All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

சில்லாஞ்சிருக்கியே - 13

 

VSV 25 – சில்லாஞ்சிருக்கியே
(@vsv25)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 25
Topic starter  

சில்லாஞ்சிருக்கியே - 13

 

மறுநாள் நேத்திரன் இரண்டு தெரு தள்ளி தனி வீடு ஒன்று பார்த்திருப்பதாக கூறினான். தேன்மொழிக்கு தனி வீட்டிற்கு செல்லவும் கூச்சம்.. அதே சமயம் தமிழுக்கு எவ்வளவு நாள் பாரமாக இருப்பது என்ற எண்ணமும் இருந்தது. இப்பொழுது டீ கடை வேறு பறிப்போனதும் இன்னுமே குற்றவுணர்வாகி போனதில் தனி வீட்டிற்கு செல்ல ஒப்புக் கொண்டாள் தேன்மொழி. 

 

வீடு சுத்தம் செய்து பால் காய்ச்சுவதில் அந்நாளின் பகல் பொழுது கழிந்திருந்தது. அன்று மாலை 4 மணி போல நேத்திரனின் வீட்டில் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வெளியே எதையும் காட்டிக்கொள்ளமல் சாதாரணமாக பேசினாலும் தமிழ் மனதில் இருந்த வருத்தத்தை மூவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. யாஷோ,

 

“நாம ஏன் கொஞ்ச நாளைக்கு வேற ஒரு கடையை லீஸுக்கு வாங்கி டீ பிசினஸ் கன்டின்யூ பண்ண கூடாது” என்று கேட்க அது நல்ல யோசனையாக இருந்த போதும் ஏனோ தமிழால் அவளின் நிலத்தை தவிர்த்து வேறெங்கும் வியாபாரம் செய்ய மனம் ஒப்பவில்லை. நேத்திரனோ,

 

“ப்ரோ சொல்றதும் கரெக்ட் தான்.. ஊர் எல்லையில நம்ம கடை இருந்துச்சுல.. இப்போ ஊருக்குள்ள பார்ப்போம். நல்ல பெரிய கடையா பார்த்து முடிஞ்சா டிபனும் செஞ்சி விக்கலாம். மதியம் வரைக்கும் தமிழும் தேனும் கடையை பார்த்துக்கோங்க. மதியத்துக்கு மேல நானும் சேர்ந்து வந்துருறேன்” என்றிட என்ன கூறியும் தமிழின் மனதுக்கு ஒப்பவில்லை. அவளின் ஏக்கத்தை புரிந்த யாஷோ சற்று வெளியே சென்று வந்தால் அவளின் மனநிலை மாறும் என்று நினைத்தவன்,

 

“காய்ஸ். முருகன் கோவில் போய்ட்டு வரலாமா?” என்றான் அவளுக்கு முருகன் பிடிக்கும் என்று அறிந்து. சொல்லப்போனால் தமிழும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். நினைத்த உடன் அவன் கூறியதும் ஆச்சரியமாய் நோக்கினாள் அவனை. தேன்மொழியோ,

 

“இப்போவா?” என்றாள். 

 

“ஆமா.. உங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் கோவில் எங்கேயும் போகல தானே” என்று யாஷ் கேட்க நேத்திரனோ,

 

“பரவாயில்லையே ப்ரோ.. எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க.. கலக்குறீங்க போங்க” என்றான். தமிழோ,

 

“இங்க பக்கத்துல இலஞ்சி குமாரர் கோவில் இருக்கு. அங்க போகலாம்” என்றிட பிறகு யாஷின் ஜீப்பில் நால்வரும் செல்ல ஆயத்தமாயினர். யாஷும் தமிழும் முன்னே எறிக்கொள்ள நேத்திரனும் தேன்மொழியும் மகிழுடன் பின்னே ஏறிக் கொண்டனர். பத்து நிமிட பயணத்தில் கோவிலை அடைய நால்வரும் இறங்கி உள்ளே சென்றனர். 

 

ஏகப்பட்ட தென்னை மரங்களால் சூழப்பட்டும், நல்லா விசாலமான சுற்று பிரகாரமும் அமைக்கப்பட்டு அழகாக அமைந்திருந்தது அக்கோவில். அக்கோவிலின் அழகில் மெய்மறந்து பார்த்தான் யாஷ். பிறகு நால்வரும் கோவிலுக்குள் நுழைந்தனர். நேத்திரன், தேன்மொழி மற்றும் மகிழின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு அனைவரும் முருகனை வழிபட்டுவிட்டு வெளியே வந்தனர். மகிழ் அழுவதால் அவனைத் தூக்கிக் கொண்டு நேத்திரன் வெளியில் வேடிக்கை காண்பிக்க ஒரு பக்கம் செல்ல, யாஷும் தமிழும் தனியே பேசுவார்களோ என்றெண்ணி தேன்மொழியும் நேத்திரனின் பின் சென்றாள். 

 

தமிழோ சுற்று பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்துவிட யாஷும் அவளருகில் அமர்ந்தான். தமிழின் கவனமோ வேறு எங்கோ இருந்தது. அவளை சகஜமாக்கும் பொருட்டு பேச தொடங்கினான் யாஷ்,

 

“சில்லு.. எனக்கொரு டவுட்டு” என்றான். 

 

“என்ன டவுட்டாம்?” என்றாள் தமிழ்.

