வர்ணம் - 1
வருடம்: 2009
ஜூலை மாதம்
"நாங்க சொல்லும் பேரா மீட்டர்களில் performance அடுத்த மாசத்துக்குள் இம்ப்ரூவ் ஆகிருக்கணும். இல்லனா, உங்களை டெர்மினேட் பண்ணுவோம். உங்களால முடியலனா, நீங்க இப்பவே ரிசைன் பண்ணிக்கலாம். Choice is yours. Am i clear?", என்று ரிஷாந்த்தை பார்த்து சொன்னார் HR மேனேஜர் சரத் சக்சேனா. பக்கத்தில் ஆபரேஷன்ஸ் மேனேஜர் லெஸ்லி ஜோசப், உதடுகளில் உறைந்திருந்த கர்வ புன்னகையுடன் ஏறிட்டுப் பார்த்தபடி இருந்தார்.
பேசி முடித்ததும், சரத் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்தார்.
முடி பற்றாக்குறை உள்ள தலை. சிறிய கண்களில் சீற்றமான பார்வையுடன் ரிஷாந்த்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்ன உன் பதில்?" என்பது தான் அவர் பார்வைக்கான அர்த்தம்.
ரிஷாந்த் எஸ் ஸார் என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு எதிர்பார்க்காமல், திரும்பி ரூமை விட்டு வெளியே வந்தான். HR மேனேஜர், அவன் கெஞ்சுவான் என்று எதிர்பார்த்து இருக்கலாம். எதுவும் சொல்லாமல் போறானே என்று புருவத்தை உயர்த்தி யோசித்து விட்டு, பின்னர் ஜோசப்பிடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.
26 வயதை கடந்த மே மாதம் தான் தொட்டிருந்தான் ரிஷாந்த். அவன் அப்பா அம்மா இருவரும் தூத்துக்குடியில் இருக்கிறார்கள். அவன் அப்பா அங்கிருக்கும் பேக்டரி ஒன்றில் ஒர்க்கர். ரிஷாந்த் நெடு நெடுவென உயரம். கூர்மை தவறிய மூக்கு. யாரையும் அலட்சியமாக பார்க்கும் கண்கள். மீசை வளர்ப்பில் பிரியம் காட்டி இருந்தான். சிகரெட் பிடித்ததால், ரோஸ் நிறத்தை தவறவிட்ட உதடுகள். சிரிக்கும்போது தெரியும் சீரான பல்வரிசை. ஏதாவது ஒரு ஹேர் ஆயிலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய அளவுக்கு புஷ்டியான தலைமுடி. சந்தன நிற ஃபுல் ஸ்லாக், பழுப்பு பேண்டில் மேனேஜர் ரூமில் இருந்து வெளிப்பட்டான்.
பாண்டிச்சேரி சூரிய வெளிச்சத்தை தொலைத்து விட்டு செயற்கை பகலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
பளிச்சென ஒளிரும் மெர்க்குரி விளக்குகள். மிதமான சோடியம் விளக்குகள் எல்லாம் வேலையை ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல் மேட்டுப்பாளையம் ரோட்டில் திகட்ட திகட்ட வாகனங்கள். சின்னதும் பெரியதுமாக கான்கிரீட் நீட்டல்களுக்கு மத்தியில், அசுரத்தனமாக முளைத்திருந்தது அந்த நான்கு மாடி கண்ணாடி முகப்பு கட்டடம். ஏர்டெல்லின் தமிழ்நாடு கஸ்டமர் கேர் ஆபிஸ் அந்த பில்டிங்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கஸ்டமர் கேர் செயல்பாடுகளை telecom கம்பெனிகள், நேரடியாக மேற்கொள்வதில்லை. ஏதாவது ஒரு பெரிய MNCக்கு outsourcing விடுவார்கள். அந்த அடிப்படையில்,Varsh கம்பெனி, ஏர்டெல் கஸ்டமர் சேவையை செய்து கொண்டிருந்தது. அந்த பில்டிங்கின் கிரவுண்ட் ப்ளோரில் தான், மேற்கண்ட சம்பவம் நடந்து முடிந்திருந்தது.
