சஞ்சாரம் – 05
பௌமி கண்ணைத் திறந்து அவனைப் பார்க்க, ஒற்றைக் கண் மூடி “அவுச் யூ ஹர்ட் மீ பௌமி” என்றான் பிரஜன். செய்வதறியாது அவள் விழித்ததை பார்த்து அவனே தொடர்ந்தான் “உன்னை வசீகரிக்க என் அழகு போதாதா?”
தொண்டையில் ஏதோ சிக்கியது போல் சிரித்தவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்தான் அவன்.
அவள் சரியில்லை என்பதை உணர்ந்தவன் கண்கள் தீவிரத்தை தத்தெடுக்க “பௌமி” அழுத்தமாய் அழைத்துக் கேட்டான் “என்னடா?”
“சந்தித்து இரண்டு நாள் கூட இல்ல ஏதோ மாயம் மந்திரம் மாதிரி...” கீழ் ஸ்தாயியில் ஒலித்தது அவள் குரல்.
இருபுறமும் கையூன்றி அவள் உயரத்திற்கு குனிந்தவன் “சத்தியமா உன்னை ஹிப்னோடைஸ் பண்ணல. உன்னை ஹிப்னோடைஸ் செய்ய முடியுமா என்றும் தெரியல. அப்படி செய்ய முடிந்தால் உலகத்திலேயே அழகான வசீகரமான சார்மிஙானா ஆள் நான்தான் என்று நம்ப வைச்சிருவேன்” என்றான் கண்ணோடு கண் கலந்து.
குரல் விளையாட்டுதனமாய் ஒலித்தாலும் அவன் கண்களோ அதற்கு எதிராய் ஒருவித தீவிரத்துடன் பளபளத்தன.
“உன்னை முதல் முதலில் பார்த்த நாள் முதல் பிடிக்கும்” என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் லேசாய் இதழ் ஒற்றினான்.
பிரம்மையில் திகைத்து போய் நின்றவளை கலைத்தது லிப்ட் நின்ற சத்தம்.
அவன் பதிலுக்காய் காத்திருப்பதைப் பார்த்து “லிப்ட் நின்றுட்டு” என்றாள்.
லேசாய் சிரித்தவன் “ஆப்டர் யூ லவ்” என்று அழகாய் கை காட்டினான்.
கன்னம் சிவக்க வெளியே சென்றாள்.
அவனின் கருப்பு நிற லாண்ட் குருசியரில் ஏறி அமர்ந்தவள் அப்போதும் அமைதியின்றி அவனைப் பார்த்தாள் “பொதுவா யாரையும் நம்ப மாட்டேன். இப்போது என்றில்லை சிறுவயதில் இருந்தே. அம்மா இல்லமால் வளர்ந்தது. பிறகு பத்திரிகை என்று அப்படியே பழகிப் போயிற்று. ஆனா ஏதோ ஒன்று உங்களைப் பற்றி முள் போல்... எனக்கு சொல்லத் தெரியல. ஆனா ப்ளீஸ் என் நம்பிக்கையை உடைக்க கூடாது. என்னிடம் வெளிப்படைய இருக்கணும்.” வேண்டுதலுடன் ஒலித்தது அவள் குரல்.
நேற்று பர்த்தவனிடம் ஏன் இத்தனை ஈர்ப்பு, இது வெறும் ஈர்ப்பா இல்லை காதலா என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை.
மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தான் பிரஜன்.
அவனின் பீனிக்ஸ் என்ற பெயரின் எடை உலகின் பாரமாய் இதயத்தை அழுத்தியது. உண்மையை அவளிடம் சொல்லவும் முடியாது. ஒன்று அவளுக்கே ஆபத்தாய் முடிய கூடும். சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வாள் என்றும் தெரியவில்லை.
