All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நேசம் 12

 

VSV 22 – நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ
(@vsv22)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 12
Topic starter  

நேசம் 12

     மனநல ஆலோசனைக்காக தன் முன்னால் அமர்ந்திருக்கும் ஆணை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மருத்துவன் பிரகலாதன்.

     “சோ உங்களுக்கு மனநலப் பிரச்சனை இருக்குன்னு நீங்க சொல்றீங்க, சரியா சொல்லணும் னா ஓசிடி இருக்குன்னு நம்புறீங்க. அப்படித்தானே. சரி சொல்லுங்க எந்த டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணீங்க.” முதல் கேள்வியைக் கேட்டான்.

     “டாக்டர் கிட்ட எல்லாம் போகல சார். ஆனா என்னால் உணர முடிந்தது. எனக்குள்ள ஏதோ சரியில்லன்னு புரிஞ்சுக்கிட்டு கூகுளில் தேடிப் பார்த்தேன்.

     எனக்கு இருந்த அறிகுறிகளோட ஒப்பிட்டுப் பார்த்து எனக்கு ஓசிடி இருக்க அதிக வாய்ப்பிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.” எதிராளி சாதாரணமாகச் சொல்ல, தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது பிரகலாதனுக்கு.

     “சார், கூகுள் மாதிரியா இணையதளங்கள் எப்பவும் எதையும் மிகைப்படுத்தி தான் சொல்லும். உங்களுக்கு பெரிய பிரச்சனை ஏதாவது இருந்து, சின்னப் பிரச்சனை தான்னு அது சொல்லி, நீங்களும் பெருசு படுத்தாம விட்டு உங்களுக்கு எதுவும் ஆகி அந்தப் பழி அது மேல் விழுந்தா நல்லா இருக்காது தானே.

     இதுவே உங்களுக்கு சின்னப் பிரச்சனை இருக்கும் போதே, அது பெருசா இருக்கவும் வாய்ப்பிருக்கு சின்னதா இருக்கவும் வாய்ப்பிருக்குன்னு சொன்னா அது தப்பிச்சுக்கும் பாருங்க.” பொறுமையாகவே பதில் சொன்னான்.

     “அப்ப எனக்கு ஓசிடி இல்லன்னு சொல்றீங்களா? அதிக சுத்தம் பார்க்கிறது, எந்த செயலைச் செய்தாலும் அதில் நேர்த்தி எதிர்பார்க்கிறது. பசி, உறக்கம் இல்லாமல் இருக்கிறது. எப்பப் பார்த்தாலும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கிறது. இதெல்லாம் தானே ஓசிடி.” கேட்டபடி சற்றே அதிருப்தியுடன் பிரகலாதனைப் பார்த்தார் அந்த மனிதர். எப்படி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வாய் என்கிற மறைமுக மிரட்டல் இருந்தது அவர் வார்த்தைகளில்.

     “சார் முதலில் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. கவலை, உடல்சோர்வு, பசியின்மை, உறக்கமின்மை இதெல்லாம் எல்லோருக்கும் அடிக்கடி வருவது தான். இதெல்லாம் மனஅழுத்தத்தோட அறிகுறி என்பது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மை இது இருக்கிறவங்க எல்லோரும் மனநோயாளிகள் இல்லை என்பதும்.

     தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாம இருந்தா, வயிற்றில் அதிகப்படியான கொழுப்பு உண்டாகி பசியோட அளவு தன்னால் குறையும்.

     இப்ப இருக்கும் காலகட்டத்தில் சின்ன ஏமாற்றத்தை தாங்கிக்கிற மனப்பக்குவம் கூட யாருக்கும் இல்லை. மக்கள் மனசு முழுசா நஞ்சா மாறிக்கிட்டு வருது. நாம சுதந்திரமா இருக்க ஆசைப்படும் அதே அளவு, நம்மைச் சுத்தி இருக்கிறவங்க நம்ம பேச்சைக் கேட்டு நடக்கணும் னு ஆசைப்படுறோம்.

     நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன். ஆனா என்னைச் சுத்தி இருக்கும் எல்லோரும் எனக்கு அடிமையா இருக்கணும் னு நினைக்கிறோம். இந்த பாரபட்சம் எல்லா இடத்திலும், எல்லார்கிட்டேயும் சாத்தியம் ஆகாது இல்லையா?

     நினைச்சது நடக்காமப் போனா கோபம் வரும். கோபம் இணை நோயா எரிச்சலைக்கொண்டு வரும். அது இரண்டும் சேர்ந்தால் உறக்கத்தை பறிச்சுக்கும். உறக்கம் போனால் உற்றாகமும் போயிடும், சோகமா இருப்போம். இதுக்குக் காரணம் நம்மளோட வீண் சிந்தனைகளும் செயல்களுமா இல்லை மனநோயா?”