காரிடரில் குளிரூட்டப்பட்ட காற்று, நவீன முறையில் நாசுக்கான விளக்குகள், வேலைப்பாடு மிகுந்த சுவர்கள், சுவர்களில் அலங்கார பூந்தொட்டிகள், காபி மெஷின், காற்றில் ரூம் ஸ்பிரேயர் மணம் என கிரவுண்ட் ப்ளோர் HR ஆபீசே அதிநவீனமாக இருந்தது. பரபரப்பை நெற்றியில் அணிந்த முகங்களோடு, Varsh ஊழியர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
லிப்டில் ஏறி மூன்றாவது ஃப்ளோர் பட்டனை அழுத்தினான். 1....2.....3.....மூன்றாவது ஃப்ளோரில் வெளிப்பட்டு, அங்கு கடைசியில் இருந்த recreation ரூமிற்குள் நுழைந்தான். அங்கு யாருடனோ கேரம் விளையாடிக் கொண்டிருந்தான் ஜானி. முழு பெயர் ஜான் சாலமன். மினுமினுப்பான கோதுமை நிறம். எப்படி தலைவாறினாலும் தன் இஷ்டத்துக்கு, கட்டுப்பாடின்றி சிலுப்பி கொள்ளும் முடிகள். சற்று பழுப்பு கலந்த கண்கள், அடர்த்தியாக இளமையை பிடித்து வைத்த மீசை, வயசு 28..... 33 என்ற உண்மையை வெளியே சொன்னால் கோபப்படுவான். திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி தாலாட்டும், பரப்பாடி கிராமம். அவன் அப்பா ஆக்சிடெண்டில், அவனின் சிறு வயதிலேயே தவறிவிட்டார். அந்த ஊரில் பஞ்சாயத்து பிரசிடெண்டாக இருந்து, அனைவரின் மரியாதையையும் பெற்றவர். அம்மா தமிழ் டீச்சர். அன்பான டீச்சர். ஜானிக்கு அப்பாவின் முகச்சாயல், அம்மாவின் நிறம், அப்பாவின் அறிவு, அம்மாவின் பரிவு, அப்பாவின் துணிவு, அம்மாவின் கனிவு.
கடுப்பாக வந்த ரிஷாந்த்தை பார்த்த ஜானி, ஆட்டத்தை பாதியில் விட்டு விட்டு, எழும்பி, அவனை நோக்கி சென்றான். இருவரும் rec ரூமில் தனியாக ஓரங்கட்டினார்கள்.
"என்ன ரிஷ், அந்த அரை மண்டையன் என்ன சொன்னான்?"
ரிஷாந்த்: ஒரு மாசம் தான் டைம் கொடுத்துருக்கான். அதுக்குள்ள டீம் பெர்பார்மன்ஸ் இம்ப்ரூவ் பண்ணி காட்டணுமாம். அப்படி இல்லாத பட்சத்தில், டெர்மினேட் பண்ணுவேன்னு லெட்டர் குடுத்துருக்கான். என்ன பண்ணலாம்?
ஜானி: என் கிட்ட சொன்னத தான் சொல்லிருக்கான். நாம சென்னையில் இருந்து இங்க வரும்போது என்னெல்லாமோ நெனச்சிட்டு வந்தோம். ஒன்னும் உருப்படியா பண்ண முடியல. Same boring routine. Fucking management. காலையில் எழும்புறோம். ஆபீஸ்க்கு வர்றோம். கஸ்டமர்களை சமாளிக்கிறோம். மேனேஜர் கிட்ட திட்டு வாங்குறோம். வீட்டுக்கு போறோம். இப்படியே இன்னும் ரெண்டு வருஷம் போச்சுன்னா சீக்கிரம் வயசாயிடும் போலிருக்கே. வாழ்க்கையில் ஒரு திரில் இல்லாம போயிடுச்சு. வந்ததுக்கு ஒரே பிரயோஜனம், உருப்படியா ஒரு சில பிரண்ட்ஸ் கிடைத்தது தான்.
இவர்கள் இரண்டு பேருமே, இன்னும் கொஞ்சம் விலாவரியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்கள். அதற்கு இவர்கள் பாண்டிச்சேரிக்கு வேலைக்கு வந்த முதல் நாள் கதையை சொன்னால் சரியாக இருக்கும்.
2008, அக்டோபர் 15
கோயம்பேடு பேருந்து நிலையம்
மாலை 6:30
யார் யாரோ, எங்கிருந்தோ வந்து சென்னையில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். முகம் சுழிக்காமல், அத்தனைப் பேரையும் ஏற்றுக்கொள்கிறது பெருந்தன்மையான இந்த நகரம். எல்லாருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்திலும், பேருந்து நிலையத்திலும் தான் இடமிருப்பதில்லை.