அவள் கையை அழுத்திப் பிடித்தவன் “ஒன்றை மட்டும் நம்பு, உனக்கு எதிராய் துரும்பை கூட அசைக்க மாட்டேன். என்னால் சிலதை இப்போது சொல்ல முடியாது. என் வாயால் அதை யாரிடமும் சொல்வதென்றால் அது நீ மட்டும்தான். உனக்கு விளங்குதுதானே” சிறு தவிப்புடன் கேட்டான்.
அவன் கைமேல் கை வைத்து மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தாள் பௌமி.
கடவந்த்ரவில் நாராயணின் வீடு இருந்த இடத்தை விட்டு இரண்டு தெரு தள்ளி காரை நிறுத்தியவன் அவளிடம் மங்கி தொப்பியை கொடுத்தான் “இத போடு”
“இது ஏன்”
“யாரென்று முகம் தெரியாது”
“கொள்ளையா அடிக்க போறோம்”
“கிட்டத்தட்ட”
வெறுமையாய் இருந்த காணிக்குள் நுழைய கிண்டலாய் “வாவ் வீடு அழகா இருக்கு இல்ல” என்றாள் பௌமி.
“ஹ்ம்ம் என்னுடன் சேர்ந்து என்னை மாதிரியே வாரல்ல. இந்த மதிலை தாண்டனும்” என்றான்.
பிரஜன் சற்றுக் குனிந்து கையை கொடுக்க, அவன் கையிலும் தோளிலும் கால் வைத்து ஏறியவாறே “ஏன் அந்த வீட்டிற்கு வாசல் இல்லையா?” கேலியாய் கேட்டாள்.
ஒரே எம்பில் மதில் மேல் ஏறியவன் “ஏனில்லை இருக்கு கூடவே அந்த நாயரின் ஆட்களும் இருகின்றார்கள்” உள்ளே குதித்து அவளுக்காய் கையை நீட்டினான்.
குதித்தவளை கையில் ஏந்திக் கொண்டவன் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறே இறக்கி விட்டான்.
பின் பக்க கதவு பூட்டியிருக்க கதவை ஹேர்பின் உதவியுடன் திறந்தாள்.
“ம்ம் கைவசம் நிறைய வேலை இருக்கு போலேயே” அவளிடம் கிண்டலாய் பேசிய போதும், கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் பீனிக்ஸின் கண்கள் அந்த வீட்டை அளவெடுத்து.
இரண்டு அறை கிட்சின் ஹால் சிறிய அளவான வீடு. மூன்று மாதம் பூட்டியிருந்ததில் தூசி படிந்திருந்தது. பொருட்கள் நிலத்தில் சிதறிக் கிடந்தது. ஒருபக்க உதட்டால் சிரித்தான் பீனிக்ஸ்.
“முட்டாள்கள் தேடுவது என்ற பெயரில் இருப்பதையும் கெடுத்து வைத்திருகின்றார்கள்”
பௌமி லைட்டை போட போக தடுத்துவிட்டான் “வெளியே இருப்பவர்கள் உஷாராகி விடுவார்கள்”.
எதிலும் தொடவில்லை, ஆனால் உற்றுக் கவனித்தான். முழு வீட்டையும் சுற்றிப் பார்த்தவன் அலுமாரியின் அருகே வர பௌமி தும்மினாள்.
திரும்பிப் பார்க்க மேசையில் இருந்த கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அபசகுனமா தும்மாதா”
“க்கும் இதெல்லாம் நீங்கள் பார்த்திட்டாலும்” என்றவளை கண்ணால் அழைத்தான்.
சுவரோடு பதித்திருந்த அலுமாரியின் அருகே தட்ட சத்தம் வித்தியாசமாய் கேட்டது. கண்ணை விரித்து பார்க்க கோணல் சிரிப்புடன் தலையாட்டினான்.
“எப்ப பாரு கோணல் சிரிப்பு”
“ஹேய் அது என்னோட சாம்ர்மிங் ஸ்மைல்”
“க்கும், இதை எப்படி திறப்பது” தாழ்ந்த குரலில் கேட்டாள்.
