All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 22.2 (இறுதி அத்தியாயம்) 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 36
Topic starter  

அன்பு - 22.2 (இறுதி அத்தியாயம்) 

 

மனோ இவளையே பார்த்திருப்பது தெரிய, “உனக்குத் தனியா சொல்லணுமா மனோ? சாப்பிடு!” என்றாள்.

“நீயே ஊட்டி விடு டி...” மனோ அவள்புறம் தட்டை நகர்த்த, சந்தனாவிற்கு விழிகள் மீண்டும் உடைப்பெடுத்தன. தளும்பி நின்ற விழிகளை இமையை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டவள், அவனுக்கு ஊட்டிவிட, மனோ பாரமேறிய மனதுடன் உண்டான்.

“அப்போலாம் நீ என்னை ஊட்டிவிட சொல்லிக் கேட்டுட்டே இருப்பல்ல மனோ. அம்மா பார்த்திருவாங்கன்னு பயமா இருக்கும் டா. நீ கேட்டன்னு பயந்துட்டே ஊட்டுவேன். இப்போ உனக்கு ஊட்டிவிட ஆசையா இருக்கு. பாரேன், அந்த நிலைமைல நம்ப ரெண்டு பேருமே இல்ல. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, அப்போவே உன்னை நான் நல்லா பார்த்திட்டு இருப்பேன் டா!” என்றாள். மனோ அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.

“சாரி டா, சாரி. நான் எதுவுமே பேசலை. சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனாலும் எதையாவது பேசி உங்களை அப்செட் பண்ணிடுறேன். மூளை சொல்ற பேச்சை மனசு கேக்க மாட்டுது டா. இன்னைக்கு ஒருநாள் தானே உங்க கூட பேச முடியும். அதானல மனசுலபட்டது எல்லாம் வந்துடுது டா!” சங்கடமாய் அவனைப் பார்த்துக் கூறினாள்.

மனோ அவளுக்கு உணவை ஊட்ட வர, “இல்ல... இல்ல மனோ. நீ சாப்பிடு!” என மறுத்தாள்.

“நீயும் சாப்பிடு குட்டி!” என அவன் கூற, “ஹம்ம்...நான் தனியா பிளேட்ல சாப்பிட்டுக்குறேன் டா...” என்றாள் தயக்கமாய்.

“நான் ஊட்டுனா நீ சாப்பிட மாட்டீயா குட்டி?” அவன் வேதனையுடன் கேட்க, “அச்சோ... அது... அப்படியெல்லாம் இல்ல டா. எனக்கு ஒருமாதிரி கில்டா இருக்கு டா. ஷோபனாக்குத் துரோகம் பண்றமோன்னு ஒரு எண்ணம். அவங்களுக்கு இதெல்லாம் தெரியாது. என்னை ஒரு நல்ல ஃப்ரெண்ட்னு நம்புறாங்க. அப்படி இருக்கும்போது அவங்க நம்பிக்கையை உடைக்க கூடாதுன்னு மனசு பதறுது டா...” சந்தனாவின் குரலில் கொட்டிக் கிடந்த நிராசையில் மனோவின் மனம் ஆர்பாட்டமின்றி கத்திப் பேரிரைச்சலிட்டது போல. ஏனோ இந்நொடியை இந்தப் பெண்ணை அவனால் கடக்க முடியாது. காலம் முழுவதும் இந்தத் தண்டனையில் தான் வாழ்ந்து செத்து மடிய வேண்டுமா என குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கொன்று தின்றது.

“ஷோபனாவுக்கு நான் ரஞ்சன். பட், என் குட்டிக்கு எப்பவுமே நான் மனோ. அவளுக்குப் போகத்தான் எல்லார்க்கும்!” என்றவன் பேச்சில் சந்தனா முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆசையாய் அவன் கொடுத்த உணவை வாங்கி உண்டாள்.

மூவரும் உண்டு முடிக்க, அவர்களை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

“தீனா, பீரோ மேல ஏறி அந்த பையை எடு டா...” என்று அவள் கூறவும், தீனா அந்தப் பையை கீழே இறக்கினான்.

