All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நேசம் 11

 

VSV 22 – நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ
(@vsv22)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 12
Topic starter  

நேசம் 11

     நரசிம்மனின் மன்னிப்பைத் தாங்கி வந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததில் இருந்து என்னவோ போல் இருந்தது பாரிக்கு.

     நரசிம்மனுக்குத் தவறு செய்யும் பழக்கம் இல்லை. அப்படியே அறியாமல் எதையாவது செய்துவிட்டால் கூட விஷயம் இதுதான் என்று சொல்லிவிட்டு அதன்பிறகே மன்னிப்புக் கேட்பான். இப்போது விவரம் எதுவும் இல்லாத மொட்டை மன்னிப்பு அவளுக்கு நெஞ்சில் நெருப்பள்ளிப் போட்டது.

     எத்தனையோ முறை அழைத்துப் பார்த்துவிட்டாள். அவளுடைய லயனை அவளால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவன், அவள் தொடர்பு கொள்ளும் எல்லையைத் தாண்டி மொத்தமாகச் சென்றுவிட்டான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

     ரோஜாப் பூ மாலையை கைகளில் தாங்கியபடி அக்கம் பக்கத்தினர் அறியாமல் வீட்டினுள் வந்தனர் கண்ணன், நரசிம்மன், செம்பருத்தி, மல்லிகா, வெங்கடாச்சலம் அனைவரும்.

     வரவேற்பறையில் அமர்ந்து செல்போனைப் பார்த்தபடி நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த பாரியைப் பார்த்ததும் நடப்பதை தாங்கிக்கொள்ளும் வலிமையை அவளுக்குக் கொடு கடவுளே என்று மனதார வேண்டிக்கொண்டான் நரசிம்மன்.

     மகனின் வண்டிச்சத்தம் கேட்டு வெளியே வந்த தாமரை மகள் கைகளில் மாலையுடன் நரசிம்மன் அருகில் நிற்பது கண்டு, “செம்பா என்னடி இது?” என்க, அந்த சத்தத்தில் தான் திரும்பிப் பார்த்தாள் பாரிஜாதம்.

     அவள் கண்கள் நரசிம்மனைத் தான் முதலில் பார்த்தது. அவனைத் தவிர அவள் யாரையுமே பார்க்கவில்லை. அவன் நின்றிருந்த கோலம் பாரியின் மனதில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது.

     வைகை ஆற்றில் துள்ளி விளையாடும் மீனைப் போல், அவளைப் பார்க்கும் பொழுதுகளில் எல்லாம் உற்றாகமாய் துடிக்கும் அவன் கண்கள் இன்று உயிரற்ற மீனாய் அசையாமல் இருந்தது. அவள் விரலோடு விரல் கோர்க்கத் துடிக்கும் நீளமான விரல்கள் பத்தும், இன்று ஒன்றோடு ஒன்று கோர்த்திருந்தது.

     இவள் புன்னகைக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் அவன் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் புன்னகையைக் காணவில்லை. பரந்து விரிந்த தோள்கள் இன்று குறுகிப் போய் இருந்தது. ராஜதோரணையில் நடக்கும் கால்கள் இன்று நடைபயிலும் குழந்தையைப் போல் பின்னிப் பிணைந்து கொண்டிருக்க, கண்டிப்பாக ஏதோ பிரளயம் தான் என்று புரிந்தது. என்ன பிரச்சனையோ வெளியே காட்டிக்கொள்ளாமல் எத்தனை துடிக்கிறானோ என்னும் நினைப்பில் அவனை நோக்கிச் செல்ல முயன்றவளின் பாதையை மறித்தாள் செம்பருத்தி.

     “என்ன வேணும் உனக்கு. எனக்கும் என் லயனுக்கும் நடுவில் வர முயற்சி பண்ணாத செம்பா. இல்லன்னா என்னோட இன்னொரு பக்கத்தை நீ பார்க்க வேண்டியது இருக்கும்.” எச்சரித்தாள் பாரிஜாதம்.

     “நரசிம்மன் இப்ப உன்னோட லயன் இல்லை பாரி. இனி காலத்துக்கும் அவர் உன்னோட லயன் ஆகவும் முடியாது.” என்று செம்பருத்தி நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட, விரும்பத் தகாத ஒன்று நடந்து விட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட பாரியின் நெஞ்சம் பதறி துடிக்கத் துவங்கியது.

     விஷயத்தை ஓரளவு புரிந்துகொண்ட விஷ்ணு, “என்ன காரியம் செம்பா பண்ணி வைச்சிருக்க.” மூத்தமகளிடம் கோபமாகக் கேட்டார்.

     “நானும், நரசிம்மனும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் அப்பா. நம்ம வீட்டில் சூழ்நிலை சரியில்லை. அதனால் தான் உங்ககிட்ட சொல்ல முடியல. ஆனா தாலி கட்டி கல்யாணம் உங்க எல்லோர் கண் முன்னாடியும் தான்.” தேங்காய் உடைப்பதைப் போல் நேரடியாகவே பதில் சொல்லிவிட்டாள் அவள்.