 

“நான் ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொன்னேன். இன்னும் எனக்கு பதில் சொல்லல. அவ எப்போ பதில் சொல்லுவான்னு டவுட்டு” என்றிட அவனை முறைத்தாள் தமிழ்.

 

“இருக்குற பிரச்சனைல இப்போ அது ரொம்ப முக்கியமாக்கும்” என்றாள் சலித்தபடி

 

“அப்கோர்ஸ் மா.. லைப் மேட்டராச்சே” என்க அவளோ பதில் கூறவில்லை. 

 

“உனக்காக கவிதை எல்லாம் யோசிச்சு வச்சேன் தெரியுமா?” எனவும் அவனை நம்பாமல் பார்த்தவள்,

 

“சொல்லுங்களேன் கேப்போம் உங்க கவிதையை” என்றாள் நக்கலாக. அவன் சும்மா கூறுகிறான் என்று நினைத்து. அவனோ அவளையே ஆழ்ந்து பார்த்தான் தனது ஹேசல் விழிகளில். நக்கலை தேக்கி வைத்திருந்த அவளது கண்கள் இப்பொழுது அவனது பார்வை வீச்சை தாங்க மாட்டாமல் தடுமாற இலவச இணைப்பாக கன்னக் கதுப்புகளில் செம்மை குடியேறியது. அவனோ,

 

“அங்க பாரு” என்றபடி தூரத்தில் வானத்தை நோக்கி கை காண்பிக்க அவளும் பார்க்க அங்கு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த காட்சி தெரிந்தது. 

 

“உதிக்கும் சூரியனும்

உருகவிட்டதோ தனது செந்நிறத்தை 

உன் வெட்கத்தின் செம்மையில்

உஷ்ணம் கொண்டு..” என்று கவித்துவமாக அவன் கூற அதில் அவளின் இதழ்கள் விரிந்தன. 

 

“ப்ளர்ட் பண்றதுக்கு ஒரு போட்டி வச்சா ஒலிம்பிக் மெடலே வாங்கிருவீங்க போல” என்றிட அதில் சிரித்தவன்,

 

“ப்ளர்ட் பண்றேனா.. ஹே லவ் பண்றேன். இப்படி ப்ளர்ட்னு சொல்லி கொச்சைப் படுத்தாத.” என்றான். 

 

“உங்க நாட்டுல எத்தனயோ பொண்ணுங்கள எப்படி எப்படியோ பார்த்துருப்பீங்க. அங்கெல்லாம் பாக்காத அழகையா என்கிட்ட பார்த்துட்டீங்க. சும்மா எதாச்சு கதை விடாதீங்க.”

 

“நீ சொல்ற அழகு என்னன்னு தெரியல. நான் சொல்ற அழகு நாட் ஒன்லி இன் அப்பியரன்ஸ். சில பேரை பார்த்தாலே தோணனும். இவங்க நம்ம கூடயே இருந்தா நல்லா இருக்குமேன்னு. எனக்கு உன்னை பார்த்து தான் தோணுச்சு. நான் என் லவ்வ எக்ஸ்ப்ரஸ் பண்ற விதம் வேணா நாட்டியா இருக்கலாம். ஆனா என் மனசுல நீ ஏற்படுத்துன தாக்கம் ரொம்ப பெருசு.  நீ நம்பலைனாலும் இது தான் உண்மை. ஒருநாள் உனக்கு நான் சொல்றது புரியும்.” என்றிட அவனது வார்த்தையில் நிஜமாகவே பெண்ணவளுக்கு அவன் மீது காதல் பெருகியது.

 

‘எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா அதை சொல்ல விடாம ஏதோ தடுக்குது. என்னைக்கு என்னையும் மீறி சொல்லியே ஆகணும்னு தோணுதோ அன்னைக்கு சொல்லிருவேன் உங்க கிட்ட.. அதுவரை வெயிட் பண்ணுங்க’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள். மேலும் தொடர்ந்தவன்,

 

“ஆனா என் காதலை நீ புரிஞ்சுக்குற அன்னைக்கு இப்போ மாதிரியே சாப்ட்டாவே உன்னை டீல் பண்ணுவேன்னு நினைக்காத. நான் கொஞ்சம் ரக்கட் தான். எல்லாத்துக்கும் தயாரிகிட்டு வந்து உன் காதலை சொல்லு” என்றவன் கண்ணடிக்க அவன் எதை கூறுகிறான் என்று புரிந்தவளோ அதிர்ந்து பார்த்தாள். அவளின் அதிர்ச்சியைக் கண்டவன்,

 

“பரவாயில்லையே எதை சொல்றேன்னு புரிஞ்சுகிட்ட.. வெரி குட் மை பேபி கேர்ள்” என்றிட அதில் அவனை முறைத்தவள்,

 

‘கோவில்ல வச்சு பேசுற பேச்சை பாரு.. இருங்க உங்கள கதற விடுறேன்’ என்று நினைத்து, 

 

“இப்போ என்ன பதில் தானே வேணும் உங்களுக்கு. சரி உங்களுக்கு ஒரு டாஸ்க்” என்றாள்.

