All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

உன்னருகில் உன் நினைவில்

 

VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

ஹாய் மக்களே!  எல்லோரும் எப்படி இருக்கீங்க நான் தான் உங்க "உன்னருகில் உன் நினைவில்" கதையின் எழுத்தாளர் இந்த கதையிலிருந்து ஒரு சின்ன டீஸர் போட்டுருக்கேன் படிச்சிட்டு எப்படி இருக்கன்னு உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி உங்கள் தோழி VSV12

 

டீஸர்-1

"தம்பி இப்பவே உனக்கு வயசு முப்பத்தியஞ்சு முடிஞ்சிடுச்சு... இன்னும் கல்யாணம் வேணாம்னு எத்தன நாள் தள்ளிப்போட போற ய்யா நீ?? நான் முடிவு பண்ணிட்டேன் நம்ம தேன்மொழி தான் இந்த வீட்டு மருமக. தயவு செஞ்சு இந்த ஒரு தடவை அம்மா சொல்றத கேளு ராசா…" எனக் கெஞ்சிய தன் தாயை முறைத்தபடி

"உங்களுக்கு புத்தி எதனா பிசகிடுச்சா அம்மா? தேனு நான் தூக்கி வளர்த்த என் அக்கா பொண்ணு ம்மா அவ... எனக்கும் அவளுக்கும் கிட்டதட்ட பதினஞ்சு வயசு வித்தியாசம். நா போயி அவள கல்யாணம் செய்யனுமா? இந்தப் பைத்தியக்காரத்தனமானப்  பேச்சை இதோட நிறுத்திடுங்க... இல்லனா என் முடிவு என்னவா இருக்கும் என உங்களுக்கு நல்லாவே தெரியும்"  எனத் தன் தாயை மிரட்டி விட்டு  வண்டியை எடுத்துக் கொண்டு செல்பவனை ஆயாசத்தோடு பார்த்தார் நெடுமாறனின் அன்னை  யசோதா.

                                                                                                    *********

"அங்காடிக்காரிய சங்கீதம் பாட சொன்னா வெங்காயமே! கறிவேப்பில்லையே! தான் பாடுவா... உன்னை போய் நான் அவன்கிட்ட பேச சொன்ன பாரு... நீ தம்பி ராசான்னு கொஞ்சிகிடப்ப அவன் உன்ன மிஞ்சிட்டு போறான்... பொட்டபுள்ள மூணு பெத்தும் வரமா தவமா எதுக்கு அவன பெத்த??  உங்க சுமையெல்லாம் அவன் தலையில ஏத்தி வைக்கதானோ?? இத்தன வயசாவது என் தம்பிக்கு, என்ன சுகத்த கண்டுச்சு?? அக்காங்க நாங்க மூணு பேரு இருந்தும் அவனுக்கு ஒரு கல்யாணம் கட்டிவைக்க வக்கத்தவளா இருக்கிறோமே!! அப்பன் செத்த இத்தின வருஷத்தில அவன் எதுக்காவது எங்களை ஏங்க விட்டு இருக்கானா… இந்த கிழமை வரைக்கும் தீபாவளி பொங்கலுனா பொறந்த வீட்டு சீரா கை நிறைய அள்ளிட்டு வருவானே... அப்படிப்பட்ட என் தம்பிக்கு கல்யாணம் கட்டி புள்ள பெத்து அந்த புள்ளைக்கு அத்தைகாரி சீரயெல்லாம் நான் எப்ப செய்யப் போறேன்??" என மூக்கை உறிஞ்சியபடி புலம்பியவள் தொடர்ந்து,

"இந்தா தம்பி உன் பேச்சு எல்லாம் இனி எடுபடாது... இந்த அக்காகாரி முடிவு பண்ணிட்டேன் நீ கேட்ட மாதிரி இந்த ஆறு மாசத்துல உனக்கு புடிச்ச பொண்ணு அமையலனா, அடுத்த முகூர்த்தத்தில என் பொண்ணு தேனுக்கு தாலி கட்டுற" என கூறிய தன்  பெரிய அக்கா செண்பாவின் பேச்சை பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தான் நெடுமாறன்.

"ஆமா ம்மா! அக்கா சொல்றது தான் சரி... நாளைக்கு நம்ம கோயிலுக்கு போயிட்டு அந்த பரிகாரத்தை செஞ்சுட்டு வந்துருவோம்... எனக்கு தோணுது இந்த வருஷமே தம்பி கல்யாணம் முடிஞ்சிடும்ன்னு…" என்ற இரண்டாவது அக்கா ராஜியின் பேச்சை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டான் மாறன்.

                                                                                   ********

 

குந்தவையின் கழுத்தில் தாலியை கட்டியவன் மூன்று முடிச்சையும் தானே போட்டு நிமிர்ந்தான் மாறன் !!!

"எலேய் மாறா என்ன காரியம்டா செஞ்சியிருக்க?? நம்ம குடும்பத்தையே கருவறுத்தவங்க குடும்பத்தை சேர்ந்த பொண்ணு கழுத்துல போய் தாலி கட்டியிருக்க!! இதுக்கா நா உன்ன பெத்தேன்?? இத பார்க்கவா நா காத்துக் கிடந்தேன்?? ஐயோ! என் தலையில் கல்லை தூக்கி போட்டுட்டானே" என தலையில் அடித்துக் கொண்டு அழுதார் யசோதா

"டேய் தம்பி என்ன காரியம்டா செஞ்சுட்ட?? இந்த குடும்பத்தால நம்ம பட்ட கஷ்டம் எல்லாம் மறந்துடுச்சா?? நம்ம அப்பா சாவுக்கு காரணமான குடும்பம்டா அது! அந்த வீட்டு பொண்ணு, அதுவும் வேற ஒருத்தவன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில நீ தாலி கட்டியிருக்க இவ்வளவு கேவலமானவனா மாறா நீ??" என அவன் சின்ன அக்கா அமிர்தா ஒரு பக்கம் சத்தம் போட,

இது எதுவும் விளங்காமல் தன் கழுத்தில் குடியேறிருக்கும் கனமான புது மஞ்சள் கயிற்றையும் அதைக் கட்டியவனையும் புரியாத குழந்தையைப் போல் பார்த்தப்படி நின்றுருந்தாள் குந்தவை.

                                                                                                   *********

 

கதவை சாத்திவிட்டு திரும்பியவன் எதிரே கண்ணில் கண்ணீர் வழிய அதை விட முகத்தில் அப்பட்டமான கோபத்தோடு நின்று இருந்த மனைவியை புரியாமல் கேள்வியோடு பார்த்தவனைக் கண்டு

"ஏன்? ஏன் இப்படி பண்றிங்க?? எதுக்கு எனக்கு இப்படி துரோகம் செய்யறீங்க?? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்? கல்யாணமான இத்தனை மாசத்துல நீங்களும் உங்க குடும்பமும் எனக்கு பண்ண கொடுமையெல்லாம் தாண்டி இந்த வீட்டுல நான் இருக்க காரணமென்ன தெரியுமா?? நான் உங்க மேல வச்சியிருக்க காதல்! ஆமா நான் உங்கள காதலிக்கிறேன்! அந்த காதலால தான் எல்லாததையும் பொறுத்துட்டு, காதலே இல்லாம நீங்க தந்த குழந்தையை ஆசையா சுமந்து கொண்டு இருக்கேன்... ஆனா நீங்க உங்க பழைய காதலை மறக்காம அவ கூட தினமும் போன் பேசிட்டு இருக்கீங்க... எவ்வளவு பெரிய முட்டாள் நானு ம்ம்!!" என விசும்பியபடி எட்டி அவன் சட்டையைப் பிடித்தவள்