     நெஞ்சில் கரம் வைத்தபடி இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள் பாரி. மகாவிஷ்ணு மகளைத் தாங்கிப் பிடிக்க, அவள் பார்வை மொத்தமும் நரசிம்மன் மீது தான். இல்லை என்று சொல்லிவிடு என்பது போலான பார்வை.

     “நீங்க சொன்னா தான் அவ நம்புவா போல இருக்கு, சொல்லுங்க சிம்மன்.” செம்பருத்தி சொல்ல, இப்போது பாரியை நிமிர்ந்து பார்த்தான் சிம்மன்.

     அதுவே சொன்னது தமக்கை சொன்னது உண்மை தான் என்பதை. உள்ளுக்குள் சுக்கல் சுக்கலாக நொருங்கிப் போனாள் பாரி. கால்கள் நிற்க மாட்டாமல் துவளத் துவங்கியது. விஷ்ணுவின் பிடி மட்டும் இல்லாமல் போனால் அப்படியே நிலத்தில் விழுந்திருப்பாள்.

     “பாரி” என்று நரசிம்மன் ஆரம்பிக்க, “ஏன்” என்று ஒற்றைக் கேள்வியிலும், வெறுப்பான பார்வையிலும் அவனைத் தள்ளி நிறுத்தினாள். அவன் கோரிய மன்னிப்புக்கான அர்த்தம் இப்போது விளங்கியது.

     கண்களை அழுந்த மூடி தான் ஏமாற்றப்பட்டதை, இல்லை தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை ஏற்றுக்கொண்டாள்.

     “என்னால் இதுக்கு மேலும் போராட முடியல பாரி. என் தங்கச்சி பெயரைச் சொல்லி சதா என்னைப் பிடுங்கித் திங்கிற அம்மா. நீ காதலிக்கிற பொண்ணுக்கும், உன் அம்மாவுக்கும் ஒத்துப் போகாது. இந்தக் காதல் சரிவராதுன்னு சொல்லி என்னை அவரோட பிடியில் வைக்கப் பார்த்த என்னோட அப்பா, எப்ப பார் சீலிங்கை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கும் என்னோட தங்கச்சின்னு மூணு பேருக்கும் சேர்த்து தான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.” என்றான்.

     “அப்ப நான் யார்? என்னோட சேர்த்து உன் வீட்டில் மொத்தம் ஐந்து பேர் னு சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம்.” வெறி வந்தவள் போல் கேட்டாள்.

     “உன்னோட எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை. ஆனா உன்கிட்ட வைக்கிறதுக்கு என்கிட்ட ஒரு வேண்டுகோள் இருக்கு. தயவுசெய்து என்னை மறந்திடு.” என்க, பொங்கி வந்த கோபத்தில் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள் பாரி.

     செம்பா அவளைத் தடுக்க முற்பட சாமி வந்தவள் போல் வேகமாய் தள்ளி விட்டதில் வெகுதூரம் சென்றுவிழுந்தாள் மூத்தவள். அடுத்ததாக கண்ணன் தங்கையின் அருகே வரப் பார்க்க, அவனை ஒருபார்வை தான் பார்த்தாள் பாரி. அந்தப் பார்வையில் அப்படியே நின்றுவிட்டான் கண்ணன்.

     நரசிம்மனை கண்ணோடு கண் பார்த்து, “நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். நீயா தானே தேடி வந்து என் மனசைக் கலைச்ச. நீ தானே வந்து காதலிக்கிறேன்னு சொன்ன. இப்ப எதுக்காக என்னை ஏமாத்தின. எதுக்காக நம்ப வைச்சு கழுத்தை அறுத்த.” கேட்டவாறு சட்டையைப் பிடித்து உலுக்கியதில் மேல் இரு சட்டைப் பட்டன்கள் சிதறி விழுந்தது.

     “என் குடும்பம் தான் எனக்கு ஓரவஞ்சனை பார்க்கிதுன்னா நீயும் என்னைக் கைவிட்டுட்ட இல்ல. உன் அம்மாவுக்காக பார்த்த, உன் தங்கச்சிக்காக பார்த்த, உன் அப்பாவுக்காக பார்த்த, ஏன் எனக்காக பார்க்கல, நமக்காக பார்க்கல. நம்ம காதலுக்காக பார்க்கல. நான் உன்னை எந்தளவு காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால் இப்படி செய்ய முடிந்தது. உன்னால் எப்படி இப்படி செய்ய முடிந்தது.” கேட்டுக்கொண்டே அவன் கரத்தில் இருந்த மாலையைப் பிடுங்கி அதைக்கொண்டே அவன் இரண்டு புஜத்திலும் அவனை அடிக்கத் துவங்கினாள்.

