சஞ்சாரம் - 03
அவள் கையைப் பிடித்து சுவற்றோடு சாய்க்க யாரோ என்று உதறியவள் கைக்கு சொந்தக்காரன் முகத்தை பார்த்ததும் திமிறினாள்.
“ஹேய் ஈசி லவ்” என்றான் பிரஜன் மெல்லிய இசை போன்ற குரலில்.
சங்கர் அந்தப் பக்கம் சென்றதும் தன்னைப் பிடித்திருந்த கையை உதறிவிட்டு முறைத்தவாறே சென்றவளை அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தான் பிரஜன்.
அவள் எப்போதோ முடிவெடுத்து விட்டிருந்தாள் ‘இவனை பிறகு கவனித்துக் கொள்வோம். இப்போது வந்த வேலை’ என்று.
அறையிலிருந்து வெளிவந்த நாயரைப் பின்தொடர்ந்து செல்வதை கவனித்தவன் ‘எப்ப பார்த்தாலும் வம்பை விலைக்கு வாங்குறதே இவளுக்கு வேலை’ மனதினுள் வறுத்தவாறே அவளை பின் தொடர்ந்தான்.
நாயரின் பின் சென்றவள் திடிரென திரும்பி அருகேயிருந்த தோட்டத்தினுள் புகுந்தாள். கையில் இருந்த போனைப் பார்த்தாவாறே சென்றதில் நாயர் தன் ஆள் ஒருவனுக்கு கண் காட்டியதையோ அவன் பின்னால் வந்ததையோ கவனிக்கவில்லை.
ஆனால் எந்நேரமும் ஆபத்தை கண்டறியும் கண்களையுடைய பிரஜன் கவனித்துவிட்டான். இன்னொரு வழியாய் தோட்டத்தினுள் வந்து அவள் கையைப் பிடித்து இழுத்திருந்தான்.
சுவரோடு சாய்த்து அவள் முகம் நோக்கிக் குனிந்தான் பிரஜன். கண்கள் விரிய அவனைப் பார்க்க அவன் மனமோ அதில் வீழ்ந்து தத்தளித்தது ‘என்ன கண்ணுடா சாமி’.
அவனை உதற முயன்றவளை இலகுவாய் அசைய விடாது பிடித்து “ஷ்... நாயரின் ஆள் உன்னை பின் தொடர்ந்து வருகிறான், அசையாதே.” எச்சரித்தான்.
அவளோ எகிறினாள் “அதான் என்னை தெரியாது என்றீர்கள் இப்ப எதுக்கு காப்பத்தணும்”
“அம்மா தாயே, தெரியாம சொல்லிட்டேன் போதுமா?”
“ஷ் அசையாம இப்படியே இரு, திரும்பி போயிருவான்” அவனின் ஆண்மை நிறைந்த குரல் காதினுள் கிசுகிசுத்து மெல்லிய சிலிர்பை அவள் அடிவயிற்றில் பரவச் செய்தது.
“ஹிப்னோஸ்..”
அவள் காதில் தோடு போலிருந்த அந்த குட்டி மைக்கிலிருந்து வந்த சத்தத்தில் பிரஜனின் கண்கள் விரிந்தது.
“உன் கையை என் கழுத்தை சுற்றிப் போடு”
“ஹா...”
“இதோ பார் பெண்ணே, இது அவர்களின் கூடாரம். ஒரு பாதுகாப்பு ஏற்பாடும் இல்லமால் வந்து இருகிறாய். ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் சரி, உன்னை இங்கேயே கொன்று புதைத்து விடுவார்கள்” சற்று நிறுத்தி அவள் கிரகிக்க இடம் கொடுத்தவன் “நாம் இன்னும் சற்று நேரம் இங்கேயே நின்றால்தான் நீ கேட்க விரும்புவதை கேட்க முடியும், சோ” தெளிவாய் விளக்கினான்.
அவன் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தே இருந்தது. இது முழுக்க முழுக்க அவர்களின் கூடாரம் உள்ளே வந்தால் வெளியே செல்ல முடியாது என்று தெரிந்தேதான் வந்தாள். உண்மையில் இன்றிரவு முழுதும் தன்னிடமிருந்து தகவல் வராவிட்டால் இங்கே உள்ள போலீசிற்கு அறிவிக்கும்படி எடிட்டரை கேட்டிருந்தாள்.
