About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
@vsv11 அடடே.. நீங்க வாங்கப்பு.. இறா தொக்கு சொறா புட்டுனு அம்புட்டு செஞ்சு கொடுத்து போடுவோம்😍
நாணல்-07
அன்று காலை உறக்கமின்றி விரைவே எழுந்துவிட்ட ஆதி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வர, கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்துகொண்டு, “என்னய்யா சித்தப்பு.. எப்படி இருக்க?” என்று அக்னியுடன் செழிலன் காணொளி அழைப்பில் இருப்பதைக் கண்டான்.
செழிலனுக்கு பின்னே இருக்கும் ஆதியைக் கண்டுவிட்ட அக்னி, “ஆதி..” என்க,
பின்புறம் திரும்பிப் பார்த்த செழிலன், “என்ன மாமா சீக்கிரம் முழிச்சுட்டீக போல?” என்று மணியைப் பார்த்தான்.
காலை நான்கை தான் அடைந்திருந்தது நேரம்!
“நீ கத்துற சத்தத்துல ஃபோனு இல்லாமலே எனக்குக் கேக்கும் போல.. அவேனுக்கு கேட்டிருக்காதாடே? தூங்கியிருந்தவன கத்தியே உசுப்பிவிட்டுட்டியாருக்கு” என்று அக்னி கடிய,
சிறு புன்னகையுடன் வந்து அமர்ந்த ஆதி, “எப்படியிருக்க மச்சான்” என்றான்.
“இருக்கேன்டே.. பய ரொம்ப தொல்ல தரானா?” என்று ஆதி வினவ,
அவனை முறைத்த செழிலன், “நா(ன்) என்னத்த தொல்ல தரப்போறேன் சித்தப்பு?” என்றான்.
அதில் லேசாய் சிரித்துக் கொண்ட ஆதி, அவன் தோள்தட்டி, “அவேன் உன்ன வம்பு செய்யுறான்டே..” என்க,
தானும் சிரித்த அக்னி, பொதுவாய் அவன் வேலைபற்றி சில நிமிடங்கள் பேசினான்.
“மாமா.. நீங்க பக்கா மருதகாரனாட்டம் பேசுறீக மாமா.. அத்தை பயங்கரமா ட்ரெயினிங் குடுத்துப்போட்டிருக்கும் போலாட்ருக்கு” என்று செழிலன் தன் போக்கில் இயல்பாய் கூறிவிட,
ஆதியின் முகம் சட்டென இருண்டது!
மனையாட்டியின் நினைவு வந்து மனதை அடைக்க, அவன் முகம் மாற்றத்தைக் கண்ட பின்பே செழிலனுக்கு தான் பேசியவை புரிந்து, அவர்கள் இடையிலான பூசலும் நினைவு வந்தது!
அவனைச் சொல்லியும் குற்றமில்லையே! இப்பேர்ப்பட்ட சண்டைக்குப் பின்பும் கூட, தங்களிடம் ஒன்றுமே நடவாததைப் போல் ஆதி நடந்துகொள்வதில் அவனும் பூசல்களை மறந்துதான் போகின்றான்.
நண்பன் முகம் கண்டு வருந்திய அக்னி, “ஆதி..” என்க,
“நி..நீங்கப் பேசிட்டுருங்க.. வாரேன்” என்றுவிட்டு அறைக்குள் சென்றான்.
“சாரி சித்தப்பு.. நெனவில்லாது பேசிப்போட்டேன்” என்று செழிலன் கலக்கமாய் கூற,
“விடுடே..” என்றவன், “நீயெப்ப ஊர் திரும்புற?” என்றான்.
“இதோ இன்னும் நாலு நா(ள்) இருந்துட்டு போறேன் சித்தப்பூ” என்று செழிலன் கூற,
“பாத்துக்கடே..” என்று வைத்துவிட்டான்.
உள்ளே கட்டிலில் மல்லாந்து படுத்தபடி, கூரையை வெறித்தவன் விழியோரம் வழிந்த நீர், செவிமடலைச் சேர்ந்தது!
உடனே வெளியேறிய உஷ்ணமான மூச்சுக்காற்றுடன், அழகியதோர் நினைவும் வந்து நின்றது…
அவளது இரண்டாம் வருட கல்லூரி காலமது… அவனுக்குக் கடைவருடம்…
“சீனியர்.. நீங்கக் குடுத்த புக் செம்ம” என்றபடி ஓட்டமாய் வந்து மூச்சுவாங்க நின்றவளைத் தொடர்ந்து வந்த கவிதா, “கிளாஸுக்கு போகனும்டி பக்கி” என்று கூற,
“ஓய்.. கிளாஸ் போற நேரம் என்னதிது? போ” என்று அதட்டலாய் கூறினான்.
“ப்ச்.. அய்யோ சீனியர்.. அந்தக் கதையைப் படிச்சுட்டு எனக்குப் பாடமும் ஓடல ஒன்னும் ஏறல.. அதுலயே தான் மிதக்குறேன்..” என்று அவள் கூற,
“இப்படியே சொல்லு.. அடுத்து உனக்கு எந்தக் கதையும் நான் சஜஸ்ட் பண்ண போறதில்ல” என்று கூறினான்.
“முதல்ல அதைச் செய்யுங்க அண்ணா. இவ அட்டகாசம் தாங்க முடியலை. விடிய விடிய விழுந்து விழுந்து படிக்குறா. எக்ஸாமுக்குக் கூட அம்மணி இப்படி படிச்சதில்லை..” என்று கவிதா கூற,
பொற்றாமரையாளை முறைத்தவன், “இந்தச் சேட்டையெல்லாம் பண்ணிட்டு இருக்கியா நீ?” என்றான்.
“ப்ச்.. கவி.. கிளாஸுக்கு லேட்டாகுமாட்டிருக்கு.. கொஞ்சமாது பொறுப்பா இருக்கியா நீயு?” என்று பேச்சை மாற்றியவள், “ஈவினிங் பேசுவோம் சீனியர்” என்றுவிட்டு ஓடியே விட்டாள்.
மாலை நேரம் வந்ததும் புத்தகப்பையை தோழியிடம் கொடுத்துவிட்டு, “நீ காலைல பத்த வச்சதுக்கு என் ஐடிய புடுங்கிட்டு லைப்ரேரியே போகாதனு சொல்லிபுடுவாரோனு பயந்துட்டேன் புள்ள.. போ.. நான் இந்தப் புக்க குடுத்துபோட்டு வாரேன்” என்று கூற, கவிதா சிரித்தபடி சென்றாள்.
அவர்கள் அறையிலிருக்கும் ராதிகா மற்றும் மதுஷாவுக்கு இவள் ஆதியுடன் நெருங்கிப் பழகுவது தவறான கண்ணோட்டமாய் பட்டதால் அவர்கள் பெரிதும் இவளுடன் பேச்சு வைத்துக் கொள்வதே இல்லை. ஆனால் கவிதாவுக்கு இவர்களது பந்தத்தில் அப்படி எந்தத் தப்பான எண்ணமுமே எழுந்ததில்லை.. அதில் தாமரையாளுக்கு இன்னுமின்னும் கவியைப் பிடித்துதான் போனது!
மைதானத்திற்கு வந்தவள், “சீனியர்” என்று உற்சாகமாய் அழைக்க,
“ம்ம்.. வா வா.. உன்னைய பத்தி கம்பிளைன்ட் எல்லாம் பலமா வருதாட்ருக்கு.. என்ன நீ? ஒழுங்கா உங்கி ஒறங்குற நேரத்துல அதை மட்டும் பாரு.. கத படிக்குறது பழக்கமா இருக்கலாம். ஆனா வழக்கமா செய்யுரதை விட்டுபோட்டு அதைச் செய்யக் கூடாது” என்று அறிவுரை வழங்கினான்.
அதில் புன்னகைத்தவள், “சரிங்க சீனியர்.. இனிமே ஒழுங்கா இருக்கேன்” என்று கூற,
“ம்ம்.. எப்படி இருந்தது இந்தக் கதை?” என்றான்.
“சூப்பரா இருந்தது சீனியர்” என்று கண்கள் மின்னக் கூறியவள், அவனுடன் அதுபற்றிப் பேசத்துவங்கிட, அவனும் ஆர்வமாய் பேசினான்.
அவர்கள் பேச்சுகள் யாவும் ஓய்ந்துபோக, “அந்த ஹீரோ மாதிரி ஒருத்தனெல்லாம் கிடைச்சா..ஹ்ம்” என்று கனவுகள் மின்னப் பெருமூச்சு விட்டவளைக் கண்டு அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
“போதும் போதும்.. கண்ண முழிச்சுட்டு கனவு காணாம போய் உங்கிட்டு ஒறக்கத்துல கனவு காணு” என்று அவன் கூற,
“இப்பலாம் எங்கூட பேசுறச்ச நீங்களும் எங்கூரு பாஷைதேன் பேசுதீக சீனியர்” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “அம்மணி என்னை அப்படி ட்ரெயின் பண்ணுதீக. என்ன பண்றது?” என்று கேட்க,
அதில் சிரித்துக் கொண்டவள், “ஏன் சீனியர்.. நீங்க இந்தக் கதைலாம் படிச்சுட்டு கதைல வர்ற ஹீரோயின் மாதிரி பொண்டாட்டி கிடைக்கோனும்னுலாம் கனா கண்டதில்லயோ?” என்று கேட்டாள்.
சாதாரணமாக அவள் கேட்ட அந்தக் கேள்விதான் அவன் மனதில் அவள் மீதானக் காதலை விதைக்கும் முதல் வித்தாக அமையுமென்று அவள் அறிந்திருக்கவில்லை.
சிரிப்போடு தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டவன், “தெரியலை.. படிப்பேன் ரசிப்பேன்.. இப்படி யோசிச்சதில்லை..” என்று கூற,
“உம்..” என்றவளும் புறப்பட்டிருந்தாள்.
அன்று இரவு உறங்கும் முன் புத்தகத்தை எடுத்து அமர்ந்தவனுக்கு, ‘கதைல வார ஹீரோயின் போலப் பொண்டாட்டி வரனுமுனு கனா கண்டதில்லையோ?’ என்று அவள் கேட்டக் கேள்வி தான் நினைவில் வந்தது.. உடனே அவள் முகமும்!
காரணமேயின்றி மனதில் ஒரு இதமும், குளிர்வும், புன்னகையும் தோன்றிட, அப்படியே கதையில் மூழ்கிப் போனான்.
அங்கு அவளது அறையில் காரசாரமான விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.
“நீ போய் ஆர அமர லவ் பண்ணிட்டு வருவ, உனக்கு நாங்க எல்லாம் வாங்கி வைக்கனுமா?” என்று மதுஷா பொறிந்து தள்ள,
கலக்கத்துடன் நின்றிருந்த கவிதா, “ஏ மது.. ஏன்டி இப்படி சொல்ற?” என்றாள்.
அவர்களது விடுதியில் இரவு ஏழரை மணிவரை வெளியே சென்றுவர அனுமதி உண்டு.. விடுதி வந்தவுடனே படிக்கச் சில வேலைகள் இருப்பதால் படிக்கும் கூடத்தில் அமர்ந்திருந்தவள் கவிதாவிடம் மதுவை உணவு வாங்கி வைக்கும்படி கூறச் சொல்லியிருந்தாள்…
ஆனால் மதுவோ முடியவே முடியாதெனச் சண்டை பிடித்திருக்க, தோழி சென்று வெகுநேரம் ஆனதில் தாமரையாளே எழுந்து அறைக்குச் சென்றாள்.
தானே சென்று உணவை வாங்கி வந்திருந்த கவிதாவைப் பார்த்து அவள் புரியாது விழிக்க, மது தனது வால்வீசும் பேச்சைத் துவங்கியிருந்தாள்.
“நீ சும்மாரு கவி.. உனக்கு வேணும்னா உன் ஃபிரெண்டு செய்றதுக்கு எதும் சொல்லாம ஏவல் வேலை செய்யப் பிடிச்சிருக்கலாம்.. இப்படி தேவையில்லாத ரீசன்ஸ்காக எங்களாலலாம் அவளுக்கு வேலை செய்ய முடியாது” என்று கூறிய ராதிகாவும், மதுவும் அவள் அப்போதுவரை ஆதியுடன் பேசிவிட்டு திருட்டுத்தனமாய் விடுதி வந்ததாகத்தான் நினைத்திருந்தனர்.
அங்குள்ள காதலர்கள் பலருக்கு அதெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால், தாமரையாளையும் அப்படியே நினைத்திருந்தனர் இருவரும்.
கலக்கமாய் நின்ற கவிதா, “ஏ அப்படிலாம் இல்லடி.. அவங்க ரெண்டுபேரும்..” என்று முடிக்கும் முன்,
“லவ்வே பண்ணாலும் உங்களுக்கு என்ன?” என்று தாமரையாள் கேட்டிருந்தாள்.
மூவருமே அவளை அதிர்ந்து நோக்க,
“ஒரு பொண்ணு லவ் பண்றதை வச்சு அவ கேரெக்டர அஸாஸினேட் பண்ணுறது தப்புனு பட்டனத்தாளுக உங்களுக்கே புரியலைனு நினைக்கையில வெசனமாத்தேன் இருக்குது புள்ளைகளா.. நானும் அவரும் புத்தக விரும்பிகள்.. படிச்ச புத்தகத்தைபத்தி நாலு வார்த்தை பேசிக்கிடுதோம்.. அதை நீங்களா கண்ணும் காதும் வச்சு தப்பா சித்தறிச்சா அது அப்படியே இருந்துட்டு போகட்டும். எனக்கு எந்தக் கவலையும் இல்ல” என்றவள் எழுந்து சென்றாள்.
மதுவையும் ராதிகாவையும் பார்த்து வருத்தமான முகத்துடன், “இனியாச்சும் யோசிச்சு பேசுங்கபா” என்ற கவி வெளியே வர,
உப்பரிகையில் கைப்பிடி கம்பிகளைப் பற்றிக் கொண்டு தாமரை நின்றிருந்தாள்.
“நீ படிச்சுட்டுதான் இருந்தனு சொல்லிருக்கலாம்ல.. அவங்க நீ அண்ணாகூட பேசிட்டு இப்பதான் வந்தனு நினைச்சுட்டு கத்திட்டாங்க” என்று கவி கூற,
“அவிங்க கற்பனைக்கெல்லாம் வெளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லைடி கவி.. என்ன நினைக்குறாங்களோ அது அவங்க சம்மந்தப்பட்டது.. என்னைய பத்தி யார் என்ன தப்பா பேசினாலும் போய்ச் சண்டையெல்லாம் போட்டுகிட்டு இருக்க பிடிக்காது.. அவன் அவன் கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்தாதேன் அவங்க பேசுறதை நான் ஏத்துகிடுறதா ஆகும். என்னைச் சார்ந்த நீ என்னைத் தப்பா நினைக்காதப்போ எனக்கு அடுத்தவங்க கருத்துக்கள் முக்கியமில்ல புள்ள” என்றவள், “காதல் தப்பில்லடி கவி.. ஆனா இந்த ஜெனரேஷன் காதலுக்கு தப்பான கோனத்தை காட்டிபோட்ருச்சு” என்றாள்.
அவள் தோளைத் தட்டிக் கொடுத்த கவி, “சாப்பிட வாத்தாமரை” என்க,
“ஆமாபுள்ள.. பசிக்குது.. வா வா” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்ட பெண் அவளோடு உள்ளே சென்று உண்டு உறங்கினாள்.
-தொடரும்...
நாணல்-08
மடியில் கிடக்கும் புத்தகத்தோடு ஒன்ற முடியாமல் உப்பரிகை முடிவிலிருக்கும் தேக்குமர ஊஞ்சலில் அமர்ந்தபடி இலக்கின்றி வெறித்துக்கொண்டிருந்தாள் பொற்றாமரையாள்.
அவள் அருகே வந்து யாரோ அமர்ந்ததில் ஊஞ்சல் அசையவும் நிலை வந்தவள், தன்முன் நீட்டப்பட்ட பழச்சாற்றைக் கண்டாள்.
“இது நீங்கதேன் இப்ப குடிக்கனுமாட்டிருக்கு” என்று தாமரையாள் கூற,
“முழுகாம இருக்குறவகதேன் பழச்சாறு குடிக்கோனும்முனு சட்டம் இல்லைங்க சித்தி” என்று திலகா (முதல் அண்ணனின் இரண்டாம் மருமகள்) கூறினாள்.
“எனக்கு வேணாம் திலகா.. நீ குடி” என்று தாமரையாள் கூற,
“சரிதேன்.. அக்கா அதையே குடிக்கட்டும்.. நீங்க இதைக் குடிங்க” என்று இன்னொரு பழச்சாறு குவளையுடன் அங்கை வந்தாள்.
அதில் லேசாய் புன்னகைத்த திலகா, “இந்தா வந்துடுச்சுல்ல.. வாங்கி குடிங்க” என்று கூறி, “உனக்கெங்க அங்கை?” என்று வினவ,
“நாங்குடிச்சுபோட்டுதேன் இவுகளுக்கு எடுத்து வந்தேனுங்க க்கா” என்றாள்.
அங்கையிடமிருந்து குவளையை வாங்கிய தாமரையாள், “உனக்கு ரிசல்டு எப்போ வாருது அங்கை?” என்று வினவ,
“அத்தைக்கும் மருமகேனுக்கும் இதைவிட்டா வேற கேள்வியே இல்லை போல.. இப்பதேன் அவரு கேட்டுபோட்டு கிளம்பினாரு.. அதுவர இன்னும் நா(ள்) கிடக்குது சித்தி” என்றாள்.
அங்கையை ஜாதகம் காட்டிதான் படிக்கும்போது கல்யாணம் செய்து வைத்தனர். அவளைத் திருமணம் செய்ததோடு அவள் பொறுப்பையும் தனதாக்கிக் கொண்ட ஆருத்ரன் அவளது இளநிலை பட்டபடிப்பை முடிக்க வைத்ததோடு இல்லாமல் மேற்படிப்பும் படிக்க வைக்கின்றான். இன்னுமே ஒரு பருவ படிப்பு மிச்சம் இருப்பதால் தான் அவர்களது குழந்தை செல்வத்தினையும் தள்ளி வைத்திருக்கின்றனர் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் அதுகுறித்து கேட்காமல் நாகரீகமாகவே நடந்துகொள்வர். அதற்குக் காரணமும் பொற்றாமரையாள் தான்.
உறவினர் வீட்டு பெண் ஒருவருக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்களாய் குழந்தை இல்லாததைப் பற்றி அர்ச்சனாவும் அம்பிகாவும் பேசிக் கொள்வதைக் கேட்டவள் அது நாகரீகமற்ற செயலென்று பொறிந்து தள்ளினாள்.
அவளுக்குப் பிடிப்பதில்லை என்பதற்காகவே அச்செயல் துறந்து நாகரீகத்தைப் பழகிக் கொண்டனர் அப்பெண்மணிகள்!
தாமரையாள் மடியில் கிடக்கும் புத்தகத்தை எடுத்துப் பார்த்த அங்கை, “எப்படி சித்தி இம்பூட்டு பெரிய புஸ்தகமெல்லாம் படிக்கீக? பாடம் படிக்கவே அழ வருது எனக்கெல்லாம்.. கதையெல்லாம் பொறுமையா எப்படிதேன் படிக்கீகளோ?” என்று கேட்க,
“இது பாடம்போல இல்ல அங்கை.. நிகழ் உலகத்துலருந்து உன்னைய வேறெங்கானும் கூட்டிகிட்டு போயிடும்” என்று திலகா கூறினாள்.
அவளும் புத்தக விரும்பி என்பதால் அதை ரசித்துக் கூறிட, மெலிதாய் புன்னகைத்த தாமரையாளுக்கு அழையா விருந்தாளியாய் அந்நினைவுகள் உதித்தன…
கிட்டதட்ட அவளது இரண்டாம் கல்லூரி ஆண்டு முடியும் தருவாய் அது.. இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயலவேயில்லை என்றாலும், தங்களின் சந்தோஷங்களைப் பகிர்ந்து அதில் சந்தோஷம் அடையுமளவு நெருங்கி வந்திருந்தனர்.
அன்று அவர்கள் படித்த ஒரு புத்தகத்தினைப் பற்றிய சூடான விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.
“கரிசனத்துனால வாரக் காதல் எப்படி நெலச்சு (நிலைத்து) நிக்கும்??” என்று ஆதிவருணேஷ்வரன் கேட்க,
“ஏன் நெலைக்காதுனு சொல்லுதீக சீனியர்?” என்று கேட்டாள்.
“ஆமா.. இன்னிக்கு அவமேல பாவப்பட்டு கரிசனத்தால உருவாகுற காதல் நாளைக்கு அந்த நிலை மாறினதும் எப்படி இருக்கும்?” என்று ஆதி கேட்க,
“ஒருத்தரை பார்த்துப் பிடிச்சுபோய் காதலிச்சு கல்யாணம் பண்றாங்க.. கல்யாணத்துக்கு பெறவு காலங்கள் ஓட அழகு இல்லாமதானே போவுது.. அழகில்லாம போறதால அந்தக் காதல் அழிந்துபோயிடுதா என்ன?” என்று கிடுக்குப்பிடி போட்டாள்.
“அதுவும் இதுவும் ஒன்னு இல்லமா” என்று அவன் கூற,
“ஒன்னுதேன் சீனியர்.. பரிதாபமான நிலையில அவளைக் கேலி செய்ய நெனைக்காம, தனியா வாடுறவளுக்கு தோள் குடுக்க தானே நினைக்குது அவேன் காதல்.. அந்த எடத்தில் அந்தக் காதல் எனக்கு உயர்வாதேன் தெரியுது!” என்று கூறினாள்.
“சீ(பார்).. நீ சின்னப் பொண்ணு.. அதேன் சைல்டிஷா பேசுற.. பரிதாபத்தினால் வரும் காதல் நிச்சயமா நிலைகக்வே நிலைக்காது.. அப்படியொரு காதலை எந்தக் காதலரும் ஏற்க மாட்டாய்ங்க..” என்று அவன் ஆணித்தரமாய் கூற,
“அப்படியெல்லாம் கிடையாது சீனியர்.. பரிதாபமான சூழ்நிலையில் நமக்குத் தோள் குடுக்க யாராவது வந்திட மாட்டாங்களானு தான் மனசு தேடும்..” என்று கூறினாள்.
“இல்லமா.. நம்மள பாத்து பரிதாபப்பட்டு யாரும் வரக்கூடாதுனு தான் எப்போவுமே நினைக்கத் தோன்றும். என்னைகேட்ட அந்தப் பையனுக்கு அந்த இடத்தில் உருவானது கரிசனம்னு தான் சொல்லுவேன்.. அது காதலே கிடையாது” என்று அவன் கூற,
“ஸ்டாப்பிட் சீனியர்” என்றாள்.
அத்தனை நேரம் தன் வாதத்தை ஆணித்தரமாகக் கூறிக் கொண்டிருந்தவன் அவள் கோபத்தில் ஒருநொடி அதிர்ந்து போக,
“அவனோட காதலை காதலே இல்லைனு சொல்ல உங்களால எப்படி முடியும்? ஒருத்தரோட கேரெக்டரயோ ஃபீலிங்ஸயோ தவறா சொல்லுத ரைட்ஸ் உங்களுக்கு நிச்சயமா கிடையாது. கரிசனத்தாலோ பரிதாபத்தாலோ வந்த காதல உங்களால ஏத்துக்க முடியாதுனு சொல்லுங்க.. சரி அது உங்க கருத்துனு கேட்டுபோட்டு போறேன்.. அது காதலே இல்லை அப்படி இப்படினு சொல்லாதீக.. ஒருத்தரோட உணர்வுகளை மதிப்பிடுற ரைட்ஸ் உங்களுக்குக் கிடையாது.. நீங்கச் சொல்றது வெறும் கதாபாத்திரத்தை இல்ல.. அதுக்கு எழுத்தால உசுரு கொடுத்த ஒரு எழுத்தாளரோட ஒழைப்ப.. கதாபாத்திரமா அது இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தோட நெச உருவம் இங்க பல எடத்துல வாழ்ந்துட்டுதேன் இருப்பாங்க.. அவங்க அம்பூட்டு பேரோட காதலையும் நீங்க அசிங்கப்படுத்துறீக” என்று பொறிந்தாள்.
