All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

சில்லாஞ்சிருக்கியே - 9

 

VSV 25 – சில்லாஞ்சிருக்கியே
(@vsv25)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 16
Topic starter  

சில்லாஞ்சிருக்கியே - 9

 

ஒரு மணி நேரத்திற்கு முன்பு,

மகிழை வைத்துக் கொண்டு தேநீர் கடையில் வெளியே இருந்த மேஜையில் அமர்ந்திருந்தான் நேத்திரன். 

 

“உங்க அம்மா ஏன் டா என் பீலிங்ஸையே புரிஞ்சுக்க மாட்டேங்குறா? நான் இன்னும் நேரடியா மட்டும் தான் சொல்லல அவகிட்ட. மத்தபடி நவரசத்தையும் கண்ணுல காமிக்குறேன் அவளை பார்க்கும் போதெல்லாம். நிஜமாவே அவளுக்கு புரியலையா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரியே இருக்குறாளா? ஒரு எழவும் புரிய மாட்டேங்குது.” என்று மனம் போன போக்கில் மகிழிடம் புலம்பிக் கொண்டிருக்க மகிழுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. போக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தான். 

 

“உனக்கும் என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்குல்ல.. எல்லாம் என் நேரம்” என்று சோகமாக அவன் கூறிக் கொண்டிருக்க அப்பொழுது ஒரு காவல்துறை ஜீப் வந்து நின்றது. 

 

‘என்னடா இது.. நம்ம ஊருக்குள்ள எதுக்கு போலீஸ் ஜீப் வருது?’ என்று யோசனையோடு அவன் பார்க்க, அதிலிருந்து உயர் அதிகாரி ஒருவர் இறங்கினார். வந்தவர் நேத்திரனிடம்,

 

“எப்பா தம்பி.. இங்க மந்திரமூர்த்திங்குறது யாரு?” என்று கேட்க இருக்கையில் இருந்து எழுந்தவன்,

 

‘என்ன நம்ம அப்பாவை கேட்குறாரு?’ என்று யோசித்தபடி,

 

“எங்க அப்பா தான் சார். என்ன விஷயம்? ஏதும் பிரச்சனையா?” என்றான் பதற்றமாய்.

 

“கிட்டத்தட்ட பிரச்சனை தான். எங்க அவரு?” என்க,

 

“ஒரு நிமிஷம் சார்” என்றவனோ தன் தந்தைக்கு அழைப்பு விடுத்தான். 

 

“சொல்லு நேத்ரா.. என்ன விஷயம்?” என்று மறுமுனையில் மந்திரமூர்த்தி கேட்க,

 

“அப்பா.. உங்களை தேடி போலீஸ் வந்துருக்காங்க… கொஞ்சம் வருவீங்களாம்” என்றிட,

 

“போலீஸா.. என்ன விஷயமாம்” என்று சாவகாசமாக கேட்டார்.

 

“தெரியலை பா. உங்களை உடனே வர சொன்னாங்க” 

 

“ஏதாச்சும் இடம் பிரச்சனையா இருக்கும். நீ பேசிட்டு இரு. இப்போ வந்துருவேன்” என்று அழைப்பைத் துண்டித்தவருக்கு ஒருகணம் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

 

“கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க சார். நீங்க வாங்க உக்காருங்க. டீ சொல்லட்டுமா” என்க,

 

“அதெல்லாம் வேணாம். உங்க தாத்தா பேர் என்ன?” என்று அவர் வினவ அவனோ,

 

“ருத்திரமூர்த்தி சார்” என்றான். 

 

“அவருக்கு எத்தனை பசங்க மொத்தம்?” 

 

“ரெண்டு பசங்க. மூத்தவர் என் பெரியப்பா கிருஷ்ணமூர்த்தி. ரெண்டாவது என் அப்பா மந்திரமூர்த்தி” என்றான் எதற்காக இதெல்லாம் கேட்கிறார் என்ற யோசனையுடன். 

 

“ஓஹோ.. உங்க பெரியப்பா எங்க இருக்காங்க?”

 

“அவர் உயிரோட இல்ல சார். 25 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு.”

