ஹாய் அனைவருக்கும் வணக்கம்..
ஆடி பெருக்கு அன்று ஒரு புது கதைக்கான டீசர் போடுவது என் வழக்கம்.. இதோ நீங்க கேட்டது போலவே டிவிஸ்ட் அண்ட் டிவிஸ்ட் ஒன்லி கதையோட டீசர்.. தராக் கதை முடிந்த பிறகு இந்த கதை வரும்..
Teaser
“அங்கே என்ன வேடிக்கை பார்த்துட்டு நிற்கறீங்க..? சீக்கிரம் வெயிலு உச்சிக்கு வரதுக்குள்ளே வேலையை முடிச்சாகணும்..” என தோப்பில் இருந்தவர்களை அதட்டிக் கொண்டிருந்தான் மகிழ்வதனன்.
எப்போதுமே மற்றவர்களிடம் வேலை செய்வதை விட கூடுதல் பொறுப்போடு மகிழ்வதனிடம் அனைவரும் வேலை பார்ப்பார்கள்.. அதற்கு அவன் குணமும் வேலை செய்பவர்களை அவன் நடத்தும் விதமும் முக்கிய காரணம்.
அதே போல் கூலியை நாம் கேட்டு வாங்க வேண்டிய தேவையே இல்லாமல் உழைப்புக்கான ஊதியம் சரியான நேரத்திற்கு மற்றவர்கள் கொடுப்பதை விட, சற்று அதிகமாகவே கொடுத்து விடுவான் மகிழ்வதனன்.
அதோடு வழக்கமான வேலைகளை விட கூடுதல் வேலை ஏதும் சொல்லி இருந்தால் அன்று அதற்கான கூலியும் அவர்கள் கேட்காமலே சேர்த்து வந்து விடும்.
அதனால் மகிழ்வதனனிடம் வேலை செய்ய அனைவரும் விரும்புவார்கள். எப்போதும் வேலை மட்டும் சரியான நேரத்திற்கு முடிந்து விட வேண்டும் என்பது அவனின் ஒரு குறிக்கோளாக இருக்கும். அதற்காக மற்றவர்களை அதட்டி மிரட்டிக்கொண்டும் இருக்க மாட்டான்.
கனிவாக பேசியே எப்படி அவர்களை வேலை செய்ய வைக்க வேண்டுமென அவனுக்கு நன்றாகவே தெரியும். மகிழ்வதனன் என்றால் அந்த ஊரில் நல்ல மரியாதை உண்டு.
இப்போதும் அப்படியே புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவனை தன் வழிக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தான் மகிழ்வதனன். அதே நேரம் பன்னீர் ரோஜா நிற சல்வார் அணிந்து மல்லிகைச் சரம் இரு பக்க தோளிலும் ஊசலாட.. தன் நீண்ட கூந்தலை முன்னே எடுத்து போட்டபடி ஸ்கூட்டியில் அவனைக் கடந்து சென்றாள் ஆதிரை.
மெல்லிய வேகத்தில் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு இருந்தவளின் பார்வை முழுக்க மகிழ்வதனனின் மேலேயே இருக்க.. வெள்ளை வேட்டி சட்டையணிந்து இடது கையின் இரு விரல்களால் வேட்டியின் நுனியை மடித்து பிடித்தபடி கம்பீரமாக அவன் நின்றிருந்த அழகை ரசித்தபடியே சென்றவள், சற்று தள்ளி சென்ற பிறகும் பார்வையை திருப்பி மகிழ்வதனனையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாலையோரத்தின் நின்றிருந்தவனை அந்த மல்லிகை வாசம் கட்டி இழுக்க.. ஒரு நொடி விழிமூடி அதை உள்வாங்கியவன் நான்காவது முறையாக அவள் இந்தப் பக்கம் கடந்து செல்வதையும் இதழ்பிரியா சிறு புன்னகையோடு மனதிற்குள் குறித்துக் கொண்டான்.
அதே நேரம் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து நின்ற சுரேஷ் “மாப்பிள்ளை.. எங்கே எல்லாம் உன்னை தேடறது..? அங்கே பெரியய்யா வீட்டில் ஒரே கலவரம், உன்னை கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க..” என்றிருந்தான்.
“என்னை ஏன் ஊரெல்லாம் நீ தேடறே..? இன்னைக்கு தோப்பில் காய் பறிக்கும் வேலை இருக்குன்னு உனக்கு தெரியுமில்லை.. அப்போ நான் தோப்பில் தான் இருப்பேன்னு உனக்கு தெரியாதா..?” என்றவன் “என்னவாம் என்ன பிரச்சனை..?” என்றான் அவசரம் துளியும் எல்லாம் குரலில் மகிழ்வதனன்.
