All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
ஹாய் டியர்ஸ்
 
இதோ அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துட்டேன்.. இப்போ நாம தொடங்க போகும் கதை இழை - 3.
 
 
இழை சீரிஸின் அடுத்த கதை.. நிமலன், மஹேந்திர வர்மனுக்கு அடுத்து விநாயக்..
 
மே 15ம் தேதி முதல் கதை வரும்..
 
இப்போ கதையை பற்றி பார்க்கலாமா..?
 
 
 
 
கதையின் பெயர் : மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
நாயகன் : விநாயக் சக்ரவர்த்தி
நாயகி : யது நந்தினி
 
இனி கதையை பற்றி ஒரு குட்டி டீஸர் பார்க்கலாமா..?
 
மௌனம் டீசர்
 
கண் முன் இருந்த கோப்பில் பார்வையை பதித்திருந்த விநாயக் கதவு லேசாக தட்டப்படும் சத்தத்தில் பார்வையை உயர்த்தி “எஸ்..” என்றான். அதே நேரம் கையில் ஒரு மெல்லிய கோப்போடு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த யது நந்தினியை கண்டவனின் முகம் இறுகியது.
 
 
அதுவரை இயல்பாக இருந்த முகத்தில் தன்னை கண்டதும் கடுமை பரவியதை அவளும் உணர்ந்தே இருந்தாள். நந்தினியை அங்கு கண்டதும் வெறுப்போடு அவளை பார்த்தவனின் பார்வை நந்தினியின் முகத்திலேயே கூர்மையாக பதிந்திருக்க.. தன்னை அவன் உட்காரக் கூட சொல்லாததை எல்லாம் கொஞ்சம் கண்டு கொள்ளாமல் “ஒருகம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்றாள் நந்தினி.
 
 
அவள் அந்த வார்த்தையை உச்சரித்ததும், விநாயக்கின் முகத்தில் எரிச்சல் பரவியது.
 
 
அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் “ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்று தன் முன் வந்து நின்றவளை ஆராய்ச்சியாக பார்த்த விநாயக் “என்ன கம்ப்ளைன்ட்..? யார் மேலே..?” என்றான்.
 
 
அதில் மெல்ல புன்னகைத்துக் கொண்டே, “விளக்கமா நானே சொல்லட்டுமா..? இல்லை எழுதி கொண்டு வந்ததை கொடுக்கட்டுமா..?” என நந்தினி கேட்கவும், வார்த்தைகளில் பதில் சொல்லாமல் அவள் எழுதிக் கொண்டு வந்ததை கேட்டு கையை நீட்டினான் விநாயக்.
 
 
அவன் நீட்டிய கையை ஒரு நொடி பார்த்தவளின் விழிகளில் குறும்பு கூத்தாட, சட்டென விநாயக்கின் கைகளை பிடித்து லேசாக குலுக்கியவள் “ஹலோ நான் யது நந்தினி, உங்க பேர் என்ன..?” என்றாள்.
 
 
அதில் அவளை முறைத்தவாறே வேகமாக தன் கையை நந்தினியிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்து நின்றவன், “என்ன கம்பிளைன்ட்..?” என்று குரலில் இறுக்கத்தை கொண்டு வந்து கேட்டிருக்க.. தன் கையிலிருந்த புத்தகத்தின் இடையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள் நந்தினி.
 
 
அவள் தனியே வந்திருப்பது, கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தாலும் தன் வேலைக்கு மதிப்பளித்து அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தவன் அவளின் புகார் கடிதத்தை படித்து முடித்த நொடி ருத்ர மூர்த்தியாக மாறிப் போனான்.
 
 
வணக்கம் ஏசிபி சார்..
 
 
எனக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சுருக்கு, அவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. ஆனா அவர் என்னை கண்டுக்கவே மாட்டேன்றார், இது இந்த குட்டி இதயத்தில் எவ்வளவு வலியை கொடுக்குது தெரியுமா..? என் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ இப்படி ஒதுக்கி வைக்கறது சரியான்னு நீங்களே விசாரிச்சு சொல்லுங்க..
 
 
இப்படிக்கு உங்களையே நினைச்சு உங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கும்
உங்கள் யது நந்தினி
 
 
என எழுதி இருந்ததை படித்த நொடி அவனுள் அவ்வளவு ஆத்திரம் கனன்றது.
 
 
அந்த காகிதத்தை சுக்கல் நூறாக கிழித்து அவளின் முகத்திலேயே வீசியவன், “அறிவில்ல உனக்கு..? படிச்சவ தானே நீ..? எதில் விளையாடறதுன்னு இல்லையா.. இங்கே உன் விளையாட்டை பார்க்க தான் நாங்க உட்கார்ந்து இருக்கோமா..?” என்று காய்ந்து விட்டான் விநாயக்.
 
 
நிச்சயம் கோபப்படுவான் என்று தெரியும் தான். ஆனால் இவ்வளவு கடினமான வார்த்தைகளில் திட்டுவான் என எதிர்பார்க்காத நந்தினி, சிறுத்திகைப்போடு அப்படியே நின்ற விட, அவள் விழிகள் தானாக கலங்கியது.
 
 
இதுவரை அவளை இப்படி எல்லாம் யாரும் திட்டியதோ கடுமையாக பேசியதோ கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அவள் இவனிடமிருந்து மட்டுமே கோபத்தையும் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்கிறாள். ஆனாலும் இந்த மனதிற்கு அவனை தானே பிடித்து தொலைக்கிறதே..! என்ன செய்ய..?
 
 
வேறு எங்கும் சென்று அவனை தனியே சந்திக்கவோ பேசவோ இதுவரை விநாயக் சந்தர்ப்பமே கொடுக்காமல் போனதால் தான், அந்த வயதிற்கேயான விளையாட்டு தனத்தோடு இப்படி காவல் நிலையத்திற்கே அவனை சந்திக்க வந்திருந்தாள் யது நந்தினி.
 
 
இது சரியென அவளும் சொல்லவில்லை. ஆனால் இப்படியாவது தன் மனதிலிருப்பதை மீண்டும் அவனுக்கு தெளிவாக ஒருமுறை புரிய வைத்துவிட, நினைத்தே வந்திருந்தவளுக்கு அவனின் வார்த்தைகளும் அந்த குரலில் இருந்த வெறுப்பும் விழிகளை கலங்கச் செய்ய.. இதழ் கடித்து அழுகை வெடித்துக் கொண்டு வெளியில் வராமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அதெல்லாம் இன்று நினைவு வர, முகத்தில் மேலும் கடுமை ஏற, அவளை முறைப்போடுப் பார்த்தவன் “கெட் அவுட்..” என்றான் பல்லை கடித்தபடியே.
 
 
தன் கையில் இருந்த கோப்பை அவன் முன் வைத்து ஏதோ சொல்ல முயன்றுக் கொண்டிருந்த நந்தினி விநாயக்கின் இந்த அதட்டலில் திகைத்து அவனைப் பார்க்க.. “உன்னை வெளியே போன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாத குரலில் விநாயக்.
 
 
இதில் செய்வதறியாது அப்படியே நந்தினி அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலை கூட அவனை கோபப்படுத்தியது. அதில் அவள் தன் முன் வைத்திருந்த கோப்பை எடுத்து கதவை நோக்கி வீசியிருந்தவன் “உன்னை வெளியே போக சொன்னேன், கெட் லாஸ்ட் டேமிட்..” என குரலை உயர்த்தி அவன் கர்ஜிக்க.. சட்டென உண்டான அவமான உணர்வோடு வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் நந்தினி.
 
 
அந்த அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றபடி அலைபேசியில் யாரோடோ பேசிக் கொண்டிருந்த ரகோத்தமன் தன் அருகில் வந்து நின்றவளின் மேல் பார்வையை பதித்த நொடி “நான் அப்புறம் கூப்பிடறேன்..” என அழைப்பை துண்டித்து விட்டு, “நந்து என்னடா..?” என அவளின் கலங்கிய விழிகளையும் பதட்டமான உடல் மொழியையும் கண்டு ஆறுதலாக அவளின் தோளைப் பற்றினார்.
 
 
‘ஒண்ணுமில்லை’ என்பது போல் வேகமாக தலையசைத்தவள், அதற்கு நேர்மாறாக இதழ் மடித்து தன் கண்ணீரை கட்டுப்படுத்த போராடுவது அவருக்கு புரிந்தது.
 
 
இதுவே உள்ளே என்ன நடந்திருக்கும் என ஓரளவு அவருக்கு புரிய வைக்க போதுமானதாக இருக்க.. வருத்தத்தோடு திரும்பி விநாயக்கின் அறை கதவை பார்த்தார் ரகோத்தமன். தன்னை கண்டால் கோபப்படுவான் என்று தான் நந்தினி அவரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
 
 
ஆனால் அவளைக் கூட இப்படி அவன் விரட்டி அடித்து இருப்பது வருத்தத்தை கொடுக்க.. நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவருக்கு அவன் மேல் கோபம் கூட வரவில்லை. வருத்தமே மேலோங்கியது.
 
 
************
 
 
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அபியோடு அமர்ந்திருந்தான் விநாயக். அது பின் மதிய நேரமென்பதால் பெரிதாக கூட்டமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆட்கள் இருக்க.. கழுத்தை நீவியவாறே பார்வையை சுழற்றியவன், நிதினோடு உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த நந்தினியை கண்டான்.
 
 
அவள் அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டே வந்ததில் விநாயக் இங்கே இருப்பதை கவனிக்கவில்லை. மாறாக இவனை பார்த்திருந்த நிதின், உரிமையாக நந்தினியின் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
 
 
இதை கண்டெல்லாம் அவனுக்கு கொஞ்சமும் கோபம் வரவில்லை. கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் தான் இருவரையும் பார்த்து வைத்தான் விநாயக்.
 
 
அதே நேரம் கேள்வியாக அவனை விழிகளை உயர்த்தி பார்த்தாலும் நிதினிடமிருந்து விலக முயலவில்லை நந்தினி. அப்படியே அவளை அழைத்து வந்து வேண்டுமென்றே விநாயக் முன்பிருந்த மேஜையில் நிதின் அமர, அப்போதே அழைப்பை துண்டித்து விட்டு திரும்பிய நந்தினி இதை கண்டு  திடுக்கிட்டாள்.
 
 
நிதின் அப்போது வரையும் தன் தோள் மேல் கைப் போட்டிருப்பதை கண்டு சங்கடமாக நெளிந்த நந்தினி லேசாக விழிகளை உயர்த்தி விநாயக்கை பார்த்தாள்.
 
 
அவனோ கொஞ்சமும் இவர்களை கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருக்க.. நிதினின் பக்கம் பார்த்த நந்தினி “உங்க பிரச்சனையில் என்னை கொண்டு வராதேன்னு நான் முன்னேயே சொல்லி இருக்கேன் நிது..” எனவும், “நானும் அவனுக்கு உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு முன்னேயே சொல்லி இருக்கேன் நந்து..” என்றான்.
 
 
‘நீ விட்டுக் கொடுத்தா மட்டும் அவர் அப்படியே என்னை ஏத்துப்பாரா..?’ என விரக்தியோடு நினைத்துக் கொண்டவள், சோர்வாக திரும்பி அவனை பார்த்து “ப்ளீஸ், என்னை எதிலும் கொண்டு வராதே நிது..” என்றாள்.
 
 
அவள் குரலில் இருந்த வருத்தமும் வலியும் புரிந்தாலும் வேண்டுமென்றே “உன்னை கொண்டு வராம எப்படி..? நீ எனக்கு தானே சொந்தம்..?” என்றவனின் வார்த்தைகள், விநாயக் அவளிடம் பேசியதை நினைவுப்படுத்தி விட, அவளுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது.
 
 
அதே நேரம் அவ்வளவு நேரமும் மெனு கார்டில் பார்வையால் வலம் வந்துக் கொண்டிருந்த அபி அப்போதே விழிகளை உயர்த்தியவள், நந்தினியை அங்கு கண்டு ஆர்வமாக விநாயக் பக்கம் திரும்பி பார்க்க.. அவனோ தன் அலைபேசியில் கவனமாக இருந்தான்.
 
 
‘அதானே..!’ என சலித்துக் கொண்ட அபி, “ஆண்ட்டி உனக்கு பொண்ணு பார்க்க சொல்லி இருக்காங்க வினய், நிமல், மஹி, துஷி எல்லாம் சொல்லிட்டேன்.. அவங்க வந்ததும் உனக்கு பெண் தேடும் படலத்தை தொடங்க போறோம்..” என்றாள் வேண்டுமென்றே ஓர பார்வையால் நந்தினியை பார்த்தப்படி அபி.
 
 
அவளின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் நந்தினியின் முகம் அப்பட்டமாக அதிர்வை காண்பிக்க.. “ஓஹோ.. ஆனா தர்ஷனை ஏன் விட்டுட்டீங்க..?” என்றான் இப்போது அது தான் முக்கியம் என்பது போல் விநாயக்.
 
 
“அவனா..? அவனை உனக்கு பொண்ணு பார்க்க சொன்னா அவனுக்கு விதவிதமா பார்த்துப்பான்.. வேண்டாம்பா..” என அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்து விட, அடக்க மாட்டாமல் சிரித்தான் விநாயக்.
 
 
அந்த புன்னகையை நந்தினி ஏக்கமாக பார்த்திருக்க.. அவளை கவனித்தவாறே விநாயக்கிடம் போட்டு வாங்க நினைத்து “சிரிக்கறதெல்லாம் இருக்கட்டும், பொண்ணு பார்த்துடலாமா..?” என்றாள் அபி.
 
 
அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “பொண்ணு தானே தாராளமா பாருங்க.. நானும் எவ்வளவு நாளைக்கு தான் பேச்சிலரா இருக்கறது..” என்றிருந்தான் விநாயக்.
 
 
இதில் விழிகள் கலங்கி நிற்க.. அவனை வெறுமையாக பார்த்தாள் நந்தினி.
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. மௌனமாய் நீ காதலாய் நான் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 

This topic was modified 1 month ago 3 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
 
மௌனம் - 1
 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
 
என்று இனிமையாக உருகி ஒலித்துக்கொண்டிருந்த அபிராமியின் குரலைக் கேட்டபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தான் விநாயக் மஹாதேவ்.
 
 
எப்போதுமே அந்தக் குரலில் இருக்கும் அன்பும் அக்கறையும் இனிமையும் கொஞ்சமும் குறையாமல் இன்றும் அந்தப் பாடலில் இழைந்து கொண்டிருக்க.. ‘குறை ஒன்றும் இல்லையாமே..!’ என மனதிற்குள் எண்ணியவனின் இதழ்களில் ஒரு அலட்சிய புன்னகை தவழ்ந்தது.
 
 
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலில் இருந்த பொருளும், அதைப் பாடும் போது அபிராமியின் குரல் உணர்த்திய பாவமும் கொஞ்சமும் தனித்துத் தெரியவில்லை. நிஜமாகவே தன் வாழ்வில் எந்த ஒரு குறையும் பிரச்சனையும் இல்லை என உணர்ந்து அவர் பாடுவது போல் இருக்க.. ‘எப்படி இவங்களால் மனசறிஞ்சு இப்படி ஒரு பொய்யை உண்மை போல் குரலில் கொண்டு வர முடியுது..?’ என்று நினைத்தவனாக உணவு மேஜையை விநாயக் நெருங்கவும், அபிராமி எழுந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.
 
 
“குட் மார்னிங் வினய்..” என மகனைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்து புன்னகைக்க.. “மார்னிங் ம்மா..” என்றவாறுறே அவன் அமரவும், வேகமாக மகனுக்குப் பரிமாற வந்தார் அபிராமி.
 
 
தனக்கு மட்டும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த அபிராமியை கேள்வியாகப் பார்த்தவன் “நீங்க சாப்பிடலையா..?” எனவும் “நான் அப்புறம் சாப்பிடறேன், நீ சாப்பிடு..” என்றார் தயக்கத்தோடே அபிராமி.
 
 
‘ஏன்..?’ என்பது போல் விநாயக் சாப்பிடாமல் அப்படியே நிறுத்தி அவரின் முகத்தைப் பார்க்க.. அவரோ பதிலின்றிப் பார்வையை தழைத்துக் கொண்டார். இதில் யோசனையானவன் “ம்மா.. திரும்ப விரதம் அது இதுன்னு எதுவும்..” எனக் கண்டன குரலில் கேட்கவும், “இல்லை.. இல்லை.. இப்போ எல்லாம் நான் விரதமே இருக்கறது இல்லை வினய்..” என்றார் அவசரமாக அபிராமி.
 
 
‘அப்புறம் என்ன..?’ என்று அப்போதும் அவன் யோசனை கொஞ்சமும் மாறா விழிகளோடு அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.. “அது கோவில்.. கோவிலுக்குப் போகலாம்னு இருக்கேன், நான் வந்து சாப்பிட்டுக்கறேன்..” என்றார் அபிராமி.
 
 
“ம்ப்ச்..” என்ற சலிப்போடு எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இதென்ன என்ற எண்ணத்தோடு பார்வையைத் திருப்பியவனுக்கு அப்போதே தன் தட்டில் இருந்த பாதாம் அல்வா கண்ணில் பட்டது. அதில் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவனுக்குக் காரணம் புரிய.. சட்டெனச் சாப்பிடாமலே எழுந்து கொண்டான் விநாயக்.
 
 
அதைக் கண்டு பதட்டமான அபிராமி “வினய் சாப்பிட்டு போப்பா..” எனப் பின்னேயே செல்ல, “நீங்களே கொண்டாடிக்கோங்க..” என்று விட்டு வேகமாக வெளியே சென்று விட்டிருந்தான் விநாயக்.
 
 
அதில் மகன் சென்ற திசையைக் கவலையோடு பார்த்தவாறே நின்று விட்ட அபிராமியின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது. ‘அத்தனை எளிதாக மறந்து விடக்கூடிய நாளா இது..? அவனுக்காகக் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டு இருந்தாலும் மொத்தமாக ஒதுக்கி விட முடியாதே..!’ என மனம் மருக.. சில நொடிகள் அப்படியே நின்றவர், பின் கோவிலுக்கு நேரமாவதை உணர்ந்து கிளம்பினார்.
காவல் துறை வாகனத்தில் சென்று கொண்டிருந்த விநாயக்கின் முகம் இறுகி இருந்தது. தன் கோபத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த அவன் போராடிக் கொண்டிருப்பது தன் கை விரல்களை அவன் அழுந்த மூடி இருந்த விதத்திலேயே தெரிந்தது.
 
 
‘எப்படி..? எப்படி எதுவுமே நடக்காதது போல் இந்த நாளை அவரால் கொண்டாட முடிகிறது..? இத்தனைக்குப் பிறகும் இது தேவையா..!’ என்றெல்லாம் மனம் கொந்தளித்துக் கொண்டிருக்க.. எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விநாயக்.
 
 
எப்போதும் காலையில் தன்னை பார்த்தவுடன் லேசாகப் புன்னகைத்து இரண்டொரு வார்த்தையாவது பேசும் விநாயக்கின் இந்த அமைதி யோசனையைத் தர, தன்னையும் அறியாமல் இரண்டு முறைக்கும் மேல் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார் ஓட்டுனர் முருகன்.
 
 
அந்த மனநிலையிலும் முருகனின் பார்வையைக் கண்டு கொண்டிருந்த விநாயக் திரும்பி ‘என்ன..?’ என்பது போல் பார்க்க.. ‘ஒண்ணுமில்லை’ என்ற தலையசைப்போடு அவர் திரும்பிக் கொண்டாலும் அந்தப் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தே இருந்த விநாயக், தன் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற முடிவோடு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துத் தன்னை இயல்பாக்கிக் கொள்ள முயன்றான்.
 
 
இது அவனின் பல வருட பழக்கமாக இருந்ததால் நொடியில் கைக் கொடுத்தது. தன்னை இயல்பாக்கி கொண்டு நிமிர்ந்து அமர்ந்து சாலையில் கவனத்தைப் பதித்தான் விநாயக். நொடி நேரத்தில் அவனுள் வந்திருந்த மாற்றத்தை கண்டு கொண்டிருந்த முருகனின் முகமும் சிறு புன்னகைக்கு மாறி இருந்தது.
திரும்பிப் பார்க்காமலேயே அதையும் கவனித்து இருந்த விநாயக், வழக்கமான தன் அதே கம்பீரத்தோடு காவல் நிலையத்திற்குள் நுழைந்தான்.
 
 
*******
 
 
வேகமாகத் தயாராகித் தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் யது நந்தினி.
 
 
வழக்கமான ஹேண்ட் பேக் வலது கையில் இருக்க.. இடது கையிலிருந்த மூன்று கோப்புகளைச் சரி பார்த்தபடியே படியில் இறங்கி வந்தவளை யோசனையாகப் பார்த்த சித்ரா “என்னடா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டே..?” என்றார்.
 
 
“கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்றபடியே சென்று பூஜை அறையின் முன் நின்றவள், அவசரமாக ஒரு வணக்கத்தைக் கடவுளுக்குப் போட்டு விட்டு திரும்ப.. “சீக்கிரம் கிளம்புவேன்னு நேத்தே சொல்லி இருக்கக் கூடாதா..? இன்னும் டிபன் கூட ஆகலை..” என வருத்தப்பட்டவராக “ஒரு நிமிஷம் இரு..” என அவர் உள்ளே செல்ல போக, “நோ ம்மா ப்ளீஸ் வேண்டாம், எனக்கு நேரமில்லை..” என்றாள் அவசரமாக யது நந்தினி.
 
 
“வேண்டாம்னா என்ன அர்த்தம்..? சாப்பிடாம போவியா நீ..!” என சித்ரா தன் மறுப்பைக் குரலில் கொண்டு வந்து கேட்கவும், அதற்கு நந்தினி பதிலளிப்பதற்குள் “அப்படி என்ன அவசர வேலை..?” என்றிருந்தார் இவ்வளவு நேரமும் அங்கு அமர்ந்து அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த வேதவல்லி தன் கணீர் குரலில்.
 
 
அதில் வாயில் பக்கம் செல்ல இருந்த நந்தினி வரவேற்பறையின் பெரிய சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்த தன் பாட்டியின் பக்கம் திரும்பி “ஒரு மீட்டிங் இருக்கு வேதாம்மா, சீக்கிரம் போகணும்..” என்றாள்.
 
 
“அப்படி என்ன மீட்டிங்..? நிது இதை பத்தி எதுவும் சொல்லலையே..!” என அவன் இன்னும் கிளம்பாமல் இருப்பதை எண்ணி, அவர் யோசனையாகப் பேத்தியின் முகம் பார்த்தார். அந்தச் சந்தேகப் பார்வையைக் கண்டுகொள்ளாதது போலான முகபாவனையோடு “இது நிது ப்ராஜெக்ட் இல்லை வேதாம்மா.. என்னோட ப்ராஜெக்ட், மூணு நாள் முன்னே நடந்திருக்க வேண்டிய மீட்டிங்.. அப்போ கேன்சல் ஆகிடுச்சு, திடீர்னு தான் இன்னைக்கு ஷெட்யூல் செஞ்சாங்க..” என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் இயல்பாகவே பதில் கூறினாள் நந்தினி.
 
 
அதற்கு யோசனையாகத் தலையசைத்த வேதவல்லி வேறு எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க.. இதற்கு மேல் அங்கு நிற்க நேரமில்லாமல் வேகமாக வெளியேறி தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள் நந்தினி.
 
 
அதுவரை தன் மகள் சாப்பிடாமல் கிளம்புவதை எண்ணி உண்டான கவலையோடு இருந்த சித்ராவுக்கு வேதவல்லியின் சந்தேகப் பார்வையும் கேள்வியும் எதற்கு எனப் புரிந்த நொடி முகம் லேசாக இருண்டது.
 
 
அதில் அவர் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள.. மெல்ல தன் அருகில் இருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார் வேதவல்லி. அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “மேடம்..” என்ற பணிவான டில்லிபாபுவின் குரல் கேட்க.. “இன்னைக்கு நந்தினிக்கு என்ன மீட்டிங்..?” இதை பத்தி நிதினிக்கு எதுவும் தெரியாதா..?” என்று சுற்றி எல்லாம் வளைக்காமல் நேரடியாகக் கேட்டு விட்டிருந்தார் வேதவல்லி.
 
 
“இல்லை மேடம், இது நந்தினி மேம் பார்க்கும் ப்ராஜெக்ட்.. நம்ம ஆர்கே புரொடக்ஷன் ப்ராஜெக்ட்.. மூணு நாள் முன்னே நடக்க வேண்டிய மீட்டிங் அப்போ ஹீரோ கொஞ்சம் பிசி, ஒரு ஷூட்டிங்கில் ஸ்ட்ரக் ஆகிட்டார்.. அதனால் அப்போ மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சு, நேத்து நைட்டு தான் இதை கன்பார்ம் செஞ்சாங்க..” என அவர் விளக்கம் அளிக்க, அனைத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டவர் ‘சரி’ என்று அழைப்பை துண்டித்திருந்தார்.
 
 
டில்லிபாபு கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக இந்த நிறுவனத்தில் வேலையில் இருப்பவர். வேதவல்லியின் கணவர் ராதாகிருஷ்ணன் இருந்த போதிலிருந்தே அவருக்கு உதவியாளராக இருந்தவர், அதன் பின் ரகோத்தமன் பொறுப்பை ஏற்ற போதும், இப்போது அடுத்தத் தலைமுறையான நிதின் மற்றும் நந்தினியிடம் பொறுப்பு வந்த போதும் தொடர்ந்து தன் கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்.
 