     தடுக்க வந்த அத்தனை பேரையும் தாண்டி கையில் இருந்த மலர்மாலை நார்நாராகப் போகும் வரை நரசிம்மனை அடித்த பின்னால் தான் ஓய்ந்தாள் பாரி.

     அத்தனை அழுகை வந்தது. ஆனால் அழத் தோன்றவில்லை. மதுரை எரிந்த பின்னால் கோபத் தீ அணையாமல், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் மதுரை மாட வீதிகளில் நடந்து சென்ற கண்ணகியைப் போல் இருந்தது அவள் தோற்றம்.

     “உன்னோட கோபம் எல்லாம் போச்சா. இதோட எல்லாத்தையும் மறந்திடுறது தான் உனக்கு நல்லது பாரி. சிம்மன் இப்ப என்னோட புருஷன். அதை எவ்வளவு சீக்கிரம் ஏத்துக்கிறியோ அத்தனை எல்லோருக்கும் நல்லது.” என்றபடி செம்பா தங்கையின் அருகே வர, உடம்பின் அத்தனை செல்லும் கோபத்தை சுமப்பது போன்ற தோற்றத்தில் செங்கொழுந்தாய் சிவந்திருந்தவள் ஒருபார்வை தான் பார்த்தாள். செம்பாவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆடிப்போனது.

     கண்ணன் நரசிம்மனிடம் வந்து அவன் தலை தோள்பட்டையில் இருக்கும் ரோஜா இதழ்களைத் தள்ளிவிடத் துவங்க இந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் கையில் அகப்பட்ட செல்போனை எடுத்து எறிய அது கண்ணனின் முகத்தில் சரியாக விழுந்தது.

     அதில் தாமரைக்கு கோபம் வந்தது. “பாரி கொஞ்ச நேரம் அமைதியா இரு. இப்ப என்ன நடந்ததுன்னு இந்த ஆட்டம் ஆடுற.” என்க,

     “இதுக்கு மேல என்ன நடக்கணும். உன் மூத்த பொண்ணு என் வாழ்க்கையை என்கிட்ட இருந்து தட்டிப் பறிச்சுக்கிட்டா. யாரோ எதுவோ செஞ்சதுக்கு என்னை மொத்தமா பழிவாங்கிட்டா. அதுக்கு உன்னோட அருமைப் பையனும் உடைந்தை.” என்றவளுக்கு உள்ளிருந்து எழும் கோபத்தை அடக்க முடியாமல் பெருமூச்சு வந்தது.

     “நான் ஒன்னும் உன்னோட வாழ்க்கையைத் தட்டிப் பறிக்கல பாரி. உனக்கு செட் ஆகாத வாழ்க்கையில் இருந்து உன்னைக் காப்பாத்த தான் செஞ்சிருக்கேன்.

     நரசிம்மனும், நீயும் நல்லா வாழ முடியாது. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாம, என்னடா வாழ்க்கை இதுன்னு கொஞ்ச நாளிலே அவரை வெறுத்திருப்ப.

     அவருக்கும் இது புரிஞ்சிருக்கு. அதனால் தான் நான் எடுத்துச் சொன்னதும் வேற எதையும் யோசிக்காம என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சார்.

     நீயும் இதைப் புரிஞ்சுக்கிற வழியைப் பார். சில மாசம் ஒன்னா சுத்தினா அதெல்லாம் காதல் ஆகாது. அதுக்குப் பெயர்  வயசுக்கோளாறு. எல்லாத்தையும் தூக்கிப் போடு. நரசிம்மன் எப்படி நாலு நாளில் உன்னை மொத்தமா மறந்தாரோ அதே மாதிரி கூட நாலு நாள் போனா தன்னால் நீயும் மறந்திடுவ.

     இன்னொரு நல்ல மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ ஆரம்பிச்சா எல்லாம் சரியாகிப் போகும். அப்புறம் இந்த அக்கா சொன்னது எத்தனை உண்மைன்னு உனக்குப் புரியவரும்.” என்க, நிலத்தடித் தட்டுகள் வேகமாக அசைந்ததில் உண்டான பெருவெடிப்பு போல் பாரியின் மனது உடைந்து உள்ளிருந்து கோபம் வெளிப்பட செம்பருத்தியின் தலைமுடியைப் பிடித்து நரசிம்மனின் அருகே அழைத்து வந்தாள்.

     “சொல்லுங்க, நான் உங்க மேல் வைச்சிருந்தது காதல் இல்லையா? என்னோட காதல் வயசுக்கோளாறா? உங்களுக்காக நான் எதையும் செய்ய மாட்டேனா? உங்க விருப்பத்துக்கு உங்க உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க மாட்டேனா? என்மேல, என் காதல் மேல உங்களுக்கு அத்தனை தான் நம்பிக்கையா?” என்க, “ஆமான்னு சொல்லுடா” என்றார் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மல்லிகா.

