All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 1 month ago
Posts: 10
Topic starter  

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

 

அத்தியாயம் 1 

 

மாலை 5 மணியளவில் வீட்டின் முற்றத்தை பெருக்கி தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார் செவ்வந்தி. அவரை வம்பு இழுப்பதற்காகவே வந்து நின்றாள் பக்கத்து வீட்டுப் பெண் கோகிலா. கிட்டத்தட்ட அவரின் தோஸ்தும் அவள் தான். 

 

“என்ன செவ்வந்திக்கா மாப்பிள்ளை வீட்டுக்காரக எப்போ வர்றாக? என இழுத்துக் கொண்டே கேட்க, 

 

“சாயிந்திரம் 6 மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க” என சொல்லி முடிப்பதற்குள் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வீட்டின் முற்றத்தில் வந்து நிப்பாட்டினார் மருதவேல். 

 

“என்னங்க பூவும் ஸ்வீட்டும் வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?” என கடிந்தவாறே அவர் கைகளில் இருந்த பையினை வேகமாக வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு சென்றார்.. 

 

அவர் சென்ற வேகத்தைப் பார்த்த கோகிலா, ‘க்கும்.. பெரிய ரதியை பெத்து வச்சிட்ட மாதிரி எம்புட்டு வேகமாக போறா.. ஒன்னத்துக்கும் உதவாத ஒரு கருப்பீயை பெத்ததுக்கே இம்புட்டு ரவுசு’ என மனதோடு வசைபாடியவாறே வேகமாக தன் வீட்டிற்குள் சென்றார். 

 

தான் கொண்டு வந்த பையை டேபிளின் மேல் வைத்துவிட்டு கொல்லைப்புறத்தை நோக்கிச் சென்றார் செவ்வந்தி. 

 

“ஏய்ய்ய் எங்கடி இருக்க?” என அதட்டியவாறே செல்ல, அவரின் சத்தத்தைக் கேட்டதுமே கொல்லைப்புறத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் இருந்து எழுந்து திருதிருவென முழித்தாள் மதிஅழகி.. 

 

“எங்கேடி உன் அக்கா?” என அவளிடம் எரிந்து விழ, 

 

‘உன் தொல்லை தாங்காம தான் பாத்ரூம்க்குள்ளேயே குடியிருக்கா போல’ என மனதுக்குள் நினைத்தாலும் வெளியில் சொல்ல தைரியமில்லாமல், “ம்மா அக்கா பாத்ரூம்ல இருக்கா. இன்னும் பத்து நிமிஷத்துல வெளில வந்திடுறேன்னு சொல்லியிருக்கா ம்மா” என சமாளிப்பாக ஒரு சிரிப்பையும் உதிர்த்தாள். 

 

“ஆமா.. ஆமா எத்தனை மணி நேரமா பாத்ரூம்க்குள்ளேயே குடியிருந்தாலும், கருப்பு என்ன சிவப்பாவா மாறப் போகுது. ரெடியான வரைக்கும் போதும்னு வெளியில வர சொல்லு” என்றவர் அவரின் இரண்டாவது பெண் மதிஅழகி கையில் பூவை வைத்து விட்டு சென்று விட, அவர் தலை மறைந்ததும் பாத்ரூமினுள் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள் அழகருவி .. 

 

“லேடி ஹிட்லர் போயிடுச்சி.. நீ வா அக்கா” என்றவளின் கையில் இருந்த பூவை பார்த்ததும் நீண்ட பெருமூச்சு தான் எழுந்தது அருவியிடம் இருந்து.. 

 

“என்னமோ போ டி வர்ற மாப்பிள்ளையெல்லாம் நான் வேண்டாம்னு சொன்ன மாதிரி.. அம்மா என்னை முறைச்சிட்டுப் போகுது.. நானாடி வேண்டாம்னு சொல்றேன்.. அவுங்க தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாங்க.. ஏன்டி மதி நானும் உன்னை மாதிரி அழகா இருக்கணும்னா என்னப் பண்ணணும்?” என தாழ்வு மனப்பான்மை பொங்க கேட்ட தன் அக்காவை இறுக்க அணைத்துக் கொண்டாள் மதி.. 

 

“இப்படி நிதமும் என்னை பத்து தடவை கட்டிப்பிடிச்சிக்கோ. என் அழகையெல்லாம் உனக்கே வந்திரும்” என வெள்ளந்தி சிரிப்புடன் சொன்ன தன் தங்கையை கட்டியணைத்தவளின் இதழ்களில் வலியுடன் கூடிய சிரிப்பு.. 

 

ஆயிரம் வலி உள்ளத்தில் இருந்தாலும், தன் தங்கையின் குறும்புத்தனத்தில் மறுக்காமல் சிரித்தது பெண்ணின் உதடுகள்.. 

