாக தன்னை பார்க்க கேட்டது அவ்வளவு நிம்மதியை கொடுத்த அதே நேரம் மனதிற்குள் பெரும் பதட்டமும் உருவானது. 
 
 
அவரின் பயத்தை உண்மையாக்குவது போல் ரகோத்தமனின் முன் தன் வலது கரத்தை நீட்டிய வேதவல்லி “எனக்கு நிறைய நேரம் இல்லை ரகு, என் ஆசையை நிறைவேற்றுவேன்னு வாக்கு கொடு..” என்றார். இதில் தவித்து தடுமாறிப்போனார் ரகோத்தமன். 
 
 
“சின்ன வயசில் இருந்து அந்த பொண்ணுக்கு நான் ஆசை காண்பிச்சு வளர்த்துட்டேன்.. உன்னை கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன்.. இப்போ அதை நிறைவேற்றாமல் நான் செத்தா என் ஆன்மா கூட சாந்தி அடையாது..” என்று அவர் சொல்லிக் கொண்டே செல்ல “ம்மா..” என்றார் கலங்கிய குரலில் ரகோத்தமன்.
 
 
“எனக்கு வாக்கு கொடு..” என்று சோர்வாக கேட்டுக் கொண்டே வேதவல்லி விழிகளை மூடிவிட பதறிவிட்டார் ரகோத்தமன். அதற்கு மேல் அவரால் சரி என சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை இதுவே வேதவல்லலியின் இறுதி நாளாக இருந்து அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் போனால், இந்த குற்ற உணர்ச்சியே தன்னைப் கொன்றுவிடும் என இந்த சில மணி நேரங்களில் அவருக்கு நன்றாகவே புரிந்து போயிருந்தது.
 
 
அங்கு அபிராமி வாக்கு கொடுத்து விட்டேன் என்று சொன்னது.. இப்போது வேதவல்லி வாக்கு கேட்பது என மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட, ஒருவகையான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த ரகோத்தமன் வேறு வழி இல்லாமல் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு வேதவல்லியின் கரத்தில் தன் கரத்தை பதித்திருந்தார். 
 
 
“நிஜமா.. நிஜமாதானே சொல்றே..! அப்புறம் பேச்சு மாறமாட்டியே.!” என வேதவல்லி கேட்க.. ‘இல்லை’ என்பதாக அசைந்தது ரகோத்தமனின் தலை. “எனக்கு நிறைய நேரம் இல்லை ரகு, நாளைக்கு இந்த கல்யாணத்தை நடத்திடலாம்..” என அவர் சொல்லவும் “நாளைக்கே வா..!” என்றார் காற்றாகி போன குரலில் ரகோத்தமன்.
 
 
“எனக்கு நேரம் இல்லை ரகு..” என்று மீண்டும் அவர் அதையே பேச.. சோர்வாக விழிகளை மூடி நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்ட ரகோத்தமனுக்கு, எல்லாம் தன் கையை மீறி செல்வது போல் இருந்தது. ‘தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு அதை தடுத்த நிறுத்த முடியுமா..!’ என்ற மனநிலையோடு “உங்க இஷ்டம்..” என்று விட்டு வேகமாக வெளியேறி இருந்தார் ரகோத்தமன். 
 
 
அவர் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ‘எப்படி..? எப்படி இப்படி ஒரு வாக்கை என்னால் கொடுக்க முடிந்தது..? அபிராமியிடம் இதைப் பற்றி எப்படி பேச போகிறேன்..?’ என்றெல்லாம் அவர் தவித்துக் கொண்டிருக்க.. இங்கு வேதவல்லி ராஜேந்திரனின் மூலம் நாளைய தினத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டிருந்தார்.
 
 
இங்கு அபிராமியின் முன் இதை எப்படி சொல்வது என்ற தயக்கத்தோடு அமர்ந்திருந்தார் ரகோத்தமன். அவர் வந்ததிலிருந்து வேதவல்லியின் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள அபிராமி தவித்துக் கொண்டிருக்க.. இவரின் இந்த தயக்கம் என்னவோ என்ற பயத்தை அபிராமிக்கு கொடுத்திருந்தது. 
 
 
பெறும் தயக்கத்திற்கு பிறகு ஒரு வழியாக ரகோத்தமன் அனைத்தையும் சொல்லி முடித்திருக்க.. பல நிமிடங்களுக்கு அபிராமியிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. அப்படி அவர் பேச்சு இல்லாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட ரகோத்தமனுக்கு மனம் இன்னும் வலித்தது.  
 
 
அதில் மெல்ல “அபி..” என அவர் கையை தொடவும், தன் உணர்வு மீண்டு இருந்த அபிராமி “உங்க முடிவு சரிதான், உங்க வாக்கை காப்பாத்துங்க..” என்றதோடு முடித்துக் கொண்டார். 
 
 
‘அன்று அபிராமி சொல்லும் போது அத்தனை பேசி மறுத்துவிட்டு, இன்று இப்படி வேதவல்லியிடம் சம்மதித்திருப்பதை வைத்து ஏதேனும் பிரச்சனை செய்வாரோ..! கோபப்படுவாரோ..!!’ என்றெல்லாம் எண்ணி இருந்த ரகோத்தமனுக்கு அவரின் இந்த அமைதியான அணுகுமுறை இரு வேறு உணர்வுகளை கொடுத்தது.
 
 
‘எப்படி எல்லாம் பேசி சமாதானம் செய்து சமாளிக்க வேண்டி வருமோ..!’ என இருந்த பயம் நீங்கி.. இதில் உண்டான ஆசுவாசமும் அதே நேரம் இத்தனை எளிதாக எடுத்துக் கொண்டாரா..!’ என்பதில் உண்டான வருத்தமும் ஒரே நேரத்தில் அவருக்கு தோன்றியது. 
 