 
வேலையில் மட்டுமல்ல விசுவாசத்திலும் டில்லிபாபுவை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பாத வேதவல்லி கூட டில்லிபாபுவை நம்புவார். அவர் வார்த்தைகளில் உண்மை இருக்கும், இந்தக் குடும்பத்திற்கும் இவர்களின் நிறுவனத்திற்கும் எது நல்லதோ அதை மட்டுமே செய்யக்கூடியவர் டில்லிபாபு.
 
 
அதனாலேயே அவர் பேசியதை கேட்ட வேதவல்லி வேறு எந்தக் கேள்விகளும் இல்லாமல் அழைப்பை துண்டித்து விட்டு தன் இருக்கையில் இருந்து மெல்ல எழுந்தார். எழுபத்து ஐந்து வயதாகும் வேதவல்லி இப்போதும் கொஞ்சமும் குறையா அதே கம்பீரத்தோடும் அதிகாரத்தோடும் தான் அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தார்.
 
 
இன்றும் அவர் வைத்தது தான் அங்கு எழுதப்படாத சட்டம். அவர் கட்டளையே சாசனம். இந்த வயதிற்கே உரிய தளர்ச்சி உடலில் தெரிந்தாலும் இன்றும் பனாரஸ் சேலை, தன் அந்தஸ்தை பிரதிபலிக்கும் நகை என்று தனக்கே உரிய அலங்காரத்தோடு தான் தினமும் தயார் ஆவார் வேதவல்லி.
 
 
இப்போது அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றவர், தன் அருகில் இருந்த ஒற்றைக் கணமான தங்க நிற முலாம் பூசப்பட்ட கைத்தடியை பிடித்தபடி மெல்ல நடந்தார். அந்தக் கைத்தடியை ஒவ்வொரு முறை அவர் எடுத்து வைத்து நடக்கும் போதும் உண்டாகும் ஓசைக்கே அவர் வரும் அரவம் உணர்ந்து அந்த வீடே அமைதியாகும்.
 
 
இப்போதும் அந்தக் கைத்தடியை அழுத்தமாக ஊன்றியவாறே தன் அறையை நோக்கி அவர் செல்ல.. தன் அன்னையின் அத்தனை பேச்சையும் சிறு வருத்தத்தோடு கேட்டபடியே சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார் சித்ரா.
 
 
‘தன் மகளின் மேலான அவரின் சந்தேகப்பார்வை என்று மாறுமோ..!’ என்ற கவலை சித்ராவினுள் எப்போதும் போல் இன்றும் மேலெழுந்து வந்து அழுத்தியது. நந்தினிக்குமே இது பெரும் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்று தான்.
 
 
ஆனால் அவரால் இதில் என்ன செய்து விட முடியும்..? எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று எதிர்பார்ப்போடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பலரை போல் தான் சித்ராவின் வாழ்க்கையும் இருந்தது.
 
 
இங்கு இவ்வளவு நடந்து கொண்டிருக்க.. நேராகத் தன் காரைக் கொண்டு சென்று அந்தப் பழமையான அந்த அம்மன் கோவிலின் முன் நிறுத்தினாள் நந்தினி. மெல்ல இறங்கி ஒரு அர்ச்சனை கூடையை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், அந்தக் காலை நேர பரபரப்பு கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக இருந்த கோவில் கருவறையின் முன் சென்று நிற்க.. அவளை நன்கு அறிந்திருந்த அர்ச்சகர் “வாம்மா, என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்..?” என்றபடியே புன்னகையோடு வந்து நின்றார்.
 
 
“கொஞ்சம் வேலை இருந்தது சாமி..” என்றவள் தன் கையில் இருந்த அர்ச்சனை கூடையை அவரிடம் கொடுக்க.. அதை வாங்கிக் கொண்டவர், நந்தினியின் முகம் பார்க்க.. அர்ச்சனை பொருட்களைத் தொட்டபடியே “விநாயக் மஹாதேவ், சிம்ம ராசி.. உத்திரம் நட்சத்திரம்..” என்று அவள் சொல்லி முடிக்கவும், அர்ச்சகர் உள்ளே செல்ல.. விழிமூடி கடவுளை மனதில் நிறுத்தி தன் வேண்டுதலை அவர் பாதத்தில் மனதார வைத்தாள் நந்தினி.
 
 
அடுத்தச் சில நிமிடங்களில் அர்ச்சகர் ஆரத்தி தட்டுடன் நந்தினியின் முன் வந்து நிற்க.. அதைப் பக்தியோடு தொட்டு விழிகளில் ஒற்றிக்கொண்டவளுக்கு விபூதி குங்குமம் பூ கொடுத்தவரின் தட்டில் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை போட்டாள் நந்தினி.
 
 
அதில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, கையோடு கொண்டு வந்திருந்த அர்ச்சனை கூடையை அவளிடம் கொடுத்தார் அர்ச்சகர். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டவள், மீண்டும் ஒருமுறை அங்கு வீற்றிருக்கும் அம்பிகையை மனதார ரசித்து விட்டு வெளியில் வந்தாள்.
 
 
பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வந்தவள் அங்கிருந்த பிரகார தூணின் அருகில் அமர்ந்தாள். எப்போதும் எதையோ நினைத்து அழுத்திக் கொண்டிருக்கும் மனம் இந்த நொடி நிர்மலமாக இருந்தது. அவள் இந்தக் கோவிலில் உணரும் ஒருவகை நிம்மதியை எங்கும் இதுவரை உணர்ந்ததில்லை.
 
 
இன்றும் அதே போல் இருக்க, இங்கேயே இப்படியே அமர்ந்து விட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றினாலும், இன்று அவளுக்கு இருக்கும் கடமைகள் வரிசை கட்டி அவள் மனக்கண்ணில் வந்து போக.. விழியை அழுந்து மூடி ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவள், பின் எழுந்து கொள்ள நினைத்துக் கண்களைத் திறக்க.. அதேநேரம் அபிராமி கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அவரைக் கண்டதும் அவளுள் சிறு எதிர்பார்ப்பு உண்டாகச் சட்டென அபிராமியின் பின் பார்வையால் தேடினாள் நந்தினி. நிச்சயம் விநாயக் வர வாய்ப்பில்லை எனப் புரிந்தாலும் மனம் தன் எதிர்பார்ப்பை நிறுத்துவதில்லையே..!
 
 
ஒவ்வொரு வருடமும் அபிராமி மட்டுமே இந்த நாளில் வருவார் எனத் தெரிந்திருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாகச் சென்னையில் இல்லாதவன் இப்போது இங்கு வந்து இருக்க.. ‘ஒருவேளை தன் அன்னையோடு அவனும் வர கூடுமோ..!’ என்ற எண்ணம் அவர் மட்டும் உள்ளே நுழைந்ததில் பொய்த்துப் போனது.
 
 
இப்படி ஒருத்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை எல்லாம் கொஞ்சமும் உணராமல் கருவறையில் தெரிந்த அம்பாளின் உருவத்தை மட்டுமே கண்களில் நிறைத்துக் கொண்டு நேராக அங்குச் சென்று நின்றவரை கவலையோடு பார்த்தவாறே எழுந்து கொண்டாள் நந்தினி.
 
 
மீட்டிங் செல்ல அவளுக்கு நேரமானது. இதற்கு மேல் தாமதித்தால் சரியான நேரத்தில் அங்குச் செல்ல முடியாது என்று புரிந்து மெல்ல அங்கிருந்து நடந்தாள் நந்தினி.
 
 
அர்ச்சகர் அபிராமியை கண்டதும் முகம் மலர்ந்து “அடடே வாங்கோ.. வாங்கோ அபிராமிம்மா..” எனவும் “எப்படி இருக்கீங்க சாமி..?” என்றார் மெல்லிய புன்னகையோடு அபிராமி.
 
 
“எனக்கு என்ன..? உங்களை போலப் பெரியவா புண்ணியத்தில் நன்னா இருக்கேன்.. நீங்க என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரவே இல்லை..” என்று அவர் விசாரிக்கவும், “கொஞ்சம் உடம்பு முடியலை சாமி, அதிகம் வெளியே போறது இல்லை..” என்றவர், அர்ச்சனை கூடையை அவரிடம் நீட்டி “விநாயக் மஹாதேவ்..” எனவும், தானாக அர்ச்சகர் “சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம்..” என்று முடிக்கச் சிறுத்திகைப்போடு அவரைப் பார்த்தார் அபிராமி.
 
 
“அபிராமிம்மா உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. போன வருஷம் கூட இதே பேரில் ஒரு பொண்ணு வந்து அர்ச்சனை செஞ்சதுன்னு சொன்னேனே..! அந்த பொண்ணு இன்னைக்கும் வந்தா, இப்போ தான் இங்கே உட்கார்ந்துட்டு இருந்தா.. இருங்கோ..” என நந்தினி அமர்ந்திருந்த பக்கம் அவர் விழிகளால் தேட, அந்த இடமோ யாருமில்லாமல் காட்சி அளித்தது.
 
 
‘வருடம் தவறாமல் தன் மகன் பெயரில் சரியாக வந்து அர்ச்சனை செய்து செல்வது யார்..?’ என்ற பரபரப்பு அவருள்ளும் எழ, விழிகளைச் சுழற்றினார் அபிராமி.
 
 
“அடடா, அந்தப் பொண்ணு பேர் எனக்குத் தெரியலை அபிராமிம்மா.. ஆனா அடிக்கடி இங்கே வர பொண்ணு தான், நிறைய முறை பார்த்து இருக்கேன்.. உங்களுக்குத் தெரிஞ்சவங்களா தான் இருப்பா..” என்றார் அர்ச்சகர்.
 
 
‘எனக்குத் தெரிந்தவனா யாரா இருக்க முடியும்..?’ என மனம் யோசனையில் மூழ்க.. நிச்சயம் அவன் நட்பு வட்டத்தில் இருக்கும் யாரும் இல்லை என்று மட்டும் மனம் உணர்த்தியது. இன்றைய நாளை கொண்டாடுவது அவனுக்கு பிடிக்காது என்று தெரிந்த பிறகும் அந்த ஐவரும் ஒருநாளும் அவன் விரும்பாத ஒன்றை செய்ய மாட்டார்கள்.
 
 
இவர்களைத் தவிர வேறு யாரையும் அவருக்கு அவ்வளவு நெருக்கமாகத் தெரியாது எனும் போது யார் என்று அவருக்குத் தெரியவில்லை.
 
 
அதில் முகம் கலங்க அவர் நின்றிருந்த நிலையைக் கண்ட அர்ச்சகர் “சரி விடுங்கோ, இப்போ என்ன உங்க பிள்ளையாண்டான் பேருக்கு அர்ச்சனை தானே செஞ்சுட்டு போயிருக்கா.. ஒரே நேரத்தில் இரண்டு பிரார்த்தனை உங்க பிள்ளை பேரில் நடந்தா எல்லாம் நல்லதுக்கு தான்..” என்று அவர் சொல்லிக் கொண்டே கருவறைக்குள் செல்ல.. அது அப்படியே பலிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு கைகூப்பி அம்பாளை பார்த்தபடியே நின்றார் அபிராமி.
 
 
இங்குத் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நந்தினியின் மனமெங்கும் அவன் ஒருவனே நிறைந்திருக்க.. ‘இன்று அவனை ஒருமுறை கண்டுவிட மாட்டோமா..!’ என மனம் வெகுவாக ஏங்கியது.
 
 
இது எப்போதுமே அவளுள் இருக்கும் ஏக்கம் தான் என்றாலும் இன்று அவனின் பிறந்தநாள். உரிமையாக அருகில் நெருங்கி சென்று வாழ்த்து தான் சொல்ல முடியாது, தூரத்தில் நின்றாவது ஒருமுறை பார்த்து விட மனம் தவித்தது.
 
 
கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஊரிலேயே இல்லை. ஆனாலும் சென்ற வருடம் மனம் அவனைப் பார்த்தேயாக வேண்டும் எனச் சண்டித்தனம் செய்ததில், சட்டென மதியத்திற்கு மேல் முடிவெடுத்து மும்பைக்கு விமானம் ஏறி விட்டிருந்தாள் நந்தினி.
 
 
இதுவே இருவருக்குள்ளும் எல்லாம் இயல்பாக இருந்திருந்தால், விநாயக் எதிர்பாரா நேரத்தில் அவன் முன் சென்று நின்று “சர்ப்ரைஸ்” என்று சந்தோஷமாகச் சொல்லி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கலாம்.
 
 
ஆனால் அப்படி ஒரு வரம் தான் அவளுக்கு கிடைக்கவில்லையே..! மனமெங்கும் அவன் மேலான நேசம் நிறைந்திருக்க.. ‘இப்படி தள்ளி நின்று தவித்துக் கொண்டிருக்காமல் உரிமையாக அவனருகில் நிற்கும் நாள் தன் வாழ்வில் வருமா..?’ என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
 
 
‘வாழ்க்கை முழுக்க இப்படியே போய் விடுமோ..!’ என்ற பயமும் சமீபமாக அவளுள் எழாமல் இல்லை. இப்போதே வீட்டில் அவ்வப்போது திருமணப் பேச்சுக்கள் எழும் போதெல்லாம், மனம் பயத்தில் மத்தளம் கொட்ட தொடங்கும்.
 
 
‘எப்படி இதைத் தடுத்து நிறுத்துவது..? என்ன சொல்லி மறுப்பது..?’ என்றெல்லாம் அவள் ஆயிரம் யோசித்து வைத்திருந்தாலும், அதெல்லாம் வேதவல்லியின் முன் வேலைக்கு ஆகாது என்று அவளுக்குமே நன்றாகத் தெரியும்.
 
 
இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் எனச் சொல்லியே இன்னும் எவ்வளவு காலம் அவளால் தள்ளிப் போட முடியும்..? என்றாவது ஒருநாள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமே..!
 
 
‘எனக்கு ஒருத்தரை பிடிச்சுருக்கு, நான் கல்யாணம்னு செஞ்சுக்கிட்டா அவரைத்தான் செஞ்சுப்பேன்..’ என உறுதியாகக் கூட அவளால் யாரிடமும் அடித்துப் பேச முடியாத சூழ்நிலை. ‘விநாயக் என்ன மனநிலையில் இருக்கிறான்..? இது சாத்தியப்படுமா..!’ என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
 
 
அப்படி இருக்க அவன் பெயரையும் கொண்டு வராமல், திருமணப் பேச்சும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நிற்கிறாள் நந்தினி.
 
 
இதையெல்லாம் யோசித்தபடியே அன்று மும்பையில் சென்று இறங்கி இருந்தவள், அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று விட்டாலும், தள்ளி நின்றே அவனை மனதார ரசித்துத் தன் மனப் பெட்டகத்தில் பூட்டிக்கொண்டு கிளம்பி வந்திருந்தாள்.
 
 
அன்று தூரத்தில் இருந்த போது கூட பார்க்க முடிந்த தன்னால் இன்று கூப்பிடும் தூரத்தில் இருந்தும் அவனை பார்க்க முடியாததை நினைத்து மனம் பாரமாக.. சிக்னலில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தவளின் பார்வை ஏதேச்சையாக எதிர்ப்பக்கம் பதிய.. அங்குத் தன் காவல்துறை வாகனத்தில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்று அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
அவனைக் கண்டதும் அவளுள் அத்தனை உற்சாகம். அவ்வளவு நேரம் அழுத்திக் கொண்டிருந்த மனபாரம், துன்பம், வலி, வேதனை என எல்லாம் ஒரே நொடியில் கரைந்து காணாமல் போனது போல் மனமும் உடலும் லேசாகி விட்டிருந்தது.
 
 
விழிகள் கூடக் கலங்கத் தொடங்கி விட்டிருக்க.. தன் கண் முன் இருப்பவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து விட்டிருந்தாள் நந்தினி.
 
 
எப்போதும் போல் அதே கம்பீரம், கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே திமிரான உடல் மொழி, வாகனத்தில் சாய்ந்து நின்று ஒற்றைக் காலை அவன் ஸ்டைலாக மடித்து வைத்திருந்த விதம் கூட அத்தனை அழகாக இருந்தது.
 
 
‘இமைத்தால் கூட அவன் அங்கிருந்து சென்று விடுவானோ..!’ என்பது போல் இமைக்காமல் அவனையே நந்தினி பார்த்துக் கொண்டிருக்க… தொடர்ந்து யாரோ தன்னைப் பார்ப்பது போலான உறுத்தலில் விழிகளைத் திருப்பினான் விநாயக்.
 
 
எதிர்புறம் காரில் அமர்ந்தபடி நந்தினி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நொடி அவன் முகம் இறுகியது. ‘எங்கே போனாலும் இவ தொல்லை தாங்க முடியலை.. என்னை நிம்மதியாவே இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டுச் சுத்துவா போல..!’ என்று நினைத்தவன் முறைப்போடு அவளைப் பார்க்க.. அந்த விழிகளில் தெரிந்த உக்கிரத்திலேயே தன் மோனநிலை கலைய லேசாக விழிகளைத் தழைத்துக் கொண்டாள் நந்தினி.
 
 
அப்போதே சிக்னலும் மாறி இருக்க.. பின்னால் இருந்து தொடர்ந்து ஹாரன் ஒலிக்கத் தொடங்கியது. அதில் அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலையை உணர்ந்து மெல்ல கலக்கமும் தவிப்புமாக மீண்டும் நந்தினி தன் பார்வையை விநாயக் பக்கம் திருப்பவும், வெறுப்போடு அவளைப் பார்த்துவிட்டு சட்டென்று தன் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் விநாயக்.
 
 
அவனின் இந்த உதாசீனம் தான் ஒவ்வொரு முறையும் அவளை அதிகம் பாதிக்கும். இப்போதும் அப்படியே ஒரு அடிப்பட்ட பார்வை அவனைப் பார்த்தவள், கலங்கிய விழிகளோடு காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 
 

This post was modified 4 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
MNKN - 1
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 4 weeks ago by Kavi Chandra
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
 
மௌனம் - 2
 
 
ஆர் கே ப்ரொடக்ஷன் அலுவலகத்திற்குள் கார் சென்று நின்றதும், வழக்கம் போல் தன் உணர்வுகளை மறைக்கும் முகமூடியான மெல்லிய புன்னகையை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கினாள் யது நந்தினி.
 
 
வெள்ளை நிற அனார்க்கலி சுடிதார் அணிந்து ஆரஞ்சு நிற டிசைனர் துப்பட்டாவை ஒரு பக்கம் மட்டும் தவழவிட்டபடி இடைவரை நீண்டிருந்த தன் கூந்தலை எதற்குள்ளும் கட்டுப்படுத்த முயலாமல் அப்படியே விரித்து விட்டிருந்தவள், தன் கைப்பை மற்றும் பொருட்களோடு காரில் இருந்து இறங்கி உள்ள நுழைய, அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் அவள் மேல் படிந்து விலகியது.
 
 
யது நந்தினி பணம், படிப்பு, அழகு, அந்தஸ்து, ஆளுமை என எதிலும் குறை சொல்ல முடியா பேரழகி. அவளை கடந்து செல்லும் யாரும் ஒருமுறையாவது நந்தினியை திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது. ஆனால் அவளோ ஒருவனின் பார்வை தன் மேல் படவே தவம் இருக்கிறாள்.
 
 
அவனோ இவளை கண்டாளே வேப்பங்காயாக கசந்து நெருப்பாக காய்ந்து கொண்டிருக்கிறான். இன்று ஒருமுறை அவனை பார்த்து விட மாட்டோமா என அவனை காணும் வரை ஆர்பரித்து கொண்டிருந்த மனம், அவனை கண்டதில் நெகிழ்ந்து விழி வழியே அவன் உருவத்தை மனதிற்குள் ஆழப் பதித்துக் கொள்ள முயன்று, அவனின் உதாசீனத்தில் துவண்டு போய் இருந்தது.
 
 
ஆனால் வழக்கம் போல் அலுவலகத்தில் நுழைந்தவுடன் மற்றதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அதே கம்பீரத்தோடு எதிரில் வருபவர்களின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றபடியே உள்ளே நுழைந்தாள் நந்தினி.
 
 
அவளை வேகமாக வந்து எதிர்கொண்ட டில்லிபாபு “இன்னும் அரை மணி நேரத்தில் நவீன் குமார் வரேன்னு சொல்லி இருக்கார்..” எனவும் “நம்ம சைட் எல்லாம் தயாரா தானே இருக்கு..?” என்றபடியே தன் அறைக்குள் நுழைந்தவளை பின்தொடர்ந்தவர் “எஸ் மேம்..” என்றார்.
 
 
“ஓகே அங்கிள் நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்..” என்றவள் தன் இருக்கையில் அமரவும், ஒரு நொடி அவளை தயக்கத்தோடு பார்த்தவர் “மேடம் கால் செஞ்சு இருந்தாங்க..” என இழுக்க.. இதை ஓரளவு எதிர்பார்த்தே இருந்த நந்தினி ‘சரி’ என்பதாக மட்டும் தலையசைத்தாள். அதற்கு மேல் அவரும் எதுவும் சொல்லவில்லை இவளும் எதுவும் கேட்கவில்லை.
 
 
திடீரென இந்த சந்திப்பு ஏற்பாடாகி இருந்ததால் அதற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து முன் எடுத்து வைத்தவள், இன்று மதியம் நடக்க இருந்த மற்றொரு பேச்சு வார்த்தை பற்றிய குறிப்பும் எடுத்து கொண்டு அதன் வேலைகளையும் மற்றொரு பக்கம் கவனிக்க தொடங்க.. அவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. வழக்கம் போல் வேலைகள் அவளை உள்ளிழுத்துக் கொண்டது.
 
 
இவர்களுடையது சினிமா தயாரிப்பு நிறுவனம். ஆர்கே புரோடக்ஷன் இப்போது நான்காவது தலைமுறையாக நந்தினியின் கரங்களில் வந்து சேர்ந்துள்ளது. இன்னும் முழுமையாக இது அவளுக்கு சொந்தம் என்று சொல்லி விட முடியாது தான். ஆனால் அது அவர்களின் குடும்பத் தொழில் என்பதால் அப்படி தான் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
இதில் வேதவல்லிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அவள் படிப்பு முடிந்து இங்கு வேலைக்கு வந்ததெல்லாம் சரி. ஆனால் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் அவளிடம் கொடுக்க அவர் தயாராகவே இல்லை. இங்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருந்தாலும் இறுதி ஒப்புதலுக்காக அவள் ரகோத்தமனிடமோ இல்லை தன்னிடமோ வர வேண்டும் என்றே நினைத்தார் வேதவல்லி.
 
 
அதற்கு அவருள் பல காரணங்கள் இருந்தது. அதெல்லாம் நியாயமானதாகவே இருந்தாலும் நந்தினியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு மட்டுமல்ல வீட்டினர் யாருக்குமே இதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.
 
 
‘நிதினின் வசம் ஒரு நிறுவனத்தை ஒப்படைத்த போது இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் அவனுக்கு விதிக்கப்படவில்லை. பின் இவளுக்கு மட்டும் ஏன்..?’ என்று தான் அனைவருக்குமே தோன்றியது.
 
 
அதற்காக நந்தினியை வேதவல்லிக்கு பிடிக்காது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தன் ஒரே மகளின் ஒரே மகள். அந்த வகையில் நந்தினி அவருக்குமே செல்ல பேத்தி தான். ஆனால் தொழில் என்று வரும் போது அவரின் அனுபவம் இதற்கு முன் சந்தித்த சில விஷயங்கள் என்று எல்லாம் சேர்ந்து அவரை தன் பிடியில் உறுதியாக நிற்க வைத்தது.
 
 
குடும்பத்தினர் மேல் எவ்வளவு பாசம் இருந்தாலும் வேதவல்லிக்கு அவர் வார்த்தை மட்டுமே இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதை எந்த எல்லைக்கும் சென்று செயல்படுத்தி கொள்ளும் திறமையும் மறுப்பவர்களை அதற்கு தகுந்த வகையில் கையாளும் குணமும் எப்போதுமே உண்டு. இன்று வரை அவரின் அதிகாரத்தின் கீழ் தான் அந்த குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது.
 
 
அதேபோல் இந்த முடிவிலும் உறுதியாக இருந்தவர் பின் ரகோத்தமன் தலையிட்டு, வேதவல்லியின் தலையீட்டை விட, நந்தினி தன்னிடம் இறுதி ஒப்புதலை பெற்றுக் கொள்ளலாம் என முடித்து வைத்த பிறகே அவளிடம் இந்த நிறுவனத்தை ஒப்படைத்து இருந்தார்.
 
 
ஆனாலும் ‘அவள் சரியாக செய்கிறாளா..! எங்காவது சரிக்கி விடுவாளோ..!’ என அவளை கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார் வேதவல்லி.
 
 
இது ஆரம்பத்தில் நந்தினிக்கு பெரும் மன சஞ்சலத்தை கொடுத்திருந்தது. தன்னை எப்போதும் யாரோ ஒருவர் பார்வையால் பின் தொடர்ந்து கொண்டே இருப்பது, இயல்பாக எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலையை கொடுக்க.. அதைப் பற்றி தன் அன்னையிடமும் தாய் மாமாவிடமும் எவ்வளவோ சொல்லி புலம்பி தீர்த்து, பின் வேறு வழி இல்லாமல் இந்த நான்கு வருடங்களில் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள பழகி விட்டிருந்தாள் நந்தினி.
 
 
இத்தனைக்கும் நந்தினி பொறுப்பேற்றதிலிருந்து நல்ல லாபகரமாக தான் தொழில் சென்று கொண்டிருக்கிறது. அதில் எல்லாம் எந்த குறையும் சொல்லி விட முடியாது. சின்ன பெண் தானே இவளுக்கு என்ன தெரியும் என இந்தத் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட பலர் அவளிடம் விளையாடி பார்க்க நினைத்து மண்ணைக் கவ்விக் கொண்டு சென்றதெல்லாம் நடந்து இருக்கிறது.
 