     “வேலை நேரம், சாப்பிடும் நேரம், உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சோகமா இருப்பதற்குப் பெயர் மனஅழுத்தம் இல்லை சார். எந்த வேலையும் செய்ய விடாம ஏதோ ஒரு சில நினைவுகள் நம்மைத் தொந்தரவு செய்வதையே வேலையாப் பார்க்கும் பாருங்க அதுதான் மனஅழுத்தம்.

     இது துவக்கம் னா, என்ன நினைப்புன்னு அடையாளம் காண முடியாம ஏதோ ஒன்னு எதுவும் செய்யவிடாம அழுத்தும். அது தான் மனஅழுத்தத்தோட அடுத்த நிலை.”

     “பசி எடுக்காம சாப்பிடாம இருக்கிறது வேற. கொலைப் பசி எடுக்கும் போது சாப்பிடப் பிடிக்காம இருக்கிறது வேற. பிடிச்ச சாப்பாட்டை ஏதோ அசிங்கத்தைப் பார்க்கிற மாதிரி தோணும் பாருங்க, அது தான் மனஅழுத்தத்தோட உச்சகட்டம்.”

     “மொபைலைப் பார்த்து கண் எரிச்சலாகி உறக்கம் வராமல் இருப்பது வேற, இமைகளுக்கு நடுவில் சில வேண்டத்தகாத நினைவுகள் நின்னு சித்தரவதை செய்வதால் உறக்கம் வராமல் இருப்பது வேற.

     தலைவலிக்கும், தலைக்குள் நண்டு கடிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் சாதாரண உணர்வற்ற நிலைக்கும், மனஅழுத்தத்திற்கும் உள்ள வித்தியாசம்.” பிரகலாதன் தன்போக்கில் சொல்லிக்கொண்டே போக எதிரே இருப்பவருக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

     “சுத்தமா இருக்கிறதும், நேர்த்தியா இருக்கிறதும் ஓசிடி இல்லை சார். அது அப்பா அம்மாவோட நல்ல வளர்ப்பு.

பொய் சொல்லாம இருந்தா பூமர், சொன்ன நேரத்துக்கு தயாராகி தனக்குன்னு ஒதுக்கப்பட்ட வேலையை சரியா செய்து கொடுத்தா அவன் மனநோயாளி, பார்த்து பார்த்து செலவு பண்ணா வாழத்தெரியாதவன்னு சொல்லி ஒதுக்கி வைச்சுட்டு, சோம்பேறித்தனத்தையும், பொறுப்பில்லாத் தனத்தையும், ஊதாரித்தனத்தையும் நார்மலைஸ் பண்ற மக்களால் வந்த ஓவர் கற்பனை தான் இதெல்லாம்.”

     “நிஜத்தில் ஓசிடிங்கிறது என்ன தெரியுமா? அது எத்தனை கொடூரமான மனவியாதின்னு தெரியுமா?

     மனசைத் திருப்திப் படுத்த முடியாத கொடூர நிலைக்கு  தான் ஓசிடின்னு பெயர்.

     ஒரு சின்ன எக்ஸாம்பிள் சொல்றேன் கேளுங்க. வேலை முடிந்து வீட்டுக்குப் போன பிறகு கம்பெனி கம்ப்யூட்டர் லாக் அவுட் பண்ணோமான்னு யோசனை பல நேரம் பலருக்கும் வரும். எதையும் சாதாரணமா எடுத்தக்கும் நபர் ஆன் பண்ணி இருந்தாக் கூட பெருசா என்ன பிரச்சனை வந்திடப் போகுதுன்னு கடந்து போயிடுவாங்க. நேர்த்தியா இருக்கிறவங்க முடிந்தவரை அடுத்த நாளில் இருந்து கிளம்புவதற்கு முன்னாடி ஒருமுறை செக் பண்ணிக்கனும் னு நினைப்பாங்க.

     ஆனா ஓசிடி இருக்கிறவங்களோட நிலை எப்படி இருக்கும் தெரியுமா? வீட்டுக்கு வந்த நொடியில் இருந்து அந்த நினைப்பு உங்களை முழுசா ஆக்கிரமிச்சுக்கும். உங்க மனைவி குழந்தைங்க கூட பேசும் போதும், சாப்பிடும் போதும், குளிக்கும் போதும் கம்ப்யூட்டர் லாக்அவுட் பண்ணோமா இல்லையாங்கிற கேள்வி உங்களைத் துரத்திக்கிட்டே இருக்கும். அந்த நினைப்பை உங்களால் ஒதுக்கி வைக்கவே முடியாது.

     அந்த நினைப்பு உங்களை அடுத்த வேலை செய்ய விடாது.  உறங்க விடாது. நீங்களே உங்களைக் கட்டாயப்படுத்தி திசைதிருப்ப நினைச்சாலும் அந்த நினைப்பு உங்களை விட்டு போகாது. நடு இராத்திரி பேசாம இப்ப ஆபிஸ் கிளம்பி போய் பார்த்துட்டு வந்திடுவோமான்னு தோணும்.