பஸ் ஸ்டாண்ட் முன்னாலேயே பேருந்துகளை வழிமறித்து ஆள் ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள், பிதுங்க பிதுங்க ஆள் ஏற்றிக்கொள்ளும் நகர பேருந்துகள், பளபளப்பாக தெரியும் பேருந்து நிலையக் கடைகள், மொஃப்ஸல் பேருந்து நிலைய வாசலில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும் மெட்டல் டிடெக்டர்கள், பேருந்து நிலையத்திற்குள்ளாகவே வாழும் பேர் தெரியாத ஜீவராசிகள், இலவச கழிப்பிடங்களில் இருந்து வெளிப்படும் அவசர மக்கள், அடுத்த பயணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மொஃபசல் பஸ்கள், வெவ்வேறு வகையான முகங்கள், அதில் பல்வேறு உணர்வுகள், என கலவையான வாசனை வரும் கோயம்பேடு என்ற விசித்திர உலகத்தை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் கதைக்கு அது தேவையில்லை.
கிழிந்த கைப்பையை தூக்கிக் கொண்டு, வெயிலில் வரும் வயசானவரின் முகத்தில் எக்கச்சக்க வருத்த சுருக்கங்கள். அவருக்கு என்ன கஷ்டமோ! அவர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நுழையும் போது.... என்று ஆரம்பித்து யாராவது இலக்கிய ரீதியாக கதை எழுதுவார்கள். அதில் பஸ் ஸ்டாண்டை பற்றி விலாவரியான வர்ணிப்பு இருக்கும். அதில் நீங்கள் படித்துக் கொள்ளலாம்.
பஸ் ஸ்டாண்ட் முகப்பில், ஷேர் ஆட்டோவில் இருந்து உதிர்ந்து பரபரப்பாக ஓடிவரும், ரிஷாந்தையும், ஜானியையும், நாம் பின் தொடர்வோம்.
ரிஷ்: என்ன லேட்டாயிடுமா?
ஜானி: பாண்டிச்சேரிக்கு இசிஆர் ரூட்ல போனால், 3.30 மணி நேரம் தான் டிராவல் டைம்ன்னு சொன்னாங்க. அதனால ஒன்னும் பிராப்ளம் இல்ல. லேட் நைட்டாகாது.
இருவரும் பரபரப்பாக பாண்டிச்சேரி பஸ்கள் நிற்கும் இடத்திற்கு ஓடினார்கள்.
சென்னையில் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இருவரும், ஒரே சமயத்தில் ரிசைன் பண்ணி விட்டு, பாண்டிச்சேரியில் ஏர்டெல் கஸ்டமர் கேர் ஆபிஸில் வேலைக்கு சேர்ந்தனர். மறுநாள் காலை, ஆபீஸில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று HR டீம் சொல்லி இருந்தார்கள்.
பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் இருவரும் ஓடிக்கொண்டிருக்க, ஜானி திடீரென்று நின்றான்.
பிளாஸ்டிக் கேரி பேக் ஒன்றினுள் தலையைக் கொடுத்துவிட்டு, வெளியே எடுக்கத் தெரியாமல் நாய் ஒன்று, தலையைச் சிலுப்பிக் கொண்டிருந்தது. மக்கள் அதை கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அவசரம் அவர்களுக்கு. ஜானி அதன் தலையை பிடித்து, பிளாஸ்டிக் கவரை உருவி விட்டான்.
ரிஷாந்த் சிரித்தபடி: சோசியல் சர்வீஸ் பண்றதுன்னா... உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதானே!!!
ஜானி: அதேதான்...
சிரித்தார்கள்.
இருவரும் பாண்டிச்சேரி பஸ்கள் இருக்கும் இடத்திற்கு ஓடினார்கள். அந்தப் பகுதிக்கு சென்று சேர்ந்ததும், எல்லாம் புதுச்சேரி பஸ்களாக இருந்தது. பாண்டிச்சேரி, புதுச்சேரி ரெண்டுமே ஒன்றுதான் என்று தெரிந்த பிறகு, ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.
ரிஷாந்த் கண்டக்டரிடம் இரண்டு மூன்று முறை, "எப்போ பஸ் பாண்டிச்சேரிக்கு போய் சேரும்?", என்று கேட்டான். மூன்றாவது முறை கேட்கும் போது, அவனை முறைத்து விட்டு,
"நீ பத்து தடவை கேட்டாலும், எப்படியும் 3.30 மணி நேரம் டைம் ஆயிரும்..."