 

அருவியிடம் இருந்து விலகிய மதி, “சரி.. சரி அம்மா வர்றதுக்குள்ள இந்தப் பூவை வச்சிடு.. இல்லை அதுக்கும் தனியா அர்ச்சனை பாடும்” என அருவியின் தலையில் பூவை வைத்து விட்டாள் மதி.. 

 

மதி 19 வயது பூம்பாவையவள்.. வானத்தில் தோன்றும் மதியினைப் போன்று பிரகாசமானவள். எங்கும் ஒளிவீசும் கண்களைக் கொண்டவள், அவளைப் பார்ப்பவர்கள் திரும்பி ஒரு முறைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள் அப்படியொரு பேரழகி.. 

 

அழகருவியோ அதற்கு நேர்மாற்.. கருப்பு நிறத்தைக் கொண்டவள், காஜலிடாத அவளின் கண்களும் ஆயிரம் கவிபாடும். ஆனால் அதைக் கேட்கத்தான் யாருக்கும் பொறுமையில்லை. வெள்ளை நிறம் மட்டுமே அழகு என வாழும் மனிதர்கள் இருக்கும் உலகத்தில் பிறந்தது அவள் குற்றமில்லையே.. 

 

அவள் மட்டுமல்ல அவர்கள் வீட்டில் அனைவருமே சற்று வெளுத்த நிறம்தான்.. அவளின் அப்பா மருதவேல் மாநிறம். அவளின் அம்மா செவ்வந்தி சற்று வெளுப்பான நிறம். அவளின் தங்கை மதிஅழகியோ கேட்கவே வேண்டாம் பால் போன்ற நிறம். அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு ஹரிஹரசுதன்.. அவன் சற்று சிவந்தாற் போன்ற நிறம். 

 

அவர்கள் வீட்டில் எதற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது அவள் மட்டுமே.. அதனாலேயே தனக்குள்ளேயே ஒடுங்கியும் போனாள் அழகருவி.. 

 

“மதி அக்காவை ரூமுக்கு அழைச்சிட்டுப் போ டி. மாப்பிள்ளை வீட்டுல இருந்து ஆள் வந்திட்டாங்க” என்றதும், அருவி வேகமாக தன்னறைக்குச் சென்று விட்டாள். 

 

மதிஅழகி வேகமாக வெளியில் ஓடி வர, அங்கு நின்றுக் கொண்டிருந்த அனைவரின் பார்வையும் விழுந்தது மதிஅழகியின் மீதுதான்.. 

 

அதே ஊரில் பெரிய வீட்டில் வசிக்கும் சகுந்தலா தன் வீட்டின் மாடியறையே பார்த்துக் கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் இன்னும் வரவேண்டியவன் வரவில்லையே.. அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் தன் வீட்டின் சுவற்றில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை அவ்வப்பொழுது பார்க்கவும் தவறவில்லை. 

 

தன் போனில் இருந்து யாருக்கோ அழைக்க அடுத்த நிமிடமே போன் எடுக்கப்பட்டது.. 

 

“அம்மாஆஆஆ. ஹால்ல இருந்துட்டு முதல் மாடியில இருக்கிற எனக்கு எதுக்கு போன் பண்றீங்க?” என எரிந்து விழுந்த குரலில் எரிச்சல் மேலிட பார்த்தார் சகுந்தலா.. 

 

“என்னடா ஓவர் சவுண்டு கொடுக்கிற?.. ஏன் மொத மாடியில இருந்து பெத்த தாய்க்கிட்ட பேசுனா குறைஞ்சு போயிடுவீயா?” என எரிந்து விழ, 

 

“என்கிட்ட பேசுற வாயை உன் மூத்த புள்ளைக்கிட்ட போய் பேசேன்.. வந்துட்டா இழிச்சவாயனா தேடிப் பார்த்து திட்டுறதுக்கு?” என்றதுமே கப்பென வாயை மூடிக் கொண்டார் சகுந்தலா. 

 

நீண்ட நேரம் எதிர்முனையில் அமைதியாக இருப்பதை கவனித்தவன், “சரிம்மா இப்போ என்ன பண்ணணும்னு சொல்லுங்க?” என வேண்டா வெறுப்பாக கேட்பதைப் போல் கேட்டாலும், தாயின் மேல் இருக்கும் அன்பில் தான் கேட்டான். 

 

“அவனை அழைச்சிட்டு வர்றீயா? நேரம் குறைவா இருக்குப்பா” என்றவரை பார்த்து நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே தனது அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டினான் அவிரன்.. 

 

“உள்ளே வா” என்ற கம்பீரக்குரலில் மெல்ல  கதவை திறக்க, அங்கு பால்கனியில் நின்று ஆழிப்பெருங்கடலை வெறித்தவாறே பார்த்துக் கொண்டு நின்றான் துகிலன் சர்வானந்த். 

