About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 1
“கீச்.. கீச்” என்றபடி அங்குமிங்கும் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தன் அன்றாடங்களை அப்போதே துவக்கிவிட்டிருந்தன. கதிரவனின் கதிர்கள் மெதுமெதுவாக வானை அப்பியிருந்த இருளை விலக்கி, உறங்குகின்ற மக்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடக் காத்துக் கொண்டிருந்த சமயம் அது. அலைபேசியின் மெலிதான சிணுங்கல் சப்தம் அறையைச் சூழ்ந்திருந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டதில் இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தாள் கோமதி நாச்சியார்.
முன்தினம் இரவு அவள் வீடு வந்து சேரும் போது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்ததால் இன்னும் தூக்கம் அவளுக்கு முற்றிலும் கலையவில்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி சோம்பி மீண்டும் துயிலும் பழக்கம் அவள் வழக்கத்தில் என்றுமே இருந்ததில்லை.
அதிகாலை நாலரையை ஒட்டி கண்விழிப்பவள் காலைக் கடன்களை முடித்துவிட்டு ஜாகிங் சென்றுவிடுவாள். அதை முடித்துவிட்டு வந்து சிறிது நேரம் உடற்பயிற்சி. அவள் உடற்பயிற்சியை முடிக்கும் நேரம் சரியாக அவளது அன்னை சங்கரகோமதி அவளது அறைக்கே காபியைக் கலந்து கொண்டு வந்துவிடுவார். அன்றும் அதே வழக்கம்தான் தொடர்ந்தது.
ஜாகிங் முடித்துவிட்டு கோமதி நாச்சியார் வீட்டிற்குள் நுழையும்போது அவளது தந்தை சங்கரநாராயணன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அதிலிருந்த செய்தி ஒன்றை வெகு தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார் அவர். மின்விசிறி சுழன்று கொண்டிருந்தாலும் அதையும் மீறி அவருக்கு நெற்றியில் வியர்வைத் துளிகள் படிந்தன.
“காவல் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்ற மர்ம நபர்” என்ற தலைப்பின் கீழ் வாசித்த செய்தி தான் அவரை அந்த நிலைக்குத் தள்ளியிருந்தது.
அவர் பயத்துடன் எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி அப்படியே அமர்ந்திருக்க, அவரைப் பார்த்தவாறே உள்ளே நுழைந்த கோமதி நாச்சியார், தந்தையை ஓரக்கண்ணால் பார்த்து அவரை அவதானித்தபடி கடந்து சென்றாள்.
“நாச்சி” என்று அவரது அழைப்பில் அவள் திரும்பி நின்று பார்க்க,
“என்ன பாப்பா இது? இதைப் பத்தி ஒன்னும் சொல்லலியே” என்றார் கவலை அப்பிய குரலில்.
“ப்பா இன்னும் நீங்க இதுக்கெல்லாம் பழகலியா?” என்று அவருக்கு சமாதானம் செய்யும் குரலில் சொன்னவள், “என் வேலைல இதுக்கெல்லாம் பயந்தா என்ன செய்றது?” என்று அதைப் பற்றித் துளியும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.
அவளது அலட்சியமும் தைரியமும் எப்போதும்போல அவரைக் கவர்ந்தாலும் தந்தையாய் அவரது மனம் நடுங்கிக் கொண்டிருந்தது தான் நிஜம்.
“உனக்கு ஒன்னும் ஆகலியே? யாரு பாப்பா அது? புடிச்சாச்சா? பகல்ல அத்தனை பேரு பார்க்க கத்தியால குத்த வந்திருக்கான்.. எதாவது ஆகியிருந்தா…” என்று அவர் ஆரம்பிப்பதற்குள்,
“மெதுவா பேசுங்க.. அம்மா வந்தா உங்களத்தான் திட்டுவாங்க” என்றாள் புன்சிரிப்புடன் கோமதி.
உண்மைதான்! என்னதான் இந்த வேலையில் நிறைந்திருந்த ஆபத்துக்கள் அவரை பயம் கொள்ளச் செய்தாலும் கோமதி நாச்சியார் தான் ஐபிஎஸ் தேர்வெழுதப் போவதாகச் சொன்னபோது முழுமனதுடன் மகளுக்கு பச்சைக்கொடி காண்பித்தார் அவர். அதற்கு முற்றிலும் நேர்மாறாக சங்கரகோமதி முடியவே முடியாது என்று நிற்க, இறுதியில் கோமதி நாச்சியாரின் பிடிவாதத்தால் வேறுவழியில்லாமல் சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போதிருந்தே ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும் கூட சங்கரநாராயணன் தான் சங்கரகோமதியின் அர்ச்சனைகளுக்கு முதல் பலியாவார்.
மகள் நினைவுபடுத்தியதில் ‘கப்சிப்’ என்று அவர் வாயை மூடிக் கொள்ள, சரியாக அந்த நேரம் சமையலறையிலிருந்து சங்கரகோமதி கையில் காபிக் கோப்பையுடன் வெளியே வந்தார்.
மகளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, கணவரிடம் காபிக் கோப்பையைக் கொடுத்தவர், “என்ன முகம் இப்படி வாடிக் கிடக்கு?” என்று சந்தேகமாக மகளைத் திரும்பிப் பார்த்தார்.
“நீ ஏன் மாடிக்குப் போகாம இங்க நிக்க(நிக்கிற)?”
“அப்பா கூட சும்மா பேசிட்டு இருந்தேன்மா”
“அதுக்கு ஏன் இவர் இப்படி உட்கார்ந்திருக்காரு?”
“நல்லா தான்மா இருக்காரு.. உங்களுக்கு அப்படித் தெரியுதா இருக்கும்”
“முப்பது வருஷம் ஆச்சு உங்கப்பாவை கட்டிக்கிட்டு இங்க வந்து.. எனக்குத் தெரியாதா அவரை?” என்று சடைத்தவர்,
“உங்கட்ட தானே கேட்கேன்.. காலங்காத்தால ஏன் இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய் உட்கார்ந்திருக்கீங்க” என்றார் மீண்டும்.
‘அவ்வளவு தான்.. இனி அப்பா அம்பேல்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட கோமதி நாச்சியார் அன்னையின் கவனத்தைக் கவராமல் பூனையைப் போல நைசாக நழுவி மாடியேறிப் போய்விட்டாள்.
“இல்ல கோமு.. ஏசிபி -யை யாரோ கத்தியால குத்த வந்துட்டாங்கனு நியூஸ் பேப்பர்ல..” என்று மென்று விழுங்கியவர் மனைவியின் அதிர்ந்த பார்வையில் சட்டென்று பேச்சை நிறுத்தினார். சங்கரகோமதி அவசரமாக செய்தித்தாளைப் பிடுங்கி அதிலிருந்த செய்தியை வாசிக்க, ஒவ்வொரு எழுத்தும் அவருள் பயத்தை விளைவித்தது.
‘அம்மா தாயே.. இதென்ன சோதனை’
அவர் அவசரமாகக் குலதெய்வத்திடம் ஒரு வேண்டுதலை வைத்து மனமருகிப் பிரார்த்திக்க,
அவரது நிலையைக் கண்டு, “அது ஒன்னுமில்லையாம்.. பேப்பர் காரனுங்க கூடுதலா கதை சொல்லிப் போட்ருங்கானுங்க.. நீ ஒன்னும் பயப்படாத.. நான் பாப்பாட்ட விசாரிச்சுட்டேன்” என்று சங்கரநாராயணன் விளக்கிச் சொல்ல, அவருக்கு வந்ததே கோபம்!!!
“எத்தனை வாட்டி நான் சொன்னேன்.. பொம்பள புள்ளைய பொம்பள புள்ளை மாதிரி வளரும் வளரும்னு.. என் பேச்சைக் காதுல போட்டா தான? ஆம்பள புள்ளை மாதிரி வளர்க்கேனு என் மவளைப் பையனாட்டம் வளர்த்து அவ மனசுல கண்ட ஆசையை விதைச்சுட்டீங்க.. அதுவும் அடங்காம போனா போலீஸ் வேலைக்குத் தான் போவேனு அதையே சாதிச்சிருச்சு.. உங்களுக்கென்ன? அவளை வேலைக்கு அனுப்பிட்டு நானில்ல வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்கேன்”
“எனக்கு அவ போலீஸ் ஆவனும்னு சொல்லுவானு தெரியுமா கோமு?”
“யோசிக்கணும்.. நாலையும் யோசிச்சு செய்றவன் தான் குடும்பத் தலைவன்”
‘ம்க்கும்.. அதான் இந்தக் குடும்பத்துக்குத் தலைவன் இல்ல தலைவி தான்னு தெருல திரியிற நண்டு சிண்ட கூப்பிட்டுக் கேட்டா கூட சொல்லிடுமே’
“என்ன பதிலைக் காணோம்.. நின்னுட்டே உறங்குதீங்களோ?” என்று சந்தேகமாக சங்கரகோமதி வினவ,
“இல்ல கோமு” என்ற பதில் அவரிடமிருந்து வேகமாக வந்தது.
“என்ன நொள்ள கோமு? அப்படியே பத்திக்கிட்டு வருது எனக்கு.. என்கிட்ட ஏச்சு வாங்காம போங்க அங்குட்டு”
“ஏட்டி நான் வேணும்னா உனக்கு சூடா காபி போட்டுத் தரவா?”
மனைவியை சமாதானம் செய்யும் நோக்கில் அவர் கேட்க, அவரைத் தீயாக முறைத்தவர் இது வேலைக்கு ஆகாதென அடுக்களைக்குள் புகுந்து கொண்டார்.
கோமதி நாச்சியார் எப்போது ஐபிஎஸ் தேர்வெழுதப் போவதாகச் சொன்னாளோ அப்போது துவங்கிய இந்தப் பிணக்கு கணவன் மனைவிக்குள் இன்னும் தீராமல் நீண்டு கொண்டிருக்கிறது. அதையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் தன் முடிவில் உறுதியாக நின்றுவிட்டாள் அவள். ஒன்றை நினைத்தால் அதிலேயே நிற்கும் ரகம் அவள். எதற்காகவும் அவளால் காக்கிச்சட்டையை விட முடியாது. இதனைக் கொண்டு அவள் இழந்தது நிறையவே இருந்தாலும் அதையெல்லாம் மீறிய நிறைவை இந்த வேலை அவளுக்குத் தருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவளுக்கு அடுத்துப் பிறந்தவள் ஸ்ரீநிதி. வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறாள். போன வாரம் தான் கடைசித் தேர்வை எழுதியிருந்தாள். அடுத்ததாக மேற்படிப்பைத் தொடர்வது தான் அவள் எடுத்து வைத்திருந்த முடிவு. ஆனால், சங்கரகோமதி விடவில்லை. படிப்பை முடித்ததும் ஸ்ரீக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதேபோல மாப்பிள்ளையையும் முடிவு செய்துவிட்டார்.
மூன்றாம் வருடத்தின் பாதியிலேயே அவரது முடிவு பற்றி அவ்வப்போது சங்கரகோமதி சொல்லுவார்தான்.. ஆனால், படிப்பு முடிந்ததும் உடனேயே வரன் அமைந்துவிடுமா என்ன? என்கிற எண்ணத்தில் ஸ்ரீ அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அவளது எண்ணத்தை அடித்துத் துவம்சம் செய்யும்படி இப்படித் தேர்வு முடிந்த ஒரே வாரத்தில் மாப்பிள்ளையைக் கொண்டு வந்து தன் அன்னை நிறுத்துவார் என்று அவள் கனவிலும் நினைத்தாளில்லை. அப்படி இருந்தும் ஸ்ரீ அதைத் தட்டிக்கழிக்க என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டாள். பலன்தான் இல்லை.
“ஒருத்தியை அவ போக்குல விட்டது போதும்.. வயசு இருபத்தி ஒன்பதாச்சு.. கல்யாணமே வேணாம்னு நிக்கா.. உன்னை மாதிரி தான் அவளும் வேலைக்குப் போனதும் பண்ணிக்கிடுதேனு சொல்லுதாளேனு சரினு சொன்னேன். ஆனா, அவ முடியாதுனு நிக்குதாளே இப்ப வரை.. சின்னப்புள்ளையா அதட்டி உருட்டிக் கல்யாணம் கட்டி வைக்க” என்று ஆரம்பித்தவருக்கு மூத்த மகளை எண்ணிக் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
“ம்மா.. ரெண்டு வருசம் போகட்டும்.. பண்ணிக்கிறேனு தானே சொல்றேன்.. நான் என்ன அக்கா மாதிரி வேணாம்னா சொல்லுறேன்?” என்று ஸ்ரீயும் கெஞ்சிப் பார்த்துவிட்டாள்.
“ம்கூம்.. ஒரு வயசு வரை தான் நம்ம கைக்குள்ள புள்ளைக இருப்பாக.. அப்பவே நம்ம கடமையை முடிச்சுடணும்.. நாளைக்கு என்னவாகும்னு யார் கண்டா? எனக்கு மூத்தவளைத் தான் கல்யாணக் கோலத்துல பார்த்துப் பூரிக்கக் கொடுத்து வைக்கல.. உனக்காச்சும் சரியா அந்தந்த வயசுல எல்லாம் நடக்கணும்”
“ம்மா.. எனக்குக் கல்யாண வயசு வந்துட்டா போதுமா? நான் அதுக்குத் தயாரா இருக்க வேணாமா?”
“ஆமா நாங்களாம் தயார் படுத்திட்டா கல்யாணம் கட்டிக்கிட்டோம்? என்னட்டி இப்படி ஏட்டிக்கு மூட்டியா பேசிட்டு கிடக்கிற.. வாயை மூடு.. நல்லது நடக்குற நேரத்துல இப்படிப் பேசி வைச்சு என் பொறுமையை சோதிக்காத”
ஸ்ரீக்கு கட்டளையிட்டுவிட்டு அவர் நகர, அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள். இவ்வளவு சீக்கிரம் இதையெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் மனம் தளராமல் அவள் அடுத்து சங்கர நாராயணனிடம் போய் நின்றாள்.
“ப்பா என்ன அம்மா என்னவெல்லாமோ சொல்லுறாங்க?” என்று முறையிட்டவளிடம்,
“ஏற்கனவே அக்கா விசயத்துல அம்மா ரொம்ப நொந்து போய்ட்டா பாப்பா.. அம்மா பத்தி தெரியாதா? சும்மா ரோட்ல போறவனைக் கைகாட்டி கல்யாணம் கட்டிக்கிடச் சொல்லுவாளா? நானும் கூட விசாரிச்சேன் ரொம்ப நல்ல இடம்டா குட்டி.. கல்யாணம் பண்ணிட்டுக் கூட உன் கரியரை நீ உருவாக்கிக்கிடலாம். அதுக்கு அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்குறது எங்க பொறுப்பு” என்று சொல்லிவிட்டார் அவர்.
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்றவளுக்கு தமக்கையிடம் போய் நிற்பது தான் மீதமிருந்த ஒரே வழி! ஆனால், அதை செயல்படுத்தத் தான் அவளுக்குத் தைரியம் இல்லை.
கோமதி நாச்சியாருக்கும் ஸ்ரீநிதிக்கும் ஒன்பது வருடங்கள் இடைவெளி. அவள் தமக்கையாக இருந்ததை விட அன்னையாகிப் போன சமயங்கள் தான் அதிகம். சிறுவயதிலிருந்தே அப்படித்தான். அன்பும் கண்டிப்பும் சரிபாதியாக அவளிடம் கொட்டிக் கிடக்கும். அன்னைக்குப் பயப்படுகிறாளோ இல்லையோ தமக்கையிடம் அதீத பயம் அவளுக்கு! அதனால்தான் ஸ்ரீ தமக்கையிடம் விஷயத்தைக் கூற அவ்வளவு யோசித்தாள்.
இதோ அதோ என்று பெண் பார்க்கும் வைபவம் இன்னும் சிலமணி நேரங்களில் என்றிருக்க, அதுவரை ஸ்ரீ இதைப்பற்றி கோமதி நாச்சியாரிடம் எதுவும் பேசவில்லை. சங்கரகோமதி முன்பே பெண் பார்க்கும் நாளன்று கண்டிப்பாக நீயும் உடனிருக்க வேண்டுமென்று சொல்லியதில் அன்று கோமதி நாச்சியார் விடுமுறை எடுத்திருந்தாள்.
கீழே கணவனிடம் சண்டையிட்டு அடுக்களைக்குள் நுழைந்த சங்கரகோமதி அடுத்து வேலைகளில் மூழ்கிவிட்டார். காபி கலந்து கோமதி நாச்சியாருக்குக் கொடுத்தவர் தன் சின்ன மகளின் அறைக்குள் நுழைந்தார்.
ஸ்ரீநிதி ஏற்கனவே எழுந்து அமர்ந்திருக்க, “எழுந்துட்டியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டவாறு அவளது கையிலும் காபியைத் திணித்தார் அவர்.
“எந்திருச்சுப் போய் குளி ஸ்ரீ.. கீழே பலகாரம் சுட ஆரம்பிச்சுட்டா உன் பின்னாடி வால் புடிச்சுட்டு என்னால அலைய முடியாது.. நல்ல புடவையா ஒன்னை எடுத்துக் கட்டிக்க.. ம்ம் உங்க காலேஜ்ல பொங்கல் அப்போ செட்டா எடுத்தீங்களே.. அதைக் கட்டிக்கோ.. அதுல அழகா இருந்த.. பூ வாங்கிக் கட்டி வைச்சிருக்கேன்.. கிளம்பிட்டு மேலேயிருந்த மாதிரி ஒரு குரல் கொடு.. நகையும் பூவும் கொண்டுவந்து தாரேன்” என்றவர் மகள் எதுவும் பேசாமலிருக்கவும் அவளது முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“என்னடி எதுவும் பேசாமாட்டிக்க?”
“என்ன பேசச் சொல்றீங்க? எல்லாம் உங்க இஷ்டத்துக்குத் தானே செய்றீங்க? என்னையும் என் விருப்பத்தையும் கேட்குறீங்களா?”
அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொன்ன விதத்தில் சங்கரகோமதி துணுக்குற்றார்.
“என்னட்டி ஸ்ரீ சொல்லுத? உனக்குக் கெட்டதா நெனைப்போம் நானும் உன் அப்பாவும்?” என்று அவர் தழுதழுத்த குரலில் கேட்க, ஸ்ரீநிதி உதட்டைக் கடித்தாள்.
அவளுக்கே சங்கரகோமதியின் முகமாறுதலைக் காணச் சகிக்கவில்லை. ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டு,
“நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன்மா விடுங்க” என்றவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவளது சமாதானத்தில் அவர் கொஞ்சம் தெளிவானார். இந்தப் பேச்சும் ஏச்சும் மாப்பிள்ளையைப் பார்த்தால் நிச்சயம் மாறிவிடும் என்றே சங்கரகோமதி நம்பினார். பின்னே ராஜகுமாரன் மாதிரி அல்லவா மாப்பிள்ளையைப் பார்த்திருக்கிறார்! பார்த்திருக்கிறார் என்பதை விடத் தேடிச் சலித்து எடுத்திருக்கிறார். அவருக்குத் தன் தேர்வின் மீது அப்படியொரு நம்பிக்கை. ஆனால், ஸ்ரீ தனக்கு எந்த ராஜகுமாரனும் தேவையில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். அந்த உறுதி அவளது தமக்கை மீதான பயத்தினை நீர்த்துப் போகச் செய்ய, சங்கரகோமதி அங்கிருந்து அகலவும் அவள் நேராகத் தமக்கையின் அறையை நோக்கிச் சென்றாள் அவள்.
ஒருமுறை கூட நேரில் பார்க்காமல் சங்கரகோமதியின் நம்பிக்கையை எளிதாகப் பெற்றுவிட்ட நம் நாயகன் அதைப்பற்றி எனக்கென்ன என்பது போல் இன்னும் துயில் மீளாமல் தன் சொகுசுக் கட்டிலில் படுத்திருந்தான். அவன் அஜய் கிருஷ்ணன். சென்னையின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக பணியிலிருக்கிறான்.
அவனருகே மண்டியிட்டு அமர்ந்து அவனை எழுப்பப் போராடிக் கொண்டிருந்தான் தேவ் சரண்.
“டாடி எழுந்துக்கோங்க.. புது மம்மியைப் பார்க்க போகணும்னு பாட்டி சொன்னாங்க”
தேய்ந்து போன ரெக்கார்ட் போல அதையே தான் அவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான். அஜய் எழுந்தபாடில்லை. அவனைக் காப்பாற்றவோ அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவோ தவமணியே மேலே மாடிக்கு வந்துவிட்டார்.
“அஜய்.. எவ்வளவு நேரமா தேவ் உன்னை எழுப்புறான்.. எழுந்திருடா.. அப்பா கிட்ட நீ எழுந்துட்டனு சொல்லிருக்கேன்டா” என்று அழும் குரலில் சொன்னவாறு தன் பேரனை விடுவித்துவிட்டுத் தான் அந்த சுழலில் மாட்டிக் கொண்டார் தவமணி.
அவரது வார்த்தைக்கும் செவிசாய்க்காமல் அவன் படுத்திருக்க, அவனது போர்வையை உருவி அவனை உலுக்கினார்.
அதில் உறக்கம் கலையப் பெற்றவன், “காலங்காத்தால என்னை டென்ஷன் பண்ணாதீங்கமா.. நான்தான் பொண்ணு பார்க்க வரலைனு சொல்லிட்டேன்ல” என்று கத்தியபடி எழுந்து அமர்ந்தான் அஜய் கிருஷ்ணன்.
அவனது அந்தக் கோபத்தைக் கண்டு துளியும் அஞ்சாதவனாய் அவன் முன்னே இடுப்பில் கைவைத்து முறைத்தபடி வந்து நின்றான் தேவ்.
“எனக்கு நீங்க ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க டாடி”
“போடா புடலங்காய் ப்ராமிஸ்.. என்னை இப்படிச் சொல்லியே ஆஃப் பண்றியா நீ? கல்யாணம் பண்ணிக்கிறேனு தான் சொன்னேன். பொண்ணு பார்க்க வரேனு சொல்லவே இல்லையே” என்றவாறு அவனிடம் தோள்களைக் குலுக்கியவாறு அஜய் சொல்ல, தேவ் விழித்தான்.
‘ஆமால்ல’ என்பது போல அவன் திகைத்து விழிக்க, தேவ் முகத்தைப் பார்த்த அஜய் சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கினான். கொஞ்சம் இளகினால் போதும்.. அந்த நிலையை அவனுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் தேவ் கெட்டிக்காரன். அதனால், முகத்தை ‘உம்’மென்று வைத்தபடியே அஜய் கூற, தேவ் பாவமாகத் தன் பாட்டியைப் பார்த்தான். அவர் அதற்கு மேல் பாவமாகத் தன் பேரனைப் பார்க்க, அவன் அழுகையில் உதட்டைப் பிதுக்கினான்.
“இங்க என்ன ஆஸ்காரா கொடுக்கிறாங்க.. எதுக்குடா இப்போ இப்படி நடிக்கிற?” என்ற அஜய் கூற,
“ஏம்லே அவன் நிஜமாவே அழுவுறான்.. புள்ளைக்கு ஆசை காட்டி மோசம் செய்யாத.. அது பாவம்.. எந்திரிச்சு கிளம்புற சோலியைப் பாரு.. உங்கப்பா கிட்ட என்னை ஏச்சுப்பேச்சு வாங்க வச்சா பொறவு நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்க” என்று மகனைக் கோபமாகத் திட்டியவர் பேரனை சமாதானம் செய்தார்.
“எனக்குத் தெரியாது டாடி.. நீங்க புது மம்மி கூட்டிட்டு வரேனு சொன்னீங்க.. எனக்கு வேணும்” என்று தேவ் மிரட்டும் தொனியில் கூற,
“அதென்ன ரெடிமேட் சப்பாத்தி மிக்ஸாடா நீ கேட்டதும் கூட்டிட்டு வர்றதுக்கு?” என்று முறைத்தான் அஜய்.
“முடியாதுனா ஏன் அன்னைக்கு சரினு சொன்னீங்க?”
தேவ் பாட்டியின் பிடியிலிருந்து விலகி அஜய்க்கு முன்பாக நின்றுகொண்டு அவனை முறைத்தான். அந்தத் தோரணையில், தவமணியும் அஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
சிரித்துக்கொண்டே, “இந்த ஆட்டிட்யூடெல்லாம் யார்கிட்ட இருந்துடா கத்துக்கிட்ட?” என்று கேட்டபடி அவனை இழுக்க முயல, லாவகமாக அவனிடமிருந்து விலகினான் தேவ்.
“என்னடா?”
“பொய் பேசுறவங்க பேட் பாய்னு நீங்க தானே சொன்னீங்க? அப்போ நீங்க பேட் பாய்.. உங்க கூட இனிமேல் பேசமாட்டேன். முத்தா கொஞ்ச மாட்டேன்”
“இவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் எல்லாம் டாடி தாங்க மாட்டேனே”
“அப்போ ரெடி ஆகுங்க.. புது மம்மியைப் பார்த்துட்டு வருவோம்”
எங்கே சுற்றினாலும் சரியாகத் தன் மையப்புள்ளிக்கு வந்து நின்றவனை சிரிப்புடன் பார்த்தவன் தாயிடம் திரும்பினான்.
“எதுக்கும்மா இவன் புது மம்மி மேல இவ்வளவு அப்செஸ்டா இருக்கான்?”
“அவனுக்குத் தனியா இருக்க பிடிக்க மாட்டிக்காம்.. தங்கச்சி பாப்பா வேணுமாம்.. அவன் சிநேகிதனுக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்காம்.. அப்போம்ல இருந்து ஒரே அனத்தம்”
புன்னகையுடன் தவமணி சொல்லியதில்,
“அட.. இதுக்கா என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்றான்? இதை நீங்க முன்னமே சொல்லியிருந்தா சென்னைலயே அதுக்கு ரெடி பண்ணியிருப்பேனே” என்று குறும்புடன் அஜய் கூற,
“அந்த வாரியலை(துடைப்பம்) எடு தேவ்” என்றார் தவமணி மகனை முறைத்துக்கொண்டு.
அதில் சுதாரித்தவன், “ம்மா.. சும்மா சும்மா.. என்னைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு?” என்று அஜய் அசட்டுப் புன்னகையுடன் கூறவும்,
“விளையாட்டுக்கு எதைப் பேசுறதுன்னு ஒரு கூறுவாறும் இல்ல.. போய்க் கிளம்புலே.. இப்ப கிளம்புனா தான் நல்ல நேரத்துலப் போய்ச் சேர முடியும்” என்று தவமணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே கீழே இருந்து, “தவம்..” என்ற சண்முகத்தின் குரல் கேட்டது. குரல் கேட்ட நொடி தவமணி அங்கிருந்து வேகமாகக் கீழிறங்கிச் செல்ல, அஜய் குளியலறைக்குள் புகுந்தான்.
நாயகியின் குடும்பத்தில் சக்தியின் ஆட்சி என்றால் நாயகன் குடும்பத்தில் சிவபெருமான் ஆட்சி.
“என்ன உன் புள்ளை கிளம்பிட்டானா?”
“குளிக்கான்”
“என்ன இப்பத்தான் குளிக்கானா? நல்ல நேரத்துக்குள்ள அவிய(அவங்க) வீட்டுக்கு போகணும்னு எத்தனை முறை சொல்லுதேன்”
“கிளம்பிடுவான்ங்க”
“அவனுக்கு இன்னும் பொறுப்பே வருதில்லை.. நீ பொருளெல்லாம் எடுத்து வைச்சிட்டியா?”
“நான் எல்லாம் எடுத்து வைச்சாச்சு.. போறப்ப கொஞ்சம் மல்லிகைப் பூவும் இனிப்பும் மட்டும் வாங்கிக்கிடலாம்”
“ம் காரை நிப்பாட்டிப் போற வழில வாங்கிக்கிடலாம்.. அவனைக் கொஞ்சம் சொல்லி வேகமா கிளம்பச் சொல்லு”
மீண்டும் மனைவியிடம் வற்புறுத்தி விட்டு அவர் அங்கிருந்து அகல, அப்போதுதான் தவமணிக்கு மூச்சே வந்தது.
அங்கு நடக்க இருக்கும் விபரீதம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவர் இத்தனை வற்புறுத்தியிருக்க மாட்டாரோ என்னவோ!? அவரது இந்த முடிவை எண்ணி அன்றே வருந்தப் போகிறார் என்பது புரியாமல் மனைவியிடம்
கட்டளையிட்டு நகர்ந்தவரைக் கண்டு காலம் கண்சிமிட்டியது!!
கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள:
https://kavichandranovels.com/community/postid/231/
அத்தியாயம் 2
“ம்மா இப்போ எதுக்கு இவரு இப்படி அலம்பல் பண்றாரு? நெற்கட்டான்செவ்வல்-ல இருந்து சங்கரன்கோவில் போக மிஞ்சிப் போனா இருபது நிமிஷம்.. இதுக்கு ஏன்மா இப்படி படுத்துறாரு?”
அஜய் சலித்துக்கொண்டு கேட்க, தேவ் தந்தையின் மடியில் அமர்ந்து உணவினை அவன் ஊட்ட ஊட்ட வாங்கிக் கொண்டிருந்தான்.
“அவரைப் பத்தி தெரியாதா? ஒன்பது மணி பஸ்ஸுக்கு எட்டு மணிக்கே போய் காத்துக்கிடப்பாரு.. அப்படியே அவிய அம்மா மாதிரி”
தவமணி மகனிடம் மெதுவாக முணுமுணுத்துவிட்டு தோசை வார்க்க உள்ளே செல்ல, தேவ் வேகவேகமாக உணவினை உண்டும் உண்ணாமலும் அடுத்த வாய் உணவிற்காக வாய் திறந்தான்.
“டேய் மெதுவா சாப்டு.. எதுக்கு இப்படி நீயும் அவசரப்படுற?” என்று கடிந்தவாறே அவனுக்கு ஊட்டினான் அஜய்.
“மம்மி பார்க்க டைம் ஆச்சு டாடி”
தேவ் உணவினை ஒருபுறம் அதக்கியவாறே பதில் சொல்ல, தோசையைப் பிய்த்துக் கொண்டிருந்த அஜயின் கரங்கள் ஒரு நொடி அப்படியே நின்றது. அவனது நெற்றி யோசனையாய்ச் சுருங்கியது.
“பாட்டி உன்னை நல்லா தானே பார்த்துக்கிறாங்க தேவ்.. அப்புறம் ஏன் நீ புது மம்மி மேலே இவ்வளவு இன்ட்ரெஸ்டடா இருக்க?”
என்னவோ அவனது இந்த ஆர்வம் அஜயின் மனதைப் பிசைந்தது. தனக்கே தெரியாமல் தேவ் தாயன்பிற்காக ஏங்குகிறானோ? என்றெண்ணிக் குழம்பினான்.
“நல்லா பார்த்துக்கிறாங்க.. ஆனா அவங்க பாட்டி டாடி.. எனக்கு மம்மி வேணும்” என்று தேவ் சொல்ல, அஜய் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. அவனது கண்கள் நொடியில் கலங்கிப் பின் இயல்பானது.
அதுவரை திருமணத்தின் மீது பெரிதான நாட்டமில்லாமல் இருந்தவன் அந்த நொடியில் தேவிற்காகத் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ள யோசித்தான். அவன் அவ்வாறு யோசித்த கணமே என்னவோ நெஞ்சில் பாரமாக அழுத்துவதைப் போலிருக்க, அந்த உணர்விலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனின் தட்டில் சுடச்சுட அடுத்தத் தோசையைக் கொண்டு வந்து வைத்தார் தவமணி.
அதேநேரம் சரியாக வீட்டிற்குள் நுழைந்த சண்முகம், “என்னட்டி இன்னும் கிளம்பலயா?” என்று சத்தமிட,
“அவ்வளவுதான்.. இதோ கிளம்பியாச்சு” என்றபடி அடுக்களைக்குள் சென்று அடுப்பை அணைத்துவிட்டு வெளிவந்தார் தவமணி.
“போகலாம் தாத்தா” என்று தேவ்சரணும் அஜயின் மடியிலிருந்து குதூகலத்துடன் இறங்கிவர, அஜய் தோசையின் மீதே கைகழுவிவிட்டு எழுந்துவிட்டான்.
“போகலாம்” என்றவாறு அஜய் தேவ்சரணைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடக்க, தவமணிக்கு முகமே விழுந்துவிட்டது.
‘நெய் ஊத்தி அவனுக்குப் பிடிக்குமேனு பார்த்துப் பார்த்து ஊத்திக் கொடுத்தேன்.. இந்த மனுசன் காலுல சுடுதண்ணியைக் கொட்டிக்கிட்டுப் பறக்காருனு(பறக்கிறாருனு) பசியாறாம போறான் எம்மவன்’
மனதுக்குள் கணவனைக் கரித்துக் கொட்டியவாறு தவமணி அவரைப் பார்க்க,
அவரோ, “கிளம்பலயானு கேட்கக்குள்ள சாப்பாட்டுல கைகழுவுதான் உன்புள்ள.. அப்படியென்ன திமிரு” என்று பொரிந்தார்.
“அப்பா அவசரம்னு சொல்லுதாங்களேனு கைகழுவிட்டுப் போகுதான்(போறான்).. அது குத்தம்னு அவனை ஏசுனா பொறவு வரலனு சொல்லிடப் போறான்” என்று தவமணி சொன்னதில் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே வெளியே சென்றார் அவர். அவரைத் தொடர்ந்து தவமணியும் சென்று காரிலேற, கார் மொத்தக் குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலை நோக்கிச் சென்றது.
பத்து மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்ததால் சங்கரகோமதி பதட்டத்துடன் இருந்தார்.
“இந்த நேரத்துல தான் உங்க மவ கமிஷ்னரைப் பார்க்கணும்னு போவணுமா? என்ன சொன்னாலும் கேட்க மாட்டிக்கா” என்று புலம்பியபடி அவ்வப்போது வாசலை எட்டிப் பார்த்துக்கொண்டே சுட்டு வைத்திருந்த பலகாரங்களைத் தனித்தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் சங்கரகோமதி.
சங்கரநாராயணன் யாருக்கோ வந்த நட்டமென தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க, அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதால் திரும்பி அவரைப் பார்த்தவருக்கு, அவர் முனைப்பாக தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தது அப்படியொரு எரிச்சலைத் தந்தது.
“இப்போ அந்த டிவி கழுதையை ஆஃப் பண்ணுதீங்களா என்ன?” என்று சங்கரகோமதி உள்ளிருந்தவாறே சத்தம் போட்டதில் மனைவியைத் திரும்பிப் பார்த்தவர், சங்கரகோமதியின் காளி அவதாரத்தில் வேகமாக தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தார்.
“நாச்சிக்குப் போன் அடிச்சு எங்க இருக்கான்னு கேளுங்க”
அடுத்த கட்டளை அவரிடமிருந்து வந்தது. சங்கர நாராயணன் மகளுக்கு அழைப்பு விடுக்க, அந்தப் பக்கம் உடனே அழைப்பு எடுக்கப்பட்டது.
கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் எடுத்ததும், “வந்துட்டே இருக்கேன் ப்பா.. டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்” என்று கோமதி நாச்சியார் கூற, அதையே மனைவியிடம் திரும்பிப் படித்தார் அவர். அதன்பின் தான் சங்கரகோமதிக்குக் கொஞ்சம் பதட்டம் தணிந்தது.
சங்கர நாராயணனிடம் பேசிவிட்டு முகத்தில் சிந்தனை ரேகைகள் படிய ஆள்காட்டி விரலால் புருவ மத்தியில் தட்டியவாறே பயணித்துக் கொண்டிருந்த கோமதி நாச்சியாருக்கு எண்ணமெல்லாம் இந்தத் திருமணத்தை என்ன சொல்லி நிறுத்துவது என்பதில் தான் இருந்தது. அவளது மனதில் காலை ஸ்ரீநிதி வந்து பேசியதுதான் படமாக ஓடிக் கொண்டிருந்தது.
அன்று காலை வழக்கம்போல உடற்பயிற்சி முடித்துவிட்டு அறையில் அமர்ந்திருந்த கோமதி நாச்சியார், கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த தங்கையை வியப்பாகப் பார்த்துவிட்டு,
“என்ன ஸ்ரீ?” என்றாள் கேள்வியாக.
“இன்னைக்கு லீவாக்கா நீங்க?”
“ஆமா.. அம்மாவோட ஆர்டர்”
புன்னகையுடன் கோமதி நாச்சியார் சொல்ல, அந்தப் புன்னகை சற்றும் தொற்றாமல் பதட்டமும் பயமுமாக நின்றிருந்தாள் ஸ்ரீநிதி. அவளை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு,
“என்ன ஸ்ரீ?” என்று குழப்பமாகக் கோமதி நாச்சியார் வினவ,
“அக்கா.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை.. அம்மா அப்பா கிட்ட சொன்னா..” என்று தயக்கத்துடன் நிறுத்தினாள் ஸ்ரீ.
அவள் தயங்கி நிறுத்தியதே அவள் சொல்லாமல் விட்ட செய்தியைக் கூற, கோமதி நாச்சியாரின் முகம் கன்றியது.
“சென்ட்டிமென்ட்டலா பேசி என்னை அடுத்துப் பேச முடியாத மாதிரி பண்றாங்க.. நீங்க அம்மா கிட்ட பேசி இது வேணாம்னு சொல்றீங்களாக்கா?”
கெஞ்சுதலோடு கேட்ட தங்கையைப் பார்த்தவளின் விழிகளில் இப்போது சந்தேகம் வந்திருந்தது.
“இப்போதைக்கு கல்யாணம் வேணாமா? இல்ல இந்த மாப்பிள்ளை கூடக் கல்யாணம் வேணாமா?”
சரியாக நூல் பிடித்து கோமதி நாச்சியார் கேட்க, ஸ்ரீநிதி திகைத்தாள்.
“அக்கா..”
“கூடப் படிக்கிற பையனா?”
“இல்..இல்லக்கா.. அப்படி..லாம் இல்ல.. எம்.காம் பண்ணலாம்னு நினைச்சேன். அ..தான்”
திக்கித் திணறி ஸ்ரீநிதி சொல்ல, அவளைக் குறுகுறுவென்று பார்த்தவள்,
“பொண்ணு பார்க்கத் தானே வர்றாங்க.. பேசிக்கலாம் போ” என்றாள்.
ஸ்ரீநிதிக்கு அதுவே போதுமானதாக இருந்தது. தமக்கையின் இந்த பதிலே நேர்மறையான முடிவைத்தான் தரும் என்று உறுதியாக நம்பினாள் அவள். பெரிய மனப்பாரம் அகன்ற நிம்மதியில் அவள் தன் அறைக்குச் செல்ல அடுத்த அரைமணி நேரத்தில் கோமதி நாச்சியார் அலுவலக வேலையாக கோப்பு ஒன்றைக் கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறி கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டாள். விஷயம் அறிந்தவுடன் ஸ்ரீநிதி பதறிப் போய்விட்டாள்.
உடனே தமக்கைக்கு அவள் அழைப்பு விடுக்க, “முக்கியமான வேலையா அக்கா? லேட் ஆகிடுமா வர்றதுக்கு?“ என்ற அவளது கேள்விக்கு,
“அவங்க வர்றதுக்குள்ள வந்திருவேன் ஸ்ரீ.. நீ ரிலாக்ஸா இரு” என்ற பதில் கிடைக்கவும் தான் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள் அவள்.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே சென்றவள் வீட்டிற்குள் நுழையும்போதே அங்கே நின்ற மற்றொரு காரைப் பார்த்துவிட்டாள். தன் கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்க்க, அவர்கள் வருவதாகச் சொல்லியிருந்த நேரத்தைக் கடந்து ஏழு நிமிடங்கள் சென்றிருந்தன.
அவசரமாக காரிலிருந்து இறங்கியவள் தனது வழக்கமான வேகநடையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் அஜய் குடும்ப சகிதமாக அமர்ந்திருந்தான். தனக்கு இடது பக்கத்தில் திடீரென்று நிழலாடவும் யாரென்று திரும்பிப் பார்த்தவன் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டான்.
அஜய் எழுந்து நிற்கவும் அங்கிருந்த பெரியவர்கள் மூவரும் ஒருசேர வாயிலைப் பார்த்தனர். தேவ்சரணும் அனைவரோடு சேர்ந்து அவளைப் பார்க்க, எழுந்து நின்றவனை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே மற்றவர்களை வரவேற்கும் விதமாகத் தலையசைத்தவள் அவளது தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“நீ ஏம்லே இப்படி நிக்க?” என்று தவமணி கிசுகிசுப்பாய் கேட்கவும் தான் அஜய் உணர்வு வந்து அமர்ந்தான்.
“என்னுடைய மூத்த பொண்ணு. ஏசிபி-யா இருக்கா..” என்று சங்கரநாராயணன் பெருமிதமாக அறிமுகப்படுத்தியவர்,
“வேலை முடிஞ்சதா நாச்சி” என்று மகளிடம் விசாரித்தார்.
“ம்ம் முடிஞ்சதுப்பா” என்று பதிலளித்தவள் மாப்பிள்ளையாக்கப்பட்டவனைப் பார்வையிட்டாள். அவளது விழிகள் அவனை ஏறெடுத்துப் பார்க்கும் போதெல்லாம் அவனது கண்களில் ஒருவித மின்னல் வந்து போக, அதையும் சேர்த்தே நோட்டமிட்டவள் பல்லைக் கடித்தாள்.
‘பொண்ணுங்களையே பார்க்காதவனைப் போல பார்க்கிறானே’ என்று அவனை இளக்காரமாகப் பார்த்தவள் அதையே கண்களில் பிரதிபலிக்கவும் செய்தாள்.
அவளது விழிகள் கூறும் செய்தியை மிகச் சரியாக உள்வாங்கியவன், “ஆமாம்.. அப்படித்தான்” என்று சொல்வதைப் போல, சோபாவில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு கோமதி நாச்சியாரைப் பார்வையிட ஆரம்பித்துவிட்டான்.
அதில் கடுப்பானவள் எதையும் பேசி வைக்கும் முன்னரே சங்கரகோமதியின் தலை தெரிய, வேறுவழியின்றி அமைதியைக் கடைபிடித்தாள். சங்கரகோமதியின் பின்னால் தழையத் தழையப் புடவை கட்டிக்கொண்டு ஸ்ரீநிதி நடந்து வந்தாள். சண்முகமும் தவமணியும் ஸ்ரீநிதியைப் பார்க்க, அஜயின் பார்வை அப்போதும் நாச்சியாரை விட்டு அகலவில்லை.
அவனது பார்வையில், ‘சரியான பொறுக்கியா இருப்பான் போல’ என்ற முடிவிற்கே கோமதி நாச்சியர் வந்துவிட்டாள்.
முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் ஸ்ரீநிதி அனைவருக்கும் காபியைத் தர, அஜய் ஸ்ரீநிதியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தவமணிக்கும் சண்முகத்திற்கும் பரம திருப்தி. தேவ்சரண் தவமணியின் மடியிலிருந்து இறங்கி அஜயின் மடியில் போய் அமர்ந்து கொண்டான். தேவ்சரணின் காதுகளில் அஜய் எதையோ கிசுகிசுப்பாகக் கூற, அதுவரை ஸ்ரீநிதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவன் யோசனையுடன் அவனும் கோமதி நாச்சியாரைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
‘இதென்னடா சோதனை?’ என்று திகைத்தவள் அஜயை நேர்ப்பட முறைத்தாள். அவளின் முறைப்பையும் கூட அவன் கண்கள் மின்னப் பார்க்க, ஏன் தான் முறைத்தோமோ என்ற எண்ணத்தில் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள் அவள்.
“சும்மா கூச்சப்படாம உட்காருமா” என்று தவமணி சொல்ல, ஸ்ரீநிதி தமக்கையைப் பார்த்தாள்.
“இங்க வா ஸ்ரீ” என்று அவள் அழைக்க, தமக்கையின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
“என்னம்மா படிச்சிருக்க?” என்று தவமணி கேட்க,
“பி.காம்” என்றாள் தயக்கமாக.
“அடுத்துப் படிக்க விருப்பம் இருந்தாலும் அஜய் உன்னைப் படிக்க வைப்பான்மா.. நீ அதை நினைச்சு வெசனப்பட்டுக்க வேணாம்” என்று கூற, சண்முகமும் அதை ஆமோதித்தார்.
“பொண்ணு பார்க்க வந்ததே ஒரு சடங்கு சம்பிரதாயத்துக்குத் தான்.. எங்களுக்குப் பொண்ணை போட்டோலயே பிடிச்சுப் போச்சு.. உங்களுக்கும் எண்ணமிருக்கப் போய் தான் வரச் சொல்லியிருப்பீங்க” என்று சண்முகம் சங்கரநாராயணனிடம் பேச்சுவார்த்தையைத் துவங்க, ஸ்ரீநிதியின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தது.
யாரும் அறியாத வண்ணம் தங்கையின் கரங்களைத் தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டாள் கோமதி நாச்சியார். அவரது பேச்சை ஒட்டியே சங்கரநாராயணனும் பேச, இதை எப்படித் தடுப்பது என்று யோசித்தவள் அஜய் தொண்டையைச் செறுமியதும் அவனிடம் கவனத்தைச் செலுத்தினாள்.
“டேட் எல்லாம் அப்புறம் குறிச்சுக்கலாம் மாமா.. எனக்கு உங்க பொண்ணு கூடத் தனியா பேசணும்.. பேசலாமா?” என்று கேட்க, சண்முகத்தின் முகம் கடுமையானது.
அவர் கோபமாகத் தவமணியைப் பார்க்க, தவமணி கைகளைப் பிசைந்தார்.
“என்ன தவம் இது?” என்று அவர் மனைவியைக் கடிய,
“பொண்ணு கூடத் தனியா பேசுறதுலாம் சகஜமா போச்சுங்க” என்றார் அவர் முணுமுணுப்பாக.
“அதெல்லாம் எனக்கும் விளங்குது.. ஆனா அதை அவன் முன்கூட்டியே நம்மகிட்ட சொல்லியிருக்கணும்ல.. இவனா இப்படிக் கேட்கான்.. சம்பந்தி வீட்ல என்ன நினைப்பாங்க?”
சண்முகம் கோபமாகப் பேச, தவமணிக்கு யார் பக்கம் பேசுவதென்று தெரியவில்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே சங்கரநாராயணனும் சங்கரகோமதியும் கண் ஜாடையில் பேசி முடித்திருந்தனர்.
“தாராளமா பேசுங்க மாப்பிள்ளை” என்று சங்கரநாராயணன் அனுமதி கொடுக்க, ஸ்ரீநிதிக்கு இதுவேறா என்றிருந்தது.
“அவங்களுக்குள்ள பேசிப் புரிஞ்சுக்கிட்டா நல்லது தானே சம்பந்தி” என்று சண்முகம் மகனை விட்டுக் கொடுக்காமல் பேச, சங்கர நாராயணனும் அதையே சொன்னார்.
அஜய் புன்னகையுடன் எழ, ஸ்ரீநிதியும் வேறு வழியில்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு எழுந்தாள். அப்போது தான் அஜய் அந்த குண்டைத் தூக்கிப் போட்டான்.
“நீங்க இல்லைங்க.. உங்க அக்கா கூட தான் தனியா பேசணும்” என்று அவன் சொல்ல, அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.
“என்னட்டி பேசுதான் உன் புள்ள” என்று சண்முகம் குரலை உயர்த்த, தவமணிக்கு சங்கடமாகிவிட்டது.
“ஏம்லே என்ன பேசுத?” என்று அவரும் சத்தம் போட,
சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு ஒருசேர மகளின் முகத்தைப் பார்த்தனர். ஸ்ரீநிதி அதுவரை இல்லாமல் அப்போதுதான் அஜயை நிமிர்ந்து பார்த்தாள். அவனது தைரியத்தில் அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க, கோமதி நாச்சியார் முறைப்புடன் அவனைப் பார்த்தாள்.
“என்கிட்ட நீங்க தனியா பேச என்ன இருக்கு?” என்று அவள் கேட்க,
“பேசுனா தெரியப் போகுது.. இந்த சிட்டியோட ஏசிபி.. உங்க இடத்துல என்கூடத் தனியா பேசுறதுக்கு இவ்வளவு பயமா?” என்றான் அவன் புன்னகை மாறாமல்.
அவனது பேச்சு அவளை சரியான முறையில் சீண்ட, பதிலே பேசாமல் எழுந்து வெளியே விறுவிறுவென்று நடந்தாள் அவள். நினைத்தது நடந்த திருப்தியில் அவள் பின்னே அவன் நடக்க, நிலைமை பெரியவர்களின் கைகளை மீறுவதை அங்கிருந்த நால்வருமே உணர்ந்தனர். சங்கரகோமதிக்கு நடப்பது எதுவும் சரியாகப் படவில்லை. அவர் ஸ்ரீநிதிக்கு கண்சாடை காட்ட, அவள் யாருடைய கவனத்தையும் கவராமல் எழுந்து பெற்றோரின் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.
அஜயின் பேச்சினால் சீண்டப்பட்டு அங்கிருந்து எழுந்து வந்த கோமதி நாச்சியார் வீட்டிற்கு வெளியே இருந்த தோட்டத்தின் நடுவே வந்துதான் நின்றாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த அஜய் அவளுக்கு முன்பாக வந்து நின்றான்.
ஏதாவது ஏடாகூடமாகப் பேசிவிடுவானோ என்ற குழப்பத்தில் அவனை முறைப்புடன் அவள் பார்க்க, “ஹலோ சீனியர்.. என்னை அடையாளம் தெரியலையா?” என்றானே பார்க்கலாம்.. கோமதி நாச்சியார் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளானாள்.
சுளித்த புருவங்களுடன் அவனை நன்றாகப் பார்க்க, அவளுக்கு அவனைப் பார்த்த நினைவேதும் இல்லை.
“பத்து வருஷம் கழிச்சு பார்த்தா அடையாளம் தெரியாதுதான்” என்றான் அவன் புன்னகையுடன். அவளது குழப்பம் இன்னும் அதிகமானது. அவள் தன் நினைவடுக்குகளைத் தூசு தட்டி முழுவதுமாக அலசிப் பார்த்துவிட்டாள். அஜயை முன்பின் பார்த்த நினைவு சுத்தமாக இல்லை.
“சி.ஓ.ஏ காலேஜ்.. 2011-14 பேட்ச்” என்று அவன் கூற,
“ஓ” என்றாள் அவள் யோசனையாக. அவள் அதே கல்லூரியில் தான் 2010-13 ஆம் ஆண்டு படித்தாள். ஒருவேளை முன்னமே தெரிந்தவள் என்றுதான் அப்படிப் பார்த்து வைத்தானா? என்று யோசித்தவளுக்கு அவளது மனம் மறுப்பாகப் பதிலளித்தது. அவனது விழிகளில் ஆர்வம் அல்லவா வழிந்தது!?
அவனது பார்வைகள் நினைவுக்கு வந்த நொடியில் அவளது முகம் மீண்டும் கடுமையானது.
“எதுக்காக உள்ளே அப்படிப் பார்த்தீங்க? என்னைத் தெரிஞ்சுருந்தா ஒன்னு பேசணும் இல்ல அமைதியா இருக்கணும். இப்படியா ஒரு பொண்ணைப் பார்ப்பாங்க?” என்று அவள் கடுமையாக வினவ,
“எப்படிப் பார்த்தேன்?” என்றான் அஜய் திகைத்துப் போய்.
எப்படிப் பார்த்தேன் என்று கேட்டால் அவள் என்ன சொல்லுவாள்? அவனது பார்வையில் ஆர்வத்தைக் கண்டாளே ஒழிய கல்மிஷத்தை அல்ல. நீ என் தங்கையைப் பெண் பார்க்க வந்துவிட்டு என்னை ஆர்வமாகப் பார்த்தாய் என்று சொல்ல ஏனோ அவளுக்குக் கூசியது. அவனுக்கு அதுமாதிரி எந்த உணர்வும் இல்லை போல! மிகவும் இயல்பாக நின்றிருந்தான்.
“என்ன பேசணும்னு சொன்னீங்க?”
தேவையில்லாத யோசனையை வரவிடாமல் அவள் நேராகப் பேச்சிற்குத் தாவ, அஜய் அவளைக் குறுகுறுப்புடன் பார்த்தான்.
“நேரா விஷயத்து வான்னு சொல்றீங்க.. ரைட் வந்திடுறேன். உங்கள எனக்கு காலேஜ்ல இருந்தே ரொம்ப பிடிக்கும்.. அது காதலா என்னனு எனக்குள்ள அனலைஸ் பண்ணவே ரொம்ப நாள் ஆகிடுச்சு.. நீங்க காலேஜ் விட்டுப் போனதும் தான் எனக்குத் தெளிவான ஒரு ஆன்சர் கிடைச்சது” என்று அவன் பேசிக்கொண்டே போக,
அவனை முழுதாக முடிக்க விடாமல், “ஸ்டாப் இட்.. என்ன கண்டபடி உளறிட்டு இருக்க?” என்றாள் கோமதி நாச்சியார் அவனைத் தீயாய் முறைத்தபடி.
“உளறலா? ஹலோ உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்றேன்” என்றவன் அருகிலிருந்த செம்பருத்திச் செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து அவள் முன் நீட்டினான்.
“ஐ லவ் யூ.. சாரி ரோஜா செடியில் பூ எதுவும் இல்ல.. இதான் கைக்கு வசமா சிக்குச்சு” என்று செம்பருத்திப் பூவை நீட்ட,
“என் தங்கச்சியைப் பொண்ணுப் பார்க்க வந்துட்டு என்கிட்ட பூவை நீட்டிட்டு இருக்கியே.. ச்சீ.. வெட்கமா இல்ல” என்று கோமதி நாச்சியார் சீறினாள்.