 

“அப்படியா? எப்படி இறந்தாரு?” என்று மேலும் கேள்வியாய் கேட்டார் அந்த அதிகாரி. 

 

“அது ஏதோ ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்கன்னு அப்பா சொல்வாங்க. அப்போ எனக்கு ரெண்டு வயசு தான் இருக்கும். சோ எனக்கு பெருசா ஏதும் நியாபகம் இல்ல. அவரை பார்த்த நியாபகம் கூட எனக்கு இல்லை” என்றான். 

 

“ஓகே.. உங்க தாத்தா ருத்திரமூர்த்தி எப்போ இறந்தாரு? எப்படி இறந்தாரு?”

 

“அவரு பெரியப்பா இறந்த துக்கம் தாங்கமுடியாம அதையே நினைச்சு நினைச்சு கொஞ்ச நாள்ல உடம்பு சரியில்லாம போய் அப்படியே இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க”

 

“ஓகே. அப்போ உங்க குடும்பத்தோட மூத்த வாரிசு நீங்க தான். அப்படி தான்?” என்று அவர் கேட்க 

 

“ஆமா சார்” என்று நேத்திரன் கூற, அவன் கூறிய ஒவ்வொரு பதிலுக்கும் அந்த அதிகாரி உடன் வந்த அதிகாரியிடம் தலையசைப்பைக் கொடுத்தார். அதனை கவனித்த நேத்திரனோ,

 

“ஏன் சார்? திடீர்னு இதெல்லாம் கேட்குறீங்களே? எதுக்கு கேட்குறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” எனவும்,

 

“உங்க அப்பா வரட்டும் தம்பி. சொல்றேன்” என்றதோடு முடித்துக் கொண்டார் அவர். வெகுநேரமாக நேத்திரன் காவலதிகாரியிடம் பேசுவதை கவனித்த தேன்மொழியோ அவனிடம்,

 

“என்னாச்சு ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள். அவனோ,

 

“தெரியல தேனு. அப்பாகிட்ட பேசனுமாம். அவருக்காக தான் வெயிட்டிங். நீ மகிழை தூக்கிட்டு உள்ள போ” என்றவன் மகிழை அவளிடம் கொடுக்க அவளோ யோசனையோடு நிற்க அவளைக் கண்ட காவலதிகாரி, 

 

“யார் இவங்க உங்க வொய்ஃப் அண்ட் சன்னா?” என்று வினவ அவர் கேள்வியில் சிரித்தவன்,

 

‘கூடிய சீக்கிரம் அது நடந்தா நல்லா தான் இருக்கும்’ என்று மனதினுள் வேண்டிவிட்டு பதில் கூறவர அவனை முந்திக் கொண்டு,

 

“இல்ல சார். நான் இந்த கடைல வேலை பார்க்குற பொண்ணு. இது என் பையன். இவர் ஜஸ்ட் வேண்டப்பட்டவரு” என்று பதில் கூறிய தேன்மொழி தலைக்குனிந்தபடி உள்ளே சென்றுவிட்டாள். 

 

‘நல்லவேளை.. ஜஸ்ட் தெரிஞ்சவருன்னு சொல்லாம வேண்டப்பட்டவருன்னாச்சு சொன்னாளே அது வரைக்கும் சந்தோஷம்’ என்று நினைத்து பெருமூச்சிவிட்டுக் கொண்டான். அதற்குள் மந்திரமூர்த்தி அங்கு வந்து சேர,

 

“வணக்கம் சார். நான் தான் மந்திரமூர்த்தி. சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்டவர் பிறகு சுற்றம் கருதி,

 

“டேய் நேத்ரா.. நீ வீட்டுக்கு போ. நான் சார் கூட பேசிட்டு வந்துடுறேன்” என்றவர் அதிகாரியிடம்,

 

“வாங்க சார் அப்படி போய் பேசுவோம்” என்று சற்று தூரமாக வயக்காட்டிற்கு நடுவில் அழைத்து சென்றார். 

