All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள் 3

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 1 month ago
Posts: 10
Topic starter  

 

 

அத்தியாயம் 3

 

பெண்ணின் வீட்டினார் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் துகிலன். அவர்களின் முகத்தில் இருந்தே தெரிந்துக் கொண்டான் அவர்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கவில்லை என்று.. அதுவரை இறுகியிருந்த உதட்டில் சிறு புன்னகை. 

 

தன் வெள்ளை நிற சட்டையின் பாக்கெட்டில் இருந்து விசிட்டிங்கார்ட் ஒன்றை எடுத்து மேஜை மீது வைத்தான். அவன் மட்டும்தான் பேசினான். அவனின் மீது தான் அனைவரின் பார்வையும் இருந்தது. 

 

“உங்க பொண்ணுக்கு என்னை பிடிச்சிருந்தா இந்த விசிட்டிங்கார்ட்ல என் போன் நம்பர் இருக்கு. போன் பண்ணுங்க” என அவன் வேகமாக வெளியேற, அவனின் பின்னாடியே சென்றனர் சகுந்தலாவும், அவிரனும்.. 

 

வேறென்ன செய்ய முடியும் அவர்களால், திருமணம் செய்து கொள்பவனுக்கே இதில் இஷ்டமில்லை என்ற பின் அவர்களும் அமைதியாக வெளியேற வேண்டியதாகி விட்டது. 

 

வரும் வழியெங்கும் சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு வந்த சகுந்தலாவை தான் அடிக்கடி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அவிரன்.. 

 

இது ஒன்றும் இன்று நேற்று நடப்பதல்ல வழக்கமாக நடக்கும் ஒன்று தான். கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த சம்பவம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் உம்மென்று அமர்ந்திருந்தவரை பார்க்க சற்று பாவமாக இருந்தது அவிரனுக்கு.. 

 

அவரும் இல்லாத குட்டிக்கரணம் எல்லாம் போடுகிறார் துகிலனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைக்க, அவனோ கழுவுற மீனில் நழுவுற மீனாய் எல்லாவற்றிற்கும் வழுக்கிக் கொண்டு சென்று விடுகிறான்.

 

துகிலனின் மேல் இருந்த கோபத்தில் முகத்தை நாலாப்பக்கமும் கோணலாக வைத்துக் கொண்டிருந்தார் சகுந்தலா. 

 

“யம்மோய்ய். நீ ஏன்மா மூஞ்சை இப்படி நாய் நக்குன மாதிரி வச்சிருக்க?” என்றவனை முன்சீட்டில் அமர்ந்திருந்தவாறே திரும்பி பார்த்து முறைத்தவர், 

 

“ஏன்டா சொல்ல மாட்டே.. பெத்தாலும் பெத்தேன் உன் அண்ணனை மாதிரி ஒருத்தனை பெத்தேன்ல.. அதான் உன் கண்ணுக்கு நான் நாய் மாதிரி தெரியுறேன் போல” என போலியாக நீலிக்கண்ணீர் வடிக்க, 

 

“யம்மா நடிக்காதே ம்மா.. பச்சையா தெரியுது நீ நடிக்கிறன்னு” என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவர், 

 

“ப்ச்ச். நான் ஒன்னும் நடிக்கலை. என் பையனுக்கு கல்யாணம் ஆகலைன்னு நான் வருத்தத்துல தான் இருக்கேன்” என்றவருக்கு, இப்பொழுது நிஜமாகவே கண்ணீர் வந்தது.. 

 

அவரின் கண்ணீர் கன்னத்தை தாண்டும் முன்பாக, சட்டென்று ப்ரேக் அடித்தான் துகிலன்.. 

 

அவன் ப்ரேக் அடிக்கவும் முன் சீட்டில் அமர்ந்திருந்த சகுந்தலாவின் தலை  முன்னால் இருந்த டேஸ்போர்டில் இடிப்பதற்குள், இடதுகையால் அதை தடுத்திருந்தான் துகிலன்.. 

