About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
வணக்கம் தோழமைகளே,
வனமாலி இனி உங்களுக்காக தளத்தில் ... 😊
வனமாலி
’’ கான சிந்தூரி….’’
சுவர்களில் எட்டிமோதிய சத்தம், அறைக்குள் எட்டும்போது முகத்தில் ஒப்பனையை முடித்துக் கொண்டு கழுத்துக்கு இடம் பெயர்ந்திருந்தாள் கான சிந்தூரி.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் நெருக்கிக் கொண்டு இருந்த நகரத்தில் குறுகலான அந்த தெருவில், ஒருபக்கமாய் சாய்ந்து கொண்டு கண்ணடித்துக் கொண்டு இருந்தது ‘ ஜான்சி பெண்கள் விடுதி.’
கைப் பிடிச்சுவரில் அமர்ந்து, காலையிலேயே காதலிக்க ஆரம்பித்திருந்தார்கள் ஒருசில பெண்கள். இருக்கும் மூன்றே மூன்று குளியலறையில் எட்டு மணிக்குள் இடம் கிடைத்து விட்டால், தெருமுனை பிள்ளையார்க்கு, ஒரு தேங்காயை பரிசளிப்பதாய் வேண்டிக் கொண்டு நின்றவர்கள் இன்னும் சிலர்.
‘’கானா, உன்னை கூப்பிடறாங்க பாரு…’’ கட்டிலில் காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த, வைசாலி முகத்தை நிமிர்த்தி பார்த்துக் கேட்டாள்.
’’அது எங்களுக்கு தெரியுது. நீயேன் இப்படி குரங்கே குசாலா மாதிரி உட்கார்ந்திருக்க..? ‘’
‘’ பாத்ரூம் போகணும்டி..’’
‘’ போ, அதுக்கு ஏதாவது கெஜட்டட் ஆபிசர்கிட்ட கையெழுத்து வாங்கணுமா..?’’ ஐ லைனரை எடுத்து கோடிழுத்துக் கொண்டாள்.
‘’ ஃபுல்லா இருக்குடி. ’’
’’ எது வயிறா..?’’
‘’ வயிறும் தான். கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். உன்னை மாதிரி, மூணு மணிக்கு எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்திருக்கணும். கொஞ்சம் கனவுல ராணா கூட பிசியா இருந்துட்டேன்.’’ என்றவளை திரும்பிப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள்.
‘’ கனவிலேயே வாழ்ந்து, கனவிலேயே எல்லாத்தையும் முடிச்சிடு. கனவுல போறதா நினைச்சு, பக்கத்துல படுத்திருக்கேன். பெட்டை நாறடிச்சுடதே.’’ என்றவளின் முகத்தில் டவலை சுருட்டி விசிறி அடித்தாள்.
‘’கான சிந்தூரி….’’ எங்கோ ஒலித்த குரல், மூச்சிரைக்க மாடியேறி வந்து வாசலில் நின்று அழைக்க, கொஞ்சம் பவ்யமாகி பயந்த மாதிரி முகத்தை மோல்டில் போட்டுக் கொண்டு முன்னே வந்து நின்றாள்.
‘’சொல்லுங்க மேடம். கூப்பிட்டீங்களா..?’’
‘’அப்ப, கூப்பிட்டது உனக்கு கேட்கல அப்படித்தானே..? இதை நான் நம்பணும். பாத்ரூம்ல இருக்கிற பக்கெட்டுல துணியை ஊற வச்சிட்டு வெளக்கெண்ணை மாதிரி போயிட்டா, மத்தவங்க எப்படி யூஸ் பண்றது..? எத்தனை தடவை உனக்கு டிசிபிளினை மெயிடென் பண்ணச் சொல்லி சொல்லியாச்சு. இப்படியே போனால், பெட்டியைத் தூக்கி வெளியே வச்சிட வேண்டியதுதான்.’’ கண்ணாடியை மேலேத்திக் கொண்டு சொன்ன மாலதி அக்காவை சிரிக்காமல் பாவமாய்ப் பார்த்தாள்.
‘’பெட்டியைத் தூக்கி வெளியே வைக்கிறதுக்கு பதிலா, ஊறவச்ச துணியை ரெண்டு கும்மு கும்மி, காயப் போட்டுட்டா, ரெண்டு பேரோட பிரச்சனையும் ஒரே நேரத்துல சரியாகிடும்லக்கா.’’ என்றவள் கன்னத்தில் ஒரு இடி விழுந்தது. வேகமாய்த் தேய்த்துக் கொண்டாள்.
‘’திமிரா..? இன்னும் போனமாசம் ஹாஸ்டல் பீசே கட்டல நீ. எனக்கென்னடி தலையெழுத்து உனக்கெல்லாம் வடிச்சுக் கொட்ட..? இதுல உன் அழுகுத்துணியை வேற நான் துவைச்சு போடணுமாக்கும்..? பிய்ச்சுடுவேன் பிய்ச்சு…’’ மாலதியின் கோபம் தலைக்கேற வார்த்தைகள் தடிமனாய் வந்து விழுந்தது.
கான சிந்தூரியின் கண்கள் கொப்பளித்துக் கொள்ள, மாலதியின் முகம் ஒரு நிமிசத்தில் நிறம் மாறியது.
‘’சரி, என்ன இந்நேரத்துலயே கிளம்பிட்டே..? சாப்பிட்டியா..,? இட்லி பிடிக்காதே,தோசை ஊத்தச் சொல்லி சாப்பிட்டு இருக்கலாம் இல்ல..’’ வார்த்தைகளில் வலியும் தந்து, மருந்தும் தந்த மாய வித்தையை என்னவென்று சொல்வது..?
பின்னே திரும்பி வைசாலியை பார்த்து கள்ளத்தனமாய்ச் சிரித்தாள் சிந்தூரி.
முறைத்து பார்த்த வைசாலி, இவள் மீதெறிய பொருளைத் தேட, அமைதியாக அறையை விட்டு வெளியில் வந்தாள். எல்லா அறைகளிலும் பரபரப்பு பற்றிக்கொண்டு இருந்தது. ஆங்காங்கு பால்கனி சுவரில் அமர்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டு பல பெண்கள் பாத்ரூம் கிடைக்க தவமிருந்தார்கள்.
அத்தனை பேருக்கும் கையாட்டிக் கொண்டே சாப்பாட்டு அறைக்கு வந்தாள்;
வழங்கப்பட்ட நான்கு இட்லிக்கு பழக்கப்பட்டு இருந்தது வயிறு. அத்தோடு நிறுத்திக் கொள்கிறது பசி, கையிருப்பை எண்ணி.
இவள் வராண்டாவிற்கு வர, வாட்ச்மேனுடன் விவாதத்தில் இருந்த மாலதியின் முகம், இவளைக் கண்டதும் கனிந்து போனது.
‘’ தோசை சாப்பிட்டியா..? இல்ல இட்லிதானா..?’’
‘’ இட்லி போதும்கா.’’
‘’ஏன் என்மேல கோபமாக்கும்..? நான் இதை சேவையா செய்தால் கண்டிப்பா உன்னைக் கண்டிச்சு காசு கேட்டிருக்க மாட்டேன். இது தொழில். உனக்குமட்டும் சலுகை காட்ட முடியாதுல..? அதேநேரம் ஏனோ உன்னை கண்டிக்கவும் முடியல.’’