 

“சொல்லு சொல்லு சொல்லு.. என்ன செய்யணும்” என்று அவன் ஆர்வமாக கேட்க,

 

“அதென்ன.. நான் வெட்கப்படுற அழகைப் பார்த்து சூரியனோட சிவப்பு உருகி ஓடுதா.. சரி அதை நிஜமாவே ப்ரூவ் பண்ணுங்க.. அடுத்த நிமிஷமே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள். அவனோ,

 

“எதேய்.. நிஜமாவே ப்ரூவ் பண்ணனுமா… கவிதை எல்லாம் பேருக்கு சொல்றது தான். இப்படி ப்ரூவ் பண்ண சொல்லி கேட்டா எவனுமே கவிதை எழுத முடியாது.. விளையாடாத..” என்றான் பாவமாக. 

 

“அதெல்லாம் தெரியாது. சும்மா வாயில வடை சுடுறதெல்லாம் வேளைக்கு ஆகாது. நான் கொடுத்த டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ணுனா லவ் ஒகே. இல்லனா ரிஜெக்டெட்” என்றிட, 

 

“பாவி.. ஆனா ஒன்னு மட்டும் புரியுது. முடியாதுங்குறதை எப்படி எல்லாம் சொல்றீங்க இந்த பொண்ணுங்க.. டூ பேட்” என்று அவன் புலம்ப அதனை கேட்டவள் சத்தமாக வாய்விட்டு சிரித்தாள். அவளின் சிரிப்பினைக் கண்டவன், 

 

“இப்படி சிரிச்சுட்டே இரு போதும். உன் பிரச்சனை எல்லாம் கூடிய சீக்கிரம் சரி ஆகும்.” என்றவன் தன் மனதில் தீட்டிய திட்டத்தை ஒருகணம் நினைத்துக் கொண்டவன் கண்ணில் மகிழை வைத்துக் கொண்டு பேசாமல் நிற்கும் நேத்திரன் மற்றும் தேன்மொழி தென்பட,

 

‘மகிழை காரணம் காட்டியே இதுங்க பேசாம சும்மா நிக்குதுங்க.. ஐயோ..” என்று நொந்தவன் மகிழை வாங்கி வந்தான். நேத்திரனோ,

 

“இப்போ ப்ரோ எதுக்கு மகிழை வாங்கிட்டு போனாரு தெரியுமா?” என்று தேன்மொழியிடம் கேட்க அவளோ கேள்வியாக பார்த்தாள். 

 

“அப்போ தான் நீயும் நானும் மனசுவிட்டு பேசுவோமாம். ஆனா உண்மை நமக்கு தான் தெரியும். எப்படி இருந்தாலும் நீ பேசாம அமைதியா நிப்பன்னு” என்றவன் சிரித்தபடி கூற சிரித்தாலும் அவன் மனதில் இருக்கும் வருத்தம் அவளுக்கு புரிந்தது. 

 

“பேசக் கூடாதுன்னு எல்லாம் இல்ல.. ஆனா” என்றவள் இழுக்க அவனோ,

 

“சரி விடு ரொம்ப கஷ்டப்படாத. ஆமா நீ ஏன் என்கிட்ட சொல்லல?” என்றான்.

 

“எதை?”

 

“எங்க அப்பா உங்க வீட்டுல வந்து மிரட்டுனதை”

 

“நீங்க என்கிட்ட எதுமே அப்போ ஒப்பனா சொல்லிக்கல. என்னன்னு வந்து உங்க கிட்ட நான் இதை சொல்ல முடியும். காதலை சொல்லவே தயங்குறவரு அப்பாவை எதிர்த்து என்ன செஞ்சிட போறாருன்னு தோணுச்சு. என்னால என் குடும்பம் பாதிக்கப்படவும் எனக்கு விருப்பம் இல்ல” என்று கூற நேத்திரனுக்கு தன் தவறு புரிந்தது. 

 

“தப்பு தான். என் காதலை நான் உங்கிட்ட வந்து சொல்லிருக்கணும். நீ காலேஜ் முடிக்குற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு நினைச்சு தான் சொல்லாம இருந்தேன். ஆனா இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. கல்யாணம் கூட உனக்கு விருப்பபட்டு தான் நடக்குதுன்னு சொன்னாங்க. அதனால என்னால தடுக்க முடியல” என்றவனின் முகத்தில் அப்பட்டமான வலி தெரிந்தது. அவனை உணர்ச்சி துடைத்த முகத்தோடு தேன்மொழி ஏறிட அவளின் பார்வைக்கான அர்த்தம் தான் அவனுக்கு புரியவில்லை. தாலி கட்டிய அன்று மன்னிப்பு கேட்ட போதும் இதே போன்று தான் பார்த்தாள். ஆனால் அவள் மனதினை அவனால் படிக்க முடியவில்லை. அவன் அது குறித்துக் கேட்கவர,

 

“கிளம்பலாம் டைம் ஆயிடுச்சு” என்றவள் யாஷ் தமிழை நோக்கி செல்லலானாள்.  அப்பொழுது மஞ்சுளா கோவிலினுள் நுழைந்தார். நேத்திரனை பார்த்தவர்,

 

“டேய் நேத்திரா” என்றபடி அவனிடம் வந்தார். தாய் மகன் நலவிசாரிப்புகள் எல்லாம் முடிய தமிழைக் கண்டவர்,

 

“ஏட்டி தமிழு.. திடிர்னு எதுக்கு கடையை மூடிட்ட. காசு தேவைப்படுதுன்னு நிலத்தை வித்துட்டியாமே.. என்னாச்சுட்டி?” என்று விசாரிக்க தமிழோ நேத்திரனை பார்த்தாள். 