“நீ எப்படி வேணா நெனச்சுகிடுமா.. ஆனா அதுதேன் நெசம்.. பரிதாபம் பட்டுக் கரிசனந்தேன் வரும்.. காதலெல்லாம் வராது” என்று அவனும் காட்டமாகவே கூற,
“போதும் நிறுத்துங்க சீனியர்..” என்றவள் அவனுடைய புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்டு விறுவிறுவென எழுந்து சென்றாள்.
அவள் கூறிய கூற்றை ஏற்க முடியாத ஆடவனும் எரிச்சலான உணர்வோடு எழுந்து சென்றுவிட, அழகாய் அவர்களுக்குள் ஓடிக் கொண்டிருத்த நீரோடை ஒன்று கல் எறிந்ததைப் போன்று கலங்கி நின்றது!
அந்த வாரம் முழுதும் கூட, அவனை எங்குப் பார்த்தாலும் சென்று பேசிடாது இறுக்கமான முகத்துடனே அவள் கடந்து சென்றிட, அவளது இறுகிய முகம் கொடுத்த புரிந்தரியா கோபத்துடன் அவனும் கடந்து சென்றிருந்தான்.
வாரம் கடந்து நாட்களுக்கு வித்திட, கோபம் கரைந்தபோதும் மற்றவர் கூற்றை ஏற்க முடியாத பிடிவாதம் இருவரிடமும். ஒரு கதை படித்து வாதிட்டதுக்கா இத்தனை கோபம்? என்றால் ஆம்! நாம் ரசித்துப் படித்த கதைகளில் நமக்குப் பிடித்த கதாபாத்திரங்களுக்கு நிகழும் அநீதிகளை ஏற்க முடியாததன் வெளிப்பாடே அது!
கதை படித்து அதில் உள்ள கதாபாத்திரங்களின் இறப்பில் நாம் கண்ணீர் வடிப்பதில்லையா? ஏன்? கதை படிக்கும்போது அக்கதைக்குள் பயணித்து நாமும் அக்கதாபாத்திரமாகவோ, அப்பாத்திரத்திற்கு வெகுநெருக்கமானவராகவோ மாறிவிடுவதே கதை விரும்பிகளின் இயல்பு.. அப்படியான நிலையில் அப்பாத்திரத்திற்கு நேரும் அனர்த்தம் நமக்கே நேர்வதைப் போல் சுட்டுவிட, அதில் நமது உணர்வுகளும் சிக்கிவிடுகின்றன…
ஒரு கட்டம்மேல், ‘அவள் சின்னப் பெண்தானே.. தானும் கோபம் கொண்டு விலகுவதா?’ என்று தோன்றியபோதும் தானாக முன் வைக்கத் தயங்கி நின்றான், ஆதி.
அந்தக் காலமெல்லாம் பெயர் தெரியாத உணர்வின் அவஸ்தையில் அவன் சிக்கித் தவித்த அழகிய, பொல்லாத காலம்…
அவளுக்குமே தான் சண்டையிட்டது அதிகப்படியாகத் தோன்றியபோதும் தன் கருத்துக்களில் மாற்றம் இருக்கவில்லை.. இருப்பினும் இந்தத் தற்காலிக பிரிவு அவளுள் என்னவோ செய்தது!
பத்து நாட்கள் கடந்திட்ட நிலையில், அவனை ஒருநாளைக்கு ஒருமுறையாவது கண்டும் காணாது திரும்பிவிடுபவள், இரண்டு நாட்களாகக் காணவே இயலாமல் தடுமாறினாள்.
இரண்டு நாட்கள் அவனைக் காணாததன் விளைவு மூன்றாம் நாள் அவனைத் தேட வைத்தது!
“சீனியர ரெண்டு நாளா ஆளையே காணுமாட்டிருக்கேடி.. ஆர்கெஸ்ட்ரா ரூம்ல எங்கேனும் பாத்தியா?” என்று கவிதாவிடம் தாமரையாள் வினவ,
“யாரோ சண்டைனு சொன்னாங்க?” என்று கவிதா கேலி செய்தாள்.
“ப்ச்.. சொல்லட்டி” என்று தாமரையாள் கேட்க,
“தெரியலைடி.. நான் பாக்கலை” என்றாள்.
அது அவளை மேலும் சோர்வாக்கியது… அன்றாடம் நூலகம் செல்பவள் அந்தப் பெரிய நூலகத்தை நான்கு முறையேனும் சல்லடையிட்டே ஓய்ந்தும் ஓயாது திரும்புவாள்.
மன சஞ்சலங்கள் இருந்தால் அதனிலிருந்து தப்பியோடும் பற்றுகோலாய் இருந்த புத்தகம் கூட, அவளுக்கு இந்த ஒரு வாரமாய் சளித்துப் போனது.
அந்த வார இறுதி மனமேயின்றி வீட்டிற்கு புறப்பட்டவள், தனது மனம் நிறைக்கும் தனது இல்லத்தில் கூட, ஒன்ற இயலாததில் தவித்தாள்!
“என்னடா.. முகமே வாட்டமா இருக்குதாட்ருக்கு?” என்று தடாதகை நாச்சியார் அவள் தாடை பற்றி வினவ,
“ஒன்னுமில்ல அண்ணி.. ஒரு பிரெண்டு கூடச் சண்டை” என்று உண்மையையே கூறினாள்.
“அதுசரி.. பிரண்டு கூடதானே சண்டை.. ஏதோ புருஷன் கூடச் சண்டபோட்ட கணக்கா முகத்த இடிச்சு வச்சிருக்கியே தாயி..” என்று அர்ச்சனா தேவி வினவ,
அவள் மனம் ஒருநொடி அதிர்ந்து மீண்டது.
“ஏன்? புருஷங்கூட சண்டனாதேன் மூஞ்சிய தொங்க போட்டுகிடனுமாக்கும்?” என்று அவள் கேட்க,
“இல்லதேன் தாயி.. ஒரு பேச்சுக்குச் சொன்னேன்” என்று பின் வாங்கிக் கொண்டார்.
தன் காதலாய் அவள் பாவித்த புத்தகம் கூட, அவளது துயரில் துணை கொடுக்க இயலாது நின்றது! துயர் கொடுத்தோனே அதைப் போக்கிட வேண்டிதான் அவள் மனம் கெஞ்சியதோ?
அலைப்பேசியை எடுத்தவள் கவிதாவுக்கு புலனத்தில் குறுஞ்செய்தி அனுப்பி தன்னை நிலைப்படுத்த முயற்சித்து, அங்கேயும் சென்று அவள் புலம்பல்களையே கொட்டினாள்.
“தாமரை.. வுடுடி.. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த அண்ணா படிச்சே முடிச்சுட்டு போயிடுவாங்க.. அப்பறமெல்லாம் உன்னால பாக்கவே முடியாது.. அது இப்போருந்தே நடக்குதுனு நினைச்சுகிடேன்” என்று கவி கூறியதில் உறைந்துதான் போனாள்.
அதை நினைத்து நினைத்து அன்றைய இரவின் தூக்கத்தையே தொலைத்தாள் என்றாலும் மிகையாகாது…
சோர்வோடு சோர்வாய் அவ்விடுமுறையை கடந்தவள் கல்லூரிக்குச் சிட்டாய் பறந்திருந்தாள். நெஞ்சை முட்டிய புரிந்துகொள்ள இயலாத துக்கம் அவ்வப்போது காரணமேயின்றி அவள் கண்களையும் நிறைத்தது..
விளைவு மறுநாள் மாலை அவனைக் கண்டதும் அவனிடம் விரைந்து சென்று அழுதேவிட்டாள்.
-தொடரும்...
நாணல்-09
தன் முன் அமர்ந்து விக்கி விக்கி அழுபவளை புரிந்தறியா உணர்வோடுப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி. அவள் அழுவதைப் பார்க்கப் பாவமாயக இருந்த அதே நேரம் அவனுக்கு உள்ளுக்குள் சற்றே மகிழ்ச்சியாய் இருந்ததே உண்மை… அவள் உதிர்க்கும் கண்ணீர் அவனுக்கானதல்லவா!?
“இன்னும் எவ்வளவு நேரம் அழுதுட்டே இருக்கப் போற?” என்று அவன் வினவ,
கண்ணீரை துடைத்துக் கொண்டே அவனை நிமிர்ந்து நோக்கினாள்.
அவளது கலங்கிய விழிகளும் அவனது கருணை நயனங்களும் ஒன்றை ஒன்று எதிர்நோக்கி சில வினாடிகள் உறவாடியதுவோ!?
ஆழ்ந்த அந்தப் பார்வையோடு இருவரும் ஒன்றுபோல்,
“சாரி..”
“சாரி”
என்றனர்.
அதில் ஆடவன் சிரித்துக் கொள்ள, அவளும் மெல்லிய புன்னகையோடு கன்னம் துடைத்தாள்.
“நான் அன்னிக்கு கொஞ்சம் ரூடா நடந்துகிட்டேன். அடுத்தாவது ஓகே ஆயிறுக்கோனும்.. ஆனா என்னமோ கோபத்துல உங்களைப் பாத்தா கூட வந்து பேசத்தோனலை.. சாரி சீனியர்” என்று அவள் கூற,
“நீ சொன்ன பாயிண்ட இப்பவும் என்னால ஏற்க முடியலை. எனக்கு இருப்பதைப் போலத்தானே உனக்கும் இருக்கும்? அதுமட்டுமில்லாம.. நீ சொன்னதை என்னால ஏற்க முடியாதுனாலும் ஒரு விஷயம் சரியானது. எனக்கு நம்பிக்கை இல்லைனு நான் சொல்லிருக்கலாம்.. ஆனா அது காதலே இல்லைனு நான் சொல்லிருக்கக் கூடாதுதானே.. அடுத்தவர்களோட நம்பிக்கைய பொய்னு சொல்றது தப்புதான்னு புரிஞ்சுது” என்றான்.
அவள் ஏதும் பேசாமல் அவனையே நோக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
இருவரும் அவரவர் கருத்தில் மாற்றம் கொள்ளவில்லை, நடந்துகொண்ட விதத்திற்கே மன்னிப்பு வேண்டிக் கொண்டனர்…
“மூனு நாளா உங்கள ஆளையே காணுமே சீனியர்? எங்க போயிருந்தீங்க?” என்று கேட்டவள் குரலில் இருந்ததெல்லாம் அப்பட்டமான ஏக்கம் தான்…
அது அவனை இதமான உணர்வில் விரும்பியே தள்ளிவிட்டுச் சுகம் காண வைத்தது!
“உடம்பு சரியில்லைமா.. ஹாஸ்பிடல்ல இருந்தேன்” என்று அவன் கூற,
அதிர்ந்து நோக்கியவள், “என்னாச்சு சீனியர்?” என்றாள்.
“ஃபீவர் தான்மா.. ரொம்ப டிஸ்ஸியா (மயக்கமா) இருந்தது. ரூம் மேட் ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தான். ஃபீவர் அதிகம் இருக்குனு அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க” என்று அவன் கூற,
“அச்சுச்சோ.. இப்ப பரவால்லயா சீனியர்?” என்றாள்.
அவன் நெற்றி தொட்டு பரிசோதித்திட எழுந்த கரங்களைத் தானே கட்டிவைத்துக் கொண்டாள்!
“இப்ப ஓகேதான்” என்று அவன் கூற, மெல்ல தலையசைத்தாள்.
இருவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.
அவன் இல்லாது தான் உணர்ந்த தவிப்பும், அவனைத் தேடிய தன் கண்களின் தேடலும், தனக்கு மலையளவு சோகத்திலும் மன நிம்மதியளிக்கும் குடும்பத்தாரின் மத்தியிலும்கூட உணர்ந்த அந்த வெற்றிடமும், அவனோடு பேசிவிட்ட நொடி தவிடுபொடியாய் ஆன மன உணர்வுகளும் என அந்த மாய செயலை மனதோடு அவதானித்தப்படி அவள் அமர்ந்திருக்க,
அவள் பேசாது சென்றபோது எழுந்த புரிந்தறியா கோபமும், மருத்துவமனையில் சேர்ந்தபின் ‘தன்னை அவள் தேடுவாளோ!?’ ‘அவளுக்காக யார்மூலமாவது செய்தி அனுப்பலாமா?’ ‘தன்னைப் பார்க்க அவள் வந்தால் நன்றாக இருக்குமே?’ என்று அவன் எண்ணியவையும், தற்போது தனக்காகவென்று கண்ணீர் வடித்த முதல் ஜீவன் அவளென்று உருவான சில்லென்ற உணர்வும் எனத் தன்னுணர்வை ஆராய்ந்தபடி அவனும் அமர்ந்திருந்தான்.
“சீனியர்.. உங்ககிட்ட ஃபோன் இருக்கும்ல?” என்று மெல்லொலியில் அவள் வினவ,
அவளை ஆழ்ந்து பார்த்துபடி “இருக்கே” என்றான்.
“நம்பர் தாங்கச் சீனியர்.. எதாவது ஆத்திரம் அவசரம்னா கேட்டுபோட்டுக்க பயன்படுத்திகிடுதேன்” என்று அவள் கூற,
மனதோடு சிரித்துக் கொண்டவன் தனது எண்ணை அவளிடம் கொடுத்தான்.
இந்த இரண்டு வருடங்களில் அவனிடம் கேட்டு அவள் பெற்றுக் கொள்ளும் முதல் உரிமை! அவனுக்குள் இன்பமாய் திழைத்தது!
“பை சீனியர்..” என்றுவிட்டு சென்றவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க,
மைதானத்தின் முடிவுவரை சென்றவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அத்தனை தொலைவிலும் கூட அவன் கண்களில் ஏதோ பளபளப்பு தோன்றிய உணர்வில் அவள் உடல் சிலிர்த்து அடங்கிட, விறுவிறுவென அங்கிருந்து ஓடியே விட்டாள்!
கல்மேடையில் அப்படியே மல்லாந்து படுத்தவன் இதழில் அழகினும் அழகாய் ஒரு புன்னகை தோன்றிட, மனதில் சொல்லொண்ணா இதம் பரவியது!
அந்த இதத்தினை அவன் ஆழ்ந்து அனுபவித்து முடிப்பதற்குள் அந்தக் கல்லூரி ஆண்டும் முடிவடைந்திருந்தது!
ஊருக்கு செல்லவிருப்பதன் முந்தைய நாள் அவனைக் காண வந்திருந்தாள் பெண்.
கண்கள் நிறைத்த கண்ணீரை அப்படியே தேக்கி வைத்துக் கொண்டு அவன் முன் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள்.
நெஞ்சில் சொல்லொண்ணா கனமும் வேதனையும் வலியும் அவளைப் படுத்தி எடுக்க, அவனை விட்டு பிரியப் போகும் எண்ணமே அவளை என்னவோ செய்தது!
அவளுக்கு மட்டுமா? அவனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது.. ஆனாலும் கூட கடந்து சென்றுவிட்டால் இருவருமே மறந்துவிடலாம் என்று தான் நினைத்தான். அவள் மீது இருந்த புரிந்தரியாத உணர்விற்கு காதல் என்று பெயர் வைத்திட அப்போது அவனுக்குத் தோன்றவில்லை.. தோன்றவில்லை என்பதைவிட அதைபற்றி நினைப்பதற்கு அவன் விளையவில்லை என்று கூறலாமோ!?
“அ..அப்றம்?” என்று அவன் துவங்க,
“அடுத்து என்ன பண்ண போறீங்க சீனியர்” என்று குனிந்த தலை நிமிராது கரகரத்த குரலில் கேட்டாள்.
“வேலைக்கு தான்மா.. அல்ரெடி யூஜி முடிச்சு வர்க் பண்ண கம்பெனில ஜாயின்ட் பண்ணனும். ஆனா என்னோட ஆசையே கோவைல ஒரு கம்பெனி இருக்கு.. அங்க வேலைப் பார்க்குறது தான்.. ட்ரை பண்ணனும்” என்று அவன் கூற,
“ம்ம்..” என்றாள்.
“நான் யூஜி முடிச்சு ரெண்டு வருஷம் வேலைப் பார்த்துட்டு அப்பறம் தான் பீ.ஜீ படிக்க வந்தேன்” என்று அவனாகவே அவனைப் பற்றிய தகவலைக் கூற,
“ம்ம்” என்றாள்.
அவள் நிலையை அவதானித்தபடி அமர்ந்திருந்தவன், “நல்லா படிக்கனும் சரியா?” என்க,
“ம்ம்” என்றாள்.
“நைட்டெல்லாம் முழிச்சுட்டே கதை படிக்கக் கூடாது.. நான் கவிகிட்ட கேட்பேன்” என்று அவன் கூற,
அதற்கும் “ம்ம்” என்றாள்.
லேசாய் புன்னகைத்தவன், “நாளைக்கு ஊருக்குப் போற தானே?” என்று கேட்க,
அதற்கும் “ம்ம்..” என்றாள்.
“ம்ம் ம்ம் தான் சொல்லப்போறேனா எதுக்கு பேசிக்கிட்டு.. கிளம்பிப் போ” என்று அவன் கோபித்துக் கொள்வதைப் போல் விளையாட்டாய் கூற,
“வி..வில் மிஸ் யூ சீனியர்.. அடிக்கடி மரத்தடில உட்கார்ந்துகிட்ட உங்க கூட பாட்டு கேட்குறது, உங்கள பாடச்சொல்றது, கதை படிச்சு நாம பேசிகிடுறது, சண்டை போட்டதுனு.. எ..எல்லாம் மிஸ் பண்ணுவேன்” என்று கலங்கியபடியே கூறினாள்.
அவனுக்கு ஒரு நொடி மூச்சு முட்டுவதைப் போன்று இருந்தது!
அவளது கண்ணீரும் தவிப்பும் அவனுக்கானதாயிற்றே!
அவன் அமைதியாய் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க என்னை மிஸ் பண்ண மாட்டீங்களா?” என்று கேட்டாள்.
அதில் மேலும் உள்ளுக்குள் அதிர்ந்தவனுக்கு என்னவோ உடைவதைப் போன்றுதான் இருந்தது!
“அ..அது..” என்று தடுமாறியவன் அவள் ஆழிபோன்ற நீர் தேங்கிய நயனங்களைக் கண்டு, “கண்டிப்பா மிஸ் பண்ணுவேன் யாழ்” என்று ஆழ்ந்த குரலில் கூறிவிட,
அழுதபடியே எழுந்து சென்றிருந்தாள்.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தன் கன்னத்தில் ஏதோ படர்வதை உணர்ந்து தொட்டுப் பார்க்க, அவன் விழிகளிலிருந்து துளியளவு கண்ணீர் உருண்டு உறவாடிக் கொண்டிருந்தது!
மனதில் எழுந்த உணர்வுகள் கூறிவிடாத பலவற்றை அக்கண்ணீர் கூற, திடுக்கிட்டுத்தான் போனான்!
விடுதியை அடைந்தவள் விடுதியின் பூங்காவிலேயே அமர்ந்துவிட்டாள்.
கல்மேடையில் முட்டுகளைக் கட்டிக் கொண்டு அழுதவள் கெட்டியாய் கையில் பிடித்திருந்த பேசியின் ஓசையில் நிமிர்ந்தாள்.
அழைந்திருந்தது அக்னியே!
உடனே அழைப்பை ஏற்றவள் “அ..அண்ணா..” என்று அழ,
பதறிப்போன அக்னி, “ஆத்தே.. எங்கம்மா.. என்னத்தா ஆச்சு?” என்றான்.
நடந்தவற்றைக் கூறியவள், “அ..அவுக போறாக அண்ணா.. நா.. நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று விசும்ப,
தங்கையின் மனநிலை அவனுக்கு தெளிவாகவே புரிந்தது.
நேசம்… அளப்பறியா நேசம் கொடுத்த வலியே அது… ஆனால் அது காதலாய் கனிய வேண்டுமா, இல்லை வெறும் பெயரில்லாத பந்தத்தின் ஆழ்ந்த நேசமாய் இருக்க வேண்டுமா என்பது அவள் மனம் தானே தீர்மானிக்க வேண்டும்!?
“ஆத்தா.. எங்கம்மா.. அழுவுறத நிறுத்துத் தாயீ.. படிச்சு முடிச்சுபோட்டு எல்லோரும் ஒருநா(ள்) அவுகவுக ஊர பாத்து சேரத்தானே போறாக? அதுதானேத்தா பிராக்டிகல்.. அவுக மேல முன்னேறி போவ வேணாமா? ஏதோ புடிச்ச கம்பெனிக்கு போவனும்முனு அவுகளுக்கு ஆசைனு சொல்லுதியே? அவுகளுக்கு அதுல வேலை கெடைக்கோனும்முனு வேண்டிகிடு தாயீ.. உன் வேண்டுதல் நடக்க அவுக அங்கருந்து கிளம்பி வேலை வெட்டினு இருந்துதேன் ஆவனும்” என்று அக்னி கூற,
விசும்பியபடி, “ச..சரிண்ணே” என்றாள்.
“என் தங்க புள்ளையில்ல? அழுவாத தாயீ.. கண்ணை துடைச்சுபோடு” என்று அக்னி கூற,
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அவள் அழைப்பை துண்டித்ததுமே அதிவீர பாண்டியனிடமிருந்து அழைப்பு வந்தது.
மூச்சை நன்கு இழுத்துவிட்டு அழைப்பை ஏற்றவள், “அண்ணே..” என்க,
“எந்தாயீ.. சாப்பிட்டியா கண்ணு?” என்று பாசமாய் கேட்டார்.
“ஆச்சுண்ணே.. நீங்க எல்லோரும் உங்கியாச்சா?” என்று அவள் கேட்க,
“ஏங்கண்ணு கொரலே சரியில்லாட்ருக்கு?” என்று அர்ச்சனாதேவி கேட்டார்.
“இங்கன பிரண்டு படிச்சு முடிச்சுபோட்டு கிளம்புதாக மதணி.. அவுகள பாத்து பேசிபோட்டு வாரவும் அழுகயா வந்துடுச்சு” என்று உண்மையையே அவள் கூற,
“அடடே.. எங்கம்மா சிங்காரீ கண்ணு கலங்குனா இந்த மருத தாங்குமா?” என்று ரணதீரன் கேட்டார்.
அதில் லேசாய் சிரித்தவள், “அதேன் இங்கனவே அழுது முடிச்சுபோட்டு வாரேனாக்கும்” என்று கூற,
“படிப்புனு படிக்க வந்தா முடிச்சுபோட்டு போவத்தேன் வேணுங்கண்ணு.. அவுக நல்ல நெலமைக்கு போவணும், நல்ல வாழ்க்க அமையோனும்முனு வேண்டிகிட்டு மனநிறைக்க அனுப்பி வைக்கனுமில்லயா?” என்று சிம்ம வரதன் வாஞ்சையோடு கேட்டார்.
கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, “புரியுதுங்கண்ணே” என்று அவள் கூற,
“பாவம் புள்ளையே அழுதுகிடக்கு.. இப்பதேன் உக்காந்து பாடம் எடுப்பீகளாக்கும்?” என்று கணவரைக் கடிந்துகொட்ட விஜயலட்சுமி, “கண்ணு.. நீ கிளம்பிவா தாயி.. நானும் நாச்சியும் உனக்கு பிடிச்ச பருப்பு பாயாசமும், பாதுஷாவும் பண்ணி கொடுக்கோம்” என்று கூறினார்.
அதில் கலகலவென்று சிரித்தவள், “சரிங்க மதிணி” என்று கூற,
“இந்தாபாத்தீங்களா.. இப்புடி புள்ளைய நல்லா சிரிக்க வைக்குறதை விட்டுபோட்டு பாடம் எடுக்கீக” என்று விஜயலட்சுமி கூறினார்.
“எங்கம்மா சிங்காரீ.. நீ வாரத்தேன் வீடே காத்துகிடக்குதுத்தா” என்று தீஞ்சுடரோன் கூற,
“நாளைக்கு பொறப்பட்டு வாரேணுங்கண்ணா” என்றாள்.
அப்படியே நண்டு சிண்டு பட்டாளம் வந்துவிட, அவர்களுடனும் அலவளாவிவிட்டு உறங்கச் சென்றாள்.
உறங்கிய பின்பும் கூட உறங்காத மனம் அவனையே அசைபோட்டு அவள் கனவிலும் வந்து துரத்தியது, அக்கள்வனைக் காதலிக்கச் சொல்லி…
-தொடரும்...