மெதுவே கையை உயர்த்தி அவன் கழுத்தை சுற்றிக் கையை போட அவள் உடலில் மட்டுமில்லாது அவன் உடலிலும் ஒரு சிலிர்ப்பையும் மெல்லிய நடுக்கத்தையும் உணர்ந்தாள்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் முத்தம் கொடுப்பதைப் போலிருந்தது.
பௌமியின் நீண்ட விரல்கள் அவன் பின் கழுத்தில் பட்டும் படமாலும் உரசவே அவன் கையிலிருந்த அவளிடையை அழுந்தப் பிடித்தான் பீனிக்ஸ். இதற்கு முன் பெண் வாசமே அறியாதவன். முதல் முறை கிடைத்த அருகாமையில் தேன் குடித்த வண்டாய் தடுமாறித்தான் போனான்.
“டேய் ஒழுங்கா என்னை வேலைய பார்க்க விடு” அவனை செல்லமாய் மிரட்டியவள் காதில் கேட்ட உரையாடலில் கருத்தை செலுத்தினாள்.
சிறுமுறுவலுடன் “டா” சத்தமின்றி வாயசைத்து புருவத்தை உயர்த்தியவன் அவள் தோள் வளைவுக்கு குனிந்து அவனும் கேட்க தொடங்கினான்.
“தேவராஜ், அந்த விசில்ப்லோவேர் என்ன ஆனான். கண்டு பிடித்தாயா?
“இல்ல ஹிப்னோஸ், அவனைக் கண்டு பிடிக்க முடியல. கடந்த பத்து நாளா அந்தப் பெண்ணும் யாரோடும் தொடர்பு கொள்ளவில்ல”
“உனக்கு நிச்சயமா தெரியுமா? அன்று மார்க்கெட்டில் யாரையும் சந்திக்கவில்லையா?”
“ஒருத்தரோடு மோதினாள். அவனை பிடிச்சு முழுசா செக் பண்ணி பார்த்தாச்சு. அவனிடம் எதுவுமில்லை. அவன் கொச்சினுக்கு வேலைக்கு வந்தவன் மார்க்கெட்டில் சாமான் வாங்க வந்திருந்தான். பெயர் சங்கர்.”
பிரஜன் தலையை மட்டும் லேசாய் பின்னே சாய்த்து பார்த்தவன் கண்களில் கேள்வி தொக்கி நின்றது.
‘உனக்கு ஏற்கனவே அவனை தெரியுமா?’
“எந்த தில்லு முள்ளும் இல்லையே”
“எங்கள் கம்பனியால் இரண்டு மாதத்திற்கு முன் வைத்த இண்டர்வியூவில் செலக்ட் ஆனவன். என் கையெழுத்துடன் அப்போயின்ட்மென்ட் லெட்டர் வைத்திருந்தான்”
சற்று நேரம் மௌனம் நிலவியது. பிரஜனும் பௌமியும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் “அந்த சங்கரை போட்டுத் தள்ளவா?” என்றது தேவராஜின் குரல்.
“இல்லை வேண்டாம், போலிஸ் எப்படியும் மோந்து பிடித்து விடுவார்கள். எற்கனவே அந்த இன்ஸ்பெக்டர் நாராயணன், சிவகுமார் கேசில் சிபிஐ இன்வோல்வ் ஆவதாய் கேள்விப்பட்டேன்”
“அந்த சிவகுமார் மகள் பத்திரிகைகாரியை என்ன செய்ய? நானே போட்டுத் தள்ளவா?”
‘காரி’ என்ற வார்த்தையில் பல்லைக் கடித்த பௌமியைப் பார்த்து சத்தமின்றி சிரித்த பிரஜனை முறைத்தாள் பௌமி.
“நீ ஒன்றும் செய்ய வேண்டாம். விசில்ப்லோவரை சந்திக்கிறளா என்று மட்டும் கொஞ்சம் கவனமாய் பார்த்துக் கொள். பீனிக்ஸ் ஆறு மாதம் கேட்டு இருகின்றானம். மீதியை அவன் பார்த்துக் கொள்வான்”
‘பீனிக்ஸ்’ என்ற பெயரைக் கேட்டதில் திடிரென கால்கள் பலமிழந்து பௌமியின் உடல் நடுங்க சட்டென கைகளில் அள்ளிக் கொண்டான் பிரஜன். மறுக்காமல் அவன் கழுத்தை சுற்றிக் கையைப் போட்டவள் அவன் தோளிற்கு மேலாய் உள்ளே இரண்டாவது மாடியில் நிற்பது யாரெனப் பார்க்க முயன்றாள்.