 

“ம்மா.. நீ நினைக்குற அளவுக்கு உன் புருஷன் நல்லவர் இல்லமா” என்றவன் நடந்த அனைத்தையும் கூற,

 

“அட சண்டாள மனுஷா.. இப்படி பச்சை புள்ளைய வச்சு மிரட்டி வாங்கியிருக்காரு.. மனசாட்சி இல்லாம” என்றவர் மகிழை தூக்கி உச்சி நுகர்ந்தார். 

 

“ஆமா மா”

 

“அவர் கொஞ்சம் மோசம்னு எனக்கு தெரியும். ஆனா இப்படி கீழ் தரமா இறங்குவாருன்னு நினைக்கல.”

 

“நீ அந்தாளோட இருக்க வேணாம் மா. எங்க கூட வந்துடுறியா?” என்று நேத்திரன் கேட்க,

 

“இப்போ அவர் செஞ்ச காரியத்தை கேட்டதும் பேசாம டெய்லி போடுற இன்சுலின் ஊசில விஷம் கலந்து போட்டு விட்ருவோமான்னு நினைக்குற அளவுக்கு எனக்கு கோபம் வந்துச்சு தான் டா.  ஆனா என் மேல அவருக்கு இருந்த பாசம், அக்கறை, காதல் இதுல எதுலையும் நான் இதுவரை பொய்யை பார்த்தது இல்லை. அவரால எனக்கு துரோகம் செய்ய முடியாது. அந்த ஒரு விஷயம் மட்டும் என்னை வர விடாம தடுக்குது டா. அந்த கடவுள் தான் அவருக்கு பாடம் புகட்டணும்” என்றவர் தேன்மொழியிடம்,

 

“மன்னிச்சுரு மா. அவர் செஞ்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றிட அவளோ,

 

“அவர் செஞ்சதுக்கு நீங்க என்ன செய்வீங்க. விடுங்க பரவாயில்ல” என்றாள். 

 

“இன்னும் என்ன மொட்டையா கூப்பிட்டுட்டு இருக்க. என் மவன் தாலி கட்டிட்டான் தானே. ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு. சரியா” என்றவர் நேத்திரனிடம்,

 

“வீடு பால் காய்ச்சுருக்கன்னு ஊருக்குள்ள சொன்னாங்க. பெத்த பையன் விஷயத்தை ஊர்காரங்க சொல்லி கேள்விப்பட வேண்டிய நிலைமை ஆயிடுச்சு” என்றவர் முந்தானையால் கண்களை துடைத்துவிட்டு,

 

“பரவாயில்ல. நான் அவருக்கு தெரியாம எப்போயாச்சு வீட்டுக்கு வரேன். சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்புறேன்” என்றவர் சென்றுவிட யாஷோ,

 

“அப்படி ஒரு ஆளுக்கு இப்படி ஒரு நல்ல மனைவியா? கொடுமை” என்றான். பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். மஞ்சுளா கூறியது யாஷின் மனதில் ஓடிக் கொண்டேயிருக்க,

 

“ஒருநிமிஷம் ஜீப் கீ காணும். கோவில்ல எங்கயாச்சும் விழுந்திருக்கும். ப்ரோ என்கூட வா” என்றவன் நேத்திரனோடு கோவிலுக்குள் செல்ல பிறகு ஐந்து நிமிடத்தில் சாவியோடு வந்து சேர்ந்தனர்

 

மறுநாள் பொழுது விடிய காலையிலேயே மந்திரமூர்த்தியை சந்திக்க வந்திருந்தான் யாஷ். வாசலில் நின்றவன்,

 

“உள்ள வரலாமா?” என்று கேட்க ஹாலில் அமர்ந்திருந்தவர் யோசித்தபடியே,

 

“வாங்க தம்பி” என்றார். 

 

“உங்க கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும் சார்” என்றான்.

 

“மஞ்சு மா.. தம்பிக்கு காபி கொண்டு வா” என்று குரல் கொடுத்தவர்,

 

“சொல்லுங்க கேப்போம்” என்று சாய்ந்து அமர்ந்தார். 

 

“ஊர் எல்லைல இருக்குற நிலத்தை நீங்க எவ்ளோக்கு யார்கிட்ட விலை பேசியிருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான். 

 

“அது எதுக்கு உங்களுக்கு தம்பி.”

 

“காரணமா தான் கேக்குறேன் சார். நீங்க எவ்ளோ விலைக்கு வித்துருந்தாலும் சரி அதைவிட ரெண்டு மடங்கு அதிகமா கொடுத்து நான் வாங்கிக்குறேன்” என்று அவன் கூற அதில் சிரித்தவர்,

 

“அஞ்சு கோடிக்கு வித்துருக்கேன்னு சொன்னா பத்து கோடி கொடுத்து வாங்க தயாரா இருக்கீங்க அப்படி தானே” என்று கேட்க அவனோ,

 

“இருபது கோடி கொடுக்குறேன். அந்த நிலத்தை நான் வாங்கிக்குறேன்” என்று அவன் கூற அதில் தீவிரமாக பார்த்தவர்,

 

“நீங்க ஏன் இவ்ளோ ஆர்வம் காட்டுறீங்க அந்த நிலத்து மேல” என்று கேட்டார். 

