About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
டென்னிஸ் ஜெகன், ஊர் கன்னியாகுமரி.
படித்தது உயிர்வேதியல், உளவியல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் LLB. 15 வருடத்திற்கு மேல் MNC கம்பெனிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி இருக்கிறேன். பின்னர் அதை விட்டுவிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கிறேன்.
தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே, வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாக, சிறுவயதிலிருந்தே crime/ thriller மற்றும் horror கதைகள் மட்டும் தான் எனக்கு பிடிக்கும்... வேறு genre கதைகளை நான் படித்தது கூட கிடையாது.
என் எழுத்தின் ஆரம்ப புள்ளியாக, Paranormal psychologyயில் ஆராய்ச்சி ரீதியிலான ஆர்வம் இருந்ததால், கட்டுரைகள் நிறைய எழுதிருந்தேன். கொரோனா லாக்டவுன் காலகட்டம் முடியும் தருவாயில், "நீ தான் நல்லா கதை சொல்றியே, எழுதினால் என்ன?" என்று நண்பர்கள் தூண்டிவிட... எனக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை இரண்டு வருடங்களுக்கு முன்னால், முகநூலில் எழுத ஆரம்பித்தேன். அது எனக்கு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.
பணி நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நான் பழகிய மனிதர்களையும், எனக்கு கிடைத்த அனுபவங்களையும், சுற்றியுள்ளோர்க்கும் ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு சிறுகதைகள், தொடர்கதைகள் என பிரதிலிபி, முகநூல், டெலிகிராம் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் எழுதினேன். கடந்த இரண்டு வருடங்களில், 30 தொடர்களும் நிறைய சிறுகதைகளும் எழுதிவிட்டேன்.
வெகுஜன ரசனைக்கும், பொழுதுபோக்கிற்கும் தான், நான் எழுதுகிறேன். என் கதைகளில் இலக்கியத்தியோ, நாவல் அமைப்பையோ, கட்டுமானத்தையோ எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால் நாடகபாணி, ரேடியோ ஒலி சித்திரம் மற்றும் திரைக்கதை அமைப்பு என கலந்து கட்டி தான் கதை எழுதுகிறேன். ஒரு நாவலை இப்படித்தான் எழுதவேண்டும் என்று அந்த சட்ட திட்டமும் கிடையாது. நாவல் இஷ்டப்பட்டால் தன்னை எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளும். படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள்.
எழுதுவதால் எதையோ உருவாக்குகிறோம்; எதையோ நோக்கி பயணிக்கிறோம்; எதையோ அடைகிறோம். இந்த பயணம், பிடித்து போய் ஆரம்பித்து இருக்கிறேன்.
இது சிறுவயதில் - என்னவாக ஆகப் போகிறோம் என்கிற தேடல் கொண்டு வந்து சேர்த்த இடம். இன்னமும் தேடலின் வரம்புகளும் வரையறைகளும் விஸ்தரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
கருப்பு 1
வருடம்: 2015
இரவு பெய்த மழையின் காரணமாக சோம்பலாக விடிந்து கொண்டிருந்தது. ஈரம் காயாத சாலைகள், ஆங்காங்கே சிறு குட்டைகளாக தேங்கியிருந்த தண்ணீர், மழையில் நனைந்திருந்த மரங்கள், மரங்களுக்குள் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பறவைகள், கடற்கரையோர மூங்கில் மற்றும் தென்னை மரங்கள். கடற்கரை காற்று, ஓயாமல் வீசும் கடல் அலைகள், காற்றில் எப்போதும் இருக்கும் ரீங்காரம். இவைதான் ரஸ்தாகாடு ஊரின் அடையாளங்கள்.
ரஸ்தாகாடு ஊர், கன்னியாகுமரியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், யாருக்கும் தெரியாத ஒரு கடற்கரை கிராமம். பக்கத்தில் பெரிய ஊர் என்றால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அஞ்சுகிராமம் தான். டிஜிட்டல் இந்தியா இன்னும் அதிகம் எட்டி பார்க்காததால், நேரத்தை பற்றி கவலைப்படாத ஊர். பாதி பேருக்கு மீன் பிடிப்பது தான் முக்கிய தொழில். மீதி பேர் பக்கத்தில் இருக்கும் அஞ்சு கிராமத்துக்கும், நாகர்கோயிலுக்கும் வேலைக்கு செல்பவர்கள்.
கிராமத்தைப் பற்றி சீக்கிரமே தெரிந்து கொள்வீர்கள்... முதலில் அகல்யாவை பார்த்து விடுவோம்.
வேண்டாம். அகல்யா முக்கியமான வேலையில் இருக்கிறாள்.
அகல்யாவை பார்க்கும் முன் அவள் இருக்கும் வீடு.
வீடு என்று சொல்வதே தவறு. கிராமத்து மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். பல கதைகள் கேட்ட பெரிய திண்ணை போன்ற சிட் அவுட், அதற்கடுத்து இரு கதவிட்ட தலைவாசல்.
வீட்டின் நடுநாயகமாய் முற்றம். முற்றத்தை சுற்றி நான்கு பக்க தாழ்வாரம். இடப்பக்க தாழ்வாரத்தின் பக்கத்தில் தேக்கு மர பீரோ கொண்ட பெரிய கூடம். கூடத்தின் இரண்டு மூலையிலும் இரண்டு அறைகள். உள் தாழ்வாரம் கடந்தால் ஒரு சிறிய கூடமும், அதன்பின் இடப்பக்கம் சேமிப்பு அறை. அங்கே பழையகால பித்தளை பாத்திரங்களான
கொப்பரை, குண்டான், உருளி மற்றும் திருக்கை, உலக்கை, குந்தாணின்னு நிறைய இருந்தது.
வலப்பக்கம் சின்னதா ஒரு கிச்சன். அதுக்குபக்கமாவே இன்னொரு பெரிய மாஸ்ட்டர் கிச்சன். ஆட்டுக்கல், அம்மிக்கல், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், வாஷ்பேசின், கேஸ் அடுப்பு என்று பழமையும் புதுமையும் கலந்திருந்தது. இரண்டுக்கும் இடையில் கொல்லைப்புற வாசல் என அந்தக் காலத்து சகல சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திய வீடு. பர்மா தேக்கு தூண்கள், கதவு ஜன்னலுக்கு திருமலை செம்மரம், விட்டங்களுக்கு பண்ருட்டிப் பலாமரம், என ரசனையுடன் கட்டப்பட்ட வீடு.
பின் வாசல் ஒட்டிய கொட்டகையில், பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு என்று சமைக்க வெளி சமையற்கூடம். அதற்கடுத்தது கிணற்றங்கரை. பெரியகிணறு நிறைய தண்ணீருடன் இருந்தது, பக்கத்தில் துணி துவைக்கர கல். தென்னை, வாழை, பப்பாளி என கிணத்தடியை சுற்றி ஒரு சின்னதா ஒரு தோட்டம்.
வீட்டு முன்னால் ஃபுட்பால் கிரவுண்ட் அளவுக்கு எக்கச்சக்கமான இடம். அங்கேயும் ஒரு சிறு தோட்டம் இருந்தது. செம்பருத்தி பூக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன. இரவு மழையில் நனைந்திருந்த நந்தியாவட்டை செடிகள் குளிர் சிரிப்பு சிரித்தன. கோழிக்கொண்டை, வாடாமல்லி, பந்திப்பூ செடிகளும் தோட்டத்தை நிறைத்திருந்தன. காம்பவுண்ட் சுவரோரம் நடப்பட்டிருந்த முல்லைக்கொடி சுவருக்கு வெளியே எட்டி பார்த்துக் கொண்டிருந்தது. தெருவெங்கும் முல்லை வாசம் வீசிக்கொண்டிருந்தது.
வீட்டு முன்னாலிருந்த பெரிய சிட் அவுட்டில் போடப்பட்டிருந்த ஈஸி சேரில், வெள்ளெழுத்து கண்ணாடியுடன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் பெரியவர் பெரிய கருப்பன். அழுக்கு உறைந்து, வெள்ளை நிறத்தில் இருந்து எப்போதோ மாறியிருந்த பனியன். மார்பு தெரிந்த இடமெல்லாம் எலும்புகள் உடம்பை விட்டு தள்ளி இருந்தன. 70 வயதை தாண்டிய தேகம். தலையில் வெள்ளி கொத்துகள். ஆங்காங்கே விசுவாசமாய் ஒரு சில கருப்பு முடிகள்.
சமையல் கட்டில் கடா முடாவென சத்தம். அடுப்பின் மேல் வாணலி. வாணலியில் தாளிக்கும் புகை. நெற்றியில் வியர்வை, உதட்டில் கோபம். வெயிட்... இவள் அகல்யா இல்லை.
"கார்த்தி", என்று குரல் கொடுத்தாள் சித்ரா.
இவள் அகல்யாவின் தங்கை சித்ரா. இயற்கையாகவே நல்ல பெரிய கண்கள். இமைகளை அடிக்கடி படபடத்துக் கொள்வாள். நட்சத்திரம் மின்னும் கண்கள்... காதுகளில் ஜிமிக்கி திமிர்த்தனமாய் தனியாக பேசிக் கொண்டிருக்கும். இரட்டை பின்னல், பாவாடை தாவணி. சித்ராவை ஒரு முறை பார்த்தவர்கள், நிச்சயமாக மறுமுறை பார்க்க திரும்புவார்கள்.
ஜன்னலுக்கு வெளியே, சற்று தூரத்தில் நீட்டி கொண்டிருந்த மரக்கிளையில், ரெண்டு பெயர் தெரியாத பறவைகள் அமர்ந்து கீச் கீச் என்று சத்தமிட்டு கொண்டிருந்தன. அதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். வெயிட்.... இவளும் அகல்யா இல்லை.
"கார்த்தி... கூப்பிட்டது கேட்டுச்சா இல்லையா?..." என்றாள் சித்ரா.