     பாரி நரசிம்மனையே பார்த்தாள்.  இமைகள் என்னும் அணையைத் தாண்டி கண்ணீர் ஊற்று வடியத் துடித்துக்கொண்டிருந்தது. காதில் விழுந்த செம்பாவின் கசப்பான வார்த்தைகளோடு நரசிம்மனின் அமைதியும் சேர்த்து அவளை என்னவோ செய்தது.

     யாரும் இல்லாமல் அண்டத்தில் ஒற்றை ஆளாய் இருப்பது போல் தவிப்பாய் இருந்தது. உடல் எங்கும் ஊசி குத்துவது போல் வலித்தது. தலை கனத்து, கண்கள் இருண்டது. தலை சுற்றி விழப்போகும் போது சரியாக தாமரை வந்து மகளைப் பிடித்தார்.

     “அம்மா“ என்று ஆறுதலுக்காக அவர் தோள் சாய நினைத்த மகளை இழுத்துப் பிடித்து தள்ளி நிற்க வைத்தவர், “இத்தனை பேர் இருக்கோமேங்கிற பயம் இல்லாம என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க நீ. விடு செம்பாவோட முடியை.” என்று தாய் சொன்ன பிறகு தான் இன்னொரு கையால் செம்பாவின் தலைமுடியைப் பிடித்து வைத்திருக்கிறோம் என்று புரிந்து அதை விடுவித்தாள் பாரி.

     அதன்பிறகாவது தாய் தனக்கு ஆறுதல் சொல்வார் என்று நினைத்திருக்க, “சின்னப்பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு. நான் வந்து கூப்பிடும் வரை இந்த ரூமை விட்டு நீ எங்கேயும் வெளியே வரக்கூடாது.” என்றபடி அவள் புஜத்தைப்பிடித்து இழுத்து வந்து அறைக்குள் தள்ளி கதவை வெளியே பூட்டினார் தாமரை.

     அந்த நிகழ்வோடு அந்த வீட்டில் இருந்த அனைவருக்காகவும் மனதில் இருந்த உணர்வுகளை மொத்தமாக துடைத்து எறிந்துவிட்டு தன் மனதை நிரந்தரமாகப் பூட்டிக்கொண்டாள் பாரி.

     இது அறியாத தாமரை ஆசை மகள் செம்பருத்திக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று பூரிப்படைந்து மல்லிகா மற்றும் வெங்கடாச்சலத்தை வரவேற்று அமர வைத்து குடிப்பதற்கு கொண்டு வந்து கொடுத்தார். கண்கள் நிறைந்த வெறுப்புடன் விஷ்ணு அதைப் பார்த்துக்கொண்டிருக்க, கையாலகாத தனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன். நரசிம்மன் குனிந்த தலை நிமிரவில்லை.

     பாரியின் பத்ரகாளித் தோற்றம் கண் முன் வந்து போனது. “இந்த கோபத்தை அப்படியே பிடிச்சு வைச்சுக்கோ பாரி. என் முகத்தில் கூட முழிக்காத. பெத்தவங்களே ஆனாலும் மத்தவங்களுக்காக உன்னை மாதிரி ஒருத்தியை வேண்டாம் னு சொன்ன நான் உனக்கு வேண்டாம். அடுத்தவங்களுக்காக கையாலகாத தனமா நிக்கிற இந்த நரசிம்மன் உனக்கு வேண்டாம்.

     உன்னை மட்டுமே உலகமா நினைக்கிற ஒருத்தர், யாருக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்காத ஒருத்தரோட நீ சந்தோஷமா வாழு. என்னை மன்னிக்க வேண்டாம், ஆனா மறந்திடு டா. இந்த காயத்தோடு சேர்த்து வடுவையும் இருந்த இடம் தெரியாம அழிக்க கடவுள் உனக்குன்னு ஒருத்தரை அனுப்பட்டும்.” என்று மனதோடு நினைத்துக்கொண்டான்.

     தேநீரோடு ஆரம்பித்த பேச்சுவார்த்தை இரண்டு ஜோடிகளுக்கும் கல்யாணத் தேதி குறித்த பின்னால் தான் முடிந்தது. தாய், தந்தையோடு சேர்த்து நரசிம்மனும் கிளம்பிப் போக பொத்தென்று சோபாவில் அமர்ந்தான் கண்ணன்.

     அன்பே உருவான தங்கைக்கு இத்தனை கோபம் வரும் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. அந்த வீட்டில் செம்பருத்தி பாரிக்கு இடையே தாய் தாமரை வேறுபாடு பார்ப்பது அவனுக்கும் தெரியும். பாரிக்கு அதில் வருத்தம் இருந்தாலும் அதைக் கொண்டு தாமரையை அவள் என்றும் குறை சொன்னது கிடையாது. எல்லோரையும் புரிந்துகொண்டு பொறுத்துப் போவாள். அவளுக்கு இப்படி நடக்கவேண்டுமா? அதுவும் அவள் சொந்தக் குடும்பத்தினரால் நடக்க வேண்டுமா?