நாணல்-10
மாலை நேரம் சமையலறையில் மும்மரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த செழிலன் அருகே வந்த ஆதி, “சும்மாவே இருக்க மாட்டியாடே?” என்று கேட்க,
“போரடிக்குதே மாமா” என்றான்.
“பேசாம செஃப்கு படிச்சிருக்கலாம் நீயு.. என்னேரமும் சமயக்கட்டுலயே கிடக்க” என்று ஆதி கூற,
“சமயலு தெரிஞ்ச பயலுங்களுக்குதேன் மாமா டிமான்டு ஜாஸ்தி” என்று கண்ணடித்தான்.
அதில் சிரித்துக் கொண்ட ஆதி, “அப்ப பொண்ணு பாத்துபுடுவோமா?” என்று வினவ,
“வேணாமுன்னு நாங்க எங்க மாமா சொல்லுதோம்.. பாருங்க.. ஆனா அக்கா தங்கையா பாருங்கனுதேன் சொல்லுதோம்” என்றான்.
“அதுசரி.. பொண்ணு கிடைக்குறதே பெரும்பாடா இருக்குது.. இதுல அக்கா தங்கையாதேன் வேணும்முன்னா நீயும் பொழிலனும் கடைசில சன்னியாசம்தேன் போவனும்” என்று ஆதி கூற,
“ஏம்மாமா? ஒனக்கு எங்கத்த கெடச்சாப்ல எங்களுக்கும் எங்க ராசகுமாரி கெடக்காமலா போயிடப்போறா? எல்லாம் மீனாட்சி பாத்துகிடும்” என்றான்.
அவன் கூற்றில் மலர்ந்திருந்த ஆதியின் முகம் மனையாளின் நினைவில் சுருங்கியது. மனதில் குத்தீட்டிக் கொண்டு கிழிப்பதைப் போன்ற வலியை கடக்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை அவனால்…
வாள் போர் நடத்தியிருந்தாலும் ஆறியிருக்கும்.. இவர்கள் சொற்போர் அல்லவா நடத்தியுள்ளனர்… வார்த்தைகள் வாளாய் மாறி ஒருவரை ஒருவர் பதம்பார்த்துவிட்டதில் வேதனைகளைத் தாண்டிச் சென்று பேசி மீண்டும் காயப்பட்டோ, காயப்படுத்தியோ விடுவோமென்றே அஞ்சுகின்றனர்…
“சாரி மாமா..” என்று செழிலன் மெல்லொலியில் கூற,
அவன் புறம் திரும்பிய ஆதி, கலங்கிய அவன் கண்கள் கண்டு தன்னை நிலைப்படுத்தினான்.
“நெசத்துக்குமே மறந்துபோயிடுது மாமா.. நீ..நீயும் நானும் சகஜமாதேன் பேசுதோம்.. அதுலயே எனக்கு பூசலெல்லாம் மனசுல நிக்க மாட்டேங்குது” என்று வேதனையாய் செழிலன் கூற,
அவன் தோள்களில் தட்டியவன், “இப்படி என்னாலயும் உங்கத்தையாலையும் மறக்க முடிஞ்சா நல்லாருக்கும்டே” என்றான்.
“எல்லாம் சரியாப்போவும் மாமா” என்று செழிலன் கூற,
“ஹ்ம்..” என்றான்.
அங்கு தனதறையில் அங்கை, திலகா, பொழிலனோடு அமர்ந்து அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பொற்றாமரையாள்.
“என்னா கொழுந்தனாரே.. வயலுல வேலையெல்லாம் ஆச்சா?” என்று திலகா வினவ,
“எல்லாம் ஆச்சுங்க அண்ணி.. வேலை நெட்டி முறிக்குது..” என்று கூறினான்.
செழிலன் இருந்திருந்தால் அவனுக்கு இத்தனை சங்கடம் இருந்திருக்காதென்று நினைத்து பொற்றாமரையாள் முகம் வாட,
அதை கண்டுகொண்ட பொழிலன், “ஐத்த.. செழிலன் இருந்தாலும் கூட இம்பூட்டு வேலை இருக்குமேதேன்.. நீ சும்மா வெசனப்படாத” என்று கூறினான்.
அதில் வழுக்கட்டாயமாய் அவள் புன்னகைத்துக்கொள்ளவும்,
“சரி கொஞ்சம் பாட்டு ஏதும் கேட்போம்.. குழந்தைக்கும் நல்லது” என்று அங்கை கூற,
“அதுவுஞ்சரிதேன்.. போட்டுவிடுங்க கேப்போம்” என்று பொழிலன் கூறினான்.
சரியென அங்கையும் தன் அலைப்பேசியில் பாடல்களை ஓடவிட, அதில் கவனமே செலுத்தாதவள் கவனத்தை குறிப்பிட்ட அவ்வரிகள் இழுத்தன…
‘படித்ததெல்லாம்
பாதி மறந்தேன் தேர்வறையில்
மீதி மறந்தேன் நாள் கிழமை தேதி
மறந்தேன் நான் மின்னஞ்சலின்
சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி
அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக்
கட்டி அள்ள மறந்தேன் மறந்தேன்
மறந்தேன் அவனால் மறந்தேன்’ என்ற வரிகளைக் கேட்டதும் அவள் கண்களில் நீர் திரண்டு விட, அன்றைய நினைவுகள் அவளுள் பூவாய் மலர்ந்தன…
அவளது மூன்றாம் கல்லூரி ஆண்டின் பாதியை கடந்திட்ட காலமது…
ஊருக்கு சென்ற பின்பும் கூட வாய் ஓயாமல் தன்னிடம் தோழி புலம்புவதில் கவிதாவுக்குமே கூட அவள் மனம் புரிந்தது. ஆனாலும் அவளாக கூறாது ஏதும் கேட்க வேண்டாமென நாகரீகமாய் நடந்துகொண்டாள்.
மீண்டும் கல்லூரி வந்தபின் பெரும்பாலும் அப்பேச்சுகள் இருக்கவில்லை. ஒருமுறை வாய்விட்டே கவிதா அதுகுறித்து கேட்க, “அவுக நல்லாருக்கனும். அவுகள நெனச்சு புலம்பிகிட்டே கெடந்தா எப்படி நல்லாருப்பாக? அவுக ஆசைபட்டது நடக்கோனும்முனு தெனம் வேண்டிகிடுதேன்டி கவி” என்று கூறியிருந்தாள்.
இருவரிடமுமே அவர்களது அலைபேசி எண் பறிமாறி சேமிக்கப்பட்டே இருந்தபோதும் கூட, அதில் பேசிக் கொள்ள அவர்கள் விளைந்ததில்லை.. தயக்கமோ!?
ஆனால் நாளடைவில் அவன் பால் சாயும் மனதை மட்டும் அவளால் அடக்க இயலவில்லை…
'எனக்கு மட்டும் தான் இப்படியா? இல்ல அவருக்குமா?’ என்ற கேள்வி அவள் மனதை வண்டாய் குடைந்தாலும் கூட, அவனிடம் அதை கேட்டுவிட அவளுக்கு தைரியமேயில்லை!
அங்கு ஆடவனும் பெயரற்ற காதல் நோயில் சிக்குண்டு தவித்தான். அவ்வப்போது தன்னை கட்டுப்படுத்த இயலாத தருணங்களில் புலனத்தில் அவள் சுயவிவரப் புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பான்.
அதில் அழகிய புன்னகையுடன், ரத்த சிவப்புநிறத்தில் பட்டுச்சேலை உடுத்தி, கோவில் தேர் போன்ற கோலத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே அவள் நிற்கும் புகைப்படம் அவனை மென்மேலும் காதல் பித்தேற்றும்…
அந்த பித்து அப்போதே அவளைத் தன்னவளாய் மாற்றிக் கொண்டு, தனக்கென்ற துணை இருப்பதை மனமார உணர்ந்து அவள் மடிசாய்ந்து கரைந்திட கூக்குரலிடும்… அதில் மிக மிக மெல்லிய புன்னகை அவன் இதழில் தோன்றி மறைந்து அவனை மென்மேலும் சிலிர்ப்பூட்டும்!
இரண்டு வருடம் அவளுடன் இருந்தும் உணராதக் காதலை, அவளுடன் இல்லாத இந்த ஆறு மாதம் வலிக்க, இனிக்க உணர்த்தியதென்னவோ அவனால் மறுக்க இயலாத உண்மை தான்…
காதலே விந்தைதானோ!?
இருவரும் நேசத்தினை நெஞ்சில் சுமந்தும்கூட தயங்கியே அதை பரிமாறிக்கொள்ளாமல் விலகியிருந்தனர்…
அவ்வப்போது காலப்போக்கில் தன்னை அவள்(ன்) மறந்துவிடுவரோ என்று நெஞ்சம் அதிரும்.. அப்போதெல்லாம் கட்டுப்பாட்டிலே இல்லாத ஒருதுளி கண்ணீர் கன்னத்தை முத்தமிட்டு காற்றோடு கரையும்.. இருந்தும் மீண்டு வரும் ஏதோ ஓர் நம்பிக்கை, மீண்டும் காதல் பாதையில் மனதை கடத்திச் சென்றிடும்…
இப்படியான மனநிலையிலேயே திழைத்துக் கொண்டிருந்த இருவரில், ஆதி மறைமுகமாய் தன் முதல் படியை வைத்தான்.
அந்த முதல் படிக்கு துணை நின்றதென்னவோ புலனத்தில் அவன் வைக்கும் ‘ஸ்டேடஸ்’ பதிவுகள் தான்…
காலை எழுந்ததுமே வீட்டாட்களுக்கு காலை வணக்கம் போட்டுவிட்டு அவனது எண்ணை ஒருமுறை சும்மாவேனும் பார்வையிட்டுவிட்டு வைத்தால் தான், பொற்றாமரையாளுக்கு நாளே துவங்கும்.
அப்படிதான் அன்றும் சென்று பார்வையிட்டாள். என்றுமில்லாது அன்று அவன் ‘ஸ்டேட்டஸ்’ வைத்திருப்பதாய் பச்சை வட்டம் காட்டிக் கொடுக்க, ஆர்வம் மேலிட அதைத் திறந்து பார்த்தாள்!
‘நீர் அருந்தியும் நின்றிடாதபடி
அவளுக்கு விக்கல் எடுத்திடவேண்டும்...
அவளைத்தவிர எதனையும்
சிந்தித்திட இயலாது
என் சிந்தையில் குடிபுகுந்தோளுக்கு
ஆகச்சிறந்த தண்டனை அதுவே!!!’
என்று அழகிய இதய வடிவங்களுடன் அவன் வைத்திருந்த கவிதையைக் கண்டு மிலிர்ந்த அவள் கண்கள் மேலும் மிலிர்ந்தது இருதியில் அவன் வைத்திருந்த மஞ்சள் நிற இதயம் மற்றும் தாமரை வடிவங்களைக் கண்டு…
'பொற்றாமரையா?’ என்று உள்ளுக்குள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளுக்கு வானை நோக்கி வீலென்று பறந்திட்ட உணர்வு தான்!
அதனை அப்போதே ‘ஸ்கிரீன் ஷாட்' எடுத்து சேமித்துக் கொண்டவள் அன்று நாள் முழுதும் மிக மிக உற்சாகமாக வலம் வந்தாள்.
நாளடைவில் அவன் கவிதை வைப்பதும் அதை சேமித்து வைப்பதுமே அவர்களுக்கு வாடிக்கையாகிப்போனது!
அன்று ‘காதல் ஜோடிகளைக்
கடைக்கண் பார்வையில்
கடந்திடத்தான் நினைக்கின்றேன்;
உன் நினைவுகள் மோதி
நான் தடுமாறி நிற்கும் வரை!’ என்ற அவன் கவிதையைப் பார்த்து புருவத்தூக்கலுடன் அவள் புன்னகைத்துக் கொள்ள, அடுத்த நிமிடமே அடுத்தக் கவிதை ஒன்று வந்தது.
'உன் பாராட்டு எதற்கு?
கடைக்கண் பார்வை போதுமே!
நீ பார்த்துவிட்டாய் என்பதிலேயே
பலகோடி பாராட்டுக்களைப் பெற்றுவிடுகின்றன
என் கவிதைகள்!’ என்பதோடு கண்ணடிக்கும் ஒரு முக வடிவமும் அதில் இருக்க, கட்டுப்படுத்திட இயலாது அவள் கன்னங்கள் செம்மையுற்றன…
இவர்களது இந்த பரிமாற்றங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கவிதாவுக்கு சிரிப்புதான் தோன்றியது எனலாம்… உடன் இருக்கும் அவளுக்கே புரிந்து தான் இருந்தது இவர்களது காதல். ஆனாலும் கூட இருவரும் அதை சொல்லிக்கொள்ளாமல் கடப்பதை சில சமயம் ஆச்சரியித்துப் பார்த்தாலும் கூட, சில சமயம் ஆயாசமாகவே பார்ப்பாள்.
முதல் வருடமே காதல் என்று வந்து நிற்கும் ‘ஜுனியர்’ மாணவிகளைக் காணும் போதெல்லாம் தோழியின் சொல்லாதக் காதலை எண்ணி சிரிப்பே வரும் அவளுக்கு… இருப்பினும் சில மாணவ மாணவிகள் காதல் எனும் பெயரில் கொட்டம் அடித்து, பிரிவு என்று கடந்துசெல்கையில் தோழியின் சொல்லப்படாத காதலுக்கு பின்னே வழுவான காரணங்கள் இருப்பதாகவே உணர்வாள்.
இப்படியே கவிதையோடு அந்த வருடம் கடந்தது! அவளது இறுதி கல்லூரி ஆண்டும் வந்தது!
ஆறு மாதமாய் அவன் பக்கமிருந்து எய்திக் கொண்டிருந்த காதல் அம்புகளைத் தாங்கியே வந்தவள், பதில் அம்புகளை அவனுக்குப் பிடித்த இசையில் வெளிப்படுத்தினாள்.
தினமும் ஓர் பாடல்!!! அவனுக்கே அவனுக்காக வைத்திடுவாள். காலை எழுந்ததும் அவன் கேட்கும் சுப்ரபாதமாய் அந்த அரை நிமிடப் பாடல்களே விளங்கும்!
‘என் சாலை இங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்…
என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை…
காட்சி யாவும் புதைந்து போனது…
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்…
ஓஹோ… உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்…
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்…
கண்ணில் கண்ணில் வந்து போகுதே…
என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே…
உன் தேடலோ காதல் தேடல்தான்…
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போலே…’
என்ற பாடலோடு ‘காட்சி யாவும் புதைந்து போனது…
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்…’ என்ற வரியை கீழே அவள் தட்டச்சிட்டு வைத்திருக்க, அன்று மாலையே
'ஆயிரம் பேருக்கு மத்தியிலும்
உன் நெஞ்சம் என்னை மட்டுமே தோண்டி எடுப்பதில்
ஆணவனாகிய எனக்கும்
அழகாய் அரிதாரம் பூசுகின்றது,
இவ்வெட்கம்!’ என்று கவிதை வைத்திருந்தான்.
இப்படியே நாட்கள் செல்ல, அவளது கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நெருங்கியது.
எப்போதும் அவளது தேர்வு காலங்களில் கவிதைகள் வைப்பதை தவிர்த்திருப்பான். தான் சரிவர படிக்க வேண்டும் என்பதற்கான செயலே என்று புரிந்துகொண்டவளாய் அவளும் தன் இசை தூதினை நிறுத்தியிருப்பாள்.
அன்று ஏனோ மனம் அவன் நினைவுகளைத் தூவிக் கொண்டே இருந்ததில், பொறுக்காமாட்டாது வைத்துவிட்டாள்.
‘படித்ததெல்லாம்
பாதி மறந்தேன் தேர்வறையில்
மீதி மறந்தேன் நாள் கிழமை தேதி
மறந்தேன் நான் மின்னஞ்சலின்
சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி
அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக்
கட்டி அள்ள மறந்தேன் மறந்தேன்
மறந்தேன் அவனால் மறந்தேன்’
என்ற பாடலில் ‘அவன் புன்னகையை மூட்டை கட்டி அள்ள மறந்தேன்' என்ற வரிகளை கீழே படவிளக்கத்தில் போட்டிருந்தாள்.
பார்த்ததும் அவன் முகத்தில் அப்படியொரு புன்னகை தோன்றியதென்னவோ உண்மை தான்! ஆனாலும் கூட, அவள் படிப்பைக் கருத்தில் கொண்டு, “மறந்து மறந்து பரிட்சைல கோட்டை விட்டுடாத” என்று தன்னை மறந்த நிலையில் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.
அனுப்பிய பின்புதான் அவனுக்கு அச்செயலே உரைக்க, சட்டென அதை அழித்துவிடவேண்டி சென்றவன் அவள் பார்த்துவிட்டதைக் கண்டு அப்படியே உறைந்தான்.
‘என்ன பதிலாற்றுவாள்?’ என்று ஆர்வம் பொங்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஐந்து நிமிடமாக எந்த பதிலும் இல்லை.
முகத்தில் அழகாய் ஒரு புன்னகைத் தோன்ற, முகமெங்கும் மந்தகாசப் புன்னகையும், அதிர்வும், நாணமும், ‘யப்பா.. இப்போ தான் மெசேஜ் பண்ணவே கை வந்திருக்கா?’ என்ற செல்ல கோபமும் எனக் கலவையான உணர்வுகளோடு அவள் போராடிக் கொண்டிருப்பதை இத்தனை தொலைவிலும் அவனால் மனமார உணர முடிந்தது!
“மேடம் கூடதான் எனக்கு எதுமே ரிப்ளை பண்ணலை” என்று அவள் நினைப்பதற்கு தனக்குத் தானே பதில் கூறிக் கொண்டவன் மனம், ‘நீ தான பார்த்தாலே போதும் பாராட்டு வேணாம்னு சொன்ன?’ என்று வாரியது.
பத்து நிமிடத்திற்குப் பின் சுயம் மீண்டவள், கட்டை விரலை தூக்கிக் காட்டிடும் வடிவத்தை அனுப்பிவைத்துவிட்டு, தவராமல் அந்த செய்தி பரிமாற்றத்தை புகைப்படமாய் சேமித்தும் கொண்டாள்.
அந்த நினைவுகள் தந்த கண்ணீரில் கண்களை மூடிக் கொண்டு பின்னே சாய்ந்து அமர்ந்த பொற்றாமரையாளை வேதனை பொங்கும் விழிகளோடுப் பார்த்தனர், திலாக அங்கை மற்றும் பொழிலன்.
“சித்தி..” என்று திலகா அவள் கரம் தொட,
“கொ..கொஞ்ச நேரம்..” என்று பேச முடியாது பல்லைக் கடித்தாள்.
“அழாதீங்க சித்தி” என்றவள் அங்கை மற்றும் பொழிலனைக் கூட்டிக் கொண்டு, அவளால் வாய் வார்த்தையாய் கூறிட முடியாது போனபோதும், மனம் எதிர்ப்பார்த்த தனிமையை அவளுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
விக்கி விசும்பியெல்லாம் அழவில்லை தற்போது! ஆனால் கண்ணீர் வெள்ளம் கண்களை உடைத்துக் கொண்டு வந்தது. அன்று பேசிவிட்ட வார்த்தைகளும், கேட்டுவிட்ட வார்த்தைகளும், இன்றும் அவள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து ரணமேற்றுகின்றது.
தன் அலைப்பேசியை எடுத்தவள்,
‘உன்னைப் பற்றி நினைக்காதிருக்கவே
பாடல்கள் கேட்கத்துவங்கினேன்,
நான் கேட்கும் ஒவ்வொரு பாடலும்
உன்னை நினைவுபடுத்தவும்
உன்மீதான நேசத்தின் ஆழத்தாலேயே சோர்ந்து போனேன்!!!’ என்ற கவிதையை தனது புலனத்தில் ‘ஸ்டேடஸ்’ பதிவாய் வைத்தாள்.
வைத்துவிட்ட அடுத்த நொடியே அது அவளவன் பார்வையில் பட்டுவிட்டதை கூறியது, அத்தனை நேரம் அவன் அவர்களது சுயவிவரப் படத்தைதான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் என்பதை!
அதைக் கண்டவன் கண்கள் உடைப்பெடுத்து கண்ணீரை இறைக்க, நெஞ்சை முட்டிக் கொண்டு, காட்டாறு வெள்ளத்தில், கரைகளைக் கீறிக் கொண்டு வரும் முள் நிறைந்த கிளைகளாய் வலியும் காதலும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து வருத்தின!
-தொடரும்...
நாணல்-11
நாணல்-12
அந்த அழகிய குளம்பிக் கடையில் ஆதிவருணேஷ்வரனுக்கு எதிரே முறுக்கு மீசையும், பருத்தி வேட்டி சட்டையுமென அய்யநாரைப் போல் அமர்ந்திருந்தான் அக்னி!
முதலில் அவன் தன்னை தனியே சந்திக்க வேண்டுமெனக் கூறவும் ஆதி பயந்துபோனதென்னவோ உண்மை தான்! மதுரைக்காரன் வேறு.. ஒரே போடாகப் போட்டுவிடுவானோ? என்ற அச்சம் கூட எழுந்தது.
ஆனால் நேரில் தன் முன் கம்பீரத்தோடு சேர்ந்த கனிவுடன் அவன் அமர்ந்திருப்பதே அந்தப் பயத்தை சற்றே மட்டுப்பட வைத்தது. தனது பேச்சால், மதுரைக்காரன் போட்டுத்தள்ள மட்டுமல்ல பாசத்தால் அள்ளுவதிலும் சிறந்தோன் என்பதைக் காட்டியிருந்தான் அக்னி!
“எந்தாயி, எங்கம்மா மீனாட்சி.. அவதேன் எங்கவீட்டு குளதெய்வம். உங்க ரெண்டேருக்கும் ஆயிரம் ஆசையும் கனவும் பேசிக்கிட இருந்தும் நீங்கத் தள்ளிபோட்டுகிடலாம். ஆனா எந்தாயியோட அண்ணனா உங்ககிட்ட பேசிக்கிட எனக்கும் ஆயிரமிருக்கே” என்று அக்னி கூற,
மென் புன்னகையுடன், “சொல்லுங்க அக்னி” என்றான்.
“நீங்க என்ன படிச்சீக, எங்க வேலைப் பாக்குதீகனுலாம் தாமரை சொல்லிருக்கு. அதைதவிர உங்களப்பத்தி ஏதும் தெரியாதுங்களே” என்று அக்னி வினவ,
அவன் கேட்பதன் நியாயம் புரிந்தவனாய் தன்னைப் பற்றிக் கூறலானான்.
“என் பெயர் ஆதிவருணேஷ்வரன். நான் என் குழந்தைப் பருவத்தை ஆதரவற்றோர் இல்லத்துல தான் கழிச்சேன்” என்று கூறியவன், தன்னை திடுக்கிட்டு நோக்கிய அக்னியைக் கண்டு உள்ளம் நடுங்கினான்!
இதுவரை ஆதி யாரிடமும் தன்னை தாய் தந்தை அற்றவன் எனக் கூறிக் கொண்டதில்லை. அதில் எழும் பட்சாதாபத்தில் தன்னை பாவமாகவே பார்த்துவிடுவரோ? என்ற பயமும், அதைக் கேலி பொருளாக்கி தன்னைக் காயப்படுத்திவிடுவரோ? என்ற அச்சமுமே அவனை அமைதியானவனாக மாற்றியிருந்தது.
துருப்பிடித்த கருவியாய் கிடந்தவனின் துரு நீக்கி இசை மீட்டிய பெருமையாவும் அவனவளையேச் சேரும். அவளது இரண்டாம் வருட கல்லூரி ஆண்டு முடிவடைந்து விடைபெறும் நேரம் தன்னைப் பற்றிகூறிடத்தான் நினைத்தான்.
ஆனால் அன்று அவளிடம் கண்ட அவள் மன உணர்வு, தன்னைப் பற்றிக் கூறும் செய்தி, பட்சாதாபத்தோடு பதிந்துவிடுமோ என்ற ஐயத்திலேயே கூறாது சென்றுவிட்டான். அவள் பால் நம்பிக்கை இல்லையா என்று கேட்டால் நிச்சயம் உள்ளது! அவள் பால் நம்பிக்கை இல்லையெனக் கூறுவதே அவனைப் பொருத்தவரையில் அபத்தம். ஆனால் அவன் மன பயத்தினை மீறி அவனால் வெளிவந்து கூறிட இயலவில்லை!
