All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 476
Topic starter  
 
ஹாய் டியர்ஸ்
 
இதோ அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துட்டேன்.. இப்போ நாம தொடங்க போகும் கதை இழை - 3.
 
 
இழை சீரிஸின் அடுத்த கதை.. நிமலன், மஹேந்திர வர்மனுக்கு அடுத்து விநாயக்..
 
மே 15ம் தேதி முதல் கதை வரும்..
 
இப்போ கதையை பற்றி பார்க்கலாமா..?
 
 
 
 
கதையின் பெயர் : மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
நாயகன் : விநாயக் சக்ரவர்த்தி
நாயகி : யது நந்தினி
 
இனி கதையை பற்றி ஒரு குட்டி டீஸர் பார்க்கலாமா..?
 
மௌனம் டீசர்
 
கண் முன் இருந்த கோப்பில் பார்வையை பதித்திருந்த விநாயக் கதவு லேசாக தட்டப்படும் சத்தத்தில் பார்வையை உயர்த்தி “எஸ்..” என்றான். அதே நேரம் கையில் ஒரு மெல்லிய கோப்போடு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த யது நந்தினியை கண்டவனின் முகம் இறுகியது.
 
 
அதுவரை இயல்பாக இருந்த முகத்தில் தன்னை கண்டதும் கடுமை பரவியதை அவளும் உணர்ந்தே இருந்தாள். நந்தினியை அங்கு கண்டதும் வெறுப்போடு அவளை பார்த்தவனின் பார்வை நந்தினியின் முகத்திலேயே கூர்மையாக பதிந்திருக்க.. தன்னை அவன் உட்காரக் கூட சொல்லாததை எல்லாம் கொஞ்சம் கண்டு கொள்ளாமல் “ஒருகம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்றாள் நந்தினி.
 
 
அவள் அந்த வார்த்தையை உச்சரித்ததும், விநாயக்கின் முகத்தில் எரிச்சல் பரவியது.
 
 
அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் “ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்..” என்று தன் முன் வந்து நின்றவளை ஆராய்ச்சியாக பார்த்த விநாயக் “என்ன கம்ப்ளைன்ட்..? யார் மேலே..?” என்றான்.
 
 
அதில் மெல்ல புன்னகைத்துக் கொண்டே, “விளக்கமா நானே சொல்லட்டுமா..? இல்லை எழுதி கொண்டு வந்ததை கொடுக்கட்டுமா..?” என நந்தினி கேட்கவும், வார்த்தைகளில் பதில் சொல்லாமல் அவள் எழுதிக் கொண்டு வந்ததை கேட்டு கையை நீட்டினான் விநாயக்.
 
 
அவன் நீட்டிய கையை ஒரு நொடி பார்த்தவளின் விழிகளில் குறும்பு கூத்தாட, சட்டென விநாயக்கின் கைகளை பிடித்து லேசாக குலுக்கியவள் “ஹலோ நான் யது நந்தினி, உங்க பேர் என்ன..?” என்றாள்.
 
 
அதில் அவளை முறைத்தவாறே வேகமாக தன் கையை நந்தினியிடம் இருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்து நின்றவன், “என்ன கம்பிளைன்ட்..?” என்று குரலில் இறுக்கத்தை கொண்டு வந்து கேட்டிருக்க.. தன் கையிலிருந்த புத்தகத்தின் இடையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள் நந்தினி.
 
 
அவள் தனியே வந்திருப்பது, கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தாலும் தன் வேலைக்கு மதிப்பளித்து அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தவன் அவளின் புகார் கடிதத்தை படித்து முடித்த நொடி ருத்ர மூர்த்தியாக மாறிப் போனான்.
 
 
வணக்கம் ஏசிபி சார்..
 
 
எனக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சுருக்கு, அவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. ஆனா அவர் என்னை கண்டுக்கவே மாட்டேன்றார், இது இந்த குட்டி இதயத்தில் எவ்வளவு வலியை கொடுக்குது தெரியுமா..? என் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ இப்படி ஒதுக்கி வைக்கறது சரியான்னு நீங்களே விசாரிச்சு சொல்லுங்க..
 
 
இப்படிக்கு உங்களையே நினைச்சு உங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கும்
உங்கள் யது நந்தினி
 
 
என எழுதி இருந்ததை படித்த நொடி அவனுள் அவ்வளவு ஆத்திரம் கனன்றது.
 
 
அந்த காகிதத்தை சுக்கல் நூறாக கிழித்து அவளின் முகத்திலேயே வீசியவன், “அறிவில்ல உனக்கு..? படிச்சவ தானே நீ..? எதில் விளையாடறதுன்னு இல்லையா.. இங்கே உன் விளையாட்டை பார்க்க தான் நாங்க உட்கார்ந்து இருக்கோமா..?” என்று காய்ந்து விட்டான் விநாயக்.
 
 
நிச்சயம் கோபப்படுவான் என்று தெரியும் தான். ஆனால் இவ்வளவு கடினமான வார்த்தைகளில் திட்டுவான் என எதிர்பார்க்காத நந்தினி, சிறுத்திகைப்போடு அப்படியே நின்ற விட, அவள் விழிகள் தானாக கலங்கியது.
 
 
இதுவரை அவளை இப்படி எல்லாம் யாரும் திட்டியதோ கடுமையாக பேசியதோ கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அவள் இவனிடமிருந்து மட்டுமே கோபத்தையும் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்கிறாள். ஆனாலும் இந்த மனதிற்கு அவனை தானே பிடித்து தொலைக்கிறதே..! என்ன செய்ய..?
 
 
வேறு எங்கும் சென்று அவனை தனியே சந்திக்கவோ பேசவோ இதுவரை விநாயக் சந்தர்ப்பமே கொடுக்காமல் போனதால் தான், அந்த வயதிற்கேயான விளையாட்டு தனத்தோடு இப்படி காவல் நிலையத்திற்கே அவனை சந்திக்க வந்திருந்தாள் யது நந்தினி.
 
 
இது சரியென அவளும் சொல்லவில்லை. ஆனால் இப்படியாவது தன் மனதிலிருப்பதை மீண்டும் அவனுக்கு தெளிவாக ஒருமுறை புரிய வைத்துவிட, நினைத்தே வந்திருந்தவளுக்கு அவனின் வார்த்தைகளும் அந்த குரலில் இருந்த வெறுப்பும் விழிகளை கலங்கச் செய்ய.. இதழ் கடித்து அழுகை வெடித்துக் கொண்டு வெளியில் வராமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அதெல்லாம் இன்று நினைவு வர, முகத்தில் மேலும் கடுமை ஏற, அவளை முறைப்போடுப் பார்த்தவன் “கெட் அவுட்..” என்றான் பல்லை கடித்தபடியே.
 
 
தன் கையில் இருந்த கோப்பை அவன் முன் வைத்து ஏதோ சொல்ல முயன்றுக் கொண்டிருந்த நந்தினி விநாயக்கின் இந்த அதட்டலில் திகைத்து அவனைப் பார்க்க.. “உன்னை வெளியே போன்னு சொன்னேன்..” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாத குரலில் விநாயக்.
 
 
இதில் செய்வதறியாது அப்படியே நந்தினி அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலை கூட அவனை கோபப்படுத்தியது. அதில் அவள் தன் முன் வைத்திருந்த கோப்பை எடுத்து கதவை நோக்கி வீசியிருந்தவன் “உன்னை வெளியே போக சொன்னேன், கெட் லாஸ்ட் டேமிட்..” என குரலை உயர்த்தி அவன் கர்ஜிக்க.. சட்டென உண்டான அவமான உணர்வோடு வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் நந்தினி.
 
 
அந்த அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றபடி அலைபேசியில் யாரோடோ பேசிக் கொண்டிருந்த ரகோத்தமன் தன் அருகில் வந்து நின்றவளின் மேல் பார்வையை பதித்த நொடி “நான் அப்புறம் கூப்பிடறேன்..” என அழைப்பை துண்டித்து விட்டு, “நந்து என்னடா..?” என அவளின் கலங்கிய விழிகளையும் பதட்டமான உடல் மொழியையும் கண்டு ஆறுதலாக அவளின் தோளைப் பற்றினார்.
 
 
‘ஒண்ணுமில்லை’ என்பது போல் வேகமாக தலையசைத்தவள், அதற்கு நேர்மாறாக இதழ் மடித்து தன் கண்ணீரை கட்டுப்படுத்த போராடுவது அவருக்கு புரிந்தது.
 
 
இதுவே உள்ளே என்ன நடந்திருக்கும் என ஓரளவு அவருக்கு புரிய வைக்க போதுமானதாக இருக்க.. வருத்தத்தோடு திரும்பி விநாயக்கின் அறை கதவை பார்த்தார் ரகோத்தமன். தன்னை கண்டால் கோபப்படுவான் என்று தான் நந்தினி அவரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
 
 
ஆனால் அவளைக் கூட இப்படி அவன் விரட்டி அடித்து இருப்பது வருத்தத்தை கொடுக்க.. நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவருக்கு அவன் மேல் கோபம் கூட வரவில்லை. வருத்தமே மேலோங்கியது.
 
 
************
 
 
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அபியோடு அமர்ந்திருந்தான் விநாயக். அது பின் மதிய நேரமென்பதால் பெரிதாக கூட்டமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆட்கள் இருக்க.. கழுத்தை நீவியவாறே பார்வையை சுழற்றியவன், நிதினோடு உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த நந்தினியை கண்டான்.
 
