All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 07

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 16
Topic starter  

அத்தியாயம் 7

மோகனாவின் அலறலை கேட்டதும் நீரோடையின் மறுபக்கம் இருந்த அகன் பாய்ந்து ஓடிச்சென்று அவள் தொங்கிக் கொண்டிருந்த மரத்தின் எதிர் திசையில் இருந்த இன்னொரு வளைத்திருந்த மரத்தில் ஏறி இரு கால்களால் மரத்தை கவ்வி பிடித்து தலைகீழாக தொங்கினான்.

 

அதற்குள் மோகனாவின் கை நழுவ, எட்டி ஒரு கரத்தால் அவளை பற்றி தன்னை நோக்கி இழுத்தான். சாக போகிறோம் என்ற முடிவுக்கே வந்திருந்தவளுக்கு ஏதோ தேவ தூதன் தான் தன்னை காப்பாற்றுகிறானோ, இல்லை இது வெறும் பிரமையா என்று தோன்றினாலும் கண்களை இறுக மூடிக் கொண்டு தன்னை பற்றிய கரத்தை விடாமல் நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டாள்.

 

தலைகீழாக தொங்கியபடி அவளை நீரோடையின் மறுபக்கத்திற்கு தூக்கியவனுக்கு கால் இடற அவளோடு சேர்ந்து புல்தரையில் விழுந்து புரண்டான். அதில் வலியை உணர்ந்த பின்பு தான் மோகனாங்கிக்கு அது பிரமை அல்ல, நிஜம் என்று தோன்றியது. கண்களை திறந்து பார்த்தவள் அகனை கண்டதும் அதிர்ந்தாள்.

 

“நீங்க இங்கே என்ன பண்றீங்க? ஆண்களுக்கு இங்கே அனுமதி இல்லையே, எப்படி உள்ளே வந்தீங்க?” என்றாள் இளவரசியாய்

 

“இளவரசியாரே சற்று முன்பு காப்பாற்றும்படி அலறல் கேட்டது. என் உயிரை பணயம் வைத்து உங்களை காப்பாற்றி இருக்கிறேன். அதற்கு நன்றி சொல்வீர்கள் என்று பார்த்தால் இங்கே வந்ததற்காக என்னை சிறையில் அடைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று போலியாக பயந்தான்.

 

“ஆனாலும் நீங்கள் எப்படி இங்கே அனுமதியில்லாமல் வந்தீர்கள்?”

 

“கட்டாயம் பதில் சொல்கிறேன், அதற்குமுன் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்”

 

“என்ன உதவி?”

 

“நான் ஒரு சராசரி இளைஞன்”

 

“அதற்கு?”

 

“பேரழகியான நீங்கள் என் மேல் வெகுநேரம் இப்படி அரைகுறை உடையில் படுத்திருந்தால், ஒரு அளவிற்கு மேல் என்னால் நல்லவன் வேஷம் போட முடியாது. என் மீதிருந்து எழுந்து கொண்டால் பேருதவியாக இருக்கும்” 

 

அப்போது தான் அவள் இன்னும் அவன் மேல் படர்ந்திருப்பது புரிந்தது. உருண்டு புரண்டதில் அவள் ஆடை அவர்கள் இருவரையும் சுற்றியிருந்ததையும் கவனித்தாள். அதிர்ந்து போய் சடாரென்று அவள் எழுந்துக் கொள்ள, அவள் ஆடை அவனுக்கடியில் மாட்டிக் கொண்டிருந்தது. எழவும் முடியாமல் அவன் மீது படர்ந்திருக்கவும் முடியாமல் திணறினாள்.

 

“பதற வேண்டாம், நான் கண்களை மூடிக் கொள்கிறேன்” என்று கண்களை மூடிக் கொண்டான்.