கார்த்திகா. அகல்யாவின் கடைக்குட்டி தங்கை. சித்ராக்கா கூப்பிட்டது அவள் காதில் விழவில்லை. கார்த்திகாவை பார்த்து அந்த பறவைகள் கீச் கீச் என்று சங்கீதக் குரலை வெளிப்படுத்தின. கார்த்திகா ஆர்வமாக அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். இரண்டு பறவைகளுக்கும், அவள் இதுவரைக்கும் ஒரு பருக்கை உணவு கூட தந்ததில்லை. இருந்தும் அவளைப் பார்த்து கொஞ்சம் கூட பயப்படாமல், அன்புடன் குட் மார்னிங் சொல்லிக் கொண்டிருந்தன. கார்த்திகா அந்த பறவைகளைப் பார்த்து விசிலடித்தாள்.
கார்த்திகா அஞ்சு கிராமத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி. படிப்பை பற்றி பேசினால் அவளுக்கு பிடிக்காது. அதனால் விட்டு விடுவோம். சூர்யாவை பற்றி பேசுங்கள், ரொம்பவே பிடிக்கும். கார்த்திகாவுக்கு பிரட் நிற சருமம். குழந்தைத்தனம் மாறாத முகம். ஈர பளபளப்புடன் உதடுகள். ஒற்றைப் பின்னலாக போடப்பட்ட முடி, கீழ் முதுகு வரை நீளும். கார்த்திகா இருக்கும் இடத்தில், 100 அடி சுற்றளவில் யார் இருந்தாலும், அவர்களுக்கும் கார்த்திகாவின் உற்சாகம் பற்றிக்கொள்ளும்.
"அடியே கார்த்தி... கூப்டது காதுல விழல.. பாத்திரம்ல்லாம் கழுவிட்டியா????", அடுப்பில் கிளறிக் கொண்டு சித்ரா மூன்றாவது முறையாக கத்த,
அய்யய்யோ என்று கிணற்றடிக்கு கார்த்திகா பதறி ஓடினாள்.
"சே!!! இந்த வீட்ல நம்ம சொல்றத கேக்குறதுக்கு யாருமே இல்ல", என்று சலித்தபடியே சித்ரா கிளறிக் கொண்டிருந்தாள்.
கூடத்தின் மூலையில் இருந்த ஒரு அறையில், நெகிழ்ந்திருந்த உடையை சரி செய்து கொண்டிருக்கும் ஒரு சந்தன நிற அழகி. இவள் தான்... இவளே தான் அகல்யா.
அப்படி என்ன முக்கியமான வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தானே கேட்கிறீர்கள். தூங்கிக் கொண்டிருந்தாள். வேலைக்கு போகாத இந்த இரண்டு மாதம் தான்... அவளுக்கு நன்றாக தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறது.
அகல்யாவின் அழகு ஒரு கவிதைக்கு நிகரானது. பெரிய கண்கள் அவள் குடும்ப சொத்து போலிருக்கிறது. இதழ்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சிரிக்க தெரியும் என்று அறிவிக்கும் ஸ்பெஷல் கண்கள். ரோஜா உதடுகள். சீரான பற்கள். வாத்ஸ்யாயானர் சொன்ன லட்சணங்களுடன் நெற்றி, மூக்கு, உதடு.... உடலின் வளைவுகள், மேடுகள், சரிவுகளை வர்ணிக்க ஆரம்பித்தால் வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். லிப்ஸ்டிக், பவுடர், ஷாம்பூ, சென்ட், நகை என்று எந்தவித செயற்கையும் அருகில் சேர்க்கப் பிரியப்படுவதில்லை. இயல்பாகவே அகல்யா ஒரு மப்பும் மந்தாரமுமான அழகி.
ரூமை விட்டு வெளியே வந்தாள் அகல்யா. கூடத்தில் இருந்த சுவரில் அப்பாவும் அம்மாவும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு புது செம்பருத்திப் பூ அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. சித்ரா காலையிலேயே பூ மாற்றி வைத்து விட்டாள் போலிருக்கிறது. அப்பா அம்மா இருந்த நாட்களின் நினைவு, அவள் கண் முன்னால் நிழலாடியது.
அப்பா ரத்ன சபாபதி இந்த ஊரிலேயே பெரிய மிராசுதாரர். ஏகப்பட்ட சொத்துக்கள். பணத்துக்கு பஞ்சம் இல்லை. அம்மா, அவருக்கு ரெண்டாம் மனைவிதான். பாட்டியின் கட்டாயத்துக்காக பெரியம்மா ராஜலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அப்பா காதலித்தது அம்மா புஷ்பவல்லியை தான். அம்மாவின் முகத்தை, அவள் முத்தங்களை, அவள் அரவணைப்பை,
பொய்க் கோபத்தை, சமாதான வார்த்தைகளை... எப்படி மறக்க முடியும்??? அம்மா, அவர்களுக்கு நிழல் கொடுத்த ஆலமரம். ஆலமரம் விழுந்து விட்டால் யார் தான் தாங்கிக் கொள்ள முடியும்???
பெரியம்மாவை கல்யாணம் செய்து கொண்டாரே தவிர, அப்பா முழு நேரமும் இந்த வீட்டில் தான் இருப்பார். அப்பா கையைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்தது, அவளை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு அப்பா தோட்டத்தில் ஓடியது, பள்ளிக்கூட வாசலில் காத்திருந்து அவளை கூட்டி வருவது என எத்தனையோ அன்பு கணங்களை பொக்கிஷமாக நினைவு அடுக்குகளில் பாதுகாத்து வருகிறாள் அகல்யா. 10 வருடங்களுக்கு முன்னால், அவர்களின் குலதெய்வம் இசக்கி கோவில் திருவிழாவுக்கு போய்விட்டு இரவு வரும்போது, அவள் அப்பாவும் அம்மாவும் ஒரு கார் விபத்தில் இறந்து போனார்கள். அப்போது அகல்யாவுக்கு 16 வயது, சித்ராவுக்கு ஓரளவுக்கு விவரம் தெரியும். ஆனால் கார்த்திகா, அப்போது சிறு குழந்தை 4 வயது தான் இருக்கும்.
விபத்தைப் பற்றி ஊருக்குள் பல்வேறு கதைகள் பேசினார்கள். சொத்து பிரிப்பதில் பிரச்சனை வந்தது. அதைப் பற்றில்லாம் அகல்யா கவலைப்படவில்லை. அப்பாவும், அம்மாவும் போன பிறகு என்ன இருக்கிறது? தோட்டம், துறவு, பெரிய வீட்டை பெரியம்மாவும், அவள் மகன் முத்துப்பாண்டியும் எடுத்துக் கொண்டார்கள். வாய்க்காலுக்கு பக்கத்தில் இருக்கும் நிலங்களை அத்தை பிரபாவதி எடுத்துக் கொண்டாள். இப்போது இருக்கும் மேட்டு வீட்டையும், இதற்கு பக்கத்தில் இருக்கும் காவண வீட்டையும் இவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.
பெரியம்மாவும், அண்ணன் முத்துப்பாண்டியும் சொத்துக்களில் ஒரு நயா பைசா கூட கொடுக்காமல், துணை யாருமில்லாத இந்த மூன்று பெண்களையும் ஊரை விட்டு துரத்த பார்த்தார்கள். தாத்தா பெரிய கருப்பனும், ஊராரும் தலையிட்டதால் தான் இந்த வீடாவது கிடைத்தது. பக்கத்தில் இருந்த காவண வீட்டை கொடுத்ததற்கு காரணம், அது சண்டி முனிக்கு நேர்ந்து விட்ட வீடு. அதனால் இவர்கள் தலையில் கட்டி விட்டார்கள். எப்படியும் பெரியம்மா வளைத்து எடுத்த சொத்துக்கள் மூன்று தலைமுறைக்கு போதும். முத்துப்பாண்டி உபயத்தால், மூன்று தலைமுறையில் இரண்டு தலைமுறையில் கரைந்திருந்தன.
போட்டோவை பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவுக்கு,
மீண்டும் மீண்டும் அப்பா அம்மாவின் ஞாபகங்கள் அதிகமாக, கண்ணோரத்தில் எந்த நேரத்திலும் வழிந்து ஓட ஆயத்தமாயிருந்தது கண்ணீர்...
"அப்பா..... அம்மா.... நாங்க நல்லா இருக்கோம்... நீங்க எப்படிருக்கீங்க?????" என்றாள் போட்டோவை பார்த்து... வழக்கம்போல் பதில் சொல்லாமல், அவளை சிரித்தபடி, பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கண்ணீரை துடைத்துக் கொண்டு சமையல்கட்டை நோக்கி சென்றாள்.
"என்னடி டிபன் ரெடியா?"
"ரெடிக்கா... தோசை, தக்காளி சட்னி" என்றாள் சித்ரா.
கார்த்திகா பாத்திரங்களை கழுவி கிச்சனுக்குள்ள எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்பா அம்மா இறந்த பிறகு... சித்ராவையும், கார்த்திகாவையும் பொறுப்பாக வளர்த்தது அகல்யா என்பதால், இருவருக்குமே அக்கா மேல் மரியாதை கலந்த பயம் உண்டு. அகல்யா திண்ணையில் இருக்கும் தாத்தாவை பார்ப்பதற்காக சென்றாள்.
வழக்கம்போல் நாளிதழை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்த தாத்தாவை பார்த்து,
"தாத்தா எனக்கு இன்னைக்கு நாகர்கோவில் போகணும். பழைய கம்பெனில PF க்கு எழுதி கொடுத்திருந்தேன். அது என்னாச்சுன்னு போய் கேக்கணும். நான் வருவதற்கு சாயங்காலம் ஆயிரும்."
பெரிய கருப்பன்: சரிமா, பார்த்து போய்ட்டு வா. நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா?
அகல்யா: தாத்தா, அதெல்லாம் சரிப்பட்டு வராது. தூத்துக்குடி அத்தை, இவ்வளவு நாளா இந்த பக்கமே வரல. சின்ன வயசுல அவங்கள பார்த்தது. நாம கஷ்டப்படும் போதெல்லாம் வந்து எட்டி கூட பாக்கல...