“இதற்குள் தான் இருக்கணும், இதை திற” என்றான்.
தலையில் இருந்த கிளிப்பை எடுத்து திறந்தவளை கிண்டலாய் பார்க்க முறைத்தாள்.
கபேர்ட் வெறுமையாய் இருந்தது. சத்தம் கேட்ட இடத்திற்கு நேராய் கதவிற்காய் தேடினான் பிரஜன். மெல்லிய கோடு போல் தெரிந்த வெட்டை பார்த்து திறக்க உள்ளே சில லட்சம் பணமும் நகைகளும் மட்டும்தான் இருந்தது.
“யாரோ கவனிக்கிற மாதிரி இல்ல” நடுங்கிய குரலில் மெதுவாய்க் கேட்டாள்.
“ஹ்ம்ம்.. மே பி அந்த நாராயணின் ஆவியாய் இருக்கும்” கிசுகிசுப்பாய் சொன்னான் பிரஜன்.
“பிரஜன்” அவன் தோளில் அடித்தாள் பௌமி.
உதட்டைக் கடித்தவாறே சுற்றிப் பார்த்தவன் கண்ணில் விழுந்தது க்ரோபார். ‘இது எப்படி இங்கே’ யோசனையுடன் எடுத்துப் பார்க்க கிட்சசினில் சீமெந்து படிந்தது போன்ற கரண்டியை பார்த்தது ஞாபகத்தில் வர நிலத்தை கூர்மையாய் பார்க்க தொடங்கினான்.
கடைசியாய் சோபாவை இழுக்க அவன் கூர்மையான கண்ணில் விழுந்தது. ஆறு இஞ்சி விட்டம் இருக்கக் கூடிய அந்த வட்டம்.
நிலத்தை கிண்டி புதிதாய் சீமெந்து போட்டது போல். மிகக் கவனமாய் கவனத்தை ஈர்க்காதபடிக்கு போடப்பட்டிருந்தது. பலத்தை கூட்டி அதன் விளிம்பு என்று எண்ணிய இடத்தில் க்ரோபாரை ஓங்கிப் போட வட்டமாய் காற்றில் பறந்தது சீமெந்து கல்.
பௌமியின் முகத்தை நோக்கி பறக்க லாவகமாய் பிடித்தவன் ஒரு பக்கமாய் தலை சாய்த்து கூறினான் “சாரி”.
இருவரும் ஆர்வமாய் உள்ளே பார்க்க போனும் மெமொரி சிப்பும் இருந்தது. கவனமாய் உடைத்திருக்கவிட்டால் அழித்திருக்கும். அதை எடுத்து தன் கைகுட்டையில் சுற்றி அவள் முதுகில் போட்டிருந்த பாகில் வைத்தான்.
யாரோ பார்ப்பது போல் உணர்ந்த பௌமி “பிரஜன் எங்களை யாரோ வாட்ச் பண்ணுறாங்க” அழுத்தமான குரலில் உறுதியாய் சொன்னாள்.
“ம்ம் இப்போது எதுவும் செய்ய மாட்டார்கள். எங்களுக்கு ஏதாவது சாட்சி கிடைக்குதா என்று பார்க்க வெயிட்டிங்” என்றான் பிரஜன்.
“இப்ப என்ன செய்யுறது” கவலையாய் கேட்டாள் பௌமி.
“ஹ்ம்ம்” என்று போலி பெருமூச்சை விட்டவன் “பல்க்கா ஒரு அமௌன்ட் கேப்போம்” என்றான்.
“பிரஜன்” சிரிப்புடன் அழைக்கவே “என்ன? நாங்க சும்மா வொர்க் பண்ண முடியாது இல்லையா?” அப்பாவியாய் வெட்டி நியாயம் பேசினான்.
“உங்களை.. நீங்களும் உங்கள் ஹுயுமரும்” கவலை நிறைந்த குரலில் செல்லமாய் திட்டினாள்.