 

“நான் தமிழை காதலிக்குறேன். அவளுக்கு அவ பாட்டி நியாபகமா இருக்குறது அந்த டீ கடை மட்டும் தான். அது இல்லாம அவ ரொம்ப வருத்தப்படுறா. அவ வருத்தப்படுறதை என்னால பார்க்க முடியல. அவ சந்தோஷத்துக்காக நான் இதை செய்ய நினைக்குறேன்” என்றான்.

 

“ப்பா என்ன ஒரு உன்னதமான காதல். ஆனா பாருங்க உங்க காதலை விட அந்த நிலம் விலைமதிக்க முடியாதது. சோ நான் உங்களுக்கு கொடுக்குற ஐடியால இல்ல” என்று அவர் கூற அப்பொழுது மஞ்சுளா யாஷுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். 

 

“மஞ்சு கேட்டியாட்டி தம்பி சொன்ன கதையை. லவ் பண்றதுல என்னை மிஞ்சிருவாரு போலயே” என்றிட யாஷோ,

 

“இல்ல சார் நீங்க எனக்கு கொடுத்து தான் ஆகணும்” என்று அவன் கூற அவன் பேச்சில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவர்,

 

“என்ன தம்பி மிரட்டுறீங்களா?”

 

“நீங்க மிரட்டும் போது நான் மிரட்ட கூடாதா சார்?” என்றான் அவன் தீர்க்கமாய். 

 

“இவ்ளோ மிரட்டி அந்த நிலத்தை நான் வாங்கியிருக்கேனே அப்போவாச்சு அதோட வேல்யு புரிய வேணாமா? உங்களுக்கு தூக்கி கொடுக்க தான் நான் அவ்ளோ வில்லத்தனம் பண்ணி வாங்குனேனா?” என்றவர் தன் மனையாளிடம்,

 

“எதுக்கு இப்படி மிரட்டி வாங்குனீங்கன்னு கேட்டு முகத்தை தூக்குனியே.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோட்டி” என்றவர்,

 

“அந்த நிலத்துக்கு அடியில கிராஃபைட் இருக்கு. பலநூறு கோடி மதிப்பு இருக்கு அந்த நிலத்துக்கு. பெரிய கம்பெனி ஒன்னு வாங்க ரெடியா இருக்கு. பார்ட்னர்ஷிப் போட்டா என் லெவலே வேற. சும்மா காதலுக்காக காசை கரியாக்கிட்டு கிடக்காதீங்க போங்க தம்பி” என்றார். 

 

“கிராஃபைட்டா.. அப்போ மைனிங் பண்ண போறீங்களா?”

 

“ஆமா அப்போ தான் பணம் கிடைக்கும்”

 

“மைனிங் பண்ணுனா இந்த ஊருல இருக்குற இயற்கை எல்லாம் அழிஞ்சிரும். விவசாயம் பண்ண முடியாது. ஊரோட அழகே இந்த இயற்கை தான். அதையும் அழிக்க போறீங்களா?”

 

“என்ன தம்பி நீங்க. வெளிநாட்டுக்காரர் விவரமானவரா இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி தத்தியா இருக்கீங்க. ஊரு நாசமா போனா எனக்கென்ன. எனக்கு பணம் தான் முக்கியம்.” 

 

“இவ்வளவு நேரம் என் தமிழோட டீ கடை அவளுக்கு திரும்ப கிடைக்கணும்னு மட்டும் தான் நிலம் வேணும்னு கேட்டேன். ஆனா இப்போ இந்த ஊரோட வளத்தை பாதுகாக்க கண்டிப்பா இந்த நிலம் வேணும். தமிழுக்காகவும் ஊருக்காகவும் நான் எந்த எல்லைக்கும் போவேன்” என்றவன் கூற,

 

“என்ன தம்பி? பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு. முடியாதுன்னு சொன்னா உங்களால என்ன செய்ய முடியும்?” என்று அவர் தெனாவெட்டாக கேட்க அவனோ,

 

“ஓஹோ உங்க உயிரை விட பணம் உங்களுக்கு முக்கியமா அப்போ?” என்றான் நக்கலாக.

 

“என்ன என்னை கடத்த போறீங்களா?” என்று கேட்டவர் சிரித்தார்.

 

“அவ்ளோ எல்லாம் உங்களை மாதிரி நான் கஷ்டப்பட மாட்டேன். ஒரே ஒரு விஷ ஊசி போட்டு உங்க உயிர் போயிருச்சுன்னா என்ன செய்வீங்க? கிடைக்குற பணத்தை உக்காந்து அனுபவிக்க உயிர் முக்கியம் தானே சார்?” என்று கேட்க அவரோ,

 

“நீங்க ஊசி போடுற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா?” என்று கேட்டவர் சிரிக்க,

 

“சிரிங்க சிரிங்க.. ஏற்கனவே போட்ட ஊசிக்கு நீங்க பூ பறிச்சா என்ன பறிக்காட்டி என்ன?” என்றவன் கால்மேல் கால் போட்டு அமர,

 

“அதெப்படி ஏற்கனவே போட முடியும்?” என்று கேட்க வந்தவரின் வார்த்தைகள் எதையோ நினைத்து பாதியிலேயே நிற்க பீதியுடனும் வலியுடனும் தனது மனையாளின் முகம் நோக்க,

 

“என்னை மன்னிச்சுருங்க. எனக்கு வேற வழி தெரியல” என்றபடி அவரின் காலில் விழுந்தார் மஞ்சுளா. 