     அப்படி செஞ்சா நிம்மதி கிடைக்கும், உறக்கம் வரும். மாறா செய்யாமப் போனா அந்த ஒன்றைத் தவிர வேற எதுவும் உங்க மூளையில் இருக்காது. இது ரொம்ப ரொம்ப சின்ன உதாரணம். இதை விட கொடூரமானது நிறைய இருக்கு.” பிரகலாதன் சொல்லி முடிக்க, “ஐயோ இந்த நோய் எனக்கு இருக்கக்கூடாது.” என அவசரமாக தன் குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தார் அந்த மனிதர்.

     “உங்களுக்கு இருக்கிறது அட்டென்ஷன் சீக்கிங். உங்க அம்மா, காதலி இல்ல மனைவிகிட்ட உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொல்லி அவங்க கவனத்தை உங்க பக்கம் திருப்ப உங்களுக்கு ஆசை.

     அவங்க உங்களைப் பத்தி அதிகமா யோசிக்க, உங்களுக்காக செயல்பட, உங்களோட இணக்கமா இருக்க உங்களுக்குள்ள இருக்கும் ஏக்கம். சின்னப்பிள்ளைங்க அம்மாவோட அரவணைப்புக்காக காய்ச்சல் னு சொல்வாங்களே அந்த மாதிரி தான்.

     யாரை உங்களுக்கு அதிகம் பிடிக்குமோ அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க. அவங்களைக் கூட்டிக்கிட்டு ஒரு குடும்ப சுற்றுலா போயிட்டு வாங்க எல்லாம் சரியாகிடும்.” என்று முடித்து அவரை அனுப்பி வைத்துவிட்டு பெருமூச்சுவிட்டான்.

     எத்தனைக்கு எத்தனை மனநலத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வளர்ந்திருக்கிறதோ அதே அளவு தவறான புரிந்துணர்வும் வளர்ந்திருக்கிறது என்று நினைத்தவனுக்கு மலைப்பாக இருந்தது.

     தன்னைப் பார்க்க வந்த மகள் குறிஞ்சியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் மல்லிகா. ராமன் உடன் வாழும் போது மகளைப் பார்த்தவர் தானே, அதனால் தானோ என்னவோ மகள் இன்னமும் கண்ணனுடன் வாழ்க்கையைத் துவங்கவில்லை என்பதைச் சரியாகக் கண்டுகொண்டிருந்தார்.

     “ஒரு மாசம் ஆகப்போகுது குறிஞ்சி. அந்தப் பையன் உன்கிட்ட எதையும் எதிர்பார்க்கலையா? இல்ல நீ முடியாதுன்னு சொல்லிட்டியா?” கவலையாகக் கேட்டார்.

     திடீரென எழுப்பப்பட்ட கேள்வியால் திகைத்தவள் சில நொடியில் தன்னைச் சமாளித்து, “நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் தான் உங்களால் நிம்மதியா இருக்க முடியும் னு சொன்னீங்க. அதுக்காக நான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். அத்தோட உங்க கடமை முடிஞ்சிடுச்சு. இனி என் வாழ்க்கையை எப்ப எப்படிக் கொண்டு போறதுன்னு நான் பார்த்துக்கிறேன்.” வெடுக்கென்று பதில் சொன்னாள்.

     “இப்படிப் பேசினா எப்படி டி. அந்த தம்பியையும் நினைக்கணும் இல்லையா? கல்யாணக் கனவுகள் எல்லோருக்கும் இருக்கும் டி. அதைக் கலைக்க உனக்கு அதிகாரம் கிடையாது.” என்றார்.

     “என்னம்மா கண்ணன் மேல உங்களுக்குத் திடீர் கரிசனம்.” குறிஞ்சி கேட்க மல்லிகா அமைதியாக இருந்தார். “உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? கண்ணனைப் பத்தி என்கிட்ட பேசி எனக்குள்ள குற்ற உணர்ச்சியை உருவாக்கி என்னை அவரை நோக்கி தள்ள நினைக்கிறீங்க.

     ஏன் மா இப்படி இருக்கீங்க. நான் ஒன்னும் திரௌபதி இல்ல. ஒரு வருஷம் ஒருத்தரோட வாழ்ந்துட்டு அடுத்த வருஷம் இன்னொருத்தர்கிட்ட போகும் போது தீயில் இறங்கி ஒரு வருஷ ஞாபகத்தை மொத்தமா அழிச்சுட்டு புத்தம் புதுசா தயாராக.

