All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

20. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Trusted Member Author
Joined: 4 months ago
Posts: 26
Topic starter  

அந்தக் கல்லூரியில் சேர்ந்தது முதல், தனது படிப்பில் கவனம் வைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தனக்கான நட்புப் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டாள் ஆரவி. 

 

அதேபோல், அவளது துறையில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து சீனியர்களிடமும் தோழமை பாராட்டவும் தொடங்கி விட்டாள். 

 

அதில் என்ன தான், தான் நெருங்கிப் பழக நினைத்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போலத் தன்னிடம் ஒட்டாமல் பழகிய தன்னுடைய சீனியர் பிரஹாசினியைக் கண்டு முகம் சுருங்கியவளோ, 

 

“அவங்க மட்டும் ஏன் எல்லார் கூடவும் ஃப்ரீயாகப் பேசவே மாட்றாங்க?” என சீனியர்களிடம் கேட்க, 

 

“அவளோட சுபாவமே அப்படித் தான். அவ்வளவு சீக்கிரத்தில் யார் கூடவும் பேசிட மாட்டா” என்று அனைவரும் ஒரே பதிலை அவளிடம் தெரிவித்தார்கள். 

 

அதில் அவளது மனம் சமாதானம் அடையாததால், பிரஹாசினியிடம் நேரடியாகவே அந்தக் கேள்வியைக் கேட்டாள் ஆரவி. 

 

அதற்கு அவளோ,”இது தான் என்னோட சுபாவம் டா. இதை என்னால் மாத்திக்கவே முடியலை” என்ற பதிலையே கூறினாள். 

 

அதைக் கேட்ட பின்னர், பிரஹாசினியின் மேல் மெல்லிய வெறுப்புத் தோன்றத் தொடங்கிற்று. 

 

அதை அவளின் முகத்திற்கு நேராக காட்டாமல் மறைத்துக் கொண்ட ஆரவியோ, எப்போது பார்த்தாலும் சீனியர்களுடனேயே சுற்றிக் கொண்டு இருப்பவள், பிரஹாசினியைத் தவிர மற்றவர்களுடன் நெருங்கிப் பழகலானாள்.

 

அதைக் கண்டு கூடப் பிரஹாசினிக்கு ஆரவியின் மீது எந்த துவேஷமும் எழவில்லை. அவள் தன் போக்கில் இருந்து கொண்டாள். அவளுக்கு என்று வகுப்பறையில் வினோதாவும், விடுதியில் அனிகாவும், சௌமியாவும் அவளுடன் நட்பாக இருந்ததால் ஆரவியின் துவேஷத்தைப் பிரஹாசினி கண்டு கொள்ளவில்லை. 

 

அவளும் தனது சக ஜூனியர் மாணவிகளில் ஒருவள் என்ற கண்ணோட்டத்தில் அவளைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் ஒரு புன்னகையுடன் அவளைக் கடந்து விடுவாள். 

 

இதேபோல், ஒவ்வொரு முறையும் தன்னைப் பிரஹாசினி அவமதிப்பதைக் கண்டுத் தானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை மறைமுகமாக கிண்டல், கேலி செய்து திருப்தி அடைந்து கொள்வாள் ஆரவி. 

 

ஆனால், அவள் தன் மேல் இப்படியானதொரு தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல் படிப்பில் கவனத்தைச் செலுத்திக் கொண்டு இருந்தாள் பிரஹாசினி. 

 

அதே சமயத்தில், இவற்றையெல்லாம் தன்னுடைய வீட்டாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளத் ஆரம்பித்து இருந்தாள் ஆரவி.

 

அதை முதலில் தன் தங்கையின் கல்லூரியில் நிகழும் இயல்பான கதையாக மட்டுமே தன் பெற்றோருடன் சேர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தான் திவ்யன். 

 

ஆனால் அவளது சந்தோஷம் நிறைந்த அந்தப் பேச்சில், சில நேரங்களில் தோன்றும் பொருமலைக் கேட்க நேர்ந்தது அவனுக்கு. 