 

தனக்கு ஒன்று என்றதும் முன் வந்து நின்ற துகிலனை கண்ணீருடன் பார்த்தவர், அவனின் சிவந்த கரங்களை தன் இருகரங்களுக்குள் பொத்தி வைத்தார்.. 

 

பல நாட்கள் கழித்து அவன் கரங்களின் கதகதப்பில் தன் கண்ணீரைக் கரைத்தார் சகுந்தலா.. 

 

“எனக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசையா இருக்குப்பா” என்றவரிடம் இருந்து தன் கைகளை மெல்ல உருவிக் கொண்டார். 

 

அவரின் கண்ணீர் அவன் மனதை அசைத்துப் பார்த்தாலும் அவனால் அவரிடம் இளக முடியவில்லை. 

 

சாதாரண தப்பு ஒன்றை அவர் செய்யவில்லையே.. இப்பொழுது அதை நினைத்தாலும் கோபம் பலமடங்கு வரும் அளவிற்கு தப்பு ஒன்றை செய்து விட்டிருந்தார். 

 

யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக ஹோட்டலில் சென்று காரை நிறுத்தினான். அவன் முன்னே இறங்கிச் செல்ல, அவிரனும் சகுந்தலாவும் அவன் பின்னாடியே இறங்கினர். 

 

அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் இருவரும் சாப்பிடவில்லை என்றால் அவன் பட்டினி கிடக்கவும் தயார் என்று.. 

 

இருவரும் அமைதியாக அவன் பின்னாடியே சென்றனர். மூவரும் ஒன்று போல் சாப்பிட்டு வெளியே வந்தனர். 

 

அதே சமயம் சாப்பிடாமல் தன்னறைக்குள் முடங்கியபடி படுத்திருந்தாள் அருவி.. அவளால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. அவர்களை பெண்ணை பிடிக்கவில்லை, கருப்பாக இருக்கிறாள் என்று சொல்லியிருந்தால் கூட இந்தளவிற்கு மனம் வருந்தியிருக்க மாட்டாள். 

 

ஆனால் ‘எவனாவது வச்சிக்கிட்டாத்தான் உண்டு’ என அவர் சொல்லிவிட்டு சென்ற வார்த்தை அவள் காதுகளில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 

 

அந்த வார்த்தையின் வீரியம் கண்களில் கண்ணீராக அரும்பியது.. இரவு சமையல் வேலையை முடித்துவிட்டு செவ்வந்தி அருவியின் அறைக்குள் நுழைந்தார். 

 

அருவியும் மதிஅழகிக்குமான அறை அது.. அவர்கள் இருவரும் தங்குவது அங்கே தான். 

 

இன்னும் அழுதுக் கொண்டிருந்தவளை பார்க்கும் ஆத்திரமும், கோபமும் தான் எழுந்தது.. 

 

“இன்னைக்கு வந்த மாப்பிள்ளை உனக்குப் பிடிச்சிருந்ததா?” என்ற கேள்வியில் படுக்கையில் இருந்து விலுக்கென எழுந்து அமர்ந்தாள் அருவி.. 

 

“என்னம்மா கேட்டீங்க?” என்றவளுக்கே அவர் கேட்பது சரியாக புரியவில்லை. 

 

“உனக்கு அந்தப் பையனை பிடிச்சிருந்ததா?” என்றவரை பார்த்து இல்லை எனும் விதமாய் தலையாட்டினாள். 

 

“அப்புறம் எதுக்கு இந்த அழுகை அழுதிட்டு இருக்க?” என்றவரை விக்கித்து தான் பார்த்தாள். தாய் என்றால் அன்பு மட்டுமல்ல கண்டிப்பும் சேர்ந்து இருப்பவர். அவளிடம் மட்டுமல்ல மற்ற பிள்ளைகளிடமும் அவர் கடுகடுவென தான் இருப்பார்.. 

 

இது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தாலும், அவர்களுக்கு இது பழகிப்போன ஒன்று தான். 