 

வெகுநேரமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. மந்திரமூர்த்தியோ ஏதோ ஆதங்கமாக பேசிக் கொண்டிருந்தார். உயர் அதிகாரி மந்திரமூர்த்தியிடம் பேசிக்க கொண்டிருக்க உடன் வந்த அதிகாரி தேநீர் கடையில் டீ குடிக்க ஆரம்பித்தார். அங்கிருந்த ஊர்மக்கள் சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். அப்பொழுது தான் யாஷும் தமிழும் வந்து இறங்கினர். 

 

இவ்வாறு தேன்மொழி நடந்ததைக் கூற தமிழோ,

 

“என்னவா இருக்கும்?” என்ற யோசனையோடு பார்த்தாள். யாஷோ,

 

“என்னவா இருந்தா நமக்கென்ன? எனக்கு செம டயர்டா இருக்கு. ஹே சில்லு.. ஒரு சின்ன ஹெல்ப். நேத்து உன் கைப்பக்குவத்துல மீன் குழம்பு சாப்பிட்டதுல இருந்து என் நாக்குல டேஸ்ட் ஒட்டிகிச்சு. நான் போய் தூங்குறேன். இன்னைக்கு மதியம் லஞ்ச் பிரிப்பெர் பண்ணிட்டு எனக்கு ஒரு பார்சல் கொண்டு வந்து கொடுத்துரு ப்ளீஸ்” என்றவன் அவள் பதில் பேச வருவதற்குள் ஓடிவிட்டான்.

 

“ஏதோ பொண்டாட்டி கிட்ட ஆர்டர் போடுற மாதிரி சொல்லிட்டு போறாரு” என்று கடுப்பாக கூறியவள் கடைக்குள் வந்து அமர்ந்தாள். 

 

“ஏன் தமிழக்கா ஒருமாதிரி இருக்கீங்க?” என்றாள்.

 

“ஒன்னுமில்லட்டி. அது ஒரு பெரிய கதை. அப்புறமா சொல்றேன். நீ கடையை அடைச்சுட்டு வீட்டுக்கு வா.” என்றுவிட்டு வீட்டுக்கு செல்லலானாள். 

 

சிறிது நேரத்தில் தேன்மொழி மகிழுடன் தமிழ் வீட்டிற்கு வர தமிழோ குழம்பு செய்வதற்கு காய்களை வெட்டிக் கொண்டிருந்தாள். 

 

“சமைக்க ஆரம்பிச்சுடீங்களா? சரி அப்போ நான் போய் சோறு உலை வைக்குறேன்” என்றாள். 

 

“நீ இருட்டி. நானே பண்ணிக்குறேன்” என்று தமிழ் கூற,

 

“இது பெரிய வேலையா.. நீங்க வேற.. சும்மா இருங்கக்கா” என்றவள் சமயலறைக்கு சென்றாள். காய்கறி வெட்டி முடித்த தமிழ் சமயலறைக்கு வந்து பார்க்க வழக்கத்தை விட அதிகமாக சோறு உலை வைத்தது போன்று தோன்ற,

 

“ஏட்டி தேனு.. அரிசி அதிகம் போட்டுட்டியா என்ன?” என்று வினவ,

 

“ஆமா அக்கா.. யாஷ் அண்ணா வேற சாப்பாடு கேட்டாங்க தானே. ஆதான்” என்றாள்.

 

“ஏன்டி அவருக்கும் சேர்த்து நான் செய்றேன்னு இப்போ உன்கிட்ட சொன்னேனா நானு..” என்று கடிந்துக் கொண்டாள். 

 

“என்னாச்சுக்கா? ஏன் கோபமா பேசறீங்க? அவரு வாய்விட்டு சாப்பாடுன்னு கேட்ட அப்புறம் நீங்க செய்யாம இருப்பீங்களா என்ன? உங்களைப் பத்தி தெரிஞ்சதுனால தான் நான் கேட்காம போட்டேன். உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையா?” என்றிட அப்பொழுது நேத்திரன் அங்கு வந்தான். 

 

“என்னாச்சு? ஏதோ சீரியஸ் டிஸ்கஷன் போயிட்டு இருக்கு போல? என்னட்டி.. போன இடத்துல நல்ல என்ஜாய் பண்ணுனியா?” என்று சாதாரணமாக தான் கேட்டான். 