“இதுல எனக்கு எந்த வெட்கமும் இல்ல.. நான் ஏன் வெட்கப்படணும்? இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியாத அப்பப்ப நெஞ்சோரமா துடிச்சுட்டே இம்சை பண்ணுற என் கல்லூரிக் காதல் நீ.. வீட்டு கம்பெல்ஷன்ல பொண்ணுப் பார்க்க வந்த இடத்துல பொண்ணுக்கு அக்காவா நீ இருக்கிற.. எனக்கென்னமோ இதெல்லாம் எனக்காகக் கடவுள் கொடுக்கிற குறியீடா தான் தெரியுது.. இந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிட்டா அப்புறம் உன்னையே நான் மிஸ் பண்ண வேண்டி வந்தாலும் வந்திடும்”
இருவருமே தங்களை அறியாமல் ஒருமைக்குத் தாவியிருந்தனர்.
“கடவுளுக்கு வேற வேலை இல்ல பாரு.. ஏய் முட்டாள் உன்னை விட நான் பெரிய பொண்ணு வேற”
“அது சரியா இருந்தா உனக்குப் பிரச்சனை இல்லையா?”
அவன் ஆர்வமாகக் கேட்க, அதற்குமேல் அவளுக்குப் பொறுமையில்லை. அவள் நகரப் போக, சட்டென்று அவளது கையைப் பிடித்து நிறுத்தினான் அஜய்.
அவன் கையைப் பிடிப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கையைப் பிடிக்கவும் உச்சகட்ட கோபத்தை அடைந்தவள் சற்றும் யோசிக்காமல் தன் பேண்ட்டின் பின்னால் சொறுகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவனது இடுப்புக்குக் கீழ்புறத்தில் வைத்து அழுத்தியிருந்தாள்.
அவளிடமிருந்து இப்படியொரு எதிர்வினையை அவனும் எதிர்பார்க்கவில்லை. துப்பாக்கியை முதன்முறையாக அவன் நேரில் பார்க்கிறான். அதோடு அவளது குறி அவனது உயிர் குறியாக இருக்க மிரண்டு விட்டான். அவனது பிடியிலிருந்து தானாக அவளது கை விடுதலையானது.
“ஹே என்ன பண்ற நீ?”
பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு அவன் கேட்க,
“ஒழுங்கா குடும்பத்தோட இடத்தைக் காலி பண்ணுங்க.. காதல் கல்யாணம்னு எதாவது உளறிட்டு இருந்தா அடுத்த முறை இப்படி வச்சுட்டுப் பேசிட்டு இருக்க மாட்டேன்.. ஒரே அழுத்து” என்றவள் மீண்டும் துப்பாக்கியை எடுத்து இடத்தில் வைத்தாள்.
இப்போது அவனது பயம் சற்றே மட்டுப்பட்டு, அவனது துடுக்குத்தனம் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது.
“எது செய்றதா இருந்தாலும் யோசிச்சு செய் கோம்ஸ்.. ஏடாகூடமா எதாவது ஆகிடுச்சுனா நாளைக்கு நீ தான் கஷ்டப்படுவ” என்று அவன் சொல்லவும், அவன் சொல்ல வந்தது புரிந்து கோபத்தில் அவளது முகம் மாற,
“இல்ல வேட்டையன் படத்துல ரஜினி சார் நிரபராதியை சுட்டுட்டுக் குற்றவுணர்ச்சில சுத்துவாரே.. அது மாதிரி நீயும் கஷ்டப்படுவனு சொன்னேன்” என்றான் அவன் சிரிக்கும் கண்களோடு.
“உன்னலாம் முதல்ல வாய்ல சுடணும்டா” என்றபடி அவள் திரும்பிப் போக, இப்போது அவன் அவளைத் தடுக்கவில்லை.
“போலீஸம்மா எவ்வளவு நாள் வேணும்னா டைம் எடுத்துக்கோ நல்ல பதிலா சொல்லு” என்றபடியே அவன் அவள் பின்னே செல்ல,
பெரியவர்கள் நால்வரும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வந்த கோமதி நாச்சியாரைத் தான் கண்டனர்.
சங்கரகோமதி முகத்தில் கேள்வியைத் தேக்கித் தன் மகளைப் பார்க்க,
“ம்மா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல எல்லாரையும் வெளியே போகச் சொல்லுங்க.. கல்யாணமும் நடக்காது காதுகுத்தும் நடக்காது” என்று சொன்னவாறு மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குச் சென்றுவிட்டாள் அவள்.
அவள் சொன்னதில் சண்முகம் முகம் கன்றிப்போய் எழுந்து கொள்ள, தவமணியும் எழுந்தார். சங்கரநாராயணன் சங்கரகோமதி தம்பதியினர் சங்கடமாக அவர்களைப் பார்த்தனர்.
“மன்னிக்கணும்” என்று சங்கரநாராயணன் சொல்ல,
“நீங்க ஏன் மாமா மன்னிப்பெல்லாம் கேட்குறீங்க?” என்றபடி அஜய் உள்ளே நுழைந்தான்.
“என்னலே போய் பேசுன?” என்று சண்முகம் மகனிடம் குரலை உயர்த்த,
“எனக்கு கோமதியைப் பிடிச்சிருக்கு.. அதைச் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன்” என்றான் அஜய் தைரியமாக.
இதுபோல் தான் இருக்கும் என்ற அனுமானம் இருந்தாலும் அஜய் வாய்மொழியில் கேட்கும்போது பெரியவர்கள் பதறித்தான் போனார்கள்.
“என்னடா சொல்லுத?” என்று தவமணி பதறிப் போய்க் கேட்க,
அவருக்குப் பதில் கூறாமல், “அத்தை மாமா.. உங்க ரெண்டாவது பொண்ணைப் பார்க்க வந்துட்டு முதல் பொண்ணைக் கட்டிக்கிறேனு சொல்றதுனால என்னைத் தப்பா நினைச்சுடாதீங்க.. எனக்கு காலேஜ்ல இருந்தே உங்க மூத்த பொண்ணைத் தெரியும். நான் இது காதல்னு முடிவு பண்றப்போ காலம் கடந்து போய் உங்க பொண்ணைத் தொலைச்சுட்டேன்.. விருப்பமே இல்லாமல் தான் பொண்ணுப் பார்க்க வந்தேன்.. வந்த இடத்துல உங்க பொண்ணைப் பார்க்கவும் என்னால என் மனசை அதுக்கு மேல மறைக்க முடியல” என்றான் அஜய்.
‘இதென்ன புதுசா கிளைக்கதையெல்லாம் சொல்லுதாரு இவரு’ என்ற குழப்பத்தில் சங்கரகோமதி இருக்க,
சங்கரநாராயணன், “நீங்க எங்க கிட்ட சொல்லியிருந்தா நாங்க பேசியிருப்போமே” என்றார் மகளின் குணமறிந்து.
“காதலுக்குத் தூதெல்லாம் இருக்கக் கூடாது மாமா.. சரியோ தப்போ நான் பேசுறதுதான் சரியா வரும்”
“என்னலே பேசுத? காதல் கண்ணறாவினு என்னென்னமோ பேசிட்டு நிக்க.. இங்க பாருலே.. இது கண்டிப்பா நடக்காது.. எப்பவும் நான் இதுக்கு சம்மதிக்கப் போறதில்ல”
சண்முகம் குரலை உயர்த்திப் பேசியது மேலே தன் அறையிலிருந்த கோமதி நாச்சியாருக்கே கேட்டது. அந்தக் குரலும் அது தந்த கோபமும் அவளை அலைக்கழிக்க காதுகளை மூடிக் கொண்டாள் அவள்.
“ப்பா.. இந்த வீட்ல பெண் எடுக்கணும்னு சொன்னது உங்க முடிவுதான? ரெண்டாவது பொண்ணுக்குப் பதிலா மூத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணப் போறேன்.. இதுல என்ன பிரச்சனை?”
“ஆமாம்லே.. சொன்னேன்தான்.. ஆனா போலீஸ்காரப் பொண்ணெல்லாம் நம்ம வீட்டுக்கு வேணாம்”
சண்முகம் உறுதியாய்க் கூற, கதவைத் திறந்துகொண்டு புயல் வேகத்தில் வெளியே வந்தாள் கோமதி நாச்சியார்.
“இங்கே யாரும் உங்க பையனைக் கல்யாணம் பண்ணத் தவமிருக்கல சார்.. உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் உங்க ஆசை தீருமட்டும் உங்க பையனுக்குப் புத்தி சொல்லுங்க.. இப்போ இடத்தைக் காலி பண்ணுங்க” என்று அவள் வாயிலை நோக்கிக் கைகாட்ட, சண்முகத்தின் முகம் சுருங்கிவிட்டது.
அவர் விடுவிடுவென்று வெளியே நடக்க, நடக்கும் களேபரத்தை அதுவரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தேவ்சரணைக் கையில் பிடித்துக்கொண்டு தவமணியும் கணவனின் பின்னே ஓடினார்.
அஜய் மட்டும் அங்கேயே நின்றிருந்தான்.
“உனக்குத் தனியா சொல்லணுமா?”
கோமதி நாச்சியார் கிட்டத்தட்ட கத்தியதில்,
“உன் கோபமோ மிரட்டலோ எதுவும் என்னையும் என் காதலையும் பாதிக்காது.. முதல்ல இப்படிக் கத்தாம நிதானமா உட்கார்ந்து யோசி” என்று கூறிவிட்டு அஜயும் கிளம்பிச் செல்ல, பெரும்புயலில் மாட்டிக்கொண்டு கரை சேர்ந்த உணர்வில் அங்கிருந்த சோபாவில் ‘தொப்’பென்று அமர்ந்தாள் அவள். அவளருகே சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் அமர்ந்தனர்.
அதுவரை அங்கே நடந்தததையெல்லாம் பெற்றோரின் அறையில் கதவிடுக்கின் வழியே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதி வெளியே வந்தாள். கோமதி நாச்சியாரின் முகமே பெற்றவர்களையும் சேர்த்தே மற்ற மூவரைத் தூரமாக நிறுத்த, அவளிடம் பேசவே தயங்கி அமர்ந்திருந்தனர்.
அவர்களது உறவுக்கான ஆரம்பப்புள்ளியை அஜய் வைத்துவிட்டுச் செல்ல, அது அழகான கோலமாக வளரும் முன்னவே அலங்கோலமாக மாற்றவல்ல ஓர் கொடூரம் அதே நகரத்தின் மற்றொரு மூலையில் அரங்கேறியது.
கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள:
https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கரு
த்/#post-231
அத்தியாயம் 3
இன்னும் சத்தம் அடங்காமல் சண்முகம் முணுமுணுத்துக் கொண்டேதான் இருந்தார். அவரால் நடந்து முடிந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. அஜய் தலை தெரியும் போதெல்லாம் அவர் எதையாவது ஒன்றை சொல்லிக் கொண்டேயிருக்க, தவமணி தான் அவரை அவ்வப்போது அமைதிப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கே சண்முகத்திற்கு இரத்த அழுத்தம் கூடிவிடுமோ என்ற பயத்தில் அவர் கணவரை அமைதிப்படுத்த, அஜய் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகனைக் கொஞ்சிக் கொண்டும் அவனுடன் விளையாடிக் கொண்டும் இருந்தான்.
“உன்ட்ட தாம்லே இம்புட்டு நேரமா பேசுதேன்.. வெளங்குதா இல்லியா?”என்று அவர் கேட்க,
மகனைக் கொஞ்சுவதை நிறுத்திவிட்டுத் தந்தையைப் பார்த்தவன், “வெளங்குது” என்றான்.
“என்ன வெளங்குச்சு?” என்று அவர் விடாமல் கேட்க,
“நான் குடும்பம் குட்டினு வாழ்றது இந்த ஜென்மத்துல நடக்காதுனு வெளங்குச்சு” என்றவன் அவர் அடுத்து ஆரம்பிக்கும் முன்னர் தேவ்சரணைத் தூக்கிக் கொண்டுத் தன் அறைக்கு வந்துவிட்டான்.
சண்முகம் அவனது பதிலில் திகைத்துப் போய் மனைவியைப் பார்க்க, அவரது கண்கள் கலங்கிக் கண்ணீரைச் சிந்த தயாராகிக் கொண்டிருந்தது.
“இப்ப எதுக்கு நீ கண்ண கசக்குத? அவன் சொன்னா அப்படி ஆகிப்புடுமா? நாம அப்படியே விட்டுருவோமா?” என்று மனைவியைக் கடிந்தாலும் அஜயின் வார்த்தைகள் அவருக்குமே சுருக்கென்றிருந்தது தான் நிஜம்.
அவன் இப்படியே நின்றுவிட்டால் அது அவருக்கு மகிழ்வையா தரும்?
‘என்ன வார்த்தை சொல்லுதான்’ என்று கலங்கிப் போனவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனுக்கு வேறு ஏதாவது பெண் மீது பிடித்தம் வந்திருக்கக் கூடாதா? என்று விதியை நொந்தவர் சீக்கிரமாக அஜயின் திருமணத்தை நிகழ்த்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அஜய் தன் அறையில் மகனுக்கு விளையாட்டுக் காட்டியபடி இருந்தாலும் அவனது நினைவுகள் முழுதும் கோமதி நாச்சியாரைச் சுற்றித்தான் இருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் போதே தேவ்சரண், தந்தையைப் பார்ப்பதும் மீண்டும் விளையாட்டில் கவனமாவதும் என்றிருந்தான். அதில் தன் சிந்தனையை ஒதுக்கி வைத்தவன்,
“என்னடா பெரிய மனுஷா? என்னைத் திருட்டுப் பார்வை பார்த்துட்டு இருக்க?” என்றான் அஜய் புன்னகையுடன்.
“மம்மி நம்ம வீட்டுக்கு வரலனு சொல்லிட்டாங்களா டாடி?” என்றான் தேவ்சரண் சோகமாக.
அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல், “அச்சச்சோ.. முகமெல்லாம் சுண்டுதே.. உனக்கு மம்மியை அவ்ளோ பிடிச்சிருக்கா தேவ்?” என்றான் அவனைக் கொஞ்சிக்கொண்டே.
“எஸ்.. ரொம்ப!”
தேவ்சரண் கண்களில் ஆர்வம் மின்ன இதைச் சொல்ல, அஜய் இதழ்களில் இதமான புன்னகை.
“எப்போ மம்மியைக் கூட்டிட்டு வரலாம்?”
பதிலைத் தெரிந்து கொண்டே மகனிடம் இந்தக் கேள்வியைக் கேட்க,
“இப்பவே…” என்ற தேவ்சரணின் குரலில் தாங்காத ஆர்வம் வழிந்தது.
அவனுக்குக் குறையாத ஆர்வத்துடன், “நாளைக்குப் போகலாமா?” என்று அஜயும் சொல்ல,
“சூப்பர் டாடி.. ஆனா தாத்தா..” என இழுத்தான் தேவ்சரண்.
சண்முகத்திற்கு இதில் விருப்பமில்லை என்பது அவனுக்குக் கூடத் தெரிந்திருந்தது. அவன் அப்படித்தான். ஆறு வயது தானென என்று சொன்னால் நம்ப முடியாது. பேச்சிலும் நடத்தையிலும் வயதுக்கு மீறிய புரிதல் இருக்கும். அதில் வழக்கம் போல அஜயின் இதயம் இளகியது. வாஞ்சையுடன் தன் மகனை அணைத்துக் கொண்டான் அவன்.
“நாம தாத்தா கிட்ட சொல்ல வேணாம்” என்று சொல்ல, தேவ்சரணிற்கு அப்போதே குதூகலம் தாங்க முடியவில்லை.
“அப்பே நாளைக்கு நான் என்னோட பெர்த்டே ட்ரஸ் போட்டுக்கவா?”
அன்றே அவன் மறுநாளுக்கான உடைத்தேர்வு முதற்கொண்டு செய்து வைக்க, அஜய் புன்னகையுடன் தலையாட்டினான்.
அஜயும் தேவ்சரணும் நாளை கோமதி நாச்சியாரைக் காணச் செல்வதென முடிவாக இருக்க, அங்கே கோமதி நாச்சியார் வீட்டிலும் இன்னும் சகஜ நிலைக்கு யாரும் திரும்பவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
இரவு உணவெல்லாம் முடிந்து அவரவர் அறைக்குள் அனைவரும் அடைந்திருக்க, கோமதி நாச்சியார் சின்ன மகளின் அறைக்குச் சென்றார். கதவு தாழிடப்பட்டிருக்க, வெளியிலிருந்தவாறே சத்தம் கொடுக்கவும் ஸ்ரீ எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
“என்னம்மா இந்த நேரத்துல?” என்று ஸ்ரீ குழப்பமாகக் கேட்க,
“நீ தூங்கலியா இன்னும்?” என்றார் அவர். இல்லையென்று ஸ்ரீ தலையசைக்கவும் எதையோ சொல்ல வந்து அவர் திணறுவதைப் போலிருக்க, அவளுக்கு இன்னும் குழப்பம் அதிகமாகியது.
“எதுவும் என்கிட்ட சொல்லணுமா மா?” என்று அவளே எடுத்துத் தர,
“அது.. அ..து காலைல நடந்ததுல உனக்கு ஒன்னும் சுணக்கமில்லையே?” என்றார் தவிப்புடன் சங்கரகோமதி.
மேலே படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவளை வற்புறுத்தித் திருமணத்திற்கு அவர் சம்மதிக்க வைத்திருக்க, பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளை உன் அக்காவைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் மனம் சங்கடப்பட்டு விடாதா என்ற எண்ணம் தான் அவருக்கு! அதிலும் மாப்பிள்ளையைப் பார்த்ததுமே ஸ்ரீக்கும் எதாவது எண்ணம் வந்திருந்தால் அது இன்னமும் மோசம் ஆயிற்றே..! இப்படிப் பல யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தார் அவர்.
தாய் கேட்க வருவது புரிந்து பளீரென்ற புன்னகை சிந்தினாள் ஸ்ரீ.
“ம்மா.. நானே நல்லவேளை இது நின்னிடுச்சுனு நினைக்கிறேன்.. நீங்க வேற.. நான் அவர் முகத்தை ஒழுங்கா கூடப் பார்க்கலமா” என்று அவள் புன்னகைக்க,
“நெசமாத்தான் சொல்லுதியா? எனக்காக ஒன்னும் நீ மாத்திச் சொல்லலயே?” என்றார் அவர் நம்பாமல்.
“கடவுள் சத்தியம். எனக்கு ஒன்னுமில்ல நான் நல்லாத்தான் இருக்கேன்”
அவள் அப்படி உறுதியாகக் கூறவும் தான் அவர் மனமிறங்கி கீழே வந்தார். இப்போது சின்ன மகளின் கவலை மறைந்து மனம் பெரிய மகளைச் சுற்றி வட்டமடித்தது. அவர் கோமதி நாச்சியாரை நினைத்துக் கொண்டே அங்கிருந்து செல்ல, கதவை அடைத்துவிட்டு வந்து படுத்தவள் ப்ளூடூத்தை மீண்டும் காதுகளில் மாட்டினாள்.
“யாரு வந்தது?” என்ற கார்த்திக்கின் குரலில் அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து மீண்டும் கடுகடுவென்று முகத்தை வைத்தாள் ஸ்ரீ.
“இப்போ அதுதான் முக்கியமா? நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற?”
அவளது கோபம் புரிந்தாலும் தன் நிலைமையை அவள் யோசிக்க மாட்டேன் என்கிறாளே என்ற குறையோடு அவன் அமைதியாக இருந்தான்.
“இப்போ எதுக்கு முகம் ஒரு மீட்டர் நீளத்துக்குப் போகுது?”
அதையும் கண்டுபிடித்து அவள் சொன்னதில், ‘எல்லாம் தெரியுது இவளுக்கு’ என்ற எண்ணம் தோன்ற அந்தப்பக்கம் கார்த்திக்கின் முகத்தில் இளநகை.
“இன்னைக்கு வந்தவர் அக்காவைப் பிடிச்சிருக்குனு சொல்லலனா என் நிலைமையை யோசிடா” என்று அவள் கடுப்புடன் சொல்ல,
“எனக்குப் புரியுது ஸ்ரீ.. நான் அம்மா நல்ல மூட்ல இருக்கும்போது இதைப் பத்தி பேசுறேன்” என்றான் அவன் அமைதியாக.
அவன் அப்படிச் சொன்னாலும் அவளுக்கு என்னவோ நம்பிக்கையே இல்லை. கார்த்திக் அத்தனை பயந்த சுபாவம். ஸ்ரீ அவனுக்கு அப்படியே நேர்மாறாக இருந்தாள். இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். முதலில் நண்பர்களாகப் பழகி வந்தாலும் காலப்போக்கில் அது கார்த்திக்கின் மனதில் காதலாக மாற்றம் பெற, அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கூடப் படிக்கும் இன்னொரு பையனும் அதேநேரம் ஸ்ரீயிடம் காதலைச் சொல்ல, ஸ்ரீயை விடக் கார்த்திக் தான் அதிர்ந்துவிட்டான். ஸ்ரீ எங்கே சரியென்று சொல்லிவிடுவாளோ என்றெண்ணி மிகவும் பயந்து போனான். அதேநேரம் காதலைச் சொல்லவும் தைரியம் இல்லை. எதையோ இழந்தவனைப் போல் சுற்றிக்கொண்டு இருந்தவனை ஸ்ரீ தான் அழைத்து விசாரித்தாள். அப்போதும் உண்மையைச் சொல்லாமல் போக்குக்காட்ட, அவனது திணறலே அவளுக்கு விஷயம் என்ன என்பதை விளக்கிவிட்டது. தலையில் அடித்துக் கொண்டு அவனை உடனழைத்துக் கொண்டவள் அடுத்து அவனைத் தனியாக விடவில்லை. காதல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும் அவளது அருகாமையே அவனுக்குப் போதும் என்றிருந்தது. அப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் தான் திடீரென்று ஒருநாள் ஸ்ரீ அவனிடம் காதலைச் சொன்னாள். அதிலிருந்து காதல் பறவைகளாகச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் படிப்பு முடியவும் திணறித்தான் போனார்கள். அதிலும் சங்கரகோமதியின் இந்த அதிரடி நடவடிக்கையில் கார்த்திக் அங்கே நெஞ்சைப் பிடித்துவிட்டான்.
“வீட்ல நான் சொல்லணும்னா நீ அம்மா கிட்ட பேசணும் கார்த்திக்” என்று ஸ்ரீ முடிவாகச் சொல்ல, இதோ அதோ என்று நாளைக் கடத்திக் கொண்டிருந்தான் அவன். அதற்குத்தான் இப்போது அவனுக்கு அத்தனை திட்டுக்களும்.
கார்த்திக்கிற்கு அவளது நிலைமை புரிந்தாலும் தன் வீட்டு நிலையை எண்ணித் திண்டாடிப் போனான் அவன். இருந்தும் சரியென்று அவன் சமாதானமாகப் பேச, நம்பிக்கை இல்லாமல் ‘ம்ம்’ கொட்டினாள் ஸ்ரீ.
ஸ்ரீ வீட்டிலும் சொன்னதும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அவளது வீட்டிலிருந்து வரும் எதிர்ப்பை வேறு அவள் சமாளிக்க வேண்டும். அதை நினைத்தாலே இப்போதே பயம் பிடித்துக் கொண்டது. ஆனால், காதலித்தாகிவிட்டது. அடுத்தது என்ன என்று பார்த்தாக வேண்டும் அல்லவா? அதுதான் அவளது வாதம். கார்த்திக் சொல்வானா இல்லை இன்னும் இழுத்தடிப்பானா என்று அவள் வருந்த, விதி அதற்கு வேறொரு முடிவு வைத்திருந்தது.
சின்ன மகளிடம் பேசிவிட்டு தங்கள் அறைக்குச் சென்ற சங்கரகோமதி யோசனையுடனே படுத்தார். மனைவியின் முகத்திலிருந்த யோசனையில் சங்கரநாராயணன் கேள்வியாக மனைவியைப் பார்த்தார்.
‘என்ன யோசனைனு கேட்போமா வேணாமா?’ என்ற யோசனையுடன் அவர் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குள் சங்கரகோமதியே கணவனைப் பார்த்தவர்,
“என்ன இங்க பார்வை?” என்று கேட்டு வைக்க,
“இல்ல கோமு.. ஏதோ யோசனையா இருக்குத மாதி தெரிஞ்சது.. அதான் என்ன யோசனைனு பார்த்தேன்” என்றார் சங்கரநாராயணன் பதிலுக்காக மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.
“ம்ம்.. பிள்ளைங்கள எல்லாம் வளர்த்து கடமையாத்தி முடிச்சாச்சு.. அதான் அக்கடானு நீங்களும் நானும் எங்கனயாவது போய்ட்டு வரலாமேனு யோசனை” என்று சங்கரகோமதி சொல்லவும்,
“எங்கன போவனும்னாலும் சொல்லு கோமு.. உன் ஆசைப்படியே போய்ட்டு வந்துரலாம்” என்று சங்கரநாராயணன் சொல்ல,
அவ்வளவுதான்! சங்கரகோமதிக்கு வந்ததே ஆத்திரம்!! கணவனைத் தீயாக முறைத்தவர்,
“அடி சக்கை.. பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்சான்ற மாதி கிழவனுக்கு ஆசையைப் பாரும்.. எனக்கு வாய்ல நல்லா வருது.. தலைக்கு மேல ரெண்டு பொட்டப் புள்ளைக இருக்குதாங்கனு கொஞ்சமேனும் கவலை உமக்கிருந்தா இந்த வார்த்தை வாயில வந்திருக்குமா?” என்றார் அதீத கோபத்துடன் அவர்.
மனைவியின் கோபத்தில் பதறிப்போய், “அய்யோ கோமு.. நான் அப்படி அர்த்தம் பண்ணிச் சொல்லல” என்றார் அவர்.
“பொறவு வேற என்ன அர்த்தம் பண்ணீங்க?”
“எப்பவுமே வாயைத் திறந்து நீ இப்படி கேட்டது இல்லையே.. இப்ப கேட்கவும் அம்புட்டு அழுத்தம் போலனு நெனைச்சுப்புட்டேன்.. உனக்காகத்தான் கோமு”
பாவம் போல அவர் சொன்னதில் சற்று இறங்கி வந்தவர், போனால் போகுதென்று கணவனை மன்னித்து அவரிடம் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.
“சரி அதை விடுங்க.. எனக்கொரு யோசனை” என்று கணவரையும் பேச்சில் இழுக்க, இப்போது சங்கரநாராயணன் விழித்தார்.
‘இப்போ நான் என்ன யோசனைனு கேட்கணுமா இல்ல கேட்கக் கூடாதா?’ என்று அவர் யோசனையுடன் அமர்ந்திருக்க,
“ஏங்க முன்பொறப்பு குதிரையா என்னமும் பொறந்து தொலைச்சீங்களா? அதான் இப்படி நின்னுட்டே உறங்குமாம்” என்றார் சங்கரகோமதி கடுப்புடன்.
‘நான் உட்கார்ந்து தான இருக்கேன்.. இதைக் கேட்டா இன்னும் பேசுவாளே’ என்று முகத்தைச் சுருக்கியவர்,
“நான் உறங்கவெல்லாம் இல்ல கோமு” என்றார்.
“முதல்ல கோமு கீமுனு ஏலம் விடாதீங்கனு எத்தனைதரம் சொல்லுதது உங்களுக்கு? வீட்ல இம்புட்டு பெரிய விஷயம் நடந்திருக்குது.. அதைப்பத்தி கொஞ்சமாச்சும் விசனம் இருக்குதா? மணியடிச்சா சோறு மாமியா வீடுனு அக்கடானு உறங்க வந்தாச்சு.. சரி நமக்கா இல்லைனாலும் பொண்டாட்டி பேசுதாளேனு காது கொடுத்துக் கேட்கீங்களா?”
கோமு என்று சொல்ல வந்தவர் அதை நிறுத்திவிட்டு, “இல்லட்டி நீ சொல்லு.. நான் கேட்கேன். என்ன யோசனை?” என்றார் சமாதானமாக.
“இன்னைக்கு காலைல நடந்ததைப் பத்தி என்ன நினைக்கீங்க நீங்க?”
சங்கரகோமதி ஆரம்பிக்க மனைவியைப் பாவமாகப் பார்த்தவர்,
“நீயே சொல்லிடேன் ட்டி” என்றார் அவர். அதில் அலுப்புடன் கணவரைப் பார்த்தவர்,
"அந்த தம்பி பேசுனது மாதி நம்ம ஏன் நம்ம நாச்சிக்கு அவரையே பார்க்கக் கூடாது?” என்றாரே பார்க்கலாம்.. சங்கரநாராயணன் திகிலுடன் மனைவியைப் பார்த்தார்.
“நாச்சி கல்யாணமே வேணாம்னு சொல்லுதாளே” என்று மனைவிக்கு அவர் நினைவூட்ட,
“அது தெரியுது.. ஆனா எனக்கு இன்னொரு தடவையா முயற்சி செஞ்சுத்தான் பார்க்கலாம்னு தோனுது” என்றார்.
“இது சரிவராது கோமு.. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத” என்று சங்கரநாராயணன் சொல்லிவிட,
“ஏன் இப்படி எடுத்ததும் அச்சாணியமா பேசுதீங்க?” என்று எரிந்து விழுந்தார் அவர்.
இதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் மனைவியைப் பார்த்தவர் பின் நினைவு வந்தவராய்,
“மாப்பிள்ளையோட அப்பா எப்படிப் பேசுதாருனு பார்த்தல்ல.. நாச்சிக்கு அவ வேலையைச் சொன்னா பிடிக்காதுனு தெரியும்ல உனக்கு.. எப்படி சரிவரும்?” என்றார்.
சங்கரநாராயணன் சொல்லவும் சங்கரகோமதியின் விழிகள் பளிச்சிட்டன. அவரது விழிகளில் சந்தோஷம் கூத்தாட, தான் அப்படியென்ன சொல்லிவிட்டோம்? என்ற சிந்தனையில் அவர் மனைவியைப் புரியாமல் பார்த்தார்.
“பார்த்தீங்களா உங்க வாய்ல இருந்தே மாப்பிள்ளைனு வந்துட்டு.. நீங்க வேணா பாருங்க.. நான் சொல்லுதது நடக்கும்” என்று அவர் சிறுபிள்ளையின் குதூகலத்துடன் சொல்ல, சங்கரநாராயணனுக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
இதெல்லாம் மகளின் பிடிவாதத்தின் முன் நடக்காது என்பதை எப்படி புரியவைக்க? என்பது தெரியாமல் மனைவியைப் பார்க்க, கணவனின் பார்வையில், அவரும் வித்தியாசமாகக் கணவனைப் பார்த்தார்.
“ஏன் இப்படி பார்க்குதீங்க?”
“ஒன்னுமில்லட்டி”
“இதை என்னை நம்பச் சொல்லுதீங்களா?”
“நாச்சி பிடிவாதம் தெரிஞ்சும் இப்படி கனவுக் கோட்டை கட்டுதியேனு…’
சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாதியிலேயே அவரது பேச்சு நின்றது. காரணம் சங்கரகோமதியின் பார்வை. பத்ரகாளி அவதாரம் எடுத்திருந்தார் அவர்.
“வாய்ல வசம்பு வைச்சுத்தான் தேய்க்கணும் போல.. மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்குதேனு பேசுறது கனவுக் கோட்டையாம்ல.. எந்த அப்பனாச்சும் இப்படிச் சொல்லுவானா?”
“ஏட்டி கோமு.. நான் என்ன சொல்லுதேன் நீ என்ன பேசுத? இளையவ கல்யாணத்துக்கு நீ சொல்லுத மாதி பண்ணிடலாம்னு தான நானும் சொன்னேன்”
“அப்போ பெரியவள குடும்பம் குட்டினு பார்க்க ஆசை இல்லையா? நமக்குப் பின்ன அவளுக்குனு யாரு இருப்பா?”
சங்கரகோமதி இதைச் சொல்லும்போதே அவரது விழிகள் கலங்க ஆரம்பித்தது.
“ஏன் நம்ம ஸ்ரீ இல்லையா?”
ஆறுதலாகப் பேசுகிறேன் என்று சங்கரநாராயணனும் பேச, ‘இவருக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?’ என்று தெரியாமல் அவரைப் பார்த்தார் கோமதி.
“எனக்கும்தான் கூடப் பொறந்தவ ஒருத்தி இருக்கா.. இப்போ நாங்க ஒட்டி உறவாடுதோமா?”
“ஏட்டி உன் தங்கச்சி கூடவா நம்ம ஸ்ரீயை சோடி சேர்க்க? இது உனக்கே அடுக்குமா?”
சங்கரகோமதிக்கு ஒரு தங்கை.. பெயர் ரேவதி. பெங்களூரில் வசிக்கிறார். அவர் திருமணமாகிச் சென்ற இடம் அந்தஸ்தில் சங்கரநாராயணனை விட பலமடங்கு உயர்வான இடம். அதுவரை அத்தான் அத்தான் என்று அழைத்துப் பாசமாகப் பேசி வளைய வந்த ரேவதியின் சாயம் அவருக்குத் திருமணமானதும் வெளுக்கத் தொடங்கியது. அது சங்கரகோமதிக்கும் சங்கரநாராயணனுக்கும் புரிய அவர்களும் மெதுமெதுவாகப் போக்குவரத்தைக் குறைத்துக் கொண்டனர். இப்போது அவருடன் போய் ஸ்ரீயை ஒப்பிட்டு சங்கரகோமதி பேச, சங்கரநாராயணனுக்கு வருத்தமாகிவிட்டது.
“எம்புள்ளைங்கள நான் அப்படி வளர்க்கல.. ஆனா யாருக்கு என்னனு நாம கண்டோமா?”
“நீ தப்பாவே யோசிச்சா என்ன செய்யட்டும்?”
“சரி சரியாவே யோசிக்கேன். நாளைக்கே ஸ்ரீக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைனு அமைஞ்சாலோ இல்ல கட்டிக் குடுத்தப் பொறவு வெளிநாட்டுக்குப் போற யோகம் வந்தாலோ என்ன ஆகும்? என்ன தான் போன்ல பேசிக்கிட்டாலும் கூட நின்னு அனுசரணையா பேசுதது தானங்க ஒட்டும்”
அவரது குரலில் விரவிக் கொட்டிய ஆதங்கத்தில் இதையெல்லாம் அவர் நெடுநாளாக யோசித்து வைத்துப் பேசுவதாகவே சங்கரநாராயணனுக்குத் தோன்றியது. மனைவியின் கேள்வியும் ஆதங்கமும் சரியானது தான் என்றாலும்?? அவருக்கு மகளிடம் இதைப் பற்றிப் பேச அத்தனை தயக்கமாக இருந்தது. மகளது கண்ணீர் முகம் கண் முன்னே தோன்றி இம்சித்ததில் அவரது முகமும் சேர்ந்தே வாடிப்போனது. கணவரின் முகமாற்றம் சங்கரகோமதிக்கும் வருத்தத்தைத் தர,
“நீங்க ஏன் இப்ப வெசனப்படுதீங்க? இத்தனை வருசமில்லாம இந்த தம்பி கண்ணுல இப்ப ஏன் நம்ம நாச்சி படணும்? அதுவும் நம்ம ஸ்ரீக்கு பார்த்த முதல் வரன் வேற.. எனக்கு என்னவோ இதெல்லாம் கடவுள் சித்தம்னு தோனுது.. கண்டிப்பா நடக்கும்” என்றார் சங்கரகோமதி நம்பிக்கையாக.
அதில் புன்னகைத்தவர், “நாச்சியைக் குடும்பம் குட்டினு பார்க்க எனக்குக் கசக்குமா கோமு? நீ சொல்லுத மாதி நடந்தா எனக்கு சந்தோஷம் தான்.. ஆனா நாச்சி விருப்பம் முக்கியம்” என்றார்.
அதிலேயே சங்கரகோமதியின் முகம் மலர்ந்து போனது. அவர் மகளின் திருமணக் கனவோடு உறங்க ஆயத்தமாக, சங்கரநாராயணனும் பெருமூச்சுடன் படுத்துக்கொண்டார்.
அந்த வீட்டிலுள்ள மூவருமே தத்தம் வசதிக்கேற்ப காலையில் நடந்த விசயத்தை நல்ல விதமாகவே எண்ண, அதன் நாயகியோ கண்களில் உயர்ப்பைத் தொலைத்து அவளறையில் அமர்ந்திருந்தாள்.
‘அஜய் கிருஷ்ணன்’
அவனது பெயர் நினைவுக்கு வந்த நொடி அத்தனை ஆத்திரம் அவளது முகத்தில் வந்து போனது.
‘ராஸ்கல் எவ்வளவு தைரியமா என்கிட்டயே சொல்றான்?’
காலையில் நடந்த அனைத்தும் அவளது மனக்கண்ணில் மீண்டும் ஓட, சண்முகத்தின் மீது அப்படியொரு எரிச்சல் வந்தது.
‘இவர் பையனைக் கல்யாணம் பண்ணிக்க முதல்ல இங்க யாரு ரெடியா இருக்கதாம்? பெரிய மன்மதனைப் பெத்து வைச்சிருக்க நினைப்பு.. என்னமோ நான் சரினு சொன்ன மாதிரி எத்தனை பேச்சு? எல்லாம் அந்த இடியட்டால வந்தது’
கோபம் அஜயின் மேல் ஆரம்பித்து சண்முகத்தின் மீது நிலைபெற்று மீண்டும் அஜயிடமே மையம் கொண்டது. அவனை மீண்டுமொரு முறை பார்த்துவிடக் கூடாது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, அஜய் அதற்கு முன்னரே மறுநாள் அவளது வீட்டிற்குச் செல்வது பற்றி முடிவெடுத்திருந்தான்.
—---------------------
கமிஷனர் அலுவலகமே அந்த காலை வேளையில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. கமிஷனரின் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கோமதி நாச்சியார் அவருக்கு முன் நின்று விறைப்புடன் சல்யூட் வைத்தாள். அவளது வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அவளை அமரச் சொன்ன வெங்கட்ராமனின் முகம் வழக்கத்துக்கு மாறாக படபடப்புடன் இருந்தது.
“மிஸ் மதி.. இந்த கேஸ் ரொம்ப முக்கியம்.. எத்தனை பேர் வேணுமோ அத்தனை பேரை உங்க டீம்ல எடுத்துக்கோங்க.. எனக்கு அந்தப் பொண்ணு சேஃபா வந்தாகணும்” என்று பேச,
“கண்டிப்பா சார்” என்றவளின் குரலில் அத்தனை தன்னம்பிக்கை இருந்தது.
அவளிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர் அவருக்கே சற்று நம்பிக்கை வந்ததோ என்னவோ, அவரது முகத்தில் மெதுவாக அதுவரை அப்பியிருந்த படபடப்பு குறைந்து அங்கே சற்று இளக்கம் தென்பட்டது.
“இந்த ஃபைல்ல கேஸ் பத்தின டீடெய்ல்ஸ் இருக்கு” என்று அவர் நீட்டிய கோப்பை வாங்கிப் பார்த்தவளுக்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள்.
அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, “நீங்க வொர்ரி பண்ணிக்க வேணாம் சார். நான் பார்த்துக்கிறேன்” என்று அளவான புன்னகையுடன் கூறியவள் விடைபெறும் விதமாக எழுந்து நின்று மீண்டும் சல்யூட் அடித்தாள்.
அவர் தலையசைக்கவும் வெளியேறப் போனவளை வெங்கட்ராமனின் குரல் தடுத்தது.
“மதி ஒரு நிமிஷம்”
அவரது குரலில் நின்றவள் அவரது முகத்தை ஏறெடுத்துப் பார்க்க,
“இதை முடிஞ்சளவு கான்ஃபிடன்ஷியலா மெய்ன்டெய்ன் பண்ணுங்க” என்றார் வெங்கட்ராமன்.
“ஷ்யர் சார்” என்று அவருக்குப் பதிலளித்துவிட்டுச் சென்றவளின் முகம் தீவிர யோசனையைக் காட்டியது.
‘எப்பவும் இல்லாம மிஸ்ஸிங் கேஸ்க்கு இந்தளவு படபடக்க வேண்டிய அவசியம் என்ன?’
‘அதுவும் இதை ஏன் சீக்ரெட்டா வச்சுக்கணும்?’
அவளது மனதின் கேள்விகளுக்கு இதுதான் என உறுதியிட்டுச் சொல்ல முடியாதவாறு பல அனுமானங்கள் அவளது மூளையை நிரப்ப, அதே யோசனையுடன் வெளியேறி அவளது கார் அருகே வந்துவிட்டாள். காரிலேறி அமர்ந்ததும் மீண்டும் கையிலிருந்த கோப்பைப் பிரித்துப் பார்த்தாள்.
முதல் பக்கத்திலேயே ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் தான் இருந்தது. புகைப்படத்தில் மெலிதாகப் புன்னகைத்தபடி இருந்தவள் அழகாக இருந்தாள். புகைப்படத்திலிருந்து மீண்டு கீழிருந்த அந்தப் பெண்ணின் பெயர் மீது தன் பார்வையை நிலைக்கவிட்டாள் கோமதி நாச்சியார்.
‘சாஹித்யா’
‘யாரிவள்?’
சிந்தனை ரேகை படிந்து அப்படியே அமர்ந்திருந்தவள்,
“மேடம் கிளம்பலாமா?” என்ற காரோட்டியின் குரலில் தான் தன்னுணர்வு பெற்றாள்.
கருத்துகளைப் பகிர:
id=IwY2xjawHQkNVleHRuA2FlbQIxMQABHTb8obSY_d12Yg-iAti3yMWxTIk7px8_QdFJR1_MWOvhRYJeu_6Xrk0Z4g_aem_Pxj5Q90M-YZcOWbsuOuE3w#post-231
அத்தியாயம் 4
எதிர்பாராமல் வந்து நின்றவனைக் கண்டு சங்கரநாராயணன் அதிர்ந்து நிற்க, சங்கரகோமதி அவனை எதிர்பார்த்தவர் போல அஜயை வரவேற்றார். அதிலேயே அவரது மனம் அஜய்க்கு புரிந்து போனது.
“ஏன் மாமா இப்படி ஷாக்காகி நிற்குறீங்க?” என்று அவன் புன்னகையுடன் சங்கரநாராயணனிடம் கேட்க,
“இல்ல.. இல்ல.. திடீர்னு வரவும் “ என்று சமாளித்தவர்,
“கோமு” என்று குரல் கொடுக்க, அவனுக்கும் தேவ்சரணிற்கும் குடிப்பதற்கு பழச்சாறு கொண்டு வந்தார் அவர்.
“பாட்டி நாங்க வரும்போது தான் சாப்ட்டு வந்தோம்.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு குடிச்சுக்கிறேன்” என்று தேவ்சரண் மறுக்க,
“அரை கிளாஸ் கொடுக்கேன் பாட்டி.. அப்புறம் மிச்சத்த குடிச்சுக்கலாம் சரியா? பைய குடி ஒன்னும் அவசரமில்லை” என்று சங்கரகோமதியும் அவனுக்கு இணையாகக் கேட்க, சரியென்று தலையசைத்து விட்டு,
“மம்மி எங்க காணோம்?” என்றான் ரகசியக் குரலில்.
அதில் கலக்கமாக சங்கரநாராயணன் தன் மனைவியைப் பார்க்க, அவரெங்கே கணவனைப் பார்த்தார்? அவரது கவனம் முழுவதையும் தான் தேவ் பெற்றிருந்தானே!
அவனது குரலில் சிரித்த சங்கரகோமதி, “வேலைக்குப் போயாச்சே உன் மம்மி” என்று ரகசியக் குரலில் அவனைப் போலவே பேச, தேவ்சரணின் முகம் நொடியில் சுருங்கியது.
அவன் பாவமாகத் தந்தையைத் திரும்பிப் பார்க்க,
“இன்னைக்கு தாத்தா பாட்டி கிட்ட பேசு.. நாளைக்கு மம்மி வேலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடியே உன்னைக் கூட்டிட்டு வந்துடுறேன். ஓகே?” என்று டீல் பேசினான் அவன்.
“நாச்சியை ரொம்பப் பிடிச்சிருச்சோ தம்பிக்கு?” என்று சங்கரகோமதியும் அஜயிடம் கேட்க, அவனது விழிகளில் குறும்பு வழிந்தது.
“ஆமா அப்படியே அப்பாவைப் போல.. எந்நேரமும் உங்க பொண்ணு ஞாபகமா இருக்கான்” என்றவன் பேச்சில் தேவ்சரணை மட்டுமல்லாது அவனையும் இணைத்துக் கொண்டான்.
அவன் நேரடியாகப் பேச்சில் இறங்க, சங்கரகோமதி புன்னகைக்க, சங்கரநாராயணன் அவனை நிமிர்ந்து பார்த்தார்.
“இங்க பாருங்க தம்பி.. நான் சொல்லுதேனு தப்பா நினைக்காதீங்க.. பெரியவ கல்யாணமே வேணாம்னு இருக்குதா.. நீங்க உங்க விருப்பத்தை சொன்னப்பவே அதை அவளே சொல்லிருப்பா இல்லையா?” என்று கேட்க, அஜய் புருவத்தைச் சுருக்கித் தலையசைத்தான்.
‘இப்போ என்னத்துக்கு இந்த மனுஷன் இதை ஆரம்பிக்காரு’ என்று சங்கரகோமதி பல்லைக் கடித்துக் கொண்டு அவரைப் பார்க்க,
“நாங்க..” என்றவர் தொண்டையைச் செறுமிக் கொண்டு,
“அவ அம்மா எம்புட்டோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்துட்டா.. ஆனா அவ பேச்சு எம்புடல.. அதான் பெரியவ இருக்கும்போதே சின்னவளுக்கு வரன் பார்த்தோம்” என்றார்.
“அம்மா இதெல்லாம் சொல்லியிருந்தாங்க மாமா”
அவனும் அவர் போக்கிலேயே பேச, தலையசைத்துக் கேட்டுக் கொண்டவர்,
“எதுக்கு இதெல்லாம் சொல்லுதேன்னா.. இதுல அவ என்ன நினைக்கானு தான் முக்கியம்” என்றார்.
அஜய் அவர் சொல்ல வருவது புரிந்து தலையசைத்தான்.
“எங்க கிட்ட வந்து ஐஸ் வைக்காம என் மக கிட்டப் பேசுனு சொல்றீங்க.. உங்க பெர்மிஷனுக்குத் தான் வந்தேன். கிடைச்சிடுச்சு.. தேங்க்ஸ் மாமா” என்று அவன் சொன்னதில்,
“நான் எங்க அப்படிச் சொன்னேன்?” என்றார் அவர் திகைப்புடன்.
“இதோ இப்போ சொன்னீங்களே.. அதுக்கு அதானே அர்த்தம்”
‘அட அற்பப்பதரே’ என்பது போல அவனைப் பார்த்தவர் மனதிற்குள் அவரையும் அறியாமல், ‘மருமகனுக்கும் மாமியாருக்கும் இதில் சரியா ஒத்துப் போகுது.. நாம என்ன சொன்னாலும் அவங்களுக்குச் சாதகமா அதை மாத்தி விடுதாங்க’ என்று நினைத்துக் கொண்டார்.
சங்கரநாராயணன் சொல்ல வந்தது என்னவோ மகள் பிடிக்கவில்லை என்று அன்றே சொல்லிவிட்டாளே.. அதன் பிறகும் இப்படி வந்து பேச வேண்டாம் என்றுதான்! அதை அஜய் வேறுமாதிரி அர்த்தம் பண்ணிக்கொண்டாலும் அவர் என்ன விதத்தில் அதைக் கூறினார் என்று சங்கரகோமதிக்குத் தெரியுமே!
வருங்கால மாப்பிள்ளையின் முன் எதுவும் பேசக்கூடாது என்று அமைதி காத்தவர் அஜயைப் பார்த்தார்.
“நீங்க இம்புட்டு உறுதியா இருக்கப்ப நானும் உடைச்சே சொல்லிடுதேன் தம்பி.. அவளுக்குப் புடிச்சாலும் புடிக்கலனாலும் சரி.. இந்தக் கல்யாணம் நடக்குதது எம்பொறுப்பு” என்று அவர் வாக்குத் தர, அங்கிருந்த இருவரும் இருவேறு மனநிலையில் சங்கரகோமதியைப் பார்த்தனர்.
“தேங்க்ஸ் அத்தை” என்று அஜய் புன்னகையோடு கூற, சங்கரநாராயணன் அதிர்வுடன் மனைவியைப் பார்த்தார். கணவனின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் அவர் முகத்தைத் திருப்ப, அங்கே ஸ்ரீயும் அதிர்ச்சியை முகத்தில் காட்டியபடி நின்றிருந்தாள். அவள் வந்ததை அங்கே யாரும் கவனிக்கவில்லை.
“அட நீயே வந்துட்டியா? எப்பவும் பதினொரு மணியாகிடுமே உன் கோழி கூவ.. அதான் தம்பி வந்ததும் எழுப்பல” என்றவர் வரவேற்கச் சொல்லிக் கண்காட்ட,
“என்னம்மா நடக்குது இங்க?” என்ற ஸ்ரீ சங்கரகோமதியைக் கடுப்புடன் பார்த்தாள்.
“என்னட்டி?” என்று மகளின் கடுப்பை அவர் புரியாமல் பார்க்க,
“அக்காவை இவருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேனு வாக்குக் கொடுத்துட்டு இருக்கீங்க?” என்றாள் கோபத்துடன் அவள்.
அவளது கோபத்தில் சங்கரகோமதி திகைத்துப் போய்ப் பார்க்க, சங்கரநாராயணனுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம் என அவர் மூவரையும் பார்க்க, அஜய் ஸ்ரீயைப் புரியாமல் பார்த்தான்.
“ஏன் ட்டி? அதனால என்ன?” என்ற சங்கரகோமதியின் குரல் அப்போது உள்ளே சென்றிருந்தது.
“என்னைப் பத்தி யோசிக்க மாட்டீங்களா? இவர் என்னடானா என்னைப் பொண்ணுப் பார்க்க வந்துட்டு அக்காவைப் பிடிச்சிருக்குனு சொல்றாரு.. நீங்க என்னடானா அவருக்கே அக்காவைக் கல்யாணம் பேசுறீங்க.. நாளைப்பின்ன இவரைப் பார்க்குறப்ப எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்காதா?” என்றாள் ஸ்ரீ கோபத்துடன்.
அவளது கேள்வியில், “நீ தானட்டி எனக்கு ஒன்னும் வெசனமில்லனு நேத்து ராத்திரி சொன்ன?” என்று சங்கரகோமதியும் மகளிடம் சங்கடமாக முணுமுணுக்க,
“ஆமா சொன்னேன் தான்.. அப்போ அவரை அடுத்துப் பார்க்கப் போறதில்லைனு நினைச்சேன்.. ஆனா இங்க நடக்குறது அப்படியா இருக்கு? நானும் அக்காவும் கடைசிவரை உறவாடணுமா வேணாமா?” என்று வேறு அவள் கேட்டு வைக்க,
சங்கரகோமதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.
‘இப்பத்தான் பெரியவளுக்கு ஒரு விடிவுகாலம்னு நினைச்சா சின்னக்கழுதை இப்படிப் பேசுதாளே’ என்று அவர் கலக்கத்துடன் அமர, தேவ்சரண் வேகமாக எழுந்து அவரருகே போய் நின்றுகொண்டு,
“நீங்க ஏன் பாட்டி கிட்ட கத்திப் பேசுறீங்க? உங்களால தான் பாட்டி ஃபீல் பண்றாங்க” என்றான் ஸ்ரீயை முறைத்தவாறு.
‘பாருடா பால்டப்பாவுக்கு முறைப்பை’ என்று எண்ணி உதட்டைச் சுளித்தவள், தாயைக் கவனித்தாள்.
“தாத்தா பாட்டிக்குத் தண்ணீ எடுத்துட்டு வாங்க” என்று சங்கரநாராயணனையும் அவன் ஏவ, ஸ்ரீ எடுத்து வந்து தந்தாள்.
“கோமு என்னட்டி பண்ணுது?” என்று அவர் உருகிப்போய்க் கேட்க, அதைப் பொருட்படுத்தாமல் இளைய மகளின் முகம் பார்த்தார் அவர்.
“என்னட்டி என்னென்னவோ சொல்லுதியே..” என்று அவர் தவிப்புடன் கேட்க,
“பாட்டி அவங்க கூடப் பேசாதீங்க” என்றான் தேவ்சரண்.
அதில் ஸ்ரீ அவனை முறைப்புடன் பார்க்க, சங்கரகோமதி புன்னகைக்க முயன்றார்.
அதுவரை அமைதியாக இருந்தவன், “எதுக்குத்தை இப்போ இவ்வளவு டென்ஷன்? ஸ்ரீ சொல்றது நியாயமா தான இருக்கு?” என்றான் அஜய்.
‘புலி எதுக்கு புல்லைத் தின்ன சரினு சொல்லுது?’ என்று ஸ்ரீ சந்தேகமாக அஜயைப் பார்க்க,
“என்ன மாப்பிள்ளை சொல்லுதீங்க?” என்றார் அவரும் புரியாமல்.
“நாளைப்பின்ன நான் வந்து போகும்போது ஸ்ரீக்கு சுருக்குனு இருந்தா நல்லாவா இருக்கும்? இப்போதான் எனக்கும் புரியுது. பேசாம முதல்ல பேசுன மாதிரி ஸ்ரீயையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அஜய் சொல்ல,
“என்ன?” என்று எழுந்து விட்டாள் ஸ்ரீ.
“டாடி.. நோ” என்று ஸ்ரீயை விட அதிகமாக தேவ்சரண் மறுப்புக் காட்ட, ஸ்ரீ அஜயை விடுத்து தேவ்சரணை முறைத்தாள்.
“எதுக்குடா நோ?”
“நீங்க பேட்.. எனக்கு அந்த மம்மி தான் வேணும்” என்று அங்கிருந்த நாச்சியின் புகைப்படத்தைக் காட்டினான் அவன்.
“ஏன் நான் வேணாம்?”