‘’காசு குடுத்து தங்கினாத்தான் இது ஹாஸ்டல். இல்லாட்டி இதுக்கு பேர் அனாதை இல்லம்..! எனக்கும் அது தெரியும்கா. தம்பி அவசரமா பணம்கேட்டு ஃபோன் பண்ணிட்டான். அதான் அனுப்பி வச்சிட்டேன். கண்டிப்பா ஓவர் டைமாவது பார்த்து உங்களுக்கு பீசை கட்டிடறேன். நான் வரட்டுமா..?’’ துப்பட்டாவை சரிசெய்துகொண்டு பெரிய இரும்பு கேட்டை திறந்துகொண்டு தெருவில் அடியெடுத்து வைத்தாள். கதையின் நாயகி.
மாலதி சின்ன பெருமூச்சை சிந்திக்கொண்டே அங்கிருந்து உள்ளே நகர்ந்தாள்.
எட்டைத் தொட்டு நேரம் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. நீண்ட கொஞ்சம் விசாலமான தெரு.ப்ளாட்டுகளும், சிறு வணிக கடைகளும், வழி நெடுகிலும் இருக்கும். தெருவை விட்டு வெளியில் வந்தால், நெடுஞ்சாலை. வீரிட்டு பறக்கும் வாகனங்கள். வலப்பக்க திருப்பத்தில் பஸ் ஸ்டாண்டும், இடப்பக்க திருப்பத்தில் ஆட்டோ ஸ்டாண்டும் இருக்கும்.
அத்தனையும் பரிட்சயப்பட்ட முகங்களாக பார்ப்பது ஏதோ உள்ளுக்குள் பாதுகாப்பு உணர்வு.
ஆட்டோ ஸ்டாண்டில் அந்த காலையிலேயே கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டுக் கொண்டிருந்தார்.எப்.எம் ரெயின்போவில் எஸ்.ஜானகி.
ஒன்பதாவது உலக அதிசயமாக கூட்டம் அதிகமில்லை பஸ்ஸில். ஜன்னலோர இருக்கைக்கு மின்னலாய்த் தாவி, அமர்ந்து கொண்டாள். மிகச்சரியாய் அலைபேசி அழைத்தது.
சரவணன்..! சின்னதாய் முகத்தில் சிரிப்பு வெட்டியது. அதேநேரம் பேருந்தும் மிகச்சரியாய் குலுங்கி கிளம்பியது.
‘’ சரோ, என்னடா இந்நேரத்துக்கே பண்ணி இருக்கே..? காலேஜ் போகல..?;;
‘’ பஸ்ல தான் சிந்து இருக்கேன்.’’
‘’ ஐய்..! சேம் பின்ச்.., நானும் பஸ்ல தான் இருக்கேன். வீட்டில சித்தி, பூரணி எல்லாம் எப்படி இருக்காங்க..?’’
‘’ரெம்ப நல்லா இருக்காங்க. சும்மா உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு. அதான்…’’
‘’ டேய் கேடி, நீ இப்போ வலது காதுல போனை வச்சிட்டு இடது கை நகத்தை பார்க்கிறியா..’’
‘’ அய்யோ எப்படி டி..? என் எக்ஸ்ரே கண்ணே…’’
‘’ போடா முட்டாள். நீ ரெம்ப குழைஞ்சா இதான் உன்னோட மேனரிசம். எனக்கு உன்னைத் தெரியாது..! சரி சொல்லு என்ன வேணும்..?’’ அத்தனை அன்பும் அந்த கடைசி வார்த்தையில் மொத்தமாய் ரசமாக இறங்கி இருக்க, சரவணனின் கண்கள் நெகிழ்ந்து கொண்டது
‘’ ஒண்ணும் வேணாம் சிந்து… சும்மாதான்… பாட்டுக் கேட்டனா உன் நியாபகம் வந்திடுச்சு…’’ குரல் அவனின் நெகிழ்ச்சியைக் காட்டிக் கொடுத்தது.
‘’ என்ன பாட்டுடா…’’
‘’ நானொரு சிந்து… காவடிச் சிந்து…’’
சென்னையும், அருப்புக் கோட்டையும் மொத்தமாய் மெளனமாகிக் கொண்டது இப்போது.
‘’ சிந்து…’’
‘’ ம்….’’
‘’அமைதியாயிட்டயே…’’
‘’என்னத்தைச் சொல்றது..? சரி சரி. பாட்டுக் கேட்டுட்டு இருக்காம காலேஜ் போய் ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு. எனக்கு நீ தரவேண்டிய பாக்கி ஏறிட்டே போகுது.! ஒரு லட்சத்து முப்பதாயிரத்தி ஏழுநூத்தி முப்பது ருபாய். கூடப்பிறந்த பாவத்துக்கு ஏழுநூத்தி முப்பது வேணா தள்ளுபடி பண்ணிடு. மீதியை செட்டில் பண்ணுடா சீக்கிரம்.’’
அவள் அடித்த ஜோக்கில் அருப்புக்கோட்டை லேசாக, சென்னையில் சின்னதாய் தென்றல் அடித்தது இதழோரம்.
‘’ ஸ்டாப்பிங் வந்திடுச்சு. நான் அப்புறம் பேசறேன்.’’ இணைப்பை துண்டித்து விட்டு பைக்குள் அலைபேசியை பத்திரப்படுத்திக் கொண்டாள்.
காலியான பக்கத்து சீட்டை ஜாலியாக பார்த்தாள். பக்கத்தில் துணை இல்லாத பேருந்து பயணம் காலை நேரத்தில் வரம். தான் இறங்கும் வரைக்கும் அந்த இருக்கை காலியாக இருக்கவேண்டும் என்று பேருந்து ஓட்டத்தில் கடந்துபோன திருச்சபை தேவாலயத்தில் விண்ணப்பம் வைத்தாள்.
ஆனால், அவள் பயணம் முழுக்க பக்கத்து இருக்கை காலியாகவே தான் இருக்கப் போகிறது என்பதுதான் அந்த தேவனின் தீர்ப்பு என்பது அவள் அறியாதது.
தி.நகரில் இறங்கி அப்படி இப்படி நாலைந்து திருப்பங்களில் போக்கு காட்டிவிட்டு. ராஜாபாதார் தெருவிற்குள் நுழைந்தாள். பெரிய போர்ட்டிக்கோவும், வெளியில் நின்ற கார்களும் அவளை வரவேற்றது. நிற்க. அவள் இல்லாமல் யார் வந்தாலும் அவை வரவேற்கத்தான் போகிறது.
ஒற்றை இறக்கை கொண்ட நீல வண்ணப் பறவையின் தலையில் ஒரு பந்தைச் சுமப்பது போன்ற லோகோவின் கீழ், நிலா எப்,எம் என்ற மெர்குரி எழுத்துக்கள் பகலிலேயே மின்னியது.
ஐடி கார்டை எடுத்து மிசினில் தேய்த்து தன்னை ருஜுபடுத்திக் கொண்டு உள்ளே நடந்தாள்.
பெரிய ஹாலை மடக்கிக் கொண்டு நிறைய நிறைய அறைகள், ஒவ்வொரு அறைக்கும் பெயர் அதனதன் முகப்பில் நீல நிறத்தில் எழுதப்பட்டு இருந்தது.