 
இதையெல்லாம் அறிய நேரும் போது வேதவல்லிக்கு பெருமையில் முகம் பூரிக்கத்தான் செய்யும். ஆனாலும் ஏதாவது ஒரு சின்ன சறுக்கலோ எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலையிலோ அவள் சிக்கிக் கொள்ளும் போது மனம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும்.
 
 
“இதுக்காக தான் சொன்னேன், இவளுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.. கம்பெனியில் எவ்வளவு வேலை இருக்கு, அதில் எதையாவது ஒண்ணை கொடுக்கலாம் இல்லை.. இப்படி முழு பொறுப்பையும் தூக்கிக் கொடுக்கணுமா..?” என்று ஒரு வாரத்திற்கு அவளை வார்த்தைகளாலேயே வதைக்கும் அளவுக்கு பேசிக்கொண்டே இருப்பார் வேதவல்லி.
 
 
வீட்டினர் யாராலும் அவரை அவ்வளவு எளிதில் அமைதிப்படுத்தி விடவே முடியாது. தன் கடுமையும், கட்டுப்பாட்டையும் மீறிய சின்ன இலக்கம் அவருக்கு யார் மேலாவது உண்டென்றால் அது நிதினிடம் மட்டும் தான். அவன் மட்டுமே மற்றவர்களை விட, வேதவல்லியிடம் கொஞ்சம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்வான்.
 
 
தன் ஒரே பேரன், இந்த குடும்பத்தின் இன்றைய தலைமுறையின் ஒரே ஆண் வாரிசு என அவனுக்கு மட்டும் எப்போதுமே தனி சலுகை அவரிடம் உண்டு.
 
 
இது போலான நேரங்களில் எல்லாம் அவன் தான் வேதவல்லியை தனியே அழைத்து சென்று அமர்ந்து பேசி புரிய வைத்து மனதை மாற்றுவான். அதன் பின்பே அமைதியாவார் வேதவல்லி.
 
 
ஆரம்பத்தில் இதெல்லாம் பிடிக்காமல் இனி அந்த நிறுவனத்திற்கு வரவே மாட்டேன் நான் வெளியில் வேலை தேடிக் கொள்கிறேன் என்றெல்லாம் கூட பிரச்சனை செய்திருக்கிறாள் நந்தினி.
 
 
ஆனால் அதற்கும் வேதவல்லி அனுமதிக்கவில்லை. “என்ன வெளியே வேலைக்கு போறியா..? நாம யாருன்னு ஞாபகம் இருக்கா..! ஆர்கே புரொடக்ஷன் எவ்வளவு பெரிய கம்பெனின்னு தெரியுமா..? எத்தனை குடும்பத்தை வாழ வைச்சு இருக்கோம்..? நம்மால் எத்தனை பேர் வளர்ந்து இருக்காங்கன்னு மறந்து போச்சா..! இந்த வீட்டு பொண்ணு வெளியே வேலைக்கு போனா நம்ம கௌரவம் என்ன ஆகறது..?” என்று அதற்கும் முட்டுக்கட்டை போட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து தடுமாறி நின்றிருக்கிறாள் நந்தினி.
 
 
அப்போதும் பாட்டியிடம் பேசியது போலவே அவளிடமும் நிதின் தான் பேசி அந்த சூழ்நிலையை சமாளித்து இருந்தான்.
 
 
ஆர்கே ப்ரொடக்ஷன்ஸ் வேதவல்லியின் மாமனார் தொடங்கியது. தன் ஒரே மகன் ராதாகிருஷ்ணன் பெயரில் அவர் தொடங்கிய நிறுவனம் அது. அன்றைய காலகட்டத்தில் பல நடிகர்களை அறிமுகப்படுத்தி வளர்த்து விட்ட நிறுவனம்.
 
 
இன்றும் ஆர்கே புரோடக்ஷன் என்ற பெயருக்கு திரைத்துறையில் தனி ஒரு மதிப்பு இருந்தது. அடுத்து ராதாகிருஷ்ணன் பொறுப்பு எடுத்துக்கொண்ட போது அவர் ஆசைப்பட்டு தொடங்கியது ஆர்ஆர் ஸ்டூடியோஸ்.
 
 
தன் தந்தையின் பெயரையும் நிறுவனத்தையும் கொஞ்சமும் அதன் பெயருக்கோ புகழுக்கோ எந்த களங்கமும் வராமல் பார்த்துக் கொண்ட அதே நேரம், தன் புது முயற்சிகளையும் இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கொண்டிருந்தார்.
 
 
ஒரு சிலருக்கு தொட்டது எல்லாம் தொளங்கும் என்பார்களே..! அதுபோலத்தான் இவர்கள் குடும்பத்திற்கு இந்த துறை. கை வைத்ததெல்லாம் பொன்னாக மாறியது. இரு நிறுவனங்களும் ஆலமரம் போல் தழைத்து வளர்ந்து நின்றது.
 
 
ராதாகிருஷ்ணன் வேதவல்லி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் ரகோத்தமன், ராஜேந்திரன், சித்ரா. பிள்ளைகள் வளர தொடங்கியதுமே இரு நிறுவனங்களின் பொறுப்பையும் இரு பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்து விட்டிருந்தவர், மகளுக்கும் இதே துறையை சார்ந்த விவி பிக்சர்ஸ் குடும்பத்தின் மூத்த மகனான ஆனந்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்.
 
 
எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஆனந்தனின் சில தவறான முடிவுகள், அகல கால் வைத்தது எனத் தொடங்கிய சறுக்கல்கள் பின் எப்படியாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்மண் தெரியாமல் அவர் எடுத்த முடிவும் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து மீண்டும் இழந்ததை மீட்டு விடலாம் என்று அவர் வெளியில் வாங்கியிருந்த பெரும் பணமும் சேர்ந்து மொத்தமாக அவரை மூழ்கடித்து ஒன்றும் இல்லாமல் செய்து விட்டிருந்தது.
 
 
இதெல்லாம் நடந்த போது ராதாகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்த காரணத்தினால் அவருக்கு ஆரம்பத்திலேயே எதுவும் தெரிய வராமல் போயிருந்தது. அதோடு ஆனந்தனும் மற்றவர்களுக்கு இது தெரிய வந்தால் தனக்கு அசிங்கம் என்று எண்ணி அனைத்தையும் மூடி மறைத்து செய்ய.. இறுதியாக அது வெளிப்பட்ட போது சூழ்நிலை சமாளிக்க முடியாத நிலையில் தான் இருந்தது.
 
 
அதோடு குடும்ப சொத்தையும் அனைவருக்கும் பொதுவான நிறுவனத்தையும் ஆனந்தன் இப்படி தன் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொண்டதில் உண்டான கோபத்தோடு அவரின் உடன்பிறப்புகள் பிரச்சனை செய்ய.. அவர்கள் பக்கம் இருந்தும் உதவி கிடைக்காமல் கடன் தொல்லையும் தலைக்கு மேல் இருக்க தவித்து நின்றவருக்கு அதே கவலையில் அன்று இரவே மாரடைப்பு வந்து மரணமும் நேர்ந்திருந்தது.
 
 
இதற்குப் பிறகே விஷயம் சித்ராவின் வீட்டினருக்கு தெரிய வந்து ராதாகிருஷ்ணன் தலையிட்டு தன் மகள் பெயரில் புகுந்த வீட்டினர் சுமத்தி விட்டு ஒதுங்கி இருந்த கடனை எல்லாம் அடைத்து மகளையும் பேத்தியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டிருந்தார்.
 
 
இதெல்லாம் நந்தினியின் பத்து வயதில் நடந்திருக்க.. அதன் பின்னான அவளின் வாழ்க்கை மொத்தமும் இதோ இந்த வீட்டில் தான். நடந்து முடிந்த விஷயங்களில் இவள் தவறோ தன் மகளின் தவறோ எதுவும் இல்லை என்று தெரிந்திருந்தாலும், அவ்வப்போது தொழில் பற்றிய பேச்சு வார்த்தைகளிலோ ஆலோசனைகளிலோ நந்தினி எதையாவது சொல்லும் படி நேர்ந்தால் சட்டென வேதவல்லி சுருக்கென எதையாவது பேசி விடுவார்.
 
 
அவருக்கு தன் மகள் வழி பேத்தி நந்தினி என்பதைவிட, ஆனந்தனின் மகள் நந்தினி என்பது தான் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அத்தனை கோடி பணத்தை அழித்துவிட்டு சென்றவனின் மகளாக மட்டுமே தெரிந்தவருக்கு, நந்தினியினால் எதையும் திறம்பட செய்ய வராது என்ற எண்ணமே அவருள் வேறொன்றி இருந்தது.
 
 
அதுவே நந்தினியிடம் இத்தனை கடுமையும் கட்டுப்பாட்டையும் செய்ய வைக்க.. ஆரம்பத்தில் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கடந்து செல்லவும் முடியாமல் தவித்து தயங்கி பின் சண்டையிட்டு அழுது என்று எல்லாம் செய்தும் எந்த பலனும் இல்லை என்று புரிந்த பின்பே தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவோடு ஓயாது ஓட தொடங்கி இருந்தாள் நந்தினி.
 
 
இதிலெல்லாம் வேதவல்லிக்கு பெருமிதம் தான் என்றாலும் அவரையும் மீறி சில இடங்களில் முன் ஜாக்கிரதையாக அவளை கண்காணிக்கும் செயல்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையில் அவரின் இளைய மகன் வேறு இறந்து விட்டிருக்க.. இரண்டு நிறுவனங்களையும் கவனிக்கும் முழு பொறுப்பும் ரகோத்தமனிடம் தான் வந்து சேர்ந்திருந்தது.
 
 
பிள்ளைகள் வளரும் வரை இரண்டையும் கவனித்துக் கொண்டிருந்தவர், பின் நந்தினியிடம் ஆர்கே ப்ரொடக்ஷனையும் நிதினிடம் ஆர்ஆர் ஸ்டுடியோவையும் ஒப்படைத்து இருந்தார். இதற்கும் வேதவல்லி அத்தனை பிரச்சனை.
 
 
நந்தினியால் இதை சரிவர சமாளிக்க முடியாது. ஆர்கே புரொடக்ஷனில் பாரம்பரியமும் பெயரும் அவளால் கெட்டுவிடும். அதற்கு கலங்கம் வரக்கூடிய எந்த ஒரு செயலையும் தன்னால் அனுமதிக்க முடியாது என்றெல்லாம் அவர் சொல்லியும் தொடர்ந்து பேசி தன் அன்னையை சம்மதிக்க வைத்து தான் ரகோத்தமன் இன்று இதை சாத்தியப்படுத்தி இருந்தார்.
 
 
இதற்கு ஒரு வகையில் நிதினும் துணை புரிந்தான் என்று தான் சொல்ல வேண்டும். “எனக்கு ஆர்ஆர் ஸ்டுடியோஸ் தான் வேணும், இல்லை நான் வெளியில் எங்கேயாவது வேலைக்கு போறேன்.. உங்களுக்கு அப்படி அது கௌரவ குறைச்சலா இருந்தா நான் வெளிநாட்டுக்கு போறேன்..” என்று அவன் அடமாக நிற்கவும் தான், கொஞ்சம் இறங்கி வந்திருந்தார் பேரனின் மேல் இருந்த பாசத்தில் வேதவல்லி.
 
 
இன்று இதையெல்லாம் மனதில் யோசித்தபடியே எதிர்பாராமல் ஏற்பட்டிருந்த ஒரு சிக்கலை எப்படி சரி செய்வது..? வருபவர்களிடம் எப்படி பேசி இதை முடிப்பது..? என்ற தீவிர ஆலோசனையும் திட்டமிடலுமாக தன் வேலையில் கவனமாக இருந்தாள் நந்தினி.
 
 
*****
 
 
மெதுவாக எழுந்து தன் அறைக்குள் சென்ற வேதவல்லியின் பார்வை அவர் அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த தன் கணவன் மற்றும் இரண்டாவது மகனின் புகைப்படத்தின் மேல் பதிந்தது.
 
 
ராதாகிருஷ்ணன் தன் வயது மூப்பின் காரணமாக இயற்கையாகவே இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், தன் இரண்டாவது மகனின் அந்த திடீர் மரணமும் அது தந்த தாக்கமும் அவரின் மனதை பெருமளவில் பாதித்திருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
 
 
வெளிப்படையாக பார்க்கும் போது ராதாகிருஷ்ணனுக்கு ரகோத்தமனை தான் மிகவும் பிடிக்கும் என்பது போல் தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இளைய மகன் மீது தான் அவருக்கு தனி பாசம் உண்டு. முன்பே வேதவல்லியின் செல்லத்தில் உண்டான தனி சலுகைகளோடு வளர்ந்துக் கொண்டிருக்கும் மகன், பல பணக்கார வீட்டு பிள்ளைகளை போல் பொறுப்பில்லாமல் கெட்டு அழிந்துவிடக் கூடாது என்றே கொஞ்சம் கடுமை காண்பிப்பார்.
 
 
ஆனால் இப்படி திடீரென மகன் இல்லாமலே போவான் என அவருமே நினைக்கவில்லை. அதன் பாதிப்பு அவரின் மனதையும் உடலையும் சேர்த்தே நிலைக் குலைத்து இருந்தது.
 
 
ஒருவேளை இந்த சூழல் இல்லாமல் இருந்தால் ஆனந்தனின் சறுக்கல்களை முன்பே இவர்கள் கண்டறிந்து சரி செய்து இருப்பார்களோ என்னவோ..! இதையெல்லாம் யோசித்தப்படியே மகனின் புகைப்படத்தின் முன் நின்ற வேதவல்லியின் விரல்கள் அந்த முகத்தை அன்போடு வருடியது.
 
 
“அப்படி என்ன உனக்கு அவசரம் ராஜா..? ஏன் எங்களை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகிட்டு போனே..? இந்த வயசில் இன்னும் நான் இருக்க.. புத்திர சோகத்தை எனக்கு கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது..?” என்று மெல்லிய குரலில் சொல்லியவாறே பழைய நினைவுகளை அசைப்போட்டவரின் முகம் இறுகியது.
 
 
“உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவங்களை நான் சும்மாவே விட மாட்டேன் ராஜா.. நிம்மதியா அவங்களால் வாழவே முடியாது, இப்போவே உன்னை இப்படியாக்கினதுக்கான பலனை அவங்க அனுபவிச்சுட்டு தான் இருக்காங்க.. இன்னும் என்னவெல்லாம் அவங்களை செய்யறேன்னு பார்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவரின் முகத்தை இப்போது யார் கண்டாலும் மிரண்டு நான்கடி தள்ளி தான் நிற்பார்கள்.
 
 
அந்த அளவுக்கு ரௌத்திரமும் வெறுப்பும் அவருள் நிறைந்திருக்க.. அது முகத்தில் துல்லியமாக பிரதிபலித்தது. அதேநேரம் “குட் மார்னிங் அத்தை..” என்ற நிதினின் குரல் வெளியே கேட்க.. “மார்னிங் நிது.. வா சாப்பிட எடுத்து வைக்கிறேன்..” என்றார் சித்ரா.
 
 
“எங்கே யாரையும் காணோம்..?” என வீடே அமைதியில் மூழ்கி இருப்பதை பார்த்தப்படியே வந்து சாப்பிட அமர்ந்தான் நிதின். “நந்து இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சீக்கிரம் கிளம்பிட்டா.. அம்மா இப்போ தான் உள்ளே போனாங்க, அண்ணாவும் அண்ணியும் கோவிலுக்கு போய் இருக்காங்க..” என சொல்லிக் கொண்டே சித்ரா அவனுக்கு பரிமாறினார்.
 
 
இதையெல்லாம் கேட்டவாறே வெளியில் வந்த வேதவல்லியின் பார்வை முழுக்க நிதின் மேல் மட்டுமே அழுத்தமாக பதிந்திருந்தது. அதில் பார்வையை உயர்த்தி அவரை பார்த்தவன், “என்ன வேதா என்னை சைட் அடிக்கறியா..?” என்றான் குறும்புக் குரலில் நிதின்.
 
 
இதில் உண்டான சின்ன புன்னகையோடு சித்ரா உள்ளே சென்று விட, “நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை நிது.. தொழிலை மட்டும் வெற்றிகரமா நடத்தினா போதாது.. நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கணும்.. ரொம்ப கவனமா இருக்கணும்.. இந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளப்போற அரசன் நீ.. அதுக்கு ஏற்ற ஆளுமையோட இருக்க வேண்டாமா நீ..? இன்னும் இப்படி சிறுப்பிள்ளை தனமா எல்லாம் பேசிட்டு இருக்க கூடாது.. எத்தனையோ கழுகுகள் இந்த சாம்ராஜ்ஜியத்தை கொத்தி தூக்கிட்டு போக வட்டமிட்டுட்டு இருக்கு.. யாரையும் இந்த கோட்டையை, நான் பாதுகாத்து வெச்சு இருக்க இந்த கோட்டையை நெருங்க கூட நீ அனுமதிக்க கூடாது..” என்றவரின் குரலும் முகமும் அந்த இறுதி வரிகளை உச்சரிக்கும் போது விகாரமாக மாறியது.
 
 
அதை புரிந்தது போல் நிதினும் தீவிர முகபாவனையோடு தலையசைக்க.. சமையலறையில் இருந்த சித்ராவுக்கு தான் மனம் பாரமானது. இத்தனை வருடங்கள் கடந்தும் இப்படி ஒரு வீம்போடும் கோபத்தோடும் அவர் இருப்பதை எண்ணி வருத்தமானது.
 
 
அன்று விடாப்பிடியாக நின்று நினைத்ததை சாதித்த பிறகும் இன்று வரை அந்த வன்மம் குறையாமல் இருப்பவரை என்ன செய்ய.. என்ற வருத்தத்துடன் உள்ளேயே நின்று விட்டார் சித்ரா.
 
 
*********
 
 
தன் தலைமைக்கு கீழ் இருக்கும் காவல்நிலையத்தை பார்வையிட சென்றுக் கொண்டிருந்த விநாயக், வழியில் இருந்த ஒரு வளாகத்தில் நிதி நிறுவனத்தில் அடிதடி நடப்பதை கண்டு வண்டியை நிறுத்தி அவர்களை அதட்டி அடக்கி விட்டு வெளியில் வந்து நின்றிருக்கும் போதே நந்தினி அவனை பார்த்தது.
 
 
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அங்கே பிரச்சனை தொடங்குவது போல் இருக்க.. இரு தரப்பையும் விசாரித்து, தன்னை காவல்நிலையத்தில் வந்து சந்தித்து முறைப்படி புகார் அளிக்குமாறு சொல்லி விட்டு திரும்பியவன், இன்று காலையிலேயே இப்படி பஞ்சாயத்து செய்ததில் உண்டான கடுப்போடு நெற்றியை தேய்த்து விட்டவாறே திரும்பியவன், தன் வாகனத்தில் அவன் அமரும் இருக்கையில் இருந்த பரிசுத்தாள் சுற்றப்பட்டிருந்த பொருளை கண்டு நெற்றியை சுருக்கினான்.
 
 
அதை கண்டதும் அவனுக்கு ஒருத்தியின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அதில் உண்டான வெறுப்போடு ‘இவளை..’ என பல்லை கடித்தான் விநாயக்.
 
 
பின் சட்டென உண்டான கோபத்தோடு அதை தூக்கி வெளியே வீச அவன் முயல.. அதேநேரம் அருகில் யாரோ வந்து நிற்பது போல் தெரிய, பார்வையை திருப்பியவன், அங்கே புத்தகத்தை இறுக பிடித்தவாறே தன் தோழியின் பின்னே லேசாக தன்னை மறைத்துக் கொண்டு மானஸா நிற்பதை கண்டான்.
 
 
அவளை அங்கே கண்ட நொடி அவனுள் கனன்றுக் கொண்டிருந்த கனல் லேசாக தணிய, முகம் மென்மையாக மாறியது. எதுவும் பேசாமல் அவளையே விநாயக் பார்க்க.. அவளும் கண்களில் உண்டான படபடப்போடு அவனை பார்ப்பதும் பார்வையை தழைத்து கொள்வதும் பின் அங்கிருந்த பரிசுப் பொருளை பார்ப்பதும் பின் மீண்டும் விழிகளை திருப்பிக் கொள்வதுமாக இருந்தாள்.
 
 
இதில் அவன் முகத்தில் லேசாக புன்னகை அரும்ப நன்றாக திரும்பி நின்று அவளை பார்த்தான் விநாயக். அவனாக ஏதாவது சொல்லுவான் என காத்திருந்தவள் விநாயக் அமைதியாகவே இருக்கவும், மீண்டும் தயக்கத்தோடு பார்வையை உயர்த்தி பார்த்தாள்.
 
 
அதற்காகவே காத்திருந்தது போல் ஒற்றை விரலை அசைத்து அவளை ‘இங்கே வா’ என அழைத்தான் விநாயக். இதில் லேசாக திகைத்த மானஸா விழிகள் விரிய அவனை பார்க்க.. அந்த பாவனையில் தன்னை மீறி முகமெங்கும் புன்னகை மலர, அவளை மீண்டும் வாவென அழைத்தான் விநாயக்.
 
 
இப்போது மானஸாவின் தோழி அவளை இழுத்து முன்னே நிறுத்த.. அவளை சிணுங்கலும் முறைப்புமாக பார்த்தப்படியே இரண்டடி எடுத்து வைத்து அவனை நெருங்கினாள் மானஸா.
 
 
அவளின் ஒவ்வொரு செயலையும் மனதார ரசித்த விநாயக், தன்னை பார்ப்பதை தவிர்த்து தலையை நிமிர்த்தாமலே அவள் நின்று இருக்கவும், லேசாக தலை சாய்த்து அவளை பார்க்க.. அவனிடமிருந்து இதை எதிர்பார்க்காத மானஸா திடுக்கிட்டு பார்க்கவும், குறும்போடு விழிகளை உயர்த்தி ‘என்ன..?’ என்றான் விநாயக்.
 
 
அதில் வேகமாக அவள் ஒன்றுமில்லை என தலையசைக்க.. அவன் முகத்தில் அத்தனை புன்னகை.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 
 
 

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
MNKN - 2
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
 
மௌனம் – 3
 
பூஜையை முடித்துக் கொண்டு வந்து கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த அபிராமியின் மனம் முழுக்க மகன் மட்டுமே நிறைந்திருந்தான். அவனை எண்ணி அவனின் எதிர்காலத்தை எண்ணி அத்தனை கவலை அவருள் இருக்க.. மனம் சொல்லொன்னா துயரை சுமந்திருந்தது.
 
 
வார நாட்கள் என்பதால் பெரிதாகக் கூட்டம் இல்லாமல் அமைதியாக இருந்த கோவிலுக்குள் எந்த அவசரமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து விட்டார் அபிராமி. அதே நேரம் அங்கு வந்த நடுத்தர வயது பெண்களில் சிலர் அபிராமியை கவனித்து விட்டு வேகமாக அவரை நெருங்கினர்.
 
 
“அய்யய்யோ, அபிராமி மேடம் நீங்கதானா..! உங்களைப் போலவே இருக்கேன்னு தான் நினைச்சோம்.. நீங்களா இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..” என அவர்கள் முகம் எங்கும் சந்தோஷம் பொங்க பேசிக்கொண்டே செல்ல.. இப்போது இருக்கும் மனநிலையில் இதையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல் லேசாகத் தடுமாறிய அபிராமி மெல்லிய புன்னகையோடு லேசாகத் தலையசைத்து அமர்ந்திருந்தார்.
 
 
“மேடம் நீங்க எப்படி இங்கே..? வழக்கமா இந்தக் கோவிலுக்கு வருவீங்களா..? விசேஷ நாளில் மட்டும் தானே வருவீங்க..! இன்னைக்கு எப்படி..?” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்க.. “எப்போவாவது வருவேன்..” என்றார் சங்கடமாக மெல்லிய குரலில் அபிராமி.
 
 
“ஓஹோ.. மேடம் ஒரே ஒரு போட்டோ உங்க கூட..” என்று ஆளாளுக்கு அவர்களின் அலைபேசியை எடுத்தனர். அதில் மறுக்கவும் முடியாமல் அவர்களோடு ஒன்றவும் முடியாமல் இருந்த அபிராமி சிறு தலையசைப்போடு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் போதே வேகமாக அங்கே வந்து சேர்ந்தார் கணபதி.
 
 
அபிராமியின் கார் ஓட்டுநர் தான் கணபதி. கோவிலுக்குள் வரவில்லை என்றாலும் சற்று தள்ளி நின்றே தன் பார்வை வட்டத்திற்குள் அபிராமி இருக்குமாறு பார்த்துக் கொள்வது கணபதியின் வழக்கம். இது விநாயக் அவருக்கிட்டுள்ள முக்கியமான பணிகளில் ஒன்று.
 
 
இப்போதும் அப்படியே கவனித்துக் கொண்டிருந்தவர் திடீரெனப் பெண்கள் எல்லாம் அபிராமியை வந்து சூழ்ந்து கொண்டதில் கொஞ்சம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து காத்திருந்து விட்டே அங்குச் சென்றார்.
 
 
தன்னைச் சுற்றி வளைத்திருந்த பெண்களிடமிருந்து எப்படி விலகி செல்வது எனப் புரியாமல் அபிராமி தவித்துக் கொண்டிருக்கவும், அங்கு வந்து சேர்ந்த கணபதி “மேடம் நேரமாச்சு கிளம்பலாமா..?” என இயல்பாகக் கேட்டபடியே அவர் அருகில் இருந்த பூஜை கூடையை எடுத்துக் கொள்ள.. ‘சரி’ என்ற தலையசைப்போடு அபிராமியும் எழுந்து நின்றார்.
 