தற்போது அக்னி திடுக்கிட்ட நொடி, எங்கே ‘யாருமற்றவனுக்கு என் தங்கையைக் கொடுக்க இயலாது’ என்று கூறிவிடுவானோ என்ற பயம் அவன் உள்ளத்தை நடுங்க வைத்தது!
தன் கரகரத்த தொண்டையைச் செருமிக் கொண்டு, “சி..சின்ன வயசுலயே அம்மா அப்பா இறந்துட்டாங்க. ஆசிரமத்துல தான் வளர்ந்தேன். ஸ்கூல் அவங்களே படிக்க வச்சாங்க. அநாதைக் குழந்தைகளுக்குனு உதவித்தொகை திட்டம் நிறைய இருக்கு. அதுக்கு முறையா அப்ளை பண்ணி அதுல தான் யூஜி முடிச்சேன். கிடைச்ச வேலையில சேர்ந்து ரெண்டு வருஷம் வேலைப் பார்த்துச் சேர்த்து வைச்ச காசுல பீஜி பண்ணினேன். கூடவே பார்டைமா ஆன்லைன்ல வர்க் பண்ணேன். படிப்பு முடிஞ்சதும் யூஜி முடிச்சு வேலைப்பார்த்த அதே கம்பெனில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணி என்னோட கனவு நிறுவனத்துல இன்டர்வியூ வந்தப்ப அட்டென்ட் பண்ணேன். அது எனக்கு அங்க இரண்டாவது முறை. முதல் முறை பீஜி இல்லைனு வேலை கிடைக்கலை. ரெண்டாவது முறை பீஜி, எக்ஸ்பீரியன்ஸ், யாழோட ப்ரேயர்ஸ்னால கிடைச்சது. என்னைப் பற்றிச் சொல்ல வேறேதும் இல்லை அக்னி” என்று கூறினான்.
அக்னிக்கு வியப்பாக இருந்தது! யாருமற்றவன் என்று வருத்தம் எழுந்தது தான். அது இயல்பாய் அனைவருக்குமே எழுவதே! ஆனால் பட்சாதாபமெல்லாம் தோன்றவில்லை! பெருமிதமாகவும் வியப்பாகவும் தான் உணர்ந்தான்.
அமைதியாகத் தன் மனதோடு கணக்கிடும் அக்னியைக் கலக்கமாய் பார்த்த ஆதி, “அ..அது.. யா..யாரும் சொந்தம்னு இல்லைதான்.. ஆனா யாழை.. “ என்று தடுமாறினான்.
அவளைத் தன் கண்ணின் மணிபோலப் பார்த்துக் கொள்வேன் என்பதை எப்படி இவனுக்கு விளக்கிவிட என்று தடுமாறியவன் கண்டு, “எங்கப்பன் ஈசனே அநாதைதேன்.. எந்தாயி மீனாட்சிய ராணி மாதிரி பாத்துகிடலையா? அதெல்லாம் பிரச்சினையே இல்லப்பு” என்று அவன் மனதில் குடம் குடமாய் தேன் வார்த்தான்.
“இந்த உலகத்துல யாரா இருந்தாலும் வாழ்க்கைல யாருமே இல்லாம சில காலம் வாழ வேண்டி வரதேன் செய்யும். ஒன்னு பிள்ள பருவத்துல இழக்குதோம், இல்ல முதுமையில இழக்குதோம்.. இல்ல நடுவுலயே இழக்குதோம். இழப்பு இயல்புதேன்.. ஆனா அந்த ஆண்டவன் காலம்பூர தனியாவே நம்மல உட்டுபுட மாட்டியான்.. நமக்குனு ஒரு கூட்டத்தையே குடுப்பியான்.. அவன் கருணை வல்லல்டே” என்ற அக்னி,
“எங்கம்மைய பத்தி என்னடே தெரியும்?” என்றான்.
அழகிய புன்னகையுடன், “வாயாடி, பக்குவமானவ, புத்தகவிரும்பி, பேரு பொற்றாமரையாள், ஊரு மருத, குடும்பம் பெருசு.. இதைத் தவிர நாந் தெரிஞ்சுக்க ஏதுமிருந்தா என் யாழே சொல்லட்டும்” என்று அதி கூற,
அட்டகாசமாய் சிரித்த அக்னி, “அவ சொல்லுவாடே மாப்புள..சொல்லும்போது முழி பிதுங்கப் போத பாத்துகிடு” என்று தங்களின் குடும்ப வரலாற்றை எண்ணி கூறிக் கொண்டான்.
அப்போது புரியவில்லை… ஆனால் அடுத்த வருடமே அந்த அழகியதோர் பூங்காவில் தனது அலைப்பேசியில் குடும்ப புகைப்படத்தைக் காட்டி விவரித்த தாமரையாளைக் கண்டு விழி பிதுங்கி, மயக்கம் வராத குறையாய் திருதிருத்தான் அவன்!
அவளது கல்லூரி ஆண்டின் கடைசி நாள். நட்பு வட்டத்துடன் பிரியாவிடை பாராட்டிவிட்டு வெளியே வந்தவளுக்கு ஒரு வருடம் முன்புக் கொடுத்ததைப் போன்ற அதே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தான்.
அதைவிட மாபெரும் அதிர்ச்சி, தானே அவள் அருகே வந்தவன், அவள் கைத்தலம் பற்றி அருகேயுள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் அழைத்துச் சென்றான்.
அன்று கல்லூரியின் இறுதிநாள் என்பதால் கூட்டம் பயங்கரமாகவே இருந்தது. என்ன செய்வதென்று அவன் அவளைக் காண, இன்னமும் அவன் பற்றியக் கரங்களையே தழும்பி நின்ற விழிகளோடு பார்த்து நின்றாள்.
சிறு புன்னகையுடன் வெதுப்பகத்திற்கு வெளியே உள்ள பூங்கா போன்ற அமைப்பிற்கு வந்தான். உள்ளே இருந்ததைப் போல் இங்குக் கூட்டமில்லை என்றாலும் ஆள் நடமாட்டம் இருக்கவே செய்தது!
அவளுடன் அங்குள்ள மர இருக்கை ஒன்றில் அமர்ந்தவன் அவளையேப் பார்த்தான். அவன் பார்வையில் அப்படியொன்றும் ரசனையோ மோகமோ இல்லைதான் என்றபோதும் கூட அவள் மேனி நாணத்தில் சிலிர்த்தது!
அனைத்தையும் உள்வாங்கியபடி அவனைப் பார்த்தவள், கண்களை மூடித் திறக்க, இப்போது கண் கலங்குவது அவன் முறையானது!
சிலிநிமிடங்கள் மௌனமே நீடிக்க, எப்படி எப்படியோ தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கனா கண்ட இருவருக்கும் அச்சூழலில் வார்த்தைகளே தேவைப்பட்டிருக்கவில்லை!
“நான்..” என்று தயங்கியவன், அவளைக் கண்டு தனக்குள் எழும் நம்பிக்கையோடு தன்னைப் பற்றிக் கூறி முடித்தான்.
அவன் எதிர்ப்பார்த்ததைப் போன்றே அவன் கூறியவை அவளை ஒன்றும் பெரியளவு பாதித்திடவில்லை. அதே புன்னகையுடன் தன் அலைபேசியை எடுத்தவள் தங்கள் குடும்ப புகைப்படத்தைக் காட்ட, “பெரிய குடும்பம்னு தான சொன்ன? இப்படியொரு மாயாண்டி குடும்பம் இருக்கும்னு சொல்லவேயில்லையே” என்று மிரண்டான்.
அதில் கிளுக்கென்று சிரித்தவள், தன் அண்ணன், ஆண்ணிகள், அவர்கள் பிள்ளைகள் என்று வரிசையாய் அறிமுகம் செய்ய, “ஏ.. இரு இரு.. உன் மூத்த அண்ணா பசங்க உன்னைவிட மூத்தவங்களா?” என்றான்.
அதில் சிரிப்போடு ஆமென்று தலையாட்டியவள், “அவங்க ரெண்டு பேருக்கும் இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அன்னிக்கு பாத்தீங்கள்ல கடைசி அண்ணா? அக்னி வேந்தன்.. அவங்களுக்கும் ஆரூக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம். இந்த வேந்தனிருக்கானுல, அண்ணனை விட ரெண்டு மூனு வயசு சின்னவன். அக்னி அண்ணா எனக்குக் கல்யாணம் பண்ண பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கிடுதேன்னு தள்ளிப் போட்டுடுச்சு. ரெண்டாது அண்ணே பசங்க ரெண்டும் என் வயசுதேன். மூனாது அண்ணாக்கு ஒரே பொண்ணு. இப்பதேன் காலேஜ் வருது. நாலாது அண்ணேனுக்கு ஸ்கூல் படிக்குத பிள்ளைக. அஞ்சாது அண்ணாக்கு கல்யாணம் ஆவலை. ஆறாவது எனக்கு இனிதான் ஆவப்போவுது” என்று கூற,
அவனுக்குத் தலையே சுற்றிவிட்டது.
“உங்க வீட்டுக்கு வந்து பேசனும்னா நான் முதல்ல இந்த ஃபேமிலி ட்ரீய மணப்பாடம் பண்ணனும் போலயே” என்று பீதியோடு அவன் கூற,
கலகலவென்று சிரித்தவள், “நம்ம ஃபேமிலி தானே.. போகப் போகப் பழகிடும்” என்றாள்.
சிலநிமிட மொனத்திற்குப் பின், “எப்ப வரட்டும்?” என்று அவன் வினவ,
அவன் கண்களைப் பார்த்தபடி, “உங்க இஷ்டம்” என்றாள்.
“இல்லமா..” என்றவன், தன் முகத்தைத் தேய்த்துக் கொண்டு, “என்கிட்ட உன் நம்பர் இருந்தும் உன்கூட நார்மலா சேட் பண்ணாம இருந்ததுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு.. நானும் நீயும் முதன்முதலா ஜூனியர் சீனியர்னு பழகின அந்த உறவுமட்டுமே நம்ம மனசுல அப்பயில்லை. அப்படியிருக்கும்போது நார்மலா நாம பேசிக்கும்பேச்சு நம்மையும் அறியாம தடம் புரளும். அது படிக்குற வயசுல உன் படிப்பைப் பாதிக்கும்படியா மாறிடும். எந்த வகையிலயும் நானோ என் நேசமோ உன்னையும் உன் படிப்பையும் தாழ்த்தும்படியா இருந்திடக்கூடாதுனு நினைச்சேன்.
ரெண்டாவது..” என்று சற்றே தயங்கி அவள் கரம் பற்றினான்.
அதில் மெல்லிய சிலிர்ப்போடிய உணர்வோடு அவன் கண்களை அவள் ஆழ்ந்து நோக்க,
அவள் அஞ்சன விழிகளை நோக்கியவண்ணம், “எனக்கு உன்கிட்ட நிறையா பேசனும். ஆனா அந்தப் பேச்சுல என் குரலை நீ கேட்கனும். உன் மடியில நான் சாயனும், என் தோள்ல உன்னைச் சாய்ச்சுக்கனும், நம்ம கைகள் கோர்த்திருக்கனும், கண் ஒருத்தரை இன்னொருத்தர் பார்த்திருக்கனும், மொத்தத்துல நம்மைத் தவிர இருக்கும் உலகத்தை நமக்கான அந்த நேரத்தில் நாம மறந்திருக்கனும். நான் பேசுறது ரொம்ப ட்ரமாட்டிக்கா தெரியலாம். ஆனா எ..எனக்கு இதெல்லாம்” என்று விளக்கத் தெரியாது அவன் திணற,
அவன் கரம்மீது தன் கரம் வைத்துத் தட்டிக் கொடுத்தவள், ‘எனக்குப் புரிகிறது’ எனும் விதமாய் கண்கள் மூடித் திறந்தாள்.
அதில் மெல்ல புன்னகைத்தவன், “நான் இதுவரை யார்கிட்டயும் பாசம் காட்டினதும் இல்லை, எம்மேலயும் யாரும் பாசம் காட்டினதும் இல்லை. இல்லைனு சொல்றதைவிட அதுக்கான வாய்ப்பை அமைக்கும் விதமா நானும் யார் கூடவும் பழகலை. என்னோட ஃபுல் போகஸும் என் கனவை நோக்கித் தான் இருந்தது. அதனால எனக்கு நட்பு வட்டம் உருவாக்கிக்கவும் நேரம் அமையலை. அதனால தானோ என்னவோ கதை படிக்குறதுல என் ஆர்வம் திரும்பிச்சு. நான் எனக்காகனு செலவிட்ட நேரம் உன்கூட மட்டுமே தான். நான் நானா இருந்து.. அந்த நேரத்துக்காகத் தினமும் தேட வச்சது என் மனசு.. உன்கூட இருந்தப்ப எதுவுமே சத்தியமா தோன்றலை. ஆனா அந்த ரெண்டு வருஷத்தோட முடிவு.. என் மனசுல ஏற்பட்டது போல உன் மனசுலயும் அந்த நேசம் பூப்பூத்திருக்குனு புரிஞ்சப்ப நான் பட்ட சந்தோஷத்தைச் சத்தியமா வார்த்தையால சொல்லிட முடியாதும்மா.. இன்னும் சொல்லனும்னா.. எனக்காக வேண்டிகிட்ட முதல் ஜீவன் நீ” என்று கூறுகையில் அவன் கன்னத்தில் கண்ணீர் துளியாய் வழிந்தது!
அதைக் கண்டு தானும் கலங்கியவள், அவன் கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுத்திட, அவள் கரத்தைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன் கலங்கிய விழிகளுடன் அவளை நோக்கி, “பொதுவா பொண்ணுங்க தான் இப்படி கேட்பாங்க.. ஒரு சேஞ்சுக்கு நான் கேட்குறேன்.. எனக்கு வந்த வரம் நீ.. நீ மட்டுமே! இந்தக் கைய விட்டுட மாட்டல்ல?” என்று கேட்டான்.
உணர்ச்சிவசப்பட்டுப் போனவள் அவனை அணைக்க இயலாது கரத்தை மேலும் இறுக பற்றி அதில் தலை சாய்த்துத் தேம்பிவிட, அந்தக் கண்ணீர் அவனுள் தேனாய் இறங்கியது!
அந்நிகழ்வினைத் தற்போது நினைத்துப் பார்த்துத் தேம்பி அழுத பொற்றாமரையாள், “நா.. நான்.. அந்தக் கைய விட்டுட்டேனாங்க? விட்டுட்டேன் தானே? நா.. நான்.. உங்கள காயப்படுத்திட்டேனே” என்று வெதும்பினாள்.
-தொடரும்...
நாணல்-13
அங்குப் பெங்களூரில் விதியே என்று விருப்பமின்றி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த அக்னி, வேலை முடித்து வீடு திரும்பி, நீள்விருக்கையில் அயர்வாய் அமர்ந்தான்.
அவன் அலைபேசி ஒலித்திட, எடுத்துப் பார்த்தவன் அழைத்தது அதிவீர பாண்டியர் எனவும் அமைதியாய் அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அழைப்பு முடியும் தருவாயில் அவன் அழைப்பை ஏற்க, எதிர்முனையில், “ஐயா.. அக்னீ..” என்று பரிதாபமாய் ஒலித்தது மூத்தவரின் குரல்.
ஆடவன் அமைதியாய் இருக்க, “ஐயா.. அண்ணேமேலக்..கோ..கோவமாய்யா?” என்று கேட்டவருக்கே அவர் கேள்வி அத்தனை அபத்தமாய் இருந்தது! கோபம் இல்லாமல் போகுமா? பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது.. இப்போதுதான் தனக்கு அழைக்கவே தோன்றியுள்ளதா என்று வருந்தினான்.
“ஐயா..” என்று அவர் கலக்கமாய் அழைக்க,
“பதினஞ்சுநாளாச்சுது.. இப்பதேன் இந்தத் தம்பிய நெனவு வருதுல்லண்ணே உங்களுக்கு” என்று முற்றிலும் உடைந்த குரலில் கேட்டான்.
“ஐயா.. மாப்பு கேட்டுகிடுதேன்டே..” என்று அவர் அழுதுவிட, அலைபேசியை வாங்கிய தீஞ்சுடரோன், “தம்பி.. அண்ணே மாப்பு கேட்டுகிடுதேன்டா..” என்றார்.
இவன் பதிலுக்கு ஏதும் பேசவில்லை. அலைபேசி சிம்மவரதன் மற்றும் ரணதீரன் கரங்களுக்கும் மாறியது. யாருக்கும் அவன் பதில் கொடுக்கவில்லை!
“ஐயா பேசுய்யா..” என்று அதிவீரர் கெஞ்சுதலாய் கூற, அலைபேசியை வாங்கிய அர்ச்சனா, “தம்பி” என்று கலங்கும் குரலில் அழைத்தார்.
“உங்களுக்குக்கூட என் நெனவு இல்லைங்கல்ல மதினி” என்று அவன் வினவ,
“ஐயா ராசா.. மதினிய மன்னிச்சுபுடுய்யா.. உங்கிட்ட சொல்லனும்முனுதேன் சொன்னேங்கண்ணு..” என்று தயங்கினார்.
“அண்ணே வேணாமுன்னு சொல்லிட்டாகல்லோ?” என்று அவன் விரக்தியாய் வினவ,
அவர் வாயை மூடி அழுகையை அடக்கினார்.
“அண்ணே கோவமானு கேட்டுச்சு மதினி.. எனக்குக் கோவமெல்லாம்ம் இல்லிங்க… ஆனா.. ரொம்ப வலிக்குதுங்க மதினி” என்று அவன் கூற,
அலைபேசியை வாங்கிய தடாதகை நாச்சியார், “தம்பி.. மனிச்சுபோடுகனு கேட்க முடியலைங்க தம்பி.. தப்புதேன்… சொல்லாம இருந்தது ரொம்ப தப்புதேன்” என்று கூறினார்.
சில நிமிடங்கள் அண்ணிகள் மாறி மாறி அவனிடம் மன்னிப்பு வேண்ட, அதில் சங்கடமடைந்தவன், “அண்ணேன்ட கொடுங்க மதினி” என்றான்.
அதிவீர பாண்டியரிடம் அலைபேசி செல்ல, “என்ன விசயமுங்கண்ணே” என்று கேட்டான்.
“நம்ம தாயீ..” என்று அவர் இழுக்க,
“தெரியுமுங்கண்ணே..” என்றான்.
அதில் பெரியவருக்கு ஆச்சரியமெல்லாம் இல்லை.. அவர் அறியாததா அந்த வீட்டு இளையோர்களுக்கும் அவனுக்குமான பந்தம்.
“மாப்பிள்ளைட்ட பேசு அக்னி.. அவர இங்க வரச்சொல்லு.. எங்கம்மை அழுறத கண்கொண்டு பாத்துட முடியல” என்று கலங்கிய குரலில் அவர் கூற,
“அண்ணே.. உங்களுக்கு நான் புத்திமதி சொல்ல வேணாம்.. நம்ம புள்ளைய அனுப்பி வைக்குறதுதேன் நல்லது. புருசன் பொஞ்சாதிக்குள்ள ஆயிரமிருக்கும்.. நாம அதுக்குள்ள போறது சரியாப்படுதில்ல” என்று கூறினான்.
இதற்காகத் தானே நால்வரும் அவனிடம் கூறாமல் இருந்தது!
“அதுக்கு.. நம்மவீட்டு புள்ளைய கைய நீட்டி அடிப்பாரு.. அண்ணே பாத்துகிட்டு இருக்கோனுமாடா?” என்று சிம்மவரதன் சிம்ம மூர்த்தியாய் ரௌத்திரம் கொள்ள,
“அவேன் அடிச்சதை நியாயப்படுத்தலைங்கண்ணே.. ஆனா அதுக்கு அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டியதும், பேசித் தீர்க்க வேண்டியதும் நம்மதாயிதேன். நீங்க ரெண்டேரையும் பிரிச்சுபோட்டு வச்சிருத்தா எங்கிருந்து அது நடக்குறது?” என்று கேட்டான்.
“ஏன்டே? மாப்பிள்ளைக்கு என்னவாம்? அவரு வாரதுல என்னனு கேட்குதேன்? வந்து மாப்பு கேட்டுகிட அம்புட்டு கௌரவ குறைச்சலாடே? கைய நீட்டி இந்த வீட்டு தெய்வத்த அடிக்கத் தெரிஞ்சோனுக்கு ஓரெட்டு வந்து சமரசம் பேச வருதில்லையாக்கும்? ரெண்டு வாரமா புள்ள கெடக்குற கெடைக்கு மனசெல்லாம் பதறித் துடிக்குதுடே” என்று ரணதீரன் பொங்க,
“அண்ணே.. அவேன் ஒன்னும் அங்கன சந்தோஷமா இல்லண்ணே.. நீ செழிலனுக்கு போட்டு ஒரு வார்த்தை பேசிப்பாரு.. அப்பதேன் தெரியும் அவேந் தவிக்குற தவிப்பு” என்று அக்னி கூறினான்.
“அம்பூட்டு தவிக்கோனும்முனு என்னடே அவசியம்? அப்ப எம்பூட்டு கஷ்டம் இருந்தும் வீம்பாதானே இருக்காரு.. அப்படியென்ன வீம்பு வேண்டிகிடக்கு? பொண்ணு கேட்க வந்தப்ப எந்தக்கத்தை தலைமேல தாங்குறேன்னும், காலைப் பிடிக்கவும் கௌரவ கொறச்சல் பாக்க மாட்டேன்னும் சொன்னாரு தானே..? இப்ப எங்க போச்சுது அந்த நேசமெல்லாம்?” என்று தீஞ்சுடரோன் பொறிந்து தள்ள,
“எங்கம்மைய இதுவர கைய நீட்டினது கூட இல்லடே.. அவரு அடிச்சது கண்ணுல துரும்பா உறுத்துது.. இதுதான் அவுக பாத்துகிட்ட லட்சனமாடே?” என்று அதிவீரர் உணர்ச்சிவசப்பட,
அவர் கூற்றில் ஆதியின் நேசம் அடிவாங்கி நிற்பது பொறுக்காத அக்னி, கோபம் கொண்டு பேசவரும் முன், “அண்ணே” என்று அதிர்ந்து ஒலித்தது பொற்றாமரையாளின் குரல்.
கணவனுக்காக நீதி கேட்க வந்த கண்ணகியின் கோலத்தில், நின்றிருந்த பொற்றாமரையாள், “எம்மேல பாசமிருக்குது.. அவரு அடிச்சதுல வருத்தப்படுற.. அதை ஒருகாலமும் குத்தஞ்சொல்ல மாட்டேன்.. ஆனா அவரு நேசத்தை குறைச்சு பேசிப்புடாதண்ணே.. அவரவிட நீங்க வசதிலயும், அந்தஸ்துலயும், குணத்துலயும் நூறுமடங்கு அதிகமானவன கூட்டியாந்தா கூட, அவரு எம்மேல வச்ச நேசத்தை ஈடுகட்டிகிட முடியாது. அவரு பாத்துகிட்ட லட்சனம் வாழ்ந்த எனக்குதேன் தெரியும். அதையெல்லாம் உங்களுக்கு நிறுபிக்கனும்முனு நினைச்சதுதேன் அந்த மனுஷனோட முட்டாள்தனமுன்னு நினைச்சேன். ஆனா உங்க எதிர்பார்ப்பே அங்கன இருந்துருக்குனு இப்பதேன் புரியுது. வாழுறது நாந்தேன்.. அவரு நேசமும் அக்கறையும் எனக்குப் புரிஞ்சா போதும்.. இதுக்குமேல இனி அவரப் பத்தி நீங்க யாரும் குறைவா பேசுறத நாங்கேட்கக் கூடாது” என்று தன் மெல்லிய குரலில் கதறலும் கர்ஜனையுமாய் கூறினாள்.
கலங்கி நின்ற அனைவரையும் கண்டு மனமுடைந்து போனவள், “உனக்காகனு பாத்து கூட்டிவந்த எங்களையே பேசுதியானு நினைக்குதீகளா அண்ணே?” என்க,
“அய்யோ இல்லடா..” என்று தீஞ்சுடரோன் பதறினார்.