     நான் சாதாரண மனுஷி. என் மனசும் அதில் இருக்கிற ரணமும் கொஞ்சமாச்சும் ஆறணும், மாறணும் அம்மா. நான் கண்ணனுக்காக யோசிச்சு தான் பல விஷயங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுக்காக உடனடியா அவர் மடியில் போய் நான் விழுந்தா அது கண்டிப்பா அவரை ஏமாத்துற மாதிரி தான் இருக்கும். நீங்க எல்லோரும் நினைக்கிற மாதிரி மனசை மாத்திக்கிறது ஒன்னும் அத்தனை சுலபம் இல்லம்மா.” என்க, கண்கள் கலங்கியது மல்லிகாவிற்கு.

     “உலகத்தில் பிறந்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிம்மா. நிறம், வடிவம், உயரம் ஆரம்பிச்சு ரசனை, பயம், வலி வரை வேற வேற எல்லைகள் இருக்கும்.

     எல்லோருக்கும் ஒரே அளவு பசிக்கிறது இல்லை, ஒரே காயமா இருந்தாலும் அதைத் தாங்கிக்கும் திறன் வேற வேறையா தான் இருக்கும். அப்படி இருக்கும் போது மனசும் அதில் வரும் வலியும் மட்டும் எப்படிம்மா ஒரே மாதிரியா இருக்கும். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மா.

     ராமனோட நினைப்பு பேப்பரில் எழுதின எழுத்து இல்லை ரப்பர் வைச்சு அழிக்க, கல்வெட்டில் செதுக்கின எழுத்து. ஏற்கனவே செதுக்கின எழுத்து மேல இன்னொரு செய்தியை வடிக்கணும் னா அதுக்கு சரியான காலம் வரை காத்திருக்கத்தான் வேணும். இல்லாமப் போனா அந்தக் கல்வெட்டு எதற்கும் பிரயோஜனம் இல்லாத சாதாரண கல்லா போயிடும்.” என்றாள்.

     “நரசிம்மனையும் பார்க்கணும் தானே டி. அன்னைக்கு அந்தப் பையன் அப்படி ஒரு வேண்டுதல் வைச்சிருக்கான்னு தெரிய வந்தப்ப உன்னோட அம்மாவா சந்தோஷமா இருந்துச்சு. இப்ப அவனோட அம்மாவா வருத்தமா இருக்கு. என் பையன் கல்யாணம் முடிந்தும் சந்நியாசியா இருக்கானேன்னு.” மல்லிகா வருத்தம் கொள்ள,

     “அவன் சந்தோஷமா இல்ல தான். ஆனா இப்போதைக்கு இந்த விஷயத்தால் மட்டும் தான் அவன் கொஞ்சம் நிம்மதியா இருக்கான். இருக்கட்டும், எல்லாம் சரியாக காலம் எடுக்கும். சும்மா சும்மா கண்டதையும் யோசிச்சு நீங்களும் வருத்தப்பட்டு அவனையும் வருத்தப்படுத்தாதீங்க.

     அவன் இடத்தில் வேற ஒருத்தன் இருந்திருந்தா பாரியா நீங்களான்னு வரும் போது சாதாரணமா பாரியைத் தேர்ந்தெடுத்துட்டு போய் இருப்பான். இந்தப் பைத்தியக்காரன் உங்களைத் தேர்ந்தெடுத்தான் கிடந்து சாகுறான்.” மனதை மறைக்காமல் சொல்லிவிட்டு, இவ்வளவு பேச்சுவார்த்தை நடக்கும் வரை எதுவும் பேசாமல் அருகில் நின்றிருந்த தந்தையை ஒருபார்வை பார்த்ததோடு கண்ணனை அழைத்துக்கொண்டு கிளம்பினாள் குறிஞ்சி.

     “உங்க அம்மா நல்லவங்களா கெட்டவங்களா குறிஞ்சி. கல்யாணமாகி வந்த ஒரே வாரத்தில் செம்பா வீட்டை விட்டு வெளியே போகும் அளவு சண்டை போட்டு இருக்காங்க. இப்ப பார்த்தா அவளுக்காக உன்கிட்ட பேசுறாங்க.” என்ன முயன்றும் முடியாமல் கேட்டே விட்டான் கண்ணன்.

     “ஒட்டுக்கேட்கிற வியாதி எல்லாம் இருக்கா உங்களுக்கு.” என்றவள் பெருமூச்சுவிட்டு, “எங்க அம்மா என்ன வித்தியாசமா இருந்திடப் போறாங்க. அவங்க ஒரு டிபிகல் இந்தியன் அம்மா. பொண்ணு மேல தான் அதிகமா பாசம் வைப்பாங்க.

     ஆனா பையன் எல்லோரையும் விட அவங்க மேல அதிகம் பாசம் வைக்கணும், அவங்க வாயால் சொல்வதை தலையால் சாதிச்சுக் கொடுக்கணும் னு எதிர்பார்ப்பாங்க. என்ன தான் அவங்க அவனைக் கரிச்சு கொட்டினாலும் அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு அவங்க காலைச் சுத்தி வரணும் னு எதிர்பார்ப்பாங்க.