 
அவள் அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டே வந்ததில் விநாயக் இங்கே இருப்பதை கவனிக்கவில்லை. மாறாக இவனை பார்த்திருந்த நிதின், உரிமையாக நந்தினியின் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
 
 
இதை கண்டெல்லாம் அவனுக்கு கொஞ்சமும் கோபம் வரவில்லை. கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் தான் இருவரையும் பார்த்து வைத்தான் விநாயக்.
 
 
அதே நேரம் கேள்வியாக அவனை விழிகளை உயர்த்தி பார்த்தாலும் நிதினிடமிருந்து விலக முயலவில்லை நந்தினி. அப்படியே அவளை அழைத்து வந்து வேண்டுமென்றே விநாயக் முன்பிருந்த மேஜையில் நிதின் அமர, அப்போதே அழைப்பை துண்டித்து விட்டு திரும்பிய நந்தினி இதை கண்டு  திடுக்கிட்டாள்.
 
 
நிதின் அப்போது வரையும் தன் தோள் மேல் கைப் போட்டிருப்பதை கண்டு சங்கடமாக நெளிந்த நந்தினி லேசாக விழிகளை உயர்த்தி விநாயக்கை பார்த்தாள்.
 
 
அவனோ கொஞ்சமும் இவர்களை கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருக்க.. நிதினின் பக்கம் பார்த்த நந்தினி “உங்க பிரச்சனையில் என்னை கொண்டு வராதேன்னு நான் முன்னேயே சொல்லி இருக்கேன் நிது..” எனவும், “நானும் அவனுக்கு உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு முன்னேயே சொல்லி இருக்கேன் நந்து..” என்றான்.
 
 
‘நீ விட்டுக் கொடுத்தா மட்டும் அவர் அப்படியே என்னை ஏத்துப்பாரா..?’ என விரக்தியோடு நினைத்துக் கொண்டவள், சோர்வாக திரும்பி அவனை பார்த்து “ப்ளீஸ், என்னை எதிலும் கொண்டு வராதே நிது..” என்றாள்.
 
 
அவள் குரலில் இருந்த வருத்தமும் வலியும் புரிந்தாலும் வேண்டுமென்றே “உன்னை கொண்டு வராம எப்படி..? நீ எனக்கு தானே சொந்தம்..?” என்றவனின் வார்த்தைகள், விநாயக் அவளிடம் பேசியதை நினைவுப்படுத்தி விட, அவளுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது.
 
 
அதே நேரம் அவ்வளவு நேரமும் மெனு கார்டில் பார்வையால் வலம் வந்துக் கொண்டிருந்த அபி அப்போதே விழிகளை உயர்த்தியவள், நந்தினியை அங்கு கண்டு ஆர்வமாக விநாயக் பக்கம் திரும்பி பார்க்க.. அவனோ தன் அலைபேசியில் கவனமாக இருந்தான்.
 
 
‘அதானே..!’ என சலித்துக் கொண்ட அபி, “ஆண்ட்டி உனக்கு பொண்ணு பார்க்க சொல்லி இருக்காங்க வினய், நிமல், மஹி, துஷி எல்லாம் சொல்லிட்டேன்.. அவங்க வந்ததும் உனக்கு பெண் தேடும் படலத்தை தொடங்க போறோம்..” என்றாள் வேண்டுமென்றே ஓர பார்வையால் நந்தினியை பார்த்தப்படி அபி.
 
 
அவளின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் நந்தினியின் முகம் அப்பட்டமாக அதிர்வை காண்பிக்க.. “ஓஹோ.. ஆனா தர்ஷனை ஏன் விட்டுட்டீங்க..?” என்றான் இப்போது அது தான் முக்கியம் என்பது போல் விநாயக்.
 
 
“அவனா..? அவனை உனக்கு பொண்ணு பார்க்க சொன்னா அவனுக்கு விதவிதமா பார்த்துப்பான்.. வேண்டாம்பா..” என அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்து விட, அடக்க மாட்டாமல் சிரித்தான் விநாயக்.
 
 
அந்த புன்னகையை நந்தினி ஏக்கமாக பார்த்திருக்க.. அவளை கவனித்தவாறே விநாயக்கிடம் போட்டு வாங்க நினைத்து “சிரிக்கறதெல்லாம் இருக்கட்டும், பொண்ணு பார்த்துடலாமா..?” என்றாள் அபி.
 
 
அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “பொண்ணு தானே தாராளமா பாருங்க.. நானும் எவ்வளவு நாளைக்கு தான் பேச்சிலரா இருக்கறது..” என்றிருந்தான் விநாயக்.
 
 
இதில் விழிகள் கலங்கி நிற்க.. அவனை வெறுமையாக பார்த்தாள் நந்தினி.
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. மௌனமாய் நீ காதலாய் நான் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 

This topic was modified 2 weeks ago 3 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 476
Topic starter  
 
 
மௌனம் - 1
 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
 
என்று இனிமையாக உருகி ஒலித்துக்கொண்டிருந்த அபிராமியின் குரலைக் கேட்டபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தான் விநாயக் மஹாதேவ்.
 
 
எப்போதுமே அந்தக் குரலில் இருக்கும் அன்பும் அக்கறையும் இனிமையும் கொஞ்சமும் குறையாமல் இன்றும் அந்தப் பாடலில் இழைந்து கொண்டிருக்க.. ‘குறை ஒன்றும் இல்லையாமே..!’ என மனதிற்குள் எண்ணியவனின் இதழ்களில் ஒரு அலட்சிய புன்னகை தவழ்ந்தது.
 
 
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலில் இருந்த பொருளும், அதைப் பாடும் போது அபிராமியின் குரல் உணர்த்திய பாவமும் கொஞ்சமும் தனித்துத் தெரியவில்லை. நிஜமாகவே தன் வாழ்வில் எந்த ஒரு குறையும் பிரச்சனையும் இல்லை என உணர்ந்து அவர் பாடுவது போல் இருக்க.. ‘எப்படி இவங்களால் மனசறிஞ்சு இப்படி ஒரு பொய்யை உண்மை போல் குரலில் கொண்டு வர முடியுது..?’ என்று நினைத்தவனாக உணவு மேஜையை விநாயக் நெருங்கவும், அபிராமி எழுந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.
 
 
“குட் மார்னிங் வினய்..” என மகனைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்து புன்னகைக்க.. “மார்னிங் ம்மா..” என்றவாறுறே அவன் அமரவும், வேகமாக மகனுக்குப் பரிமாற வந்தார் அபிராமி.
 
 
தனக்கு மட்டும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த அபிராமியை கேள்வியாகப் பார்த்தவன் “நீங்க சாப்பிடலையா..?” எனவும் “நான் அப்புறம் சாப்பிடறேன், நீ சாப்பிடு..” என்றார் தயக்கத்தோடே அபிராமி.
 
 
‘ஏன்..?’ என்பது போல் விநாயக் சாப்பிடாமல் அப்படியே நிறுத்தி அவரின் முகத்தைப் பார்க்க.. அவரோ பதிலின்றிப் பார்வையை தழைத்துக் கொண்டார். இதில் யோசனையானவன் “ம்மா.. திரும்ப விரதம் அது இதுன்னு எதுவும்..” எனக் கண்டன குரலில் கேட்கவும், “இல்லை.. இல்லை.. இப்போ எல்லாம் நான் விரதமே இருக்கறது இல்லை வினய்..” என்றார் அவசரமாக அபிராமி.
 
 
‘அப்புறம் என்ன..?’ என்று அப்போதும் அவன் யோசனை கொஞ்சமும் மாறா விழிகளோடு அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.. “அது கோவில்.. கோவிலுக்குப் போகலாம்னு இருக்கேன், நான் வந்து சாப்பிட்டுக்கறேன்..” என்றார் அபிராமி.
 
 
“ம்ப்ச்..” என்ற சலிப்போடு எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இதென்ன என்ற எண்ணத்தோடு பார்வையைத் திருப்பியவனுக்கு அப்போதே தன் தட்டில் இருந்த பாதாம் அல்வா கண்ணில் பட்டது. அதில் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவனுக்குக் காரணம் புரிய.. சட்டெனச் சாப்பிடாமலே எழுந்து கொண்டான் விநாயக்.
 
 
அதைக் கண்டு பதட்டமான அபிராமி “வினய் சாப்பிட்டு போப்பா..” எனப் பின்னேயே செல்ல, “நீங்களே கொண்டாடிக்கோங்க..” என்று விட்டு வேகமாக வெளியே சென்று விட்டிருந்தான் விநாயக்.
 
 
அதில் மகன் சென்ற திசையைக் கவலையோடு பார்த்தவாறே நின்று விட்ட அபிராமியின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது. ‘அத்தனை எளிதாக மறந்து விடக்கூடிய நாளா இது..? அவனுக்காகக் கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டு இருந்தாலும் மொத்தமாக ஒதுக்கி விட முடியாதே..!’ என மனம் மருக.. சில நொடிகள் அப்படியே நின்றவர், பின் கோவிலுக்கு நேரமாவதை உணர்ந்து கிளம்பினார்.
காவல் துறை வாகனத்தில் சென்று கொண்டிருந்த விநாயக்கின் முகம் இறுகி இருந்தது. தன் கோபத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த அவன் போராடிக் கொண்டிருப்பது தன் கை விரல்களை அவன் அழுந்த மூடி இருந்த விதத்திலேயே தெரிந்தது.
 
