All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 8

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 10
Topic starter  

அத்தியாயம் 8 

 

கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் வைஷ்ணவி. காதில் குடை ஜிமிக்கி இரண்டும் ஆட, மயில் தோகை நிற பட்டுடுத்தி தலை நிறைய மல்லிகை பூவுடன் அழகு மிளிர நின்று கொண்டிருந்தவள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் புன்னகையுடன். அதே நிற சட்டையும் வெள்ளை நிற வேட்டியுடன் அவள் பின்வந்து அணைத்தபடி அவளைப் பார்த்த சக்தி,

 

 "என்ன மேடம்.? ஒரே புன்னகை முகமா நின்னுட்டு இருக்கீங்க." என்று வம்பு வளர்க்க.

"சும்மாதான் ஏனோ மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கு." எனக் கண்ணாடியில் கணவனைப் பார்த்தபடியே கூறியவள் முகத்தில் மலர்ந்த புன்னகை.

"வைஷ்ணவிமா கிளம்பியாச்சா.? எல்லாம் உங்களுக்காகத் தான் காத்து இருக்காங்க." என்ற தாயின் குரல் கதவின் அருகில் கேட்க. வேகமாக வெளியேறினார்கள் இருவரும். நெருங்கிய சொந்தங்கள் கூடியிருக்க நடுவில் இருந்த தொட்டிலில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் அவ்வீட்டின் புதுவரவு. புன்னகை மாறா முகத்துடன் தொட்டிலின் அருகே சென்றார்கள் வைஷ்ணவியும் சக்தியும்.

"வாங்கோ வந்து குழந்தையோட காதுல அவனோட பேர மூணு முறை சொல்லுங்க." என்றபடி அங்குப் பூஜையில் நின்றிருந்த ஐயர் கூற அவர் கூறியபடியே தொட்டிலின் அருகே சென்ற வைஷ்ணவி "முகிலன், முகிலன், முகிலன்." எனக் குழந்தையின் காதில் மூன்று முறை அவனின் பெயரைக் கூறிவிட்டு தன் கணவனின் கையில் இருந்த தங்க செயினை குழந்தையின் கழுத்தில் அணிவித்து அவன் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு நிமிர்கையில் அவள் கண்களில் லேசான கண்ணீர் துளிர்ந்தது. 

"இப்போ எதுக்கு கண்ண கசக்கிட்டு இருக்க.?" என்று அவளின் அருகில் வந்து அவளைக் கண்டித்த அவளின் அண்ணி கல்பனாவை பார்த்துப் புன்னகைத்தவளுக்கு இன்னுமே கண்ணீர் கூடியது. 

"ப்ச் கண்ண தொடை முதல்ல." என்ற படி அவள் கண்ணீரை துடைத்து விட்டாள். பூஜைகளை முடித்த ஐயர், "குழந்தையை எடுத்து அவன பெத்தவா கையில குடுங்க." என வைஷ்ணவியை பார்த்துக் கூற, குழந்தையை வாரி எடுத்தவள் தன் அண்ணன் மற்றும் அண்ணியிடம் கொடுத்தாள்.

அவளின் அண்ணன் குமரன் மற்றும் அண்ணி கல்பனா வின் குழந்தை தான் அது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. இன்று அவனுக்குப் பேர் வைக்கும் விழா சிறப்பாகவே நடந்து முடிந்தது. குழந்தையின் அத்தை தான் அவனுக்கு முதலில் பெயர் வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தாள் அவளின் அண்ணி. ஏனோ அது பெரும் மன நிறைவை ஏற்படுத்தி இருந்தது வைஷ்ணவிக்கு. தானே குழந்தை பெற்று தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் நிகழ்வுபோல அது அவ்வளவு மன மகிழ்வை கொடுத்தது அவளுக்கு. விழா முடிந்து அனைவருக்கும் உணவு பரிமாறி வந்தவர்களைச் சிறு பரிசுடன் வழி அனுப்பி வைத்தார்கள்.

 

 வீட்டின் ஆட்கள் மட்டுமே வீட்டில் தங்கி இருக்க, அமைதியாகத் தன் அறையில் தன் மருமகனோடு ஐக்கியமாகி விட்டாள் வைஷ்ணவி. 

