About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 10
அகன் சென்ற பின் இரண்டு பெளர்ணமிகள் கடந்து விட்டன. அவன் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மோகனாங்கி அவனை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து காத்திருந்தாள். பெற்றவர்களுக்கும் மகளின் ஏக்கம் புரிந்தது. எனவே, அகனை அழைத்து வந்த வீரர்களை மீண்டும் ஏழுமலைபிரதேசங்களுக்கு அனுப்பி அவனை அழைத்து வரச் சொன்னார் வேங்கையன்.
“அரசே, வருவதாக சொல்லி சென்ற அகன், மீண்டும் வரவில்லை என்றால் அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தானே பொருள்” என்று மந்திரி சந்தேகம் எழுப்ப,
“அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு வேளை அவர் தன் பெற்றோர்களை சமாதானம் செய்து அழைத்து வர தாமதமாகலாம். அல்லது வழியில் ஏதாவது பிரச்சனை வந்திருக்கலாம்” என்று அரசர் சொல்ல, மோகனாங்கி இப்போது கவலையுடன் தந்தையை பார்த்தாள்.
“மோகனா நான் ஒரு ஊகத்தில் தான் பிரச்சனை வந்திருக்கலாம் என்று சொல்கிறேன், நீ பதட்டப்படாதே. நான் தான் நம் வீரர்களை அனுப்பியிருக்கிறேன் இல்லையா? கண்டிப்பாக அவர்கள் அகனை அழைத்து வந்து விடுவார்கள். நீ கவலைப்படாதே”
ஒரு நீண்ட பெருமூச்சுடன் வீரர்களிடம் வரும் செய்திக்காக காத்திருக்கலானாள். நாட்கள் கடந்தது, ஆனால் அகனை தேடிச்சென்ற வீரர்களும் வந்தபாடில்லை.
அன்று பெளர்ணமி, மாலை குளத்தருகே சென்று அகனை போலவே குளத்தில் காலை விட்டுக் கொண்டு நிலவினை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அகனுடன் இருந்த பொழுதை நினைத்து கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் ஒன்று உறைத்தது.
அகன் சென்ற பின் அவன் நினைவாகவே இருந்ததால் அவள் மாதவிலக்கை பற்றி யோசிக்கவே இல்லை. தன்னையும் அறியாமல் அவள் கைகள் வயிற்றை தடவியது. மனதில் சந்தோஷமும், ஒரு வித கவலையும் சேர்ந்து இன்னதென்று சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. அது அகன் மேல் நம்பிக்கை இல்லாததால் அல்ல
அகனுடன் மனம் திறந்து பேசி ஒருவரை ஒருவர் முழுதாக புரிந்து கொள்ளும் முன் அவசரப்பட்டு விட்டோமோ என்று மனதில் ஒரு சஞ்சலம் தோன்றியது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் வராததால் புரண்டு கொண்டிருந்தவள், விடியும் பொழுதில் சற்றே கண்ணயர்ந்தாள்.
அரண்மனையை சுற்றியும் யாரோ கத்துவது போல கூச்சலும், சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க, தூக்கம் கலைந்து எழுந்து தோழிகளை தேடினாள். யாருமில்லாததால் அரண்மனையின் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்த்தாள்.
அரண்மனையே கலவர பூமியாக மாறி இருந்தது. யாரோ புதிதாக வந்திருந்த கூட்டத்தினரால் எல்லா இடங்களிலும் வீரர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பொருட்கள் எல்லாம் உடைக்கப்பட்டு தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தது. என்ன நடக்கிறது என்று புரியவே சில கணங்கள் ஆனது.
தோழி நறுமலர் என்பவள் ஓடி வந்து, “இளவரசி, நம் அரண்மனைக்குள் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெரிய படை ஊடுருவி வந்து இருக்கிறது. அவர்கள் போருக்காக எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அரண்மனையின் பொது வாயிற்கதவு பூட்டிய நிலையில் தான் உள்ளது. வீரர்களும் மதில் சுவரில் காவல் காத்துக் கொண்டு தான் இருந்தார்களாம். அப்படி இருக்க, இந்த கலவரக்காரர்கள் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தார்கள் என்றே தெரியவில்லை.