அதில் ஒருவன் தேவராஜ், இன்றைய பார்ட்டியை நடத்துபவன், விபி ட்ரஸ்ட்டின் பிரதான பங்குதாரர். அடுத்தவன் முகத்தை பார்க்க முடியவில்லை ஆனால் கழுத்தில் ஏதோ ஒரு டாட்டூ இருந்தது மட்டும் தெரிந்தது. அதன் வடிவத்தை பார்க்க முடியவில்லை.
அந்த தோட்டத்தின் இன்னொரு பக்கத்திலிருந்த மர இருக்கையில் இருத்தியவன் அவள் முன்னே அமர்ந்து முழங்காலில் கை வைத்து கிண்டலாய் கேட்டான் “என்ன ஜான்சி ராணி பயந்திட்டாவா?”
இருக்கையில் பாதம் வைத்து முழங்காலைக் கட்டிக் கொண்டவள் வளவளப்பான கால்கள், கவுனின் நீண்ட வெட்டு வழியே அவன் கண்ணுக்கு விருந்தாக மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டான்.
தலையை மெல்ல அசைத்து “பீனிக்ஸ்” என்றாள் அவள்.
உதட்டைக் கடித்தவன் நிலைமையை இலகுவாக்க கேட்டான் “அவனுக்கு என்ன? இதற்கு முன் யாருமே உன்னை போட்டுத் தள்ள ட்ரை பண்ணலையா என்ன?”
இரு புருவத்தையும் உயர்த்தி கண்ணை மூடித் திறந்தான்.
“இல்ல அப்பா சொல்லி இருக்கிறார். பீனிக்ஸ் ஒரு வேலையை எடுத்தால் அதை முடிக்கமால் விட மாட்டான் என்று. அதோடு... ச்சு விடுங்கள்”
“அவன் பெயரென்ன சொன்னாய்?”
“பீனிக்ஸ்” குழப்பமாய் பார்த்தாள்.
“வரட்டும் எரித்து பார்ப்போம்”
“ஹா...”
“இல்ல பீனிக்ஸ் தானே எரித்தால் உயிர் பெற்று வருகின்றானா என்று பார்ப்போம்” என்றான் அவன் இலகுவாய். கண்ணில் மட்டுமாய் சிறு குறும்பு.
கண்ணை விரித்துப் பார்த்தவளுக்கு அன்று தன்னைக் காப்பாற்றும் போதும் இப்படி ஏதோ சொன்னதும் தனக்கு சிரிப்பு வந்ததும் நினைவு வந்தது. கூடவே இன்று தன்னை தெரியாது என்று சொன்னதும்.
சிறு கோபத்துடன் நிமிர்ந்தவள் அவன் பார்வையில் சிவந்தாள். எப்படியோ அவள் கால்கள் அவன் மடி மீது இருக்க, பிரஜன் ரசனையுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எட்டி அவன் கண்களை மூடி கால்களை அவன் மடியிலிருந்து கீழே போட்டவாறே கூறினாள் “அது என்னோட கால்”.
“யாரு இல்லையேன்ற” சத்தமாய் கூறியவன் மீதியை வாய்க்குள் முணுமுணுத்தான் “இந்த ட்ரஸ் போடும் போது என்ன யோசனை?”
“தேவைப்பட்டால் மதிலேறி பாய வசதி அந்த யோசனை மட்டும்தான்” சற்று எம்பி அவன் காதில் கூற, அவள் இதழ்கள் படும் படமாலும் கன்னத்தை உரசிச் சென்றது.
“டக்ஸி வந்திட்டு” பிரஜன் பட்டென கூறவே அப்பாவியாய் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியபடி ஏறி சென்றுவிட்டாள் பௌமி.
போன காரையே பார்த்திருத்த பிரஜன் “பீனி...க்ஸ் என்ன செய்யுற” முகத்தை அழுந்த தேய்த்தான்.