 

அதில் அந்த முகம் தெரியாத பிரஹாசினி என்னும் பெண்ணின் மீது தன்னுடைய தங்கை கொண்டிருக்கும் வெறுப்பை அவதானிக்கத் தொடங்கியவன், 

 

அதை,“அந்தப் பொண்ணு உன்னை என்ன தான் பண்ணாங்க ஆரு? அவங்க மேலே ஏன் உனக்கு இவ்வளவு வெறுப்பு?”என்று அவளிடம் கேட்கவும் செய்தான் திவ்யன். 

 

“பின்னே என்ன அண்ணா! அங்கே இருக்கிற எல்லா சீனியர்ஸூம் எங்கிட்ட நல்லா பேசுறாங்க, பழகுறாங்க! அப்படியிருக்கும் போது அவங்க மட்டும் எங்கிட்ட முகம் கொடுத்துப் பேசாமல், எதிலேயும் கலந்துக்காமல் இருந்தால் எனக்கும் கோபம் வரும் தானே அண்ணா?” என்று அவனிடமே நியாயம் கேட்டாள் ஆரவி. 

 

“அதுக்கு என்னப் பண்றதும்மா? அந்தப் பொண்ணோட சுபாவமே அது தான்னு அவங்களும், அவங்களோட ஃப்ரண்ட்ஸூம் தெளிவாகச் சொல்லிட்டாங்களே? அப்பறமும் நீ அவங்களை இப்படி பேசுறதும், அவங்க மேலே தேவையில்லாத கோபத்தை வளர்த்துக்கிறதும் எந்த விதத்தில் நியாயமாகும்?” என்று அவளுக்குப் புத்திக் கூறினான் அவளது தமையன். 

 

“நீங்க சொல்றதும் ஓகே தான் அண்ணா. ஆனால் அவங்க பண்றது கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கு” என்று அவனிடம் மேலும் வாதாடவும், 

 

சோமசுந்தரி,“நீங்க ரெண்டு பேரும் வாதம் பண்ணது போதும். சாப்பிட வாங்க” என அவர்களை உணவுண்ண அழைக்கவும், அந்தப் பேச்சை அத்துடன் விட்டு விட்டனர் அண்ணனும், தங்கையும். 

 

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கப், பிரஹாசினியைப் பற்றிய ஆரவியின் எதிர்மறையான அபிப்பிராயங்கள் மேலும் மேலும் கூடிக் கொண்டே தான் இருந்தது தவிர, குறைந்தபாடில்லை. 

 

ஆனால், இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து தான், தத்தமது கல்லூரி மற்றும் வேலையில் நிகழும் விஷயங்களைக் கலந்துரையாடுவார்கள். 

 

அதனாலேயே, ஆரவியின் கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அவளது வீட்டாருக்குத் தெரிந்து விடும். அப்படியானால், அதில் திவ்யனும் அடக்கம் தானே? 

 

அப்படியிருக்க, அவனுக்கு அந்தப் பிரஹாசினியின் மீது அவனுக்கு முதலில் தோன்றியது பரிதாபம் தான்! 

 

அவள் மேல் தன்னுடைய தங்கை மட்டுமின்றி, அவளுடன் படித்துக் கொண்டிருக்கும் வேறு சிலரும் கூட, அவளை இப்படித் தானே எண்ணியிருப்பர் என்று பிரஹாசினியின் மீது பரிவு தோன்றியது திவ்யனுக்கு. 

 

இங்கு ஒருவனுக்குத் தன் மேல் பரிதாபம் மற்றும் பரிவு தோன்றியது, அது கூடிய விரைவில் காதலாக மாறப் போகிறது என்பதையெல்லாம் அறியாமல், தமிழ்ப் புத்தாண்டின் காரணமாக விடுதி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் கல்லூரியில் ஒரு வாரம் விடுப்பு அளித்திருந்ததால் அந்த நாட்களைக் கழிப்பதற்காகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் பிரஹாசினி. 

 

அவளை அப்போது தான், பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வந்திருந்தான் நீரஜ். 