“மன்னிச்சுபோடுகண்ணே.. என்னக்கு எப்படி நீங்க முக்கியமோ அதேபோல அவரும் ரொம்ப ரொம்ப முக்கியம். அவரு எப்போவும் நாந்தேன் அவரோட வரம்னு சொல்லுவாரு.. ஆனா அவரு எனக்கு உசுரு… அவர இன்னும் ஒருமுறை யாரும் தப்பா பேசிடாதீக.. அவரைப் பேசுறது என்னைப் பேசுறதுக்கு சமானம். நான் இங்கன இருக்குறதுதேன் அந்தப் பேச்சுக்குக் காரணமுன்னா சொல்லிடுக.. நான் போயிடுதேன்” என்று அவள் கூறிட,
“ஆத்தா..” என்று பதறிக் கொண்டு விஜயலட்சுமி அவளை அணைத்தார்.
அண்ணியை அணைத்துக் கொண்டு, “முடியலைங்க மதினி.. வலிக்குது” என்று அவள் வெக்கி வெதும்ப,
“போதுங்கண்ணு.. போதும்.. யாரும் ஒன்னும் பேசலை.. அழுவாத ராசாத்தீ” என்று விஜயலட்சுமி அவள் கண்ணீரை துடைத்தபடி கதறினார்.
அப்போதே வேலை முடித்த இளையோர்கள் வர, நடப்பதேதும் புறியாது, கூடத்தில் கூடியிருந்தோரைக் கண்டு விழித்தனர்.
அதிவீரரின் கரத்திலிருந்த அலைபேசியைக் கண்ட ஆருத்ரன் அதை வாங்கிப் பார்க்க, அக்னி அழைப்பில் இருந்தான்.
“சித்தப்பு..” என்று ஆரு அழைக்க,
அழுதபடி அக்னி நடந்தவற்றை சுருக்காக ஒப்பித்தான்.
ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற ஆருத்ரன், “வயசானமாட்டிக்கு யாருக்கும் கூறுயில்ல இந்த வீட்டுல..” என்று கத்தியபடி தாமரையாளிடம் வந்தான்.
தாமரையாள் அவனை ‘வேண்டாம்’ எனும் விதமாய் தலையசைத்துப் பார்க்க, “போதுமத்தே..” என்று அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு வீட்டில் உள்ள பெரியோரைப் பார்த்தான்.
“போதும்.. இன்னொருக்கா யாரும் அத்தை மாமா சண்டையப்பத்தி பேசுனீக? அம்புட்டுதேன் சொல்லிபுட்டேன்” என்று மிரட்டலாய் கூறியவன், “அத்தே.. இது உன் வீடுத்தே.. உனக்குப்போகத்தேன் இங்க எல்லாம். நீ இந்த வீட்டோட சொத்துத்தே.. உனக்கு எம்புட்டு நா(ள்) வேணுமோ அம்புட்டு நா(ள்) கிட. யாரும் ஏதும் பேசமாட்டாக. நீ உக்கி நிக்குறத பாக்க முடியலைத்த.. வேணாம்” என்று கூற,
கதறலோடு அவனை அணைத்துக் கொண்டாள்.
அத்தையவள் தலைகோதி அவன் ஆறுதல்படுத்த, அங்கையும் திலாகவும் கண்ணீரோடு வந்து அவளைத் தங்களோடு நிறுத்திக் கொண்டு ஆறுதல் படுத்தினர்.
அவர்கள் அருகே வந்த அதிவீர பாண்டியன், “ஆத்தா.. இந்த அண்ணேன மன்னிச்சுப்போடு.. நீ எம்பூட்டு நா(ள்) வேணாலும் இங்க இருத்தா.. அதைபத்தியெல்லாம் நாங்க சொல்லலை.. நீ என் கொலசாமிடே.. அடிச்சுபோட்டானேனு ஆதங்கம் தீர மாட்டுது.. அந்த வேதனையில பேசிபோட்டேன்டே.. சத்தியமா மாப்பிள்ளைய ஒருகாலமும் தப்பா நினைச்சதில்லடே.. அண்ணேன மன்னிச்சுபுடுடே” என்று கதற,
“அண்ணே..” என்று அவரை அணைத்துக் கொண்டாள்.
அழுகையோடு அனைவரும் கரைய,
“போதும் எல்லாம் போய்ச் சோலிய பாருங்க.. அத்தை.. அழுவுறத நிறுத்து.. வா..” என்று அவளைக் கூட்டிக் கொண்டு ஆருத்ரன் மேலே செல்லவும், மற்றோர் யாவரும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
அங்குக் கனத்த மனதோடு அமர்ந்த அக்னியின் அலைபேசி மீண்டும் ஒலிக்க, அண்ணனாக இருக்குமோ என்று எண்ணி எடுத்தவன், செழிலனின் அழைப்பென்கவும் அழைப்பை ஏற்றான்.
“சித்தப்பு..” என்று செழிலன் அழைக்க,
குரலைச் செறுமியவன், “சொல்லுடே” என்றான்.
“என்ன சித்தப்பு.. கொரலே சரியில்லாட்ருக்கு” என்று செழிலன் கேட்க,
“அண்ணே கூப்டாகடே” என்றான்.
“என்ன சித்தப்பு சொல்ற? பெரிப்பாவா? என்ன சொன்னாக?” என்றவன் ஆர்வத்தோடு கேட்டான்.
சமையலறையில் வேலையாக இருந்ததால் அவன் அலைப்பேசியை ஒலிபெருக்கியில் போட்டிருக்க,
“ஆமாடே.. நான் ஆதிகிட்ட பேசி வீட்டுக்கு வரச்சொல்லனுமாம்” என்று அக்னி கூறினான்.
“லூசா சித்தப்பு இவுக?” என்று செழிலன் எரிச்சலுற,
“பெரிய பிரச்சினையா போச்சுடே..” என்றவன் அதிவீரன் ஆதியைப் பேசியதைப் பற்றிக் கூறினான்.
“ஆத்தே.. என்ன சித்தப்பு சொல்ற?” என்று செழிலன் அதிர,
“புள்ள கேட்டுடுச்சுடே அத” என்று அடுத்த குண்டைச் செழிலன் காதில் இறக்கினான்.
“அத்தையா? அச்சுச்சோ! அத்தை என்ன சொல்லிச்சு” என்று செழிலன் வினவ,
தாமரையாள் ஆடிய ஆட்டத்தைக் கூறினான்.
“அத்தை பாவம் சித்தப்பு.. இவுக போட்டுப் படுத்துறாக” என்று செழிலன் கவலையாய் கூற,
அடுத்து ஆருத்ரன் வந்து ஆடிய ஆட்டத்தைக் கூறினான்.
“போடு.. நீயில்லாத குறைய அண்ணேந்தேன் தீத்துருக்கு சித்தப்பு” என்றபடி செழிலன் திரும்ப, சுவரில் சாய்ந்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டு ஆதி நின்றிருப்பதைக் கண்டான்.
“மா..மாமா” என்று செழிலன் திணற,
கண்களைத் திறந்து அவனை வலி நிறைந்த பார்வைப் பார்த்த ஆதி வெளியே சென்றுவிட்டான்.
-தொடரும்...
நாணல்-14
கட்டிலில் தோய்ந்து படுத்த ஆதிக்கு தன்னவள் அங்குக் கதறித் துடித்த வலி இங்கு உணரப் பெற்றதாய் இருந்தது. சோகத்தின் சுவடே இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை இன்று கொடுத்த வலியின் வீரியம் அவனை வண்டாய் குடைந்தது.
அவளை விட்டு எப்படி இந்தப் பதினைந்து நாட்கள் இருக்க முடிந்ததென்று அவனுக்கே தெரியவில்லை! மனம் கணக்க படுத்திருந்தவனை மேலும் மயிலறகாய் வருடி வருத்தியது அவர்களின் பொன்னான நினைவுகள்…
அன்று அந்த அழகிய காலைப் பொழுது, அவ்வீட்டுக் கூடத்தில் பீம சேண சகோதரர்கள் முன்பு அமர்ந்திருந்தான், ஆதிவருணேஷ்வரன்.
போன வாரமே ஏற்பட்டிருக்க வேண்டிய சந்திப்பு. அவளுடன் பேசி சென்றவன் மறுநாளே வருவதாய் கூறியும் வரவில்லை. அதில் அவனுக்கு அழைப்பதா வேண்டாமா என்று அவள் குழம்பிக் கொண்டிருந்தத் தருணம் அவனே அழைப்பு விடுத்திருந்தான்… முதல் அழைப்பு!
பட்டென ஏற்றவள், “ஹலோ..” என்க,
“யாழ்..” என்று அழைத்தவன் இரண்டு இருமலுக்குப் பின், “உடம்பு முடியலைம்மா.. அதான் வரமுடியலை” என்றான்.
“அச்சுச்சோ.. என்னாச்சுதுங்க?” என்று அவள் வினவ,
“ம்ம்.. உங்கண்ணாஸ் பெயரை கேட்டதுக்கே எனக்குக் காய்ச்சல் வந்துடுச்சு பயத்துல” என்று கேலி செய்தான்.
அதில் வாய்விட்டு சிரித்தவள், “இப்படி பயந்தா எப்படி எங்கண்ணாஸ்கிட்ட பேசி என்னைய தூக்கிட்டுப் போவீகளாம்?” என்று கேலி செய்ய,
அதில் சிரித்துக் கொண்டவன், “ஹாஸ்பிடல் போறேன்மா. அடுத்த வாரம் வரேன்” என்று அவளிடம் இரண்டு அக்கறையான அறிவுரைகளைப் பெற்றுக் கொண்டு வைத்திருந்தான்.
அடுத்த வாரம் எந்த இடையூறும் இன்றி, இதோ இங்கு வந்துவிட்டான்.
நடூகூடத்தில் வந்து அமர்ந்தவன், அசராமல் உங்கள் தங்கையை விரும்புகின்றேன் என்று போட்ட வெடிகுண்டில் பீம சேனர்கள் வெகுண்டெழுந்திட, “நானும் விரும்புறேன் அண்ணா” என்று அவர்களை அதிர வைத்தது, பொற்றாமரையாளின் குரல்.
அக்னி மட்டும் அவளைப் புன்னகையாய் நோக்க, மற்ற அண்ணன்களும் அண்ணிமார்களும் அவளை அதிர்ந்து நோக்கினர்.
ஆருத்ரன், அங்கை, வேந்தன், திலகா தங்கள் வீட்டு மூத்தோரின் எதிர்வினையை எண்ணி பயந்து நோக்க, செழிலன், பொழிலன் மற்றும் காயத்திரி வயதுக்கே உரிய துள்ளலோடு ஆர்வத்துடன் பார்த்தனர்.
ஆதிவருணேஷ்வரன் அருகே வந்து அமர்ந்தவள், “இவர் என் காலேஜ் சீனியருண்ணா” என்று கூற,
“எந்த காலேஜ்?” என்று செழிலன் ஆர்வத்தோடு கேட்டு தன் தந்தையின் ஆத்திரப் பார்வையில் பயந்து பொழிலன் பின்னே பதுங்கினான்.
அதில் ஆதிக்கு சிரிப்புதான் வந்தது!
“பட்டனத்துல படிச்ச காலேஜுல” என்று அவள் கூற,
“அப்ப இத்தன வருஷமா எங்க யாருட்டையும் சொல்லாம இருந்திருக்கியா தாயி?” என்று ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாத குரலில் ஆற்றாமையோடு கேட்டார் அதிவீர பாண்டியர்.
ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே மற்ற வீடாக இருந்திருந்தால், மறைத்துவிட்டாயா என்று அதற்கே ஆடி தீர்த்திருப்பர். தன்னவள் மீதான கோபத்தைக் கூட அவர்களால் காட்டிவிட முடியாதளவு பாசம் கொண்டுள்ளனர் என்பது அதில் தெரிய, அவள் மீதான அவர்களின் பாசம் மெல்ல மெல்ல அவனுக்கு புரியத் துவங்கியது.
“அண்ணே.. நான் முழுசா பேசிப்போடுறேனே?” என்று அவள் கெஞ்சலாய் கேட்க,
நால்வரும் அமைதியாய் அவளைப் பார்த்தனர்.
“எனக்கு அவரைப் புடிச்சுது. அவருக்கும் என்னை பிடிச்சுது… ஆனா நாங்க அதை ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிடலை.. நான் படிச்சுகிட்டு இருந்தேன்னு அவுகளும் எதும் என்கிட்ட பேசிகிடலை. நான் ரெண்டாம் வருஷம் படிக்கர்ச்சயே முடிச்சுபோட்டு போயிட்டாக” என்று அவள் கூற,
“ஓ.. அந்த சீனியரு இவருதானா?” என்று காயத்ரி துள்ளினாள்.
“காயத்ரி” என்று விஜயலட்சுமி அதட்டியதில் அவளும் பொழிலன் பின்னே பதுங்கிட,
“வாயவச்சுட்டு சும்மால்லாது எதையாது பேசிட்டு எம்பின்னே நின்னுகிடுங்கடே.. பெருசுகயெல்லாம் என்னையத்தேன் பாக்குதாக” என்று பொழிலன் பீதியோடு முனகினான்.
“நான் படிப்ப முடிக்குறவரை முறையா காத்திருந்து பிறகுதேன் போன வாரம் வந்து நேர்ல பேசினாக” என்று பொற்றாமரையாள் கூற,
“அண்ணே” என்று அக்னி அழைத்தான்.
அவன் அழைத்ததிலேயே புரிந்துபோனது அக்னிக்கு இது புது செய்தி இல்லையென்று.
அவ்வீட்டில் மூத்தோர் நால்வருக்குமே தெரியும் அவள் அக்னியிடம் எதையும் கூறிவிடுவாள் என்று. தந்தை ஸ்தானித்தில் இருப்பவரிடம் அனைத்தையும் பகிர்வதற்கும், அண்ணாவாக இருப்பவனிடம் பகிர்வதற்கும் வித்தியாசம் உள்ளதே! அதை புரிந்தே இருந்தனர் நால்வரும். யாரேனும் ஒருவரிடமாவது பகிர்வதே நல்லது என்றே அதை கருதினரே தவிர, ஒருபோதும் தங்களிடம் அவள் கூறாது அக்னியிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்கிறாள் என்று நினைத்ததில்லை!
அதிவீரரைப் பார்த்து, “நான் பையனபத்தி நாலு இடத்துல விசாரிச்சுபார்த்தவர ரொம்ப நல்லவிதமா சொல்லுதாக. நான் நேர்லயும் பேசினேன்” என்று அமைதியாய் கூறியவன், “நீங்களும் பேசிப் பாருங்கண்ணே” என்று கூற,
ஆதியைத் திரும்பிப் பார்த்தனர்.
ஆதி நிமிர்ந்து அமர்ந்தவனாய், தனது பெயர் வேலைப் பார்க்குமிடம், சம்பள விவரம் போன்றவற்றைக் கூற,
“சொந்தவீடு இருக்குதா?” என்று அர்ச்சனா கேட்டார்.
அதில் அவன் முகம் லேசாகச் சுருங்கிவிட,
“நாங்க ரெண்டுபேரும் சேந்து எங்க சம்பாத்தியத்துல வீடு வாங்கி அதுல வாழனும்முனு எங்களுக்கு ஆசை அண்ணி” என்று அவனது பலவருட ஆசையை அவன் வாய்வார்த்தையாய் கூறி கேட்காமலே கூறியிருந்தாள், பொற்றாமரையாள்.
அதில் ஆதி அவளை ஆச்சரியமாய் நோக்க, அவன் முகத்தில் காதலியை எண்ணி பெருமிதம் வழிந்தது!
“சொந்தமா காரு?” என்று அடுத்து தீஞ்சுடரோன் வினவ,
அவர்கள் வீட்டில் வசதியாய் வளர்ந்த இளவரசியின் கணவனாக வரப்போறவனுக்கான அவர்களின் எதிர்ப்பார்ப்பு புரிந்தது.
“என்கிட்ட சொந்தமா வீடு கிடையாது, வண்டி கிடையாது, எனக்குனு குடும்பமும் கிடையாது” என்று அவன் கூற,
முதல் இரண்டைக்கூட ஏற்றுக்கொண்டவர்களால் மூன்றாவதாகக் கூறியதை ஏற்க இயலவில்லை!
தங்களது மாபெரும் குடும்பத்தில் வளர்ந்த பிள்ளையை தன்னந்தனியே அனுப்பி வைப்பதா என்றுதான் தோன்றியது அவர்களுக்கு. நாளை ஏதும் பிரச்சினை என்றாலும் கூட, அவர்களுக்கு நாலு நல்ல அறிவுரைகளைக் கூற வீட்டில் பெரியவர்கள் என்று வேண்டாமா என்றே எண்ணினர்.
ஆனால் அவனை அநாதையென்று கூறி சங்கடப்படுத்தமளவு கொடூர மனம் கொண்டவர்கள் இல்லையே அவ்வீட்டார்!
பேச தொண்டையை வந்து முட்டிய அநாகரீக வார்தைகளை அவர்கள் சங்கடப்பட்டு உள்ளே தள்ளுவது எதிரில் இருந்தோருக்குப் புரிந்தது.
தாமரையாள் ஆதியை சங்கடமாய் நோக்க, தன் கண்கள் மூடித் திறந்தவன், “யாருமில்லாத அநாதபயலுக்கு பொண்ணை எப்படி குடுக்குறதுனு நீங்க தயங்குறது புரியுது” என்று கூறவும்,
“ஏங்க?!” என்று அதட்டலும் ஆற்றாமையுமாய் அவனின் யாழ் பதறினாள். அவன் ஒற்றைச் சொல் அவனையே சுட்டுப் பதம் பார்த்ததன் வலி அவளையும் வதைக்கும் விதமாய் வலித்தது போலும்!
அவன் அவ்வாறு கூறியதே அவளுக்குக் கசந்தது! 'ஏன் நான் இல்லையா?’ என்று சொல்லாமல் சொல்லும் விதமாய் கண்கள் கணலாய் சிவந்தது!
அவளைக் கெஞ்சலாய் ஒரு பார்வைப் பார்த்தவன், “எனக்கு யாருமில்லாம இருந்தது தான். அது உங்க தங்கச்சி என் வாழ்க்கைல வர்ற வரை. இப்ப அவளால இத்தனை பெரும் குடும்பம் கிடைக்குதே.. அப்ப நான் எப்படி அநாதையாவேன்?” என்று கேட்க,
அனைவருமே அதில் அதிர்ந்து தான் பார்த்தனர்.
“என்கிட்ட உங்களவு வசதியில்லாம இருக்கலாம். ஆனா இருக்குற ஒத்த மனசை மொத்தமா உங்க தங்கச்சிக்குனே வச்சிருக்கேன். என் வாழ்க்கைல நான் சந்தோஷமா இருக்குறதே அவளோட சந்தோஷத்துல தான்னு வாழ நினைக்குறவன்.. ஒருகாலமும் அவளை கைவிட மாட்டேன். எனக்கு என் யாழ்கிட்ட எந்த ஈகோவும் கிடையாது. அவளை இந்த வீட்ல நீங்க சாமியா பூஜிக்குறீங்கனு தெரியுது.. நான் அவளை என் சாமி கொடுத்த வரமா புஜிக்குறேன். இங்க அவ எனக்கு அன்பை கொடுத்து உயிர்ப்பை விதைக்க வந்த வரமா தான் தெரியுறா” என்று தன் இடப்பக்க மார்பை தேய்த்துக் கூறியவன்,
“என் வாழ்க்கையவே உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கத்தான் வந்திருக்கேன்” என்றான்.
யாருக்கும் அவனிடம் என்ன பேசுவதென்றே புரியவில்லை!
கண்கள் மின்ன அவனைப் பார்த்தவள் பார்வையில் காதல் டன் டன்னாய் வழிவதில் தானும் மனம் நிறைந்து புன்னகைத்தவன், “என் யாழை எனக்குக் குடுங்க மச்சான். கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிடுதேன்” என்று இறைஞ்சுதலாய் கேட்க,
அவன் காதலில் அனைவரும் நெக்குறுகி நின்றனர்.
அவன் பேசியதில் தங்கள் தங்கைமீது கொள்ளைக் காதல் கொண்டவன், நிச்சயம் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று தோன்றினாலும் கூட, தங்கள் செல்வ சீமாட்டியை கரம் பற்றப்போபவனைப் பற்றி அண்ணனாக அவர்களுக்கு ஆலோசிக்க பலதும் இருந்தது.
“தம்பி.. நாங்க யோசிச்சு சொல்லுதோம்” என்று ரணதீரோன் கூற,
“தாராளமா நேரமெடுத்துக்கோங்க. நல்லா விசாரிச்சு முடிவெடுத்துக்கோங்க. ஆனா ஒன்னு.. என்னை நீங்க வேணாமுன்னு சொல்லுறதா இருந்தா அதுக்கான நியாயமான காரணத்தை சொல்லுங்க.. இந்த தேவதைக்கு இப்படி ஒரு குற்றமுள்ளவன் வேணாம்முன்னு அந்த குற்றத்தை திருத்திக்க என்னவும் பண்ணுறேன்” என்று கூறியவன், அப்போதும் அவளை விட்டுச் சென்றிடுவேன் என்பதைக் கூறிக் கொள்ளவில்லை.
அதில் காதலியாய் கர்வம் கொண்ட பொற்றாமரையாள் நிமிர்வோடு தன் அண்ணன்களை நோக்க, திருப்தியான புன்னகையோடு அவனை வழியனுப்பி வைத்தனர்.
நிச்சயம் அவள் தனக்குத்தான் என்று நம்பிக்கையோடு இருந்தோனை அழைத்து அடுத்து அவன் தலையில் ஒரு குண்டை தூக்கிப் போட்டனர், அந்த பீம சேனர்கள்,
“வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதம்முன்னா தாராளமா எங்க தங்கச்சிய கட்டிகிடுங்க மாப்பிள்ளை” என்ற வார்த்தைகளோடு!
-தொடரும்...
நாணல்-15
தன் முன் இருப்போர் கூறியதில் அதிர்ந்து நின்ற ஆதியின் கண்கள் தேடியது பொற்றாமரையாளைத்தான். ஆனால் அவள் அங்கு இல்லை. அவள் இல்லாத நேரத்தில் வந்துவிட்ட தன் மடமையை முதலில் நொந்துக் கொண்டவன் சில நிமிடங்கள் மௌனமாய் அமர்ந்திருக்க,
“என்ன தம்பி? ஏதும் பேச மாட்றீங்க?” என்று தீஞ்சுடரோன் கேட்டார்.
தனது தாமதத்தில் ‘மாப்பிள்ளை’ என்ற சொல் ‘தம்பி’ என்றானதில் பதறியவன்,
“இல்லைங்க.. அது முடியாது” என்று கூற, அப்போதே அங்கு அக்னி வந்தான்.
ஆதியைக் கண்டு புன்னகையோடு “வா ஆதி” என்று அவன் அழைக்க,
அதற்கு வழுக்கட்டாயமாய் பதில் புன்னகை கொடுக்க முயற்சித்தான்.
அந்த முயற்சியிலேயே ஏதோ சரியில்லையென அக்னி அண்ணன்களை நோக்க,
“ஏன்? எங்கப்பிள்ளைய நாங்க பிரிஞ்சு இருந்ததில்லைங்க.. நீங்களும் இங்கன வீட்டோடவே வந்துடுங்களேன்” என்று சிம்மவரதன் கூற,
அதிர்ந்துபோன அக்னி தன் அண்ணிகளைப் பார்த்தான்.
அவர்களின் முகபாவமே இதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை உணர்த்தியது! ஒரு பெண்ணாக அவர்கள், நினைத்தது பெண்ணுக்குப் புகுந்த அகமே பெருமை என்பதுதான். நாலு பேர் நாலு விதமாய் பேசிடும்படியான இந்தச் செயலை அவர்கள் விரும்பவில்லை! மேலும் திருமணத்திற்குப் பின் ஆணோ பெண்ணோ.. யாருக்கு வரும் அவமானமும் அவர்களது துணையையும் சென்று சேரும் என்ற கருத்துக் கொண்டவர்களுக்கு இப்படி வீட்டோடு மாப்பிள்ளையாய் ஆதியை அழைப்பது தங்கள் வீட்டுப் பெண்ணையும் இழிவு செய்வதாகவே படுவதால் நினைத்தனர்.