"என்ன புரியாத மாதிரி பார்க்கறீங்க?? எனக்கு எப்படி இதுயெல்லாம் தெரியுமுன்னா... எனக்கு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே உங்க காதலை பத்தி தெரியும்... இப்ப சொல்லுங்க எனக்கு ஏன் இந்த துரோகம்?? இவ்வளவு நேரம் உங்க காதலி கிட்டதானே பேசிட்டு இருந்தீங்க??  சொல்லுங்க…" என வெறி பிடித்தவள்போல் தன் சட்டையை உலுக்கியவளை உதறி தள்ளியதில் கட்டிலில் சென்று விழுந்தவளை பொருட்படுத்தாமல்  சட்டையின் கழுத்து பட்டையை நீவிவிட்டபடியே தன் முழ உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றவன்,

"ஏய் ஆமாம் டி என் முன்னால காதலி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்... உன்னால என்னடி செய்ய முடியும்?? நெடுமாறன்டி நான்!! என்னையே எதிர்த்து கேள்வி கேட்பியா?? தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை!!" என ஒரு விரல் நீட்டி எச்சரித்து விட்டு செல்பவனைப் பார்த்து

"ராட்சசன்!!!" என முணுமுணுத்தாள் நெடுமாறனின் குந்தவை தேவி.

 

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே

https://kavichandranovels.com/community/vsv-comments-and-discussions-vsv-12-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/

 


   
ReplyQuote
VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

அத்தியாயம் 1

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

சரவண பவனே சைலொளி பவனே….’

தினமும் காலை கந்த சஷ்டி கவசத்தோடு தான் மாறனின் பொழுது துவங்கும். காலையில் எழுந்தவுடன் இருசக்கர வாகனத்தில் தன் தோட்டத்துக்கு செல்பவன் வயல்வெளிகளுக்கு நீர் பாய்ச்சி சற்று நேரம் நடந்துவிட்டு வீட்டுக்கு வந்து குளித்தவுடன் கந்த சஷ்டி கவசத்தை ஒளிக்கவிட்டு சாமி கும்பிட்டு பின் தான் காபியை குடிப்பான்.  அதிலும் பெரும் முருகன் பக்தன் அவன்.

 

எப்படி இந்த பக்தி என்று கேட்டால் அவனுக்கு பதில் தெரியாது சிறு வயது முதலே முருகன் தான் அவனுக்கு எல்லாமே! தான் கஷ்ட படும் போதெல்லாம் கந்தனையே எண்ணிக் கொள்வான்.

 

அப்படி ஒன்னும் கஷ்டப்படும் குடும்பத்தில், அவன் பிறக்கவில்லை சொல்லப்போனால் எல்லாருக்கும் அவன் செல்ல பிள்ளை தான்! மூணு அக்காக்களுக்கு பிறகு பிறந்த ஒற்றை பிள்ளை தான் நெடுமாறன் அனைவருக்கும் அவன் மாறன். ஜெயராமன்-யசோதாவின் கடைக்குட்டி… மகன் வேண்டுமென்று சஷ்டி விரதமெடுத்து பிறந்தவன்.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சற்று உள்ளடங்கிய கிராமம்மான மேலையூர் தான் ஜெயராமனின் சொந்த ஊர். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பசுமையான கிராமம்… ஜெயராமனின் தந்தையும் விவசாயம் செய்து தான் தன் குடும்பத்தை ஓட்டினார்… ஜெயராமன் அவருக்கு ஒரே மகன்! பத்தாவது வரை மட்டுமே படித்த ஜெயராமன் தன் தந்தையை பின் பற்றி விவசாயத்தில் இறங்கியவர் கூடவே டிராக்டர் ஓட்டுவதும் பெரும்பாலான சமயங்களில் அரிசி லோடு லாரியும் ஓட்டுவார்.

 

அவருக்கு ’தாம் இப்படியே இருந்து விட கூடாது எப்படியாவது நாமும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ என ஒரு லட்சியம்!! குடும்பத்தில் பெரிதாக செலவும் இல்லை, தாய் தந்தை இருவரும் தங்களின் ஒரு காணி நிலத்தில் விவசாயம் செய்ய ஜெயராமும் சிக்கனமாக இருந்து ஒரு அளவு தொகையை சேர்த்து கொண்டு வந்தார். கூடவே தன் மாமன் மகள் யசோதாவையே திருமணம் செய்து இருந்தார்.

 

ஒரு நாள் தன் தாய் தந்தை மனைவியை அழைத்தவர் பக்கத்து கிராமத்தில் நஷ்டத்தில் ஓடுவதால் விற்பனைக்கு வரவுள்ள அரிசி ஆலையை தாம் வாங்க போவதாக சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விட்டார்கள் அனைவரும்.

 

’மருமகள் மாசமா இருக்கிறாள், இருப்பதைக் கொண்டு நிம்மதி அடைவோம், தேவையில்லாமல் கடன் பட்டு அகல பாதாளத்தில் காலை விடாத என ஒவ்வொருவரும் ஒன்று சொல்ல அனைவரையும் சமாதானப்படுத்தியவர் தன் திட்டத்தை சொன்னார்!

 

தான் சேர்த்து வைத்திருக்கும் தொகை கூட, தாய் தந்தையை சமாதானப்படுத்தி தங்களின் நிலத்தை விற்றவர் கூடவே தன் மனைவி போட்டு வந்த ஐந்து பவுன் நகையையும் விற்று தஞ்சை டவுனில் தாம் அரிசி லோடு எடுக்கும் ஆலையை சேர்ந்த கந்தசாமி அய்யா உதவியோடு பேங்கில் லோன் எடுப்பதையும் சொல்லி, நிச்சயம் தான் இதில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையோடு அனைவரையும் சம்மதிக்க வைத்தார். அதன் பின் அவர் சொல்லிய படி ஜெயித்தும் காட்டினார்.

 

இப்படி சொந்தமாக அரிசி ஆலையை வைத்து வாழ்வில் முன்னேறியவர் தான் மாறனின் தந்தை. தன் இரண்டு மகள்களின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாய்  நடத்தியவர். ஆனால் அதன் பின் தான் அவர் புத்தி கெட்டு போயி கூடா நட்பில் சேர்ந்து செய்த செயலால் தங்கள் வீட்டை தவிர அனைத்தையும் இழந்தார்.

 

மூன்றாவது மகளின் திருமணம் மகனின் படிப்பு மனைவியின் தவிப்பு அனைத்தையும் கண்டு தன் செயல்களின் தவற்றை உணர்ந்தவர் ஒரு இரவில் தன்னையே மாய்த்துக் கொண்டார்.

 

கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்தவன் குடும்பத்தின் பணத்தேவைக்காக பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே தன் படிப்பை முடித்தான் மாறன்.

 

அதன்பின் தன் அக்காவின் திருமணத்திற்கு என்று அப்பாவிற்கு தெரியாமல் அம்மா சேர்த்துவைத்திருந்த நகைகளை அவர்களின் அனுமதி பெற்று விற்றவன். தன் அத்தான்களின் உதவியோடு கூடவே தன் வீட்டின் மேல் லோனும் போட்டு இரண்டு நெல் அறுக்கும் இயந்திரமும் ஒரு டிராக்டரும் வாங்கியவன் அவற்றை வாடகைவிட்டு சம்பாதிக்க ஆரம்பித்தான்.