தன் மடியில் படுத்திருந்த அண்ணன் மகனைப் பார்த்தவளுக்கு மனம் மகிழ்வு இருந்தாலும், தன் மடியை நிறைக்க தன் மகனோ, மகளோ எப்பொழுது வருவார்கள் என்ற ஏக்கம் நிறையவே இருந்தது. அந்த ஏக்கத்தில் நெஞ்சு விரிந்து தணிந்தது.

 

அவளின் அருகே அமர்ந்திருந்த சக்தி குழந்தையின் கால் விரல்களை மெதுவாக வருடியபடி அவர்களையே பார்த்து இருந்தவனுக்கும் அந்த ஏக்கம் நிறையவே இருந்தது. மனைவியைப் போல ஏக்கங்களை வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலையில் தனக்குள்ளே அனைத்தையும் அழுத்தி வைத்திருந்தான் அவன். இது ஆண்களுக்கே உண்டான சாபம் போல. பெண்கள் எளிதாகத் தங்கள் மனக்குமுறல்களை கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியும் தன் ஏக்கங்களைச் சொல்லி ஒரு மூச்சு அழுது விட முடியும் ஆனால் ஆணுக்குத் தான் அது சுலபமானதல்ல. ஏற்கனவே உடைந்து அழும் மனைவியைச் சமாதானப்படுத்தவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் இதில் தானும் அழுது மேலும் அவர்களைப் பலவீனமாக்க முயலமாட்டார்கள். அதில் சக்தியும் ஒருவன். அவனுக்கும் மனசு முட்ட ஆசை இருந்தது தன் குழந்தையின் வரவை எதிர்நோக்கி. மனைவி சொல்லி அழுது விடுகிறாள் இவன் சொல்லாமல் அழுகிறான். அதுவே வித்தியாசம் இருவருக்கும்.

 

யாருக்கும் காத்திருக்காமல் நாட்களும் பறந்தோடி சென்றன..

 

தன் மார்பின் மீது தலை வைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியைக் குனிந்து பார்த்த சக்திக்கு மனம் வேதனையாக இருந்தது. இன்று அவர்களின் திருமண நாள் இன்றோடு அவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தது.

 காலையிலேயே எழுந்து மனைவிக்குச் சர்ப்ரைஸாக தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தான். அவளும் இவனுக்குச் சர்ப்ரைஸ் ஆகக் கொடுத்த சட்டையை அணிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று வந்தபின் பெற்றவர்களிடம் நேரில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். மாமனார் மாமியார் இடம் தொலைபேசியில் ஆசீர்வாதம் பெற்று மதிய உணவிற்குப் பின் மாலையில் மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு படத்திற்கும் சென்று வந்தவன். அப்படியே இரவு உணவையும் முடித்து அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்... அனைத்திலும் புன்னகை முகம் தான் அவளுக்கு. சற்று மகிழ்வுடன் தங்களின் மூன்றாம் வருட திருமண நாளை கொண்டாடினார்கள் இருவரும்.இந்த மூன்று ஆண்டுகளில் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகக் காதலாக வாழ்ந்திருக்கிறார்கள் சண்டையெனப் பெரிதாக வந்ததில்லை. இருவருக்கும் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்திருக்கிறது அதுவும் அவனைப் பெற்ற அன்னையாலும் அவனின் உடன்பிறந்த சகோதரிகளாலும் தான். அதையுமே பெரிதாக அவனிடம் புகாராக எதையும் கூறியதில்லை அவனின் மனைவி. அவனே தெரிந்து கொண்ட சிலதுகள் மட்டுமே.

 

தன்னால் இயன்றவரை அவளை மகிழ்வாக வைத்திருந்தான் சக்தி. அவளின் தற்போதைய ஏக்கத்தை மட்டுமே அவனால் இன்னும் பூர்த்தி செய்ய முடியவில்லை. பெருமூச்செறிந்தவன் ஒரு முடிவெடுத்தவனாக மனைவியை இறுக அணைத்தபடி அவனும் உறக்கத்திற்கு சென்றான். 

 

காலை எழுந்தவன் குளித்துவிட்டு அடுப்படியில் தாயுடன் நின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்தவன் 

"வைசு, ஒரு காபி." என்ற படி சோபாவில் அமர்ந்து அன்றைய தினசரிகளில் பார்வையை அலைய விட்டவன். மனைவியின் வளைகரம் காபி டம்ளருடன் தன் முன் நின்று இருக்க காபியை வாங்கி பருகியவன். 