 

“என்ன என்ஜாய்? நான் என்ன புதுசாவா அந்த இடத்துக்கு போறேன்.. கேட்குறான் பாரு கேள்வி” என்று எரிந்து விழுந்தாள். 

 

“ஏட்டி.. இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி எரிஞ்சி விழுகுற?” என்று கேட்க தமிழோ அமைதியாக இருந்தாள். பிறகு தேன்மொழியிடம் பார்வையை பதித்தவன் என்னவென்று கண்களாலேயே கேட்க அவளும் இவ்வளவு நேரம் நடந்ததைக் கூறி தெரியவில்லை என்றாள். 

 

“என்ன தமிழு.. இப்படியெல்லாம் நீ பேசுற ஆள் இல்லையே.. என்னாச்சு உனக்கு?” என்று கேட்க செயின் விழுந்த விஷயத்தை மறைத்து யாஷ் அவளிடம் காதலைக் கூறியதை மட்டும் கூறினாள். அதைக் கேட்டதும் தேனும் நேத்திரனும் சிரிக்க,

 

“ப்ச் இப்போ எதுக்கு சிரிச்சு தொலைக்குறீங்க?” என்றாள் கடுப்பாக. 

 

“ஆமா பின்ன.. இதை நாங்க ரெண்டு பேருமே எதிர்பார்த்தோம். எங்களுக்கு ஒரு டவுட் இருந்துச்சும் அவர் உன்னை காதலிக்குறாரோன்னு. இதுக்கா நீ இவ்ளோ ரியாக்ட் பண்ற” என்று கேட்க தேனோ,

 

“ஏன் தமிழக்கா? உங்களுக்கும் இந்த விஷயத்துல ஒரு சந்தேகம் இருந்துச்சு தானே அவர் மேல.. அப்புறம் ஏன் கோபப்படுறீங்க?”

 

“அதானே.. அவர் விருப்பத்தை அவர் சொல்லிட்டாரு. உனக்கு விருப்பம் இருந்தா சரின்னு சொல்லு.. இல்லைன்னா இல்லன்னு சொல்லு.. அதைவிட்டுட்டு எதுக்கு இப்படி பிகேவ் பண்ணுற. இதுவரை உனக்கு காலேஜ்ல வராத ப்ரொபோசலா.. எவ்ளோ வந்துருக்கு. அதை எல்லாம் கூலா தானே ஹேண்டில் பண்ணுன.. இதுக்கு மட்டும் எதுக்கு டென்சன் ஆகுற” என்று நேத்திரன் கேட்க அதெல்லாம் இப்பொழுது தான் நினைக்க தோன்றியது தமிழுக்கு. 

 

‘ஆமால்ல.. முன்னாடி வந்த ப்ரொப்போசல் எல்லாத்தையும் அசால்ட்டா ஹேண்டில் பண்ணுனேன். இப்போ என்ன’ என்று அவளே அவளிடம் கேட்டுக்கொள்ள,

 

‘ஏன்னா.. அதுல எல்லாம் உனக்கும் இன்ட்ரஸ்ட் இல்லாம இருந்துச்சு. ஆனா இவர் விஷயத்துல நீ ஏற்கனவே அவர் பக்கம் கொஞ்சம் சாஞ்சுட்ட. அந்த உண்மையை ஏத்துக்க மனசு வராம தான் இப்போ அது கோபமா வெளிப்படுது’ என்று அவளது மனசாட்சி கூற அது உண்மை என்று அறிந்தும் அவளது மனம் ஏற்க மறுத்தது. தமிழ் யோசனையிலேயே இருப்பதைக் கண்ட நேத்திரனோ அவளை சகஜமாக்கும் பொருட்டு,

 

“இதுக்கு தான் என் அண்ணா ருத்ரன் வேணும்னு சொல்றது. அவர் இருந்துருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்துருக்குமா.. நானே உங்க ரெண்டு பேருக்கும் மாமா வேலை பார்த்து உங்களை சேர்த்து வச்சுருப்பேன்” என்று கூறியபடி அவன் சிரிக்க தமிழ் தன்னை திட்டுவாள் என்று எதிர்பாத்திருந்தவனுக்கு,