     இப்போது அவள் நிலை என்ன? இனி அவளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதில் தான் அவன் கவனம் மொத்தமும் இருந்தது. செம்பருத்தியும், தாமரையும் கல்யாணப் புடவை நகை என்று பேச ஆரம்பித்து விட பாரியின் அறைக்கதவையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் மகாவிஷ்ணு.

     மூத்த மகளிடம் பேசிக்கொண்டே இருந்த தாமரை எதேச்சையாக கணவனைப் பார்க்க அவர் பார்வை செல்லும் திசையில் தாமரையின் பார்வையும் சென்றது.

     “ஒரு நாள் அவளை அப்படியே விடும்மா. பசியெடுத்ததும் தன்னால் சமாதானம் ஆகிடுவா.” சர்வ சாதாரணமாகச் சொன்ன செம்பருத்தி தாயை முழுதாகத் தன் திருமணப்பேச்சுவார்த்தையில் இணைத்துக்கொண்டாள்.

     இருவரையும் முறைத்துவிட்டு மகாவிஷ்ணு எழுந்து சென்று பாரியின் கதவைத்திறக்க, அவர் உள்ளே செல்வதற்கு முன்னால் வேகமாக உள்பக்கம் கதவைச் சாற்றி இருந்தாள் பாரி.

     “பாரி அப்பா டா. என் மேல் உனக்கு என்னடா கோவம். அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். யார் போனாலும் அப்பா உன்கூட இருப்பேன். மத்தவங்களாலோ இல்லை உன்னாலோ கூட உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அன்னைக்கு தான் இந்த அப்பாவோட உடம்பில் உயிர் இருக்கும் கடைசி நாளா இருக்கும்.” மகாவிஷ்ணு சொல்ல, எதிர்பக்கம் எந்த பதிலும் இல்லை.

     தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணனின் நெஞ்சம் பதறியது. அவள் இருக்கும் நிலைக்கு தவறான முடிவெடுத்துவிட்டால் என்கிற பயம் வர வேகமாக எழுந்து வந்தவன் பாரியின் அறைக்கதவைத் தட்டினான்.

     செம்பருத்திக்கும் ஒரு நொடிஇதயம் நின்று தான் துடித்தது. தங்கை எதுவும் செய்துகொண்டால் காலத்திற்கும் தன்னால் நிம்மதியாக வாழ முடியாதே என்னும் பயத்தில் அவளும் வேகமாக அந்த அறைக்கு அருகில் வந்தாள்.

     மகளை அறைக்குள் தள்ளி கதவடைத்த தன் மடத்தனத்தை நொந்தபடி தாமரையும் சென்றார். யார் மன்றாடலுக்கும் பாரி செவி சாய்க்கவில்லை.

     கண்ணன் கதவை உடைத்துவிடலாம் என்று சொல்ல, “யாராச்சும் வந்து உங்க கேவலமான முகத்தை என்கிட்ட காட்டினீங்க நான் நிஜமாவே ஏதாவது பண்ணிப்பேன்.” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் பாரி.

     சற்றே நிம்மதியாகவும் அவள் பிரயோகித்த வார்த்தைகளில் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்க அனைவரும் கலைந்து சென்றனர். மகாவிஷ்ணு மட்டும் மகளின் அறைக்கு வெளியே அமர்ந்து ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார்.

     இது நடக்கையில் காலை நேரம் பதினொன்று. இரவு உணவுக்காக கண்ணன் சென்று பாரியை அழைத்துப் பார்த்தான். உள்ளிருப்புப் போராட்டத்தை பாரி கைவிடுவதாக இல்லை. மகாவிஷ்ணு அறைக்குள் சென்றவர் படுக்கையை விட்டு எழுந்திரிக்கவே இல்லை. என்னென்னவோ பேசிப் பார்த்த தாமரை இறுதியில் தனியாகத் தான் சாப்பிட வந்தார்.

     தன் கனவு நிறைவேறிய ஆனந்தத்தில் செம்பருத்திக்கு அதிகம் பசித்தது. ஆனால் தந்தை, தங்கை இருவரும் சாப்பிடாமல் இருக்க அவளாலும் வயிறு நிறைய சாப்பிட முடியவில்லை. ஆனால் கண்ணன் சாப்பிட்டான். இனி இந்த வீட்டில் அவனுக்கு வேலை அதிகம் என்று புரிந்தது. அதற்காக அவன் உடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டு எப்போதையும் விட கூடுதலாகச் சாப்பிட்டான்.