 
ஆனால் இவர்களின் உணர்வுகளுக்கு எல்லாம் நேரம் கொடுக்காமல் மறுநாள் காலையில் மருத்துவமனையில் வைத்து வேதவல்லியின் முன் புஷ்பாவின் கழுத்தில் ரகோத்தமனை தாலி கட்ட செய்திருந்தார் வேதவல்லி. 
 
 
அடுத்த சில நாட்களில் வேதவல்லி முழுமையாக குணமாகி வீடு திரும்பி இருக்க.. அதன் பின் நடந்ததெல்லாம் ரகோத்தமன் கொஞ்சமும் எதிர்பாராதது. அவ்வளவு முடியாமல் இருந்தவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றவர் எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமானார் என்று யோசிக்கும் போதே தான் திட்டமிட்டு கச்சிதமாக ஏமாற்றப்பட்டிருப்பது புரிய கலங்கிப் போனார் ரகோத்தமன். 
 
 
இத்தனை திடமாக இவர்களின் குணம் பற்றி எல்லாம் தெளிவான புரிதலோடு இருந்த தன்னையே இவ்வளவு தூரம் ஏமாற்றிய இவர்களுக்கு, அபிராமியை தங்கள் விருப்பத்திற்கு வளைப்பது எவ்வளவு எளிது என்று வலியோடு அந்த நொடி ரகோத்தமனுக்கு புரிந்தது.
 
 
அதில் உண்டான கோபமும் வெறுப்பும் மனம் முழுக்க பரவி இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு புஷ்பாவையும் விட்டுவிட முடியாமல் இருவரையும் கவனித்துக் கொள்ள தொடங்கினார் ரகோத்தமன். அதை வைத்து மீண்டும் வீட்டில் ஒரு பிரச்சனையை கிளப்பினார் வேதவல்லி.
 
 
அவர் எதிர்பார்த்தது இதுவல்லவே..! புஷ்பாவை திருமணம் செய்து வைத்தால், அபிராமியிடம் இருந்து விலகி விடுவார் என நினைத்திருக்க.. அப்படி ஒரு எண்ணமே இல்லாதது போல் தான் இருந்தது ரகோத்தமனின் நடவடிக்கைகள்.
 
 
அதற்கேற்றார் போல் அடுத்த சில மாதங்களில் விநாயக் பிறந்து விட்டிருக்க.. ரகோத்தமனை கையில் பிடிக்க முடியவில்லை. தன் மகன் என்ற அன்பும், அபிராமியின் மீதான காதலோடும் வாழ்க்கையை தொடங்கி இருந்தவருக்கு இந்த குழந்தையின் மீதான பெரும் எதிர்பார்ப்பும் சேர்ந்து விநாயக்கை தன் கையில் இருந்து கீழே இறக்கி விடவே மனமில்லாமல் அவரை கொஞ்சி கொண்டாட வைத்தது. 
 
 
அதே நேரம் புஷ்பாவும் அங்கு கருவுற்று இருக்க.. அதை வைத்து அபிராமியை கழற்றி விட கூட வேதவல்லி முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இப்போதும் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. 
 
 
ரகோத்தமனின் முழு ஆதரவும் எப்போதும் அபிராமிக்கு தான் இருந்தது. தன்னை வேதவல்லி இவ்வளவு முட்டாளாக்கி புஷ்பாவுடன் திருமணம் செய்து வைத்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 
 
 
ஆனால் அதே நேரம் தன் அன்னை என்ற மரியாதையால் அவரால் கடுமையாக வேதவல்லியிடம் நடந்து கொள்ளவும் முடியவில்லை. இதில் தனக்குள்ளேயே தவித்து தடுமாறி ஒரு வழியாக இரு பக்கமும் சமநிலையோடு குடும்பத்தை கொண்டு செல்ல போராடிக் கொண்டிருந்தார் ரகோத்தமன்.
 
 
அவருக்கு நடந்து முடிந்த எதையும் மாற்ற முடியாது என நன்றாக புரிந்திருந்தாலும், புதிதாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கையை கொண்டு செல்ல முயன்றார் ரகோத்தமன்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 508
Topic starter  
 
 
மௌனம் - 11
 
அதன் பின் முற்றிலும் ரகோத்தமன் வேதவல்லியிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டார் எனலாம். அவராக ஏதாவது கேட்டால் மட்டுமே ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வதோடு மரியாதையுடன் விலகி நின்று கொண்டார்.
 
 
விருப்பமே இல்லை என்றாலும் தன் கழுத்தில் அணிவித்த மாங்கல்யத்திற்கு மதிப்பளித்து ரகோத்தமன் தன்னோடு வாழ்வதை புரிந்து கொண்ட புஷ்பா, எல்லா வகையிலும் அவருக்கு துணை நிற்க தொடங்கினார்.
 
 
புஷ்பாவை வைத்து ரகோத்தமனை தன் வழிக்கு வரவழைக்க நினைத்திருந்த வேதவல்லிக்கு இது மிகப் பெரிய அடி. அபிராமியை ரகோத்தமன் வாழ்க்கையில் இருந்து விரட்டி அடிக்க புஷ்பா மூலம் எத்தனையோ முயற்சிகளை வேதவல்லி எடுத்தும் எல்லாம் தோல்வியை சந்தித்தது.
 