ரிஷாந்த் வாட்ச்சை பார்த்துக் கொண்டு, கணக்குகள் போட்டான்.
ஜானி: என்ன ரிஷ், நாளைக்கு காலையில் தானே ஜாயினிங். அதுக்குள்ள ஏன் இப்படி பறக்குற?
ரிஷ்: உங்களுக்கு தெரியாது தலைவரே! டைமிங் ரொம்ப முக்கியம். நாளைக்கு காலைல தான் ஜாயினிங்ன்னாலும் நைட் சீக்கிரம் போனா தானே. தங்குவதற்கு இடம் பார்த்து, ரெஸ்ட் எடுத்துட்டு, காலையில போய் சேர முடியும்.
ஜானி, அவனை சந்தேகமாக மேலும் கீழுமாக பார்த்தான்.
ஜானி: சென்னையில எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி, ஏதோ வாழ்க்கைய ஓட்டிட்டோம். பாண்டிச்சேரியிலாவது ஏதோ ஒரு நல்ல இன்ட்ரஸ்டிங் லைப் ஸ்டைல் கிடைக்குதான்னு பார்ப்போம்.
விதி இளக்காரமாக சிரித்தது... என்று பழைய கதாசிரியர்கள் எழுதுவார்களே, அதே மாதிரி தான்.. இளக்காரமாக சிரித்தது.
ஜானி ரிஷாந்துக்கு ரொம்ப சீனியர். ஏழெட்டு வருடம் மூத்தவன். இருவருக்கும் வாழ்க்கையில் திரில் ரொம்ப முக்கியம். இயல்பான வாழ்க்கையில் ஜேம்ஸ்பாண்ட் சாகசங்கள் எல்லாம் அமைய வாய்ப்பில்லாததால், அதைத் தீர்த்துக் கொள்வதற்காக, அடிக்கடி டூர் போவார்கள், ட்ரெக்கிங் போவார்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுவார்கள். வாங்கி கட்டிக் கொள்வார்கள்.
நிறைய சொல்லலாம். அவையெல்லாம் கதைக்கு தேவை இல்லை. ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. இருவருக்கும் லவ் லைப் ரொம்ப சிறப்பாக அமையவில்லை. ஜானிக்கு, காலேஜ் காலத்திலிருந்த லவ் ஸ்டோரி, சமீபத்தில் தான் கல்யாணத்தில் முடிந்தது. ஆமாம். அவன் லவ் பண்ண பொண்ணு, வழக்கமாக எல்லா கேர்ள் பிரண்ட்ஸும் செய்வது மாதிரி, பாரின் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டாள். ஜானி ரொம்ப பீல் பண்ணினான்... அந்த ஃபாரின் மாப்பிள்ளைக்காக.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவன் எதற்குமே பீல் பண்ணுவதில்லை.
ரிஷாந்த்தின் கேர்ள் பிரண்ட் சுசித்ரா... அவனின் அழகிய சுசி. ஒரு வருடத்துக்கு முன்னால், ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கும்போது, லாரி வந்து மோதி, ஸ்கூட்டி சின்னபின்னமானது. ரிஷ்ஷின் அழகிய சுசியை, லாரி கலைத்துப் போட்டது. அப்படியே அவன் கனவையும் கலைத்தது.
ரிஷாந்த் அந்த துக்கத்திலிருந்து எப்படி வெளியே வந்தான் என்பது ஜானிக்கு மட்டும்தான் தெரியும். எப்படியோ வெளியே வந்து விட்டான். ஆனால் அவ்வப்போது இரவு நேரங்களில், தூங்கும்போது பிங்க் ஸ்கூட்டி பெப்பில், அசுரத்தனமாக லாரி வந்து மோதும். திடுக்கிட்டு முழித்து கொள்வான். தூக்கம் வராமல் தவிப்பான்.
பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு, பஸ் வந்து சேரும்போது இரவு 10 மணி. இருவரும் பரபரப்பானர்கள். பேகை எடுத்து கொண்டு, பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், பஸ் நுழையும்போதே, வெளியே குதித்தார்கள்.
பஸ்ஸில் இருப்பவர்கள் அப்படி என்னப்பா அவசரம் என்பது போல் பார்த்துக் கொண்டிருக்க... இருவரும் தலை தெரிக்க ஓடினார்கள். பஸ் ஸ்டாண்ட் பின்புறமாக வெளியே வந்து, பைக் ஸ்டாண்ட் கடந்து, தெருவில் மூச்சு முட்ட ஓடினார்கள்.