 

“ஆமா டா.. நிஜமா அப்படி ஒருத்தர் இருந்துருக்கலாம்னு இப்போ தோணுது” என்ற அவளது பதில் ஆச்சர்யமாக இருந்தது. மாறாக தேன்மொழி தான் அவனது கூற்றில் அவனை வினோதமாக பார்த்துவிட்டு சென்றாள். பிறகு தமிழின் அருகில் அமர்ந்த நேத்திரனோ,

 

“இங்க பாரு தமிழு.. யாஷ் அண்ணாவும் பார்க்க நல்ல டைப்பா தான் தெரியுறாரு. அவர் கண்ணுல உனக்கான நேசத்தை நான் நிறைய தடவை நோட் பண்ணிருக்கேன். ஆரம்பத்துல அவர் மேல அவ்ளோ நல்ல எண்ணம் இல்லை தான். ஆனா இப்போ அவர் மேல நிறைய மரியாதை இருக்கு. உனக்கு ஒகேன்னா சொல்லு.. அவர் யாரு, குடும்பம் எப்படி என்ன ஏதுன்னு விசாரிப்போம்.. ருத்ரன் அண்ணாவுக்கு தான் கொடுத்து வைக்கல. அதனால என்ன யாஷும் எனக்கு அண்ணா தானே.. அவருக்கு உன்னை கட்டி வச்சு மனசை தேத்திக்குறேன்” என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக,

 

“டேய் டேய்.. நிறுத்துறீயா.. ஒன்னு இல்லாத ஆளை கட்டிக்க சொல்லி உசுர எடுக்கிற, இல்லனா எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லாத ஆளை கட்டிக்க சொல்லி உசுர எடுக்கிற.. உனக்கு என்ன தான் டா பிரச்சனை. இவ்ளோ வாய் பேசுறியே.. முதல்ல உன் காதலைப் பத்தி உனக்கு சொல்ல தைரியம் இருக்கா.. வந்துட்டான் பேச” என்று கத்த,

 

“ஏய்.. மெதுவா பேசி தொலையேன்ட்டி.. அவளே இப்போ இப்போ தான் என்கிட்ட கொஞ்சம் சகஜமா பேசுறா.. நீ கெடுத்து விட்டுருவ போல.. உனக்காக தான் எல்லாம் சொன்னேன். வேணாம்னா பே.. சரியான சிடுமூஞ்சி” என்று அர்ச்சித்தவன் கடுப்பில் அவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வீட்டில் மந்திரமூர்த்தி அமர்ந்திருக்க அவரிடம் வந்தவன்,

 

“என்ன பிரச்சனை பா? எதுக்கு போலீஸ் வந்தாங்க?” என்று கேட்க அவரோ,

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல டா.. நீ ரொம்ப போட்டு யோசிக்காத.. இது எங்க ரியல் எஸ்டேட் பிரச்சனை” என்று முடித்துக் கொண்டார்.

 

“அதுக்கு ஏன் பா என்கிட்ட நம்ம தாத்தா, பெரியப்பா பத்தி எல்லாம் விசரிச்சாங்க?” என்று அவன் சரியாக கேட்க அவரோ,

 

“அப்படியா.. இதெல்லாம் கேட்டாரா?” என்றவருக்கு யோசனையாக இருந்தது.

 

“என்ன பா யோசிக்குறீங்க?” என்றதும் சுயம் அடைந்தவர்,

 

“அது சும்மா விசாரிச்சுருப்பாங்க. ஆமா வேறென்ன கேட்டாங்க?” என்று துருவினார்.

 

“வேற… ஹான்.. நான் தான் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசான்னு கேட்டாரு” 

 

“ஓ இதெல்லாம் கேட்டாரா? சரி சரி நீ இப்போ எங்க போயிட்டு வர”

 

“நம்ம தமிழ் வீட்டுக்கு தான் பா” என்றிட அவருக்கோ முகம் மாறியது. 