நம் அந்தப்புர நந்தவனத்திற்குள்ளிருந்து தான் அரண்மனைக்குள் வந்திருக்கிறார்கள். அங்கே இருந்த நம் வாயிற்காவலனை மோசமாக தாக்கியிருக்கிறார்கள். அரசரையும் அரசியையும் ஒரு அறையில் தங்க வைத்து வந்திருக்கிறேன். தாங்களும் வாருங்கள். எப்படியாவது நீங்கள் இங்கிருந்து உங்கள் பெற்றோரோடு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுங்கள்” என்றாள்
“நறுமலர்! கோழை போல என்னை ஓடி ஒளிந்து கொள்ள சொல்கிறாயா? முடியாது, நீ போய் என் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லு, நான் இவர்களை பார்த்துக் கொள்கிறேன்” என்ற மோகனாங்கி சற்றும் யோசிக்காமல் உடனே ஓடிச் சென்று தன் வாளைக் கொண்டு வந்து கலவரம் செய்து கொண்டிருந்த ஆட்களை தாக்க தொடங்கினாள்.
மோகனாங்கியே இறங்கி போர் செய்ததால், அதுவரை நிலைகுலைந்து போயிருந்த வீரர்கள் புது உத்வேகம் பெற்று கலவரக்காரர்களோடு சண்டையிட துவங்கினார்கள். அகன் சொல்லிக் கொடுத்திருந்த வில் பயிற்சியும் வாள் பயிற்சியும் அவளுக்கு அந்த நேரத்தில் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்திருந்தது.
வந்திருந்த கலவரக்காரர்கள் சற்று அயர்ந்து தான் போனார்கள். கிட்டத்தட்ட மோகனாங்கியும் அவளுடைய வீரர்களும் வந்திருந்தவர்களை ஓட ஓட விரட்ட துவங்கிய நேரம், “அரசே” என்று அவளுடைய அன்னையின் அலறல் சத்தம் கேட்டது.
அனைவருமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போய் நின்றனர். ஏனென்றால் அரசியின் ஓலம் மரண ஓலமாக இருந்தது. பதட்டத்தோடு மோகனாங்கி அவள் பெற்றோர்கள் இருப்பதாக நறுமலர் சொன்ன அறைப்பக்கம் ஓடினாள்.
அந்த அறையின் வாசலில் ஒரு இளைஞனும் அவன் அருகில் ஒரு வயதானவரும் நின்றிருந்தார்கள். வயதானவர் நல்ல பலசாலியாகவே தோற்றமளித்தார். அவர் கைகளில் ரத்தம் இருந்தது.
“யார் நீங்கள்? என் பெற்றோரை என்ன செய்தீர்கள்? வழியை விடுங்கள், இப்போதே நான் அவர்களை பார்க்க வேண்டும்”
“ஓ நீதான் இளவரசி மோகனாங்கியா?, சுலபத்தில் இந்த வயதான வேங்கையனை அடித்து வீழ்த்தி நாட்டை கைப்பற்றி விடலாம் என்று குறைந்த ஆட்களோடு தான் வந்தோம். கிட்டத்தட்ட நாங்கள் வெற்றி பெறும் வேளையில், நாட்டின் இளவரசி மோகனாங்கி போர் செய்ய களமிறங்கி விட்டாள் என்ற செய்தி வந்தது.
வேறுவழியில்லாமல் இந்த வயதாக கிழவனை தாக்க வேண்டியிருந்தது. ஒரு நாட்டின் அரசர் தோற்று விட்டால், அதன் பிறகு அனைவரும் வெற்றி பெற்ற அரசரின் அடிமைகள் தானே”
“நீங்கள் ஒரு அரசரா? அப்படி அரசராக இருந்தால் போர் செய்யப்போவதாக முன்னறவிப்பு செய்ய போர்முரசு கொட்டியிருக்கலாமே, எதற்காக இப்படி முறையற்று நடந்துக் கொள்கிறீர்கள்?” என்றாள் சீற்றத்தோடு
“முறையாக வந்தால் தானே பெண்ணே, முறையாக போர்முரசு கொட்டமுடியும். நாங்களே உங்களுடைய ரகசிய சுரங்க பாதையின் வழியே அரண்மனைக்குள் ஊடுருவி இருக்கிறோம். அப்படி இருக்க, போர் முரசு எப்படி கொட்ட முடியும்?” என்று பலமாக சிரித்தார் அந்த பெரியவர்
“என்ன ரகசிய சுரங்க பாதை வழியாகவா?” என்று அதிர்ந்தாள் மோகனா. அப்போது தான் தோழி நறுமலர் சொன்னது நினைவில் வந்தது. கலவரக்காரர்கள் நந்தவனத்தின் வழியாக தானே வாயிற்காவலனை அடித்து தாக்கி விட்டு வந்ததாக சொன்னாள்.