 

அவனின் பின்புற தோற்றம் தான் அவிரன் கண்களுக்கு தெரிந்தது.. 

 

“அண்ணா” என்ற குரலில் சட்டென்று திரும்பினான் துகிலன்.. இமைப்புருவம் சுருங்க சிந்தனை படர்ந்த முகத்துடன் நின்றிருந்தவனின் தாடையோ இறுகியிருந்தது.. 

 

அதீத அழுத்தத்தில் இருக்கின்றான் என்பது புரிந்தது. 

 

“அம்மா கீழே கூப்பிட்டாங்க” என்றதும் ‘ம்ம்’ எனும் விதமாய் தலையை மட்டும் அசைத்தவன் தன் போன், வாலட்டை எடுத்துக் கொண்டு கீழிறங்கினான் துகிலன் சர்வானந்த்.. 

 

அலையலையாய் கேசம் காற்றில் ஆட, அழுத்தமான காலடியோசையுடன் நடந்து வந்தான் துகிலன்.. தன்னெதிரில் நின்றிருந்த தன் தாயை அழுத்தமாக பார்த்தவன், அவரை கடந்து செல்ல, அவரின் பின்னால் ஓடாத குறையாக ஓடினார் சகுந்தலா.. 

 

“யம்மோய்ய் ஓடிப்போய் எங்கேயாவது விழுந்து வாரிடாத ம்மா.” என்ற அவிரனின் குரலில் சட்டென்று சடன் பிரேக் அடித்தாற் போன்று நின்று விட்டான் துகிலன்.. திரும்பி சகுந்தலாவை பார்த்து முறைத்தவாறே, அவிரனை தான் பார்த்தான். 

 

“மெதுவா வரச்சொல்லுடா” என அக்கறை நிறைந்த குரலில் சொன்ன துகிலனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சகுந்தலா. 

 

நீண்ட நாள் கழித்து அக்கறையான பார்வை அது.. அதைப் பார்த்ததுமே சகுந்தலாவின் கண்களில் நீர் பனித்தது. 

 

“துகிலா” என்ற வார்த்தை அவரையும் அறியாமல் வெளிவந்து விட, அவனோ விறுவிறுவென வெளியேறி விட்டான். 

 

அவன் முகத்தில் அடித்தாற் போன்று இப்படி செல்வான் என சகுந்தலா கனவில் கூட நினைக்கவில்லை. அழுதே விட்டார். 

 

“என்கிட்ட இவன் பேசவே மாட்டானா அவிரா” என கண்ணீருடன் கேட்ட தன் தாயை அன்பாக அரவணைத்துக் கொண்டான் அவிரன்.. 

 

“அம்மா அண்ணா எப்பவும் இப்படித்தான்னு உங்களுக்கு தெரியுமே” என சகுந்தலாவை தோளோடு அணைத்தவாறே வெளியே வர, அவர்களுக்காகவே காருக்குள் காத்திருந்தான் துகிலன்.. 

 

டிரைவர் சீட்டில் அமர்ந்த துகிலனை பார்த்துக் கொண்டு காரினுள் ஏறியமர்ந்தார் சகுந்தலா.. மூன்று பேரும் ஒன்றாக புறப்பட்டனர் பெண் பார்ப்பதற்காக.. 

 

தன் தாயின் வாடிய முகத்தைப் பார்த்த அவிரன் தான், “ஏன் மா பொண்ணை பத்தி எதுவுமே சொல்லலை” என்றதும் சகுந்தலாவிற்கு தனக்குள் இருந்த வருத்தம் மறைந்து விட, 

 

“நம்ம ஆட்கள் தான்டா” என்றதும் துகிலன் திரும்பி தன் தாயை ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வையில் இவருக்கு கிலி பிடித்தது.

 

“இல்லைப்பா நான் அந்த அர்த்தத்துல சொல்லலை” என்றவர் மெல்ல திரும்பி ஜன்னலைப் பார்த்தவாறே திரும்பிக் கொண்டார். 

 

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வந்து இறங்கினார்கள் மூவரும். ஒன்றரை மணி நேரம் பயணத்தில் சகுந்தலா மட்டுமே களைப்பாகினார்.

 

“அம்மா பொண்ணு வீடு எந்தப்பக்கம்?”  

