ஜானகி மந்திரம் 31 A
அடுத்த கணமே,
ஸ்ரேயாவின் அறைக் காட்சியிலிருந்து கேமரா 'ஸ்விஷ் கட்' (Swish Cut) ஆகி மீண்டும் வெளியே வர...
பின்னணியில் மியூட் ஆகியிருந்த இசைஞானியின் அந்த மெலடி, இம்முறை தாளக் கட்டுகளுடன் அதிரடியாக எகிறித் தொடங்கியது.
மாண்டேஜ் பாடலின் முதலாவது சரணம் கண்டாலாவின் மலைக் காற்றில் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்தது.
லொகேஷன்: காட்சியின் பின்னணி அப்படியே ஒரு கனவுலகமாக மாறுகிறது. கண்டாலாவின் பிரம்மாண்டமான, பச்சைப்பசேலென்ற ஒரு மலையடிவாரம். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ, தரை முழுக்க இயற்கையாய் பூத்துக் குலுங்கும் வெளிறிய ஆரஞ்சு நிறம் (pastel orange), அடர் திராட்சை நிறம் (Deep Wine), மின்சார நீலம் (Electric Blue), மயில் நீலப்பச்சை (Teal green) மற்றும் தாமிர வர்ணம் (Metallic Copper) என வகை வகையான காட்டுப் பூக்கள் ஒரு மாயாஜால பலவண்ணக் கம்பளம் விரித்தாற்போல் காற்றில் அசைந்தாடுகின்றன.
"இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
ஓஓ இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்..."
மைதிலி இப்போது இளமஞ்சள் நிற அனார்கலி உடையில், வெள்ளை மலர் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மின்ன, பூக்களின் நடுவே தேவதையாய் மலர்ந்திருந்தாள். மனோ, காபி பிரவுன் நிறக் கோட்டும் (Brown Blazer), அதற்கு பொருத்தமான வெளிர் நிறச் சட்டையும் அணிந்து செம ஸ்டைலாக மாறுகிறான்.
அந்தப் பூக்களுக்கு நடுவே இருவரும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். மைதிலி தன் இரு கைகளையும் சற்றே விரித்து, முகத்தில் வெட்கப் புன்னகையோடு இடமும் வலமுமாக தன் உடலை வளைத்து, பூக்கள் மீது மெதுவாக மிதப்பது போல் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து நளினமாக ஆடுகிறாள். மனோ அவளது அசைவுகளுக்கு கச்சிதமாக தன் கால்களை நகர்த்தி, அவளைத் தன் காதலால் ஆட்கொள்வது போல் பின் தொடர்கிறான்.
“ஒரு கோவில் மணியின் ராகம்... லலல லலல லலல..
பாடல் வரிகளின் 'லலல' பீட்ஸிற்கு ஏற்ப, கேமரா அவர்களைச் சுற்றி '360 டிகிரி' கோணத்தில் வேகமாக சுழல்கிறது. இப்போது மனோவும் மைதிலியும் ஒருவரையொருவர் பார்த்தபடி, தங்களின் வலது கையை மட்டும் மேலே உயர்த்தி, விரல்களால் காற்றில் ஒரு அழகான முத்திரையை பதிப்பது போல் மெதுவாக அசைக்கிறார்கள். அப்படியே தங்களின் இடது கையை இடுப்பில் வைத்தபடி, அந்தப் பூந்தோட்டத்தின் புல்வெளியில் வட்டமாக சுழன்று (Spins) ஆடுகிறார்கள். மைதிலியின் பறக்கும் கூந்தலும், அவளது மஞ்சள் நிற உடையின் விளிம்புகளும் அலைபாய, அவளின் வெள்ளை நிறத் துப்பட்டா, காற்றில் மிதக்கும் வெண் மேகத்தின் துண்டு போல அவளை சுற்றி ஒரு அழகான வட்டப் பாதையை உருவாக்குகிறது.
“ஒரு கோவில் மணியின் ராகம்...
ஒரு வானில் தவழும் மேகம்...
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே...”