மெல்லிதாய் சிரித்த பிரஜன் “உண்மைதான், நாங்க இங்கே வந்ததில் இருந்தே கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்” தாழ்ந்த குரலில் சொன்னவாறே தன் ஜாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து எறிந்தவன் எதிர்பாராத நேரத்தில் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அம்பு போல் வெளியே பாய்ந்தான்.
பின்னால் இருவர் வர இடுப்பிலிருந்த சிறு கத்தியால் ஒருவன் இடதுபுறமாய் சரியாய் இதயம் இருக்கும் இடத்தில் குத்தியவன் மற்றவன் சுவாசப்பைகளில் இமைக்கும் நொடியில் இரண்டு குத்து. கத்தக் கூட அவகாசமின்றி கீழே விழுந்திருந்தார்கள். அவர்கள் உடையிலேயே கத்தியில் இருந்த இரத்தத்தை துடைத்தான்.’
அனைத்தும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் முடிந்திருந்தது.
கூட வந்தவனைக் காணோம் என்று பௌமி திரும்ப, அவள் இடையைப் பற்றிக் கொண்டு அருகே இருந்த தொட்டியின் மீதி காலுன்றி ஒரே எம்பில் மதிலைத் தாண்டிவிட்டான்.
பௌமிக்கு பின்னால் என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.
சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் பார்த்தது இறந்து கிடந்த அவர்கள் தோழர்களையே.
அவன் போட்டு விட்டு வந்த கண்ணீர் புகையில் வீட்டினுள் இருந்து புகை கிளம்பி அவர்களை தாக்க இருமத் தொடங்கினார்கள்.
வெளியே அந்த வெறும் காணியில் இருந்து பௌமியை இழுத்துக் கொண்டு பிரதான சாலைக்கு ஓடி வந்தவாறே தூரத்தில் வரும் பேரூந்தை கவனித்தான் பிரஜன். வீதியை கடந்து செல்லவும் அந்த பஸ் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது. இருவரும் உள்ளே ஏற அது கிளம்பியது.
இருவரது ஜாக்கெட்டையும் மங்கிக் குல்லாவையும் கழட்டி அவள் பாகில் வைக்க முழங்காலில் கையூன்றி குனிந்து நின்ற பௌமி, ஆபத்தை சில இஞ்சி இடைவெளியில் சந்தித்து மீண்டதில் ஒரு விதமான கிளர்ச்சியுடன் சொன்னாள் “தட் வாஸ் பஃன்”.
புன்முறுவலுடன் கிளர்ச்சியில் மலர்ந்திருந்த அவள் முகம் பார்த்தான். அப்படியே அள்ளி கொஞ்ச தோன்றிய மனதை கட்டுப்படுத்துவது சிரமமாய் இருந்தது. பீனிக்ஸிற்கு இது ஒரு விஷயமே இல்லை. இதை விடவும் நெருக்கடியான நிலையில் இருந்தும் தப்பியிருகின்றான்.
நடத்துனர் வரவே இருவருக்குமாய் இரண்டு ஸ்டாப் தள்ளி டிக்கட் எடுத்தான்.
அவர்கள் சென்ற பஸ்ஸில் இருந்து பார்க்க, பிரஜனின் பார்க் செய்திருந்த கார் கண் முன் கடந்தது.
“கார் போகுது”
“இல்ல நாம் தான் போகிறோம்”
“வெரி பஃன்னி” கையை குறுக்கே கட்டிக் கொண்டு “யு நோ சம்திங் மேன், உன்னோட வேலை செய்வது பஃன்தான்” என்றாள்.
அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நிற்க முடியாமல் சற்றுக் குனிந்து நின்றவன் அவளை நெருங்கி “ஐயாவோட வசீகரம் அப்படி” என்றான் கர்வமாய்.
“ம்க்கும்” என்று கழுத்தை நொடித்தாள் பௌமி.