 
‘எப்படி..? எப்படி எதுவுமே நடக்காதது போல் இந்த நாளை அவரால் கொண்டாட முடிகிறது..? இத்தனைக்குப் பிறகும் இது தேவையா..!’ என்றெல்லாம் மனம் கொந்தளித்துக் கொண்டிருக்க.. எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விநாயக்.
 
 
எப்போதும் காலையில் தன்னை பார்த்தவுடன் லேசாகப் புன்னகைத்து இரண்டொரு வார்த்தையாவது பேசும் விநாயக்கின் இந்த அமைதி யோசனையைத் தர, தன்னையும் அறியாமல் இரண்டு முறைக்கும் மேல் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார் ஓட்டுனர் முருகன்.
 
 
அந்த மனநிலையிலும் முருகனின் பார்வையைக் கண்டு கொண்டிருந்த விநாயக் திரும்பி ‘என்ன..?’ என்பது போல் பார்க்க.. ‘ஒண்ணுமில்லை’ என்ற தலையசைப்போடு அவர் திரும்பிக் கொண்டாலும் அந்தப் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தே இருந்த விநாயக், தன் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற முடிவோடு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துத் தன்னை இயல்பாக்கிக் கொள்ள முயன்றான்.
 
 
இது அவனின் பல வருட பழக்கமாக இருந்ததால் நொடியில் கைக் கொடுத்தது. தன்னை இயல்பாக்கி கொண்டு நிமிர்ந்து அமர்ந்து சாலையில் கவனத்தைப் பதித்தான் விநாயக். நொடி நேரத்தில் அவனுள் வந்திருந்த மாற்றத்தை கண்டு கொண்டிருந்த முருகனின் முகமும் சிறு புன்னகைக்கு மாறி இருந்தது.
திரும்பிப் பார்க்காமலேயே அதையும் கவனித்து இருந்த விநாயக், வழக்கமான தன் அதே கம்பீரத்தோடு காவல் நிலையத்திற்குள் நுழைந்தான்.
 
 
*******
 
 
வேகமாகத் தயாராகித் தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் யது நந்தினி.
 
 
வழக்கமான ஹேண்ட் பேக் வலது கையில் இருக்க.. இடது கையிலிருந்த மூன்று கோப்புகளைச் சரி பார்த்தபடியே படியில் இறங்கி வந்தவளை யோசனையாகப் பார்த்த சித்ரா “என்னடா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டே..?” என்றார்.
 
 
“கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்றபடியே சென்று பூஜை அறையின் முன் நின்றவள், அவசரமாக ஒரு வணக்கத்தைக் கடவுளுக்குப் போட்டு விட்டு திரும்ப.. “சீக்கிரம் கிளம்புவேன்னு நேத்தே சொல்லி இருக்கக் கூடாதா..? இன்னும் டிபன் கூட ஆகலை..” என வருத்தப்பட்டவராக “ஒரு நிமிஷம் இரு..” என அவர் உள்ளே செல்ல போக, “நோ ம்மா ப்ளீஸ் வேண்டாம், எனக்கு நேரமில்லை..” என்றாள் அவசரமாக யது நந்தினி.
 
 
“வேண்டாம்னா என்ன அர்த்தம்..? சாப்பிடாம போவியா நீ..!” என சித்ரா தன் மறுப்பைக் குரலில் கொண்டு வந்து கேட்கவும், அதற்கு நந்தினி பதிலளிப்பதற்குள் “அப்படி என்ன அவசர வேலை..?” என்றிருந்தார் இவ்வளவு நேரமும் அங்கு அமர்ந்து அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த வேதவல்லி தன் கணீர் குரலில்.
 
 
அதில் வாயில் பக்கம் செல்ல இருந்த நந்தினி வரவேற்பறையின் பெரிய சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்த தன் பாட்டியின் பக்கம் திரும்பி “ஒரு மீட்டிங் இருக்கு வேதாம்மா, சீக்கிரம் போகணும்..” என்றாள்.
 
 
“அப்படி என்ன மீட்டிங்..? நிது இதை பத்தி எதுவும் சொல்லலையே..!” என அவன் இன்னும் கிளம்பாமல் இருப்பதை எண்ணி, அவர் யோசனையாகப் பேத்தியின் முகம் பார்த்தார். அந்தச் சந்தேகப் பார்வையைக் கண்டுகொள்ளாதது போலான முகபாவனையோடு “இது நிது ப்ராஜெக்ட் இல்லை வேதாம்மா.. என்னோட ப்ராஜெக்ட், மூணு நாள் முன்னே நடந்திருக்க வேண்டிய மீட்டிங்.. அப்போ கேன்சல் ஆகிடுச்சு, திடீர்னு தான் இன்னைக்கு ஷெட்யூல் செஞ்சாங்க..” என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் இயல்பாகவே பதில் கூறினாள் நந்தினி.
 
 
அதற்கு யோசனையாகத் தலையசைத்த வேதவல்லி வேறு எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க.. இதற்கு மேல் அங்கு நிற்க நேரமில்லாமல் வேகமாக வெளியேறி தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள் நந்தினி.
 
 
அதுவரை தன் மகள் சாப்பிடாமல் கிளம்புவதை எண்ணி உண்டான கவலையோடு இருந்த சித்ராவுக்கு வேதவல்லியின் சந்தேகப் பார்வையும் கேள்வியும் எதற்கு எனப் புரிந்த நொடி முகம் லேசாக இருண்டது.
 
 
அதில் அவர் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள.. மெல்ல தன் அருகில் இருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார் வேதவல்லி. அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “மேடம்..” என்ற பணிவான டில்லிபாபுவின் குரல் கேட்க.. “இன்னைக்கு நந்தினிக்கு என்ன மீட்டிங்..?” இதை பத்தி நிதினிக்கு எதுவும் தெரியாதா..?” என்று சுற்றி எல்லாம் வளைக்காமல் நேரடியாகக் கேட்டு விட்டிருந்தார் வேதவல்லி.
 
 
“இல்லை மேடம், இது நந்தினி மேம் பார்க்கும் ப்ராஜெக்ட்.. நம்ம ஆர்கே புரொடக்ஷன் ப்ராஜெக்ட்.. மூணு நாள் முன்னே நடக்க வேண்டிய மீட்டிங் அப்போ ஹீரோ கொஞ்சம் பிசி, ஒரு ஷூட்டிங்கில் ஸ்ட்ரக் ஆகிட்டார்.. அதனால் அப்போ மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சு, நேத்து நைட்டு தான் இதை கன்பார்ம் செஞ்சாங்க..” என அவர் விளக்கம் அளிக்க, அனைத்தையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டவர் ‘சரி’ என்று அழைப்பை துண்டித்திருந்தார்.
 
 
டில்லிபாபு கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக இந்த நிறுவனத்தில் வேலையில் இருப்பவர். வேதவல்லியின் கணவர் ராதாகிருஷ்ணன் இருந்த போதிலிருந்தே அவருக்கு உதவியாளராக இருந்தவர், அதன் பின் ரகோத்தமன் பொறுப்பை ஏற்ற போதும், இப்போது அடுத்தத் தலைமுறையான நிதின் மற்றும் நந்தினியிடம் பொறுப்பு வந்த போதும் தொடர்ந்து தன் கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்.
 
 
வேலையில் மட்டுமல்ல விசுவாசத்திலும் டில்லிபாபுவை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பாத வேதவல்லி கூட டில்லிபாபுவை நம்புவார். அவர் வார்த்தைகளில் உண்மை இருக்கும், இந்தக் குடும்பத்திற்கும் இவர்களின் நிறுவனத்திற்கும் எது நல்லதோ அதை மட்டுமே செய்யக்கூடியவர் டில்லிபாபு.
 
 
அதனாலேயே அவர் பேசியதை கேட்ட வேதவல்லி வேறு எந்தக் கேள்விகளும் இல்லாமல் அழைப்பை துண்டித்து விட்டு தன் இருக்கையில் இருந்து மெல்ல எழுந்தார். எழுபத்து ஐந்து வயதாகும் வேதவல்லி இப்போதும் கொஞ்சமும் குறையா அதே கம்பீரத்தோடும் அதிகாரத்தோடும் தான் அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தார்.
 
 
இன்றும் அவர் வைத்தது தான் அங்கு எழுதப்படாத சட்டம். அவர் கட்டளையே சாசனம். இந்த வயதிற்கே உரிய தளர்ச்சி உடலில் தெரிந்தாலும் இன்றும் பனாரஸ் சேலை, தன் அந்தஸ்தை பிரதிபலிக்கும் நகை என்று தனக்கே உரிய அலங்காரத்தோடு தான் தினமும் தயார் ஆவார் வேதவல்லி.
 
 
இப்போது அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றவர், தன் அருகில் இருந்த ஒற்றைக் கணமான தங்க நிற முலாம் பூசப்பட்ட கைத்தடியை பிடித்தபடி மெல்ல நடந்தார். அந்தக் கைத்தடியை ஒவ்வொரு முறை அவர் எடுத்து வைத்து நடக்கும் போதும் உண்டாகும் ஓசைக்கே அவர் வரும் அரவம் உணர்ந்து அந்த வீடே அமைதியாகும்.
 