அவள் விடுவதாக இல்லை.
“ஸ்ரீ அவன் சின்னப் பையன். வளர்ந்த எனக்கே இப்போ தான் உன் அருமை பெருமை புரியுது. அவனும் போகப் போகப் புரிஞ்சுப்பான்” என்று அஜய் ஊடே வர, ஸ்ரீ பல்லைக் கடித்தாள்.
“அப்போ அக்கா மேல இருக்க லவ்?”
“லவ் எல்லாம் வரும் போகும். அது எல்லாம் மேட்டரா?”
“எதே? அது மேட்டர் இல்லாம எது மேட்டர்?”
“கல்யாணம் தான் மேட்டர் பேபி”
அஜய் கண்ணடித்தபடிக் கூற, ஸ்ரீ மிரண்டு போய் அவனைப் பார்த்தாள். அவளது பாவனையில் அவன் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்க, என்ன முயன்றும் அதில் அவனால் வெற்றிபெற முடியவில்லை. அவன் சத்தமாகச் சிரிக்க, அனைவரும் புரியாமல் அவனைப் பார்த்தனர். ஸ்ரீ மட்டும் கண்டுகொண்டாள்.
“அத்தான்.. ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க” என்று அவள் அழுகுரலில் கூற,
“அரைப்பிடி உலக்கு சைஸ்ல இருந்துட்டு நீ என்னை ப்ராங்க் பண்றியா? எப்படி இருந்துச்சு என்னோட ப்ராங்க்?” என்றான் அவன் சிரித்தபடி.
அப்போதுதான் மற்றவர்களுக்கும் இருவரது விளையாட்டு புரிய, இளைய மகளைக் கண்டனத்துடன் பார்த்தார் சங்கரகோமதி. அதில் ஸ்ரீ,
“சும்மா விளையாடுனேன் மா.. அத்தானா வரப் போறவர் கிட்ட இப்படிக் கூட விளையாடலனா எப்படி?” என்றாள் குறும்புடன்.
“நீ வாயைத் திறக்காத.. எனக்கு ஒரு நிமிசம் மூச்சே அடைச்சுப் போச்சு” என்று அவர் கோபமாகக் கூற, அவள் தான் அவரை சமாதானம் செய்தாள்.
அஜய் மேலும் சிறிது நேரம் அங்கிருந்து பேசிவிட்டு தேவ்சரணைக் கூட்டிக் கொண்டுக் கிளம்ப, சங்கரகோமதியும் ஸ்ரீயும் உற்சாகமாக அவனை வழியினுப்பி வைத்தனர். ஸ்ரீக்கும் அஜயைப் பிடித்துப்போக, சங்கரநாராயணன் இனி இதில் தான் சொல்ல என்ன இருக்கிறது என்று தடுமாறி நின்றார். எதற்கும் நாச்சியிடம் பேசிப் பார்ப்போம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.
வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே தவமணியிடமிருந்து அஜய்க்கு அழைப்பு வந்துவிட்டது. அவன் புன்னகையுடன் அழைப்பை உயிர்ப்பிக்க,
எடுத்ததும், “கிளம்பிட்டியா?” என்று கேட்ட தவமணியின் குரல் அத்தனை பதட்டத்தைச் சுமந்து வந்தது.
“ரிலாக்ஸ் மா.. வந்துட்டே இருக்கேன்”
“எம்புட்டு நேரம்லே ஆகும்? உங்க அப்பா வந்து கேட்டா என்னனு நான் சொல்லுவேன்? அப்பாவும் மவனும் இப்படி என்னைய அலைக்கழிக்கீங்க”
“எதாவது சொல்லி சமாளிங்க.. நான் இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்”
“என்னத்த சொல்லிச் சமாளிக்க? அங்க நம்ம உறவுக்காரங்க கண்ணுல யார் கண்ணுலயும் பட்டு அந்த மனுஷன் காதுக்கு விஷயம் போச்சுனா என்னைய உண்டு இல்லைனு பண்ணிடுவாருலே உங்கப்பா”
“இப்ப தான்மா முதல் படியில காலை வைக்கிறோம்.. இன்னும் எவ்ளோ இருக்கு? இதுக்கே இப்படி பயந்தா எப்படி?”
“மொத படிக்கே எனக்கு வடியா வருது.. இதுல மொத்த படியும் கடக்க நினைச்சாலே அடிவயிறு கலங்குது”
“ஹாஹா.. ம்மா நான் பார்த்துக்கிறேன்.. இந்த சிட்டி ஏசிபி-யோட மாமியார்.. தைரியமா இருக்க வேணாமா?”
“என்னத்த தைரியமா இருந்து?” என்று அலுத்தபடி அவர் திரும்ப, அங்கே சண்முகம் கடுகடுவென்ற முகத்துடன் நின்றிருந்தார்.
அதிர்வுடன் தன்னாலே இரண்டடி பின்னால் நகர்ந்த தவமணியின் கரங்களிலிருந்து கைபேசி நழுவ, அது கீழே விழுந்ததில் அலைபேசியிலிருந்த பேட்டரி தனியாக வந்து விழுந்தது.
“என்ன நடக்குது?” என்று சண்முகம் கேட்க,
பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்க முயன்றவரால் அதுகூட முடியவில்லை.
“உன்ட்ட தான் கேட்கேன்.. என்ன நடக்குது? எங்க போய்ருக்கான் அவன்?” என்று அவர் கோபமாகக் கேட்க,
“பார்..க் போகணும்னு தேவ் அடம் புடிக்கவும்…” என்றவரின் வார்த்தைகள் பாதியிலேயே மீண்டும் தந்தியடிக்க ஆரம்பித்தன.
“பொய் சொல்லுதியா? எப்ப இருந்து இந்தப் பழக்கம்?” என்று அவர் தீயாய் முறைக்க,
அதில் மிரண்டு, “இல்லங்க.. அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போறேனுட்டு போனான்” என்றார் தலைகுனிந்தபடி.
“நான் அம்புட்டு சொல்லியும் எம்பேச்சைக் கேட்காம அவன் அங்க போய்ருக்கான்.. நீயும் அவனை வழியனுப்பி வைச்சிருக்க.. அப்புறம் நான் இந்த வீட்ல எதுக்கு?”
“..................”
“என் முடிவு அப்ப ஒன்னேமே இல்லைல?”
“அப்படி இல்லங்க”
“அப்படித்தான்.. இதுக்குலாம் என்ன அர்த்தம்? ஏதோ ஒருதரம் என் முடிவு பிசகிப் போச்சுனு அம்மாவும் மவனும் இப்படி நடந்துக்குறீங்களா?”
என்ன முயன்றும் அவரால் தன் குரலில் வழிந்த கலக்கத்தை மறைக்க முடியவில்லை. அது அப்படியே தவமணியைச் சென்று சேர, அவருக்கும் என்னவோ போலாகி விட்டது.
“என்ன நீங்க என்னென்னவோ பேசுதீங்க? அப்படிலாம் இங்க யாரு நினைக்கா?”
“அப்படித்தான் நினைக்கான் அவன்.. இத்தனை வருசம் இப்படித்தான் இருந்தானா?”
“இல்ல தான்”
“அப்போ இன்னைக்கு மட்டும் இப்படிப் பண்ணுதான்னா என்ன அர்த்தம்னு வெளங்கலயா உனக்கு?”
‘எனக்கு வெளங்கலயாவா? தேவைதான்.. எல்லாம் அவனைச் சொல்லணும்’
“நான் அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லியும் அவன் அங்க போய்ருக்கான்னா.. வரட்டும் நான் பேசிக்கிறேன்” என்றவர்,
“இதுக்கு நீயும் கூட்டு வேற” என்று மனைவியை முறைத்துவிட்டுக் கோபமாக வெளியேறிவிட்டார்.
அவர் வெளியேறியதும்தான் தவமணியால் சீராக மூச்சு விடவே முடிந்தது. அவர் சென்று பத்து நிமிடத்தில் எல்லாம் அஜயும் தேவ்சரணும் வந்துவிட்டனர்.
வந்தவுடனே, “பாட்டி மம்மி இல்ல.. அந்த பாட்டி தாத்தா தான் பார்த்தோம்” என்று தவமணியிடம் தேவ்சரண் அங்கு நடந்ததையெல்லாம் அவனது மொழியில் சொல்ல, அவர் கேள்வியாக மகனைப் பார்த்தார்.
“டியூட்டிக்குப் போய்ட்டா மா.. அவங்க அம்மா அப்பா கிட்டப் பேசிட்டு வந்தேன். அவங்க எல்லாருக்கும் ஓகே.. உங்க மருமகளை மட்டும் சரி கட்டணும்”
அஜய் சிரித்துக்கொண்டே கூறியதில் தவமணி, “உன் அப்பானு ஒரு ஜீவன் நம்ம வீட்ல இருக்கே.. அவரை யாரு சமாளிப்பா?” என்றார்.
“அதான் நீங்க இருக்கீங்களே?”
“வெளையாடாத அஜய்.. இப்பத்தான் உங்க அப்பா என்கிட்ட அந்தப் பேச்சுப் பேசிட்டுப் போகுதாரு.. நான் உன்கிட்ட போன்ல பேசுனதைக் கேட்டுட்டாரு”
“அய்யய்யோ அப்புறம் என்னாச்சு?”
“என்னாகும்? அவர் எதை எது கூட முடிச்சுப் போடுவாருனு தெரியாதா?”
தவமணி தலையைப் பிடித்துக்கொண்டுச் சொல்ல, அஜய் அமைதியானான். பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் அமைதியானதில் தேவ்சரண் இருவரையும் கேள்வியாகப் பார்க்க, அஜய் தான் முதலில் தன்னுணர்வு பெற்று முகத்தை சீராக்கினான்.
“நான் அப்பாட்ட பேசுறேன்மா.. முதல்ல அவ சரினு சொல்லட்டும்” என்று அவன் சொல்ல,
“அந்தப் பொண்ணும் தான் வேணாம்னு சொல்லுது.. அப்பாவும் சொல்லுதாரு.. நீ ஏம்லே இப்படி வீம்பா இருக்க?” என்றார் தவமணி ஆதங்கமாக.
“ம்மா” என்றவனின் குரல் அவ்வளவு அழுத்தமாக மறுப்பைச் சுமந்து வந்தது.
“தேவ்.. நீ போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ”என்று மகனை உள்ளே அனுப்பி வைத்தவன் தவமணியைக் கண்டனப் பார்வை பார்த்தான்.
“என்னால ஒரு சண்முகத்தையே சமாளிக்க முடியல.. நீங்களுமா?”
“அதுக்குச் சொல்லல அஜய்” என்றவரும் அவனிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று திணறித்தான் போனார்.
கணவனுக்கும் மகனுக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழிப்பது வழமையான ஒன்றுதான் என்றாலும் திருமண விசயத்திலும் அப்படி இருக்க வேண்டுமா? என்று மனதிற்குள்ளாகவே கலங்கிப் போனார்.
அவரது கலக்கத்தைப் பார்த்தவன் சற்றே தன் சுணக்கத்தை ஒதுக்கி வைத்து, “நான் பார்த்துக்கிறேன்மா” என்றான் நம்பிக்கையாக. மகனின் நம்பிக்கையான பேச்சில் தவமணியின் முகம் கொஞ்சம் தெளிந்தது.
—----------
அனுமதியின் பேரில் கோமதி நாச்சியாரின் அறைக்குள் நுழைந்தான் சிவராமன். ஏ2 காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர்.
அவரது வணக்கத்தை ஏற்று, “உட்காருங்க சிவா” என்று அவள் இருக்கையைக் காட்ட, அமர்ந்தவன் கேள்வியாக அவளது முகத்தைப் பார்த்தான்.
“ஒரு மிஸ்ஸிங் கேஸ்” என்று ஆரம்பித்தவள் கேஸ் பற்றிய விவரங்களைக் கூறி தன்னிடம் இருந்த கோப்பை நகர்த்த, அதை வாங்கிப் பார்த்தான் சிவா.
“இந்தக் கேஸ்க்கு என்கூட அசிஸ்ட் பண்ணப் போறது நீங்க தான்” என்றும் கூற, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“யெஸ் மேம்”
“இது சம்பந்தப்பட்ட விஷயம் நம்ம டிபார்ட்மெண்ட்ல கூட வெளில போகக் கூடாது” என்றும் சேர்த்துச் சொல்ல, சிவராமனின் விழிகள் வியப்பில் ஒரு நிமிடம் விரிந்து பின் எப்போதும் போலாகியது.
“ஓகே மேம்” என்ற அவனது பதிலில் மேலும் சிறிது நேரம் அந்த கேஸைப் பத்தி அவனிடம் பேசியவள்,
“இப்போ சாஹித்யா பிஜிக்குப் போகணும்” என்றபடி எழுந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து அவனும்!
அடுத்த இருபதாவது நிமிடத்தில் சாஹித்யா தங்கியிருந்த பிஜியில் இருவரும் இருந்தனர். அந்த பிஜியின் உரிமையாளர் நிர்மலா ஏகத்துக்கும் பதட்டமாக இருந்தார். கோமதி நாச்சியார் அவரை விழிகளால் துளைத்தவாறு அமர்ந்திருக்க, சிவராமன் தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.
“எப்போ இருந்து இந்த பிஜி நடத்திட்டு இருக்கீங்க? எத்தனை பேரு இருக்காங்க? எல்லாரும் வொர்க்கிங் விமன்ஸா?”
இப்படிப் பொதுவான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தவன் சாஹித்யாவின் புகைப்படத்தை அவருக்கு முன்னால் நகர்த்தினான்.
“இவங்கள தெரியுமா?”
அதுவரை ஏன் எதற்கு என்றே தெரியாமல் இருந்தவர் சாஹித்யாவின் புகைப்படத்தைப் பார்த்து இன்னும் குழம்பிப் போனார்.
“தெரியும் சார். இங்க தான் தங்கியிருக்காங்க”
“தங்கியிருக்காங்கனா? இப்ப இருக்காங்களா?”
“ரெண்டு நாளா இந்தப் பெண்ணைப் பார்க்கல சார்.. ஏன் சார் எதாவது பிரச்சனையா?”
பயத்துடன் வெளிவந்தன அவரது வார்த்தைகள்.
அவரது கேள்விக்குப் பதில் சொல்லாமல், “இந்தப் பொண்ணோட ரூம் மேட்ஸ் இருக்காங்களா?” என்று கோமதி நாச்சியார் கேட்க,
“இல்ல மேடம்.. சிங்கிள் ஷேரிங் இந்தப் பொண்ணு” என்றார் அவர்.
“க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாராவது இங்க? இல்ல அந்தப் பொண்ணைத் தேடி யாராவது இங்க வருவார்களா?”
கோமதி நெற்றியைச் சுருக்கியபடி கேட்க, “இல்ல மேம்.. யார் கூடவும் அதிகம் பேசாது இந்தப் பொண்ணு.. வேலை வேலையை விட்டா ரூம்.. ரொம்பவே அமைதி” என்றார் நிர்மலா.
“நல்லா யோசிச்சுச் சொல்லுங்க நிர்மலா.. நீங்க சொல்ற சின்ன இன்பர்மேஷன் கூட எங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்” என்று சிவராமன் கேட்க,
“இல்ல சார். நெஜமாவே அந்தப் பொண்ணுக்கு யார் கூடவும் பழக்கமில்ல.. நானே ரெண்டு தடவை எதார்த்தமா பேச்சுக் கொடுத்தேன்.. ஆனா அந்தப் பொண்ணு சரியா பதில் பேசல.. ஒரு ஒதுக்கம் தெரிஞ்சது. சரினு நானும் விட்டுட்டேன்” என்றார் அவர்.
“ஒருவேளை அந்தப் பொண்ணு இங்க வந்தா எங்களுக்குத் தகவல் சொல்லுங்க” என்றபடி கோமதி நாச்சியார் எழுந்து கொள்ள, சிவராமனும் எழுந்தான்.
அடுத்ததாக சாஹித்யா பணிபுரியும் நிறுவனத்திற்குச் சென்று விசாரிக்க, அங்கும் அவர்களுக்கு உதவக்கூடிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இப்படி இருந்தால் அடுத்த நகர்வு எந்த மாதிரி எடுத்து வைப்பது என்பது புரியாமல் கோமதி நாச்சியார் திகைத்து விழித்தாள்.
“ஸ்ட்ரேன்ஜ்”
அவளது உதடுகள் முணுமுணுத்தன.
“என்ன மேடம்? எதாவது சொன்னீங்களா?” என்று சிவராமன் கேட்க,
“நத்திங் சிவராமன்.. நாளைக்கு அவங்க போன் கால் ஹிஸ்டரி வரவும் அதுல எதாவது க்ளூ கிடைக்குதானு பார்ப்போம்” என்றவள் மணியைப் பார்த்துவிட்டு அவனைக் கிளம்புமாறு சொன்னாள்.
சிவராமன் கிளம்பவும் தானும் வீட்டிற்குக் கிளம்பியவளுக்கு வழியெங்கும் சாஹித்யா நினைவுகள் மட்டுமே!!
‘அதெப்படி நண்பர்களே இல்லாம ஒரு பொண்ணு?’
யோசிக்க யோசிக்க மீண்டும் குழப்பமே வந்தமர, ப்ளூடூத்தைக் காதுகளில் மாட்டிக் கொண்டவள் விழிகளை மூடினாள். அதில் கசிந்து வந்த இசை மெல்ல அவளை இலகுவாக்கினாலும் சாஹித்யா ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருந்தாள்.
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள:
அத்தியாயம் 5
உணவருந்திக் கொண்டிருந்த கோமதி நாச்சியார் அடிக்கண்ணால் தாயைப் பார்த்தாள். இட்லியை விண்டு சாம்பாரில் தோய்த்தவாறே, “என்னம்மா? என்கிட்ட எதாவது பேசணுமா?” என்று அவள் கேட்க, முதலில் தயங்கியவர் பின் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டார்.
“அந்தத் தம்பி பேசுனத திரும்ப யோசிச்சியா நாச்சி?” என்று கேட்க,
அந்தக் கேள்வியில் நிமிர்ந்து தாயைப் பார்த்தவள் கையிலிருந்த இட்லியைத் தட்டில் போட்டுவிட்டு, “அதைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு?” என்றாள் புருவங்களை உயர்த்தி.
“அதான் உன் கல்யாணத்தைப் பத்தி”
“அதைப்பத்தியும் தான் யோசிக்க என்ன இருக்கு?”
மகளின் கூரிய பார்வையை சமாளிக்க முடியாமல் திணறியதெல்லாம் ஒருநொடி தான். பின் முடிவெடுத்தவராக அவளை நிமிர்ந்து பார்த்தார்.
‘நான் பெத்தது இதுக்கே இவ்வளவு திமிரு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்? இவ போக்குல இதுக்கு மேல விடக்கூடாது’ என்று முடிவெடுத்தவராக மகளைப் பார்க்கத் தாயின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்தவளுக்கு அவருடைய முடிவும் முன்கூட்டியே தெரிந்ததில் முகம் கடுகடுத்தது.
“அந்த தம்பிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கேன்”
“வாழப் போறது நான்”
அழுத்தமாக வந்தது அவளது வார்த்தைகள். இதுவரை வீட்டில் அவள் உபயோகிக்காத குரல். அந்தக் குரலே அவளிடம் மீண்டும் இதைப்பற்றி பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்க, அதை இடக்கையால் புறந்தள்ளினார் சங்கரகோமதி.
“நான் இல்லைன்னா சொல்லுதேன்? அந்தத் தம்பியை பிடிக்கலனா வேற பார்ப்போம்”
அவளுக்கும் மேலே அழுத்தத்துடன் சங்கரகோமதி பேச,
“கோமு.. வேலையை விட்டு டென்ஷனா வந்திருப்பா.. இப்பவே பேசணுமா? காலைல பேசிக்கலாம்” என்று சங்கரநாராயணன் மனைவியை அடக்கப் பார்க்க, அதற்குமேல் உணவு இறங்காமல் சாப்பாட்டின் பாதியிலேயே கை கழுவினாள் நாச்சியார்.
“என்ன நாச்சி இது? கோவத்தை சாப்பாட்டுல காட்டக்கூடாதுனு நீ தான சொல்லுவ?”
சங்கரநாராயணன் மகளிடம் வருத்தமாகக் கேட்க,
“சாப்பிட முடில ப்பா” என்று தந்தையிடம் சோகையாகப் புன்னகைக்க முயன்றவள் தாயிடம் திரும்பினாள்.
“இந்தப் பேச்சு ஆரம்பிச்சப்பவே நான் தான் தெளிவா சொல்லிட்டேனே ம்மா.. பின்ன ஏன் திரும்ப ஆரம்பிக்கிறீங்க? எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. இதுக்கு மேல எதாவது என்கிட்ட சொல்லணுமா?”
“ஏன் விருப்பம் இல்ல?”
“ஏன்னா என்ன காரணம் சொல்ல சொல்றீங்க?”
“என்ன காரணமோ அதைச் சொல்லு நாச்சி.. உன் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாலே விருப்பமில்லனு முடிச்சுடுத.. நீ எவ்வளவு பெரிய அதிகாரியா வேணும்னா இரு.. ஆனா உன் திமிரு என்கிட்ட செல்லாது. இந்த வீட்ல எனக்கு நீ மவ மட்டுந்தான் ”
சங்கரகோமதி வீம்பாகக் கூற, சங்கரநாராயணன் மனைவியைக் கண்டனப் பார்வை பார்த்தார்.
“என்ன ஏன் பார்க்குதீங்க? அவ அவ்ளோ திமிரா பேசுதாளே அதுக்கு கண்டிப்பைக் காணோம்.. உடனே என்கிட்ட வந்துடுவீங்க” என்று கணவனுக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்தவர் மகளிடம் திரும்பி,
“இப்போ என்னதான் சொல்லுத நீ?” என்று அதட்ட,
அதற்கு மேல் அவளால் அங்கே பொறுமையாக உட்கார முடியவில்லை. விருட்டென்று எழுந்து கொண்டவளின் விழிகள் கலங்கிச் சிவக்க ஆரம்பிக்க, திகைத்துப் போய்ப் பார்த்த சங்கரகோமதியைத் தாண்டி விறுவிறுவென்று அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
கோபப்படுவாள்.. ஏதாவது பேசுவாள் என்று நினைத்திருக்க அவள் கலங்கிய விழிகளோடு அறைக்குச் சென்றதில் சங்கரகோமதி திகைத்தார். இப்படியொரு எதிர்வினையில் எதை எதையோ மனம் யோசிக்க, அவரும் கலங்கிப் போனார்.
மகளின் நிலை சங்கரநாராயணனுக்கு நன்றாகவே புரிந்தது. அதைவிட மனைவி இப்படி கலக்கத்துடன் அமர்ந்திருக்க, அதைத் தாங்க முடியாமல் மனைவியின் தோள் தொட்டார் சங்கரநாராயணன்.
“எதாவது வேலை டென்ஷனா இருக்கும் கோமு.. அதை உன்மேல காட்டிட்டுப் போறா.. நீ ரூம்க்கு போ. நான் இதையெல்லாம் எடுத்து வைச்சுடுதேன்” என்று கூற,
அதுவரை மகளின் மேல் கவனமாக இருந்தவர் கணவரைத் திரும்பிப் பார்த்தார்.
எதையோ சொல்லவோ கேட்கவோ வந்தவர் எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு அவர்களது அறைக்குச் செல்ல, உணவு மேசையை ஒழுங்கு படுத்தியவர் நேராக பெரிய மகளின் அறைக்குச் சென்றார்.
அவர் நினைத்தது போலவே மகள் உறங்கியிருக்கவில்லை. தந்தையின் வரவை எதிர்பார்த்தது போல கதவையும் அவள் திறந்தே வைத்திருந்தாள்.
சங்கரநாராயணன் உள்ளே நுழைந்ததும், “என்னப்பா இதெல்லாம்?” என்றாள் ஒவ்வாத குரலில்.
“பெத்தவ வேற என்ன பாப்பா செய்வா? நீயும் தான் உன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கக் கூடாதா?”
சங்கரநாராயணன் கேட்க, “எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படிப் பேசுறீங்களே..” என்றாள் ஆதங்கத்துடன் அவள்.
“கடந்த காலத்து கசப்பை நினைச்சு உன்னோட வருங்காலத்தைத் தொலைக்கணுமாடா? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. அந்தப் பையனும் நல்ல பையனா தான் தெரியுறாரு”
“போதும் ப்பா.. அதைப் பத்தி பேச வேணாம். எனக்குப் பிடிக்கல”
அவள் பிடிவாதமாக மறுக்க, சங்கரநாராயணன் பெருமூச்சுடன் மகளைப் பார்த்தார்.
“அம்மா இந்த சம்பந்தத்தை முடிச்சே ஆகணும்னு இருக்கா.. என்னால சமாளிக்க முடியும்னு தோனல”
“நீங்க இன்வால்வ் ஆக வேணாம் ப்பா.. என்கிட்ட பேசுனா நான் பேசிக்கிறேன்” என்று அவள் கூற, தலையசைத்து விட்டுத் திரும்பியவரின் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்தன.
சங்கரகோமதி அறையின் வெளியே கைகளைக் கட்டியவாறு அவர்களை அழுத்தத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார். தந்தையின் திகைப்பை உள்வாங்கி நாச்சியும் திரும்பிப் பார்க்க, அவளுக்கும் அங்கே அன்னையைக் கண்டது அதிர்ச்சி தான். சங்கரகோமதியின் பார்வையிலிருந்து எதையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எதையெல்லாம் கேட்டார்? என்ன கேட்கப் போகிறார்? எப்படி சமாளிப்பது? என்றெல்லாம் இருவரும் குழம்பி ஒருவரையொருவர் பார்த்து நிற்க, அவர்களது கணிப்பைப் பொய்யாக்கியவர் எதுவும் பேசாமல் கீழிறங்கிச் சென்றுவிட்டார்.
அந்த அமைதி சங்கரநாராயணனுக்கு சரியில்லாமல் தெரிய அவருக்கு உண்மையில் நா உலர்ந்துவிட்டது.
“ப்பா”
நாச்சி அவரை உலுக்க, அவர் பதட்டத்துடன் மகளைப் பார்த்தார்.
“என்ன பாப்பா பண்றது?”
“கேட்டாங்களா இல்லையானு தெரில.. போய் பேசுங்க.. நான் வேணும்னா வந்து பேசவா?”
“இல்ல இல்ல.. ஏற்கனவே அவ கோவத்துல இருக்கா.. நானே பேசுதேன்” என்றவரும் கீழிறங்கிச் செல்ல,
‘ஊஃப்’ என்ற பெருமூச்சுடன் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் நாச்சி. அவளது நினைவு அஜயைச் சுற்றி தான் சுழன்று கொண்டிருந்தது. அவனது நினைவில் சண்முகமும் சேர்ந்தே வந்தார். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்போதும் கேட்பது போலவே தோன்ற, கோமதி நாச்சியாரின் முகம் கடுகடுத்தது.
அறைக்கு வந்ததும் சங்கரகோமதி எதையாவது கேட்பார் என்று எதிர்பார்த்த சங்கரநாராயணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி கணவனைப் பார்த்தவர் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார். எதையும் பேசாமல் கேட்காமல் அவர் படுத்திருக்க, அவரது அந்த அமைதி சங்கரநாராயணனுக்கு பயத்தைத் தந்தது.
தானாகவே பேசிவிடலாமா என்று யோசித்தவருக்கு எதைப் பேசுவது? எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. அந்தக் குழப்பத்திலேயே சில நிமிடங்கள் கரைந்தது.
பின் தயக்கத்தை விடுத்து, “கோமு” என்று மெலிதான குரலில் அவர் அழைக்க, அந்த அழைப்பிற்கும் பதிலில்லை. சங்கரகோமதி கத்தி சத்தமிட்டு சண்டையிட்டிருந்தால் கூட அவருக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. இந்த அமைதி அவரது மனதைப் பிசைய, அவர் மீண்டும் அழைத்தார். எந்த பதிலும் இல்லை. அதற்குமேல் என்ன செய்வதென்று தெரியாமல் படுத்துக் கொண்டவருக்கு உறக்கம் கிஞ்சித்தும் வரவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டார்.
“கோமு எதாச்சும் பேசேன்.. எனக்கு என்னமோ மாதி இருக்கு”
தயக்கமும் கலக்கமுமாக அவர் பேச, விழிகளைத் திறக்காமல் அப்படியே படுத்திருந்தார் சங்கரகோமதி. மனைவி உறங்கவில்லை என்பது அவருக்கு உறுதி.
“நீ தூங்கலனு தெரியும் கோமு” என்று அவர் கூற, அப்போதும் அவரிடம் அசைவு இல்லை. அதற்குமேல் என்ன பேசுவதென்று அவருக்கும் தெரியவில்லை. எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டார். இருவருக்குமே அந்த இரவு நித்திரையில்லாத இரவாகிப் போனது.
அன்று மட்டுமல்ல மறுநாளும் சங்கரகோமதியின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவே இருந்தன. எப்போதும் எழுந்து கொள்ளும் நேரம் கூட அவர் எழுந்து கொள்ளவில்லை. சங்கரநாராயணனுக்குத் தான் தவிப்பாக இருந்தது.
ஒரே அறையில் அருகருகே படுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது என்னவோ போலிருக்க, விடிந்ததும் அவர் எழுந்து வெளியே வந்துவிட்டார். வீட்டின் நடுவே சங்கரநாராயணன் நடைபயின்றபடி இருக்க, வழக்கமான ஜாகிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்தாள் கோமதி நாச்சியார். தன்னைப் போல அடுக்களையின் பக்கம் நகர்ந்த அவளது விழிகள் அங்கே தன் அன்னையைக் காணாமல் சுருங்கின. மகளின் பார்வையைக் கவனித்தவராய்,
“எதுவுமே பேச மாட்டிக்கா நாச்சி.. இப்போவும் முழிச்சு தான் இருக்கா ஆனா வெளில வரல பாரு” என்று கலக்கமாகக் கூறும்போதே சங்கரகோமதி வெளியே வரும் அரவம் கேட்டது. சங்கரநாராயணன் ஆவலுடன் மனைவியின் முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போக, நாச்சிக்கும் அதே நிலை தான். அவரது முகம் வீங்கி இமைகளின் மேலும் கீழும் தடித்திருந்தது. மூக்கைச் சுற்றி வேறு சிவந்திருக்க, அவரது முகத்தைப் பார்த்து இருவரும் பயந்துவிட்டனர்.
“என்னம்மா இது?” என்றபடி கோமதி நாச்சியார் வேகமாக அன்னையின் அருகே வர, அவளை நிமிர்ந்து அவர் பார்த்த பார்வையில் அவளது விழிகள் திகைப்பைக் காட்டியது. அப்படியொரு அந்நியமான பார்வை அது! அதே பார்வையில் சங்கரநாராயணனையும் பார்த்தவர் அவர்களைக் கடந்து அடுக்களைக்குள் சென்றார்.
ஒரு வார்த்தை பேசவில்லை. பேசவும் தோன்றவில்லை. வழக்கமாக இருக்கும் காலை நேர வேலைகளை எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் அவர் செய்ய ஆரம்பிக்க, தந்தையும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
மகளின் பார்வையில் சங்கரநாராயணன் மனைவியிடம் பேச முற்பட்டார்.
“கோமு.. நீ வேணும்னா ரெஸ்ட் எடு.. நான் பார்த்துக்கிடுதேன்” என்று அவர் மனைவியிடம் பேச முற்பட, எந்தப் பேச்சும் காதில் விழாதவாறு அவர் தொடர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். காபி கலந்தவர் அதைக் கூட யாருக்கும் எடுத்துக் கொண்டு போய் கொடுக்காமல் ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட, அவரது செயலில் சங்கரநாராயணன் விக்கித்துப் போனார். சங்கரகோமதியின் கோபம் மௌனமாக அங்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தாங்க முடியாமல் கண் கலங்கிவிட்டார் சங்கரநாராயணன்.
“இதுக்குப் போய் கலங்குவாங்களா? அம்மா கோபமா இருக்காங்க.. அவங்க கோபம் கொஞ்சம் குறையட்டும் ப்பா.. பேசுவாங்க.. நீங்க கவலைப்பட்டு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க” என்று மெதுவாகத் தந்தையிடம் கூறியவள் தன் அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே தன்னறைக்குச் சென்றுவிட்டாள்.
கோமதி நாச்சியார் வேலைக்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் கீழிறங்கி வந்து ஸ்ரீக்கு வீடே வித்தியாசமாகத் தெரிந்தது. முதலில் தொலைக்காட்சி அணைத்து வைக்கப்பட்டிருக்க, அடுக்களைக்குள் எட்டிப் பார்த்தால் அங்கு சங்கரகோமதி காலை சமையலில் சேர்ந்த பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவாறு ஹாலில் சங்கரநாராயணன் அமர்ந்திருந்தார். தந்தையின் முகமே எதுவோ சரியில்லை என்று காட்டிக் கொடுக்க, ஸ்ரீயின் கால்கள் தாமாக தந்தையை நோக்கி நகர்ந்தன.
“நம்ம வீடாப்பா இது? இவ்ளோ அமைதி? இந்த நேரத்துக்கு அம்மாவோட ஃபேவரிட் நாடகம் ஒலிபரப்பாயிருக்கணுமே” என்றபடி புன்னகையுடன் ஸ்ரீ அவரருகே அமர, இளைய மகளை நிமிர்ந்து பார்த்தவர் புன்னகைக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல சங்கரகோமதியின் இந்த அதீத மௌனம் அவரை வாள் கொண்டு அறுக்க ஆரம்பித்திருந்தது. காலை உணவைக் கூட அவர் உண்டிருக்கவில்லை.
எப்போதும் என்ன கோபமாக இருந்தாலும் முறைத்துக் கொண்டே ஆயினும் சாப்பிட அழைத்துவிடுவார் சங்கரகோமதி. இன்று அந்த அழைப்பும் இல்லாமல் போனதில் அவர் மிகவும் உடைந்து போயிருந்தார்.
‘இனி தன்னுடன் பேசவே மாட்டாளா?’ என்ற அச்சமே அவர் மனதுக்குள் உழல,
“ப்பா என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்றாள் ஸ்ரீ.
இளைய மகளின் எந்தக் கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
“அம்மா கூட சண்டையா? அதுக்காகவா இப்படி உட்கார்ந்திருக்கீங்க? அம்மா கோவத்தைப் பத்தித் தெரியாதா?” என்று ஸ்ரீ அவளாக யூகம் செய்து பேச,
சங்கரநாராயணனின் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் அவரது பாதத்தில் விழுந்து தெறித்தது.
“ப்பாஆ அழுறீங்களா?”
அதிர்ந்து போய் ஸ்ரீ கேட்க, சங்கரநாராயணன் தலைநிமிரவில்லை. அவரை அப்படிப் பார்க்கவே ஸ்ரீக்கு என்னவோ போலிருக்க, அவள் வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“ம்மா அப்பாவை என்ன சொன்னீங்க?” என்று ஸ்ரீ கோபமாகக் கேட்க, பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த சங்கரகோமதியின் கரங்கள் மகளின் கேள்வியில் அப்படியே நின்றன.
“உங்கள தான்மா கேட்குறேன்” என்றபடி வலுக்கட்டாயமாக சங்கரகோமதியைப் பிடித்துத் தன்பக்கம் திருப்ப, அன்னையின் முகம் அதற்கு மேல் அதிர்ச்சியைத் தந்தது.
“ம்மா என்னாச்சு? ஏன் உங்க முகம் இப்படி இருக்கு?”
பதட்டத்துடன் ஸ்ரீ கேட்க, எதற்கும் அவரிடம் பதிலில்லை.
“என்ன சண்டை மா?”
“.........”
“என்ன சண்டையாகவும் இருக்கட்டும்.. அதுக்காக நீங்க இப்படி அழுவீங்களா?”
எத்தனையோ விதமாகக் கேட்டுப் பார்த்த ஸ்ரீ ஒருகட்டத்தில் ஓய்ந்து போய் மீண்டும் தகப்பனிடமே வந்தமர்ந்து,
“என்னாச்சுப்பா?” என்றாள் கலக்கத்துடன்.
விவரம் தெரிந்ததில் இருந்து அன்று வரை இப்படி அவர்கள் இருவரையும் அவள் பார்த்ததே இல்லை. தாயின் அமைதியும் தந்தையின் கண்ணீரும் அவளை அலைக்கழிக்க, தந்தையைப் பார்த்தாள். அவர் அப்படியே அமர்ந்திருந்தார். எந்தவித பதிலும் கூற முன்வரவில்லை. நேரம் நகர்ந்ததே தவிர, இருவரும் மாலை வரை அப்படியே இருக்க, அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல் தமக்கையை அலைபேசியில் அழைத்துவிட்டாள் ஸ்ரீ.
“சொல்லு ஸ்ரீ” என்றவளிடம், ஸ்ரீ நடந்ததைக் கூற அமைதியாய்க் கேட்டுக் கொண்டவள்,
“நான் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட பேசுறேன்.. நீ வை” என்றாள் கோமதி நாச்சியார்.
அதேபோல இரவு வந்தவள் உடை மாற்றிவிட்டு நேராக சங்கரகோமதியைத் தேடிச் செல்ல, சங்கரநாராயணனும் மகளின் பின்னே சென்றார்.
மகளைப் பார்த்தும் சங்கரகோமதி முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் இருக்க, நாச்சியார் சங்கரகோமதியின் அருகில் வந்து அமர்ந்தாள். ஸ்ரீயும் என்னவோ ஏதோவென்று அறைக்குள் வர, அவளைத் திரும்பிப் பார்த்தாள் கோமதி நாச்சியார்.
அந்தப் பார்வையில் தானாக, “நீங்க பேசுங்க” என்றபடி ஸ்ரீ வெளியேறினாள்.
“என்னம்மா பிரச்சனை? ஏன் இப்படி இருக்கீங்க? அப்பாவை ஏன்மா தள்ளி வைக்குறீங்க? என்மேல கோவம்னா என்கிட்ட காட்டுங்க.. அப்பாவைப் பாருங்க.. ஒரே நாள்ல எப்படி ஓய்ஞ்சு போய்ட்டாருனு” என்று சொன்னவள் திரும்பி தந்தையைப் பார்த்தாள்.
உண்மையில் சங்கரநாராயணன் அப்படித்தான் இருந்தார். அவர்களது முப்பதாண்டு திருமண வாழ்க்கையில் இதுபோல சங்கரகோமதி நடந்து கொண்டதில்லை. சண்டையும் சச்சரவும் இல்லாத வீடில்லை. அவர்களுக்குள்ளும் அப்படியே! ஆனால், அப்போதும் கூட இதுபோல மௌனத்தின் பின்னால் சங்கரகோமதி அடைந்து கொண்டதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒரே நாளில் சொந்த வீட்டிலேயே அவ்வளவு அந்நியமாக உணர்ந்தார் அவர். மனைவியைச் சுற்றித்தான் அவரது உலகம் என்பது அவரறிந்த ஒன்று தான். ஆனால், தான் இத்தனை தூரம் பாதிக்கப்படுவோம் என்று அவரும் கூட நினைத்ததில்லை.
மகளின் எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து பதிலில்லை. அவருக்குப் பதில் பேச இஷ்டமும் இல்லை. குறிப்பாக சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவர் திரும்பி மகளைப் பார்த்தார்.
“எப்படியும் இப்ப நீங்க தூங்கப் போறதில்லன்னு தெரியும்.. இப்போ நீங்க என்கிட்ட பேசப் போறீங்களா இல்லையா?” என்றவள்,
“சரி என்ன விடுங்க.. அப்பா கிட்ட பேசுங்கம்மா” என்றாள் தணிந்துவிட்ட குரலில்.
அதில் சங்கரகோமதியின் முகம் இன்னும் அதீத கோபத்தில் சிவந்தது. அவளையும் அறியாமல் சங்கரகோமதியின் மனதிலுள்ள கோபத்தை இன்னும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள் நாச்சியார். அவள் என்ன பேசின போதும் சங்கரகோமதி இறங்கி வரவில்லை.
அன்று மட்டுமல்ல.. அடுத்த இரண்டு நாட்களும் அப்படியே செல்ல, வீட்டில் யாருக்கும் நிம்மதி என்பதே இல்லாமல் போனது. சங்கரநாராயணன் மனைவியின் சிறு இருமல் சத்தத்திற்கும் தும்மல் சத்தத்திற்கும் கூட முகத்தில் ஆவலைத் தேக்கி மனைவியைப் பார்க்க, ஸ்ரீக்கும் தாயின் இந்த ஒதுக்கம் வேதனையைத் தந்தது. அவளும் தன் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்ள, கோமதி நாச்சியாருக்கு வீடு வரவே பிடிக்கவில்லை.
வீட்டின் இந்த நிலையில் அவளையும் அறியாமல் அஜய் அவ்வப்போது மனதிற்குள் வந்து போனான். அஜயின் நினைவு வரும் போதெல்லாம் கடுகடுக்கும் முகத்தை இருக்கும் இடமறிந்து மறைப்பதே அவள் வேலையாகிப் போனது. அன்றும் அப்படித்தான்!
சிவராமனுடன் பேசிக்கொண்டே அவளது அலுவலகத்திற்குள் நுழைந்தவள் அங்கே அஜயைக் கண்டதும் புருவத்தைச் சுருக்கினாள்.
‘இவன் எங்க இங்க?’
நெற்றி ஒருநொடி சுருங்கி விரிந்து மீண்டும் முகம் பழைய நிர்மலமான நிலைக்கு மாறியது.
அஜய் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதுமே அவள் கம்பீரம் தான். ஆனாலும் அவள் உடுத்தியிருந்த காக்கி உடை அதை அதிகம் எடுத்துக் காட்டுவதைப் போலிருந்தது. விழிகளில் தீட்சண்யமும் அலட்சியமும் ஒருங்கே வழிய அவள் நடந்து வந்ததைக் கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் விழிகளில் தெரிந்த ரசனையில் மானசீகமாகப் பல்லைக் கடித்தவள் அவனைத் திரும்பியும் பாராமல் தன்னறைக்குச் சென்றுவிட்டாள். சிவராமனும் அவளைத் தொடர்ந்து உள்ளே செல்ல, அஜய் புன்னகை மாறாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் சிவராமன் வெளியே வர, ஒரு காவலர் வந்து அஜயை உள்ளே போகச் சொன்னார்.
‘ஹ்ம்ம் ஸ்வீட் தான்’ என்றவனுக்கு முகமெங்கும் புன்னகை. அவனுக்கு அப்படியே நேர் எதிராக கடுகடுவென்ற முகத்துடன் கோமதி நாச்சியார் அமர்ந்திருந்தாள்.
“என்ன விஷயம்?”
அவளுக்கு அவன் மீது அத்தனை எரிச்சலாக வந்தது. திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவை எத்தனையோ பாடுபட்டு வீட்டில் சம்மதிக்க வைத்திருந்தாள். அதைப்பற்றி அவ்வப்போது சிறு சிறு முணுமுணுப்புகள் எழுந்தாலும் பெரிதாக யாரும் அவளை வற்புறுத்தியது கிடையாது. ஆனால், ஒரே நாளில் அதை உடைத்து வீட்டின் நிம்மதியையே கெடுத்துவிட்டான் என்ற கோபம் தான் அஜய் மீது அவளுக்கு! அந்தக் கோபம் அவளது வார்த்தைகளிலும் தப்பாது வெளிப்பட்டது.
அவளது கோபத்தை ரசித்தவாறே, “என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று அவன் கேட்க, அவனது அந்த தைரியத்தில் அதிகமாகவே சீண்டப்பட்டாள் கோமதி நாச்சியார்.
“எங்க வந்து என்ன பேசிட்டிருக்கீங்க.. டோண்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்?”
“ரொம்ப சரி.. இங்க வந்து இதைப் பத்தி பேசுறதுல எனக்குமே உடன்பாடு இல்ல தான். வீட்டுக்குப் போனா உன்னைப் பிடிக்க முடிய மாட்டேங்குதே.. நானும் என்னதான் செய்ய?”
“வீட்டுக்குப் போனியா? எப்போ?”
அவள் திகைத்துப் போய்க் கேட்க, அவள் மரியாதையை விடுத்து ஒருமைக்கு மாறியதில் மனதில் சில்லென்ற தென்றல் வீசியது. அது அவன் பார்வையிலும் வெளிப்பட,
‘டேய் டேய்.. கழுவி ஊத்துறதுக்கெல்லாம் காதல் பார்வை பார்த்து வைக்கிறடா நீ.. ஆனாலும் அநியாயம் பண்ற’ என்று அவனது மனசாட்சியே அவனைக் கேலி பேச, அதைக் கண்டுகொள்ளாமல் கோமதி நாச்சியாரைப் பார்த்தான் அவன்.
“ரெண்டு நாள் முன்னாடி.. நீ சீக்கிரம் கிளம்பிட்டதா அத்தை சொன்னாங்க”
அவனது அத்தை என்ற விழிப்பில் கடுப்பானவள், “யாரு யாருக்கு அத்தை?” என்று சீற,
“ஸ்ஸ்ஸ்.. ஊசி வெடி மாதிரி வெடிச்சுட்டே தான் இருக்கணுமா? உன்னைக் கல்யாணம் பண்ணக் கேட்டுட்டு இருக்கேன்.. உன் அம்மாவை அத்தைனு சொல்லாம என்னன்னு சொல்றது?” என்றான் அஜய் அவளது கோபத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல்.
“எனக்கு வர்ற கோவத்துக்கு…” என்றவளை முடிக்க விடாமல்,
“பெண்டிங்ல இருக்க எந்த கேஸையாவது என்மேல போட்டு உள்ள வச்சு லாடம் கட்டணும்னு தோனுதா?” என்றான் அஜய் ஆளை விழுங்கும் புன்னகையுடன்.
அவள் பதில் பேசாமல் அவனைப் பார்க்க,
“உடனே தி பெஸ்ட் லாயரோட என் மாமியார் என்னை பெய்ல எடுக்க வந்துடுவாங்க” என்றவனிடம் அந்த புன்னகை கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது.
அவனது அந்த அதீத நம்பிக்கை அவளுக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போலிருந்தது.
“ஸோ? என் அம்மாவைக் கைக்குள்ள போட்டுட்டு இந்தக் கல்யாணத்தை நடத்துறதா ப்ளானா?”
புயலை உள்ளடக்கிய குரலில் அவள் கேட்க, கண் சிமிட்டியவன்,
“பொண்ணைக் கைக்குள்ள போட ஆசை தான்.. ஆனா போலீஸம்மா அநியாயத்துக்கு ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்களே” என்றான் குறையாக.
அவனது வார்த்தைகளில் அவள் அவனை முறைத்துப் பார்க்க, எழுந்து கொண்டான் அவன்.
“சரி ரொம்ப டென்ஷன் ஆகாத.. நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்து சென்றவன் பின்னால் திரும்பி,
“சீக்கிரம் எஸ் சொல்லிடு கோம்ஸ்.. ரொம்ப நாள் வெய்ட் பண்ண முடியும்னு தோனல” என்று ஆழ்குரலில் சொல்லிவிட்டுச் செல்ல, அந்தக் குரலின் அழுத்தமும் ஆழமும் கோமதி நாச்சியாரின் இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க வைத்தது.
கருத்துக்களைப் பகிர:
novels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231
அத்தியாயம் 6
சரண்தேவ் உணவருந்தாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். அவனருகில் அஜய் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருக்க, தவமணி அதைப் புன்னகையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
“இப்போ சாப்பிடப் போறியா இல்லையா தேவ்?” என்று அஜய் அதட்டுவதை எல்லாம் காது கொடுத்துக் கூடக் கேட்காமல் அவன் வீம்பாக இருக்க, அஜய் தான் இறங்கி வந்தான்.
“மம்மி வேலைல பிஸியா இருக்காங்க தேவ்.. நீ சமத்தா சாப்பிடு.. நான் உன்னை மம்மி ஃப்ரீயா இருக்கப்போ அவங்களைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறேன்”
“ஆல்ரெடி பண்ணுன ப்ராமிஸே நீங்க பிரேக் பண்ணிட்டீங்க டாடி.. மம்மியைப் பார்க்க போனப்போ என்னையும் ஏன் கூட்டிட்டுப் போகல?”
“நீ தான் ஸ்கூல் போயிருந்தியே!”
“என்னை ஸ்கூல்ல வந்து கூட்டிட்டுப் போய்ருக்கலாம்ல”
எல்லா பதிலுக்கும் அவன் ஒரு கேள்வி வைத்திருக்கவும் அலுப்புடன் தாயைப் பார்க்க, அவரும் சிரிப்புடன் அவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
“என்னம்மா இவன் இவ்வளவு வீம்பு பிடிக்கிறான்?”
தவமணி, “அப்படியே அவங்க தாத்தா மாதி” என்று புன்னகைக்க, வெளியே சென்றிருந்த சண்முகம் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தார்.
“யாரு என்ன மாதி?” என்று கேட்டுக்கொண்டே அவர் உள்ளே வர,
“தேவ் பத்திப் பேசிட்டு இருந்தோம்” என்றவர், “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்றபடியே எழுந்தார்.
சண்முகம் தலையசைக்கவே, அவருக்கும் உணவை எடுத்து வைக்க, உணவருந்த ஆரம்பித்தவர் அஜயும் தேவ்சரணும் சோபாவில் அமர்ந்தவாறு மெல்லிய குரலில் கிசுகிசுப்பாகத் தங்களுக்குள் பேசிக் கொள்வதைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினார்.
“என்னவாம் தவம்?” என்று மனைவியிடம் கண்ணைக் காட்டி சண்முகம் கேட்க,
“நாச்சியைப் பார்க்கக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அடம் பிடிக்கான்” என்று புன்னகையுடன் சொன்னவர், சொல்லியதும்தான் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்றே உணர்ந்தார்.
‘அய்யய்யோ’ என்று நாக்கைக் கடித்துவிட்டு அவர் விழிக்க, சண்முகத்தின் முகம் நொடியில் தன் இளக்கத்தைத் தொலைத்தது.
“தேவ்” என்று அவர் கண்டிப்புடன் அழைக்க,
“ஏங்க அவன் சின்னப்பையன்.. அவனுக்கு என்ன தெரியும்? அதான் அஜய் இருக்கான்ல.. அவன் எடுத்துச் சொல்லுவான்” என்றார் தவமணி.
தவமணி சொல்லும்போதே தேவ் எழுந்து உணவுமேஜை அருகே வந்து நின்றான்.
“சொல்லுங்க தாத்தா” என்றவனிடம்,
“இன்னும் சாப்பிடலையாமே.. ஏன்?” என்று அவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டுக் கேட்டதில் தேவ் தானாகத் திரும்பி அஜயைப் பார்த்தான்.
‘வந்து காப்பாற்று’ என்ற பாவனை அதில் தெரிய, ‘இவ்வளவு நேரம் என்னை அலைய வைச்சில்ல உனக்கு வேணும்டா’ என்று மனதில் நினைத்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தந்தையின் உதவி கிடைக்காது என்று புரிந்து தேவ் பாவமாகப் பாட்டியைப் பார்த்தான்.
“இட்லி வைச்சுக் கொண்டு வரட்டா தேவ்? சாப்பிடுதியா?” என்று அவர் கேட்க, அவனுக்கு சரியென்று சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
“சரி பாட்டி” என்றவன் அமைதியாக அங்கேயே அமர்ந்துகொள்ள,
“சாப்பாட்டுல வீம்ப காட்டக் கூடாது தேவ்.. மணி என்ன ஆகுது? இம்புட்டு நேரம் சாப்பிடாம கெடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? எதுக்கு இப்போ சாப்பிட மாட்டேனு வீம்பு பிடிக்கிற?”
அப்போதும் விடாமல் சண்முகம் ஆரம்பிக்க,
“இனிமேல் செய்ய மாட்டேன் தாத்தா” என்றான் அவன் சிறியதாகிவிட்ட குரலில்.
அப்போதும் எதற்காக அவனது இந்த வீம்பு என்பதை அவன் சண்முகத்திடம் சொல்லாமலேயே இருக்க, அஜயின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.
‘சரியான கேடி’ என்று மகனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டவனின் எண்ணங்கள் மெதுமெதுவாக அவனது நாயகியின் பக்கம் சென்றன.
அவனது நாயகி அந்த நேரம் ஒரு நெடியவனின் முன் அமர்ந்திருந்தாள். கூடவே சிவராமனும்! இருவரும் சாஹித்யாவைப் பற்றி விசாரிக்க அந்த க்ளினிக்-கிற்கு வந்திருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த சாஹித்யாவின் அலைபேசியின் அழைப்பு வரலாறு பட்டியலில் அந்த க்ளினிக்கின் எண் தொடர்ந்து இருக்க, நூல் கிடைத்துவிட்ட திருப்தியில், அங்கே கிளம்பியிருந்தனர்.
“எனக்குத் தெரிஞ்ச டீடெய்ல்ஸ் அவ்வளவு தான் மேடம். அந்தப் பொண்ணு இங்க ட்ரீட்மெண்ட் எடுக்குறாங்க. கவுன்சிலிங் செஷன் அப்போ கால் பண்ணிக் கேட்டுட்டு வருவாங்க.. மத்தபடி வேறெந்த டீடெய்லும் தெரியல” என்று அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட கோமதி நாச்சியார்,
“என்ன விதமா அவங்க பாதிக்கப் பட்டிருந்தாங்க?” என்றாள் யோசனையாக.
விஜயராம் கார்த்திக்கேயன் அவளது நிலை பற்றி கூறவே, அதை கவனமாகக் கேட்டுக் கொண்டவளுக்கு இப்போது சாஹித்யாவின் நண்பர்களற்ற பின்னனி நன்றாகவே புரிந்தது.
“எத்தனை மாசமா இங்கே ட்ரீட்மென்ட் எடுக்கிறாங்க?”
“ஆறுமாசமா எடுத்துட்டு இருக்காங்க.. ஆக்சுவலி அவங்க செஷன் கூட இந்த மன்த்தோட முடியுது”
“காதல் அந்த மாதிரி எதுவும்?”