     அன்றைய நாள் கடந்து அடுத்த நாள் மதிய நேரம் வந்த பின்பு கூட பாரி அறையில் இருந்து வெளியே வரவில்லை. கண்ணனும், விஷ்ணுவும் எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தார்கள். பாரி சற்றும் மனம் இறங்கவில்லை.

     மாலை நேரம் வந்தது. இதற்கு மேலும் பொறுக்க வேண்டாம். கதவை உடைத்துவிடலாம் என்று கண்ணன் முயற்சி செய்த போது, “கொஞ்சம் நிறுத்துங்க.” என்றபடி வந்தாள் முல்லை. அவள் பின்னால் தொங்கிய தலையோடு நரசிம்மன்.

     “நீங்க எல்லாம் மனுஷங்க தானா? ஒரு சின்னப் பொண்ணை என்ன பாடு படுத்தி இருக்கீங்க.” என்க, “முல்லை இது எங்க குடும்ப விஷயம்.” என்றாள் செம்பருத்தி.

     “வாங்க பிரின்சஸ் டையானா. நீயெல்லாம் என்னடி மனுஷி. உன்னை மாதிரி கன்னிங் பெர்சனை இந்த உலகத்திலேயே நான் பார்த்தது கிடையாது. கோவர்தனை அந்த பாடு படுத்தி, இல்லாத பொல்லாத பழி எல்லாம் சொல்லி அவரை விட்டு வந்த.

     இப்ப கூடப்பிறந்த தங்கச்சிக்கு துரோகம் பண்ணி, அவ ஆசைப்பட்ட வாழ்க்கையைப் பறிச்சாச்சு. சபாஷ், பீச்சில் கண்ணகி சிலையை எடுத்துட்டு உன் சிலையைத் தான் வைக்கணும்.

     என்ன பொண்ணு நீ. நீயெல்லாம் விளங்குவன்னு நினைக்கிற. ச்சீ.” என்க, நரசிம்மன் முன்னால் பேச்சு வாங்கியதில் அசிங்கமாக இருந்தது செம்பருத்திக்கு.

     தாமரையைப் பார்த்தவள், “நீங்க எல்லாம் என்ன அம்மா. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க ஒரு கண்ணில் பூவையும் இன்னொரு கண்ணில் பூநாகத்தையும் வைச்சுட்டீங்க. கைகேயி மாதிரி ஒரு அம்மா யாருக்கும் கிடைக்கக் கூடாதுன்னு அவங்க பெத்த மகன் பரதனே சாபம் கொடுத்தாராம். அது உண்மைன்னா என் பாரியைக் கஷ்டப்படுத்தின பாவத்துக்கு இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கடவுள் உங்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கவே கூடாது. ஏங்கி ஏங்கி சாவுங்க.” என்றாள்.

     அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் விட்டால் என்னவெல்லாம் பேசி இருப்பாளோ முல்லை என்கிற பலகீனமாக குரலில் பாரி அழைத்ததும் மற்ற எல்லோரையும் விட்டு முல்லையின் பார்வை தோழி வசம் சென்றது.

     கலைந்த தலைமுடி, வீங்கிய முகம், சோர்வான சிவந்த கண்கள், தளர்வான உடல், நிற்க கூட முடியாமல் விழப் பார்த்தவளை முல்லை தாங்கிப் பிடிக்க, தங்கள் பெண்ணை அப்படிப் பார்த்த வீட்டினர் அனைவருக்கும் பகீர் என்றது.

     சற்று நேரம் முன்னர் எதேச்சையாக முல்லை அழைக்க, “என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போ முல்லை.” என்று கதறி அழுதிருந்தாள் பாரி.

     அதன்பிறகு முல்லைக்கு அவள் வீட்டில் நேரம் எப்படிப் போகும். வேகமாக இங்கே வரும் வழியில் நரசிம்மனைப் பார்த்தாள். செம்பருத்தி நரசிம்மனைத் திருமணத்திற்காக கேட்டது முல்லைக்கும் தெரியும் என்பதால் இதைக்கொண்டு காதலர்கள் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை போல என்று நினைத்து தான் நரசிம்மனிடம் பேசினாள்.

     ஆனால் அவன் சொன்ன செய்தியும், பாரியைப் பார்த்துக்கொள் என்கிற வாசகமும் சேர்ந்து கொதித்த முல்லை அந்தக் கொதிப்பு அனைத்தையும் ஒன்று சேர்த்து இங்கே இறக்கி வைத்தாள்.

     “எனக்கு யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம். என்னைக் கூட்டிட்டு போயிடு முல்லை.” பாரி அழ, முல்லைக்கும் அழுகை வந்துவிட்டது.

     அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “சரிதான், யாரும் வேண்டாம். இவங்க யாருக்கும் உனக்கு சொந்தமா இருக்க தகுதியில்லை. நான் இருக்கேன் உனக்கு. நான் பார்த்துக்கிறேன் உன்னை.” என்ற முல்லை தோழியை கைத்தாங்கலாய் அழைத்து வந்து தான் வந்த வாடகை வாகனத்தில் ஏற்றினாள்.