 

“கோவிலுக்கு பின்புறம் ரெண்டு தெரு தள்ளியிருக்குன்னு தான்டா அந்த ப்ரோக்கர் பய சொன்னான்.. அவிரா அம்மா ஒன்னு கேட்கட்டுமா?” என துகிலனைப் பார்த்துக் கொண்டே அவிராவை பார்த்துக் கேட்க, 

 

“யம்மோய்ய் உன்னோட பெரிய அக்கப்போரா இருக்கு.. நீ அவன்கிட்ட கேட்க வேண்டியதை அவன்கிட்டேயே கேளு.. அவனுக்கு காது நல்லா கேட்கும்.. என்ன பதில் தான் பேச மாட்டான்” என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தவர்,, 

 

“திருச்செந்தூர் வரைக்கும் வந்துட்டோம்.. முருகனைப் பார்த்துட்டு அப்புறம் பொண்ணு பார்க்கப் போகலாமா?” என்ற தாயை அவிரனே திரும்பி பார்த்து முறைத்தான்.. 

 

“அம்மா என்ன விளையாடுறீயா நீ?.. அவன் தான் கோயிலுக்குள்ள வரமாட்டான்னு தெரியும்ல.. அப்புறம் அவனை அங்கே வா.. இங்கே வான்னு சொல்லிட்டு இருக்க?” என சற்று கடிந்தவாறே சொன்னவன், “பொண்ணு வீடு எங்கே இருக்குன்னு சொல்லுங்க” என்றதுமே முகத்தை சுருக்கியவாறே சகுந்தலா ஒரு வீட்டினை சொல்ல, அங்கு சென்று நின்றது துகிலனின் கருப்பு நிற ஜீப்.. 

 

காரை விட்டு இறங்கியவர்கள் தங்களுக்கு முன்னால் தெரிந்த வீட்டினை பார்க்க, சற்று பெரிதான வீடாகாத்தான் இருந்தது.. அந்தக்கால வீடு என்பது பார்த்ததுமே புரிந்தது. 

 

சகுந்தலா தான் கொண்டு வந்த கட்டைப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவரின் பின்னால் அவிரன் சென்றான்.. இரண்டு பேருக்கும் பின்னால் வந்துக் கொண்டிருந்த துகிலன், 

 

“அவிரா.. என்னைப் பத்தின உண்மை பொண்ணு வீட்டுக்குத் தெரியுமா?” என்றதும் முன்னால் நின்றிருந்த சகுந்தலா திருதிருவென முழித்தபடி நின்றிருந்தார். 

 

அவர் எங்கே உண்மையை சொன்னார்? தன் மகனுக்கு திருமணம் நடந்தால் போதும் என்ற சுயநலத்துடன் உண்மையை மறைத்து தானே அழைத்து வந்திருக்கிறார்.. 

 

“தெரியுமா? தெரியாதா?” என்றவனின் கர்ஜனைக்குரலில் சகுந்தலா சற்று நடுங்கியவாறே, 

 

“தெரியும்” என பட்டென்று பொய் சொல்லி விட்டார்.. 

 

அவர் சொன்ன ஒற்றை வார்த்தையில் நீண்ட பெருமூச்சொன்றை விட்டவன், வேகமாக முன்னால் செல்ல, சகுந்தலாவின் நடை அங்கேயே தங்கி விட்டது. 

  

 

This topic was modified 3 weeks ago by VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

   
ReplyQuote
VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 1 month ago
Posts: 10
Topic starter  

அத்தியாயம் 2  

 

மதியைப் பார்த்ததும் பெண் பார்க்க வந்தவர்கள் சற்று அதிர்ந்து தான் போயினர். வீட்டிற்குள் நுழைந்ததும் பேரழகியாய் நின்றவளை பார்த்து அனைவரும் அதிர்ந்தவாறே ஒருவரின் முகத்தை மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“ம்மா இது தான் பொண்ணா?” என மாப்பிள்ளையாக வந்த வருண் தன் தாயின் காதில் கிசுகிசுக்க, 

 

“தெரியலை டா.. பொண்ணு நிறம் கம்மியா இருக்கும்னு தான் ப்ரோக்கர் பய சொன்னான். ஆனா அது இதுவான்னு தெரியலையே.. இவ அழகா வேற இருக்காளே?” என்றவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றனர் செவ்வந்தியும், மருதவேலும்.. 

 

“வாங்க.. உள்ளே வாங்க” என்றதும் அனைவரும் சென்று அங்கிருந்த சோபாவிலும் சேரிலும், விரித்து வைக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்திலும் சென்று அமர்ந்தனர்.. 

 

“இது” என மாப்பிள்ளையின் அன்னை சுற்றி வளைக்காமல் மதிஅழகியை கையைக் காட்டிக் கேட்க, அவர் கேட்ட விதத்திலே செவ்வந்திக்கு அவரை ஏனோ பிடிக்காமல் போனது.. 

 

உள்ளுக்குள் அசூசையாக இருந்தாலும் வெளியே சிரித்தபடி முகத்தை வைத்தவர், “என் ரெண்டாவது பொண்ணு மதிஅழகி. நீங்க பார்க்க வந்த பொண்ணொட தங்கச்சி” என்பதை அழுத்தமாக சொல்லி முடித்தார்.. 