     இப்ப அவங்க பேசினது உங்களுக்காகவோ உங்க தங்கச்சிக்காவோ இல்லை. எனக்காகவும் என் அண்ணனுக்காகவும் தான்.” சலிப்பாகச் சொன்னாள்.

     “நம்ம விஷயத்தைப் பத்தி உன் அம்மாகிட்ட நீ சொன்னது எல்லாம் உண்மை தானே.” என்க, அவளிடம் பேச்சில்லை.

     “உன்னோட சந்தோஷத்துக்காக தான் எல்லோரும் உன்னைக் கட்டாயப்படுத்தினாங்க. அவங்க மேல வருத்தத்தை வளர்த்துக்காத.” என்ன சொல்கிறோம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரியாமல் சொன்னான் கண்ணன்.

     “கட்டாயத்தின் பேரில் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் நல்லா தான் இருக்கேன். ஆனா அதே கட்டாயத்தின் பேரில் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நீங்க நல்லாவா இருக்கீங்க.” என்க, “எனக்கென்ன குறை நல்லா இருக்கேன்.” என்றான் கண்ணன்.

     “என்ன நல்லா இருக்கீங்க. எனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியும் தானே. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாலும் எனக்கு வலிப்பு வந்திடும். அப்புறம் எப்படி.” என்றவள் சட்டென அமைதியானாள்.

     “இயற்கை, ஜனனத்தை எதுக்காக பொண்ணுங்களுக்கு கொடுத்துச்சு தெரியுமா? வலியைத் தாங்குவதற்கு உடல்வலிமை அளவுக்கு மனவலிமையும் ரொம்ப அவசியம். பொண்ணுங்களுக்கு இயற்கையிலேயே மன தைரியம் அதிகம். உனக்கும் அது இருக்கு.

     இரண்டு மரத்துக்கு நடுவில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் நடக்கும் போது கீழே விழமாட்டோம் என்கிற நம்பிக்கை இருக்கும் வரை அந்த நபர் கீழேவிழ மாட்டார். அது வே கீழே விழுந்திடுவோமோங்கிற பயம் வந்த அடுத்த நொடி கீழே விழுந்திடுவார். உன்விஷயமும் அப்படித்தான்.” விளக்கம் கொடுத்தான்.  

     “எனக்கு உங்க மேல கோபமாவும் இருக்கு. உங்களைப் பார்க்கும் போது கஷ்டமாவும் இருக்கு. நான் என்ன செய்யணும் னு நீங்களே சொல்லுங்க.” என்றாள்.

     “முன்னாடி நடந்ததும், இப்ப நடந்ததும் விதின்னு புரிஞ்சுக்கிட்டு அதில் இருந்து வெளியே வந்து, உன் உடம்பை நல்லபடியா பார்த்துக்கோ அது போதும். மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.

     “ராமன் விஷயம் விதி தான். ஆனா நம்ம கல்யாணம் விதி இல்ல சதி.” என்றாள்.

     “சரிம்மா, சதியாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா அந்த சதியில் கூட உனக்கு சம்பந்தம் இல்லை.” என்க, “அது உண்மை தான்.” என்று ஒப்புக்கொண்டாள் அவள்.

     “உன்கூட காலத்தை ஓட்டுறது கொஞ்சம் கஷ்டம் தான் போல.” என்றவன் அவளோடு வீடு வந்து சேர்ந்தான்.

     அவனை வரவேற்பது போல் பாரியால் தெருவில் தூக்கி எறியப்பட்ட கதைப்புத்தகம் ஒன்று கண்ணன் காலடியில் வந்து விழுந்தது.

     “என்ன பாரி உங்க அண்ணனுக்கு வரவேற்பு ரொம்ப பலமா இருக்கு.” குறிஞ்சி கேட்டதும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பாரி.

     காலடியில் விழுந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தான் கண்ணன். அது அவன் வாங்கிப் பரிசளித்த புத்தகம். கதைப் பைத்தியமான பாரிக்குப் பிடித்த எழுத்தாளர் ரோஜாவுடையது. வீட்டில் நரசிம்மன் பிரச்சனை வெடிப்பதற்கு சில நாள்கள் முன்பு வாங்கிக்கொடுத்திருந்த புத்தம் புது புத்தகம். தன் மீது இருக்கும் கோபத்தில் அதை தெருவில் வீசுகிறாள் போல என்கிற நினைப்புடன் பெருமூச்சுவிட்டு வீட்டிற்குள் வந்தவன் அதை வரவேற்பறை மேஜையில் வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

     “குறிஞ்சி உங்க அம்மா என்ன சொன்னாங்க?” செம்பருத்தி கேட்க, “அவங்க உங்களுக்கு அத்தை அண்ணி. உறவு முறை சொல்லிக் கூப்பிடுங்க. அப்பவாச்சும் அந்த வீட்டோட உங்களுக்கு மனசு ஒட்டுதான்னு பார்க்கலாம்.” சுடச்சுட பதில் வந்தது குறிஞ்சியிடம் இருந்து.