“இல்ல.. அவங்க பயமே அதுமாதிரியான ரிலேஷன்ஷிப்-குள்ள அவங்கள போகவிடல” என்றவன் தன் முன்பிருந்த சாஹித்யாவின் கோப்பினை மூடி வைத்தபடி நிமிர்ந்தான்.
கோமதி நாச்சியாரிடம் மீண்டும் ஒரு சோர்வு வந்து அமர்ந்து கொண்டது.
‘என்ன கேஸ் இது? ஒரு நூல் கூட உருப்படியா கிடைக்க மாட்டேங்குது’ என்று அலுப்பாக நினைத்துக் கொண்டவள் தான் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி நோட்டமிட்டாள்.
“நீங்க முன்னாடி ******* ஹாஸ்பிடல்ல தானே இருந்தீங்க.. எதுக்காக அங்கே இருந்து வெளில வந்தீங்க?”
அவளது கேள்வியில் புன்னகைத்தவன், “எல்லாருக்கும் இருக்க கனவு தானே? சின்னதா இருந்தாலும் நமக்கான க்ளினிக்னு ஒன்னு இருக்கணும்னு?” என்றான் கேள்வியாக.
அவனது கேள்விக்குத் தலையசைத்தவள் சிவராமனைப் பார்க்க,
“இந்த கேஸ் ரிலேட்டடா எதாவது சொல்லணும்னு தோனிச்சுனா எந்த நேரமா இருந்தாலும் கூப்டுங்க” என்று தன் அலைபேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டான் அவன்.
“ஷ்யர் சார்” என்று ராம் கார்த்திக்கேயன் கை கொடுக்க, இருவரும் வெளியே வந்தனர்.
“என்ன மேடம் எந்த க்ளூவும் உருப்படியா கிடைக்க மாட்டேங்குது” என்று சிவராமனும் சலிக்க, கோமதி நாச்சியார் தலையசைத்தாள்.
“இன்னைக்கு சேர்த்தா பொண்ணு காணாமல் போய் ஆறு நாளாகிடுச்சு.. நம்ம கிட்ட கேஸ் வந்து மூனு நாள் ஆகிடுச்சு.. எல்லா செக்போஸ்ட்-க்கும் அலர்ட் கொடுத்தாச்சு.. அவங்க தங்கியிருந்த பி.ஜி, அவங்க வேலை பார்க்கிற கம்பெனி, ட்ரீட்மெண்ட் எடுக்குற ஹாஸ்பிடல்னு எல்லா இடமும் விசாரிச்சாச்சு.. எங்கேயும் லூப்ஹோல் இல்ல.. அதான் வித்தியாசமாவும் இருக்கு” என்றவள் எதையோ யோசித்துவிட்டு,
“அந்தப் பொண்ணு உயிரோட இன்னும் இருக்கும்னு உங்களுக்குத் தோனுதா சிவராமன்?” என்றாள் யோசனையாக.
அவளது கேள்வியில் சிவராமன் யோசனையுடன், “இதுக்கு எப்படி பதில் சொல்றதுனு தெரியல மேம்” என்றவன்,
அவளது அடுத்து வரப்போகும் கேள்விக்கும் சேர்த்தே, “ஈக்குவலி சான்ஸ் இருந்தாலும் என்னவோ இன்ஸ்டின்க்ட் தப்பாவே சொல்லுது.. மே பி எந்த விதமான ஹோப்பும் இதுவரை இல்லைன்றதால அப்படித் தோனுதா இருக்கும்” என்றான்.
தலையசைத்தவளுக்குக் கடத்தலுக்கான காரணம் பற்றி பல யூகங்கள்! வெறும் யூகம் மட்டுமே! எதிலும் உறுதி இல்லை.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கமிஷனரிடமிருந்து அழைப்பு வர, கோமதி நாச்சியார் உயிர்ப்பித்தாள்.
“...........”
“யெஸ் சார்”
“............”
“நான் அங்க தான் சார் வந்துட்டு இருக்கேன். அரைமணி நேரத்துல வந்துடுறேன்” என்றபடி அலைபேசியை அணைத்தவள், அலைபேசியை நொடிக்கொருதரம் தன் முகவாயில் இடித்தவாறு பயணம் செய்து கொண்டிருந்தாள். அவளது முகம் தீவிர யோசனையில் இருந்தது. பயண நேரம் கடக்க, சொன்னது போலவே அரைமணி நேரத்தில் கோமதி நாச்சியார் கமிஷனர் முன்பு நின்றிருந்தாள்.
“என்ன மதி? எந்த இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லனு சொல்றீங்க?” என்று கமிஷனர் அதிருப்தியாகக் கேட்க, கோமதி நாச்சியார் அதுவரை விசாரித்து அவள் சேர்த்த விவரங்களை எல்லாம் அவரிடம் சொன்னாள்.
“ஃபோனை ட்ரேஸ் பண்ணாலும் அவங்க பிஜியைத் தான் லாஸ்ட் லொகேஷனா காட்டுது” என்று மதி சொல்வதைக் கேட்டவருக்கு அவளது முயற்சிகள் புரிந்தாலும் அவர் மேலிடத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் ஆயாசத்துடன் கோமதி நாச்சியாரைப் பார்த்தார்.
“டோன்ட் மேக் எக்ஸ்க்யூஸஸ் மதி” என்று அவர் சொல்ல, கோமதி நாச்சியாரின் முகம் கன்றியது.
உடனே, “கேஸ்ல என்ன நடக்குதோ அதை உங்க கிட்ட ரிப்போர்ட் பண்ணுனேன். இது எக்ஸ்க்யூஸ் மேக் பண்றதா உங்களுக்குத் தோனிச்சுனா ஐ’ம் சாரி சார்” என்றபடி எழுந்துகொண்டாள் அவள்.
அவளது வருத்தமும் புரிய, “அட உட்காருங்க மதி.. உங்களுக்கு நான் உங்க கிட்ட இப்படிப் பேசுறேனு கவலை.. இதுக்கு மேலே நான் அங்கே பேச்சு வாங்குவேன்” என்றவர் தன் முன்னிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி யோசனையில் ஆழ்ந்தார். அவரது வார்த்தைகள் அதுவரை அவளது மனதிலிருந்த கேள்வியைத் தொண்டை வரை கொண்டு வந்துவிட்டது.
“எனக்கு ஒரு டவுட் சார். கேட்கலாமா?”
மதியும் யோசனையுடன் கேட்க, வெங்கட்ராமன் அவளது கேள்வியை யூகித்தே தலையை ஆட்டினார்.
“யார் சார் இந்தப் பொண்ணு? சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லாத ஒரு பொண்ணு.. அவளைக் காணோம்னு இவ்வளவு ப்ரஷர்”
“உண்மையைச் சொல்லணும்னா எனக்கும் தெரியல.. நானும் ரிப்போர்ட்டிங் தான் பண்ணிட்டு இருக்கேன். இதுக்குப் பின்னாடி பெரும்புள்ளி ஒருத்தர் இருக்காருனு மட்டும் புரியுது”
அவரது பதிலில் கோமதி நாச்சியாரின் முகம் காட்டிய பாவனையில்,
“இல்ல மதி.. நீங்க நினைக்குற மாதிரி இல்ல. அவங்களுக்கு சாஹித்யாவோட சேஃப்டி தான் முக்கியம்னு க்ளியரா தெரியுது” என்றார்.
“அப்போ ஓகே சார்.. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க.. சீக்கிரமே இந்த கேஸோட எதாவது ஒரு பாசிட்டிவ் சைடோட உங்கள மீட் பண்றேன்” என்றபடி கோமதி நாச்சியாரும் எழுந்துகொள்ள, வெங்கட்ராமன் தலையசைத்தார்.
ஏதாவது ஒரு திருப்பம் கிடைத்துவிடாதா? என்று எண்ணியபடியே வெளியேறியவள் நேராக வீட்டிற்குச் சென்றாள். அவள் எதிர்பார்க்கும் திருப்பம் எதிர்பாராத விதமாக வரக் காத்திருப்பது தெரியாமல் சோர்வுடன் பயணித்தவள், வீட்டிற்குள் நுழையும்போதே சலிப்பாக உணர்ந்தாள்.
வேலை பிரச்சனை பின்னுக்குச் சென்று தன் வீட்டின் பிரச்சனை பூதாகரமாக அவளைத் தாக்கியது.
‘என்ன இது? இப்படியே இதை வளர்த்துட்டே இருக்காங்களே இந்த அம்மா’ என்றவளுக்கு என்றுமில்லாமல் வீட்டின் அமைதி மனதை அலைக்கழித்தது. இந்த அலைக்கழிப்பிற்குப் பேசாமல் திருமணத்திற்கு சரி என்று கூட சொல்லிவிடலாம் போல என்ற ஆயாசம் தோன்ற, திடுக்கிட்டாள் கோமதி நாச்சியார்.
‘நானா இப்படி நினைச்சேன்?’ என்று நம்பமுடியாமல் தன்னைக் குறித்த சிந்தனையில் அவள் குழம்பிப் போக, அப்போதுதான் அறையை விட்டு சங்கரநாராயணனும் ஸ்ரீயும் வெளியே வந்தனர். இல்லையில்லை! ஸ்ரீ தந்தையை அழைத்து வந்தாள்.
தந்தையின் முகம் அதற்கு மேலும் தன்னைக் குறித்து சிந்திப்பதைத் தடை செய்ய, அவர்களது அருகே சென்றவள், “என்னாச்சு ஸ்ரீ?” என்றாள்.
“அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ அக்கா.. உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிடல் போயிருக்காங்க.. எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. அப்பாவோட ஃப்ரெண்ட் அந்த வெங்கடேஷ் அங்கிள் இருக்காருல.. அவரும் ஹாஸ்பிடலுக்குப் போயிருப்பார் போல.. அப்பாவுக்குப் போன் பண்ணி தங்கச்சி கூட ஹாஸ்பிடல் வராம அப்படியென்ன வேலை? குடும்பம் தான் முக்கியம்னு க்ளாஸ் எடுக்குறாரு”
ஸ்ரீ படபடவென்று நடந்ததைக் கூற, “என்னாச்சு அம்மாவுக்கு?” என்ற கேள்வி தான் அவளிடம் முதன்மையாக இருந்தது. தேவையில்லாமல் யோசித்து எதையும் இழுத்துக் கொண்டார்களோ என்று பயம் வர, அதுவே அவளது கேள்வியாகவும் இருந்தது.
“தெரியல.. போன் பண்ணுனா அட்டெண்ட் பண்ண மாட்றாங்க.. அந்த அங்கிள் பேசிட்டு இருக்கப்பவே அவர் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு.. எந்த ஹாஸ்பிடல்னு எதுவும் தெரியல”
ஸ்ரீயின் குரலிலும் கவலை எட்டிப்பார்க்க, “எப்பவும் பார்க்குற ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்த்தீங்களா?” என்றாள் நாச்சி.
“அப்பா போய்ட்டு இப்போ தான்க்கா வந்தாங்க.. அங்கே அம்மா பேரே OP லிஸ்ட்ல இல்ல.. எங்கே போயிருப்பா உடம்புக்கு என்ன செஞ்சதோனு அப்பா ரொம்ப பயப்படுறாங்க” என்ற ஸ்ரீயின் குரலில் ஆதங்கமும் பயமும் ஒருங்கே கலந்திருந்தது.
‘அப்பா மேல் தான கோபம்.. என்கிட்ட கூட ஏன் சொல்லாம போனாங்க? என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல’ என்ற ஆதங்கமும் தந்தையின் எண்ணங்களை ஒட்டி என்னவாகியதோ என்ற பயமும் ஒருசேர ஸ்ரீயை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
“நான் போய் பார்த்துட்டு வரேன்ப்பா.. ரெண்டு பேரும் மூஞ்சிய இப்படி வைச்சுக்காதீங்க” என்றபடி அவள் திரும்பும் நேரம் வீட்டின் முன் ஆட்டோ வந்து நின்றது.
சங்கரநாராயணன் வேகமாக மனைவியை நோக்கி செல்ல, அவர் ஆட்டோவிற்கு பணத்தைச் செலுத்துவிட்டு உள்ளே வந்தார்.
“என்ன கோமு இப்படி பண்ணிட்ட? என்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாதா? என்ன செய்யுது உடம்புக்கு? என்கிட்ட ஏன் சொல்லல?” என்று அவர் படபடப்புடன் கேட்க, அவரிடம் பதில் சொல்லாமல் அவரைக் கடந்து செல்ல முற்பட்டார் சங்கரகோமதி.
“ம்மா” என்ற நாச்சியின் கண்டனக்குரலை வெகு அலட்சியமாக அவர் கடக்க முற்பட, நாச்சி தன்னைக் கடந்து செல்லவிருந்தவரைத் தன் வலுவான பிடியால் பிடித்து நிறுத்தினாள்.
ஏற்கனவே சாஹித்யாவின் கேஸில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதில் அப்படியொரு சோர்வில் இருந்தவளைத் தன் வீடிருக்கும் நிலை அதிகத்திற்கும் பாதித்தது. அவளது சோர்வும் அயர்வும் கோபமாக உருமாற, அன்னையில் அலட்சியம் அதற்குத் தூபம் போடுவதாக இருந்தது.
“ம்மா உங்க கிட்ட பேசத்தானே நாங்க நிக்கிறோம்.. எத்தனை நாளைக்கு இந்தக் கோவத்தைப் பிடிச்சுத் தொங்கிட்டு இருப்பீங்க?” என்று அவள் கேட்கவும்,
“விடு பாப்பா.. இப்ப பேச வேணாம். அம்மா முகமே ரொம்ப சோர்வா இருக்கு பாரு” என்று சங்கரநாராயணன் கூற, அதுவும் சரியாகப்படவே நாச்சி தன் கைகளை விடுவித்தாள்.
திரும்பி மகளையும் கணவனையும் ஒரு பார்வை பார்த்தவர் ஸ்ரீயிடம் திரும்பி, “என்னால இன்னைக்கு சமைக்க முடியாது” என்று மட்டும் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
“நான் எதாவது ஆர்டர் பண்ணிடுறேன் ப்பா.. நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க” என்று நாச்சி கூறவும்,
“இல்ல பாப்பா.. நான் இங்கேயே இருக்கேன்” என்றபடியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் சங்கரநாராயணன்.
ஸ்ரீயிடம் தந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கண்ணைக் காட்டிவிட்டு, கோமதி நாச்சியார் மேலே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.
முகம் கழுவி உடைமாற்றி என அவளது வேலை அதுபாட்டிற்கு நடந்தாலும் மனதில் தாங்க முடியாத அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்தவள் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாலே வேண்டாத நினைவுகள் தலைதூக்க எதையும் நினைக்கப் பிடிக்காமல் தலையை உலுக்கிக் கொண்டாள்.
கோபம் ஒருபுறம்! ஆற்றாமை ஒருபுறம் என்று அவள் மனம் வெதும்பிப் போய் அமர்ந்திருக்க, நேரம் அவளைக் கேட்காமல் பறந்து கொண்டிருந்தது. மணி எட்டைக் கடந்து சில நிமிடங்கள் சென்றிருக்கும் போது ஸ்ரீ வந்து கதவைத் தட்டினாள்.
“தாழ் போடல.. சும்மா தான் க்ளோஸ் பண்ணியிருக்கு” என்ற குரலில் ஸ்ரீ உள்ளே வந்தாள்.
அவள் வரவும் தான் இரவு உணவு ஆர்டர் செய்ய மறந்தது நினைவுக்கு வர, அவசரமாக அவளே வெளியே வந்தாள்.
“சாரி சாரி ஸ்ரீ.. ஆர்டர் பண்ண மறந்துட்டேன். இனிமேல் ஆர்டர் பண்ணுனா லேட் ஆகும். நான் நேர்ல போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றவள் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்று அனைவருக்கும் இட்லி மட்டும் வாங்கிக்கொண்டு பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டாள்.
ஸ்ரீ போய் சங்கரகோமதியை உணவருந்த அழைக்க, மறுக்காமல் எழுந்து வந்தார் அவர். உணவு கடையில் வாங்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் முகத்தைச் சுருக்கியவர், தனக்குத் தேவையானதை மட்டும் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு அமர, மற்றவர்கள் மனதினில் எழுந்த பெருமூச்சுடன் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டனர்.
அங்கே அசாதாரண அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். சங்கரநாராயணன் மனைவியின் முகத்தை அடிக்கொருதரம் பார்த்தபடி இருந்தார். உள்ளே வந்த பொழுது பார்த்ததற்கு இப்போது முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது. அதுவே போதும் என்பது போல் அவர் இருக்க, ஸ்ரீக்கு மனமெங்கும் கோபம் மட்டுமே! அவள் தாயை அவ்வப்போது முறைத்துக் கொண்டே சாப்பிட, கோமதி நாச்சியார் உள்ளே இறங்காத உணவை வெகுவாகப் போராடி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். இது எதையும் கவனிக்காமல் அல்லது கவனித்தும் அதைப் பற்றிய கவலையில்லாமல் சங்கரகோமதி உணவருந்திக் கொண்டிருந்தார்.
உணவருந்தி முடித்துவிட்டு சங்கரகோமதி எழுந்து கொள்ள, நாச்சி தட்டிலேயே கை கழுவினாள். அதற்கு முன்பே சங்கரநாராயணன் உணவருந்தி முடித்திருந்தார்.
“இருங்கம்மா பேசணும்” என்று அவள் சொல்லச் சொல்ல, சங்கரகோமதி அறையை நோக்கி நடந்ததில் கோபம் தலைக்கேற, கையிலிருந்த தண்ணீர் குடுவையைக் கீழே போட்டு உடைக்க, அது மிகப்பெரும் சப்தத்துடன் கீழே விழுந்தது.
அதில் சங்கரகோமதி திரும்பிப் பார்க்க, ஸ்ரீ உணவை அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டாள்.
“என்ன பாப்பா இது?” என்று சங்கரநாராயணன் ஆட்சேபக் குரலில் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் தாயைப் பார்த்தாள் அவள்.
“பேரு ராம் குமார்.. ஒரே பேட்ச்ல படிச்சோம். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது” என்றவள் இயந்திரகதியில் நடந்ததை சொல்லி முடித்தாள். இப்படி எதாவது இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் அதுவே உண்மையென தெரிய வரும்போது ஸ்ரீ அதிர்வுடன் அக்காவைப் பார்த்தாள். கால்கள் தாமாக தமக்கையை நோக்கிச் சென்றது. நாச்சியின் குரலில் வழிந்த ஏதோ ஒன்றில் அவள் அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டு நாச்சியின் கரங்களைப் பிடித்து நின்று கொண்டாள்.
அதை உணரும் நிலையில் கூட நாச்சி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவள் அழவில்லை. அழக்கூடாது என்ற வைராக்கியம். அதைக் காப்பாற்ற வேண்டி கலங்காமல் செய்தி வாசிப்பதைப் போன்று அவள் சொல்லி முடித்தாலும் அங்குள்ள ஒவ்வொருவரும் அவளது வலியை நன்றாகவே உணர்ந்தனர்.
சங்கரநாராயணனும் ஸ்ரீயும் கோமதி நாச்சியாரை மட்டுமே பார்த்தபடி இருக்க, “இப்போ நான் போகட்டா?” என்று சங்கரகோமதி கேட்டதில் விலுக்கென்று திரும்பினாள் ஸ்ரீ.
“ம்மா உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? அக்கா அவ்வளவு வருத்தப்பட்டு சொல்றாங்க.. எதுவுமே சொல்லாம போகட்டுமானு கேட்குறீங்க? நிஜமா இது நீங்க தானாமா?” என்று வெறுப்புடன் கேட்க, ஸ்ரீயின் வெறுப்பான பேச்சில் சிலிர்த்து எழுந்தார் சங்கரகோமதி.
“நான் பைத்தியம் தான்.. முப்பது வருஷமா எனக்குனு எந்த ஆசபாசமும் வச்சுக்காம புருஷன் புள்ளைனு உங்களுக்குப் பார்த்து பார்த்து பண்ணேன்ல.. நான் பைத்தியம் தான். இந்த வீடு என் வீடு.. இங்க இருக்கவங்க எனக்கான மனுசங்க.. எம்புருஷன் எம்புள்ளைங்கனு நினைச்சேன்.. ஆனா இங்க என் இடம் எதுனு உங்கக்காவும் அப்பாவும் செருப்புல அடிச்சு புரிய வைச்சுட்டாங்க.. கடைசில இந்த வீட்ல உங்களுக்கு ஆக்கிப்போட்டு துடைச்சுக் கழுவுற வேலைக்காரியா தான் உங்க எல்லார் கண்ணுக்கும் நான் தெரிஞ்சுருக்கேன்” என்று ஆவேசம் பாதி, அழுகை மீதியாக அவர் கத்த, சங்கரநாராயணனுக்து சுருக்கென்றிருந்தது.
“என்ன கோமு இப்படிலாம் பேசுத.. நாங்க அப்படியா நினைக்கோம்?” என்று அவர் தவிப்புடன் கேட்க,
“வேற எப்படி நினைக்கீங்க? அவளுக்கு ஒன்னுன்னு ஆகவும் உங்கட்ட தான வந்திருக்கா? அப்பாவும் மகளும் சேர்ந்து என்கிட்ட இதை மறைச்சிருக்கீங்கனா நான் இந்த வீட்ல யாரு? உங்களுக்கு வடிச்சுக்கொட்டட நான் வேணும். ஆனா நல்லது கெட்டதுக்கு வேணாமா?” என்றார் சங்கரகோமதி.
அவரது கேள்வியில் அதுவரை கூட இயந்திரகதியில் நின்ற நாச்சியின் முகம் கசங்கியது.
“எனக்கு உங்க கிட்ட சொல்ல பயமா இருந்ததுமா.. சொன்னா உடனே கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவீங்களோனு.. என்னால அதை ஏத்துக்கவே முடியாதுனு தோனிச்சு. அதான் அப்பா கிட்ட உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன். நீங்க நினைக்கிற மாதிரி இல்ல”
அவளது அந்த பதிலும் சங்கரகோமதிக்கு கோபத்தையே தந்தது.
‘எப்படி? இவங்கப்பா இவ மனசு புரிஞ்சு நடந்துப்பாரு.. நான் உடனே கையைக் காலைக் கட்டிக் கல்யாணம் பண்ணி வைச்சுருவேனா?’ என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது.
“எனக்கு எந்தக் காரணமும் வேணாம் நாச்சி.. நான் ஒரு பொண்டாட்டியாவும் தோத்துட்டேன். அம்மாவாவும் தோத்துட்டேன். இனிமேல் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் முழுசா உங்கப்பா பொறுப்பு. இந்த வீட்ல எப்பவும் போல கூட்டித் துடைக்கிற வேலையோட என் கடமை முடிஞ்சது” என்று சொல்லிவிட்டு நகர, சங்கரநாராயணன் பயந்து போனார்.
மனைவியின் மனதில் இந்த விஷயம் இவ்வளவு தூரம் வடுவாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்லாமல் மறைத்ததற்கு கோபம் என்று மட்டுமே நினைத்திருந்தார். ஆனால், அதை இவ்வளவு தூரம் யோசித்திருப்பார் என்று அவர் எண்ணியிருக்கவில்லை.
“கோமு” என்றழைத்தவாறே
சங்கரநாராயணன் மனைவியின் பின்னே செல்ல, நாச்சியும் ஸ்ரீயும் கூட அவரின் பின்னேயே சென்றனர்.
கருத்துக்களைப் பகிர:
அத்தியாயம் 7
ஒருவர் பின் ஒருவராக மூவரும் அறைக்குள் நுழைவதை சலிப்பாகப் பார்த்தார் சங்கரகோமதி. வீம்புக்காக வேண்டுமென்றோ இல்லை நாச்சியைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் பொருட்டோ அவர் இதைச் செய்யவில்லை. உண்மையில் அவருக்கு மனம் விட்டுப் போயிருந்தது.
இந்த மூன்று நாட்களுமே, எங்கே நான் தவறினேன் என்று அவரை அவரே கேட்டுக் கொள்ளாத கணமில்லை. உண்மையில் அவருக்குத் தோற்றுப்போன உணர்வு தான். வெளியே சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் இந்தக் குடும்பத்தை நான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் அவருள் இருந்தது தான் நிஜம். ஆனால், அந்த கர்வம் அடியோடு ஒழிந்துவிட்டது. அவர் கண்ட புறத்தோற்றம் எல்லாம் மாயையோ என்றே தோன்றியது.
தன் மகள் காதலித்திருக்கிறாள் என்ற செய்தியே அவருக்கு அதிர்ச்சி. திருமணம் வேண்டாம் என்றபோது கூட அவர் காதலென்று நினைத்திருக்கவில்லை. கோமதி நாச்சியார் திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லித்தான் மறுத்திருந்தாள். அவளுடைய வாழ்க்கையை வேறெந்த ஆணையும் நம்பி ஒப்படைக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறிவிட்டாள். எத்தனையோ சமாதானங்கள் சங்கரகோமதி வைத்திருந்தாலும் அதற்கெல்லாம் சேர்த்து அவளிடமும் காரணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பெண்ணைப் பையன் போல வளர்த்தது தான் பிரச்சனையோ என்ற எண்ணமே அவருக்கு வந்துவிட்டது. அதனால்தான் ஒரு வயதிற்கு மேல் பெண்களிடம் இயல்பாகவே இருக்கின்ற திருமணக் கனவுகள் எல்லாம் அவளுக்கு இல்லையோ என்று சிந்தித்தவர் கணவனை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார். இத்தனை போராட்டங்கள் பெரியவள் விஷயத்தில் நடந்ததால் தான் ஸ்ரீக்கு கல்லூரி முடிக்கும்போதே திருமணத்தை செய்துவிட வேண்டும் என்று நினைத்தார். அது இப்படியொரு திருப்பத்தைத் தரும் எனக் கனவிலும் அவர் நினைக்கவில்லை.
மகளுக்குக் காதல் இருந்திருக்கிறது. அதிலும் அது கைகூடாமல் போன விரக்தியில் திருமணமே வேண்டாமென மறுத்திருக்கிறாள் என்றால் அவள் அந்த நேரம் எத்தனை பாடுபட்டிருப்பாள். அந்த நிலையில் ஆறுதலுக்காக மடிசாயக் கூடத் தன்னைத் தேடவில்லையே மகள் என்பதில் அத்தனை வருத்தம். தான் சரியாக மகளைக் கவனிக்கவில்லையோ என்ற குற்றவுணர்ச்சி வேறு வாட்டியது. அதிலும் கணவரும் சேர்ந்து இதை மறைத்திருக்கிறார் என்பது அந்த வருத்தத்தை வடுவாக்கி விட்டிருந்தது. அவரது யோசனையெல்லாம் இப்படியிருக்கையில்,
“ம்மா தப்பு செஞ்சது நான்.. நீங்க எனக்குத் தண்டனை தர்றது நியாயம். அப்பாவும் ஸ்ரீயும் என்ன செஞ்சாங்க?” என்று நாச்சி ஆதங்கமாகக் கேட்க,
‘அப்போ இவங்களாம் ஒன்னு நான் தனியா?’ என்று தான் மூவரையும் பார்த்திருந்தார்.
“ம்மா இப்படி பண்ணாதீங்க.. நான் என்ன பண்ணுனா நீங்க சரியாவீங்க?”
தவிப்புடன் கேட்டவள் பின் தானே யோசித்து முடிவுடன் அன்னையைப் பார்த்தாள்.
“சரி.. நீங்க சொன்னது போல அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? இப்போ நீங்க நார்மல் ஆவீங்களா?” என்று அவளாக யோசித்துக் கேட்க,
மகள் சொன்னதைக் கேட்ட சங்கரநாராயணன் நம்ப முடியாமல் நாச்சியைப் பார்த்தார். நாச்சியும் சொல்லிவிட்டு தந்தையைத் தான் பார்த்தாள். அவரது கண்களில் கூடவே ஒரு ஒளியும் தோன்ற, ஸ்ரீயின் முகத்திலும் கூட ஏதோ ஒரு ஆசுவாசம் தெரிய, அவளுக்கு குற்றவுணர்வாகிவிட்டது.
‘என்னால எத்தனை பேருக்கு கஷ்டம்’ என்று தன்னையே திட்டிக்கொண்டவள் சங்கரகோமதியைப் பார்த்தார். அவர் நம்பாத பார்வையில் மகளைப் பார்த்து வைக்க, அன்னையின் கைகளை எடுத்துத் தனக்குள்ளாக வைத்துக் கொண்டாள்.
“சத்தியமா சொல்றேன்” எனக் கூறவும், சங்கரகோமதியே மகளின் முடிவில் மலைத்துவிட்டார். அதுவரை முகத்திலிருந்த இறுக்கம், தன்னைத் தள்ளி நிறுத்தி விட்டார்களே என்ற ஆற்றாமை எல்லாம் பின்னுக்குச் சென்று மகளுக்கு ஒரு நல்லது செய்து பார்க்க வேண்டுமென்ற இயல்பான தாயின் குணம் வெளிவர ஆரம்பித்தது.
“நிஜமாத்தான் சொல்லுதியா? பேச்சு மாற மாட்டியே” என்று கேட்டவரின் குரலில் வழிந்த ஆசுவாசத்திற்காக எதையும் செய்யலாம் என்றே நாச்சிக்குத் தோன்றியது. அவள் இல்லையென்று தலையசைக்க, சங்கரகோமதிக்கு சந்தோஷமாக இருந்தாலும் மற்றொருபுறம் சந்தேகமாகவும் இருந்தது.
“நீங்க எப்பவும் போல இருப்பீங்களா?”
மகள் டீல் பேச, சங்கரகோமதியின் முகத்தில் அதுவரை இருந்த இளக்கம் மறைந்தது. அவர் எதுவும் பேசாமல் தலையசைக்க, என்னவோ பெரிய பிரச்சனை முடிந்த நிம்மதி அவளிடம்.
“எதுக்கு ஹாஸ்பிடல் போனீங்க?”
அவள் திருமணப் பேச்சை விடுத்து, அன்னையின் உடல்நலத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட, அதுவரை விலகி நின்றிருந்த ஸ்ரீயும் அப்போது ஊடே வந்துவிட்டாள்.
“நான் என்ன பண்ணுனேனு என்மேல கோபமா இருந்தீங்க? என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல? இப்படித்தான் தனியா ஹாஸ்பிடல் போவாங்களா?” என்று முறைத்துக்கொண்டு ஸ்ரீ கேட்க,
“நான் வேற யோசனைல இருந்தேன்.. அதான் யாரையும் கூப்பிடல” என்றவர்,
“என்னவோ திடீர்னு படபடனு வர்ற மாதிரி இருந்துச்சு.. அதான் செக்கப் பண்ண போனேன்.. பக்கத்து வீட்ல மாலாக்கா இந்த ஹாஸ்பிடல்ல நல்லா பார்க்குறதா சொன்னாங்க அதான் எப்பவும் போற ஹாஸ்பிடல் போகாம அங்க போனேன். நான் ஹாஸ்பிடல் போனேனு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?” என, ஸ்ரீ நடந்ததைக் கூறவும் சங்கரகோமதிக்கும் இன்னொருவர் வந்து இப்படிக் கேள்வி கேட்கும்படி வைத்துவிட்டோமே என்று சங்கடமாகிவிட்டது.
“சரி அதை விடுங்க.. ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க?” என்றவர்களிடம்,
“ஒன்னுமில்ல பிபி கொஞ்சம் கூட இருக்குனு சொன்னாங்க” என்று சொல்ல,
“என்னது?” என்றனர் ஒருசேர இரு மகள்களுமே.
“ஒன்னுமில்லட்டி.. தூக்கம் தொடர்ந்து பாதிச்சதால கூட இருக்கலாம்.. எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு இன்னொரு தடவை பார்த்துக்க சொல்லிருக்காங்க” என்று சங்கரகோமதி சமாதானம் சொல்ல,
“கோபம்னா இப்படித்தான் உங்க உடம்பைக் கெடுத்துப்பீங்களா?” என்று ஆரம்பித்து வளவளவென்று ஸ்ரீ பேச, ஏனோ அவரால் கோபம் கொள்ள முடியவில்லை. உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவர் இருக்க, நேரமாவதை உணர்ந்து சங்கரநாராயணன் தான் இரு மகள்களையும் அனுப்பி வைத்தார்.
கோமதி நாச்சியார் அறைக்குள் வந்ததுமே அதுவரை இல்லாத கலக்கம் அவளை வந்து ஆட்கொண்டது.
‘சரிவருமா? வராதா?’ என்றெல்லாம் யோசனை ஓடவில்லை. வராது என்றே நினைத்தாள். அஜய் நினைவுக்கு வந்தான். கூடவே அவனது தந்தையும்!
‘ப்ச்’ என் சலித்தபோது அவளது அலைபேசி சிணுங்க, யாரென்று பார்த்தவள் தெரியாத எண்ணாக இருக்கவும் நெற்றியைச் சுருக்கியபடி அழைப்பை உயிர்ப்பித்தாள்.
“ஹலோ யாரு?” என்று இவள் ஆரம்பிக்க,
“மம்மி நான் தேவ் பேசுறேன்” என்றான் அந்தப்பக்கம் துள்ளலாக சரண்தேவ்.
மம்மி என்ற அழைப்பே அவன் யாரென்று அவளுக்குப் புரிய வைத்துவிட, ஒரு நிமிடம் அடுத்து என்ன பேசவென்று புரியவில்லை. முன்பிருந்த நிலை இப்போது இல்லையே.. அஜயைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்லியாகிவிட்டது. இதில் பேசமாட்டேன் என்று முறுக்குவதில் பயனேதும் இல்லை.. அதிலும் சிறுவனின் குரலில் தெரிந்த துள்ளலைக் குறைக்கவும் அவளுக்கு மனதில்லை.
“சொல்லு தேவ்.. என்ன இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க? இன்னும் தூங்கலயா” என்று இவள் சாதாரணமாகப் பேச ஆரம்பிக்க, அந்தப் பக்கம் ஸ்பீக்கரில் இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அஜய் இனிமையாய் அதிர்ந்தான்.
“இல்ல டாடி கூட சண்டை போட்டு முடிக்கவே டைம் ஆகிடுச்சு” என்று தேவ் சலிப்பான குரலில் சொல்ல, அவன் தோரணையை ரசித்தவாறு, “எதுக்கு சண்டை?” என்றாள் நாச்சி கேள்வியாக.
“உங்கள பார்க்க வரும்போது என்னை விட்டுட்டு வந்துட்டாங்க.. அதுக்கு மார்னிங் சண்டை போட்டப்போ நைட் போன்ல பேச வைக்கிறேனு சொன்னாங்க.. ஆனா பேச வைக்காம ஊருக்குக் கிளம்புறாங்க” என்று அவன் அஜயைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசிக்க,
“உனக்கு ஸ்கூல் இருக்கும்ல.. அதான் விட்டுட்டு வந்திருப்பாங்க”
“நாளைக்கு எனக்கு லீவ் தான்.. நான் வரட்டுமா உங்களைப் பார்க்க?”
ஆவலோடு கேட்பவனிடம் உடனே மறுக்கத் தோன்றாமல், “ஆனா மம்மிக்கு வேலை இருக்கே” என்று யோசிப்பதைப் போலச் சொல்ல,
“ஓ” என்றான் தேவ் சுருதி குறைந்துவிட்ட குரலில்.
“அச்சோ இதுக்கெல்லாம் சேட் ஆவாங்களா? இன்னும் கொஞ்சநாள்.. அப்புறம் மம்மி தான் அங்க வந்துடுவேனே” என்று தேவ்க்கு அவள் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க,
“ஹே போலீஸம்மா என்னடி சொல்ற? நிஜமாவா?” என்றான் நம்ப முடியாத சந்தோஷத்தில் அஜய்.
அவன் குரலைத் திடீரென்று கேட்டதும் ஜெர்க் ஆனவளுக்கு சிறுவனிடம் பேசியதைப் போல, அவனுடன் அவ்வளவு எளிதில் பேச முடியும் என்று தோன்றவில்லை.
“தேவ்.. மம்மிக்கு தூக்கம் வருது.. நீயும் போய் தூங்கு” என்றவள் அவனிடமும் மறுமொழியை வாங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்துப் படுத்துக் கொள்ள, இங்கே அஜய்க்குத் தலைகால் புரியவில்லை. அவன் தேவைத் தூக்கித் தட்டாமாலை சுற்ற, தந்தையின் மகிழ்விற்கான காரணம் புரியாவிடினும் தானும் அகமகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தான் தேவ்.
“சரி மம்மிட்ட பேசிட்டல்ல.. தூங்கு.. அப்பா மம்மி கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்றவன் தன் அறைக்கு வெளியே இருந்த பால்கனியில் வந்து நின்று கொண்டு அவளுக்கு அழைத்தான். முதல் அழைப்பை அவள் ஏற்காமல் விட, மறுபடியும் அழைத்தான். அந்த அழைப்பையும் நிராகரிக்கப் போனவள் பின் ஒரு பெருமூச்சுடன் அதை உயிர்ப்பித்தாள். ஆனால் பேசவில்லை.
எடுத்ததுமே, “ஹேய் போலீஸம்மா எப்படிடி” என்று அவன் ஆரம்பிக்க, அவள் பேசாமல் உதட்டைக் கடித்தபடி அமைதியாக இருந்தாள். அவளது அமைதியில்,
“வீட்ல கம்பெல் பண்ணதால சரினு சொன்னியா?” என்று அஜய் சரியாகக் கணித்துக் கேட்க, அதற்கும் அமைதி தான்.
ஆம் என்று சொன்னால் என்ன செய்வான்? என்று அவள் யோசிக்க, அது அவனுக்குக் கேட்டதோ என்னவோ!
“அதுதான் உண்மைனு எனக்குப் புரியுது. ஆனால் அப்படியாச்சும் நீ சரினு சொன்னியேனு தான் எனக்கு இப்போ இருக்கு” என்றான் குரலில் வழிந்த துள்ளலை மறைக்காமல்.
சற்றுமுன் தேவ் எவ்வளவு துள்ளலோடு பேசினானோ அதற்கு சற்றும் குறையாமல் அஜயின் குரலிலும் துள்ளல் வழிந்தது. அது அவளது மனதை இன்னும் பாரமேற்றியது.
“ரொம்ப செல்ஃபிஷா இருக்கேனா?”
அவனே பதிலும் சொல்லி அவனே கேள்வியும் கேட்டுக்கொண்டிருந்தான். நாச்சி பேசவில்லை என்பதே அவனுக்கு அப்போது தான் உரைத்தது.
“என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. நீ பேசவே மாட்டேங்குற? எதாச்சும் பேசேன்” என்று கேட்டவன்,
“எனக்கு உன்னை உடனே பார்க்கணும் போல இருக்கு.. நான் வேணும்னா அங்கே வரவா?” என்றான் பரபரப்புடன். அவன் கேட்டதில் அதிர்ந்து போனவள் தன் பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, “நோ” என்றாள் அழுத்தமாக.
“சரி உனக்கு வேணாம்னா வேணாம். அட்லீஸ்ட் வீடியோகால்?” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே அழைப்பைத் துண்டித்துவிட்டு காணொளி வழி அழைத்திருந்தான்.
கோமதி நாச்சியார் பல்லைக் கடித்தபடி அதனை ஏற்றதும் திட்டுவதற்காக அவனைப் பார்த்தவள் என்ன யோசித்தோம் என்பதையே மறந்தது போல அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவனது முகத்தில் வழிந்த உணர்வு, எதிர்பார்ப்பு அனைத்தும் அவளைப் பேரலையாய் எழுந்து வாரி எடுத்துச் செல்ல, தொண்டையில் முள் சிக்கிய உணர்வு தான் அவளிடம்.
“எதுக்கு இப்படிப் பார்க்குற?”
கோபத்தை மறந்துவிட்டு கேட்டேவிட்டாள்.
“எப்படி பார்க்குறேன்?”
மென்னகையுடன் அவளிடமே திரும்பிக் கேட்டான் அஜய். அவனுக்குப் பதில் சொல்ல வேண்டி திரும்ப அவனைப் பார்த்தவள் மீண்டும் அவன் அதேபோல பார்த்து வைத்ததில் கலக்கமுற்றாள்.
‘இதோ இப்படித்தான்’ என்று கூற வந்தவள்,
“எதுக்கு இப்போ வீடியோகால் பண்ணுன?” என்று பேச்சை மாற்றினாள்.
அவளது கலக்கத்தில் யோசனையாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன், அவளைப் பதிலே பேசாமல் பார்த்தான். முன்பிருந்த காதல் பார்வை இல்லை இது. அவளை ஊடுருவும் பார்வை அது! அவனது பார்வையில் அவளும் சளைக்காமல் நேர்பார்வை பார்க்க, அதில் புன்னகைத்துக் கொண்டவன், தன் சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு, “லவ் யூ கோம்ஸ்” என்றான் ரசனையாக.
அவனது பாவனையும் அதில் வழிந்த ரசனையும், போதாத குறைக்கு உயிரைக் குடிக்கும் அவன் பார்வையும் என நிலைகுலைந்து போனாள் அவள். அவனது காதல் மொழிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க, அதில் வாய்விட்டுச் சிரித்தான் அஜய்.
அந்தச் சிரிப்பில் அதுவரை இருந்த அந்த மூச்சுமுட்டும் உணர்விலிருந்து வெளிவந்தவள் வெடுக்கென்று, “எதுக்கு இந்த சிரிப்பு?” என்று சீற, அஜய் சிரிப்பதை நிறுத்திவிட்டு உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவளைப் பார்த்தான். அவளுக்கு அவன் அவளைக் கிண்டல் செய்வதைப் போலவே இருந்தது.
“எதுக்குடி எப்போ பாரு முகத்துல முள்ளைக் கட்டிட்டே சுத்துற? கொஞ்சம் சிரிச்ச மாதிரி முகத்தை வைச்சா குறைஞ்சா போய்டுவ?”
“எப்படியோ உன் ப்ளான் படி எல்லாம் நடந்த சந்தோஷத்துல நீ இருக்க.. ஆனா நான் அப்படி இல்ல”
கடுப்புடன் அவள் சொல்ல,
“அதுனால இப்போ ஒன்னும் குறைஞ்சு போய்டல” என்றான் அவன் பதிலாக.
“அதை நான் சொல்லணும்”
“கண்டிப்பா சொல்லுவ”
அவன் குரலில் தான் எத்தனை நம்பிக்கை!!! அந்த நம்பிக்கையில் அதுவரை இருந்த கோபம் மறைந்து அங்கே குற்றவுணர்வு ஆட்கொள்ள, தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“எதுக்கு இப்படி உன்னை நீயே வருத்திக்கிற?” என்று அஜய் மென்மையாகக் கேட்டதில்,
“எனக்குத் தூங்கணும் அஜய்.. நான் கட் பண்றேன்” என்று சொன்னவளிடம்,
“சரி குட்நைட்” என்ற அஜய் அழைப்பைத் துண்டித்துவிட்டு மணியைப் பார்த்தான்.
மனதிற்குள் ஏதேதோ யோசனையோடியது. அவனுக்கு அப்போதே சண்முகத்திடம் பேசவேண்டும் என்ற பரபரப்பு. பின் தூக்கத்தில் எழுப்ப வேண்டாம் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்றும் தோன்ற, நிறைவான மனதுடன் அவனும் படுக்கைக்குச் சென்றான்.
அழைப்பைத் துண்டித்த நாச்சி, தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளது நியாய குணம் அவள் செய்வது சரியில்லை என்று வாதிட்டுக் கொண்டிருந்தது.
‘அவனைக் கல்யாணம் பண்ணிக்க சரினு சொல்லிட்டு இதென்ன டிராமா?’ என்று அவளது மனசாட்சி அவளைச் சாட, எதிர்வாதமெல்லாம் அவள் புரியவில்லை. இதில் அவளது வாழ்க்கை மட்டுமல்ல அவனது வாழ்க்கையும் அடக்கம் என்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது. யோசித்தாள். வெகுநேரம் யோசித்தாள். யோசித்து அந்த முடிவை எடுத்தாள். கஷ்டமாக இருக்கும் என்று தெரியும். ஆனாலும் முடிவை மாற்ற உத்தேசமில்லை. குழப்பம் எல்லாம் அகன்று தெளிவான மனநிலையுடன் தூங்கச் சென்றவளை மெதுமெதுவாக நித்திரை சூழ்ந்துகொண்டது.
அவளுக்கு நேர்மாறாக சங்கரநாராயணன் உறக்கத்தைத் தொலைத்துப் படுத்திருந்தார். அவரது மனதில் மனைவி பேசியது தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“உங்கள மன்னிச்சுட்டேனு என்னால சொல்ல முடியாது.. இவளுக ரெண்டு பேரும் இன்னும் குடும்பம் குட்டினு பார்க்கல.. பார்க்குறப்ப புரியும் என்னோட வலி.. நாச்சி சொல்லியிருந்தா கூட நீங்க என்ட்ட வந்து சொல்லிருக்கணுமா இல்லையா?.. பின்ன நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன மரியாதை?” என்றவர் தான். அடுத்துப் பேசவே இல்லை. மாத்திரையின் வீரியத்தில் சங்கரகோமதியும் உறக்கத்தைத் தழுவ, சங்கரநாராயணன் தான் கொட்டக் கொட்ட விழித்திருந்தார். காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்புவதை விட அவருக்கும் வேறு வழியிருக்கவில்லை.
அவர் மட்டுமல்ல ஸ்ரீயும் அதுவரை உறங்கிய இருக்கவில்லை. வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கார்த்திக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.
“இதுக்குத்தான மூனு நாளா அப்செட்டா இருந்த? இப்போ நீ ஓகேவா?” என்று அவன் கேட்க,
“ஓகேவா வா? சந்தோஷமா இருக்கேன்டா.. கெட்டதுலயும் ஒரு நல்லதா அக்கா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காங்க.. எவ்ளோ பெரிய விஷயம்” என்று இன்னும் நம்ப முடியாத குரலில் அவள் கூற, கார்த்திக்கிற்கும் அவளது சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
“ஆமா..”
“எனக்குமே அக்கா கல்யாணம் வேணாம்னு சொன்னது கஷ்டம் தான். ஆனாலும் எப்பவுமே அவங்க முடிவுல சரியான காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியும்.. அதான் அம்மா இதைப் பத்தி புலம்பும் போது, எனக்கும் வருத்தம் இருந்தாலும் அக்காவுக்கு சப்போர்ட்டா அம்மா கிட்ட பேசுவேன்.. அப்போ எனக்கும் சேர்த்து திட்டு விழும். இன்ஃபாக்ட் நான் அப்படி அக்காவுக்கு சப்போர்ட்டா பேசுனது தான் அம்மாவுக்கு பயத்தைத் தந்திருச்சு.. அதான் எனக்கு இவ்வளவு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து பேக் பண்ணிட நினைச்சாங்க.. இப்போ நிலைமை அப்படியே ஆப்போசிட்.. அம்மாவுக்கு தான் இதுல ரொம்ப ஹேப்பி”
விடாமல் வளவளவென்று பேச, அனைத்தையும் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக். சிறிது நேரத்தில் அவளது பேச்சு மெதுமெதுவாக அவர்களைப் பற்றி மாற,
“அம்மா கிட்ட சொல்லிட்டியா?” என்று ஆரம்பித்தாள் ஸ்ரீ.
“அதான் உன் அக்கா கல்யாணம் செய்ய சரினு சொல்லிட்டாங்களே.. அப்போ நமக்கு டைம் இருக்குல்ல ஸ்ரீ.. ஏன் அவசரப்படுத்துற? மெதுவா பேசுவோமே” என்ற கார்த்திக்கிடம்,
“அவசரம் இல்ல தான்.. அதுக்காக உன்னை அப்படியே விட முடியாது.. இப்படிப் படுத்தி எடுத்தா தான் நெக்ஸ்ட் ஸ்டெப் எடுப்ப” என்றாள் ஸ்ரீ.
“எனக்கு மட்டும் ஆசையில்லையா? உன் அக்கா கல்யாணம் முடியட்டும்.. நானும் போய் வேலைல உட்கார்ந்துக்கிறேன்.. இப்போ சொல்றதை விட வேலைல இருந்துட்டு சொன்னா தான் எங்க அம்மாவும் கொஞ்சம் யோசிப்பாங்க ஸ்ரீ”
“ஆமாடா.. அதையும் கேட்கணும்னு நினைச்சேன்.. இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணியே.. ஜாய்ன் பண்ண சொல்லிட்டாங்களா?”
“இன்னும் கால் லெட்டர் வரல.. மேக்ஸிமம் இந்த மன்த் எண்ட் இல்ல நெக்ஸ்ட் மன்த் ஸ்டார்ட்டிங்ல எதிர்பார்க்கலாம்னு சொல்றாங்க”
“அம்மா கிட்ட சொல்லிட்டியா?”
“இல்ல கன்பார்ம் ஆகவும் சொல்லிக்கலாம்.. நானும் வேற வேற இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன்” என்றவனிடம் ,
“ஆமா.. எதுல பெர்க் அண்ட் பேக்கேஜ் நல்லா இருக்கும்னு பார்த்துட்டு போய்க்கலாம்” என்றவள் இன்னும் சிறிதுநேரம் வேறு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
_________________
மிகவும் சிரமப்பட்டு பிரிக்க முடியாமல் இமைகளைப் பிரித்தாள் சாஹித்யா. உடலின் ஒவ்வொரு பாகத்திலும் வலி விண்விண்ணென்று தெறித்ததில், மெதுவாக முனகினாள் அவள். அதற்கு கூட உடலில் வலுவில்லாததைப் போலிருந்தது. மெதுவாகத் தன் நிலையைக் கிரகிக்க முயன்றவளுக்கு அழக்கூடத் திராணியில்லை. என்ன நடந்தது என்று யோசித்தவளுக்கு மங்கலாக சில நினைவுகள்..!
‘இது என்ன இடம்?’ என்றபடி பார்வையைச் சுழல விட்டவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. பயத்தில் எழ முயற்சிக்க, இடுப்புக்குக் கீழ் பகுதியில் சுரீரென்ற வலி! அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அந்த வலியே அவளுக்கு என்ன நடந்தது என்று கூறியிருக்க, ஏற்க முடியாமல் நிற்காமல் அவளது கன்னத்தில் கண்ணீர் வழிய, எழ முயன்று கொண்டிருந்தவள் அப்போதுதான் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் விதிர்விதிர்த்துப் போனாள். உடலில் தன்னாலே நடுக்கம் பரவ, அவசரமாக விழிகளை மூடிக் கொண்டாள் .
தடதடக்கும் அவளது நெஞ்சத்தின் சத்தம் அவளுக்கே கேட்க, அப்படியே உணர்வற்று படுத்திருந்தாள் சாஹித்யா. உள்ளே வந்தவன் அவளைக் கவனிக்காமல் வந்த வேலையில் குறியாக இருக்க, பாதி கண்ணை மட்டும் திறந்து அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தவளுக்கு நெஞ்சமே காலியான உணர்வு. அவளது கண்கள் அச்சத்தில் விரிந்து கொள்ள, திரும்பி அவளைப் பார்த்தவனும் அதிர்ந்தான்.
‘எப்படி முழிச்சா?’ என்று அவன் திகைப்பாகப் பார்க்க,
“ப்ளீஸ் ப்ளீஸ்.. என்னை விட்ருங்க” என்று சிரமப்பட்டு அவள் சொல்ல, குரலில் விரிவியிருந்தது அச்சம் மட்டுமே.
‘விடுறதா? உன்னையா?’ என்று எண்ணிக் கொண்டவனின் கண்கள் அவளது நிர்வாணத்தை மொய்க்க, அதில் கூசிப் போனவள் முகத்தை அசூயையுடன் சுளிக்க, வந்தவனின் முகம் குரூரமானது. வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளது கைகளைப் பிடித்து இழுத்து செய்த வேலையில் அரண்டு போனாள்.
இந்த நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா? என்ற எண்ணத்தில் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவனது செயலுக்கு அவள் ஒத்துழைக்க மறுக்க, அதில் வெகுண்டெழுந்தவன் பொறுமையின்றி அவளுடைய முடியைக் கொத்தாகப் பற்றி ஓங்கி அறைந்தான். ஏற்கனவே உடலும் மனமும் அதீதத்திற்கும் சோர்ந்து போயிருக்க, வாங்கிய அந்த அறையில் அவளுக்குப் பொறி கலங்கியது.
அவ்வளவுதான்! அடுத்து நிகழ்ந்ததெல்லாம் அரக்கத்தனத்தின் உச்சக்கட்டம். மிருகத்தனமான அவனது தேடலில், அவளிடம் எதிர்ப்பே இல்லை. தன் தேவை முடிந்ததும் அங்கிருந்த தனது அலைபேசியை எடுத்துக் கொண்டவன் அலைபேசியில் அவனது களியாட்டங்கள் அனைத்தும் பதிவாகியிருந்தது. அதைப் பார்த்தவன் குரூர திருப்தியில் சிரித்துக் கொண்டான்.
கருத்துக்களைப் பகிர:
https://kavichandranovels.com/community/vsv-37-செ
ந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231
அத்தியாயம் 8
அன்றைய விடியல் அத்தனை கோரமாக இருக்கும் என்ற எண்ணமே இல்லாமல் எப்போதும் போல தனது வேலைகளை முடித்தவள் குளித்து வெளியே வந்த போது அந்த அழைப்பு வந்தது.
அதை உயிர்ப்பித்தவள் வந்த செய்தியை உள்வாங்கிய கோமதி நாச்சியார், “வாட்?” என்றாள் அதிர்வுடன். மறுபக்கம் சொல்லப்பட்ட செய்தியின் தன்மை அப்படி!