 

அவள் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து, வெள்ளிக்கிழமை மாலையில் கிளம்பி வீட்டிற்கு வந்து விடுவாள். அதன் பிறகு, இரண்டு நாட்கள் விடுமுறையைக் கழித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுதிக்குத் திரும்பி விடுவது அவளது வழக்கம். 

 

இப்படி எப்போதாவது தான், ஒரு வாரம், பத்து நாட்கள் என்று விடுமுறை கிடைக்கும் போது இங்கே வந்து சீராடி விட்டுப் போவாள் பிரஹாசினி. 

 

அந்த நாட்களில் எல்லாம் அவளது வீட்டினருக்கு ஆனந்தமாக இருக்கும்.

 

அதேவேளையில், அவர்களது உறவினர்கள் தவறாமல் படையெடுத்துப் பிரஹாசினியின் வாயைக் கிளற முயற்சிப்பார்கள்.

 

அவளோ அதற்குப் பிடி கொடுக்காமல் சாமர்த்தியமாக நழுவி விடுவாள். 

 

இப்போதும் கூட, அவளது ரமணி அத்தை தான், அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். 

 

அவர் தனது குடும்பத்தைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு வராமல் தனித்து வந்து இருக்கவே, அவரிடம் பிரஹாசினியால் சகஜமாகப் பேச முடிந்தது. 

 

ஆனால், அவரது பேச்சு எங்குச் சுற்றினாலும் கடைசியில் வந்து முடிவது என்னவோ, அவருடைய மகன்களைப் பற்றியதாகத் தான் இருந்தது. 

 

ஏனென்றால், அவரின் அண்ணன் மகன் நீரஜ்ஜின் பொறுப்பான சுபாவத்தைக் கண்டுப் பொறாமை கொண்டவரோ, தன் மகன்களின் புகழைப் பாடத் தொடங்கி விட்டார் ரமணி. 

 

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு, கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து பிரஹாசினியின் தோற்றம் மற்றும் அவளது நடவடிக்கைகள் அவரை வெகுவாக ஈர்த்தது எனலாம். 

 

அதனாலேயே அவளைத் தன் மகன்களில் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தைத் தனக்குள் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார் ரமணி. 

 

ஆனால், அதை உறுதியானதொரு முடிவாக வைத்திருக்கவில்லை அவர். 

 

ஏனெனில், என்ன தான், தன்னுடைய அண்ணன் விருச்சிகன், பிரஹாசினியைத் தன் சொந்த மகளாக வளர்த்தாலும் கூட, அவள் அவரது தம்பி மகள் தானே? அப்படியிருக்க, பிரஹாசினியின் திருமணத்தின் போது, அவளுக்கு வரதட்சணையைக் கொடுப்பாரா? என்பது சந்தேகமாக இருந்தது. அதனால், அவளை ஒரு ஆப்ஷனாக வைத்துக் கொண்டவரோ, 

 

இனி வரும் காலங்களில், என்ன வேண்டுமென்றாலும் நிகழலாம், அப்போது விருச்சிகனின் சொத்தும், பிரஹாசினியின் வனப்பும் அதிகரித்து இருந்தால் அவளைத் தன் வருங்கால மருமகளாக்கிக் கொள்ளலாம் என்ற ஆசையைத் தனக்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடமாடத் தொடங்கினார் ரமணி. 

 

ஆனால், இதை அறியாத விருச்சிகன், உமாராணி, நீரஜ் மற்றும் பிரஹாசினியோ, அவரது இயல்பான குணமே இது தான் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டுப் பின்னாளில் அவரால் எழப் போகும் சங்கடத்தை இப்போது உணரத் தவறினர். 

 

“என்ன ஹாஸ்டலில் இருந்து வந்தப் பெண்ணுக்கு வாய்க்கு ருசியாக எதுவும் சமைச்சுப் போடலையா அண்ணி? பிள்ளை, அங்கே நல்லா சாப்பிடாது போலவே? ரொம்பவே சுனங்கிப் போய் இருக்கிறாள்!” என்று உமாராணியிடம் வினவினார் ரமணி. 