 

அவரின் அழுத்தமான வார்த்தையிலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது. மதி தாங்கள் பார்க்க வந்த பெண் இல்லை என்று.. 

 

“அம்மா அப்போ இது பொண்ணில்லையா?” என வருண் தன் தாயின் புறம் சரிந்தவாறே காதில் மெல்ல சொல்லிட, 

 

“டேய்ய்.. இது பொண்ணில்லைன்னு தான் தெளிவா சொல்லிருச்சே அந்தப் பொம்பிளை.. நாம பார்க்க வந்தப் பொண்ணை பார்ப்போம்” என அதட்டும் குரலில் சொன்னவர், “பொண்ணை பார்க்கலாமா?” என பொத்தாம் பொதுவாய் அனைவரையும் பார்த்து சிரித்தபடி கேட்க, 

 

“இதோ அழைச்சிட்டு வர்றேன்” என செவ்வந்தி உள்ளே செல்ல, அங்கு அறையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள் அழகருவி.. 

 

“வா அருவி” என்றவரின் பின்னால், பேசாமடந்தையாக சென்றவளின் உள்ளமோ ஒரு வித பயத்தடன் நடுங்கிக் கொண்டிருந்தது.. 

 

இது ஒன்றும் அவளுக்கு முதல் பெண் பார்க்கும் படலம் இல்லையே.. இத்தோடு மூன்று பேர் இவளை பெண் பார்க்க வந்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இவர்கள் நான்காவது பேர். 

 

செவ்வந்தி முன்னால் செல்ல, அவரின் பின்னாடியே நடுக்கூடத்திற்கு வந்து நின்றாள் அழகருவி.. 

 

“இது தான் என் மூத்த பொண்ணு அழகருவி.” என்றதும் நிமிர்ந்து பார்த்த மாப்பிள்ளை வருண் முகத்தில் ஒரு வித பிடித்தமின்மை. 

 

முகத்தை சட்டென்று சுழித்தவாறே தன் தாயைப் பார்க்க, அவரும் அதே போல் தான் முகத்தை வைத்திருந்தார்.. 

 

“இதுதான் உங்க பொண்ணா?” என கடுமையான குரலில் கேட்க, செவ்வந்தியும் மருதவேலும் தான் திருதிருவென முழித்தனர்.. 

 

“ஆமாங்க” என சொல்லி முடிப்பதற்குள், 

 

“இவ்வளவு கருப்பா இருக்கா” என கேட்டவர்களை பார்த்து அதிர்ந்து நின்றனர். செவ்வந்தியும் மருதவேலும் ப்ரோக்கரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டனர். எதையும் மறைக்க வேண்டாம் என்று. அழகியின் நிறம், படிப்பு இரண்டையுமே அவர்கள் சொல்லி தான் அழைத்து வர சொல்லியிருந்தனர். போட்டோவும் அனுப்பி வைத்திருந்தனர்.

 

“ஏன் ப்ரோக்கர் உங்கக்கிட்ட போட்டோ காண்பிக்கலை” என்றதும் மாப்பிள்ளையின் அன்னை பக்கத்தில் அமர்ந்திருந்த ப்ரோக்கரை முறைக்க, அவரோ திருதிருவென முழித்தார்.. 

 

“என்னய்யா ப்ரோக்கர் என்னதிது?.. பொண்ணு கொஞ்சம் தானே நிறம் கம்மின்னு சொன்னீங்க?” என கேட்டவரின் பார்வை எதிரில் இருந்த அருவியை தான் பார்த்தது.. 

 

வேண்டாதது எதையோ மிதித்ததைப் போல் முகத்தை வைத்திருந்தவரைப் பார்த்து துடித்து விட்டாள் அருவி.. அவள் நிறம் கம்மி தான்.. ஏன் நிறமே இல்லை என்று கூட சொல்லலாம்.. அதற்காக இப்படியா முகத்தை வைத்திருப்பது.. 

 

அவரின் பார்வையை சட்டென்று அவளால் கடந்து செல்ல இயலவில்லை.. 

 

செவ்வந்திக்கோ அவரின் பார்வை சுளீரென்று தான் இருந்தது.. பெண்ணை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு சென்று விட வேண்டியது தானே.. இப்படி ஒரு பார்வை ஏன்? என எரிச்சலுடன் மாப்பிள்ளையையும், மாப்பிள்ளையின் அன்னையையும் எரிப்பது போல் பார்த்தார்.. 

 

“என்ன ப்ரோக்கரே இந்த கருவாச்சியை கல்யாணம் பண்ணதான் என் பையன் தவம் கிடக்குறானாக்கும்” என்றவரை அதிர்ந்து பார்த்தனர் செவ்வந்தியும், மருதவேலும்.. 