     பாரியின் கோலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்த அவள் சொந்தங்களால் இது எதையும் தடுக்க முடியவில்லை. மீண்டும் வீட்டிற்குள் வந்த முல்லை தோழியின் அறைக்குள் இருந்து அத்தியாவசியமான சில பொருள்களை எல்லாம் எடுத்தாள். முல்லை அடிக்கடி இங்கு வந்து செல்பவள் ஆதலால் பாரியின் பொருள்கள் எங்கெங்கு இருக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

     முல்லை யாரையும் பார்க்காமல் செல்லப்பார்க்க, “பாரி கொஞ்ச நாள் உன்கூட இருக்கட்டும். அதுக்குப் பிறகு நான் வந்து கூட்டிட்டு போறேன்.” வேகமாகச் சொன்னான் கண்ணன்.

     “ஏன் இருக்கிற குறை உயிரையும் பிடுங்கிப் போடவா? அப்பா, அண்ணன், அக்கா, அம்மான்னு சொல்லிக்கிட்டு யாராவது என் பாரியைத் தேடி வாங்க. உங்களைக் கொல்லக் கூட தயங்க மாட்டேன்.

     இன்னையோட உங்களுக்கும் பாரிக்கும் இருந்த சொந்தம் எல்லாம் மொத்தமா முடிஞ்சு போச்சு. உங்களை மாதிரி பாரபட்ச பிசாசுகள் யாரும் என் பாரிக்குத் தேவையில்லை. அவளை ராணி மாதிரி பார்த்துக்க என்னால் முடியும்.” என்ற முல்லை தோழியைத் தன்னோடு அழைத்து வந்து சொன்னது போல் ராணி மாதிரிப் பார்த்துக்கொண்டாள்.

     வேளா வேளைக்கு உணவு கொடுப்பது, வெளியே அழைத்துச் செல்வது, வேலைக்கென்று அழைத்துச் சென்று ஏனோ தானோவென அவள் செய்து வைக்கும் வேலைகள் அனைத்தையும் சரிசெய்து கொடுப்பது என முல்லைக்கு பாரியால் வேலைகள் குவிந்தது. ஆனால் அது எதற்கும் சலிக்கவில்லை அவள்.

     நாள் போகப் போக பாரியின் கவனம் அனைத்திலும் குறைந்துகொண்டே வந்தது. எப்போது பார் அமைதியாக எதையோ யோசித்த வண்ணம் இருப்பாள். முல்லை கேட்டாள் ஒன்றும் இல்லை என்பாள். இரண்டு முறை சொல்லிப் பார்த்த நிர்வாகம் மூன்றாம் முறை பாரியை வேலையை விட்டுத் தூக்கிவிட்டது. இதில் முல்லையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

     நாளும் பொழுதும் முல்லையின் வீட்டிற்குள் பதுங்கிக்கிடந்தாள் பாரி. முல்லை வீட்டில் இருக்கும் நேரத்தில் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள். வேலைகள் அனைத்திலும் அவளை பங்குகொள்ள வைப்பாள். அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வாள். அதனால் கொஞ்மேனும் நன்றாக இருப்பவள் முல்லை வேலைக்கு சென்ற பிறகான தனிமையில் மொத்தமாக தனக்குள் ஒடுங்கிப் போனாள்.

     இது எதுவும் தெரியாமல் பாரி நன்றாக இருப்பாள் என்கிற நம்பிக்கையில் இங்கே திருமண வேலைகள் வேகவேகமாக நடந்தது. விஷயம் தெரிய வந்த போது குறிஞ்சி அத்தனை சண்டை பிடித்தாள்.

     “உனக்காக தான் நான் இத்தனை செஞ்சிருக்கேன். அது எதையும் வீணா ஆக்கிடாதே.” என்கிற தமையன் நரசிம்மனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைதியாக திருமணத்தை ஏற்றுக்கொண்டாள்.

     இவர்களின் திருமணம் முடிந்து, முல்லைக்காக செண்பகம் வந்து பேசி அதனால் பாரி மீண்டும் அவள் இல்லம் வந்தது, அவளின் காதலனாக வளைய வந்த தான் இப்போது அவள் கண் முன்னர் அவள் அக்கா கணவனாக வாழும் நிலைமை வந்தது வரை அனைத்தையும் நினைத்துப் பார்த்து பெருமூச்சுவிட்டான் நரசிம்மன்.

     நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது தான். ஆனால் நடப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறினான். எதற்காக யாருக்காக செம்பருத்தியைத் திருமணம் செய்து கொண்டானோ அதை ஒன்றும் இல்லாமல் செய்வது போல், திருமணம் ஆன முதல் வாரத்திலேயே மல்லிகாவுடன் சண்டை போட்டு தன்னையும் சேர்த்து அழைத்து பிறந்துவீடு வந்துவிட்டவளை நினைக்கும் போது என்னடா வாழ்க்கை இது என்று தோன்றியது அவனுக்கு.

     அன்றைய நாளின் இரவு உணவு நேரத்தின் போது, பாரி தன்னையும் செம்பாவையும் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் சொல்லி வருத்தப்பட்டார் தாமரை.

     “அவளை அவ போக்கில் விடுங்கம்மா. தப்பு நம்ம மேல, அவளா இறங்கி வரும் வரை நாம காத்திருக்கத்தான் வேணும்.” என்றான்.

     “என்னடா நீயும் இப்படிப் பேசுற. அவளோட நல்லதுக்கும் சேர்த்து தானே செம்பா யோசிச்சா. நியாயமா அவ செம்பாவுக்கு நன்றி தான் சொல்லணும்.” தாமரை சொல்ல, இகழ்ச்சியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான் நரசிம்மன்.

     சொந்த வீட்டில், சொந்த அறையில் அசோகவனச் சீதையை போல் தவிப்புடன் தனித்திருந்தாள் பாரி. முல்லையுடன் இருந்தவரை பெரிதாகத் தெரியாத தவிப்பு, உணராத வெறுமை, மனதைத் தாக்காத பாரம் இப்போது ஒன்று சேர்த்து மொய்க்க அதன் பாரத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை பாரிஜாதத்தால்.

     என்ன யோசிக்கிறோம் என்பது தெரியாமலேயே வெகுநேரம் ஒரே இடத்தை வெறித்துப் பார்ப்பாள். காலை, மாலை, மதியம் என எதற்கும் வித்தியாசம் தெரியவில்லை. பசியில்லை, உறக்கமில்லை. என்ன செய்கிறோம், என்ன செய்யப் போகிறோம் இன்னும் எத்தனை நாள்கள் இப்படியே இருக்கப் போகிறோம் என்பதைப் பற்றிய எந்த யோசனையும் இல்லாமல், இந்த நொடி கடந்தால் போதும் என்னும் படியாக இருந்தாள்.

     உட்கார்ந்திருந்தால் சலிப்பு, படுத்தால் சலிப்பு, திரைப்படம் பார்க்க சலிப்பு, அலைபேசி உபயோகிக்க சலிப்பு, உறங்க சலிப்பு, அன்றாட வேலைகள் செய்ய சலிப்பு என எல்லாவற்றிற்கும் சலிப்பு தான் வந்தது. அவ்வளவு ஏன் பசிக்கிறது என்று உணவை தட்டில் போட்டு எடுத்து வந்த பின்னால் அதை சாப்பிட சலிப்பு வர அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டாள்.

     நடனம் ஆடுவதில் கொள்ளை இஷ்டம் கொண்டவள். பரத நாட்டியம், கதகளி இரண்டும் இரண்டும் முறைப்படி கற்றிருக்கிறாள். எந்தப் பாடலாக இருந்தாலும் அதில் வருவது போல் அல்லாமல் தனக்குத் தெரிந்த வகையில் அழகான முகபாவனையுடன் ஒயிலாக நடனம் ஆடுவாள்.

     கண்ணுக்குத் தெரியாமல் நின்று ஓயாமல் தொல்லை செய்யும் இனம்புரியாத நினைவுகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக நடனமாவது ஆடலாம் என்று நினைக்க அவளுக்கு சுத்தமாக ஆட வரவில்லை. பாடலுக்கு ஏற்ப முகம் திருந்த மறுத்தது, கை, கால்கள் அவள் பேச்சைக் கேட்காமல் இஷ்டத்திற்கு வளைவது போல் இருக்க அழுகை வந்துவிட்டது பாரிக்கு.

     கோபம், சோகம், வெறுப்பு, தவிப்பு எனப் பலவகை உணர்வில் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை அவளால் கூட அறிந்துகொள்ள முடியாத நிலை.

     கொல்லத் துரத்தும் பேயைப் போல் ஏதோ ஒன்று எல்லாப் பக்கமும் அவளை ஓட ஓட விரட்டுவது போல் இருக்க, பேயிடம் இருந்து தப்பிக்க தெரிந்தோ தெரியாமலோ கோவிலுக்குள் நுழைவது போல், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று சுற்றிக்கொண்டிருந்த பாரியின் கண்ணில் விழுந்தது அவள் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்த கதைப் புத்தகங்கள்.

     அவள் இசை விரும்பி, நடன விரும்பி கூடவே கதை விரும்பியும் கூட. தன்னை திசைமாற்றும் என்று நம்பி அவள் கையில் எடுக்கும் புத்தகங்கள் தான் அவளை அவளுக்கானவனை நோக்கி அழைத்துச் செல்லப் போகிறது என்று அப்போது பாரிக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page