 
“மேடம் நீங்க ஏன் இப்போ எல்லாம் நடிக்கறதே இல்லை..? எங்களுக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும்னு தெரியுமா..? நீங்க திரும்ப நடிங்க மேடம்..” என்று ஒவ்வொருவரும் பேசிக் கொண்டே வர, சரி என்பது போல் மெல்லிய புன்னகையோடு அனைவருக்கும் தலையசைத்துக் கொண்டே கணபதி ஏற்படுத்திக் கொடுத்த வழியில் தன்னால் முடிந்த அளவு வேகமாகச் சென்ற அபிராமி, கணபதி அவருக்காகக் கதவை திறந்து பிடிக்கவும் உள்ளே ஏறி அமர்ந்து விட்டார்.
 
 
எதற்காகக் கோவிலுக்கு வந்தோம் என்பதைக் கூட மறந்துவிட்டு அபிராமியின் பின்னே சென்ற பெண்கள் அவரையே கண்கள் மின்னும் ஆர்வத்தோடு முகம் எங்கும் புன்னகை மலர்ந்திருக்க ஆவெனப் பார்த்திருந்தனர்.
 
 
அவர்களின் இத்தனை வருடத்திற்குப் பின்பும் தன் மீதான அன்பில் நெகிழ்ந்த அபிராமி, “சரி கிளம்புறேன்..” எனவும், “ஐயோ நீங்க பேசுறது கூடப் பாடறது மாதிரியே இருக்கு மேடம்..” என்று அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி சொல்ல.. அதுக்கும் புன்னகைத்துக் கொண்டார் அபிராமி.
 
 
இதற்கு மேல் இங்கு நின்றால் கிளம்ப முடியாமல் போகும் என உணர்ந்து சட்டென கணபதி காரை எடுத்திருந்தார். கார் சற்று தள்ளிச் செல்லவும் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்ட அபிராமி, “தேங்க்யூ கணபதி..” என்று கூற, “இது என் கடமை மேடம்..” என்றார் அவர்.
 
 
அதற்கு வேறு எதுவும் பேசாமல் அபிராமி விழி மூடி இருக்கையில் சாய்ந்து கொள்ள.. கார் வீட்டை நோக்கி பயணித்தது. இதுவே வேறு ஒரு நாளாக இருந்திருந்தால் அவர்களோடு கொஞ்சம் கலந்து பேச முயன்று இருப்பார் அபிராமி. ஆனால் இன்று மனம் முழுக்க வேதனை நிரம்பி இருக்க.. அவரால் அப்படி ஒன்றை செய்யவே முடியவில்லை.
 
 
அபிராமி சென்ற தலைமுறையினர் கொண்டாடும் ஒரு திரை நாயகி. திரைத்துறையில் அவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உண்டு. ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகர்கள் கூட அபிராமியின் கால்ஷீட் வாங்க காத்திருந்ததெல்லாம் உண்டு.
 
 
ஒல்லியான நடிகைகளையே பார்த்துச் சலித்திருந்த தமிழ் சினிமாவுக்கு லேசாகப் பூசினாற் போன்ற உடல்வாகோடு அறிமுகமானவர் தான் அபிராமி. அபிராமியினுடையது மிக பெரிய பாரம்பரியமான கர்நாடக சங்கீத குடும்பம். அவரின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி என அத்தனை பேரும் மேடைகளில் கச்சேரி பாடுவார்கள்.
 
 
மார்கழி நேர கச்சேரிகளுக்கு இவர்கள் வீட்டினரின் தேதியை வாங்கி விடத் திருவிழா கூட்டம் போல் அபிராமியின் வீட்டின் முன் காத்திருப்பர். அந்தக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்த அபிராமியும் முறைப்படி சங்கீதம் பயின்றவர் தான்.
 
 
அப்படித் தன் பதினேழாவது வயதில் அவர் ஒரு கச்சேரி செய்து கொண்டிருக்கும் போது தான் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவரின் பார்வையில் விழுந்தார் அபிராமி. அப்போது அவர் எழுதிக் கொண்டிருக்கும் படத்தின் நாயகியை கண்முன் கண்டது போல் இயக்குனருக்குத் தோன்ற.. அன்றே தன் அடுத்தப் படத்தின் நாயகி அபிராமி தான் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தவர், அதன் பின் அபிராமி வீட்டினரை தொடர்பு கொண்டு பேச, அவர்களோ முடியவே முடியாது என மறுத்து விட்டனர்.
 
 
ஆனால் தன் முயற்சியில் கொஞ்சமும் தளராத விக்கிரமாதித்தன் போல் அவர் தொடர்ந்து சில மாதங்கள் படையெடுத்ததன் விளைவாக அபிராமி நடிக்க ஒப்புக் கொண்டார்.
 
 
ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் அபிராமி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அவரை அணுகியவருக்கு, பின் அருகில் இருந்து அபிராமியை பார்த்து, பேச, பழக என்று கிடைத்த வாய்ப்பில், அந்தக் கதாபாத்திரத்திற்கு இவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவே முடியாது என்ற முடிவுக்கே வந்து விட்டிருந்தார் இயக்குனர்.
 
 
அதன் பலனாகத் தான் ஆறு மாதங்கள் தொடர்ந்து போராடி அபிராமியின் சம்மதத்தைப் பெற்றிருந்தார் இயக்குனர்.
 
 
ஒரு கட்டத்தில் அபிராமி நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை எடுக்கவே கூடாது என்ற முடிவுக்குக் கூட இயக்குனர் வந்து விட்டிருக்க.. அதுவே அபிராமியை யோசிக்க வைத்தது. அப்போதும் தயங்கிய தன் வீட்டினரை அபிராமியே பேசி சம்மதிக்க வைத்திருந்தார்.
 
 
மகனின் ஆசைக்காக இந்த ஒரு படம் என்று எண்ணியே சம்மதித்திருந்தவர்களுக்கும் மகள் மிகப்பெரிய நடிகையாக அந்தத் துறையில் கோலோச்ச போவது அப்போது தெரியவில்லை. அபிராமியின் முதல் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.
 
 
பதின்ம வயதுக்கே உரிய இளமை ததும்பும் அழகு, கவி பேசும் கண்கள், உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் முகம், எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் அத்தனை அழகாக நடித்துக் கொடுத்துவிடும் அவரின் திறமை, கொஞ்சமும் தலைகணம் இல்லா பாங்கு என்று எல்லாம் சேர்ந்து அபிராமியை புகழின் உச்சிக்கு கூடிய சீக்கிரமே கொண்டு சென்று நிறுத்தி இருந்தது.
 
 
அபிராமி வீட்டினரின் கச்சேரியை புக் செய்ய வரும் கூட்டித்தினருக்குப் போட்டியாக அவரைப் படங்களுக்குப் புக் செய்ய வரும் கூட்டமும் வீட்டின் முன் நிற்க தொடங்கியது. இப்படிப் பணம், பெயர், புகழ் என ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தன் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை முற்றிலும் நிறுத்திக் கொண்டார்.
 
 
அதன் பின்னான சில நிகழ்வுகளுக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அபிராமி நடிக்க வரவும், நடந்த பல விரும்பத்தகாத சம்பவங்களால் முற்றிலும் இந்தத் துறையில் இருந்து ஒதுங்கி விலகி நின்று கொண்டார் அபிராமி.
 
 
இப்போது வரையும் சில படங்களை அவருக்கென எழுதி எடுத்துக்கொண்டு சென்று எப்படியாவது அவர் சம்மதித்து விட மாட்டாரா என முயன்று கொண்டிருக்கும் இயக்குனர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
 
 
அக்கா அண்ணி வேடங்களில் நடிக்கக் கூடப் பலர் அவரை அணுகியிருந்தனர். அனைவருக்கும் தைரியமான, கொஞ்சம் பேரிளம் பெண் கதாபாத்திரத்தில் நாயகியை முன் வைத்து உருவான நிறையப் படங்களுக்கு ஒரே தேர்வாக அபிராமி மட்டுமே இருந்தார். ஆனால் அவரின் ஒரே பதில் ‘இனி நான் நடிக்கப் போவதில்லை’ என்பதாக மட்டுமே இருந்தது.
 
 
படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டிருந்தாலும் கச்சேரிகளில் பாடுவதை அபிராமி இன்று வரை நிறுத்தவில்லை. ஆனால் அவரின் குடும்பத்தினர் போலத் தொடர்ந்து செய்வதும் கிடையாது. வருடத்திற்கு இரண்டு கச்சேரிகள் அவ்வளவே..! அதுவும் கூடக் கோவில் விசேஷங்களிலும் திருவிழாக்களிலும் மட்டுமே..!!
 
 
சில பெரிய மனிதர்கள் அவர்கள் நடத்தும் விழா விசேஷங்களில் அபிராமியை அழைத்து வந்து பாட வைத்து விட, எவ்வளவோ முயன்றும் அது இன்று வரை நடக்கவில்லை.
 
 
அபிராமியின் நடிப்பு, பாடல் என்று அவருக்காகவே அவரைப் பிடித்துப் பின் தொடர்ந்த ரசிகர்கள் இன்று வரைக்குமே அவருக்கு உண்டு.
 
 
*********
 
 
அதே அம்மன் கோவில் ரகோத்தமன் தன் மனைவி புஷ்பாவுடன் உள்ளே நுழைய.. “அடடே வாங்கோ.. என்ன இன்னைக்குப் பெரியவா எல்லாம் ஒண்ணா சேர்ந்து வரேள்..” என்று ஆரவாரமாக வரவேற்றார் அர்ச்சகர்.
 
 
அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்த ரகோத்தமன் “சிறப்புப் பூஜைக்குக் கொடுத்திருந்தோம் சாமி..” எனவும், “அடடா அது நீங்க தானா..! நேரம் ஆகுதே பூஜைக்குக் கொடுத்தவாளை இன்னும் காணோமேன்னு நினைச்சேன், வாங்கோ எல்லாம் தயாரா தான் இருக்கு.. பூஜையைத் தொடங்கிடலாமா..?” என்றார் அர்ச்சகர்.
 
 
அதில் தன் மனைவியின் பக்கம் திரும்பி ரகோத்தமன் பார்க்கவும், அவரும் சம்மதமாகத் தலையசைத்தார். இதற்காகவே காத்திருந்த இன்னொரு அர்ச்சகரும் உடன் இணைந்து கொள்ள.. அடுத்த ஒருமணி நேரம் பூஜை மிகப் பிரமாண்டமாக நடந்தது.
 
 
இறுதியாக புஷ்பாவிடம் இருந்த அர்ச்சனை கூடையை வந்து வாங்கியவர், “யார் பெயருக்கு..?” எனவும், “வினய்..” என ரகோத்தமன் தொடங்கவும், அவரை மறுப்பாகப் பார்த்த புஷ்பா “விநாயக்.. விநாயக் மஹாதேவ்.. சிம்மராசி, உத்திர நட்சத்திரம்..” என்று சொல்லி முடித்திருந்தார்.
 
 
அதில் வியப்பாக அவர்களைப் பார்த்த அர்ச்சகர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று பூஜையை முடித்து ஆரத்தி தட்டுடன் அவர்கள் முன் வந்து நின்றார். அது வரையும் அம்பாளையே விழிகளில் நிறைத்துக் கொண்டிருந்த புஷ்பா ஆரத்தியை தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளவும், “பூஜை எல்லாம் நல்லா ஷேமமா நடந்தது.. உங்களுக்குத் திருப்தி தானே..!” என்றார்.
 
 
அதற்கு ஆமெனத் தலையசைத்த ரகோத்தமன் ஐநூறு ரூபாய் தாளை எடுத்துத் தட்டில் போட்டார். அதைக் கண்டு முகம் மலர்ந்தவராகத் திரும்பிய அர்ச்சகர், “இன்னைக்கு என்ன விசேஷம்..? இதோட இந்தப் பெயருக்கு இது மூணாவது அர்ச்சனை..” என்றார்.
 
 
அதில் முகம் மலர்ந்தவராக புஷ்பா எதையோ சொல்ல வரவும், “வேற யார் வந்தா..?” என்றிருந்தார் அந்தப் பகுதி முழுக்கப் பார்வையைச் சுழற்றியவாறே ரகோத்தமன்.
 
 
“அபிராமி அம்மா வந்தாங்கோ..” என்று சொல்லிக் கொண்டிருந்த அர்ச்சகரை அதற்குள் அந்தக் கோவில் தர்மகர்த்தா ஏதோ வேலையாக அழைக்கவும், “இதோ வரேன்..” என்று விட்டு நகர்ந்தார் அர்ச்சகர்.
 
 
********
 
 
ஏதோ ஒரு தைரியத்தில் சட்டென விநாயக்கை இங்கே கண்டதும் கல்லூரி பேரூந்தில் இருந்து இறங்கி வந்து விட்டிருந்தாலும், ‘அவன் என்ன சொல்லுவானோ..? திட்டுவானோ..! கோபப்படுவானோ..!!’ என்றெல்லாம் பயந்துக் கொண்டிருந்தவள், விநாயக்கின் இந்தப் புன்னகை முகம் கண்டு திகைத்து விழித்தாள்.
 
 
“ஒய் மான் குட்டி, இங்கே என்ன செய்யறே..?” என்று அவன் கேட்கவும், விநாயக்கின் இந்த அழைப்பில் பட்டென அவளின் கண்கள் பனித்தது. அவள் கண்கள் கலங்குவதைக் கண்டு சட்டென உண்டான பதட்டத்தோடு அவளை நெருங்கியவன், “ஹே என்னடா..?” என அவள் தலையை ஆதரவாக வருட.. அடுத்த நொடி அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.
 
 
“மானு என்னம்மா..?” என அவளின் அழுகையைக் கண்டு உண்டான பதட்டத்தோடு அவன் அழைக்கவும், சட்டென விழிகளைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், “ஒண்ணுமில்லை.. நந்து மட்டும் தான் என்னை இப்படிக் கூப்பிடுவா.. நீங்களும் இப்படி கூப்பிடவும் சட்டுன்னு உடைஞ்சுட்டேன்..” என்று சிறு திணறலோடு சொல்லியவாறே புன்னகைத்தாள் மானஸா.
 
 
அதில் ஒரு நொடி முகம் இறுகினாலும் “இதுக்கெல்லாமா அழுவாங்க..?” என்று செல்லமாகக் கடிந்துக் கொண்டவன், “ஆமா இன்னைக்கு உனக்குக் காலேஜ் இல்லையா..?” என்றான் பேச்சை மாற்றும் விதமாக விநாயக்.
 
 
அதற்கு அவள் சட்டெனப் பதில் சொல்லாமல் தயக்கத்தோடு அவனைப் பார்க்கவும், “காலேஜ் தான் போயிட்டு இருந்தோம் அண்ணா.. இல்லை சார்..” என்று சிறு தடுமாற்றத்தோடே தொடங்கி, “இங்கே நீங்க நிற்கறதை பார்த்ததும், யோசிக்காம என்னையும் இழுத்துட்டு காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கிட்டா..” என்றாள் மானஸாவின் தோழி ப்ரீத்தி.
 
 
அதில் அவளைக் கேள்வியாக விநாயக் பார்க்கவும், அவன் முறைப்பதாக நினைத்து பதட்டமான மானஸா, “இல்.. லை.. இ.. இதை.. கொடு.. க்கத்தான்..” என்று அந்தப் பரிசை காண்பித்துத் துண்டு துண்டாக அவள் பேசவும், “ம்ப்ச், இப்போ எதுக்கு இந்தப் பதட்டம்.. என்கிட்டே தானே பேசறே..? ரிலாக்ஸ்..” என்றான் விநாயக்.
 
 
அவன் இத்தனை நாளில் கவனித்த வரை மானஸாவுக்குப் பதட்டமாகும் போது மட்டும் லேசாகத் திக்கும். முடிந்தவரை அது வெளிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென எண்ணியிருந்தவனுக்கு இன்று அவள் தன்னிடமே அப்படிப் பேசியது வருத்தத்தைக் கொடுத்தது.
 
 
இதில் அடுத்து எதுவும் பேசாமல் அவள் பார்வையைத் தழைத்துக் கொள்ளவும், “சரி என்னை இங்கே பார்க்கலைனா என்ன செஞ்சு இருப்பே..?” என அவளிடம் பேச்சை வளர்க்க முயன்றான் விநாயக்.
 
 
“ஈவ்னிங் ஸ்டேஷன்..” எனத் தொடங்கியவள், விநாயக் வியப்பாகப் புருவத்தை உயர்த்தவும், “அந்தத் தெருமுனையில் இருக்க ஜூஸ் கடையில் நின்னுட்டு இருந்து இருப்பேன்..” எனக் கையசைத்து அவள் பேசிய விதத்தில் அவனுக்குப் புன்னகை உண்டானது.
 
 
“ஓ.. மேடமுக்கு அவ்வளவு தைரியம் வந்தாச்சா..?” என்றான் சிரித்துக் கொண்டே விநாயக். “நீ.. நீங்க இருக்கும் போது எ.. எனக்கு என்ன பயம்..?” என அவளும் சிரித்துக் கொண்டே சொல்ல.. மெச்சுதலாக இதழ் வளைத்தான் விநாயக்.
 
 
பின் நேரமாவதை உணர்ந்து “காலேஜுக்கு நேரமாகலையா..?” என அவன் கேட்கவும், ஆமென அவசரமாகத் தலையசைத்த மானஸா அங்கிருந்த பரிசை எடுத்து அவனிடம் நீட்டி “ஹாப்பிப் பர்த்டே அண்ணா..” என்று மெலிதாகப் புன்னகைத்தாள்.
 
 
அந்தக் கள்ளம் கபடமில்லா புன்னகையைக் கண்டு மனம் நெகிழ்ந்தவன், “தேங்க்ஸ்டா மானுக்குட்டி..” எனவும், மெலிதாகத் தலையசைத்தாள் மானஸா.
 
 
அங்கிருந்த ஒரு கேப் ஓட்டுனரை அழைத்து இருவரையும் அதில் ஏற்றி விட்டவன், “இரண்டு பேரையும் பத்திரமா காலேஜில் கொண்டு போய் விட்டுடுங்க..” என்று விட்டு, மானஸாவின் பக்கம் திரும்பி “காலேஜில் இறங்கினதும் எனக்கு ஒரு கால் செய் மானும்மா..” என்றான்.
 
 
அதற்கு வேகமாக அவள் தலையசைக்கவும், கார் கதவை மூடியவன் சிறு தலையசைப்போடு நிற்க.. கார் அங்கிருந்து நகரத் தொடங்கியதும், மெல்ல கையை உயர்த்தித் தயக்கத்தோடே அசைத்தாள் மானஸா.
 
 
அதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தானும் பதிலுக்குக் கையசைத்தவன், கார் அடுத்தத் திருப்பத்தில் சென்று மறையும் வரை, அப்படியே பார்த்துக் கொண்டு நின்றவன், முகத்தில் உறைந்த அதே புன்னகையோடு விநாயக் திரும்பவும், அவனை நம்ப முடியா திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் டிரைவர் முருகன்.
 
 
அவரின் பார்வையைக் கண்டதும் உயர்த்தி இருந்த கையைத் தானாக இறக்கிக் கொண்ட விநாயக், “கிளம்பலாமா..?” என்று விறைப்பாகக் கேட்டவாறே சென்று ஜீப்பில் ஏறினான். அதில் பெரும் தலையசைப்போடு முருகனும் பின்னேயே சென்று வண்டியில் ஏறி இருந்தார்.
 
 
காவல்நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் கைகள் சற்று முன் மானஸா கொடுத்து சென்றிருந்த பரிசை மெல்ல வருடியது. இரண்டு வருடத்திற்கு முன்பு வரை யாராவது அந்தக் குடும்பத்து நபரோடு இவன் இத்தனை இனிமையாகப் பழகுவான் எனச் சொல்லி இருந்தால் அப்படிச் சொன்னவர்களை ஒருவழியாக்கி இருப்பான் விநாயக்.
 
 
ஆனால் இன்று எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளோடு பேசி சிரித்து அவளையும் சிரிக்க வைக்க முயல்கிறான். அவளோடு இருக்கும் நேரங்களை ரசிக்கிறான். ‘நானா இப்படி மாறிப் போனேன்..?’ என அவனே பலமுறை தனக்குள் கேட்டு பார்த்தும் பயன் தான் எதுவுமில்லை.
 
 
அதிலும் இயல்பாக யாரையும் எதிர் கொள்ள முடியாமல் விழிகள் படபடக்க அவள் நிற்கும் போதும், சரியாகப் பேச முடியாமல் திணறும் போதும், அந்த நொடியே அதை போக்கி இதற்குக் காரணமானவர்களைச் சும்மா விடக் கூடாது என உள்ளம் கொதிக்கும்.
 
 
இப்போதும் அப்படியே..! ‘அந்தக் கிழவியை..!’ என விநாயக் பல்லை கடிக்கவும், காவல் நிலையத்திற்குள் அவன் ஜீப் சென்று நிற்கவும் சரியாக இருந்தது.
 
 
அதில் சட்டென முகப் பாவனையை மாற்றிக் கொண்ட விநாயக், அதே மிடுக்கோடு இறங்கி உள்ளே சென்றான்.
 
 
**********
 
 
கண் முன் இருந்த கோப்பில் பார்வையைப் பதித்திருந்த விநாயக் கதவு லேசாகத் தட்டப்படும் சத்தத்தில் பார்வையை உயர்த்தி “எஸ்..” என்றான். அதே நேரம் கையில் ஒரு மெல்லிய கோப்போடு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த யது நந்தினியை கண்டவனின் முகம் இறுகியது.
 
 
அதுவரை இயல்பாக இருந்த முகத்தில் தன்னைக் கண்டதும் கடுமை பரவியதை அவளும் உணர்ந்தே இருந்தாள். நந்தினியை அங்குக் கண்டதும் வெறுப்போடு அவளைப் பார்த்தவனின் பார்வை நந்தினியின் முகத்திலேயே கூர்மையாகப் பதிந்திருக்க.. தன்னை அவன் உட்கார கூடச் சொல்லாததை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “ஒருகம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்றாள் நந்தினி.
 
 
அவள் அந்த வார்த்தையை உச்சரித்ததும், விநாயக்கின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் பரவியது.
அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இப்படி தான் “ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்று தன் முன் வந்து நின்றவளை ஆராய்ச்சியாகப் பார்த்த விநாயக் “என்ன கம்ப்ளைன்ட்..? யார் மேலே..?” என்றான்.
 
 
அதில் மெல்ல புன்னகைத்துக் கொண்டே, “விளக்கமா நானே சொல்லட்டுமா..? இல்லை எழுதி கொண்டு வந்ததைக் கொடுக்கட்டுமா..?” என நந்தினி கேட்கவும், வார்த்தைகளில் பதில் சொல்லாமல் அவள் எழுதிக் கொண்டு வந்ததைக் கேட்டு கையை நீட்டினான் விநாயக்.
 
 
அவன் நீட்டிய கையை ஒரு நொடி பார்த்தவளின் விழிகளில் குறும்பு கூத்தாட, சட்டென விநாயக்கின் கைகளைப் பிடித்து லேசாகக் குலுக்கியவள் “ஹலோ நான் யது நந்தினி, உங்க பேர் என்ன..?” என்றாள்.
 
 
அதில் அவளை முறைத்தவாறே வேகமாகத் தன் கையை நந்தினியிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்து நின்றவன், “என்ன கம்பிளைன்ட்..?” என்று குரலில் இறுக்கத்தைக் கொண்டு வந்து கேட்டிருக்க.. தன் கையிலிருந்த புத்தகத்தின் இடையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள் நந்தினி.
 
 
அவள் தனியே வந்திருப்பது, கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவனுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தாலும் தன் வேலைக்கு மதிப்பளித்து அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தவன் அவளின் புகார் கடிதத்தைப் படித்து முடித்த நொடி ருத்ர மூர்த்தியாக மாறிப் போனான்.
 
 
வணக்கம் ஏசிபி சார்..
 
 
எனக்கு ஒருத்தரை ரொம்பப் பிடிச்சுருக்கு, அவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. ஆனா அவர் என்னைக் கண்டுக்கவே மாட்டேன்றார், இது இந்தக் குட்டி இதயத்தில் எவ்வளவு வலியை கொடுக்குது தெரியுமா..? என் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ இப்படி ஒதுக்கி வைக்கறது சரியான்னு நீங்களே விசாரிச்சு சொல்லுங்க..
 
 
இப்படிக்கு உங்களையே நினைச்சு உங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கும்
உங்கள் யது நந்தினி
 
 
என எழுதி இருந்ததைப் படித்த நொடி அவனுள் அவ்வளவு ஆத்திரம் கனன்றது.
 
 
அந்தக் காகிதத்தைச் சுக்கல் நூறாகக் கிழித்து அவளின் முகத்திலேயே வீசியவன், “அறிவில்ல உனக்கு..? படிச்சவ தானே நீ..? எதில் விளையாடறதுன்னு இல்லையா.. இங்கே உன் விளையாட்டைப் பார்க்க தான் நாங்க உட்கார்ந்து இருக்கோமா..?” என்று காய்ந்து விட்டான் விநாயக்.
 
 
நிச்சயம் கோபப்படுவான் என்று தெரியும் தான். ஆனால் இவ்வளவு கடினமான வார்த்தைகளில் திட்டுவான் என எதிர்பார்க்காத நந்தினி, சிறுத்திகைப்போடு அப்படியே நின்ற விட, அவள் விழிகள் தானாகக் கலங்கியது.
 
 
இதுவரை அவளை இப்படி எல்லாம் யாரும் திட்டியதோ கடுமையாகப் பேசியதோ கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அவள் இவனிடமிருந்து மட்டுமே கோபத்தையும் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்கிறாள். ஆனாலும் இந்த மனதிற்கு அவனைத் தானே பிடித்துத் தொலைக்கிறது..! என்ன செய்ய..?
 
 
வேறு எங்கும் சென்று அவனைத் தனியே சந்திக்கவோ பேசவோ இதுவரை விநாயக் சந்தர்ப்பமே கொடுக்காமல் போனதால் தான், அந்த வயதிற்கேயான விளையாட்டு தனத்தோடு இப்படிக் காவல் நிலையத்திற்கே அவனைச் சந்திக்க வந்திருந்தாள் யது நந்தினி.
 
 
இது சரியென அவளும் சொல்லவில்லை. ஆனால் இப்படியாவது தன் மனதிலிருப்பதை மீண்டும் அவனுக்குத் தெளிவாக ஒருமுறை புரிய வைத்துவிட, நினைத்தே வந்திருந்தவளுக்கு அவனின் வார்த்தைகளும் அந்தக் குரலில் இருந்த வெறுப்பும் விழிகளைக் கலங்கச் செய்ய.. இதழ் கடித்து அழுகை வெடித்துக் கொண்டு வெளியில் வராமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
ஒருவேளை அதன் பின்னான நாட்களில் தொழிலில் பொறுப்பை ஏற்க முயன்றதற்கு பின் வேதவல்லியின் கடுமைகளை எல்லாம் எதிர்க் கொண்டிருந்தவளுக்கு வந்திருந்த பக்குவம் அப்போதிருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்துக் கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ..?
 
 
அதெல்லாம் இன்று நினைவு வர, முகத்தில் மேலும் கடுமை ஏற, அவளை முறைப்போடு பார்த்தவன் “கெட் அவுட்..” என்றான் பல்லை கடித்தபடியே விநாயக்.
 
 
தன் கையில் இருந்த கோப்பை அவன் முன் வைத்து ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்த நந்தினி, விநாயக்கின் இந்த அதட்டலில் திகைத்து அவனைப் பார்க்க.. “உன்னை வெளியே போன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாத குரலில் விநாயக்.
 
 
இதில் செய்வதறியாது அப்படியே நந்தினி அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலை கூட அவனைக் கோபப்படுத்தியது. அதில் அவள் தன் முன் வைத்திருந்த கோப்பை எடுத்து கதவை நோக்கி வீசியிருந்தவன் “உன்னை வெளியே போகச் சொன்னேன், கெட் லாஸ்ட் டேமிட்..” எனக் குரலை உயர்த்தி அவன் கர்ஜிக்க.. சட்டென உண்டான அவமான உணர்வோடு வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் நந்தினி.
 
 
அந்த அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றபடி அலைபேசியில் யாரோடோ பேசிக் கொண்டிருந்த ரகோத்தமன் தன் அருகில் வந்து நின்றவளின் மேல் பார்வையைப் பதித்த நொடி “நான் அப்புறம் கூப்பிடறேன்..” என அழைப்பை துண்டித்து விட்டு, “நந்து என்னடா..?” என அவளின் கலங்கிய விழிகளையும் பதட்டமான உடல் மொழியையும் கண்டு ஆறுதலாக அவளின் தோளைப் பற்றினார்.
 
 
‘ஒண்ணுமில்லை’ என்பது போல் வேகமாகத் தலையசைத்தவள், அதற்கு நேர்மாறாக இதழ் மடித்துத் தன் கண்ணீரை கட்டுப்படுத்த போராடுவது அவருக்குப் புரிந்தது.
 
 
இதுவே உள்ளே என்ன நடந்திருக்கும் என ஓரளவு அவருக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க.. வருத்தத்தோடு திரும்பி விநாயக்கின் அறை கதவை பார்த்தார் ரகோத்தமன். தன்னைக் கண்டால் கோபப்படுவான் என்று தான் நந்தினி அவரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
 
 
ஆனால் அவளைக் கூட இப்படி அவன் விரட்டி அடித்து இருப்பது வருத்தத்தைக் கொடுக்க.. நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவருக்கு அவன் மேல் கோபம் கூட வரவில்லை. வருத்தமே மேலோங்கியது.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
MNKN - 3
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
 
மௌனம் – 4
 
ரகோத்தமன் வருத்தத்தோடு விநாயக் இருந்த அறையின் கதவையே பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு பதட்டமான நந்தினி, ‘எங்கே அவரும் உள்ளே சென்று அவமானப்பட நேரிடுமோ..!’ என தோன்ற.. “வாங்க மாமா, நாம போகலாம்..” என அவரின் கையை பிடித்து அழைத்தாள்.
 
 
ஆனால் அவரின் கவனம் முழுக்க அந்த கதவின் மீதே இருக்க.. “மாமா.. வேண்டாம் நாம போகலாம்..” என்றாள் இப்போது பிரச்சனை எதுவும் வேண்டாம் என்பது போலான குரலில் நந்தினி.
 
 
அது அவருக்கும் புரிய.. வருத்தத்தோடு திரும்பி ‘நான் என்ன செஞ்சுட போறேன்..?’ என்பது போல் நந்தினியை பார்த்தார் ரகோத்தமன். ‘அவளுக்குமே தெரியும் இவரால் நிச்சயம் எந்த பிரச்சனையும் வராது.. ஆனால் விநாயக் இவரை வார்த்தைகளால் காயப்படுத்தி விடக் கூடாதே..!’ என்ற பயம் தான் அவளுக்கு இருந்தது.
 
 
இதில் நந்தினியும் அவரை கண்ணீர் தேங்கி நிற்கும் விழிகளோடு பார்க்க.. வேறு எதுவும் பேசாமல் சரியென தலையசைத்து நகர முயன்றவர், அப்போதே அவள் கொண்டு சென்ற கோப்புகள் நந்தினியின் கையில் இல்லாததை கவனித்தார்.
 
 
“பைல் எங்கே நந்தும்மா..?” என்றவரின் கேள்வியிலேயே அவளுக்கும் அதை பற்றிய நினைவே வந்தது. அதில் தயக்கத்தோடு திரும்பி நந்தினி தன் ஒற்றை விரலை விநாயக் இருந்த அறையின் பக்கம் காண்பிக்கவும், சிறு பெருமூச்சோடு “சரி இரு நான் போய் எடுத்துட்டு வரேன்..” என்றார் ரகோத்தமன்.
 
 
அவன் சற்று முன் அதை தூக்கி வீசிய காட்சி மனக்கண்ணில் வந்துப் போக.. “வேண்டாம் மாமா.. நானே..” என தொடங்கியவளுக்கு மீண்டும் அவன் கண் முன் சென்று நிற்க லேசான தயக்கம் உண்டானது.
 
 
அத்தனை ஆக்ரோஷத்துடன் அவளிடம் அவன் கத்தியிருந்ததில், மறுபடியும் அவன் கண் முன் செல்ல கொஞ்சம் தயக்கம் அதிகமாகவே இருந்தது. ‘இங்கு இத்தனை பேர் இருக்கும் இடத்தில் மீண்டும் அவங்க ஆத்திரத்தில் ஏதாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே..!’ என்று தான் அப்போதும் தயங்கினாள் நந்தினி.
 
 
அதேநேரம் அங்கு வந்த டிசிபி, இவர்கள் இங்கு நிற்பதை கண்டு “ஹலோ மிஸ்டர் ஆர்ஆர் என்ன இங்கே..?” என்றார். அதில் முகத்தில் இருந்த கவலையை மறைத்துக் கொண்டு “ஹலோ டிசிபி சார், ஏசிபி சாரை பார்க்க வந்தோம்..” என்றார் ரகோத்தமன்.
 
 
“ஓ, யாரு விநாயக்கையா..?” என்று இயல்பாக கேட்டவாறே அவன் அறையின் முன் சென்று நின்றவர், யோசிக்காமல் கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே செல்ல.. அதுவரை வெறுப்பில் நெற்றியை தேய்த்தவாறு அமர்ந்திருந்தவன், அவரை கண்டதும் சட்டென எழுந்து நின்று சல்யூட் வைத்தான்.
 
 
“உட்கார் மேன், சும்மா தான் இந்த பக்கம் வந்தேன்.. உன்னை பார்க்க வெளியே காத்திருந்தாங்க..” என வாயில் பக்கம் கையை காண்பித்தவர், அவர்கள் இன்னும் உள்ளே வராமல் இருப்பதை கண்டு “என்ன அங்கேயே இருக்கீங்க.. உள்ளே வாங்க..” என அவர்களிடம் சொல்லியவர், விநாயக் பக்கம் திரும்பி “என்ன வேணும்னு பார்த்து செய் விநாயக்..” என்றார்.
 
 
அப்போதே அவளுடன் ரகோத்தமன் வந்திருப்பதை விநாயக்கும் கவனித்திருந்தான். அதோடு தன் மேலதிகாரி வார்த்தையை மீறவும் முடியாமல் சரி என்பதாக தலையசைத்தான்.
 
 
தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை விட மனமில்லாமல் நந்தினியை அழைத்துக் கொண்டு ரகோத்தமன் உள்ளே நுழைய.. “நான் எங்க ஆபிசர்னு சொல்லலை மிஸ்டர் ஆர்ஆர்.. விநாயக்கிட்ட ஒரு வேலையை கொடுத்தா அது முடிஞ்சுதுன்னு முடிவுக்கு வந்துடலாம்.. நல்ல திறமையான பையன்.. உங்க வேலை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்கோங்க..” என்று விட்டு லேசான மென்னகையோடு தலையைத்தவாறே வெளியேறி இருந்தவரின் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்தது.
 
 
இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை பற்றி ஒரளவு அறிந்தே இருந்தவருக்கு முகமெங்கும் கவலையோடு ரகோத்தமன் நின்றிருந்த நிலையும், விநாயக் அறைக்குள் நுழைந்ததும் அங்கே சிதறி கிடந்த காகிதங்களும் என்ன நடந்திருக்கும் என கிட்டத்தட்ட புரிய வைத்திருக்க.. எதையும் கவனித்தது போல் காண்பித்துக் கொள்ளாமலே பேசி முடித்து வெளியில் வந்திருந்தார் டிசிபி.
 
 
ஆனால் தேவையே இல்லாமல் அவர் வந்து சிபாரிசு செய்து சென்று இருந்ததிலேயே அதை விநாயக் கண்டுக் கொண்டிருந்தான்.
 
 
அதில் முகத்தில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அலுவல் சம்பந்தமாக தன்னை சந்திக்க வந்தவர்களை எதிர்க் கொள்வது போலான பாவனையில் அவரை பார்த்து தன் முன் இருந்த இருக்கையை காண்பித்தான் விநாயக்.
 
 
அதை கண்டு லேசாக முகம் மலர்ந்த ரகோத்தமன், திரும்பி நந்தினியை பார்த்து அமருமாறு தலையசைத்தார். அவளும் சரியென்ற தலையசைப்போடு வேகமாக சென்று கீழே விழுந்திருந்த கோப்பை அவரசமாக எடுத்துக் கொண்டு வந்தாள்.
 
 
அதுவரை அவளுக்காக காத்திருந்த ரகோத்தமன், நந்தினியை அமர வைத்து விட்டே அமர, அதுவரை கூர்மையாக அவர்களையே கவனித்தப்படி தன் இடது கையால் மீசையை தடவிக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
யார் பேச்சை தொடங்குவது என்பது போல் இருவரும் அமைதியாக இருக்க.. தன் பொறுமையை இழுத்து பிடித்து “என்ன விஷயமா வந்து இருக்கீங்க..?” என்று விநாயக்கே தொடங்கி வைத்தான்.
 
 
“அது.. வினய்..” என தொடங்கியவரை முறைத்து “விநாயக்.. விநாயக் மஹாதேவ்..” என்றிருந்தான் இறுக்கமான குரலில். அதில் ரகோத்தமன் முகம் வாடிப் போக.. அவரை கவலையாக பார்த்த நந்தினி, லேசாக குரலை கணைத்து கொண்டு “நம்ம ஆர்கே ப்ரொடக்ஷன் புதுசா ஒரு படம் எடுத்துட்டு இருக்கோம்..” என்று தொடங்கியவளை இடையிட்டு “உங்க ஆர்கே ப்ரொடக்ஷன்..” என்று திருத்தி இருந்தான் விநாயக்.
 
 
அதில் ஒரு நொடி அமைதியானவள், “புது படம் ஒண்ணு கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் தொடங்கி இருக்கோம்.. கிட்டத்தட்ட செவண்டி பர்சன்ட் வொர்க் முடிஞ்சுது.. இப்போ இது எங்க கதைன்னு தேவையில்லாம வேற ஒரு ப்ரொடக்ஷன் பிரச்சனை செய்யறாங்க..” என்று உங்கள் எங்கள் என்ற எந்த வார்த்தைகளையும் சேர்க்காமல் கவனமாக தவிர்த்து சொல்லி முடித்திருந்தாள் நந்தினி.
 
 
அனைத்தையும் கேட்டு முடித்தவன், “இதுக்கு ஏன் இங்கே வரணும்..? உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனிலேயே போய் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாமே..!” என்றான் விநாயக்.
 
 
“அது கொஞ்சம் பிரச்சனையான ஆள்.. அதோட இதில் போட்டிருக்க பணமும் கொஞ்சம் பெருசு.. படமும் முக்கால்வாசி முடிஞ்சு நிற்குது.. இது வேணும்னே நடக்கும் பிரச்சனை.. அதனால் தான்..” என்றிருந்தார் ரகோத்தமன்.
 
 
“அதெல்லாம் சரி.. ஆனா இங்கே ஏன்..?” என்று அப்போதும் விநாயக் பிடிக் கொடுக்காமல் பேசவும், “துஷ்யந்த் தான் உங்களை போய் பார்க்க சொன்னார்.. நீங்க கூட இருந்து பர்சனலா முடிச்சுக் கொடுப்பீங்கன்னு சொன்னார்..” என்றாள் நந்தினி.
 
 
அதில் அவன் விழிகளை சுருக்க.. “இது அவர் நடிக்கும் படம்..” என்று முடித்திருந்தாள் நந்தினி. ‘துஷி..’ என மானசீகமாக பல்லை கடித்தான் விநாயக்.
 
 
அதே நேரம் சொல்லி வைத்தது போல் துஷ்யந்திடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. பல்லை கடித்துக் கொண்டே அதை எடுத்திருந்தவன், “ஹம்ம்..” எனவும் “ஹே வினய்.. இன்னைக்கு உன்னை பார்க்க ஆர்கே ப்ரோடக்ஷனில் இருந்து வருவாங்க, நம்ம பட விஷயம் தான் மச்சி.. வேணும்னே அந்த விக்ராந்த் பிரச்சனை செய்றான்.. கொஞ்சம் பார்த்து என்னன்னு முடிச்சு விடு..” என்று அவசரமாக பேசினான். 
 
 
அதற்கும் “ஹ்ம்ம்..” என்று மட்டுமே சிறு கோபத்தோடு விநாயக் சொல்ல.. “காலையிலேயே உனக்கு கால் செய்யணும்னு நினைச்சேன், இங்கே லைட்டிங் பிரச்சனை.. ஒரு சீன் எடுக்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..” என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் அந்த பக்கம் இருந்து அதற்கான எதிர்வினை சரியாக இல்லாததை அப்போதே கவனித்தான்.
 
 
அதில் நிதானித்து “ஹேய், என்னடா பதிலையே காணோம்..? ஒருவேளை நான் கால் செய்ய லேட் செஞ்சுட்டேனோ..!” எனவும் “ஹூம் இப்போ வந்து கேளு..” என்றான் எரிச்சலோடு கூடிய குரலில் விநாயக்.
“அப்போ ஆல்ரெடி வந்துட்டாங்களா..!” என அந்த பக்கம் குரலை தழைத்துக் கொண்டு துஷ்யந்த் கேட்கவும், “ஹ்ம்ம்..” என முனகினான் விநாயக். “போச்சுடா.. நான் செத்தேன்..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட துஷ்யந்த் “சாரி மச்சி நான் முன்னேயே உனக்கு சொல்லி இருக்கணும்..” என்றான். 
 
 
அதற்கு விநாயக் பதிலேதும் சொல்லாமல் இருக்க.. “டேய் சூர காண்டில் இருக்க போல..?” என்றான் லேசாக பயந்தது போலான குரலில் துஷ்யந்த். அதை கண்டு கொண்டிருந்த விநாயக் “கேமரா முன்னே மட்டும் நடிடா..” என்று எதிரில் இருப்பவர்களுக்கு கேட்காத குரலில் பல்லை கடித்துக் கொண்டே பேசினான் விநாயக்.
 
 
அவன் சொன்ன விதத்தில் அந்த பக்கம் இருந்த துஷ்யந்த்திற்கும் சிரிப்பு வந்துவிட, “சரி நமக்குள்ளே கொடுக்கல் வாங்கல் எதுவாயிருந்தாலும் பொறுமையா நேரில் பார்க்கும் போது வெச்சுக்குவோம்.. இப்போ இந்த பிரச்சனையை என்னன்னு பார் வினய்.. ரொம்ப பிரஷரா இருக்கு, இது அவங்களோட கௌரவம் மட்டுமில்லை.. என் பெயரும் அடங்கி இருக்கு.. சொன்ன நேரத்துக்கு இந்த படம் ரிலீஸ் ஆகணும், உனக்கு புரியும்னு நினைக்கறேன்..” என விளையாட்டு தனங்களை கைவிட்டு சீரியசான குரலில் கூறினான் துஷ்யந்த். 
 
 
அவன் தன் வேலையை எந்த அளவுக்கு உண்மையாக நேசிக்கிறான் என புரிந்திருந்த விநாயக் “நான் பார்த்துக்கறேன்..” என்று மட்டும் சொல்ல.. “ஓகே அடுத்த ஷாட்டுக்கு நேரமாகுது, நான் கிளம்புறேன் டேக் கேர் பாய்..” என சொல்லி அழைப்பை துண்டித்து இருந்தவன், அந்தப் பக்கம் விநாயக் இணைப்பில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்தபடியே “ஹாப்பி பர்த்டே மச்சி..” என்றான் நெகிழ்வான குரலில். 
 
 
விநாயக் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அது தெரிந்தும் அவன் மனதை வலிக்க செய்வது போல் வாழ்த்துக்கள் கூற விரும்பாமலேயே அதை தவிர்த்து மற்ற அனைத்தையும் பேசி முடித்திருந்தான் துஷ்யந்த். அவன் மட்டுமல்ல அந்த நட்பு குழுவில் உள்ள அத்தனை பேருமே அப்படித்தான். 
 
 
காலையிலேயே தர்ஷன் அழைத்து இரவு உணவுக்கு அனைவரும் எங்காவது சந்திப்போமா என கேட்டிருந்தான். ஆனால் துஷ்யந்த் ஒரு படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்ததால் தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட, அபியும் ஏதோ கேம்ப்புக்கு சென்றிருப்பது தெரிந்தது. 
 
 
விநாயக் பிறந்த நாளை கொண்டாட விரும்ப மாட்டான் என்பதால் அதை செய்யாமல் தவிர்ப்பார்களே தவிர, அதற்காக அப்படியே அவனை விட்டு விடவும் நண்பர்கள் தயாராக இல்லை. அந்த நாளில் ஏதோ ஒரு சாக்கை வைத்து அனைவரும் சந்தித்து கொள்வது போல் ஒரு ஏற்பாட்டை செய்துவிடுவார்கள். 
 
 
சென்ற இரண்டு வருடங்களாக விநாயக் இங்கே இல்லை, அப்படியும் அபியும் நிமலனும் மும்பை சென்று முதல் வருடம் விநாயக்குடன் தான் இருந்தார்கள். வேறு வேலையாக அங்கு வந்தது போல் அவர்கள் சொல்லிக் கொண்டாலும் உண்மை காரணத்தை கண்டு கொண்டிருந்தான் விநாயக்.
 
 
ஆரம்பத்திலிருந்தே தன்னை மனதளவில் எதற்கும் வருந்த விடாமல் பார்த்துக் கொள்ளும் தன் நண்பர்கள் மீது அவனுக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு. அதனாலேயே அவர்கள் தனக்காக செய்யும் எதையும் கண்டு கொள்ளாதது போலவே இருந்து விடுவான் விநாயக். சில நேரங்களில் அவர்கள் எல்லை மீறும் போது மட்டும் தன் கண்டனத்தை தெரிவிப்பான். 
 
 
இப்போதும் அப்படியே இரண்டு வருடங்களுக்கு பின் திரும்ப இங்கே வந்திருப்பவனை தனியே விடக்கூடாது என தர்ஷன் வழக்கம் போல் இன்று இரவு சந்திப்புக்கு ஒரு திட்டம் போட்டுக் கொண்டிருந்தான். அதை எண்ணி மனதிற்குள் லேசாக புன்னகைத்த துஷ்யந்த், “எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் சந்தோஷமா இரு மேன்..” என்று விட்டு, அடுத்த காட்சிக்கு இயக்குனர் அழைத்ததில் எழுந்து சென்றான்.
அதே நேரம் இங்கு தெளிவான ஒரு முடிவுக்கு வந்தது போல் நிமிர்ந்து அமர்ந்து தன் முன் இருப்பவர்களை பார்த்த விநாயக், “என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லுங்க..” என்றான். 
 
 
அதில் ரகோத்தமன் திரும்பி நந்தினியை பார்க்கவும், சிறு தலையசைப்போடு அவரைப் பார்த்தவள் விநாயக்கின் பக்கம் திரும்பி “ஆர்கே புரொடக்ஷன்ஸ் துஷ்யந்த் வெச்சு ஒரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துட்டு இருக்கோம்.. பாகுபலி போல இரண்டு பார்ட்.. ஒரு துரோகம், அதற்கான பழிவாங்கல்னு மாறி மாறி வரும்.. ஆனா இதுக்கு முன்னே வந்த கதைகள் போல இல்லாம இது ரொம்ப யூனிக் ஸ்டோரி.. கிட்டத்தட்ட எழுபது சதவீகித ஷூட் முடிஞ்சது, ஆனா இப்போ விவி பிக்சர்ஸ் பிரச்சனை செய்யறாங்க..” என்றவளை நெற்றியை சுருக்கி பார்த்தான் விநாயக். 
 
 
அதிலேயே அவன் கேள்வி என்னவென்று கண்டு கொண்டிருந்தவள், “இது அவங்க கதைன்னும், அவங்க ஆக்டர் நவீன்குமாரை வெச்சு இந்த படத்தை எடுக்கறதுக்கு பிளான் செஞ்சுட்டு இருக்கிறதாவும் அதுக்குள்ளே நாங்க இதை திருடிட்டோம்னு சொல்றாங்க.. இதில் நவீன் நம்ம புரொடக்ஷனுக்கு..” என்றவள், அவனின் முறைப்பில் “ஆர்கே புரொடக்ஷனில் ஒரு படம் செஞ்சுட்டு இருக்கார், இந்த பிரச்சனையில் அந்த படத்திலும் நடிக்காம டேட்ஸ் கொடுக்கறது இல்லை.. நிறைய இஷ்யூ செய்யறார்.. 
 
 
எவ்வளவோ பேசி பார்த்தாச்சு.. இத்தனை நாள் பேசவே டைம் கொடுக்காம இழுத்தடிச்சார்.. இன்னைக்கு தான் ஒருவழியா பேசினார், அவர் கேரியரில் தி பெஸ்ட்னு நினைக்கக்கூடிய படமான விவி ப்ரோடக்ஷன் பிராஜெக்டில் நாங்க குறுக்க வந்து பிரச்சனை செய்யறோமாம்.. அடுத்தவங்க உழைப்பை திருட பார்க்கறோம்.. அவர் வளர்ச்சிக்கு தடையா இருக்கோம்னு ஏதேதோ காரணம் சொல்றார்.. 
 
 
இந்த பிரச்சனை வெளியே தெரியாம இப்படியே முடியணும் மீடியா, பிரஸ், நியூஸ்னு எதுவும் லீக் ஆச்சுனா படத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆகிடும்.. இந்த படத்துக்கு அப்படி ஒரு நேம் வரக்கூடாது, அது படத்தோட ரீச்சை பாதிக்கும்..” என்றாள் தெளிவான குரலில் நந்தினி. 
 
 
“நீங்க அப்படி எதுவும் செஞ்சீங்களா..?” என விநாயக் கேட்கவும் “என்ன வினய் நாங்க ஏன் அப்படி..?” என்று தொடங்கியவரை அவன் மறுப்பாக பார்க்கவும் “சாரி மிஸ்டர் விநாயக்..” என்று தானாகவே தன்னை திருத்திக் கொண்டார் ரகோத்தமன். 
 
 
அதை கொஞ்சமும் கண்டு கொண்டது போல் கூட காண்பித்துக் கொள்ளாமல் “யாருக்கு தெரியும் தன் சுயநலத்துக்காக யார் பாதிக்கப்பட்டா எனக்கென்னன்னு வாழறவங்க தானே இங்கே அதிகம்..” என்று அவன் நிறுத்தி நிதானமாக சொல்லவும், அடிபட்டது போலான முகபாவணையோடு பார்வையை தழைத்துக் கொண்டார் ரகோத்தமன்.
 
 
அவன் வார்த்தைகளும் ரகோத்தமனின் முகபாவனையும் கண்டு நந்தினிக்கு வருத்தமானது. அதில் மெல்ல தன் வலது கையை அவர் இடது கையின் மேல் ஆதரவாக வைத்து நந்தினி அழுத்திக் கொடுக்கவும், அவரும் எனக்கு ‘ஒண்ணுமில்லை’ இல்லை என்பது போல் அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தார். ஆனால் அந்த புன்னகையில் துளியும் உயிர்ப்பில்லை. 
 