 

முதலில் அதனால் வரும் வருமானத்தை லோன் கட்டி முடித்து வீட்டு பத்திரத்தை மீட்டவன், மீண்டும் அதன் மேல் கடன் பெற்று உரக்கடை ஒன்றை ஆரம்பித்தான். மகன் இப்படி கஷ்டபடுவதைக் கண்ட யசோதாவும் அவன் கடைசி அக்கா அமிர்தவல்லியும் வீட்டில் இட்லி மாவரைத்து அதை அங்குள்ள பெட்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.

 

பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்த ஊரில் தாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற பெயரை அழிக்கவும், முதல் இரண்டு அக்காக்காளுக்கும் இருபது வயதிலே ஆடப்பரமாக கல்யாணம் முடிந்து விட இருபத்தியேட்டு வயதை  நெருங்கிக் கொண்டிருக்கும் தன் கடைசி அக்காவின் திருமணமும் எந்த குறையுமில்லாமல் நடத்த வேண்டுமென்ற முனைப்போடும் வெறியோடும் உழைத்தான் மாறன். அதுபோல் செய்தும் காட்டினான்.

 

தன் அக்காவின் திருமணம் முடிந்த பின்னும் இன்னும் இன்னும் என்ற எண்ணத்தோடு மேலும் முன்னேறினான் மாறன். அதன்பின் அவன் தொட்டதெல்லாம் துலங்கியது.  

 

தற்போது அவன் மேலும் மூன்று கதிர் அறுக்கும் இயந்திரத்தையும் மற்றும் இரண்டு டிராக்டர்களையும் வாங்கி வாடகைக்கு விட்டுருக்கிறான், உரக் கடையையும் மேலும் விரிவுபடுத்தியுள்ளான், கூடவே இரண்டு ஏக்கரில் கொஞ்சமாக நெல் கதிரை பயிரிட்டுருக்கிறான். சமீபத்தில் ஒரு தென்னந் தோப்பையும் குத்தகைக்கு எடுத்துள்ளான், இதுயெல்லாம் சினிமாவில் காட்டுவது போல் ஒரு பாட்டில் அவன் செய்து முடிக்கவில்லை. இதற்காக கிட்டத்தட்ட அவன் பதினைந்து வருடம் கஷ்டப்பட்டிருக்கான்.

 

இருந்தும் அவன் உத்வேகம் இன்னும் அடங்கவில்லை தற்போது வரை அவனின் ஒரே இலட்சியம் தாங்கள் இழந்த தங்கள் அரிசி ஆலையை மீட்பதே. எத்தனை செலவானலும் அதை மீட்கவே அவன் பாடுபடுகிறான்!! ஆனால் அவன் தந்தையிடமிருந்து அதை வாங்கியவரோ இல்லை இல்லை அதை பறித்தவரோ அதை அவனிடமே விற்க தயாராகயில்லை. எனினும் எப்பாடுபட்டாவது அதை மீட்க அவன் எந்த எல்லைக்கும் போக தயாராயிருக்கிறான்.

 

தன் தந்தையின் செயலால் தங்களை இகழ்ந்தவர்கள் முன், உதவி கேட்டு நின்றவனை உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்களுக்கு முன் தற்போது தலை நிமிர்ந்து நிற்கிறான் மாறன். இருந்தும் இதையெல்லாம் அடைய அவன் பணையம் வைத்தது அவன் இளமையை.

 

தன் வயதோத்த இளவட்டங்களெல்லாம் கவலைகளின்றி உற்சாகமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்க தான் சுமை தாங்கியாய் ஒடிக்கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையாகிவிட்டார்கள்! ஆனால் மாறனோ திருமணமென்ற ஒன்றை எண்ணாமல் உழைத்துக் கொண்டிருக்கிறான்.

 

அவன் அன்னை மற்றும் அக்காக்களின் பெரும் கவலை மாறனின் திருமணத்தை பற்றி தான். ஒன்று வரன் எதுவும் சரியா அமைவதில்லை அமைந்த வரன்களையும் மாறன் தட்டிக் கழிக்கிறான். இந்த வருஷம் எப்பாடுப் பட்டாவது மாறனின் திருமணத்தை முடிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவனின் அன்னையும் அக்காவும்.

 

அன்றும் சாமி கும்பிட்டு விட்டு தன் அன்னை தந்த காப்பியை அருந்தியவாரே நேற்று தேங்காய் லோடு ஏற்றிய கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் அமர்ந்தார் யசோதா மாறனின் அம்மா.

 

"என்னம்மா ஏன் காலையிலே உன் முகம் சோகமாயிருக்கு" தன் அன்னையின் சோர்ந்த முகத்தை நோட்டமிட்டவாரே விசாரித்தான்.

 

"தம்பி நான் ஒன்னு சொல்லட்டுமா சத்த கோவபடாத கேளுய்யா...." என தயக்கத்தோடு கேட்ட அன்னையை யோசனையோடு பார்த்தவன்.

 

"என்னன்னு மொத சொல்லும்மா கோபப் படலாமா வேணாமான்னு அப்புறம் பாக்கலாம்"

 

"அது தம்பி நம்ம தேன்மொழியையே நீ கட்டிக்கறியா??" எனச் சட்டெனக் கேட்ட அம்மாவை மிக மிக அதிர்ச்சியோடு பார்த்தான் மாறன், அடுத்த நொடியே ஆத்திரத்தோடு எழுந்தவன்

 

"புத்தி மங்கிபோச்சாம்மா உனக்கு? தேன்மொழி குழந்தை ம்மா!!  நான் தூக்கி வளர்த்த சின்ன பொண்ணு ம்மா அவ! அவளை போயி என்  கூட ச்சே! எப்படி இப்படி கேக்க வாய் வந்துச்சு உனக்கு?" எனக் கேட்டவனைத் தானும் கோபத்தோடு பார்த்தவர்.

 

"என்ன தம்பி நா தப்பா கேட்டுடேன்னு மூஞ்ச இப்படி சுழிக்கிற? தேனு யாரு உன் அக்கா பொண்ணு நீ கட்டிக்கிற முற தான். ஊர் உலகத்துல நடக்காததையா நான் கேட்டுட்டேன்"

 

"அம்மா! போதும்! இதோட இந்த பேச்ச நிறுத்து" எனப் பல்லை கடித்தவனைக் கண்டு

 

"முடியாது தம்பி நா இப்பவே நல்லுவளையும் சின்னவளையும் வர சொல்ல போறேன். இன்னைக்கே பெரியவ வீட்டுக்கு பொண்ணு கேக்க போறோம்!" எனப் படப்படத்த அன்னையை நிதானமாய் பார்த்தவன்.