 

“அவுங்க அம்மா” என்றவளை உற்றுப் பார்த்தவர், 

 

“தெருவுல போற நாய் அனாவசியமா நம்மளை பார்த்து குரைக்கும். அதுக்காக பதிலுக்கு நாமளும் குரைக்கணுமா? இல்லை அந்த நாய் நம்மளை பார்த்து ஏன் குரைச்சதுன்னு கவலைப்படணுமா சொல்லு? என்றவர் மறைமுகமாக மாப்பிள்ளையின் அம்மாவை நாய் என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் சிறிதாக மறைய ஆரம்பித்தது.. 

 

“சொல்லு அருவி.. நம்மளும் குரைக்கணுமா?” என்றவரை பார்த்து இல்லை எனும் விதமாய் தலையாட்டினாள்.. 

 

“இல்லை தானே.. வா வந்து சாப்பிடு.. என் உள் மனசு ஏனோ உனக்கு சிக்கீரம் கல்யாணம் ஆகும்னு சொல்லிட்டே இருக்கு” என்றவரை பார்த்து சலிப்பாக ஒரு புன்னகை புரிந்தவள் வெளியே வர, அங்கு அவளுக்கு முன்பாக டைனிங் டேபிளில் காத்திருந்தனர் மதியும், ஹரியும்.. 

 

“அக்கா வா க்கா” என இருவரும் சேர்ந்தாற் போன்று பரிமாறிக் கொண்டே சாப்பிட, அருவிக்கு இவர்கள் தான் தன் உலகம் ஒன்றே நம்ப ஆரம்பித்தாள். 

 

ஆனால் அவள் உலகத்தையே புரட்டிப்போட ஒருவன் இருக்கிறான் என்பதை அவள் அக்கணம் அறியவில்லை. 

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து தூங்க சென்று விட்டனர். அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல் பொழுது விடிய, மதி தன் காலேஜிற்கு ரெடியாகிக் கொண்டிருந்தாள்.. யூ.ஜி முடித்து விட்டு பி.ஜி படித்துக் கொண்டிருக்கிறாள். 

 

அவளை படிக்க வைப்பதும் அருவி தான்.. ஹரி பத்தாவது படித்து வருகிறான்.. அதனால் அவனும் சிக்கீரமாக கிளம்ப வேண்டும். காலை 6 மணிக்கு எழுந்துக் கொள்பவள், தன் தாயிற்கு சிறிதளவு உதவி செய்வாள். அவர் ஏவும் வேலைகளை செய்து முடிப்பது தான் அருவியின் வேலை. 

 

அத்தனையையும் முடித்து விட்டு தன் தங்கை, தம்பி காலேஜ், பள்ளிக்கு அனுப்பியவள், வேகமாக அவளும் குளித்து தயாராகினாள்.. 

 

“அம்மா லன்ச் மட்டும் கட்டிடும்மா” என்றதும் வேக வேகமாக அவளுக்கான லன்ச்சை தயார் பண்ணியவர், ஒரு பேக்கில் போட்டு அடைத்து வைத்தார்.. 

 

அவள் கொடுக்கும் சம்பளத்தில் வீடு ஓரளவு ரன்னாகிறது என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக செல்லம் எல்லாம் கொடுக்க மாட்டார். நான் இப்படித்தான் என்பதைப் போல் ஒரு வித விறைப்புத் தன்மையுடன் இருப்பார் செவ்வந்தி.. 

 

வேகமாக புறப்பட்டவள் இளமஞ்சள் நிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். வெளியே வந்தவள், தன் ஸ்கூட்டியை பார்த்தாள்.. அவள் வேலைக்குப் போன புதிதில் வாங்கியது அந்த ஸ்கூட்டி. சில மாதத்திற்கு முன்பு தான் ட்யூவைக் கட்டி முடித்தாள்.. 