இசை இன்னும் மென்மையாக கரைய, மனோ சட்டென்று தன் கைகளை மைதிலியின் தோள்களுக்கு அருகில் கொண்டு வருகிறான். ஆனால், அவளைத் தொடாமல் அவளது உடலின் அசைவுகளுக்கு இணையாக தன் பிளேஸர் கைகளை அசைக்கிறான். மைதிலி லேசாக சரிந்து தன் இரு கைகளையும் மார்போடு குவித்து வைத்துக்கொண்டு, மனோவுக்கு மிக அருகில் வந்து, பின் அப்படியே பின்னோக்கி சில அடிகள் எடுத்து வைத்து நளினமாக விலகி ஓடுகிறாள். அவள் விலகும் போது, மனோ அவளது பாதச் சுவடுகளை பார்த்தபடி, காற்றில் மிதக்கும் அந்த வெண் மேகங்களை நோக்கித் தன் கைகளை உயர்த்தி, அவளைத் தன் முழு உலகமாக ஏற்கும் தோரணையில் அந்தப் புல்வெளியில் கம்பீரமாக நடந்து வந்து அவளோடு இணைகிறான். இருவரின் முகத்திலும் அந்தப் பூக்களின் பிரகாசமும், எல்லையற்ற காதலின் ஏக்கமும் அப்பட்டமாக தெரிகிறது!
அந்த வினாடியில்... கேமரா மைதிலியின் முகத்தில் closeup காட்டி நிற்கிறது.
திடீரென, 'டிங்...' என்ற மொபைலில் மெசேஜ் டோன் சத்தம்.
அந்தச் சத்தம் கேட்ட அடுத்த கணமே, கனவுலகத்தின் அந்தப் பலவண்ணப் பூக்களும் மலையடிவாரமும் அப்படியே மெதுவாகக் கலைந்து மறைகின்றன.
பின்னணியில் ஒலித்த 'நெற்றிக்கண்' பாடலின் முதல் சரணத்துக்கான மியூசிக் சட்டென்று முழுமையாக நின்றுபோக, அந்த மெசேஜ் டோனின் சத்தம் மைதிலியை அப்படியே நிஜ உலகத்திற்குள் இழுத்து வருகிறது.
அடுத்த சரணத்துக்கு போவதற்குள் ரெண்டு முக்கிய சம்பவங்களை பார்த்து விடலாம்.
சம்பவம் 1:
ஐந்தாவது செமஸ்டரின் இறுதியில், சன்ஷைன் யாரென்று பாபி தீவிரமாக தேடத் தொடங்கிய நேரத்தில், எதிர்பாராத விதமாக ஒரு பைக் விபத்து அவனுக்கு ஏற்பட்டது. இடது கால் எலும்பு முறிந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவன் மருத்துவமனையிலேயே முடங்கி கிடக்க நேர்ந்தது. காலேஜிற்கு வராமல் மெடிக்கல் லீவில் அவன் இருந்ததால், சன்ஷைன் கேர்ள் பற்றிய உண்மையை அவனால் மேற்கொண்டு துப்புத் துலக்க முடியாமல் போனது.
சம்பவம் 2 :
அதே காலகட்டத்தில், அவளது சொந்த ஊரான மஞ்சாரிலிருந்து அம்மா ஜான்சி போன் செய்திருந்தாள். சாகர் மாமாவின் மகன் சஞ்சீவ், போதைக்கு அடிமையாகி திருட்டு வழக்கில் ஜெயிலுக்குப் போயிருக்கும் அதிர்ச்சி தகவலை சொன்னாள்.
"அவன் லட்சணம் ஊருக்கே தெரிஞ்சுப் போச்சு மைதி. இனி அவனுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்கன்னு, உன்னை அவனுக்கு கட்டி வைக்க மாமாவும் அத்தையும் ரகசியமா பேசிட்டு இருக்காங்க. நீ அங்கேயே ஜாக்கிரதையா இரு" என்று ஜான்சி எச்சரித்தாள். அவளின் ஆஸ்துமா பிரச்சினை மோசமாகிக் கொண்டிருப்பதை, அன்று மைதிலிக்கு தெரியாமல் ஜான்சி மறைத்துவிட்டாள்.
மியூட் ஆகியிருந்த இசைஞானியின் மெலடி மீண்டும் தாளக் கட்டுகளுடன் இரண்டாவது சரணமாக ஒலிக்கத் தொடங்குகிறது.
"இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும்...
(ல ல ல லலல லலல...)
எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை...
இலை மூடும் வாழைப் பருவம்...”