“உன்னை மறந்துட்டேன்னு சொன்னல்ல தீனா. நான் மனோவையும் உன்னையும் எப்பவுமே நினைச்சுப்பேன் டா. எங்கப் போனாலும் நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஞாபகம் வருவீங்க. உங்களுக்காகன்னு நான் நிறையா வாங்கி வச்சிருந்தேன். மீட் பண்ணும்போது கொடுக்கலாம்னு. பட், சிட்சுவேஷன் அமையலை டா!” எனப் பேசிக்கொண்டே அந்தப் பையின் கடவுச்சொல்லான ஆறிலக்கத்தை அழுத்தி திறந்தாள். மனோவினுடைய பிறந்த தேதி தான் அவளுடைய கடவுச்சொல். சந்தனாவின் அனைத்திலும் தான் மட்டுமே நிறைந்திருக்கிறோம் என அவனால் மனதார உணர முடிந்தது. அவளை வேதனை ததும்பும் முகத்துடன் பார்த்திருந்தான்.

“இங்க பாரு தீனா... இந்த வாட்ச், பெர்ஃப்யூம், பிரேஸ்லெட். அப்புறம் உனக்காக இந்த ஷர்ட் எல்லாம் வாங்குனேன்...” என அவள் ஆசையாய்க் காண்பிக்க, தீனாவின் விழிப்படலத்தை நீர் சூழப் பார்த்தது.

“இங்க உக்காரு டா. இதெல்லாம் நல்லா இருக்கா? வாங்கி ஒரு ஏழேட்டு வருஷம் இருக்கும்ல. ரொம்ப ஓல்டா இருக்கே. இதெல்லாம் நீ யூஸ் பண்ணலைனாலும் பரவாயில்லை. சும்மா என் ஞாபகமா வச்சுக்கோடா!” என்று சிறுமி போல ஆர்வமாய்க் கூறியவளை இவன் அன்பாய்ப் பார்த்தான்.

“என் குட்டி வாங்கிக் கொடுத்திருக்கா.பழைய மாடலா இருந்தாலும் நான் யூஸ் பண்ணுவேன்!” என அவன் குரல் சற்றே கரகரத்து வர, சந்தனா அவனை வாஞ்சையாய்ப் பார்த்தாள்.

“ஏன் தீனா, என்னைக் கேட்குறல்ல நீ? ஒரு நாளாவது நீ என்னை நினைச்சுப் பார்த்திருக்கீயா டா. நான் எல்லாம் உன் ஞாபகத்துலயே இருத்துருக்க மாட்டேன் இல்ல?” அவள் அவனை மென்மையாய் முறைக்க, தீனா அவளருகே அமர்ந்து அவளைத் தோளோடு அணைத்தான்.

“உண்மையை சொல்லவா? பொய் சொல்லவா?” அவன் கேட்க, “வலிச்சாலும் பரவாயில்லை. நீ உண்மையை மட்டும் சொல்லு டா!” என்றாள் சின்ன சிரிப்புடன்.

“ரொம்ப நினைச்சதுல்ல குட்டி. மனோவுக்கு ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் எப்போ கால் பேசுனாலும் குட்டி அது பண்றா, இது பண்றான்னு அவன் சொல்லிட்டே இருப்பான். நீ டென்த்ல ரேங்க் ஹோல்டர் இல்ல? அப்போ அதை சொல்லி சொல்லி என்னமோ இவனே மார்க் எடுத்த மாதிரி பீத்துவான். அப்போ எல்லாம் உன்னைப் பத்தி பேசிட்டே இருப்போம் டி. அதனால மறக்கலை. அப்புறம் அவனுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சப் பிறகு, நானும் உன்னைப் பத்தி சொல்லலை. அப்படியே விட்டுப் போச்சு. மறந்துட்டோம். ஆனால் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்த நேரம் ஒருநாள் மனோ கால் பண்ணி, ‘குட்டின்னு யாரையும் தெரியுமா டா? இந்தப் பேர், ஒரு பொண்ணு என் கனவுல வந்து ரொம்ப டிஸ்டர்ப் பண்றா. என்னால எந்த வேலையும் பார்க்க முடியலை. தலையெல்லாம் வலிக்குதுடா’ன்னு புலம்புனான். எனக்கும் உன்னைப் பத்தி சொல்ல ஆசைதான். ஆனால் டாக்டர் சொன்னதை நினைச்சு எதுவும் ஷேர் பண்ணலை. அதுவும் இல்லாம நிறைய வருஷமாகிடுச்சு‌. நீயும் உன் வாழ்க்கையைப் பார்த்துட்டு இருப்ப. இடையில இவன் வந்து எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்லலை டி...” என்றவனை இவள் சிரிப்புடன் நோக்கினாள்.