அங்கே ரகசிய சுரங்க பாதை இருப்பது, அவளையும் வேங்கையனையும் தவிர அவள் தாய் நிலவழகிக்கு கூட தெரியாதே. ஒரு வேளை கட்டிட கலைஞர் விஸ்வகர்மா விலை போய் இருப்பாரோ? ஆனால் அவர் அரண்மனையை விட்டு வெளியே செல்லவே இல்லையே என்று பலமாக யோசித்தாள்.
“என்ன யோசிக்கிறாய்? இந்த அரண்மனையை சுற்றிலும் இவ்வளவு பாதுகாப்பான அகழி இருந்ததால் யாராலும் உள்ளே வரமுடியாது என்று தந்தையும் மகளும் இறுமார்ப்பாக இருந்தீர்கள். யாருக்கும் தெரியாத சுரங்க பாதை எப்படி எங்களுக்கு தெரிந்தது என்று தானே யோசிக்கிறாய்?” என்று அவர் கேட்க,
மோகனா அவர்களை ஆமாம் என்பது போல பார்த்தாள்.
“உனக்கு பயிற்சி அளிக்க வந்த என் இளைய மகன் அகன் தான் இங்கே சுரங்க பாதை இருக்கும் இடத்தை பற்றி செய்தி அனுப்பினான்”
“என்ன? அகன் உங்கள் இளைய மகனா?” என்றாள் உச்சப்பட்ச அதிர்ச்சியில்
“ஆமாம், அகன் உனக்கு போர் பயிற்சி கொடுக்க வந்த சாதாரண வீரன் என்று நினைத்தாயா? கபாடபுரம் அரசனான இந்த மூவேந்தனின் இளைய வாரிசு தான் அகன். என்ன பார்க்கிறாய்? கபாடபுரம் உங்கள் தென்மதுரையை சார்ந்தது தானே என்று பார்க்கிறாயா?
கபாடபுரமும் அதனை சுற்றியிருந்த குறுநிலமும் என்னுடைய ஆட்சியில் இருந்தவை தான். என் நாட்டை சூறையாடி என்னை நாடோடியாக ஓட வைத்தான் உன் தந்தை. அரசனாக இருந்த நான் இருபது ஆண்டுகளாக ஏழுமலை பிரதேசத்தில் நாடோடியாக வாழ்ந்து வந்தேன்.
என் மூன்று பிள்ளைகளை தவிர எனக்கென்று எந்த படைபலமும் ஆள் பலமும் இல்லை. அவர்களுக்கு தென்மதுரையையும் கபாடபுரத்தையும் அடைய வேண்டும் சென்று சொல்லி சொல்லியே வளர்த்தேன்.
அப்போது தான் வேங்கையனுக்கு வயதாகி கொண்டே இருக்கிறது. நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாமல் பெண் பிள்ளையை பெற்று வளர்த்துக் கொண்டிருக்கிறான் தென்மதுரை அரசன் என்று தெரிய வந்தது. வயதானவனையும் பெண்ணையும் வீழ்த்துவது எளிது என்பதால் வீரத்தில் சிறந்த என் மூத்தமகன் அனலரசனோடு சில வீரர்களை முதலில் அனுப்பி வைத்தேன்.
அவன் அரண்மனையை சுற்றியிருந்த அகழியில் நீந்தி கோட்டைக்குள் ஊடுருவ நினைத்து இருக்கிறான். கடைசியில் அவன் உடல் முதலைக்கு இரையாகி போனது. அடுத்து என்ன செய்வது? இரண்டாவது மகனான இமயவரம்பனை அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான், என் இளைய மகன் அகன் பயிற்சி முடிந்து என்னை காண வந்தான்.