அதே கண்டாலாவின் பச்சை பசேல் என்ற மலையடிவாரம். காற்றில் அசைந்தாடும் பல்வேறு வர்ணப் பூக்களுக்கு நடுவே கனவு மீண்டும் தொடர்ந்தது.
மைதிலி இப்போது புதுமையான மென்மையான பிஸ்தா கிரீன் (Soft Pistachio Green) நிறச் சுடிதாரில் தேவதையாய் நின்றிருந்தாள். அதன் குர்தி முழுவதும் நுட்பமான வெள்ளைச் சில்க் நூல் வேலைப்பாடுகள் மின்ன, அவளது தோளில் இருந்த மெல்லிய Soft Grey நிறப் பட்டு துப்பட்டா காற்றில் அலை அலையாய் மிதந்தது. மனோ, டார்க் ஆலிவ் கிரீன் நிற கார்கோ ஷர்ட், அதன் உள்ளே ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் டெனிம் பேண்ட் அணிந்து செம கூலாக நின்றிருந்தான்.
மைதிலி தன் பிஸ்தா கிரீன் சுடிதாரின் விளிம்புகள் அங்கிருந்த வண்ணப் பூக்களின் மீது பட்டு உராய்ந்து செல்ல, முகத்தில் வெட்கப் புன்னகையோடு இடமும் வலமுமாக தன் உடலை வளைத்து, பூக்கள் மீது மெதுவாக மிதப்பது போல் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து நளினமாக ஆடினாள். அவளது காற்றில் பறக்கும் துப்பட்டாவின் அசைவுகளுக்கு கச்சிதமாக தன் கால்களை நகர்த்தி, மனோ அவளைத் தன் காதலால் ஆட்கொள்வது போல் பின் தொடர்ந்தான்.
எங்கிருந்தோ நுழைந்த சஞ்சுவும் இந்துவும் கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்களை முறைத்து பார்த்தபடி, சத்தமாக கேட்டார்கள்:
"ஏய்... என்னடி பண்ணிட்டு இருக்க?!"
அந்த ஒற்றைக் குரலில், பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த 'நெற்றிக்கண்' பாடலின் இசை அப்படியே கட் ஆனது!
மனோவும் மைதிலியும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க...மலையடிவாரமும், பூக்களும், கனவு காட்சியும் அப்படியே காற்றில் கலைந்து சட்டென்று மறைந்து... காட்சி அப்படியே நிஜ உலகிற்கு தாவியது.
படுக்கையில் படுத்தபடி கனவு கண்டு கொண்டிருந்த மைதிலியின் அருகே சஞ்சுவும் இந்துவும் அதே பொசிஷனில் கை கட்டியபடி நின்றிருந்தனர்.
இரவு மணி 11
மைதிலி பதறிப் போய் எழும்பி உட்கார,
இந்து: "ஏய், என்னடி பண்ணிட்டு இருக்க? முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு. கனவு கண்டுகிட்டு இருக்கியா?"
இருவரும் அப்போதுதான் வாஷ்ரூமிற்குப் போய், முகத்தில் அப்ளை செய்திருந்த பேசியல் ஸ்க்ரப்பை கழுவிவிட்டு, கைகளில் டவலோடு அறைக்குள் நுழைந்திருந்தனர். அவர்களின் ஈர முகத்தில் இன்னும் அந்த பேசியல் க்ரீமின் நறுமணம் மெலிதாக எஞ்சியிருந்தது.
மைதிலியின் இதழ்களில் இன்னும் எஞ்சியிருந்த வெட்கப் புன்னகையை பார்த்த கணத்திலேயே, அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அந்த இரு தோழிகளும் நொடியில் புரிந்து கொண்டனர்.
சஞ்சு டவலால் முகத்தை துடைத்துக்கொண்டே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.
"எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி கனவு கண்டுக்கிட்டே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருப்பே சுட்கி? நேர்ல போய் அவன்கிட்ட விஷயத்தை சொன்னாதான் என்ன?"
மைதிலி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பிப்பதற்காக வாய் திறக்க... அதை சட்டென்று கவனித்த இந்து, தன் கையை நீட்டி அவளை பேசவிடாமல் தடுத்தாள்.
"வேண்டாம் தாயே! தூங்க போற நேரத்துல உன்னுடைய சொற்பொழிவை கேக்குறதுக்கு நாங்க ரெடியா இல்ல. நீ என்னென்ன சாக்குப்போக்கு காரணங்கள் சொன்னாலும்... நிஜம் என்ன தெரியுமா? அவன் இப்போ உன்னை முழு மனசா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். காலேஜ் முடியறதுக்கு வெறும் ஒன்றரை மாசம் தான் இருக்கு. இப்ப சொல்லாம நீ எப்ப சொல்லப் போற? ஏதாவது ஒரு காலகட்டத்துல சொல்லித்தானே ஆகணும்... இல்ல, கடைசி வரைக்கும் சொல்லாமலயே இப்படியே ஊருக்குப் போயிடப் போறியா?"
'காலேஜ் முடியப் போகுது...' — இந்து தற்செயலாக அந்தப் புள்ளியைத் தொட்டதும், மைதிலியின் உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.
காலேஜ் முடிய இன்னும் நாற்பத்தைந்து நாட்கள். கணிதம் மிகத் துல்லியமானது. நாட்கள் கரையும் வேகம் பயமுறுத்துகிறது. சட்டென்று அவளது கண்ணிமைகளின் ஓரத்தில் நீர் கோத்துக் கொண்டது. லென்ஸுக்குள் புகுந்த தூசி போல ஒரு மெல்லிய வலி. கண்கள் குளமாகி, அந்த நீர்திரைக்கு பின்னால் சஞ்சுவின் முகமும் இந்துவின் முகமும் மங்கலாக தெரிந்தன.
சஞ்சு அவளது கைகளை பற்றிக்கொண்டாள். "இந்து கேட்கிறது கரெக்ட்தானே சுட்கி.... எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லாம இப்படி இழுத்துட்டே போக முடியும்? ஒருவேளை... நீ அவன்கிட்ட விஷயத்தை சொல்லி, அவன் வேற மாதிரி ஏதாவது பதில் சொன்னா உன்னால தாங்க முடியாதுங்கிறது உண்மைதான், எங்களுக்கு புரியுது. அதுக்காக இப்படியே சொல்லாமலே இருக்கிறதுல என்ன நியாயம் இருக்கு?"
அவளுக்குள் ஒரு மௌன யுத்தம் நடந்து கொண்டிருந்தது. வார்த்தைகளால் நிரப்ப முடியாத ஒரு அந்தரவெளி அது. காதலின் வதையே இந்த bloody தவிப்புதான். Sunshine யாரென்ற உண்மை தெரிந்து, அவன் அவளைத் தவிர்த்து விட்டால், இதுவரை ரகசியமாய் ஆராதித்த இந்த ஒட்டுமொத்தக் கனவுலகமும் நொறுங்கி தவிடுபொடியாகிவிடுமே என்ற பயம் ஒருபுறம்; சொல்லாமல் பிரிந்தால், எஞ்சிய வாழ்நாள் முழுக்க இந்த குற்ற உணர்ச்சியே ஒரு தீராத ரணமாக தன்னை அரித்து தின்றுவிடுமே என்ற பதற்றம் மறுபுறம். அவளது இதயம் ஒரு ஊசலாட்டத்தின் உச்சியில் நின்றது. இரண்டு பக்கமும் பாதாளம் தெரிந்த ஒரு குறுகிய பாலத்தில் தத்தளிப்பவளை போலிருந்தது அவளது நிலை.
மைதிலி பதில் சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்த இந்து, சஞ்சுவின் பக்கம் திரும்பினாள்.
"எனக்கென்னவோ இவ கடைசி வரைக்கும் அவன்கிட்ட சொல்ல மாட்டான்னுதான் தோணுதுடி. என்ன ஆனாலும் சரி, பேசாம நாமளே மனோகிட்ட போய் உண்மையை சொல்லிட்டா என்ன?"
"சீச்சீ... நல்லாவே இருக்காதுடி!" சஞ்சு அதை உடனே மறுத்தாள்.