தன்னை எவரும் கண்காணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஓரிடத்தை நோக்கி வேகமாய் சென்றான். அவன் எதிர் பார்த்தது போலவே தேவராஜும் அவனால் ஹிப்னோஸ் என்று அழைக்கப்பட்டவனும் அங்கேதான் நின்றார்கள்.
தேவராஜ் கார் கதவை திறந்திருக்க காரில் ஏறியவன் கழுத்தில் உள்ள டாட்டூ அவன் கூர்மையான கண்களில் தெளிவாய் விழுந்தது.
ஒரு கண் வரைந்து விழி இருக்கும் இடத்தில் நுளம்புத்திரி போல் வட்டமாய் சுற்றி செல்வது போலிருந்தது. கண்ணை சுற்றிலும் டிசைன். ஒரு ஐந்து நிமிடம் முன்னே வந்திருந்தால் ஹிப்னோசிஸ் யார் என்று தெரிந்திருக்கும். ஆனால் பௌமியையும் சேர்த்து அழைத்து வர வேண்டி இருந்திருக்கும். அந்த யோசனை பீனிக்ஸிற்கு அத்தனை பிடித்தமாய் இருக்கவில்லை.
கார் போய்விட அவனும் நிழலைப் போல் இருட்டில் மறைந்திருந்தான்.
***
பிரெஷகி கட்டிலில் விழுந்த பௌமிக்கு இன்று பிரஜனுடன் கழிந்த கணங்களே மனதை நிறைத்தது. அப்பா காணமால் போன பின்னர் இன்றுதான் இத்தனை நாள் மனதை அழுத்திய ஏதோ ஒரு பாரம் இறங்கியதைப் போல் லேசாய் உணந்தாள்.
எந்த ஆபத்திலும் சிரிக்க வைக்கும் அவன் குணம் பிடித்திருந்தது. சங்கருடன் பேசும் போது ஒரேயொரு நொடி மட்டுமே அவன் கண்ணில் தென்பட்ட அந்தப் பொறாமை அதை விட பிடித்திருந்தது.
அவள் வேலையே எல்லோரையும் சந்தேகப்படுவது. எதை நம்பி இவனை சந்தேகப்படமால் விட்டு வைத்திருகின்றாய்? பார்த்த இரண்டாவது தரமே அத்தனை நெருக்கத்தை எப்படி அனுமதித்தாய்? என்று மூளை கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை.
இரவு வெகுநேரம் உறக்கமின்றி புரண்டு படுத்தவள் ஒருவாறு அதிகாலையில் உறங்கி போனாள்.
***
இரவில் நேரம் கழித்து உறங்கியதில் எழும் போது விடிந்திருந்தது. தேநீர் போட சோம்பலாய் இருந்தது, கூடவே பசியும். யாரையோ எதிர்பார்த்தது போல் அந்த அப்பர்ட்மெண்டில் அமைந்திருந்த தோட்டத்தில் அமர்ந்திருந்தாள். யாரோ அருகே அமர, யாரென்று தெரிந்து வேண்டுமென்றே திரும்பிப் பார்க்கமால் இருந்தாள்.
“ஹாய் என்னை ஞாபகமிருக்கா? நேற்று ஹோட்டலில் உங்களை காப்பற்றினேன். என் பெயர் பிரஜன்” குறும்புத்தனம் நிறைந்த கண்களுடன் கேட்டாலும் வேறு ஏதோ ஓர் இனங்காணா உணர்வு அவன் கண்களுக்குள் மறைந்திருந்தது.
“ஒஹ் அப்படியா! தேங்க்யூ சார்” குருவியாய் தலை சாய்த்துக் கூறியவள் “க்கும்” என்று மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு மறுபுறம் திரும்பினாள்.
“ஹேய் சாரி” இரு கைகளாலும் காதைப் பிடித்துக் கொண்டு சற்று முன்னே குனிந்து அவள் முகம் நோக்கிக் மன்னிப்பு கேட்டான். கொஞ்சும் புறாவாய் லேசாய் தலை திருப்பிப் பார்த்தவள் அவன் செய்கையில் வாய் விட்டே சிரித்தாள்.
“பிரஜன்” சிரிப்பு நிறைந்து ஒலித்தது அவள் குரல்.
“மன்னிச்சாச்ச?” கேள்வியாய் பார்க்க சிரிப்புடனேயே தலையாட்டியவள் அவன் காதிலிருந்த கையை எடுத்துவிட்டாள்.