 

அதில் ஏறியமர்ந்தவளுக்கு ஏனோ வானத்தில் இறக்கை கட்டி பறப்பது போன்ற உணர்வு.. அவர்கள் வீட்டில் இருந்து10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் “சகுந்தலா ட்ராவல்ஸ்” கம்பெனியை நோக்கி வண்டியை ஒயிலாக ஓட்டினாள்.. 

 

ஆம் நான்கு வருடங்களாக சகுந்தலா ட்ராவல்ஸில் தான் வேலை பார்க்கிறாள். அவளின் முதலாளி வேறு யாருமல்ல துகிலன் தான். முதல் ஆளாக அங்கே சென்றவளுக்கு சட்டர் திறந்திருந்தது.. 

 

எப்பொழுதும் அவள் தான் சட்டர் திறப்பாள். சாவியும் அவளிடம் தான் இருக்கும்? ஆனால் இன்று யார்? என எட்டிப் பார்க்க, அவளுடன் வேலை செய்யும் மூர்த்தி தான் வந்திருந்தது.. அவனுக்கும் அவள் வயது தான். இருவரும் ஒன்று போல் தான் அங்கே வேலை செய்ய ஆரம்பித்தனர்.

 

“என்ன மூர்த்தி சிக்கீரம் வந்துட்ட? என்றவாறே தான் கொண்டு வந்திருந்த ஹேன்ட்பேக்கை அதற்குரிய இடத்தில் வைத்தாள். 

 

“அண்ணா தான் காலையில போன் பண்ணி சிக்கீரம் போய் சட்டரை ஓப்பன் பண்ணி வைன்னு சொன்னாரு” என்றவாறே துடப்பத்தை கையில் எடுக்க, 

 

“கொடு நான் பெருக்குறேன்.” என்றவள் அவன் கையில் இருந்த துடப்பத்தை வாங்கி மூன்று அறை கொண்ட அந்த அலுவலகத்தை பெருக்கினாள்.. 

 

வாசலின் முற்றத்தில் தண்ணீர் தெளித்து சிறு கோலம் ஒன்றப் போட்டவள், கை, கால்களை அலம்பிக் கொண்டு சாமி படத்தில் நேற்று போட்டிருந்த பூவினை அகற்றினாள்.. 

 

“மூர்த்தி பூ வாங்கலையா?” என்றதும் திருதிருவென முழித்தபடி திரும்பினான் மூர்த்தி.. அவனின் பார்வையிலேயே தெரிந்துப் போனது. அவன் எதுவும் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று.. 

 

“ப்ச்ச்.. என்ன மூர்த்தி? ஓனர் வரும் போது இப்படி சாமி போட்டோ பூ இல்லாம இருந்தா உன்னை மட்டுமல்ல.. என்னையும் சேர்த்து திட்டுவாரு.. போ டா போய் சிக்கீரமாக பூ வாங்கிட்டு வா” என அவனை நிற்க விடாமல் துரத்தியவள், தன்னிடத்தில் சென்று அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் பண்ணினாள்.. 

 

தூரத்தில் கார் வரும் சத்தத்தில் மெல்ல தலையை சாய்த்திப் பார்க்க, ப்ளூ ஜீன்ஸ், வெள்ளை நிற சட்டையில் கம்பீரமாக போன் பேசியபடி வந்துக் கொண்டிருந்தான் துகிலன்.. அவனை பார்த்ததும் ஒரு கணம் திகைத்து நின்றவள், எதிரில் கையில் பூவுடன் வந்துக் கொண்டிருந்த மூர்த்தியைப் பார்த்ததும் தான் சற்று சமாதானமானாள்.. 

 

“ஷப்பாஆஆ.. முடியலை டா” என பெருமூச்சு விட, அவள் மூச்சு விட்ட சத்தத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தான் துகிலன்.. அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று தலையை குனிந்து கொண்டாள்.. அவளை பார்த்தபடி திரும்பியவனின் பார்வை அங்கிருந்த சாமி போட்டோவில் தான் விழுந்தது.