"நீ குடிச்சிட்டியா.?" என அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு 

"ஒரு பதினோரு மணிக்குக் கிளம்பி தயாராக இரு. வெளியில போகணும்." என்றவனுக்கு அவள் பதில் கூறும் முன்பே அடுப்படியின் உள்ளே இருந்து வெளியே வந்த அவன் அம்மா பவித்ரா, 

"எங்கடா போறீங்க.? இரண்டு பேரும் காலையிலேயே." என்று கேட்டவரிடம் "ஒரு இடத்துக்குமா வந்து சொல்றேன் எங்கன்னு." என்றவன் மனைவியைப் பார்த்து

" ரெடியா இரு._ என்ற படியே தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு தன் வேலைகளை முடித்து வரக் கிளம்பி சென்றான்.

"எங்கன்னு சொன்னானா.?" எனக் கேட்ட மாமியாரிடம்

"எனக்கும் தெரியாது அத்தை. இப்போ உங்க முன்னாடி தான் சொல்றாரு வெளிய போகணும்னு." என்றாள் அவளும் யோசனை உடன் "சரி, சரி அவன் சொன்ன நேரத்துக்குக் கிளம்பி ரெடியா இரு. போயிட்டு வந்தபிறகு தெரியப்போகுது எங்க போயிட்டு வரீங்கன்னு." என்றபடி அவரும் கீரைகளை எடுத்துக்கொண்டு அமர்ந்தார். அதைச் சுத்தம் செய்வதற்கு.

 

சொன்னபடியே சரியாகப் பதினோரு மணிக்கு வந்தவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான் தன் இருசக்கர வாகனத்தில். சென்று கொண்டிருக்கும்போதே அவனிடம் மெதுவாக 

"எங்க தான்ங்கப் போறோம் நாம.?" எனக் கேட்டவளுக்கு எந்தப் பதிலையும் கூறாமல் 

"அமைதியா வாடி." என்றபடியே சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

"ஹ்ம்க்கும். ரொம்பதான். இனிமே ஒன்னும் கேக்க மாட்டேன். போங்க." என்றபடி அவளும் முறுக்கிக் கொண்டு திரும்பி அவர 

"ஏய்! விழுந்து தொலைச்சிறாத கெட்டியா என்னைப் பிடிச்சிட்டு உட்காரு." என்றதற்கு பதில் கூறாமல் அவள் அமைதியாக வர. அவனும் அமைதியாகவே வண்டியைச் செலுத்தினான். சற்று நேரத்தில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது அவர்களின் வண்டி.

 இறங்கி போர்டை பார்த்தவள் அது ஒரு மகப்பேறு மருத்துவமனை என்பதை தெரிந்து கொண்டு.

'இங்கே எதற்கு இப்போ.?' என்ற கேள்வியுடன் கணவனைப் பார்த்தவள் அவனிடம் எதுவும் கேட்காமல் அவனின் வா என்று அழைப்பிற்கு அவன் பின்னே சென்றாள். நேராக ரிசப்ஷனுக்கு சென்றவன். அங்கு இருந்த செவிலியரிடம்,

 

"நான் சக்தி… ஏற்கனவே போன் ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தேன்."என்று கூற, 

"ஒரு நிமிஷம் இருங்க." என்றபடி அங்கிருந்து புத்தகத்தில் இவன் பெயரைத் தேடிப் பார்த்தவர் 

"சக்தி, வைஷ்ணவி." எனக் கேள்வியாக அவனைப் பார்க்க 

"ஆமா." என்றான் அவனும் "மூன்றாவது டோக்கன் உங்களோடது.இப்பதான் முதல் ஆள் உள்ள போயிருக்காங்க. வெயிட் பண்ணுங்க இன்னும் ஒருத்தர் போயிட்டு அதுக்கப்புறம் நீங்கப் போகலாம்." என்றவருக்கு நன்றி கூறி அங்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் மனைவியோடு சென்று அமர்ந்தான். அவனின் அருகில் அமர்ந்த வைஷ்ணவி 