 
தனக்காக தன் காதல் கணவனை விட்டுக் கொடுத்த அபிராமியின் மேல் தனி ஒரு அன்பும் மரியாதையும் புஷ்பாவுக்கு உண்டாகியிருந்தது. அதோடு தன் கணவனின் மனதில் நிறைந்திருப்பவர் என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள.. அவர்களுக்கான உரிமைகளில் தலையிடாமல் இருந்து விடுவார் புஷ்பா.
 
 
ராதா கிட்டத்தட்ட வேதவல்லலியின் மற்றொரு வடிவம் எனலாம். அவரும் தன் மகளிடம் எவ்வளவோ இதைப்பற்றி பேசி பார்த்தும், எதற்கும் புஷ்பா வளைந்து கொடுக்க தயாராக இல்லை. அவர் எதிர்பார்த்தது ரகோத்தமன் உடனான ஒரு வாழ்க்கை. அது கிடைத்துவிட்ட பிறகு வேறு எதுவும் தனக்குத் தேவையில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டிருந்தார் புஷ்பா. 
 
 
இதெல்லாம் சேர்ந்து புஷ்பாவை ஓரளவு ரகோத்தமனுக்கு பிடிக்க தொடங்கி இருந்தது. பக்கத்தில் இருந்து பார்த்து பேசி பழக தொடங்கிய பின்பே, வேதவல்லி போலவோ ராதா போலவோ புஷ்பா கொஞ்சமும் இல்லை என்று அவருக்கு புரிந்தது.
 
 
அதோடு புஷ்பாவை புரிந்து கொள்ளவும் முயன்றார். இந்த திட்டங்களில் எல்லாம் புஷ்பாவுக்கும் தொடர்பு உண்டு என முன்பு நினைத்திருந்தவர், அதன் பிறகு சமாதானமாகி புஷ்பாவுடன் நேரடியாக அனைத்தையும் பேசி பார்த்த போது தான் இதெல்லாம் புஷ்பாவுக்கு தெரியாது என்பதும், தனக்கு கிடைத்த வாய்ப்பை மறுக்க மனமில்லாமல் அமைதியாக இருந்து விட்டதையும் மறுக்காமல் மறைக்காமல் ஒத்துக் கொண்டிருந்தார் புஷ்பா. 
 
 
இப்படி இவர்கள் வாழ்க்கை இடையில் கொஞ்சம் தடுமாறினாலும் அதன் பின் சமநிலையில் சரியாகப் பயணிக்க தொடங்கி இருக்க.. வேதவல்லி மட்டும் தன் முயற்சிகளை ஒருபோதும் கைவிடவில்லை. ராதாகிருஷ்ணனில் தொடங்கி ரகோத்தமன் புஷ்பா என்று அனைவரிடமும் முயன்று பார்த்தவர் யாரும் தனக்கு கை கொடுக்காததில் அவ்வப்போது திட்டங்களை மட்டும் தான் மாற்றிக் கொண்டிருந்தாரே தவிர தன் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. 
 
 
இதில் வேதவல்லியின் அத்தனை முயற்சிகளுக்கும் எப்போதும் துணை நிற்பது ராஜேந்திரன் மட்டுமே..! அதில் குறுக்கு வழியில் கூட முயன்று பார்த்து இருவரும் தோற்று இருந்தனர். அதன் அடுத்த படியாக சற்றும் யோசிக்காமல் தன் முயற்சியில் மனம் தளறாத வேதாளம் போல் புஷ்பாவின் மீது இருந்த தன் கவனத்தை புஷ்பாவின் மகன் நிதினின் பக்கம் திருப்பி இருந்தார் வேதவல்லி. 
 
 
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிஞ்சு மனதில் மற்றவர்களை விட, ‘நான் மட்டுமே உன் வாழ்க்கையின் நலனை பற்றி யோசிப்பேன்.. நான் சொல்வதை நீ கேட்டு நடந்தால் மட்டுமே உன் வாழ்க்கை சிறக்கும்..!’ என்றெல்லாம் பதிய வைத்துக் கொண்டே இருந்தார்.
 
 
அது சரியாகவும் வேலை செய்தது. தன் பெற்றவர்களை விட பாட்டியிடமே அதிகம் இருக்கத் தொடங்கினான் நிதின். அப்போதெல்லாம் நந்தினி இங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவள் தன் தந்தையுடன் அந்த வீட்டில் வளர்ந்து கொண்டு இருந்தாள். 
 
 
அந்த நேரம் மானஸாவும் பிறந்திருக்கவில்லை என்பதால் ஒரே பேரனின் மேல் அதீத பாசத்தோடு வேதவல்லி நடந்து கொள்வதாக புரிந்து கொண்ட ரகோத்தமனும் இதை பெரிதாக நினைக்கவில்லை. புஷ்பாவும் இதில் எல்லாம் தலையிடுவது இல்லை. 
 
 
பிள்ளைக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவர் அங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்க.. இந்த உறவு சிக்கலோ தன்னை சுற்றி இப்படி ஒரு சதி வலை நடப்பதையோ அறியாத விநாயக், தாயின் அன்பிலும் தந்தையின் அதீத பாசத்திலும் அந்த வயதிற்கேயான அத்தனை சந்தோஷங்களோடும் வளர தொடங்கியிருந்தான்.
 
 
ரகோத்தமனின் அன்பின் காரணமாக அமைதியாக இருந்தாலும் அபிராமிக்கு வேதவல்லியின் குணமும் அவர் அடுத்து என்ன செய்ய முயல்கிறார் என்பதும் நன்றாக புரிந்தே இருந்தது.
 