 

அவசரமாக எழுந்து தன் ஆடையை அவனிடமிருந்து இழுத்து சரியாக கட்டிக்கொண்டு புடவை தலைப்பால் தன்னை முழுவதும் போர்த்திக் கொண்டாள். அதுவரை அகன் அந்த புல்தரையில் அசையாமல் கண்களை மூடி படுத்திருந்தான். ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பது போல அவன் இமைக்களுக்குள்ளே கருவிழிகள் ஓரிடத்தில் நிற்காமல் நடனமாடிக் கொண்டிருந்தன.

 

“அகன், இப்போ சொல்லுங்க, எப்படி இங்கே வந்தீங்க?”

 

“இதே கேள்வியை முதலையிடம் கேட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும்?”

அதுவும் சரிதான் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த நீரோடையில் விளையாடுவது அவளின் பொழுதுபோக்கு. எந்தநாளும் இல்லாமல் இப்போது முதலை எப்படி இந்த நீரோடைக்கு வந்திருக்கும்? யோசிக்கும் போதே அவளுக்கு புரிந்து விட்டது. அரண்மனையை சுற்றி இருக்கும் அகழிகளில் விடப்பட்ட முதலை எப்படியோ நீரோடை வழியே இங்கே வந்திருக்கிறது.

 

“முதலை எப்படி உள்ளே வந்திருக்கும் என்று எனக்கு தெரியும். இனி அது உள்ளே வராதபடி ஏற்பாடு செய்ய சொல்கிறேன். இப்போது நீங்கள் இங்கே வந்த காரணத்தை சொல்லுங்கள்” என்றாள் நிமிர்வோடு

 

“அரசர் தான் இந்த கணையாழியை கொடுத்து, இந்த நந்தவன காட்டிற்குள் வர எனக்கு அனுமதி அளித்தார். நாளையிலிருந்து உங்களுக்கு குதிரையேற்றம் முதல் அனைத்தையும் பயிற்சி அளிக்க சொல்லி இருக்கிறார்”

 

“நாளையில் இருந்து தானே பயிற்சி? இப்போது ஏன் வந்தீர்கள்?”

 

“அது, நான் வரைந்த ஓவியமே இவ்வளவு அழகாக இருக்கிறதே. ஓவியப்பாவை நேரில் எப்படி இருப்பாள் என்று பார்த்து விட சொல்லி என் மூளை அலைகழித்துக் கொண்டே இருந்தது. அது சொன்ன வேலையை செய்யா விட்டால் என்னை நிம்மதியாக தூங்க விடாது. அதனால் தான் இப்போதே காவலாளியின் அனுமதியோடு வந்தேன். வந்த இடத்தில் இப்படி ஒரு தேவி தரிசனம் கிடைக்கும் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை”

 

“அகன்! யாரிடம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைவிருக்கிறதா?” என்றாள் அதட்டலாக

 

“என் மூளைக்கு நீங்கள் இளவரசி என்று தெரிகிறது. ஆனால் என் கண்களும் மனமும் உங்களை அழகிய இளம்பெண்ணாக தானே ரசிக்கிறது? நான் என்ன செய்வேன்?” என்றான் குறுஞ்சிரிப்புடன்

 

சற்றுமுன்பு அவள் ஆடை அணியும் வரை கண்ணியவானாக கண்களை மூடி இருந்தவன், இப்போது ஏன் பிதற்றுகிறான்? என்று அவனையே ஆழ்ந்து பார்த்தாள். அவனும் அவள் கண்களை ஊடுருவி பார்த்தான்.

 

இருவர் விழிகளும் மோதிக் கொண்டன. அவன் பார்வையில் மோகனா புது வித அவஸ்தையை உணர்ந்தாள். இதுவரை இப்படி ஒரு உணர்வை அவள் அனுபவித்ததே இல்லை. கன்னங்கள் சூடாகி சிவப்பதை அவளாலே உணர்ந்துக் கொள்ள முடிந்தது. அவன் பார்வையில் புதிதாக நாணம் பிறந்தது. எதற்கு இவனை பார்த்து இப்படி ஒரு அவஸ்தை?

 

“மோகனா” மென்மையாக உரிமையாக பெயர் சொல்லி அழைத்தான்.