“எப்போ?” என்று கேட்டுக்கொண்டே காக்கி உடையை எடுத்தவள், “நான் இன்னும் ஒன் அவர்ல அங்க இருப்பேன்” என்ற சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, தன்னைப்போலப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
ஏற்கனவே சாஹித்யாவின் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்க இப்போது இப்படி ஒன்றா என்று நினைத்தவள், ‘ஒருவேளை இது….??’ என்று எண்ணமோட,
அடுத்து என்ன செய்ய வேண்டுமென பல்வேறு எண்ணங்களின் மத்தியில் அவசரகதியில் கிளம்பி கீழே வந்தாள்.
அவளது அவசரத்தைப் பார்த்து, “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று சங்கரகோமதி வேகமாக எழுந்து வர, தலையசைத்து வேண்டாமென்று மறுத்தவள்,
“முக்கியமான கேஸ் விஷயமா போறேன்மா.. எதாவது எமர்ஜென்ஸினா மட்டும் ஃபோன் பண்ணுங்க.. மார்க்கெட் பக்கமா இன்னைக்கு எங்கேயும் யாரும் போக வேண்டாம்.. அப்பா வரவும் சொல்லிடுங்க” என்று எச்சரித்தபடி நடையில் வேகத்தைக் கூட்டி வெளியே வந்தாள்.
“என்னத்த தான் இந்த போலீஸ் வேலையோ.. பத்து நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இன்னும் கால நேரம் தெரியாம சுத்துதா.. கல்யாணக் களைனு முகத்துல எதாவது தெரியுதா? என்னத்தையாவது சொல்லலாம்னா சடச்சுக்கிட்டு மொத்தத்துக்கு வேணாம்னு சொல்லிடுவாளோனு மனச கெதக் கெதக்குனு வச்சுட்டு வெளிய அனுப்பததா இருக்கு.. எல்லாம் எவ்வூட்டு மனுசன சொல்லணும்” என்று முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றவருக்கு எப்போதும் போல அந்தப் பயம் வந்தது.
“இதையெல்லாம் என்னன்னு அந்த வீட்டுல சரின்னு போவாக?” என்றதொரு பயம் அடிநெஞ்சம் வரைக்கும் சென்று சட்டென்று கவ்விப் பிடிக்க, அஜயின் நினைவு வந்தது. திருமணம் பேசி முடித்ததிலிருந்து அவரது மகளும் மருமகனும் தினமும் பேசிக் கொள்கிறார்களோ இல்லையோ மாமியாரும் மருமகனும் தினமும் பேசிக் கொள்வார்கள்.
அஜயின் நினைவு வந்ததுமே அவர் நேரத்தையெல்லாம் பார்க்கவில்லை. சட்டென்று அவனுக்கு அழைப்பு விடுக்க, அந்தப் பக்கம் தூக்கக் கலக்கத்தில் அழைப்பை எடுத்தான் அவன்.
“ஹலோவ்வ்வ்வ்..” என்று கொட்டாவியுடன் அவன் ஆரம்பிக்க,
“அச்சோ தூங்கிட்டு இருந்தீங்களா தம்பி?” என்றபடி நாக்கைக் கடித்துக் கொண்டார் அவர் இந்தப் பக்கம்.
“சும்மா சொல்லுங்கத்தை.. எழுந்துக்கிற நேரந்தான்” என்க,
“சும்மா தான் தம்பி” என்று அவர் இழுத்த இழுவையிலேயே அவன் விஷயத்தைப் புரிந்துகொள்ள முயன்றான்.
“என்ன உங்க மகளை நினைச்சுப் பயமா? என்னத்தை செஞ்சு வச்சா?” என அவன் சரியாக நூல் பிடித்துக் கேட்க,
விஷயத்தைக் கூறி, “என்னன்னு தம்பி அங்க உங்க அப்பாவும் அம்மாவும் இவளைப் பொறுப்பாங்க? மருமவனா எப்படி இருக்கணும்னு அவங்களுக்கும் நினைபிருக்கத்தான செய்யும்?” என்றார் சங்கரகோமதி கலக்கத்துடன்.
“அத்தை இதே கேள்வியை டிசைன் டிசைனா எப்படி எப்படியோ நீங்க கேட்டாச்சு.. அதுக்குண்டான பதிலையும் நான் சொல்லியாச்சு.. நீங்க இப்படி கேட்டுட்டே இருந்தா என்னன்னு நான் நினைக்கக்ட்டும்? எம்மேல நம்பிக்கை இல்லையா?” என்றவன்,
“அதெல்லாம் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்குவேன் உங்க மகளை.. எதுவும் யோசிக்காமக் கல்யாண வேலையைப் பாருங்க போங்க” என்றும் சேர்த்து சொன்னான்.
“எங்குட்டு கல்யாண வேலையைப் பார்க்க? அதேன் கோவில்ல கல்யாணம் பண்ணா போதும்னு சொல்லிட்டாளே.. மகளுக்குக் கண்ணுக்கு நிறைவா கல்யாணம் செஞ்சு பார்க்குததுலாம் என் தலையில எழுதல போல” என்று அதற்கொரு பாட்டை சங்கரகோமதி துவங்க, அந்தப்பக்கம் அஜய் புன்னகைத்தான்.
“ஒன்னு விட்டா ஒன்னுன்னு எதையாவது நினைச்சு வெசனப்பட்டுட்டே இல்லைன்னா எங்கத்தைக்குத் தூக்கம் வராது போல.. மகளுக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்க முடியலன்ற கவலை இப்போ இல்லாமப் போச்சேனு கொஞ்சம் சந்தோஷம் தான் படுறது” என்று அஜய் எடுத்துக் கொடுக்க,
“அந்த நினைப்பு இருக்கங்காட்டி தான அவ பேசுததுக்குலாம் மறுபேச்சு பேசாம தலையாட்டி வைக்கிதேன்.. இதே இந்தச் சின்னக் கழுதை இந்த ஆட்டம் காட்டியிருந்தா வாரியல எடுத்து தோலை உரிச்சுப்புட மாட்டேன்” என்றார் கோபமாக.
“பொறுமை பொறுமை சாமி.. எம்பொண்டாட்டி பக்கமா அந்த வாரியலு நகர்ந்துடாம.. அப்புறம் அவ புருஷன் கோவப்பட்டு கல்யாணமாவது ஒன்னாவதுனு உடனே வந்து கூட்டிட்டுப் போய்டுவான்”
“ஏதேது.. அப்போ மச்சினிச்சி வாரியலால அடி பெத்தா பரவால்லங்கிறீங்க.. இந்தா கூப்பிடுதேன் அவளை” என்று சங்கரகோமதி மிரட்டவும்,
“நானெல்லாம் இந்த ஏரியா ஏசிபிக்கே பயப்படுறது இல்லையாம்.. இதுல அந்த நண்டு சுண்டுக்கெல்லாமா பயப்படுவேன்?” என்று அஜய் சிரிக்க, ஐந்து நிமிடத்திற்கு முன்னிருந்த மனநிலை சங்கரகோமதிக்கு சுத்தமாக மாறியிருந்தது. அவர் புன்னகையுடன் அவனிடம் பேச ஆரம்பிக்க, அப்போதுதான் வீட்டிற்கு நுழைந்த சங்கரநாராயணன் மனைவியின் புன்னகை முகத்திலேயே பேசுவது யாரென்று கண்டுகொண்டார். சட்டென்று ஒரு சுணக்கமும் வந்து ஒட்டிக் கொண்டது.
“எங்கிட்ட பேசுததப்போ மட்டும் இதையெல்லாம் எங்குட்டு தான் தூக்கி முடிவாளோ” என்றவருக்கு அத்தனை ஆற்றாமை இன்னும் மனைவி சகஜமாகப் பேசாததைக் கொண்டு.
மகளின் கல்யாண வேலையைத் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு பேசமாட்டேன் என்று வம்பு வளர்த்தால் அது வேலைக்கு ஆகாது என்பதோடு சம்பந்தி வீட்டினரின் முன் சங்கடம் என்பதும் சேர, தேவைக்கு மட்டுமே இன்னும் அவரிடம் பேசுவார்.
அஜய்க்கு மட்டும் விஷயம் தெரியும். அவர் அஜயின் வீட்டினரை சம்பந்தி வீடு என்று தள்ளி நிறுத்திப் பார்த்தாலும் அஜயை அப்படி நிறுத்துவதில்லை. அஜய் அவருடைய தேர்வு. எதிலும் சோடை போய்விடாத குணசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்வார். அதிலும் அவனின் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் பாவமும் அவரைக் கவர்ந்திருக்க, இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அஜய் தான். அவர்களது பிணைப்பைக் கண்டு வீட்டில் மூவருக்குமே ஆச்சரியம் தான். கோமதி நாச்சியார் எதுவும் பேசாமல் கடந்து சென்றுவிடுவாள். ஸ்ரீ தான், “இதென்னமா மாப்பிள்ளைக்கும் மாமியாருக்கும் இப்படியொரு பாசப்பிணைப்பு.. ஊர்ல நடக்காத அதிசயமெல்லாம் நம்ம வீட்ல தான் நடக்குது” என்று கேலி பேசுவாள். சங்கரநாராயணனுக்கு இந்த விஷயத்தில் மட்டும் அஜயின் மீது சற்று பொறாமை. சில நேரங்களில் அவர் பார்க்கும் பார்வையில் ஸ்ரீ விழுந்து விழுந்து சிரிப்பாள்.
“அப்பா நீங்க விடுற பெருமூச்சுல அங்க அத்தான் கருகிடப் போறாங்க பார்த்துக்கோங்க.. அப்புறம் அக்கா நிலைமை தான் பாவம்” என்று அவரையும் கேலி செய்வாள்.
சங்கரகோமதியின் குரலில் சட்டென்று ஒரு இறக்கம் வர, “என்ன வால்யூம் மைனஸ்ல போகுது திடீர்னு.. மாமா வந்துட்டாரா?” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.
“ம்ம் ஆமா”
“ஆனா அத்தை நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு லவ்வாங்கி சண்டையைப் பார்த்தது இல்ல.. நீங்க இப்போ என்கிட்ட சிரிச்சு பேசுறதைப் பார்த்தா அவர் கஷ்டப்படுவாருனு தானே சுருதியை இறக்குறீங்க?”
சங்கரகோமதியை சரியாகக் கணித்துக் கேட்க, இந்தப் பக்கம் அவருக்கு இதழ்கள் விரிந்தன.
“ஆமா இறங்குதாங்க.. நீங்க வேற தம்பி” என்று சலிப்பது போலச் சொல்ல,
“இதெல்லாம் போங்கு” என்று ஆரம்பித்தவன் அடுத்துப் பேசும் முன்,
“இந்தாங்க மாப்பிள்ளை பேசணுமாம்” என்றபடி சங்கரநாராயணனிடம் அலைப்பேசியைத் தந்துவிட்டு நகர்ந்துவிட்டார் அவர்.
சங்கரநாராயணன் அலைபேசியை வாங்கியதுமே அவரிடமும் முகமன் கூறி விசாரித்துவிட்டுத் திருமண வேலைகளைப் பற்றிப் பேசத் துவங்கிவிட்டான்.
இப்படி அனைவரும் அஜய் - நாச்சியின் திருமணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்க, அதைப்பற்றிய நினைவு துளியுமின்றி காரில் பயணித்துக் கொண்டிருந்தாள் கோமதி நாச்சியார். அவள் மனதெல்லாம் அவளது வேலை பற்றிய நினைவொன்றே அரித்துக் கொண்டிருந்தது. கிளம்பியதுமே சிவராமனுக்கும் அழைத்துப் பேசியிருந்தாள்.
எடுத்ததுமே “அங்க தான் மேம் நானும் வந்துட்டு இருக்கேன்” என்றவனின் குரலிலும் பதட்டம் குறையாமல் தான் இருந்தது. இருவருக்குமே ஒரே எண்ணம் தான். அதற்குத் தான் தொன்னூறு சதவிகிதம் வாய்ப்பிருந்தது.
கோமதி நாச்சியாரும் சிவராமனும் தகவல் அறிந்து வந்த போதே சில பத்திரிகையாளர்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். கோமதி நாச்சியாரைக் கண்டதும் வேகமாக அவளை சூழ வந்த பத்திரிகையாளர்களை சிவராமன் தடுத்து நிறுத்த, அதையும் மீறி சிலர் அவளருகே சென்றிருந்தனர்.
“உங்களைப் போல இப்போ தான் தகவல் தெரிஞ்சு நாங்களும் வந்திருக்கோம்.. எங்கள எங்க வேலையைக் கொஞ்சம் செய்ய விடுங்க.. அப்போ தானே உங்க கேள்விக்கும் எங்களால பதில் சொல்ல முடியும்?” என்ற எரிச்சல் வெளிப்படும் குரலில் அவள் கேட்க,
“நீங்க ஐ மீன் காவல்துறை அவங்க வேலையைச் செய்யாததால தான் இந்த நிலைமைனு நாங்க எடுத்துக்கலாமா? இல்லைன்னா ஒரு பொண்ணைக் கொலை பண்ணித் துண்டுத் துண்டாக வெட்டி இப்படி பலபேர் பார்க்குற இடத்துல வீசுற தைரியம் ஒருத்தனுக்கு எப்படி வரும்?” என்று கேட்டார் ஒருவர்.
கேள்வி கேட்டவரை உறுத்து விழித்தவள், “இதே சிட்டியில் முப்பத்தைஞ்சு லட்சத்துக்கும் மேல மக்கள் இருக்காங்க.. இந்தப் பொண்ணைத் தவிர்த்து மத்த எல்லோரும் பாதுகாப்பா இருக்காங்க அப்படினா அதுக்கும் எங்க டிபார்ட்மெண்ட் தான் காரணம்னு நீங்க மறக்க மாட்டீங்கனு நினைக்குறேன்” என்றவள்,
“என்ன தப்பு நடந்திருக்கோ அதை உங்க பார்வைல தாராளமா எழுதுங்க.. அது உங்க வேலை.. அதை நான் மறுக்கவும் இல்ல. அதேசமயம் எங்க வேலையையும் பார்க்க விடுங்க ப்ளீஸ்” என்று கூறிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பிக்க, அவளைத் தொடர்ந்தான் சிவராமன்.
“எப்போ உங்களுக்கு நியூஸ் வந்துச்சு சிவராமன்?”
“நீங்க கால் பண்றதுக்கு டூ மினிட்ஸ் முன்னாடி தான் மேம்”
“இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் யாரு? வந்தாச்சா?”
“ராஜன் மேம்.. வந்துட்டாரு” என்று சிவராமன் சொல்லும்போது அந்த மூட்டையை நெருங்கியிருந்தனர் இருவரும்.
கோமதி நாச்சியாரைப் பார்த்ததுமே அருகில் வந்த ராஜன் சல்யூட் வைக்க, அதை ஏற்றுக் கொண்டவள், “எப்படி நியூஸ் வந்துச்சு ராஜன்? யார் முதல்ல பார்த்தது?” என,
“இந்த சைட் குப்பை, பழைய பிளாஸ்டிக் பொருளெல்லாம் எடுக்குறவங்க மேம்.. அந்த லேடி பார்த்து பயத்துல கத்தவும் வாக்கிங் வந்தவங்க ஒருத்தர் பார்த்துட்டு ஸ்டேஷனுக்குக் கால் பண்ணாரு” என்றார் அந்த ராஜன்.
“அவங்கள எங்க?” என்று கேட்கவும் அவர்கள் இருவரையும் ராஜன் அழைத்து வர, அந்த அம்மா முகத்தில் பயம் அப்ப அருகில் வந்தார். அவர்களிடம் பொதுவான கேள்விகளைக் கேட்டுவிட்டு,
“இவங்க டீடெய்ல்ஸ் வாங்கிட்டு அனுப்புங்க ராஜன்” என்றபடி சடலத்தின் அருகே போனவளுக்கு உள்ளே பதறியது. கொலை செய்யப்பட்டது பெண் என்பது வரை மட்டுமே தெரிந்தது. மற்ற பாகங்கள் எல்லாம் தனித்தனியாக வெட்டப்பட்டு முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் அவளது கண்கள் தானாகக் கலங்க ஆரம்பித்தது. கொலை செய்யப்பட்ட விதமும் அதன் கோரமும் அவளை அச்சமூட்டியது.
தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அலைபேசியில் அதனைப் படம் பிடித்துக் கொண்டவள், சிவராமனை அழைத்தாள்.
“மேம்” என்றபடி வந்தவனிடம் அவள் மெதுகுரலில் சில விஷயங்களைக் கேட்க, அவனும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெங்கட்ராமனும் சம்பவ இடத்திற்கே வந்துவிட்டார்.
வந்ததுமே அந்த மூட்டைக்கு அருகில் சென்று பார்த்தவர்,
“ஒருவேளை இது அந்தப் பொண்ணா? வயசு எல்லாம் ஒத்துப் போகுதே?” என்றார் கவலையுடன்.
“அதே சந்தேகம் தான் சார். விசாரிச்சு தான் முடிவுக்கு வரணும்”
மூவருக்குமே அது சாஹித்யாவாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் என்று தோன்ற, வெங்கட்ராமன்,
“சீக்கிரம் இஸ்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணுங்க மதி.. அந்தப் பொண்ணா இருந்துச்சுனா தேவையில்லாத தலைவலி” என்றார் தலையைப் பிடித்துக் கொண்டு.
இன்னும் மேலிடத்திற்குத் தகவல் போயிருக்கவில்லை. அங்கு தெரிந்தால் அவர் அல்லவா அத்தனைப் பேச்சுக்களையும் வாங்க வேண்டியிருக்கும்?
கோமதி நாச்சியாரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு அழைப்பு வந்துவிட்டது. அழைப்பை ஏற்காமல் நிராகரிக்கவும் முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் அழைப்பை உயிர்ப்பித்து அவர் பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே மறுபக்கம் இருந்த ஆள் கத்தத் தொடங்கியிருந்தான்.
“இல்ல சார்.. இது அந்தப் பெண்ணா இருக்க வாய்ப்பு இல்ல”
“.............”
“முகம் சிதைஞ்சிருக்கு சார்.. எங்களால இன்னும் யார்னு ஐடென்டிஃபை பண்ண முடியல”
“...........”
“நாங்க எங்க சைட் எவ்வளவோ ட்ரை பண்ணினோம் சார்”
“............”
“நோ சார்.. இங்க மீடியா வந்துட்டாங்க.. அது சரிவராது.. நீங்க கொஞ்சம் நிலைமையை எடுத்துச் சொல்லுங்க.. சார் வந்துட்டா தேவையில்லாத பிரச்சனை ஆகிடும்”
“..........”
“நான் ட்ரை பண்றேன் சார்”
“..........”
“ஷ்யர் சார்”
அழைப்பைத் துண்டித்துவிட்டுக் கோபம் குறையாமல் வந்தவர் கோமதி நாச்சியாரைப் பார்த்தார்.
“இந்தக் கொலைகாரனையாவது சீக்கிரம் கண்டுபிடிங்க மதி.. எந்த எக்ஸ்க்யூஸும் இல்லாமல்.. முதல்ல இறந்த பொண்ணு சாஹித்யாவா இல்லையானு செக் பண்ணுங்க” என்று வெங்கட்ராமன் உத்தரவாய்ச் சொல்லிவிட்டு அகல, அவள் சிவராமனிடம் திரும்பினாள்.
“வேற எதுவும் மிஸ்ஸிங் கேஸ் வந்திருக்கானு க்ராஸ் செக் பண்ண சொன்னேனே? என்னாச்சு?”
“செக் பண்ணிட்டேன் மேம்.. புதுசா எந்தக் கேஸூம் ஃபைல் ஆகல”
“ஹ்ம்ம்.. சரி பாடியைப் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்புங்க”
சிவராமனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பின் திரும்பிப் பார்த்தவள் நெற்றியில் படிந்த கோடுகளுடன் மீண்டும் அதனருகே போனாள். அருகில் சென்று பார்க்கவுமே தான் கண்ணுக்குப் புலப்பட்ட விஷயத்தை வைத்து மூளை கிரகித்துச் சொன்ன செய்தியில்,
‘ஓ மை காட்’ என்று அதிர்ந்தவள்,
“சிவராமன்..” என்று கத்தவும் ஓடி வந்தவனிடம் அவள் சடலத்தின் வெட்டப்பட்டக் கைகளைக் காட்டினாள்.
“என்ன மேம்?” என்று புரியாமல் கேட்டவனிடம் அவள் விஷயத்தைக் கூற, அவன் அவசரமாகத் தன் அலைபேசியைத் திறந்து அதிலிருந்த சாஹித்யாவின் புகைப்படத்தைப் பார்த்தான்.
புகைப்படத்திலிருந்த சாஹித்யாவின் வலது கரத்தின் மணிக்கட்டில் நீளவாக்கில் ஒரு மச்சம் இருந்தது. அதே மச்சம் அந்த சடலத்தின் வெட்டப்பட்ட கரத்திலும் இருந்தது.
“மேம் இது அந்தப் பொண்ணே தான்” என்று சிவராமன் சொல்ல, தலையசைத்தவள், “இப்போதைக்கு இது கமிஷனுருக்குத் தெரிய வேணாம்.. மீடியாவை முதல்ல க்ளியர் பண்ணுங்க.. பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்புங்க.. க்விக்” என்று அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்தவள்,
“நீங்க இங்க பார்த்துக்கோங்க.. நான் வந்துடுறேன்.. எதுனாலும் எனக்கு அப்டேட் பண்ணுங்க சிவராமன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவள் நேராகச் சென்றது சாஹித்யா தங்கியிருந்த பெண்கள் விடுதிக்குத் தான். திடீரென்று கோமதி நாச்சியாரைப் பார்த்ததும் அந்த விடுதியின் உரிமையாளர் நிர்மலா பதட்டத்துடன் முன்னே வந்து வரவேற்றார்.
“மேடம் அந்தப் பொண்ணு வரவே இல்ல மேடம்” என்று அவராக ஆரம்பிக்க,
“தெரியும். அந்தப் பொண்ணோட ரூம்ல யாரையும் தங்க வைக்கல தான?” என்றாள் அவள் கேள்வியாக.
“நீங்க சொன்னதால அதைப் பூட்டியே தான் வைச்சிருக்கேன் மேடம்”
“நான் அந்த ரூமைப் பார்க்கணும்.. கூட்டிட்டுப் போங்க” என்று கோமதி நாச்சியார் சொல்லவுமே சாவிகள் மாட்டப்பட்டிருந்த ஸ்டாண்டில் இருந்து சாஹித்யாவின் அறைக்கான சாவியை எடுத்துக் கொண்டு வந்தவர் அவளை அழைத்துக்கொண்டு சென்றார்.
“இதோ இந்த ரூம் தான் மேடம்” என்றபடியே நிர்மலா திறக்க, கோமதி நாச்சியார் நாலாபுறமும் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். அதற்குள்ளாக விஷயம் பரவிவிட, அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்துவிட்டது.
நிர்மலாவிடம், “என்னாச்சு மேம்?” என்று சில பெண்கள் கேட்க,
“எனக்கும் எதுவும் தெரியல.. சாஹித்யா ரூமைப் பார்க்கணும்னு சொன்னாங்க” என்றார் அவரும் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்தபடி.
சிறிது நேரத்திலேயே வெளியே வந்த வெளியே வந்த கோமதி நாச்சியார் நிர்மலாவிடம், “நான் சொல்ற வரைக்கும் இந்த ரூம் உள்ளே யாரையும் அலோவ் பண்ணாதீங்க” என்று மீண்டும் அழுத்திச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
—------------
பிரேத பரிசோதனையின் முடிவைக் கையில் வாங்கியவளுக்கு உச்சகட்ட அதிர்ச்சி.
“ஆர் யூ ஷ்யர் டாக்டர்?” என்று சிவராமன் கேட்க,
“எஸ் சார்.. மேடம் கொடுத்த ஹேர் சாம்பிளை டெஸ்ட் பண்ணியாச்சு.. இப்போ இறந்தவங்களோட டி.என்.ஏ வோட அது மேட்ச் ஆகுது” என்றார் மருத்துவர்.
சாஹித்யாவின் அறைக்குச் சென்றவள் அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டியபோது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் இருந்த தலைமுடியை எடுத்து வந்திருந்திருந்தாள். அதையும் ஆய்வுக்கு உட்படுத்தவே, இதோ அவர்கள் நினைத்தது சரி என்பது போலத் தான் முடிவும் வந்திருந்தது.
“அதுமட்டுமில்ல.. அவங்க உடலை விட்டு உயிர் பிரிஞ்சது நேத்து காலைல.. ஆனா சில காயமெல்லாம் கடைசி ஏழு மணி நேரத்துல ஆகியிருக்கு.. யூ க்னோ வாட் ஐ மீன்” என்று பெருமூச்சுடன் சொல்ல, இருவருக்குமே உள்ளுக்குள் அதிர்வு.
அவர்களுக்குத் தேவையான இன்னும் சில தகவல்களையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பிய நேரம் இரவாகியிருந்தது.
“நீங்க கிளம்புங்க சிவராமன். நாளைக்கு சாரதா இல்லம் போகணும்” என்று சொன்னவளின் முகம் பெரும் தீவிரத்தைச் சுமந்திருந்தது.
அங்கிருந்து மீண்டும் தன் அலுவலகம் சென்றுவிட்டு வீடு திரும்பியவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்ரீ வீட்டில் இல்லை!!
கருத்துக்களைப் பகிர:
அத்தியாயம் 9
அறைக்குள் நுழைந்த கோமதி நாச்சியாருக்கு அம்மாவின் மீதும் தங்கையின் மீதும் அளவில்லாத கோபம் வந்தது.
‘அத்தனை டைம் சொல்றேன்.. அதையும் மீறி அனுப்பி வச்சிருக்காங்க.. இவளுக்கு அப்படியென்ன அவசரம்’ என்று தாயையும் தங்கையையும் மாறி மாறி வைதவள் தங்கைக்கு அழைத்தாள். நேரம் சென்றே அழைப்பு எடுக்கப்பட, அவளைத் திட்ட வேண்டுமென்ற நினைப்பையெல்லாம் துடைத்து எறிய வைத்திருந்தது ஸ்ரீயின் குரல்.
ஒற்றை ஹலோவிலேயே வித்தியாசத்தை உணர்ந்து, “என்னாச்சு ஸ்ரீ?” என்று கோமதி நாச்சியார் திகைப்புடன் கேட்க, மறுபக்கம் ஸ்ரீ தடுமாறினாள். உண்மையைச் சொல்வதா வேண்டாமா? என்று அவள் யோசிப்பதற்குள் கோமதி நாச்சியார் அழைப்பைத் துண்டித்துவிட்டு காணொலி அழைப்பில் வந்துவிட்டாள்.
அதுவும் நேரம் சென்றே எடுக்கப்பட, இந்தப் பக்கம் திரையில் தெரிந்த தங்கையின் உருவத்தில் திகைத்தாள் நாச்சி.
“ஸ்ரீ? என்ன இது? உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கு? ஹாஸ்பிடல் எதுக்கு வந்திருக்க?” என அடுத்தடுத்து அவள் கேள்விகளைக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திண்டாடிப் போனாள் அவள்.
“வீட்டுக்கு வந்து சொல்றேனேக்கா” என்று ஸ்ரீ மன்றாடும் குரலில் சொல்லும்போதே, ஸ்ரீ என்ற அலறல் கேட்க, உடல் வெளிப்படையாகத் தூக்கிப்போட சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினாள் அவள்.
“என்னாச்சு கார்த்திக்?” என்றவளுக்கு அவன் நின்றிருந்த கோலம் மனதைப் பிசைய, என்ன நடந்திருக்கும் என்பது அவன் சொல்லாமலே அவளுக்கு விளங்கியது. சரசரவென்று கண்ணீர் கண்ணை விட்டு இறங்க, அவனை அணைத்துக் கொண்டாள் அவள். கார்த்திக் அப்படி வெடித்து அழுதான்.
“அம்மா போய்ட்டாங்க.. என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க” என்று கதறியவனுக்கு எங்கனம் ஆறுதல் சொல்லுவாள்? அவளும் சேர்ந்து அவனை அணைத்துக் கொண்டு அழ, கார்த்திக்கின் அழுகை நேரம் செல்லச் செல்லக் கூடிக் கொண்டே போனது. திரையிலிருந்த கோமதி நாச்சியாருக்கு இருவரின் அழுகை சத்தமும் பேச்சு சத்தமும் மட்டுமே கேட்டது.
கார்த்திக்கின் அன்னை கோதையிடம் ஸ்ரீ இதுவரை பேசியதே இல்லை. நட்பாகக் கூடக் கார்த்திக் அறிமுகப்படுத்தியது கிடையாது. அத்தனை கண்டிப்பானவர். இளம் வயதிலேயே கணவனை இழந்து அதன் பின்னர் கார்த்திக்கை வளர்க்க அவர் பட்டபாடு கொஞ்சமில்லை. மகன் ஒரு நிலைக்கு வந்தால்தான் தங்கள் வாழ்வில் ஏறுமுகம் என்பதை உணர்ந்தவர் அதனைச் சொல்லிச் சொல்லியே வளர்த்தார். அதனால்தான் காதலை வீட்டில் சொல்வதற்கே அவன் அத்தனைதூரம் தயங்கினான். வேலையில் அமர்ந்த பிறகு ஸ்ரீயை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற அவன் நினைத்திருக்க, விதி வேறொன்றை முடிவு செய்திருந்தது.
நேற்று இரவு வரை நன்றாக இருந்தவர் தான் கோதை. இரவு திடீரென்று தலைசுற்றுவதைப் போலிருக்க, எதுவும் சமைக்காமல் அப்படியே சுருண்டுவிட்டார். கார்த்திக் வெளியே சென்று இருவருக்கும் இட்லி வாங்கிக் கொண்டு வந்த போது வீட்டிற்கு வெளியே நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
“என்னம்மா செய்யுது?” என்றபடி பதறிப்போய் அவன் அருகில் வரும் நேரம் மயங்கி அவன் மீது சரிந்திருந்தார். அதுவரை மட்டுமே அவன் நினைவில் பதிந்திருந்தது. ஆட்டோவை அழைத்ததிலிருந்து அருகிலிருந்த மருத்துவமனை வந்து சேர்ந்தது வரை எதுவுமே நினைவில்லை. மூளை மரத்துப் போன நிலையில் தான் கிட்டத்தட்ட இருந்தான். அது கிட்டத்தட்ட ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி தான் இருந்தது.
கோதையைப் பரிசோதித்த மருத்துவர்,“ஒரு சைடு கை, கால் வரல.. ப்ரஷர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.. க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்.. இங்க பார்க்க முடியாதுப்பா.. பெரிய ஜி.எச்-க்கு கூட்டிட்டுப் போய்டுங்க” எனக்கூற, திக்பிரம்மை பிடித்த மாதிரி நின்றுவிட்டான் கார்த்திக்.
அவனது நிலையைப் பார்த்த மருத்துவருக்கு என்ன தோன்றியதோ?
“யாரும் கூட இல்லையா? நீங்க மட்டுந்தான் வந்திருக்கீங்களா?” எனக் கேட்க, தலையசைத்தான் அவன் கண்களில் மிரட்சியுடன்.
“சீக்கிரம் கூட்டிட்டுப் போறது தான் பெஸ்ட்” என்று அங்கிருந்த செவிலிப் பெண்ணைக் காட்டி ஏதாவது தேவை என்றால் அந்தப் பெண்ணிடம் கேட்கச் சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.
திகைப்பிலிருந்து மீண்டு தன்னைச் சமன்படுத்திக் கொண்டவன் ஆம்புலன்ஸை அழைத்து, அடுத்த அரைமணி நேரத்திலேயே அரசு மருத்துவமனைக்கு கோதையைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான். இத்தனை நேரமும் கோதை கண் விழிக்கவே இல்லை. அவனுக்கு அதுவேறு பயமாக இருக்க, அங்கு அவருக்கு அனைத்து டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது. இடையே ஒருமுறை மட்டுமே கண் விழித்துப் பார்த்தார். யாரும் அருகில் இல்லாமல் பயந்து போனவனுக்கு ஸ்ரீ எப்போதும் போல அந்நேரம் அழைக்க, அழைப்பை எடுத்ததுமே அழுதுகொண்டே விஷயத்தைக் கூறினான் அவன். அதற்கு மேல் அவளாலும் வீட்டிலிருக்க முடியவில்லை. அந்த நேர இரவைக் கஷ்டப்பட்டு நெட்டித் தள்ளியவள் மறுநாள் காலை கல்லூரியில் முக்கியமான சர்ட்டிபிகேட் தருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். சங்கரகோமதி நாச்சி சொல்லிச் சென்றதைக் கூறித் தயங்க, கண்டிப்பாகப் போயாக வேண்டும் என்று கூறிவிட்டு வந்துவிட்டாள். அவள் வந்ததிலிருந்து இடையில் ஒருமுறை மட்டுமே கோதைக்கு நினைவு திரும்பியது. அப்போது கார்த்திக் மருந்து வாங்க வெளியே சென்றிருக்க, ஸ்ரீ தான் உள்ளே சென்றாள்.
அந்நியப்பார்வை பார்த்தவரின் அருகில் சென்றவள், “நான் கார்த்திக் ஃப்ரெண்ட் மா.. நீங்க கவலைப்படாதீங்க.. சீக்கிரம் சரியாகிடுவீங்க” என்று கூற, ஸ்ரீயின் கண்களில் பளபளத்த நீரினைக் கண்டவருக்கு எதுவோ புரிவதைப் போலிருந்தது. அவரால் பேச முடியவில்லை. தலையை மட்டும் அசைத்தார். அதற்குள் கார்த்திக்கும் வந்துவிட, ஒரே நாளில் மகனின் ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்தவருக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
“ம்மா” என்றபடி அவன் வேகமாக வர, கண்ணீர் வழிந்தது கோதையின் கண்களிலிருந்து.
“கார்த்திக் கன்ட்ரோல்” என்று மெதுவாக ஸ்ரீ சொல்லவும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,
“ம்மா ஒன்னுமில்ல சரியாகிடும்” என்று கூறித் தாயைத் தேற்ற, கோதை நிராசையுடன் இருவரையும் பார்த்தார்.
கார்த்திக்கிடம் தனியாக ஏதேனும் பேச நினைக்கலாம் என்றெண்ணி ஸ்ரீ வெளியே செல்லப் போக, கார்த்திக் அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டான்.
“நீ இரு” என்று கூறியவனிடம் மறுக்க முடியாமல் சங்கடமாக கோதையைப் பார்த்தாள் அவள். அவளது பார்வையைச் சந்தித்ததுமே கோதை அவளை அருகில் அழைக்க, அருகில் சென்றாள் ஸ்ரீ.
“அவ..னைப் பார்..த்..துக்..கோ மா” என்று திக்கித் திணறி கோதை சொல்ல,
“இப்படிலாம் பேசாதீங்கம்மா.. சீக்கிரம் சரியாகி நீங்க வந்துடுவீங்க” என்றாள் கலங்கிய குரலில் அவள்.
அதற்கு பதில் வரவே இல்லை. அவரது நினைவு மீண்டும் தப்பியிருந்தது. அதுதான் அவர் கடைசியாகப் பேசியது. இப்போதும் அவர் சொல்லியதை நினைத்துப் பார்த்தவள் அவனை இதிலிருந்து எப்படித் தேற்றுவது என்பது புரியாமல் தானும் அவனுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தாள்.
இன்னும் அழைப்பில் கோமதி நாச்சியார் இருந்தாள். இருவரின் குரல்கள் மட்டுமே கேட்க, அங்கே நடப்பதைப் புரிந்துகொண்டாள். அதிலும் தங்கையின் இந்த அழுகை.. அதுவே அவர்கள் இருவருக்கான பந்தத்தைச் சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
ஏனோ அதுவரை இருந்த கோபம் கூட அப்போது அவளுக்கு இல்லை. சங்கரகோமதியை நினைத்து மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. அவளுடைய தந்தை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஸ்ரீ சொல்லும்போது வீட்டில் தெரியப்படுத்தலாமா இல்லை முன்னமே சொல்லிவிடலாமா என்றொரு யோசனை வேறு வந்தது. அவளது விஷயத்தை மறைத்ததற்கே சங்கரகோமதி மனதளவில் மிகவும் ஒடிந்துவிட்டார். இதில் தங்கையின் விஷயமும் அவரைக் காயப்படுத்திவிடக் கூடாதே என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
சங்கரகோமதியை சரிகட்ட முடியுமென்றால் இப்போதைய நிலவரப்படி ஒருவனால் மட்டுமே முடியும். அது அஜய்! அவனது நினைவு வரவுமே அவன் பார்த்துக் கொள்வான் என்ற உந்துதல் அவளை அறியாமல் அவளை அமைதியாக்க, இப்போது மீண்டும் தங்கையின் நினைவு வந்தது. அங்கே உள்ள சூழ்நிலையைத் தனியாக எப்படி சமாளிப்பாள்? என்றெண்ணி அவள் வருந்த, உடனே போக முடியாமல் அவளது வேலை வேறு அவளைக் கட்டி வைத்திருந்தது. வேலை நினைவு வந்ததுமே சாஹித்யாவைப் பற்றி யோசனையோட, அவள் அதற்குள் மூழ்கிவிட்டாள்.
கார்த்திக் அடுத்தது என்னவென்று புரியாமல் திக்பிரம்மை பிடித்தவாறு அமர்ந்துவிட, ஸ்ரீ தான் மற்ற அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த பின்னரே உடலைத் தருவது வழக்கம் என்று கூற, அங்கிருந்த தலைமை செவிலியரிடம் ரொம்பவே கெஞ்சிக் கேட்டு அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி தான் உடலை வாங்கியிருந்தாள் ஸ்ரீ. அவர்களது கல்லூரி வாட்சப் குரூப்பிலும் அந்நேரத்திலேயே விஷயத்தைத் தெரிவிக்க, அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே அங்கே அவர்களது வகுப்புத் தோழர்கள் சிலர் இருந்தனர்.
கார்த்திக்கைப் பார்த்ததும், “ஏன்டா எமர்ஜென்ஸினா ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா? ஸ்ரீ அங்கே இருந்து வந்திருக்கா.. பக்கத்துல இருக்க எங்களுக்குத் தெரியல. அவ சொல்லித்தான் தெரியுது” என்று கடிந்து கொண்டாலும் அடுத்த வேலைகளை அவர்கள் பிரித்துக் கொண்டனர். இரவு நேரமாக இருந்தாலும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து விட்டனர். மறுநாள் மதியம் அடக்கம் செய்வதாக இருந்தது.
பொழுது புலர ஆரம்பித்ததிலிருந்தே தாக்கல் தெரிந்து கார்த்திக்கின் சொந்த பந்தங்களும் வர ஆரம்பித்திருந்தனர். ஸ்ரீ எதற்கும் பின் நிற்கவில்லை. அவளுக்கு அது தோன்றவும் இல்லை. அவனைத் தனித்து விட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே நினைவில் இருந்தது. அதனால் அவள் எப்போதும் கார்த்திக்கை அருகிலேயே இருத்திக் கொள்ள, அவனும் அவளை விட்டு நகரப் பிரியப்படவில்லை. கார்த்திக்கின் சொந்த பந்தங்களுக்கு அவர்களது நெருக்கம் கண்ணை உறுத்த, விஷயம் மெல்ல மெல்ல அனைவரின் வாயிலும் அரைப்பட்டது. எதுவுமே இருவர் கவனித்திலும் வரவில்லை. கூடத்தை விட்டு நகரவில்லை என்றாலும் கூட, அவளிடம் கேட்டுத்தான் அவர்களது நண்பர்களும் அனைத்தையும் செய்தனர். அதைப் பார்த்தவர்களுக்கு ஏகத்துக்கும் கடுப்பாகிப் போக, எல்லோரும் ஒருசேர ஸ்ரீயை வெட்டவா குத்தவா என்றே பார்த்தனர்.
மதிய நேரம் போலவே அனைத்து சடங்குகளும் செய்து அடக்கம் செய்ய உடலை எடுக்கப் போக, அதுவரை இறுகிப் போயிருந்த கார்த்திக் வெடித்து அழுதான். அப்படியொரு அழுகை. அவனது அழுகையில் ஸ்ரீ வாயில் கை வைத்துத் தன் அழுகையை அடக்கப் பார்க்க, அவளையும் மீறி கேவல் வெடித்தது. ஊர் கூடி ஒப்பாரி பாட, அப்படி அவர்கள் சொல்லி அழுதது இன்னுமின்னும் பாரத்தைத் தர, கார்த்திக் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தோட முன்னால் நடந்தான். ஸ்ரீ சொல்லத் தேவையிருக்காமல் சில நண்பர்கள் இடுகாட்டிற்கு அவனுடனே சென்றனர். எல்லா காரியங்களையும் முடித்து வீடு வந்த போது நெருங்கிய சொந்தங்களும் அக்கம் பக்கத்தினர் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.
கார்த்திக் யாரையும் கண்டுகொள்ளவில்லை. ஒரே நாளில் அவன் வாழ்க்கையே மாறிவிட்டதை எண்ணி மனம் கனக்க அப்படி தரையில் சாய்ந்து அமர்ந்து விட்டான். ஏதேதோ எண்ணங்கள் வந்து அவனை இன்னும் அதிகமாகப் பலமிழக்கச் செய்ய, கண்களில் மீண்டும் கலங்கிச் சிவக்க ஆரம்பித்தது. அருகில் ஸ்ரீ வந்து அமர்ந்ததைக் கூட உணராமல் அன்னையின் நினைவில் ஆழ்ந்திருந்தவனுக்கு உதடுகள் மீண்டும் துடிக்க ஆரம்பித்தன.
அழுகையை அடக்க அவன் படும் பாட்டைப் பார்த்தவளுக்கும் சேர்ந்தே கண்ணீர் வர, அவனின் மௌனத்தைக் கலைக்கத் தோன்றாமல் அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.
பின் வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் எதார்த்தமாகப் பார்த்தவளுக்கு, அவர்களது நண்பனில் ஒருவன் பந்தல் போட்டவரிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. பின் எவ்வளவு தொகை சொன்னாரோ அதையும் அவனே கொடுக்க, எழுந்து உள்ளறைக்குச் சென்று தன் பர்ஸை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
எவ்வளவு என்று கேட்டு அந்த நண்பனிடம் அவள் பணத்தைத் தர, அவன் அவளை முறைத்தான்.
“இதென்ன கணக்கா வந்து கொடுக்கிற? இப்போதைக்கு எங்க கிட்ட இருக்கு.. தேவைன்னா வாங்கிக்கிறோம். நீ உள்ள வை போ” என்று அவன் கடிந்துகொண்டாலும் அதை மறுத்து அவன் கையில் பணத்தைத் திணித்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவள் வேறொரு யோசனையில் எதிரில் வந்தவரைக் கவனிக்காமல் மோதிவிட்டாள்.
“ஐயோ சாரிங்க” என்று கேட்பதற்குள்,
“ஏய் அறிவில்ல? கண்ணை எங்க வச்சுட்டு நடக்குற?” என்று கீச்சுக் குரலில் கத்திவிட்டார் எதிரில் இருந்தவர்.
ஸ்ரீ ஒரு நொடி திகைத்தாலும் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “சாரிங்க கவனிக்கல” என்றபடி மோதியதால் கீழே விழுந்திருந்த தன் பர்ஸை எடுத்தாள்.
“அதான? கவனத்தை இங்க எப்பிடி வைப்ப நீயி? உங்கவனம் எல்லாந்தேன் எம்மருமவன் மேலேல இருக்கு” என்றவர் அவளது கையிலிருந்த பர்ஸைப் பிடுங்கினார்.
அவரது பேச்சிலேயே அதிருப்தியுடன் அவரைப் பார்த்தவள் பர்ஸைப் பிடுங்கவும் என்ன இது என்று எரிச்சலோடு பார்த்தாள். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அந்தப் பெண்மணி இல்லை. அவர் உள்ளிருந்த பணத்தைப் பார்த்து வாயைப் பிளந்திருந்தார்.
“என்ன உரிமையா எடுத்து எங்க வூட்டுப் பணத்தை எடுத்து செலவு பண்ணிட்டுக் கெடக்க? எல்லாம் அந்தப் பையலைச் சொல்லணும். அவனும் உன்ன உள்ரூம் வரைக்கும் புலங்க விடுறான் பாரு.. ஆமா இதுல எம்புட்டு இருந்துச்சு?” என்று சந்தேகமாக அவர் கேட்க,
அவருக்குப் பதில் சொல்லும் மனநிலையில் எல்லாம் அவள் இல்லை. இருந்தாலும் கார்த்திக்கின் சொந்தம் என்ற ஒரே காரணத்திற்காக அங்கு பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்.
“உன்னைத்தான் கேட்குறேன்.. எம்புட்டு இருந்துச்சு? செலவுக்குப் பார்க்கிறேனு எம்மருமவன் கிட்ட சொல்லிட்டு சைடுல எதையும் தள்ளிட்டியா?” என்று வேறு கேட்க, கோபமெல்லாம் வரவில்லை. ஆயாசமாக அவரைப் பார்த்தாள் ஸ்ரீ.
அவளுக்கு இருக்கும் ஆயிரம் சிந்தனைகளில் இதென்ன புதிதாக வம்பு என்று அலுப்பாக அவள் வந்தவரைப் பார்க்க,
“பதில் சொல்ல மாட்டியா கேட்டா? நான் யாருனு தெரியுமா?” என்றார் முறைப்பாக.
அதுவரை இருந்த பொறுமையெல்லாம் கரைந்து போக, “யார் நீங்க?” என்றாள் கைகளைக் கட்டிக் கொண்டு.
அவளது தோரணையில் திகைப்பாகப் பார்த்தவர், “கார்த்திக்கோட தாய்மாமன் பொண்டாட்டி. எம்மவளைத்தான் அவன் கட்டிக்கப் போறான். போதுமா சேதி?” என்று திமிராகக் கேட்க,
அவரது பதிலில் அவரைத் தெரிந்து கொண்டவள் முகம் கடுக்க, “அவன் கல்யாணம் பண்றப்போ அதைப் பார்ப்போம்.. இப்போ நகருங்க எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லி நகரப் பார்த்தாள் ஸ்ரீ.
“என்ன வேலை? எம்மருமவனுக்கு ஒட்டுப்புல்லா திரியிற வேலையா? அதென்ன அசிங்கமில்லாம வயசுப் பையனை இப்படி ஒட்டிட்டு அலையுற? என் பொண்ணைக் கட்டிக்கப் போறானு சொல்றேன்.. இன்னும் ஒட்டி ஒராய போற.. இப்படியா ஒருத்தி வெட்கங்கட்டுத் திரியுவா?” என்று வந்தவர் ஏகத்துக்கும் குதிக்க, அவளது நண்பர்களில் இருவர் அருகில் வந்துவிட்டனர்.
“என்ன பிரச்சனை ஸ்ரீ?” என்று ஒருவன் கேட்க,
“ஒன்னுமில்ல வினேஷ்.. நீங்க போங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தவள் எதிரில் இருந்தவரைத் தீயாக முறைத்தபடி அவரைப் போலவே தன்னுடைய பர்ஸைப் பிடுங்கினாள்.
“ஏய்..” என்று அவர் ஆரம்பிக்க,
“ஷ்ஷ்.. எதாவது சத்தம் வந்துச்சு அடுத்துப் பேச வாய் இருக்காது.. என்ன பேசத் தெரியாத புள்ளைனு வந்து உன் ஜம்பத்தைக் காட்டுறியா? நான் உனக்கும் பலமடங்கு பேசுவேன்.. துக்க வீட்ல வந்து பணப்பேயாட்டம் இந்த குதி குதிக்கிற.. உனக்கு வெட்கமாயில்ல? இதுல என்ன கேட்க வந்துட்ட.. கார்த்திக் அப்பா இறந்ததும் எங்க உன் புருஷன் எதாவது தங்கச்சிக்கு கொடுத்து உதவிடுவாருனு இத்தனை வருஷமா தள்ளி நின்னுட்டு இப்போ வந்து ஒட்டிக்கப் பார்க்கிற நீயெல்லாம் என்னைப் பேசலாமா? ஒழுங்கா நகரு” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே செல்ல,
அவள் பேசிய பேச்சில் அதிர்ந்து நின்றவருக்கு அவள் ஏகவசனத்தில் பேசியதே அப்போது தான் உரைத்தது. சட்டென்று முகம் சுண்ட, அதேவேகத்தில் அவரும் அவள் பின்னேயே சென்றார்.
“ஏய்” என்று அவர் அழைத்ததில் கடுப்பாகி,
“ஏய் ஓய்னு கூப்பிட்ட கன்னம் பழுத்துடும்” என்றவள்,
“இங்க பாருங்க.. நீங்க என்ன ஐடியால இதெல்லாம் பேசுறீங்கனு எனக்குத் தெரியும். அதெல்லாம் நடக்காது. நானும் கார்த்திக்கும் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். சும்மா இந்த உசுப்பேத்துற பேச்செல்லாம் என்கிட்டப் பேசுற வேலை வச்சுக்காதீங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் சொல்லிவிட்டுச் சென்ற செய்தியில் இடி இறங்கியதைப் போல விழித்தார் எதிரிலிருந்த ரங்கநாயகி. அவர் கனவெல்லாம் ஆட்டம் கண்டதைப் போலிருந்தது. இப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் அவரும் பேசியது. அதுவே உண்மையாகவும் இருக்க, நேராகத் தன் கணவனிடம் சென்றார் அவர்.
நேரங்கள் கரைய ஆரம்பிக்க, நெருங்கிய சொந்தங்கள் சிலரும் கூட புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அவனது நண்பர்களும் ஸ்ரீயிடம் சொல்லிவிட்டு கார்த்திக்கிடம் ஏதாவது தேவையென்றால் அழைக்கச் சொல்லிப் புறப்பட, கார்த்திக்கின் தாய்மாமா கணபதியும் அவரது மனைவி ரங்கநாயகியும் மட்டுமே இருந்தனர்.
வீட்டாளைப் போல ஸ்ரீ இன்னும் அங்கிருக்க, ரங்கநாயகிக்குத் தாள முடியாத எரிச்சல் வந்தது. அவர் தன் கணவரிடம் கண் காட்ட, கணபதியும் கார்த்திக்கிடம் வந்தார்.
“அடுத்து என்ன மாப்ள செய்யப் போற?” என்று அவர் ஆரம்பிக்கவும் அவன் புரியாமல் அவரைப் பார்க்க,
“யாருமில்லாம இப்படித் தனியா இருப்பியா நீ? பேசாம சோழவந்தான் வந்துடு.. மாமா வீடு இருக்கும்போது தனியா கஞ்சி காய்ச்சுக் குடிக்க உனக்கென்ன தலையெழுத்து?” என்றார் அவர் விளக்கமாக.
அவரின் விளக்கத்தில் தாயை எண்ணிக் கலங்கினாலும் உறுதியாக இல்லையென்று தலையசைத்தான் அவன்.
“நான் என்ன சின்னப்புள்ளையா மாமா? அதெல்லாம் ஒன்னும் வேணாம்” என்று கத்திரித்தாற் போல அவன் பேச,
“சரி அங்க வரத்தான் சங்கோஜப்படுற.. ஆனா உன்னை எப்படி மாப்ள தனியா விட்டுட்டுப் போகச் சொல்ற? மனசு கேட்குமா? ஒத்த வாய்ச் சோறு உள்ள இறங்குமா எனக்கு? அப்படிப் போனா என் தங்கச்சி ஆத்மா தான் என்னை சும்மா விடுமா?” என்று நெக்குருகிப் பேசினார் கணபதி.
அவரது பேச்சு கார்த்திக்கிற்கு வேப்பங்காயாக கசந்தது. தந்தை இறந்த போது அவர்களது பாசத்தைத் தான் பலமுறை கண்டிருக்கிறானே..! அதையும் எதையோ விழுங்குவது போல் விழுங்கிக் கொண்டு கல்லூரி சேர்கையில் உதவியென்று கோதை அண்ணன் வீட்டுப் படியேற, எவ்வளவு வார்த்தைகளை அன்னையோடு சேர்ந்து அவனும் கேட்க வேண்டியிருந்தது? தந்தை இறந்துப் பல வருடங்கள் கடந்த நிலையில் அன்று தான் கோதையின் கண்ணீரை கார்த்திக் மீண்டும் பார்த்தான். படிப்பே வேண்டாம் ஏதாவது வேலைக்குப் போகிறேன் என்று அவன் சொல்ல, அப்போது தான் அந்த முடிவை எடுத்தார் கோதை. வீட்டுப் பத்திரத்தை வங்கியில் வைத்து அவனை நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டார். அவனது மதிப்பெண்ணிற்கு உதவித்தொகையும் கிடைக்க, அடுத்து அவர்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை. முதலாம் ஆண்டு அவசரத்திற்கு வைத்த வீட்டுப் பத்திரத்தைக் கூட அடுத்த இரண்டாண்டுகளில் கோதை மீட்டிருந்தார். அனைத்தையும் எண்ணிப் பார்த்தவன் கல் போன்ற இறுகிய முகத்துடன் கணபதியைப் பார்த்தான்.
“பேசாம எம்மவளையே உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன்.. அப்பத்தான் உன்னைப் பத்தி கவலை இல்லாம நாங்களும் அங்கன நிம்மதியா இருக்க முடியும்” என்று அவர் வெளிப்படையாகப் பேச,
இதையெல்லாம் ஸ்ரீயும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். கார்த்திக் பேசிக் கொள்ளட்டும் என்று அவள் நிற்க,
“ஸ்ரீ…” என்ற கார்த்திக்கின் கத்தலில் உடல் தூக்கிப்போட அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் அவள்.
“என்ன கார்த்திக்?” என்று அவள் வந்ததுமே,
“குடும்ப விஷயம் பேசுறப்போ” என்று ரங்கநாயகி ஆரம்பிக்க,
“என் குடும்பம்னா அது இனிமேல் ஸ்ரீயும் அவளைச் சார்ந்தவங்களும் அடங்குவாங்க அத்தை.. சுத்தி வளைச்சு ஏன் பேசணும்? மாமாவும் நீங்களும் என்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறதால தான் உங்க கிட்ட இன்னைக்கே சொல்ல வேண்டியதா இருக்கு. இது வேற யாருமில்ல. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு தான். எனக்கு இவ இருக்கா.. அதுனால என்னைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க” என்று கார்த்திக் கூற, ரங்கநாயகி கணபதியைத் தீயாக முறைத்தார்.