 

அவரின் அநாகரீகமான பேச்சில் வெகுவாக காயப்பட்டது அருவி தான்.. கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. 

 

அவளின் கண்ணீரைப் பார்த்த மதிஅழகியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. இத்தனை பேர் மத்தியில் தன் அக்கா காட்சிப் பொருளாக நின்றது மட்டுமில்லாமல், அவளை தகாத வார்த்தைகளால் காயப்படுத்துபவர்களை கோபத்துடன் பார்த்தவள், “என்னம்மா இவுங்க நம்ம அக்காவை பத்தி இப்படியெல்லாம் பேசுறாங்க?” என சொல்லி முடிப்பதற்குள், 

 

“இங்கே பாருங்க.. எங்களுக்கு உங்க ரெண்டாவது பொண்ணை தான் பிடிச்சிருக்கு.. நீங்க நகை கூட போட வேண்டாம். பொண்ணை மட்டும் அனுப்பி வச்சிட்டா போதும்” என சொல்லி முடிப்பதற்குள்.. 

 

“உங்களுக்கு எங்க வீட்டுல பொண்ணு இல்லை.. வெளியே போங்க” என்ற மருதவேலின் கணீர்க்குரலில் உச்சட்ட அவமானத்துடன் நின்றிருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர்.. 

.

“போகத்தான் போறோம். இங்கேயே பாய் போட்டு படுத்துக்கவாப் போறோம்.. என்னமோ பெரிய ரதியை பெத்து வச்சிருக்கிற மாதிரிதான்.. இந்த கருவாச்சியை எவனாவது வச்சிக்கிட்டாத் தான் உண்டு” என முணுமுணுத்துக் கொண்டே சென்றவரின் பார்வை இப்பொழுதும் ரதியின் மேல் தான் விழுந்தது.. அவளின் அழகு அத்தனை பேரையும் ஈர்த்தது என்பது மெய்.. 

 

அவர்கள் கடைசியாக சொன்னது அத்தனை பேரில் காதிலும் விழுந்தது அருவி உள்பட.. உள்ளுக்குள் மொத்தமாக உடைந்து போனாள்.. அவளின் நிறத்தை அவள் தீர்மானிக்கவில்லையே.. நிறம் என்பது கடவுள் படைத்தது.. அவள் இந்த நிறத்தில் பிறக்க வேண்டும் என வரம் ஒன்று வாங்கிக் கொண்டு வரவில்லையே.. 

 

சட்டென்று அவளால் அவர்கள் சொன்ன வார்த்தையை கடந்து வர முடியவில்லை. 

 

நெஞ்சம் விம்ம, அழுகை பொங்க வேகமாக கொல்லைப்புறத்தில் இருக்கும் கயிற்றுக் கட்டிலை நோக்கி தான் ஓடினாள்.. மனம் முழுவதும் வெம்பிய நிலையில் கண்ணீர் பொங்க ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.. அவளின் அழுகுரல் அனைவருக்கும் கேட்கத்தான் செய்தது.. 

 

மதிஅழகி வேகமாக தன் அக்காவை சமாதானப்படுத்த செல்ல, செவ்வந்தி தான் அவளின் கையைப் பிடித்து நிறுத்தினார்.. 

 

“எங்கே போற?” என்ற கணீர்க்குரலில் சற்று தயக்கத்துடன் தன் தாயைப் பார்த்தாள் மதி.. 

 

“அக்கா அழுறா ம்மா” என சொல்லும் போதே மதியின் கண்களில் கண்ணீர்..

 

“அழட்டும்.. அவ மனசில இருக்கிற துக்கத்தை மொத்தமாக அழுது தீர்க்கட்டும்.. அப்போ தான் மனசில பாரம் இருக்காது” என்றவருக்கும் துக்கம் தொண்டையடைக்க, கண்ணீருடன் சமையலறையை நோக்கி சென்றார். 

 

திகைத்து நின்ற சகுந்தலாவையும், அவிரனையும் பற்றி சிறிதும் எண்ணாமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான் துகிலன்.. 

 

“அம்மா அண்ணா வீட்டுக்குள்ள போயிட்டான் மா” என்றவனின் பின்னால் ஓடாத குறையாக ஓடினார்கள் அவிரனும், சகுந்தலாவும்.. 

 

அவர்கள் மூவரும் அடுத்தடுத்து வீட்டிற்குள் நுழைய, அவர்களை வரவேற்க வந்து நின்றனர் பெண் வீட்டினர்.. 

 

“வாங்க உள்ளே வாங்க” என இன்முகமாக வரவேற்றபடி உள்ளே அழைத்தவர்களை பார்த்து சமாளிப்பாக சிரித்தார் சகுந்தலா.. 

