All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 33

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 68
Topic starter  

நைட் லைஃப் - 33

தனது அறைக்கு வந்த ஆல்வின் சோர்வுடன் மெத்தையில் அமர்ந்தான். மூன்று மணி நேரத்திற்கு முன்பு அவன் செய்த வேலையை எண்ணி வெற்று புன்னகை அவன் இதழில் அரும்பியது. ஆருத்ராவையும் இனியையும் அவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியதுமே நேராக அவன் சென்ற இடம் சிதம்பரத்தின் அறை. இனி தேடிவந்த பச்சை நிற ஃபோனை எடுத்து பார்த்தான். பல்லை கடித்த ஆல்வின் ஃபோனை இருந்த இடத்திலே வைத்து விட்டு அவனின் கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினான். 

 

அங்கு மித்திரன் வீட்டில், இனி வருத்தத்துடன் அமர்ந்திருக்க, ஆருத்ரா ஆல்வின் கோவத்தை பற்றி விலாவரியாக கூறிக் கொண்டிருந்தாள். கண்களை உருட்டி அவன் இதை செய்தான் இப்படி கத்தினான் என கூறிக் கொண்டிருக்க, ராகவ் தலையில் கை வைத்து கேட்டுக் கொண்டிருந்தான். இடையில் ராகவ் போன் அடிக்க அப்பொழுது தான் ஆருத்ரா வாயை மூடினாள். “ஓகே சார்.. நாங்க, உடனே கிளம்புறோம்.. தேங்க்ஸ் சார் உங்க உதவிக்கு” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். மற்றவர்களின் கேள்வியான பார்வை தன் மீதிருப்பதை உணர்ந்த ராகவ், “நம்ம சீப் போன் பண்ணாரு, நம்ம கேட்ட மாதிரி அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டாராம், சோ உடனே டெல்லி கிளம்பனும்” என்றிட, உடனே சம்மதமாய் தலையசைத்தான் மித்திரன். இருவரும் தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆருத்ரா முகம் வாடியது. அந்த நேரம் வீட்டின் மணி சத்தம் ஒலிக்க, ஆருத்ரா எழுந்து சென்று கதவை திறந்தாள். வாசலில் ஆல்வின் நிற்க, அவனை கொஞ்சமும் எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியில் உறைந்தாள். அவனோ எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் நின்றான். இன்னும் சத்தம் வராமல் இருக்க மித்திரன் அறையை விட்டு வெளிவந்து வாசலை பார்த்ததும், “ஆல்வின்?” என கேள்வியாக அழைத்தான். இதில் உசார் ஆகிய ராகவ் உடனே துப்பாக்கியை எடுத்து அவன் முதுகிற்கு பின்னால் வைத்துக் கொண்டு வெளியே வந்தான். 

 

அவர்கள் இருவரையும் பார்த்த ஆல்வின், “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றிட, மித்திரன் லேசாக தலையை அசைத்தான். ஆல்வின் உள்ளே வந்தமர, ராகவும் மித்திரனும் அவனுக்கு எதிரே அமர்ந்தார்கள். ஆருத்ரா இனி உடன் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். “நான் நேரடியா விசயத்துக்கு வரேன்.. நீங்க சொல்லி தான் ஆருத்ராவும் இனியும் என்னோட வீட்டுக்குள்ள வந்திருக்காங்க.. என்ன எவிடன்ஸ் இருக்கு உங்க கிட்ட? எப்படி தேவையில்லாம என் ஃபேமிலி மேல நீங்க பழி போடலாம்?” என முடிந்தவரை கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். 

 