 
இப்போதும் அந்தக் கைத்தடியை அழுத்தமாக ஊன்றியவாறே தன் அறையை நோக்கி அவர் செல்ல.. தன் அன்னையின் அத்தனை பேச்சையும் சிறு வருத்தத்தோடு கேட்டபடியே சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார் சித்ரா.
 
 
‘தன் மகளின் மேலான அவரின் சந்தேகப்பார்வை என்று மாறுமோ..!’ என்ற கவலை சித்ராவினுள் எப்போதும் போல் இன்றும் மேலெழுந்து வந்து அழுத்தியது. நந்தினிக்குமே இது பெரும் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்று தான்.
 
 
ஆனால் அவரால் இதில் என்ன செய்து விட முடியும்..? எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று எதிர்பார்ப்போடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பலரை போல் தான் சித்ராவின் வாழ்க்கையும் இருந்தது.
 
 
இங்கு இவ்வளவு நடந்து கொண்டிருக்க.. நேராகத் தன் காரைக் கொண்டு சென்று அந்தப் பழமையான அந்த அம்மன் கோவிலின் முன் நிறுத்தினாள் நந்தினி. மெல்ல இறங்கி ஒரு அர்ச்சனை கூடையை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், அந்தக் காலை நேர பரபரப்பு கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக இருந்த கோவில் கருவறையின் முன் சென்று நிற்க.. அவளை நன்கு அறிந்திருந்த அர்ச்சகர் “வாம்மா, என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்..?” என்றபடியே புன்னகையோடு வந்து நின்றார்.
 
 
“கொஞ்சம் வேலை இருந்தது சாமி..” என்றவள் தன் கையில் இருந்த அர்ச்சனை கூடையை அவரிடம் கொடுக்க.. அதை வாங்கிக் கொண்டவர், நந்தினியின் முகம் பார்க்க.. அர்ச்சனை பொருட்களைத் தொட்டபடியே “விநாயக் மஹாதேவ், சிம்ம ராசி.. உத்திரம் நட்சத்திரம்..” என்று அவள் சொல்லி முடிக்கவும், அர்ச்சகர் உள்ளே செல்ல.. விழிமூடி கடவுளை மனதில் நிறுத்தி தன் வேண்டுதலை அவர் பாதத்தில் மனதார வைத்தாள் நந்தினி.
 
 
அடுத்தச் சில நிமிடங்களில் அர்ச்சகர் ஆரத்தி தட்டுடன் நந்தினியின் முன் வந்து நிற்க.. அதைப் பக்தியோடு தொட்டு விழிகளில் ஒற்றிக்கொண்டவளுக்கு விபூதி குங்குமம் பூ கொடுத்தவரின் தட்டில் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை போட்டாள் நந்தினி.
 
 
அதில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய, கையோடு கொண்டு வந்திருந்த அர்ச்சனை கூடையை அவளிடம் கொடுத்தார் அர்ச்சகர். அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டவள், மீண்டும் ஒருமுறை அங்கு வீற்றிருக்கும் அம்பிகையை மனதார ரசித்து விட்டு வெளியில் வந்தாள்.
 
 
பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வந்தவள் அங்கிருந்த பிரகார தூணின் அருகில் அமர்ந்தாள். எப்போதும் எதையோ நினைத்து அழுத்திக் கொண்டிருக்கும் மனம் இந்த நொடி நிர்மலமாக இருந்தது. அவள் இந்தக் கோவிலில் உணரும் ஒருவகை நிம்மதியை எங்கும் இதுவரை உணர்ந்ததில்லை.
 
 
இன்றும் அதே போல் இருக்க, இங்கேயே இப்படியே அமர்ந்து விட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றினாலும், இன்று அவளுக்கு இருக்கும் கடமைகள் வரிசை கட்டி அவள் மனக்கண்ணில் வந்து போக.. விழியை அழுந்து மூடி ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவள், பின் எழுந்து கொள்ள நினைத்துக் கண்களைத் திறக்க.. அதேநேரம் அபிராமி கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அவரைக் கண்டதும் அவளுள் சிறு எதிர்பார்ப்பு உண்டாகச் சட்டென அபிராமியின் பின் பார்வையால் தேடினாள் நந்தினி. நிச்சயம் விநாயக் வர வாய்ப்பில்லை எனப் புரிந்தாலும் மனம் தன் எதிர்பார்ப்பை நிறுத்துவதில்லையே..!
 
 
ஒவ்வொரு வருடமும் அபிராமி மட்டுமே இந்த நாளில் வருவார் எனத் தெரிந்திருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாகச் சென்னையில் இல்லாதவன் இப்போது இங்கு வந்து இருக்க.. ‘ஒருவேளை தன் அன்னையோடு அவனும் வர கூடுமோ..!’ என்ற எண்ணம் அவர் மட்டும் உள்ளே நுழைந்ததில் பொய்த்துப் போனது.
 
 
இப்படி ஒருத்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை எல்லாம் கொஞ்சமும் உணராமல் கருவறையில் தெரிந்த அம்பாளின் உருவத்தை மட்டுமே கண்களில் நிறைத்துக் கொண்டு நேராக அங்குச் சென்று நின்றவரை கவலையோடு பார்த்தவாறே எழுந்து கொண்டாள் நந்தினி.
 
 
மீட்டிங் செல்ல அவளுக்கு நேரமானது. இதற்கு மேல் தாமதித்தால் சரியான நேரத்தில் அங்குச் செல்ல முடியாது என்று புரிந்து மெல்ல அங்கிருந்து நடந்தாள் நந்தினி.
 
 
அர்ச்சகர் அபிராமியை கண்டதும் முகம் மலர்ந்து “அடடே வாங்கோ.. வாங்கோ அபிராமிம்மா..” எனவும் “எப்படி இருக்கீங்க சாமி..?” என்றார் மெல்லிய புன்னகையோடு அபிராமி.
 
 
“எனக்கு என்ன..? உங்களை போலப் பெரியவா புண்ணியத்தில் நன்னா இருக்கேன்.. நீங்க என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரவே இல்லை..” என்று அவர் விசாரிக்கவும், “கொஞ்சம் உடம்பு முடியலை சாமி, அதிகம் வெளியே போறது இல்லை..” என்றவர், அர்ச்சனை கூடையை அவரிடம் நீட்டி “விநாயக் மஹாதேவ்..” எனவும், தானாக அர்ச்சகர் “சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம்..” என்று முடிக்கச் சிறுத்திகைப்போடு அவரைப் பார்த்தார் அபிராமி.
 
 
“அபிராமிம்மா உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. போன வருஷம் கூட இதே பேரில் ஒரு பொண்ணு வந்து அர்ச்சனை செஞ்சதுன்னு சொன்னேனே..! அந்த பொண்ணு இன்னைக்கும் வந்தா, இப்போ தான் இங்கே உட்கார்ந்துட்டு இருந்தா.. இருங்கோ..” என நந்தினி அமர்ந்திருந்த பக்கம் அவர் விழிகளால் தேட, அந்த இடமோ யாருமில்லாமல் காட்சி அளித்தது.
 
 
‘வருடம் தவறாமல் தன் மகன் பெயரில் சரியாக வந்து அர்ச்சனை செய்து செல்வது யார்..?’ என்ற பரபரப்பு அவருள்ளும் எழ, விழிகளைச் சுழற்றினார் அபிராமி.
 
 
“அடடா, அந்தப் பொண்ணு பேர் எனக்குத் தெரியலை அபிராமிம்மா.. ஆனா அடிக்கடி இங்கே வர பொண்ணு தான், நிறைய முறை பார்த்து இருக்கேன்.. உங்களுக்குத் தெரிஞ்சவங்களா தான் இருப்பா..” என்றார் அர்ச்சகர்.
 
 
‘எனக்குத் தெரிந்தவனா யாரா இருக்க முடியும்..?’ என மனம் யோசனையில் மூழ்க.. நிச்சயம் அவன் நட்பு வட்டத்தில் இருக்கும் யாரும் இல்லை என்று மட்டும் மனம் உணர்த்தியது. இன்றைய நாளை கொண்டாடுவது அவனுக்கு பிடிக்காது என்று தெரிந்த பிறகும் அந்த ஐவரும் ஒருநாளும் அவன் விரும்பாத ஒன்றை செய்ய மாட்டார்கள்.
 
 
இவர்களைத் தவிர வேறு யாரையும் அவருக்கு அவ்வளவு நெருக்கமாகத் தெரியாது எனும் போது யார் என்று அவருக்குத் தெரியவில்லை.
 
 
அதில் முகம் கலங்க அவர் நின்றிருந்த நிலையைக் கண்ட அர்ச்சகர் “சரி விடுங்கோ, இப்போ என்ன உங்க பிள்ளையாண்டான் பேருக்கு அர்ச்சனை தானே செஞ்சுட்டு போயிருக்கா.. ஒரே நேரத்தில் இரண்டு பிரார்த்தனை உங்க பிள்ளை பேரில் நடந்தா எல்லாம் நல்லதுக்கு தான்..” என்று அவர் சொல்லிக் கொண்டே கருவறைக்குள் செல்ல.. அது அப்படியே பலிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு கைகூப்பி அம்பாளை பார்த்தபடியே நின்றார் அபிராமி.
 
 
இங்குத் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நந்தினியின் மனமெங்கும் அவன் ஒருவனே நிறைந்திருக்க.. ‘இன்று அவனை ஒருமுறை கண்டுவிட மாட்டோமா..!’ என மனம் வெகுவாக ஏங்கியது.
 