 
ஆனால் ரகுத்தமனை விட்டு விலகி நிற்பதெல்லாம் தன்னால் முடியாது எனப் புரிந்தே அமைதியாக அனைத்தையும் பொறுத்துக் கொள்ள தொடங்கிய அபிராமி, முதலில் செய்தது தன் பிள்ளையின் பாதுகாப்பையும் அவனின் இளமைப் பருவம் இயல்பாக அமைதியாக செல்ல வேண்டும் என்பதையும் உறுதி செய்தது தான்.
 
 
அதில் அவர் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளைகளோடு சேர்த்து விநாயக்கையும் மிகப் பெரிய பள்ளி ஒன்றின் விடுதியில் சேர்த்து விட்டிருந்தார். அதோடு நடிப்பதையும் அபிராமி நிறுத்தவில்லை. தன் மகனுக்கு தேவையான எல்லாம் எப்போதும் கிடைக்க யார் உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ தேவையான அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தார்.
 
 
அதில் அவ்வப்போது எழும் சலசலப்புகள் எல்லாம் அவனுக்கு தெரியாமலே போனது. விநாயக் விடுமுறையில் வரும் நேரங்களில் பெரும்பாலும் அவனோடு இருப்பது போல் பார்த்துக் கொண்டார் ரகோத்தமன்.
 
 
இப்படியே வாழ்க்கை சென்று விட்டால் பிறகு விதி என்று ஒன்று இருப்பதை அனைவரும் மறந்தே போவார்களே..! அப்படித்தான் விநாயக்கின் பத்து வயதில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. 
 
 
அந்த வருட விடுமுறையில் வந்திருந்தவன், வழக்கம் போல் தன் நண்பர்களோடு இணைந்து புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றுக்கு தினமும் சென்று கொண்டிருந்தான். அங்கு தான் நிதினுடன் அவனுக்கு அறிமுகமானது.
 
 
அந்த வயதுக்கேயுரிய துடிப்புடன் தன் நண்பர்களோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த விநாயக் குழுவினரை பார்த்ததும் அவர்களோடு சென்று தானாகவே அறிமுகம் செய்து இணைந்து கொண்டான் நிதின். 
 
 
ஒற்றைப் பேரனாக அதிக செல்லத்தில் வளர்ந்ததில் வேதவல்லியின் குணமும் கொஞ்சம் அவனிடம் சேர்ந்திருந்தது. அவன் நடந்து கொண்ட விதம், பேசும் முறை என எதுவுமே நண்பர் குழுவில் இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை. 
 
 
அதில் பெரும்பாலும் அனைவரும் ஓரிரு வார்த்தைகளோடு அவனிடம் இருந்து விலகிக் கொள்ள.. மீண்டும் மீண்டும் வந்து பேசி பார்த்து அதற்கு சரியான எதிர்வினை இல்லாததில் உண்டான சோர்வோடு தனியே விளையாட சென்ற நிதினை கண்டு ஏனோ விநாயகிற்கு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
 
 
இதில் உண்டான இறக்கத்தில் அவன் மட்டும் சென்று நிதினுடன் பேசிக் கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பு நிலவிக் கொண்டிருந்தது. இதை கண்டு விநாயக்கின் நண்பர்களே அவனை அவ்வப்போது கேலி செய்து கொண்டிருந்தனர். 
 
 
இதெல்லாம் வேதவல்லியின் கண்ணில் இருவரும் சேர்ந்து நின்று பேசுவது படும் வரை மட்டும் தான். வழக்கமாக ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு டிரைவருடன் வந்து செல்வது நிதினின் பழக்கம். அன்று வேறொரு வேலையாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேதவல்லி பேரனை அழைத்துச் செல்ல அங்கு வந்திருக்க.. விநாயக் உடன் சிரித்து பேசியபடியே வெளியில் வந்த நிதின் அவர் பார்வையில் விழுந்தான். 
 
 
அபிராமியை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பவருக்கு விநாயக்கை நன்றாகவே அடையாளம் தெரிய.. அவர் முகம் கடுக்கடுவென மாறியது. விநாயக்கை பார்த்து கை அசைத்து விட்டு புன்னகையுடன் நிதின் வந்து காரில் ஏறிக்கொள்ள.. வேதவல்லி எதுவுமே பேசவில்லை.
 
 
தன்னை கண்டதும் அணைத்து முத்தமிட்டு கொஞ்சும் வேதவல்லியின் இந்த அமைதியை புரியாமல் பார்த்தவன், ஏதேதோ பேசிக்கொண்டே வர.. எதற்குமே வேதவல்லியிடம் பதிலே இல்லை. இதில் சோர்ந்து போனவன் அமைதியாகி விட்டான். 
 
 
வீடு வந்து உடைமாற்றி சாப்பிட்டு முடித்து என நேரம் செல்ல.. மீண்டும் அவன் வேதவல்லியை காண சென்ற போதும் அவர் அவனிடம் பேசவே இல்லை. 
 
 
தன்னை எப்போதும் கை வளைவிலேயே வைத்துக் கொஞ்சி கொண்டிருக்கும் பாட்டியின் இந்தப் பாரா முகம் அவனை அதிகம் வருத்தியது. அந்த வயதிற்கே உரிய குணத்தில் சட்டென அவனுக்கு முதலில் அழுகை தான் வந்தது. 
 