‘’ சிந்தூரி…’’ குரல் கேட்டு திரும்பிப் பார்த்தவள் முகம் நொடியில் மலர்வை நாட, நிகழ்ச்சி தயாரிப்பாளர் நான்சி மேடம் இவளை நோக்கி வந்தார்.
‘’ எத்தனை மணிக்கு உனக்கு இன்னைக்கு ப்ரோக்ராம் இருக்கு..?’’
‘’ பதினொன்று டூ பனிரெண்டு மேடம். அப்புறம் ஈவினிங் ஃபோர் டூ ஃபைவ்.’’
‘’முடிச்சிட்டு வாங்க. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அபிசியல் ஓர்க் இருக்கு அதையும் முடிங்க, எடிட்டிங்கல கணேசன் நிற்கிறாரு, அவருக்கு கொஞ்சம் கைட் பண்ணுங்க. நம்ம யாரும் நிற்காததால, போன சமையல் நிகழ்ச்சியை சொதப்பி வச்சிருந்தாரு. தேவையில்லாத பகுதிகளை பன்ச் பண்ணி எடுத்திடச் சொல்லுங்க. ‘’ அவர் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருக்க, அத்தனையையும் காதிலும் மனதிலும் ஏற்றிக் கொண்டு தலையசைத்தபடி நடந்தாள்.
மார்பிள் தரைகளில் நிழலுக்கு பதில் இவர்கள் முகங்களே விழுந்து கிடந்தது.
மிகச் சரியாய் அலைபேசி சத்தம் காட்டி சிணுங்க பேச்சு இடை வெட்டியதில் கொஞ்சம் எரிச்சலாய் பார்த்தார் நான்சி. சன்னமாய் உதடு கோணி சிரித்துக் கொண்டாள்.
‘’ சாரி மேம்..! ‘’ என்றாள் வேகமாய் அலைபேசியை எடுத்து அதன் குரல்வளையை அடைத்து பூட்டி வைத்தாள்.
‘’ மூணு வருசமா இங்கே வேலை செய்றே. உன்னுடைய சின்சியாரிட்டி, டெடிகேசன் இதைப் பார்த்துத் தான் உனக்கு இங்கே அறிவிப்பாளர் வேலையோடு நிற்காம அபிசியல் ஓர்க்கும் தந்தது. ஆனால் அப்பப்போ நீ சிறுபெண்ணுனு காட்டிடற..’’ நான்சியின் குரலில் இருந்த கண்டிப்பு, சரோஜ் நாராயண் சாமியை நினைவூட்ட, முட்டி வந்த சிரிப்பை பற்களுக்குள் கட்டிப் போட்டுக் கொண்டு நின்றாள்.
‘’இங்கே எல்லா ரூம்லயும், ஏதாவது ஒரு நிகழ்ச்சியோட, ரெகாடிங் போயிட்டு இருக்கும். என்னதான் சவுண்ட் ப்ரூப் ரூம்ல இருந்தாலும், சட்னு கதவை திறந்தால், வெளியில் இருக்கும் சத்தம் உள்ளே கசியும். அது எடிட்டிங்ல ம்யூட் பண்றது பெரிய தலைவேதனை. அதனாலதான் இங்கே எல்லாரையும் மொபைலை வைப்ரேசன்ல போடச் சொல்றது. பேசறதாக இருந்தா வெளியில போய் பேசுங்கன்னு சொல்றது.’’ நூத்தி பத்தாவது முறையாய் அதே பல்லவியை சுதி தப்பாமல் பாட, தோளைக் குலுக்கிக் கொண்டு மன்னிப்பு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளுடைய அன்றாடம் அலைகற்றைகளின் ஒலிக்கற்றைகள் வழியாக ஊசலாட ஆரம்பித்து விட்டது.
நிறைய மரங்கள் அப்பிக் கிடந்த வெளிப்பகுதிக்கு வந்தாள். நீண்ட சிமெண்ட் பெஞ்சுகள், காய்ந்து போன பறவை எச்சத்தோடு படுசுத்தமாக இருந்தது. இலைகள் மோதும் சத்தம் கிலுகிலுப்பை ஆட்டுவது போல் இருந்தது.
பையை எடுத்து நிதானமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
வனமாலி…’ என்ற பச்சை நிற எழுத்துக்கள் ஒளிர்ந்து அடங்கி இருந்தது. தன்னால் ஒரு புன்னகை இதழில் படிந்தது…
“.....எழில்தரும் ஜோதி
மறந்திடுவேனா
இகமதில் நானே பிரிந்திடுவேனா
என்னை மனம் நாடிட சமயம் இதானா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா அழைக்காதே.., நினைக்காதே… அவைதனிலே என்னையே ராஜா…
ஆருயிரே உன்னையே மறவேன்….’’
கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..
வனமாலி - 2
ரத்னா கபேயில் பூரி செட்டும், காப்பியோடும் தன்னுடைய டிபனை முடித்துக் கொண்டான் வனமாலி. காதில் மாட்டியிருந்த ஹெட்செட் வழி, பதினொரு மணிக்கு அலைவரிசையில் வந்து அத்தனை பேரிடமும் தேன்குரலில் பேசிக் கொண்டு இருந்தாள் சிந்தூரி.
ஊரெல்லாம் ஒலிக்கும் அந்தக் குரல் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற சிந்தனை வந்தபோது நடுப்பகலிலேயே மனசில் காதல் நர்த்தனமாடியது.
‘’…. யாருங்க பேசறது..?
‘’ கொண்டித்தோப்பில இருந்து மகாலட்சுமி…’’
‘’ வாவ், மகாலட்சுமி. உங்ககூட பேசறது ரெம்ப சந்தோசம். சொல்லுங்க மகாலட்சுமி, என்ன செய்துட்டு இருக்கீங்க..?’’
….இப்படியாக ஆரம்பித்து ஏழு நிமிடங்கள் அந்த கொண்டித் தோப்பிடம் தேவையே இல்லாத அத்தனை என்கொயரிகளையும் செய்து முடிக்க, கடைசியில் அவள் சின்னதம்பியில் இருந்து போவோமா ஊர்கோலம்..’ பாட்டை விருப்ப பாடலாக சொல்லி முடிக்க, வெளியாகிய முப்பது வருசத்தில் முப்பத்தியொரு லட்சத்தியாவது முறையாக அந்தப்பாடல் வானொலியில் தவள, பாடலை மியூட்டில் போட்டு விட்டு, ஹோட்டலை விட்டு வெளியில் வந்தான்.
அம்மாவிடம் இருந்து அழைப்பு வர எப்.எம் தன்னால் விலகி வழிவிட்டது.
‘’ மா..!’’
‘’மாலி. எப்படி இருக்கே..? எங்கே இருக்கே..? சாப்பிட்டியா..?’’
அம்மா அம்மாதான். ஆயிரம் வரட்டும். அம்மாவுக்கு சமமாக ஒரு அரும்பளவு உறவைக் கூட உற்பத்தி செய்து விட முடியாதுதான். முகத்தில் அறைந்தது, முன் உச்சி வெயிலைப் போல நிஜம்.
‘’ மாலி..’’
‘’இருக்கேன்மா. இப்பத்தான் சாப்பிட்டேன்.’’
‘’காலைச் சாப்பாட்டையா..? மணி பனிரெண்டு ஆகப்போகுது. இப்பத்தான் காலையில சாப்பாடு சாப்பிடறியா..? என்னப்பா நீ..? உனக்கு என்ன தலையெழுத்தா அங்கெல்லாம் போய் சீரழிய..?’’ அம்மா அழுகைக்கு முன் கட்டத்தில் இருந்தாள்.