அகனின் குரு சாதாரண மனிதர் அல்ல, எல்லா கலையும் தெரிந்த மாபெரும் சித்தரான போகர். அவருடைய சீடனாக இருக்கும் பாக்கியம் அவனுக்கு மட்டுமே கிடைத்தது. பல ஆண்டுகளாக காடுகளிலும், மலைகளிலும் அவர் கூடவே சிஷ்யனாக சுற்றி திரிந்தவன், அவர் பக்கத்து நாட்டிற்கு சென்றதால் என்னிடம் திரும்பி வந்தான். அவரிடமிருந்து பல கலைகள் சீக்கிரமாக கற்றுக் கொண்டதாலும் அவர் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்ததாலும் அவர் அவனை தன் தார்மீக சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு நோக்கு வர்ம கலையை சொல்லி கொடுத்ததாக கூறினான்.
நோக்கு வர்ம கலையின் மூலம் எதிரில் இருப்பவரின் மனதை தன்வசப்படுத்தமுடியும் என்பதால் அகனை உங்கள் அரண்மனைக்கு அனுப்ப முடிவெடுத்தேன். சரியாக அதே நேரத்தில் உங்கள் நாட்டின் வீரர்கள், இளவரசி மோகனாங்கிக்கு போர்பயிற்சி தர சிறந்த பயிற்சியாளனை தேடிக் கொண்டு வந்திருப்பதாக தகவல் வந்தது.
அதனால் என் இளைய மகன் அகனை உங்கள் நாட்டிற்கு அந்த வீரனோடு அனுப்பி வைத்தேன். அவனும் வந்த சில நாட்களிலேயே அகழியை சுற்றி இருக்கும் மதில் சுவரை உடைத்து, அங்கே இருக்கும் முதலைகளை அரண்மனை நந்தவனத்திற்குள் வரச்செய்தான்.
மோகனா வாயை இருகைகளால் பொத்திக் கொண்டாள். அப்போது அந்த மதில் சுவர் தானாக பழுதடையவில்லையா? அகன் தான் உடைத்தானா? இருக்காது என்று அவள் காதல் மனது அவனுக்காக பரிந்து கொண்டு வந்தது.
“இதற்கே இப்படி அதிர்ச்சியானால் எப்படி? மதில்சுவரை உடைத்தவனை வைத்தே உன் தந்தை அதை சீரமைக்கும் பணியை செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். அகனும் கட்டிட கலைஞர் விஸ்வகர்மாவோடு இணைந்து மதில் சுவரை சீரமைக்கும் போது, தன் நோக்கு வர்ம கலையால் அவரை தன்வசப்படுத்தி சுரங்கப்பாதையை பற்றி தெரிந்து கொண்டான்.
அவனை அழைத்து வந்த வீரன் மூலமே சுரங்கபாதை இருக்கும் இடத்தை பற்றிய செய்தியை எங்களுக்கு அனுப்பி வைத்தான். யாருக்கும் அடங்காத வேங்கையன், அகனின் நோக்குவர்ம கலையால், தலையாட்டும் பொம்மையாகி போனார் என்று கேள்விப்பட்டேன்” என்று சிரித்தவர் மோகனாவை ஏற இறங்க பார்த்து,
நீயும் என் மகனிடம் மயங்கி விட்டதாக தகவல் கிடைத்தது. வேண்டுமானால் என் மகனுடைய அந்தப்புரத்தை அலங்கரிக்க உன்னை மட்டும் உயிரோடு விட்டு வைக்கிறேன். நாட்டின் ராணியாக அல்ல, ஆசை நாயகியாக” என்று பலமாக சிரித்தார் மூவேந்தன்
அருகில் இருந்த அவருடைய இரண்டாவது மகன் இமயவரம்பனும் அவருடன் சேர்ந்து சத்தமாக சிரிக்க, வெகுண்டெழுந்தாள் மோகனாங்கி
“ச்சே, இத்தனை மோசமான பிறவிகளா நீங்கள்? என் தந்தை முறையாக தானே போர் செய்து உங்கள் நாட்டை கைப்பற்றினார். ஆக சிறந்த ஆண்மகன்களாக இருந்திருந்தால் நீங்களும் முறையாக போர் செய்து எங்கள் நாட்டை கைப்பற்றியிருக்கலாமே. எதற்கு இந்த கபட வேஷம், ஓ உங்கள் ஊர் பெயர் கபாடபுரம், நீங்கள் கபடதாரிகளா?” என்றாள் ஆவேசத்துடன்
“என்ன சொன்னாய்?” என்று இமயவரம்பன் மோகனாவின் தலைமுடியை கொத்தாக பிடித்தான்.