 

மோகனாவுக்கு தான் ஒரு இளவரசி என்ற கர்வம் எப்போதே ஓடி ஒளிந்திருந்தது. “ம்”

 

“முதலைகள் இங்கே வராதபடி மதிலை சீரமைக்கும் வரை இனி நீரோடைப் பக்கம் தனியாக வராதே”

 

“ம்”

 

“சரி நீ அரண்மனைக்குள் செல், அதன் பிறகு நான் செல்கிறேன்” என்றான் 

 

போகாமல் தயங்கி நின்றாள். என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.

 

“என் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி”

 

“நான் காப்பற்றியது என் உயிரை, இதற்கு எதற்கு நன்றி?” என்றான் பிசிறில்லாமல்

 

ஒரே வாக்கியத்தில் தன் காதலை வெளிப்படுத்தி இருந்தான். அவன் சொல்லிய வார்த்தைக்கான அர்த்தத்தை அவளால் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவன் சொல்லிய வார்த்தைகளுக்கு சம்மந்தமே இல்லாமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். தன் காதில் கேட்டது, அவன் சொன்ன வார்த்தைகள் தானா? அல்லது எனக்கு தான் வேறுவிதமாக கேட்டுவிட்டதா? என்ற குழப்பத்துடன் விழிவிரித்து பார்த்தவளிடம், “நாளை காலை பயிற்சியில் சந்திக்கலாம். நீ கிளம்பு” என்றான்.

 

அவள் ஒரு இளவரசியாயிற்றே என்றெல்லாம் யோசிக்காமல் திடமாக அகன் தன் காதலை சொல்லாமல் சொல்லியிருந்தான். அதற்கான பிரதிபலிப்பை அவள் வெட்க சிவப்பில் உணர்ந்து கொண்டான். அதனால் அவன் தெளிவாக இருந்தான்

 

மோகனாங்கி தான் குழம்பி போனாள். 

 

மறுநாள், காட்டில் காவலாளிகளுடன் முறையாக வந்தான் அகன். மோகனாங்கிக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். குதிரையில் ஏறி சவாரி செய்து காண்பித்து, குதிரையை கையாளும் முறையை விளக்கினான். கவனமாக கேட்டாலும் அவளால் குதிரையில் தனியாக சவாரி செய்ய முடியவில்லை.

 

அதனால் அகன் முதலில் குதிரையில் ஏறிக் கொண்டு அவளுக்கு கை நீட்டினான். தயங்கி நின்றவளை பார்த்து, “பயிற்சிக்கே ஆண் பெண் பேதம் பார்த்தால் போர்களத்தில் ஆண்களோடு எப்படி போரிட போகிறாய்?” என்றான்

 

அதற்கு மேல் யோசிக்காமல் அவன் கரத்தை பிடித்து குதிரையில் ஏறிக் கொண்டாள். அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் கைகளை பிடித்து குதிரையை எப்போது எந்த இடத்தில் தட்டி குறிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினான். அகன் இயல்பாக தான் இருந்தான், ஆனால் மோகனாங்கிக்கு அவனுடன் நெருக்கமாக இருந்தது சஞ்சலத்தை ஏற்படுத்தியது.

 

அதற்குபின் வாள்பயிற்சி, வேல்பயிற்சி, வில்பயிற்சி என்று ஒவ்வொன்றிற்கும் அவன் அவள் கரம் பற்றி தான் கற்றுக் கொடுத்தான். நாளடைவில் அவன் தொடுகையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டாள்.

 

தினமும் அவனோடு வாள் சண்டை போடுவதில் அலாதி பிரியம் கொண்டாள். அவளுக்காக அகன் வாள் வீச்சில் தன் வேகத்தை குறைத்திருந்தான். ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து அவளை மற்ற ஆண்களோடும் சண்டையிட வைத்தான். ஆனால் அவர்களின் கரம் மறந்தும் மோகனாங்கியின் மேல் படாமல் பார்த்துக் கொண்டான்.