“புதுசா என்ன..? எல்லாம் அதே பழைய பிரச்சனை தான், பெரியய்யா தான் உன்னை கையோட கூட்டிட்டு வர சொன்னார்..” என சுரேஷ் உடன் வந்த சிவா சொல்லவும் “போகலாம், போகலாம்.. என்ன அவசரம்..?” என்றான் மீண்டும் மகிழ்வதனன்.
அதற்குள் ஐந்தாவது முறையாக ஆதிரையின் ஸ்கூட்டி அவனைக் கடந்து சென்றது. இவ்வளவு நேரமும் அவளுக்கு முதுகு காண்பித்தபடி திரும்பி நின்றிருந்த மகிழ்வதனன், சுரேஷிடம் பேசுவதற்காக இந்தப் பக்கம் திரும்பி சாலையைப் பார்த்தவாறு நின்றிருக்க.. அவன் முகத்தை விழிகள் மின்ன ஆசையும் ஆவலுமாக பார்த்தபடியே ஆதிரைக் கடந்து செல்ல.. அதை கண்டு கொண்டவனின் இதழ்களும் மீசைக்கடியில் மெலிதாக புன்னகைத்தது.
“இந்தப் பிள்ளை என்னையா இங்கே சுத்திட்டு இருக்கு..? அங்கே அம்புட்டு கலவரம் நடந்துட்டு இருக்கு..” என சுரேஷ் தாங்க மாட்டாமல் கேட்டு விட.. “அப்போ கலவரம் காணாமல் போகப் போகுதுன்னு அர்த்தம்..” என்ற சிவாவின் வார்த்தைகளில் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான் மகிழ்வதனன்.
அதே நேரம் வழக்கம் போல் தன் ஸ்கூட்டியில் அவனை கடந்து சென்ற பின் முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்திருந்த ஆதிரா மகிழ்வதனின் இந்த விரிந்த புன்னகையில் அப்படியே வண்டியை நிறுத்தி விட்டு விழியகல அவனைப் பார்த்திருந்தாள்.
அதில் அவளை திரும்பிப் பார்த்த மகிழ்வதனன் ‘என்ன..?’ என்பது போல் புருவத்தை உயர்த்த.. ‘ஒண்ணுமில்லை’ என தலையசைத்தவளின் விழிகள் மட்டும் அவன் மேல் அத்தனை ரசனையோடு படிந்திருந்தது.
“அடேய் அங்கே ஒரு கலவரமே நடந்துட்டு இருக்கு.. இங்கே நீ காதல் வளர்த்துட்டு இருக்கே..” என சுரேஷ் இருவரின் விழி மொழியில் பதட்டமாக.. “நான் தான் சொன்னேனே மாப்பிள்ளை. கலவரம் எல்லாம் காணாம போக போகுதுன்னு, நம்ம மகிழ் அவனுக்கு பிடிச்சதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்..” என்று சிவா பெருமை பேசவும் “சரி. சரி போதும் கிளம்புவோமா..” என்றபடி தன் புல்லட்டை நோக்கி நகர்ந்தான் மகிழ்வதனன்.
*****
அப்போதே இருள்பிரிய தொடங்கி இருந்த நேரத்தில் வெள்ளை நிற உள் பனியனும் வெள்ளை வேட்டியுமாக உறக்கம் கலைந்து சோம்பல் முறித்தபடியே படுக்கைறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து நின்றான் மகிழ்வதனன்.
அதே நேரம் அந்த மர படிகளில் தலையில் கட்டிய ஈரத் துண்டுடனும் கையில் காபி டம்ளரோடும் ஏறி வந்து கொண்டிருந்தவளின் கையில் இருந்த காபியின் மணத்தை கடந்து அவளின் மேலிருந்து வந்த கஸ்தூரி மஞ்சளின் மணம் அவன் நாசியை தீண்ட.. அதை ரசனையாக உள்வாங்கியவனின் விழிகள் அணுஅணுவாக ஆதிரையை ரசித்துக் கொண்டிருந்தது.