_______________________

 

மந்திரமூர்த்தியின் நீரிழிவு நோய்க்கு தினமும் காலையில் மஞ்சுளா இன்சுலின் ஊசி போட்டுவிடுவார். இன்று காலை வழக்கம் போல ஊசி போட வந்தார் மஞ்சுளா. ஆனால் வழக்கமாக போடும் மருந்தின் நிறத்தில் இல்லை. அதனைக் கண்டவர்,

 

“என்ன மஞ்சு. மருந்து வேற கலர்ல இருக்கு?” என்று கேட்க அவரோ,

 

“நாம எப்போதும் போடுற பிராண்ட் இல்லையாம். நான் டாக்டர் கிட்ட கேட்டேன் இந்த மருந்து எழுதி கொடுத்தாங்க” என்று அவர் கூற,

 

“ஓ சரி சரி மா மஞ்சு” என்றவர் ஊசியை குத்த சொல்ல,

 

‘என்னை மன்னிச்சுருங்க’ என்று நினைத்தவர் ஊசியைக் குத்தினார்.

_______________

 

இவ்வாறு நடந்ததை நினைத்த மந்திரமூர்த்திக்கு மனது வலித்தது. இந்த உலகத்திலேயே அவர் நம்புவது மஞ்சுளாவை மட்டும் தான். அவர் இவ்வாறு செய்ததை மந்திர்மூர்த்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

நேற்று கோவிலில் இருந்து கிளம்பும் போது காரின் சாவியை உள்ளே மறந்துவிட்டதாக சொல்லி சென்ற யாஷும் நேத்திரனும் உள்ளே செல்ல நேத்திரனிடம் தனது திட்டத்தை கூறி மஞ்சுளாவிடம் பேச கூறினான்.

 

“நல்லா ஐடியா ப்ரோ இது. வாங்க அம்மா கிட்ட பேசலாம்” என்றபடி இருவரும் மஞ்சுளாவிடம் சென்றனர்.

 

“அம்மா அப்பாவை திருத்தனும்னா அதுக்கு ஒரு வழி இருக்குமா” என்றவன் யாஷ் கூறியதை கூற முதலில் அவரோ,

 

“டேய் நேத்திரா என்ன காரியம் டா என்னை பண்ண சொல்ற?” என்று பதறினார். யாஷோ, 

 

“மா.. ஒரு நல்லது நடக்க நாம என்ன வேணா செய்யலாம். கண்டிப்பா உயிருக்கு பயந்து அவரு எழுதி கொடுத்துருவாரு. தப்பு மேல தப்பு பண்ணி ஒரு கட்டத்துல அவருக்கு அது ஆபத்தா முடியும். அவர் திருந்தணும்னா நாம இதை தான் செய்யணும். பணம் தான் முக்கியம்னு நினைக்குறாரு. உயிரோட மதிப்பை அவருக்கு நாம தான் புரிய வைக்கணும். கண்டிப்பா நான் மாத்து மருந்து கொடுத்துருவேன் ஒரு வாரத்துல. எனக்காக இந்த உதவியை செய்ங்க” என்று அவன் கேட்க,

 

“ஆமாம்மா இன்னைக்கு ஒரு பச்ச குழந்தையை கடத்துற அளவுக்கு அவரோட பணத்தாசை அவர் கண்ணை மறச்சுருக்கு. நாளைக்கு எந்த எல்லைக்கும் போவாரு. நாம தான் அவருக்கு புரிய வைக்கணும்.” என்று கூற மகனே கூறுகிறான் என்றதும் அவரோ யோசித்துவிட்டு,

 

“எனக்கு என் புருஷன் திருந்துனா போதும். ஆனா அவரு உயிருக்கு ஆபத்து வர கூடாது சொல்லிட்டேன். உங்களுக்காக நான் பண்றேன்” என்று கூறினார்.

 

“ம்மா அவர் எனக்கு அப்பா மா. கொலை பண்ணுற அளவுக்கு நான் போவேனா?” என்று நேத்திரன் கேட்க,

 

“கண்டிப்பா அவரு உயிருக்கு எதுவும் ஆபத்து வராது. அதுக்கு நான் கேரண்டி. விடிய காலைல யாருக்கும் தெரியாம வந்து மருந்து கொடுக்குறேன். அதை நாளைக்கு எதாவது சமாளிச்சு அவருக்கு போட்டு விடுங்க” என்று யாஷும் உறுதியளிக்க அவன் திட்டப்படியே அனைத்தும் நடந்தது. 

 

“ஹே நீங்க சும்மா ட்ராமா தானே பண்றீங்க. சும்மா தான சொல்ற..” என்றவர் பீதியில் கேட்க 

 

“நான் ஏன் பொய் சொல்ல போறேன். இந்நேரம் உங்களுக்கு வேகமாக இதயம் துடிச்சுருக்கும். வேணும்னா கையை வச்சு பாருங்க” என்று கூற அவரும் நெஞ்சில் கைவைத்து பார்க்க அவன் கூறியது போன்றே வேகமாக துடித்தது.