 

“பொழுதன்னைக்கும் ஒன்னு அவ கடைல இருக்குற.. இல்லனா அவ வீட்டுல இருக்குற.. இதெல்லாம் நல்லாவா டா இருக்கு?” என்றவருக்கு முகம் பல கோணத்தில் போனது.

 

“என்னாச்சு பா? நீங்க இப்படி எல்லாம் சொன்னது இல்லையே.. ஏன் இப்படி பேசறீங்க?” என்றான் ஆதங்கமாய்.

 

“நானோ உன் அம்மாவோ கண்டுக்காம இருப்போம். ஆனா இந்த ஊரு உலகம் அப்படியே இருக்குமா.. என் காது படவே பல விதமா பேசுறாங்க.. நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு. அதை மனசுல வச்சுக்கோ.” என்று அவர் அறிவுரை வழங்க,

 

“இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ஊரு உலகம் ஆயிரம் பேசும். அதுக்கு நாம பொறுப்பாக முடியாது பா” என்றான் சற்று குரலை உயர்த்தி.

 

“என்ன டா பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு. எல்லாம் அந்த தமிழை பார்த்து கத்துகிட்டியா?”

 

“இப்போ ஏன் பா சம்மந்தமில்லாம அவளை குத்தம் சொல்றீங்க?” 

 

“இங்க பாரு நேத்திரா.. இந்த ஊருல ஒரு பஞ்சாயதுன்னு வந்தா நம்ம குடும்பம் தான் தீர்ப்பு சொல்லும். உனக்கு தெரியும் தானே. நம்ம வீட்டுல ஒரு பஞ்சாயத்துன்னு வந்துச்சுன்னா அப்புறம் ஊர்மக்கள் சொல்றதுக்கு நான் கட்டுப்படுற நிலைமை தான் வரும். அப்புறம் வந்து உனக்காக நான் எதுவும் பேசலைன்னு வருத்தப்பட்டுட்டு நிக்காத.. அவ்ளோ தான் சொல்லுவேன்” என்றவர் எழுந்து வெளியே சென்றிட,

 

“இப்போ எதுக்கு இவரு மூச்சு பிடிச்சு டயலாக் பேசிட்டு போறாரு. எவன் என்ன வத்தி வச்சான் தெரியலையே” என்று புலம்பியபடி தனதறைக்கு சென்றான் நாளை நிகழ போகும் விபரீதம் அறியாமல்.

 

சமையல் முடிந்து சாப்பிட அமர்ந்தனர் தேன்மொழியும் தமிழும். பிறகு மனது கேட்காமல்,

 

“அந்தாளு சாப்பாடு கேட்டாருல.. போய் கொடுத்துட்டு வாட்டி” என்றாள் தமிழ். 

 

“இது தான் என் தமிழக்கா. சரி நான் போய் அண்ணாக்கு கொடுத்துட்டு வரேன்” என்றவள் தமிழை செல்லம் கொஞ்சிவிட்டு சென்றாள். 

 

‘ரொம்ப தான் அண்ணா பாசம் பொத்துட்டு வருது இவளுக்கு.. பயபுள்ள எல்லாரையும் கவுத்து வச்சுருக்காரு’ என்று புலம்ப அவளின் மனமோ,

 

‘உன்னையும் தானே’ என்று கேட்க அதற்கு பதில் கூற விரும்பாதவள்,

 

‘மூடு நீ’ என்றபடி அதை அடக்கியவள் உணவு உண்ண ஆரம்பித்தாள்.

 

அங்கே சாப்பாடு கொண்டு வந்த தேன்மொழியைப் பார்த்தவன்,

 

“ஒருவழியா உன் அக்காக்கு எனக்கு சாப்பாடு கொடுக்க மனசு வந்துருச்சா.. நான் கூட லேட் ஆகுறதை பார்த்து கோபத்துல சாப்பாடு கொடுக்க மாட்டான்னு நினைச்சேன்” என்று சிரித்தபடி யாஷ் கேட்க,

 

“அக்கா ஒன்னும் அவ்ளோ மனசாட்சி இல்லாதவங்க இல்ல அண்ணா. சட்டு சட்டுன்னு பேசுவங்களே தவிர்த்து மனசுல ஏதும் வச்சுக்க மாட்டாங்க” என்றிட,

 

“நல்லாவே தெரியுமே” என்றான். 