"என்ன திடீர்னு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வந்திருக்கீங்க.?" எனக் கேட்க,

"சும்மாதான். நீதானே குழந்தை வேணும்னு கேட்டுட்டே இருந்த. அதான் என்னன்னு பார்த்துக்கலாம்னு வந்தேன்." என்றவனிடம்

"சரி, இதை அத்தை கிட்ட சொல்லிட்டே வந்து இருக்கலாம் இல்ல. இதுக்கு எதுக்கு ஒரு சஸ்பென்ஸ்." என்று நொடித்தவளிடம்

"எல்லாத்தையும் உடனே சொல்லிடுவாங்களாடி. முதல்ல நம்ம பார்க்கலாம். என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு அதுக்கப்புறம் அம்மாகிட்ட சொல்லிக்கலாம்." என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இவர்களுக்கான அழைப்பு வர மனைவியோடு எழுந்து சென்றான் மருத்துவரின் அறைக்குள்.

 

வாங்க. மிஸ்டர் சக்தி." என்று கேள்வியாக அழைத்த மருத்துவரிடம் 

"ஆமா டாக்டர்." என்று கூறியபடியே அவரின் எதிரில் அமர்ந்தார்கள் இருவரும்.

"சொல்லுங்க என்ன பிரச்சனை.?" "எங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கல. அதான் என்னன்னு டெஸ்ட் பண்ணிட்டு போலாம்னு வந்தோம்." "அப்படியா! கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது.?"

"மூணு வருஷம் ஆகுது."

"மூணு வருஷம் தானே ஆகுது. இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கலாமே.?"எனக் கேள்வியாக இருவரையும் பார்த்துக் கேட்டவரிடம் 

"காத்திருக்கலாம் தான் டாக்டர். ஆனா என் மனைவிக்கு ரொம்ப ஆசை சீக்கிரமா குழந்தை வேணும்னு." என்று மனைவியைப் பார்த்தபடி கூற.

"ஓஹ் சரி." என்றவர் செய்ய வேண்டிய சோதனை முறைகளை எழுதி அங்கு நின்று இந்தச் செவிலியரிடம்,

":இவங்கள கூட்டிட்டு போய் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க." என்ற படியே வைஷ்ணவியை காட்ட அவள் எழுந்து அவரோடு கிளம்பும் நிலையில் 

"இந்தாங்க இது எடுத்துக்கிட்டு நீங்கச் செகண்ட்ட்ட் ப்ளோர் போங்க உங்களுக்கான டெஸ்ட் எல்லாம் அங்க எடுப்பாங்க." எனக் கூற வேகமாகக் கணவனிடம் திரும்பியவள் "உங்களுக்கும் டெஸ்ட்டா.? உங்களுக்கு எதுக்கு.?" எனக் கேட்டாள் புரியாமல். 

"உனக்கு எடுக்கிறோம் இல்ல. அப்ப எனக்கும் தானே டெஸ்ட் எடுக்கணும்." என அவளை லேசாக முறைத்த படி கூறியவனை பார்த்து. அவனுக்கு மேலாக முறைத்து,

 

"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. முதல்ல நான் போய்ச் செக் பண்ணிட்டு வரேன். நீங்க அதுக்கப்புறம் செக் பண்ணிக்கலாம்." என்று கூறியபடியே மருத்துவர் அவனிடம் கொடுத்த பேப்பரை பறித்துக் கொண்டு திரும்பி நடக்க முற்பட்டவளிடம் 

"வைஷ்ணவி. உங்க கணவர் சொல்றது தப்பு இல்லையே அவரும் செக் பண்ணிக்கட்டும். அதுதான் நல்லது." என மருத்துவர் கூற 

"இல்ல டாக்டர். நான் முதல்ல பார்த்துக்கிறேன்."என அடமாகக் கூறியவளிடம் 

"அது ஏன் தனித்தனியா.? ரெண்டு பேரும் ஒண்ணா பாக்குறது நல்லது தானே." என மருத்துவரும், 'என்ன இந்தப் பெண் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாள்..' என்று ஆதங்கமாக நினைக்க.