“சொல்லுங்க தம்பி” என்று ரணதீரன் வினவ,
“அண்ணே.. என்னண்ணே இது?” என்று அக்னி கேட்டான்.
“நம்ம பிள்ளைமேல இம்பூட்டு காதலிருக்குதுல்லடா.. இதுகூட செய்துக்கக் கூடாதா?” என்று அதிவீரர் வினவ,
“என்னண்ணே அபத்தமா பேசுத?” என்ற அக்னி, “ஆதி.. சாரிடே” என்றான்.
மெலிதாய் புன்னகைத்த ஆதி, கண்மூடித் திறந்து அக்னியை அமைதிபடுத்தி, “வீட்டோட மாப்பிள்ளையா வர்றதை நான் கௌரவக்குறைச்சலா நினைக்கலைங்க. ஆனா நான் எனக்காக ஆசைபட்ட ரெண்டே விஷயத்துல ஒன்னு என் யாழ், இன்னொன்னு என் வேலை. நான் ரொம்ப ஆசைபட்டு அதுக்காக ராப்பகலா உழைச்சு அந்த வேலையில சேந்திருக்கேன். என் கனவும் காதலும் ரெண்டுமே எனக்கு முக்கியம் தான்” என்று அவன் கூறுகையில் தாமரையாள் உள்ளே வர, ஆதி பேசியதைக் கேட்திலேயே என்ன நடந்திருக்கும் என்று அவளுக்குப் புரிந்தது.
கண்டிப்பான ஒரு பார்வையை தன் அண்ணன்களை நோக்கி அவள் வீச, அதில் நால்வரும் தயங்கி நின்றதில் தன்னவளுக்கு அவ்வீட்டில் எத்தகைய இடம் என்பதை ஆதி வியந்து பார்த்தான்.
“அண்ணே.. உங்களுக்கு எம்மேல உள்ள பாசந்தேன் இப்படி பண்ண வைச்சுதுனு புரியுதுண்ணே.. ஆனா அவரு இங்க வர்றதுக்கு அவருக்கே விருப்பம் இருந்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன். அவரோட கனவை வீசிட்டுதேன் என் காதலை அடையனும்முனா அங்க என் காதல் அவர் கனவுக்குக் கொலைகாரனாதேன் நிக்கும். அப்படி அவரை வரவழைக்கனும்முனு நான் ஒருகாலமும் விரும்பமாட்டேன்” என்று மதுரையின் பட்டமகிஷியாய் பொங்கியவள், அவளவனைக் கண்டு, “எங்கண்ணாக்களுக்கு எம்மேல கொள்ள பாசம். நாஞ்சொல்லிருக்கேனே.. எனக்காக மட்டுமே யோசிச்சவக உங்களை யோசிக்கலைங்க. அவுகளுக்காக நான் மாப்பு கேட்டுகிடுதேன்” என்று கூறினாள்.
தவறு என்று வந்துவிட்டால் பொற்றாமரையாள் மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டாள் என்பது அங்குள்ளோர் அறிந்ததே. தன்னவளின் இந்த இல்லத்து பரிணாமத்தை முதன்முறை காண்பவன் சற்றே புன்னகைக்க, அவள் அண்ணன்மார்கள் தங்கையை மன்னிப்பு வேண்ட வைக்கும்படியான சூழலை உருவாக்கியதில் சங்கடமுற்றனர்.
மூத்த அண்ணனின் கரம் பற்றியவள், அத்தனை நேரமிருத்த கோபம் முற்றுமாகத் தனிந்து கருணை பொங்கும் கண்களோடு, “நான் பிறந்து வளந்த வீட்டயும், உங்க எல்லாரையும் விட்டுபோட்டு போக எனக்குமட்டும் ஆசையா இருக்குமாண்ணே? பொண்ணுனா கண்ணாலம் கட்டி புருஷன் வீட்ல இருந்தாதேன் கௌரவம்னு நினைக்குறவ நானில்லண்ணே.. ஆனா அவருக்குனு இருக்கும் கனவை என்னால உடைச்சுட்டு என் காதலால சந்தோஷப்படுத்த முடியாது” என்று கூற,
தங்கையின் கன்னம்பற்றி, “ரொம்ப பெரியபுள்ளையாட்டு தெரியுற தாயீ” என்று உருக்கமாய் கூறினார்.
“உங்கம்மை வாளந்துட்டேனே” என்று அவள் கூற, அதில் புன்னகைத்தவர் ஆதியை நோக்கி, “மன்னிசுடுங்க மாப்பிள்ளை” என்று மன்னிப்போடு, தனக்கு அவர்கள் காதலில் சம்மதம் என்பதையும் சேர்த்து உணர்த்தியிருந்தார்.
அதில் காதலர்கள் இருவரும் பெரும் ஆனந்தம் கொள்ள தன் அண்ணன்களைக் கட்டியணைத்தவள், “ரொம்ப நன்றிண்ணே” என்று மனமார கூறினாள்.
“உன் சந்தோஷம்தாம்டே எங்க நிம்மதி” என்று தீஞ்சுடரோன் கூற,
அவர்களைப் புன்னகையாய் பார்த்து நின்ற ஆதியின் தோள்தட்டிய அக்னி, “சோலியெல்லாம் எப்படி போகுதுடே” என்று வினவ,
“நல்லாபோவுது மச்சான்” என்று உரிமையாய் பேசினான்.
அவனுக்கு அக்னியுடன் எப்போதோ ஒரு அழகான உறவு ஏற்பட்டதால், அவ்வீட்டில் அக்னியிடம் வெகுநெருக்கமாய் உணர்ந்தான்.
அக்னிக்கும் தன் தங்கையின் சீனியராக அறிமுகமாகி, காதலனாகக் காணப்பெற்று, கண்ணியமும் பொறுப்பம் கலந்த சிறந்த ஆண்மகனாய் பழக்கம் துவங்கியதில் ஆதியை தன் உற்ற நண்பனைப் போல் பார்க்கத் துவங்கியிருந்தான்.
கல்லூரி காலத்தில் கிடைத்திடாத அந்த நட்பு, ஆதிக்கு அக்னியின் ரூபத்தில் தற்போது கிடைத்திருந்தது. அதில் ஆதியை விடவும் தாமரையாளுக்கு வெகுதிருப்தி. தன்னவனுக்கு தன்னால் கிடைக்கப்பெறும் இந்தச் சந்தோங்கள் அவனை இதுவரை அடைந்திடா ஆனந்த உணர்வுகளில் திழைக்கச் செய்திட வேண்டுமென்றே ஆர்வம் கொண்டாள்.
“சரிங்க.. கண்ணால சேதியெல்லாம் பேச நல்ல நாள் குறிச்சிடுவோமா?” என்று அர்ச்சனா வினவ,
ஆதி புரியாது அக்னியை நோக்கினான்.
ஆதியை தோளோடு அணைத்தபடி வெளியே கூட்டிவந்த அக்னி, “ஆதி.. உனக்குக் கண்ணாலத்தை எங்க வீட்டு முறைபடியே செய்றதுல எந்தச் சங்கடமும் இல்லதானடே? இல்ல உனக்குனு எதும் ஆசை இருக்குதா? இப்படி இந்தமுறைல கண்ணாலம் வைக்கனும்முனு?” என்று முறையாய் அவன் விருப்பை அறிய,
மனம் நெகிழ்ந்து புன்னகைத்தவன், “எனக்கு எங்க கல்யாணத்தை மருத மீனாட்சியம்மன் கோவில்ல வைக்கனும்முனு ஆசை மச்சான். அதுதவிர எனக்கு இந்தச் சடங்கெல்லாம் பத்தி ஒன்னும் தெரியாது. நீங்க என்ன செய்றீகளோ செய்ங்க” என்று கூறினான்.
“மருத பாஷையெல்லாம் பலமா இருக்குதே.. எங்காத்தா நல்லா ட்ரெயின் பண்ணியிருக்காபோ” என்று அக்னி கூற, அதற்குப் பதிலாய் அட்டகாசமான சிரிப்பைக் கொடுத்தான்.
“வீட்ல கண்ணாலத்துக்கு, துணி எடுக்கப் போறதுக்கு, தாலிக்கு செய்யச் சொல்றதுக்குனு எது எது என்னென்னிக்கு செய்யோனும்முனு நல்ல நாள் பாப்பாகடே. அந்த நல்ல நாளெல்லாம் பாக்குறதுக்கே ஒரு நல்ல நாள் குறிச்சுதேன் பாப்பாக. அப்பவே கண்ணாலத்துக்கும் நாள் பாத்துகிடுவாக. நிச்சயதார்த்தம் பண்ண மாட்டோம்டே. பத்திரிக்கை அடிச்சதும் கோவில்ல வச்சு கும்பிட்டு சாமிக்குப் பத்திரிகை வாசிச்சு காட்டுவோம். அதுக்கு பெரியவகதேன் போவாக. கண்ணாலத்துக்கு மீனாட்சி சொக்கநாதர் பதிச்ச தங்கத்தாலிதேன் செய்வாக. தாலியும், புடவையும் மட்டும் மாப்பிள்ளை வீட்டு செலவு” என்றவன் ஆதியை நோக்க,
“செஞ்சுபுடலாம்டே” என்று புன்னகையாய் கூறினான்.
“கண்ணாலம் முடிஞ்சு சாந்தி முகூர்த்தம் பொண்ணு வீட்டுலதேன் வைப்போம். மறுநாள் கொலசாமி கோவில்ல பொங்க வச்சு கும்பிட்டுட்டு பிள்ளைய புகுந்தவீட்டுக்கு எல்லாருமா கொண்டாந்து விடுறதுதேன் வழக்கம்” என்று அக்னி கூற,
“மச்சான்.. குடும்பம் மொத்தமும் வந்து தங்குறளவு என் வீடு தாங்காதே” என்று பீதியோடு கூறினான்.
அதில் வாய்விட்டுச் சிரித்த அக்னி, “பெரியண்ணே பெரியமதினி மட்டும் தான் வருவாகக் கவலப்படாதடே” என்று அக்னி கூற,
தானும் சிரித்துக் கொண்டவன், “ரொம்ப நன்றி மச்சான்” என்றான்.
“எதுக்குடே? நான் ஏதும் பேசி அண்ணனுங்கள ஒத்துகிட வைக்கல.. அவுகதேன் உன்னைய பத்தி விசாரிச்சு முடிவு பண்ணாக” என்று அக்னி கூற,
“அதுக்கில்ல மச்சான்.. நான் நன்றி சொன்னது உனக்காக” என்றான்.
அக்னி புரியாமல் பார்க்க, “இந்த நட்பு எதிர்பாராத உறவு மச்சான். எனக்காக என் இடத்துலருந்து நீ யோசிக்குறியே! அதுவே மனசுக்கு இதமா இருக்குது” என்று ஆதி கூற,
அவன் பாசத்திற்காக எத்தனை எத்தனை ஏக்கம் கொண்டிருந்திருக்கின்றான் என்பது அக்னிக்கு புரிந்தது!
“எந்தாயி உன்னை நல்லா பாத்துகிடும்டே” என்று அக்னி கூற,
“அவ நிச்சயம் என்னை நல்லாதான் பாத்துப்பா மச்சான். அதுலயெல்லாம் எனக்குச் சந்தேகமே கிடையாது” என்று பெருமை பொங்க கூறினான்.
அதில் புன்னகைத்துக் கொண்ட அக்னி அவனை உள்ளே கூட்டி செல்ல,
“தம்பி, வர்ற வெள்ளி நல்ல நாளா இருக்குது. அன்னிக்கே எல்லாத்துக்கும் நாள் குறிச்சுகிடுவோமா?” என்று தடாதகை நாச்சியார் வினவ,
“சரிங்கக்கா” என்றான்.
“நீங்களும் வந்துடுங்க. நாள் குறிச்சுபோட்டு அதுக்கேத்த போல மித்த காரியமெல்லாம் செஞ்சுபோடுவோம். சேலையெடுக்குற அண்ணிக்கே தாலிக்கு செய்யச் சொல்லிபுடுவோம். தாலியும் முகூர்த்த சேலையும் மட்டும் உங்க செலவுத் தம்பி” என்று அம்பிகா கூற,
“சரிங்க க்கா” என்றான்.
“கண்ணாலத்தை நம்ம மீனாட்சியம்மன் கோவில்லயே வச்சுகிடுவோம். ரிசப்ஷன் வைக்குறதெல்லாம் எங்க வழக்கத்துல கெடையாது. உங்களுக்கு ஆபிஸ் தோழர்களைக் கூட்டி வைக்கனும்முனா வச்சுகிடுங்க” என்று விஜயலட்சுமி கூற,
“சரிங்கக்கா.. அதானே மாமா?” என்று கேட்டபடி அவனுக்கு இருபுறமும் வந்து அமர்ந்தனர் இரட்டையர்கள்.
அதில் லேசாய் சிரித்தவன், ஆமென்பதாய் தலையசைக்க, கண்களில் காதலும் கருணையும் பொங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் பொற்றாமரையாள்.
“ஐத்த.. கண்ணுல காதல் டன் டன்னா ஊத்துது போலயே” என்று அவளை இடித்துக் கொண்டு வந்த காயத்திரி கூற,
“அடி.. என்ன சேட்டையா?” என்று நாணத்தை மறைக்க முயற்சித்த வண்ணம் கேட்டாள்.
“அய்யோ ஏங்கண்ணு? சித்திக்கு முகமெல்லாம் வெக்கச்சிவப்பா சிவக்குது பாரு” என்று திலகாவும் இடித்துக் கொண்டு வந்து நின்றவளாய் கூற,
“திலகா…” என்று பொய் கோபத்துடன் பற்களைக் கடித்தாள்.
“பாருங்க க்கா.. பல்லைக் கடிச்சு வெக்கத்தை அடக்குறாக” என்று அங்கையும் வந்துவிட,
“ஆமாண்ணி.. கன்னமெல்லாம் எப்படி செவக்குது பாருங்க.. ஐத்த முகத்துல கல்யாண கலை வந்துடுச்சுடியோய்” என்று காயத்திரி கூறினாள்.
இவர்களது கேலி பேச்சில் மென்மேலும் சிவந்தவள், “அய்யோ.. போதும் போதும்” என்றுவிட்டு நகர,
“ஏ.. அத்த.. எங்க ஓடுத?” என்றபடி எழுந்து வந்த செழிலன், அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆதியின் அருகே அமர்த்தினான்.
தோள்கள் உரசி அருகருகே இடித்திக் கொண்டு அமர்ந்ததில் திடுக்கிட்டுப்போனவள் ஆதியை திரும்பிப் பார்க்க, முதன்முறை பெறப்பட்ட அந்தச் சில்லென்ற உணர்வில் ஆதியும் அவளைத் திடுக்கிட்டு நோக்கினான்.
சட்டெனச் சூடேறி சிவந்துவிட்ட கன்னங்களை மறைக்க முடியாது முகம் தாழ்த்தியவள், அத்தனை பேரும் அங்கே தங்களை நோக்குவதை தாளாமல் “செழிலா.. வெளாட்டுபோதும்” என்று கூறி விறுவிறுவென எழுந்து சென்றுவிட, பெரியோர் யாவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
ஆணவனாகிய தனக்கே வெட்கம் வரப்பெற்ற ஆதி அதற்குமேல் அங்கு இருக்க இயலாமல் புறப்படவேண்டி எழுந்திட,
“அதென்னய்யா வெறும் வயிறா போறது? சித்த இருந்து கைய நனைச்சுட்டு போ” என்றபடி அர்ச்சனா உணவை எடுத்துவைக்கச் சென்றார்.
அதன்படியே அவர்களுடன் பேசி உண்டு முடித்தவன் புறப்பட, மாடிப்படியோரம் நின்றபடி கண்களால் அவனுக்கு விடைகொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே ஓடிவிட்டாள், ஈஸ்வரனின் யாழ்!
-தொடரும்...
நாணல்-16
அந்த மாபெரும் ஜவுளி உலகத்தினுள் அவர்களது மொத்த குடும்பமுமே நுழைந்தது. கடையைப் பார்த்ததற்கே ஆதி மலைத்துப் போனான் என்று தான் கூற வேண்டும்… தொட்டதெல்லாம் ஆரியர்களில் துவங்கும் அந்த கடையில் தான் அவர்கள் வீட்டு விசேஷங்களில் வழக்கமாக உடை எடுப்பர் என்று தீஞ்சுடரோன் கூறுவதைக் கேட்ட ஆதிக்கு இன்னும் ஆச்சரியம் தான்!
ஒருவருக்கு வாங்கவே அங்கு ஆயிரங்களை கொட்ட வேண்டும் எனும் பட்சத்தில், அந்த ‘மினி பள்ளிக்கூடத்திற்கே' அங்கு வாங்குகின்றார்கள் என்றால் அவர்களது பணபலம் எத்தகையது என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க விடயம் அவர்கள் உடுத்தும் அனைத்து உடைக்கும் அனாவசியமாக பணத்தை செலவிடுபவர்களும் இல்லை என்பதே!
ஒருபோதும் இத்தகைய பின்புலத்திலிருந்து வந்ததைப் போல் அவனவள் மட்டுமல்ல அவ்வீட்டில் யாருமே காட்டிக் கொண்டதில்லை என்பதே அவனுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இதில் ஒவ்வொரு தளத்திற்கும் யாரேனும் வந்து அவர்கள் மொத்த குடும்பத்திடமும் பேசி தாமரையாளின் திருமணம் குறித்த செய்தியில் மகிழ்ந்து வாழ்த்திவிட்டுச் செல்ல, அவ்வூரில் அவர்களின் செல்வாக்கு எத்தகையது என்றும் அவனுக்குப் புரிந்தது.
எங்கே இவற்றையெல்லாம் கண்டு அவனுக்குத் தாழ்வுமனப்பான்மையான உணர்வு எழுந்து விடுமோ என்ற கலக்கத்தோடு தயங்கித் தயங்கி தாமரையாள் ஆதியின் கரம் பற்ற, அதில் உள்ளம் சிலிர்த்துத் திரும்பியவன் அவள் விழிமொழியிலேயே புரிந்துகொண்டோனாய் ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்தான்.
அதில் மெலிதாய் புன்னகைத்தவள் திரும்பிக் கொள்ள, “அஹம் அஹம்..” என்று பின்னே மூவரின் சத்தம் கேட்டது!
'அய்யோ… இதுகளோட..’ என்று மனதில் நாணம் கொண்டவள் தன் கரத்தை அவன் கரத்திலிருந்து விடுவித்துக் கொள்ள, ஆதி பின்னே திரும்பிப் பார்த்தான்.
“அய்யோ.. மாமா.. நாங்க ஒன்னும் சொல்லலை.. யூ கண்டினியூ” என்று கோரஸாக செழிலன், பொழிலன் மற்றும் காயத்திரி கூற,
“அடி வெளுக்கப்போறேன் உங்க மூனு பேரையும்” என்று பொய் கோபத்தோடு பெண்ணவள் கூறினாள்.
அதில் சிரித்துக் கொண்ட ஆதி, “உங்கள்ல யாரு செழிலன்? யாரு பொழிலன்” என்று கேட்க,
“எங்கத்தையவே கேளுங்க மாமா.. டப்பு டப்புனு சொல்லும்” என்று செழிலன் கூறினான்.
ஆதி, தாமரையாளை நோக்கவும், “இது செழில், இது பொழில்” என்று அவள் சுட்டிக்காட்டி கூற,
“எப்படி சரியா கண்டுபிடிக்குற?” என்று ஆதி கேட்டான்.
“அதெப்படிங்க மாமோய்? நாங்க இன்னும் ஐத்த சொன்னது சரினே சொல்லலையே” என்று காயத்திரி வினவ,
அதில் சிரித்தவன், “உங்க ஐத்தை சொன்னா சரியாதேன் இருக்குமாட்டு” என்றான்.
“ஆத்தே.. என்ன ஐத்த பாஷையையும் பழக்கியுட்டு இப்பவே முடிஞ்சு வச்சுகிட்ட போலாட்ருக்கு” என்று காயத்திரி வினவ,
“காயூ..” என்று முறைத்தபடி நாணம் பூத்த முகத்தை தாமரையாள் மறைக்கும் அழகை ரசித்து நின்றான், அவளவன்.
“ஏடே.. என்னடே நடக்குது?” என்றபடி ரணதீரன் வர, அவர் குரலும் அக்னியின் குரலும் சற்றே ஒரேபோல் இருக்குமென்பதால், அக்னியென்று நினைத்தபடி, “வா சித்தப்பூ” என்று தோளில் கரமிட தோதாக கையை பொழிலன் தூக்கினான்.
அவனுக்கு முன்னே நின்றிருந்த தாமரையாள் மற்றும் ஆதி ரணதீரனையும், பொழிலன் நிற்கும் தோரணையையும் கண்டு சிரிப்பை சிரமப்பட்டு அடக்க,
“யோ.. கையு வலிக்குது.. வந்து நில்லு சித்தப்பு” என்றபடி திரும்பியவன் தந்தையைக் கண்டு விழிபிதுங்கி, “ஆத்தே..” என்க,
“ஆத்தா இல்லடே.. அப்பன்.. இப்படித்தேன் வாயா போயானு பேசிட்டிருக்கியா அவேனோட?” என்று கண்டிப்பாகக் கேட்டார்.
அவ்வீட்டில் வயது வித்தியாசங்களையும் தாண்டி உறவுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது பெரியோரின் கருத்து. அதனாலே தான் ஒத்த வயதுடைய ஆருத்ரன், அக்னி மற்றும் செழிலன் பொழிலன், பொற்றாமரையாள் கூட உறவுமுறையில் அழைத்துக் கொள்கின்றனர்.
தந்தை அரட்டியதில் நிஜத்தில் பயம் கொண்ட பொழிலன் தன் தம்பி தங்கையை நோக்க, “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்வாக.. போய் அண்ணேன காப்பாத்துண்ணே” என்று காயத்திரி செழிலன் காதில் கிசுகிசுக்க,
“அதுசரி.. பெறவு என்னைய யாரு காப்பாத்துறது?” என்றவன் அத்தையை நோக்கினான்.
அதில் சிரித்த தாயரையாள், “அண்ணே.. வாண்ணே துணியெடுப்போம்” என்று பேச்சை மாற்றி அண்ணனை அழைக்க,
அவள் முயற்சி புரிந்தபோதும் தடுக்காதவர், தன் மகனை முறைத்துவிட்டு நகரவும் தவறவில்லை.
“ஆத்தே..” என்று பொழிலன் பெருமூச்சு விட, அங்கு வந்த அக்னி, “என்னடே” என்றதும், “அய்யோ அப்பா நானில்ல” என்று பதறி ஓடியே விட்டான்.
அதில் சுற்றியிருந்த யாவரும் சிரிக்க, ஒன்றும் புரியாது திருதிருவென விழித்த அக்னி, “என்னடேனு தானடே கேட்டேன்” என்றான்.
அனைவரும் துணிகள் எடுக்கத்துவங்க, தாமரையாளுக்கு அவளது அண்ணிகள் பல புடவைகளை எடுத்து வைத்துப் பார்த்த வண்ணம் இருந்தனர்.
அருகே நின்றபடி சிறு புன்னகையுடன் ஆதி இதை பார்த்துக் கொண்டிருக்க, அண்ணிகள் புடவையை அவள் தோளில் வைத்து அவளிடம் கேட்கவும், அவள் ஆதியை பார்க்கவும், அவன் கண்களால் பதில் கொடுக்கவும், அதை அவள் அண்ணிகளிடம் மொழி பெயர்க்கவும் என்றே சென்றது!
“இதுக்கு நீங்களே போயி சேலைய சூஸ் பண்ணலாமுங்க மாமா” என்று காயத்திரி கூற,
“பாத்துட்டு தான்டா இருக்கேன்” என்றான்.
“சேலைய பாக்குதாப்ல இல்லயே..” என்று அவள் கூற,
அங்கு வந்த அக்னி அவள் தலையில் வலிக்காமல் குட்டு வைத்து, “வயசுக்கு தகுந்த வாயடி புள்ள” என்றான்.