இவளை படைக்கும் போது மட்டும் பிரம்மன் நேரம் எடுத்து ஒவ்வொரு இடமாக செதுக்கி இருப்பானோ என்று எண்ணுமளவுக்கு தேர்ந்த சிற்பம் போல் அளவெடுத்து செய்த விழிகளும் கூர்மையான நாசியும் செப்பு இதழ்களும் எப்போதும் போல் இன்றும் மகிழை அடித்து வீழ்த்த.. அவளையை இமைக்காமல் பார்த்தபடியே நின்றிருந்தவனை நெருங்கியவள், அவன் பார்வையில் உண்டான முகச்சிவப்போடு “மாமா காபி எடுத்துக்கங்க..” என்றாள்
ஆனால் ஆதிரையின் முகத்தை ரசித்தபடி மகிழ்வதனன் அசையாமல் அப்படியே நின்றிருக்க.. “மாமா காபி எடுத்துக்கோங்க..” என்றாள் மீண்டும் ஆதிரை.
“அதெப்படி ஆதி நான் எப்போ எழுந்துக்கறேன்னு அச்சு பிசகாம உனக்கு தெரியுது..? ஒவ்வொரு நாளும் அலாரம் வெச்சது போல சரியா காபியோட வந்து நிற்கறே..?” என கேட்டபடியே மகிழ் காபியை எடுத்துக்கொள்ள.. “உங்களை கவனிக்கறதை தவிர எனக்கு வேற என்ன வேலை இருக்கு மாமா..” என்றவளின் குரலில் அத்தனை காதல் வழிந்தது.
“ம்ஹும் அப்போ என்னை கவனிக்க தான் வந்தியா..?” என்றவன் தன் மற்றொரு கையால் ஆதிரையின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொள்ள.. “கவனிச்சுட்டே இருக்கறதால் வந்தேன்..” என்றவளின் குறும்பு எப்போதும் போல் இப்போதும் அவனை மயக்க.. “அப்போ இன்னும் கொஞ்சம் கவனிக்கலாமே..!” என்றவன் அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து வருடினான் மகிழ்.
அதில் மயங்க துடித்த மனதை இழுத்து பிடித்து “அச்சோ மாமா விடுங்க.. அத்தை வந்துட போறாங்க..” என்று போலியாக பதறினாள் ஆதிரை.
“ஆஹான்.. நீ இதுக்கெல்லாம் பயப்படற ஆளுதான், நான் நம்பிட்டேன்..” என மகிழ் மெல்ல அவள் மூக்கை தன் நாசியால் உரச.. “எனக்கென்ன பயம்..? நம்மை இப்படி பார்த்தா அத்தை தான் வெட்கப்பட்டு ஓடுவாங்க.. வயசான காலத்தில் படியில் தடுக்கி விழுந்திட போறாங்கன்னு தான் சொன்னேன்..” என்றவள், தன் இரு கரங்களையும் மகிழ்வதனனின் கழுத்தோடு சேர்த்து கோர்த்துக் கொள்ள.. அவள் சொல்லிய விதத்தில் புன்னகை மலர “அதானே பார்த்தேன், அடங்கவே மாட்ட இல்லைடி நீ..” என்றான் மகிழ்வதனன்.
“அப்படின்னு நான் சொல்லலையே.. அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே, எங்க என்னை அடக்கி காட்டுங்க பார்ப்போம்..” என அவனை சீண்டினாள் ஆதிரை.
“இப்படியே சீண்டிட்டு இருந்தேன்னு வை.. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவ்வளவு தான் பார்த்துக்க..” என போலியாக மகிழ் அவளை மிரட்ட.. “அடேயப்பா அப்படியே பயந்துட்டேன்..” என அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டாள் ஆதிரை.
மகிழ்வதனனும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொள்ள..
உனக்காக பிறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
என மெலிதாக ரசனை குரலில் முணுமுணுத்தாள் ஆதிரை.
அந்த குரலும் அதில் வழிந்த காதலும் அவனையும் கொள்ளை கொள்ள..
எனக்காக பிறந்தாயே எனதழகி…
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி…
என அவளின் காதில் மெலிதாக முணுமுணுத்தான் மகிழ்வதனன்.
**
“நிலன்யா சொன்ன கேளுடா.. எனக்கு என்னவோ இது சரியா படலை, யாரோ ஏதோ சொன்னாங்கன்னு அதை நம்பி நாம அவ்வளவு தூரம் போறதெல்லாம் சரியா வராது.. புரிஞ்சுக்கோ..” என்றார் நிலன்யாவின் அன்னை பிரபா.
“எனக்கும் இது உண்மை இல்லைன்னு தெரியுதும்மா.. அதை நம்பக்கூடாதுன்னும் நல்லாவே புரியுது.. ஆனா ஒருவேளை அது உண்மையா இருந்துட்டான்னு மனசு கிடந்து தவிக்குது.. இப்போ என்னால் அதை நம்பாம இருக்கவும் முடியலையே.. நான் என்ன செய்ய..?” என கண்ணீரோடு கேட்ட மகளை வேதனையோடு பார்த்தார் பிரபா.