 

"பரவாயில்லைங்க டாக்டர். முதல்ல நான் பார்த்துட்டு வந்துடறேன். அதுக்கப்புறம் அவருக்குச் செக் பண்ணலாம்." என்று விடாப்படியாகக் கூற, அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தவள் 

"இல்லனா நம்ம வீட்டுக்குக் கிளம்பலாம்." என்றபடி அவனின் அருகில் வந்து மறுபடியும் அமர்ந்து கொண்டாள். மனைவியின் பிடிவாதம் தெரிந்தவன். 

"சரி, நீயே முதல்ல போய்ப் பாரு." என்றவன் தான், விட்டுக் கொடுக்க வேண்டியதாக இருந்தது.

"சரி மிஸ்டர் சக்தி. நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க. உங்க மனைவி வர எப்படியும் இரண்டிலிருந்து மூணு மணி நேரம் ஆகும்."

"ஓகே டாக்டர்." எனக் கூறிவிட்டுடு அவனும் வெளியே வந்து அமர்ந்து கொண்டான். 

சரியாக மூன்று மணி நேரங்கள் கழித்து சோர்வுடன் மெதுவாக நடந்து வந்தாள். 

"என்ன ஆச்சு." எனக் கேட்டபடி அவளை அவனின் அருகில் அமர வைத்துக் கொண்டான்ன்.

"அப்பா.! எவ்ளோ பிளட். எத்தனை டெஸ்ட். வயிற்றை வேற அமுக்கி அமுக்கி ஒரு வழி பண்ணிட்டாங்க."என்று சோர்வுடன் கூறியவளை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது. 

 

"நீ இங்க உட்கார்ந்து இரு. நான் போய் உனக்கு ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரேன்."

"இல்ல வேணாம், வேணாம் இங்க எல்லாம் முடிச்சுட்டு நம்ம ஒன்னாவே போகலாம். எனக்கு இங்க இதுக்கு மேல உட்கார முடியல." என்று கூறியவளை பார்த்தவன் 

"சரி இரு. நான் என்னன்னு கேட்டு வந்துடறேன்… என இவன் எழவும் செவிலியர் இவனைத் தேடி வரவும் சரியாக இருந்தது.

"எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. ரிசல்ட் நாளைக்கு தான் வரும். நீங்க நாளைக்கு சாயந்தரம் வந்து டாக்டரைப் பாருங்க. உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டு வைக்கிறேன். சரியா அஞ்சு மணிக்கு வந்துருங்க." எனக் கூற. சரி என்று அவரிடம் கூறிவிட்டு, அவர் குறிப்பிட்ட ஒரு பெரும் தொகையைக் கவுண்டரில் கட்டி விட்டு விடை பெற்று சென்றார்கள் இருவரும்.

வரும் வழியில் இருந்த ஒரு பழரச கடையில் நிறுத்தி அவளுக்குச் சாத்துக்குடி ஜூஸும் தனக்கு ஒரு எலுமிச்சை சாரும் வாங்கி அருந்திவிட்டு வீட்டை நோக்கிச் சென்றார்கள் இருவரும்.

 

இவர்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தார் பவித்ரா. சக்தியின் வண்டி சத்தம் கேட்கவுமே வாசலுக்கு வந்தவர் 

"எங்கடா போயிட்டீங்க இரண்டு பேரும்..? மத்தியானம் சாப்பிடவும் வரல.." என கேட்க ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளே நுழைந்தவர்களை பார்த்தவர், 

"இவ ஏன் இவ்வளவு சோர்வா தெரிகிறா..? பசி மயக்கமா? எதுவும் சாப்பிட்டீங்களா..? இல்லையா..?" எனக் கேட்டவருக்கு 

"இல்லம்மா ஜூஸ் மட்டும் தான் குடிச்சிட்டு வந்தோம்." 

"சரி வாங்க வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க முதல்ல." என்றபடி சாப்பாட்டை சூடு பண்ணி வைக்க விரைந்தார் அடுப்படிக்கு. 

தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு இருவரும் வந்து அமரச் சாதம், கீரை பருப்பு கூட்டு, ரசம், அவரைக்காய் பொரியல், அரிசி வடகம் என இருக்க வேகமாக உண்டார்கள் இருவருமே.