தெருமுனைக்கு வந்ததும், இருவரும் நின்றார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். முகத்தில் எக்கச்சக்க திருப்தி. இருவரும் ஒரு சேர ஏறிட்டு திரும்பி பார்க்க, அவர்கள் பார்த்த திசையில் Ambika wines என்ற போர்டு இருந்தது.
"நல்ல வேளை இன்னும் க்ளோஸ் பண்ணல."
இருவரும் சென்று bagpiper விஸ்கி, half வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். சில பல பேப்பர் கப்புகள், சுண்டல் பாக்கெட்கள், பீப் ரோஸ்டுகள் முடிந்த பிறகு,
சப்ளையர் வந்து, "அண்ணே பாரை குளோஸ் பண்ணனும். டைம் ஆயிடுச்சு", என்று சொல்லும்போது தான், இருவரும் பாரில் இருந்து வெளிப்பட்டார்கள்.
சரி, கட் பண்ணி நிகழ்காலத்திற்கு வருவோம்.
ரிஷ்: என்ன பண்ணலாம் பாஸ்.
ஜானி: அதான் ஒரு மாசம் டைம் கொடுத்துருக்கானே. சென்னை பார்த்தாச்சு, பாண்டிச்சேரி பார்த்தாச்சு, இனிமே வேற ஏதாவது மாநிலத்தில் கரை ஒதுங்கிற வேண்டியது தான். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ட்ரை பண்ணுவோம். அங்கேயாவது நாம ஆசைப்படுற லைப் ஸ்டைல் கிடைக்குதான்னு பார்ப்போம்.
ஜானிக்கு வழக்கமாக நைட் ஷிப்ட் தான். ரிஷாந்த்துக்கு மாலை 3 to 12 ஷிப்ட். கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்க்கும் அந்த கம்பெனியில், 25 டீம்கள். ஒவ்வொரு டீமிலும் 30 பேருக்கு குறையாமல் ஏஜெண்டுகள். நீங்கள் ஏர்டெல் போனை எடுத்து கஸ்டமர் கேர் கால் பண்ணி, நெட்வொர்க் கிடைக்கல, ரீசார்ஜ் பண்ண முடியல, கால் பண்ண முடியல, என்று கோரிக்கை வைத்தால், அதை இவர்களில் ஒருவர் தான், உங்களை கோபப்படுத்தாமல் பதிலளிக்க வேண்டும்.
ரிஷாந்த்துக்கு 12 மணிக்கு ஷிப்ட் முடிந்தாலும், ஆபீஸ்லயே தங்கி விடுவான். காலை ஏழு மணிக்கு ஜானிக்கு ஷிப்ட் முடியும் போது இருவரும் சேர்ந்து தான் வீட்டுக்கு கிளம்புவார்கள்.
அவர்களின் வீடு அரியாங்குப்பத்தில் இருந்தது. நைட் ஷிப்டில் அவ்ளோ பெரிய பில்டிங்கில், ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் மட்டும்தான் ஆள். கேப்பிட்டேரியா இருப்பது கிரவுண்ட் ப்ளோரில்.... பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் நான்காவது ப்ளோர் பக்கம், பகல் வேளையில் கூட யாரும் போக மாட்டார்கள். திடீரென்று கேட்கும் சிரிப்பு சத்தங்கள், அழுகை சத்தங்கள், சிசிடிவி கேமராவில் பதிவாகும் மர்ம உருவங்கள் தான் நான்காவது ப்ளோர் பக்கம் யாருமே போகாததற்கு காரணம்.
மழை விழும் நேரங்களில், சிகரெட் அடிப்பதற்கு ஆபீசை விட்டு வெளியே போக முடியாத பட்சத்தில், ஜானியும் ரிஷாந்த்தும், மேலும் ஒரு சில தைரிய சிகாமணிகளும், போர்த் ஃப்ளோரை எமர்ஜென்சிக்காக பயன்படுத்துவது உண்டு. ஆனாலும் ரொம்ப நேரம் அங்கே நிற்பதில்லை.