     “என்ன குறிஞ்சி பதில் இது. அவ என்ன கேட்கிறா நீ என்ன பதில் சொல்ற?” தாமரை வர, “அம்மாவுக்கு அண்ணன் தனியா போறதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பெரியவங்கன்னா கூட குறைய ஏதாவது பேசத்தான் செய்வாங்க. அதைக் கூட தாங்கிக்க முடியலன்னா எதுக்காக என் பையன் தான் வேணும் னு அடம்பிடிச்சு, இன்னொருத்தியோட கண்ணீரில் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.

     இப்படி என்கூட சண்டை போட்டு தனியா போறதுக்கு என் பையன் பாரியையே கல்யாணம் பண்ணி இருக்கலாமேன்னு கேட்டாங்க.” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

     பின்னாலே வந்த கண்ணன் ஏதோ கேட்க முன்வர, “இருங்க, என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். நான் சொன்ன வார்த்தைகளில் எந்த தப்பும் இல்லை. இப்பவாச்சும் அவங்களுக்கு அவங்க செய்த தப்பு புரியட்டும்.

     பாரியைப் பத்தி எப்படியான விமர்சனத்தை முன் வைச்சாங்க. எங்க அம்மாவை சமாளிக்க முடிந்த ஒரே ஆள் அவங்க தான்னு என்னமா பேசினாங்க. இப்ப வேற மாதிரி நடந்துக்கிறாங்க. தப்பு தானே இது.

     எங்க அண்ணன் அம்மாவுக்கும் செம்பருத்திக்கும் ஒத்துப்போகும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் பல கஷ்டத்துக்கு நடுவில் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். இப்ப இப்படி மாத்தி நடந்துக்கிட்டா அவன் எந்தளவு வேதனைப்படுவான். எல்லாம் புரிஞ்சுக்கட்டும். அது தான் அவங்களுக்கு நல்லது.” என்க, கண்ணனுக்கும் நரசிம்மனை நினைத்து பாவமாகத் தான் இருந்தது.

     அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் ஓட்டப்பயிற்சிக்கு சென்ற கண்ணன் கால்சட்டையைப் பிடித்து இழுத்தது தெருநாய் ஒன்று.

     அது அந்த தெருவில் வசிக்கும் நாய் தான் என்றாலும் என்றும் அவனை இப்படித் தொந்தரவு செய்ததில்லை. இன்று என்ன வந்தது என்கிற யோசனையோடு அவன் நிற்க, நாயோ அவன் பேண்ட்டை வாயால் கவ்வி அவனைத் தன்னோடு வருமாறு அழைத்தது.

     எதற்கோ உதவி கேட்கிறது என்கிற நினைப்போடு சென்ற கண்ணன் சத்தியமாக அங்கே மயங்கி விழுந்து கிடக்கும் பாரியை எதிர்பார்க்கவில்லை. அவள் அருகில் பாதுகாப்பிற்காக இன்னொரு நாய் இருந்தது. அவசரமாக தங்கையை திருப்பிப் போட்டு பார்க்க எந்தக் காயமும் இல்லை.

     படபடத்த நெஞ்சிற்கு சற்றே நிம்மதி கிடைக்க, இத்தனை காலையில் தங்கை எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாள் அவளுக்கு அத்தனை அவசரமாக என்ன தேவைப்பட்டு இருக்கும் என்கிற யோசனையோடு தங்கையைத் தூக்கிக்கொண்டு வீடு வந்தான். சரியாக உணவு எடுத்துக்கொள்ளாததால் வந்த மயக்கம் என்றே நினைத்தான்.

     “என்னடா ஆச்சு.” தாமரை கேட்க, “ரோட்டில் மயங்கி விழுந்து கிடந்தா மா. என்னாச்சுன்னு தெரியல.” கண்ணன் சொல்லிக்கொண்டு இருக்கும் போது நரசிம்மன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

     மனிதாபிமானத்தோடு அவன் செய்த அந்த செயல் பிடிக்காமல் போக, “தேவையில்லாம கண்டதையும் யோசிச்சு சரியா சாப்பிடாம இருந்தா இப்படித்தான் ஆகும்.” முணுமுணுத்தாள் செம்பருத்தி. அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

     பாரியை அவள் அறையில் படுக்க வைத்து அவளுக்கு என்ன தேவையாக இருக்கும் என யூகித்து குறிஞ்சியிடம் இருந்து வாங்கி அவள் அறையில் வைத்தான் கண்ணன்.