அவர்கள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவர் 

"இவ்வளவு பசிய வச்சுக்கிட்டு எங்க தான் போயிட்டு வரீங்க ரெண்டு பேரும்.?" எனக் கேட்கக் கைகழுவி விட்டு அன்னையின் அருகில் வந்து அமர்ந்த சக்தி

"ஹாஸ்பிடல் போயிட்டு வரோம் மா. என்று கூற.

ஹாஸ்பிடலுக்குகா..? என்ன திடீர்னு..? யாருக்கு என்ன உடம்புக்கு.?" எனக் கேட்டார் இருவரையும் பார்த்தபடி 

"உடம்புக்கு எதுவும் இல்லை. கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுச்சு இன்னும் குழந்தை வரல. அதான் என்னன்னு பாத்துட்டு வரலாம்னு செக் பண்ண போனோம் ரெண்டு பேரும்."

"ரெண்டு பேருமா.?" என்றவரின் கேள்விக்கு 

"இல்ல அத்தை எனக்கு மட்டும் தான் இப்போ டெஸ்ட் பண்ணி இருக்கு." எனக் கூறினாள் வைஷ்ணவி…

"ஓஹ்.!" என்று கேட்டுக் கொண்டவர் "எப்போ முடிவு சொல்லுவாங்களாம்.?"

"நாளைக்கு வரச் சொல்லி இருக்காங்க. அஞ்சு மணிக்கு."

"சரிதான்.போயிட்டு வந்தது ரொம்ப சோர்வா இருக்கும். போய்ப் படுத்து எந்திரிங்க கொஞ்ச நேரம்…"என்றவருக்கு 

"இல்லம்மா எனக்கு வேலை இருக்கு நான் சும்மாதான் உட்கார்ந்துட்டு இருந்தேன். அவளுக்குத் தான் நிறைய டெஸ்ட் எடுத்திருக்காங்க அவ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்." என்றவன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றவன் 

 

"நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி." என்ற படியே லேசாக அவளை அணைக்க. அவனின் மார்பில் முகம் புதைத்தவள் 

"என்னெல்லாம் பண்ணாங்க தெரியுமா. பயந்துட்டேன்.." என்றாள் லேசான கேவலுடன்.

"ஓ.! அப்படி என்ன பண்ணாங்க."

"ஒரு பெரிய ராடு மாதிரி இருந்துச்சா அது அப்படியே உள்ள விட்டு." என்றவளை மேலே பேச விடாமல் அணைத்துக் கொண்டவன்.

"ரொம்ப வலிச்சுதா.?" என அவளின் காதோரம் கேட்க 

"ரொம்ப வலிக்கல. ஆனா கொஞ்சம் வலிச்சது. ஆனா ரொம்ப பயமா இருந்தது." என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து. பெருமூச்சேறிந்தவன் அவள் தோளில் லேசாகத் தட்டி 

"கொஞ்ச நேரம் தூங்கு. சரியாயிடும் நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன். சரியா.?" எனக்குக் கேட்கச் சம்மதமாகத் தலையசைத்தவள் சென்று மெத்தையில் படுத்த பிறகே தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

 

மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து பயம் ஆக்கிரமித்துக் கொண்டது வைஷ்ணவியை. அவளின் அரண்ட முகத்தைப் பார்த்தே அவள் எவ்வளவு பயந்து இருக்கிறாளெனப் புரிந்து கொண்ட பவித்ரா 

"இப்ப ஏன் இப்படி அரண்டு போய் உட்கார்ந்துட்டு இருக்க நீ.?"எனக் கேட்க "இல்ல அத்தை. இன்னைக்கு ரிசல்ட் வந்துரும் தானே அதான் கொஞ்சம் பயமா இருக்கு. என்ன வருமோ.? ஏது வருமோன்னு."

 

"என்ன வருமோனா.? எல்லாம் நல்லா தான் வரும். மனச போட்டுக் குழப்பிக்காமல் தைரியமா இரு. போ, போய் நல்ல வேண்டிக்கோ. எல்லாம் நல்ல முடிவாகத் தான் இருக்கும். எனக்கே ரெண்டு வருஷம் கழிச்சு தான் சக்தி பிறந்தான். அதனால ஒன்னும் மனச போட்டுக் குழப்பிக்காமல் தைரியமா இரு." என்று கூற மாமியார் கூறியபடி பூஜை அறைக்குச் சென்று வேண்டியபடியே நின்றாள். இவ்வளவும் சக்தி வேலைக்குப் போனபின்பு நடந்தேறியது.