 

“உங்களுக்கு போட்டது ஒரு பயங்கரமான விஷ ஊசி. நீங்க ஹாஸ்பிட்டல் போய் சேர்ந்தாலும் கூட நான் என்ன மருந்து உங்களுக்கு கொடுத்தேன்னு கண்டுபிடிக்கவே அவங்களுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆகும். ஆனா நீங்க பத்து நாளைக்குள்ள செத்து போயிருவீங்க. அந்த விஷ ஊசிக்கு ரெண்டு நாள் இடைவேளைல ஒவ்வொரு டோஸ்னு நாலு டோஸ் மாத்து மருந்து கொடுக்கணும். அதுவும் எட்டு நாளைக்கு முன்னாடி அந்த நாலு டோஸும் கொடுத்து முடிக்கணும். அப்போ தான் உங்க உயிரை காப்பாத்த முடியும். நீங்க வெளியே யார்கிட்டயாச்சு இதை சொன்னா கூட எனக்கு பிரச்சனை இல்ல. மிஞ்சி போனா ஜெயிலுக்கு போவேன். ஆனா உங்களுக்கு உயிரே போகும். பாவம் சேர்த்து வச்ச சொத்தெல்லாம் அனுபவிக்க முடியாம போயிடும்” என்று கூறியவன் உச்சுக் கொட்ட, 

 

“இப்போ நான் என்ன செய்யணும்” என்றார் பல்லைக் கடித்தபடி.

 

“வெரி குட். இது தான் நல்லா மனுஷனுக்கு அழகு. இந்த பத்திரத்துல ஒரு கையெழுத்து போடுங்க” என்றவன் ஒரு பத்திரத்தை அவர் முன் நீட்டினான்.  அதில் அந்த நிலத்தை அவர் யாஷுக்கு எழுதி கொடுப்பதாகவும் அதற்கு பத்து கொடி பணம் பெற்றதாகவும் எழுதியிருந்தது.

 

“இப்படி ஏமாத்தி வாங்குறீங்கல.. இதுக்கெல்லாம் நீங்க அனுபவிப்பீங்க” என்றவர் கையெழுத்து போட போக பிறகு நிறுத்தியவர்,

 

“பணம் தரேன்னு சொன்ன.. அதுவும் இருபது கோடின்னு சொன்ன இதுல பத்து கோடி தான் எழுதியிருக்கு?” என்று கேட்க அதில் சிரித்தவன்,

 

“உயிர் போற நேரத்துலயும் பணத்தை கேட்குறீங்க பாருங்க.. முதல்ல நான் நல்லவிதமா கேட்கும் போதே சரின்னு சொல்லிருந்தா இருபது கோடி கொடுத்துருப்பேன். பட் இப்போ முடியாது. உங்களுக்கு போட்ட விஷ ஊசி ரொம்ப காஸ்ட்லி. அதோட மாத்து மருந்து அதைவிட காஸ்ட்லி. சோ டேலி ஆகிருச்சு. நாளைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கு. அங்க வச்சு பணம் உங்க அக்கௌன்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிரும். சமத்தா வந்து கையெழுத்து போட்டா மறுநாள் ஒரு டோஸ் மாத்து மருந்து இலவசம். இப்போ சைன் போடுங்க இதுல” என்று கேட்க வேறு வழியின்றி உயிருக்கு பயந்து கையெழுத்து போட்டார். போட்டு முடித்தவர் மஞ்சுளாவை வலியுடன் பார்த்தார்.

 

“என்ன சார் நம்புனவங்க துரோகம் செஞ்சா தாங்க முடியலையா? இப்படி தானே நேத்து மகிழை கடத்தும் போது நேத்திரனுக்கும் இருந்திருக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். செஞ்ச ஒவ்வொரு தப்புக்கும் நமக்கு தண்டனை கிடைச்சு தான் தீரும். கர்மா சும்மா விடாது” என்றவன் பத்திரத்தை வாங்கிவிட்டு இடத்தை காலி செய்தான். 

 

“உங்களை திருத்துறதுக்கு எனக்கு வேற வழி தெரியலை. நீங்க அந்த தேன்மொழி வீட்டுல போய் மிரட்டுன விஷயம் எனக்கு தெரியும். அப்போ கூட சரி கல்யாணம் தானே நடக்குதுன்னு நானும் பெருசா எதுதுக்கல. அந்த இளங்கோ செத்த அப்புறம் என் மனசுக்குள்ள அவ்ளோ வலி இருந்துச்சு. அந்த பொண்ணு விதவையா இருக்குறதுக்கு காரணம் நீங்கன்னு மனசு உறுத்துச்சு. இப்போ குழந்தையைக் கடத்துற அளவுக்கு போனதும் மனசு கேட்கலை. அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு. நீங்க திருந்தி வந்தா போதும். உங்க மேல இன்னும் எனக்கு காதல் இருக்கு.” என்றவர் எழுந்து சென்று வீட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தார். செல்லும் அவரை பார்த்தவர் எதையோ நினைக்க மனதில் சுமை கூடியது மந்திரமூர்த்திக்கு.