‘’ காலையில இருந்து நாலு டீ ஆச்சுமா. பெருங்களத்தூர் பேக்டரியில கூட்ஸ் இன்னைக்கு டிஸ்பேட்ச் பண்ணனும். இப்பத்தான் திரும்பி வந்தேன். இன்னும் ரூமுக்கு கூட போகல…’’ பேசும்போதே கொட்டாவி ஒன்று கடந்து போனது.
‘’மாலி…’’ அம்மா அழைத்தபோது நெகிழ்வாய்ப் போனது அவனுடைய இதயம்.
‘’ சொல்லுங்கமா.’’
‘’ திரும்பி வந்துடேன். இங்கே ஆள ராஜ்யம் இல்லை. ஆனால் இப்படி அவதியும் படவேண்டாம் இல்ல. கொஞ்சமாய் நிலமிருக்கு. வீடிருக்கு. தடுக்கி விழுந்தால் தாங்கிப் பிடிக்க சொந்தம் இருக்கு. இத்தனையும் இருக்கும் போது நீ அங்கே இருக்கிறது ரெம்ப கஷ்டமா இருக்கு தம்பி.’’
‘’எனக்கு வைராக்கியமும் இருக்குமா, சரி என்னை விடுங்க. நீங்க எப்படி இருக்கீங்க..?’’ பேச்சை மாற்றினான்.
சரஸ்வதி அடுத்த இருபது நிமிடங்கள் பேசி ஓய்ந்தபிறகு எப்,எம். தன்னால் உயிர்பெற்று எழ, அதற்குள் சிந்தூரியின் நிகழ்ச்சி முடிந்து போய் இருந்தது.
சின்ன தலைகுலுக்கலுடன் வண்டியை எடுத்துக் கொண்டு போக்குவரத்தில் கரைந்தான்.
❤️
கே. கே நகர் சாரதா அவென்யூ. மொட்டை மாடியில் வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது தென்னங்கீற்றுகள். அவற்றை நகத்தால் கீறி கீறி கிழித்து தோரணம் கட்டிக் கொண்டு இருந்தாள் சிந்தூரி.
அவளுக்கு காப்பியை கொண்டு வந்து நீட்டிவிட்டு சேரை இழுத்துப் போட்டு அவளுக்கு முன்னாக அமர்ந்து கொண்டான் ரியாஸ்.
‘’சிந்தூரி, முதல்ல எந்துரி. நீ கிழிச்சு தோரணம் கட்ட, அது உன் வனமாலி இல்லை..! முதல்ல இந்த காப்பியைக் குடிச்சிட்டு எழுந்திருச்சு உன் ஹாஸ்டலுக்கு ஓடு…’’
‘’ அவன் எப்ப வருவான்..?’’
‘’ என்னை கேட்டா..? காலையில ஏழு மணிக்கு போனான். இன்னும் ஆள் அரவமில்லை. அந்த கெமிஸ்ட் பேக்டரியை இவன் தான் தலையில தூக்கி வச்சு கரை சேர்க்கிற மாதிரி… ‘’
கடிகாரத்தை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள். மணி எட்டு. கிளம்ப வேண்டும். அவனை பார்க்காமல் போகவும் மனசு மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது.
நான்கு வீடுகள் தள்ளி ஏதோ ஒரு ப்ளாட்டில், வாட்ச்மேனின் அலைபேசியில் ஓரே வானிலே, அதே வெண்ணிலா…’ ஜென்சி குரலிலேயே பியானோ வாசித்துக் கொண்டு இருந்தார்.
மொட்டை மாடி, கொட்டிய காற்று, விட்டு விட்டு தாலாட்டிய பாடல் வரிகள், கண்கள் தன்னால் சொருகிக் கொண்டது.
‘’ இட்ஸ் யூனிக்…’’ இதழ்கள் தன்னால் அசைய, அந்த இதழ்களுக்கு அருகே.
‘’ நான் தானே…’’ என்ற குரல் கேட்க, இமைகள் இரண்டும் தந்தியடிக்கும் வேகத்தில் பிரிந்து நின்றன.
குறும்பும், குழந்தைத்தனமும் முகத்தில் போட்டியிடும் வனமாலி… கண்ட நாள் முதல் காதல் பெருகிய வனமாலி… எந்த எதிர்கேள்வியுமே இவளுடைய இதயம் கேட்காமல் ஏற்றுக் கொண்ட வனமாலி…
‘’ மாலி…’’ என்றாள் அனிட்சையாக.
‘’ சொல்லுங்க தோழி…’’ இரண்டு கைகளையும் சுவற்றில் வைத்து ஊன்றி கைப்பிடிச்சுவரில் அமர்ந்து கொண்டான். பதறிப் போய் பார்த்தாள்.
‘’எதுக்கு இப்படி உட்கார்றே மாலி… பயமா இருக்கு…’’
‘’ நீ பயப்படும் போது இன்னும் ஒரு டெசிபல் அழகா இருக்கே சிந்தூர்…’’ மெல்ல அவளை தன் அருகில் இழுத்து தலையோடு தலை சேர்த்து அன்பு செய்ய, அவள் முகம் செம்மையானது.
‘’ இரண்டு நாளாச்சு உன்னைப் பார்க்க முடியல. ரெம்ப கவலையா இருந்தது எனக்கு. ஒரு ஃபோன் கூட பண்ணல…’’
‘’கொன்னுடுவேன் உன்னை. காலையில கால் பண்ணா, பக்கி சுவிட்ச் ஆஃப் பண்றே…’’
‘’நான் ஸ்டேசன்ல இருந்தேன்டா.. நான்சி மேடம் கத்தி ஓய்ஞ்சாங்க.’’
‘’ஊர்ல இருக்கிற அத்தனை பேரும் உன்கிட்ட கால் பண்ணி வழியறாஙக. அதை நான் கேட்டு தலையாட்டணும். என்கிட்ட பேச மேடத்துக்கு நேரமில்லை.’’ அவன் பொய்யாய் முகம் திருப்ப, சட்டென்று அவன் சட்டையை பற்றி இழுத்து தரையில் நிறுத்தி அவனுடைய மார்பில் முகம் புதைக்க, அவன் மொத்த உலகத்தில் சந்தோசமும் இவ்வளவுதான் என்று சொன்னதுபோல் மனம் லயித்தது.
கண்களை மூடிக்கொண்டு அவள் தலை வருட. சில வினாடிகள் ஒருவருக்கு ஒருவராக கவிழ்ந்து காணாமல் போய்க் கொண்டு இருக்க,
‘’அய்யய்யோ, ஒரு பேச்சிலர் பையன் சாபத்தை வாங்குறாங்களே…’’ ரியாஸின் சத்தம் கேட்டு இருவரும் வேகமாக பிரிய, பின்னந்தலையில் தட்டிக் கொண்டு அசட்டுத்தனமாக சிரித்தான்.