 
இது எப்போதுமே அவளுள் இருக்கும் ஏக்கம் தான் என்றாலும் இன்று அவனின் பிறந்தநாள். உரிமையாக அருகில் நெருங்கி சென்று வாழ்த்து தான் சொல்ல முடியாது, தூரத்தில் நின்றாவது ஒருமுறை பார்த்து விட மனம் தவித்தது.
 
 
கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஊரிலேயே இல்லை. ஆனாலும் சென்ற வருடம் மனம் அவனைப் பார்த்தேயாக வேண்டும் எனச் சண்டித்தனம் செய்ததில், சட்டென மதியத்திற்கு மேல் முடிவெடுத்து மும்பைக்கு விமானம் ஏறி விட்டிருந்தாள் நந்தினி.
 
 
இதுவே இருவருக்குள்ளும் எல்லாம் இயல்பாக இருந்திருந்தால், விநாயக் எதிர்பாரா நேரத்தில் அவன் முன் சென்று நின்று “சர்ப்ரைஸ்” என்று சந்தோஷமாகச் சொல்லி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கலாம்.
 
 
ஆனால் அப்படி ஒரு வரம் தான் அவளுக்கு கிடைக்கவில்லையே..! மனமெங்கும் அவன் மேலான நேசம் நிறைந்திருக்க.. ‘இப்படி தள்ளி நின்று தவித்துக் கொண்டிருக்காமல் உரிமையாக அவனருகில் நிற்கும் நாள் தன் வாழ்வில் வருமா..?’ என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
 
 
‘வாழ்க்கை முழுக்க இப்படியே போய் விடுமோ..!’ என்ற பயமும் சமீபமாக அவளுள் எழாமல் இல்லை. இப்போதே வீட்டில் அவ்வப்போது திருமணப் பேச்சுக்கள் எழும் போதெல்லாம், மனம் பயத்தில் மத்தளம் கொட்ட தொடங்கும்.
 
 
‘எப்படி இதைத் தடுத்து நிறுத்துவது..? என்ன சொல்லி மறுப்பது..?’ என்றெல்லாம் அவள் ஆயிரம் யோசித்து வைத்திருந்தாலும், அதெல்லாம் வேதவல்லியின் முன் வேலைக்கு ஆகாது என்று அவளுக்குமே நன்றாகத் தெரியும்.
 
 
இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் எனச் சொல்லியே இன்னும் எவ்வளவு காலம் அவளால் தள்ளிப் போட முடியும்..? என்றாவது ஒருநாள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமே..!
 
 
‘எனக்கு ஒருத்தரை பிடிச்சுருக்கு, நான் கல்யாணம்னு செஞ்சுக்கிட்டா அவரைத்தான் செஞ்சுப்பேன்..’ என உறுதியாகக் கூட அவளால் யாரிடமும் அடித்துப் பேச முடியாத சூழ்நிலை. ‘விநாயக் என்ன மனநிலையில் இருக்கிறான்..? இது சாத்தியப்படுமா..!’ என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
 
 
அப்படி இருக்க அவன் பெயரையும் கொண்டு வராமல், திருமணப் பேச்சும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நிற்கிறாள் நந்தினி.
 
 
இதையெல்லாம் யோசித்தபடியே அன்று மும்பையில் சென்று இறங்கி இருந்தவள், அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று விட்டாலும், தள்ளி நின்றே அவனை மனதார ரசித்துத் தன் மனப் பெட்டகத்தில் பூட்டிக்கொண்டு கிளம்பி வந்திருந்தாள்.
 
 
அன்று தூரத்தில் இருந்த போது கூட பார்க்க முடிந்த தன்னால் இன்று கூப்பிடும் தூரத்தில் இருந்தும் அவனை பார்க்க முடியாததை நினைத்து மனம் பாரமாக.. சிக்னலில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தவளின் பார்வை ஏதேச்சையாக எதிர்ப்பக்கம் பதிய.. அங்குத் தன் காவல்துறை வாகனத்தில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்று அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
அவனைக் கண்டதும் அவளுள் அத்தனை உற்சாகம். அவ்வளவு நேரம் அழுத்திக் கொண்டிருந்த மனபாரம், துன்பம், வலி, வேதனை என எல்லாம் ஒரே நொடியில் கரைந்து காணாமல் போனது போல் மனமும் உடலும் லேசாகி விட்டிருந்தது.
 
 
விழிகள் கூடக் கலங்கத் தொடங்கி விட்டிருக்க.. தன் கண் முன் இருப்பவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து விட்டிருந்தாள் நந்தினி.
 
 
எப்போதும் போல் அதே கம்பீரம், கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே திமிரான உடல் மொழி, வாகனத்தில் சாய்ந்து நின்று ஒற்றைக் காலை அவன் ஸ்டைலாக மடித்து வைத்திருந்த விதம் கூட அத்தனை அழகாக இருந்தது.
 
 
‘இமைத்தால் கூட அவன் அங்கிருந்து சென்று விடுவானோ..!’ என்பது போல் இமைக்காமல் அவனையே நந்தினி பார்த்துக் கொண்டிருக்க… தொடர்ந்து யாரோ தன்னைப் பார்ப்பது போலான உறுத்தலில் விழிகளைத் திருப்பினான் விநாயக்.
 
 
எதிர்புறம் காரில் அமர்ந்தபடி நந்தினி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நொடி அவன் முகம் இறுகியது. ‘எங்கே போனாலும் இவ தொல்லை தாங்க முடியலை.. என்னை நிம்மதியாவே இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டுச் சுத்துவா போல..!’ என்று நினைத்தவன் முறைப்போடு அவளைப் பார்க்க.. அந்த விழிகளில் தெரிந்த உக்கிரத்திலேயே தன் மோனநிலை கலைய லேசாக விழிகளைத் தழைத்துக் கொண்டாள் நந்தினி.
 
 
அப்போதே சிக்னலும் மாறி இருக்க.. பின்னால் இருந்து தொடர்ந்து ஹாரன் ஒலிக்கத் தொடங்கியது. அதில் அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலையை உணர்ந்து மெல்ல கலக்கமும் தவிப்புமாக மீண்டும் நந்தினி தன் பார்வையை விநாயக் பக்கம் திருப்பவும், வெறுப்போடு அவளைப் பார்த்துவிட்டு சட்டென்று தன் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் விநாயக்.
 
 
அவனின் இந்த உதாசீனம் தான் ஒவ்வொரு முறையும் அவளை அதிகம் பாதிக்கும். இப்போதும் அப்படியே ஒரு அடிப்பட்ட பார்வை அவனைப் பார்த்தவள், கலங்கிய விழிகளோடு காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 
 

This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 476
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
MNKN - 1
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 6 days ago by Kavi Chandra
This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 476
Topic starter  
 
 
மௌனம் - 2
 
 
ஆர் கே ப்ரொடக்ஷன் அலுவலகத்திற்குள் கார் சென்று நின்றதும், வழக்கம் போல் தன் உணர்வுகளை மறைக்கும் முகமூடியான மெல்லிய புன்னகையை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கினாள் யது நந்தினி.
 
 
வெள்ளை நிற அனார்க்கலி சுடிதார் அணிந்து ஆரஞ்சு நிற டிசைனர் துப்பட்டாவை ஒரு பக்கம் மட்டும் தவழவிட்டபடி இடைவரை நீண்டிருந்த தன் கூந்தலை எதற்குள்ளும் கட்டுப்படுத்த முயலாமல் அப்படியே விரித்து விட்டிருந்தவள், தன் கைப்பை மற்றும் பொருட்களோடு காரில் இருந்து இறங்கி உள்ள நுழைய, அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் அவள் மேல் படிந்து விலகியது.
 
 
யது நந்தினி பணம், படிப்பு, அழகு, அந்தஸ்து, ஆளுமை என எதிலும் குறை சொல்ல முடியா பேரழகி. அவளை கடந்து செல்லும் யாரும் ஒருமுறையாவது நந்தினியை திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது. ஆனால் அவளோ ஒருவனின் பார்வை தன் மேல் படவே தவம் இருக்கிறாள்.
 
 
அவனோ இவளை கண்டாளே வேப்பங்காயாக கசந்து நெருப்பாக காய்ந்து கொண்டிருக்கிறான். இன்று ஒருமுறை அவனை பார்த்து விட மாட்டோமா என அவனை காணும் வரை ஆர்பரித்து கொண்டிருந்த மனம், அவனை கண்டதில் நெகிழ்ந்து விழி வழியே அவன் உருவத்தை மனதிற்குள் ஆழப் பதித்துக் கொள்ள முயன்று, அவனின் உதாசீனத்தில் துவண்டு போய் இருந்தது.
 
 
ஆனால் வழக்கம் போல் அலுவலகத்தில் நுழைந்தவுடன் மற்றதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அதே கம்பீரத்தோடு எதிரில் வருபவர்களின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றபடியே உள்ளே நுழைந்தாள் நந்தினி.
 
 
அவளை வேகமாக வந்து எதிர்கொண்ட டில்லிபாபு “இன்னும் அரை மணி நேரத்தில் நவீன் குமார் வரேன்னு சொல்லி இருக்கார்..” எனவும் “நம்ம சைட் எல்லாம் தயாரா தானே இருக்கு..?” என்றபடியே தன் அறைக்குள் நுழைந்தவளை பின்தொடர்ந்தவர் “எஸ் மேம்..” என்றார்.
 