மோகனா அவனிடமிருந்து விடுபட போராடினாள். அதற்குள் வேங்கையனின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலிக்க, தன் முழுபலத்தையும் பயன்படுத்தி அவனை தள்ளிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே வேங்கையன் மார்பில் கத்தி குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். நிலவழகி அவர் மேல் சாய்ந்திருந்தார். இதயமே நின்றுவிடும் போல இருந்தது மோகனாங்கிக்கு.
தந்தையின் மேல் சாய்ந்திருந்த நிலவழகியின் தோள் பற்றி எழுப்பினாள். அவரோ தரைமீது சரிய, “அம்மா” என்று கதறி விட்டாள். கணவனின் நெஞ்சில் கத்தி பாய்ந்ததும் அதை பார்த்த அதிர்ச்சியில் அவருக்கு முன் போய் சேர்ந்திருந்தார் நிலவழகி. அவசரமாக தந்தையை பார்த்தாள். அவர் முனகலோடு தன் மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இறந்து கிடக்கும் அன்னையை பார்ப்பதா? உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தந்தையை பார்ப்பதா என்று தெரியவில்லை அவளுக்கு
“யாரங்கே, அரண்மனை வைத்தியரை அழைத்து வாருங்கள்” என்று உரக்க கத்தியவள், அவர் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு, “தந்தையே உங்களுக்கு எதுவும் ஆகாது, நான் இருக்கிறேன்” என்றாள்
“மோகனா, நான் மலை போல நம்பியிருந்த அகன், என் பரம எதிரி மூவேந்தனின் இளைய மகனாமே! நம்பிக்கை வைக்க கூடாதவன் மேல் நம்பிக்கை வைத்து விட்டேனே! இனி இந்த நாட்டில் எப்படி இருக்க போகிறாய்? உனக்கு துணையாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் என் உயிர் பிரிய போகிறதே என்று நினைக்கும் போது” என்றவரால் பேச முடியவில்லை
“தந்தையே உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள், என்னை நம்புங்கள், என் உயிர் இருக்கும் வரை இந்த கயவர்களிடம் போராடி நம் நாட்டை காப்பாற்றுவேன்”
மோகனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேங்கையனின் உயிர் பிரிந்திருந்தது. “தந்தையே” என்று அந்த அரண்மனையே அதிரும் படி கதறி அழுதாள்.
“அவ்வளவு தான் வேலை முடிந்தது. தென்மதுரை அரசனும் அரசியும் இறந்து விட்டார்கள். இனி இந்த நாட்டின் புதிய மன்னன் மூவேந்தன், இளவரசர்கள் இமயவரம்பன் மற்றும் அகன் என்று மக்களுக்கு அறிவியுங்கள். இந்த பெண்ணை கொண்டு போய் அந்தபுரத்தில் விட்டு வாருங்கள். நான் இன்று இரவு இவளை தனிமையில் சந்திக்க வருகிறேன்” என்றான் இமயவரம்பன்
வீரர்கள் மோகனாவின் கரம் பற்றி இழுக்க, காளி அவதாரம் எடுத்திருந்தாள் மோகனாங்கி. ஆவேசத்தோடு அவள் அவர்களை இழுத்து தள்ளியதில் ஆளுக்கொரு மூலையில் விழுந்திருந்தார்கள். இனி இழக்க எதுவுமே இல்லை என்பதால் உயிர் இருக்கும் வரை போராடி வீரமரணம் அடைந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.