“என்ன மாப்ள இது? யாரோ எவரோ ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்து இப்படி சொல்ற? என் தங்கச்சி இருந்தா இந்நேரம் என்ன ஆகியிருக்கும் தெரியும்ல? அவ இல்லைன்னு தான் இம்புட்டு தெனாவெட்டா சொல்றியா நீ? சொந்த மாமன் மகளை விட்டுட்டு ஊர் பேர் தெரியாத பொண்ணைக் கல்யாணம் பண்ணப் போறேனு சொல்ற” என்று கணபதி குதிக்க,
“அம்மாவுக்குத் தெரியும் மாமா.. அவங்களுக்கு இதுல முழு சம்மதம் இருந்துச்சு” என்றவனின் குரல் கமறியது.
மனமறிந்து பொய் சொல்கிறான். ஆனால், இதுவும் நல்லதற்கே.. இல்லையென்றால் இவர்கள் அடுத்து வேறு ஏதாவது திட்டமிடக்கூடும் என்று எதிர்பார்த்தே அவன் இவ்வாறு கூறியது. அவன் மனம் மீண்டும் கோதையின் காலடிக்குச் சென்றுவிட, ஸ்ரீ கார்த்திக்கின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
கோதைக்கும் தெரியும் என்று சொல்லவும் கணபதி என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க,
“என்ன முழிக்கிறீங்க? வாங்க போகலாம்.. இவனை விட்டா வேற மாப்பிள்ளை இல்லை பாருங்க.. ஏதோ கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேனு பாவம் பார்த்து சொன்னா நம்மளயே எடுத்தெறிஞ்சு பேசுறான்” என்று பொறுமியவர் அதே பொறுமலோடு அந்த வீட்டைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினார். அந்தப் பார்வையே அவரது எண்ணத்தைப் பறைசாற்ற, ஸ்ரீயின் விழிகளில் கேலிப் புன்னகை. அதையும் கண்டுவிட்டரால் அதற்குமேல் அங்கே ஒருநொடி கூட இருக்க முடியவில்லை. கணபதியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
சட்டென்று வீடே அமைதியாக, கார்த்திக்கும் ஸ்ரீயும் மட்டுமே..! அவன் அப்படியே கீழே அமர அவனருகில் அமர்ந்து கொண்டவள் முகம் தீவிரமான யோசனையில் இருந்தது. அந்தத் தனிமை கொடுத்த ஆசுவாசத்தில் இதுவரை கட்டி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் மௌனமான கண்ணீராக வெளியேற, அவனது கண்ணீரைப் பார்த்தவள் வலியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது இந்த இழப்பு.. இதற்கு எப்படி ஆறுதல் சொல்வது? இட்டு நிரப்பக்கூடிய இடமல்லவே அன்னை ஸ்தானம்.. அதிலும் கார்த்திக்கின் அன்னை மீதான பிடித்தம் அவளறிந்தது தானே? எல்லாம் நினைக்க நினைக்க அவளுக்கே கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. அழட்டும். அப்படியாவது நெஞ்சை அழுத்தும் அவனது துக்கம் சற்று மட்டுப்பட்டால் சரிதான் என்று எண்ணிக் கொண்டாள்.
அதேசமயம் அவனை அப்படியே விட்டுச் செல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவளாலும் இங்கு இப்படியே இருக்க முடியாதே!? யோசித்து யோசித்து இரவு உறங்கும் முன்னர் முடிவெடுத்தவள் மறுநாள் விடியற்காலையில் கார்த்திக்கையும் உடன் அழைத்துக் கொண்டு திருநெல்வேலியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
அத்தியாயம் 10
உணவு மேஜையில் அமர்ந்து உணவுண்டுக் கொண்டிருந்தவள் அலைபேசி இசைக்கவும் எடுத்துப் பேசினாள். சிவராமன் தான் பேசியது. அவனிடம் பேசிவிட்டு வைத்தவளை அடுத்ததாக சரண்தேவ் அழைத்தான். அலைபேசி எண்ணைப் பார்த்ததும் முகத்தில் அவளை மீறிய இளக்கம் தென்பட, அழைப்பை உயிர்ப்பித்து காதுக்குக் கொடுத்தாள் கோமதி நாச்சியார்.
“மம்மி..” என்றவனின் குரலில் தான் எத்தனை துள்ளல். அமைதியாக அதை உள்வாங்கிக் கொண்டவள்,
“என்ன இந்த நேரத்துல மம்மி ஞாபகம்? ஸ்கூலுக்குப் போகலயா நீ?” என்று கேட்க,
“இல்ல.. பாட்டிக்கு காய்ச்சல்.. சோ அவங்கள பார்த்துக்க லீவ் போட்டுட்டேன்” என்றான் அவன்.
“நீ பார்த்துக்கப் போறியா? அவ்ளோ பெரிய மனுஷனாகிட்டியா?” என்று சிரித்தவள், “பாட்டி என்ன பண்றாங்க?” என்றாள். கேட்கும் போதே இன்னும் அவருடன் அவள் ஒருமுறை கூடப் பேசியது இல்லை என்ற உண்மை அவளைச் சுட, முயன்று தன் கவனத்தை தேவ் மீது வைத்தாள் நாச்சி.
“டேப்லெட் போட்டுட்டு தூங்குறாங்க” என்றவனும் அதோடு பாட்டியை விட்டுவிட்டு அவனது பள்ளி பற்றியும் திருமணத்தன்று அவன் அணியப்போகும் குர்தாவைப் பற்றியும் பெருமை பொங்க கூற ஆரம்பிக்க, அதை மெல்லிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். திருமணம் பற்றி அவளது தாய் ஏதேனும் பேசினால் கூட வேலையிருக்கிறது என்று நழுவி ஓடி விடுபவள் சரண்தேவிடம் அதைப் போலச் செய்வதில்லை. சிறுவனிடம் முகம் சுண்டி பேசிவிடக் கூடாது என்ற கவனத்துடன் முன்பெல்லாம் பேசிக் கொண்டிருந்தவளை இயல்பாகவே அவனிடம் ஒட்டச் செய்துவிட்டான் சரண்தேவ்.
அவனது ஆவல் வழிந்த பேச்சுக்களை சிறு ரசனையோடு கேட்டு முடித்தவள் மணியைப் பார்த்துவிட்டு,
“மம்மிக்கு ட்யூட்டி டைம் ஆகிடுச்சு தேவ்.. நான் நைட் வந்ததும் பேசட்டுமா?” என்று கேட்க, எதிர்வாதம் எதுவும் செய்யாமல், “ஓகே பை” என்று வைத்துவிட்டான் அவன்.
மகள் பேசுவதைப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சங்கரநாராயணனிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப, அதேநேரம் வீட்டு வாசலில் கார்த்திக்கும் ஸ்ரீயும் நின்றிருந்தனர்.
இருவரையும் சேர்ந்து பார்த்த கோமதி நாச்சியார் திகைத்து, அவசரமாகத் தங்கையை ஆராய, அவள் நினைத்தது மாதிரி எதுவும் இல்லை. அதன் பின்னரே ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.
கார்த்திக் சங்கடமாக நின்றிருக்க, ஸ்ரீ அவனின் கரங்களைப் பிடித்திருந்தாள். நாச்சியின் பார்வை அவர்களது இணைந்திருந்த கரங்களின் மேல் விழவும் தானாக ஸ்ரீ தன் கரங்களை விலக்கிக் கொண்டாள். ஆனால், கார்த்திக்கை விட்டு விலகி நிற்கவில்லை.
கோமதி நாச்சியார் உள்ளே திரும்பிப் பார்த்துவிட்டு, “என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?” என்று பதட்டத்துடன் கேட்க, கார்த்திக்கிற்கு என்னவோ போலிருந்தது.
அவனும் எத்தனையோ சொல்லிப் பார்த்துவிட்டான். ஆனால், எதுவும் ஸ்ரீயிடம் எடுபடவில்லை. வீம்பு பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்.
“தப்பா நினைச்சுக்காதீங்க சிஸ்டர்.. நான் ஸ்ரீயை வீட்ல வந்து விடுறதுக்காகக் கூட வந்தேன்” என்று கார்த்திக் ஆரம்பிக்கவுமே,
பேச்சுக் குரல் கேட்டு சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் வெளியே வந்துவிட்டனர். வந்தவர்கள் ஸ்ரீ ஒரு பையனுடன் நின்றிருக்கவும் அதிர்ந்து போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“யாருட்டி இது?” என்று சங்கரகோமதி அதிர்ச்சி மீளாமல் கேட்க, ஸ்ரீக்குத் தொண்டைக்குழியில் முள் சிக்கிய உணர்வு தான். பேச முடியாமல் கண்ணீர் கடகடவென்று வழிந்தோடியதில் அழுகையுடன் சங்கரகோமதியின் அருகே சென்று அவரது காலில் விழுந்துவிட்டாள் அவள்.
“ம்மா ப்ளீஸ்.. உள்ளே கூப்பிட மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க” என்று ஸ்ரீ அழுதுகொண்டே கூற, கார்த்திக் வேதனையுடன் அவளைப் பார்த்தான்.
இதற்காகத் தானே அவனும் மாட்டேன் என்றான்?
தன் காதலியை அந்தக் கோலத்தில் அவனுக்காகவே இருந்தாலும் பார்க்க அத்தனை கசந்தது. அவன் ஸ்ரீயைத் தூக்கச் செல்வதற்குள், நாச்சி தன் தந்தைக்குக் கண் காட்ட, அவர் தான் முன்னே வந்து ஸ்ரீயைத் தூக்கினார்.
“ம்மா உள்ளே கூப்பிட்டு எதுனாலும் பேசலாம்.. இங்க வேணாம்” என்று நாச்சி அறிவுறுத்த, பிரம்மை பிடித்தவாறு உள்ளே சென்றார் அவர். என்ன ஏதென்று அவரால் யூகிக்கக் கூட முடியவில்லை. நாச்சி தங்கையையும் கார்த்திக்கையும் உள்ளே அழைத்துக்கொண்டு வந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே தாயின் அருகே சென்று நின்ற ஸ்ரீ நடந்த அனைத்தையும் கூற, நாச்சியின் பார்வை முழுவதும் கார்த்திக்கிடத்தில்தான் இருந்தது. சங்கரகோமதி எதுவும் பேசாமலிருக்க, தந்தையைப் பார்த்த ஸ்ரீ, “ப்பா ப்ளீஸ்.. அக்கா கல்யாணம் வரைக்கும் நம்ம வீட்ல இருக்கட்டுமே” என்றாள் கெஞ்சுதலாக.
அவரே மகளது முடிவில் ஆடிப்போயிருந்தார். கார்த்திக் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் ஸ்ரீக்கு அவனைத் திருமணம் செய்து வைப்பதில் அவருக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. அவர் அவளது காதலுக்கு மறுப்பேதும் சொல்லப் போவதில்லை. ஆனால், இவள் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைக்கிறேன் என்றல்லவா சொல்கிறாள்? பின்விளைவுகளை யோசிக்காமல் மகள் எடுத்த முடிவில் அவரால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது. அவரது எண்ணம் இப்படியிருக்க, தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று தந்தையை நோக்கித் திரும்பிக் கேட்டதில் அமைதியாகத் தானும் கணவனைத் திரும்பிப் பார்த்தார் சங்கரகோமதி.
“உங்களுக்கு இது முன்னாடியே தெரியுமா?” என்று தவிப்புடன் கேட்டதில், சங்கரநாராயணன் அதிர்ந்து போய் மனைவியைப் பார்த்தார்.
“ம்மா” என்று நாச்சி கண்டிப்புடன் அழைக்க,
“இல்லைம்மா.. அப்பாவுக்குத் தெரியாது” என்று உடனடியாக மறுத்தாள் ஸ்ரீ.
அவளது பேச்செல்லாம் அவருக்கு எங்கே கேட்டது?
“சொல்லுங்க.. உங்க கிட்டத்தான் கேட்குதேன்.. முன்னாடியே தெரியுமா?” என்றார் மீண்டும் அவர்.
முகத்தில் சட்டென்று ஒரு இறுக்கம் வந்தமர, இல்லையென்று தலையசைத்தார் சங்கரநாராயணன். அப்போதும் நம்பாத பார்வை பார்க்க, ஆயாசமாகத் தன் மனைவியைப் பார்த்தார் சங்கரநாராயணன்.
“நம்பலனாலும் இதுதான் உண்மை.. எனக்குத் தெரியாது” என்று அவர் சோர்வாகக் கூற, அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் சங்கரகோமதி. அவரது கண்கள் கலங்கிப் போனது.
அவரது நெடுநாளைய ஏக்கம் நிறைவேறப் போகிறது என்கின்ற சந்தோஷத்தில் இடி விழுந்ததைப் போல சின்ன மகள் செய்து வைத்திருக்கும் காரியத்தை நினைக்கையில் அப்படியொரு கோபம் வந்தது.
எடுத்த முடிவை சொல்லவும் முடியாமல் அவர் திணற, “ஸ்ரீ.. அந்தப் பையனைக் கெஸ்ட் ரூம்க்கு கூட்டிட்டுப் போ” என்றாள் நாச்சி.
நாச்சி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய்க் கணவன் மனைவி இருவருமே ஒருசேர அவளைப் பார்க்க, அவள் முடிவெடுத்துவிட்டாள்.
“நாச்சி..” என்று மறுப்பாக சங்கரகோமதி பேச ஆரம்பிக்கும்போதே,
“ஒரு நிமிஷம்மா.. ஸ்ரீ.. உள்ளே கூட்டிட்டுப் போகச் சொன்னேன்” என்று தங்கையிடம் அவள் அழுத்தமாகக் கூற, அங்கிருக்க முடியாமல் ஸ்ரீ கார்த்திக்கைக் கூட்டிக் கொண்டு சென்றாள்.
“என்ன பேசுதோம்னு தெரிஞ்சு தான் பேசுதியா? உனக்கென்ன கோட்டி பிடிச்சிருக்கா? எந்த ஊர்லயும் இல்லாத கொடுமையெல்லாம் என் வீட்ல தான் நடக்குது.. இன்னும் பத்து நாள்ல வீட்ல விசேஷம்.. வர்றவங்க இந்தப் பையனை யாருனு கேட்டா என்னன்னு நான் சொல்லுவேன்? சம்பந்தி வீட்ல தெரிஞ்சா உன் கல்யாணமே கேள்விக்குறிதாம்” என்று சங்கரகோமதி வெடிக்க,
“இது சரியில்ல பாப்பா.. ஸ்ரீ ஆசைப்படுதேனு வந்து நின்னா வேற.. அதுக்கு நான் மறுப்பு எப்பவும் சொல்லப் போறது இல்ல. ஆனா, அந்தப் பையனைக் கல்யாணத்துக்கு முன்ன வீட்ல தங்க வைக்குததுலலாம் எனக்கு விருப்பமே இல்லை” என்றார் சங்கரநாராயணன் முடிவாக.
“ரெண்டு பேரும் பேசி முடிச்சுட்டீங்களா? இப்ப நீங்க இவ்ளோ யோசிக்கிற அளவுக்கு இங்க என்ன நடந்து போச்சு? அவ என்ன கல்யாணம் பண்ணியா அந்தப் பையனைக் கூட்டிட்டு வந்திருக்கா? அந்தப் பையனோட அம்மா இறந்துட்டாங்க.. ஒரு சேஞ்ச்க்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கா அவ்ளோதான? ஸ்ரீயோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் இதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்து ஸ்டே பண்ணியிருந்தாங்க தான? அது மாதிரி நினைச்சுக்கோங்க”
“கோட்டி தான் பிடிச்சிருக்குது போல உனக்கு.. ஏன்ட்டி பொம்பள புள்ளைகளுக்கும் ஆம்பள பையனுக்கும் வித்தியாசம் இல்லையா? ஊர் என்ன பேசும்னு கொஞ்சமாச்சும் யோசனை இருந்தா அவ இப்படி பண்ணியிருப்பாளா?” என்று சங்கரகோமதி ஆதங்கமாக ஆரம்பிக்க,
“இப்போ அதுனால என்னம்மா? அவங்க நம்ம கண் முன்னாடி தானேம்மா இருக்காங்க? யார் கேட்டாலும் ரிலேட்டிவ்னு சொல்லுங்க” என்று நாச்சி முடித்துவிட்டாள்.
சங்கரகோமதி அடுத்துப் பேச வருவதற்குள், “எனக்கு ட்யூட்டிக்கு டைம் ஆகிடுச்சும்மா.. நைட் பேசலாம் இதைப்பத்தி. அந்தப் பையன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லைனு நினைக்கிறேன்” என்று கிளம்பி விட்டாள்.
செல்லும் வழியிலேயே அஜய்க்கு அழைப்பு விடுக்க, அந்தப் பக்கம் உடனே எடுக்கப்பட்டது.
“ஹே போலீஸம்மா இன்னைக்கு வர்ற மழையெல்லாம் உனக்குத்தான்” என்று எடுத்ததுமே ஆரவாரத்துடன் ஆரம்பித்தான் அஜய்.
அதைக் கண்டுகொள்ளாமல், “பிஸியா நீ?” என,
“பிஸி ஃபார் அதர்ஸ். ஃப்ரீ ஃபார் யூ” என்றான் அவன் புன்சிரிப்புடன்.
“ப்ச் அஜய்” என்ற அவளது கண்டிப்பில்,
“ஓகே ஓகே போலீஸம்மா.. சரண்டர். போன்லயே என்னை எரிச்சுடாதீங்க.. விஷயத்துக்கு வாங்க” என்றான் அவன்.
“என்ன விஷயத்துக்கு வர?”
“எதுக்கு கால் பண்ணியோ அதைச் சொல்லுடி.. காதல் பண்ண என்னைக்கு கால் பண்ணியிருக்க நீ? அந்தக் கொடுப்பினை எல்லாம் எனக்கு இல்ல”
முதல் வாக்கியத்தை சத்தமாகவும் அடுத்ததை முணுமுணுப்பாகவும் அவன் கூற, இரண்டுமே அவளுக்குத் தெளிவாகக் கேட்டது. அவள் பெருமூச்சுடன் வீட்டில் நடந்தவற்றைக் கூற,
“சரியான விஷயம் தான் பண்ணியிருக்க.. நானும் அத்தை கிட்ட பேசுறேன்” என, அவன் இதைத்தான் சொல்வான் என்பது தெரிந்து தானே அவனுக்கு அழைத்தாள். எப்போதிருந்து என்றெல்லாம் தெரியாமல் மிகவும் குறைவான காலகட்டத்திலேயே அவன் மீதான நம்பிக்கையை அவளது மனதில் விதைத்திருந்தான் அஜய். இப்போதும் ஸ்ரீ விஷயம் அவளை எந்த விதத்திலும் பாதிக்காது என்ற நிச்சயத்தில் தான் அவனுக்கு அழைத்திருந்தாள் அவள். அதேபோல அவனும் பேசவும்,
“உங்க வீட்ல..?” என்று நாச்சி இழுக்க, எதிர்ப்பக்கமிருந்தவனின் இதழ்கள் விரிந்தது.
“நான் சொல்வேனு நினைக்கிறியா?”
“ப்ச் இல்ல.. வேற எப்படியாவது தெரிஞ்சா பிரச்சனை ஆகிடுமேனு யோசிச்சேன். அம்மாவுக்கு இப்ப இருக்க பயமே அதுதான்”
“அவங்களுக்கு யார் சொல்லப் போறது? அப்படியே தெரிஞ்சாலும் நான் பார்த்துக்கிறேன்”
“இல்ல அம்மாவும் அப்பாவும் சொல்லலனு தப்பா எதுவும் நினைச்சிட்டாங்கனா என்ன செய்ய? அப்பாவைப் பேசச் சொல்லவா?”
“காரியத்தைக் கெடுக்காதடி.. அதெல்லாம் சொல்ல வேணாம். தெரிஞ்சா நான் பார்த்துக்கிறேனு தான் சொல்றேன்ல”
இது போதுமே..! அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவளும் அதை மறந்துவிட்டுத் தன் வேலைகளின் பக்கம் கவனத்தைச் செலுத்தினாள். சாஹித்யாவின் விஷயம் அவளை இன்னுமின்னும் இழுத்துக் கொண்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட சடலம் சாஹித்யாவினுடையது என்று முதல் நாள் தெரிவித்ததும் கமிஷனர் கூறியது இதைத்தான்.
“இதை ப்ரஸ்க்கு சொல்ல வேணாம்.. இப்போதைக்கு எதாவது சொல்லி சமாளிங்க.. விஷயம் மேலிடத்துக்குத் தெரிஞ்சா நமக்குத்தான் தலைவலி.. அவங்க கொடுக்கிற ப்ரஷர்ல ஒழுங்கா போற கேஸ் கூட டைவர்ட் ஆகிடும். எனக்கு அக்கியூஸ்ட் கிடைச்சாகணும் மதி.. அவ்வளவுதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஹர்ரி பண்ணுங்க ப்ராஸஸ்ஸ” என்று வெங்கட்ராமன் சொன்னதையும் அவளும் சிவராமனும் முந்தையநாள் சாஹித்யா வளரந்த ஆசிரமத்தில் சென்று விசாரித்ததையும் வைத்துக் கணக்கிட்டால், சாஹித்யாவின் பின்னனி என்ன என்பது இப்போது நாச்சிக்குப் பிடிபட்டது. எந்த அளவிற்கு சரியென்று தெரியாவிட்டாலும் அதை வைத்து மேலும் சில கோணங்களில் யோசித்துப் பார்த்தாள் அவள். அவளது யூகங்கள் மட்டும் சரியாக இருந்தால், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதெல்லாம் வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே. அடுத்த சில நாட்களில் எங்கேனும் அவன் சடலமாகக் கண்டெடுக்கப்படுவான்.
யோசனைகளினிடையே தன் அலுவலகத்தை அடைந்தவளை சிவராமன் வந்து சந்தித்தான். அவனிடம் அவள் கொடுத்திருந்த வேலைகளை முடித்துவிட்டு அதை ரிப்போர்ட் செய்ய, பின் அவளது வேலை அவளை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டது.
அஜயும் சொன்னது போலவே சங்கரகோமதியை அழைத்துப் பேசினான். அவன் நேரடியாக,
“இப்போ என்ன உங்க சந்தேகம்? எங்கே இந்தக் கல்யாணத்துல எதுவும் பிரச்சனை வந்து நடக்காம போய்டுமேனு தான?” என்று கேட்க, அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினார் அவர்.
“இதோ உங்க அமைதியே அதுதான்னு சொல்லுதே.. அப்போ இவ்ளோதான் என்மேல இருக்க உங்க நம்பிக்கை. அப்படித்தான?”
“அய்யோ இல்ல தம்பி.. கல்யாணம் உங்க முடிவாக மட்டும் இருக்காதுல்ல.. உங்க அப்பா அம்மா என்ன நினைப்பாங்களோனு தான்” என்று சங்கரகோமதி சங்கடமாகச் சொல்ல,
“இதெல்லாம் சும்மா மேல்பூச்சு அத்தை.. என் அம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியும். சோ, என் அப்பா தான் பிரச்சனை. இப்போ என் அப்பா இந்தக் கல்யாணம் வேணாம்னு சொன்னா நான் உடனே கேட்டுக்குவேனு நீங்க நினைக்கிறதே என்மேல நம்பிக்கை இல்லாத மாதிரி தான?” என்றான் அவன் முறைப்புடன்.
ஸ்ரீயைக் காரணம் காட்டி இந்தக் கல்யாணத்தில் எந்தப் பிரச்சனையும் வராது என்பது தானே அஜயின் கோவத்தின் பின்னால் இருக்கின்ற பொருள்? அதை உணர்ந்தவருக்கு அவனது கோவமும் கூட ஒரு வகையில் நிம்மதியைத்தான் தந்தது. அதுவரையிருந்த அலைப்புறுதல் கொஞ்சமாகக் குறைய,
“கல்யாணம் நல்லபடியா நடந்தா மட்டும் போதுமா தம்பி? நாளைக்கு ஸ்ரீயை வைச்சு நாச்சிக்கு எதுவும் அங்க உங்க வீட்ல சங்கடமாக இருந்துடக் கூடாதுல்ல?” என,
“அத்தை…” எனப் பல்லைக் கடித்தான் அஜய்.
சங்கரகோமதி உடனே வாயை மூடிக்கொள்ள, “நான் இருக்கும்போது அவளை யாரு என்ன சொல்வானு நீங்க இவ்ளோ பயப்படுறீங்க? எங்கப்பா பார்க்கத்தான் அப்படி விரைப்பா இருக்காரு. நீங்களும் உங்க பொண்ணும் நினைக்கிற மாதிரி இல்ல. போகப் போக நீங்களே புரிஞ்சுப்பீங்க” என்று அஜய் சமாதானம் கூற, மனமே இல்லாமல் சரியென்று தலையாட்டினார்.
அவன் பேசி முடித்துவிட்டதும் அலைபேசி ஸ்ரீயிடம் கைமாற, எத்தனை முயன்றும் குரலில் அவளை வெளிப்படுத்திவிட்டாள் அவள்.
“இப்போ என்ன ஆகிடுச்சுனு இவ்ளோ டல்லடிக்கிற நீ?” என்று அதட்டினாலும் சரி,
“பார்த்துக்கலாம் ஸ்ரீ.. நீ ஒன்னும் பெரிய தப்பையெல்லாம் செய்யலயே” என்று ஆறுதலாகப் பேசினாலும் சரி, அவளது நிலை அப்படியே தான் இருந்தது.
“என்னன்னு நினைச்சு அந்தப் பையனைக் கூட்டிட்டு வந்த? அத்தையும் மாமாவும் ஆரத்தி எடுப்பாங்கனு நினைச்சியா?”
“இல்லத்தான்.. அம்மாவுக்கு இது பிடிக்காதுனு தெரியும். ஆனா, எனக்கு வேற வழியில்ல. கார்த்திக் தனியா சமாளிச்சுப்பேனு சொன்னாலும் என்னால அவனை அப்படியே விட்டுட்டு வர முடில” என்று அவள் கலங்கிப் போய்ச் சொல்லவும்,
“ஈஸி குட்டிச்சாத்தான்.. உன்னை யாரும் இப்போ எதுவும் சொல்லலயே.. உனக்கும் வீட்டு நிலைமை தெரியும்ல.. எங்க கல்யாணத்தை யோசிச்சு அத்தை ரொம்ப பயந்திருப்பாங்க.. அதான்.. அவங்களையும் தப்பு சொல்ல முடியாதுல.. பெத்தவங்களா நாலையும் யோசிக்கத்தானே செய்வாங்க?” என்று அஜய் கூற, ஸ்ரீ மௌனமானாள்.
“என்ன திடீர் சைலண்ட்.. எதுனாலும் பேசிடணும்.. உனக்குள்ளவே எல்லாத்தையும் வச்சு ஏன் சஃபர் ஆகிக்கிற?”
“நான் அக்காவை அவ வாழ்க்கையை யோசிக்கவே இல்லைனு அம்மா என்னைத் தப்பா நினைப்பாங்களோ அத்தான்?” பயமும் கலக்கமுமாக ஸ்ரீ கேட்க,
“ச்சீ.. அப்படிலாம் நினைப்பாங்களா? உன்னைத் தெரியாதா அவங்களுக்கு?” என்றான் அஜய் சமாதானமாக.
“அம்மா எதுவுமே பேசவே இல்லையே.. திட்டக்கூட செஞ்சுட்டா இதுதான் மனசுல நினைக்கிறாங்கனு தெரிஞ்சுடும். அப்படியில்லைனு புரிய வைக்கவாச்சும் ட்ரை பண்ணுவேன்.. எதுவுமே பண்ணாம பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.. என்ன நினைப்பாங்கனு நானா டீகோட் பண்ணி பண்ணி அதுக்கான விளக்கமும் மனசுக்குள்ளயே கொடுத்து அதை ஏத்துப்பாங்களானு கேள்வில வந்து முடிக்கிறேன். என்னால முடியல”
அந்த சூழ்நிலைக்கான அழுத்தத்தை எந்தவித முன்யோசனையுமின்றி நண்பனிடம் பகிர்வதைப் போல அஜயிடம் அவள் கூறிக் கொண்டிருந்தாள். அதை அவனுமே உணர்ந்தான். அழுத்தத்தில் இருப்பவளிடம் நாமும் கடியாகப் பேச வேண்டாமென்று எண்ணியவன்,
“நீ கொடுத்த இந்த ஹீரோ மொமெண்ட்ல அவங்க கொஞ்சம் ஷாக்ல இருப்பாங்க ஸ்ரீ.. டைம் கொடு கொஞ்சம்” என்று கேலியாகக் கூற, ஸ்ரீ அவன் பேசுவது புரியாமல், “என்னது?” என்றாள்.
“இல்ல.. இந்த பொண்ணைக் கூட்டிட்டு ஓடி வர்றது இதெல்லாம் காலங்காலமாக நம்மூர் ஹீரோக்கள் தானே பண்றாங்க.. இங்கே கதையே உல்டாவாகி நீ பையனைக் கூட்டிட்டு வந்திருக்க.. என்னதான் இருந்தாலும் அந்த ஷாக் இருக்கும்ல” என்று சிரிப்புடன் அஜய் கூற,
“அத்தான்..” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“சரி சரி கூல். டைம் கொடு.. டைம் ஹீல்ஸ் எவ்ரிதிங். நான் நேர்ல பார்க்கிறப்போ கார்த்திக் கிட்ட பேசுறேன். இப்போ பேசினா எதாவது அன்னீசியா ஃபீல் பண்ணுவாரு.. ஓகே?” என்று கேட்க,
“ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.
அவள் ம்ம் மட்டும் சொன்னதில், “அகெய்ன்??? ஓஹ் காட்.. இந்தப் பொண்ணுங்களையும் மூட் ஸ்விங்கையும் தனித்தனியா பிரிக்கவே முடியாதா?” என்று அலுப்பு போலத் திரும்ப கேலியாகக் கூற, ஸ்ரீ முகத்தில் லேசான புன்னகை எட்டிப் பார்த்தது.
“ஓஹ்.. இவ்ளோ டீட்டெய்ல்ஸ் தெரியுமா பொண்ணுங்க கேரக்டர் பத்தி.. அவ்ளோ பழக்கம் போல.. எங்கக்கா வரட்டும் சொல்றேன்” எனவும்,
“அச்சச்சோ ரொம்ப பயம்தான்.. போலீஸம்மாவை சமாளிக்கிறதெல்லாம் எனக்கு ஒரு மேட்டர்னு நீ நினைக்கிறியா?” என்று சிரிக்க, ஸ்ரீயும் இதழ்களிலும் புன்னகை.
“அதுக்குப் பேரு சமாளிக்கிறது இல்லத்தான்.. துடைச்சிக்கிறது” என அவளும் வார,
“பின்ன துப்புனா துடைக்காம வச்சுட்டே இருப்பாங்களா? அதெல்லாம் உடனே துடைச்சுட்டு அடுத்த தடுப்புக்கு ரெடியாகிடணும். அப்போ தான சம்சார வாழ்க்கையை ஓட்ட முடியும்?”
“அக்கா ரொம்ப லக்கி அத்தான்”
பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்ரீ சொல்லவும், அஜய் இன்னும் அதிகமாகப் புன்னகைத்தான்.
“எதுக்கு துப்புனாலும் துடைச்சுட்டு அடுத்த துப்புக்குத் தயாராகுற மாப்பிள்ளை கிடைச்சதாலயா?” என்று அஜய் சிரிக்க,
“ச்சே.. சீரியஸ் நோட்ல சொல்றேன்”
“சில்லுன்னு இருக்கு.. இதுக்கான அமௌன்ட் இன்னைக்கு நைட் உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகிடும். தனியா என்கிட்ட சொல்றதை விட உன் அக்கா முன்னாடி இப்படி பிட்டு பிட்டா போட்டா இன்னும் எக்ஸ்ட்ராவா தருவேன். என்ன சொல்ற?”
“நீங்க கிண்டல் பண்ணுறீங்கனு தெரியுது. ஆனாலும் இதான் உண்மை.. கார்த்திக்கை இங்கே கூட்டிட்டு வர்றதைப் பத்தி யோசிச்சதுமே உங்க கல்யாணம் தான் என் கண்ணு முன்னாடி வந்துச்சு.. ப்ராமிஸ் அத்தான்.. நான் பொய் சொல்லல. பட், ஐ க்னோ யூ. நீங்க எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளிச்சுக் கல்யாணத்தை நடத்திடுவீங்கனு ஒரு நம்பிக்கை இருந்தது. அதான் நான் அவனை இங்கே கூட்டிட்டு வந்தேன்”
ஸ்ரீ பெருமிதமாகச் சொல்ல, அஜயின் இதழ்களில் உறைந்திருந்த புன்னகை வாடாமல் இன்னுமின்னும் பெருகியது.
“ஹேய் குட்டிச்சாத்தான்.. போதும் ஐஸ் வைச்சது. கல்யாண மாப்பிள்ளைக்கு ஜன்னியே வர வச்சிடுவ போல” என்று விளையாட்டாகக் கூறியவன்,
“லவ்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. யூ க்னோ ரைட். அந்தப் பக்கமும் அதே தான கார்த்திக் விஷயத்துல?” என்றான் நிறைவான புன்னகையுடன்.
ஸ்ரீயும் ஆமோதிப்பாகத் தலையசைக்க, அவளிடம் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அஜய்.
கருத்துக்களைப் பகிர:
https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே
-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231
அத்தியாயம் 11
கோமதி நாச்சியார் அன்று இரவு உணவுக்கு முன்னமே வீடு திரும்பியிருந்தாள். வீட்டிலுள்ள அனைவருமே அவரவர் அவரவருடைய அறையிலிருக்க வீடு அத்தனை அமைதியாக இருந்தது. நேராகத் தன் அறைக்குச் சென்று காக்கி உடையிலிருந்து இலகுவான உடைக்கு மாறி கீழிறங்கி வந்தபோதும் யாரும் வெளிவராமல் இருக்கவே பெற்றோரைக் காண அவர்களது அறைக்குச் சென்றாள்.
“ஏன் எல்லாரும் இப்படி ரூம்ல அடைஞ்சு கெடக்குறீங்க? டைம் என்ன ஆகுது? ஒருத்தருக்கும் டின்னர் சாப்டுற ஐடியா இல்லையா?” என்று உள்ளே நுழைந்ததுமே நாச்சி கேட்க,
“நீ வந்ததும் வரலாம்னு இருந்தேன். நான் டிஃபன் எடுத்து வைக்கிதேன்.. வாங்க” என்றபடி சங்கரகோமதி எழுந்தார்.
“அந்தப் பையனையும் வரச் சொல்லுங்கம்மா” என்ற நாச்சியாரைத் திரும்பித் தீயாக முறைத்துப் பார்த்தார் சங்கரகோமதி.
“ஏட்டி நீ என்ன கூறோட தான் பேசுதியா? காலைல என்னன்னா உள்ளே கூப்பிட்டு என்னையும் எதுவும் பேசாதனுட்டு போய்ட்ட.. இப்ப என்னன்னா என்னைப் போய் சாப்பிட அழைக்கச் சொல்லுத.. என்ன நினைப்புலதான் இருக்க நீயி?”
“ம்மா.. அந்தப் பையனை நம்ம ஸ்ரீ காதலிக்கிறான்றதயே மறந்திடுங்க.. அவன் ஸ்ரீயோட ஃப்ரெண்ட்னு மட்டும் நினைங்க”
“ஃப்ரெண்டா இருந்தாலும் எல்லாம் ஒரு அளவுக்குத் தான் நாச்சி.. உனக்குப் புரியாது நான் என்ன நினைக்கேன்னு.. நீ ஒரு பிள்ளை பெத்து வளர்ப்பல்ல அப்போ தெரியும்.. சாப்பிட நான் போய் அழைக்கவாம்ல” என்றவர் அடுத்து நின்று பேசாமல் அடுக்களைக்கு விரைய,
தந்தையைப் பார்த்தவள், “நீங்களும் ஏன்ப்பா இப்படி இருக்கீங்க? அந்தப் பையன் தான்னு ஸ்ரீ ஸ்ட்ராங்கா இருக்கா.. அப்போ கல்யாணம் ஆனாலும் ஆகலைனாலும் அவனும் நம்ம வீட்ல ஒருத்தன் தான? அவனோட கஷ்டத்துல நாம கூட இல்லைன்னா எப்படிப்பா? இந்த வயசுல பெத்தவங்க ரெண்டு பேருமே இல்லாம தனியா நிக்கிறதெல்லாம் கொடுமைப்பா” என்றாள்.
“எல்லாம் சரிதான் பாப்பா.. ஆனா நாம ஒன்னும் அமெரிக்கா கனடான்னு இல்லையே.. இன்னும் நம்மூர்ல இதுமாதிரி விஷயங்கள எப்படித் திரிச்சுப் பேசுவாங்கனு தெரியும்தான?”
“எதுக்காகப்பா அவங்கள எல்லாம் நாம கன்சிடர் பண்ணணும்?”
“ஏன்னா அவங்கெல்லாம் கலந்தது தான் நம்ம சமூகம். அவங்கள ஒதுக்கிட்டு ஒரு வாழ்க்கையை பெரும்பாலும் வாழ முடியுததில்லயே.. என்னை ஜட்ஜ் பண்ணுத இந்த சமூகம் எனக்குத் தேவையில்லைனு எங்களால ஒதுங்க முடியாதுமா”
“அவங்கள ஒதுக்க முடியாது.. ஆனா பெத்த புள்ளைங்கள ஒதுக்க முடியும். இல்லையாப்பா? உங்க கிட்ட இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணல”
“உங்கம்மா சொன்னதையே தான் நானும் சொல்லுதேன். உனக்குன்னு புள்ள வர்றப்ப தான் சில விஷயம் புரியும். ஆனா இப்பவும் ஸ்ரீயை நானும் உன் அம்மாவும் ஒதுக்கல” என்றவர் அவளிடம் மேலும் வாதம் புரியாமல் உணவருந்த அழைத்துச் சென்றார்.
அங்கே சங்கரகோமதி மட்டும் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘ஊஃப்’ எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டவள், “ஸ்ரீ” என்று கீழிருந்தவாறே குரல் கொடுக்க, ஸ்ரீ கீழே வந்தாள்.
“டைம் என்னாச்சு? சாப்பிடுற எண்ணம் இல்லையா?” என்று நாச்சி கேட்கவும் தயங்கியபடியே,
“எனக்குப் பசி இல்லக்கா . நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கிறேன்.. நீங்க சாப்டுங்க” என்று மறுத்தாள் அவள்.
தங்கையைக் கூர்மையாகப் பார்த்தவாறே, “இப்பவே டைம் ஆகிடுச்சுனு சொல்றேன். இனி எப்போ சாப்பிடப் போற? போ.. போய் அந்தப் பையனையும் கூட்டிட்டு வா” என்று சொல்ல, நம்ப முடியாமல் தமக்கையைப் பார்த்த ஸ்ரீயின் முகத்தில் அதுவரையிருந்த சங்கடம் மறைந்து நொடியில் ஆசுவாசம் படர்ந்தது.
மதிய உணவு கூட அவர்கள் இருவருமே தனியாக அறையிலிருந்தபடி தான் உண்டனர். யாரும் அவர்களை உணவருந்த அழைக்கவில்லை. கார்த்திக்கிற்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் ஸ்ரீக்கு பெற்றவர்களின் ஒதுக்கத்தில் அழுகை வந்தது. எங்கே கார்த்திக் முன்னிலையில் அழுதுவிட்டால் அவன் சங்கடம் கொள்வானே என்றெண்ணியே முகத்தை சாதாரணம் போல வைத்துக் கொண்டாள். இப்போதும் அப்படியே தான் என்று மனதைத் தயார் செய்து வைத்திருக்க, நாச்சி அழைக்கவுமே எப்படியானாலும் கார்த்திக்கை அழைக்க மாட்டார்கள் என்றெண்ணியே அவள் தயங்கியது. அவனையும் அழைக்கச் சொல்லவும் அப்படியொரு ஆசுவாசம் நெஞ்சில் பரவ, முகம் மலர்ந்து கார்த்திக்கின் அறையை நோக்கி விரைந்தாள் அவள்.
சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் அவளது பேச்சில் தலையிடவே இல்லை. இருவருமே அமைதியாக இருக்க, அதுவே போதும் என்றெண்ணத்தில் நாச்சியும் கை கழுவிவிட்டு வந்தமர்ந்தாள். அப்போதும் கார்த்திக்கின் அறையிலிருந்து இருவரும் வெளிவரும் அரவம் தெரியாததில்,
“நீங்க சாப்பிட ஆரம்பிங்கப்பா.. நான் பார்த்துட்டு வரேன்” என்று சங்கரநாராயணனிடம் கூறிவிட்டு நாச்சி கார்த்திக்கின் அறைநோக்கிச் சென்றாள்.
அறைக்கதவு திறந்தே இருந்தாலும் கதவைத் தட்டுவதற்காகக் கையைக் கொண்டு போனவள் அவள் கேட்ட மெல்லிய விசும்பல் சத்தத்தில் போவதா வேண்டாமா என்ற குழப்பத்தோடு அங்கேயே நின்றுவிட்டாள்.
திறந்திருந்த கதவின் வழியாக ஸ்ரீ தரையில் அமர்ந்திருப்பதும் அவள் மடியில் கார்த்திக் முகம் புதைத்திருப்பதும் தெரிந்தது. அவனது உடலசைவுகள் அவன் அழுது கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்த, ஸ்ரீ கலக்கத்தோடு அவனை ஆற்றுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது அழுகை கூடியதே தவிர குறைவதாய்த் தெரியவில்லை.
“யார் சொன்னா யாரும் இல்லைன்னு? எங்கம்மா எங்கப்பா எல்லாம் யாராம் உனக்கு? எல்லாரையும் விடு நான் இல்லையா?” என்று ஸ்ரீ மெல்லிய குரலில் கேட்பது வெளியே நின்றிருந்த நாச்சிக்கும் தெளிவாகக் கேட்டது.
கார்த்திக் பதில் பேசாமல் இன்னும் விசும்பியதில், “கார்த்திக் வெளில எல்லாரும் நமக்காக வெய்ட் பண்ணுவாங்க” என்று ஸ்ரீ அவனுக்கு அறிவுறுத்த,
“நான் வரல ஸ்ரீ.. எனக்குப் பசிக்கல” என்றான் அவன் எழாமல்.
“மதியமும் சரியா சாப்பிடல.. என்ன நினைக்கிற நீ? சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கப் போறியா?” என்று ஸ்ரீ கேட்டுக் கொண்டிருக்கும் போதே நாச்சி கதவைத் தட்ட, கார்த்திக் வேகமாக நிமிர்ந்தான்.
நாச்சியாரைப் பார்க்கவுமே கார்த்திக் வேகமாக எழுந்து நிற்க, ஸ்ரீயும் எழுந்தாள். தங்கையின் உடையில் படிந்திருந்த கண்ணீர் கரையைப் பார்த்துவிட்டு,
“சாப்பிடக் கூட்டிட்டு வரச் சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க நீ இன்னும்?” என்று கேட்க,
“இல்ல.. எனக்குப் பசியில்ல. ஸ்ரீ நீ போ” என்றான் கார்த்திக்.
அவனை எப்படி வற்புறுத்தி அழைப்பது என்பது புரியாமல், “உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாட்டை ரூம்க்கு கொண்டு வரச் சொல்லட்டுமா ஸ்ரீ?” என்று தங்கையிடம் கேட்க,
கார்த்திக் மறுக்கும் முன்பாகவே, “அக்கா ஒரு டூ மினிட்ஸ்.. நீங்க போங்களேன். நான் கூட்டிட்டு வரேன். வெளில வந்தே சாப்பிடுறோம்” என்ற ஸ்ரீயிடம் தலையசைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள் அவள்.
சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் இருவருமாய் உணவருந்த வந்துவிட்டனர். சங்கரகோமதி மிகவும் சிரமப்பட்டுத்தான் முகம் மாறாமல் காத்தார். அவரால் ஏற்கவும் முடியவில்லை. விலக்கவும் முடியவில்லை. என்னவாக இருந்தாலும் சாப்பிட அமர்ந்தவனிடம் முகத்தை சுண்டிவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்.
நால்வரும் அமர்ந்து உண்ண, சங்கரகோமதி நின்றபடி அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். கார்த்திக் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. தலைகுனிந்தவாறே உணவுண்டு கொண்டிருந்தான். சங்கரகோமதி என்னதான் பார்த்துப் பார்த்து பரிமாறினாலும் ஸ்ரீயும் வெகு கவனமாகக் கார்த்திக்கைத் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளது அந்தக் கவனிப்பில் சங்கரகோமதி கடுகடுப்பின் உச்சத்துக்கே சென்றாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நாச்சியும் நடப்பதையெல்லாம் கவனித்தாலும் எதிலும் தலையிடவில்லை.
உணவை முடித்துவிட்டுக் கார்த்திக் எழுந்து கொள்ள, ஸ்ரீயும் வேகமாக எழப் போனாள்.
“நீ சாப்பிடு.. நான் ரூம்க்கு போறேன்” என்றவன் மற்ற யாரின் முகத்தையும் பார்க்காமல் கை கழுவிவிட்டு அறைக்குச் சென்றுவிட்டான்.
வீட்டினர் மட்டுமே இருக்க, இப்போது சங்கரகோமதியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“இன்னும் என்ன கொடுமையெல்லாம் என்னைப் பார்க்க வைக்க இந்தக் கடவுள் காத்திருக்குதோ” என்று புலம்பியபடி அவரும் உணவுண்ண அமர, ஸ்ரீ அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.
“இப்போ என்ன கொடுமை இங்க நடந்துச்சு? ஏன்மா ஒன்னுமில்லாத விஷயத்தை இப்படிப் பெருசாக்கிப் பேசி உங்க நிம்மதியை நீங்களே கெடுத்துக்கிறீங்க?” என்று நாச்சி தாயைக் கண்டிக்கவும்,
“உனக்கென்ன தெரியும்? என்னைய மாதிரி யாருக்கும் கொடுப்பினை இல்லனு வாய் ஓயாம பேசிகிட்டு கிடந்தேன்.. இந்த நாலு வருஷமாவே என் மனசு படுற பாடு எனக்குத்தான் தெரியும்.. ஒன்னு மாத்தி ஒன்னுன்னு வந்துட்டே இருக்கு.. இன்னும் எதையெல்லாம் நான் பார்க்கணுமோ” என்று அவர் அங்கலாய்த்துப் பேச, அங்கிருந்த மூவருக்குமே அவரவர் செய்த விஷயங்களால் முகம் சுண்டிவிட்டது.
“நான் செஞ்சதுக்கு இப்போ ஏன்மா எல்லாரையும் இழுக்குறீங்க? என்ன கோபம்னாலும் என்னைப் பேசுங்க” என்று ஸ்ரீ வாயைத் திறக்க,
“நீ பேசாத.. பொம்பளப் புள்ளைகளுக்கு அநியாயத்துக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தா இந்த நிலைமை தான்னு செருப்பால அடிச்ச மாதிரி பண்ணிட்டு வந்து நிக்கித.. ரெண்டும் பொம்பள புள்ளையா நின்னப்ப கூட நான் இம்புட்டு வெசனப்படலயே.. பேசுறவங்க பேசட்டும ரெண்டும் என் வரம்னு பூரிச்சுப் போய்க் கெடந்தேன்.. ஆனா என் உசுராவிய வாங்கனே கங்கணம் கட்டிட்டுல அலையுதீக.. உனக்குலாம் கொஞ்சமாச்சும் வீட்டு சூழ்நிலை புரிஞ்சா அந்தப் பையல இங்க கூட்டிட்டு வந்திருப்பியா? அடுத்த வாரத்துல இருந்தே விருந்தாளிங்க வர ஆரம்பிச்சுடுவாங்க.. அவங்களாம் கேட்டா என்னன்னு என்னைய சொல்லச் சொல்லுத?” என்றவருக்கு அடுத்த வார்த்தை மிகவும் தடித்தே வந்துவிட, முயன்று அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் அவர்.
சொல்ல வந்த வார்த்தைகளின் கணம் அவருக்கு அப்படியொரு அழுத்தத்தைத் தர, அந்த இரவு வேளையில் கூட முகமெல்லாம் வியர்த்துப் போனது.
‘நாமா? நாம் தானா இதைச் சொல்ல வந்தது?’ என்றெண்ணிய மாத்திரத்தில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க, ஸ்ரீயும் சேர்ந்து அழுதாள். அவளுக்கும் அழுகையை விட்டால் வேறு வழியொன்றும் தெரியவில்லை.
அழுது கொண்டிருந்த தங்கையைப் பார்த்துவிட்டு இது சரிவராது என்று எண்ணிக்கொண்டே, “ஸ்ரீ நீ உள்ள போ” என்று அனுப்பி வைத்துவிட்டாள் நாச்சி.
தங்கையை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு, “ம்மா நீங்க ஏன் இப்படி உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க? நீங்க நினைக்கிற மாதிரி இது தப்பாலாம் முடியாது. அப்பா வீட்ல யாராவது கேட்டாங்கனா உங்களோட தூரத்து சொந்தம்னு மட்டும் சொல்லுங்க” என்றவள், சிறிது நேரத்திற்கு முன்பாக அவர்கள் அறையில் பேசிக் கொண்டிருந்ததைக் கூறினாள்.
“அந்தப் பையன் யாரும் இல்லைன்னு ஃபீல் பண்றப்போ ஸ்ரீ என் அம்மாவும் அப்பாவும் இருக்காங்கனு சொல்றாமா.. உங்களுக்குப் புரியுதா அவ எதுக்காக இங்கே கூட்டிட்டு வந்திருக்கானு? இதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று கூறிவிட்டு நாச்சியும் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்திலேயே தேவ்சரணும் அஜயும் கான்ஃபரன்ஸ் அழைக்க, தேவிடம் பேசிக் கொண்டிருந்தாள் நாச்சி. எப்போதும் போல அவனது பள்ளி நிகழ்வுகளையெல்லாம் ஒவ்வொன்றாய் அவன் கூற, அவனுக்குத் தகுந்தாற்போல நாச்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அஜய்க்கு என்னவோ மனம் அப்படியொரு நிறைவாக இருந்தது. அவன் இருவருக்கும் ஊடே போகாமல் மௌனமான புன்சிரிப்புடன் அவர்களது சம்பாஷணையை ரசித்துக் கொண்டிருந்தான். தேவ் பேசி முடித்து வைத்துவிட அஜய் மட்டும் தொடர்பில் இருந்தான். அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் நாச்சி அமைதியாக, அந்த அமைதியையும் அஜய் உடைக்க முற்படவில்லை.
எவ்வளவு நேரம்தான் அமைதியாக இருப்பாள்? அவளே அமைதியை உடைத்தாள்.
“அஜய்..” என்று அழைக்க,
“தேங்க்ஸ்.. தேங்க் யூ சோ மச் நாச்சி” என்ற அஜயின் குரல் அத்தனை ஆழமாக ஒலித்தது. அவனது நன்றி எதற்கு என்று புரியாமலா இருக்கும்? அவளது முகம் சுருங்கியது.
“தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்?” என்று அவள் எதிர்கேள்வி கேட்க, அவளது கேள்வியில் அஜயின் புன்னகை இன்னும் விரிந்தது.
“அப்படின்ற? அப்போ தேங்க்ஸ் வாப்பஸ்” என்று அவன் சிரித்துக்கொண்டே கூறவும் நாச்சி அமைதியாக, அஜய் வேறு பேச்சிற்குத் தாவினான்.
“என்னாச்சு வீட்ல? ஆல் ஓகே?” என, அவள் வீட்டில் நடந்தவற்றையெல்லாம் கூறினாள்.
“அவங்கள அவங்க போக்குல விடுங்க.. எல்லாத்தையும் உடனே ஏத்துக்க முடியுமா? அப்படி ஏத்துக்க சொல்றதே நீங்க அவங்க மேல போடுற ப்ரஷர் தான். எல்லாம் சரியாகிடும்” என்று அஜய் சொல்ல, நாச்சியும் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.
“சரி அதெல்லாம் விடு.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கால் பண்ணுனேன்” என்று அஜய் ஆரம்பிக்க,
“என்னது?” என்றாள் நாச்சி.
“என்ன வேற ப்ராஜெக்ட்ல ஆட் பண்ணியிருக்காங்க”
“அதுனால என்ன?”
“இல்ல நான் முன்னாடி இருந்த ப்ராஜெக்ட்ல வொர்க் ஃப்ரம் ஹோம் தேவைப்படுறப்போ எடுத்துக்கலாம்.. வாரக்கணக்கா கூட எடுத்திருக்கேன் இதுக்கு முன்னாடி.. இப்போ புதுசா மாத்துனாங்கனா குறைஞ்சது ரெண்டு மாசமாவது வொர்க் ஃப்ரம் ஹோம் தரமாட்டாங்க”
அஜய் சொல்ல வரும் விஷயம் புரிந்து நாச்சி அமைதியாக இருக்க,
“இப்படி அமைதியா இருந்தா என்ன செய்யட்டும்? எதாவது சொன்னா தான தெரியும்?” என்றான் அவன்.
“என்ன சொல்லச் சொல்ற? இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்று நாச்சி எதையும் வெளிக்காட்டாத குரலில் கேட்க, அஜய் குழம்பினான்.
“போலீஸம்மா உனக்குப் புரியலயா? புது ப்ராஜெக்ட்னால கல்யாணத்துக்கு லீவ் கிடைக்கிறது கூட கஷ்டம். அப்படியே கிடைச்சாலும் நாலு நாளே அதிகம்.. அகெய்ன் நான் சென்னை வந்ததாகணும்”
“அதுக்கு என்ன பண்ண முடியும்? வேலைனா இதெல்லாம் இருக்கதுதான?”