ஆறு மாத வயிற்றோடு அழுதழுது சிவந்திருந்த முகமும் கண்களும் சோர்ந்து போன தோற்றமுமாக இருக்கும் நிலன்யாவை காணும் போதே பெற்றவராக பிரபாவின் மனம் துடிதுடித்தது.
‘எத்தனை சந்தோஷமாக இருந்தவள்.. திடீரென அவள் வாழ்வில் புயல்வீசி அனைத்தும் அடித்து செல்லப்பட்டது போல் துவண்டு போய் இருப்பவளை கண் கலங்க பார்த்தவர், ‘இதுவரை நடந்ததெல்லாம் போதாதா..? எதையோ நம்பி சென்று மீண்டும் ஒரு வேதனையை அவள் எதிர்க் கொள்ள வேண்டுமா..?’ என்றெண்ணியவராக தன் மகளின் நலனை மட்டுமே மனதில் வைத்து நிலன்யாவை தடுக்க அவர் முயன்று கொண்டிருக்க.. அவளும் பிடிவாதமாக சென்றே ஆக வேண்டும் என நின்றாள்.
“பிரபா இப்போ அவ இருக்க மனநிலையில் நாம என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவோ ஏத்துக்கவோ அவளால் முடியாது.. அவளா நேரில் பார்த்து இதெல்லாம் உண்மை இல்லைன்னு புரிஞ்சுகிட்டா மட்டுமே அமைதியாவா..
அவளை தடுக்க வேண்டாம், நான் ஊருக்கு கிளம்ப எல்லா ஏற்பாடும் செய்யறேன்.. டாக்டர்கிட்டயும் பேசிட்டேன், ட்ராவல் செய்யலாம்னு தான் சொல்றாங்க.. அவளா நடக்கறதை புரிஞ்சுக்கட்டும், அதுக்கு பிறகு என்ன செய்யணும் நாம முடிவு செய்யலாம்..” என்றார் நிலன்யாவின் தந்தை சரவணன்.
அப்போதும் மனம் கேட்காமல் “அதுக்கு இல்லைங்க..” என்று பிரபா தொடங்கவும் “உன் கவலை என்னன்னு எனக்கு நல்லாவே புரியுது பிரபா.. எனக்கு மட்டும் இதெல்லாம் அவசியம்னு தோணுதா என்ன..? ஆனா இப்போ இந்த நிமிஷம் நம்ம பொண்ணோட உடல்நிலை மட்டுமில்லை மனநிலையும் ரொம்ப முக்கியம்.. அவளுக்குள்ளே ஒரு உயிர் இருக்கு, அவ பொக்கிஷமா பாதுகாக்கும் உயிர், அந்த இரண்டு உயிருக்கும் எந்த சேதாரம் ஆகாம நாம பாதுகாக்கணும்..
அதுக்கு அவ உடல்நிலையை மட்டும் காரணமா சொல்லி மனநிலையை பற்றி யோசிக்காமல் விட்டுட்டோம்னா.. நாளைக்கு அதுவே இரண்டு உயிரையும் பாதிக்க காரணமாகிடும்.. அதுக்காக தான் சொல்றேன் அவளா புரிஞ்சு விலகி வந்துடுவா, அப்போ நாம சொல்றதும் அவ மனசில் பதியும் புரியுதா உனக்கு..” என்றார் இனியும் இதை தடுக்காதே என்பது போலான குரலில் சரவணன்.
அதில் புரிந்தது என்பது போல் அழுகையோடு பிரபா தலையசைக்கவும் “இனி இதை பத்தி வேற எதுவும் பேசாதே.. அவ கூடவே இருந்து தேவையான எல்லா ஏற்பாடையும் செய், நாளைக்கு காலையில் நாம ஊருக்கு கிளம்பணும்..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சரவணன்.
***
சோபாவில் அழுதழுது ஓய்ந்து போய் சாய்ந்திருந்த நிலன்யாவின் முன்பு மண்டியிட்டு அமர்ந்திருந்தான் மகிழ்வதனன். “நிலன் புரிஞ்சுக்கோடா.. என் மனசில் நீ மட்டும் தான் இருக்கே.. எனக்கு எல்லாமே நீ தான், இந்த உலகத்தில் உன்னை விட்டா எனக்கு வேற யாரும் இல்லைன்னு உனக்கே தெரியும் இல்லை.. எத்தனை ஆசை எவ்வளவு கனவு அதையெல்லாம் நான் மறந்துடுவேன்னு நினைக்கறியா..? உன்னை கல்யாணம் செஞ்ச அன்னைக்கே நான் உனக்கு செஞ்சு கொடுத்த சத்தியம் உனக்கு ஞாபகம் இருக்கா..?” என்று அவள் தன்னை புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்போடு மகிழ்வதனன் பேசிக்கொண்டே செல்ல.. அவனை அழுகையை நிறுத்தி வெற்று பார்வை பார்த்தாள் நிலன்யா.