“சித்தப்பு.. நானொன்னும் சின்னபுள்ளயில்லை ஆமா” என்று அவள் சீறிக்கொண்டு கூற,
“பேசுற பேச்சுக்கு பெரிய பிள்ளையும் இல்லதாயீ” என்று மெய்யான தகப்பனாய் கடிந்தான்.
“விடு மச்சான்.. சின்னபுள்ளதானே” என்று ஆதி கூற,
“பாரு.. மாமாவே என் கேலிய நல்லாதேன் என்ஜாய் பண்ணுது” என்றவள் அடுத்த குட்டை வாங்க அங்கில்லை.
சற்றே தயங்கிய அக்னி, “எப்பவும் விசேசத்துக்கு எடுக்குற கட இதான்டே.. உனக்கு முகூர்த்த சேலை இங்கன எடுக்க தோதுபடுமா?” என்று வினவ,
மென்மையான புன்னகையுடன், “உண்மைக்கா சொல்லனும்முனா கஸ்டம்தான் மச்சான். ஆனா கண்ணாலமொன்னும் வருஷா வருஷத்துக்கு பண்ணிகிட போறதில்ல. ஒருதடவதேன்.. அதுல எந்த கொறையும் வச்சுகிட வேணாமே” என்று கூறினான்.
“எதும்னா தயங்காம என்கிட்ட சொல்லு ஆதி” என்று அக்னி கூற,
“உன்கிட்ட சொல்லாம வேற எங்கடே சொல்ல போறேன்” என்றான்.
“அண்ணேங்களுக்காவெல்லாம் சிரமபட்டு பாஷைய மாத்திகிடாதடே.. உனக்கு எப்படி பேசவருதோ அப்படி பேசு” என்று அக்னி கூற,
சிரித்தபடி, “உங்கம்மை பழக்கிவிட்ட பழக்கம் மச்சான். உங்களையெல்லாம் பாத்தா ஆட்டோமேட்டிக்கா இப்படிதேன் பேசவருது” என்றான்.
அங்கே பெண்கள் நால்வருமே தாமரையாளை சற்று சோர்வாகத்தான் பார்த்தனர்.
வெகு நேரமான பின்பும் கூட, ஏதும் அவள் ஒப்புக்கொள்ளவில்லையே! காரணம் அவளவன் என்பதில் தான் அவளுக்கு சிரிப்பே.
தானே கலத்தில் இறங்கிய ஆதி, கடை ஊழியரிடம், தனக்கு வேண்டிய வடிவமைப்பு நிறம் போன்றவற்றையெல்லாம் கூற, கடை ஊழியருக்கே விழி பிதுங்கியது.
“நீங்க இப்படியெல்லாம் லிஸ்டு போட்டா அத்தைதேன் உக்காந்து வடிவமைக்கனும்” என்று செழிலன் ஆயாசமாய் கூற,
சட்டென ஆதியும், தாமரையாளும் புன்னகையாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவருக்குமே தங்களின் புன்னகைக்கான இணை புள்ளி புரிந்துவிட,
“முகூர்த்த புடவைய தவிற மித்த சடங்குக்கு மட்டும் புடவை எடுத்துகிடாவோம் மதினி” என்று தாமரையாள் கூறினாள்.
“என்னபுள்ள.. இன்னிக்குதேன் நல்ல நாள் குறிச்சிருக்காக” என்று அம்பிகா கூற,
“இருக்கடுமுங்க மதினி.. நான் வெவரத்தை பெறவு சொல்லுதேன்.. எல்லாம் எனக்கே தேடிகிட்டு இல்லாது அவுகவுகளுக்கும் போய் பாருங்க” என்று தாமரையாள் கூறினாள்.
சரியென்று அண்ணிமார்கள் தங்களுக்கு ஒன்றுபோல புடவை தெரிவு செய்ய ஆயத்தமாக,
ஆதியின் அருகே வந்தவள், “விடியகால பூஜை பண்ணுவோம்.. அதுக்கும், கண்ணாலம் முடிஞ்சு சாயிந்திரம் நலங்கு பூஜை இருக்கும், அதுக்கும், நைட்டு…” என்றவள் வாய்வரை வந்த வார்த்தைகளை உதிர்க்காது இதழ் கடித்து தன் நாணத்தை அடக்கிக் கொண்டு, “மொ..மொத்தம் மூனு எடுக்கோனும் நமக்கு” என்று கூற,
“ரெண்டுக்கு மட்டுந்தான் கணக்கு சொன்னாப்ல இருந்தது?” என்று முகம் விகசிக்க வினவினான்.
தாரகையவள் அவனை நிமிர்ந்து நோக்க இயலாது தவிக்க, அந்த அழகிய தவிப்பை அழகாய் ரசித்தவன், “பாப்போமா?” என்றான்.
தாமரையாள் சட்டென நிமிர்ந்து அவனை நோக்கவும் பதறிப்போனவன், “சத்தியமா புடவையத்தேன் சொன்னேன்” என்க, கொள்ளென்று சிரித்துவிட்டவள், அவனோடு புடவைகளைப் பார்க்கச் சென்றாள்.
சொன்னபடி மூன்று சடங்குகளுக்கும் அழகழகாய் புடவைகளைத் தெரிவு செய்தனர்.
காலை விரத பூஜைக்கு குங்கும நிறத்தில் வெள்ளி நிற ஜரிகைகளைக் கொண்டு ரோஜா பூக்கள் நெய்யப்பட்ட கைத்தறி சேலையும், மாலை நலங்கு பூஜைக்கு அடர் பச்சையில் பளீர் சிகப்புநிற பட்டைக்கறை வைத்து, ஆங்காங்கே மாங்காய் வடிவமைப்பு நெய்யப்பட்ட புடவையும், சாந்திமுகூர்தத்திற்கு ஆகாய நீல நிறத்தில் அடர்நீல நிற கறை வைத்த புடவையும் எடுத்திருந்தனர்.
அதேபோல் ஆதிக்கு, குங்குமப்பூ நிறத்திலும், அடர் பச்சை நிறத்திலும், ஆகாய நீல நிறத்திலும் பட்டு சட்டையும், அந்தந்த சட்டையின் நிறத்தில் கறை கொண்ட பருத்தி வேட்டியும் எடுக்கப்பட்டது!
அனைவருக்கும் உடை எடுத்து முடிய, சென்று சொக்கர் மீனாட்சி பொன் தாலியை செய்ய தங்கள் வீட்டிலிருந்து மீனாட்சியம்மனிடம் பூஜை செய்து எடுத்துவரப்பட்ட தங்கத்தினைக் கொடுத்தனர்.
தங்கம் வாங்கியதன் செலவிற்கும், தாலி செய்வதற்கும் ஆதி காசு கொடுத்திட, அடுத்தடுத்த தாமரைக்கும், ஆதிக்கும் செய்யும் மரியாதைக்கு வேண்டிய நகைகளைப் பார்த்தனர்.
தங்க நகைகள் பார்த்து வாங்குவதில் சற்றும் அனுபவமில்லாத தாமரையாள், அதை அண்ணிகளின் கையிலேயே ஒப்படைத்துவிட்டு, தனியே வெள்ளி பிரிவுக்கு வந்தாள்.
பொதுவாக தன் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தவள் கண்களுக்கு அது தென்பட்டது!
அருகே சென்றவள் கடை ஊழியரிடம் அது குறித்து விசாரிக்க, தூரத்தில் சிறுவர் பட்டாளத்துடன் நின்று பேசிய வண்ணம் ஆதி அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.
கடை ஊழியரிடம் பேசிவிட்டு சிறு புன்னகையுடன் திரும்பியவள் முகத்தில் சிறு ஏமாற்றமும் தென்பட, அதை கண்டுவிட்டவன் மனம் அவ் ஏமாற்றத்தையும் குறித்துக்கொண்டது.
நகைகள் எடுத்துவிட்டு யாவரும் வீடு திரும்பிட, இரவு ஆகிவிட்டதால் அவனை அங்கேயே தங்கும்படி பெரியோர் கேட்டுக் கொண்டனர். திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையை வீட்டில் தங்க வைத்துக்கொள்வதற்கு அவர்கள் ஏதும் நினைக்க மாட்டனரோ என்று அவன் தயங்க,
“எய்யா.. எனக்கு ஒரு தம்பி இருந்து அவேன எங்க புள்ளைக்கு முடிச்சு வச்சிருந்தா அவேன நாங்க இப்படி அத்த ராவுல ஊருக்கு போயானு பத்திவிடுவோமா? உன்னைய அப்பட்டித்தேன் பாக்கோம். வந்து உங்கிட்டு ஒறங்குயா” என்று தடாதகை கூறினார்.
அண்ணியின் பேச்சில் தாமரையாளே நெகிழ்ந்துபோனாளெனில் ஆதியின் உணர்வுகளை சொல்லவும் வேண்டுமா? அவன் கண்களில் கண்ணீர் சடுதியில் குளம் கட்டி, கீழே விழுந்திடுவேன் என்று மிரட்டியது!
அதை கட்டுப்படுத்த அவன் போராடும் தருணத்தில் மனமுருகிய அக்னி அவன் தோள் தொட்டு, “வாடே..” என்க,
ஒரு புன்னகையோடு தன் கண்ணீர் துடைத்து எழுந்தான்.
ஆதியின் தோளில் கரமிட்ட தீஞ்சுடரோன், “எங்கம்மையோட ஆசை மாப்ள நீங்க.. உங்கள இந்த வீட்டு ரத்தமாதேன் பாக்குதோம்.. எந்த தயக்கமும் வேணாம்.. நீங்க வேணுமுன்னு கேட்டா இந்த வீட்டாளுக உதிரத்தையும் உரிஞ்சு தருவோமாட்டு” என்று நெகிழ்வாய் பேச,
அதில் ஆச்சரியித்துப்போனவனுக்கு அவர்கள் தாமரையாள் மேல் வைத்துள்ள நேசமே பூதாகரமாய் புரிந்தது.
அவன் மெய் சிலிர்த்து அடங்க, தன் பனித்த கண்களை லேசாய் துடைத்துக் கொண்டவர் அவன் தோள் தட்டிவிட்டுச் சென்றார்.
அனைவருமாக ஒன்றாய் சேர்ந்து இரவுணவு உண்ட தருணம் அவன் மனதில் கவிதையாய் இறங்கியது! அவன் கனவிலும் நடக்க வாய்ப்பற்று இருந்தவை நினைவில் நடப்பதில் மகிழ்ந்து போனவனுக்கு, இந்நிகழ்வை பரிசளித்த தேவதையாய் தன்னவள் தெரிந்தாள்.
உணவை முடித்தவன் அவனுக்கான அறைக்கு செல்ல, சில நிமிடங்களில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. ஆடவன் சென்று பார்க்க, அங்கு புன்னகையான முகத்துடன் அர்ச்சனா, அம்பிகா, விஜயலட்சுமி மற்றும் தடாதகை நின்றிருந்தனர்.
நால்வரது வெள்ளந்தியான புன்னகையில் மனமார புன்னகைத்தவன் வழிவிட, உள்ளே வந்தோர் தாங்கள் மறைத்துக் கொண்டுவந்த பையை அவனிடம் நீட்டினர்.
“என்னதுக்கா?” என்று அவன் வினவ,
“வாங்கி பாருய்யா” என்று அர்ச்சனா வாஞ்சையுடன் கூறினார்.
ஆடவன் அதை வாங்கி திறக்க, அழகிய வெள்ளையில் நீல நிற கோடுகள் போடப்பட்ட சட்டையும், கருநீல நிற கால்சட்டையும் அதில் இருந்தது.
ஆடவன் அவர்களை புரியாது நோக்க,
“உங்களுக்குதேன் எடுத்தோம் தம்பி. எங்க நாலு பேருக்குமா உங்களுக்கு ஏதும் வாங்கியாந்து தரனும்முனு ஆசையாருந்துது.. எல்லார் முன்னுக்கவும் கொடுத்தா அவுகளுக்கு வாங்கியாறனும்முனு தோனலையேனு வெசனப்படுவாக.. அதேன் தனியா கொடுக்கோம்” என்று தங்கள் கணவன்மார்களின் மனதை கருத்தில் கொண்டு அவர்கள் பேசியது அவனை உள்ளம் குளிர வைத்தது.
அதை வாங்கி ஆசைதீற வருடியவன் கண்கள் மின்ன, “ஒடம்பொருப்பா நினைச்சுகிடுயா.. நாங்கெல்லாம் இல்லையாக்கும்?” என்று விஜயலட்சுமி அவன் நாடி பற்றி கூறினார்.
“தேங்ஸ் க்கா” என்று அவன் கூற,
“ச்சூ.. அக்காளுக்கு என்ன நன்றியெல்லாம்?” என்று அம்பிகா கூறினார்.
அவர்கள் நால்வரும் அவன் கன்னம் வழித்து திருஷ்டி சுற்றிவிட்டுச் செல்ல, அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது!
ஆடவன் சென்று கதவைத் திறக்க, அதிவீரன் நின்றிருந்தார்.
“வாங்க மச்சான்” என்று அவன் வழிவிட,
உள்ளே வந்தவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு தங்க சங்கிலியை எடுத்து அவனுக்கு அணிவிக்க, சற்றே அதிர்ந்து போனான்.
“புடிச்சுருக்குதா மாப்பிள்ள” என்று அதிவீரன் வினவ,
“ம..மச்சான்” என்று தடுமாறினான்.
“பிடிக்குதில்லயோ?” என்று சந்தேகமாய் கேட்டவர், “கடையில பாத்தேன்.. கழுத்து மொட்டையா கிடக்குதேனுதேன் நெதம் போடுறதுக்கு தோதா எடுத்தேன் மாப்புள” என்று அவர் கூற,
“ந..நல்லாருக்கு மச்சான்.. எதுக்கு இதெல்லாம்?” என்று சற்றே தயங்கி தடுமாறினான்.
அவன் இதுவரை யாரிடமும் பரிசே பெற்றதில்லை.. அதில் இதுவோ விலை உயர்ந்தது வேறு.. அவனுக்கு சற்றே தயக்கமாக இருந்தது அதை பெற. என்னதான் அவனவள் குடும்பம், தனக்கான குடும்பம் என்றாலும் உடனேயே அந்த ஒட்டுதல் பிறந்திடுமா என்ன?
அவன் தயக்கம் புரிந்த அதிவீரன், “வெசனம்வேணாம் மாப்ள.. மச்சாங் கொடுக்குதேன்.. போட்டுகிடுக..” என்றவர் அவன் பக்கம் லேசாய் சரிந்து, “நாந்தேன் கொடுத்தேன்னு எம்பொஞ்சாதிக்கும் மத்தவகளுக்கும் தெரியவேணாம். அவுகளும் சேந்து போட்டு வாங்கிருக்கலாமேனு வெசனப்படுவாக” என்றுவிட்டுச் சென்றார்.
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட, உள்ளே வந்த ரணதீரோனையும், அவர் கையில் இருந்த வெள்ளி மோதிரத்தையும் கண்டு மலைத்துப் போனான்.
“மச்சாங்கொடுக்கேன்.. வாங்க மாட்டியா மாப்ள? ஒன்னும் நெனக்காது வாங்கிக்கயா” என்று கூறி அதை அணிவித்தவர், “எங்காத்தாவை தங்கமா தாங்குவனு நம்பிக்க இருக்குதுடே.. நல்லாருக்கனும் நீங்க” என்றுவிட்டுச் சென்றார்.
அடுத்து தீஞ்சுடரோன் அவனுக்கு அழகிய கைகடிகாரத்தோடு வந்து, “போட்டுக்கய்யா.. உங்க நெரத்துக்கு பழுப்புதேன் எடுப்பாருக்கும்னு பட்டுது” என்று கூறியதோடு, முன்பு வந்தோர் கூறிய அதே வாக்கியமான, “நாந்தேன் கொடுத்தேன்னு சொல்லிகிட வேணாம்” என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் எதிர்ப்பார்த்ததைப் போல் உள்ளே வந்த சிம்ம வரதன் உயர் ரக, மாட்டுத்தோளால் ஆன பணப்பையை பரிசாகக் கொடுத்துவிட்டு, “நாலு எடம் போறவரு.. நல்லா தோரணையா நாலு பொருளு வச்சுகிடுங்கய்யா..” என்று வாஞ்சையோடு கூறிவிட்டுச் சென்றார்.
எப்படியும் அடுத்து யாரேனும் வருவர் என்று அவன் கதவையே திறந்து வைத்திருக்க,
ஆருத்ரன், அங்கை, வேந்தன், திலகா, செழிலன், பொழிலன், காயத்திரி, துர்கா மற்றும் சங்கரன் உள்ளே மொது மொதுவென நுழைந்தனர்.
அவர்கள் கையில் பெரிய வண்ணத்தாள் போர்த்திய பரிசு!
“தூங்கலையா சித்தப்பா?” என்று அங்கை வினவ,
“சித்தப்பாவா?” என்று மிரண்டான்.
அவனைவிட வெறும் ஏழு எட்டு வயதே சிறியவளானப் பெண் ‘சித்தப்பா’ என்றதில் அவனுக்கு நெஞ்சே குலுங்கி நின்றது!
அதில் கொல்லென்று சிரித்த திலகா, “ஆமா சித்தப்பா” என்க,
“உங்களுக்கும் சித்தப்பாவா?” என்றான்.
“தாமரை சித்தி எங்களுக்கு சித்தினா நீங்க எங்களுக்கு சித்தப்பா தானே?” என்று சிரிப்போடு திலகா கூற,
அதில் அவன் விழித்த விழையைக் கண்டு யாவரும் சிரித்தனர்.
“மாமா.. இங்க பெரீஈய ரூல்ஸ்.. யாரும் உறவு மாத்தி கூப்பிடக்கூடாது” என்று தன் பெரிய கண்களை உருட்டி துர்கா தேவி கூற,
அதில் சிரித்துக் கொண்டவனாய் துர்கா மற்றும் சங்கரனை இரண்டு தொடைகளிலும் அமர்த்திக் கொண்டு, “குட்டீஸ் இன்னும் தூங்கலையா?” என்று வினவ,
“நாங்க உங்களுக்கு பரிசு வாங்கியாந்துருக்கோமே” என்று கூறினார்.
“ஹ்ம்?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி புன்னகைத்தவன், “என்ன கிஃப்ட்?” என்க,
“அது..” என்று கூற வந்த துர்காவை ”ஏ சொல்லாத சொல்லாத” என்று நிறுத்திய சங்கர், “நீங்களே பிரிச்சு பாருங்க மாமா” என்றான்.
அதில் மேலும் சிரித்தவனாய் அவன் நிமிர,
யாவரும் பரிசை நீட்டினர்.
அதை பிரித்துப் பார்த்தவன் முற்றிலும் இன்பமாய் அதிர்ந்து போனான்.
காலையில் கோவிலுக்குச் சென்றபோது அவர்கள் யாவரும் சேர்ந்து குடும்பமாய் எடுத்துக் கொண்ட புகைப்படம், இம்மாபெரும் மென்தகடில் ஒளிர்ந்தது!
“ஒரே நாள்ல எப்படிடே போட்டீக?” என்று அவன் மகிழ்ந்து ஆச்சரியமாய் வினவ,
“எல்லாம் அப்படிதேன்..” என்று காயத்திரி கண்ணடித்தாள்.
“ரொம்ப அழகாருக்குடே” என்று அவன் மனமார கூற,
உள்ளே வரவிருந்த அக்னி இவற்றைக் கண்டு அழகாய் புன்னகைத்து நின்றான்.
அவனை கண்டுகொண்ட பொழிலன், “யோ சித்தப்பூ..” என்றுவிட்டு காலை நடந்தவற்றை நினைவு கொண்டு, “ஆத்தே..” என்று தலையில் தட்டிக் கொண்டவனாய் பவ்யமாக “அய்யா சித்தப்பூ” என்று கூறவும் யாவரும் சிரிந்துவிட்டனர்.
சிரித்தபடி உள்ளே வந்த அக்னி, “என்னாடே.. நான் கிஃப்ட் கொடுக்க வந்தா எனக்கு முன்னமே எம்மவனுங்க, மகளுங்க, மருமகளுங்கெல்லாம் முந்திகிட்டாச்சுபோல?” என்று கேட்க,
“ம்ஹும்.. இல்ல இல்ல மச்சான்.. இவனுங்களுக்கு முன்னவே வரதன் மச்சான் வந்தாக, அவுகளுக்கு முன்ன சுடரோன் மச்சான் வந்தாக, அவுகளுக்கு முன்ன தீரன் மச்சான் வந்தாக, அவுகளுக்கு முன்ன பாண்டி மச்சான் வந்தாக, உங்க எல்லாத்துக்கும் முன்ன எங்கக்காங்க எல்லாரும் வந்தாக” என்று கூறி அட்டகாசமாய் சிரித்தான்.
அதில் சிரார்கள் அனைவரும் மூத்தோர்களை எண்ணி கலகலவென்று சிரித்திட, ஆதியின் கண்ணில் நீர் வடியும் சிரிப்பை புன்னகையாய் பார்த்த அக்னி ஒரு பெட்டியை நீட்டினான்.
“நீயுமாடா?” என்று சிரித்த ஆதி, “நானெல்லாம் வாழ்க்கைலயே இப்பதான்டா கிஃப்டெல்லாம் வாங்குறேன்” என்று உணர்ச்சிப் பிரவாகத்தால் சற்றே சிரித்தபடி கூறிவிட, அங்குள்ளோருக்கு அதில் மறைந்திருந்த விரக்தி ஒருவித வலியைக் கொடுத்தது.
அக்னியின் பரிசைப் பிரித்துப் பார்த்த ஆதிக்கு பெரும் மகிழ்ச்சி! “மச்சான்..” என்ற ஆர்ப்பரிப்போடு அவனை அணைத்துக் கொண்ட ஆதியின் கையில் இருந்தது, அவனும் தாமரையாளும் விவாதித்துக் கொண்டதில் அழகிய பல நினைவுகளைத் கொண்ட கதை புத்தகங்கள்!
அதனை தாமரையாள் மூலம் தெரிந்துகொண்டு வாங்கியுள்ளான் என்பது அவனுக்குப் பார்த்ததும் புரிந்தது!
“உனக்கு பிடிச்சதா கிப்ட் பண்ணனும்னு யோசிச்சப்போ எங்கம்மை உன்ன பத்தி பேசினதையெல்லாம் ஓட்டிப் பாத்தேன். உன்னபத்தி பேசினது அம்புட்டுலயும் இருந்தது புஸ்தகந்தேன்.. அதேன் அதையே வாங்கியாந்துட்டேன்” என்று அக்னி கூற,
ஆதிக்கு அத்தனை அத்தனை மகிழ்வாக இருந்தது.
“சித்தப்பு பெருசா ஸ்கோர் பண்ணிபுட்டியே” என்று செழிலன் சிரிக்க,
“எல்லாரோடதுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான் செழிலா.. எல்லாமே என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க பரிசாச்சே” என்றான்.
சில நிமிடங்கள் பேசிவிட்டு யாவரும் சென்றுவிட, கடைசியில் தேங்கி நின்ற அக்னி, ஆதியிடம் வந்து அவனை அணைத்துக் கொண்டான்.
அவன் ஏதோ கூற வரவும், ஆதியே “உங்கம்மைய கண்ணுகுள்ள வச்சு தாங்குவேன்” என்று கூற,
“ச்ச! அதெல்லாம் நீ நெஞ்சுல சுமப்பனு தெரியும்டே..” என்றவன் அவன் தோள்களைப் பற்றி, “நீ என்னிக்கும் இதேபோல சந்தோஷமா இருக்கனும்டே.. உம்முகத்துல இப்ப பாக்குத இந்த சிரிப்பு என்னிக்குமே பஞ்சமில்லாது பாக்கனும்..” என்று மனமார கூறினான்!
என்ன செய்துவிட்டோம் இவனுக்கு, இத்தனை ஆழ்ந்த உறவைப் பெற? என்று ஆதி முற்றுமாக நெகிழ்ந்து நின்றான்… பெரியோர் யாவரும் அவன்மீது அளவுகடந்த நேசம் கொண்டிருப்பினும், அதற்கு அடிப்படையாய் தாமரையாளையே வைத்திருந்ததனர். ஆனால் அக்னி தாமரையாளின் கணவன் என்பதைத் தாண்டி தனது உற்றவனாய் தான் ஆதியை பார்த்தான்!
அவர்கள் என்னதான் ஆதிமீது பாசம் வைத்தாலும், தாமரையாளை அவன் நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது பிரதான எண்ணம்! அவனிடம் கூறியதும் அதனையே! ஆதி அவர்களுடன் இணக்கமாய் இருப்பினும் இந்த ஒற்றுதல் பற்றுதல் அக்னியிடமே! காரணம் பெரிதொன்றுமில்லை! மூத்தோர் யாவரும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தோர் என்பதால் அவர்களிடையே அந்த தலைமுறை வேறுபாடே சற்று தனித்து நிறுத்தியது! ஆனால் ஆதியும் அக்னியும் ஒரே வயதுடையோர் என்பதால் அவ்வாறு ஏதும் தோன்றவில்லை அவர்களுக்கு!
நெகிழ்வாய் அவனை அணைத்துக் கொண்ட ஆதி, “அழ வச்சுடாதடே.. சந்தோஷமா இருக்கேன்” என்று கூற,
சிரித்தபடி அவன் முதுகை தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்து சென்றான்!
-தொடரும்...
நாணல்-17
அந்த காலைப் பொழுது கூடத்தில் அமர்ந்து தனக்கென்று வந்த பெட்டிகள் அனைத்தையும் அத்தனை ஆர்வத்தோடு பிரித்துக் கொண்டிருந்தாள் தாமரையாள்!
அவள் கண்களின் ஆர்வத்திற்குக் காரணம் அது அவளவன் அனுப்பி வைத்ததென்பதே! அவளைச் சுற்றி சிறுவர் பட்டாளம் தரையில் அமர்ந்திருக்க, பெரியோர் யாவரும் நீள்விருக்கையில் அமர்ந்து குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வேகவேகமாய் அதே நேரம் பதமாய் அவற்றைப் பிரித்தவள் உள்ளிருந்து, துணிகள், தையல் வேலைக்கு தேவையான இதர கருவிகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் எடுக்க,
“என்னத்தாயி இது?” என்றபடி அக்னியும் வந்து அருகே அமர்ந்தான்.
அண்ணனைப் பார்த்து நாணத்தில் கன்னம் புடைக்க புன்னகைத்தவள், அதிலிருக்கும் காகிதத்தை எடுத்து கண்களில் மின்னல் வெட்ட, அதைப் படித்தாள்.
‘யாழ்மா.. உனக்கு ரொம்ப பிடிச்ச பச்சைக் கலரையே மூகூர்த்தப் புடவைக்கு எடுக்களாம்னு தான் கிளிப்பச்சை கலர்ல துணி எடுத்தேன். ஆனா டிசைன் எல்லாம் எனக்குப் பிடிச்ச மாதிரி தான் இருக்கனும். நான் சொல்றபோல பண்ணி கொடு. என் ஆசை பொண்டாட்டிக்காக… பார்டர்ல சொக்கர் மினாட்சிக்கு மாலையிடுற போல டிசைன் பண்ணு. புடவைக்கு நடு நடுல ரொம்ப கொச கெசனு இல்லாம அங்கங்க பஞ்சவர்ண கிளி இருக்கனும். ப்ளொஸ் உனக்கு ஏற்றபோல டிசைன் பண்ணிக்கோ. என்னோட வேட்டியோட பார்டர்லயும் அந்த சொக்கர் மீனாட்சி டிசைன் வேணும். இந்த வேலைப்பாடு உன்னால பண்ண முடியுமானு எனக்கு தெரியலை. முடியலைனா பக்கத்துல கைத்தறி எங்கயாவது கொடுத்து பண்ணி வாங்கிட்டு மித்த டிசைனிங்க நீ பண்ணிடு. வெயிட்டிங்!’ என்று அவன் அத்தாளில் எழுதியிருக்க, அவளது மடியில் கிடந்த அலைப்பேசி சிணுங்கியது.
அதை எடுத்துப் பார்க்க, அவளுக்கு ஐம்பதாயிரம் தொகை வங்கி கணக்கிற்கு வந்திருப்பதாய் செய்தி வந்தது! பணம் அனுப்பியதும் அவளவனே!
அடுத்த காகிதத்தில் ‘என்னடா பணம் அனுப்புறானேனு நினைக்காத யாழ்மா! இது உன் உழைப்பு! உன்னோட உழைப்பால் உருவாகும் பொருளாக்கான முதல் கஸ்டமரா நான் இருக்க ஆசைப்படுறேன். சீக்கிரம் முடிச்சுடுடி.. பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்' என்று அவன் எழுதியதைப் படித்தவள், தன்னவனின் நேசத்திலும் ஆசையிலும் உருகிதான் போனாள்.
“ஐத்த.. சொல்லிபுட்டு ஃபீல் பண்ணு.. எனக்கு ஒன்னும் வெளங்கலை” என்று கன்னத்தில் கைவைத்தபடி அவளை ஆயாசமாய் பார்த்த காயத்திரி கேட்க,
கிளுக்கிச் சிரித்தவள், “எங்க கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை அன்ட் அவருக்கு சட்டை, வேட்டி செய்யும் ஆர்டரை எனக்கே கொடுத்துருக்காக” என்று பெருமை பொங்க கூறினாள்.
“நானே டிசைன் பண்ணி எங்களுக்கானதை உருவாக்கனுமுனு அவர் ஆசப்படுறாரு. அதான் அவுகளே வேண்டிய பொருளெல்லாம் வாங்கி அனுப்பி காசும் போட்டு விட்டிருக்காக” என்று அவள் கூற,
“அடடே! இது புதுசா இருக்கே” என்று ஆருத்ரன் உற்சாகமாக கூறினான்.
“என்னமாதிரி டிசைன் கேட்டுருக்காக சித்தி.. உங்க அவுக?” என்று திலகா வினவ,
அதில் நாணப்பூவோடு சேர்ந்த நகைப்போடு, “அதெல்லும் செஞ்ச பொறவு பாத்துகிடுங்க” என்றாள்.
“இந்த யோசனை நமக்கெல்லாம் தோணலை பாரேன்? சீக்கிரம் பண்ணு தாயீ.. எப்படியிருக்குதுனு பாப்போம்” என்று தீஞ்சாடரோனும் ஆர்வத்தோடு கூறினார்.
அனைத்தையும் செழிலன் மற்றும் பொழிலன் உதவியோடு தன் அறைக்கு எடுத்துச் சென்றவளுக்கு அடுத்த பத்து நாட்களும் இதேதான் வேலை. தன்னால் முடிந்தவற்றை தானே செய்துகொள்பவள் முடியாதவற்றை கைத்தறி ஆலயம் சென்றே அவர்கள் உதவியோடு நெய்து கொண்டுவந்து ஒருவழியாக அதை தயாரித்து முடித்தாள்.
அவன் கேட்டதை போல், அழகிய வெத்தலைக்கொடியில் பஞ்சவர்ண கிளி அமர்ந்திருக்கும் வடிவம் ஆங்காங்கே வைத்து, சிவப்புக் கறையில் தங்க நிறத்தில் சொக்கர் மீனாட்சிக்கு மாலையிடும் காட்சியை நெய்து, இதே வேலைப்பாடை அவனது வேட்டி கறையிலும் உத்தரியத்திலும் வைத்திருந்தாள்.
அனைத்தையும் முடித்து அழகுபட மடித்து வைத்தவள் அவனுக்கு ‘முடிஞ்சது’ என்று செய்தி அனுப்ப, ‘ஏ நிஜமாவா?’ என்றான்.
'ம்ம்.. ஆனா காட்ட மாட்டேன். கல்யாணத்துக்கு முன்ன வாங்கிக்கோங்க' என்று அவள் கூறிவிட,
'ஓய்.. இதெல்லாம் ரொம்ப ஓவருடி' என்றான்.
'எவ்வளவு ஓவரா இருந்தாலும் இதுதேன் எம்முடிவு’ என்று சிரிக்கும் பொம்மைகளோடு அவள் அனுப்பி வைக்க,
'ப்ச்.. ஓகே.. வெயிட் பண்றேன்' என்று மனமேயின்றிக் கூறினான்.
அப்படி இப்படியென எப்படியோ அந்த நாளும் வந்தது! அதிக விடுமுறை எடுக்க இயலாததால், அவனுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கப்படும் விடுமுறை தினங்களிலேயே திருமணத்திற்கு நாட்கள் குறிக்கப்பெற்றிருந்தது. ஆகவே திருமணத்திற்கு ஒருவாரம் முன்னதாகவே அவர்கள் இல்லம் வந்திருந்தான்!
சிறுவர் பட்டாளத்தோடு கலைகட்டிய நாட்களை மனப்பெட்டகத்தில் சேமித்துக் கொண்டவன் அடுத்த நாள் திருமணமென்ற பூரிப்போடு அவனறையில் படுத்திருந்தான்.
திருமண நாளுக்கான கனவுகள் பெண்களுக்கு மட்டும் உரித்தானதா என்ன? ஒரு ஆண் தன் திருமணத்தைக் குறித்து எத்தனையோ சொல்லப்படாத கனவுகளை சுமந்திருப்பான் என்பதற்கு சாட்சியமாய் அயரத்துடித்தும் ஓய்வளிக்காத விழிகளோடு கண்களை திறந்து வைத்தபடியே கனா கண்டுகொண்டிருந்தான்.
மனதின் பரபரப்பு தூக்கத்தை மெல்ல மெல்ல தின்று, அவனை இன்ப அவஸ்தைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தது!
நாளைய நாள்.. அவளை தன்னவளாக்கிக் கொள்ளும் அந்த பொன்னான நாள்.. மனதில் அப்படியொரு பரபரப்பு அவனுக்கு! 'எப்படிடி? என்ன செஞ்ச என்னை? நீ கிடைக்க சத்தியமா நான் என்ன செஞ்சேன்னே தெரியலை' என்று மனதோடு அவளுடன் உறையாடியபடியே உறங்கியவன், காலை அக்னி எழுப்பியதும் எழுந்து விட்டான்.
“மாப்பிள்ளைக்கு பரபரப்பு தாங்கலைப் போலயே? எழுப்பினது எழுந்துபுட்டீக?” என்று அக்னி கேலி செய்ய,
எழுந்து அமர்ந்தவன் அருகே அமர்ந்திருப்பவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆடியபடி, “படபடனு இருக்குடே” என்றான்.
“அப்படித்தேன் இருக்குமாட்டுக்கு” என்று அக்னி கூற,
“எக்ஸ்பீரியன்ஸ் லெஸ் பாய்” என்று கேலி செய்தான்.
“எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவந்தேன் மாப்பு இதுலலாம் நல்லா ரோசனை கொடுப்பாக” என்று அக்னி கூற,
வாய்விட்டு சிரித்தவன், “இங்கன உங்கம்மை என்னமோ பண்ணுறாடே” என்று தன் நெஞ்சை நீவிக் கொண்டான்.
“அங்கன என்ன பண்ணுது? உள்ளார ரூமுலதானே இருக்குதா?” என்று அக்னி கேலி செய்து சிரிக்க,
அவனை கோபம் போல் உதறிவிட்டவன், “போடே..” என்றான்.
“சரிடே.. ஒடனே கோவப்படாத” என்று அவனை கழுத்தோடு இறுக்கிக் கொண்டவன், “உம்பொஞ்சாதியா எங்கம்மை ஆவப்போற நாளுடே” என்று கூற, ஆதியின் உடலில் அப்படியோரு சிலிர்ப்பு அடங்கி ஒடுங்கியது!
அதை உணர்ந்த அக்னி, “இது உங்களுக்கான, உங்க காதலுக்கான நாளு.. சந்தோஷமா இருடே.. எனக்கு எப்போதும் நீ சிரிச்சாப்ல இருக்குறதுதேன் வேணுமாட்டிருக்கு” என்று மனமார கூற, நண்பனை கண்கள் பணிய அணைத்துக் கொண்டான்.
அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவன், “போய் ரெடியாவுடே.. பூசைக்கு நேரமாவுது” என்று கூற, சரியென சென்றவன் குளித்து குங்குமப்பூ நிறத்தில் சட்டையும், அதற்கு தோதாக அதே நிறத்தில் பட்டைக்கறை வைக்கப்பட்ட வேட்டியும் உடுத்தி மிடுக்குடன் வந்தான்.
தயாராகி அறையிலிருந்து வெளியே வந்தவன் அங்கு கூடத்தில் கூடியிருந்த குட்டி கிராமத்தைக் கண்டு மிரண்டு போனான் என்று தான் கூற வேண்டும்.
வேந்தன் அவனை நெருங்கி வந்து, “வாங்க மாமா” என்க,
“டேய்.. நெருங்கின சொந்தந்தேன் பூசைக்கு வருவாகனு உங்கப்பாரு சொன்னாக.. இங்கென்னடே குட்டி கிராமமே இருக்குது” என்று பீதியோடு கேட்டான்.
அதில் வாய்விட்டு சிரித்தவன், “எங்கப்பாரு வழி தாத்தனோட ஒடம்பெறப்போட பிள்ளைய, எங்கம்மை, சித்திகளோட ஒடம்பெற்றப்புகளெல்லாம் மட்டும் வந்துருக்காக மாமா. வெசனப்படாம வாங்க” என்று கூற,
“கூடப்பெறந்தவக மட்டுமே இம்பூட்டு போராடே?” என்றான்.
அதில் மேலும் சிரித்தவன், “எங்கம்மை கூட பிறந்தவகளே அஞ்சு பேரு.. இப்படி ஒவ்வொரு சித்திக கூடப்பிறந்தவக, அவுக குடும்பம், அப்பாரு சொந்தம்னு சேத்தா வந்துபுடுமே இம்பூட்டு” என்று வேந்தன் கூற,
“எப்புட்ரே சொந்தங்க பேரெல்லாம் மனசுல வச்சுக்கிடுதீக?” என்று ஆயாசமாய் கேட்டான்.
“எல்லாம் பழக்கமாயிட்டுரும் மாமா” என்றவன் பேசியபடி கூட்டிவந்து கூடத்தில் அமைத்திருந்த ஓமகுண்டத்தின் அருகே அவனை அமர்த்த, சிகப்பு நிற ரூபி கற்களுடன் போட்டியிடும் குங்குப்பூ நிற புடவையும், புடவையுடன் போட்டியிடும் தாமரையாளின் நிறமுமென ஜூவாலையாய் வந்திறங்கினாள்.
அவள் வந்து அருகே அமர்ந்ததும் அவளைக் கண்டு சொக்கிப்போன ஆதிவருணேஷ்வரன், “சூடு பறக்குது” என்று அவள் காதருகே கிசுகிசுக்க,
“புகை எரிச்சலாருக்குதுங்களா?” என்று முன்னே எரியும் தீயைக் கண்டு பதைபதைப்போடு வினவினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “அதுகூட பரவால்ல போலிருக்கு.. பக்கத்துல ஒரு தீ தகதகனு வந்து பத்திக்குது” என்று அவன் கிரக்கமாய் கூற,
அவனது இப்படியான பேச்சுக்களையே கேட்டிறாதவளுக்கு உள்ளுக்குள் திக்கென்ற புகை பரவி, காதலிலும் நாணத்திலும் மென்மேலும் சிவக்கச்செய்தது!
அதற்குமேல் அவளை சீண்டாதவனாய் ஐயர் கூறும் மந்திரங்கள் ஒன்றை விடாத சிரத்தையுடன் அவன் கூற, அவனது கடமையில் சிரித்தவளாய் தானும் கூறினாள்.
நடக்கும் நிகழ்வுகளை பொக்கிஷமாய் சேமித்து சேர்த்திட, புகைப்படக்கருவிகள் சுமந்த, புகைப்படம் எடுப்போரும் ஆங்காங்கே நின்று நடப்பவற்றை அழகிய பல கோணங்களில் புகைப்படமாகவும், காணொளியாகவும் சேமித்தனர்.
பூஜை முடியவே, ஆதி சார்பிலிருந்து ஒருவர், தாமரையாளுக்கு புடவை கொடுக்க வேண்டும், தாமரையாள் சார்பிலிருந்து ஒருவர் ஆதிக்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டும்!
முன்பே முடிவு செய்திருந்ததைப் போல், அதிவீரபாண்டியரும், அர்ச்சனாவும் தாமரையாளின் தாய் தகப்பன் ஸ்தானத்தில் நிற்க, தீஞ்சுடரோனும் அம்பிகாவும் அவன் சார்பில் நின்று தட்டை மாற்றிக் கொண்டனர்.
அதில் மனமார நெகிழ்ந்து நின்றவன் கையில் அவனுக்கென்று அவனவள் தைத்த துணிகளை அம்பிகா கொடுக்க, பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டவனாய், அதை வாங்கிக் கொண்டு சென்றான்.
அவனுக்கு துணையாய் அக்னி, ஆருத்ரன், வேந்தன், செழிலன் மற்றும் பொழிலனும் செல்ல, தாமரையாளுக்குத் துணையாய் பெண்கள் சென்றனர். அவன் கேட்டதைப் போல் அவனுக்கு அழகிய வெள்ளைநிற பட்டு சட்டையும், கறையில் சொக்கர் மீனாட்சிக்கு மாலையிடும் திருவுருவம் நெய்யப்பட்ட வேட்டியும் அம்சமாக தயாரிக்கப்பட்டிருந்தது! அதை மனம் பூரித்த மகிழ்வோடு நுனிவிரலில் தேக்கிய நேசத்தோடு வருடிப்பார்த்தவன் நிறைவான புன்னகையோடு அணிந்து கொண்டான்.
இருவருக்கும் அலங்காரங்கள் முடிய, முதலில் மணமகனை மூத்த மூன்று தம்பதிகள் மற்றும் அக்னியோடு அனுப்பி வைத்தனர்.
அடுத்த நான்காம் தம்பதியர் மற்றும் சிறுவர் பட்டாளத்தோடு தாமரையாள் வர, மதுரை மீனாட்சி கோவிலில் திருமணத்திற்கான வேலைகள் யாவும் தயாராக இருந்தது.
முன்பே அவர்கள் பதிவு செய்திருந்தமையால், சொக்கர் மீனாட்சி தாலி அந்த அழகுராணி, குட்டி தேவதையான மீனாட்சியின் தாளில் சேர்ப்பிக்கப்பட்டது!
பிரகாரத்தை சுற்றிவிட்டு சந்நிதி முன் வந்த ஆதிவருணேஷ்வரன், தான் கேட்டதைப்போல், பச்சை நிறப்புடவையில் ஆங்காங்கே பஞ்சவர்ண கிளி பதித்து, கறையில் தன் வேட்டியில் உள்ளதைப்போன்ற வடிவம் நெய்யப்பட்ட புடவையும் அதற்கு தோதான தங்க ஆபரணமும் என, உள்ளே சந்நிதிக்குள் இருக்கும் மீனாட்சியே கண் முன் ஓடிவந்து நிற்பதைப்போல் நின்றாள். அத்தனை தெய்வீகமான அழகு அவள் திருமுகத்தில்!
அவளைக் கண்டதும் சுற்றம் மறந்து, இல்லை இல்லை.. சுற்றம் துறந்து அவளடி சேர்ந்திருந்தவன் மனதிலும் விழிகளிலும் அவளைத்தவிர வேறேதுமே அக்கணம் இல்லை!
அவனது மன உணர்வுகளை படிக்கும் கண்ணாடியாய் திகழ்பவள் இதழ்களில் உள்ள செதுக்கி வைத்தார்ப்போன்ற உயிர்ப்புள்ள புன்னகையும், கண்களில் வரைந்து வைத்தார் போன்ற உயிர் தேங்கிய கண்ணீரும் ஒன்று சேர்ந்து அக்கணத்தை எழுதி வைத்தார்போன்ற கவிதையாய் உருமாற்றியது அவர்களது கோர்த்து வைத்த மனமெனும் நூலில்!
அவணருகே வந்து நின்றவள், “சாமி கும்பிடனும்” என்று மெல்லிய குரலில் கூற, அவளைப் பார்த்து தன்னிரு கரங்களையும் கூப்பினான்.
அச்செயலில் அவள் மட்டுமல்ல அக்குடும்பமே நெகிழ்ந்து போனது! தாங்கள் வளர்த்த தங்கள் வீட்டு இளவரசி தங்களுக்கு தெய்வமாய் திகழ்வது வேறு! ஆனால் அவளை மணக்கப்போகும் மணாளனுக்கு அவ்வாறிருப்பது வேறாயிற்றே! என்ற சிந்தையில் கண்கலங்கி நின்ற மூத்த தம்பதிகளுக்கு அவர்களது வாழ்வு நிச்சயம் எந்த பிசகுமின்றி நீண்டு செழிக்கும் என்று ஆணித்தரமான நம்பிக்கைப் பிறந்தது.. அவர்கள் முன்னிருக்கும் மீனாட்சி அவர்கள் ரூபத்திலேயே ஆடப்போகும் ஆட்டம் அறியாமல்!
“ஏங்க..” என்று கலங்கிய குரலில் அவள் கூற, “படைக்குறவக காக்குறவக அழிக்குறவக தானே சாமி? என் சந்தோஷத்தைப் படைச்சு, நிம்மதிய காத்து, துக்கத்தை அழிக்கும் நீயும், உன் காதலும் எனக்கு சாமிதேன் யாழ்” என்று மனமார கூறினான்.
அதில் கலங்கிய கண்களில் நீர் வரப் பெற்றவளாய் அவனைப் பார்த்தவள், “இதை நானும் சொல்லலாமுங்களே” என்று கூற, தலையாட்டி சிரித்துக் கொண்டான்.
தன் பனித்த கண்களை துடைத்துக் கொண்ட பொழிலன், “உங்க காதல் படம் போதுமைய்யா” என்க,
“ஏன்டே? எங்கனயாது எரியுதா?” என்று வேந்தன் கேலி செய்தான்.
“ஆமா.. கண்ணெல்லாம் எரிஞ்சு கலங்கி போச்சுது பாருண்ணே..” என்றவன், “சாமிய கும்பிடுங்கைய்யா” என்றான்.
அனைவரும் மனமார அம்மீனாட்சியை வணங்க, ஐயர் திருமாங்கல்யத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்து கொடுத்தார்!
வீட்டில் ஒரு கிராமமே இருந்ததென்றால் இங்கு மதுரையே திரண்டு நின்றிருந்தது! அத்துனை பேரிடமும் சளிக்காமல் மாங்கள்யம் கொண்ட தட்டுடன் சென்று காயத்திரி ஆசி பெற்று வர, அத்தாலியை அதிவீர பாண்டியர் தம் மனையாளோடு சேர்ந்து எடுத்து ஆதியின் கரம் சேர்ப்பித்தார்.
தன் கரம் சேர்ந்த பொன் தாலியை தன்னவள், கழுத்தைச் சுற்றிக் கொண்டு சென்றவன், அவள் கண்களைப் பார்க்க, கலங்கி பளபளத்தபடியே அவனைப் பார்த்திருந்தாள்.
“சொல்லப்படாத என் நேசங்களின் அரிச்சுவடியே!
நின் அள்ளப்படாத உணர்வுகளுக்கு
ஆதாரமாய் வந்து,
பதிலாய் கொடுக்கவிருப்பதெல்லாம்
நெஞ்சம் முட்டும் நின்மீதான நேசமொன்றே,
உன்னைக் காதலிப்பதில் பேரவா கொண்ட என்னிடம் உள்ளது!” என்று தனது நேசத்தை கவிதையாய் அவளிடம் கிசுகிசுத்தான்.
“புத்தம் புதிதாய் நேசம் பூத்தது,
அரிதாரமின்றி நாணச்சிகப்பில் என் கன்னங்கள் மிலிர்ந்தது!
அழகோவியமாய் நம் உறவு பிறந்தது,
அதில் நீ அற்புதமாய் தீட்டிய காதல் ஒளிர்ந்தது!
என்னவன் என்ற என் ஒற்றை சொல்லுக்கு,
உற்றவர் முன்னிலையில் கரம் பற்றியவனே,
தித்திப்பான தீ ஜூவாலையின் சாட்சியாய்,
என் திருக்கரம் பற்றி,
உன் திருமதியாக்கிக் கொண்டாய்!” என்று அவனுக்காக எழுதி தான் மனணம் செய்த கவிதையை உணர்ச்சிப் பூர்வமாய் உறைத்தாள்.
-தொடரும்...
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Poongkuzhali Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page