‘’நீ ஏன்டா இந்நேரத்துக்கு இங்கே வந்தே..? காதல், குடும்பம் எல்லாம் இல்லாதவனுக்கு ராத்திரி எட்டு மணி வரை முழிச்சிருக்கிறதுக்கு என்ன வேலை. போய் தூங்கித் தொலைடா…’’
‘’ அதுசரி. அப்போ நான் போய் தூங்கறேன். நீ ராத்திரி ஏதாவது ரோட்டு கடையில போய் கொட்டிக்க. யம்மா தாயே. அந்த காப்பி குடிச்ச டம்ளரை வாங்கத்தான் வந்தேன். அப்புறம் எப்ப காதலனைப் பார்க்க வந்தாலும் வெறுங்கையில தான் வரணும்னு எந்த சட்டமுமில்லை. ஒரு சாத்துக்குடி, ஆப்பிள். கூட வாங்கிட்டு வரலாம்.’’ என்றவன், மாலி அடிக்க வருவதிற்குள் இடத்தைக் காலி செய்து இருந்தான்.,
இருவரும் பேசிக் கொண்டே கீழே வந்திருந்தார்கள். கொஞ்சம் பணப் பசையுள்ள ஏரியாதான். பெரிய பெரிய பங்களாக்கள். ஒன்றொன்றை ஒன்று விஞ்சிக்கொண்டு இருந்தது பகட்டில். கேட் தோறும் கூர்க்காக்களும் டாபர்மேன்களும் தவறாமல் இருந்தது.
‘’ வண்டி எடுக்கவா..?’’ என்றான் பாக்கெட்டை தடவிக் கொண்டே.
‘’ எதுங்க சார். உங்க லேட்டஸ் மாடல் பிஎம் டபிள்யூ எம் டூ வைங்களா சார்..? ‘’ நாக்கை கன்னத்தில் உருட்டி கேட்டவளை அசடு வழியப் பார்த்தாலும், முகம் உயர்த்தி கண்களில் தன்னம்பிக்கையைத் தேக்கி வைத்துக் கொண்டு சொன்னான்.
‘’கண்டிப்பா ஒருநாள் அதுவும் நடக்கும். அப்ப என் பக்கத்துல நீ உட்கார்ந்திருப்பே. என்னை இத்தனை கேலி பண்றே இல்ல… உன்னைத் திரும்பிக்கூட பார்க்காம போவேன் இரு…’’
அவள் பெரிதாய் சிரித்தாள்.
‘’ எதுக்கு சிரிப்பாம்…’’
‘’ நீ சொன்னது மட்டும் நடக்காது மாலி.’’
‘’ அடிப்பாவி, நான் கார் வாங்கவே மாட்டனா…’’
‘’ வாங்குவீங்க. ஆனால் என்னை திரும்பி கூட பார்க்காம போறது நடக்காது.
‘’அவ்வளவு நம்பிக்கையா என்மேல…’’
அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் சின்ன புன்னகையுடன் நெருங்கி நின்றாள். அரவம் குறைந்த சாலையின் தனிமை இவர்களுக்காக மட்டுமாய் இருப்பது போல் இருந்தது.
‘’ நடந்து போகலாம் மாலி. பஸ் பிடிச்சுகலாம்.’’ தெருவில் இறங்கி நடந்தார்கள். தார் பூசிய மளமளப்பான சாலைகள் இருட்டில் இன்னும் பளபளப்பாய் இருந்தது.
நான்காவது ப்ளாட்டை கடக்கயில் வாட்ச்மேன் அலைபேசியில் இன்னுமொரு காதல்பாடல்ளின் வரிகள் இடையில் ஓடிக்கொண்டு இருந்தது. இருவரின் கரங்களும் தன்னால் பிணைந்து கொண்டது.
அர்த்தமுள்ள் புன்னகை இருவரின் இதழ்களிலும்… அரவற்ற சாலை, அழகான இருட்டு, அவர்களுக்காக ஒலிக்கும் காதல் பாட்டு. எதிர்த்தார் போல் இவர்களோடே ஓடிவரும் நிலா… பாதையும் பாடலும் சமதூத்தில் கரைந்தது.
மெயின் ரோட்டிற்கு வந்து கையேந்தி பவனில் இடியாப்பமும், பாயாவும் சாப்பிட்டுக் கொண்டார்கள். வண்டியைச் சுற்றி சிதறிக் கிடந்த வெளிச்சமும், குழுமியிருந்த கூட்டமும், எலும்புக்கு காத்திருந்த தூரத்து நாய்களும், வண்டியில் ஒலித்த ஹிந்தி பாடல்களும்…
‘… பாஜிகர் ஓ பாஜிகர்… து ஹை படா ஜாதுகர்…’ அர்த்தம் தெரியாமலே கூடவே பாடத் தெரிந்தது பலருக்கு.
இந்த உலகம் ஏன் இத்தனை அழகாய் இருந்து தொலைக்கிறது… இருவருக்கும் ஒருசேர சிந்தனை வர, வந்த வேகத்தில் இருவரும் பரஸ்பரம் பார்த்துக் கொள்ள, சிரிப்பு வந்தது இருவருக்குமே.
‘’ மாலி, இந்த வாரம் ஊருக்கு போகணும்…’’ என்றாள் அங்கிருந்து பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது.
‘’ என்ன திடீர்னு..?’’
‘’ காலையில சரவணன் ஃபோன் பண்ணி இருந்தான் மாலி, ஏன்னு தெரியல அவன் குரலே சரியில்லை. என்னை ரெம்ப மிஸ் பண்றான்னு தோணுது. போயிட்டு வந்துடட்டுமா…’’ கைகளை பற்றிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்திருந்த முகத்தை நிமிர்த்தி அவள் கேட்டபோது, அந்த முகத்தில் நிறைந்திருந்த கனிவில் அவன் வார்த்தைகளை தொலைத்து விட்டு அமர்ந்திருந்தான்.
’’நான் வரட்டுமா சிந்தூர்..? ‘’
‘’வேற வினையே வேணாம். நான் பார்த்துக்கறேன்.’’ அவன் தோளிலேயே சின்ன உறக்கத்திற்கு போயிருக்க, நிறுத்தம் வந்தபோது அவன் தான் தட்டி எழுப்பி விட்டான். ஹாஸ்டல் வாசலில் வந்து விட்டு விட்டு, திரும்ப எத்தனித்தவனை பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டே நின்றாள்.
‘’ அட..! என்ன பார்வை இது..! நான் திரும்பி போக வேண்டாமா..?’’
‘’ தனியாத் திரும்பி அத்தனை தூரம் போகணுமே ரெம்ப கஷ்டமா இருக்கு. நான் வேணா வரட்டுமா மாலி…’’ என்றாள் குழந்தை போல.
‘’ ஏதே..! நானும் நீயும் மாத்தி மாத்தி இப்படி ஒருத்தரைக் கொண்டு வந்து இன்னொருத்தர் விடற விளையாட்டை விளையாடிட்டு இருந்தா விடிஞ்சிடும். மறுபடியும் இடியாப்பம் பாயா சாப்பிட்டு அப்படியே வேலைக்கு போயிடலாம்.’’ என்றவன், பற்றி இருந்த கைகளில் ஒரு அழுத்தத்தை தந்துவிட்டு திரும்பி நடக்க, ஹாஸ்டலுக்குள் திரும்பியவளை
‘’ நில்லு கான சிந்தூரி…’’ மாலதி அக்காவின் அழுத்தமான குரல் தடுத்து நிறுத்தியது.