நான்கு மாதத்திற்கு முன்னால், ஆபீஸ் முன்னாடியே, ரோடு கிராஸ் பண்ணும் போது, ஆக்சிடெண்டில் இறந்து போன மகாலட்சுமி தான் போர்த் ஃபுளோரை ஆக்கிரமித்து இருக்கிறாள் என்று ஆபீசே நம்பியது. ஆனால் யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாததால், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வேறு பேசுவதற்கு எதுவுமே இல்லாத பட்சத்தில், காபி கோப்பைகளுக்கு நடுவே, பேசும் டாபிக்காக தான் மகாலட்சுமி இருந்தாள்.
நைட் ஷிப்டில் அதிக பட்சமாக ஏஜெண்டுகள் 5 பேர் வேலையில் இருப்பார்கள். மேலும் ஹவுஸ் கீப்பிங் இரண்டு பேர், செக்யூரிட்டி இரண்டு பேர் என்று நைட் ஷிப்ட் ஒரு தனி உலகம்.
இரவு call flow அவ்வளவாக இருக்காது. பெரும்பாலும் ஏசி ப்ளோரில், காதில் மாட்டியிருக்கும் ஹெட்செட்டை கழட்டி வைத்துவிட்டு, கதைதான் ஓடிக்கொண்டிருக்கும்.
அறிமுகங்கள் முடிந்தது. இனிமேல் அறிமுகப்படுத்த வேண்டியது, மேற்படியான்களின் நண்பர்கள் ஒரு சில பேரைத்தான். அவர்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள்.
2009,July 15,
இரவு 2 மணி
ஃபர்ஸ்ட் ப்ளோரில் கசகசவென பேச்சு சத்தம். நைட் ஷிப்ட் ஏஜென்ட்கள் ஐந்து பேர் கால் எதுவும் வராததால், பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சில் சமீபத்தில் ரிலீசான சூர்யாவின் அயன் பட வாசனை அடித்தது.
ஃப்ளோரை தடுப்புகள் வைத்து சின்ன சின்ன bayயாக பிரித்து இருந்தார்கள். ஒவ்வொரு bayயிலும் குறைந்தபட்சம் 15 கம்ப்யூட்டர்களும், ரோலிங் சேர்களும், கஸ்டமர் கால் வருவதற்கு, பழைய லேண்ட்லைன் ஃபோன் போல், சிஸ்கோ இன்ஸ்ட்ருமென்ட்டும் இருக்கும்.
ஜானி ஒரு ஓரமாக சேர் எடுத்து போட்டு, காலை டேபிள் மேல் வைத்த படி, ஏசியின் தாலாட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.
பதட்டமாக bayகுள் நுழைந்த ரிஷாந்த்,
"ஜானிண்ணா எங்க?" என்று ஏஜென்ட் சீனிவாசனிடம் கேட்க,
சீனிவாசன் bayயின் மூலையை கை காண்பித்தான்.
சீனிவாசன் ஜானியின் டீமில் ஒரு சீனியர் ஏஜென்ட்.
ரிஷாந்த் வேகமாக, ஜானியை நோக்கி சென்று அவனை எழுப்பினான்.
"பாஸ் எழும்புங்க.. ஒரு முக்கியமான விஷயம்..."
ஜானி எழும்பி சோம்பல் முறித்துக் கொண்டு,
"என்னடா விஷயம்?"
ரிஷாந்த்: நைட்டு 12 மணிக்கு ஷிப்ட் முடிஞ்சு போகும்போது என் டீம் பொண்ணு, ஒரு லேடி பேசுன காலை கேக்க சொல்லி, நம்பர் நோட் பண்ணி கொடுத்தா. அதை இப்பதான் கேட்டேன். ரொம்பவே மனசுக்கு திக்குன்னு இருக்கு. நீங்க வந்து கேளுங்களேன்.
கஸ்டமர் கேருக்கு வரும் கால்கள் எல்லாமே ரெக்கார்டு ஆகும். தேவைப்பட்டால் பின்னால் எடுத்து கேட்டுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் ஏற்கனவே வந்த ஒரு கஸ்டமர் காலை தான் ரிஷாந்த் கேட்டிருக்கிறான்.
ரிஷாந்த் தேவையில்லாமல் சொல்ல மாட்டான் என்று ஜானிக்கு தெரியும். ஜானியும் எழும்பி ரிஷாந்த் பின்னால் செல்ல, ஹாலின் ஓரமாக இருந்த மேனேஜர் கேபினுக்கு ரிஷாந்த் சென்றான்.
அந்த கால் தான் அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறதென்று... அவர்களுக்கு அப்போது தெரியாது.
தொடரும்