"நான் இதைப்பத்தி யோசிக்காம இல்ல. ஆனா, மனோகிட்ட போய் 'உன்னோட சன்ஷைன் காதலி இவதான்'னு நாம மூணாவது மனுஷங்களா சொல்றதை விட... மைதிலியே நேர்ல போய் 'நான் தான் உன்னோட சன்ஷைன்'னு சொல்லும்போது அவனுக்கு எப்படி இருக்கும்? சும்மா அதிரும்ல..." —
சொல்லும்போதே சஞ்சுவின் கைகளில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நின்றன. தன் உடலை ஒருமுறை சிலிர்த்துக் காட்டினாள்.
"அப்படியே பையனுக்கு Goosebumps ஆயிரும்!"
தொடர்ந்து சஞ்சுவின் கண்கள் பிரகாசமடைந்தன.
"அதைவிட இன்னொன்னு சொல்றேன் கேளு... ஒருவேளை, அவனா தேடி இவதான் அந்த 'சன்ஷைன்'னு கண்டுபிடிச்சு வந்து நின்னா எப்படி இருக்கும்?"
அந்த ஒரு நொடி... மூவருமே அமைதியாயினர். அந்த அற்புத தருணத்தை, மனோ மைதிலியை அடையாளம் காணும் அந்த காதல் காட்சியை தங்களின் கற்பனையில் ஓடவிட, மூவரின் உடலும் ஒருசேர சிலிர்த்துப் போனது! அறையின் மௌனத்தில் அவர்களின் மூச்சுக்காற்று மட்டும் சூடாய் ஏறி இறங்கியது.
இந்து தான் முதலில் அந்த சிலிர்ப்பிலிருந்து வெளியே வந்தாள்.
"அதான்... அவன் கண்டுபிடிக்கிற மாதிரியே தெரியலையே! அவன் ஏதோ ரொம்ப டீசண்டா, 'சன்ஷைன்' மனசு புண்படக் கூடாதுன்னு நேர்ல வரச் சொல்லி கட்டாயப்படுத்தாம இருக்கிறான். இப்படி ஒருத்தன் எங்கயாவது இருப்பானா? இதுக்கு மேல எனக்கெல்லாம் பொறுமை இல்லை சுட்கி. நாளைக்கு நீயே அவன்கிட்ட போய் நேர்ல பேசி, உண்மையை சொல்றே... உனக்கு பயமா இருக்கு, உன்னால முடியாதுன்னா சொல்லு, நானே நேர்ல போய் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுறேன். அவ்வளவுதான்!"
மைதிலி பயத்தோடும் தயக்கத்தோடும் தன் இரு தோழிகளையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவளது கண்கள் 'வேண்டாம்' என்று கெஞ்சின.
சஞ்சு அவளை சமாதானப்படுத்தும் குரலில், "நாம கற்பனை பண்ற மாதிரி எல்லாம் எதுவும் இங்க நடக்காது சுட்கி. இப்போதைக்கு வேற வழியே இல்லை, நீயே போய் சொல்லிரு... என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், கவலைப்படாதே. உனக்குத்தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோமே! அதனால கவலைப்படாதே. நாங்க சொல்றத இனிமே நீ கேளு. நாளைக்கு அவன் காலேஜுக்கு பைக்ல வருவானா, இல்ல கார்ல வருவானா?"
மைதிலி தன் கண்களை துடைத்துக்கொண்டு, லேசான நடுக்கத்துடன் சொன்னாள், "நாளைக்கு Wednesday... அதனால கார்லதான் வருவாரு."
இந்து: ஓஹோ!!! அவரு schedule அவரைவிட இவங்களுக்கு தான் கரெக்டா தெரியும் போலருக்கு... என்று கலாய்க்க, மைதிலி எதுவும் சொல்லவில்லை.
சஞ்சு: "சூப்பர்! கார்னா இன்னும் வசதி... பிரைவசி கிடைக்கும்!" என்று சஞ்சு குதிக்க, "ஓகே... நாளைக்கு எந்த இடத்துல வச்சு, எப்படி, எந்த வழியில அவன்கிட்ட சொல்லலாம்?" என்று மைதிலியின் சார்பாக சஞ்சுவும் இந்துவும் தீவிரமாக ஸ்கெட்ச் போட ஆரம்பித்து, ஆலோசனையில் இறங்கினர்.
'நாளைக்கு என்ன ஆகப்போகிறதோ...' என்ற டென்ஷனில், தன் காதலின் விதியை தீர்மானிக்கப் போகும் இரு தோழிகளையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருந்தாள் மைதிலி!
தொடரும்