சீறிபாயும் பெண் வேங்கையென எழுந்து நின்றவளை பார்த்து மூவேந்தனும் இமயவரம்பனும் சற்றே நடுங்கி தான் போனார்கள். அவளிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
மின்னலென தன் வாளை எடுத்தவள், இமயவரம்பனை தாக்க தொடங்கியிருந்தாள். உடனே சுதாரித்து அவனும் அவளோடு போரிட, மூவேந்தன் மற்ற வீரர்களை அழைத்தார். “இந்த பெட்டை கோழியை அறுத்து வீசுங்கள். என் மகன்களுக்கு அந்தபுரத்திற்கு உதவுவாள் என்று நினைத்தது தப்பாக போயிற்று”
நாலாபக்கமும் வீரர்கள் மோகனா என்ற பெண்ணொருத்தியை தாக்க தொடங்க சுழன்று சுழன்று எல்லாரையும் பந்தாட தொடங்கி விட்டாள். அகன் சூழ்ச்சி செய்திருந்தாலும், அவன் கொடுத்த பயிற்சியால் தான் இப்போது அவளால் எதிர்த்து போராட முடிகிறது. அவனை நினைத்த மாத்திரத்தில் மனமும் உடலும் சற்றே சோர்வடைய, அந்த இடைப்பட்ட நேரத்தில் இமயவரம்பன் கத்தியை அவள் வயிற்றில் குத்த முற்பட்டான்.
சட்டென்று அதை கையில் அழுத்தி பிடித்தவளின் உள்ளங்கையில் கத்தி நன்றாக குத்தி கிழித்தது. அந்த வலியோடு இமயவரம்பனை பிடித்து தள்ளினாள். உடனே மற்ற வீரர்களும் அவள் வயிற்றையே தாக்க வர, அதை காக்கும் பொருட்டு ஓட தொடங்கினாள்.
திரும்பி பார்த்துக் கொண்டே நந்தவனத்தில் இருந்த காட்டுப்பக்கம் தலைதெறிக்க ஓடியவள் யார் மீதோ மோதி நின்றாள். நிமிர்ந்து பார்த்தாள், அகன் தான் நின்றிருந்தான்
“மோகனா, என்னாச்சு?” என்று அவள் தோள் பற்றினான்.
“ச்சீ” என்று தீச்சுட்டாற்போல அவனை உதறி தள்ளியவள் உச்சப்பட்ச வெறுப்போடு அவனை புழுவென பார்த்தாள். அகனை அனுப்பி வைத்தபோது அவள் முகத்தில் இருந்த புன்னகை இப்போது துவேஷமாக மாறி இருந்தது.
“என்ன மோகனா? என்ன ஆச்சு? யாராவது நம் நாட்டில் நுழைந்து விட்டார்களா? ஏன் இந்த கோலத்தில் இருக்கிறாய்”
“துரோகி, உன்னை போல துரோகியை நான் பார்த்ததேயில்லை. இன்னுமே என்னிடம் நடிக்கிறாயே”
ஆனால் அகன் அவள் பேச்சை கவனித்தாக தெரியவில்லை, மாறாக அவள் காலடியில் தேங்கியிருந்த இரத்தத்தை பார்த்து அதிர்ந்தான்.
“மோகனா, என்ன இரத்தம் வருகிறது?” என்று அவளை பிடித்து எங்காவது கத்தி குத்து இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.
குனிந்து பார்த்த மோகனாவிற்கு புரிந்து போனது, “உனக்காகவாவது உயிர் வாழலாம் என்று நினைத்தேனே. இப்போது நீயும் போய் விட்டாயா?“ வயிற்றை பற்றிக் கொண்டு கதறி அழுதாள்.
“மோகனா, என்ன சொல்கிறாய்? உன் வயிற்றில் நம் குழந்தை உருவாகியிருந்ததா?” என்றபடி அவளை தாங்கி தன் தோள் மேல் சாய்த்துக் கொள்ள முனைந்தான்.
அவனை தள்ளிவிட்டு, ஆத்திரத்துடன் கத்தினாள். “ஆமாம், உன் நாடகத்தை உணராமல் என் மனதை பறிக்கொடுத்து, என்னை உன்னிடம் மொத்தமாக இழந்ததற்கு பலனாக என் வயிற்றில் ஜனித்திருந்த சிசு, நான் ஓடியாடி சண்டை போட்டதாலோ, இல்லை இப்படிப்பட்ட துரோகிக்கு மகனாக இருக்க விரும்பாததாலோ என்னவோ, இந்த உலகத்தை பார்க்காமலே என் வயிற்றிலேயே கரைந்து விட்டது என் குழந்தை”
மோகனாங்கியை அதிர்ச்சியுடன் பார்த்த அகன், கண்களில் தாங்கமுடியாத வலி.
“மோகனா நீ என்ன சொல்கிறாய்?”