திரும்பிப் பார்த்து சிரிக்க முயன்று மாலதியின் முக கடுமையில் அமைதியாக, ஒற்றை விரலை அசைத்து தன்னை பின் தொடரச் சொல்லி விட்டு முன்னே நடந்தாள்.
சின்ன ஜீரோ விளக்கின் வெளிச்சத்தில் இருளை கலைத்து விட்டது போல் மங்கலாக இருந்தது சின்ன வெளிச்சம்.
தன்னுடைய அறைக்கு அழைத்துப் போக, மெளனமாகவே நின்றாள்.
‘’ மணி என்ன சிந்து இப்போ..?’’
‘’பத்தரை ஆகுது மாலதிக்கா.’’
‘’ பலமுறை சொல்லியும் நீ உன்னை சரியாக்கிக்கல. நீ இங்கே தப்பான முன்னுதாரணமா இருக்கே. உன்னை மட்டும் நான் கேள்வி கேட்கிறது இல்லைங்கிற மாதிரி ஒரு பிம்பம் இங்கே இருக்கு. அப்படி நான் எப்பவும் யார்கிட்டயும் நடந்துகிட்டது இல்ல.’’
‘’மாலியைப் பத்தி உங்களுக்கும் தெரியும்கா. அவன் ரெம்ப நல்ல மாதிரி.’’
‘’ உஷ்..! நான் உன்கிட்ட விசாரணை பண்ணிட்டு இருக்கேன். மாலி எப்படிப் பட்டவன்னு நான் விசாரிச்சுட்டு இருக்கல. உனக்குத் தெரியும், நான் நிறைய போட்டிகளுக்கு நடுவே இந்த ஹாஸ்டலை நடத்திட்டு இருக்கேன். உன்மேல வந்த சந்தேகத்தால நான் இதைக் கேட்கல. நீ இங்கே இருக்கிற மத்தவங்களுக்கு தப்பான அடையாளமாக கூடாதுன்னு கேட்கிறேன். இனிமேல் பத்து மணிக்குள்ள உள்ளே இருக்கணும். இல்லாட்டி கண்டிப்பா வெளியில் அனுப்பிடுவேன். ‘’
உறுதியான குரலில் சொன்னபோது மெல்லிய அமைதி நிலவியது இருவரின் நடுவிலும்.
‘’சாரி கா…’’ சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள். எப்போதும் இவள் தவறு செய்தால், அதட்டிய அடுத்த நொடியே அழைத்து ஆதரிக்கும் மாலதி அக்காவின் குரல் பின்னாக வரவேயில்லை…
''...பழசை நினைக்கயிலே, பாவி மக நெஞ்சு துடிக்குது…
உன்னையும் என்னையும் வச்சு, ஊருசனம் கும்மி அடிக்குது.,,
ராசாவே உன்னை நம்பி… இந்த ரோசாப் பூ இருக்குதுங்க… "
கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..
வனமாலி - 3
மெல்லிய அருவிக் கோடாய் மழை ஜன்னல் கண்ணாடிகளின் அழுக்கு கழுவிக் கொண்டு இருந்தது.
கோப்பைகளின் கழுத்துவரைக்கும் ததும்பிய தேநீர்கள் மழைக்கு மாற்று மருந்தாக அமையும் போல் தோன்றியது.
ரூம் ஹீட்டரை உயிர்பித்து அறையின் வெப்பநிலையை சீதோஷணமாக்கி வைத்தார்கள்.
மழையும் பனியும் சேர்ந்தே பொழியும் ஹுஸ்டனின் நெல்சன் பாரடைஸ் நட்சத்திர ஹோட்டலின் உயர்தர அறை அது. ஒற்றை அறையே ஒரு மொத்த குடியிருப்பின் சகலத்தையும் உள்ளடக்கி இருந்தது.
பூனைக் கண் மருத்துவ விஞ்ஞானிகள் ஸ்காட்சில் இருக்க, டாக்டர் மாதூர் மட்டும் டீயை ரசித்துக் கொண்டு இருந்தார்.
‘’அந்த ஜன்னல் கம்பிகளையே ஏன் பார்த்துட்டு இருக்கீங்க மிஸ்டர் மாதூர்..? உங்க பார்வை லயிப்பை பார்க்கும்போது உங்க மூளை ஏதோ எசகு பிசகா யோசிக்குதுன்னு நினைக்கிறேன்…’’ ஸ்காட்ச் தெறிக்க சிரித்தார் டாக்டர் டேவிட்.
“இயற்கையை எதிர்த்து நாம அரண் அமைச்சு பாதுகாத்துக்க முடியும், ஐ மீன், இயற்கைக்கு மாற்று ஏற்பாடு மனிதனால் செய்து கொள்ள முடியும்னு நீங்க நம்பறீங்களா..?’’
அத்தனை பேரும் ஆங்கிலத்தில் சிரித்தார்கள்.
‘’ ஐ திங்க். இந்த சூழ்நிலை, மழை, இதம், நம்மை சுற்றி இருக்கிற ஏஞ்சல்ஸ் எல்லாம் சேர்ந்து டாக்டர் மாதுரை பெரிய கவிஞரா மாத்திட்டு இருக்குன்னு நினைக்கிறேன்…’’ சியர்ஸ்கள் பறந்தது.
மாத்தூர் வேகமாக தலை அசைத்தார். அறிவியல் புத்தகங்களில் பார்த்த ஐஸ்டினின் படத்தின் சாயலில் இருந்தார். அல்லது விஞ்ஞானப் பூர்வமான சிந்தனைகள் உள்ளவர்கள் எல்லாம் ஒரே சாயலில் இருக்கலாம். வெள்ளை வெளேர் என்ற தலைமுடி தோளைத் தொட்டுக் கொண்டு இருந்தது… பார்ப்பதிற்கு அதுவே சிற்றருவி ஒன்று குன்றில் இருந்து வழிந்து இறங்குவது போல் இருந்தது.
எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்றார். வழிந்து கீழ் இறங்கிய மழையை கண்ணாடி வழியே மெல்லத் தடவியவர், மெதுவாக ஜன்னலைத் திறக்க, சில்லென்ற குளுமை வந்து உள்ளே இருந்த வெப்பத்தை களவாடிக் கொண்டு பறந்தது.
ஒரு முப்பது நொடிகளுக்குள்ளேயே அந்த அறையே குளுமை குடிகொள்ள,
‘’ ஹே மாதூர். என்ன பண்ணிட்டு இருக்கீங்க. ஹீட்டர் ஓடிட்டு இருக்கு…’’ குளுமையை ஒதுக்கிவிட்டு ஜன்னலை இழுத்து அடைத்தார்.
‘’ இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. இயற்கையை ஜெயிக்க முடியுமா..?’’
கூர்மையான கேள்வியால் அவர்கள் குழப்பமாய் ஒருவர் முகத்தில் மற்றவர் விடைதேடி ஆராய,
‘’ நம்ம சுற்றி இயற்கை குளுமையா வச்சிருக்கு. ஆனால் நாம கொஞ்சம் புத்திசாலித் தனதோடு யோசித்து ஹீட்டரை உருவாக்கி வச்சுக்கிட்டதாலே இயற்கையில் இந்த தொந்தரவான காலநிலையில் இருந்து நம்மை பாதுகாக்கிறோம். சோ, எல்லாத்துக்கும் மாற்று இருக்கு.’’ பென்சிலை எடுத்து தலையில் தட்டிக் கொண்டார்.
மருத்துவர்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள்.