“நான் கேட்க வர்றது நிஜமாவே புரியலயாடி?”
அவளுக்குப் புரிந்தது. அவளுக்கு நிச்சயம் இதில் சம்மதமில்லை தான். என்னதான் மனதைத் தயார்படுத்தி வைத்திருந்தாலும் இனம்புரியாத பயமொன்று அவளிடம் நிரந்தரமாகவே இருந்தது. அதற்காக அஜயை வருத்த அவளுக்கு விருப்பமில்லை.
“நான் மேனேஜ் பண்ணிப்பேன். தேவையில்லாம நீயா எதாவது யோசிச்சு என்னையும் எதாவது நினைக்க வைக்காத”
“ஷ்யர்??”
“ஷ்யர்”
“சரி அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.. பட் எவ்ரி வீக்கெண்ட் இங்கே வந்துடுவேன்.. டோண்ட் வொர்ரி”
‘இப்போ யாரு கவலைப் படறானு இவன் டோண்ட் வொர்ரி சொல்லிட்டு இருக்கான்?’ என்று நக்கலாகச் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவளது மனம் அவளையும் அறியாமல் அவனிடம் ஒட்ட ஆரம்பித்திருந்தது. காதல் என்றெல்லாம் நிச்சயம் அவள் கூறமாட்டாள். ஆனால், அவர்களுக்கு இடையே வரவிருக்கும் அந்தப் பந்தத்தை அவள் மதிக்கிறாள். அதிலும் அஜய் பழகுவதற்கும் இனிமையானவனாக இருக்கவே கடமைக்கென இருந்த மரியாதை இப்போது மனமொன்றியே வந்திருக்கிறது. அவ்வளவுதான்.
“என்ன அமைதியாகிட்ட? யாருடா இப்போ கவலைப்படுறேனு உன்கிட்ட சொன்னதுனு நினைக்கிறியா?” என்று அஜய் கேட்கவும், ஒரு நிமிடம் திகைத்தவள், அவன் அடுத்து சொன்ன வார்த்தைகளில் இதழ்களை விரித்தாள்.
“அந்த டோண்ட் வொர்ரி உனக்குச் சொல்லல.. என்னைச் சொன்னேன்” என்று போக்கிரி பட பாணியில் கிட்டத்தட்ட வடிவேலுவின் குரலிலேயே பேசிக் காட்ட,
சிரித்தவள், “மிமிக்ரி எல்லாம் தெரியுமா?” என்றாள்.
“ஏதோ கொஞ்சம் பண்ணுவேன்.. காலேஜ்ல நீ என்னை நீ கவனிச்சதே இல்லைன்றது எனக்கு முன்னாடியே தெரியும்தான். ஆனாலும் இப்படிக் கேட்டு அசிங்கப்படுத்தியிருக்க வேணாம்” என்றவன்,
“காலேஜ்ல ஸ்டேஜ் மிமிக்ரி ரெண்டு மூனு தடவை பண்ணியிருக்கேன்” என்றான் சோகம் போல.
“நான் மேக்ஸிமம் வாலன்ட்டியர்ஸ்ல இருப்பேன் இல்ல க்ரௌண்ட்ல இருப்பேன்.. அதான் பார்த்திருக்க மாட்டேன்” என்று அவள் சமாதானமாகச் சொல்லவும், அஜய் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் என்று தான் சொல்ல வேண்டும்.
“போலீஸம்மா அநியாயத்துக்கு இன்னைக்கு என்னை சர்ப்ரைஸ் பண்ற போ.. தேங்க்ஸ் அண்ட் உம்ம்ம்ம்மா” என்று அவன் கூக்குரலில் சொல்ல, அவனது அந்த அதீத சந்தோஷத்தைக் கண்டவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. எதுவும் பேச முடியாமல் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள, எண்ணக் கூடாது என்று ஒதுக்கி வைத்த எண்ணங்கள் நொடியில் வலம் வந்து அவளைப் புரட்டிப் போட்டுவிட்டது. கைகள் நடுங்க அழைப்பைத் துண்டித்தவள் அப்படியே குளியலறைக்குள் புகுந்து முகத்தை நன்கு குளிர்நீரை வைத்து அடித்துக் கழுவினாள். மனதின் வெம்மையெல்லாம் அந்தக் குளிர் நீரில் கரைவதைப் போலிருக்க, ஆசுவாசப் பெருமூச்சுடன் கதவைத் திறக்கும் போதே அவளது அலைபேசி அவளை அழைத்துக் கொண்டிருந்தது.
அஜய் தான்! அழைப்பை உயிர்ப்பித்தாள்.
“ஏன் கட் ஆகிடுச்சு? இதுக்கு முன்னாடி கால் பண்ணுனப்போ ஏன் அட்டெண்ட் பண்ணல?” பதட்டமாக அவன் கேட்க,
“வாஷ்ரூம் யூஸ் பண்ணப் போறேனு சொல்லிட்டுத் தான போனேன்?” என்றாள் மெய் போலவே.
“எப்போ சொன்ன?”
“கட் பண்றதுக்கு முன்னாடி சொன்னேனே”
“எனக்குக் கேட்கலயே”
“அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?”
“அதெப்படி நீ பேசி எனக்குக் கேட்காம இருக்கும்?”
“ஆராய்ச்சி பண்ணிட்டே போய்த் தூங்கு.. நான் வைக்கிறேன். இதுவாவது கேட்குதா?”
“கேட்குதுஊஊ” என்று இழுத்தவன், “நிஜமாவே வாஷ்ரூம் தான் போனியா?” என்று மீண்டும் கேட்க,
“இதையெல்லாம் ப்ரூவா பண்ண முடியும்?” என்றாள் நாச்சி கடுப்பாக.
“இல்ல இல்ல.. நான் உம்மா கொடுத்ததுக்கு நீ கோவப்பட்டு வச்சுட்டியோனு நினைச்சேன்” என்று அவன் அசடு வழியும் குரலில் சொல்ல, இப்போது நாச்சி அவஸ்தையில் நெளிந்தாள்.
“அதான் ஏன் போனேனு சொல்லிட்டேன்ல.. அதை விடேன்” என்று அவள் கடுப்புடன் சொல்ல,
“சரி சரி” என்றவன், “அப்புறம் இன்னொரு விஷயம் கூட உன்ட்ட கேட்க நினைச்சேன்” என்றான்.
“என்ன விஷயம்?”
“நாளைக்கு டியூட்டி முடிச்சு வந்ததும் நீ ஃப்ரீயா இருந்தா ஈவ்னிங் போல அம்மாவைப் பேசச் சொல்லவா?”
அவன் சாதாரணம் போலத்தான் கேட்டான். ஆனால், நாச்சிக்குத் தான் மேலும் மேலும் அது மனதை அழுத்தியது.
“இதெல்லாம் என்கிட்ட கேட்கணுமா?” என்று எரிச்சல் மிகுந்த குரலில் அவள் கேட்க, அவள் எரிச்சலுக்கான காரணம் புரிந்து அஜய் அமைதியானான்.
“உன்னை கில்ட்டா ஃபீல் வைக்க நான் இதைக் கேட்கல.. உனக்கு இன்கன்வீனியன்ட்டா இருந்துடக் கூடாதேனு தான் கேட்டேன்” என்று அஜய் அவளுக்குப் புரியவைக்கும் நோக்கில் பேச,
“லூசு மாதிரி உளறாத.. கல்யாணம் முடிஞ்சு அங்க தான நான் வந்து வாழ்ந்தாகணும்? அவங்கள எல்லாம் இன்கன்வீனியன்ட்டா எப்படி நான் ஃபீல் பண்ணுவேன்? நல்லதோ கெட்டதோ இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சிருக்கேன்னா அதுக்கு உன்னை உன் குடும்பத்தை ஏத்துக்கிட்டேனு தான் அர்த்தம்.. இனிமேல் இதுமாதிரி பேசாத.. புரியுதா?” என்று சிடுசிடுத்தாள் நாச்சி.
“ரைட்டு விடு.. சரண்டர் ஆகியாச்சு” என்று அஜய் விளையாட்டுப் போல அந்தப் பேச்சை முடித்தாலும் அவன் மனம் உண்மையிலும் நெகிழ்ந்து போனது.
நாச்சி கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறாள் என்பதே அவனுக்கு அத்தனை நிறைவையும் சந்தோஷத்தையும் தந்தது. அவர்களது வாழ்க்கை நல்ல முறையில் இயங்குவதற்கு இது போதுமே!! அவளுடன் பேசிமுடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் அவளுடன் பேசியதை மீண்டும் மீண்டும் அசைபோட்டு சிறுபிள்ளை போலக் குதூகலித்தான்.
கருத்துக்களைப் பகிர:
https://kavichandranovels.com/community/vsv-37
-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231
அத்தியாயம் 12
இதோ அதோ என்று அஜய் - நாச்சியின் திருமண நாள் நெருங்கி இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையைத் தொட்டிருந்தது. அஜய் சென்னையிலிருந்து அன்று தான் வந்திருந்தான். உடன் கார்த்திக்கும்!
ஆம்! கார்த்திக் ஸ்ரீ வீட்டிற்கு வந்த மூன்றாவது நாளிலேயே அவன் தேர்வாகியிருந்த நிறுவனத்திடமிருந்தும் நியமன உத்தரவு சேர வேண்டிய தேதியுடன் மின்னஞ்சலில் வந்துவிட, எதாவது நல்ல பிஜியாகப் பார்த்து தருமாறு ஸ்ரீ அஜயிடம் கேட்டாள்.
“என்னது பிஜி பார்த்துத் தரணுமா? ஹலோ குட்டிச்சாத்தான்.. உன் அத்தான்னு ஒருத்தன் அதே சென்னைல தான் ஒண்டியா குடும்பம் நடத்துறானு தெரிஞ்சும் பிஜியைப் பத்தி யோசிக்கலாமா நீ?” என்று அஜய் பொய்க்கோபம் காட்டிக் கேட்கவும், ஸ்ரீக்கு நிம்மதியாக இருந்தாலும் கார்த்திக் சம்மதிப்பானா என்றிருந்தது.
அதையே அஜயிடம் அவள் சொல்ல, “இப்போ என்ன சகலை கிட்ட நான் பேசி ஓகே வாங்குறேன்.. சந்தோஷம் தான?” என்றவன் அதன்படியே கார்த்திக்கிடம் பேசினான்.
முதலில் தயங்கி மறுத்தவனை அதையும் இதையும் பேசி சம்மதிக்க வைத்தாலும் இறுதியில் வாடகை மாதிரி குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டாக வேண்டும் என்று சொல்லிவிட்டான். அதன்படி கார்த்திக் அஜயின் அப்பார்ட்மெண்ட் வீட்டில் தான் தங்கி வேலையில் சேர்ந்துள்ளான். கல்யாணத்திற்கு வரவும் சங்கடப்பட்டவனை சரிக்கட்டித் தன் வீட்டிற்கே அவன் அழைத்து வர, ஸ்ரீயை விட சங்கரகோமதிக்குத் தான் பெருத்த நிம்மதி. கார்த்திக்கை ஒட்டிய கேள்விகளுக்கு அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
“தன் கல்யாணத்துக்கே விருந்தாட வர்றவன் மாதிரி வர்றவன் நீயாத்தான் இருப்ப” என்று சடைத்துக் கொண்டே அஜயை வரவேற்ற தவமணி அவனுடன் கார்த்திக் வரவும் அவனையும் வரவேற்றார். முதல்நாள் இரவே அஜய் பேசும்போது கார்த்திக் வருவதைப் பற்றி அவரிடம் கூறியிருந்தான்.
“இது கார்த்திக் ம்மா.. என்கூட ரூம் ஷேர் பண்ணியிருக்கான். ஃபோன்ல சொன்னேன்ல” எனவும்,
“தெரியும்டா” என்றவர் கார்த்திக்கை மீண்டுமொரு முறை வரவேற்று அவனைப் பற்றி பொதுவானக் கேள்விகளைக் கேட்டுப் பேச ஆரம்பிக்க,
அஜயின் பேச்சு சத்தத்தில் அறையிலிருந்து எட்டிப் பார்த்த தேவ்சரணும், “டாடி” என்ற கூச்சலுடன் ஓடிவந்து பின் கார்த்திக்கைப் பார்த்ததும் தயங்கி கேள்விப் பார்வை பார்க்க,
“டாடியோட ஃப்ரெண்ட் தேவ்” என்று அவனிடமும் கார்த்திக்கை அறிமுகப்படுத்தவும் புன்னகைத்த தேவைப் பார்த்துத் தானும் புன்னகைத்தான் கார்த்திக்.
“உன் பேரென்ன?” என்று கார்த்திக் அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததும் தேவ் சரணும் அவனுக்குப் பதில் சொல்லியவாறே கார்த்திக்கின் அருகில் அமர்ந்துவிட்டான்.
கார்த்திக்கிடம் தேவ் சிறிது நேரத்திலேயே ஒட்டிக்கொள்ள,
“அவங்க செத்தநேரம் படுத்து எந்திக்கட்டும் தேவ்.. பஸ்ஸுல வந்தது களைப்பா இருக்கும்ல.. நீ பாட்டி கிட்ட வா” என்ற தவமணி பேரனை இருத்தி வைத்துக் கொண்டு,
“அந்தத் தம்பிக்கு உன் ரூம் பக்கத்துல இருக்க ரூமைக் காட்டு அஜய்” என்று மகனிடம் சொல்ல, அஜயும் கார்த்திக்கிற்கு அறையைக் காட்டிவிட்டுத் தன்னறைக்குச் சென்றுவிட்டான். இருவரும் தத்தம் அறைகளில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்தபோது சண்முகமும் வந்திருக்க, அவரும் கார்த்திக்கை வரவேற்று அவனிடம் நல்லவிதமாகப் பேசினார். ஆனால், அஜயிடம் கேட்ட கேள்விக்குப் பதில் மட்டுமே!
ஆம்! எப்படியோ அதையும் இதையும் பேசி அவனது காதலைத் திருமணம் வரையில் கொண்டு வந்துவிட்டான்தான் என்றாலும் மகன் தன்னை மீறி இதைச் செய்கிறானே என்ற கோபம் அவரது மனதில் முணுமுணுவென்று இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கோமதி நாச்சியாரை அஜய்க்கு சரியாக அவரால் மனதில் இருத்த ஏனோ முடியவில்லை. அவளது வேலையும் கூட அதற்கு ஒரு காரணம் எனலாம். இதெல்லாம் அஜய்க்கும் புரிந்துதான் இருந்தது. அவன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. புரியவைக்கவும் முயலவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினான். நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நீங்கள் பேசும் வரை நான் பேசுகிறேன் என்று விட்டுவிட்டான்.
சண்முகம், கார்த்திக் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அஜய் தவமணியைத் தேடி அடுக்களைக்குள் சென்றான். அங்கே தான் தேவ்சரணும் சமையல் மேடை மீது அமர்ந்து தன் பாட்டியிடம் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தான்.
“ஒரு அஞ்சு நிமிஷம்.. குக்கர் விசில் வந்துட்டா சமையல் ஆகிடும். சாப்பாடு எடுத்து வச்சுடுதேன்.. அந்தத் தம்பியை எங்க?” என்று கேட்டுக்கொண்டே பாத்திரங்களை அவர் வேகவேகமாக ஒதுக்க ஆரம்பிக்க,
“ஒன்னும் அவசரமில்ல மெதுவா பாருங்க” என்றவன் தானும் மகனின் அருகில் ஏறி அமர்ந்து கொண்டு அருகிலிருந்த நீர்க் குவளையை எடுத்து வாயில் சரித்தான்.
“டாடி நான் உங்க ஃப்ரெண்டை எப்படிக் கூப்பிடணும்?” என்று தேவ் கையிலிருந்த கேரட்டைக் கடித்துக் கொண்டே கேட்கவும், “மாமானு கூப்பிடு” என்று தவமணி புன்னகையுடன் பேரனுக்கு சொல்லித்தர, நீர் அருந்திக் கொண்டிருந்தவனுக்கு சட்டென்று புரையேறியது.
“பார்த்துக் குடிக்க மாட்ட? என்ன அவசரம்?” என்றபடி அஜயின் தலையைத் தட்டவும்,
அவருக்குப் பதில் சொல்லாமல், “அங்கிள்னு கூப்பிடு தேவ்” என்றான் அஜய் மகனிடம்.
“அங்கிளு ஆங்கிளுனு.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. அவனுக்குத் தமிழ்ல முறை சொல்லிக் கொடுனு நானும் எத்தனைதாட்டி தான் சொல்லுதது” என்று மகனை வைதவர்,பேரனிடம் “மாமான்னு கூப்பிடு தேவ்” என்றார்.
“அம்மா பேசாம இருங்க.. தேவ் அங்கிள்னு கூப்பிடு.. இல்லைனா என்னைக் கூப்பிடுற மாதிரி அவனையும் கூப்பிடு” என்று சொல்ல, அஜய் சொன்ன வார்த்தைகளில் தவமணி ஆச்சரியமாக மகனைப் பார்த்தார்.
“தேவ் அங்கிளுனா யாரைக் கூப்பிடுவாங்க? மாமாவைத் தான?” என்று சந்தேகமாகத் தவமணி வினவவும்,
“சித்தப்பா பெரியப்பா மாமா எல்லாரையும் அங்கிள்னு சொல்லலாம் பாட்டி” என்று அவன் சொல்ல, அவருக்கு மனதில் என்னென்னவோ கணக்கு சடுதியில் ஓடியது.
கார்த்திக்கிடம் பேசும்போது தான் அவனது ஊரைக் கேட்டிருந்தாரே.. அதுபோதுமே விஷயம் விளங்கிவிட்டது. தாயின் முகபாவனையிலேயே அவர் விஷயத்தை ஊகித்துவிட்டார் என்பதைப் புரிந்துகொண்ட அஜய் அங்கிருந்து நழுவப் பார்த்தான்.
“கார்த்திக் என்ன பண்றானு பார்த்துட்டு வரேன்மா” என்றவன் போகும் முன்னே, “நில்லு.. தேவ் நீ போய் அவங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சுட்டாங்களானு பார்த்துட்டு வா” என்று பேரனை அனுப்பி வைத்தார் தவமணி.
தேவ் நகர்ந்ததும், “என்ன செய்யுத நீ? நீ செய்யுததெல்லாம் நல்லாவா இருக்கு? இதெல்லாம் தப்பு அஜய்” என்றார் தவமணி பதட்டத்துடன். அவரது மனம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
“நான் என்னம்மா செஞ்சேன்?” என்று அஜய் ஏதுமறியாதவனைப் போலக் கேட்க,
“ஒன்னும் ஒன்னும் ரெண்டுனு கணக்குப் போட நிமிசம் ஆகாது.. என்ன வேலைல செய்யுத நீ? அந்தக் குடும்பத்துல ஆம்பள புள்ள இல்லாத குறையை நீ தான் தீர்த்து வைக்கணும். மருமவனா இல்லாம அவங்களுக்கு மவனா இருப்பனு நினைச்சா இப்படி வேலை பார்த்துக்கிட்டுத் திரியுத.. சம்மந்தியம்மா உன்மேல எம்புட்டு நம்பிக்கை வச்சிருக்காங்க.. அவங்களுக்குத் தெரிஞ்சா எம்புட்டு சங்கடப்படுவாங்கனு யோசிச்சியா?” என்றார் இன்னும் பதட்டம் குறையாமல்.
அவ்வப்போது எங்கே தன் கணவர் வந்துவிடுவாரோ என்ற பயத்தில் வாசலிலும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு, மகன் இப்படிச் செய்கிறானே என்ற பதட்டத்துடன் பேசியவரைப் பார்த்து அஜய்க்கு சிரிப்புத்தான் வந்தது.
“நீங்க சொல்ற மாதிரி தான்மா நானும் நினைக்கிறேன். தப்பான ஒரு விஷயம் அவங்கள நெருங்க விடுவேனா? என்மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? கார்த்திக் நல்ல பையன் தான்மா”
“நல்ல பையனா இருந்துட்டுப் போவட்டும்.. ஆனா உன் மாமியார் மாமனார் என்ன நினைக்காங்கனு பார்க்க வேணாமா? நாளைக்கு ஏன் மாப்ள முன்னமே சொல்லல நீங்கனு ஒத்த சொல்லு வந்துடக் கூடாதுல.. அப்புறம் எல்லாருக்கும் சங்கட்டம்” என்றவர் அப்போது தான் நினைவுக்கு வந்தவராக, விளக்கெண்ணெய் குடித்ததைப் போல முகத்தை வைத்தார்.
“எல்லாரையும் விடு.. உம் பொண்டாட்டிக்கு விஷயம் தெரிஞ்சா அவ்ளோதான்” என்று தவமணி மலைப்பாகக் கூற, தாயின் பாவனையில் வாய் விட்டுச் சிரித்தான் அஜய்.
“நம்ம போலீஸம்மாவுக்கா இந்தப் பயம் பயப்படுறீங்க? மூஞ்சி இந்தக் கோணல்ல போகுது” என்று சிரித்தவன்,
“நான் பார்த்துக்கிறேன்மா” என்று முடித்துவிட்டான்.
“அதுக்கு இல்லடா” என்று தவமணி ஆரம்பிக்கும்போதே, “ம்மா நீங்க பயப்படுற மாதிரி விஷயம்லா நடக்காம நான் பார்த்துக்கிறேன்.. நீங்க ஃப்ரீயா விடுங்க” என்று கூறியபடி அதற்குமேல் ஏதும் பேச இடம் தராமல் வெளியேறிவிட்டான்.
காலை உணவு உண்ணும் போது திருமணத்தைப் பற்றிய பேச்சு மட்டுமே உணவுமேஜையை நிறைத்தது. அஜய் வரிசையாகத் சண்முகத்திடமும் தவமணியிடமும் ஒவ்வொன்றாய் விசாரித்துக் கொண்டிருந்தான்.
“சிவகாசி அத்தை, பெரியப்பா குடும்பம் எல்லாரும் முன்னாடியே வந்திருவாங்கனு சொன்னீங்களேமா.. அவங்க எப்போ வர்றாங்க?” என்று உணவருந்திக் கொண்டே அஜய் கேட்க,
“உங்கத்தை குடும்பம் நேரா மண்டபத்துக்கு வந்திடுதாங்களாம்.. பெரியப்பாவும் பெரியம்மாவும் நாளைக்கு காலைல வர்றாங்க” என்றார் தவமணி.
“அப்புறம் பொண்ணைக் கூட்டிட்டு வர்றதுக்கு இங்கே இருந்து யாருமா போறது?”
“பெரியம்மா கூட சுதனும் சுமதியும் சேர்ந்து தான் வராங்களாம்.. அவங்களத் தான் அனுப்பணும்” என்றவருக்கு சட்டென்று தொண்டை கமற, சண்முகமும் அஜயும் கூட அமைதியாகிவிட்டனர். சண்முகத்திற்கு அதற்குமேல் உணவு இறங்கவில்லை. அவர் தட்டிலிருந்த பாதி சாப்பாட்டில் அப்படியே கைகழுவிவிட்டு எழுந்துகொள்ள, அவரைத் தடுக்கும் எண்ணமும் மற்ற இருவருக்கும் வரவில்லை. கார்த்திக் புரியாமல் அனைவரையும் குழப்பத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவனுக்கு என்ன ஏதென்று சட்டென்று விசாரிக்கவும் வரவில்லை. மனதிற்குள்ளாகவே என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அவர்களைப் பார்த்தவாறு இருக்க, அஜய் தான் முதலில் சுதாரித்தான்.
“நீங்க போங்கம்மா.. நாங்க எடுத்து வச்சு சாப்பிட்டுக்கிறோம்” என்று அவன் சொல்லவும் தான் தானும் சுதாரித்தவர்,
“அதெல்லாம் வேணாம். நான் பரிமாறுறேன். சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்துகொண்டார். அங்கேயிருந்த குழாயில் முகத்தை நன்றாகக் கழுவிவிட்டுத் தண்ணீர் அருந்தித் தன்னைச் சமன்படுத்திக்கொண்டு வெளியே வந்தபோது ஓரளவிற்குத் தன்னிலை மீண்டிருந்தார்.
அஜயும் வேறு பேச்சிற்குத் தாவி அவரது மனநிலையைக் கொஞ்சமாக மாற்ற முயற்சிக்க, மகனின் முயற்சி புரிந்து தவமணியும் அஜய்க்கு ஈடுகொடுத்தார்.
மறுநாள் காலையில் அஜயின் பெரியப்பா குடும்பத்துடன் வந்துவிட, அப்போது தான் திருமண வீட்டிற்கான களையே வந்ததைப் போலிருந்தது. பெரியப்பாவின் மகன் சுதனும் அண்ணி சுமதியும் சேர்ந்து அஜயை நிமிடத்திற்கு ஒருமுறை வாரிக் கொண்டிருக்க, அவன் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். இதையெல்லாம் கார்த்திக் மென்புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அஜய் வீட்டிற்கு அப்படியே நேர்மாறாக நாச்சி வீட்டில் சண்டையும் சத்தமுமாக இருந்தது. சங்கரகோமதி எண்ணெயிலிட்ட கடுகாய் குதித்துக் கொண்டிருக்க, நாச்சி எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ஷூ லேசை மாட்டிக் கொண்டிருந்தாள்.
“உனக்கு எத்தனைதாட்டி தான் சொல்லுதது.. ஏன் நாச்சி வீம்புக்குன்னு செய்யுத?” என்று கத்திக் கத்தி அழுத்துப் போய் அமைதியான குரலில் கேட்க,
“சரி நீ தான் விடேன்.. கிளம்பி நிக்கித புள்ளை கிட்ட வேணாம்னு தடங்கலா பேசாத” என்றார் அதுவரை அமைதியாக இருந்த சங்கரநாராயணன்.
ஏதடா சாக்கு என்றிருந்தவருக்கு கோபமெல்லாம் தற்போது கணவனின் மீது தான் மீண்டும் திரும்பியது.
“என்ன நான் தடங்கலா பேசுதேனா? புள்ளையைக் கண்டிக்க வழியில்ல என்னைய சொல்ல வந்தாச்சு.. இதெல்லாம் நான் ஆரம்பத்துலயே பார்த்து கிள்ளி விடாமத்தேன் இங்கன வந்து நிக்கிது” என்று பேச, சங்கரநாராயணன் வழக்கம்போல கப்சிப் நாராயணன் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவர், “என் தம்பி சொல்லுதது சரிதான கோமதி.. புள்ள வெளியே போகறப்ப ஏன் தடங்கலா பேசணும்.. அதான் சீக்கிரம் வந்துடுதேனு சொல்லிடுச்சுல” என்று ஊடே வர,
“நான் என்ன தடங்கலா பேசணும்னா அண்ணி பேசுதேன்... இவளை அனுப்பி வச்சுட்டு நானில்ல மடியில நெருப்பக் கட்டிட்டு உட்காரணும்” என்று அவரிடமும் சங்கரகோமதி அங்கலாய்க்க,
எதற்குமே பதில் பேசாமல் நாச்சி தன் வேலைகளைப் பார்த்தவாறு இருந்தாள். வெளியே அவ்வளவு அமைதியாகக் காட்டிக் கொண்டாலும் அவளது உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. நாளை திருமணம் என்பதெல்லாம் அவள் மனதில் துளியுமில்லை. சொல்லப்போனால் இரண்டு நாட்களாக அஜயிடம் அவள் பேசவே இல்லை. அவளாக பெரும்பாலும் அழைத்ததில்லை தான். ஆனால், அவன் அழைக்கும்போது எடுத்து ஓரிரு வார்த்தையாவது பேசுவாள். இரண்டு நாட்களாக அவனது அழைப்பையும் கூட ஏற்கவில்லை. எல்லாம் அந்த சாஹித்யாவின் வழக்கு பற்றியது தான்.
இன்னும் தகுந்த ஆதாரங்கள் சிக்கவில்லை என்பதைவிட, அனுமானம் கூட இல்லை என்பது தான் அவளைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கமிஷனர் அழைத்து வழக்கை சிபிஐ -யிடம் மாற்றப்போவதாகக் கூற, ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறாள். இன்னும் ஒரு வாரத்தில் அந்த வழக்கை முடிக்காவிட்டால் வழக்கு சி.பி.ஐ -யிடம் நகர்ந்துவிடும். அந்தப் பிரச்சனை மட்டுமே அவளது மூளையைக் குடைந்து கொண்டிருந்தது.
சங்கரகோமதி அத்தனை பேசியும் அவள் கிளம்பிவிட, முணுமுணுத்துக் கொண்டே வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கார்த்திக் ஸ்ரீயுடன் பேசும்போது அவள் அங்கு நடந்தவற்றைக் கூற,
“இன்னைக்குக் கூடவாடி வேலைக்குப் போவாங்க? ஆனாலும் உங்க அக்கா ரொம்ப தான் ஆஃபீசரா இருக்காங்க” என்றான் அவன்.
அவன் பேசும்போது அஜயும் தேவும் கூட அருகில் தான் இருந்தனர். கார்த்திக் பேசியதை வைத்தே விஷயத்தை யூகித்தவன், திரும்பிக் கார்த்திக்கைப் பார்த்து என்ன என்பதுபோல புருவத்தை உயர்த்தினான். கார்த்திக் ஸ்ரீ கூறியதைக் கூற, அஜய் சங்கரகோமதிக்கு உடனே அழைத்தான்.
எடுத்ததுமே, “மருமகன் மேல் கொஞ்சமாச்சும் பயம் இருக்கா உங்களுக்கு?” என்று ஆரம்பிக்க, அதுவரை முணுமுணுத்துக் கொண்டிருந்தவர் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார்.
“எதுக்குப் பயப்படணும்?” என்று கேட்டவரிடம்,
“என் வருங்காலம் காலைல இருந்து உங்க வாய்ல அரைபட்டுட்டு இருக்காமே” என்று அவன் இழுக்க, அந்தப் பாவனையில் சத்தமாகவே சிரித்துவிட்டார் சங்கரகோமதி.
“சின்சியரா பேசிட்டு இருக்கேன். சிரிக்குறீங்க நீங்க?” என்று அதையும் களவாணி பட ஊர்த்தலைவர் கேட்கும் பாணியில் கேட்க, அதற்கும் சேர்த்து சிரிக்கத்தான் செய்தார் அவர்.
“என்ன பண்ணச் சொல்லுதீங்க? அம்புட்டும் அடம். நாளைக்குக் கல்யாணத்தை வச்சுட்டு எவளாச்சும் வேலைக்குப் போவாளா?” என்று மீண்டும் அஜயிடம் அங்கலாய்க்க,
“முக்கியமான வேலையா இருக்கும் போயிருப்பா.. அவ தாலி கட்டுற நேரத்துக்கு வந்தா போதும். அப்படியும் இல்லையா நானே அவ இருக்க இடத்துக்குப் போய்த் தாலி கட்டிப்பேன். எதாவது பிரச்சனையா உங்களுக்கு?” என்றான் அவன்.
“செஞ்சாலும் செய்வீங்க”
“அதென்ன செஞ்சாலும்னு இழுக்குறீங்க.. கண்டிப்பா செய்வேன்”
“ஒரு கண்ணு மாதிரி ஒரு கண்ணு இருக்காது தம்பி.. பெத்தவங்க கெட்டதுக்குச் சொல்வாங்களா?”
“கெட்டதுனு யார் சொன்னது.. உங்க பொண்ணு இருக்க வேலை அந்த மாதிரி.. அதுல போய் நாம இந்த மாதிரி கண்டிஷன்ஸ் எல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது”
“அதான் எதுக்கு இந்த வேலைங்குதேன்?”
“ஆரம்பிச்சுட்டீங்களா.. இப்போ மாமாவை இழுப்பீங்களே”
“இழுத்தா என்ன தப்புங்கேன்? அவரால தான இதெல்லாம்”
“போதும் அத்தை.. இன்னும் எங்களுக்குப் புள்ள பொறந்து அது ஸ்கூலுக்குப் போனாலும் நீங்க இதையே தான் சொல்லுவீங்க.. அவளைப் பேசாம அவ போக்குல விடுங்க.. ரொம்ப டென்ஷன் பண்ணுனா நாளைக்கும் லீவ் கிடைக்கலனு வேலைக்குப் போனாலும் போய்டுவா.. அப்படி மட்டும் ஆச்சு அவ்ளோதான் உங்கள” என்று மிரட்டினாலும் அவனது மறைமுகக் கருத்து அவர் அறியாததா?
“போங்க போய் என் வருங்காலத்தைக் கொஞ்சம் ஃப்ரீயா விட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க” என்று கூறியவன் அழைப்பைத் துண்டித்து விட்டான். அஜய் அழைத்துப் பேசியதும் முணுமுணுப்புக் கொஞ்சம் குறைந்ததே தவிர முற்றிலுமாக அடங்கவில்லை. சொன்னது போலவே நாச்சி அன்று மாலையே வீட்டிற்கு வரவும் தான் நிம்மதியானது.
அடுத்த மூன்று நாட்களுக்கு விடுமுறை எடுத்திருந்தாள். இரண்டு நாட்களாக அஜய் அழைத்தும் எடுக்காதது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. தன் அறைக்குள் நுழைந்ததுமே அஜய்க்கு அவள் அழைக்க, உடனே உயிர்ப்பித்தான் அவன்.
“சொல்லுங்க வருங்காலமே” என்ற ஆர்ப்பரிப்பானக் குரலைக் கேட்டதுமே அவளுக்கு அதுவரை மனதை அழுத்திக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் மறைவதைப் போலிருந்தது.
“என்ன பண்ணிட்டு இருக்க?”
“வருங்காலத்தை பத்தித்தான் நினைச்சுட்டு இருந்தேனு சொன்னா பச்சையா பொய் சொல்ற மாதிரி இருக்குமோ?”
“போலீஸ் கிட்டயே பொய்யா?”
“நீ தான் போலீஸாச்சே.. பொய்யா உண்மையானு நீ தான் கண்டுபிடியேன்”
“எனக்கு வேற வேலை இல்ல பாரு”
“அப்படி சொல்வாங்களா யாராச்சும் ஏசிபி அம்மாவைப் பார்த்து? அப்புறம் உங்க மக்கள் சேவைக்கு நாளைக்காச்சும் லீவ் விடுவீங்களா இல்ல சாமி பட விக்ரம் மாதிரி மணமேடைல இருந்து ஸ்ட்ரெய்ட்டா ஸ்டேஷனுக்குப் போவீங்களா?”
“ப்ச் உனக்குக் கிண்டலா இருக்கு.. வேலை டைட்.. ஒரு கேஸ் ரொம்ப இழுக்குது.. அதான் இன்னைக்குப் போக வேண்டியதாகிடுச்சு” என்றவள்,
“நீ எப்போ வந்த? கார்த்திக் ஓகே தான அங்க?” என்றும் கேட்க,
“நேத்து மார்னிங் வந்தோம். சகலப் புள்ள பத்திரமா இருக்கான்.. தேவ் கூடப் பேசிட்டு இருக்கான்” என்றான் அவன்.
“தேவ் என்ன பண்றான்?” என்று கேட்கவும்,
“தேவ்வ்வ்வ் மம்மி பேசணுமாம்” என்று அஜய் சத்தம் கொடுக்க, தேவ் கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு அஜயை நோக்கி ஓடிவந்தான். பின் நாச்சியும் தேவும் பேச ஆரம்பிக்க, வழக்கம்போல அஜய் புன்னகையுடன் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
—--------------------
அன்றைய இரவு மெல்ல நகர்ந்து திருமண நாளுக்கான விடியல் அத்தனை அழகாக விடிந்தது. வீட்டையே புரட்டிப் போடுமளவிற்கு அனைவரும் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, அஜய் கண்களும் உதடுகளும் சிரிக்க மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான்.
அத்தனை வேலையின் நடுவில் நின்றிருந்த தவமணி கண்கள் சிரிக்க இறங்கி வந்த மகனைப் பார்த்ததும் கண்கள் பனிக்க அப்படியே நின்றுவிட்டார்.
“எப்படிமா ஜோரா இருக்கேனா? உங்க அளவுக்கு இல்லைனாலும் இதுல பாதி ரியாக்ஷனாவது உங்க மருமவ கொடுப்பாளா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க,
“எப்போ பாரு விளையாட்டு.. வா வா சாமி கும்பிடணும்.. மாப்பிள்ளை அழைக்க வந்துட்டாங்க” என்றபடி மகனை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குள் நுழைய அங்கே ஏற்கனவே சண்முகம் நின்றிருந்தார். இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டுக் கிளம்பியவன் கார்த்திக்கையும் தன்னுடனே அழைத்துக் கொண்டு அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டான்.
கருத்துக்களைப் பகிர:
https://kavichandranovels.com/community/vsv
-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231
அத்தியாயம் 13
நடப்பது கனவோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நொடியும் அருகில் நின்றிருந்த நாச்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்தவாறு சாமி சன்னதியின் முன்னே நின்றிருந்தான் அஜய். அவன் அடிக்கொருதரம் திரும்பியதால் சங்கோஜத்தில் அடிக்கண்ணால் அவனை முறைத்துப் பார்த்தாள் நாச்சி.
கழுத்திலிருந்த மாலையை சரிசெய்வதைப் போல, “எதுக்கு இப்போ திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு இருக்க? உங்கப்பா சும்மாவே உன்னை எங்கேயோ நான் தூக்கிட்டுப் போயிட போறதை மாதிரி பார்த்துட்டு நிக்கிறாரு.. இதுல நீ வேற அவருக்கு கன்டென்ட் கொடுத்துட்டு இருக்க.. ஒழுங்கா நேரா பாரு” என்று முணுமுணுக்க,
“ஹேய் இதெல்லாம் ஓவர்டி.. பார்க்குறதுக்குலாம் தடா போட்டா நான் எங்க போறது? இந்த நாள் என் வாழ்க்கைல வரும்னு என் கனவுல கூட நினைச்சது இல்ல. அவ்வளவு தான்னு நினைக்கும் போது இதோ இப்படி நீயும் நானும் கல்யாணக் கோலத்துல.. இதை நம்புறதா வேணாமானு கூடத் தெர்ல.. ஓவர்வெல்ம்டா இருக்கு.. அதேநேரம் நம்பவும் முடியல. அதான் கனவோ இதெல்லாம்? சட்டுனு மறைஞ்சு போய்டுமோனு பயத்துல உன்னை அப்பப்போ பார்த்துட்டு இருக்கேன்” என்றவனின் குரல் சட்டென்று மாறிவிட்ட பாவத்தில் நாச்சி தானாகத் திரும்பி அஜயைப் பார்த்துவிட்டுப் பின் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
அந்த நொடி நேரப் பரிமாற்றமே அவளுள் அத்தனை ஆழமாக இறங்கியது. முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும்கூட அஜயின் ஒவ்வொரு பார்வையிலும் அவளுள் எதுவோ உடைந்து கொண்டிருந்தது. அதை அவளும் உணர்ந்தே இருந்தாள். அந்த நிமிடம் அவளது மனதில் பழைய கசடுகள் எதுவுமே இல்லை. சிரமமே படாமல் இயல்பாகவே அடுத்து நடந்த சடங்குகளிலெல்லாம் அவள் முழுமனதுடன் கலந்துகொள்ள ஆரம்பிக்க, அஜய் சடங்குகளில் கவனம் வைத்தாலும் நாச்சியைப் பார்வையிடுவதை நிறுத்தவில்லை.
சடங்குகள் எல்லாம் முடிவடைந்ததும் மாங்கல்யத்தைக் கையில் வாங்கியவன் முகத்தில் வழிந்தோடிய புன்னகையுடன் தன் எதிரே நிற்பவளைப் பார்த்தாள். நாச்சியும் அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்க்க,
“யெஸ் ஆர் யெஸ்?” என்றான் அவன் சிரிப்பை அடக்கியபடி.
அஜயின் கேள்வி புரிந்து, “இப்பவும் எனக்கு முடிவெடுக்க சான்ஸ் கொடுக்க மாட்டியா?” என்று அவனை முறைத்தாள் நாச்சி.
மறுப்பாகத் தலையசைத்தவன் மெல்லியப் புன்னகையுடன், “யெஸ்ஸா? இல்ல யெஸ்ஸா? க்விக்கா சொல்லு.. நல்லநேரம் போய்ட்டு இருக்கு” என்று மீண்டும் கேட்க, அவளது இதழ்கள் முதல்முறையாக அவனைப் பார்த்து விரிந்தன.
அவளது பதிலே தேவையில்லை என்பதுபோல அந்தப் புன்னகையே அஜயின் மனதை நிறைக்க, அது தந்த நிறைவுடனும் சுற்றிலும் நிறைந்திருந்த பெரியோர்களின் ஆசிர்வாதத்துடனும் நாச்சியின் கழுத்தில் மங்கலநாணை அணிவித்துத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான் அவன்.
சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் கண்கள் கலங்க அட்சதையைத் தூவித் தங்கள் ஆசிர்வாதத்தை மணமக்களுக்கு வழங்க, அடுத்தடுத்த சடங்குகள் வேகமாக நடந்தன. கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டு மண்டபத்தில் தான் மற்ற சடங்குகள், ஃபோட்டோ ஷூட் என அனைத்தும் நிகழ்ந்தேறின. தவமணிக்கும் நிறைவு தான் என்றாலும் மனதோரம் அவருக்கு இருந்த சஞ்சலம் அவரை வாட்டிக் கொண்டிருந்தது. நல்ல நாளில் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாமென்று வைராக்கியமாக முகத்தில் புன்னகையை ஒட்டி வைத்தபடி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தார் அவர்.
அஜய் மணமேடையில் இருந்தாலுமே அவனது மனதின் ஓரம் தவமணியையும் சண்முகத்தையும் பற்றிய கவலை இருந்து கொண்டே தான் இருந்தது. அவனும் அவ்வப்போது இருவரின் முகத்தைப் பார்த்தவாறே தான் இருந்தான். தவமணியின் முகம் வாடும் போதெல்லாம் அவர்களை அழைத்து எதுவும் கேட்பதும் பேசுவதுமாக அவரின் மனதை மாற்றிக் கொண்டிருந்தான். சண்முகத்தைத் தவமணியே பார்த்துக் கொண்டார். கார்த்திக் அஜயின் விருந்தினனாகக் கலந்து கொண்டதால் அவனைப் பற்றிய எந்த சலசலப்புகளும் இன்றி திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது சங்கரகோமதிக்கு அப்படியொரு நிம்மதியைத் தந்தது. அவரை மேலும் சோதிக்காமல் மண்டபத்தில் இருந்தே அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கார்த்திக் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டான்.
திருமணம் முடிந்ததும் பாலும் பழமும் சாப்பிட, அங்கிருந்தவாறே நாச்சியின் வீட்டிற்கு சென்று மற்ற சடங்குகளையும் முடித்துவிட்டு, அடுத்து அஜயின் வீட்டிற்கு சென்றனர். அங்கும் மணமக்களுக்குப் பாலும் பழமும் தரப்பட, சிறிது நேரத்திலேயே நாச்சியின் குடும்பம் கிளம்ப ஆயத்தமானது.
சண்முகம் தவமணியிடம் விடைபெற்றுவிட்டு அஜயிடம் வந்தபோது எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் சங்கரநாராயணன் சிறு குழந்தையைப் போல் அழ ஆரம்பித்துவிட,
“என்ன மாமா.. என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பார்க்கணும்னு டையலாக் எல்லாம் சொல்வீங்கனு எதிர்பார்த்தேன். இப்படி எதுவும் சொல்லாம ஏமாத்துறீங்களே” என்று அஜய் சிரிக்க, நாச்சி திரும்பி அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.
அந்தப் பார்வை சொன்ன செய்தியில், “சும்மா ஃபன் ஃபன்” என்று அவன் அசடு வழிய, அதைப் பார்த்த தவமணிக்குச் சிரிப்புத்தான் வந்தது.
தன்னைத் தலையால் தண்ணீர் குடிக்க வைக்கும் மகன் இப்போது மனைவியின் கண்பார்வைக்குக் கட்டுப்படுவதை நினைத்து அவர் மகனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க, சண்முகமோ மகனை வெளிப்படையாகவே முறைத்து வைத்தார்.
அவரது எண்ணம் எப்படி இருக்கும் என்பதை அறியாதவனா? அவரது பக்கமே திரும்பாமல் தாயை மட்டும் பார்த்து, “குளுகுளுனு இருக்குமே உங்களுக்கு” என்று அஜய் கேட்க,
“பின்ன இதுக்குத்தான நான் காத்துக்கிடந்தேன்” என்றார் அவரும் புன்னகையை மறைக்காமல்.
சங்கரகோமதியும் ஸ்ரீயும் நாச்சியின் பார்வையைப் பார்த்திருந்ததால் அவரது கேலி அவர்களுக்கும் புரிய, இருவருக்குமே புன்னகை. சங்கரகோமதிக்கு மகளை விட்டுச் செல்கிறோமே என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஒருமாதிரி அவரது மனமே அமைதியாக இருந்தது. முகத்தில் உறைந்த புன்னகையுடன் தான் அங்கிருந்து விடைபெற்றார். சங்கரநாராயணன் தான் உடைந்துவிட்டார். விளையாட்டை எல்லாம் கைவிட்டுவிட்டு அஜய் அவரை சமாதானம் செய்ய, இரு வேறு மனநிலையில் தான் கிளம்பினார்.
தன் வீட்டு மனிதர்கள் கிளம்பியதும் நாச்சியும் சோர்ந்து போனாள். காலை சீக்கிரம் எழுந்த அயர்வில் தேவ்சரணும் தூங்கிவிட்டான். தவமணியைப் பார்க்கவும் பழகவும் உண்மையாகவே நல்லவிதமாகத் தான் தெரிந்தார். ஆனால், சண்முகத்தின் பார்வை மொழியே அவளுக்குப் பிடிபடவில்லை. என்ன நினைக்கிறார் என்று தெளிவாகப் புரியாவிடினும் இந்தத் திருமணம் அவருக்குப் பிடித்தமில்லாமல் நடந்தேறியிருக்கிறது என்கிற அளவுக்கு அவளுக்குத் தெரிந்தது. அவளது முகமே அவளது சோர்வை எடுத்துக் காட்ட, அஜய் அவளது கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டான்.
“இங்கே தான் இருக்காங்க.. நினைச்சா போய்ப் பார்த்துக்கலாம். உனக்கு நான் சொல்லணுமா?” என்று அஜய் கேட்டதும் வலுக்கட்டாயமாக அவள் புன்னகைக்க,
“மோசம்.. இதுக்கு நீ சிரிக்காமயே இருக்கலாம்” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.
“இதெல்லாம் பழகிடுச்சு தான். ஆனாலும் என்னவோ மாதிரி இருக்கு” என்று கமறிய குரலில் சொல்ல,
“நீ வேணும்னா ரூம் போறியா? கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்தா பெட்டரா இருக்கும்” எனவும், அவள் தயக்கத்துடன் அஜயைப் பார்த்தாள்.
அவன் என்னவென்று புருவம் உயர்த்தவும், “நீ?” என்று அவள் கேட்க, அஜயின் புன்னகை பெரிதாக விரிந்தது.
“நீயே ரூம்க்கு கூப்பிடுறப்போ நான் வரமாட்டேனு சொல்லுவேனா?” என்று அவன் கண்ணடிக்க, அவன் சொன்ன அர்த்தத்தில் அவளுக்கு சட்டென்று முகம் சிவந்துவிட்டது.
“கொஞ்சம் கூட விவஸ்தை இல்ல.. நான் என்ன நினைச்சுக் கூப்பிட்டா நீ என்ன அர்த்தத்துல பேசுற” என்று பல்லைக் கடிக்க,
அவளது கண்டிப்பையெல்லாம் புறம் தள்ளியவன் அவளது சிவந்த முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தவாறு, “போலீஸம்மா உன் முகம் கோவத்துல சிவந்திருக்கா இல்ல வெட்கத்துலயா?” என்று அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டான்.
“ஷட்டப்.. நடு ஹால்ல உட்கார்ந்து இதென்ன உளறிட்டு இருக்க?” என்று அவள் கடுப்பாகி கடித்தப் பற்களுக்கிடையே பேச, அவன் உடனே எழுந்துவிட்டான்.
அவன் வேகமாக எழுந்ததில் கொஞ்சம் தள்ளியிருந்த உறவினர் கூட்டம் திரும்பி அவர்களைப் பார்க்கவும் நாச்சி அவர்களைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு அஜயின் பக்கம் சங்கடமாகத் திரும்ப,
“வா நம்ம ரூம் போகலாம்” என்று அவளுக்குக் கைநீட்டினான் அஜய்.
நாச்சி விழிகள் தெறித்து விடுவதைப் போல அவனைப் பார்க்கவும் சுற்றியிருந்த கூட்டம் நமுட்டுச் சிரிப்புடன் அவர்களைப் பார்ப்பதும் பேசுவதுமாக இருக்க, அவள் வேகமாக எழுந்துவிட்டாள். அவனிடம் பேசுவதே வீண் என்று அவனை முறைத்துவிட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்த தவமணியிடம் அவள் போக, அவளை அருகிலிருத்திக் கொண்டார் அவர்.
“என்னப்பா முகமே வாடிக்கிடக்கு? எதாச்சும் குடிக்குதியா? டீ இல்ல காபி எடுத்துட்டு வரவா?” என்று அவர் ஆரம்பிக்கும்போதே, அஜயும் பின்னோடு வந்து அவரருகே அமர்ந்துவிட்டான். நாச்சி அவன் பக்கம் திரும்பவே இல்லை.
“இல்லத்தை எதுவும் வேணாம்.. தேவ் எழுந்துட்டானா?” என்று தவமணியிடம் கேட்க,
“இல்லயே.. எந்திச்சா இங்க தான் வருவான்.. காலைல இருந்து உன் முந்தானையைத் தான பிடிச்சுட்டு சுத்துதான்” என்று சிரித்தார் அவர்.
அதில் நாச்சி மெலிதாகப் புன்னகைக்க, “நீ வேணும்னா கொஞ்ச நேரம் படுத்து எந்தியேன்.. அப்பத்தான் களைப்பு போகும்” என்று சொல்லி அவர் அஜயைப் பார்க்க,
“நான் கூட இப்பத்தான் கூப்பிட்டேன். வேணாம்னு சொல்லிட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்காங்க மேடம்” என்றான் அவன்.
“ஏன்பா வேணானுத.. கொஞ்சம் படுத்து எந்தி போ.. தூக்கம் வரலனாலும் செத்த நேரம் கண்ணை மூடிக் கிடந்தாலே உடம்புக்குத் தேவலயா இருக்கும்” என்று அவளை வற்புறுத்தி அஜயுடன் அவர் அனுப்பி வைக்க, வேறுவழியில்லாமல் அவள் அவனுடன் முறைத்துக் கொண்டே சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததுமே அதுவரை அடக்கி வைத்திருந்தவன் பெருங்குரலெடுத்துச் சிரிக்க ஆரம்பிக்க, நாச்சி கட்டிலில் கிடந்த தலையணையை எடுத்து அவன் மீது வலுவாக எரிந்தாள்.
“அறிவில்லையா உனக்கு? எங்க வைச்சு என்ன பேசுற? அவங்க எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க.. அப்படிக் கத்தணுமா?” என்று சங்கடமாகக் கேட்க,
“ஏன்டி புதுசா கல்யாணமானவன் பொண்டாட்டியை ரூம்க்கு கூப்பிடுறதெல்லாம் இந்த சமூகம் தப்பா நினைக்குமா? இதுக்கு ஏன் இப்படிப் பதட்டப்படுற?” என்றான் அவன் இன்னும் சிரிப்பை அடக்கமுடியாமல்.
“உன்னலாம் திருத்தவே முடியாது” என்றபடி அவள் கட்டிலில் படுத்துக் கொள்ள, அவன் அருகில் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும், “நீ எங்க இங்க உட்காருற?” என்றபடி படுத்திருந்தவள் வேகமாக எழுந்து கொள்ள,
“போலீஸம்மா உன்னை எதுவும் பண்ற ஐடியால இப்ப நான் இல்ல.. பேசாம படு” என்று அதட்டினான் அவன்.
நம்பாத பார்வையொன்றை அவன் புறம் வீசிவிட்டு முன்னெச்சரிக்கையாகக் கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கொள்ள, அவன் அவளையும் அவள் செய்யும் சேட்டைகளையும் தான் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
கொஞ்சநேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு அவனது பார்வை மாறவில்லை என்றதும், “ப்ச் வேற வேலை இல்லையா உனக்கா? இப்படிப் பார்த்தா எப்படி நான் தூங்குறது?” என்று நாச்சி கடுப்பாகக் கேட்க,
“இதென்னடி புதுமாப்பிள்ளைக்கு வந்த சோதனை.. புதுப்பொண்டாட்டியை ரசிக்கிறத விட வேற வேலை புதுமாப்பிள்ளைக்கு இருக்குமா என்ன?” என்றான் அவனும் குறையாத கடுப்புடன்.
‘எதாவது கேள்வி கேட்டா இதெல்லாம் ஏதோ இவனோட ஃபண்டமென்டல் ரைட்ஸ் அளவுக்குப் பேச ஆரம்பிச்சிருவான்’ என்று முணுமுணுத்தவள்,
“நீ என்னமோ செய்” என்று கண்களை இறுக மூடிக் கொண்டு படுக்க, அஜய் தான் விட்ட வேலையை மறுபடியும் தொடர்ந்தான். அதுதான் அவளை ரசிக்கும் வேலையை!
சிறிது நேரத்திலேயே அவள் மெதுமெதுவாக உறங்கி விட, அஜய் எழுந்து வெளியே வந்தான்.
“நாச்சிக்கு எதுவும் குடிக்கக் கொண்டு போகுதியா அஜய்?” என்று கீழிறங்கி வந்தவனிடம் தவமணி கேட்க,
“அவ தூங்கிட்டாம்மா.. எனக்கு ஒரு காபி போட்டுத் தாங்க” என்றபடியே அடுக்களை மேடையில் ஏறி அமர்ந்து கொண்டவன் தாயோடு பொழுதைக் கழித்தான்.