 

“பூ போடலையா அருவி?” என்றதும் வேகமாக எழுந்தவள், 

 

“இல்லை.. இதோ மூர்த்தியே பூவோட வந்துட்டானே?” என  மூர்த்தியின் கைகளில் இருந்த பூவை பறித்தவள், சாமி போட்டோவிற்கு போட்டு விளக்கேற்ற, அவளின் பின்னால் தான் நின்றிருந்தான் துகிலன்.. அவனுக்கு அருகில் மூர்த்தியும் நின்றிருந்தான்.

 

கற்பூரம் சாமிக்கு காட்டிவிட்டு, துகிலனின் புறம் திரும்பிட சட்டென்று கற்பூரம் அணைந்து விட்டது.. 

 

கற்பூரம் அணைந்ததுமே சற்று பதட்டமாகினாள் அருவி.. இதிலெல்லாம் சாத்திரம் அதிகமாக பார்ப்பான் துகிலன்.. சின்ன விஷயங்களுக்கு கூட சாஸ்திரம் பார்த்து கிளம்புவனிடம் காட்டும் பொழுதா இந்தக் கற்பூரம் நிற்க வேண்டும் என உள்ளுக்குள் வெம்பியபடி, 

 

“இருங்க.. இருங்க.. இப்போ கற்பூரம் ஏத்திடுறேன்” என பதட்டத்தில் துகிலனின் கைகளிலேயே தட்டைக் கொடுத்தவள், அங்கிருந்த தீப்பெட்டியில் தீக்குச்சியை எடுத்து உரச, அதுவோ அவள் இருக்கும் பதட்டத்தில் பற்றிக் கொள்ளாமல் சதி செய்தது..  

 

“ஒரு கற்பூரம் ஏத்துறதுக்கு இவ்வளவு பதட்டமா? என துகிலன் கேட்டதும் தான் தாமதம் சட்டென்று தன் கைகளில் இருந்த தீப்பெட்டியை கீழே போட்டு விட்டாள் அருவி.. 

 

அதை எடுப்பதற்காக சட்டென்று குனிந்து தீப்பெட்டியை கையிலெடுத்துக் கொண்டு நிமிர, துகிலனின் கைகளில் இருந்த கற்பூரத்தட்டு நச்சென்று அவள் தலையில் இடித்து அப்படியே சரிந்து தட்டில் இருந்த குங்குமமும், விபூதியும் சேர்ந்தே அவள் தலையில் கொட்டியது.. 

 

“ப்ச்ச். இது வேற” என தன் முகத்தில் விழுந்த குங்குமத்தை துடைத்து விட்டு நிமிர்ந்தவளை பார்த்து திகைத்து நின்றான் துகிலன். தட்டில் இருந்த குங்குமம் விழுந்ததில் உச்சிவகுடு, முகமெல்லாம் குங்குமமும் சிதறி இருந்தது.. 

 

“நான் இப்போ ஏத்திடுறேன்” என்றவளை துகிலன் இமைக்காமல் பார்க்க, அவளோ அவனின் எண்ணம் பற்றி அறியாமல் கற்பூரம் ஏற்றிவிட்டு அவனிடம் நீட்டினாள்.. சாமிக்கு கற்பூரம் காட்டியவள், திரும்பி அவனிடம் காட்ட.. அவன்

எங்கே அவளை பார்த்தான்? அவள் நெற்றிவகுட்டில் இருந்த குங்குமத்தை அசையாமல் நின்று பார்த்தான். 

 

“உங்க முருகனுக்கு உண்மையாவே சக்தியிருந்தா.. எனக்குன்னு பொறந்தவளை இன்னைக்குள்ள காமிக்கட்டும்” என கோபத்தில் தன் தாயிடம் காலையில் கத்திவிட்டு வந்தது தான் அவன் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. 

 

அவளின் இருளுலகில் வெளிச்சமாய் அவன் வருவானா?.. ஆழிப்பெருங்கடலாய் அவன் அன்பில் மூழ்கும் கிளிஞ்சல் யாரோ?

This topic was modified 2 weeks ago by VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

   
ReplyQuote

You cannot copy content of this page