 
அவன் அழுது கொண்டே ஏன் பேசவில்லை எனக் கேட்க.. “நீ என்ன செஞ்சிருக்கேன்னு தெரியுமா..? யார் கூட பேசி பழகிட்டு இருக்கேன்னு தெரியுமா..? அவன் உன் வாழ்க்கையை அழிக்க வந்தவன், உன்னை இந்த வீட்டில் இருந்து விரட்ட நினைக்கறவன்.. உங்க அம்மாவையும் அப்பாவையும் பிரிக்க நினைக்கற கூட்டம் அது..” என தொடங்கி அந்த பிஞ்சு நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் அன்று முழுக்க நஞ்சை கலந்து கொண்டிருக்க.. சிறுவயதில் இருந்தே வேதவல்லி தனக்கு நல்லது மட்டுமே செய்வார் என நம்பி வளர்ந்திருந்த நிதினும் அதை எல்லாம் உண்மை என்று துளியும் சந்தேகமில்லாமல் நம்பினான். 
 
 
அதன் விளைவு மறுநாள் வெடித்தது. வழக்கம் போல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் குழுமியிருந்த நண்பர்கள் விளையாடியவாறே பேசி கொண்டிருக்க.. சற்று தாமதமாகவே அங்கு வந்தான் நிதின். அவனைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்து விநாயக் கையசைக்க.. அவனோ இவனை முறைத்துக் கொண்டே முகம் திருப்பியப்படி சென்றான். 
 
 
அதில் என்ன விஷயமென தெரியாமல் நெற்றியை சுருக்கிய விநாயக், “என்னாச்சு இவனுக்கு..?” என்றான். அதில் அந்த பக்கம் திரும்பி பார்த்த வர்மா “உனக்கு எப்படி அவனை பிடிச்சதுன்னு எங்களுக்கு புரியவே இல்லை.. அவனும் அவன் ஆட்டிட்டியூடும்..” என எரிச்சலோடு சொல்லி சென்றான்.
 
 
மற்றவர்களும் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், இத்தனை நாள் நன்றாக பேசி பழகிவிட்டு நிதின் இன்று திடீரென காரணமே இல்லாமல் இப்படி நடந்து கொள்வதில் விநாயகிற்கு மனம் சஞ்சலமாக இருந்தது. 
 
 
அதில் மீண்டும் ஒருமுறை நிதினுடன் சென்று விநாயக் பேச முயல.. அப்போதும் முகத்தை சுழித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் நிதின். அவன் நடவடிக்கை புரியாமல் இரு நொடிகள் அசைவின்றி நின்று விட்டவன், பின் தோள்களை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். 
 
 
அதற்குப் பின் நிதினை விநாயக் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. தன் நண்பர்களோடு விளையாடி முடித்து வெளியில் வந்த விநாயக் கார் வருவதற்காக காத்திருந்தான்.
 
 
ஒரே வீதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் தனி தனி காரில் வருவது வழக்கம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து டிரைவர் அனைவரையும் மொத்தமாக அழைத்து செல்வர். 
 
 
அன்றும் அப்படியே வழக்கத்திற்கு மாறாக அரைமணி நேரத்திற்கு முன்பாகவே இவர்களின் விளையாட்டு முடிந்து இருக்க.. வெளியில் வந்து பார்க்கிங்கில் நண்பர்கள் குழு அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது.
 
 
அன்று விநாயக்கின் பிறந்தநாள் என்பதால் மாலை நடக்க இருக்கும் பார்ட்டி பற்றியும் என்ன உடை எடுத்திருக்கிறான், என்னவெல்லாம் கொண்டாட்டம் என்றெல்லாம் பேச்சு சென்று, ரகோத்தமன் இந்த பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கி கொடுப்பார் என்று ஆவலோடு காத்திருந்த விநாயக் அதைப் பற்றியும் அபிராமி என்னவெல்லாம் செய்து இருப்பார் என்பதை பற்றியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தான். 
 
 
இதையெல்லாம் சற்று தள்ளி அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நிதினுக்கு நேற்றைய வேதவல்லியின் பேச்சு மட்டுமே நினைவுக்கு வர, அவன் ரத்தம் கொதித்தது. தன் தந்தையை, தனக்கு மட்டுமே சொந்தமான வாழ்க்கையை இவன் பங்கு போட பார்ப்பதாக புரிந்து கொண்டவனுக்கு அவன் வாழ்க்கையை தான் பங்கு போட்டு இருப்பது பாவம் தெரியவில்லை. 
 
 
அதில் தன்னை கட்டுப்படுத்த அவன் போராடிக் கொண்டிருக்க.. இதையெல்லாம் கொஞ்சமும் அறியாத விநாயக் எப்போதும் போல் தன் நண்பர்களிடம் ரகோத்தமனுக்கு தன் மேல் எவ்வளவு பாசம் என்பதை எல்லாம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டிருந்தான். 
 
 
அவர்களுக்கும் ரகோத்தமனை தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசி சிரித்து நண்பர்கள் மகிழ்ந்து கொண்டிருக்க.. இதை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அங்கு வந்து நின்றிருந்த நிதின் “ரொம்ப சந்தோஷமா இருக்கியா..? வெக்கமே இல்லாம எங்க அப்பாகிட்ட பிச்சை வாங்கறதும் இல்லாம அதை பெருமையா வேற பேசிட்டு இருக்கியா நீ..?” என்று ஆத்திரத்தில் கத்தி இருந்தான். 
 
 
இதில் அனைவரும் புரியா திகைப்போடு அவனை பார்க்க.. நேற்றிலிருந்து அவன் மேல் இருந்த கோபத்தில் நிதின் வார்த்தைகளில் கட்டுப்பாடு இல்லாமல் பேசிக் கொண்டே செல்ல.. ஒரு கட்டத்தில் விநாயக்கிற்கும் கோபம் வந்துவிட்டு இருந்தது.
 