 

"இந்த பூச்சாண்டிக்குலாம் நா பயபடமாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும்மா. அதுபோல யார் சொல்லி நீ இப்படி பேசறன்னும் தெரியுது. நான் இப்பவே செண்பா க்கா வீட்டுக்கு கிளம்பறேன்!". என வெளிய செல்லப் போனவனை அவசரமாகத் தடுத்தவர்

 

"தம்பி! தம்பி! நில்லு செண்பா சொல்லிலாம் நா கேக்கலை. அது நான்னா தான் கேக்கறேன். உன் வயசு என்னன்னு உனக்கு நியாபகமிருக்கா இல்லையா? போன மாசத்தோட முப்பத்தியஞ்சி முடிஞ்சி போச்சு!!! மூணு பொட்டப் புள்ளங்கைளுக்கு அப்புறமா வரம் வாங்கி உன்ன பெத்தேன். ஆனா என் ஒத்த புள்ளைக்கு ஒரு நல்லது செஞ்சி இன்னும் நான் பார்க்கலையே! ஏழு எட்டு வருஷமா பொண்ணு பார்க்கறோம் ஒன்னும் தகஞ்சி வர மாட்டுதே… அப்படியே ஏதாவது கூடி வந்தாலும் நீ தட்டிவிடற! இத்தன சொத்து பத்திருந்தும் என்ன பிரயோஜனம்? இப்பல்லாம் உன் வயச சொல்லியே எந்த வரனும் வரதில்ல. அம்மான்னு நா ஒருத்தியிருந்தும் என் புள்ளையா இப்படி ஒத்தையில நிக்க வச்சுட்டுனேன்னு என் மனச என்ன கொல்லுதைய்யா!!.எந்த ஜென்மத்துல நா செஞ்ச பாவமோ சிங்கம்போல பிள்ளையை பெத்தும் கண்குளிர அவன் வாழ்வதா பாக்காமா போயி சேர்ந்திடுவேனோ பயமாருக்கு பா!” எனக் குரல் கமற தன் நெஞ்சை தடவியப்படிப் புலம்பியவரை பார்த்தவன், ஆறுதலாக அவரின் தோளைப் பிடித்தபடி

 

”அம்மா ஏன் இப்படி புலம்பி உங்களை நீங்களே வருத்திக்கிரிங்க நான் ஒன்னும் கல்யாணமே வேண்டாம் சொல்லலையே… எனக்கு முதல்ல நாம முன்னேறனும் அதுக்கு தடங்கலா அப்போ கல்யாணம் வேண்டாம் சொன்னேன். அப்புறம் நீங்க பொண்ணு பாக்க ஆரம்பிச்சப்ப நான் ஒன்னும் சொல்லலையே? என் மனசுக்கு வேண்டாம் தோனின சில வரன்களை வேணாம் சொன்னேன்.  இப்ப என்னம்மா போன வாரம் கமலா க்கா ஏதோ ஜோசியரை பார்த்துச்சதுல அவரு இந்த வருஷம் எனக்கு கல்யாணம் ஆயிடுமுன்னு சொல்லி இருக்காருல அப்புறம் என்ன கவலை உனக்கு காலையிலே இப்படி புலம்பாம போயி சாப்பிடு ம்மா போ!” என மென்மையாக ஆரம்பித்து சற்றுக் கடுப்பாக முடித்தான் மாறன்.

 

“ஹான்!!! அதான் அப்பு நானும் சொல்றேன் இது வரைக்கும் கிடைக்காத பொண்ணா இனிமே கிடைக்க போறா நா என்ன பொண்ணு பணம் நகையோட வரணுமான்னா கேக்கறேன். என் வீட்டுக்கு விளக்கு ஏத்த நல்லபடியா ஒரு மகராசி கிடைச்சா போதும்னு தான் கேக்கறேன். எனக்கு என்னமோ இத்தன காலத்துக்கு பொறவு எவளும் கிடைப்பான்னு தோனலய்யா! நீ கொஞ்சம் அம்மா சொல்றத கேளு ராசா நம்ம தேனுக்கு இப்ப கல்யாணம் யோகம் தான் நடக்குதாம். மாப்பிள்ளைக்கும் செண்பாக்கும் பரிபூரண சம்ம்மதம் தான் அவங்க வயசு வித்தியாசம்லாம் ஒன்னும் பாக்கல யாருனு தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக்க குடுக்கறதுக்கு உனக்கு தரேன் சொல்றாங்க. நீ சரின்னு சொல்லு தம்பி!!!” எனக் கெஞ்சியவரை ஆத்திரத்தோடுப் பார்த்தவன்

 

”அம்மா போதும்! இதுக்கு மேல இத பத்தி பேசினீங்க நான் பொல்லாத்தவனாயிடுவேன் சொல்லிட்டேன்! நான் ஒன்னும் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லலையே இந்த தடவை நீங்க பொண்ணு பாருங்க எல்லாம் நல்லபடியா அமையும் அதவிட்டுட்டு கண்டத பேசினீங்க இந்த வீட்டு பக்கமே நான் வரமாட்டான்!!!” எனக் கடினக் குரலில் சொல்லிவிட்டு வெளியே நகரப் போனவனைத் தடுத்தார் யசோதா. மகன் கோபப்படும் போது கூறுவதைச் செய்பவன் என அறிந்த அன்னை, ’அவன் சின்ன அக்கா சொன்னா தான் கேட்பான் இப்போதைக்கு நாம இத பத்தி பேச வேண்டாம்!’ என முடுவெடுத்தவர்,

 

”கோவபடாத தம்பி! அம்மா இனி அத பத்தி பேச மாட்டேன் விடு நம்ம தரகர் கிட்ட வேற ஜாதகம் அமைஞ்சா எடுத்துட்டு வர சொல்றேன் நீ இப்போ சாப்பிட்டு போ ப்பா! என் மேல இருக்க கோவத்துல சாப்பிடாம போகாத காலையில மட்டும் தான் நீ நல்ல சாப்படு சாப்பிடுவதே. முக்கால் வாசி நாளு மதியம் வெளிய பார்த்துக்குற, ராத்திரி நீ வருவதுக்குள்ள நான் தூங்கிடுறேன் ஆறி போன சாப்பாட போட்டு சாப்பிடற, உனக்குன்னு ஒருத்திருந்தா இந்த கவலை எனக்கு இருக்குமா? சரி விடு தம்பி! நீ வா சாப்பிடலாம்.” எனப் புலம்பிக் கொண்டே சாப்பாடு கூடத்தை நோக்கிச் சென்றார்.

 

தொடரும்....


   
ReplyQuote
VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

ஹாய் மக்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? உன்னருகில் உன் நினைவில் முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்து திரியில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே. உங்களின் கருத்துக்களும் ஆதரவும் தான் எனது ஊக்க சக்தி மக்களே! திங்கள் கிழமை அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்கிறேன் நன்றி

https://kavichandranovels.com/community/topicid/39/

இப்படிக்கு உங்கள்

VSV-12


   
ReplyQuote
VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

அத்தியாயம்-2

உரக்கடைக்கு செல்ல நேரமாவதை உணர்ந்தவன் சாப்பிட்டு விட்டு அவசரமாக வெளிய வர, வீட்டுக் கேட்டை திறந்துக் கொண்டு ஊர் பெரியவர்களெல்லாம் வருவதைக் கண்டு தயங்கி நின்றபடியே மனதுக்குள் ‘இன்னைக்கு விடிஞ்ச நேரமே சரியில்லையே!’ என நினைத்தபடியே அவர்களை வரவேற்றான்.
 
 
”வாங்க வாங்க என்ன எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்து இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டுக்கொண்டே அவர்கள் அமர வீட்டு உள்வாசலில் உள்ள முற்றத்தில் நாற்காலிகளை எடுத்துப் போட்டான்.
 