 

மறுநாள் யாஷ் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தான். மந்திரமூர்த்தியும் வந்தார். சரியாக கையெழுத்து போட போகும் சமயத்தில் ஒரு வக்கீல் வந்து நின்றார். வந்தவர், 

 

“சார் இந்த ரிஜிஸ்ட்ரேஷன் நடக்க கூடாது” என்றார். யாஷோ,

 

“ஏன் சார் நடக்க கூடாது? அவர் பெயருல இருக்குற நிலத்தை நான் பணம் கொடுத்து வாங்குறேன். இதுல யாருக்கு என்ன பிரச்சனை?” என்றவன் மந்திர்மூர்த்தியிடம்,

 

“நீங்க ஏதும் ப்ளான் பண்ணிடீங்களா?” என்று சந்தேகமாக கேட்க அவரோ,

 

“நானே இங்க உயிருக்கு  ஊசலாடிட்டு இருக்கேன். இதுல பிளான் ஒன்னு தான் முக்கியம். நான் ஏதும் செய்யல” என்றார் உறுதியாக. அவர் பொய் கூறுவது போல யாஷுக்கும் தோன்றவில்லை. 

 

“யாருக்கோ சொந்தமான நிலத்தை எப்படி இவரு உங்களுக்கு விக்க முடியும்?” என்றார்  அந்த வக்கீல். 

 

“யாருக்கோ சொந்தமான நிலமா? இது எங்க குடும்ப நிலம். என் பையன் பேருல இருந்ததை எனக்கு எழுதி கொடுத்தான். நான் இவருக்கு விக்குறேன்” என்று கூற,

 

“இல்ல உங்க குடும்ப சொத்து மொத்தமும் எனக்கு தான் சொந்தம்னும் உங்க குடும்பத்தோட மூத்த வாரிசு நான் தான்னும் என் பேருல இருக்குற சொத்தை என் அனுமதி இல்லாம யார் யாரோ யாருக்கோ எழுதி கொடுக்குறாங்கன்னும் புகார் கொடுத்துருகாரு ஒருத்தர்” என்று வக்கீல் கூற யாஷோ,

 

“என்ன பேசுறீங்க? இவங்க குடும்பத்தோட மூத்த வாரிசு இவர் பையன் நேத்திரன் தான். என்ன சார் இவங்க இப்படி சொல்றாங்க” என்றவன் மந்திர்மூர்த்தியிடம் முறையிட,

 

“எனக்கும் ஒன்னும் புரியல.” என்றார் மந்திரமூர்த்தி.

 

“அப்படி தான் சார் கம்ப்ளைன்ட் வந்துருக்கு. எதுனாலும் கோர்ட்டுல டீல் பண்ணிக்கோங்க” என்றிட மந்திரமூர்த்தியும் யாஷும் ஒருசேர,

 

“யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது” என்று  கேட்டனர்.

_________________

 

அங்கு யாஷைக் காணாமல் நேத்திரனிடம் வந்த தமிழ் அவனை எங்கே என்று கேட்க அவனோ,

 

“உனக்காக தான் தமிழு. அவர் இவ்ளோ பெரிய விஷயம் பண்றாரு. அதுவும் நீ வருத்தப்பட கூடாதுன்னு” என்றவன் நடந்த அனைத்தையும் கூற தமிழுக்கோ கண்கள் கலங்கியது. 

 

“என்னால அவருக்கு இவ்ளோ லாஸ் ஆகணுமா? நீ ஏன் டா என்கிட்ட முதல்லையே சொல்லல?” என்று கேட்க,

 

“அவர் உன்னை அந்த அளவுக்கு காதலிக்கிறாருட்டி. நான் சொல்லுவேன்ல ருத்திரன்னு எனக்கொரு அண்ணன் இருந்தா அவருக்கு உன்னை கட்டி வைப்பேன்னு. இப்போ சொல்றேன். எவ்ளோ பெரிய ருத்திரன் வந்தாலும் யாஷ் அண்ணா அளவுக்கு உன்னை காதலிக்க மாட்டாங்க” என்று கூறிக் கொண்டிருக்க தமிழின் அலைப்பேசிக்கு ஒரு மின்னஞ்சல் வந்த சத்தம் கேட்க என்னவென்று திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

 

“இத்தனை வருஷம் கழிச்சு உன்னை தேடி உனக்காக நான் வர போறேன் ஜோ.  இப்படிக்கு உன்னையே எண்ணி காத்திருக்கும் உனது நான்” என்று ஒரு பெயர் குறிப்பிட்டிருக்க அதை படித்தவளுக்கு இதயத்துடிப்பு எகிறியது. அனிச்சையாக அவளின் கைகள் கழுத்தில் இருந்த ஜோ டாலரை கலக்கமாக பற்றிக் கொள்ள, அவளின் முகபாவனையைக் கண்ட நேத்திரனோ,

 

“ஹே தமிழு.. என்னாச்சு? போன்ல என்ன வந்துருக்கு?” என்று கேட்க அவளோ,

 

“மெயில் வந்துருக்கு” என்றாள் அதிர்ச்சி மாறா முகத்துடன். 

 

“மெயிலா யார்கிட்ட இருந்து?” என்று அவன் புரியாமல் கேட்டான்.

__________________________

 

யாஷும் மந்திரமூர்த்தியும் கேட்ட கேள்விக்கு வக்கீல் கூறிய பெயரும் நேத்திரன் கேட்ட கேள்விக்கு தமிழ் கூறிய பெயரும் ஒரே பெயராக வந்து விழுந்தது. 

 

ருத்திரன்” என்று…

 

தொடரும்…


   
ReplyQuote

You cannot copy content of this page