இரண்டாவது தரம் பஸ் நிற்கவே “இறங்குவோம்” என்று இறங்கினான்.
அருகேயிருந்த கடையில் இருந்த பாசிமணி மாலை ஒன்றை வேண்டி அவளுக்கு அணிவித்து பார்க்கவும் அவர்களை துரத்திய நாயரின் ஆட்கள் கடந்து செல்லவும் சரியாய் இருந்தது. கண்ணீர் புகையில் கண்கள் சிவந்து இன்னமும் ஒருவன் இருமிக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் இருவரையும் சரியாய் கவனித்தாள். இருவருமே கருப்பு நிற பாண்டும் வெள்ளை நிற டீ சேரட்டும் போட்டு பக்கா டுரிஸ்ட் போலவே இருந்தார்கள்.
அருகே நெருங்கி லேசாய் அணைத்துக் கொண்டவன் “என்ன பயமா?” வேண்டுமென்றே சீண்டினான்.
போனவர்களில் ஒருவன் நின்று திரும்பிப் பார்த்து விட்டு “ஆ குட்டி சுந்தரமயிட்டு” என்று தொடங்கவே கூட வந்தவன் “அவர்கள் இருவரையும் பிடிக்காவிட்டால் சேட்டன் தோலை உரித்து விடுவார் பரவாயில்லையா” என்று அழைத்து சென்றான்.
பிரஜன் உடல் இறுகவே “பசிக்குது சாப்பிடுவோம்” அவன் சிந்தையை திசை மாற்றினாள்.
அதன் பின் அங்கிருந்த வண்டில் கடையில் புட்டும் அப்பமும் சாப்பிட்டு விட்டு கார் நிற்கும் இடம் வரை வேடிக்கை பார்த்தவாறே நடந்து வந்தார்கள்.
அந்த முன் இரவில் அவன் கை கோர்த்து நடப்பது இதமாய் இருக்க அதை மௌனமாய் ரசித்தாள் பௌமி.
கூடவே ‘எப்படி இலகுவாய் கூட்டத்தில் கலந்து கரைந்து போகிறான்’ வியப்புடன் நினைத்துக் கொண்டாள்.
ஐந்தே நிமிடத்திற்கு முன் இருவரை கொலை செய்தவன் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள். அத்தனை வசீகரமாய் இருந்தது அவன் முகம்.
ஓரிரவு இதுபோல் அழகாய் இருக்க கூடும் என்பதை இன்றுதான் உணர்ந்தான் பீனிக்ஸ். எத்தனையோ நாடுகளின் உல்லாச விடுதிகள் தராத சந்தோசத்தையும் அமைதியையும் அருகே இருக்கும் பெண்ணின் மெல்லிய தொடுகை தருவதை உணர்ந்தவனுக்கு வாழ்நாள் முழுதும் இது வேண்டுமென்று மனம் ஏங்கியது.
தன் விரல்களோடு கோர்த்திருந்த விரல்களை இறுக்க நிமிர்ந்து கேள்வியாய் பார்த்தாள் பௌமி.
மயக்கம் நிறைந்த கண்களுடன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையாட்டியவன் அவள் கையை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான்.
கார் பார்க் செய்திருந்த இடம் வந்திருக்க அவளுக்காக கார் கதவை திறந்து விட்டு உள்ளே ஏற உதவினான். இனிமையான புன்னகையுடன் பனாட்டில் இரு விரல்காளால் தட்டியவாறே மறுபுறம் வந்து ஏறியவன் முகத்தில் புன்னகை ஒட்டியிருந்தது.
மனமெங்கும் ஒருவித இனிமை நிறைந்திருக்க பயணத்தில் இருவருமே பேசிக் கொள்ளவில்லை.
அவர்கள் இருவரையும் சற்று தூரத்தில் இருந்து கழுகு போல் கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்கள் இருட்டில் கலந்து மறைந்தது.