 

தன் மகனின் மேல் இருக்கும் பயம் அவரை சிரிக்கக்கூட விடவில்லை.. அவரின் சிரிப்பைப் பார்த்த அவிரன் தான் மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.. 

 

“யம்மோய்ய் ஒழுங்கா சிரிம்மா.. பயமுறுத்துற மாதிரி சிரிக்காதே” என்ற அவிரனை திரும்பிப் பார்த்து முறைத்தவர், 

 

“மூடிட்டு வா டா” என்றவர் அங்கிருந்த சோபாவில் அமர, பெண்வீட்டார் துகிலனை அளவெடுப்பதை போல் பார்த்தனர். 

 

அவர்களின் பார்வையை பற்றி சிறிதும் கவனம் கொள்ளாமல் அந்த வீட்டையே சுற்றி சுற்றி பார்த்தான். பார்த்தவனின் இதழில் சிறு சுழிப்பு.. ஆங்காங்கே ஓட்டடை தொங்கிக் கொண்டிருந்தது.. டைனிங்க் டேபிளில் பாத்திரத்தை ஒழுங்காக வைக்காமல் ஆங்காங்கே வைத்திருந்தனர்.. அது அழுக்காக வேறு இருந்தது. 

 

அவனின் பார்வையை பற்றி அறியாமல், “அப்புறம் மாப்பிள்ளை தம்பி என்ன படிச்சிருக்காங்க?” என கேட்ட பெண்ணின் தந்தையின் புறம் திரும்பியவன், “ப்ரேக்கர் உங்கக்கிட்ட சொல்லலையா? நான் என்ன படிச்சிருக்கேன்னு” என சுற்றி வளைக்காமல் கேட்ட கேள்வியில் திகைத்து நின்றார் பெண்ணின் தந்தை.. 

 

“சொன்னாரு தம்பி.. நீங்க காலேஜ் ட்ராப் அவுட் னு” என்றவரைப் பார்த்து ‘ம்ம்’ என தலையசைத்தான்.. 

 

இப்படி பேசுபவனிடம் அடுத்து என்ன கேட்க அறியாமல் திகைத்த பெண்ணின் தந்தை சகுந்தலாவை பார்க்க அவரோ சமாளிக்கிறேன் என்ற பெயரில் ஒரு சிரிப்பு சிரிக்க, பெண்ணின் தந்தையோ சற்று ஜெர்க்காகி போனார்.. 

 

“பொண்ணை வரச்சொல்லுங்க” என்ற பெண்ணின் தந்தையின் குரலில் மெல்ல அறையில் இருந்து வெளியே வந்தாள் பெண்.. சர்வ அலங்காரத்துடன் வெளியே வந்தவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போல் பார்த்தான் துகிலன்..

 

ஒரு பெண்ணை பார்க்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் ஆராய்ச்சியாய் பார்த்தவனை தான் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் உற்றுப் பார்த்தது.  

 

“என்னம்மா இவன் இப்படி பார்க்கிறான்?” என அவிரன் தன் தாயின் காதில் ஓத, அவரும் அதே சந்தேகத்துடன் அவனை பார்த்தார்.

 

நின்றுக் கொண்டிருந்த பெண்ணை பார்த்தவன், “இங்கே உட்காருங்க” என தனக்கு எதிர்ப்புறம் காலியாக இருந்த சோபாவினை காட்டினான்.. 

 

“இல்லைங்க பெரியவங்க முன்னாடி உட்காருறது ரொம்ப தப்பு” என 80 களில் வாழும் பெண்ணை போல் சொன்னவளை பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டான் துகிலன்.. 

 

தம்பி என் பொண்ணு எல்லா வேலையும் செய்வா.. காலையில 5 மணிக்கு என ஏதோ சொல்லப் போன பெண்ணின் தந்தையை கையை உயர்த்தி தடுத்தவன், “நான் என் வீட்டுக்கு வேலைக்காரி தேடி வரலை” என முகத்தில் அடித்தாற் போன்று சொன்ன துகிலனை பார்த்து திகைத்து நின்றனர் அனைவரும்.. 

 

நீண்ட நேரம் அமைதியாக இருக்க, “தம்பி எங்க பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என முந்திரிக்கொட்டையாக அவர் பதில் கூற, 

 

“அதை உங்க பொண்ணு சொல்லட்டும்” என அவரின் மூக்கை நன்றாக உடைத்து விட்டான் துகிலன்.. அதைப் பார்த்த சகுந்தலாவின் இதழ்களில் சிறு புன்னகை.. 

 

“எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு” என மெல்லிய குரலில் சொன்ன பெண்ணை திரும்பி பார்த்தவன், “என்னைப் பத்தி ப்ரோக்கர் என்ன சொன்னாரு?” என்றதும் அதுவரை சிரித்துக் கொண்டிருந்த சகுந்தலாவின் சட்டென்று பயத்தில் வெளிற ஆரம்பித்தது..