“சாரி குட்டி... எனக்குத் தெரியாது. நீ மனோவை இவ்வளோ விரும்பியிருக்க, அவனுக்காக காத்துட்டிருக்கன்னு தெரியாது டி. தெரிஞ்சா அப்போவே நான் மனோகிட்டே சொல்லி இருப்பேன்!” என்றவன் குரல் வருத்தத்தில் தோய்ந்து விழ, சந்தனா முகம் மாறவேயில்லை. புன்னகையும் வாடவில்லை.

“மனோவும் நானும் வாழ்க்கைல சேரணும்னு விதியிருந்தா, நீ அப்போவே சொல்லி இருப்ப டா. பட், அவனுக்கு இதைவிட அழகான அன்பான ஷோபனா வொய்ஃபா வரணும்னு கடவுள் நினைச்சு அவங்களை அவர் கூட சேர்த்து விட்டிருக்காரு. இப்போ அஷ்வினும் அவுங்க காதலோட அடையாளம். சோ, நீ இப்படி பேசாத டா! இட்ஸ் ஆல் ஃபேட். நம்ப ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் உண்மை மாறாது இல்லே. அதனால இதையே நினைச்சு நீ ஃபீல் பண்ணாத டா. நானே எல்லாத்தையும் ஓவர் கம் பண்ணிட்டேன்!” என்றாள். நான் நன்றாய் இருக்கிறேன் எனப் புன்னகைத்தாள். மனோவின் புறம் அவள் பார்வை செல்லவே இல்லை. நடந்து முடிந்தது என்றாலும் கூட நினைவிழந்தப் போதும் கூட தன் மனோ தன்னை விட நினைக்கவில்லை என மனம் உவகையில் நனைந்து தோய்ந்தது.

மனோ சந்தனாவைத்தான் பார்த்திருந்தான். அவன் கண்இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின. முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு நின்றான். “எனக்கு வாங்குனதை என்கிட்ட கொடுக்க மாட்டீயா டி?” தனக்குப் பின்னே கேட்ட குரலை அலட்சியம் செய்ய முயன்று தோற்றவள், சின்ன புன்னகையுடன் முடியாது என தலையை அசைத்தாள்.

“ஏன்?” அவன் பார்வை கேள்வியைத் தாங்கி நின்றது.

“ஏன்னா... ஏன்னா இதெல்லாம் என் மனோவுக்காக வாங்குனது. இதோடதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவன்... அவன் என்னைத் தேடி வரும்போது கொடுக்கலாம்னு பத்திரப்படுத்தி வச்சிருந்தேன். ஒருநாள் அவன் வரமாட்டான்னு தெரிஞ்சதும் வலிக்கத்தான் செஞ்சுது. இருந்தாலும் இது அவனுக்காக வாங்குனது. வேற யாருக்கும் கொடுக்க சத்தியமா எனக்கு மனசு வராது டா!” என்றாள் வலி மிகுந்த குரலில்.

“அப்போ நான் உன் மனோ இல்லையா குட்டி?” அவன் அடிப்பட்டக் குரலில் கேட்க, சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தவள், “இப்போ இருக்கது என் மனோதான். பட் நீ என் ஃப்ரெண்ட் டா. காலைல நான் சொன்னதுதான். நான் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண நினைச்சது ஒரு ஃப்ரெண்டாதான். மத்தபடி இதெல்லாம் கொடுக்குறதுக்கு இல்ல. இது... எந்த உரிமைல கொடுக்குறது? அப்படியே நான் குடுத்தாலும் ஷோபி ஏன், ஏதுன்னு கேட்காம இருப்பாங்களா என்ன? எனக்காக நீ அவங்ககிட்டே பொய் சொல்லி, நாளைப் பின்னே ஏதும் தெரிஞ்சா, அவங்க வருத்தப்படுவாங்க டா. என்னை வச்சு என்னைக்கும் உங்களுக்குள்ள சண்டை வரக் கூடாது. நீங்க எப்பவுமே இதே அன்போட சந்தோஷமா இருக்கணும் மனோ. இப்போ ஷோபி ப்ரெக்னன்டா வேற இருக்காங்க. நீ... நீ இந்த மாதிரி நேரத்துல அவங்களை இன்னும் நல்லா பார்த்துக்கணும் டா!” என்றாள் அவன் கையை அழுத்திப் பிடித்து. உன்னுடைய சந்தோஷத்தில்தான் நான் வாழ்கிறேன் என வார்த்தையில் உறைக்காது செயலில் காட்டியிருந்தாள் சந்தனா. மனோவுக்கு இந்தப் பெண்ணின்‌ அன்பைத் தாங்கவே முடியவில்லை.