மூன்று மணிக்குக் கிளம்பி தயாராகச் சோபாவில் அமர்ந்திருந்தவளை பார்த்த மாமனார் 

"என்னமா இப்பவே கிளம்பி ரெடியா உட்கார்ந்து இருக்கே..?" எனக் கேட்க "இல்ல மாமா. அவர் நாலு மணிக்கு வந்துருவேன் என்று சொன்னாரு.." "அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கேம்மா." என்றவருக்கு சோபையான ஒரு புன்னகையை கொடுத்தவள் அமைதியாக அமர்ந்திருக்க அவளின் பயத்தை உணர்ந்தவராக 

"எதுக்கும் பயப்படாத. தைரியமா போ. எல்லாம் நல்லதே நடக்கும்." என்றார்.

சிறிது நேரத்தில் சக்தியும் வந்துவிட அவனோடு கிளம்பி சென்றவளுக்கு மனம் முழுவதும் பயம் மட்டுமே. வழி நெடுகிலும் வேண்டிக் கொண்டே வந்தாள். அவளின் மனநிலை புரிந்தவனாகச் சக்தியும் அமைதியாகவே வர. மருத்துவமனையில் வரச் சொன்ன நேரத்திற்கு சரியாகவே இருவரும் சென்று சேர்ந்தனர். இவர்களைப் பார்த்து லேசாகச் சிரித்த செவிலி "அடுத்தது நீங்கதான்." என்று கூறிவிட்டு அவர்களின் கோப்பை எடுத்துக்கொண்டு மருத்துவரின் அறைக்குள் செல்ல அந்தக் கோப்பையையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

 

சிறிது நேரத்திற்கு பிறகு இவர்கள் உள்ளே அழைக்கப் பெற, இருவரும் சென்று மருத்துவரின் முன் அமர்ந்திருந்தார்கள் சற்று பயத்துடனும் படபடப்புடனும். சக்திக்கும் முடிவு என்னவாக இருக்குமோ என்ற லேசான படபடப்பு இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான் மருத்துவரின் முகத்தைப் பார்த்தபடி. அனைத்தையும் படித்துப் பார்த்தவர் நிமிர்ந்து அவர் முன் ஒருவர் அமைதியாகவும் ஒருவர் பயத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்து லேசாகச் சிரித்தவர்.

 

"ஒன்னும் பயப்பட வேண்டாம். எல்லாமே நார்மலா தான் இருக்கு.எனக் கூற 

"அப்பாடா.!" என வெளிப்படையாகவே நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்பட்டுக் கொண்ட வைஷ்ணவி சட்டென அருகில் அமர்ந்திருந்த கணவனின் தோளில் சாய்ந்து, கண்களைத் தாண்டிய கண்ணீரை மறைத்துக் கொண்டாள். 

 

"அச்சச்சோ. எதுக்கு இவ்வளவு எமோஷனல். நல்ல விஷயம் தானே சொல்லி இருக்கேன். உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. சீக்கிரமாவே ஒரு குழந்தையைத் தாங்கப் போறீங்க. அதுக்கு தைரியமாக இருக்கணும் இல்லையா.? இப்படி எல்லாம் எமோஷனலாகக் கூடாது…" எனக் கூற மனைவியை அணைத்தபடி லேசாகத் தட்டிக் கொடுத்தவன். 

"டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாரு. சீக்கிரமாவே நமக்கு ஒரு குழந்தை வந்துடும். இப்ப சந்தோஷமா.?" என அவளைக் குனிந்து பார்த்துக் கேட்க "ஆம்." என்பதாகப் புன்னகையோடு தலையாட்டினாள் அவளும்.

"நான் கொடுக்கிற டேப்லட் மட்டும் சாப்பிடுங்க.. சீக்கிரமாவே நல்லது நடக்கும்.." என கூறியவாறு அவர்களுக்கான மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பி வைக்க. நிம்மதியுடன் அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இல்லம் நோக்கி சென்றார்கள் இருவரும்.

வரம் கிடைக்குமா? இவர்களுக்கு.. தெரிந்து கொள்வோம் நாமும்...


   
ReplyQuote

You cannot copy content of this page