 
அதில் நிதினை விநாயக் அடித்து விட்டிருக்க.. அங்கு கொஞ்சம் கை களப்பானது. ஏற்கனவே இருந்த கோபம், தன் மேலேயே விநாயக் கை வைத்ததில் உண்டான ஆத்திரம் என்று நிதினும் அவனை அடிக்கப் பாய.. சுற்றிலும் அரண் போல் அவன் நண்பர்கள் நின்று விநாயக்கை நெருங்கவிடாமல் நிதினை தடுத்தனர். 
 
 
முழு தவறும் அவன் மேல் இருக்க.. அடிக்கக்கூட விடாமல் இப்படி இடையில் வந்து நிற்பவர்களை கண்டு உண்டான கோபத்தோடு நிதின் எகிறி கொண்டு செல்ல.. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தார் வேதவல்லி.
 
 
விநாயக்கை சந்திக்க இதுவரை அவருக்கு சந்தர்ப்பமே கிடைத்ததில்லை. அவன் இங்கு வருவது தெரிந்த பின் அவ்வளவு எளிதாக விட்டு விடுவாரா என்ன..? அதில் முழு வன்மத்தோடு விநாயக்கை காண அங்கு வந்தவர் கண்டது நிதின் அடி வாங்கும் காட்சியை தான். 
 
 
அவ்வளவு தான் எரிமலையாக கொந்தளித்து விட்டவரின் வாயிலிருந்து வந்த நெருப்பு பிழம்பு அந்த சிறுபாலகனை சுட்டு பொசுக்கி இருந்தது. 
 
 
“அடுத்தவங்க குடும்பத்தில் புகுந்து குழப்பம் செஞ்சு தாலி கட்டாம உங்க அம்மா உன்னை பெத்து வளர்த்து விட்டா.. நீ இங்கே வந்து முறையா பிறந்த என் பேரன் மேலேயே கை வைப்பியா..?” எனத் தொடங்கி அவன் அன்னையை, அவன் பிறந்த விதத்தை, அவர்கள் வாழும் வாழ்க்கையை, அபிராமியின் ஒழுக்கத்தை என்று சின்ன பையனிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர் பேசி விட்டு சென்றிருக்க.. அதன் தாக்கத்தில் அசைய மறந்து அதிர்வோடு அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து விட்டான் விநாயக்.
 
 
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க.. உடனிருந்த அவன் நண்பர்கள் கூட பெரும் திகைப்பில் அடுத்து என்ன என புரியாமல் சில நிமிடங்கள் நின்று விட்டனர். இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என அந்த வயதில் அவர்களுக்கு தெரியவில்லை. 
 
 
பின் முதலில் தன்னை மீட்டுக் கொண்டது நிமலன் தான். வேகமாக அவன் விநாயக்கை தூக்கி நிறுத்தி தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள.. அப்படி ஒரு கண்ணீர் அந்த நொடி அவனிடமிருந்து வெடித்தது. 
 
 
‘என்ன சொல்லி தேற்றுவது..? எப்படி சமாதானம் செய்வது..?’ என தெரியாமலே அவனை வீட்டிற்கு அவர்கள் அழைத்து வந்திருக்க.. மகனின் பிறந்த நாளுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு ஆவலோடு அவன் வருகைக்காக காத்திருந்தார் அபிராமி. 
 
 
அன்று அபிராமியின் டிரைவர் தான் இவர்களை அழைத்து வர சென்றிருந்தார். அவர் சென்று பார்த்த போது அனைத்தும் நடந்து முடிந்து விட்டிருக்க.. கண்ணீரோடு விநாயக் இருந்த நிலையை கண்டவருக்கு உள்ளம் பதறி துடித்தது. என்ன நடந்தது என எவ்வளவு விசாரித்தும் யாரும் எதையும் சொல்லவில்லை. 
 
 
அவர்களின் அமைதியே மேலும் பயத்தை கொடுக்க.. வேறு எதுவும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டிருந்தவர், அபிராமியை தயக்கத்தோடு பார்த்தார். அவரின் பார்வை ஏன் என புரியாமல் “என்னாச்சு..” என்றபடியே காரை நெருங்கியவர் ‘ஏன் இன்னும் விநாயக் இறங்கவில்லை..?’ என்று கேள்வியோடு கதவை திறக்க.. அவன் மட்டுமல்ல அத்தனை பேரும் உள்ளே அமர்ந்திருந்தனர். 
 
 
“என்ன செல்லங்களா இப்போவே இப்படியே உங்க பிரண்ட் பர்த்டே கொண்டாட வந்தாச்சா..! வாங்க வாங்க உங்களுக்கு பிடிச்ச எல்லாம் செஞ்சு வெச்சு இருக்கேன்..’ என்று புன்னகையோடு அவர்களை வரவேற்றவர், அவர்கள் முகங்களில் கண்ட வெறுமையிலும் வருத்தத்திலும் துணுக்குற்று தன் மகனைப் பார்க்க.. அவனோ தன் இரு கைகளாலும் தலையைத் தாங்கி பிடித்து அப்படியே நிமிராமல் அமர்ந்திருந்தான்.
 
 
அதில் அடிவயிறு பதற “கண்ணா என்னாச்சு..?” என்று விநாயக்கின் கையை அபிராமி பிடிக்க முயல.. வேகமாக அவரிடம் இருந்து தன் கைகளை இழுத்துக் கொண்டவன், மற்றொரு பக்கம் கதவை திறந்து கொண்டு இறங்கினான். 
 
 
அதன் பின் ஒவ்வொருவராக காரில் இருந்து இறங்க.. அவர்களை பார்த்து கிளம்புமாறு தலையசைத்தான் விநாயக். ஆனால் அப்போதும் அவனை அப்படி தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் அவர்கள் தயக்கத்தோடு நிற்க, அவன் லேசாக நிமலன் மற்றும் துஷ்யந்தின் கையை அழுத்தி கொடுக்க.. அதுவே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது.
 