 

“ப்ரோக்கர் எல்லாம் சொல்லிருப்பாரு தம்பி” என சமாளிக்க நினைத்த அன்னையை திரும்பி பார்த்து முறைத்தவன், அவிரனை தான் அழுத்தமாக பார்த்தான்.. 

 

‘அந்தப் பார்வையே சொன்னது.. இதற்கு மேல் ஒரு வார்தை அவர் பேசக்கூடாது என்று’

 

“அம்மா நீ கம்முன்னு இரும்மா.. சும்மா சும்மா அவனை சொறிஞ்சி விட்டுக்கிட்டு” என்றவனின் தொடையில் நன்றாக கிள்ளி விட்டார். துகிலனிடம் காட்ட முடியாத கோபத்தை அவனிடம் காட்டிவிட்டார்.. 

 

“ஸ்ஸ் என தொடையை நீவிக்கொண்டே சகுந்தலாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான். 

 

“சொல்லுங்க சார் என்னைப் பத்தி ப்ரோக்கர் என்ன சொன்னாங்க?” என்றவனை சற்று திகைப்புடன் பார்த்தவர், 

 

“தென்காசி பக்கத்துல ஜமீன் குடும்பம் சொன்னாரு. உங்களுக்கு சொந்தமா பெரிய ஜமீன் வீடு ஒன்னு இருக்குன்னு சொன்னாரு.. அந்த ஜமீனும் அருவிப்பக்கமா இருக்கு.. மலைக்கூட உங்களுக்கு சொந்தமா இருக்குன்னு சொன்னாரு” என்றவரை புருவம் சுருக்கி பார்த்தான் துகிலன்.. 

 

“வேற..” என்றவனின் கூர் பார்வையால் தடுமாறினார் பெண்ணின் தகப்பனார்.. 

 

“காலேஜ் ட்ராப் அவுட்” என்றவரை சலிப்பாக பார்த்தவன் நெற்றியை நீவிக் கொண்டே, 

 

“என் பேரு துகிலன்.. அப்பா பேரு வானவராயன்.. இவுங்க என் அம்மா சகுந்தலா” என்றவனை கண்ணீருடன் ஏறிட்டுப் பார்த்தார் சகுந்தலா.. 

 

எத்தனை வருடங்களாகி விட்டது அம்மா என்ற வார்த்தையை அவன் வாயால் கேட்டு என நினைத்து கண்கள் கலங்கி அமர்ந்திருந்தார்.. 

 

“இவ என் தம்பி அவிரன்.. எங்க முப்பாட்டன் சொத்து தான் நீங்க சொன்ன ஜமீன்.. அதை அனுபவிக்கிறதுக்கும், பராமறிக்கிறதுக்கும் தான் எங்களோட வேலை. மத்தபடி நான் டிராவல்ஸ் வச்சி நடத்துறேன். 5 வருஷமா ட்ராவல்ஸ் வச்சிருக்கேன்.. நாலு வேன் ஓடுது.. இரண்டு லாரியும் இருக்கு.. இப்போதைக்கு அவ்வளவு தான் எங்க சொத்து. அதுக்கும் மேல ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவனின் கையை சட்டென்று பிடித்துக் கொண்டார் சகுந்தலா.. 

 

அவரின் கையை மெல்ல விலக்கியவன், அப்பொழுதும் தன் அன்னையை பார்க்கவில்லை.. அவிரனை பார்த்துக் கொண்டே, “என்னை நம்பி வர்ற பொண்ணுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்..” என்றவன் பெண்ணின் தந்தையின் முகத்தைப் பார்த்தார். 

 

அதில் ஒரு வித சிந்தனை படர்ந்திருந்தது.. 

 

“என்ன முக்கியமான விஷயம்னு?” என இழுத்த பெண்ணின் தாயை பார்த்தவன், 

 

“நான் ஒரு கொலைகாரன்.. 21 வயசுல கொலை பண்ணிட்டேன்.. இங்கே தான் திருச்செந்தூர் எஸ்.ஐ.பாலமுருகன் தான் என்னைக் கைது பண்ணி 15 நாள் ரீமைண்ட்ல வச்சி பாளையங்கோட்டை ஜெயில்ல 7 வருஷம் சிறைத்தண்டனை அனுபவிச்சிட்டு தான் வெளியில வந்தேன்.. இப்பவும் உங்க பொண்ணுக்கு என்னைப் புடிச்சிருக்கா?” என சொல்லி முடித்ததும் பெண் வீட்டார் யார் முகத்திலும் ஈயாடவில்லை 


   
ReplyQuote

You cannot copy content of this page