“காஃபி” ஒரு கண் மூடிக் கேட்க “ஷுயர், காஃபி மட்டுமில்லை சாப்பாடும் வேணும்” விளையாட்டாய் கூறியவாறே அவன் அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
எழுந்து இடைவரை குனிந்து “ஆப்டர் யூ மாம்” என்றவன் தோளில் அடித்து இயல்பாய் அவனுடன் சென்றாள் பௌமி. பக்கவாட்டில் குனிந்து அவள் முகம் பார்த்தவன் கண்களிலும் உதட்டிலும் வருடங்கள் கடந்து புன்னகை தென்பட்டது.
பர்கரை ஒரே மூச்சில் கபளீகரம் செய்தவளை ரசித்தவாறே காபியை குடித்தவன் வியப்புடன் கேட்டான் “அது சரி எப்போது அந்த அறையில் மைக் செட் செய்தாய்?” கடந்த பத்து நாட்களாய் நிழல் போல் தொடந்திருந்தான் அவன்.
பின் எப்போது...?
எப்படி...?
நேற்றிரவிலிருந்து இந்தக் கேள்விதான் அவன் தலையை குடைந்து கொண்டிருந்தது.
லப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தவள் “அதுவா நேற்று நைட் பன்னிரெண்டு மணிக்கு பிறகுதான் எனக்கு தகவல் கிடைத்தது. உடனேயே போய் செட் பண்ணிட்டேன்” என்றாள்.
“அதுதான் எப்படி?”
“அந்த ஹோட்டலில் எனக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்தது. அதால போலி அடையாள அட்டை, சீருடை எல்லாம் செட் செய்து வைத்திருந்தேன். நல்லவேளையா அந்த இடத்தில் சிசிடிவி ஒன்றுமில்லை. குறைந்தது சவர்லைன்ஸ் டிடெக்டர் எதிர்பார்த்தேன்... அதுவுமில்லை”
“அதில்லை உனக்கு தகவல் எப்படிக் கிடைத்தது”
“ஒஹ் அதுவா, அந்த நாயர் தேவராஜ் எல்லோருடைய நம்பரையும் டப் செய்து வைத்திருந்தேன்”
ஆச்சரியமாய் ஒற்றை புருவத்தை உயர்த்தினான் பிரஜன்
“சில நாட்களுக்கு முன் பீச் பக்கத்தில் இருக்கும் அவர்களின் கஃபே போனேன். அப்போது அங்கே வேலை செய்யும் ஒரு ஆளின் போனுக்கு ஜீரோ கிளிக் அட்டாக்கை அனுப்பி அதிலிருந்த தகவல்களை எடுத்தேன். யூ நோ இட் ரைட். அதிலிருந்து எல்லோருடைய நம்பரும் மீதி ஐந்து நாளில் கலக்ட் செய்திட்டேன்”
“ஹ்ம்ம்... பியுட்டி வித் பிரைன், அப்ப இந்தப் பத்து நாளாய் சும்மா இருக்கல. அழகே ஆபத்தானது அதுவும் அறிவுடன் இருந்தால்” என்றவன் கண்களில் பாராட்டுடன் மெல்லிய கர்வமும் தென்பட்டது.
எதையும் சந்தேக கண்ணுடன் நோக்கும் அவள் பத்திரிகை மூளை ‘பத்து நாளாய் நான் சும்மா இருந்தேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்’ என்பதைக் கேட்க ஏனோ மறந்திருந்தது.
இல்லாத கொலரை உயர்த்திவிட்டவள் லப்பில் எதையோ தட்டியவாறே கூறினாள் “தேவராஜ்க்கு பிரைவேட் நம்பர் ஒன்றிலிருந்து மெசேஜ் அழைப்புகள் வருது. அதை ட்ரேஸ் செய்யவே முடியல” என்று உதட்டை பிதுக்கினாள்.
“அம்மணி இப்ப என்ன செய்யுறீங்க”
“அமெரிக்கவில் இருக்கிற ஜோனுக்கு மெயில் அனுப்பிட்டு இருக்கிறேன்”
“லவ்வரா” கேட்டவன் குரலில் என்ன இருந்தது என்று கேட்டவனுக்கே தெரியவில்லை.
நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டாள் “நீங்க என்ன செய்யுறீங்க?’