தாத்தா ஏதோ சொல்ல வர,
அகல்யா அவரை பேசிவிடாமல் தொடர்ந்து பேசினாள். "சரிதான், கல்யாணி அத்தை பையன் கூட நான் சின்ன வயசுல ஸ்கூலுக்கு போய்ருக்கேன். விளையாண்டுருக்கேன். ஒண்ணா காடு கழனில்லாம் சுத்திருக்கோம். அதெல்லாம் விவரம் தெரியாத வயசு. அவனுக்கு என் மேல கொள்ள ஆசை. இப்ப என்னை கல்யாணம் கட்டிக்க பிரியப்படுறான்னு சொன்னா எப்படி? நம்ம சித்ராவுக்கு 19 வயசு தான் ஆகுது. இப்பதான் ஃபர்ஸ்ட் இயர் போறா. காலேஜ் படிச்சு முடிக்கணும். கார்த்தி 10-ம் கிளாஸ் முடிக்கல. ரெண்டு பேருமே ஒரு இரண்டாங் கெட்ட வயசுல இருக்காங்க. அவங்கள யாரு பாத்துக்குவா??? எனக்கு அதுக்கு ஒரு பதில் சொல்லுங்க. கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்.."
தாத்தா: அதுக்காக இல்லம்மா... ஏற்கனவே உனக்கு வயசு ஆயிட்டு போகுது. காலாகாலத்தில் பண்ண வேண்டிய விஷயங்கள் எல்லாம் பண்ணனும். இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்க ஆள் இல்லை என்பதற்காக உன் கல்யாணத்தை தள்ளி போட முடியுமா??? ஊருக்குள் அத்தை சும்மாதான் இருக்கிறா. அவளை கவனிச்சுக்க சொல்ல வேண்டியதுதான்.
அவர் சொன்னது அவருடைய மகள் பிரபாவதியை பற்றி...
அகல்யா வாய்விட்டு சிரித்தாள்... "யார் பிரபா அத்தையா??? நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவங்க நல்லவங்க தான்... இல்லன்னு சொல்லல. ஆனா அவங்களால ராகினியையே கவனிச்சுக்க முடியாம, அவ புருஷனை விட்டுட்டு வந்து வீட்டோட இருக்கிறா. சொத்து பிரிக்கும் போது கொடுத்த நிலத்தையும் பொண்ணு கல்யாணத்துக்காக வித்துக்கிட்டு இப்ப அம்போன்னு இருக்குறாங்க. இதுல நம்ம பொண்ணுங்கள அவங்க கவனிச்சிக்குவாங்களா, அதெல்லாம் சரிப்பட்டு வராது தாத்தா."
தாத்தாவுக்கு அவள் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்ததால், மேற்கொண்டு அதைப் பற்றி பேசாமல் மௌனமானார். ஆனாலும் மூத்தவளுக்கு வயதாகிக் கொண்டு போகிறதே என்று ஒரு சிறு ஆதங்கம்.
அகல்யா: நான் சொன்னது உங்களுக்கு ஏதாவது கோபமா?
அவளை கிட்டே வா என்று கூப்பிட, ஈசி சேரில் இருந்த தாத்தா அருகில் வந்தாள் அகல்யா. அவள் தலையை பாசமாக தடவி, கன்னத்தில் முத்தமிட்டார். அவர் கண்களில் ஈரத்தின் பளபளப்பு.
"உன்ன மாதிரி பொறுப்பான பொண்ணு மேல கோவப்பட முடியுமா??? நல்லா படிக்கிற பொண்ணு, தங்கச்சிங்களுக்காக படிப்பை விட்டே. நீயே சுயமா சம்பாதிச்சு தொலைதூர கல்வியில படிச்சே. வேலைக்கு போய், சம்பாதித்து தங்கச்சிகளையும் நல்லபடியாக வளர்த்தே. உன்ன மாதிரி ஒரு அக்கா கிடைத்ததற்கு அவங்க கொடுத்து வச்சிருக்கணும்.. உனக்கும் காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்கணும் இல்லம்மா... அதனால்தான் கேட்டேன்.."
அகல்யா: என்ன தாத்தா, எல்லாமே நான் தனியா செஞ்ச மாதிரி சொல்றீங்க??? நீங்க எங்களுக்கு துணையா இல்லைனா, நாங்க என்ன பண்ணிருக்க முடியும். அப்பா கொடுத்த இந்த வீடு இருக்கு. எல்லாம் இருந்ததனால் தான் செய்ய முடிந்தது.
தாத்தா; சரி, உன்னோட பேக் பெயின் எப்படி இருக்கு?? வேற ஏதாவது வேலைக்கு போக போறியா???
அகல்யா: பேக் பெயின் குறைந்த மாதிரி தெரியல. மயிலாடி வைத்தியர் கொடுத்த மருந்து, தைலங்கள் தான் பயன்படுத்துறேன். ரெண்டு மூணு மாசம் வேலைக்கு போக முடியாதுன்னு தான் நினைக்கிறேன். கொஞ்சம் சிரமம் தான். இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கணும்.
தாத்தா: அப்படின்னா நான் ஒண்ணு சொல்றேன்.. நீ கோவிச்சுக்க கூடாது.
அகல்யா: என்ன இது பீடிகை. சொல்லுங்க தாத்தா???
தாத்தா: நம்ம காவண வீட்டை வாடகைக்கு விட்டால் என்ன??? ஒரு சின்ன வருமானம் அதில் வருமே.
அகல்யாவுக்கு சின்னதாக அதிர்ச்சி.
"என்ன தாத்தா சொல்றீங்க??? நீங்க தான் முனி சாபமிட்ட வீடு. அதை விக்கவும் முடியாது. எதுவும் பண்ண முடியாது. மீறி வீட்டை கை வைத்தால் முனி அடித்து விடும். அப்படி இப்படிலாம் சொன்னீங்க???"
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் காவண வீடு, அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளையே, சற்று தள்ளி, அமைந்திருந்தது. யாரும் அந்தப் பக்கம் போகாததால் செடி கொடிகள் சூழ்ந்து பாழடைந்து கிடந்தது. முனி வீடு என்பதால் இரவு யாரும் அந்த பக்கம் கூட செல்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்த இரு வீடுகளும் கட்டப்படும் போது, மேட்டில் அமைந்திருந்ததால், இப்போது அகல்யா இருக்கும் வீட்டை மேட்டு வீடு என்பார்கள்.
பள்ளத்தில் அமைந்திருந்ததாலும், முன்பொரு காலத்தில் ஊரில் கல்யாண விருந்துகள் அடிக்கடி அந்த வீட்டில் நடந்து, கல்யாண பந்தல்கள் போடப்பட்டதால், அதை காவண வீடு என்கிறார்கள். மேட்டு வீட்டின் மினியேச்சர் வடிவம் தான் காவண வீடு.
தாத்தா: முனி சாபமிட்ட வீடு என்பது உண்மைதான். இருந்தாலும்...
ஏதோ யோசனையோடு பேச்சை நிறுத்தினார்.
வாழ்ந்த வாழ்க்கையின் மிச்சமாக எல்லா ஊர்களிலும், இதேபோன்று ஒரு பாழடைந்த வீடு இருக்கிறது. அதை பற்றிய கதைகள் சொல்வதற்கு ஆள் இருக்கும் வரையில் அந்த வீடுகளும் உயிரோடுதான் இருக்கும்.
தாத்தா ஈசி சேரில் இருந்து எழும்பினார். பக்கவாட்டில் திரும்பி காவண வீட்டை பார்த்தார். அகல்யாவும் திரும்பி, காவண வீட்டை பார்த்தாள்.
இருவரும் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது போல்... காவண வீடு அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/&source=gmail&ust=1739971482333000&usg=AOvVaw1Q2trKHanmhSOxNHwV7uL 1"> https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 4
அகல்யா காவண வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதை தாத்தா பார்த்ததும், "ஏம்மா என்னாச்சு?" என்று கேட்க,
அகல்யா: அங்கே யாரோ இருட்டுக்குள்ள நிக்கிற மாதிரி இருக்கு தாத்தா... என்று கிசுகிசுத்தாள்.
தாத்தா திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள்ளாக அகல்யா வீட்டுக்குள் சென்று டார்ச் லைட்டுடன் வெளியே வந்தாள்.
அகல்யா டார்ச் லைட் அடித்து பார்க்க, வேலி செடிகள் அசைந்தது போல் தோன்றியது.
"இருங்க, தாத்தா போய் பாத்துட்டு வரேன்...."
"இருட்டுல தனியா போகாதமா... நானும் வரேன்."
"என்ன பெரிய இருட்டு! நம்ம வீட்டு இருட்டு தானே. நீங்க இங்கேயே இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்..."
"சிக்னியை எங்கே காணல்லை"
"அது ரோட்ல எங்கயாச்சும் படுத்திருக்கும்"
சிக்னி கார்த்திகாவின் வளர்ப்பு நாய்.
அகல்யாவை டார்ச் லைட் வெளிச்சம் வழிநடத்த, சிட்டவுட்டில் இருந்து இறங்கி, இடது பக்கமாக திரும்பி காவண வீட்டை நோக்கி நடந்தாள். இரவு நேரங்களில் எவ்வளவோ தடவை, இந்த பக்கமாக வந்திருக்கிறாள் அவளுக்கு எதுவுமே தோன்றியதில்லை. ஆனால் இம்முறை வித்தியாசமான ஒரு உணர்வு தோன்றியது.
காவண வீட்டை சூழ்ந்திருந்த இருள், நெகிழ்வு தன்மையாக இருப்பது போலவும், பிசுபிசுத்துக் கொண்டிருப்பது போலவும், அவளை உறிஞ்ச முயற்சிப்பது போலவும் உணர்ந்தாள். டார்ச் லைட்டின் வெளிச்சம் காவண வீட்டின் மேற்புற கூரைகளில் ஊர்ந்து நகர, தடதடவென ஏதோ மெல்லிய அதிர்வுகள். காவண வீடு அவளுக்கு தெரியாமல் எதையோ மறைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
சே! என்ன இது எனக்கு வரும் யோசனைகள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது!!! செடி வேலியை அடைந்து, செடிகளை நகர்த்தினாள். மேட்டு வீட்டை விட காவண வீடு பள்ளத்துக்குள் இருப்பதால், மண்ணாலான படிக்கட்டுகளில் இறங்கி, காவண வீட்டை நோக்கி நடந்தாள்.
தாத்தா வீட்டுக்குள்ள இருந்து, "என்னாச்சும்மா..?" என்று சத்தமாக கேட்க,
"ஒண்ணுமில்ல தாத்தா. சும்மா பார்த்துகிட்டு இருக்கேன்."
"இருட்டுல போகாதம்மா. செடிகளுக்குள் ஏதாவது பூச்சி பொட்டு இருக்கும். நீ வந்துரு. காலையில பார்த்துக்கலாம்."
"சரிரிரிரி...."
சுற்றிலும் டார்சடித்து பார்த்தாள் அகல்யா.
காவண வீடு இருட்டுக்குள் உறைந்திருந்தது. கதவில் சிறிய பூட்டு மோனநிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.
எக்ஸாம் ஹாலில் மேற்பார்வையாளர் முதுகுக்கு பின்னால், மாணவர்கள் கிசுகிசுவென பேசி காப்பியடிக்க முயற்சிக்கும் போது, மேற்பார்வையாளர் திரும்பி பார்த்தால், சட்டென்று மாணவர்கள் அமைதியாவது போல், அகல்யா வீட்டை பார்க்கும் போது வீடு அமைதியானது போல் தோன்றியது.
சிட் அவுட்டுக்கு வந்த சித்ரா, அக்கா எங்கே என்று கேட்க, காவண வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. பார்க்க போயிருக்கிறாள் என்று தாத்தா சொன்னார்.
சித்ரா: அக்கா இருட்டுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்க?? நான் வரட்டுமா?? என்று சத்தமிட்டு கேட்டாள்.
அகல்யா: வேணாம், வேணாம். நான் வந்துட்டேன்.
வீடு வழக்கம் போல் தான் இருக்கிறது. தாத்தா சொன்ன கதைகளை கேட்டு தான், எனக்கு இப்படி தோணுது போல... அகல்யா சிரித்தபடி, மேட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
அகல்யாவின் முதுகுக்கு பின்னால்,
அதுவரை உறைந்திருந்த காவண வீடு கிசுகிசுக்க ஆரம்பித்தது.
அகல்யா மேட்டு வீட்டின் சிட்டவுட்டை அடைந்தாள்.
தாத்தாவும், சித்ராவும் என்ன விஷயம் என்பது போல் பார்க்க...
"யாரோ நின்னுட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.
போய் பார்த்தேன். யாருமே இல்ல", என்றாள்.
தாத்தா: நாளைக்கு யாரையாச்சும் வேலையாட்களை கூட்டிட்டு வந்து, செடி கொடி எல்லாம் வெட்டி, வீட்டை சுத்தப்படுத்தணும். திருமுடி கிட்டயும் விஷயத்தை சொல்லிடுறேன். அவனே வீடு புரோக்கர்கள் கிட்ட சொல்லிடுவான். தேவைனா வீட்டுக்கு ஒரு பூஜையும் பண்ணிடலாம். ஒரு பிரச்சனையும் இருக்காது. சரி, சரி, நேரமாச்சு நீங்க போய் தூங்குங்க.
அகல்யாவும், சித்ராவும் வீட்டுக்குள் சென்றார்கள்.
ரஸ்தாகாடு கடற்கரை
இரவு 12 மணி
நிலா வெளிச்சத்தில் கடற்கரையை ஒரு பெரிய வளைவாகப் பார்க்க முடிந்தது. அமைதியான கடல், கரை நோக்கி அலைகளை கட்டுப்பாடுடன் வீசி எறிந்து கொண்டிருந்தது. கரையெங்கும் பாறைகள் மண்டிய, ஒட முள்ளு நிறைந்த முள்ளுக்காடு. அதற்கிடையே பச்சை புல்வெளிகள். அதற்கடுத்து வானுயர தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புக்கள். தோப்புக்குள் ஒன்றிரண்டு இரவு காக்கைகள் கத்திக்கொண்டே இருந்தன.
கடற்கரைகளில் நிறைய பைபர் படகுகள் கரை முழுக்க நின்றன. இரவு மீன் பிடிக்க சென்ற நான்கைந்து பைபர் படகுகள் கரைக்கு வந்துகொண்டும் இருந்தன. கடற்கரையில் முன்பக்கம் திறந்தபடி இருக்கும் பெரிய ஓலை கொட்டகை. உள்ளே ஒரு பல்பு சோபையாக மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியே பக்கவாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மீன்கள் நிறைந்த கூடைகள் இருந்தன. கொட்டாய்க்குள் மூன்று பேர் பேசிக் கொண்டிருந்தனர். கொட்டாயை சுற்றி பலவிதமான மீன்பிடி வலைகள்.
சகாயராஜ் பீடி புகையை வெளியிட்ட படி," இன்னைக்கு ரொம்ப மீன் படலை போலிருக்கு", என்றான்.
அந்தோணி: ஆமாண்ணே. ஆளுக்கு 2000 ரூபாய் தேறும். அயலையும், சாளையும் தான் பத்து கூடை இருக்கு.
திருமுடி: நேத்து மஞ்ச பாறை நிறைய மாட்டுச்சு.
மூவரும் கீழத்தெருவை சார்ந்தவர்கள். அந்தோணிக்கும், சகாயராஜ்க்கும் பைபர் படகுகள் இருந்தன. திருமுடி அவ்வப்போது அவர்களுடன் மீன்பிடிக்க போவான். திருமுடிக்கு வேறு தொழில்களும் இருந்தன. பணம் வரும் எந்த விஷயத்தையும் அவன் விட்டு வைப்பதில்லை.
மூவரும் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நாய் அவர்களை கடந்து சென்று கூடைகளை மோப்பம் பிடிக்க, திருமுடி ஒரு கல்லெடுத்து நாயின் மேல் எறிந்தான். நாய் வள் வள் என்று வலியில் கத்திகொண்டே, தூரத்தில் போய் நின்று, கேவல் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.
மூவரும் பேச்சுக்கச்சேரியை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். கரையை நோக்கி வந்து கொண்டிருந்த பைபர் படகுகளின் வெளிச்சம் சமீபித்திருந்தது.
கேவல் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த நாய் திடீரென ஊளையிட ஆரம்பிக்க, மென்மையாக வீசிக் கொண்டிருந்த காற்று, திடமாகி, கருப்பாக மாறியிருந்தது.
அந்தோணி: இந்த பயலுக சீக்கிரம் வந்துட்டானுங்கன்னா, வீட்டுக்கு போய் சாப்பிட்டு படுத்துரலாம். நாளைக்கு காலைல வலைக்கு போக வேண்டிருக்கு.
திருமுடி: உனக்கு என்னவே??? நேரம் தவறாமல் சாப்பாடு ரெடியா இருக்கும். கொடுத்து வச்சவன். நமக்கு அப்படியா?
குடிசைக்கு பக்கவாட்டில் வைக்கப்பட்டிருந்த மீன் கூடைகளில், 2 கூடைகள் தானாகவே நகர்ந்து சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை. மண்ணில் நகர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் எழும்பி பறந்து சென்றன.
சகாயராஜ்: இதுல கொடுத்து வைக்க என்ன இருக்கு? நீ பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. யாரு வேண்டாங்கிறா?
திருமுடி: சித்தப்பு, நிலையான வருமானம் இல்லை. இதில் கல்யாணம் ஒரு கேடா?
சகாயராஜ்: கதை விடுறியா? பொட்டி கடை பக்கம் எதுக்கு அடிக்கடி போறேன்னு எங்களுக்கு தெரியாதா என்ன??...
திருமுடி: சேச்சே! அப்படில்லாம் ஒண்ணுமில்ல. கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் இருக்கு.
சகாயராஜ்: பாத்து ஒழுங்கா நடந்துக்கல. அடுத்தவன் வாய் வச்ச பண்டத்த போய் நீயும் வாய் வைக்காத... தண்டமா போயிருவ. உன்ன பத்தி ஏதாவது தப்பா நியூஸ் வந்துச்சு, பொளந்துருவேன்.
சகாயராஜ் திருமுடிக்கு சித்தப்பா முறை என்பதால், அவனுக்கு கொஞ்சம் பயம் உண்டு.
கசவாளி பயலுக எப்படியாவது மோப்பம் புடிச்சிருரானுங்களே!! இவனுங்கள எப்படி சமாளிக்கி......
.......
எதார்த்தமாக மீன் கூடைகளை திரும்பிப் பார்த்த திருமுடி திடுக்கிட்டான்.
"என்ன ரெண்டு கூடையை காணல்லை?..."
திருமுடி எழும்பி வந்து பார்க்க, கூடைகள் பக்கம் இருந்து அழுத்தமான காலடித்தடங்கள் மணலில் பதிந்திருந்தன. திருமுடி கூர்ந்து நோக்கினான். காலடித்தடங்கள் இருட்டுக்குள் சென்றது.
தூரத்தில் யாரோ இரண்டு கூடையை தூக்கிக் கொண்டு ஓடுவது போல் தெரிந்தது.
"எவனோ ரெண்டு கூடையை தூக்கிட்டு ஓடுராம்ல... சீக்கிரம் வாங்கல."
மற்ற இருவரும் டார்ச் லைட்டுகளை எடுத்துக்கொண்டு பதறி எழும்பினார்கள்.
திருமுடி முன்னால் ஓட, மற்ற இருவரும் பின்னால் ஓடி வந்தார்கள். கடற்கரை மணல்மேடுகளை தாண்டி மூவரும் ஓடினார்கள். தலை மேல் இரண்டு கூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்தபடி யாரோ சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். இருட்டுக்குள் அரைகுறையாக தான் தெரிந்தது.
மணல்மேடுகள் தாண்டியவுடன், ஒடமுள்ளுகாடு வந்தது. எக்கு தப்பாக வளர்ந்திருந்த முள்ளு மரங்கள். பார்த்துப் போகவில்லை என்றால் கூரிய மூட்கள் முகத்தை பதம் பார்த்து விடும்.
சகாயராஜ்: எவன்டா அந்த தா... ளி... முள்ளு காட்டுக்குள்ள எடுத்துட்டு ஓடுறது???
.... என்று ஓடியபடியே மூச்சிரைக்க கேட்டான்.