 
இதில் இப்போது அவனுக்கு வேண்டியது தனிமை எனப் புரிந்து மற்றவர்கள் அபிராமியிடம் லேசான தலையசைப்போடு சொல்லிக்கொண்டு கிளம்பி விட, அனைவரின் செயல்களையும் கண்டு என்னவென புரியாமல் மனமும் உடலும் பதற நின்றிருந்தார் அபிராமி. 
 
 
அவர்கள் செல்வதற்காகவே காத்திருந்தவன் வீட்டிற்குள் நுழையாமல் பிரதான நுழைவாயிலின் முன்னே இருந்த படிக்கட்டில் சென்று அமர்ந்து கொள்ள.. அவன் செயல்களெல்லாம் பயத்தை கொடுத்ததில் “கண்ணா என்னப்பா..?’ என்றார் அபிராமி தவிப்பான குரலில். 
 
 
அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை விநாயக், அதோடு அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் அவன் அமர்ந்திருக்க.. கவலையும் தவிப்புமாக டிரைவரை திரும்பி பார்த்தார் அபிராமி. அவரும் தனக்கு எதுவும் தெரியாது என சைகையில் சொல்ல.. விநாயக்கின் முன் மண்டியிட்டு அமர்ந்து அபிராமி எவ்வளவு கேட்டும் அவன் விழிகளைக் கூட உயர்த்தி அவரை பார்க்கவில்லை. 
 
 
இப்படியே நேரம் செல்ல.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருந்த நிலையில் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் எண்ணத்தோடு அவனுக்கான பரிசு பொருட்களை கைநிறைய அள்ளிக்கொண்டு வந்து இறங்கினார் ரகோத்தமன்.
 
 
வழக்கத்திற்கு மாறாக இப்படி வாயிலில் அமர்ந்திருப்பவனை கண்டு யோசனையாக அவர் உள்ளே வரவும், விழிகளை உயர்த்தி அவரைப் பார்த்து “அங்கேயே நில்லுங்க..” என்றான் விநாயக். 
 
 
அதில் புரியாமல் அவர் பார்க்க.. “நான் யாரு உங்களுக்கு..?” என்று விநாயக் அவர் முன் சென்று நின்று கேட்கவும், ஏதோ விளையாடுகிறான் போல் என நினைத்து “வினய்..” என தொடங்கி புன்னகையுடன் ஏதோ பேச முயன்றவரை தடுத்தவன், “நான் யார் உங்களுக்கு..?’ என்று மீண்டும் அழுத்தம் திருத்தமான குரலில் கேட்கவும் ‘எதுவோ சரியில்லை’ என அவருக்கு புரிந்தது. 
 
 
“இது என்ன கண்ணா கேள்வி.. நீ என் உயிர்..” என்று அவர் சிறு புன்னகையை வரவழைத்துக் கொண்டு பேச முயல.. முறைப்போடு அவரைப் பார்த்தான் விநாயக். “இன்னைக்கு உனக்கு என்னாச்சு கண்ணா..?” என பிள்ளை முகத்தை மெல்ல வருடி அவர் கேட்க முயல.. வேகமாக இரண்டு அடிகள் பின்னுக்கு நகர்ந்தவன்.
 
 
“நிதின் யாரு.?’ என்றான் அடுத்ததாக கூர்மையாக அவரை பார்த்தபடியே விநாயக். இதில் அவ்வளவு நேரமும் சமாளிப்பாக பேசிக்கொண்டு இருந்தவரின் கையிலிருந்த பரிசு பொருட்களெல்லாம் கீழே விழுந்து சிதற.. அபிராமியும் இதை துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்வோடு நெஞ்சில் கைவைத்தபடி நின்று விட்டார். 
 
 
இருவரிடமிருந்தும் பதில் வரவில்லை என்றவுடன் “சொல்லுங்க உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கா..? நாங்க உங்களுக்கு இரண்டாவது குடும்பமா..!” என்று அவன் கேட்ட எதற்கும் அவரிடம் பதில் இல்லை. 
 
 
ஆனால் வேகமாக தன்னை மீட்டுக் கொண்டவர் “கண்ணா அப்படியெல்லாம் இல்லை.. நான் உனக்கு விளக்கமா எல்லாம் சொல்றேன், உள்ளேவா..” என்று அவசரமாக அக்கம் பக்கம் பார்த்தபடியே அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அவர் முயல.. “முடியாது, எனக்கு இங்கே இப்போவே பதில் தெரிஞ்சாகணும்.. அதுக்கு பிறகு தான் நான் உள்ளே போறதா வேண்டாமான்னு யோசிக்கணும்..” என்றான் விநாயக். 
 
 
இதில் அவனைக் பெற்றவர்கள் இருவருமே அதிர்ந்து நிற்க.. “சொல்லுங்க, நாங்க உங்களுக்கு இரண்டாவது குடும்பமா..?” என மீண்டும் அவன் கேட்க “இல்லை, இல்லை.. நீங்க தான் என் முதல் குடும்பம்..” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் ரகோத்தமன். 
 
 
அந்த வயதில் அவர் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் நெற்றியை சுருக்கியவன் பின் “நிதின் உங்க பையனா..?” என்று கேட்க அவர் ஆம் என தலையசைத்தார். அதன் பின் வேறு எதுவும் பேசாமல் திரும்பி அபிராமியை பார்த்தவன் “நீங்க முறையில்லாம இவர் கூட வாழறீங்களா..?” என்று கேட்க.. எந்த ஒரு அன்னையும் தன் பிள்ளையிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்கவே கூடாது என்பது போல் விழிமூடி தன் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றவாறே இரு காதுகளையும் பொத்திக்கொண்டார் அபிராமி.
 