 

“அப்புறம் போன இடத்துல நடந்த விஷயத்தை அக்கா சொன்னாங்க” என்று கூற யாஷோ,

 

‘எதை சொல்லிருப்பா? எதை சொல்லாம விட்டுருப்பான்னு தெரியலையே’ என்று யோசித்தவன்,

 

“என்ன மா சொல்ற?” என்றான்.

 

“நடிக்காதீங்க அண்ணா.  நீங்க அவங்கள காதலிக்குறதா அவங்க கிட்ட சொன்னது தான்” 

 

“ஓ அதுவா.. ஆமா அது உண்மை தானே. சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். பாப்போம். அவ என்ன பதில் சொல்றான்னு” 

 

“எனக்கு தெரிஞ்சு அக்காக்கு உங்களை பிடிக்கும்னு தான் நினைக்கிறேன்”

 

“எனக்கும் தெரியும் மா. அவளுக்கும் என்னை பிடிச்சுருக்குன்னு. ஆனா ஒத்துக்க மாட்டேங்குறா.. லெட்ஸ் சீ” என்றிட,

 

“சரிங்க அண்ணா.. அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் சிரித்தபடியே வெளியே வந்தாள். இவ்வாறு அவள் சிரித்தபடியே யாஷ் வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்த ஊர்க்காரர் ஒருவர்,

 

“வர வர ஊருக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது.. கலிகாலம்” என்று தலையிலடித்து புலம்பியபடி சென்றார். 

 

அவ்வாறே அந்நாள் கழிய இரவு உறங்கிக் கொண்டிருந்த தமிழுக்கு திடீரென முழிப்பு தட்டியது. மணியை பார்க்க நள்ளிரவு 3 மணி என்று காண்பித்தது. அதன் பிறகு உறக்கம் வராமல் போக காற்று வாங்கலாம் என்று எண்ணி வீட்டின் வெளியே வந்தாள் தமிழ். யாஷ் தங்கியிருக்கும் வீட்டில் வெளிச்சமாக தெரிய,

 

‘என்ன இந்த நேரத்துல இவர் லைட்ட போட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்காரு’ என்று யோசித்தபடி பார்க்க லொக்கு லொக்கென அவன் இருமல் சத்தம் கேட்டது. யோசனையோடே அவன் வீட்டிற்கு சென்று பார்த்தாள். யாஷோ இரண்டு போர்வைகள் போர்த்தியபடி நடுங்கியவாறு கட்டிலில் படுத்திருந்தான். 

 

“என்னாச்சு இவருக்கு” என்றபடி அவன் அருகே சென்று நெற்றியில் கைவைத்து பார்க்க அனலாக கொதித்தது. 

 

“அட கடவுளே.. என்ன இப்படி கொதிக்குது. தண்ணிக்குள்ள விழுந்ததுனால குளிர் காய்ச்சல் வந்துருச்சோ. சரி கஷாயம் வச்சு கொடுப்போம்” என்று எண்ணியபடி வீட்டிற்கு வர.. கஷாயம் செய்ய தேவையான மருந்து காலி ஆகியிருந்தது. 

 

“மருந்து காலி ஆனதை கூட கவனிக்கலையே. இந்த நடுராத்திரில எங்க போய் வாங்குவேன்” என்று புலம்பியவள் நேத்திரனுக்கு அழைப்பு விடுத்தாள். அலைபேசியின் சத்தத்தில் உறக்கத்தில் இருந்து விழித்தவன்,

 

‘தமிழ் எதுக்கு இந்த நேரத்துல கால் பண்றா’ என்று பதறியபடி அழைப்பை ஏற்றவன்,

 

“ஹே தமிழு.. என்ன புள்ள.. இந்த நேரத்தில் கால் பண்ணிருக்க.. என்னாச்சு.. ஏதும் பிரச்சனையா” என்றான். 