 

அன்றைக்கு அவள் அழகை வர்ணித்ததோடு சரி, மீண்டும் அதைப்பற்றி அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை. கருமமே கண்ணாக அவளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வந்தான். வெகுசீக்கிரமே மகள் போருக்கு தயாராகி விடுவாள் என்பதை உணர்ந்த வேங்கையன் நிலவழகி இருவருக்குமே அகன் மேல் மதிப்பு கூடியிருந்தது.

 

அதற்கேற்றாற் போல பக்கத்து நாட்டு அரசன் போர் முரசு கொட்ட, அகன் அரசரிடம் வந்து, “அரசே நாமும் போருக்கு தயார் என்று முரசு கொட்டலாம். இளவரசியாரின் தலைமையில் நானும் நம் போர்வீரர்களும் எதிரி நாட்டோடு போரிட்டு அவர்களை துரத்தி அடிப்போம்” என்றான்.

 

மோகனாவும் அதையே தான் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். எனவே அரசும் போர் முரசு கொட்ட அனுமதித்தார்.

 

மோகனாவுக்கு ஆண்கள் உடுத்தும் உடை போல தயார் செய்து, அதை உடுத்தி வர சொன்னான் அகன். அவளும்  அதே போல உடுத்தி வர, ஏற்கனவே இருந்த போர் வீரர்களோடு போர்களத்திற்கு சென்றார்கள். அகன் உடனிருந்து வழிநடத்த மோகனாவும் அவனோடு சேர்ந்து சண்டையிட்டு எதிரி நாட்டினரை ஓட செய்தாள். 

 

வேங்கையன் போரிட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தது. இப்போது மகள் போரில் வெற்றி வாகை சூடி வரவே அகமகிழ்ந்து போனார் வேங்கையன். 

 

“அகன் நீ சிறந்த வீரன் மட்டுமில்லை, சிறந்த குருவும் கூட. கொஞ்ச நாளிலேயே என் மகளுக்கு பயிற்சியும் கொடுத்து அவளை போர்களத்தில் போரிட வைத்து வெற்றியும் பெற வைத்துவிட்டாயே” என்று அவனை கட்டு ஆரத்தழுவிக் கொண்டார்.

 

“நடந்தது மிக எளிமையான போர். வந்திருந்த அரசன் நீங்கள் எப்படியும் போருக்கு வரமாட்டீர்கள் என்று சாதாரண படையோடு வந்திருந்தான். இளவரசிக்கு இன்னும் பயிற்சி தேவை. எந்தபக்கமிருந்து தாக்கினாலும் பதில் தாக்குதல் நடத்துமளவுக்கு காதுகளை கூர்மையாக வைத்துக் கொண்டு கவனமாக இருக்க வேண்டும். அதற்கு கண்களை கட்டிக் விட்டு வில், வாள் பயிற்சி அளிக்க வேண்டும்” என்றான்.

 

“தாராளமாக பயிற்சி கொடு”

 

அந்த நேரம் அரண்மனையிலிருந்து பணிப்பெண்கள் ஓடிவந்தனர். “அரசே நந்தவனத்தில் இருக்கும் நீரோடையில் முதலைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை கரையிலும் ஒதுங்குவதால் அங்கு நடமாடவே பயமாக இருக்கிறது”

 

“என்ன? அகழியில் இருக்கும் முதலைகள் நந்தவனத்தில் இருக்கும் நீரோடைக்கு எப்படி வந்தது?” அதிர்ச்சியாக கேட்டார் அரசர்.

 

“ஆமாம் தந்தையே நான் குளிக்கும் போது கூட ஒரு நாள் நீரோடையில் முதலையை பார்த்தேன்” என்றாள் மோகனா

 

“அப்படியா? ஏன் முன்னாடியே நீ என்னிடம் சொல்லவில்லை?”