 
சில நொடிகள் அமைதியாக நின்றவன் பின் மீண்டும் “அம்மா.. எனக்கு பதில் வேணும் சொல்லுங்க.. நீங்க இவர் மனைவியா..? இல்லையா..!” என்று கேட்க “நான் அவர் மனைவி தான் கண்ணா.. நான் முறையா தான் அவர் கூட வாழந்துட்டு இருக்கேன்..” என்றார் அபிராமி. 
 
 
“உங்க அம்மாவை தான் நான் விரும்பி காதலிச்சு கல்யாணமும் செஞ்சேன்.. உங்க அம்மா தான் என் முதல் மனைவி..” என ஒரே நேரத்தில் இருவரும் மகனிடம் சொல்லி இருக்க.. ‘பிறகு ஏன் அவர்கள் இருவரும் தன்னை அவ்வளவு கேவலப்படுத்தி அப்படி எல்லாம் பேசினார்கள்..?’ என்று தோன்றினாலும் அதற்கான விடை தேடிச் செல்ல அவனுக்கு மனம் இல்லை. 
 
 
‘இனி இப்படி ஒரு பேச்சு தனக்கு வேண்டாம்.. தன்னை பார்த்து யாரும் இப்படி எல்லாம் இனி பேசி விடவே கூடாது..!’ என்று மட்டுமே அவன் மனதில் இருக்க.. “இனி நீங்க எங்க வீட்டுக்கு வர வேண்டாம்..” என கூறியிருந்தான் விநாயக்.
 
 
அதில் அதிர்ந்து ரகோத்தமன் “வினய்..” என்று அழைக்கவும், “இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க.. உங்களுக்கும் எனக்கும் இனி மேல் எந்த சம்பந்தமும் கிடையாது, நீங்க இந்த வீட்டுக்குள்ளே அடி எடுத்து வெச்சா.. அதுக்கு பிறகு நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.. உங்க அம்மாக்கிட்டேயும், உங்க பையன்கிட்டேயும் போய் சொல்லுங்க.. அவங்களுக்கே உங்களை திரும்ப கொடுத்துட்டேன்னு சொல்லுங்க.. எங்களுக்கு சொந்தம் இல்லாத எதையும் நாங்க சொந்தம் கொண்டாட விரும்பலைன்னு சொல்லுங்க.. யார் வாழ்க்கையையும் திருட வேண்டிய அவசியமோ, யார் போடும் பிச்சையிலோ வாழ வேண்டிய தேவையோ எங்களுக்கு இல்லைன்னு நான் சொன்னேன்னு சொல்லிடுங்க..” என்று கூறியவன், அபிராமியின் பக்கம் திரும்பி “உங்களுக்கு நான் வேணுமா..? இல்லை அவர் வேணுமான்னு முடிவு செஞ்சுக்கோங்க ம்மா.. நான் வேணும்னா அவர் இனி இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது..” என்றான் விநாயக்.
 
 
இத்தனையும் பேசும் போது அவன் முகம் இறுகி, விழிகள் சிவந்து இருக்க.. அவர் முன் அழுது விடவே கூடாது என்பதில் அத்தனை உறுதி தெரிந்தது. அதை கண்டு ரகோத்தமனே சிறிது தடுமாறி தான் போனார்.
 
 
அதே நேரம் கதறி அழுது கொண்டிருந்த அபிராமி, இனி யோசிக்க எதுவும் இல்லை என்பது போல சட்டென முடிவு எடுத்தவராக “எனக்கு நீதான் முக்கியம், எனக்கு நீ மட்டும் போதும் வினய்..” என்று சொல்லிவிட முற்றிலும் உடைந்தே போனார் ரகோத்தமன்.
 
 
‘மகன் ஏதோ கோபத்தில் பேசுகிறான், நிச்சயம் அபிராமி அவனை சமாதானம் செய்வார்..’ என்று நினைத்திருந்தவருக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அபிராமியின் பதில் இருக்க.. தவிப்போடு “அபி..” என்றார் ரகோத்தமன்.
 
 
அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் மகனின் கைப்பிடித்தபடி அபிராமி உள்ளே செல்ல முயல.. வாயில் வரை சென்றவன் திரும்பி நின்று ரகோத்தமனை பார்த்து “நான் என் வாழ்க்கையிலேயே வெறுக்கும் ஒரே ஆள் நீங்க தான்.. இனி என் கண் முன்னே வந்துடாதீங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான். 
 
 
ஆனால் ரகோத்தமனால் அப்படி உடனே அங்கிருந்து சென்று விட முடியவில்லை. வாயிலேயே அவர் அதிர்வு மாறாமல் அமர்ந்து விட, அவர் முன் வீராப்பாக பேசி விட்டு வந்தாலும் அவனுள்ளிருக்கும் சிறுப்பிள்ளை இத்தனை நாள் அனுபவித்த தந்தையின் அன்பு இனி தனக்கு இல்லை என்ற எண்ணத்தில் உடைந்து கதற தொடங்க.. அபிராமி தன் வலிகளை எல்லாம் மறைத்து மகனை மார்போடு அனைத்து கொண்டார். 
 
 
இருவரும் அங்கு தங்கள் வலிகளை கண்ணீரில் கரைத்துக் கொண்டிருக்க.. அதையே ரகோத்தமன் வெளியே செய்து கொண்டிருந்தார்.
 

This post was modified 18 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 508
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
MNKN - 10 & 11
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page