 

“அதெல்லாம் இல்ல டா.. கஷாய மருந்து வேணும் டா. உன் வீட்டுல இருந்தா கொண்டுட்டு வெளிய வா.. நான் வந்து வாங்கிக்குறேன்” என்றாள்.

 

“கஷாயமா.. ஏன் டி.. காய்ச்சலா உனக்கு”

 

“எனக்கு இல்ல டா”

 

“அப்போ.. தேனுக்கு இல்லனா மகிழுக்கு ஏதும் காய்ச்சலா” என்று மேலும் பதற,

 

“டேய் உன் ஆளுக்கும் உன் புள்ளைக்கும் ஒன்னும் இல்ல.. அவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க.. காய்ச்சல் வெள்ளைக்கார துறைக்கு” என்றாள். 

 

“யாஷ் அண்ணாக்கா.. அச்சோ.. சரி டி நான் கொண்டுட்டு வரேன்” என்று அழைப்பைத் துண்டித்தவன் வீட்டில் யாருமறியா வண்ணம் மருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

 

தமிழோ மெதுவாக தேன்மொழியை எழுப்பி,

 

“ஏட்டி தேனு.. அந்தாளு காய்ச்சல்ல நடுங்கிட்டு இருக்காரு.. நீ கொஞ்சம் அவர் வீட்டுல இரு.. நான் போய் நேத்ரன் கிட்ட கஷாயம் பொருள் வாங்கிட்டு கஷாயம் வச்சு எடுத்துட்டு வரேன்” என்றிட அவளும் யாஷ் வீட்டிற்கு சென்றாள். அப்பொழுது பண்ணையில் பால் கறக்க சென்ற பெண்ணொருத்தி கண்ணில் அக்காட்சி பட்டது. 

 

‘என்ன இது.. இந்த விதவை பொண்ணு.. இந்நேரத்தில எதுக்கு அந்த அசலூர் காரன் வீட்டுக்கு போகுது..’ என்று நினைத்தபடி பார்த்துவிட்டு சென்றார். 

 

அங்கு நேத்திரன் வெளியே வர தமிழ் அவன் வீட்டின் முன் வெளியே நின்றிருந்தாள். 

 

“நீ எதுக்கு புள்ள இங்க நிக்குற? நானே வந்து கொடுத்துருப்பேன்ல” என்று கடிந்துக் கொள்ள,

 

“பரவாயில்ல டா கொடு” என்றவள் வாங்கி விட்டு விறுவிறுவென சென்றாள். இதையும் ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவர் பார்த்துவிட்டார். 

 

“இந்நேரத்துல இதுங்க என்ன குசுகுசுன்னு பேசுதுங்க.. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நாளைக்கு ஐயா கிட்ட இதைப் பத்தி பேசிட வேண்டியது தான்.” என்று நினைத்துக் கொண்டார். 

 

ஒருவழியாக கஷாயம் வைத்து அதை அவனை குடிக்க செய்ய ஓரளவு நடுக்கம் மட்டுப்பட்டது. பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் யாஷ். தேனும் தமிழும் தங்களின் வீட்டிற்கு வந்தனர். தேனோ,

 

“அவருக்கு காய்ச்சல்னு உங்களுக்கு எப்படி கா தெரிஞ்சுது” என்று கேட்க அவளோ நடந்ததைக் கூறினாள்.

 

“பாருங்களேன். இது தான் டெலிபதின்னு சொல்வாங்க. காரணமேயில்லாம அவர் நடுங்கிட்டு இருக்குற நேரம் எதுக்கு நீங்க தூக்கத்துல இருந்து முழிக்கணும். எல்லாம் கடவுள் செட்டிங்” என்க அவளை முறைத்த தமிழோ,

 

“மூடிட்டு போய் தூங்குட்டி. வந்துட்டா விளக்கம் கொடுக்க” என்றாள் கடுப்பாக. பிறகு இருவரும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தனர் மறுநாள் பொழுது நிகழ்த்த போகும் விபரீதத்தால் சிலரது நிம்மதி பறிப்போக போவது அறியாமல்.

 

தொடரும்..


   
ReplyQuote

You cannot copy content of this page