 
“ஓகே அங்கிள் நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்..” என்றவள் தன் இருக்கையில் அமரவும், ஒரு நொடி அவளை தயக்கத்தோடு பார்த்தவர் “மேடம் கால் செஞ்சு இருந்தாங்க..” என இழுக்க.. இதை ஓரளவு எதிர்பார்த்தே இருந்த நந்தினி ‘சரி’ என்பதாக மட்டும் தலையசைத்தாள். அதற்கு மேல் அவரும் எதுவும் சொல்லவில்லை இவளும் எதுவும் கேட்கவில்லை.
 
 
திடீரென இந்த சந்திப்பு ஏற்பாடாகி இருந்ததால் அதற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து முன் எடுத்து வைத்தவள், இன்று மதியம் நடக்க இருந்த மற்றொரு பேச்சு வார்த்தை பற்றிய குறிப்பும் எடுத்து கொண்டு அதன் வேலைகளையும் மற்றொரு பக்கம் கவனிக்க தொடங்க.. அவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. வழக்கம் போல் வேலைகள் அவளை உள்ளிழுத்துக் கொண்டது.
 
 
இவர்களுடையது சினிமா தயாரிப்பு நிறுவனம். ஆர்கே புரோடக்ஷன் இப்போது நான்காவது தலைமுறையாக நந்தினியின் கரங்களில் வந்து சேர்ந்துள்ளது. இன்னும் முழுமையாக இது அவளுக்கு சொந்தம் என்று சொல்லி விட முடியாது தான். ஆனால் அது அவர்களின் குடும்பத் தொழில் என்பதால் அப்படி தான் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
இதில் வேதவல்லிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அவள் படிப்பு முடிந்து இங்கு வேலைக்கு வந்ததெல்லாம் சரி. ஆனால் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் அவளிடம் கொடுக்க அவர் தயாராகவே இல்லை. இங்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருந்தாலும் இறுதி ஒப்புதலுக்காக அவள் ரகோத்தமனிடமோ இல்லை தன்னிடமோ வர வேண்டும் என்றே நினைத்தார் வேதவல்லி.
 
 
அதற்கு அவருள் பல காரணங்கள் இருந்தது. அதெல்லாம் நியாயமானதாகவே இருந்தாலும் நந்தினியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு மட்டுமல்ல வீட்டினர் யாருக்குமே இதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.
 
 
‘நிதினின் வசம் ஒரு நிறுவனத்தை ஒப்படைத்த போது இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் அவனுக்கு விதிக்கப்படவில்லை. பின் இவளுக்கு மட்டும் ஏன்..?’ என்று தான் அனைவருக்குமே தோன்றியது.
 
 
அதற்காக நந்தினியை வேதவல்லிக்கு பிடிக்காது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தன் ஒரே மகளின் ஒரே மகள். அந்த வகையில் நந்தினி அவருக்குமே செல்ல பேத்தி தான். ஆனால் தொழில் என்று வரும் போது அவரின் அனுபவம் இதற்கு முன் சந்தித்த சில விஷயங்கள் என்று எல்லாம் சேர்ந்து அவரை தன் பிடியில் உறுதியாக நிற்க வைத்தது.
 
 
குடும்பத்தினர் மேல் எவ்வளவு பாசம் இருந்தாலும் வேதவல்லிக்கு அவர் வார்த்தை மட்டுமே இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதை எந்த எல்லைக்கும் சென்று செயல்படுத்தி கொள்ளும் திறமையும் மறுப்பவர்களை அதற்கு தகுந்த வகையில் கையாளும் குணமும் எப்போதுமே உண்டு. இன்று வரை அவரின் அதிகாரத்தின் கீழ் தான் அந்த குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது.
 
 
அதேபோல் இந்த முடிவிலும் உறுதியாக இருந்தவர் பின் ரகோத்தமன் தலையிட்டு, வேதவல்லியின் தலையீட்டை விட, நந்தினி தன்னிடம் இறுதி ஒப்புதலை பெற்றுக் கொள்ளலாம் என முடித்து வைத்த பிறகே அவளிடம் இந்த நிறுவனத்தை ஒப்படைத்து இருந்தார்.
 
 
ஆனாலும் ‘அவள் சரியாக செய்கிறாளா..! எங்காவது சரிக்கி விடுவாளோ..!’ என அவளை கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார் வேதவல்லி.
 
 
இது ஆரம்பத்தில் நந்தினிக்கு பெரும் மன சஞ்சலத்தை கொடுத்திருந்தது. தன்னை எப்போதும் யாரோ ஒருவர் பார்வையால் பின் தொடர்ந்து கொண்டே இருப்பது, இயல்பாக எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலையை கொடுக்க.. அதைப் பற்றி தன் அன்னையிடமும் தாய் மாமாவிடமும் எவ்வளவோ சொல்லி புலம்பி தீர்த்து, பின் வேறு வழி இல்லாமல் இந்த நான்கு வருடங்களில் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள பழகி விட்டிருந்தாள் நந்தினி.
 
 
இத்தனைக்கும் நந்தினி பொறுப்பேற்றதிலிருந்து நல்ல லாபகரமாக தான் தொழில் சென்று கொண்டிருக்கிறது. அதில் எல்லாம் எந்த குறையும் சொல்லி விட முடியாது. சின்ன பெண் தானே இவளுக்கு என்ன தெரியும் என இந்தத் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட பலர் அவளிடம் விளையாடி பார்க்க நினைத்து மண்ணைக் கவ்விக் கொண்டு சென்றதெல்லாம் நடந்து இருக்கிறது.
 
 
இதையெல்லாம் அறிய நேரும் போது வேதவல்லிக்கு பெருமையில் முகம் பூரிக்கத்தான் செய்யும். ஆனாலும் ஏதாவது ஒரு சின்ன சறுக்கலோ எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலையிலோ அவள் சிக்கிக் கொள்ளும் போது மனம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும்.
 
 
“இதுக்காக தான் சொன்னேன், இவளுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.. கம்பெனியில் எவ்வளவு வேலை இருக்கு, அதில் எதையாவது ஒண்ணை கொடுக்கலாம் இல்லை.. இப்படி முழு பொறுப்பையும் தூக்கிக் கொடுக்கணுமா..?” என்று ஒரு வாரத்திற்கு அவளை வார்த்தைகளாலேயே வதைக்கும் அளவுக்கு பேசிக்கொண்டே இருப்பார் வேதவல்லி.
 
 
வீட்டினர் யாராலும் அவரை அவ்வளவு எளிதில் அமைதிப்படுத்தி விடவே முடியாது. தன் கடுமையும், கட்டுப்பாட்டையும் மீறிய சின்ன இலக்கம் அவருக்கு யார் மேலாவது உண்டென்றால் அது நிதினிடம் மட்டும் தான். அவன் மட்டுமே மற்றவர்களை விட, வேதவல்லியிடம் கொஞ்சம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்வான்.
 
 
தன் ஒரே பேரன், இந்த குடும்பத்தின் இன்றைய தலைமுறையின் ஒரே ஆண் வாரிசு என அவனுக்கு மட்டும் எப்போதுமே தனி சலுகை அவரிடம் உண்டு.
 
 
இது போலான நேரங்களில் எல்லாம் அவன் தான் வேதவல்லியை தனியே அழைத்து சென்று அமர்ந்து பேசி புரிய வைத்து மனதை மாற்றுவான். அதன் பின்பே அமைதியாவார் வேதவல்லி.
 
 
ஆரம்பத்தில் இதெல்லாம் பிடிக்காமல் இனி அந்த நிறுவனத்திற்கு வரவே மாட்டேன் நான் வெளியில் வேலை தேடிக் கொள்கிறேன் என்றெல்லாம் கூட பிரச்சனை செய்திருக்கிறாள் நந்தினி.
 
 
ஆனால் அதற்கும் வேதவல்லி அனுமதிக்கவில்லை. “என்ன வெளியே வேலைக்கு போறியா..? நாம யாருன்னு ஞாபகம் இருக்கா..! ஆர்கே புரொடக்ஷன் எவ்வளவு பெரிய கம்பெனின்னு தெரியுமா..? எத்தனை குடும்பத்தை வாழ வைச்சு இருக்கோம்..? நம்மால் எத்தனை பேர் வளர்ந்து இருக்காங்கன்னு மறந்து போச்சா..! இந்த வீட்டு பொண்ணு வெளியே வேலைக்கு போனா நம்ம கௌரவம் என்ன ஆகறது..?” என்று அதற்கும் முட்டுக்கட்டை போட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து தடுமாறி நின்றிருக்கிறாள் நந்தினி.
 
 
அப்போதும் பாட்டியிடம் பேசியது போலவே அவளிடமும் நிதின் தான் பேசி அந்த சூழ்நிலையை சமாளித்து இருந்தான்.
 
 
ஆர்கே ப்ரொடக்ஷன்ஸ் வேதவல்லியின் மாமனார் தொடங்கியது. தன் ஒரே மகன் ராதாகிருஷ்ணன் பெயரில் அவர் தொடங்கிய நிறுவனம் அது. அன்றைய காலகட்டத்தில் பல நடிகர்களை அறிமுகப்படுத்தி வளர்த்து விட்ட நிறுவனம்.
 