சிறிது நேரத்திலேயே உறக்கம் கலைந்து எழுந்து வந்து தேவ்சரண் வந்ததுமே, “மம்மி எங்க?” என்று கேட்க, “மம்மி தூங்குறாங்க தேவ்.. நீ டாடி கிட்ட வா” என்று மகனிடம் கூறியவன் மகனையும் தூக்கி தன்னோடு அமர்த்திக் கொண்டான். பின் நாச்சியும் எழுந்து வந்துவிட, அதன் பின்னர் தேவ் நாச்சியை விட்டு சற்றும் அகலவில்லை. அவன் அவளோடு கைகோர்த்துக் கொண்டு அவளருகிலேயே அமர்ந்து கதை பேச ஆரம்பிக்க, நேரம் நகர்ந்து இரவைத் தொட்டிருந்தது.
இரவுக்கான சடங்கு ஏற்பாட்டிற்கு நாச்சியைத் தயாராகச் சொல்ல, மறுக்காமல் எழுந்து தயாராகச் சென்றாள் அவள். திருமணம் என்றால் எல்லாம் தானே? மறுக்கவெல்லாம் நினைக்கவேயில்லை.
ஆனால், அஜயின் எண்ணம் முற்றிலும் வேறாக இருந்தது. அவன் எந்த அலங்காரமும் தேவையில்லை என்று சொல்லியும் அறை மிதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அறைக்குள் நுழைந்ததுமே சுற்றிலும் பார்வையை ஓட்டியவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
‘அட்லீஸ்ட் 90’ஸ் பட ஃபர்ஸ்ட் நைட் ரூம் ரேஞ்சுக்கு ரெடி பண்ணாம விட்டாங்களே’ என்று எண்ணிக்கொண்டவனுக்கு அதேபோல தயார் செய்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையும் தோன்ற, ஏனோ தன்னையும் மீறி சத்தமாகவே சிரித்துவிட்டான் அவன்.
அறைக்கதவைத் திறந்துவிட்டு உள்ளே நுழைந்த நாச்சி அஜய் கட்டிலைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்துவிட்டு அவனை ஒருமாதிரியாகப் பார்க்க, அவளது எண்ணத்தின் போக்கினை உணர்ந்தவனுக்கு இன்னும் சிரிப்பு அடங்காமல் பீறிட்டது.
“எதுக்குடி என்னை அப்படிப் பார்க்குற?” என்று சிரித்துக் கொண்டே அவன் கேட்க, சட்டென்று பார்வையை மாற்றி, “ஒன்னுமில்லயே.. நான் எங்கே உன்னைப் பார்த்தேன்?” என்று பதில் கேள்வி கேட்டு சமாளித்தாள்.
“போலீஸம்மா.. இங்க பாரு.. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்ல.. எப்பப்பாரு என்னை ராங்காவே நினைச்சுட்டு இருக்க நீ” என்றவன் வாகாகக் கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்.
நாச்சி அங்கேயே நிற்கவும் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “உன் கையைப் பிடிச்சு அழைச்சுட்டு வரணுமா? ரொம்ப ட்ராமட்டிக்கா இருக்கும்டி.. பாரு போன ஜெனரேஷனே மாறிட்டாங்க.. பால் சொம்பை உன் கைல கொடுத்துவிடாம ஆல்ரெடி ரூம்ல வச்சுட்டாங்க.. இதுல இந்த ஜெனரேஷன்ல பொறந்துட்டுக் கையைப் பிடிச்சு அழைச்சுட்டு வரணும்னா நல்லாவா இருக்கும்?” என்றான் புன்னகை மாறாமல்.
அவனது இலகுவானப் பேச்சில் அவளும் சற்று இலகுவாக உணர, “உன் வாய் எப்போ தான் அஜய் வாயாடாம சும்மா இருக்கும்?” என்று கேட்டபடியே கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததுமே புரண்டு வந்து அவளது மடியில் தலை வைத்துக்கொண்டான் அஜய். அவனது திடீர் செய்கையை சற்றும் எதிர்பார்க்காதவள் நெளிய ஆரம்பிக்க, அஜய் அவளது மடியில் படுத்துக் கொண்டே அவளைப் பார்த்தபடி இருந்தான்.
அவனது செய்கையும் பார்வையும் அவளை ஏதோ செய்ய, அவனது பார்வைக்கான அர்த்தம் என்ன என்று குழம்பி அவளும் அவனையே பார்த்தபடி இருந்தாள்.
“பதில் சொன்னா திட்ட மாட்டியே?” என்று அவன் திடீரென்று கேட்டதில் இன்னும் அதீதமாகக் குழம்பி அவனைப் பார்த்தாள் நாச்சி. அவன் மடியில் படுத்திருந்ததில் அவள் கேட்ட கேள்வியே அவளுக்கு மறந்துவிட்டிருந்தது.
அவளது புரியாத பார்வை கண்டு, “எப்போ வாய் பேசாம இருப்பேனு கேட்டியே” என்று அஜய் எடுத்துக் கொடுக்க,
அவன் என்ன சொல்லுவான் என்பதைக் கணித்து, “அது நீ பதில் சொல்றதைப் பொறுத்து” என்றாள் அவள் கவனமாக.
அவளது பதிலே அவள் யூகித்துவிட்டாள் என்பதை விளக்க, அஜய் வாய்விட்டுச் சிரித்தான்.
“போலீஸம்மா.. எப்பவுமே நீ அழகு தான்.. ஆனா இன்னைக்கு எக்ஸஸ் அழகாத் தெரியுற” என்று பெருமூச்சுடன் சொல்ல, நாச்சி புருவத்தைச் சுருக்கி அவனைப் பார்த்தாள். கைவிரல்கள் தானாக நெற்றியைத் தேய்க்க, அவளது விரல்களைப் பிடித்துத் தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான் அவன்.
“என்னாச்சு?”
“அஜய் எழுந்துரு”
“ஏன்?”
“பேசணும்”
“இப்படியே பேசு”
“ப்ச். கொஞ்சமாச்சும் சீரியஸா இரு.. இப்படி படுத்திருந்தா எனக்குப் பேசுற மூடே வராது”
நாச்சி கோவமாகச் சொல்ல, அஜய் தன் சிரிப்பை அடக்க வெகுவாக முயற்சித்தான். அவனது முயற்சி புரிந்து,
“எதுக்கு இப்ப சிரிக்கிற?” என்றவள் தான் என்ன சொன்னோம் என்று மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்க்க, விஷயம் புரிந்ததில் படுத்திருந்தவனின் தோள்பட்டையின் மீது சுள்ளென்று அடி வைத்தாள்.
“அறிவே இல்ல.. என்ன மைண்டோ மானங்கெட்ட மைண்ட்” என்று அவள் கடிந்து கொள்ள,
“சத்தியமா இந்த செட்டப் எல்லாம் பார்த்துத்தான்டி இப்படி மூளை டர்ட்டியா யோசிக்குது.. இல்லைன்னா நான் ஒரு ஜென்டில்மேன் யூ க்னோ?” என்று சிரித்தவன் அடிக்கும் அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டான்.
“ப்ச் அஜய் பீ சீரியஸ் ப்ளீஸ்” என்று சொன்னதுமே, விளையாட்டைக் கைவிட்டுவிட்டு எழுந்து அமர்ந்தான்.
“சொல்லு என்ன பேசணும்?” என்று அஜய் கேட்டதும், பெருமூச்சை இழுத்துத் தன்னை சமன்படுத்திக் கொண்டவள் பேச ஆரம்பித்தாள்.
“உனக்கு நான் ஏன் கல்யாணத்துக்கு முதல்ல நோ சொன்னேன்னு தெரியும்தான?” என்று எடுத்ததுமே கேட்க,
அவள் எதைப்பற்றி பேசப் போகிறாள் என்பதை யூகித்து, “அதை எதுக்கு இப்ப பேசுற?” என்றான் அவன் அந்தப் பேச்சைக் கத்தரிக்கும் நோக்குடன்.
“ப்ச் சொல்லு.. அம்மா உன்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பாங்க” என்று அவள் கேட்க, அவன் மௌனமாக இருந்தான்.
“இதைப்பத்தி உன்கிட்ட நான் முன்னாடியே பேசியிருக்கணும். வொர்க் பிஸி அண்ட் டென்ஷன்ல அதுக்கான நேரம் சரியா அமையல”
“அப்போ சொல்லியிருந்தாலும் சரி இப்போ சொல்லுறதாலயும் சரி நமக்குள்ள எதுவுமே மாறப் போறது இல்ல.. ஐ ஆல்வேஸ் லவ் யூ” என்று அஜய் சொல்லவும், அந்த அறையில் நுழைந்தது முதல் நாச்சியின் முகம் முதன்முறையாக புன்னகை சிந்தியது. அவளுக்குத் தான் அது தெரியுமே!
“எனக்குத் தெரியும்” என்றவளது குரல் நெகிழ்ந்து போய் வந்ததும்,
“தேவையில்லாத விஷயத்தைப் போட்டு நினைச்சு நம்ம ப்ரசென்ட்டை ஸ்பாயில் பண்ணிக்கணுமா? இதெல்லாம் எதுக்கு இப்போ?” என்று கடிந்து கொண்டான் அவன்.
“இல்ல பேசணும்” என்று அவள் வீம்பாக இருக்க, தலையணையை எடுத்து கட்டிலில் சாய்வாக வைத்தவன் அதில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“சரி சொல்லு”
“ஒரே கோச்சிங் இன்ஸ்ட்யூட்ல தான் படிச்சோம். அப்போ தான் இன்ட்ரொடியூஸ் ஆனோம். ரெண்டு பேருக்கும் நிறைய காமன் ஃபேக்டர்ஸ்.. ஃப்ரெண்ட்ஷிப் ஒருகட்டத்துல மியூச்சுவலா அடுத்த ஸ்டேஜ்க்கு டெவலப் ஆச்சு” என்றவள் நிமிர்ந்து அஜயைப் பார்த்தாள். அவனிடம் சிறுசலனமும் இல்லை.
“பொய் சொல்ல விரும்பல. உண்மையாவே நான் அந்த பீரியட்ல ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அஜய்.. என்னை எனக்கே புதுசா அறிமுகப்படுத்துன நாட்கள் அது.. எல்லாமே சடனா முடிவுக்கு வந்த மாதிரி ஆகிடுச்சு. ஒரு ஆக்ஸிடென்ட்ல அவருக்கு ரொம்ப இன்ஜுரி ஆகி, கால் எடுக்குற சூழ்நிலை” என்றவளுக்கு அடுத்துப் பேச முடியவில்லை.
தொண்டையில் முள் சிக்கிய உணர்வுடன் எச்சிலைக் கூட்டி விழுங்கப் போனால் அதுகூட உள்ளிறங்க மாட்டேன் என சண்டித்தனம் செய்ய, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான் அஜய்.
அதை வாங்கி அவள் குடித்து முடித்ததும், “படு” என்று மட்டும் சொன்னவன் அமைதியாக தானும் படுத்துக் கொண்டான். உண்மையில் அவள் படும் பாட்டைக் காணச் சகிக்காமல் தான் அவளை இது பற்றிப் பேசாதே என்றான். அவள் எங்கே கேட்டாள்?
“இல்ல” என்று நாச்சி ஆரம்பிக்கும் போதே அவளை இழுத்துத் தன்னருகே போட்டுக் கொண்டவன் அவளை அணைத்தவாறு படுத்துக் கொள்ள, நாச்சி திமிறினாள்.
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் அஜய்.. நான் பேசி முடிச்சுக்கிறேன். எனக்கு உன்கிட்ட சொல்லணும்” என்று அவள் திமிற,
“என்ன சொல்லப் போற? எனக்கு எதுவும் தெரிய வேணாம்” என்றான் அஜய்.
“ப்ளீஸ் நான் பேசணும்” என்று மீண்டும் மீண்டும் நாச்சி சொல்ல, வேறுவழியின்று அவளை அணைப்பிலிருந்து விடுவித்தான் அவன்.
“ஆக்ஸிடென்ட் நடந்த பீரியட்ல நான் தான் அவர் கூட முழுசா இருந்தேன். அவருக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும்தான். அவருக்கு என்னைப் பார்த்ததுமே விஷயம் புரிஞ்சுடுச்சு. ஹாஸ்பிடல்ல இருக்க வரைக்கும் அவரும் எதுவும் பேசல. கொஞ்சம் ரெக்கவர் ஆகி டிஸ்சார்ஜ் ஆனதும் தான் பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சு. அவரால இனிமேல் போலீஸ் யூனிஃபார்ம் போட முடியாதுனு ஆன சூழ்நிலைல நான் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஜாய்ன் பண்றதை அவங்கப்பா விரும்பல. அந்த நேரமே கல்யாணம் பேசி என்னை லாக் பண்ணலாம்னு என்கிட்ட கேட்டாரு. நான் என்னோட எய்ம் பத்தி சொன்னப்போ என்கிட்ட நேரடியாவே சொன்னாரு. நீ யூனிஃபார்ம் போட்டு வேலைக்குப் போறப்போ உன்னைப் பார்க்குறப்போலாம் என் பையனுக்கு அவனால முடியலனு உறுத்திட்டே இருக்கும். வாழ்க்கை முழுக்க அந்த வலியை நீ அவனுக்குக் கொடுக்க நினைக்கிறியானு கேட்டாரு.. நான் முடியாதுனு சொன்னா அவங்க தங்கச்சி பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கப் போறதாவும் சொல்லவும் என்னால நடந்ததைப் பாராஸஸ் பண்ணவே முடியல. எப்படி இப்படி உங்கப்பா பேசுறாருனு ஸ்ரெய்ட்டா அவர்கிட்டவே கேட்டேன்” என்றவள் அஜயின் முகத்தைப் பார்த்தாள். அப்போதும் அவனிடத்தில் எந்தச் சலனமும் இல்லை.
“அவருக்குமே அதே எண்ணம் தான். அவங்கப்பா சொன்னதைக் கூடக் கொஞ்சம் என்னால ஜீரணிக்க முடிஞ்சது. ஆனால், அவரே அப்படிச் சொல்லுவாருனு நான் எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இப்படிப் பேச முடியுது உங்களால இது என் கனவுனு சொன்னா அப்போ உனக்கு என் கனவைப் பத்தி ஒன்னுமே இல்லையானு கேட்டாரு.. என்னோட சுயத்தை விட்டா தான் காதல்னு இருக்கும்போது என்னால அதைப் பண்ணவே முடியல. கொஞ்சநாள் பிரச்சனையை ஆறப் போடுவோம். டைம் கொடுப்போம்னு நினைச்சு நான் திரும்ப ஸ்டடீஸ்ல கான்சென்ட்ரேட் பண்ண ஸ்டார்ட் பண்ணேன். ஆனா அடுத்த மாசமே அவருக்குக் கல்யாணம்னு நியூஸ் வந்துச்சு. ரொம்ப வலிச்சது. அவ்வளவுதானா? இவ்வளவு ஈஸியா எந்தவிதமான ப்ராப்பர் க்ளோஷரும் கொடுக்காம சட்டுனு என்னை ஒதுக்கிட்டாங்களேனு அவ்வளவு கோபம் வந்துச்சு. நேரா போய் சட்டையைப் பிடிச்சு கேட்கணும்னு ஆத்திரம் வந்துச்சு.. அது என்னை இன்னும் கீழ இறக்கிக் காட்டும்னு அதைப் பண்ணல. நான் அதுவரை பார்த்த ராம்க்கும் அவர் கடைசியா என்கிட்ட பேசுன பேச்சுக்கும் அவ்வளவு டிஃபரென்ஸ். காதல் மேல, பசங்க மேலனு என் கோபம் மொத்தமா திரும்ப, அதுல இருந்து வெளில வந்தாலும் அடுத்து ஒருத்தனை நம்பி என் எதிர்காலத்தை அவன் கையில தர என்னால முடியல” என்று அவள் முடிக்கவும்,
“ஆனா ஐயாவோட என்ட்ரி எல்லாத்தையும் மாத்திடுச்சு.. அப்படித்தான?” என்று கண்ணடித்து அவன் கேட்க, நாச்சி அமைதியாக இருந்தாள்.
“இதெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்றேன்னா எனக்கு உன்மேல காதல் வருமானுலாம் தெரில. உன்மேல நல்ல அபிப்பிராயம் இருக்குதான். உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். ஆனா, காதல்?? எனக்குத் தெரியல. நீ காதலா எதாவது பேசுனா கூட அதுக்கான ரெஸ்பான்ஸ் எப்படித் தர்றதுனு புரியாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவள் தவிப்புடன் அஜயைப் பார்த்துவிட்டு,
“அதுக்காக உன்கூட மனைவியா வாழ மாட்டேனுலாம் நான் சொல்லல” என்றும் சேர்த்துச் சொல்ல, அஜய் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.
“போலீஸம்மா நீ என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசுறியா?” என்று நம்ப முடியாமல் அவன் கேட்க, அவள் தலையசைத்தாள்.
“ஹேய் ச்சீ பைத்தியம்.. லூசு மாதிரி உளறாத.. எனக்கு இன்னைக்கு அந்த ஐடியாவே இல்ல” என்றவன் அவளைப் பார்த்துவிட்டு வேகமாகத் தன் வார்த்தைகளைத் திருத்தினான்.
“ஐடியா இல்லைனா ஃபுல் மீல்ஸ் சாப்பிடுறதுக்குத் தான் ஐடியா இல்ல”
“நான் எவ்ளோ சீரியஸான விஷயத்தைப் பத்தி ஷேர் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம்கூட உனக்கு சீரியஸ்னெஸ்ஸே வராதா அஜய்?”
நாச்சி கடுப்புடன் கேட்க, அவளை இழுத்துத் தன்னருகே போட்டுக் கொண்டவன், “குடும்பத்துல ரெண்டு பேருமே சீரியஸா இருந்தா நல்லா இருக்காதுடி.. நீ கஷ்டப்பட்டேனு சொல்லும்போது அவனை அடிச்சு நொறுக்கணும்னு ஆத்திரம் வருது தான்.. ஆனா, கடந்து போனது கடந்து போனதாகவே இருந்துடட்டுமே.. நாம அதைப் பேசவும் வேணாம். நினைக்கவும் வேணாம்” என்று சொன்னவன் அவளை அணைத்துக்கொண்டு கழுத்தோரம் முகத்தைப் புதைக்க, நாச்சியின் உடலில் மெலிதான அதிர்வலைகள் பரவின.
சிரமப்பட்டு உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், “ஐடியா இல்லைனு சொன்ன?” என்று நக்கலாகக் கேட்க,
“ஃபுல் மீல்ஸ் சாப்பிடத்தான் ஐடியா இல்லைனு சொன்னேன். இதெல்லாம் சும்மா ஸ்நாக்ஸ்” என்றவன் அவளை இன்னுமின்னும் அதிகமாகச் சோதித்தான்.
“அ.. அஜய்…”
“ம்ம்”
“ஆல்ரெடி ரெண்டு பேருமே டயர்டா இருக்கோம். தூங்கலாமா?”
“ம்ம்”
‘ம்ம் னா எப்படித் தூங்குறது? இவனை வச்சுக்கிட்டு’ என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்தவள்,
“நீ இப்படிலாம் பண்ணுனா எனக்குத் தூக்கம் வராது” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
“பழகிக்கோ” என்று வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவன் இன்னும் அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தைக் குறைக்க, அவன் விடும் மூச்சுக்காற்று அவளது கழுத்தில் மோதி அவளைப் பெரும் இம்சைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தது.
கருத்துத் திரி:
அத்தியாயம் 14
வழக்கம்போல அதிகாலையிலேயே நாச்சிக்கு முழிப்பு வந்துவிட்டது. கண் விழித்தவள் அவனை எழுப்ப வேண்டாமென்று மெதுவாக எழுந்து அறைக்குள் இருந்த குளியலறையைப் பயன்படுத்திக் குளித்துவிட்டு வெளியே வரும்போது அஜய் அறையில் இல்லை.
‘கீழே போய்ட்டான் போல.. இப்போ நாமளும் போகணுமா?’ என்று யோசித்துக் கொண்டே தன் இலகு உடையிலிருந்து சுடிதாருக்கு மாறிவிட்டுக் கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்தாள்.
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தளுக்கு அவளது தோற்றம் புதிதாகத் தெரிந்தது. கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அவள் கையை அசைக்கும் போதெல்லாம் ஒன்றோடு ஒன்று உரசி சத்தமிட, கால்களின் கொலுசு அதற்குமேல் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.
“இந்த வேஷத்தை எல்லாம் எப்போ கலைக்கணும்னு தெரியலயே” என்று யோசித்தவள் மணியைப் பார்க்காமல் சங்கரகோமதிக்கு அழைப்பு விடுத்துப் பின் சுதாரித்து நிராகரிக்க, அடுத்த வினாடியே அவரிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.
எடுத்ததுமே, “என்ன நாச்சி இந்த நேரத்துல?” என்று அவர் பதட்டத்துடன் கேட்க, அவரது பதட்டத்தில், “மணியைப் பார்க்காம கால் பண்ணிட்டேன்மா.. அதுக்காக ஏன் நீங்க இவ்ளோ பதட்டப்படுறீங்க?” என்றாள் அவள் புருவத்தைச் சுருக்கியவாறு.
“அங்கே எதுவும் பிரச்சனையோனு நினைச்சுத்தான்” என்றவருக்கு அப்படியேதும் இல்லை என்றதும் நிம்மதி பரவியது.
அந்தப் பிரச்சனை இல்லை என்றானதும் அவருக்கு அடுத்த கவலை மனதை அரிக்க, அடுத்துப் பேச வாய் வரவில்லை. எப்படிக் கேட்பது? என்று சங்கோஜத்துடன் அவர் ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேச, நாச்சி தலையில் கைவைத்தாள்.
“என்னம்மா ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? என்னாச்சு உங்களுக்கு?” என்று பொறுக்கமாட்டாமல் அதட்டியதும் தான் அவருக்குமே தான் சம்பந்தமில்லாமல் உளறுவது புரிந்தது.
“என்ன?”
“ஒன்னுமில்ல நாச்சி.. என்னை விடு.. நீ எதுக்குக் கூப்பிட்ட?”
“ம்மா இந்த வளையல், கொலுசுனு போட்டு என்னைப் பொம்மை மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க.. கழட்டக்கூடாதுனு வேற கண்டிஷனா சொல்லிட்டுப் போயிருக்கீங்க.. இதை எப்போ கழட்டுறது? இன்னும் ரெண்டு நாள்ல நான் ட்யூட்டில வேற ஜாய்ன் பண்ணணும்”
“என்னட்டி சொல்லுத? ரெண்டு நாள்ல வேலைக்குப் போகுதியா? உன்னை எத்தனைதாட்டித் தான் சொல்லுதது ஒருவாரம் லீவு கேளுன்னு?? இப்போ தான் அங்கன போயிருக்க.. அவங்க பழக்கவழக்கமெல்லாம் பிடிபடவே நாளாகும்.. இதுல போன சுருக்குல வேலைக்குப் போறேனு குதிக்குத கெடந்து.. அம்மா சொல்லுததைக் கேளு நாச்சி.. உம்மாமனாரு ஏற்கனவே சடைச்சிட்டு இருக்குதமாதி தெரியுது.. இதைக்காட்டி எதுவும் பிரச்சனை பண்ணிடாம..”
தாயாய் அவரது பயம் சரி என்றாலும் அவளது வேலையில் இருக்கும் பிரச்சனைகள் அவளுக்கு மட்டுமல்லவா தெரியும்?
“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கம்மா.. ஏற்கனவே வேலைல ஆயிரத்தெட்டு டென்ஷன் போயிட்டிருக்கு.. அதுக்கு நடுவுல கல்யாணம் அது இதுனு என்னைப் போட்டு சுழட்டி அடிச்சுட்டுட்டீங்க.. உங்க விருப்பத்துக்கு எல்லாத்தையும் விட்டுட்டேன்ல.. இதுக்கு மேல என் வேலைலயும் உள்ள வராதீங்க”
“வேலை வேலைனு வேலையைக் கட்டிட்டே கெடந்தா அங்க உள்ளவங்க என்ன நினைப்பாங்க? எதாவது பிரச்சனையை மட்டும் இழுத்து வைச்சுக்காதனு சொன்னா என்னைத் தான் பேசுவ நீ”
“ஆமா உங்களைப் பேச எனக்கு ஆசை.. ம்மா நீங்க இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லல”
“என்ன கேள்வி? புதுப்பொண்ணுனா ஒரு மாசத்துக்கு இதைக் கழட்ட மாட்டாங்க.. நேத்துக் கல்யாணம் ஆனவ இன்னைக்கு கேட்குத.. இதெல்லாம் நல்லாவா இருக்கு”
“சரி வைங்க” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவள் சங்கரகோமதி, “இரு இரு.. வைக்காத” எனவும் நிதானித்தாள். அவள் அழைப்பைத் துண்டிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டாலும் அடுத்துப் பேச அவரால் முடியவில்லை.
“என்னம்மா? ஃபோனை வைக்கப் போனவளை வைக்காதனு நிறுத்திட்டு இப்போ பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்றவளுக்கு அப்போதுதான் அவரது தயக்கத்திற்கான காரணம் புரிய, மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.
“நீங்க பொறுமையா யோசிங்க.. கீழே யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு.. அப்புறம் பேசுறேன்” என்று வைத்துவிட்டாள்.
‘ஓஹ் காட்.. அம்மாவை சமாளிச்சாச்சு.. அஜய் வீட்லயும் கேட்பாங்களே.. இதுல இவன் வேற முந்திரிக்கொட்டை மாதிரி கீழே போயிருக்கான்.. இவன் கிட்டயும் கேட்டிருப்பாங்களோ? என்னனு பதில் சொன்னான்னு வேற தெரியலயே’ என்று அஜயை மனதிற்குள் தாளிக்க ஆரம்பிக்க, அஜய் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.
அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்ததால் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள் நாச்சி. அவளைப் பார்த்ததுமே அஜயின் விழிகள் ரசனையோடு அவளை அளவிட ஆரம்பிக்க, நாச்சிக்கு மீண்டுமொரு போராட்டம் ஆரம்பமானது.
‘இவனைத் திருத்த முடியாது.. ஆவூன்னா பார்க்க ஆரம்பிச்சுடுவான்’ என்றெண்ணிக் கொண்டு, “கீழே எங்க போய்ட்டு வர்ற?” என்றாள் அவனது பார்வையில் பாதிக்கப்படாதவளைப் போல.
“சும்மா தோட்டத்துல ஒரு வாக்.. எல்லாரும் கல்யாண களைப்புல தூங்குறாங்க போல.. உனக்கு காபி போடவா ஆர் டீ?” என்று அஜய் கேட்க,
“நீ எனக்குக் காபி போட்டுத் தந்து அதை யாராவது பார்த்துப் பொண்டாட்டிக்குப் பணிவிடை பண்றான்னு கேலி கிண்டல் பண்ணணும் அதான உன் ஃப்ளான்? நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். போய் முதல்ல குளி” என்றுவிட்டு கட்டிலில் அமர்ந்து தன் கைகளால் தலைமுடியைக் கோதிவிட ஆரம்பித்தாள் நாச்சி.
“இதை அடிக்கடி உன்கிட்ட நான் சொல்லணுமா? இது நமக்கான வாழ்க்கை.. நமக்குப் பிடிச்ச மாதிரி மட்டும்தான் வாழணும். யார் என்ன நினைச்சா என்ன? நீ ம்ம்னு சொல்லு.. இப்போவே கூட காபி போட்டுக் கொண்டு வரேன்” என்று அஜய் சொல்ல,
“நீ முதல்ல போய்க் குளி.. எனக்கு காபி அப்புறமா போடலாம்” என்றாள் நாச்சி அவனைத் திசைதிருப்பும் விதமாக.
அவளது சொல்படியே சென்று குளித்துவிட்டு வந்தவன் அவளது உடை நிறத்திலேயே சட்டை அணிந்து கொண்டு வெளிவர, நாச்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“நீ பண்ற அலம்பல் இருக்கே..” என்றவளிடத்தில் பெரிதாகப் பதில் எல்லாம் சொல்லாமல் புன்னகைத்து சமாளித்தான் அவன். அவர்கள் இருவரும் ஜோடியாகக் கீழிறங்கி வந்ததைப் பார்த்தத் தவமணிக்கு மனம் நிறைந்துதான் போனது.
“நேரா பூஜை ரூம்க்கு கூப்ட்டுப் போ அஜய்” என்று தவமணி சொல்ல, இருவரும் இறைவனை வழிபட்டுவிட்டு வெளியே வந்தனர்.
“காபியா இல்ல டீயா போடட்டுமா? அங்கன எது பழக்கம் உனக்கு?” என்று தவமணி நாச்சியைப் பார்த்துக் கேட்க,
“எதுனாலும் ஓகே தான் அத்தை. எல்லாருக்கும் எதுவோ அதுவே போடுங்க” என்றாள் நாச்சி.
“இங்க ஒவ்வொருத்தருக்கு ஒன்னு தான்மா.. அப்படியே பழகிடுச்சு” என்றபடியே இருவருக்கும் காபி கலக்க, மூவரும் அடுக்களைக்குள் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தனர். புது இடம் என்ற உணர்வு இருந்தாலும் அஜயும் தவமணியும் அந்த உணர்வை அதிகம் மேலே வரவிடாமல் பார்த்துக் கொள்ள, அதுவே நாச்சிக்கு போதுமானதாக இருந்தது.
காலை உணவுத் தயாராகிக் கொண்டிருக்கும் போது தேவ்சரணை எழுப்பச் சொல்லி நாச்சியிடம் தவமணி கூற, அதன் பின்னே அஜய் கூட அவளுக்குத் தேவைப்படவில்லை. அவனுக்கு நாச்சியிடம் காட்டவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருந்தது. அவனது சிறுவயது போட்டோக்கள் முதற்கொண்டு அவன் பள்ளியில் வாங்கிய பரிசுகள் என ஒவ்வொன்றிற்கும் கிளைக்கதையோடு அவன் காட்ட, அவளுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அஜய் இருவரையும் சாப்பிட அழைக்க வந்த போது கூட அவர்களுடைய உரையாடல் முடிந்தபாடில்லை.
“அப்படி என்னடி பேசுறான் உன்கிட்ட?” என்று அஜய் நாச்சியிடமும்,
“மம்மி வரவும் டாடி கிட்ட வரவே இல்லையே நீ” என்று தேவிடமும் கேட்கும் அளவிற்கு அவர்களது உறவு இருந்தது. அதில் அதீத சந்தோஷம் அஜய்க்குத் தான். இதற்குத் தானே அவனும் ஆசைப்பட்டான்?
இருவரையும் காலை உணவை முடித்துவிட்டுக் கோவிலுக்குச் சென்று வரச் சொல்லவும், தேவும் அவர்களோடு இணைந்து கொண்டான். கடவுள் தரிசனத்தை முடித்துவிட்டு,
“தேவ் கோமு பாட்டி வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்க, தேவ் சரியென்று சொல்லும் முன்னே நாச்சியின் விழிகள் மின்னின.
“அங்கே போகணும்னா சொல்ல வேண்டிதான? என்கிட்ட கேட்குறதுல என்ன உனக்கு?” என்று கடிந்து கொண்படி நேராக நாச்சியின் ஊரை நோக்கிக் காரை செலுத்தியவன்,
“ஆனாலும் ஒரு நாளுக்கெல்லாம் இந்த மின்னல் ஓவர் தான்டி” என்று கலாய்க்கவும் தவறவில்லை.
அங்கே சென்றால் அவளுக்கும் மேலே சங்கரநாராயணன் குதித்தார். திடீரென போய் நின்று இன்ப அதிர்ச்சி தரலாம் என்று நினைத்து யாருக்கும் அவர்களது வரவு பற்றிய தகவலை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
“கோமு யார் வந்திருக்கா பாரு.. வாங்க வாங்க” என்று வாசலுக்கே ஓடி வந்தவரைப் பிடித்து நிறுத்திக் கொண்டவன்,
“மாமா நேத்து தான் எங்க எல்லாரையும் பார்த்தீங்க.. ஞாபகம் இருக்கா? இல்லை அம்னீஷியா எதுவும் இருக்கா? எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்? இளமை திரும்புதுனு நினைப்பா?” என்று கேட்க,
அப்பாவுக்குப் பதிலாக நாச்சி, “நாளைக்கு உனக்குப் பொண்ணு பிறந்து அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறப்போ எப்படி இருக்கப் போறனு பார்ப்போம்” என்று பதில் பேச,
“ஆமா பாப்பா சொல்றதுதான் சரி.. அப்போ பார்ப்போம்” என்று சிரித்தவர் சங்கரகோமதியை அழைக்க வேகமாக முன்னே செல்ல, பாட்டியைப் பார்க்கத் தானும் வருவேன் என தேவும் அவருடனே சென்றுவிட்டான்.
மாமனாரின் தலை அந்தப்பக்கம் நகரவுமே, “அப்போ பொண்ணு பெத்துக்கலாம்னு சொல்ற? உனக்கு ஓகே-னா இன்னைக்கு நைட்டே அதுக்கான வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று குறும்புக் குரலில் கேட்டவனிடம்,
“நான் உனக்கு எப்போ நோ சொன்னேன்?” என்றாள் பதில் கேள்வியாக அவள்.
அந்தப் பதிலில் மனைவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவன் அதில் அவனுக்கான அழைப்பு எதுவுமே தென்படாததில் கடுப்பாகி, “மூட் வந்தா கூட முறைச்சுட்டே தான் சொல்லுவியாடி?” என்று கேட்க,
அவன் பேசியதில் அரண்டு போய் சுற்றும் முற்றும் பார்த்தாள் நாச்சி. யாருமில்லை என்றதும் வேகமாக அவன் வாயிலேயே அடித்தவள், “எங்க நின்னுட்டு என்ன பேசுற?” என்றாள் தீயாக.
“என்னடி அடிக்கிற?” என்று அவன் வாயைத் தேய்த்துவிட, சங்கரகோமதி, சங்கரநாராயணன் மற்றும் தேவ் தொடர்ந்து வர வந்தார்.
“வாங்க தம்பி... வா நாச்சி” என்று அவர் வரவேற்க,
“வரேன்த்தை” என்றபடியே அஜய் வாயைத் தேய்த்து விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்னாச்சு மாப்ள உதட்டுல?” என்றார் சங்கரநாராயணன்.
சற்றும் யோசிக்காமல், “எல்லாம் உங்க பொண்ணால தான் மாமா” என்று சொல்லவும், நாச்சிக்குப் பகீரென்றானது.
“என்னவா இருந்தா உங்களுக்கு என்ன? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். பேசாம இருங்க” என்று சங்கரகோமதி தன் கணவனைத் தீப்பார்வை பார்க்க,
நாச்சியின் கோபமும் சங்கரகோமதியின் பேச்சுமென அப்போதுதான் தான் சொல்லிவைத்த அர்த்தமே அவனுக்குப் புரிய, சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டுப் போனான் அஜய்.
“கோபப்பட்டு அடிச்சுட்டா அத்தை.. அதைச் சொன்னேன்” என்று அவன் திருத்திச் சொல்லவும்,
“என்னது?” என்று அதிர்ந்தவர் இப்போது கணவனை விட்டு மகளை முறைத்தார்.
“என்ன பழக்கம் நாச்சி இது?” என்று அவர் மகளைக் கண்டிக்க,
“டாடி எதாச்சும் பண்ணியிருப்பாங்க பாட்டி.. அதான் மம்மி பனிஷ் பண்ணியிருப்பாங்க.. தப்பு பண்ணா தான் போலீஸ் அடிப்பாங்கனு எங்க மிஸ் சொல்லித் தந்திருக்காங்க” என்றான் தேவ்.
அதில் நாச்சி சிரித்துக்கொண்டே அவனைத் தன் பக்கமிருத்தி, “அறிவுக்குட்டி” என்று முத்தம் கொடுக்க,
அதைப் பார்த்தவனோ, ‘எனக்கு அடி அவனுக்கு முத்தமா? இருக்குடி இன்னைக்கு உனக்கு’ என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான்.
“நீ தானே இப்போ சொன்ன? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும்னு.. விடு.. முதல்ல எதாவது குடிக்கக் கொண்டு வா அவங்களுக்கு” என்று சங்கரநாராயணன் சொல்லவும்,
தலையாட்டிய சங்கரகோமதி, “மேலே சின்னவ காதுல ஹெட்போனை மாட்டிட்டுக் கிடப்பா.. போய் சொல்லுங்க.. அக்காவும் அத்தானும் வந்திருக்காங்கனு” என்றுவிட்டு அவர்களுக்குக் குடிக்க பழச்சாறு தயாரிக்கச் சென்றார்.
சங்கரநாராயணன் சொல்லவும் கீழே வந்த ஸ்ரீ, “வாங்க அத்தான்” என்று அஜயை வரவேற்றபடியே வேகமாக வந்து நாச்சியைக் கட்டிக்கொண்டாள்.
“அக்கா எப்படி இருக்கீங்க?” என்று தமக்கையைக் கட்டிக் கொண்டு கேட்டவளைக் கடுப்புடன் பார்த்த அஜய்,
“உங்கக்காவை ரொம்ப மாசம் கழிச்சுப் பார்க்கிறியா என்ன?” என்றான் அதிசயம் போல.
அவனது கிண்டல் புரிந்து, “இதெல்லாம் சிஸ்டர்ஸ் சென்டிமென்ட். உங்களுக்கெல்லாம் எங்கே புரியப் போகுது?” என்று அஜயிடம் முறைப்பாகச் சொல்லியவள்,
“கரெக்ட்டு தான தேவ்?” என்று அவனையும் கூட்டுக்குச் சேர்க்கப் பார்த்தாள்.
“அரசியல் வீட்ல தான் பிறக்குதுனு சும்மாவா சொல்றாங்க.. எவ்வளவு நேக்கா என் புள்ளையை எனக்கு எதிரா திருப்புற நீ?” என்று அஜய் ஆரம்பிக்க,
“டாடி நான் உங்க பக்கம் தான். சித்தி டாடிக்கு சிஸ்டர் இல்லையே அப்புறம் எப்படி சிஸ்டர் சென்டிமென்ட் தெரியும்? அதான் டாடிக்குத் தெரியல” என்று மறுகேள்வி கேட்டான் தேவ்.
அஜய்க்கு ஆதரவாகப் பேசுவதாத நினைத்து ஸ்ரீ சொன்ன விஷயத்தை தேவ் இன்னும் விளக்கிச் சொல்ல, நாச்சி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அஜயைப் பார்த்தாள் இது உனக்குத் தேவையா என்பதைப் போல.
“நல்லா இருக்குடா உன் சப்போர்ட்டு” என்று அஜயும்,
“கரெக்ட் தேவ். நீ சொன்னா கரெக்டா இருக்கும்” என்று ஸ்ரீயும் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல, தேவ் பெருமிதமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
அதில் நாச்சி இதழ் பிரித்துச் சிரிக்க, “சோ, இந்த போலீஸம்மாவோட புன்னகையைப் பார்க்கணும்னா நான் ஜோக்கர் ஆகணுமா?” என்று நாச்சிக்கு மட்டும் கேட்கும்படி அஜய் கேட்க,
“ஹலோ.. நேத்து முழுக்கப் பண்ணுன ரொமான்ஸ் எல்லாம் பத்தாதா? என்னையும் தேவையும் மாதிரி சின்னஞ்சிறுசுகளைப் பக்கத்துல வச்சுட்டு பண்ற வேலையா அத்தான் இது?” என்று அதற்கும் ஸ்ரீ கேட்க, அஜய்க்கு எப்படியோ நாச்சிக்கு சங்கடமாகி விட்டது.
“ஸ்ரீ” என்று அவள் அதட்டும் குரலில் அழைக்கும்போதே சுதாரித்தவள் வாயை மூடிககொள்ள,
“சும்மா விளையாட்டுக்குப் பேசுறா.. இதுக்கெல்லாம் ஏன் அதட்டுற?” என்று மனைவியை அடக்கினான் அஜய்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சங்கரகோமதி பழச்சாறு கொண்டு வந்து தரவும் அனைவரும் பழச்சாற்றை எடுத்துக் குடிக்க,
“நீ வந்து கொஞ்சம் ஒத்தாசை பண்ணு ஸ்ரீ.. எதாவது விருந்தா சமைச்சுடுவோம்.. நீங்க போய் கறி எடுத்துட்டு வாங்க” என்று அடுத்தடுத்து அனைவருக்கும் வேலைகளைக் கொடுத்தார் சங்கரகோமதி.
“எதையெல்லாம் கட் பண்ணணுமோ எடுத்துட்டு வாங்க.. பேசிட்டே நான் கட் பண்ணித் தரேன்” என்று அஜயும் வர,
“நீங்க சும்மா உட்காருங்க தம்பி.. வீட்டு மாப்பிள்ளையை காய் நறுக்க விட்டா அப்படி இருக்கும்” என்று சங்கரகோமதி மறுக்க, விடாப்பிடியாக அவனே வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி என எல்லாவற்றையும் அரிந்து கொடுத்தான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் சிறிய விருந்தே தயாராகியிருக்க, உணவருந்திவிட்டு அவர்கள் நெற்கட்டும்செவலிற்குப் புறப்பட்டனர். முந்தைய தினமிருந்த எந்தத் தவிப்புமின்றி மூவரும் சந்தோஷமாக அவர்களை வழியனுப்பி வைக்க, அஜய் ஆச்சரியமாகப் புருவத்தை உயர்த்தினான்.
“போலீஸம்மா.. இதென்னடி மேஜிக்கா இருக்கு? நேத்து உன் அப்பா அந்த அழு அழுதாரு.. இன்னைக்கு க்ளோஸப் விளம்பரத்துல நடிக்கிற மாதிரி வழியனுப்பி வைக்கிறாரு.. இந்த ஒரு நாள்ல என்ன நடந்திருக்கும்?” என்று நிஜமாகவே புரியாமல் அவன் கேட்க, நாச்சி அவனை மௌனமாகப் பார்த்தாள்.
“என்ன இதுவும் என் பொண்ணு வரும்போது தான் புரியுமா?” என்று அவளைப் படித்து அவன் கேட்க, அவள் மௌனத்தைக் கலைக்காமல் தலையசைத்தாள்.
“என்னவோ சொல்ற.. பார்க்கலாம்” என்றவனுக்கு அடுத்தடுத்த கற்பனைகள் முழுவதும் அவர்களது மகவைப் பற்றியதாக இருக்க, வாடாத புன்னகையொன்று அவன் இதழில் ஒட்டிக் கொண்டது.
இப்படி இதமான மனநிலையோடு வீடு வந்தவனை அவனது மனநிலைக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் வாசலிலேயே அரிவாளோடு நிற்கும் அய்யனாரை ஒத்தத் தோற்றத்தில் சண்முகம் வழிமறித்தார்.
அவரது தோரணையிலேயே எதையோ பேசப் போகிறார் என்று கணித்தவன், “நீ தேவைக் கூட்டிட்டு உள்ள போ” என்று நாச்சியை மட்டும் முன்னே அனுப்பி வைத்தான். ஆனால், அவளது தலை மறையும் வரை கூட சண்முகம் பொறுக்கவில்லை.
“என்னலே இப்பவே பொண்டாட்டி வீட்டுப்பக்கமா முழுசா சாயுதியா? எங்க போகுதேனு சொல்லிட்டுப் போன? இப்ப எங்க போய்ட்டு வந்திருக்க? கல்யாணம்தான் உன் முடிவுனா எல்லாத்தையும் உன்னிஷ்டப்மடி ஆக்கிக்கிடலாம்னு பார்க்குதியா?” என்று சத்திமிட, முன்னே நடந்து கொண்டிருந்த நாச்சி திரும்பிப் பார்த்தாள்.
“நீ போ.. நான் வரேன்” என்று அஜய் அழுத்திச் சொல்ல, தோள்களைக் குலுக்கிக் கொண்டு நடந்து விட்டாள்.
“என்ன இப்பவே முழுசா உன்னை ஆட்டி வைக்காங்களா?”
“ஏன்ப்பா அங்க போய்ட்டு வர்றதுல என்ன பிரச்சனை? எதுக்குத் தேவையில்லாம வார்த்தையை விடுறீங்க” என்று அஜய் அலுப்பாகக் கேட்கவும்,
“என்ன பிரச்சனையா? எனக்கென்ன பிரச்சனை? அங்கேயே கூட நீ போய்த் தங்கிக்க நான் ஒன்னும் கேட்கப் போறதில்ல” என்று சண்முகம் சொல்ல,
“அப்புறம் எதுக்கு இப்போ ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டு வந்த மாதிரி விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான் அவன் எரிச்சலை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டு.
“ஏம்லே நாளைக்கு மறுவீட்டுக்குப் போக முடிவு பண்ணி நாளு, நேரமெல்லாம் குறிச்சு வைச்சிருக்கோம்.. நீ இன்னைக்கே போய்ட்டு வந்திருக்க.. அப்போ நாளு கிழமை பார்த்துட்டு வந்த நான் கேணைப் பையலா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்குல்ல.. அப்படியென்ன உன் மாமனார் வீடு உன்னை இழுக்குது? கல்யாணமாகி முழுசா ஒரு நாள் கழியக்குள்ள பெரியவங்க யாரும் சொல்லாம அங்க போயிருக்கனா என்ன அர்த்தம்? நீ தான் உன் பொண்டாட்டிக் கூட்டிட்டுப் போகச் சொன்னதும் தலையை ஆட்டிக்கிட்டுக் கூட்டிட்டுப் போய்ட்ட.. அவங்களாச்சும் பெரியவங்களா எங்கள கூப்பிட்டுச் சொன்னாங்களா? மருமவன் மட்டும் போதும்னு நினைக்காங்களா?” என்று எகிற,
தவமணி அழைக்கச் சொல்லி அஜயை அழைக்க வந்த நாச்சிக்கு அவர் பேசியது அனைத்தும் காதில் விழுந்தது. திரும்பப் பேசத் துடித்த நாவை அடக்கிக் கொண்டு,
“அஜய் உன்னை அத்தை கூப்பிடுறாங்க” என்று அஜயை மட்டும் பார்த்துச் சொல்ல, சண்முகத்திற்கு அவரை சற்றும் கண்டுகொள்ளாமல் அவள் நடமாடியதில் இரத்த அழுத்தம் எகிறியது.
“ஏம்மா நீ தான் இவனுக்குப் பேரு வச்சியா? கட்டுனவன மரியாதையா பேசணும்னு உங்க வீட்ல சொல்லித் தரலயா? என்ன வளர்த்து வைச்சிருக்காங்க” என்று நாச்சியிடம் நேரடியாகவே முகத்தைச் சுளிக்க,
“நான் பேசுனா என்னை மட்டும் பேசுங்க மாமா.. நான் செய்யுறதுக்கு எங்க வீட்டை இழுத்துப் பேச வேணாம். அது எனக்குப் பிடிக்காது” என்றாள் சண்முகத்தை நேரடியாகப் பார்த்து. அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள். அது அவருக்கு கட்டளையிடுவது போல் தோன்ற,
“நேத்து வந்துட்டு நீயெல்லாம் எனக்கு ஆர்டர் போடுதியா? இந்த வீட்ல நாங்க சொல்லுததைக் கேட்டுத்தான் நீ இருக்கணும். உன் போலீஸ் பந்தாவை எல்லாம் வீட்டுக்குள்ள தூக்கிட்டு வந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன் பார்த்துக்க.. இதுக்குத்தான் போலீஸ் பொண்ணு வேணாம் வேணாம்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்” என்று பேசவும்,
“ப்பா” என்று ஆட்சேபித்த அஜயிடம்,
“நீ இரு அஜய். என்கிட்ட தானே பேசுறாரு. நான் பதில் பேசிக்கிறேன். நான் நார்மலா தான் சொன்னேன். அது உங்களுக்கு ஆர்டர் போடுற மாதிரி இருந்தா நான் ஒன்னும் செய்ய முடியாது. அதென்ன ஆரம்பிச்ச நாள் முதல்லா போலீஸ் பொண்ணு வேணாம் வேணாம்னு தேவையில்லாத லேபிளை என்மேல ஒட்டுறீங்க? தப்பு இருக்க இடத்துல தான் போலீஸ் மேல வெறுப்பு இருக்கும்” என்று சொல்ல, சண்முகத்திற்கு கோபத்தில் முகம் சிவந்துவிட்டது.
“என்னலே உன் பொண்டாட்டி பேசுததைக் காது குளிர கேட்டு ரசிக்குதியா? ரொம்ப நல்லாருக்கு” என்று தன் மகனிடம் அவர் எகிற,
இன்னும் அஜயைக் காணவில்லையே என்று தவமணி வெளியே வந்துவிட்டார்.
“அவளைப் பேசுனீங்க.. அவ அதுக்குப் பதில் பேசுறா.. இதுல என்ன நான் சொல்றதுக்கு இருக்குப்பா?” என்று அஜயும் நாச்சி புறம் பேச, தவமணிக்கு என்னவோ ஏதோ என்று வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டது.
“ஓ நேத்து வந்தவ பேசுதது உனக்குப் பெருசா போயிடுச்சு.. நான் பேசுதது தப்பா இருக்கா?” என்று அவர் கத்தவும்,
“எதுக்குங்க சத்தம் போடுதீங்க? உங்க அண்ணே வீட்டு ஆளுங்க உள்ள தூங்குதாக” என்றபடி தவமணியும் அருகே வந்துவிட,
“கேட்டியா தவம்.. எதுக்கு நாள் கிழமை பார்க்காம முறையில்லாம அங்க போனீங்கனு கேட்டேன். அது ஒரு குத்தம்னு இவன் பேசுதான்.. அந்தப் புள்ள வந்து இவனை போ வா-னு பேர் சொல்லிக் கூப்பிடுது. ஏன்னு கேட்டா எதுவும் என்மேல தப்பாம். அந்தப் புள்ள என்ன ஏதோ குத்தவாளி மாதிரி பேசுது.. அதெல்லாம் இவன் கண்ணுக்குத் தெரியல.. ஆனா என்மேலத்தேன் தப்பாம்.. இதுக்குத்தான் நான் சொன்னேன் இந்தக் கல்யாணம் வேணாம்னு” என்று மனைவியிடம் புலம்ப,
“வந்தவங்க ஊருக்குப் போவட்டும் பொறுமையா பேசிக்கிடலாம்ங்க.. இப்போ எதுவும் வேணாம். நீங்க உள்ள போங்க.. நான் மருமகப் புள்ளைய கண்டிச்சு வைக்கேன்” என்று கூறி அவரை உள்ளே அனுப்பி வைத்தார் தவமணி.
சண்முகம் உள்ளே சென்றதும், “மன்னிச்சுக்கோம்மா.. அவர் எப்பயும் அப்படித்தேன். பேசத் தெரியாம பேசுவாரு.. அவர் பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்காத” என்று நாச்சி கையைப் பிடித்து தவமணி மன்னிப்புக் கேட்க,
“அச்சோ அத்தை.. நீங்க எதுக்குப் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க? நான் மனசுலலாம் எதையும் வச்சுக்கல.. என்னைப் பேசும்போது சும்மா இருக்கலாம்.. எங்க வீட்டு ஆட்களைப் பேசுறப்போ சும்மா இருக்க முடியல.. அதான் திரும்ப பேசுற மாதிரி ஆகிடுச்சு” என்றாள் நாச்சியும் வருத்தமாக.
“ஆத்தே.. உங்க வீட்டாளைப் பேசுனாரா? அந்த மனுசனுக்குக் கூறு அம்புட்டுத்தான்.. மன்னிச்சுடுமா.. என்ன பேசணும்னு தெரியாம சின்ன விஷயத்துக்கும் பெரிய வார்த்தையா விட்டுட்டுக் கடைசியா யோசிப்பாரு.. நீ எதுவும் உங்க வீட்லலாம் சொல்லிடாத.. சங்கடப்படுவாங்க” என்று தவமணி பெரிதும் சங்கடப்பட,
“ச்சே ச்சே இதுவும் என் வீடு தான் அத்தை. எப்பவும் இங்க நடக்குறதை அங்கே சொல்ல மாட்டேன்” என்றாள் நாச்சி.
“நாச்சி தான் புதுசு.. நீ ஏன்டா என்னைக்கும் இல்லாம அவர் கூட வாயாடுற? ஒரே வார்த்தையா கல்யாணத்துக்குப் பொறவு தான் இப்படினு பேசப் போகுதாரு பாரு” என்று மகனைக் கண்டிக்க,
“ம்ம்க்கும்.. இனிவேற பேசணுமாக்கும்? அதைத்தான அவர் நேத்திருந்து கூவிட்டு இருக்காரு? எனக்கு இந்த முறைக்கு நாள் பார்த்ததுலாம் தெரியாதுமா... அது தெரியாம அங்க போய்ட்டேன்.. அதுக்கு இவ்ளோ பேச்சா? நானும் அமைதியா போய்டலாம்னு தான் இருந்தேன் ஆனா உங்க வீட்டுக்காரு பேசுன பேச்சு அப்படி.. சும்மா சும்மா என் மாமியார் வீட்டையும் என் பொண்டாட்டியையும் இழுக்குறாரு.. ஒருநாள் இல்ல ஒருநாள் கோச்சுக்கிட்டு என் மாமியார் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா பொட்டியைக் கட்டப் போறேன் பாருங்க” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.
அவன் விளையாட்டுப் போலச் சொன்னாலும் அவன் சொன்ன செய்தியில் தவமணியின் மனதில் இடி இறங்கியது. அவரது முகம் சட்டென்று இருண்டு விட, அதை இருவரும் அறியாமல் மறைத்துக் கொண்டவரின் மனதில் மற்றொரு பூகம்பம் மையம் கொண்டது.
கருத்துக்களைப் பகிர:
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Syedalisadiq Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page