“நான் சொல்ல என்ன இருக்கிறது? என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது நீதான்”
“சொல்கிறேன். சொல்லத்தான் வந்திருக்கிறேன், நடந்தது மொத்தத்தையும் சொல்கிறேன்” என்றவனிடம் கையை நீட்டி தடுத்தாள்
“நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும். நீங்கள் கபாடபுரத்தின் அரசனான மூவேந்தனின் இளைய மகனா?”
“ஆம்”
“நீங்கள் இங்கே வந்த காரணம், எனக்கு பயிற்சி அளிப்பதற்காக அல்ல. எங்கள் நாட்டின் சுரங்க பாதை எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு தானே”
“ஆம்” என்றான் தலையை குனிந்து கொண்டு
அகன் மேலிருந்த நூலளவு நம்பிக்கை கூட அறுந்து விட, கொலை வெறியானாள் மோகனாங்கி. கோபத்தில் அவள் அகமும், முகமும் செங்கொழுந்தாக மாறியிருக்க, அகன் அவளை சமாதானம் செய்யும் வழிதெரியாமல் திகைத்தான்
“சுரங்க பாதை இருக்கும் இடம் தெரிந்ததும், அப்போதே நாட்டுக்குள் ஊடுருவி என் நாட்டை அபகரித்திருக்கலாமே. என் பெற்றோரும் வயதானவர்கள், எனக்கும் எந்த போர்திறனும் இல்லையே. அதை விடுத்து எதற்காக இந்த காதல் நாடகம்?
உன்னுடைய போர் பயிற்சி, ஓவிய பயிற்சியோடு, நோக்கு வர்மத்தை பயன்படுத்தி என்னையும் என் பெற்றோரையும் முட்டாளாக்கியது எதற்காக? என் கற்பை சூறையாடவா? அதற்கு காதல் நாடகம் தான் உனக்கு கிடைத்ததா?”
“மோகனா, தயவுசெய்து நான் சொல்வதை பொறுமையாக கேள்”
“இனி கேட்டு என்ன ஆக போகிறது? என் பெற்றோரை கொன்று விட்டீர்கள், என் நாட்டை அபகரித்து கொண்டீர்கள்? என் குழந்தையும் போய் விட்டது. இனி நீ சொல்ல போகும் கதையை கேட்டு நான் என்ன செய்ய போகிறேன்” என்றவள் ஆவேசத்தோடு, அகனை பிடித்து உலுக்கினாள்.
“மோகனா, நான் சொல்ல வருவதை கேளேன்” அவன் வார்த்தைகள் அவள் காதில் விழ வில்லை. அகனை கொன்றுவிடும் ஆவேசம் வந்தது. ஒடி வந்ததில் கீழே விழுந்திருந்த வாளை எடுத்து அகன் மீது வீச தயாரானாள்.
அகன் கண்களை மூடிக் கொண்டு அசையாமல் நின்றிருந்தான். ஓடுவான் அல்லது அவளை தடுப்பான் என்று நினைத்தவளுக்கு அவன் அசையாமல் சாவை ஏற்றுக் கொள்வது போல நின்றிருக்கவும், என்ன செய்வது என்று தடுமாறினாள்.
அதே சமயம் தூரத்தில் இருந்து பார்த்த இமயவரம்பன் கண்களுக்கு மோகனா அகனை வாளால் குத்தபோவது தெரிய, தன் கையிலிருந்த ஈட்டியை மோகனாவை நோக்கி எறிந்தான்.
அது மிகச்சரியாக மோகனாவின் முதுகை துளைத்து வயிற்றை புடைத்துக் கொண்டு வெளி வர, “அம்மா” என்று கத்திக் கொண்டு கீழே சரிந்தாள்.
மோகனா தன்னால் தாக்கப்பட்டதை தந்தையிடம் தெரிவிக்க, அங்கிருந்து அவசரமாக சென்று விட்டான் இமயவரம்பன்.
உயிரை விட தயாராக இமை மூடி நின்றிருந்த அகன், மோகனாவின் குரலை கேட்டு கண் திறந்தான். ரத்த வெள்ளத்தில் இருந்தவளை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு, “மோகனா, யார் உன்னை தாக்கியது?” என்று கதறினான்.