 
தாங்களும் அமர்ந்தபடியே, “பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல மாறா! இந்த வருஷம் கவுன்சிலர் பதவிக்கு நம்ம ஊர் சார்பாக உன் பேரை கொடுக்கலாம்னு இருக்கோம். அத சொல்லிட்டு போக தான் வந்தோம். ஒவ்வொரு வருஷமும் அந்த திருமூர்த்தி பையன் தான் நிக்கிறான்! அவன ஜெயிக்க வைப்பது நாம. ஆனா நம்ம பிரச்சனையே ஒன்னும் கண்டுக்கல அந்த பையன். நம்ம தொகுதி பத்து சிற்றூர் சேர்த்தாதருந்தாலும் நம்ம ஊர் சார்பா ஒவ்வொரு தடவையும் அவன தான் நம்ம ஆதரிச்சோம். அதான் இந்த தடவ உன்ன நிக்க சொல்லாம்ன்னு இருக்கோம் ப்பா!! போன தடவையே உன்ன கேட்டோம் நீ முடியாது சொல்லிட்ட. ஆனா இந்த தடவை உன்கிட்ட அனுமதி கேக்கறதா இல்ல அடுத்த மாசம் பேர் தாக்கல் செய்யனும் அப்ப போயிட்டு பேர் குடுத்துட்டு வரோம். இந்த தடவ நீ நிக்கிற ஜெயிக்கிற அவ்ளோ தான் நா சொல்றது. என்னப்பா நீங்களாம் என்ன சொல்றீங்க? கரெக்ட் தானே நான் சொல்றது?" என மளமளவெனப் பேசியவர் தன் கூற்று சரிதானா என மற்றவர்களையும் கேட்டார் அவ்வூரின் தலைவர் ரங்கநாதன்.
 
 
”அதெல்லாம் சரிதான் ப்பா! நம்மலாம் முடிவு பண்ணி தானே வந்திருக்கோம். இங்க பாருப்பா மாறா கவுன்சிலர் பதவிக்கு நீ தான் சரிபட்டு வருவ போன வருஷம் அந்த நடுவூர் குளம் குத்தகை எடுக்க போன நம்ம பொன்னுசாமி பையன் சேகருக்கும் கிளிமங்கலம் ஊர்காரனுக்கும் பிரச்சனையாயிடுச்சு. தப்பு அந்த ஊர்க்காரன் மேல தான் குத்தகையும் அவன்கிட்ட போயிடுச்சு. இத கேக்க சொல்லி அந்த திருமூர்த்தி பையன் கிட்ட பிராது குடுத்தா அவனும் கேக்கலை அதப் பத்தி பேச போன நம்ம ஐயாவையும் அவமதிச்சி பேசிபுட்டான்! இது மட்டுமில்ல இது போல நிறைய இருக்கு. இந்த தடவ நீ நின்னு அவன தோக்க அடிச்சி பதிலடி காட்டணும். இன்னைக்கு உனக்கு ஏதோ சோலியிருக்காம், காலையிலே நீ கிளம்பிட்டா வர ராத்திரி ஆயிடும்ன்னு உன் கூட்டாளி அருள் தான் சொன்னான் அதான் இப்பவே சொல்லிட்டு போகலாம்ன்னு தான் நாங்களும் வந்திருக்கோம்!!!” என அவர் கூற, ’இதுக்கெல்லாம் இவன்தான் காரணமா!” என அருளை முறைச்சு பார்க்க ’பெருசு போட்டுக் கொடுத்திருச்சே!’ என அருளும் மற்றவர்களுக்கு பின்னாடி பம்மி நின்னான். ’அவன அப்புறம் கவனிக்கிறேன்!’ என எண்ணிக்கொண்டே வந்திருந்த பெரியவர்களைப் பார்த்து
 
 
”நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பெரியப்பா ஆனா எதுக்கு நான்? என்னை விட அனுபவசாலி எத்தனையோ பேர் இருக்காங்க… இந்த தடவை விட்டுருங்க பெரியப்பா அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்". எனக் கூறியவனை இடைமறித்தார் ஊர் தலைவர்.
 
 
”இல்ல மாறா எங்களுக்கெல்லாம் உன் பேர் தான் தோணுது! நீ நின்னா தான் இதுக்கெல்லாம் சரி வரும் உன்கிட்ட இருக்க இந்த ஆளுமை, பொறுமை சமயோசித புத்தி வேற யார்கிட்டயும் இல்லை நீ நிக்கிற உன் பேரை தாக்கல் செய்யறோம் சரின்னு சொல்லுப்பா!!! எதுக்கு இத்தனை யோசனை உனக்கு? நாங்க எல்லாம் இருக்கோம் பாத்துக்கலாம்! நீ தான் ஜெயிக்க போறே. நீ நில்லு இந்த வயசுல எத்தனை தொழிலை எடுத்து நடத்திட்டு இருக்க… உன் அப்பா எல்லாத்தையும் அழிச்சிட்டு போயிட்டப்ப பட்ட மரமா இருந்த இந்த குடும்பத்தை தாங்கி இப்ப ஆலமரமா நிற்கிற! என்ன யசோதா! நீ சொல்ல மாட்டியா? எதுக்கு இவ்வளவு யோசிக்கிறான்? நீ சொல்லு, நீ சொன்னா தான் உன் பையன் கேப்பான்!!” என இவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த யசோதாவைப் பார்த்து அவர் கூற, தானும் மகனை பார்த்தவர் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றார்.
 
 
”அட என்ன நெடுமாறா! இவ்வளவு பேர் சொல்றோம் இன்னும் தயங்கிட்டே இருக்க??” என நடுவில் ஒரு பெருசு குரலை உயர்த்த
 
”சும்மா இருங்கப்பா! ஆளாளுக்கு பேசாதீங்க எல்லாம் மாறனுக்குத் தெரியும் அவன் யோசிக்கிறான். யோசிச்சிட்டு நல்ல பதிலா சொல்லுவான். என்ன மாறா, இப்ப நாங்க கிளம்பறோம்!” என எழப்போனவரை
 
 
”இருங்க பெரிப்பா!” எனத் தடுத்தான் நெடுமாறன்.
 
 
”நான் இவ்வளவு யோசிக்கிறது காரணம், எனக்கும் அந்த திருமூர்த்தி குடும்பத்திற்கும் ஆகாதுன்னு உங்களுக்குத் தெரியும்? அது மட்டும் தான் வேற ஒன்னும் இல்ல. ம்ம்ம்… சரி விடுங்க பாத்துக்கலாம். எனக்கு சம்மதம் தான். இப்ப எல்லோரும் டீ காபி சாப்பிட்டு தான் போகனும். அம்மா!!” எனச் சொல்லி அம்மாவைப் பார்த்துக் குரல் கொடுக்க
 
 
”அட இருக்கட்டும் ப்பா!!! நீ சம்மதம் சொன்னதே எங்களுக்குலாம் சந்தோஷம்தான். அப்ப நாங்க கிளம்பறோம் இன்னும் இருபது நாளு தான் இருக்கு பேர் குடுக்க ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம மூணு பேரும் மட்டும் போயிட்டு வந்துடலாம்!!!” என அனைவரும் விடை பெற்றுக் கிளம்பி விட, அருளோ தன் நண்பனைக் கண்டும் காணாதது போல
 
 
”அம்மா என்ன சாப்பாடு???” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான்.
 