     அதன் பிறகு தான் தங்கை அறையின் மாற்றம் கண்ணில் பட்டது அவனுக்கு. எப்பொழுதோ சாப்பிட்டு மீதம் வைத்த சாப்பாடு கெட்டுப் போய் நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. சுத்தம் செய்யப்படாத தரையும், அதில் ஆங்காங்கே இருக்கும் அழுக்கும், பரவலாகக் காணப்பட்ட தலைமுடியும், கலைந்து கிடக்கும் துணிமணியும். கிழித்து கசக்கி எறியப்பட்ட காகிதங்களும் என மோசமாக இருந்தது அறை. தங்கையின் மன வேதனை புரிந்தது. ஆனால் என்ன செய்து அவளைச் சரிசெய்வது என்று சத்தியமாகப் புரியவில்லை கண்ணனுக்கு.

     அவள் தலைமுடியை அவன் கோதிக் கொடுக்க கணவனைத் தொடர்ந்து அறைக்குள் வந்த குறிஞ்சி அறையின் நிலையைக் கண்டு உச்சுக்கொட்டியவளாக சுத்தம் செய்யத் துவங்கினாள்.

     “ஏன் இதையெல்லாம் நீ செய்யுற?” என்றபடி கண்ணன் அவள் கையில் இருந்து துடைப்பத்தை வாங்கப்பார்க்க, “என்னால் செய்ய முடியும். பொத்தி பொத்தி வைச்சு என்னை பலவீனமாக்கிடாதீங்க.” என்க அதற்குப் பிறகு அவன் என்ன பேசுவான்.

     பாரியின் பெயருக்கு பார்சல் வந்திருப்பதாக சொல்ல வந்த நரசிம்மனும் அறை இருக்கும் நிலையைக் கண்டு கொண்டான்.

     கண்ணன் வந்து பார்க்க ஐயாயிரம் ரூபாய் பில் வந்திருந்தது. அப்படி என்ன வாங்கி இருப்பாள் என்கிற முணுமுணுப்போடு அதைப் பிரித்துப் பார்த்தார் தாமரை. அத்தனையும் கதைப் புத்தகங்கள்.

     “இந்தப் பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? இத்தனை ரூபாய் கொடுத்து இந்த கதை புத்தகங்களை வாங்கி இருக்கா?” தாமரை கேட்க, “இப்ப இதனால் இந்த வீடு நஷ்டத்தில் மூழ்கப் போகுதா என்ன? பேசாம இருங்களேன். அவ நேரம் போகாம படிக்க வாங்கி இருப்பா. இதனால் ஆச்சும் அவ மனசுக்கு நிம்மதி கிடைக்கட்டும்.” என்ற குறிஞ்சி மறக்காமல் அத்தனை புத்தகங்களையும் பாரியின் அறையில் கொண்டு போய் வைத்தாள்.

     நரசிம்மனுக்கு மட்டும் இது வித்தியாசமாக இருந்தது. பாரி இது போன்ற விஷயங்களில் பெரும் பணத்தை செலவளிக்க விரும்ப மாட்டாள். இப்போது செய்திருப்பது வித்தியாசமாக இருந்தாலும் குறிஞ்சி சொல்வது போல் மனஆறுதலுக்காக வாங்கி இருப்பாள் என்று நினைத்து கடந்தான். அப்போதே அவளிடம் ஏதோ சரியில்லை என்று கவனித்திருந்தால் அடுத்த நாள் நடக்க இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டிருக்கும்.

     அடுத்த நாள் இரவு நேரம் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நரசிம்மன் நாய்களின் தொடர்ச்சியான சத்தத்தினால் கண்விழித்தான். காரணம் இன்றி இதயம் படபடப்பாக உணர்ந்தது. அவனுக்கு அருகே உறங்கிக்கொண்டிருந்த செம்பருத்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தால் தலையைப் பிடித்தபடி வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் கண்ணன்.

     “என்னாச்சு மாப்பிள்ளை” நரசிம்மன் வந்து அவன் தோள்தொட, “என்னென்னே தெரியல. என்னவோ மனசு பதறுது. கை, கால் எல்லாம் நடுங்கிது.” என்ற கண்ணன் தன் கரத்தை நீட்ட நிஜமாகவே அது நடுங்கிக்கொண்டு தான் இருந்தது.

     “எனக்கும் என்னவோ ஒரே தொந்தரவா தான் இருந்துச்சு. கூடவே நாய் குலைக்கும் சத்தம் வேற.” என்றபடி வீட்டு கதவைத் திறந்த நரசிம்மன் வெளியே மெயின்கேட் திறந்திருப்பதைக் கண்டு துணுக்குற்று, கதவுக்குப் பின்னால் இருக்கும் கிரில் கேட்டைப் பார்த்தான். வழக்கமாக சாவி வைத்துப் பூட்டப்படும் கதவு இப்போது வெறுமென இருந்தது.