 

அதை கூறினால் அகன் அரசர் அனுமதி அளித்ததற்கு முதல் நாளே காட்டிற்குள் நுழைந்ததையும் அவளை தொட்டு தூக்கி காப்பாற்றியதையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை தந்தை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று சொல்லாமல் விட்டிருந்தாள்.

 

அவள் அகனை பார்க்க, அவனும் அவளை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன மோகனா? அப்போது சொல்லியிருந்தால் அதை நம் கட்டிட கலைஞர் விஸ்வகர்மாவை விட்டு சரி செய்திருக்கலாம் இல்லயா? அகழிக்குள் இருக்கும் முதலைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக நீரோடைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?” என்றவர் திரும்பி

 

“அகன், நீ விஸ்வகர்மாவுடன் சேர்ந்து அந்த அகழிக்கு தடுப்பு சுவர் சீரமைக்கும் பணியை கவனிக்க முடியுமா?”

 

“நிச்சயமாக செய்கிறேன் அரசே” என்று சென்றுவிட்டான்.

 

“தந்தையே, அகனை எதற்கு அங்கே அனுப்புகிறீர்கள்?”

 

“அகன் நாம் நாட்டின் தளபதி, அவன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் முதலைகளை மீண்டும் அகழிக்குள் அனுப்புவது எளிதான காரியமல்ல. அகன் போன்ற வீரனால் தான் அதை செய்ய முடியும்” என்று தீர்க்கமாய் பதில் சொன்னார்

 

அவர் இதுவரையில் யார்மீதும் இத்தனை நம்பிக்கை வைத்தது இல்லை. அகன் மீது அவ்வளவு நம்பிக்கையா? மோகனா ஆச்சரியமாக தன் தந்தையை பார்த்தாள். 

 

அரண்மனையை சுற்றி இருக்கும் பெரிய அகழியை தாண்டி வெளிஆட்கள் யாராலும் உள்ளே வரமுடியாது. அந்த பெரிய அகழி தொடங்கும் இடமும் முடியும் இடமும் அந்த காட்டிற்குள் தான். அங்கு ஒரு சுரங்கம் இருந்தது. அதன் வழியாக கோட்டையை விட்டு வெளி செல்ல முடியும். அதற்கான வழியும் அது இருக்கும் இடமும் வேங்கையன், மோகனாங்கி, கட்டிடக்கலைஞர் மூவருக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாரும் அந்த பக்கம் செல்ல கூடாது என்பதால் ஒரு நந்தவனத்தை அமைத்து, அதை இளவரசிக்கான அந்தப்புரம் என்றும் பணிப்பெண்களை தவிர எந்த ஆணும் அங்கே செல்லக்கூடாது என்று கட்டளை இட்டு இருந்தார்.

 

இப்போது அகன் மீதிருந்த நம்பிக்கையில் மோகனாவுக்கு பயிற்சி அளிக்க அவனையும் ஒரு சில நம்பிக்கைக்குரிய காவலாளிகளையும்  காட்டிற்குள் அனுமதித்தார்.

 

இப்போது அகழியை சுற்றி இருந்த தடுப்பு சுவர் உடைந்திருந்தது. அதன் வழியாக தான் முதலைகள் உள்ளே நுழைந்திருக்கிறன. ஆனால் சுவர் எப்படி உடைந்தது? என்று அரசர் யோசிக்க மறந்தார்

 

அகழியின் மதில் சுவர் சீரமைக்கும் வரை நீரோடை பக்கம் வராதே என்று அகன் மோகனாவை ஏற்கனவே எச்சரித்திருந்தான். மதில் சுவர் உடைந்திருக்கிறது அதை சீரமைக்க வேண்டும் என்று அவனுக்கு எப்படி தெரியும் என்று மோகனாவும் ஆராயவில்லை. அப்போதே ஆராய்ச்சி செய்திருந்தால் நடக்க போகும் பின் விளைவுகளை அவர்கள் தடுத்திருக்கலாம். விதியோ? சதியோ? அவர்களை சிந்திக்க விடாமல் செய்திருந்தது.

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page