அதற்கு மித்திரன், “இங்க பாருங்க மிஸ்டர்.ஆல்வின் நாங்க எந்த ஒரு ஆதாரமும் இல்லாம இதை சொல்லலை. இந்த விஷயத்தை பண்ண சித்தார்த் வாக்குமூலம் கொடுத்து இருக்கான். அவன் சொன்னது போல தான் உங்க கம்பெனில இருந்து டேட்டா லீக் ஆகி இருக்கு, கூடவே உங்க சித்தப்பா சொல்லி தான் அவன் மத்தவங்க டேட்டா ஹேக் பண்ணி இருக்கான் உங்களுக்கே தெரியும் இத மட்டும் வச்சி நாங்க பழி போடமாட்டோம்ன்னு.. அவருக்கு எதிரா எங்க கிட்ட வேற சில ஆதாரம் இருக்கு.. ஆனா அதை எல்லாம் இப்போ உங்க கிட்ட சொல்ல முடியாது” என அழுத்தமாக கூறினான். அதில் ஒற்றை புருவத்தை உயர்த்தியவன், “இவ்ளோ இருக்குன்னு சொல்றிங்க ஏன் இன்னும் அர்ரெஸ்ட் பண்ணாம இருக்கீங்க? அதையும் பண்ண வேண்டியது தானே” என கேட்டான். 

 

“இதுல உங்க சித்தப்பாவும் ரோகன் மட்டும் இன்வால்வ் ஆகலை, அவங்களுக்கு மேல இருந்து இன்னொருத்தன் ஆர்டர் போடுறான் அவன் யாருன்னு நாங்க கண்டுபுடிக்கணும்” என பதிலளித்தான் ராகவ். அதில் உடனே ஆருத்ராவையும் இனியையும் நக்கலாக பார்த்த ஆல்வின், “சோ அதுக்காக தான் இவங்க ரெண்டு பேரை என்னோட வீட்டுக்கு அனுப்பி வச்சிங்க.. வாட் அ சீப் பிளான்” என வெறுப்புடன் அவர்களை பார்த்தபடியே கேட்டான். மித்திரனுக்கு கோவம் வர ராகவ் ஆழமான மூச்சுடன் கண்ணை மூடி திறந்தான். “உங்க பிரைவசிகுள்ள நுழைஞ்சது தப்பு தான்.. பட் எங்களுக்கு அந்த ஃபோன் நம்பர் வேணும்.. உங்க வீட்டுக்கு டைரக்ட்டா ரைட் வர முடியும்.. அதுக்கான எல்லா பவரும் எங்களுக்கு இருக்கு, ஆனா உடனே அவருக்கு பின்னால இருக்குற ஆளு உசார் ஆகிருவான், அதான் நாங்க ரைட் வரலை” என அமைதியான குரலில் கூறினான் ராகவ். 

 

அதில் எள்ளலாக நகைத்தான் ஆல்வின். அவனின் பார்வை இனி மீதே நிலைத்திருந்தது. மித்திரன் அவனையே துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனின் பார்வையை கவனித்தவன், “என்ன மிஸ்டர். மித்ரேஷ்வரன் உங்களுக்கு என் மேல சந்தேகம் இருக்கா?” என அழுத்தமாய் கேட்டபடி கால் மேல் கால் போட்டுக் கொண்டான். ஆருத்ராவும் இனியும் பதட்டத்துடன் நின்றார்கள். ஆல்வினை புரிந்துக் கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமாய் இருந்தது. அவனின் நடவடிக்கை எல்லாம் முற்றிலும் மாறி இருக்க, அவனுக்கும் இதில் சம்பந்தம் இருக்குமா என்ற குழப்பத்தில் இருந்தார்கள். ஆல்வின் அவனின் பாக்கெட்டில் கையை விட உடனே சுதாரித்த ராகவ் துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறி வைத்தான். அவன் செயலில் இனியும் ஆருத்ராவும் திகைத்தார்கள். 

 

ராகவ் செயலில் சிரித்த ஆல்வின் ஒரு துண்டு சீட்டை எடுத்து அவன் முன்னே இருக்கும் மேஜையில் வைத்தான். “ரிலாக்ஸ், நான் இதை கொடுக்க தான் வந்தேன்.. எதை தேடி என் வீட்டுக்கு அவங்க ரெண்டு போரையும் அனுப்பி வச்சிங்களோ அதையே உங்க கிட்ட கொடுத்துட்டு போக வந்தேன்” என்றிட, மித்திரன் பார்வை அந்த பேப்பரில் இருந்தது. சிதம்பரத்தின் ரகசிய செல் ஃபோனின் நம்பரை எடுத்து வந்திருக்கிறான். ராகவ் துப்பாக்கியை இறக்கியதும் தான் இனிக்கு நிம்மதியாக இருந்தது. அந்த துண்டு சீட்டை எடுத்து பார்த்த ராகவ், “உன்ன எப்படி நாங்க நம்புறது?” என சந்தேகத்துடன் கேட்டான். அதில் எழுந்த ஆல்வின், “நான் ஒன்னும் இங்க உங்க நம்பிக்கைய வாங்க வரல.. வீட்டுக்கு திருட்டுத்தனமா வந்தப்போவே நம்பிக்கையோட லட்சணம் என்னன்னு தெரிஞ்சிடுச்சு, சோ இந்த நம்பர் வச்சி என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க..” என்று கூறி இனியை அழுத்தமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஆல்வின். 