 
இன்றும் ஆர்கே புரோடக்ஷன் என்ற பெயருக்கு திரைத்துறையில் தனி ஒரு மதிப்பு இருந்தது. அடுத்து ராதாகிருஷ்ணன் பொறுப்பு எடுத்துக்கொண்ட போது அவர் ஆசைப்பட்டு தொடங்கியது ஆர்ஆர் ஸ்டூடியோஸ்.
 
 
தன் தந்தையின் பெயரையும் நிறுவனத்தையும் கொஞ்சமும் அதன் பெயருக்கோ புகழுக்கோ எந்த களங்கமும் வராமல் பார்த்துக் கொண்ட அதே நேரம், தன் புது முயற்சிகளையும் இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கொண்டிருந்தார்.
 
 
ஒரு சிலருக்கு தொட்டது எல்லாம் தொளங்கும் என்பார்களே..! அதுபோலத்தான் இவர்கள் குடும்பத்திற்கு இந்த துறை. கை வைத்ததெல்லாம் பொன்னாக மாறியது. இரு நிறுவனங்களும் ஆலமரம் போல் தழைத்து வளர்ந்து நின்றது.
 
 
ராதாகிருஷ்ணன் வேதவல்லி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் ரகோத்தமன், ராஜேந்திரன், சித்ரா. பிள்ளைகள் வளர தொடங்கியதுமே இரு நிறுவனங்களின் பொறுப்பையும் இரு பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்து விட்டிருந்தவர், மகளுக்கும் இதே துறையை சார்ந்த விவி பிக்சர்ஸ் குடும்பத்தின் மூத்த மகனான ஆனந்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்.
 
 
எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஆனந்தனின் சில தவறான முடிவுகள், அகல கால் வைத்தது எனத் தொடங்கிய சறுக்கல்கள் பின் எப்படியாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்மண் தெரியாமல் அவர் எடுத்த முடிவும் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து மீண்டும் இழந்ததை மீட்டு விடலாம் என்று அவர் வெளியில் வாங்கியிருந்த பெரும் பணமும் சேர்ந்து மொத்தமாக அவரை மூழ்கடித்து ஒன்றும் இல்லாமல் செய்து விட்டிருந்தது.
 
 
இதெல்லாம் நடந்த போது ராதாகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்த காரணத்தினால் அவருக்கு ஆரம்பத்திலேயே எதுவும் தெரிய வராமல் போயிருந்தது. அதோடு ஆனந்தனும் மற்றவர்களுக்கு இது தெரிய வந்தால் தனக்கு அசிங்கம் என்று எண்ணி அனைத்தையும் மூடி மறைத்து செய்ய.. இறுதியாக அது வெளிப்பட்ட போது சூழ்நிலை சமாளிக்க முடியாத நிலையில் தான் இருந்தது.
 
 
அதோடு குடும்ப சொத்தையும் அனைவருக்கும் பொதுவான நிறுவனத்தையும் ஆனந்தன் இப்படி தன் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொண்டதில் உண்டான கோபத்தோடு அவரின் உடன்பிறப்புகள் பிரச்சனை செய்ய.. அவர்கள் பக்கம் இருந்தும் உதவி கிடைக்காமல் கடன் தொல்லையும் தலைக்கு மேல் இருக்க தவித்து நின்றவருக்கு அதே கவலையில் அன்று இரவே மாரடைப்பு வந்து மரணமும் நேர்ந்திருந்தது.
 
 
இதற்குப் பிறகே விஷயம் சித்ராவின் வீட்டினருக்கு தெரிய வந்து ராதாகிருஷ்ணன் தலையிட்டு தன் மகள் பெயரில் புகுந்த வீட்டினர் சுமத்தி விட்டு ஒதுங்கி இருந்த கடனை எல்லாம் அடைத்து மகளையும் பேத்தியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டிருந்தார்.
 
 
இதெல்லாம் நந்தினியின் பத்து வயதில் நடந்திருக்க.. அதன் பின்னான அவளின் வாழ்க்கை மொத்தமும் இதோ இந்த வீட்டில் தான். நடந்து முடிந்த விஷயங்களில் இவள் தவறோ தன் மகளின் தவறோ எதுவும் இல்லை என்று தெரிந்திருந்தாலும், அவ்வப்போது தொழில் பற்றிய பேச்சு வார்த்தைகளிலோ ஆலோசனைகளிலோ நந்தினி எதையாவது சொல்லும் படி நேர்ந்தால் சட்டென வேதவல்லி சுருக்கென எதையாவது பேசி விடுவார்.
 
 
அவருக்கு தன் மகள் வழி பேத்தி நந்தினி என்பதைவிட, ஆனந்தனின் மகள் நந்தினி என்பது தான் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அத்தனை கோடி பணத்தை அழித்துவிட்டு சென்றவனின் மகளாக மட்டுமே தெரிந்தவருக்கு, நந்தினியினால் எதையும் திறம்பட செய்ய வராது என்ற எண்ணமே அவருள் வேறொன்றி இருந்தது.
 
 
அதுவே நந்தினியிடம் இத்தனை கடுமையும் கட்டுப்பாட்டையும் செய்ய வைக்க.. ஆரம்பத்தில் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கடந்து செல்லவும் முடியாமல் தவித்து தயங்கி பின் சண்டையிட்டு அழுது என்று எல்லாம் செய்தும் எந்த பலனும் இல்லை என்று புரிந்த பின்பே தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவோடு ஓயாது ஓட தொடங்கி இருந்தாள் நந்தினி.
 
 
இதிலெல்லாம் வேதவல்லிக்கு பெருமிதம் தான் என்றாலும் அவரையும் மீறி சில இடங்களில் முன் ஜாக்கிரதையாக அவளை கண்காணிக்கும் செயல்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையில் அவரின் இளைய மகன் வேறு இறந்து விட்டிருக்க.. இரண்டு நிறுவனங்களையும் கவனிக்கும் முழு பொறுப்பும் ரகோத்தமனிடம் தான் வந்து சேர்ந்திருந்தது.
 
 
பிள்ளைகள் வளரும் வரை இரண்டையும் கவனித்துக் கொண்டிருந்தவர், பின் நந்தினியிடம் ஆர்கே ப்ரொடக்ஷனையும் நிதினிடம் ஆர்ஆர் ஸ்டுடியோவையும் ஒப்படைத்து இருந்தார். இதற்கும் வேதவல்லி அத்தனை பிரச்சனை.
 
 
நந்தினியால் இதை சரிவர சமாளிக்க முடியாது. ஆர்கே புரொடக்ஷனில் பாரம்பரியமும் பெயரும் அவளால் கெட்டுவிடும். அதற்கு கலங்கம் வரக்கூடிய எந்த ஒரு செயலையும் தன்னால் அனுமதிக்க முடியாது என்றெல்லாம் அவர் சொல்லியும் தொடர்ந்து பேசி தன் அன்னையை சம்மதிக்க வைத்து தான் ரகோத்தமன் இன்று இதை சாத்தியப்படுத்தி இருந்தார்.
 
 
இதற்கு ஒரு வகையில் நிதினும் துணை புரிந்தான் என்று தான் சொல்ல வேண்டும். “எனக்கு ஆர்ஆர் ஸ்டுடியோஸ் தான் வேணும், இல்லை நான் வெளியில் எங்கேயாவது வேலைக்கு போறேன்.. உங்களுக்கு அப்படி அது கௌரவ குறைச்சலா இருந்தா நான் வெளிநாட்டுக்கு போறேன்..” என்று அவன் அடமாக நிற்கவும் தான், கொஞ்சம் இறங்கி வந்திருந்தார் பேரனின் மேல் இருந்த பாசத்தில் வேதவல்லி.
 
 
இன்று இதையெல்லாம் மனதில் யோசித்தபடியே எதிர்பாராமல் ஏற்பட்டிருந்த ஒரு சிக்கலை எப்படி சரி செய்வது..? வருபவர்களிடம் எப்படி பேசி இதை முடிப்பது..? என்ற தீவிர ஆலோசனையும் திட்டமிடலுமாக தன் வேலையில் கவனமாக இருந்தாள் நந்தினி.
 
 
*****
 
 
மெதுவாக எழுந்து தன் அறைக்குள் சென்ற வேதவல்லியின் பார்வை அவர் அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த தன் கணவன் மற்றும் இரண்டாவது மகனின் புகைப்படத்தின் மேல் பதிந்தது.
 
 
ராதாகிருஷ்ணன் தன் வயது மூப்பின் காரணமாக இயற்கையாகவே இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், தன் இரண்டாவது மகனின் அந்த திடீர் மரணமும் அது தந்த தாக்கமும் அவரின் மனதை பெருமளவில் பாதித்திருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
 
 
வெளிப்படையாக பார்க்கும் போது ராதாகிருஷ்ணனுக்கு ரகோத்தமனை தான் மிகவும் பிடிக்கும் என்பது போல் தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இளைய மகன் மீது தான் அவருக்கு தனி பாசம் உண்டு. முன்பே வேதவல்லியின் செல்லத்தில் உண்டான தனி சலுகைகளோடு வளர்ந்துக் கொண்டிருக்கும் மகன், பல பணக்கார வீட்டு பிள்ளைகளை போல் பொறுப்பில்லாமல் கெட்டு அழிந்துவிடக் கூடாது என்றே கொஞ்சம் கடுமை காண்பிப்பார்.
 