அந்த நிலையிலும் அவனை விட்டு விலக நினைத்து, “என்னை தொடாதே, உன்னை பார்த்தாலே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. இனி ஒரு ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும், நீ என் கண்ணில் படவே கூடாது. உன்னை கடலளவு வெறுக்கிறேன்” என்றாள் அருவெருப்பாக முகத்தை சுழித்து
“மோகனா அப்படி சொல்லாதே, உனக்கு ஒரு பக்கம் தான் தெரியும் மறுபக்கம் என்ன நடந்தது என்று தெரிந்து கொள். அதற்கு பின் உன் முடிவு எதுவானாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்”
“தெரிந்து கொள்ள எனக்கு எந்த அவசியமுமில்லை, இனி அதை தெரிந்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன்?”
“உனக்கு அவசியம் இல்லாமல் இருக்கலாம். நடந்ததை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் என்னால் சரி செய்ய முடியும்”
“அப்படியா? சரி செய்ய முடியுமா? எங்கே என் பெற்றோரை பிழைக்க செய் பார்க்கலாம், என் குழந்தையின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா உன்னால்” என்றாள் எள்ளலாக
சில கணங்கள் தலைகுனிந்து இருந்தவன், சில நீண்ட பெருமூச்சுகளை இழுத்து விட்டு, “முதலில் உன் உயிரை காப்பாற்றுகிறேன். இப்போதைக்கு அதுமட்டுமே என்னால் முடியும்” என்றபடி எழுந்து அவளை கைகளில் ஏந்திக் கொள்ள முனைந்தான்.
“உன் கையால் உயிர் பிழைப்பதை விட சாவதே மேல்” என்றபடி தன் வயிற்றில் புடைத்திருந்த ஈட்டியை இழுத்து மீண்டும் தன் நெஞ்சில் குத்திக் கொண்டாள்.
இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தவள், இப்படி தன் உயிரையே மாய்த்துக் கொள்வாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“மோகனா” என்று அகன் கதறி அழுவதை ஏளன சிரிப்போடு பார்த்தபடி மோகனாங்கியின் உயிர் உடலை விட்டு பிரிந்தது.
மேக்னா கண்ணீருடன் கதையை சொல்லி முடிக்க, அங்கே திலீப் மற்றும் நித்யாவின் கண்கள் கூட கலங்கி இருந்தன. அங்கே நீண்ட நேரம் அழுத்தமான மெளனம் நிலவியது.
மோகனாங்கியின் கதையை கேட்டதற்கே, மனது இவ்வளவு பாரமாக இருக்கிறதே என்று நினைத்தபடி திலீப் தன்னிச்சையாக தன் பாஸை பார்த்தான். அகத்தியனின் உடலும் முகமும் பாறையென இறுகி இருந்தது. அவன் முகத்தில் அப்படி ஒரு வலி தெரிந்தது. இந்த மாதிரி ஒரு கோலத்தில் திலீப் இதுவரை தன் பாஸை பார்த்ததில்லை என்பதால் அதிர்ச்சியானான்.
மேக்னா இப்போது திரும்பி கண்கள் மூடி இறுக்கத்துடன் அமர்ந்திருந்தவனை பார்த்து,
“இப்போ சொல்லுங்க போகன், அகன் தானே இந்த கதையின் வில்லன்?”
“அகன் சொல்ல வந்தது என்னனு தெரியாம, அதை எப்படி முடிவு செய்ய முடியும் மோகனா?” என்றான் கண்களை திறக்காமலே
“அது என்னவேனா இருக்கட்டும். தப்பு செஞ்சவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். அதை கேட்டா மட்டும் மோகனாங்கி் இழந்தது மறுபடியும் கிடைக்குமா? அவளுக்கு மட்டுமில்ல எனக்குமே அதை தெரிஞ்சுக்க பிடிக்கல” என்றாள் மேக்னா தீவிரமான குரலில்
அகத்தியன் கண்களில் வலியோடு மேக்னாவை பார்த்திருந்தான். ‘உனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லாம இருக்கலாம். அதை சொல்லாம என் ஆத்மா சாந்தி அடையாது. இந்த பிறவியிலாவது என்னை உனக்கு புரிய வைச்சே தீருவேன் மோகனா’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டான்
அவன் சபதம் நிறைவேறுமா?
(தொடரும்)
Latest Post: 21. எழுந்திடும் காதல் காவியம் Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page