 

இனியால் அவனின் முகத்தையே பார்க்க முடியவில்லை. குற்றஉணர்வு அவளை கொன்று தின்ன, அழுகையை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்த நொடியே ஆல்வின் பின்னால் செல்ல வேண்டும் என்று தோன்றினாலும், அவளின் மூளை அந்த இடத்திலிருந்து நகர மறுத்தது. அவளின் எண்ணத்தை புரிந்துக் கொண்ட ஆருத்ரா அவளை தோளோடு அனைத்து ஆறுதல் கூறினாள். 

 

“ஆருத்ரா, இதுவரை நீ பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி இனிமேலும் இதுல தலையிடாத அது உனக்கும் உன் கூட இருக்குரவங்களுக்கும் நல்லது இல்ல.. ஆல்வின் கம்பெனில நீ வேலைய கன்டின்னு பண்றதும் பண்ணாததும் உன்னோட விருப்பம், நீயும் இனியும் ஜாக்கிரதையா இருங்க” என மித்திரன் சீரியசாக கூறிட அமைதியாய் தலையசைத்தாள். அவன் எதற்காக இப்படி சொல்கிறான் என்று புரிந்தவளுக்கு மனம் கனத்தது. இன்று அவன் டெல்லி கிளம்பினாள் முற்றிலும் இந்த பிரச்னைக்கு முடிவுகட்டாமல் திரும்ப வர மாட்டான். இனி மீண்டும் அவனை எப்பொழுது சிந்திப்போம் என்ற கவலை அவளை ஆட்கொண்டது. “ஆரு, உன் ஃப்ரெண்ட்ஸ் யாருக்காவது ப்ராப்ளம் ஆனா உடனே எங்களுக்கு தகவல் குடு.. ஆல்வின் நம்புறதை பத்தி எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. நிச்சயம் இவ்ளோ பெரிய விஷயம் ஆல்வின்க்கு தெரியாம நடக்காது சோ..” என தயக்கத்துடன் மித்திரன் இனிய பார்த்து கூற, வலி நிறைந்த புன்னகையை வெளியிட்டாள். பெண்ணவளின் மனம் அப்பட்டமாய் அவனுக்கு தெரிந்தது.

 

“டேக் கேர்” என ஆரு கூறி மித்திரன் நெற்றியில் இதழ்பதிக்க, கண்களை மூடி அவள் இதழ் தந்த வெப்பத்தை அனுபவித்தான் மித்திரன். அவன் மனதில் லேசாய் கலக்கம் உண்டானது. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பதுபோல் இத்தனை வருடமாய் தன் குடும்பத்தை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவன் வேலையில் வரும் தடைகளை துணிச்சலுடன் செய்து முடித்தான். ஆனால் இன்றோ சூழ்நிலை வேறு, அவனின் வேளையில் ஆருவையும் சிக்க வைத்துவிட்ட பயம் அவனுக்கு தடையாக இருந்தது. அவளை இங்கே விட்டு செல்லவே அவனுக்கு மனமில்லை. இனியுடன் ஆருத்ரா கிளம்புவதை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோளில் கை போட்ட ராகவ், “ஒன்னும் ஆகாது டா..” என்றிட பெரு மூச்சுடன் உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான். 

 

மெத்தையில் படுத்திருந்த ஆல்வின் நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான். பல விடையங்களை மனதில் யோசித்து குழப்பிக் கொண்டவன் உடனே அவனின் போனை எடுத்து, “இங்க எல்லாம் முடிஞ்சிது” என ஜேர்மன் மொழியில் யாருக்கோ செய்தி அனுப்பினான். 