 

“அவளுக்குப் பிடிச்ச சாப்பாட்டைத் தான் சமைச்சேன்ம்மா. அவளும் நல்லாவே சாப்பிட்டாள்” என அவருக்குத் தெரிவித்தார்.

 

“அப்படியா அண்ணி? அதை எனக்கும் பரிமாறுங்களேன், நானும் ருசி பார்க்கிறேன்” என்றவரை ஆயாசத்துடன் பார்த்தான் நீரஜ். 

 

அவனுக்கும் பண்டிகையின் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதனால், அவனுமே ரமணியின் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆளாகி இருந்தான். 

 

அவனுக்கும், அவனது அன்னை மற்றும் தங்கைக்கும் மட்டும் தான், ரமணியின் குணம் எரிச்சலை உண்டாக்கி இருந்தது. ஆனால், விருச்சிகனோ எப்போதும் போல இருந்தார். அவருக்குத் தன் ஒன்று விட்டத் தங்கை உறவான ரமணியின் நடவடிக்கைகள் எதுவும் எதிர்மறையாகத் தோன்றவில்லை. 

 

அதெல்லாம் தெரிவதற்கு அவர் தன் வீட்டில் முழு நாளும் இருந்தால் தானே? விருச்சிகன் தான், நாள் முழுவதும் தங்களது துணிக்கடையில் தானே வாசம் செய்வார். இரவு வேளையில் மட்டும் தான் வீட்டிற்கு வருவார். அதுவே ரமணிக்கு இன்னும் வசதியாகப் போயிற்று. 

 

அவளது விடுப்பு முடியும் வரையிலும் அங்கே தங்கியிருந்து அனைவரையும் வேலை ஏவித், தனக்குப் பிடித்த உணவைகளைச் சமைக்க வைத்துச் சாப்பிட்டு விட்டே சென்றார் ரமணி.

 

“இதுக்குப் பிரஹா ஊருக்கு வராமல் ஹாஸ்டலில் நிம்மதியாக இருந்து இருந்திருக்கலாம்!” என்று கூறித் தங்கைக்காக வருந்தினான் நீரஜ். 

 

“ரமணி இங்கே வர்றதை நம்மளால் தடுக்கவே முடியாதுடா. அவ உங்க அப்பாவோட மூளையைப் பாசத்தால் கட்டிப் போட்டு வச்சிருக்கிறாள்! அதனால், அவர் அவளை எதுவுமே சொல்ல மாட்டார். நாம தான் இதுக்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்கனும்” என்று மகனிடம் கூறி நொந்து கொண்டார் உமாராணி. 

 

“ப்ச்! போங்கம்மா” என்றவனுக்கும் கோபம் கரையைக் கடப்பதைப் பார்த்து,

 

“அவங்க தான் கிளம்பிப் போயாச்சே? அப்பறம் என்ன? விடுங்கண்ணா” எனத் தமையனைச் சமாதானம் செய்தாள் பிரஹாசினி. 

 

“அடுத்த லீவுக்கும் வந்து நின்னா என்னப் பண்ணுவ?” என்றான் நீரஜ். 

 

“அதை அப்போ பார்த்துக்கலாம். இன்னும் என் லீவ் முடியலை. என்னை எங்கேயாவது சுத்திப் பார்க்கக் கூட்டிட்டுப் போவீங்கன்னு நினைச்சேன்” என்றாள் பொய்க் கோபத்துடன். 

 

“சாரிம்மா. நாளைக்கே போகலாம். எந்த இடம்ன்னு நீயே சொல்லு” என்று அவளுக்கு உறுதி அளிக்கவும், 

 

“அப்போ ஓகேண்ணா. நான் இன்னைக்கு நைட் யோசிச்சு சொல்றேன்” என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டனர் அவளது பெரியம்மாவும், தமையனும். 

 

தங்கைக்குக் கொடுத்த வாக்கை அடுத்த நாளே நிறைவேற்றி வைக்கும் நோக்கில் அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று வந்தான் நீரஜ். 

 

              - தொடரும்

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 4 days ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page