முள்ளு காட்டுக்குள் சுத்தி சுத்தி ஓடினார்கள். சரசரவென அவர்கள் காலடி சத்தம், முள்ளுக்காடு பூராவும் எதிரொலித்தது. முன்னால் விரட்டிச் சென்ற திருமுடி திடீரென நின்றான்.
பின்னால் விரட்டி வந்த அந்தோனியும், சகாராஜும்... திருமுடி நின்றிருப்பதை பார்த்ததும் அவனருகே ஓடிச் சென்று நின்றார்கள்.
திருமுடி பீதியில் உறைந்து போய் நின்றிருந்தான். எதைப் பார்த்து இப்படி பயந்து போய் நிற்கிறான் என்று புரியாமல், இருவரும் அவன் பார்க்கும் திசையை பார்த்தார்கள்.
சகாயராஜ்: என்னாச்சு? என்னாச்சு?... என்று கேட்க, திருமுடி சற்று தூரத்தில் கை காண்பித்தான்.
முள்ளு காட்டுக்குள் அனாதரவாக கிடந்த சண்டி முனியின் சிலை முன்னால், இரண்டு மீன் கூடைகளும் அமர்த்தலாக இருந்தன.
சகாயராஜ் பதட்டமாக, "என்னலே, என்ன பார்த்த???", என்று கேட்டான்.
அந்தோணி: கூடையை தூக்கிட்டு வந்த திருட்டு பய, இங்கே வச்சுட்டு ஓடிட்டானா?
திருமுடி எச்சில் விழுங்கியபடியே, "கூடையை தூக்கிட்டு ஓடுனவன சரியா பாக்க முடியல. ஆனா எனக்கு என்னவோ... யாரும் தூக்கிட்டு ஓடுன மாதிரியே தெரியல. வெளிச்சமான பகுதியைக் கடக்கும் போது, ஏதோ கருப்பு காத்துல, கூடைகள் மிதந்து போன மாதிரி தான் தோணுச்சு."
அந்தோணி: என்னல சொல்ற... கருப்பு காத்தா?... என்று அதிர்ச்சியானான்.
அவர்கள் டார்ச்சுகள் தூரத்தில் தெரிந்த சண்டி முனியின் சிலையை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்ச,
குரோதம் கொப்பளிக்கும் விழிகள், முறுக்கு மீசை, தோள்களைத் தொடும் சங்கிலி போன்ற கூந்தலுடன் செம்மண் பூசியபடி சிதிலமடைந்து சிறிய பீடத்தின் மேல் நின்றிருந்தது சண்டிமுனி சிலை. ரொம்ப நாட்கள் கவனிப்பாரற்று கிடந்ததால், அந்த சிறிய கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுசுவர் கற்கள் பெயர்ந்து, சுவர் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.
சகாயராஜ்: என்னல இது புது பிரச்சனை? கொஞ்ச காலமாக ஊருக்குள்ள முனி ஓட்டம் பத்தின செய்திகள் எதுவுமே இல்லை. இப்ப எப்படி திடீர்னு முனி ஓட்டம் ஆரம்பிச்சது? எவன் முனியை கிளப்பி விட்டானோ?
அவர்கள் மூவரில் அந்தோணி கொஞ்சம் விவரம் தெரிந்தவன். கல்லூரி படிப்பு வரை படித்தவன்.
அந்தோணி: முனி ஓட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனா முனி இருந்துகிட்டே தான் இருக்கும். ஒரு சில மீன்கள், கோடைகால வேக்காளத்தை சமாளிக்க, நீண்ட தூக்கத்தை போடுதில்ல. தண்ணியே இல்லன்னாலும், நுரையீரல் மீன்கள் வருஷகணக்கா மண்ணுக்குள்ள மறஞ்சி கிடக்குதுல்ல. அதே மாதிரி முனியும் எங்கேயோ மறைந்து, நீண்ட தூக்கத்தில் இருந்திருக்கும். இப்ப முழிச்சிருக்கு. இல்லை யாரோ முழிக்க வச்சிருக்காங்க.
சகாயராஜ்: அய்யய்யோ!!! என்னாக போகுதோ???
பல வருடங்களுக்கு முன்னால் முனி ஓட்டத்தின் நடுவே குறுக்கிட்டவர்கள், ரத்தம் கக்கி இறந்த கதை, இன்னும் வேறு கதைகள் எல்லாம் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.
திருமுடி பதட்டமாக சுற்றிலும் பார்த்தபடி: எதுக்கு அதெல்லாம் இங்கருந்து பேசிகிட்டு...முதல்ல வாங்க இங்கருந்து போயிடலாம்... என்றான்.
மீன் கூடைகளை அங்கேயே போட்டுவிட்டு, மூவரும் அந்த இடத்தை விட்டு, விட்டால் போதுமென்று ஓடினார்கள்
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 7
வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்வார்களே அந்த மாதிரி ஜீவன் ராமபத்திரன் தாத்தா. சும்மா அடுத்தவருக்கு பாரமாக இருக்கும் பேச்செல்லாம் இல்லை. பேரன், பேத்தி என்று கொஞ்சியாயிற்று. 80 வயது தாண்டி விட்டாலே ஒவ்வொரு நாளும் கடவுள் கொடுத்த கொடை. அதனாலேயே யாருக்கும் அதிகம் துக்கம் இல்லை, அவர் வளர்த்த நாயை தவிர!
வள்ளியூரில் இருந்து அவர் மகன் ரஸ்தா காடு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்குள்ள தான் ஆகும்... காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் பண்ணி சொன்னதுமே, கார் எடுத்து அவர் மகன் குடும்பத்துடன் வந்து விட்டான். ரேடியோ, பந்தலுக்கு, சமையல் ஆளுக்கு சொல்லிவிட்டார்கள். அரை மணியில் பந்தல் போட்டு, ரேடியோ கட்டியாகிவிட்டது. முதல் பாட்டு வழக்கம் போல "சட்டி சுட்டதடா!". வீட்டருகில் இருந்த பூவரச மரத்தடியில் மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி சமையல் வேலையும் ஆரம்பமானது.
துக்கத்திற்கு ஏகப்பட்ட பேர் வர ஆரம்பித்தார்கள். வந்திருந்தவர்களில் ஆண்கள், அவர் மகனிடம் துக்கம் விசாரித்தார்கள். பெண்கள் மருமகளிடமும் பேருக்கு துக்கம் விசாரித்து, ஆறுதல் சொல்லிவிட்டு அருகில் இருந்த வேப்பமர நிழலில் உட்கார்ந்து ஊர் கதை பேச ஆரம்பித்தார்கள். சரியாக டீயும் பன்னும் தயாராக இருந்தது. கல்யாண சாவு என்பதால் பெரிய அழுகாச்சி சீன இல்லை. டீயை குடித்த படி, அனைவரும் அரட்டையை ஆரம்பித்திருந்தனர். "பெரியவர் யாருக்கும் தொந்தரவு இல்லாம, தானும் இம்ச படாம சீக்கிரம் போய் சேந்துடுச்சு".
"அந்த சூப்பர்வைசர் வர வர ரொம்ப ரப்சர் பண்றான்"
"போன மாச பணம் அக்கவுண்ட்ல ஏறிடுச்சா?"
"வர்ற வாரம் குருசடிக்கு பின்னால் இருக்கிற முள்ளு மரங்கள் எல்லாம் வெட்ட சொல்றாங்க..."
"ஆங்... அதெப்படி அவனை வந்து வெட்ட சொல்லு..."
அனைவரும் அரசாங்க வேலை பார்ப்பவர்கள். நூறு நாள் வேலை திட்டத்தில், மரத்தடியில் உட்கார்ந்து, உருண்டு, புரண்டு, பேசி பழக்கப்பட்டவர்கள். அவர்களிடம் வேலை செய்ய சொன்னால் எப்படி?
தார தப்பட்டை ஆட்கள் மரத்தடியில் கள்ளோ பதனியோ குடித்துக் கொண்டும், பீடி பற்றவைத்துக் கொண்டிருந்தார்கள்.
திருமுடி டீ கப்புகளுடன் அங்கும் இங்கும் சுத்திகொண்டு இருந்தான். ஊருக்குள் என்ன விசேஷம் நடந்தாலும் சரி, துக்க காரியமா இருந்தாலும் சரி, முதலில் ஆஜராகி விடுவான். ஏதோ அவனே தலைமை தாங்கி நடத்துவது போல் அவனுக்கு ஒரு உணர்வு ஏற்படும்.
எழவுக்கு வந்திருந்த சகாயராஜ் திருமுடியை நோட்டமிட்டு கொண்டிருந்தான். திருமுடிக்கு சகாயராஜ் என்றால் மட்டும் சிறுவயதில் இருந்து லைட்டா பயம்.
சாரத்தை மடித்து கட்டிக் கொண்டு வந்த ராமசாமி, ஏதோ பேசிக் கொண்டிருந்த சகாயராஜ் மற்றும் திருமுடியை பார்த்து,
"ஐயையோ!!! பெருசு நேத்து தானே என்கிட்ட 1000 ரூபாய் கடன் வாங்கிச்சு? இப்ப சொல்லாம கொள்ளாம போயிருச்சே!!! நான் யாருகிட்ட திரும்பி வாங்குவேன்", என்று ஒப்பாரி வைத்தபடி வந்தான்.
திருமுடி அவனை தடுத்து நிறுத்தி,
"யாரு நீயி... ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த?...
சகாயராஜ்: முதல்ல என்கிட்ட வாங்கின 50 ரூபாயை திருப்பி குடுல.
ராமசாமி கப்பென்று ஒப்பாரியை நிறுத்திவிட்டு, இருவரையும் மாறி மாறி பார்த்தான். பின்பு எதுவும் பேசாமல் சைடு வாங்கினான்.
திருமுடி: லேய் என்ன ஒண்ணுமே சொல்லாம போற. பதில் சொல்லிட்டு போல.
ராமசாமி பேசாமல் போய்க்கொண்டே இருந்தான்.
சகாயராஜ்: ஏலே நில்லு...
அவன் கண்டு கொள்ளவில்லை.
சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து விட்டதால், மாலை 5 மணிக்கு எடுத்து விடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. தாத்தா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் கூரை மேல் சோறு வீசினார்கள். ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் ஒரு சடங்கு.
தாத்தா வீட்டின் கொல்லை புறத்தில், பெட்டிக்கடை பரிமளா அங்கிருக்கும் ஒரு சில பெண்களுடன் பேசிக் கொண்டிருந்ததை திருமுடி பார்த்தான்.
தூரத்தில் நின்று அவன் பார்ப்பதை, பரிமளாவும் பார்த்து விட்டாள்.
சகாயராஜ் எங்கே என்று பார்த்தான். அவன் முன்னால் கூட்டத்தில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை உறுதி செய்ததும், திரும்பி பரிமளாவை பார்த்து,
தனியா வா என்று சைகை செய்தான். கொஞ்ச நேரம் பொறு என்று பதில் சைகை செய்தாள்.
பேசிவிட்டு சகாய ராஜை பார்க்க, அவன் அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், திருமுடி நைசாக நழுவினான்.
அடப்பாவி!!!! பார்த்துட்டானா!
தாத்தாவின் மகனும், இன்னும் ஒரு சில சொந்தக்காரர்களும் தாத்தாவை தூக்கி, வாகனத்தில் வைத்தார்கள். சரியாக "போனால் போகட்டும் போடா" பாட்டு ஒளிபரப்பப்பட்டது. வாகனம் சுடுகாடு நோக்கி புறப்பட்டது. ஆண்கள் முக்கால்வாசி பேர் கிளம்பினார்கள். பெண்களில் சிலர் பின்னாடியே அழுது கொண்டு வாசல் வரை சென்றார்கள்.
கொல்லைப்புறத்தில், ஆள் யாரும் இல்லாததால், திருமுடி பரிமளாவை வரச்சொன்னான்.
அவள் வந்ததும்,
திருமுடி அவசர அவசரமாக: என்னடி கண்டுக்கவே மாட்டேங்குற? பொட்டிக்கடை பக்கமும் வர முடியல. போன் பண்ண கூடாதுன்னு வேற சொல்ற. இன்னைக்கு நைட்டு வரவா?
பரிமளா சுற்றிலும் பார்த்தபடி,
"போன் வேற யாராவது எடுத்தா பிரச்சனையாயிரும். போன்ல்லாம் பண்ணிராத. இன்னைக்கு நைட் வேண்டாம். நாளைக்கு 10 மணிக்கு மேல வா. புருஷனுக்கு நைட் டூட்டி தான் போயிருவான்."
விலகியிருந்த முந்தானைப் பிரதேசங்களை பார்த்துக் கொண்டிருந்தான் திருமுடி. ஐந்து வருட திருமண வாழ்க்கை, பரிமளாவின் உடலமைப்பை சிறிது சேதப்படுத்தி இருந்தாலும், கிண்ணென்று தான் இருந்தாள்.
"அங்க என்ன பார்வை?" என்று முந்தனையை சரி செய்து விட்டு, அவன் தோளில் வலிக்காதவாறு அடித்தாள்.
நாளைக்கு நைட்டு செம மஜா தான் என்பது உறுதியானதும், திருமுடிக்கு சொல்ல முடியாத பாகங்கள் எல்லாம் சிலிர்த்தது.
பரிமளா: சரி, நான் போறேன்.
யாரும் இல்லாததால் திருமுடி அவள் இடுப்பில் கைவைக்க பார்க்க, அவள் கைக்கு அகப்படாமல், வளைந்து நெளிந்து ஓடினாள்.
கொல்லைப்புற வாசல் வழியாக சகாயராஜ் அவனைத் தேடிக் கொண்டு வெளிப்படுவதை பார்த்ததும், நீட்டிய கையை மடக்கிய திருமுடி,
"என்னடா இது, இந்த சுதந்திர நாட்டுல காதலிக்க தான் விட மாட்டேங்கறீங்க? கள்ளக்காதல் கூட பண்ண கூடாதா?"
என்று முணுமுணுத்தப்படி நடையை கட்டினான்.
ரஸ்தாகாடு சுடுகாடு
இரவு 9 மணி
ஊரிலிருந்து கடற்கரைக்கு போகும் வழியில், இருளாயி கோயிலில் இருந்து, பிரிந்து செல்லும் ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவுக்கு சற்றே பெரிய பாதை, சுடுகாடு நோக்கி செல்லும். ஊருக்கு வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. முள்ளு செடிகள் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் போல் அமைந்திருந்தது. ரஸ்தாகாடு பக்கத்தில், கடற்கரையோரமாகவே இரண்டு சிற்றூர்கள். வலப்புறம் காணிமடமும், இடப்புறம் பனையூரும் இருந்தது. இரண்டு ஊர்களில் நடக்கும் சாவுகளுக்கும் ரஸ்தாகாடு சுடுகாட்டை தான் பயன்படுத்துவார்கள்.
சுடுகாடு நுழைவாயிலேயே செக்யூரிட்டி கேபின் போல் வெட்டியானின் குடிசை. எப்போதோ பின்னப்பட்ட ஓலைகளுடன், குடிசை கீறல்களுடன் காணப்பட்டது.
பனை மரத்திலிருந்து பாம்பு தலைகீழாக இறங்குவது போல், இருட்டு வானத்தில் இருந்து இறங்கி கொண்டிருக்க, சுடுகாட்டில் பெரியவரின் பிணம் எரிந்து கொண்டிருந்தது. சாயங்காலம் மழையும், காற்றும் சிறிது நேரம் அடித்ததால் முழுவதுமாக எரிக்க முடியவில்லை. விறகு கட்டைகளும், வரட்டியும் பயன்படுத்துவதால், முழுவதுமாக எரிப்பதற்கு இரண்டு, இரண்டரை மணி நேரமாகும். வாழும் போது என்னென்ன ஆசைகளுடன் வாழ்ந்தானோ, அதில் எவ்வளவு நிறைவேறியதோ தெரியாது. நெருப்பு அவன் உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கடலின் பேரொலியும், காற்றின் சத்தத்தையும் தவிர வேறு எந்த சத்தமும் வந்து பிரதேசத்தில் கேட்கவில்லை.
சாராய பாட்டிலை வாயில் வைத்து கொட்டி கவிழ்த்துவிட்டு, வெட்டியான் கையில் வைத்திருந்த ஊறுகாய் பாக்கெட்டை பிரித்து வாயில் வைத்து இழுத்தான். லுங்கி அவுந்துவிடாமல் இருக்க பெரிய பெல்ட் அணிந்திருந்தான். பெல்ட்டுக்குள் ஒரு டார்ச் லைட்டை சொருகி இருந்தான்.
கடற்கரை காற்று அடித்ததில், பிணத்தின் முகத்தை மூடியிருந்த வறட்டி சரிந்து, கீழே விழுந்தது. பொசுக்கிக் கொண்டிருந்த தீ பிணத்தின் வாயை ஆ வென பிளந்து வைத்திருந்தது.
வெட்டியான் திரும்பி பார்த்தான். அவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. கழுத்தை சுற்றி போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் உருமா கட்டிக் கொண்டான்.
திடீரென,
"ஊஊஊஊஊ.....ஊஊஊஊஊ.....", என்று ஒரு நாயின் ஊளை சத்தம், கடலின் பேரொலியும், காற்றின் சத்தத்தையும் இரண்டாகப் பிளந்தது. ஹொவ்க்..ஹொவ்க்.... என்று ஆந்தைகளின் சத்தம்... கிரீச் கிரீச்... என்று தூரத்தில் ஒரு பேர் தெரியாத பறவை வினோதமாக சத்தமிட்டது. வெட்டியான் சுற்றிலும் பார்த்தான். ஊளை சத்தம் வெட்டியானுக்கு புதிதல்ல... ஆனால் கேட்டுக் கொண்டிருந்த கடல் அலைகளின் சத்தமும், காற்று சத்தமும் திடீரென்று நின்று பேரமைதி ஆனது தான், அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"ஊஊஊஊஊ.....ஊஊஊஊஊ.....", மறுபடியும் ஊளை சத்தம்.
சட சடவென சத்தம் கேட்க, பிணம் எரிந்து கொண்டிருக்கும் மேடையை திரும்பி பார்த்தான். தீக்கங்குகள் சிதறி கீழே விழ, எரிந்து கொண்டிருந்த பிணம் மேலே எழுந்தது. வெட்டியான் சுற்றிலும் பார்த்தான். கீழே கிடந்த ஒரு விறகு கட்டையை எடுத்துக் கொண்டு பிணத்தருகே சென்றான்.
டொப் டொப் என்று அடித்து மறுபடியும் படுக்க வைத்தான். பிணத்திலிருந்து என்னெல்லாமோ தெறித்து பக்கத்தில் விழுந்தது. வெட்டியான அசரவில்லை. எவ்வளவு பிணங்களை பார்த்திருப்பான்.
விறகு கட்டையை தூக்கி எறிந்து விட்டு, திரும்பி நடந்த வெட்டியான் தூரத்தில் கருப்பாக ஏதோ சுழல் காற்று போல் சுழன்று வருவதை பார்த்தான்.
திகைத்தான்.
சுழல் காற்று நகர்ந்து வராமல், துள்ளித்துள்ளி வருவது அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. அவனை நோக்கி தான் வந்து கொண்டிருந்தது.
என்னடா இது!!! வித்தியாசமாக இருக்குதே என்று அவன் பார்த்துக் கொண்டிருந்த வேளையிலேயே துள்ளித்துள்ளி வந்த கருப்பு காத்து, திடீரென வேகம் எடுத்தது.
கண்ணிமைக்கும் நேரம். புயல் வேகத்தில்,
விஷ்க்..... என்று அவனை நோக்கி வந்து மோத, வெட்டியான் தூக்கி எறியப்பட்டான். ஏதோ புல்டோசர் வந்து மோதியது போல் உணர்ந்தான்.
பல அடி தூரம் பின்பக்கமாக பறந்து, தட் என்று பூமியில் மோதி விழுந்தான். சர்ரென்று சறுக்கி கொண்டே சென்றான்.
கருப்பு காற்று அதே இடத்தில் நின்றிருந்தது. விசித்திரமாக, மூர்க்கத்தனமாக, நெகிழ்வுத் தன்மையுடன், நெளிந்தபடி, உள்ளுக்குள் ஏதோ மிக்சியில் நற நறவென அரைப்பது போல், கருப்பு காத்துக்குள் விளங்கிக் கொள்ள முடியாத சத்தம்.