அவளின் ஒவ்வொரு செயலிலும் வார்த்தையிலும் மனோவின் மீதான பிரியமே கொட்டிக் கிடந்தது. ஏனோ அதை நினைத்து சந்தோஷப் பட முடியாத இடத்திலிருந்தான் இந்த துர்பாக்கியசாலி மனோரஞ்சன்.

“இதை நான் பார்க்கலாமா? இல்ல, அதுக்கும் பெர்மிஷன் இல்லையா?” என்ன முயன்றும் கோபத்தைக் காண்பிக்க முடியாது மனோவின் குரல் ஆதங்கத்தில் தோய்ந்தது.

“ப்ம்ச்... என்ன டா நீ. இங்க வா, என் பக்கத்துல வந்து உக்காரு!” என அவனைத் தன்னருகே இருத்தியவள், “இதெல்லாம் உனக்காகத்தான் வாங்குனேன் மனோ!” என்றவள் ஒரு சிறிய பெட்டியை மட்டும் கைக்குள் ஒளித்து வைக்க முயன்றாள். ஆனாலும் அது அவன் கண்களில் பட்டுவிட, “குட்டி, என்ன அது?” எனக் கேட்டான்.

“ஒன்னும் இல்ல மனோ... அது... அது அம்மாவோட செயின் அதுல இருக்கு!” திக்கித் திணறி அவன் முகம் பார்க்காது உரைத்தவளின் கையிலிருந்ததை பிடுங்கியவன் திறந்து பார்க்க, உள்ளே ஒரு தங்கத்திலான கழுத்தணி இருந்தது. எடுத்துப் பார்த்தான். இரண்டு இதயங்கள் ஒன்றிணைந்திருக்க, அதில் மனோ குட்டி என ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவன் எதுவும் பேசாது அவளைப் பார்க்க, “ஃபர்ஸ்ட் மந்த் கேலரி வாங்குனதும் உனக்கு மெமரபிளா எதாவது வாங்கணும்னு தோணுச்சு மனோ. அதான் சும்மா... நான் கிறுக்கு மாதிரி இதை வாங்கி வச்சேன் டா. ப்ம்ச்... இப்போ பார்ததா ரொம்ப க்ரிஞ்சா இருக்குல்ல?” புன்னகைக்க முயன்ற குரலின் பின்னிருந்த வலிகள் ஏராளம்.

தன்னுடைய காதலை, மனோவின் மீதான நேசத்தை, அவனுக்காக சேர்த்து வைத்திருந்த பிரியத்தை, உரைக்கும்போது தன்னவனுக்குப் பரிசளிக்க வாங்கியிருந்தாள் பெண். இந்த கழுத்தணியை தேர்வு செய்ய அவள் எத்தனை மெனக்கட்டாள் என நினைவிற்கு வந்ததும் விரக்தி சிரிப்பு உதிர்ந்தது. அப்போதே இதெல்லாம் பயன்படாது பரணியிலேறியிருக்கும் எனத் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாள் என யோசிக்கும்போது மூளை சற்றே மந்தமாகி செயலிழந்துவிட்டது போல. எதுவுமே தோன்றவில்லை.

மனோ அந்தக் கழுத்தணியைத் தொட்டு தடவிப் பார்த்தான். ஏனோ அழுகையாய் வந்தது அவனுக்கு. வேண்டாம் என்று மறுத்தப் பெண்ணின் வாழ்க்கையில் இவன்தானே காதல், திருமணம் என்ற வார்த்தைகளை கட்டாயமாகப் புகுத்தியிருந்தான். தான் அப்போது இப்படியெல்லாம் நடந்திருக்கா விட்டால் இற்றைக்கு இந்தப் பெண் இத்தனை ரணப்பட்டிருக்க மாட்டாளே என அவளுக்காக மனம் வெந்து தணிந்தது.

“சாரி டி...” என்றவனின் குரலில் இருந்த வேதனையில் சந்தனாவுக்குத் துடித்துப் போனது.

“ப்ம்ச்... மனோ. நான் ஏதோ லூசு மாதிரி பண்ணியிருக்கேன். நீ அதெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணாத டா!” என்றவள், “டைம் ட்வெல்லாச்சு. லஞ்ச்க்கு என்ன சமைக்கலாம்?” எனப் பேச்சை மாற்றினாள்.