 
அவர்களின் மௌன நாடகத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “இந்த கதை யாரோடது..?” என்றான் விநாயக். “இது டைரக்டர் ரவி பிரியன் கதை..” என நந்தினி பதில் சொல்லவும் “அவர் சொந்தமா எழுதினது தானா..! உங்களுக்கு தெரியுமா..?” என்றான் அடுத்ததாக விநாயக். 
 
 
“நல்லா தெரியும், இது அவரோட சொந்த கதை தான்.. இரண்டு வருஷத்துக்கு முன்னேயே ஒன் லைன் என்கிட்ட சொன்னார்..” என்று ரகோத்தமன் பதில் சொல்லவும், “இப்போ உங்களுக்கு அகைன்ஸ்ட்டா இருக்க அந்த கம்பெனி இந்த கதை யாருடையதுன்னு சொல்றாங்க..?” எனக் கேட்டான் விநாயக்.
 
 
“அது டைரக்டர் கோகுலகிருஷ்ணன் கதைன்னு சொல்றாங்க..” என நந்தினி கூறவும், நெற்றியை ஒற்றை விரலால் தட்டியபடியே இரண்டு நொடி விழிமூடி அமர்ந்திருந்தவன் “அவர் சீனியர் டைரக்டர் ஏன் இந்த கதை அவரோடதா இருக்க கூடாது..?” என்றான். 
 
 
“இருக்கக் கூடாதுன்னு சொல்லலை, ஆனா இல்லைன்னு எனக்கு தெரியும்..” என்று நந்தினி மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லவும், “வாய்ப்பு இருக்கான்னு கேட்டேன்..?” என்றான் விநாயக்.
 
 
இதற்கு சிறு தயக்கத்தோடு ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள் நந்தினி. “எப்படி..?” எனக் கூர்மையாக வந்தது அவனிடமிருந்து கேள்வி. “அது ரவி பிரியன், மூணு வருஷத்துக்கு முன்னே வரை கோகுலகிருஷ்ணன்கிட்ட தான் அசிஸ்டெண்ட்டா இருந்தார்..” என்று அவள் சொல்லி முடிக்கவும், சிறு கேலியோடு தோள்களை குலுக்கினான் விநாயக்.
 
 
“இல்லை, நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க..” என நந்தினி ஏதோ சொல்ல வருவதற்குள் “பாசிபிலிட்டிஸ் என்னென்னன்னு நாம எல்லா பக்கமும் யோசிக்கணும், ஒருவேளை நீங்க சொல்றது உண்மையாவே இருக்கலாம்.. இது ரவி பிரியனோட கதையாவே கூட இருக்கலாம்.. ஆனா என்கிட்ட அசிஸ்டென்டா இருந்த போது நான் சொன்னதை வெச்சு அவன் திருடினதுன்னு அவங்க பேச வாய்ப்பு இருக்கு..” என்றான் விநாயக். 
 
 
அதற்கு ‘ஆம்’ என்பது போல் இருவரும் தலையசைக்க.. மீண்டும் விழிமூடி ஒரு நொடி அமைதியாக அமர்ந்தவன், பின் “இது வாண்டடா கிரியேட் செஞ்ச பிரச்சனை போல தான் இருக்கு.. படம் எழுபது சதவீதம் முடியும் வரைக்கும் காத்திருந்து இனி உங்களால் எதுவும் செய்ய முடியாதுன்ற ஒரு நிலையில் கொண்டு வந்து நிறுத்தி பிரச்சனை செய்யணும்னு பக்காவா பிளான் போட்டு இருக்காங்க..” என அவன் சொல்லி முடித்த நொடி எதிரிலிருந்த இருவருமே மனதிற்குள் மெச்சி கொண்டனர். 
 
 
அதுதான் நிஜம், இத்தனை நாள் அதே தொழிலில் இருக்கும் அவர்களுக்கு விக்ராந்தின் செயல்களுக்கான காரணம் தெளிவாக புரிந்தது.. ஆனால் அதை பத்து நிமிடங்களில் அவன் கண்டு கொண்டிருந்த விதம் இருவரையும் வியக்க வைத்தது. 
 
 
அதில் மெல்ல தன்னிடமிருந்த கோப்பை அவன் பக்கம் நகர்த்திய நந்தினி, “இது ரவி பிரியன் எனக்கு ஒன் லைன் சொன்னப்போ ரெகார்ட் செஞ்ச ஆடியோ.. அதில் டேட் டைம் எல்லாம் இருக்கு.. அடுத்து நாங்க பேசி கதையில் கொண்டு வந்த மாற்றங்கள்.. அதுக்கு பிறகு முழு கதையையும் அவர் தயார் செஞ்சு கொடுத்த ஸ்க்ரிப்ட்.. அதை நான் முறையா ரிஜிஸ்தர் செஞ்ச டாக்குமெண்ட் எல்லாம் இதில் இருக்கு..” எனவும் அதை வாங்கி சரி பார்த்தான் விநாயக்.
 
 
“இது போல அவங்ககிட்ட ஏதாவது..?” என அவன் இழுக்கவும், “வாய்ப்பு குறைவு தான்.. ஆனா சமீபமா ஏதாவது தயார் செஞ்சு இருக்கலாம்..” என்றாள் நந்தினி.
 
 
அதற்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவன், அமைதியாகவே இருக்க.. கொஞ்ச நாளாவே எனக்கு நவீன் மேலே சந்தேகமா இருந்தது.. அதில் கொஞ்சம் பேக்ரவுண்டு செக் செஞ்சேன்..” என்றாள் நந்தினி.
 
 
ஓஹோ என்பது போலான தலையசைப்போடு அவளை விநாயக் பார்க்கவும், “கடந்த ஒரு வருடமா நவீனுக்கு பெருசா படங்கள் எதுவுமில்லை.. அதுக்கு முன்னே நடிச்ச படங்களும் ப்ளாப் தான்.. அதில் சரியான படமே இல்லாம வீட்டில் இருந்தவருக்கு நாம தான்..” என ஒரு ப்ளோவில் பேசிக் கொண்டிருந்தவள், அவனின் பார்வை மாற்றத்தில் “ஆர்கே ப்ரொடக்ஷன் தான் ரீஎன்ட்ரி கொடுத்தது.. 
 
 
அதனால் அவர் எப்போவும் ரொம்ப நன்றியோட தான் நடந்துப்பார், இப்போ கடந்த இரண்டு மாசமா தான் அப்படியே அவர் நடவடிக்கைகள் தலைகீழா மாறி இருந்தது.. ஆரம்பத்தில் நான் இதை பெருசா எடுத்துக்கலைனாலும் ஏதோ உறுத்தலா இருந்தது..
 
 
அதில் கொஞ்சம் விசாரிச்சதில் நவீன் அடிக்கடி விவி ப்ரொடக்ஷனுக்கு போறது தெரிஞ்சது.. அதனாலேயே எதுக்கும் இருக்கட்டும்னு நான் எல்லா பக்கமும் கொஞ்சம் கவனமா இருக்க ஆரம்பிச்சேன்..” என்று தொடங்கி இந்த வழக்குக்கு தேவையான ஆதாரங்கள் என அவளிடம் இருப்பதை எல்லாம் கூறினாள் நந்தினி.
 
 
பிரச்சனை என தெரிய வருவதற்குள்ளேயே அதை கண்டறிந்து அதற்கென அவள் நடவடிக்கைகளை எண்ணி மனதிற்குள் வியந்தவன், முகத்தில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
 
 
இந்த துறை கிட்டத்தட்ட கத்தி மேல் நடப்பது போலான ஒன்று. அதை இந்த சின்ன வயதில் இவளை நம்பி கொடுத்திருக்கிறார்கள் என்றால் சும்மாவா..? என தோன்ற.. ‘தன்னிடம் அவள் நடந்துக் கொள்ளும் முறைக்கும் தொழிலில் அவள் காண்பிக்கும் முகத்திற்கும் இடையிலான வித்தியாசம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
 
 
இதை யோசித்தப்படியே, தன் முன் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து வேகமாக அதில் ஏதோ எழுதத் தொடங்கிய விநாயக், பின் அதை யோசனையோடு பார்த்தபடியே “என்னை கேட்டா உங்களுக்கு இதில் இத்தனை கோடி நஷ்டம் வரும்.. ஆனா அது மட்டும் விவி பிக்சர்ஸ் பிளான் இல்லைன்னு சொல்லுவேன்..
 
 
உங்க கம்பெனி பெயரை கெடுக்கணும், இவ்வளவு பெரிய லாஸ் உங்களுக்கு கொடுக்கணும், அதோட துஷ்யந்த் பெயரும் இதில் இருக்கு.. அவன் இந்த படத்தை ரொம்ப முக்கியமான நினைக்கறான்.. அவங்களுக்குள்ளே எதுவும் பிரச்சனை இருக்கா..?” என்று விநாயக் பட்டியலிட்டுக் கொண்டே சென்றதை கேட்ட ரகோத்தமன் கவலையோடு நெற்றியை தேய்த்தபடி அமர்ந்து விட்டார். 
 
 
நந்தினி இல்லை என்பது போல் தலையசைக்க.. சரி என்பதாக அவனும் தலையசைத்தான்.
 
 
ரகோத்தமனுக்கும் இதெல்லாம் தோன்றாமல் இல்லை. ஆனால் இப்படி விநாயக் பட்டியலிட்டு அனைத்தையும் சொல்லும் போது மலைப்பாக இருந்தது. ‘இதிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறோம்..?’ என்ற பயம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிய.. நந்தினிக்கும் அது தொற்றிக்கொண்டது.
 
 
“இது பக்கா ஸ்கெட்ச்.. இத்தனை நாள் ஒருத்தன் பொறுமையா காத்திருந்து காய் நகர்த்தி இந்த சிச்சுவேஷனில் உங்களை கொண்டு வந்து நிறுத்தணும்னா அவனுக்கு பணம் மட்டுமே குறிக்கோளா இருக்க முடியாது.. வேற ஏதாவது கோபமோ, பழைய பகையோ.. இல்லை வேற ஏதாவது தேவையோ இருக்கணும்..” என்றான் விநாயக். 
 
 
‘ஆம்’ என்பது போல் பலமாக தலையசைத்த ரகோத்தமன், “நந்தினி அப்பா வழி சொந்தம் விக்ராந்த்..” என்றார். அவனுக்கும் அது ஓரளவு தெரிந்தே இருந்ததால் மெலிதாக தலையசைத்துக் கொண்டான். 
 
 
“அப்போ பழைய பகை..” என்று சொல்லிக் கொண்டவன், “இதை சால்வ் செய்யறது கொஞ்சம் கஷ்டம் தான்..” எனவும் இருவரும் அவனை பதட்டமாக பார்த்தனர். ‘தொழில் போட்டினா கூட ஏதோ ஒரு இடத்தில் விட்டுக் கொடுக்க வாய்ப்பிருக்கு.. ஆனா பழைய பகை.. அதுவும் காத்திருந்து திட்டமிட்டு செய்யறவனை அமைதியாக்கறது அவ்வளவு சுலபமில்லை.. ஆனாலும் துஷிக்காக இதை செஞ்சே ஆகணும்..” என்றும் அவன் சேர்த்து சொல்ல.. இதில் சந்தோஷமும் வருத்தமும் ஒரே நேரத்தில் அவர்களுக்கு உண்டானது. 
 
 
நிச்சயம் சரி செய்கிறேன் என அவன் சொன்ன விதம் சந்தோஷத்தை கொடுத்த அதே நேரம் இது எதுவும் உங்களுக்காக இல்லை என்றும் அவன் சேர்த்து கூறியது வருத்தத்தையும் கொடுத்தது. ஆனால் இவர்களை காண்டாலே எரிமலையாக வெடிப்பவன், இந்த அளவுக்கு இன்று உட்கார வைத்து பேசுகிறானே..!’ என்ற எண்ணமே இப்போது நிறைந்திருக்க.. அமைதியாகவே இருவரும் இருந்தனர். 
 
 
“அப்படி என்ன உங்களுக்குள்ளே பகை..?” என விநாயக் கேட்டிருக்க.. “பகைன்னு பெருசா எதுவுமில்லை, தொழில் போட்டின்னு வேணும்னா சொல்லலாம்..” என்றார் ரகோத்தமன். 
 
 
“ஓஹோ..” என்றவனின் குரலே அவன் அதை நம்பவில்லை என்று உணர்த்த.. “நந்தினியை அங்கே இருந்து கூட்டிட்டு வந்த பிறகு எங்களுக்குள்ளே பெருசா பேச்சு வார்த்தை கூட கிடையாது.. இதில் பகை எங்கிருந்து வரப்போகுது..?” என்றார் ரகோத்தமன். 
 
 
“அப்போ கூட்டிட்டு வந்தது தான் பிரச்சனையோ என்னவோ..?” என்றான் விநாயக். “அவங்க தானே உறவும் வேண்டாம் எதுவும் வேண்டாம்னு விரட்டி விட்டாங்க..” என வருத்தத்தோடான குரலில் ரகோத்தமன் சொல்லி முடிக்கவும், “அப்புறம் வேற என்ன பிரச்சனையா இருக்கும்னு நினைக்கிறீங்க..?” என்றான் பொதுவாக இருவரையும் பார்த்து விநாயக்.
 
 
“இந்தப் பையன் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இப்படி தான், ஏடாகூடமா ஏட்டிக்கு போட்டியா ஏதோ ஒண்ணு செஞ்சுட்டே இருக்கான்.. அதிலும் இப்போ இப்படி செய்ய ஒரு காரணமும் இருக்கு..” என்றார் ரகோத்தமன்.
 
 
வார்த்தைகளில் எதுவும் கேட்காமல் ‘என்ன..?’ என்பது போல் விநாயக் அவரை பார்க்கவும் “நந்தினி..” என்றார் ஒற்றை சொல்லாக ரகோத்தமன். இதை தானே சற்று முன் கேட்டான்..! அப்போது இல்லை என்றாரே என்ற யோசனையோடு விநாயக் பார்த்திருக்க.. நந்தினியோ ‘இப்போது இந்த பேச்சு ஏன்..?’ என்பது போல் ரகோத்தமனை பார்த்தாள். 
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
 
மௌனம் – 5
 
அதையெல்லாம் கவனிக்காதவர் “அந்தப் பையனுக்கு நந்தினி மேலே ஒரு விருப்பம் இருக்கு, கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்படறான்..” எனவும் “அப்போ பிராப்ளம் சால்வ்ட், கல்யாணத்தை முடிச்சுடுங்க..” என்று தன் முன் இருந்த காகிதத்தை நகர்த்தி வைத்துவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்தான் விநாயக். 
 
 
இதில் ‘இந்த பேச்சை விநாயக் எப்படி எடுத்துக் கொள்வானோ..?’ என்ற பதட்டத்தோடு அமர்ந்திருந்த நந்தினி, கோபமாக அவனை பார்க்கவும் “ஹாங் அது எப்படி..? இத்தனை வருஷம் இல்லாத உறவும் உரிமையும் இப்போ திடீர்னு வந்துடுமா..! இத்தனை வருஷம் இல்லாம அத்தை பையன்னு திடீர்னு வந்த குதிச்ச உடனே பொண்ணை தூக்கி கொடுத்துட முடியுமா..?” என்றார் ரகோத்தமன். 
 
 
“எனக்கு தெரிஞ்சு எந்த பிரச்சனையும் இல்லாம இந்த விஷயத்தை முடிக்க இது ஒரு வழி தான் இருக்கு, அவன் கேட்கறதை கொடுத்துட்டா பிரச்சனையே ஆகாதே..!” என்றான் விநாயக். 
 
 
‘தன்னை ஒரு பொருள் போல் தூக்கிக் கொடுத்து விடு..!’ என்று சொல்பவனை கண்டு உண்டான கோபத்தோடு அம்ர்ந்திருந்தவளுக்கு லேசாக விழிகள் கலங்குவது போல் இருந்தது. 
 
 
‘அப்போ நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா..? இங்கே எத்தனை வருஷமா உங்களையே நான் நினைச்சுட்டு இருக்கேன், உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பே இல்லையா..!’ என்று தனக்குள்ளேயே அவள் கேட்டுக் கொண்டிருக்க.. அதே நேரம் “பிரச்சனையை சரி செய்யணும் தான், அதுக்காக அவன் மிரட்டலுக்கு எல்லாம் பயந்து எங்க வீட்டு பொண்ணை கொடுத்துடுட முடியாது..” என்றார் ரகோத்தமன். 
 
 
அதில் சிறு வியப்பும் கேலியுமாக ஒரு விதமாக இதழை வளைத்தவன், “அப்புறம் உங்க இஷ்டம்..” என்றான். சிறு தயக்கத்தோடு “இந்த பிரச்சனை..?” என அவர் தொடங்கவும், “நான் என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்..” என அவன் முடித்துக் கொள்ள.. ‘அடுத்து என்ன..?’ என்பது போல் அவன் முகத்தை பார்த்திருந்தார் ரகோத்தமன்.
 
 
“என்னை பார்த்தா நான் என்ன செய்ய..? இப்போ தானே சொல்லி இருக்கீங்க, இனி தான் யோசிக்கணும்..” என்றான் விநாயக். “அதுக்கில்லை அவன் கொஞ்சம் ஒரு மாதிரி.. இப்படி போலீஸ் வரை நாங்க போனது தெரிஞ்சா சட்டுன்னு எதையாவது யோசிக்காம செஞ்சுடுவான்..” என்றார் தயக்கத்தோடு ரகோத்தமன்.
 
 
“அதுக்கு ஏன் இங்கே வந்தீங்க..?” என சற்றும் இளக்கமில்லா குரலில் அவன் கேட்டதில் ரகோத்தமன் முகம் வாடியது. அதை காண முடியாமல் “துஷ்யந்த் தான் உங்களை போய் பார்க்க சொன்னார்..” என்றிருந்தாள் வேகமாக நந்தினி.
 
 
“அவனுக்கு தான் அறிவில்லை.. உங்களுக்குமா..?” என யோசிக்காமல் பேசி விட்டவனை அவள் வருத்தத்தோடு பார்க்கவும், “உங்க உள் குடும்ப பூசல் எல்லாம் அவனுக்கு தெரியாதில்லை.. துஷி இது சாதாரண தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைன்னு நினைச்சு உங்களை அனுப்பி இருக்கான், ஆனா அவனை பற்றி இவ்வளவு தெரிஞ்சு வெச்சு இருக்க நீங்க யோசிச்சு இருக்கணும் இல்லை..” என்றான் விநாயக்.
 
 
அதில் இரு நொடி அமைதியான இருவரும், பின் மெல்ல நிமிர்ந்து அவனை பார்க்க.. அவனும் ‘என்ன..?’ என்பது போல் அவர்களை தான் பார்த்து இருந்தான்.
 
 
“வேற எதுவும் செய்ய முடியாதா..?” என பெரும் தயக்கத்தோடே கேட்டிருந்தார் ரகோத்தமன். “முடியுமே..” என்றவனை அவர் எதிர்பார்ப்போடு பார்க்கவும், “அவன் கேட்கறதை கொடுத்துடுங்க..” என்று முடித்திருந்தான் விநாயக்.
 
 
அதில் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள் நந்தினி. ‘துளியும் யோசிக்காமல் எப்படி இவரால் இப்படி சொல்லி விட முடிகிறது..?’ என தோன்றவும் அவனையே இமைக்காமல் வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அதே நேரம், “அதெப்படி அவன் கேட்டதும் கொடுத்துட முடியும்..? இத்தனை வருஷமா இவளுக்காக நிதின் காத்திருக்கானே..!” என்றிருந்தார் ரகோத்தமன். அதில் அதிர்ந்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட நந்தினி பதட்டத்துடன் அவரை திரும்பி பார்த்தாள்.
‘இப்போதே தன்னை சாதாரணமாக கூட பார்க்காமல் ஒதுக்கி வைத்திருக்கிறான்.. இதில் இவர் வேறு இதையெல்லாம் கூறினால் அவ்வளவு தான்..!’ என்று அவள் மனம் படபடத்தது.
 
 
ஆனால் இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போலான இதழ் வளைவோடு, “ஆக மொத்தம் இது உங்க குடும்ப விஷயம், இதை இங்கே வந்து ஏன் பேசிட்டு இருக்கீங்க..” என்றான் விநாயக்.
 
 
அதில் அவசரமாக “அப்படியில்லை..” என அவர் தொடங்கவும், “எப்படி இருந்தாலும் சரி, துஷிக்காக நான் என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்..” என்று முடித்துக் கொண்டவன், அவர்களை கிளம்ப சொல்வது போல் கடிகாரத்தை திரும்பி பார்த்தான்.
 
 
அதை புரிந்துக் கொண்டது போல் நந்தினியை திரும்பி பார்த்த ரகோத்தமன், சிறு தலையசைப்போடு எழுந்துக் கொள்ள.. நந்தினியும் உடன் எழுந்து நின்றாள்.
 
 
என் வேலை முடிந்தது என்பது போல் விநாயக் தன் வேளையில் கவனத்தை திருப்ப.. சிறு பெருமூச்சோடு அங்கிருந்து நகர்ந்தார் ரகோத்தமன். அவரோடே சென்ற நந்தினி அவனை திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல.. மீண்டும் அவன் அருகில் இருந்த அந்த பரிசு அவள் கவனத்தை ஈர்த்தது.
 
 
‘அது யார் கொடுத்ததாக இருக்கும்..?’ என்ற கேள்வி அவளுள் எழாமல் இல்லை. அதில் பரிசையே பார்த்தப்படி அவள் நடக்க.. கதவருகில் சென்று திரும்பி பார்த்திருந்த ரகோத்தமன், “ஹாப்பி பர்த்டே வினய்..” என தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கூறி விட்டிருந்தார்.
 
 
அதுவரை சாதாரணமாக இருந்த அவனின் முகம் சட்டென இறுகியது. கை விரல்களை அழுந்த மூடி அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்துவதை கண்ட நந்தினி, ‘என்ன மாமா..?’ என்ற இதழசைவோடு அவரின் கை பிடித்து வேகமாக வெளியில் அழைத்து வந்து விட்டிருந்தாள்.
 
 
அவளின் வேகத்திற்கு வந்து விட்டிருந்தாலும் அவரின் பார்வை மூடியிருந்த அறை கதவின் மீதே ஏக்கமாக பதிந்தது. ரகோத்தமன் மனநிலை புரிந்தாலும் எங்கே கோபத்தில் ஏதாவது பேசி விடுவானோ என்ற பதட்டத்தில் இருந்த நந்தினி “ஏன் மாமா..?” என்றாள்.
 
 
அதில் மனிதர் உடைந்தே விட்டார். “என்னால் முடியலை நந்தும்மா.. ஒரு காலத்தில் என் கூட எப்படி இருப்பான்.. என்னையே சுத்தி சுத்தி வருவான்.. நான் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என்ன கிப்ட் வாங்கி கொடுக்க போறேன்னு ஆசையா காத்திருப்பான்.. ஆனா இப்போ..” என்றவருக்கு அடுத்து பேச வார்த்தைகள் வரவில்லை.
 
 
அந்த குரலில் இருந்த தழுதழுப்பே அவரின் மனதை புரிய வைக்க போதுமானதாக இருக்க.. அவரின் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டாள் நந்தினி.
 
 
அறைக்குள் இருந்த விநாயக், அவர்கள் இருந்த வரை தன் கோபத்தை வெளி காண்பிக்காமல் மறைக்க பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவன், இப்போது ஆத்திரத்தில் முகம் சிவக்க.. அவர்கள் சென்ற பாதையை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
 
 
***********
 
 
வீட்டின் வரவேற்பறையில் தனியே அமர்ந்திருந்தார் அபிராமி. மாலை மங்கி இருள் சூழ தொடங்கி இருந்தது. 
 
 
‘ஒரு காலத்தில் இதே நாள் இதே நேரம் இந்த வீடு எப்படி இருந்தது..?’ என எண்ணும் போதே மனம் கணத்தது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் விநாயக்கை விடுதியில் இருந்து ஒரு வாரம் முன்பே அழைத்து வந்து விடுவார்.
 
 
அவனும் அத்தனை சந்தோஷமும் கொண்டாட்டமுமாக அந்த நாட்களை எதிர் பார்ப்பான். இரண்டு மாதக்களுக்கு முன்பிருந்தே தனக்கு என்னவெல்லாம் தேவை என ஒரு பெரும் பட்டியலையே அவன் தயார் செய்து கொடுத்து விடுவான்.
 
 
அதையெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு சென்றே வாங்க, அப்போது அவன் முகத்தில் வந்து போகும் மகிழ்ச்சியை காணவே காத்திருந்த நாட்கள் எல்லாம் மனக்கண்ணில் வந்துப் போனது.
 
 
அவனுக்கு பரிசுப் பொருட்களை பிரித்து பார்ப்பது அந்த வயதில் மிகவும் பிடித்த ஒரு விஷயம். ஆவலாக கண்கள் மின்ன, “ம்மா உள்ளே என்ன இருக்கும்..? நீங்க சொல்லுங்களேன்..!” என கேட்டு விட்டு பின் நாக்கை கடித்து தன் மகன் புன்னகைக்கும் அழகை எல்லாம் மீண்டும் ஒருமுறை காண அவர் மனம் ஏங்கியது.
 
 
இன்று அவன் வெறுக்கும் ஒரு நாளாக இது மாறிப் போனதை எண்ணி மனம் பாரமானது. அதில் அப்படியே விளக்கை கூட போடாமல் அவர் அமர்ந்திருக்க.. அதே நேரம் வீட்டிற்கு வெளியே தன் காரில் பழைய நினைவுகளின் தாக்கத்தில் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தார் ரகோத்தமன்.
 
 
******
 
 
இங்கே தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த விநாயக் காலை மானஸா கொடுத்து சென்ற பரிசை தான் தன் உள்ளங்கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
இதுவரை அதை அவன் பிரித்து பார்க்கவில்லை. ஏனோ அதை பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு இனம்புரியா உணர்வு அவனுள் பரவியது.
 