எப்போதும் தன்னைக் கண்டவுடன் ஒளிரும் அந்த விழிகளும் மற்றவர் அறியாமல் அவனிடம் மட்டும் மௌன மொழி பேசும் விழிகளில் வழியும் காதலுக்கு மாறாக அதில் இன்று தெரிந்த வெறுமையும் மகிழ்வதனனை உயிரோடு கொன்றது.
“நிலன், டேய் அப்படி பாக்காதேடா.. உன் அந்த பார்வையை என்னால் தாங்க முடியலை.. நிஜமா சொல்றேன் என் மனசில் நீ மட்டும் தான் இருக்கே.. நான் உன்னை மட்டும் தான் காதலிச்சேன், என் வாழ்க்கையில் வந்த ஒரே பொண்ணுனா அது நீ மட்டும் தான்.. இதோ நம்ம காதலுக்கு சாட்சியா உன் வயித்துக்குள்ளே வளரும் நம்ம குழந்தை தான் அதுக்கு சாட்சி..
இந்த செல்லத்தை நாம எப்படி எல்லாம் வரவேற்க ஆசைப்பட்டோம்.. எவ்வளவு எல்லாம் திட்டம் வெச்சு இருந்தோம்.. நீ மாசமா இருக்கறது தெரிஞ்ச அன்னைக்கு நான் அதை எவ்வளவு கொண்டாடினேன்.. அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு..?
சத்தியமா சொல்றேன் நிலன் என் மனசில் அன்னைக்கு மட்டுமில்லை என்னக்குமே நீ மட்டும் தான் இருக்கே.. இருப்பே.. நான் காதலிச்சதும் உன்னை மட்டும் தான்.. என் வாழ்க்கையில ஒரு பொண்ணு இருக்கானா அதுவும் நீ மட்டும் தான்..” என்றவாறே நிலன்யாவின் மேடிட்டு இருந்த வயிற்றை ஆசையோடு தொட முயன்ற மகிழ்வதனனின் கரங்கள் “என்னை தொடாதீங்க..” என்ற நிலன்யாவின் கதறலில் அப்படியே நின்றது.
அவள் வயிற்றை நெருங்கி இருந்த தன் கரத்தை நூலிழை இடைவெளியில் அப்படியே நிறுத்தி இருந்தவன், விழிகளில் வழியும் வலியோடு நிலன்யாவை பார்க்கவும் “நீங்க என் புருஷனே இல்லை.. நான் காதலிச்சதும் உங்களை இல்லை.. நீங்க யாரோ எனக்கு உங்களை யாருன்னு கூட தெரியாது.. இனி என் முகத்தில் கூட விழிக்காதீங்க..” என்று முகத்தில் அடித்துக் கொண்டு கதறினாள் நிலன்யா.
அவளை அந்த நிலையில் பார்க்க முடியாமல் அவளுக்கு மேல் கதறிய மகிழ்வதனன் “டேய் நிலன் அப்படி எல்லாம் சொல்லாதேடா.. அப்படி மட்டும் சொல்லாதே.. நீ காதலிச்சது என்னை தான், கல்யாணம் செஞ்சு வாழ்ந்ததும் என்னோட தான்.. நான் தான் உன்..” என்று வலியோடு கூடிய வார்த்தைகளில் அவளுக்கு தன்னை புரிய வைக்க மகிழ்வதனன் முயன்றுக் கொண்டிருக்க.. “தம்பி என்ன செஞ்சுட்டு இருக்கே நீ..? முதலில் அங்கிருந்து எழுந்துரு..” என கம்பீரமாக மட்டுமே பார்த்த தன் மகனை இந்த நிலையில் காண முடியாமல் குரல் கொடுத்தார் மகிழ்வானனின் தந்தை அமுதவாணன்.
“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க.. இது என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்..” என்ற மகிழ் வேகமாக பார்வையை திருப்பவும் இதையெல்லாம் சற்று தள்ளி நின்று அழுகையோடு பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையின் விழிகளில் வழிந்த கண்ணீருக்கு போட்டியாக வலியும் வேதனையும் அதில் வழிந்துக் கொண்டிருந்தது.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா