All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நேசம் 10

 

VSV 22 – நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ
(@vsv22)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 12
Topic starter  

நேசம் 10

     “செம்பருத்தி தான் பைத்தியக்காரத்தனமா பேசினாங்கன்னா நீங்களும் அதுக்கு சரின்னு சொல்லுவீங்களாப்பா?” வீடு வந்த பின்னர் தன் தந்தை வெங்கடாச்சலத்திடம் கோபித்தான் நரசிம்மன்.

     “என்னை வேற என்னடா பண்ண சொல்ற. எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம். குறிஞ்சியை இப்படிப் பார்க்க முடியலடா. அவளை நிறைஞ்ச சுமங்கலியா, புருஷன் குழந்தைன்னு பார்க்காம என் உயிர் போயிடுமோன்னு தினம் தினம் நான் பயப்படுறது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

     கண்ணன் மாதிரி எந்தக் குறையும் சொல்ல முடியாத ஒரு பையனை உன் தங்கச்சிக்கு உன்னால் கொண்டு வர முடியுமா சொல்லு.” என்க,

     “உங்களுக்கும் குறிஞ்சியைப் பத்தி மட்டும் தான் யோசனையாப்பா. என் மனசு, அதில் இருக்கும் ஆசைகள் எதுவும் முக்கியம் இல்லையா? தங்கச்சியோட பிறந்தவன் என்கிற ஒரே காரணத்துக்காக நான் எதுக்குமே ஆசைப்படக் கூடாதா?  

     நான் பாரியை ரொம்ப லவ் பண்றேன் பா. அவ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.” என்ற மகனின் வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கிவிட்டு,

     “நான் கூட இப்படி தான் யோசிச்சேன். ஆனா செம்பருத்தி சொன்ன ஒருவார்த்தை என்னை யோசிக்க வைச்சது சிம்மா. குறிஞ்சியும் தான் ராமனைக் காதலிச்சா. கல்யாணத்துக்கு முன்னாடியே நெருங்கிப் பழகி கர்ப்பமாகும் அளவு பைத்தியக்காரத்தனமா காதலிச்சா.

     ஆனா அவன் செத்ததும் இவளும் சாக நினைக்கலையே. நல்லபடியா தானே வாழுறா. இன்னொரு கல்யாணத்துக்கு கூட சம்மதிச்சிட்டாளே. காதல் எல்லாம் காலம் போனா மறந்திடும் டா.

     இரண்டு குழந்தை பிறந்துட்டா அதுங்க முகத்தைப் பார்த்ததும் எல்லாம் மறந்திடும். அப்ப பாரியைப் பத்தி யோசிச்சா உனக்கு எதுவும் தோணாது டா. இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கோ டா.” கிட்டத்தட்ட கெஞ்சினார் வெங்கடாச்சலம்.

     “சரிதான் இன்னைக்குப் பிறகு பல வருஷத்துக்கு அப்புறம் பாரியைப் பார்க்கும் போது எனக்கு எதுவும் தோணாமல் கூட இருக்கலாம். ஆனா அந்த நிலையை நான் அடைவதற்குள்ள என்னென்ன பாடு படணும். அதைப் பத்தி உங்களுக்கு அக்கறை இல்லையா?” என்க, பதில் இல்லை வெங்கடாச்சலத்திடம்.

     “சரி, நான் நீங்க பெத்த பையன். அதனால் என் மனசை குத்திக் குதறிப் போடுற உரிமை உங்களுக்கு பத்து சதவிகிதமாச்சும் இருக்குன்னு ஒத்துக்கலாம். நம்ம குறிஞ்சியை மாதிரி அங்க ஒருத்தி இருக்காளேப்பா. பாரிஜாதம், அவளை என்னப்பா பண்றது. அவளுக்கு நான்னா உயிர். அவளுக்கு எப்படிப்பா என்னைத் துரோகம் பண்ணச் சொல்றீங்க. நம்ம வீட்டுப் பொண்ணு சந்தோஷத்துக்காக யாரோ ஒருத்தி செத்தா பரவாயில்லையா அப்பா.” நரசிம்மனுக்கு கண்கள், மூக்கில் ஆரம்பித்து முகம் முழுவதும் சிவந்தது.

     “வலி தாங்கினால் தான் டா கடவுளுக்கே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையும் தகுதி கிடைக்கும். குறிஞ்சி, செம்பருத்தின்னு இரண்டு பாவப்பட்ட பொண்ணுங்களுக்கு நல்லது நடக்க அந்தப் பொண்ணு கொஞ்சம் அழுதா தான் என்ன?” செய்ய நினைப்பது பெரிய பாவம், பேசுவது கடைந்தெடுத்த தீய சொல் எனத் தெரிந்தும் பேசினார் வெங்கடாச்சலம்.

     உணர்வற்று தந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தான் நரசிம்மன். “அவளை அப்படியே யார் விடப்போறா? அவளுக்கு நல்ல வரனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க தானே. வேண்ணா அந்தப் பொறுப்பை நான் கூட ஏத்துக்கிறேன். அவங்களை விட, நம்மை விட மூணு நாலு மடங்கு செல்வாக்கான குடும்பத்தில் கூட என்னால் அவளுக்கு வரன் தேட முடியும். காலத்துக்கும் அவ நல்லபடியா வாழும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க முடியும். ஆனா என் பொண்ணுக்கு அப்படி என்னால் எதையும் செய்ய முடியாதே. அப்ப நான் அவளுக்காக யோசிக்கிறதா இல்லை என் பொண்ணுக்காக யோசிக்கிறதா?” எனத் தன் நிலையில் உறுதியாக இருந்தார் வெங்கடாச்சலம்.

     “நான் பாரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட கண்ணனுக்கு குறிஞ்சியைக் கல்யாணம் பண்ண முடியும் தானேப்பா.” கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினான் நரசிம்மன்.

     “நம்ம பொண்ணுகிட்ட ஒரு குறை இருக்குடா. என்னைக்காவது ஒருநாள் அந்தத் தம்பியோ, அவங்க அப்பா அம்மாவோ அதைச் சொல்லி குத்திக்காட்ட வாய்ப்பிருக்கு.

     ஆனா குறையுள்ள அவங்க வீட்டுப் பொண்ணு நம்ம வீட்டில் வாழ்ந்தா அந்த நினைப்பில் நம்ம பொண்ணை அவங்க நல்லாப் பார்த்துப்பாங்க தானே.” என்ற தந்தையின் வார்த்தையில் செம்பருத்தி தான் தெரிந்தாள் நரசிம்மனுக்கு.

     அவளுடைய வார்த்தைகள் தந்தையின் மூளையை நிறைத்து, அவள் சொல்லுக்கு ஆட்பட்டு ஆடும் பொம்மலாட்ட பொம்மையைப் போல் தன் தந்தையைப் பார்த்தான்.

     “இத்தனைக்குப் பிறகும் எனக்கு பாரி தான் முக்கியம் னு சொன்னா என்னப்பா பண்ணுவீங்க.” உள்ளே போன குரலில் கேட்டான் நரசிம்மன். உள்ளுக்குள் சுக்கல் சுக்கலாக நொருங்கிக்கொண்டிருந்தான்.

     “நதிக்கரையில் வாழுற ஒரு மரத்தோட உயிர் ஆதாரம் அந்த நதியோட நீர் தான். தன்னை நம்பி வாழும் மரம் இறந்த பிறகு அதை நதிநீர் தனக்குள்ள அமிழ்த்திக்கிறது கிடையாது. சுமந்து போய் வேற ஒரு இடத்தில் பத்திரமா கரை சேர்க்கும். அதே மாதிரி தான் அண்ணன், தங்கை உறவும்.

     உன் தங்கச்சியோட மரியாதைக்காக அவ காதலையும், கல்யாணத்துக்கு முன்பான கர்ப்பத்தையும் இன்னைக்கு வரை உன் அம்மா கிட்ட இருந்து மறைச்சு, உன்னால் தான் அவ வாழ்க்கை கெட்டுப் போச்சுன்னு தினம் தினம் திட்டு வாங்கிக்கிட்டு இருக்க.

     அப்படியான நீ, உன் தங்கச்சிக்காக உன் காதலை விட்டுடுன்னு உன் காலில் கூட விழுறேன் பா.” என்று மகனின் காலைப் பிடித்தார் வெங்கடாச்சலம்.

     தந்தையை எழுப்பி விடக்கூடத் தோன்றவில்லை நரசிம்மனுக்கு. வலித்த இமைகளை அழுந்த மூடினான்.  விழிகளால் பலவித்தை காட்டும் பாரிஜாதம் ஒளி பிம்பமாக வந்து போனாள். எத்தனை முயன்றும் முடியாமல் வடிந்த  அவன் கண்ணீர் வெங்கடாச்சலத்தின் தலையை நனைத்தது.

     மகனின் துடிப்பைக் காண முடியாமல், “வேண்டாம் டா, நீ உனக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ.” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கினார் அவர்.

     ஒரு பிள்ளையின் நலனுக்காக இன்னொரு பிள்ளையை தெரிந்தே பலி கொடுப்பது போன்ற செயலைச் செய்கிறோம் என்கிற வருத்தம் இருந்தது தான். ஆனால் அவரால் அதைத் தாண்டி வேறு எதையும் செய்ய முடியவில்லை.

     “நான் செம்பருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” அடிவயிற்றில் இருந்து எழுந்த கசப்பு முழுவதும் தொண்டையில் நிறைந்திருக்க, தந்தை எதிர்பார்த்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் நரசிம்மன்.

     மகன் சென்ற திசையை சில நொடிகள் வெறுமையாய் பார்த்த வெங்கடாச்சலம், விஷயத்தை செம்பருத்தியிடம் தெரிவிக்க அவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அவன் சம்மதித்த பிறகு யாரோடு வேண்டுமானாலும் மோதிப் பார்க்கும் தைரியம் வந்தது அவளுக்கு.

     கண்ணனை அழைத்துக்கொண்டு நரசிம்மன் வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு வந்து சேர்ந்தாள்.

     “இங்க எதுக்காக வந்த செம்பா.” என்ற கண்ணன் வெங்கடாச்சலத்தையும் அவருக்குப் பின்னால் உயிர் நீங்கிய கூடாக, உணர்வுகள் இல்லாத முகத்துடன் வந்து கொண்டிருந்த நரசிம்மனைப் பார்த்ததும்,

     “நானும், அப்பாவும் அத்தனை சொன்னோமே. அது எல்லாம் வீண் தானா? கூடப்பிறந்த தங்கச்சியை அழ வைச்சு தான் நீ சிரிக்கணுமா?” ஆக்ரோஷமாகக் கேட்டான் கண்ணன்.

     “இங்க பாருண்ணா வெண்ணைய் திரண்டு வரும் நேரம் தாழியை உடைச்சிடாத. நரசிம்மன் தான் எனக்கு சரி. பாரி கொஞ்ச நாள் அழுவா தான். ஆனா அப்புறம் கண்டிப்பா சரியாகிடுவா. இவரைக் கட்டிக்கிட்டு சன்னியாசியா வாழ்வதற்குப் பதில் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழட்டும்.

     இது நீ அவளைப் பத்தி யோசிக்க வேண்டிய நேரம் இல்லை. என்னைப் பத்தி யோசிக்க வேண்டிய நேரம். எனக்கு யாரைப் பிடிச்சிருந்தாலும் அவங்களைக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன்னோட பொறுப்புன்னு சொன்ன. இப்ப பின்வாங்க நினைக்காத.” என்றாள்.

     “இத்தனை பேசுறியே அந்தப் பொண்ணு குறிஞ்சியைக் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமான்னு கொஞ்சம் கூட யோசிக்கத் தோணவே இல்லையா செம்பா. நீ சுயநலவாதின்னு எனக்குத் தெரியும்.

     ஆனா கடலில் கவிழ்ந்த கப்பலில் பிடிமானத்திற்கு எதுவும் இல்லாமல் போனதால, கூட இருந்தவரைக் கொன்னு அந்த பிணத்தை மிதவையாப் பயன்படுத்த நினைக்கிற அளவுக்கு சுயநலவாதியா மாறிப் போனதை நினைச்சா வருத்தமா இருக்கு.” அழுத்தம் திருத்தமாய் உரைத்தான்.

     செம்பருத்திக்கு அந்த வார்த்தைகள் அதிகம் வலியைக் கொடுத்தது. தலையை நிமிர்த்த முடியாமல், “உன் தங்கச்சிக்காக இதைக் கூட செய்ய மாட்டியா அண்ணா? எனக்கு நீ மாப்பிள்ளை பார்க்கும் போது, உனக்கு நான் பொண்ணு பார்க்கக் கூடாதா?

     குறிஞ்சிக்கு என்னண்ணா குறைச்சல். நீயும் படிப்பறிவில்லாதவன் மாதிரி கற்பு அது இதுன்னு பேசாதே.” வேகவேகமாகப் பேசினாள்.

     “அந்தப் பொண்ணு அவ புருஷன் மேல எத்தனை உயிரா இருந்திருந்தா அவன் செத்ததை நினைச்சு ஏங்கி வலிப்பு நோயாளியா மாறி நிக்கிறா. அவ மனசில் நான் எப்படி இடம் பிடிக்க முடியும். அவளோட என்னால் எப்படி சந்தோஷமா வாழ முடியும்.” கண்ணன் கேட்ட அடுத்த நொடி,

     “அதெல்லாம் வாழலாம் அண்ணா. அவ புருஷன் மேல அவ அத்தனை உயிரா இருக்காண்ணா அவர் அந்த மாதிரி அவளை நடத்தி இருக்கார். நீ அவளை நல்லபடியா நடத்தினா அன்பு எல்லாம் தன்னால் வந்திடும் அண்ணா.” அப்பட்டமாகச் சமாளித்தாள் செம்பருத்தி.

     கணவன், சில நாள் சில மணி நேரம் தங்கையை மனதில் நினைத்தான் என்பதற்காக அவனோடு வாழ முடியாது என்று சண்டையிட்டு பிரிந்து வந்தவள், ஒருவனைக் காதலித்து ஊணும் உயிருமாய் வாழ்ந்து அவன் பிரிவால் அரைஉயிராய் நிற்பவளை மணந்து கொள் என்று தமையனுக்கு அறிவுறுத்துகிறாள். சுயநலம் தான் எத்தனை கொடூரமானது என்று கண்ணன் தனக்குள் நினைத்துக்கொண்டிருக்க, அது புரிந்தது போல்,

     “நீ என்ன நினைக்கிறன்னு எனக்குப் புரியுதுண்ணா. என்னோட கோவர்தனோட விஷயம் வேற. அவர் மனசார நினைச்ச பொண்ணு பாரி என்னோட சொந்த தங்கச்சி. விஷயம் தெரிந்த நாளில் இருந்து தெரிந்தோ, தெரியாமலோ அவ பெயர் அவர் வாயில் இருந்து வந்துட்டா என்னோட மனசு எப்படித் துடிக்கும் தெரியுமா?

     பாரி அவர்கிட்ட போனில் பேசினாக் கூட எனக்கு உள்ளுக்குள்ள அப்படி இருக்கும். அவங்க சாதாரணமா தான் பேசுவாங்க. ஆனா எனக்கு அது பிடிக்காது. அந்த உணர்வை எல்லாம் பொண்ணாப் பிறந்தா தான் அண்ணா புரிஞ்சுக்க முடியும். உனக்கு அப்படி எந்தப் பிரச்சனையும் வராதே. ராமன் தான் உயிரோட இல்லையே.” வேகவேகமாகப் பேசினாள் செம்பருத்தி.

     “அப்புறம் எப்படி செம்பா நரசிம்மனைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற. நரசிம்மன் கடந்த நாலு வருஷமா மனசளவில் பாரியோட புருஷனா வாழ்ந்திருக்கார்.” கண்ணன் சொன்ன நொடி அப்பட்டமாக முகத்தைச் சுளித்தாள் செம்பருத்தி.

     “நீ ஏத்துக்க மறுத்தாலும் அது தான் உண்மை. பாரியை மனசில் நினைச்சவர் கூட வாழ முடியாதுன்னா பாரியைக் காதலிச்சவர் கூட உன்னால் எப்படி வாழ முடியும்.” என்க, பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை செம்பருத்திக்கு.

     அவள் உள்ளிருந்து ஒரு குரல் நரசிம்மன் தான் உனக்குச் சரியாக வருவான் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், இத்தனை காரியங்கள் செய்து இவ்வளவு தூரம் வந்துவிட்டிருந்தாள். ஆனால் இதுவரை இப்படி ஒரு கோணத்தில் அவள் சற்றும் யோசித்துப் பார்க்கவில்லை.

     “நரசிம்மனைப் பொறுத்த வரை உயிருக்கு உயிரான காதலா இருந்தாக் கூட அது மழையில் கரையும் மண்பொம்மை. இதுவே கோவர்தனா இருந்தா சின்ன நினைப்பு கல்லில் செதுக்கிய கல்வெட்டா தெரிஞ்சுச்சா?” கண்ணன் ஆவேசமாகக் கேட்க, “நான் பொண்ணுன்னா, உன்னால் என் மனசைப் புரிஞ்சுக்க முடியாது.” தவறு செய்யும் அனைத்து பெண்களும் சொல்லும் அதே வார்த்தைகளைச் சொன்னாள் செம்பா.

     “பொண்ணுங்களோட உணர்வுகள் தனி, வலிகள் தனி, அவங்களுக்கான சுதந்திரங்கள் தனின்னா அப்புறம் எப்படி ஆணும், பெண்ணும் சமமா இருக்க முடியும். உனக்குத் தோணுச்சுங்கிறதுக்காக உன்னோட உணர்வுகளோ, செயல்களோ சரி கிடையாதுன்னு முதலில் புரிஞ்சுக்கோ.

     கோவர்தனுக்கு முன்னாடி, உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து அவருக்கு நீ சம்மதிச்சு, ஏதோ ஒரு காரணத்தால் கல்யாணம் நின்னு போச்சுன்னு வைச்சுக்கோ. அந்த நபர் கோவர்தனுக்கு நண்பனாவோ இல்லை உறவுக்காரராவோ இருந்து, நீ நினைச்ச மாதிரியும், நீ நடந்துக்கிட்ட மாதிரியும் கோவர்தன் உன்கிட்ட நடந்திருந்தா ஆண்களோட மனசு அவங்களோட வலின்னு சொல்லுவியா இல்லை சைக்கோன்னு சொல்லுவியா செம்பா.” என்க, வார்த்தையால் தன் கன்னத்தில் விழுந்த அறையை இயலாமையும் விழுங்கினாள் செம்பா.

     “நீ செய்தது தப்புன்னு முதலில் புரிஞ்சுக்கோ. இதை உனக்கு காலா காலத்தில் புரிய வைச்சிருந்தா இன்னைக்கு தங்கச்சி வாழ்க்கையைக் கெடுக்கிற அளவு வந்து நின்னு இருக்க மாட்ட.

     பெண் புத்தி பின் புத்தின்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டு இருக்கியா? ஆண்கள் நிகழ்காலத்தை மட்டுமே யோசிப்பாங்க. ஆனா பெண்கள் வருங்காலத்தை யோசிச்சு நிகழ்காலத்தை அதுக்கு ஏத்த மாதிரி மாத்திப்பாங்கன்னு தான் அந்த பழிமொழிக்கு அர்த்தம்.

     கடவுள் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆகாயம் அளவு பரந்த மனசைப் படைச்சு பல நல்ல விஷயங்களை அதில் விதையா விதைச்சு தான் பிறக்க வைக்கிறான். ஆனா கடவுள் விதைச்ச விதைகளில் தனக்குள் எது முளைக்கணும், எது முளைக்கக் கூடாது, முளைச்ச செடிகளில் எது மரமா வளரணும், எது காய்ந்து காணாமல் போகணும் என்பதை சம்பந்தப்பட்ட மனிதன் தான் தீர்மானிக்கிறான்.

     அப்படி கடவுள் உனக்குக் கொடுத்த கடல் அளவு பரந்த மனசை நீ குட்டை விட மோசமா சுருக்கிக்கிட்டதோட விளைவு தான் கோவர்தனைப் பத்தியும் பாரியைப் பத்தியும் நீ யோசிச்சது.” கண்ணன் சொல்லி முடிப்பதற்கும், நரசிம்மன், வெங்கடாச்சலம் இருவரும் அவர்களை நெருங்கி வரவும் சரியாக இருந்தது.

     நரசிம்மனின் கசப்பான புன்னகையும், அவனைப் பார்க்கும் போது தங்கையிடத்தில் தெரியும் அதீதமான ஆர்வமுமே என்ன நடந்திருக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்ல, “அப்ப செம்பருத்தி சொன்ன மாதிரி காதல் எல்லாம் வெறும் மாயாஜாலம் தான் இல்லையா நரசிம்மன்.” கோபமாகக் கேட்டான் கண்ணன். யார் எத்தனை சொன்னாலும் நீ மனது மாறி இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொன்னது கண்ணனின் கண்கள்.

     “காதல் ஆகாயத்தை விட பெருசு சார். இதுதான் காதல், இவ்வளவு தான் காதல் னு அதை வரையறுத்திட முடியாது. காதலிக்காதவங்களால் காதலை உணரவே முடியாது.

     இரண்டு பேருக்கு நடுவில் இருக்கும் காதல், அந்த இரண்டு நபரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் வைச்சிருக்கும் பிரியத்தை வைச்சு மட்டும் தான் அளவிடப்படும். அந்த வகையில் இந்த உலகத்தின் ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு மாதிரி.

     சதிக்காக பல்லாயிரம் வருஷங்கள் காத்திருந்த சிவனோட காதல், ஒவ்வொரு அவதாரத்திலும் தன் மனைவியை பிரிய முடியாமல் சேர்ந்து அவதாரம் எடுக்க வைக்கும் மகாவிஷ்ணுவோட காதல்.

     ராதாவுக்காக வாசிச்ச தனக்கு இஷ்டமான புல்லாங்குழலை அவளோட இறப்புக்கு அப்புறம் யாருக்காகவும் வாசிக்கக்கூடாதுன்னு தூக்கிப் போட்ட கண்ணனோட காதல். மனைவி காட்டில் வாழ அரண்மனையில் காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்த ராமனோட காதல்.

     புருஷனுக்காக, அவனோட முதல் பொண்டாட்டிகிட்ட நான் உங்களோட வேலைக்காரியா இருக்கத் தயார் னு வந்த நின்ன சுபத்திரையோட காதல். காதலன் கூட ஒருநாள் வாழ்ந்துட்டு சந்தோஷமா சாகத் தயாரான அனார்கலியோட காதல் னு ஆழமான காதல்கள் எத்தனையோ இருக்கு.” என்க, செம்பா ஏதோ சொல்ல வந்தாள்.

     அதற்கு வாய்ப்பு கொடுக்காமல், “இதெல்லாம் காவியம் சொன்ன காதல் கதைகள் தானே. இதில் எத்தனை உண்மை இருக்குமோன்னு யோசிக்கலாம். ஆனா எண்பது வருஷத்துக்கு முன்னாடி போரில் காணாமல் போன கணவன் வருவாருன்னு சாகுற கடைசிநொடி வரை காத்திருந்த ஒரு பாட்டியைப் பத்தி நான் படிச்சிருக்கேன். இந்த மாதிரி நமக்குத் தெரியாத காதல் கதைகள் எத்தனையோ இருக்கலாம்.

     அதையெல்லாம் விட்டுட்டு, கண்ணுக்கு முன்னாடி இருக்கும் சில அபத்தங்களைப் பார்த்துட்டு காதல் இப்படித்தான்னு நீங்களா நினைச்சா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.” என்றவன் பாரியின் நினைவில் கண்கள் கலங்கினான்.

     “நான் ஒரு விஷயம் சொல்லணும்.” என்று சொல்லி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினாள் செம்பருத்தி.

     “அப்பாவுக்கும், பாரிக்கும் தெரியாம எனக்கும் நரசிம்மனுக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்கிறது நல்லதுன்னு தோணுது.” என்று அடுத்த குண்டை இறக்கினாள்.

     “என்னம்மா இது.” வெங்கடாச்சலம் கூட பதறத்தான் செய்தார். மகனின் மனது அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடுமோ என்று பயமாக இருந்தது அவருக்கு.

     “இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் மாமா. அவங்க இரண்டு பேரும்  கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அவங்க ஒன்னு பேச, நான் ஒன்னு பேசன்னு பிரச்சனை பெருசா தான் போகும். அதுக்காக எப்படியோ போகட்டும் னு அவங்களை விட்டுடவும் முடியாது. எல்லோரும் சொந்தம். காலத்துக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கணும்.

     இன்னைக்கு கோபத்தில் அவசரப்பட்டு சொல்லப்படும் வார்த்தையால் உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பு உடைஞ்சிடக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

     சட்டப்படி பதிவு பண்ணிட்டா அவங்களால் ஒன்னும் செய்ய முடியாது. பேச்சும் குறையும் பிரச்சனையும் குறையும். நடந்ததை மாத்த முடியாதுன்னு அப்பா ஒத்துப்பார். பாரி தான் கொஞ்ச நாள் முரண்டு பிடிப்பா. ஆனா எப்படியும் அவளும் வழிக்கு வந்திடுவா. வராம எங்க போயிடுவா. அவளுக்கு எங்களைத் தாண்டி யாரைத் தெரியும்.

     ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சுட்டு கல்யாணத்தை நீங்க சொல்லும் தேதியில் கிராண்டா பண்ணிக்கலாம்.” என யோசனை சொன்னாள்.

     கண்ணன் ஒப்புக்கொள்ளவே இல்லை. “பாரிகிட்ட சொல்லிட்டு செஞ்சாலே நடக்கப் போறது பெரிய பாவம். இதில் அவகிட்ட சொல்லாம செஞ்சா அது அவளுக்கு எல்லோரும் செய்யும் துரோகம். பாவத்துக்கு பிரயாச்சித்தம் செய்யலாம். ஆனா துரோகத்துக்கு மன்னிப்பு கூட கேட்க முடியாது.” என்றான்.

     நரசிம்மனுக்கும் உள்ளுக்குள் அந்த எண்ணம் தான். ஆனால் தான் சொல்லி என்ன நடக்கப் போகிறது என்பதால் அமைதியாக இருந்துவிட்டான். இனி இந்த அமைதி ஒன்று தான் அவன் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரப்போகிறது என்று புரிந்தது அவனுக்கு.

     மரங்கள் வேண்டுமானால் அழுத்தத்தினால் மதிப்புமிக்க நிலக்கரியாக மாறலாம். மனித மனதின் மேல் ஏற்றப்படும் அதீத அழுத்தம் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைக்குச் சமம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவனும் ஒருநாள் வெடிப்பான். அன்று யாராலும் அவனைச் சமாளிக்க முடியாது.

     இரகசியத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று போராடிய கண்ணனை வழக்கம் போல் தன் பேச்சத் திறமையால் சம்மதிக்க வைத்தாள் செம்பருத்தி.

     “பாரி மட்டும் தான் உன்கூடப் பிறந்தவளா?” ஒற்றைக் கேள்வியில் அவனை மொத்தமாக அடித்துச் சாய்த்தாள்.

     அடுத்ததாக மல்லிகாவைச் சமாதானப்படுத்தும் வேலையை யார் கையில் எடுப்பது என்று ஒவ்வொருவரும் யோசிக்க, மற்றவர்களைப் போல் அவரையும் சமாளித்துவிடலாம் என்கிற நினைப்பில் செம்பருத்தி தானாக முன்வந்தாள்.

     பெண் கொடுத்து பெண் எடுப்பது என்பதிலும், இரண்டு பெண்களிடமும் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதிலும் பெரிதாக ஈர்க்கப்படாத மல்லிகா மகளுக்கான மாப்பிள்ளை என்று கண்ணனை அடையாளம் காட்டியதும் பாதிக்கு மேல் மனம் மாறினார்.

     கண்ணனின் படிப்பு, திறமை, தோற்றம் என அனைத்துமே அவருக்குப் பிடித்திருக்கத் தான் செய்தது. தன் மகளுக்கு இராஜகுமாரன் போல் ஒரு மாப்பிள்ளை என்று கனவு காணத்துவங்கியவரின் கனவில் மண் அள்ளிப் போடுவது போல், “அண்ணனைக் கஷ்டப்பட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கேன் ஆன்ட்டி. அவருக்கு மட்டும் இல்ல எங்க வீட்டில் யாருக்கும் குறிஞ்சியை அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிறதில் விருப்பம் இல்லை. நான் தான் தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். எங்க கல்யாணம் எத்தனை சீக்கிரம் நடக்குதோ அந்த அளவு குறிஞ்சிக்கு நல்லது.” என்றாள்.

     அவள் என்னவோ மல்லிகாவின் மனதில் இடம்பிடிப்பதற்காக பேச, அதுவோ குறிஞ்சியை தாழ்த்தி அவளை உயர்த்திக் காட்டியது போல் ஆகிவிட்டது மல்லிகாவின் மனதில், 

     “சும்மா நிறுத்தும்மா. என்ன நீயும், உன் அண்ணனும் சேர்ந்து என் பொண்ணுக்கு வாழ்க்கைப் பிச்சை போடுறதா நினைப்பா. உன்னோட நிலை என் பொண்ணோட நிலையில் இருந்து கொஞ்சம் கூட மாற்றமில்லை. இதில் நீ என்ன உயர்வு அவ என்ன குறைவு. இந்த நினைப்பு உன்வார்த்தையில் மட்டும் இல்லை, நினைப்பில் கூட இருக்கக் கூடாது.” கத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

     செம்பருத்திக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நேரே நரசிம்மனிடம் தான் வந்தாள். “நீங்க தான் உங்க அம்மாவை சரிபண்ணனும்.” என்க, நானா என்பது போல் பார்த்தான் அவன்.

     “உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச குணமே முடிவுன்னு ஒன்னு எடுத்துட்டா அதுக்கு நூறு சதவிகிதம் உண்மையா இருக்க முயற்சிப்பது தான். அது நம்ம கல்யாண விஷயத்திலும் நடக்கும் னு நம்புறேன். உங்க அம்மாகிட்ட போய் பேசுங்க.” என்று அவனை உந்தினாள்.

     கண்ணன் அமைதியாக இருக்க, வெங்கடாச்சலமும் செம்பருத்தியின் வார்த்தைகளையே ஆமோதித்தார். பெருமூச்சுவிட்டு முன்னே நடந்தான் நரசிம்மன்.

     “அவரை ரொம்ப கார்னர் பண்ற செம்பா.” கண்ணன் சொல்ல, “நான் ஒன்னும் சின்னப் பிள்ளை இல்லை கண்ணாண்ணா. என்ன செய்யுறோம் னு புரியாமலும் செய்யல. அவருக்கு கஷ்டம் தான் எனக்குப் புரியுது.

     அதுக்காக அவரை அப்படியே விட முடியுமா சொல்லு. அவர் எனக்கானவரா மாறித்தானே ஆகனும். கண்டிப்பா அவரா மாற முயற்சி பண்ண மாட்டார். நான் தான் அவரை அதை நோக்கித் தள்ளனும். அதைத் தான் செய்யுறேன்.

     சில காயங்களுக்கு மருந்து போட்டா காயம் சரியாகும். சில காயங்களை கத்தி வைச்சு அறுத்து இன்னும் காயம் பண்ணா தான் சரியாகும்.” என்று நிறுத்தினாள். சில காயங்கள் ஆறி வடுவாகிப் போனாலும் வலி குறையாது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. 

     “என்னால் பாழாப் போன குறிஞ்சியோட வாழ்க்கையை நான் சரிபண்ணிட்டேன் மா. அவளுக்கு ஒரு ராஜகுமாரனைக் கொண்டு வந்திருக்கேன். அவ சந்தோஷமா இருப்பாம்மா.” மல்லிகாவின் காலடியில் அமர்ந்து சொன்னான் நரசிம்மன்.

     “நீ” மல்லிகா கேட்க, ஆச்சர்யமாய் நிமிர்ந்து பார்த்தான் அவரை. அவன் கண்கள், அதில் இருந்த வலி, ஆழிப்பேரலை போய் வெளிவரத்துடிக்கும் துக்கம் என எல்லாம் சேர்ந்து மல்லிகாவை அடித்துச் சாய்த்தது நிஜம்.

     ஆனால், நோயுற்ற கண்ணைச் சரிசெய்ய நல்லநிலையில் இருக்கும் இன்னொரு கண்ணில் மருந்தை விட்டுக்கொள்வது போல், மகள் வாழ மகன் கொஞ்சம் அழத்தான் வேண்டும் என்று அவரும் முடிவு செய்து வைத்துவிட்டார் போல.

     செம்பருத்தியின் சுயநலத்தை நேருக்கு நேராகப் பார்த்தவரால் அவள் மருமகளாக வந்த பின்னால் வீட்டு நிலைமையும் தன்னுடைய நிலைமையும் எப்படி இருக்குமோ என்று யோசனை வந்தது. அதன்பிறகும் கூட மகனைப் பற்றியோ அவன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியோ அவர் யோசிக்கவில்லை.

     பொதுவாக, அடம்பிடிக்கும் குழந்தைக்கு பிடிவாதக்காரன் என்னும் பட்டத்தோடு சேர்த்து அவன் வேண்டிய அனைத்தும் கிடைக்கும். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துப் போகும் குழந்தைகளுக்கு, இவன் தான் அனைத்தையும் புரிந்துகொள்வானே என்கிற நினைப்பில் இது தான் உனக்கு சரியாக இருக்கும் என்று அவன் விரும்பாதவைகளே பல நேரங்களில் கிடைக்கும். நரசிம்மன் விஷயத்தில் இதுதான் நடந்தது.

     நரசிம்மன், செம்பருத்தி திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட மல்லிகா உடனடி பதிவுத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த திருமணம் முடிந்த பின்னால் ஒருவேளை தன் மகளை மணக்க முடியாது என்று கண்ணன் சொல்லிவிட்டால் என்கிற பயம் வந்தது அவருக்கு.

     கண்ணனைப் பற்றி செம்பருத்தியும், வெங்கடாச்சலமும் சொன்ன தகவல்களை குழந்தை போல் அப்படியே ஒப்பித்த நரசிம்மன் மல்லிகாவை ஒப்புக்கொள்ள வைத்தான்.

     குறிஞ்சிக்கு தங்கள் வீட்டில் ஏதோ நடக்கிறது. செம்பருத்தி நரசிம்மனைத் திருமணம் செய்து கொள்ள தொடர்ச்சியாக ஏதோ செய்து கொண்டிருக்கிறாள் என்பது வரை தான் தெரிந்திருந்தது. ஆனால் அதற்கு அண்ணன், தந்தை, தாய் என மூவருமே ஒப்புக்கொண்டார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை.

     அடுத்த முகூர்த்த தினத்தில் பதிவுத்திருமணம் செய்துகொள்வதென்று முடிவானது. நரசிம்மனைத் தனியே சந்தித்தான் கண்ணன்.

     “இதெல்லாம் அவசியம் தானா?” என்க, “மனசுக்குள்ள உறுத்தல் இருந்தாலும் உங்களால் என் தங்கச்சியை வேண்டாம் னு சொல்ல முடிந்ததா?

     எப்படி உங்க தங்கச்சி நிலை உங்களைக் கட்டிப் போட்டு இருக்கோ, அப்படித்தான் என்னையும் கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்னு கட்டிப் போட்டு இருக்கு.” விரக்தியான குரலில் பேசினான் நரசிம்மன்.

     “என் மனசில் யாரும் இல்லை. கொஞ்ச நாள் போனாலும் உங்க தங்கச்சியோட என்னால் மனசு ஒன்றி வாழ முடியும். ஆனா உங்களால் முடியுமா? செம்பருத்தி எப்பவும் அவசர அவசரமா தான் முடிவெடுப்பா. அது தப்பாகிப் போகவும் உட்கார்ந்து அழுவா. இப்பவும் அப்படி ஆகிடுமோன்னு பயமா இருக்கு.” தமையனாகப் பதறினான் கண்ணன்.

     “உங்களுக்கும் குறிஞ்சிக்கும் மனசு ஒத்துப்போய் நீங்க நல்லபடியா வாழ்ந்து அப்பா அம்மாவா மாறும் வரை எனக்கு நேரம் இருக்கு கண்ணன். என்னால் முடியும் னு நம்புறேன்.

     நினைச்சது எல்லாம் கை மேல் பலனா கிடைக்கிற மாதிரி எங்க அப்பா அம்மா என்னை வளர்க்கல. சில பல ஏமாற்றங்களைத் தாங்கிக்கிட்டு தான் வளர்ந்திருக்கேன். என்னால் இந்த ஏமாற்றத்தையும் தாங்கிக்க முடியும்.” என்றான்.

     “பாரியால் தாங்கிக்க முடியும் னு தோணுதா?” என்க, பதில் சொல்லவில்லை நரசிம்மன். வழக்கம் போல் துக்கத்தை மென்று தின்று தொண்டைக்குழி வழியே அனுப்பிவிட்டான்.

     “நான் உங்களை வரச் சொன்னதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. என் அப்பா, அம்மா, உங்க அப்பா அம்மான்னு முந்தையை தலைமுறையை விடுங்க. அடுத்த தலைமுறையில் குடும்பத்தை தாங்கி நடத்திட்டு போற பொறுப்பு நம்மகிட்ட தான் இருக்கு. அந்த வகையில் நான் உங்ககிட்ட பேசுறேன்.

     எனக்கு உங்க தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்க முழு விருப்பம். அவங்களை நல்லாப் பார்த்துக்கிறேன். ஆனா எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு வாக்குறுதி வேணும்.

     என்னோட ஒரு தங்கச்சி வேதனை அனுபவிக்கப் போறது உறுதின்னு தெரிஞ்சிடுச்சு. அது யாரா இருந்தாலும் அவளோட பொறுப்பு என்னது. அவளை நல்லபடியா பார்த்துப்பேன்.

     ஆனா மிச்சம் இருக்கிறவளோட சந்தோஷத்துக்கு நீங்க பொறுப்பு ஏத்துக்கணும்.” என்ற கண்ணனை விசித்திரமாகப் பார்த்தான் நரசிம்மன்.

     “நான் உங்க கூட துணையா இருக்கேன். நீங்க தெளிவான முடிவுக்கு வாங்க. பாரி தான் வேணும் னு நீங்க சொன்னா செம்பாவை அடிச்சாவது வழிக்கு கொண்டு வருவது என்னோட பொறுப்பு.

     அதுவே செம்பாவைக் கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தா முழு மனசா கல்யாணத்துக்கு தயாராகுங்க. இது உங்களுக்கு கிடைச்சிருக்கிற கடைசி வாய்ப்பு.” என்றான் கண்ணன்.

     சில நொடிகள் ஆழ்ந்து யோசித்தான் நரசிம்மன். அவனும் பாரியும் காதலித்த காலங்கள், அவளுடைய பேச்சுகள், அவனுக்கு மட்டுமாகக் கிடைக்கும் அவள் நடனத்தின் காணொளிப் பதிவுகள், அவள் சிரிப்பு என அனைத்தையும் யோசித்துப் பார்த்தவனுக்கு தன் வீட்டிற்கு அவள் மருமகளாக வந்தால், தாயின் குணத்தால் இதில் ஒன்று கூட அவளுக்குக் கிடைக்காது என்றே தோன்றியது.

     பாரியின் துடுக்குத் தனத்திற்கும், கோபம் வந்தால் எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவரை நோகடித்து அழ வைத்து அதில் திருப்தி அடையும் குணம் கொண்ட தாய்க்கும் சற்றும் ஒத்துப்போகாது என்பது புரிந்தது.

     தாய் பத்து வார்த்தைகள் பேசினால் பாரி இரண்டு வார்த்தைகளாவது பேசுவாள். பாரி பேசும் இரண்டு வார்த்தைகள் தாயைப் பாதிக்காது. ஆனால் தன் தாய் பேசும் பத்து வார்த்தைகள் எதிராளி யாராக இருந்தாலும் அவரை உயிரோடு வதைத்துவிடும் என்பது அவனுக்கும் தெரிந்து தானே இருந்தது.

     இதய நோயாளியான அப்பாவையும், ஆஸ்துமா நோயாளியான அம்மாவையும் தனித்து விட்டு அவர்களின் ஒற்றை மகனான தான் தனிக்குடித்தனம் செல்வதற்கு அவன் மனமே ஒப்புக்கொள்ளாது. என்னென்னவோ யோசித்து கடைசியில் செம்பருத்தியின் வலையில் தான் விழுந்தான் நரசிம்மன்.

     அவள் சொன்னது போல் பாரியால் தன்னோடு சந்தோஷமாக வாழ முடியாது. தன் பிரார்த்தனை நிறைவேறும் வரை பிரம்மச்சரியம் காக்க முடியாது என்பதற்காக அல்லாமல், தன் தாயுடன் அவள் இருந்தால் அவளுக்கு தான் அதிக பிரச்சனை. செம்பருத்தி தன்னைப் போல் தாய் என்ன பேசினாலும் பொறுத்துப் போவாள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டான்.

     அந்த நினைப்பில் கண்ணனிடம் தன் இறுதி முடிவைச் சொல்ல பதிவுத் திருமணத்திற்காகவும் வந்து சேர்ந்தனர். தன் காதல் அத்தியாம் முடியப்போகிறது என்பதைப் புரிந்து கொண்ட நரசிம்மனுக்கு நெஞ்சு கனத்தது.

     இருப்பினும் இது தானாகத் தேர்ந்தெடுத்த பாதை. இதில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை நான் மட்டும் சமாளித்துக்கொள்கிறேன். என் தைரியத்தையும் சேர்த்து பாரிக்கு கொடு. அவள் என்னைப் போல் சந்தர்ப்ப சூழ்நிலைக்காரனை விட்டு வேறு யாரையேனும் திருமணம் செய்து கொண்டு நலமாக வாழட்டும் என்று மனதோடு நினைத்துக்கொண்டு, “மன்னிச்சிடு பாரி” என்கிற ஒற்றைக் குறுஞ்செய்தியில் இருவரும் சேர்ந்து வளர்த்த காதல் என்னும் செடியை அவன் ஒருவனாக முறித்துப் போட்டுவிட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று சட்டப்படி செம்பருத்தியின் கணவனாக மாறினான்.


   
ReplyQuote

You cannot copy content of this page