 
பல வருடங்களுக்கு பின்னான இந்த நாளில் ஒரு பரிசு.. இடையில் எத்தனை முறை இப்படி பரிசுக் கொடுக்க முயன்றவர்களை எல்லாம் நெற்றி கண்ணை திறந்து பொசுக்கி விடுவான் விநாயக்.
 
 
அதில் அவனை அறிந்த பலர் இந்த நாளில் அவனுக்கு வாழ்த்துக் கூட சொல்வது இல்லை. இதில் பரிசெல்லாம் எங்கே..? அப்படி அமைதியாக இந்த நாளை மறக்க முயன்று தோற்று மீண்டும் அதில் சிக்கி கொள்ள விரும்பா ஒரு மனநிலையில் தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொண்டிருந்தவனின் முன் மீண்டும் ஒரு பரிசு.
 
 
இதுவே வேறு யாராகவோ இருந்தால் அவன் அதை தீண்டிக் கூட இருக்க மாட்டான். ஆனால் கொடுத்தது மானஸா எனும் போது தான் விநாயக்கின் மனதில் லேசாக ஒரு இளக்கம்.
 
 
மெல்லிய மலர் போன்ற மனம் கொண்டவள், தன் மறுப்பை கண்டு அவள் மனம் வாடி விடும் என்றே அமைதியாக இருந்து விட்டான் விநாயக். இன்று வரை அவள் வாழ்வில் அனுபவித்தது எல்லாம் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் உதாசீனத்தையும் மட்டும் தான்.
 
 
இதற்கு முன்பு இப்படி அவள் யாருக்காவது பரிசு கொடுத்து இருப்பாளா என்று கூட தெரியவில்லை. தன் கூட்டை விட்டு வெளியில் வந்து அவள் செய்யும் ஒரு செயலை தன் மறுப்பு மீண்டும் காயப்படுத்தி விடக் கூடாதே என்று நினைத்தே அந்த நொடி அமைதியாக இருந்துக் கொண்டான் விநாயக்.
 
 
ஆனால் இப்போது இதை பிரித்து பார்க்க மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது. அவளுக்காக உள்ளே என்ன இருக்கிறது என பிரித்து பார்க்க மனம் எண்ணினாலும், அவனின் இத்தனை வருட வைராக்கியம் அதை தடுத்தது.
 
 
‘இதை ஏன் பிரிக்கணும்..? அவளுக்காக வாங்கியாச்சு, இனி இது இப்படியே இங்கேயே இருக்கட்டுமே..!’ என்று ஒரு மனம் நினைக்க.. ‘ஒருவேளை உள்ளே என்ன இருந்ததுன்னோ, இல்லை உங்களுக்கு அது பிடிச்சு இருக்கான்னோ அவ கேட்டா..! அப்போ என்ன சொல்ல முடியும்..?’ என்று மற்றொரு மனம் வாதிட.. ‘அவளுக்காக இதை வாங்கிட்டா மாதிரி அவளுக்காக பிரிச்சும் பார்த்துட வேண்டியது தான்..!’ என்று உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்ததில் பல வருடங்களுக்கு பின் மெல்ல அதை பிரித்தான் விநாயக்.
 
 
அந்த நொடி மனம் வேண்டாமென நினைத்தாலும் பழைய நினைவுகள் மேலெழுந்து வருவதை அவனால் தடுக்க முடியவில்லை. தன்னை சுற்றி பரிசுப் பொருட்களாக குவிந்திருக்க.. அதை ஆசையும் ஆவலுமாக பிரித்த நாட்கள் எல்லாம் மனதில் வந்துப் போனது.
 
 
அதில் மானஸா கொடுத்த பரிசை பிரிக்க முயன்றுக் கொண்டிருந்த கைகள் அப்படியே நிற்க.. சட்டென ஒரு இனம் புரியா கோபம் மேலெழுந்து வந்தது. இதில் கையில் இருந்த பரிசை வேகமாக தூக்கி வீச முயன்றவன் இறுதி நொடியில் அதை நிறுத்தி ஆழ்ந்த ஒரு பெருமூச்சை வெளியேற்றி தன் மனநிலையை சமன் செய்ய முயன்றான்.
 
 
பின் வேறு எதுவும் யோசிக்காமல் அந்த பரிசை அவன் வேகமாக பிரித்து விட, அங்கே அழகான ஒரு வாட்ச் இருந்தது. பார்க்கும் போதே கொஞ்சம் விலை உயர்ந்த ஒன்று என்று புரிந்தது.
 
 
‘ஏன் இவ்வளவு செலவு..?’ என மனம் நினைக்காமல் இல்லை. ஆனாலும் அதில் பணத்தை விட அவளின் பாசம் தெரிந்ததில் மெல்ல தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் விநாயக்.
 
 
*******
 
 
வீட்டில் அதே நேரம் நந்தினியிடம் கத்தி தீர்த்துக் கொண்டிருந்தான் நிதின். “என்ன நடக்குது நந்து..? இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.. ஆனா நீ என்கிட்டே எதையுமே சொல்லலை..” என்று அவன் சிடுசிடுக்க.. “சொல்லி என்ன ஆகப் போகுது நிது..? எப்படியும் இதை நான் தானே சரி செய்யணும்..!” என்றாள் சோர்வான குரலில் நந்தினி.
 
 
“ஓ ரியலி..!” என நக்கலாக ஒலித்த அவன் குரலில் களைப்போடு சாய்ந்து அமர்ந்திருந்தவள் மெதுவாக விழிகளை உயர்த்தி பார்க்க.. அவனும் அவளை தான் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
அதில் ‘என்ன..?’ என்பது போல் அவள் புருவத்தை உயர்த்த.. “நீ உண்மையாவே அப்படி நினைச்சு இருந்தா அப்பாகிட்ட மட்டும் ஏன் சொன்னே..?” என்றான் நிதின்.
 
 
“என்ன இருந்தாலும் அந்த கம்பெனிக்கு இப்போவும் அவர் தான் ஹெட்.. அவரை மீறியோ, அவருக்கு தெரியாமலோ நான் எதுவும் செய்ய முடியாது..” என்றாள் நந்தினி.
 
 
அதை அவன் நம்பாத பாவனையோடு நிற்க.. “இன்னைக்கும் பைனல் டிசிஷன் அவர் தான் எடுக்கறார் நிது.. நான் அவர் பர்மிஷன் இல்லாம அங்கே எதுவும் செய்ய முடியாதுன்னு உனக்கும் தான் தெரியுமே..!” எனும் போதே அவள் குரல் லேசாக இடறியது.
 
 
அதில் சட்டென தன் பார்வையை மாற்றிக் கொண்டாலும் அவன் கோபம் கொஞ்சமும் குறையவில்லை. “சரி.. அப்பாகிட்ட சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு, ஆனா அவன்.. அவன்கிட்ட ஏன் நந்து போனே..?” என்றான் வெறுப்பு அப்பட்டமாக தெரியும் குரலில் நிதின்.
 
 
இதற்கு துளியும் யோசிக்காமல் “இது துஷ்யந்த் முடிவு நிது..” என்றாள் நந்தினி. “ஆஹாங், அப்போ நீ இதுக்காக மட்டும் தான் அங்கே போனே..! ஹ்ம்ம், இதை நான் நம்பணும்..?” என கேலியாக இழுத்தவனை வெறுமையாக பார்த்தவள், “இன்னைக்கு இதுக்காக மட்டும் தான் நான் அங்கே போனேன்.. அவங்களும் இதனால் மட்டும் தான் எங்க கூட பேசினாங்க.. இல்லைனா எங்களை உள்ளே கூட விட்டு இருக்க மாட்டாங்க.. அது உனக்கும் தெரியும், இதுக்கு மேலே நம்பறதும் நம்பாததும் உன் விருப்பம்..” என்று அவள் சலிப்போடு சொல்லி விட்டு விழிமூடி அமர்ந்துக் கொண்டாள்.
 
 
“ஆனா அதுக்காக கூட அவன்கிட்ட ஏன்..?” என்று தான் அவனுக்கு அப்போதும் கேட்க தோன்றியது. அதில் நிதினை வெறுமையாக நிமிர்ந்து பார்த்த நந்தினி வேறு எதுவும் பேசவில்லை.
 
 
அவள் பதில் சொல்லி இருந்தால் கூட அவனுக்கு பரவாயில்லை என தோன்றியது. ஏனெனில் அந்த பார்வையில் அத்தனை வெறுமை. அதில் வேகமாக அவளை நெருங்கி “ஹே என்னடா..?” என்று அவளின் தோளை நிதின் ஆதரவாக தொட.. வேகமாக அதை உதறி தள்ளினாள் நந்தினி.
 
 
அதில் திகைத்தவனாக “நந்து..!” என்றான் நிதின். அப்போதும் அவள் எதுவும் பேசாமல் இருக்க.. “இன்னைக்கு உன்னை பார்க்க ஆபிஸ் வந்தேன் நந்து, நீ அங்கே இல்லை.. அப்போ தான் டில்லி பாபு அங்கிள் நீங்க அவனை பார்க்க போய் இருக்கறதா சொன்னார்.. என்.. என்னால் கோபத்தை..” என்றவன், வேறு எதுவும் பேசாமல் பார்வையை திருப்பிக் கொண்டான்.
 
 
அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க.. அவனுக்கு என்னவோ போல் ஆனது. “அந்த கோபத்தில் தான் கொஞ்சம் அதிகமாவே பேசிட்டேன் நந்து.. சாரிடா..” என்றான் தானாக இறங்கி வந்து நிதின்.
 
 
“ம்ப்ச்.. உன் கோபமெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை நிது.. ஆனா என் நிலைமை என்னன்னு எனக்கு மட்டும் தெரியும்.. இப்போ வந்து இருக்க பிரச்சனையை எப்படி சரி செய்யறதுன்னு தான் என் மனசில் ஓடிட்டு இருக்கு.. அதை புரிஞ்சுக்காம நீ பேசிட்டே போனா நான் என்ன செய்ய..?” என்றாள் நந்தினி.
 
 
“அப்படியில்லை நந்து, என்கிட்டே சொல்லி இருந்தா சேர்ந்து சரி செஞ்சு இருக்கலாமேன்னு தான்..” என்றவனை சில நொடிகள் அமைதியாக பார்த்தவள், “ஓஹோ.. என்னன்னு சொல்ல சொல்றே..? என்னால் எனக்கு கொடுத்த பொறுப்பை சரியா செய்ய முடியலை.. இத்தனை நாள் நான் அப்படி இல்லைன்னு வேதாம்மாவுக்கு நிருபிக்க நான் போட்ட உழைப்பெல்லாம் வீணாகிடுச்சு.. எவனோ அவன் பகையை தீர்த்துக்க என்னை பகடை காயா பயன்படுத்தறான்.. நான் எங்க அப்பா மாதிரியே எதுக்கும் சரிபட்டு வரமாட்டேன்னு வேதாம்மா நினைச்சுட்டு இருக்கறது சரி தான்னு ஆக்க ஒருத்தன் முயற்சி செய்யறான்.. இதில் என்னை நம்பி இறங்கி இருக்க ஒரு பெரிய ஸ்டாரோட கேரியரும் பெயரும் கூட அடங்கி இருக்கு.. என்னை இதிலிருந்து எப்படியாவது காப்பாத்துன்னு வந்து நிற்க சொல்றியா..?” என்றாள் ஆதங்கமான குரலில் நந்தினி.
 
 
அதில் ‘நீயும் என்னை அப்படி தான் நினைக்கறியா..?’ என்ற கேள்வி தொக்கி நிற்க.. பதிலின்றி திகைத்து, “நந்து..” என்றான் தவிப்பான குரலில் நிதன். 
 
 
********
 
 
ஒரு வாரத்திற்கு பிறகு..
 
 
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அபியோடு அமர்ந்திருந்தான் விநாயக். அது பின் மதிய நேரமென்பதால் பெரிதாக கூட்டமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆட்கள் இருக்க.. கழுத்தை நீவியவாறே பார்வையை சுழற்றியவன், நிதினோடு உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த நந்தினியை கண்டான்.
 
 
அவள் அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டே வந்ததில் விநாயக் இங்கே இருப்பதை கவனிக்கவில்லை. மாறாக இவனை பார்த்திருந்த நிதின், உரிமையாக நந்தினியின் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
 
 
இதை கண்டெல்லாம் அவனுக்கு கொஞ்சமும் கோபம் வரவில்லை. கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் தான் இருவரையும் பார்த்து வைத்தான் விநாயக்.
 
 
அதே நேரம் கேள்வியாக அவனை விழிகளை உயர்த்தி பார்த்தாலும் நிதினிடமிருந்து விலக முயலவில்லை நந்தினி. அன்றைய சிறு சண்டைக்கு பின் அவளை சமாதானம் செய்ய நினைத்தே மதிய உணவுக்கு நந்தினியை வெளியே அழைத்து வந்திருந்தான் நிதின்.
 
 
அப்படியே அவளை அழைத்து வந்து வேண்டுமென்றே விநாயக் முன்பிருந்த மேஜையில் நிதின் அமர, அப்போதே அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்த நந்தினி அவனை இங்கே எதிர்பாராமல் கண்டு திடுக்கிட்டாள். 
 
 
நிதின் அப்போது வரையும் தன் தோள் மேல் கைப் போட்டிருப்பதை கண்டு சங்கடமாக நெளிந்த நந்தினி லேசாக விழிகளை உயர்த்தி விநாயக்கை பார்த்தாள்.
 
 
அவனோ கொஞ்சமும் இவர்களை கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருக்க.. நிதினின் பக்கம் பார்த்த நந்தினி “உங்க பிரச்சனையில் என்னை கொண்டு வராதேன்னு நான் முன்னேயே சொல்லி இருக்கேன் நிது..” எனவும், “நானும் அவனுக்கு உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு முன்னேயே சொல்லி இருக்கேன் நந்து..” என்றான். 
 
 
‘நீ விட்டுக் கொடுத்தா மட்டும் அவர் அப்படியே என்னை ஏத்துப்பாரா..?’ என விரக்தியோடு நினைத்துக் கொண்டவள், சோர்வாக திரும்பி அவனை பார்த்து “ப்ளீஸ், என்னை எதிலும் கொண்டு வராதே நிது..” என்றாள். 
 
 
அவள் குரலில் இருந்த வருத்தமும் வலியும் புரிந்தாலும் வேண்டுமென்றே “உன்னை கொண்டு வராம எப்படி..? நீ எனக்கு தானே சொந்தம்..?” என்றவனின் வார்த்தைகள், விநாயக் அவளிடம் பேசியதை நினைவுப்படுத்தி விட, அவளுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது.
 
 
அதே நேரம் அவ்வளவு நேரமும் மெனு கார்டில் பார்வையால் வலம் வந்துக் கொண்டிருந்த அபி அப்போதே விழிகளை உயர்த்தியவள், நந்தினியை அங்கு கண்டு ஆர்வமாக விநாயக் பக்கம் திரும்பி பார்க்க.. அவனோ தன் அலைபேசியில் கவனமாக இருந்தான்.
 
 
‘அதானே..!’ என சலித்துக் கொண்ட அபி, “ஆண்ட்டி உனக்கு பொண்ணு பார்க்க சொல்லி இருக்காங்க வினய், நிமல், மஹி, துஷின்னு எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. அவங்க வந்ததும் உனக்கு பெண் தேடும் படலத்தை தொடங்க போறோம்..” என்றாள் வேண்டுமென்றே ஓர பார்வையால் நந்தினியை பார்த்தப்படி அபி.
 
 
அவளின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் நந்தினியின் முகம் அப்பட்டமாக அதிர்வை காண்பிக்க.. “ஓஹோ.. ஆனா தர்ஷனை ஏன் விட்டுட்டீங்க..?” என்றான் இப்போது அது தான் முக்கியம் என்பது போல் விநாயக்.
 
 
“அவனா..? அவனை உனக்கு பொண்ணு பார்க்க சொன்னா அவனுக்கு விதவிதமா பார்த்துப்பான்.. வேண்டாம்பா..” என அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்து விட, அடக்க மாட்டாமல் சிரித்தான் விநாயக்.
 
 
அந்த புன்னகையை நந்தினி ஏக்கமாக பார்த்திருக்க.. அவளை கவனித்தவாறே விநாயக்கிடம் போட்டு வாங்க நினைத்து “சிரிக்கறதெல்லாம் இருக்கட்டும், பொண்ணு பார்த்துடலாமா..?” என்றாள் அபி.
 
 
அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “பொண்ணு தானே தாராளமா பாருங்க.. நானும் எவ்வளவு நாளைக்கு தான் பேச்சிலரா இருக்கறது..” என்றிருந்தான் விநாயக்.
 
 
இதில் விழிகள் கலங்கி நிற்க.. அவனை வெறுமையாக பார்த்தாள் நந்தினி.
  
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
MNKN - 4
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 17 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
 
 
மௌனம் - 6
 
அவன் பதிலில் திகைத்த அபி “நிஜமா தான் சொல்றியா..?” எனவும், “ஏன் என்னை பார்த்தா பொய் சொல்ற மாதிரியா இருக்கு..!” என்றான் விநாயக்.
 
 
“பொய் சொல்றேன்னு சொல்லலை, இந்த நிமிஷம் இதை சமாளிக்க ஏதோ பேசறேன்னு தோணுது..” என பார்வையை தழைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்தாலும் நந்தினியின் கவனம் முழுக்க இவர்களிடமே இருப்பதை கண்டு உண்டான கவலையோடே கூறினாள் அபி.  
 
 
அதில் அவளை ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்த்தவன், “இந்த நிமிஷத்தை நான் எதுக்காக சமாளிக்கணும்..? அப்படி என்ன அவசியம் வந்தது..?” என்றான் ஒன்றும் தெரியாதது போலான குரலில் விநாயக். 
 
 
இதில் அபி அவனை லேசாக முறைக்க.. “என்ன உன் பார்வையை பார்த்தா நான் கல்யாணமே செஞ்சுக்காம சாமியாரா போகணும் போலேயே..! இந்த நிமல் கல்யாணம் செஞ்சுட்டான், வர்மா செட்டிலாகிட்டான்.. துஷி அவன் பல இளம் பெண்களோட கனவு காதலன், அதனால் இப்போதைக்கு கல்யாணம்னு யோசிக்கக்கூட மாட்டான்.. இந்த தர்ஷ் அவன் ஒரு நவீன மன்மதன், இங்கே நான் தான் பாவம்.. கடைசி வரைக்கும் என்னை இப்படியே இருக்க சொல்றியா..?’ என்றான் விநாயக்.
 
 
அவன் பேசுவது எல்லாம் சரியாகவே இருந்தாலும் இப்படி சட்டென விநாயக் திருமணத்திற்கு சம்மதித்து விடுவான் என்று அபி கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. அதுவும் நந்தினியின் முன்னிலையில்..! ‘நிச்சயம் இப்போது வேண்டாம் என்றோ.. இல்லை ஏன் இந்த பேச்சு என்றோ தான் சொல்லுவான்..’ என எண்ணியே இந்த பேச்சை தொடங்கி இருந்தவளுக்கு நந்தினியின் முக மாறுதலை கண்டு ரொம்பவே வருத்தமாகிப் போனது. 
 
 
‘ச்சே, எல்லாரும் தான் கஷ்டப்படுத்துறாங்கன்னு பார்த்தா நாமும் இப்படி தெரிஞ்சே அந்த பொண்ணு மனசை வருத்தப்பட வெச்சுட்டோமே..!’ என மனம் பாரமாக, அமைதியாகி போனாள் அபி. 
 
 
அவளின் அமைதியை கவனித்த விநாயக் “ஓய் என்ன சாப்பிடற ஐடியா இருக்கா..? இல்லையா..! எதுவும் ஆர்டர் செய்யாம உட்கார்ந்து இருக்கே, போன வாரம் உன்னை விட்டு நாங்க எல்லாம் டின்னர் போனதுக்கு அவ்வளவு அமர்க்களம் செஞ்சு என்னை கூட்டிட்டு வந்தே இல்லை..” என்றான் விநாயக்.
 
 
அதற்கு பதிலேதும் சொல்லாமல் இதழை மட்டும் சுழித்துக் கொண்டு மீண்டும் மெனுவில் பார்வையை திருப்பினாள் அபி. அதே நேரம் பார்வையை தழைத்துக் கொண்டு அமர்ந்திருந்த நந்தினியை லேசாக இடித்து தன்னை பார்க்க செய்த நிதின் “நாம இங்கே வந்து எவ்வளவு நேரமாகுது தெரியுமா..? ஏன் வந்தோம்னு ஞாபகம் இருக்கா..!” எனவும், “ஏதாவது ஆர்டர் செய்..” என்றாள் நந்தினி. 
 
 
அந்தக் குரலில் ‘நீ ஏதாவது செய்து கொள்..!’ என்பது போல் ஒரு பாவம் மட்டுமே இருந்தது. அதை கவனித்தாலும் கண்டுகொள்ளாதது போல் நிதின் அவளுக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்தான்.
 
 
அன்றைய நிகழ்வுக்கு பின் நந்தினியிடம் பேச எத்தனையோ முயன்று பார்த்து விட்டான் நிதின். ஆனால் அவள் அதற்குப் பிடி கொடுக்கவே இல்லை. முதல் காரணம் அவன் அன்று பேசிய விதம் அவளை மனதளவில் வெகுவாக காயப்படுத்தி இருந்தது. 
 
 
மற்றொன்று ‘இந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்ய போகிறோம்..? இது பெரிதாகாமல் எப்படி தடுக்க போகிறோம்..!’ என்ற பதட்டமும் கவலையும் அவளை நிலை கொள்ளாமல் தவிக்க செய்து கொண்டிருந்தது. 
 
 
இப்போது வரை இதைப் பற்றி வேதவல்லிக்கு எதுவும் தெரியவில்லை நந்தினிக்காக அவள் அனுபவிக்கும் மன வலிகளுக்காக என்று யோசித்து டில்லிபாபு கூட இதுவரை வேதவல்லியிடம் எதையும் கொண்டு செல்லவில்லை. ஆனால் விவரம் அறிந்து வேதவல்லி கேட்டால் நிச்சயம் மறைக்க மாட்டார், அப்படியே சொல்லிவிடுவார்.. 
 
 
சிறு வயதிலிருந்து அவர் பார்த்து வளர்ந்த நந்தினியின் திறமைகளைப் பற்றி டில்லிபாவுக்கு நன்றாகவே தெரியும். அதோடு சில நேரங்களில் வேதவல்லி அவளை நடத்தும் முறையையும் நேரில் கண்டிருந்ததால் உண்டான கவலையோடே அவளுக்காக அமைதியாக இருந்தார். 
 
 
தன்னால் முடிந்த அளவு நந்தினிக்கு எல்லா வகையிலும் உதவ முயன்று கொண்டு இருந்தார் டில்லிபாபு. ஒரு பக்கம் ரகோத்தமன் தன் செல்வாக்குகளை பயன்படுத்த முயன்றால் நிச்சயம் விஷயம் வெளியில் கசிந்து விடும். இவர்களின் தொடர் வெற்றி பிடிக்காத எத்தனையோ போட்டி நிறுவனங்கள் எப்போது காலை வாரி விடலாம் என காத்திருக்கிறார்கள்.. 
 
 
இதில் மிகப்பெரிய ப்ராஜெக்ட், அத்தனை கோடிகளை இந்த படத்திற்காக பணம் என பார்க்காமல் வாரி இறைத்திருக்கிறார்.. இந்த சுழலிலிருந்து எப்படி வெளியே வருவது..? என்ற கவலையோடு, இதை வேதவல்லிக்குத் தெரியாமல் மறைக்க வேண்டுமே என்ற பதட்டமும் சேர்ந்து கொண்டதில் உணவு உறக்கம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் நந்தினி. 
 
 
அதிலேயே அவளின் மனதை கொஞ்சமாக திசை திருப்ப எண்ணியும், தன் மேலான கோபத்தை தணிக்க நினைத்துமே இன்று மதிய உணவிற்கு நந்தினியை வெளியே அழைத்து வந்திருந்தான் நிதின். 
 
 
ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக இங்கு விநாயக்கை பார்த்தவுடன் அவன் மனநிலை முற்றிலும் மாறிப்போக, மீண்டும் தன்னை அறியாமலே அவள் மனதை காயப்படுத்தி விட்டிருந்தான் நிதின். 
 
 
அதில் உண்டான கோபமும் இப்போது விநாயக் மேல் தான் அவனுக்கு திரும்பியது. ‘எல்லாம் இவனால் வந்தது.. இவனை யார் இங்கே வர சொன்னது..?’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே அமர்ந்திருந்தான் நிதின். 
 
 
அதேநேரம் அபியும் அங்கு ஆர்டர் செய்து முடித்திருக்க.. அதுவரை அலைபேசியில் கவனமாக இருந்த விநாயக் நிமிர்ந்து அவளை பார்த்தான். அதில் அவனை முறைத்தவள் “இங்கே பாரு, ட்ரீட்னு கூட்டிட்டு வந்துட்டு இப்படி அவசரப்பட்ட அவ்வளவு தான்.. அப்புறம் நீயும் வேண்டாம், உன் டேஷும் வேண்டாம் போடான்னு சொல்லிடுவேன்..” என்றாள் முறைத்துக் கொண்டே அபி. 
 
 
அதில் சிரித்தவன் “அப்போ கூட சாப்பாடோ ட்ரீட்டோ வேண்டாம்னு சொல்ல மாட்டே, அப்படித்தானே..!” எனவும் “நான் ஏன் மேன் அப்படி சொல்லணும்..? எனக்கு பசிக்குது..” என வீம்பாக கூறினாள் அபி. “நான் உன்னை எதுவுமே சொல்லலை.. சும்மா தான் பார்த்தேன்.. அதுக்கு இவ்வளவு அமர்க்களம்..?” என்றான் விநாயக்.
 