“அடுத்த ஆறு மாதத்திற்கு சும்மாதான் சுத்திட்டு இருப்பேன். உனக்கு தெரிந்த யாரிடமாவது வேலை இருந்தால் சொல்லு செய்வோம்” விழிகளில் மெல்லிய அசைவுடனும் மினுமினுப்புடனும் நான்றாக சாய்ந்து அமர்ந்தான்.
“என்னிடம் வேலை செய்கின்றீர்களா?” அவளுக்கே ஏனென்று தெரியவில்லை சட்டென கேட்டுவிட்டாள்.
சுவாரசியமாய் முன்னே சாய்ந்து அமர்ந்தவன் “என்ன வேலை தருவாய்?” ஆர்வமாய் விசாரித்தான்.
“ஹ்ம்ம் உங்கள் குவாலிஃபிகேசன் சொன்னால் அதற்கு தகுந்த மாதிரி போட்டுத் தரலாம்” என்றாள் கெத்தாய்.
அவளை ஆழ்ந்து நோக்கியவனை பார்த்துக் கேலியாய் கேட்டாள் “என்ன அப்படி எதுவும் இல்லையா?”
“இதற்கு முன் செக்யூரிட்டி செர்விஸில் வேலை செய்தேன். அது தொடர்பாய் என்றால் செய்யலாம்” ஆழ்ந்த நோக்குடன் சதுரங்கத்தில் காயை நகர்த்துவதைப் போல கவனமாய் சொன்னான்.
“ம்ம்ம் உங்களுக்கு ஏற்ற வேலை இருக்கு. ஆனா நாளைக்கு சொல்றேன். உங்கள் சேவையை பொறுத்து வேலை கிடைக்கும்” என்றாள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி.
“யெஸ் மை லேடி” எழுந்து நின்று இடை வரை குனிந்து வணங்கவே பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய பௌமி “இப்போதைக்கு ஓர்டர் செய்த ஐஸ்கீறிமை எடுத்திட்டு வாங்கோ” என்றாள்.
போகமால் மீண்டும் அமர்ந்து சற்று நேரம் அவளையே ஆழ்ந்து பார்த்தவன் “என்ன?” என்றான்.
அவள் புரியாமல் பார்க்க “இந்தக் கண்” ஒருவிரலால் சுற்றிக் காட்டினான் “சிரித்தால் அழகாய் இருக்கும். ஆனா ஏதோ கவலையை மறைக்குது”
“அப்படியெல்லாம் இல்ல”
அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு “ப்ளீஸ்” என்றான். அவள் கண்ணின் மூலையில் இருக்கும் சோகத்தை கலைந்தே ஆக வேண்டும் போல் ஒரு உந்துதல்.
ஆழ்ந்து சுவாசித்தவள் “அப்பா” என்றாள்.
“அப்பா அவருகென்ன” பிரஜன் குழப்பமாய் கேட்கவே “இந்த கேஸ் விசயமாய் விசாரிக்க வந்தவர் காணவில்லை” விளக்கி கூறினாள்.
“ஒஹ்” என்றவன் முகம் ஆழ்ந்த சிந்தனையை காட்டியது. பெண் என்றும் பாரமால் கொலை செய்ய ஆள் தேடியவர்கள், அதுவும் ப்ரோஃஸனால் கில்லர். அவரை விட்டு வைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் நூற்றில் ஒரு வாய்ப்பாய்...
“எப்போது கடைசியாய் சந்தித்தாய்?”
“அது கேரளா வருவதற்கு முன், ஆனா மூன்று மாதத்திற்கு முன் போனில் பேசினேன்”
“போன் நம்பர் இருக்கா?”
தன் கைபேசியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
“மு...” ‘முயற்சி செய்து பார்க்கலாம்’ என்று சொல்ல வந்தவவன் இடையில் நிறுத்திவிட்டான். அவள் கைபேசி சத்தமிட காதுக்கு கொடுத்தாள்.
“ஹலோ நான் சங்கர், உங்களை தனியாக சந்திக்க வேண்டுமே”
கூர்மையான பிரஜனின் காதிற்கும் கேட்கவே அவனை யோசனையாய் பார்த்தவள் “கபேயில் இருக்கிறேன் வாருங்கள்” என்று லோகேசன் அனுப்பினாள்.