 
கடைக்கு செல்ல நேரமாவதை உணர்ந்து ’இவன் அப்புறம் பாத்துக்கலாம்!’ எனத் தன் வண்டியை எடுத்தவன், அந்த நாளுக்கான சோதனை இன்னும் முடியவில்லை என அறியாமலே கிளம்பினான் நெடுமாறன்.
 
                                                                               *******
காலையில் நடந்த விஷயங்களை நினைத்துக் கொண்டே வண்டியை செலுத்தினாலும் ரோட்டில் கவனம் வைக்க தவறவில்லை மாறன். முக்கிய சாலையிலிருந்து ஒரு வளைவில் வண்டியைத் திருப்பியவன், மற்றொரு வளைவிலிருந்து திடீரென ஒரு வண்டி இவன் வண்டியில் வந்து மோத இரண்டு கால்களையும் வலுவாக ஊன்றி விழாமல் தப்பித்தான், எனினும் எதிரே வந்த பெண் வண்டியோடு "அம்மா" என அலறியபடியே கீழே விழுந்தாள்.
 
 
”போச்சுடா!!!” என நொந்தப்படி தன் வண்டியை நிறுத்தி விட்டு அவளை ஆராய்ந்தபடியே சென்றவன்
 
 
"என்னாச்சு எங்கயாவது அடி ஏதாவது பட்டுருக்கா" என விசாரித்தவனைக் கைகளில் ஒட்டிருந்த மண்ணைத் தட்டிவிட்டபடி
 
 
"இல்லைங்க…" எனச் சொல்லிக்கொண்டே நிமிர்ந்துப் பார்த்தவள் மாறனைக் கண்டு
 
 
'அச்சோ இந்த நெட்ட கொக்கு நெடுமாறனா?’ எனப் பதறியப்படி முகத்தை மறைத்துக் கொண்டாள். அதற்குள் அவளை அடையாளம் கண்டுக் கொண்டவன்
 
 
"நீயா!!! நினைச்சேன். ஏம்மா உனக்கு என்ன பிரச்சனை??? என்னை எங்க பார்த்தாலும் விழுந்து வாரணும்ன்னு வேண்டுதல் ஏதாவது வச்சிருக்கியா???" எனக் கேட்டவனைப் பதற்றத்தோடுப் பார்த்தபடி
"அச்சச்சோ! இல்லைங்க அப்படி எல்லாம் எதுவும் இல்ல! இது என் மேல தான் தப்பு! நான் தான் கவனிக்காம வந்து விழுந்துட்டேன்"
 
 
”எப்பவுமே நீ கவனிக்காம தான் வந்து விழுவியா??? அன்னைக்கும் வரப்புல நடந்து போயிடு இருந்தப்ப வந்த மோதி விழுந்த போன மாசம் தேர் திருவிழால தேர் இழுக்கும் போது இடிச்சி விழுந்த இன்னும் எத்தன தடவ விழ போற இப்பவே சொல்லு ஒவ்வொரு தடவையும் உன்ன தூக்கி விட நா வரணுமா? அப்படி எங்க கவனம் வச்சிட்டு வருவ நீ ம்ம்ம்??”
 
 
அவன் கேட்க கேட்க அவமானத்திலையும் கழிவிரக்கத்திலையும் கண்கள் கலங்கும் போல ஆனது அவளுக்கு.
 
 
’என்ன இவங்க எதர்ச்சையா விழுந்ததை போயிட்டு என்னமோ நான் வேண்டும்ன்னே இவரு மேல மோதி விழுந்ததா சொல்றாரு. இவரு பெரிய மகாராஜா இவரு மேல ஆசை பட்டு போயி விழுவங்களாக்கும்! ஆளை பாரு! இப்ப நான் இருக்குற பிரச்சனையில் இவரு வேற!!!’
 
 
”என்னம்மா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ என்ன சாவகாசமா இங்கையே உக்காந்துட்டு இருக்க?? அடி எதாவது பட்டுச்சா ம்ம்ம்? கைய குடு!!!” என அவள் யோசனையை இடைமறித்தவன் பெண்ணவள் எழுந்துகொள்ள கை நீட்ட,
 
 
”இல்ல அடி எதுவும் படலை நானே எழுந்துப்பேன்!” எனச் சொல்லியபடி அவன் உதவியை மறுத்து தானே எழுந்து கொண்டவளின் அருகில் ஒரு வண்டி வந்து நின்றது
 
 
”என்னம்மா குந்தவை ஏன் இங்க நிக்கிற? என்னாச்சு? வண்டி ஏன் இப்படி கீழே கிடக்கு நீ விழுந்துட்டியா என்ன??? ஏதாவது அடி பட்டுச்சா இன்னும் பத்து நாளுல கல்யாணத்தை வச்சகிட்டு ஏன் நீ வெளியே வந்த???”
என அவரின் கேள்விகள் அவளிடமிருந்தாலும் பார்வை மாறனை மொயித்தது. அவரின் பார்வையை உணர்ந்தவன் அலட்சியமான ஓர் தோள் குலுக்களோடு தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.
 
 
”இல்ல சித்தப்பா! கவனிக்காம வந்து விழுந்துட்டேன் அடிலாம் எதுவுமில்லை பரிட்சை தாளெல்லாம் குடுத்துட்டு வரலாம்ன்னு ஸ்கூலுக்கு போறேன்!!!” என வண்டியை நிமிர்த்திக் கொண்டே பதில் கூறினாள் குந்தவை
 
 
”தனியா போயிடுவியா நான் கூட வருவா? வண்டி வேலை செய்யுதா பாரு?” என அவர் கேட்க, தன் வண்டியை ஸ்டார்ட் செய்துக் கொண்டே,
 
 
”இல்லை சித்தப்பா, வண்டி வேலை செய்யது நானே போயிட்டு வந்துடுவேன் நீங்க கிளம்புங்க!!!”
 
 
”சரி ம்மா அப்ப பார்த்து போயிட்டு வா!” என அவர் கிளம்பிச் சென்றுவிட அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை இழுத்து வெளியிட்டாள் கூடவே கலங்கிய கண்களையும் துடைத்துக் கொண்டே
 
 
’ப்ச் இப்போ தானே அழுதுட்டே வந்து கீழே விழுந்த? திரும்பவும் விழுந்து வாறப் போறியா?’ எனத் தன்னைத்தானே திட்டிக் கொண்டு, தான் வேலை செய்த பள்ளிக்குச் சென்றவள் ஒப்படைக்க வேண்டியவற்றை ஒப்படைத்துவிட்டு வேலையை விட்டு, நிற்பதற்கான நடைமுறைகளை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, சக ஆசிரியர்களிடம் பிரியா விடை பெற்று தன் திருமணத்திற்கு யாரையும் அழைக்காமல் கிளம்பி விட்டாள் குந்தவை.
 
 
தொடரும்....
 