 
“ஆமா சும்மா பார்த்தே.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா..! எங்க கூட எப்போ வெளியே வந்தாலும், திடீர்னு ஒரு அவசரமான கால் நான் போயே ஆகணும்னு கிளம்புவே.. இப்போவும் அப்படி ஏதாவது சொன்னே, மகனே உன்னை போட்டு தள்ளிடுவேன்..” என்றாள் மிரட்டலாக அபி. 
 
 
“அடிப்பாவி ஒரு போலீஸ்காரன்கிட்ட பேசற மாதிரியா பேசறே..!” என விநாயக் கேலியாக கேட்க.. “நீ ஊருக்கு தான் போலீஸ், எனக்கு இல்லைடா..” என்று அவனோடு சண்டைக்கு அபி நிற்க, அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்ததை பார்க்க பார்க்க நந்தினிக்கு ஆசையாக இருந்தது. 
 
 
‘அவர்களோடு சென்று இணைந்து கொள்ள மாட்டோமா..!’ என்று எப்போதும் போல் இன்றும் ஏக்கமாக இருக்க.. அவன் கோபத்துக்கு பயந்து நிமிர்ந்தும் பார்க்க முடியாமல் தொலைபேசியிலேயே கவனமாக இருப்பது போல் அமர்ந்திருந்தாலும், அவள் கவனம் மொத்தமும் அவர்கள் பேச்சில் மட்டுமே இருந்தது. 
 
 
அந்த அமைதியான இடத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பான குரலில் இருவரும் பேசிக் கொண்டிருந்தது நந்தினிக்கும் தெளிவாக கேட்டது. அதில் அவ்வப்போது மட்டும் விழிகளை உயர்த்தி அவனை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு மீண்டும் விழிகளைத் தழைத்துக் கொண்டு இருந்தாள் நந்தினி.
 
 
“இன்னும் எவ்வளவு நேரமாகும்..? ஆர்டர் கொடுத்து 15 மினிட்ஸ் இருக்கும் இல்லை..” என்று தன் கையில் இருந்த கடிகாரத்தை திருப்பி பார்த்தப்படியே விநாயக் கேட்க, “இருக்கும்னு தான் நினைக்கறேன்..” என்றவள் அப்போதே அவன் கையில் இருந்ததை கவனித்து “ஹேய் இது என்ன புதுசா வாட்ச் எல்லாம் கட்டி இருக்கே..! நீ வாட்ச் கட்டி பார்த்த மாதிரி எனக்கு ஞாபகமே இல்லையே..!” என்று ஆர்வத்தோடும் ஆராய்ச்சியோடும் கேட்டாள் அபி.
 
 
“புதுசு தான், எல்லாமே புதுசு தான்..” எனும் போதே விநாயக்கின் முகம் அத்தனை மென்மையாக மாற.. அவன் இதழ்களும் புன்னகையில் விரிந்தது. அதை வியப்பாக பார்த்தவாறே “என்னாச்சுடா உனக்கு..? இப்படி முகமே லைட் போட்டது போல பிரைட்டா ஆகுது..! என்ன விஷயம்..?” என்று அபி உற்சாகத்தோடு கேட்க.. பொங்கி வந்த புன்னகையை மறைத்துக் கொண்டு ‘ஒண்ணுமில்லை’ என தலையசைத்தான் விநாயக்.
 
 
அதை நம்பாமல் பார்த்தவள், இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைக்க.. “ஓகே சொல்லிடறேன், என்ன தெரியணும் உனக்கு..?” எனவும் “என்ன புதுசா வாட்ச்..?” என்றாள் விசாரணை குரலில் அபி. 
 
 
“ஒரு போலீஸ்காரனையே விசாரிக்கற நீ..!’ என அவன் வம்பிழுக்க.. “அப்படித்தான் விசாரிப்பேன், எனக்கு இப்போ உண்மையை நீ சொல்றே..!” என சண்டைக்கு தயாராவது போல் அபி திரும்பி அமர, “அடிதடி எல்லாம் வேணாம் பேபிம்மா.. என் பாடி தாங்காது, நானே சொல்லிடறேன்.. இது எனக்கு கிப்ட்டா வந்தது..” என்றவனை ஆச்சரியத்தோடுப் பார்த்தவள் “என்னது கிப்ட்டா..?” என்றாள். 
 
 
அவள் திறந்த வாய் மூடாமல் அதிர்ச்சியா ஆச்சரியமா என்பது போலான ஒரு முகபாவனையோடு அவனை பார்த்திருக்க.. அவனும் ‘ஆம்’ என்பது போல் புன்னகை முகமாக கண் சிமிட்டி சிரித்தான். 
 
 
அதில் தன் திகைப்பு மாறி லேசாக அவன் கைகளை கிள்ளியவள் “ஸ்ஸ்ஆஆ பிசாசு, ஏன் கில்லறே..?” என்று அவன் கத்தவும் “அப்போ இது நிஜமாவே நிஜம் தான் வினய்..” எனவும், “நிஜமோ நிஜமும்..” என்றவனின் குரலில் இருந்த கனிவும் சந்தோஷமும் அவளை சரியாக சென்று சேர்ந்தது.
 
 
சட்டென அதில் உண்டான கேள்வியோடு “யார் கொடுத்த கிப்ட் வினய்..?” என்றாள் அபி. “ஹ்ம்ம் ஒரு ஸ்பெஷல் பர்சன்னு வெச்சுக்கோயேன்..” என அவன் சொல்லவும், “இந்த வெச்சுக்கோயேன், வாங்கிக்கோயேன் எல்லாம் வேண்டாம்.. யார் கொடுத்தா..?” என அவள் அதிகாரமாக கேட்கவும், அந்த கடிகாரத்தை தன் மற்றொரு கரத்தால் மெல்ல வருடியவன் “எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்பெஷல் பர்சன், இப்போதைக்கு அவ்வளவு தான்..” என்றான் விநாயக்.
 
 
அவனின் இந்த பதிலும் செயலும் அபியினுள் பல கேள்விகளை எழுப்பி இருக்க.. வேகமாக அடுத்ததாக எதையோ கேட்க வந்தவள், அப்போதே நினைவு வந்தவளாக சட்டென திரும்பி தங்கள் எதிரில் இருந்த நந்தினியை பார்த்தாள். 
 
 
அதே நேரம் நந்தினியும் விழிகள் லேசாக கலங்கி நிற்க, விநாயக்கின் கைகளில் இருந்த கடிகாரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பேச தொடங்கிய உடனேயே, அன்று அவன் மேஜை மேல் பார்த்த பரிசு பெட்டி தான் நந்தினியின் நினைவுக்கு வந்திருந்தது.
 
 
அவனைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தவள் என்பதால் விநாயக் பரிசு பொருள்களை அறவே தவிர்ப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் அன்று அவன் மேஜையில் பார்த்த பரிசு பெட்டி.. அதுவும் அவன் பிறந்தநாள் அன்று வந்திருந்தது.. அப்போதே அவளை ஏதோ ஒரு வகையில் நெருட தொடங்கி இருக்க, அதை மெய்ப்பிப்பது போல் இதோ இன்று அதைப்பற்றி விநாயக் பேசிக் கொண்டிருக்கிறான். 
 
 
அதிலும் எத்தனை முரண்.. யாரிடமும் எதற்காகவும் பரிசை வாங்காதவன், அதை வாங்கி இருக்கிறான்.. கடிகாரமே பயன்படுத்தாதவன், அதை ஆசையோடு கட்டிக் கொண்டிருக்கிறான்.. அந்தப் பேச்சை எடுக்கும் போது அவன் முகம் மலர்ந்து புன்னகைக்கும் விதம் இதெல்லாம் அவளை மிகவும் பாதித்தது.
 
 
‘தன்னைக் கண்டாலே வெறுப்பவன், சற்று முன் அபியிடம் கூட திருமணத்திற்கு சம்மதம் சொன்னதன் காரணத்தின் பின்னணி இதுவாக இருக்குமோ..!’ என்று அவள் மனம் அலை பாய்ந்தது. இவ்வளவு நேரமும் ஒரு அலைபேசி அழைப்பை பேசுவதற்காக சற்று தள்ளி சென்று நின்று பேசிக் கொண்டிருந்த நிதின், அப்போதே அங்கு வந்து அவளருகில் அமர்ந்தான்.
 
 
‘தன்னால் நந்தினிக்கு எந்த வகையிலாவது உதவ முடியுமா..?’ என்று அவனும் அன்றிலிருந்து முயன்று கொண்டு தான் இருக்கிறான். ஆனால் இதை அவளிடம் சொல்ல அவனுக்கு தயக்கமாக இருந்தது. தன் முயற்சியில் நடந்ததாக இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கும் போது, அதில் தலையிடுவது போல் ஆகிவிடுமோ..!’ என்றே, அனைத்தையும் செய்து முடிக்கும் வரை இப்போதைக்கு நந்தினியிடம் எதுவும் சொல்ல வேண்டாமென நினைத்தான் நிதின்.
 
 
*
 
 
மறுநாள் காலை..
 
 
ரகோத்தமனும் நந்தினியும் விநாயக் அலுவலகத்தில் அவன் முன் அமர்ந்திருந்தனர். 
 
 
தன் கையில் இருந்த சில காகிதங்களை ரகோத்தமனின் முன் நகர்த்தி வைத்தான் விநாயக். அதை கேள்வியாக அவர் பார்க்கவும், ‘எடுத்துப் பாருங்க..’ என்பது போல் அவன் விழி அசைக்கவும், இதை எடுத்து படித்தவரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
 
 
அங்கு விக்ராந்த் தன் கைப்பட, ‘ஆர் கே ப்ரோடக்ஷன் துஷ்யந்தை வைத்து எடுக்கும் படத்தின் கதை இயக்குனர் ரவி பிரியனுடையது மட்டுமே.. அது அவரின் சொந்த கற்பனையில் உருவானது. அதற்கும் எனக்கும், என் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இப்போதும் எதிர்காலத்திலும் அதை எந்த வகையிலும் உரிமைக் கொண்டாட மாட்டேன்..’ என்று தொடங்கி இரண்டு பக்கத்திற்கு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்திருந்தான்.
 
 
தன் கையில் இருப்பதை நம்ப முடியாமல் பார்த்த ரகோத்தமன், அருகில் இருந்த நந்தினியின் பக்கம் திரும்பி அந்த காகிதங்களை நீட்டினார். அவள் அதை வேகமாக வாங்கி படித்து கொண்டிருக்க.. தன் கையில் இருந்த மற்றொரு காகிதத்தை பார்த்தார் ரகோத்தமன். அதில் விக்ராந்த் எழுதியது போலவே கோகுல கிருஷ்ணன் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி கையெழுத்திட்டு இருந்தார்.
 
 
இதெல்லாம் எப்படி என்பது போல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு திரும்பி விநாயக்கை பார்க்க.. “இனி உங்களுக்கு இவனால் எந்த பிரச்சனையும்..” என்றவன் சிறு இடைவெளி விட்டு “இந்த விஷயத்தில் வராது..” என்று முடித்திருந்தான்.
 
 
அதுவே அவன் சொல்லாமல் விட்டதை இருவருக்கும் புரிய வைத்திருந்தது.. இது அவர்களுக்கு பழகிப்போன ஒன்று தான் என்பதால் அதை விடுத்து, “இது.. இதெல்லாம் எப்படி..? அவன் எப்படி எழுதி கொடுத்தான்..! அவன் அவ்வளவு சுலபமா சமாளிக்க கூடியவன் இல்லையே..!” என ரகோத்தமன் நம்ப முடியா குரலில் கேட்டார்.
 
 
“அது எதுக்கு உங்களுக்கு..? உங்க பிரச்சனை முடிஞ்சுதா அவ்வளவு தான்..” என்றவன், “இதையெல்லாம் இவங்க இரண்டு பேரும் எழுதி கொடுத்தது மட்டுமில்லை, வீடியோவில் பேசினதும் என்கிட்ட ஆதாரமா இருக்கு.. சோ ப்ராப்ளம் சால்வ்ட்..” என்றதோடு முடித்துக் கொண்டான் விநாயக். 
 
 
இதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியானாலும், ‘எப்படி இதை இத்தனை சுலபமாக சாத்தியப்படுத்தினான்..?’ என அவருள் கேள்விகள் எழாமல் இல்லை. 
 
 
ஆனால் கேட்டால் பதில் தான் வராது என்று தெரிந்தும் இனி என்ன பேச என்பது போல் இருவரும் அமர்ந்திருக்க.. அதுவரை தன் முன் இருந்த கோப்பில் கவனமாக இருந்த விநாயக் பார்வையை உயர்த்தி அவர்களை ‘இன்னும் என்ன..?’ என்பது போல் பார்த்தான். அந்தப் பார்வையே இருவரையும் கிளம்ப சொல்ல.. வேறு வழியில்லாமல் நன்றி தெரிவித்து விட்டு எழுந்து வந்திருந்தனர் இருவரும். 
 
 
அங்கு எதுவும் பேச முடியாமல் வெளியே வந்து விட்டிருந்தாலும் ரகோத்தமன் வாய் ஓயாமல் விநாயக் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். 
 
 
“எப்படி நந்தும்மா..? இந்த பிரச்சனையை இவ்வளவு சீக்கிரம் வினய் சரி செஞ்சான்..! எவ்வளவு பெருசாகுமோ..? எப்படி எல்லாம் அசிங்கப்பட வேண்டி இருக்குமோன்னு எவ்வளவு பயந்துட்டு இருந்தேன் தெரியுமா..! இதில் பணம் மட்டும் விஷயம் இல்லை நந்து, நாம இத்தனை வருஷம் கட்டிக் காப்பாற்றி இருந்த பெயர், கௌரவம்னு எல்லாமே அடங்கி இருக்கு, அதோட..” என்றவர், சிறு தயக்கத்திற்கு பிறகு “அம்மா உன்னை இத்தனை நாள் பேசிட்டு இருந்தது எல்லாம் உண்மையாகிடுமோ..! நீ இத்தனை நாள் போட்ட உழைப்பெல்லாம் இந்த ஒரு விஷயத்தில் ஒன்னும் இல்லாம போயிடுமோ..! அவர் உன்னை வார்த்தையால் நோகடிச்சிடுவாரோன்னு எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நான் தவிச்சிட்டு இருந்ததை எல்லாம் இப்படி ஒரே வாரத்தில் ஒண்ணுமில்லாம செஞ்சுட்டானே..!” என்று பேசும் போதே அவர் முகம் அத்தனை மலர்ந்தது. 
 
 
அதில் இருந்த பூரிப்பை மென் நகையோடு பார்த்தவள் “நமக்கும் இதுதானே வேணும் மாமா..!” என்றாள். “ஹ்ம்ம், ஆனா எப்படி சாதிச்சான்னு தான் தெரியலை, கேட்டாலும் சொல்ல மாட்டான்..” என்று குறைபட்டுக் கொண்டவர், “பெரிய திறமைசாலி தான், அப்போவே அவ்வளவு சூட்டிகையா இருப்பான்.. புதுசா எதையாவது கத்துக்க அவ்வளவு ஆர்வம் காட்டுவான்.. அபிக்கு தன் பையனை நினைச்சு அவ்வளவு பெருமை..” என அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க.. பழைய நினைவுகளோடு அவர் கலந்து விட்டதை உணர்ந்து அமைதியாகவே அதைக் கேட்டுக் கொண்டாள் நந்தினி. 
 
 
நந்தினி காரை ஓட்டிக் கொண்டிருக்க.. அருகில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டே வர குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தாள் நந்தினி. பல நிமிடங்களுக்குப் பிறகே அவளின் அமைதியை உணர்ந்தது போல் திரும்பிய ரகோத்தமன் “என்னாச்சு நந்து..? ரொம்ப போர் அடிக்கறேனா..! அமைதியாகிட்டே..” என்றார்.
 
 
அவளுக்கா விநாயக் பற்றிய பேச்சு போர் அடிக்கும்.,! அதுவும் அவளறியாத அவனின் சிறு வயது நினைவுகளை கேட்க கேட்க அவளுக்கு திகட்டவே இல்லை.
 
 
நேற்றைய நிகழ்வுக்கு பின் துவண்டிருந்த அவள் மனம், இன்று அவனைக் நேரில் கண்டவுடன் லேசாக உயிர்த்தெழ.. அவனின் செயல்கள் அத்தனையும் அதை கொல்வது போல் இருந்தது. அவன் அறையில் இருந்த அந்த பத்து நிமிடங்களில் ஒரு முறை கூட நந்தினியின் பக்கம் தன் பார்வையை திருப்பவே இல்லை விநாயக்.
 
 
அன்றாவது அவளின் முகத்தைப் பார்த்து பேசினான். அவள் சொல்வதை கவனித்து கேட்டான். ஆனால் இன்று முற்றிலும் அவளை புறக்கணிப்பது போல் அவன் நடந்து கொண்டது மனதை வருத்த.. அதற்கு நிஜமாகவே ரகோத்தமனின் பேச்சு அவளுக்கு மயிலிறகால் மறந்திடுவது போலத்தான் இருந்தது. 
 
 
அதில் மறுப்பாக தலையசைத்தவள், “அப்படி எல்லாம் இல்லை மாமா, நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு தான் இருந்தேன்.. ரொம்ப மிஸ் செய்யறீங்களா மாமா..? வருத்தப்படாதீங்க..” என்றாள் லேசான புன்னகையோடு தொடங்கி, கவலையுடன் கூடிய குரலில் நந்தினி. 
 
 
அதில் நீண்ட ஒரு பெருமூச்சை வெளியிட்ட ரகோத்தமன், “வருத்தம் மட்டும் இல்லை நிறைய வலியும் இருக்கு.. ஆனா இதில் முழு தவறும் என் பக்கம் இருக்க நான் என்ன செய்ய முடியும்..?” எனும் போதே அவர் குரல் உடைந்தது. இதில் பதறியவள் காரை சட்டென ஓரம் கட்டி நிறுத்தினாள்.
 
 
“மாமா என்ன இது..? நீங்களே இப்படி உடைஞ்சிட்டா..” என ஆறுதல் சொல்ல தொடங்கியவளை இடையிட்டு இருந்தவர் “நானும் மனுஷன் தானே நந்தும்மா.. தவறு செய்ததற்கான தண்டனையை அனுபவிக்கறேன்னு புரியுது, ஆனா முடியலையே..!” என்றார் தழுதழுப்பாக ரகோத்தமன்.
 
 
அதில் என்ன சொல்லி அவரைத் தேற்றுவது என புரியாமல் தவிப்போடு பார்த்திருந்தாள் நந்தினி.
 
 
**
 
 
அவர்கள் எழுந்து செல்வதற்காகவே காத்திருந்த விநாயக், உடனே துஷ்யந்தை அழைத்தான். அதை அவன் ஏற்றதும் “ப்ராப்ளம் சால்வ்ட்..” என்றான் கோட் வேர்ட் போல் விநாயக்.
 
 
“அது சால்வ் ஆகிடும்னு தெரிஞ்சு தானே உன்கிட்டே அனுப்பினேன்.. நீ செஞ்சு முடிப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும், ஆனா எப்படி செஞ்சேன்னு சொல்லு..” என்றான் உல்லாசமான குரலில் துஷ்யந்த்.
 
 
“ரொம்ப குஷியோ..?” என்று விநாயக் கேட்க.. “இல்லையா பின்னே..!” என்றவனை சரமாரியாக விநாயக் அர்ச்சிக்க தொடங்க.. “மச்சி.. சமாதானம்.. சமாதானம்.. எதுவா இருந்தாலும் நேரில் பேசிப்போம்.. இப்போ அவனை என்ன செஞ்சேன்னு சொல்லேன்..” என்றவனின் குரலில் அத்தனை துள்ளல் இருந்தது.
 
 
விநாயக்கும் தன் கோபத்தை தள்ளி வைத்து விட்டு சொல்ல தொடங்கினான். “அவங்க சொல்றதை கேட்டதுமே இது பக்கா ஸ்கெட்ச்னு தெரிஞ்சுது.. இவங்களை சிக்க வைக்க பல நாள் காத்திருந்து இருக்கான் போல, ஏன் அவன் ஸ்கெட்ச் போடும் போது நமக்கு போட தெரியாதா..! அதான் போட்டேன்..” என்றான் இருக்கையில் தளர்வாக சாய்ந்து அமர்ந்து விநாயக்.
 
 
அவன் சொன்ன விதத்தில் உண்டான புன்னகையோடு “போட்டு இருக்கேன்னு தெரிஞ்சுது.. ஆனா எப்படி..?” என்றான் துஷ்யந்த்.
 
 
“ஹ்ம்ம்.. அவன் அந்த நவீனை வெச்சு எடுத்துட்டு இருக்க படத்தில் நேற்று ஒரு பைட் சீன், லாஸ்ட் மினிட் பிளான் செஞ்சு, இதில் வில்லன் கால்ஷீட் முடியுதுன்னு முறையா அனுமதி வாங்காம ஷூட் செஞ்சு இருக்கான்.. ஆல்ரெடி ஒருவாரமா நம்ம ஆள் அவனை வாட்ச் செஞ்சுட்டு இருந்ததில் இந்த நியூஸ் எனக்கு வந்தது..” என்றவனை உற்சாகத்தோடு இடையிட்டு இருந்த துஷ்யந்த், “இது போதுமே உனக்கு..” என்றான்.
 
 
அதில் பொங்கி வந்த புன்னகையை மறைக்க முயன்றவன், “அங்கிருந்த பைட் அசிஸ்டெண்ட்டை கரெக்ட் செஞ்சுட்டேன்..” எனவும், “ஓஹோ, வாவ் இன்ட்ரஸ்டிங்.. மேலே சொல்லு..” என்றான் துஷ்யந்த்.
 
 
“ஒரு பாம் பிளாஸ்ட் சீன், திடீர்னு ஷூட்டுக்கு ஏற்பாடு செஞ்சதால் முறையா எதுவுமே செய்யலை.. அதில் ப்ளாஸ் மிஸ் பயர் ஆகி நாலு பேருக்கு சீரியஸ்னும் ஒருத்தன் உயிரே போச்சுன்னும் ஒரு சீன் நான் கிரியேட் செஞ்சேன்.. இதில் கொஞ்சம் எல்லாரும் பயந்துட்டாங்க..
 
 
நியாயமா பார்த்தா இது கொலை கேஸ்.. அவசரத்துக்கு அங்கே ஆம்புலன்ஸ் கூட இல்லை.. இதையெல்லாம் வெச்சு நம்ம ஆள் அங்கே செஞ்சே அமர்களத்தில் அவன் பதறிட்டான்.. அவனை அடுத்து என்னன்னு யோசிக்க கூட விடாம கார்னர் செஞ்சு பயம் காண்பித்து கொலை கேஸில் உள்ளே போக கூடாதுன்னா நான் சொல்றதை கேட்கணும்னு கொஞ்சம் நம்ம ஸ்டைலில் நான் சீனில் வராமலே படம் காட்டினேன்.. பையன் பம்மிட்டான்..” என்று அட்டகாசமாக சிரித்தான் விநாயக்.
 
 
“அதானே யாருகிட்டே..!” என்று உடன் சேர்ந்து சிரித்த துஷ்யந்த், “நிஜமாவே யாருக்கும் ஆபத்து இல்லையே..?” என்று அக்கறை குரலில் கேட்கவும், “நோ ஓர்ரிஸ் மேன்.. எல்லாம் மேக்கப் தான்.. அங்கே இருந்து ஆஸ்பிட்டல் போற வழியில் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சு இருந்த ஆளுங்க இதையெல்லாம் சிறப்பா செஞ்சு முடிச்சுட்டாங்க..” என்றான் விநாயக்.
 
 
“ஹப்பா..” என நிம்மதி பெருமூச்சை வெளியிட்ட துஷ்யந்த், “என் படத்திலேயே கையை வைக்க பார்த்துட்டான் இல்லை, இனி அவனுக்கு நான் யாருன்னு காட்டறேன்.. சரி என்ன தான் அவன் பிரச்சனையாம்..? எதுக்கு இப்படி செஞ்சான்..?” என கேட்டான் துஷ்யந்த்.
 
 
“அவனுக்கு நந்தினி வேணுமாம்..” என்று விநாயக் சொல்லி முடிக்கவும், “என்னது..?” என்று குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் தலைக்கு ஏற, இரும்பிக் கொண்டே கேட்டான் துஷ்யந்த்.
 
 
“ஹ்ம்ம், கல்யாணம் செஞ்சு கொடுங்கன்னு கேட்டு இருக்கான்.. இவங்க நோ சொல்லவும், அவங்களை லாக் செய்ய இப்படி ஒரு வழி..” என அவன் சொல்ல.. “அது சரி..” என்று ஒரு மாதிரி குரலில் இழுத்தான் துஷ்யந்த்.
 
 
“என்ன..?” என்றான் விநாயக். “இல்லை, இனி அவன் நிலையை நினைச்சா தான்..” என்று அடுக்க முடியாமல் துஷ்யந்த் சிரிக்க.. “ஏன் என்னவாம்..?” என்ற விநாயக்கின் குரலிலும் புன்னகை வழிந்தது.
 
 
“நம்மில் யாராவது ஒருத்தரை பகைச்சுட்டாளே அவன் நிலைமை பாவம்.. இவன் ஒருத்தருக்கு இரண்டு பேரா பகைச்சுட்டானே..! அதை நினைச்சா தான்..” என துஷ்யந்த் சொல்லி முடிக்க.. இருவரின் சிரிப்பும் விண்ணை பிளந்தது.
  
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 486
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
MNKN - 6
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 


   
ReplyQuote

You cannot copy content of this page