கீழே விழுந்தவன் மறுபடியும் எழும்ப முயற்சிக்க, முடியவில்லை. மெதுவாக தலையை எழுப்பி பார்த்தான். அடி வயிற்றில் இருந்து ஏதோ பிரட்டிக்கொண்டு வர, உவ்வே... என்ற சத்தத்துடன் வாந்தி எடுத்தான்.
இரத்தம் இரத்தமாக வந்தது.
தடாலென்று அவன் கீழே சரிந்தான்.
தொடரும்
கருப்பு 12
மேட்டு வீடு
இரண்டு நாட்களுக்குப் பிறகு, காலை 11 மணி
சிட் அவுட்டில் பெரிய கருப்பனும் திருமுடியும் பேசிக் கொண்டிருந்தார்கள். காலை நேர பரபரப்பு முடிந்து, மேட்டு வீடு அமைதியாக இருந்தது. சித்ரா காலேஜுக்கும், கார்த்திகா ஸ்கூலுக்கும் சென்றிருந்தார்கள். வேலை காரணமாக, ஹேமாவை ரொம்ப நாள் பார்க்க முடியாததால், அகல்யா அவளை பார்ப்பதற்காக நாகர்கோவில் சென்றிருந்தாள். மேட்டு தெருவில் மரத்தடியில் சிக்னி படுத்திருந்தது.
பெரிய கருப்பன்: எனக்கெனவோ ஊருக்குள்ள திடீர்னு முனி நடமாட்டம் பத்தி பேச்சு ஆரம்பிச்சிருக்கிறது, முத்துப்பாண்டி வேலையா இருக்குமோன்னு சந்தேகம். அவன் காவண வீட்டை வளைக்கிறதுக்கு என்ன வேணா பண்ணுவான். முனி இருக்கிறது உண்மைன்னு ஆயிருச்சுன்னா, காவண வீட்டை நாம வாடகைக்கு விட முடியாது, விற்க முடியாது. மறுபடியும் அடிச்சு வாங்கிக்கலாம்ன்னு திட்டம் போடுறான்.
திருமுடி: மீன் கூடைகளை முனி தூக்கிட்டு ஓடுனதை என் கண்ணால பார்த்தேன்...
பெரிய கருப்பன்: சொல்றத ஒழுங்கா சொல்லு. மீன் கூடைகளை எவனோ எடுத்துட்டு ஓடிருக்கான். நீங்க விரட்டிட்டு போய்ருக்கீங்க. கடைசில கூடைகள் முனி சிலை பக்கத்துல கிடந்ததை பார்த்தீங்க. கரெக்டா?
திருமுடி தயங்கியபடியே ஆமா என்றான்.
ராமசாமி விஷயத்தை சொல்லலாமா என்று யோசித்தான். இரவு கடற்கரையில், தூக்கி எறியப்பட்டு, ரத்தம் கக்கி விழுந்து கிடந்தவனை, காலையில் தான் பார்த்து ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போய்ருக்கிறார்கள். கீழே விழுந்து, தலையில் பலத்த அடிபட்டதால் எப்பவோ அவன் இறந்து விட்டான் என்று டாக்டர் கையை விரித்திருக்கிறார்.
மறுநாள் செய்தியை கேள்விப்பட்டதும், சகாயராஜ்க்கும் திருமுடிக்கும் அதிர்ச்சி. சைக்கிளில் வருபவன், எதிர்காற்றில் தூக்கி வீசப்படுவது போல், தானாக பல அடி தூரம் பறந்து எப்படி விழ முடியும்?
ரொம்ப குழம்பி போயிருந்தார்கள். வெளியேவும் சொல்ல முடியவில்லை.
பெரிய கருப்பன்: நான்தான் சொல்றேனே! இவ்வளவு நாள் இல்லாம இப்ப திடீர்னு முனி எங்கிருந்து வந்தது? காவண வீடு பத்தின விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் தானே, இந்த பேச்சு ஆரம்பிச்சிருக்கு. அப்போ இது யாருடைய வேலையா இருக்கும். நிச்சயமா முத்துப்பாண்டி வேலை தான் இது!
திருமுடி ஒன்றும் பேசாமல் யோசித்தபடியே நின்றான்.
பெரிய கருப்பன்: முனி ஆட்டத்தை நான் நேரில் பார்த்தவன். நானே இப்படி சொல்றேன்னா, நீ புரிஞ்சுக்கணும். முந்தி மாதிரி இல்ல. எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு. என் காலத்துக்கு அப்புறம், இந்த பிள்ளைகளுக்கு யாருமே இல்லாம போயிடும். பணம் இருந்தாலாவது கொஞ்சம் கவலை இல்லாம இருப்பாங்க. அதனால்தான் இவ்வளவு மெனக்கெடுறேன். இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல. உடனடியா வாடகைக்கு யாராவது கிடைக்கிறாங்களான்னு பார்.
கேட் வாசலில் மோட்டார் பைக் சத்தம் கேட்க... பெரிய கருப்பனும், திருமுடியும் திரும்பிப் பார்த்தார்கள். முத்துப்பாண்டி மோட்டார் பைக்கில் இருந்து இறங்கினான்.
முகத்தில் எக்கச்சக்க கோபத்துடன் கேட் வாசலை திறந்து, உள்ளே நுழைந்தான். நடையிலேயே ஆக்ரோஷம் தெறித்தது. சிட் அவுட் படிகளில் ஏறாமல் முன்னாலேயே நின்றபடி,
"என்ன திருமுடி நேரடியாவும் சொன்னேன், வாத்தியார் மூலமாகவும் சொல்லி அனுப்பினேன். அவ்வளவு தூரம் சொல்லியும், இன்னும் வீட்ட வாடகைக்கு விடுறதாகவும், விற்க போறதாகவும் பேச்சு அடிபட்டுகிட்டே இருக்கே. அதான் ரெண்டுல ஒண்ணு என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்?"
பெரியகருப்பன்: என்ன பாத்து பேசுடா?! எதுக்கு சம்பந்தம் இல்லாத அவனை பார்த்து பேசுற?
முத்துப்பாண்டி: தாத்தா இன்னும் உங்க காலம் இன்னும் எவ்வளவு நாள்ன்னு தெரியாது. ஒழுங்கா எனக்கு ஒத்துழைங்க. நான் சொல்றத கேளுங்க. அந்த வீடு சும்மாதான் பூட்டி போட்டுருந்தீங்க. அதனால தான் நான் அதை பயன்படுத்தலாமேன்னு கேட்டேன். இப்ப நீங்க வீட்டை விக்க முடிவெடுத்ததுனால மறுபடியும் முனி நடமாட்டம்ன்னு பேச்சு அடிபடுது, பாத்தீங்களா?
பெரிய கருப்பன் திருமுடியை அர்த்தத்துடன் பார்த்தார்.
பெரிய கருப்பன்: டேய், நான் தெரியாம தான் கேட்கிறேன். நான் விக்க போறதுனால தான் முனி வந்ததாகவே இருக்கட்டும். உன்கிட்ட கொடுத்தால் மட்டும், முனி என்ன, உன்னை தொட்டில்ல போட்டு தாலாட்டுமா? இந்த முனி எப்படி வந்துச்சுன்னு கூட எனக்கு தெரியும். அதனால உன் வேலையை என்கிட்ட காமிக்காத. நான் உன் அப்பனுக்கு அப்பன்.
முத்துபாண்டி: தாத்தா வேண்டாம். வீணா என்ன கோபப்படுத்தாதீங்க? ஒழுங்கா எனக்கு மாத்தி எழுதி கொடுத்து, சாவியை கொடுத்துடுங்க...
பெரிய கருப்பன்: எதுக்காக உனக்கு இந்த வீடு தேவைப்படுது, நீ யாருக்கு கொடுக்கப் போற, உனக்கு இதுல எவ்வளவு லாபம் கிடைக்கும் எல்லாமே எனக்கு தெரியும். உன் அப்பன் சொத்தை தேவைக்கு அதிகமாகவே எழுதி வாங்கிட்டே. இன்னும் ஏன் மத்தவங்களுக்கு கொடுத்தத அடிச்சு புடுங்க பார்க்கிறே?
முத்துப்பாண்டி வேட்டியை மடித்து கட்டி, சொடக்கு போட்டு," என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள வீட்டை எனக்கு மாத்தி எழுதி தரணும். இல்லனா என்ன நடக்கும்னு என்னால சொல்ல முடியாது... திருமுடி எடுத்து சொல்லு", என்று சொல்லிவிட்டு கேட்டை நோக்கி நடந்தான்.
வெளியே சென்று, புல்லட்டை கிளப்பி, எக்கச்சக்கமான புகையை கக்கிவிட்டு நகர்ந்தான்.
திருமுடி: ஐயா, இவன் ரொம்ப மோசமானவன்னு உங்களுக்கே தெரியும். எப்படியும் ஏதாவது தொந்தரவு பண்ணிட்டே இருப்பான். பேசாம அவனுக்கு எழுதிக் கொடுத்திருங்களேன். எப்படியும் பணம் கொடுக்க தானே போறான்.
பெரிய கருப்பன் சற்று காட்டமாக,
"என்னடா பேசுற? இவன் வந்து மிரட்டுறாங்குறதுக்காக பயந்திர முடியுமா? நியாயம்னு ஒண்ணு இல்லை. ஊர் பஞ்சாயத்துன்னு ஒண்ணு இல்ல. அவன் என்ன பெருசா பணம் கொடுக்கப் போறான்? முழுசையும் அவன் அமுக்கிக்கிட்டு, சோள பொறி மாதிரி ஏதாவது பிச்சை போடுவான். அதை வச்சி என்ன பண்ண முடியும்?
மூணு பொண்ணுங்க இருக்காங்களே! அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு நடக்க வேண்டாம். நீ வாடகைக்கு ஆள் பாரு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்."
சரி ஐயா என்று சொல்லிவிட்டு, திருமுடி கிளம்பி சென்றான்.
பெரிய கருப்பன் தைரியமாக பேசிவிட்டாரே தவிர, முத்துப்பாண்டி என்னென்ன செய்யப் போகிறானோ என்று நினைத்து அவருக்கு கவலையாக இருந்தது.
நினைத்ததை நிறைவேற்றும் கூடங்குளம் பத்ரகாளியம்மா, எந்தப் பிரச்சனையும் இல்லாம காப்பாற்று தாயே!!!
ஹா ஹா ஹா...
யாரோ பரிகாசமாக சிரிக்கும் சத்தம்.
யாருடா அது சிரிப்பது என்று பெரிய கருப்பன் சுற்றிலும் பார்க்க...
காவண வீட்டிலிருந்து தான் கேட்கிறது.
பெரிய கருப்பன் நெஞ்சுக்குள் இனம் புரியாத பயம் ஒன்று கவ்வி பிடித்தது.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 14
அவர்களைக் கடந்து சென்ற ஒரு சில பேர் விசித்திரமாக பார்த்தபடி சென்றார்கள். வீட்டுக்கு வெளியே வந்தால், பெண்களை இயல்பாகவே இருக்க விடாத கூட்டத்தை சேர்ந்தவர்கள்.
சூழ்நிலையை உணர்ந்து இருவரும் சுதாரிக்க,
ஹேமா கண்களை துடைத்துக் கொண்டாள்.
அகல்யா: இப்படியே ரோட்ல நின்னு பேசி அனுப்பி விடுற மாதிரி ஐடியாவா? வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டியா?"
"ச்சே என்னடி சொல்ற? கிரஷ்ல காவியாவை விட்டுருக்கேன். செட்டிகுளம் போயி அவள கூட்டிக்கிட்டு அதன் பிறகு வீட்டுக்கு போகலாம்..."
"பாப்பாவை மூணு மாசத்துக்கு முன்னால பார்த்தது.... நவம்பர் வந்தா தானே நாலு வருஷம் முடியுது?"
"ஆமா...."
அகல்யா: இப்ப நீ புதுசா குடி இருக்கிற வீட்ல புருஷன் எங்கன்னு கேட்டுருப்பாங்களே என்ன சொன்ன?
ஹேமா: ஹஸ்பண்ட் துபாய்ல இருக்குறாரு, ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவாருன்னு சொன்னேன். வீட்டுக்காரங்களுக்காக மட்டுமல்ல, ஏரியால இருக்குற பசங்க தொந்தரவுலே இருந்தும் தப்பிக்கணுமே.
அகல்யா: கரெக்ட் தான்
ஹேமா: பேசாம நம்ம ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்த காலத்துக்கு, சின்ன வயசுக்கே, ரஸ்தா காட்டுக்கே திரும்பி போயிரலாமன்னு அடிக்கடி எனக்கு தோணும். எந்த கவலையும் இல்லாத காலம். ஜோடி போட்டு ஊரையே சுத்தி வந்தோம், பட்டான்பூச்சி புடிச்சோம். கடற்கரையில் உருண்டோம். கள்ளன் போலீஸ் விளையாடினோம். பாவாடை சட்டை அழுக்கானதை பற்றி கவலைப்படவே இல்லை. மேட்டு தெரு, முள்ளு காடு, தென்னந்தோப்பு, இருளாயி கோயில்... எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றேன்.
பேசிக் கொண்டிருக்கும் போதே பால்ய பருவத்துக்கு சென்றிருந்தாள். நிகழ்காலத்தில் தோற்றுப் போனவர்கள், கடந்த காலத்தை நினைத்து ஏங்குவது இயல்பு தானே.
அகல்யா: சரி ஓகே ஓகே.. எல்லாம் பழைய கதை. நிகழ்காலத்துக்கு வா. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. அதே மாதிரி இப்பவும் இருக்கலாம். மனசு தான் வேணும்.
ஹேமா அகல்யாவை கேள்விக்குறியுடன் பார்க்க,
அகல்யா: உண்மையைத்தான் சொல்றேன். எதை பற்றியும் கவலைப்படாமல் விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியை போலிருப்பேன்னு நீ நினைச்சுக்கோ. உன்னை அழுத்தும் பாரங்களை தூக்கி தூர ஏறி. சந்தோஷமாக இருக்கலாம்.
ஹேமா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.
"உன்னை இன்னைக்கு பார்த்ததுனால, உன் கூட பேசினதனால, என் மனசுக்குள்ள இருந்த பாரம் எல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு.."
"சரி அத விடு. உங்க ஆபீஸ்ல நிறைய அழகான பசங்க வேலை பாக்குறாங்க போல... அதனால தான் உனக்கு என் ஞாபகம் இல்லாம போயிருச்சுன்னு நினைச்சிருந்தேன்."
"ச்சிய் போடி.."
அகல்யாவும் ஹேமாவும் சாலையோரம் நடக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் பழைய குதூகலம் திரும்பியிருந்தது.
அதே நேரம்,
ரஸ்தா காடு,
முத்துப்பாண்டி வீடு
சதை உருண்டைகளை உருட்டி வைத்தது போல், புஷ்டியாக, பளபளப்பான சேலையில் ராஜலட்சுமி, வீட்டுக்கு பின்பக்கமாக தேங்காய் உரித்து கொண்டிருந்த வேலையாளிடம் அடுத்தது என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தாள்.
பணக்காரர்களின் வீடு எப்படி இருக்கும் என்று பல கதைகளில் வர்ணித்து இருப்பார்கள். அதனால் வர்ணித்து ஒரு பேராவை வீணாக்க தேவையில்லை.
முத்துப்பாண்டி ரூமை நோக்கி சென்றாள். அவன் எங்கேயோ கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.
"அந்த முனி வீடு பிரச்சனை என்னாச்சு??:
"பேசிட்டு இருக்கேன். சீக்கிரம் முடிஞ்சிடும் பார்ட்டி கிட்ட பேசி அட்வான்ஸ் வாங்கியாச்சு இந்த கழுதைங்க தான் முரண்டு பிடிச்சிட்டு இருக்கு"
"அவளுங்களுக்கு என்ன தெரியும்? எல்லாம் உங்க தாத்தா பண்ற வேலை. முனி வீடு பிரச்சனை இருக்கிறதுனால தானே, அவங்க கிட்ட தள்ளி விட்டோம். எனக்கெனவோ திரும்ப அதை வாங்கணும்னு நினைக்கிறது சரியில்லைன்னு தோணுது"
"அட ஏம்மா... நீயும் மத்தவங்க மாதிரி பேசிக்கிட்டு, முனி வீட்டை முடித்துக் கொடுத்து, மத்த நிலங்களையும் வளச்சி கொடுத்தா, சிமெண்ட் கம்பெனி காரங்க நம்மள சிறப்பா கவனிக்கிறேனு சொல்லிருக்காங்க. ஏற்கனவே தேவையில்லாத வேலை எல்லாம் செஞ்சு, பாதி சொத்தை இழந்துட்டேன். மீதியையாச்சும் காப்பாத்தணும். இழந்ததை மீட்கணும். அடுத்த எம்எல்ஏ எலக்சன்ல நிக்குறதுக்கு பண உதவி செய்கிறேன்னு சிமெண்ட் கம்பெனிக்காரங்க சொல்லிருக்காங்க. அப்புறம் வேற என்ன வேணும்?"
"எல்லாம் சரிதான், ஆனா....", என்று அவன் இழுத்துக் கொண்டிருக்கும் போது முத்து பாண்டியின் போன் அடித்தது.
போனை எடுத்து,
"ஹலோ", என்றவன் மறுமுனையில் பேசியவர் சொன்ன தகவலை கேட்டு முகம் வெளுத்துப் போனது.
"அப்படியா? எப்ப, எங்க நடந்துச்சு?"
"....................."
"சரி சரி நான் பாக்குறேன்", என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அவன் முகம் போகிற போக்கை பார்த்து, ராஜலட்சுமி என்னவென்று விசாரிக்க,
"சிமெண்ட் கம்பெனி சார்பில், நம்ம ஊர்ல செயல்பட்டுக்கிட்டு இருந்த மேனேஜரும், அவர் கூட வந்த இன்னொரு ஆபீஸரும், நேத்து ராத்திரி நம்ம ஊரு விலக்குல ஆக்சிடெண்டில் அடிபட்டு ரொம்ப சீரியசான நிலைமையில் ஹாஸ்பிடலில் இருக்கிறதா போன் வந்துச்சு..."
ராஜலட்சுமி நெஞ்சை பிடித்துக் கொண்டு, " என்னப்பா சொல்ற?" என்று அதிர்ந்தாள்.
முத்துப்பாண்டி எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
ராஜலட்சுமி: இந்த ரெண்டு பேரும் தானே முனி வீட்டை விலை பேசுறதுக்காக அன்னைக்கு வந்தாங்க.
ஒருவேளை அந்த முனி வேலையை காட்டிருக்குமோ?
முத்துப்பாண்டி: என்னமா பேசுறீங்க? அப்படின்னா என்னத்தானே முதலில் அடிச்சிருக்கணும். இது ஏதோ ஆக்சிடென்ட். எதேச்சையா நடந்த விஷயம்.
ராஜலட்சுமி: உன்னை முனி அடிக்காது. முனியினால் எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்ன்னு அந்த வீட்டை நேர்ந்து விட்டு பிரச்சினை வரும்போது, பூஜை பண்ணி, இரட்சையை உன் இடுப்பு அருணாகயிறில் கட்டினோம். கயிற்றை நீ கழட்டல இல்ல?
முத்துப்பாண்டி தன்னிச்சையாக அருணாகயிற்றை தொட்டுப் பார்த்தான். அருணாகயிறு இருந்தது.
"அம்மா எனக்கு இதுலல்லாம் நம்பிக்கை இல்லை. அந்த பொட்ட கழுதைகளை அடிச்சு விரட்டி, அந்த முனி வீட்டை வாங்கி சிமெண்ட் கம்பெனி காரங்களுக்கு எழுதிக் கொடுப்பேன். வெளியே ஒரு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்", என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
என்ன நடக்க போகுதோ என்று நெஞ்சு பதைப்பதைக்க, ராஜலட்சுமி அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
Currently viewing this topic 1 guest.
Latest Post: காலம் தாண்டிய பயணம் -07 Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page