 

மறு பக்கம் ரோகன் இன்று வர போகும் சரக்குகளை பார்க்க காரில் சென்றுக் கொண்டிருந்தான். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இரண்டு பெரிய கண்டைனர் லாரியில் வந்து கொண்டிருக்க, அதனை எல்லாம் அவர்கள் வழக்கமாய் பதுக்கி வைக்கும் இடத்தில் பத்திரப்படுத்த சென்றுக் கொண்டிருந்தான். கஸ்டம்சை சிதம்பரம் பார்த்துக் கொண்டதனால் மிகவும் நிம்மதியாக காரில் சென்றுக் கொண்டிருந்தான். தாய்லாந்தில் இருந்து விசாகபட்டினம் வழியாக சென்னை வந்து சேருகிறது அந்த போதை பொருட்கள். வாங் மூலமாக இந்த பொருட்கள் எல்லாம் வருகிறது என்பதனால் மிகவும் கவனமாக செய்துக் கொண்டிருந்தான். நூறு கோடி மதிப்புள்ள போதை மருந்துக்கள் வந்துக்கொண்டு இருக்க அதனை வைத்து எப்படி லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டபடியே சென்றான். போகும் வழியில் அவனின் ஃபோன் ஒலிக்க அதனை ஏற்று பேசியபடியே காரை ஓட்டினான்.

 

“சொல்லு சரக்கு அதுக்குள்ள வந்துருச்சா?” என கேட்க, “சார்.. வழியில போலீஸ் புடிச்சிட்டாங்க... மொத்த சரக்கும் ஆந்திரா பாடர்லையே மாட்டிக்கிச்சு..” என ஒருவன் பயத்துடன் கூற காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். “எப்படி மாட்டுச்சு? ஷி**.. எல்லாத்தையும் சொதப்புறதுக்கே இருக்கீங்கலா” என கோவமாய் கத்தியவன் அழைப்பை துண்டித்து உடனே அவன் அப்பாவிற்கு அழைத்தான். “dad.. சரக்கு மாட்டிக்கிச்சு.. அதுவும் ஆந்திரா பாடர்ல” என பதட்டத்துடன் கூறிட, ஏற்கனவே வாங்கிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதில் பதட்டத்தில் இருந்தவருக்கு இன்னும் பிபி அதிகரித்தது. தன் மகன் என்று கூட பார்க்காமல் தகாத வார்த்தையினால் திட்டியவர், உடனே டிபார்ட்மெண்ட்டில் அவருக்கு இருக்கும் ஆட்களிடம் விஷயத்தை கூறி சரி செய்ய பார்த்தார். பதட்டமாக அவர் அங்கு பேசிக் கொண்டிருக்கும் போதே, வாங் அழைக்க மீண்டும் பயத்துடன் அழைப்பை ஏற்றார். இம்முறை அவன் திட்டுவதற்கு முன்பே, “சாரி வாங்.. சரக்கு பத்தின விஷயம் எப்படி வெளிய தெரிஞ்சதுன்னு தெரியலை.. உடனே நான் டிபார்ட்மெண்ட்ல சொல்லி சரக்க ரிலிஸ் பண்ண சொல்றேன்” என பதட்டத்துடன் கூறினார். 

 

“சரக்குக்கு பத்தி எனக்கு கவலை இல்ல.. அடுத்து நடக்க போறது தான் முக்கியம்.. சரக்கை திருப்பி வாங்கலன்னா உனக்கு தான் நஷ்ட்டம்.. அதே போல இன்னிக்கு புடிப்பாங்கன்னு எனக்கு தெரியும்.. அடுத்து என்ன பண்ணனும்னு நான் நேர்ல சொல்றேன் நீ ரெண்டு நாள்ல சரக்கை உன் பக்கம் எடுத்துக்க.. கூடவே சித்தார்த்தை கொன்னுடு” என அமைதியான குரலில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். சிதம்பரத்திற்கே வாங் தான் இவ்வளவு அமைதியாய் பேசினானா என்று ஆச்சரியமாய் இருந்தது.

 

கருத்து திரி:

https://kavichandranovels.com/community/vsv-39-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-comments/

 


   
ReplyQuote

You cannot copy content of this page