   
ReplyQuote
VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

ஹாய் மக்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? உன்னருகில் உன் நினைவில் அத்தியாயம்-2 பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்து திரியில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே. உங்களின் கருத்துக்களும் ஆதரவும் தான் எனது ஊக்க சக்தி மக்களே! நன்றி

இப்படிக்கு உங்கள்

VSV-12

This post was modified 6 months ago by VSV 12 – உன்னருகில் உன் நினைவில்

   
ReplyQuote
VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

அத்தியாயம்-3

குந்தவை வீட்டிற்குள் நுழையும் முன்னே அவளின் தாய் ராதிகா,

 

”ஏன்டி குந்தவை! என்ன ஆச்சு? ரவி தம்பி சொன்னாரு  நீ கீழ விழுந்துட்டுயாம்! நான் தான் கல்யாணத்தை பக்கத்துல வச்சிட்டு தனியா போக கூடாதுன்னு சொன்னேன்ல! அப்பா கூட போனா என்ன? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு? அதுவும் காலையில சாப்பிடாம கொள்ளாம கிளம்புற! இப்படியே இரு சீக்கிரம் போற வீட்டிலே எனக்கு ஒரு நல்ல பேரை வாங்கி தந்துடுவ…” என திட்டியபடி காயம் ஏதும் பட்டிருக்கா என அவளை ஆராய,

 

”அம்மா நீயும் ஆரம்பிக்காத! எனக்கு ஒன்னும் இல்ல ரொம்ப தான் என் மேல் அக்கறை இருக்கிற மாதிரி பேசாத!!!” எனக் கோபமாக சொல்லியபடி அவரை விலக்கிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

 

”ஏய் என்னடி! வாயிக்கு வந்த மாதிரி பேசுற பெத்தவளுக்கு இல்லாத அக்கறை மத்தவங்களுக்கு இருக்க போகுதா என்ன???” என அவளின் பின்னே சென்ற படி கேட்டவரைப் பார்த்து,

 

”அப்படி அக்கறை இருந்தா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றது கேட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்கணும்! அத விட்டுட்டு என்னைக் கட்டாயப்படுத்தக் கூடாது!!!” எனக் கலங்கியக் குரலில் சொன்னவளை முறைத்துப் பார்த்தார் ராதிகா.

 

”என்னடி சும்மா சும்மா இதையே சொல்ற? பெத்தவங்க நாங்க என்ன பிள்ளைகளுக்கு கெட்டதா செய்ய போறோம்? இப்பவே உனக்கு வயசு இருபத்தி நாலு முடிஞ்சிடுச்சு அது நியாபகமிருக்கா உனக்கு அதுவுமில்லாம இப்ப நாமா இருக்க நிலைமைக்கு இத விட்டா வேற எந்த நல்ல வரன் கிடைக்கும் நீயே சொல்லு?” என அன்னையும் குரலை உயர்த்தி கேட்க அவரை நோக்கி வேகமாக வந்தவள்

”அதுக்காக? அதுக்காக? என்னை இப்படி பலிகாடாக ஆக்குவீர்களா?? என்னை விட்டுடுங்க ம்மா நான் இப்படியே இருந்துடுறேன்.. எனக்கு கல்யாணமும் வேணாம் ஒன்னும் வேணாம்!!” என கண்கள் கலங்க கூறியவளை முறைத்து பார்த்தவர்

 

“என்னடி, சும்மா சும்மா கல்யாண கல்யாணம் வேணாம் சொல்ற? இந்த வயசுல கல்யாணம் செய்யாம எந்த வயசுல செய்ய போற ம்ம்ம்?? உன் அக்காக்கு இருபது வயசுல்லாம் கல்யாணம் பண்ணிட்டோம்… ஆனா அப்ப நம்ம இருந்த நிலமை வேற உனக்கு இப்ப இருபத்தியஞ்சு நடக்குது நம்ம நிலைமைக்கு ஏத்த மாதிரி நல்ல வரன் ஒன்னு இப்ப தான் கூடி வந்திருக்கு பத்திரிக்கையும் குடுக்க ஆரம்பிச்சாச்சு அடுத்த வாரம் கல்யாணம் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட ரெடியாகு!” எனச் சொல்லி வெளியே செல்ல திரும்பியவர் பின் நியாபகம் வந்தவராக

 

”அப்புறம் மாப்பிள்ளை தம்பி ரெண்டு நாளா உனக்கு போன் போடறாராம் நீ எடுக்க மாட்றியாம் அப்பா கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார்… அப்பா தான் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி போன் பேச கூச்ச படுதுன்னு சொல்லு சமாளிச்சு இருக்காரு .ஒரு தடவ நீ பேசிடு டி குந்தவை பாவம் அந்த தம்பி…” என்றவரைப் பார்த்து

 

”ஆமா மாப்பிள்ளை தொம்பி!” என முணுமுணுத்தவள் பின் கலங்கலான குரலில்

 

”அம்மா! ப்ளீஸ் ம்மா! நா சொல்றத புரிஞ்சிக்கோ எனக்கு என்னமோ அந்த மாப்பிள்ளை தம்பி நல்லவங்க போல தெரியல ம்மா நீ கொஞ்சம் அப்பா கிட்ட சொல்லி…” எனத் தொடர்ந்தவளை இடை மறித்தார் ராதிகா

 

”போதும் குந்தவை! திரும்ப திரும்ப அதையே சொல்லாத என்னமோ ஒரு கொலைகாரனுக்கு உன்ன புடுச்சி கட்டி வைக்கற மாதிரி எனக்கே தோணவைப்ப நீ. கடைசியும் முதலுமாய் நா சொல்றத கேளு மாப்பிள்ளையும் சரி அவங்க குடும்பமும் சரி எல்லோருமே நல்ல மாதிரி தான் இருகாங்க. உன்ன புடிச்சி போயி அவங்களா தான் தேடி வந்து பொண்ணு கேட்டாங்க. அதுக்காக நாங்க விசாரிக்காம உன்ன கட்டி குடுத்திடுவோமா? அதுலாம் உன் திரு அண்ணா நல்ல விசாரிச்சிட்டான் நீ எதுக்கும் கவலை படாத கல்யாணம்னா எல்லா பொண்ணுக்கும் முதல்ல இப்படி தான் பயமா இருக்கும் அப்புறம் பாரு நீ அம்மா வீட்டை கூட எட்டி பாக்க மாட்ட. உன் அக்காவ பாரு கல்யாணமான உடனே வெளிநாடு போயிட்டா, ஒரு நாளைக்கு அத்தனை தடவ போன் போட்டு அழுவா… இப்பயெல்லாம் தினம் ஒரு தடவை பேசுறதே அதிசயம். மறந்துட்டேன் பாரு அக்கா போன் போட்டே ரெண்டு நாள் ஆச்சு என்னன்னு தெரில! நீ கொஞ்சம் போன் போட்டு பேசு டி!” எனச் சொல்லிய தாயை முறைத்துப் பார்த்தாள் குந்தவை.

 

”எதுக்குடி இப்ப முறைக்கிற முதல நீ இப்படி கண்டதையும் நினச்சு பயப்படாத குந்தவ. இப்ப அக்காக்கு போன் போட்டு பேசு! அப்பா பத்திரிகை வைக்க போயி இருக்காரு மதியம் சாப்பிட வந்துடுவாரு நான் சமையல் வேலைய பாக்கணும், திரு அண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பான்… நீ கொஞ்ச நேரம் தூங்கி எழு சரியா!” எனப் படப்படவென பேசி விட்டு செல்லும் அன்னையின் முதுகைப் பார்த்தபடி

 

”திரு அண்ணனா! முதல அந்த நொண்ணனையே நம்பாதீங்க சொல்றேன் கேட்டா தானே…” எனப் புலம்பியவள்.