 
ஆனால் இப்படி திடீரென மகன் இல்லாமலே போவான் என அவருமே நினைக்கவில்லை. அதன் பாதிப்பு அவரின் மனதையும் உடலையும் சேர்த்தே நிலைக் குலைத்து இருந்தது.
 
 
ஒருவேளை இந்த சூழல் இல்லாமல் இருந்தால் ஆனந்தனின் சறுக்கல்களை முன்பே இவர்கள் கண்டறிந்து சரி செய்து இருப்பார்களோ என்னவோ..! இதையெல்லாம் யோசித்தப்படியே மகனின் புகைப்படத்தின் முன் நின்ற வேதவல்லியின் விரல்கள் அந்த முகத்தை அன்போடு வருடியது.
 
 
“அப்படி என்ன உனக்கு அவசரம் ராஜா..? ஏன் எங்களை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகிட்டு போனே..? இந்த வயசில் இன்னும் நான் இருக்க.. புத்திர சோகத்தை எனக்கு கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது..?” என்று மெல்லிய குரலில் சொல்லியவாறே பழைய நினைவுகளை அசைப்போட்டவரின் முகம் இறுகியது.
 
 
“உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவங்களை நான் சும்மாவே விட மாட்டேன் ராஜா.. நிம்மதியா அவங்களால் வாழவே முடியாது, இப்போவே உன்னை இப்படியாக்கினதுக்கான பலனை அவங்க அனுபவிச்சுட்டு தான் இருக்காங்க.. இன்னும் என்னவெல்லாம் அவங்களை செய்யறேன்னு பார்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவரின் முகத்தை இப்போது யார் கண்டாலும் மிரண்டு நான்கடி தள்ளி தான் நிற்பார்கள்.
 
 
அந்த அளவுக்கு ரௌத்திரமும் வெறுப்பும் அவருள் நிறைந்திருக்க.. அது முகத்தில் துல்லியமாக பிரதிபலித்தது. அதேநேரம் “குட் மார்னிங் அத்தை..” என்ற நிதினின் குரல் வெளியே கேட்க.. “மார்னிங் நிது.. வா சாப்பிட எடுத்து வைக்கிறேன்..” என்றார் சித்ரா.
 
 
“எங்கே யாரையும் காணோம்..?” என வீடே அமைதியில் மூழ்கி இருப்பதை பார்த்தப்படியே வந்து சாப்பிட அமர்ந்தான் நிதின். “நந்து இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சீக்கிரம் கிளம்பிட்டா.. அம்மா இப்போ தான் உள்ளே போனாங்க, அண்ணாவும் அண்ணியும் கோவிலுக்கு போய் இருக்காங்க..” என சொல்லிக் கொண்டே சித்ரா அவனுக்கு பரிமாறினார்.
 
 
இதையெல்லாம் கேட்டவாறே வெளியில் வந்த வேதவல்லியின் பார்வை முழுக்க நிதின் மேல் மட்டுமே அழுத்தமாக பதிந்திருந்தது. அதில் பார்வையை உயர்த்தி அவரை பார்த்தவன், “என்ன வேதா என்னை சைட் அடிக்கறியா..?” என்றான் குறும்புக் குரலில் நிதின்.
 
 
இதில் உண்டான சின்ன புன்னகையோடு சித்ரா உள்ளே சென்று விட, “நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை நிது.. தொழிலை மட்டும் வெற்றிகரமா நடத்தினா போதாது.. நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கணும்.. ரொம்ப கவனமா இருக்கணும்.. இந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளப்போற அரசன் நீ.. அதுக்கு ஏற்ற ஆளுமையோட இருக்க வேண்டாமா நீ..? இன்னும் இப்படி சிறுப்பிள்ளை தனமா எல்லாம் பேசிட்டு இருக்க கூடாது.. எத்தனையோ கழுகுகள் இந்த சாம்ராஜ்ஜியத்தை கொத்தி தூக்கிட்டு போக வட்டமிட்டுட்டு இருக்கு.. யாரையும் இந்த கோட்டையை, நான் பாதுகாத்து வெச்சு இருக்க இந்த கோட்டையை நெருங்க கூட நீ அனுமதிக்க கூடாது..” என்றவரின் குரலும் முகமும் அந்த இறுதி வரிகளை உச்சரிக்கும் போது விகாரமாக மாறியது.
 
 
அதை புரிந்தது போல் நிதினும் தீவிர முகபாவனையோடு தலையசைக்க.. சமையலறையில் இருந்த சித்ராவுக்கு தான் மனம் பாரமானது. இத்தனை வருடங்கள் கடந்தும் இப்படி ஒரு வீம்போடும் கோபத்தோடும் அவர் இருப்பதை எண்ணி வருத்தமானது.
 
 
அன்று விடாப்பிடியாக நின்று நினைத்ததை சாதித்த பிறகும் இன்று வரை அந்த வன்மம் குறையாமல் இருப்பவரை என்ன செய்ய.. என்ற வருத்தத்துடன் உள்ளேயே நின்று விட்டார் சித்ரா.
 
 
*********
 
 
தன் தலைமைக்கு கீழ் இருக்கும் காவல்நிலையத்தை பார்வையிட சென்றுக் கொண்டிருந்த விநாயக், வழியில் இருந்த ஒரு வளாகத்தில் நிதி நிறுவனத்தில் அடிதடி நடப்பதை கண்டு வண்டியை நிறுத்தி அவர்களை அதட்டி அடக்கி விட்டு வெளியில் வந்து நின்றிருக்கும் போதே நந்தினி அவனை பார்த்தது.
 
 
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அங்கே பிரச்சனை தொடங்குவது போல் இருக்க.. இரு தரப்பையும் விசாரித்து, தன்னை காவல்நிலையத்தில் வந்து சந்தித்து முறைப்படி புகார் அளிக்குமாறு சொல்லி விட்டு திரும்பியவன், இன்று காலையிலேயே இப்படி பஞ்சாயத்து செய்ததில் உண்டான கடுப்போடு நெற்றியை தேய்த்து விட்டவாறே திரும்பியவன், தன் வாகனத்தில் அவன் அமரும் இருக்கையில் இருந்த பரிசுத்தாள் சுற்றப்பட்டிருந்த பொருளை கண்டு நெற்றியை சுருக்கினான்.
 
 
அதை கண்டதும் அவனுக்கு ஒருத்தியின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அதில் உண்டான வெறுப்போடு ‘இவளை..’ என பல்லை கடித்தான் விநாயக்.
 
 
பின் சட்டென உண்டான கோபத்தோடு அதை தூக்கி வெளியே வீச அவன் முயல.. அதேநேரம் அருகில் யாரோ வந்து நிற்பது போல் தெரிய, பார்வையை திருப்பியவன், அங்கே புத்தகத்தை இறுக பிடித்தவாறே தன் தோழியின் பின்னே லேசாக தன்னை மறைத்துக் கொண்டு மானஸா நிற்பதை கண்டான்.
 
 
அவளை அங்கே கண்ட நொடி அவனுள் கனன்றுக் கொண்டிருந்த கனல் லேசாக தணிய, முகம் மென்மையாக மாறியது. எதுவும் பேசாமல் அவளையே விநாயக் பார்க்க.. அவளும் கண்களில் உண்டான படபடப்போடு அவனை பார்ப்பதும் பார்வையை தழைத்து கொள்வதும் பின் அங்கிருந்த பரிசுப் பொருளை பார்ப்பதும் பின் மீண்டும் விழிகளை திருப்பிக் கொள்வதுமாக இருந்தாள்.
 
 
இதில் அவன் முகத்தில் லேசாக புன்னகை அரும்ப நன்றாக திரும்பி நின்று அவளை பார்த்தான் விநாயக். அவனாக ஏதாவது சொல்லுவான் என காத்திருந்தவள் விநாயக் அமைதியாகவே இருக்கவும், மீண்டும் தயக்கத்தோடு பார்வையை உயர்த்தி பார்த்தாள்.
 
 
அதற்காகவே காத்திருந்தது போல் ஒற்றை விரலை அசைத்து அவளை ‘இங்கே வா’ என அழைத்தான் விநாயக். இதில் லேசாக திகைத்த மானஸா விழிகள் விரிய அவனை பார்க்க.. அந்த பாவனையில் தன்னை மீறி முகமெங்கும் புன்னகை மலர, அவளை மீண்டும் வாவென அழைத்தான் விநாயக்.
 
 
இப்போது மானஸாவின் தோழி அவளை இழுத்து முன்னே நிறுத்த.. அவளை சிணுங்கலும் முறைப்புமாக பார்த்தப்படியே இரண்டடி எடுத்து வைத்து அவனை நெருங்கினாள் மானஸா.
 
 
அவளின் ஒவ்வொரு செயலையும் மனதார ரசித்த விநாயக், தன்னை பார்ப்பதை தவிர்த்து தலையை நிமிர்த்தாமலே அவள் நின்று இருக்கவும், லேசாக தலை சாய்த்து அவளை பார்க்க.. அவனிடமிருந்து இதை எதிர்பார்க்காத மானஸா திடுக்கிட்டு பார்க்கவும், குறும்போடு விழிகளை உயர்த்தி ‘என்ன..?’ என்றான் விநாயக்.
 
 
அதில் வேகமாக அவள் ஒன்றுமில்லை என தலையசைக்க.. அவன் முகத்தில் அத்தனை புன்னகை.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 
 
 

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 476
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
MNKN - 2
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 


   
ReplyQuote

You cannot copy content of this page