     “ஏதோ சரியில்லை கண்ணன். வீடு திறந்து கிடக்கிது. நீங்க போய் பாரியைப் பாருங்க. நான் அத்தை, மாமாவைப் பார்க்கிறேன்.” என்ற நரசிம்மன் விஷ்ணு, தாமரை அறைக்கதவை திறந்து பார்க்க அவர்கள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் பாரியின் அறை வெறுமையாக இருந்தது.

     “சிம்மன் பாரியைக் காணும்.” கண்ணன் பதற, “அவளுக்கு இருட்டுன்னா பயம், கூடவே நாய் னா ரொம்ப பயம். அவ எதுக்காக இந்த நேரம் வெளியே போகணும்.” என்று பதறினான் நரசிம்மன்.

     முதல்முறை கதவு அருகே தங்கை தலையில் அடிபட்ட நிலையில் படுத்திருந்தது. முந்தைய நாள் நடுரோட்டில் மயங்கிக் கிடந்தது. இன்று அவள் காணாமல் போய் இருப்பது எல்லாவற்றையும் வைத்து, “சிம்மன் பாரி தூக்கத்தில் நடந்து போய் இருக்கான்னு நினைக்கிறேன்.” நெஞ்சில் கரம் வைத்து சொன்னான் கண்ணன்.

     “என்ன சொல்றீங்க. ஆனா பாரிக்கு அப்படியான பிரச்சனை இருந்தது இல்லையே.” நரசிம்மனுக்கு பயம் நெஞ்சை நிறைத்தது.

     “இப்ப அவ இருக்கும் நிலைக்கு என்ன வேண்ணா வந்திருக்கலாம். நாம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஆபத்து. வாங்க போகலாம்.” என்றபடி கண்ணன் வெளியே ஓட அவனைத் தொடர்ந்து சென்றான் நரசிம்மன்.

     இருவரும் இரண்டு வேறு திசைகளில் செல்ல, நரசிம்மன் சென்ற திசையில் தெருநாய்கள் ஒரு முட்டுசந்தை பார்த்து குலைத்துக்கொண்டிருந்தது. என்னவோ சரியில்லை என்பதை யூகித்து நரசிம்மன் அங்கே செல்ல அவன் நினைத்தது தான் உண்மை என்பது போல் பாரி அங்கு தான் இருந்தாள். ஆனால் அவன் பார்க்க கூடாத கோலத்தில்.

     முதல் நாள் தூக்கத்தில் தன்னை மறந்த நிலையில் பாரி  நடந்து வரும் போதே அவளைக் கவனித்திருந்த ஒருவன் அவளைத் தன் இஷ்டத்திற்கு வளைக்க நினைத்து இழுத்துச் செல்ல முயல நான்கு தெருநாய்கள் சேர்ந்து அவனை விரட்டி அடித்ததோடு காலை வரை பாரிக்கு காவலாக இருந்தது.

     இன்றும் அவள் வரக்கூடும் என்று நினைத்து துணைக்கு தன் நண்பர்கள் இருவரை அழைத்து வந்திருந்தான் அந்தக் கொடூரன். மற்ற இருவரும் நாய்களைப் பார்த்துக்கொள்ள, முதலாமவன் பாரியிடம் நெருங்கிக்கொண்டிருந்தான்.

     அதைக் கண்ட நொடி கோபத்தில் நிஜமான நரசிம்மனாகவே மாறிப்போனான் நரசிம்மன். பாரியின் அருகே நின்றிருந்தவனை ஒற்றை உதையில் தள்ளி விழ வைத்தவன், ஒரே நேரத்தில் தனியாளாக மூவருடன் மோதினான். சத்தம் கேட்டு கண்ணனும் வந்துவிட இதற்கு மேல் முடியாது என்று ஓடிவிட்டனர் அவர்கள் மூவரும்.

     “மகனே உங்க ஒவ்வொருத்தர் முகமும் நினைவு இருக்குடா. உங்களை சும்மா விட்டா என் பெயர் நரசிம்மனே இல்லை.” என்று சொல்லிக்கொண்ட நரசிம்மன் கண்ணனுக்குக் காத்திருக்காமல் பாரியின் உடையைச் சரிசெய்து அவளைக் கைகளில் தூக்கினான்.

     கண்ணன் வர, தன் இப்போதைய நிலையை நொந்தவனாக பாரியை கண்ணன் கைக்கு மாற்றப் பார்க்க, “அவளுக்கு நல்ல நண்பனா நீங்க தொடர்வதில் எனக்கு என்னைக்கும் ஆட்சேபனை இருந்தது இல்லை. வாங்க.” என்றபடி கண்ணன் முன் நடக்க பாரியோடு நரசிம்மன் பின்னே நடந்தான்.

  

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page