 

’ஒரு வேளை நான் தான் தேவையில்லாம அந்த கதிரேசனை பத்தி தப்பா நினைக்கிறேனோ? அவன் நல்லவனோ? அப்பா கூட விசாரிச்சிட்டேன், மாப்பிள்ளை நல்ல மாதிரி தான் சொல்றார். நான் தான் வீணா பயப்படறனோ ஒரு ஆளா பார்த்தா அவரு தப்பானவரன்னு கணிக்க கூடாது தான் ஆனா என் உள் மனசு எதுவோ தப்பா சொல்லுதே! இத சொன்னா யாரும் நம்ப மாட்டறாங்க’

 

’ஏய் டி குந்தவை! எதுக்குடி நீ இப்படி பயபடற ஏன் எல்லாத்தையும் எல்லாரையும் தப்பாவே நினைக்கிற? தோ! அந்த நெட்ட கொக்கு நெடுமாறன பார்த்துக் கூட பயப்படற. என்னவோ அவர் கிட்ட ஒரு தப்பு இருக்க மாதிரியே நினைக்கிற. ஆனா உங்க வீட்ல இருக்க எல்லாரையும் விட அவர் நல்லவர் என்று உனக்கு நல்லாவே தெரியும்! பிறகு என்ன? முதல உன்ன ஒரு நல்ல மனநல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி காட்டனும்! எல்லாம் நன்மைக்கே எதுக்கும் பதட்டபடாத…!” எனத் தன்னை தானே தேற்றிக்கொண்டு வீட்டின் கொல்லைபுறத்துக்கு சென்றாள் குந்தவைதேவி. குணசேகரன் ராதிகாவின் இளையமகள் அந்த வீட்டின் இரண்டாவது இளவரசி முதல் இளவரசி அவளின் அக்கா வானதிதேவி.

 

வானதிக்கும் குந்தவைக்கும் பத்து வருட வயது வித்தியாசம். வானதிக்கு அடுத்து இரண்டாவது குழந்தை உண்டாகாமலே போக, சரி ஒரு பிள்ளையே போதும் எனக் குணசேகரன் ராதிகா தம்பதி இருக்க எதிர்பாராமல் உதித்தவள் தான் நம் நாயகி குந்தவை.

 

ஒரு பிள்ளை போதும் என இருந்த நேரத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமானது சற்று சங்கோஜாதையும் கூடவே ஆண் பிள்ளையோ என எதிர்பார்ப்பையும் தர அவர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் பொய்யாக்கி விட்டு தேவதையென வந்து பிறந்தவள் தான் குந்தவை.

 

பெண் பிறந்தது குணசேகரனுக்கு ஏமாற்றத்தை குடுத்தாலும் அழகே உருவாய் எச்சில் ஒழுக பொக்கை வாய் திறந்து தன்னைப் பார்த்து சிரிக்கும் குழந்தையின் மேல் அன்பாய்தான் இருந்தார். எனினும் பிள்ளையை பார்க்க வரும் சுற்றமும் உற்றமும், ’ச்சோ! இத்தனை வருஷம் சென்று பிறந்தது பொட்டப் புள்ளையா போச்சே! வம்சம் விரித்தி பெற ஒரு ஆம்பிளை புள்ள பொறந்திருக்க கூடாது… குணாக்கு விதிச்சது இதான் போல!’ எனப் பாவம் போல் உச்சு கொட்டிவிட்டு செல்ல, தன் அண்ணன் ராஜசேகரனுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் தான் அவர்களை தன் பிள்ளைகளை போல் தான் குணசேகரன் பார்த்துக் கொள்கிறார் எனினும் தனக்கே தனக்கேன்று பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே என மனதுக்குள் வெதும்பி போனார். இதனால் தன் இளைய மகள் குந்தவையிடமிருந்து விலகியிருந்தார்.

 

குணசேகரன் போல் பல முட்டாள்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

ஆண் பிள்ளை பிறந்தால் தான் பெருமை! வம்சத்தை விரித்து அடைய வரும் குலமகன்! என ஏதோ அவர்களை குலதெய்வம் போல் எண்ணிக் கொள்வதும் ஆண் பிள்ளை இல்லையென்றால் தான் வாழுவதே இழுக்கு, வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்  கொள்ளவும் இறந்த பின் கொல்லி போடவும் நிச்சயம் ஆண்  பிள்ளை வேண்டும் என எண்ணும் இவர்களின் மன நிலை என்று மாறுமோ?

 

ஆண்களை காட்டிலும் பெண்களின் சாதனைகள் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது! திருமணமாகி சென்றாலும் பல பெணகள் ஆண் பிள்ளை இல்லாத தங்கள் பெற்றோர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதையெல்லாம் யார் இவர்களிடம் சொல்லி புரிய வைப்பது என்பது தான் குந்தவையின் ஆதங்கம்.

 

குணசேகரனுக்கு குறையாமல் ராதிகாவும் ஏதோ தன்னால் தான் தன் கணவருக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதோ என எண்ணினாலும் மூத்தவள் வானதியை விட பேச்சிலும் செயலிலும் குறும்பு தனம் மின்னும் குந்தவை என்றும் அவரின் செல்ல மகள் தான்.

 

பத்து வயது வித்தியாசம் இருந்தாலும் வானதிக்கு அவள் தங்கை என்றால் விளையாட்டு பொம்மை தான்! பின் ஓரளவு கருத்து தெரிந்த பிறகு தங்கையிடம் கண்டிப்பான அக்காவாக ஒரு இடைவெளியை கடைபிடித்தாள்

 

ஆனால் அதை பற்றியெல்லாம் குந்தவைக்கு கவலையில்லை ஏனென்றால் இவர்கள் எல்லோரையும் விட இவள் மேல் உயிராய் அவளின் பெரியப்பா இருக்கிறாரே!!!

 

குணசேகரனின் அண்ணன் ராஜசேகரன். அவருக்கு குந்தவையென்றால் உயிர் அவரிடம் ஒரு வார்த்தை இந்த திருமணத்தில் இஷ்டமில்லையென்று சொன்னால் போதும், அது கூட தேவையில்லை அவள் முகத்தை பார்த்தே அவள் விருப்பத்தை தெரிந்துக் கொள்வார்!

 

ஆனால் நுரையீரல் தொற்றாலும் கல்லீரல் பிரச்சனையாலும் லண்டனில் வசிக்கும் தன் இளைய மகன் வற்புறுத்தலின் பேரில் மருத்துவம் பார்க்க தன் மனைவி கிருஷ்ணவேணியுடன் லண்டன் சென்றுள்ள அவரை தொந்தரவு செய்ய விருப்பமில்லை குந்தவைக்கு.

 

எது எப்படியோ தேவையில்லாத தன் பயத்தை ஒதுக்கி தன் தாய் தந்தையை நம்பி நிலையற்ற மனதோடு தன் திருமண வைபவங்களுக்கு கலந்து கொண்டாள் குந்தவை தேவி!!!

 

அவள் கதிரேசனின் குந்தவையா இல்லை நெடுமாறனின் தேவியா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தொடரும்....


   
ReplyQuote
VSV 12 – உன்னருகில் உன் நினைவில்
(@vsv12)
Active Member Author
Joined: 8 months ago
Posts: 11
Topic starter  

ஹாய் மக்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? உன்னருகில் உன் நினைவில் அத்தியாயம்-3 பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்து திரியில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே. உங்களின் கருத்துக்களும் ஆதரவும் தான் எனது ஊக்க சக்தி மக்களே! திங்கள் கிழமை அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்கிறேன் நன்றி

இப்படிக்கு உங்கள்

VSV-12


   
ReplyQuote

You cannot copy content of this page