‘’ மிஸ்டர் மாத்தூர் நிறைய சிந்திக்கிறீங்களோ…’’ சிரிப்பு மீண்டும் சிதறியது.
‘’எஸ்…இயற்கையை வெல்ல, இயற்கையின் கோரத்தின் மீது நின்று ஆதிக்கம் செலுத்த… நெஞ்சை நிமிர்த்தி மரணத்துக்கு மாற்று அறிமுகப்படுத்த….’’ மாதூரின் குரல் கூர்மையானது.
தோள்களை குலுக்கிக் கொண்டார்கள். இதொன்றும் இந்த அறை சீதோஷ்ண நிலையை மாற்றி மிஸ்டர் மாதூர் ஆட்டம் காட்டி தன் மேதாவித்தனத்தை பறைசாற்றும் விசயமில்லை. இது பேரண்டத்தில் இதுவரை பரிசோதனையிலேயே சிக்கல்களை விளைவித்து தேங்கித் தேங்கி போனநிலை.
அறைக்குள் இருந்த தொலைபேசி சிணுங்கி ஏதோ தகவலைப் பரிமாற, மருத்துவக் குழுவில் இருந்து இருவர் விடைபெற்று வெளியில் வந்தார்கள்.
அறையில் இருந்த மிச்ச நபர்களும் தகவல்களை சேகரிக்க, தத்தம் அறைக்கு நகர, இந்தியாவில் இருந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட டாக்டர் சுஷில் மாத்தூரும், பூர்வகுடி இந்தியரான டாக்டர் ஜெரால்டும் மட்டுமே அறைக்குள் மிச்சம் இருந்தார்கள்.
இன்னும் இரண்டு மணிநேரமே இருந்தது. உலக மூளை மற்றும் நரம்பியல் நிபுணர்களின் மாநாட்டிற்காக. ஹூஸ்டனின் நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாய் ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டு இருக்க, அத்தனை மூளைகளையும் வென்று சவால்விடும் மாதூரின் இந்திய மூளை மாநாட்டுக்கு தயாராகாமல் மனசெல்லாம் மழையிலேயே லயிக்க நின்றிருந்தார்.
‘’ மாதூர் ஜி… என்ன யோசனை..?’’
’’ வெளியில் மழையும், உள்ளே கதகதப்பையும் மாற்றி வைக்க முடியும்னா எல்லாமே முடியும்தானே…’’ மீண்டும் மழைக்குள்ளேயே தொலைந்து கொண்டு இருந்தார்.
‘’ மே பீ..! முடியலாம். முடியாமலும் போகலாம்.’’
‘’நெவர். அதுக்கு வாய்ப்பு இல்லை. முடியும். முடியணும்…’’ நரைத்த வெள்ளித் தலையை சிலுப்பிக் கொண்டார்.
டெல்லி சுக்லா மருத்துவமனையில் நாற்பதாண்டு கால பழுத்த அனுபவமும், இந்த ஆய்வில் அவருக்கிருந்த காதலும் உலக பிரசித்தம்.
மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி இருக்க, ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தார்கள். மருத்துவத்தை சுமக்கும் அவர்களின் முகங்களில் அத்தனை தீர்க்கம். அவர்களைப் பார்த்த டாக்டர் ஜெரால்டின் இதழ்கள் தன்னால் கேலி புன்னகையைச் சிந்தியது.
‘’ வாட் ஹேப்பண்ட் டாக்டர் ஜெரால்ட்…’’ மாதூர் மென்மையாக கேட்டார்.
‘’கான்ப்ரன்ஸ்ல இருக்கிற டாக்டர்ஸ் பார்க்கிறேன். அதான் கொஞ்சம் ஏதோ சிந்தனை…’’ திரும்பிச் சிரித்தவரைப் பார்த்து தானும் கண்களால் அந்தப் பகுதியை அளந்தவர், மெல்ல இதழ்களை நீட்டி கர்வமாய்ச் சிரித்தார்.
‘’மகத்துவமான மருத்துவம் செய்யும் காப்பாளார்கள். அதனால் அவங்க முகத்தில் கர்வம் இருக்கும் தான்.’’ மாதூர் தன்னுடைய வெண்பஞ்சு மீசையை தடவிக் கொண்டார்.
‘’ இப் யூ டோண்ட் மைண்ட். நான் கொஞ்சம் சிரிச்சுக்கலாமா…’’ என்ற ஜெரால்டின் கண்களில் மின்னிய குறும்பை ரசிக்காமல், நின்றிருந்தார் மாதூர்.
‘’ வாட் நான்சென்ஸ் திஸ்…’’
‘’ இல்ல மிஸ்டர் மாதூர். நீங்க சொன்னமாதிரி காப்பாளர்களே இத்தனை கர்வமா இருந்தா படைப்பாளர் எவ்வளவு கர்வமா இருப்பார். அதான் யோசிச்சேன்…’’
ஜெரால்டின் பதிலை ரசிக்கவில்லை டாக்டர் மாதூர்.
‘’ இது திருச்சபை கூட்டமில்லை டாக்டர் ஜெரால்ட்… உங்க பிரசங்கத்தை நிறுத்துங்க.’’
‘’ சாரி மிஸ்டர் மாதூர். மருத்துவத்தை சேவைன்னு சொன்னா, மருத்துவரா இருக்க கர்வம் கொள்ள வேண்டியதில்லை. அதேநேரம் நமக்கு மேலே ஏதாவது ஒண்ணு இருக்கிறதா நம்பணும். அது என்னுடைய பாலிசி.’’
மாதூர் முகம் திருப்பிக் கொள்ள, டாக்டர் ஜெரால்ட் அங்கிருந்து விலகி நகர்ந்தார்.
பெரிய முன்னுரையுடன் டாம்பீகமாக ஆரம்பமானது மூளையின் பெருத்த நிபுணர்களின் மாநாடு.
அத்தனை உரைகளுக்கும் இறுதியில் பேச ஆரம்பித்தார் கொக்குதலை டாக்டர் மாத்தூர்.
மெல்லிய குரலில் புலமையான ஆங்கிலத்துடன் அவர் பேச ஆரம்பித்ததும், மூலை முடுக்குகள் அந்த மூளை நிபுணத்துவனை உற்று நோக்க ஆரம்பித்தது.
‘’ மனித உடலின் செயலில் மூளைதான் பிரதானம், மூளையைக் கொண்டே உடலின் செயல் அடங்கி இருக்கிறது. மூளையோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற நியூரான்களும், எலெக்ட்ரான்களும் இருந்தாலும், அவைகளின் பிரதான செயலியே மூளை மட்டும் தான். அத்தகைய மூளை மட்டும் சேதாரம் இல்லாமல் மீட்கப்பட்டால், அது மீட்கப்பட்ட முப்பதாறு மணிநேரம் அதனை வெளிப்புற காரணிகளின் உதவியால் பாதுகாக்க முடியும். அப்படி பாதுகாத்த மூளை, மூளைச் சாவடைந்த மற்றொரு மனிதனின் உடலில் பொருத்தி அவனை உயிர்பித்து எழுப்பிக் காட்ட முடியும். இட்ஸ் சேலஜ்….’’ மாதூரின் குரலில் உறுதி கொப்பளித்தது.
❤️
டெல்லி. மியான் குதூஸ் வீதியை ஒட்டி நீண்டு வளர்ந்திருந்த தார்சாலை. இளம்பெண்ணின் அடர் கருங்கூந்தலைப் போல் நீண்டு இருந்தது.
நல்ல தித்திப்பான பணக்காரர்களின் பகுதி என்பது மேற்பூச்சு வர்ணத்திலேயே வசீகரித்தது.
கொஞ்சம் உள்ளடங்கி இருந்த பங்களாவில், தன்னுடைய பொலோரோவின் முன்னாக காத்திருந்தவன், மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக் கொண்டான்.
அவன் நிறமும் நிகுநிகுத்த உயரமும், இன்னும் வாழ்க்கையில் வறுமை என்பதை வழியில் சந்தித்தது கூடயில்லை என்று அவனுடைய போஷாக்கு சொன்னது.
‘’ அஜெய் கிளம்பிட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்…’’ உள்ளிருந்து பால்கோவா குரல் கேட்டது.
தலையை அழகாக குலுக்கி சிரித்துக் கொண்டான். கழுத்தில் படர்ந்திருந்த பச்சை நரம்புகள், உள்ளோடும் உதிரத்தை செவ்வரியாய்க் காட்டியது கண்ணாடி நிறமேனியில்.
‘’ இப்படி நீ அஞ்சு அஞ்சு நிமிசமா தவணை வாங்க ஆரம்பிச்சு, இருப்பத்தைஞ்சு நிமிசம் ஆச்சு. கமான் பேபி, மாலுக்குத் தானே போறோம்..? இல்ல எனக்குத் தெரியாம எதுவும், ஃப்யூட்டி கான்செப்ட்டுக்கு போகப் போறோமா..?’’
அவன் முடித்த நிமிசம், தன்னுடைய இறுதி சுற்று ஒப்பனையை முடித்துக் கொண்டு அப்படி இப்படி பெல்ஜியத்தில் தன்னை புரட்டி பார்த்துக் கொண்டு சின்ன புன்னகையுடன் அறையை விட்டு வந்தவளை, சோப் விளம்பரத்தில் வருவதுபோல் ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டாள் மதுரீமா.
வெள்ளை வண்ணத்து புசு புசு கவுனில், ஒரு பேரழகு துண்டுபோல் தன் காலடியில் தவழ்ந்த குழந்தையை எடுத்து தோளில் கிடத்திக் கொள்ள, இத்தனை நேரத்து அலங்காரமும் மெல்ல மெல்ல கசங்க ஆரம்பித்தது. ஆனால் அம்மா என்ற நினைப்பும், பதவியும் அவளை அலங்காரத்தை விட அழகாக மாற்றியது.
‘’ எங்கே போறோம் மம்மி…’’
‘’ மாலுக்குடா. உனக்கு நிறைய சாக்கி, வாங்கிட்டு வரலாம். டாய்ஸ் வாங்கிட்டு வரலாம்…’’ குழந்தையோடு குழந்தையாய் தன்னை உருமாற்றிக் கொண்டு இருந்தாள்.
வெளியில் வரவும், தோளை குலுக்கிக் கொண்டு மணிக்கட்டை உயர்த்திக் காட்டினான்.
‘’சாரி அஜெய்… அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.’’ அவள் சிணுங்கியபடி வண்டியில் ஏறிக் கொள்ள, வண்டியை உசுப்ப போனவனை சகுந்தலாவின் குரல் நிறுத்தியது.
‘’ அஜெய், இந்நேரத்துல எங்கே…’’ அக்காவின் அழைப்பிற்கு அனிட்சையாய் அவன் கண்கள் அபரஞ்சி மீது தவள, அவள் உதட்டை சுளித்து வெறுப்பை பதிந்தாள்.
‘’ சும்மா மால் வரைக்கும் சக்கு. பத்து பதினைஞ்சு நாளா ஓவர் ஓர்க் லோடு. இப்படி அப்படி நகர முடியல. மதுரி, ரெம்பவே ஏங்கிட்டா. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு. ஹே சக்கு நீயும் வாயேன்.’’ கையசைத்து அழைக்க, இளமையின் முதிர்வான முப்பதுகளின் மத்தியத்தில் இருந்த சகுந்தலா. மென்மையாகச் சிரித்தாள்.
இத்தனைக்கும் தன்புறமே திரும்பாமல் நின்ற அபரஞ்சியின் மீது பார்வை பதிந்து மீண்டது.
‘’ நோ நோ..! நீங்க போயிட்டு வாங்க. ஐ ஹேவ் ஏ அபிசியல் ஓர்க். கேரி ஆன்.’’ தோள்களை குலுக்கிக் கொண்டு உள்ளே நடந்தவளின் முதுகிற்கு முன்னால் இருந்த முகத்தில் வழிந்த வெறுமையை முதுகை வெறித்த அஜெய்யால் பார்க்க இயலாது தான்.
‘’கிளம்பலாமா…’’ என்றாள் அபரஞ்சி அதிகார குரலில்.
‘’என்ன பிகேவியர் அபரஞ்சி. சகுந்தலா மனநிலையைப் பத்தி யோசிக்க மாட்டியா..?’’
‘’ பட் ஒய் அஜெய்..?’’
‘’ பிகாஸ், சீ இஸ் மை சிஸ்டர்.’’
‘’அதுக்கு..? நான் எப்பவும் அவங்களுக்கு ரெடிமேட் மரியாதையைத் தரணுமா..? ஐ காண்ட்..’’ கைகளை கட்டிக் கொண்டு எங்கோ வெறிக்க, இவர்களின் வாக்குவாதத்தை தவிர்த்து, தலையில் இருந்த ப்ளாஸ்டிக் க்ளிப்பை உருவி வீசுவதில் கவனமாக இருந்தது மதுரிமா.
மெல்லிய இறுக்கம் இருவருக்கும் நடுவில் இடைவெளியை நிறைக்க, அதற்கும் அபரஞ்சிக்கு சகுந்தலா மீதே கோபம் வந்தது.
‘’எனக்கு அப்பவே தெரியும்…’’ என்றாள் அழுத்தமாக கைகளை மடக்கி நெற்றியில் தட்டிக் கொண்டு. திரும்பி ஒரு வார்த்தை கூட பேசாமல் சாலையில் கவனத்தை திருப்பி இருந்தான்
’’அஜெய் என்னை கவனிக்கிறீங்களா, இல்ல,கவனிக்காதது போல நடிக்கிறீங்களா..? ‘’
‘’கவனிக்கறேன். ஆனால் ரசிக்கல…’’ கையில் ஓடித்த ஸ்டியரிங்கில் அவனுடைய கோபத்தின் கனம் தெரிந்தது.
முகத்தை திருப்பி தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அபரஞ்சி. தீராத கோபம் அவள் முகத்தில் வளையமிட, எப்போதும் ஒரு சைலண்ட் கில்லர் போல் தன் வாழ்க்கையில் அகிம்சையாய் இம்சை செய்யும் சகுந்தலாவின் மேல் பெரும் கோபம் வந்தது.
' தன்னம் தனியே இருப்பவன் வாழ்வில் சஞ்சலம் இல்லையடா… இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா.. இத்தனை சிறிய இதயத்திலே எத்தனை சுமைகளடா… இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா…
படைத்தானே… மனிதனை ஆண்டவன் படைத்தானே...
கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..
Latest Post: காற்றின் நிறம் கருப்பு - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page