“அது ஒன்னுதான் இப்போ குறை...” என்ற முணுமுணுப்போடு தீனா அறையைவிட்டு அகன்றான். எப்போதடா இந்த வீட்டைவிட்டு வெளியேறுவோம் என அவன் மனம் தவித்தது. சந்தனா கடந்து வந்தப் பாதையைப் பற்றிக் கேட்கும்போதே தனக்கு இத்தனை வலிக்கிறதே. இந்தப் பெண் எப்படி தவித்திருப்பாள் என நினைத்து இவனுக்கு துடித்தது. என்ன இருந்தாலும் அவர்களின் குட்டியாகிற்றே சந்தனா. அவளைக் கஷ்டப்படுத்தி விட்டோம் என்ற நினைப்பே அவனைக் குற்றக்குழியில் தள்ளியது.

“மனோ... உன்கிட்டதான் கேட்டேன் நான். என்ன குக் பண்ணலாம்?” என சந்தனா அவனை உலுக்க, “நான் செத்துப் போயிருந்தா, என்ன பண்ணிருப்ப குட்டி?” எனக் கேட்டவனிடம் இவள் பார்வையால் கண்டனம் தெரிவித்தாள்.

“ப்ம்ச்... இந்த மாதிரியெல்லாம் பேசாத டா. கோபமா வருது. கன்ட்ரோல் பண்ண முடியாம அடிச்சிடப் போறேன்!” என சந்தனா வருத்தமும் ஆதங்கமுமாய்ப் பேசினாள்.

“நான் செத்திருந்தா என்ன பண்ணியிருப்ப நீ?” அதேக் கேள்வியைக் கேட்டவனை முறைத்தவள், “நான் கண்டிப்பா செத்துப் போயிருக்க மாட்டேன் மனோ. அந்தளவுக்கு நான் சுயநலவாதி இல்ல. நான்... நான் ஈஸியா செத்துடுவேன். பட், என் கூட இருக்கவங்க காலம் முழுக்க நினைச்சு கஷ்டப்படுவாங்க இல்ல?” எனக் கேட்டு நிறுத்தியவள், “ஹாஹா...பாரு மனோ. நான் கூட இருக்கவாங்க, எனக்கானவங்கன்னு சொல்லும்போது யாரை சொல்றன்னு என் மனசே கேள்வி கேட்குது டா. யார் இருக்கா எனக்கு. அம்மாவும் என் கூட இல்லை. நீயும் இருந்திருக்க மாட்ட. ஹம்ம்... எவ்வளோ யோசிச்சாலும் வேற யாருமே வர மாட்றாங்க. ச்சு, என் குகா இருக்கான். யசோ இருக்கா. அவங்க ரெண்டு பேரும் எனக்காக பீல் பண்ணலாம். அப்புறம் என் மனோ... மனோ நான் இல்லாம தவிச்சுப் போய்டுவான். அம்மா, ம்மான்னு என் பின்னாடியே சுத்தி வர்றவன் அவன். அப்புறம் லட்சுமி மா. அவங்களுக்கு என்னைவிட்டா யாரும் இல்ல டா. அவங்க தனியா நின்னுப் போய்டுவாங்க. இந்த நாலு பேருக்காகவாது வாழ்ந்திருப்பேன் டா!” என்றாள் விளையாட்டான குரலில். ஆனாலும் அந்தக் குரல் அவனை வலிக்க வலிக்க அடித்தது. நீ எனக்காக இல்லை என்றுரைக்கிறாளா என காயம்பட்ட குழந்தையாய் அவளை நோக்கினான்.

சில நொடிகள் மௌனமாய் இருந்தவள், “கடவுள் அந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தைத் தர மாட்டாரு மனோ. அவருக்கும் மனசாட்சி இருக்குல்ல. என்னால எவ்வளோ கஷ்டத்தை தாங்க முடியும்னு தெரிஞ்சுதான் இதெல்லாம் கொடுத்திருக்காரு. நீ... நீ என் கூட இல்லைன்றது மட்டும்தான் மனோ இப்போதைக்கு குறை. அது கூட நீ ஷோபனாவோட சந்தோஷமா வாழ்றதைப் பார்த்து, கரைஞ்சு காணாப் போய்டுச்சு. உன் முகத்துல சிரிப்பை பார்த்தா, என் கஷ்டம் எல்லாம் பறந்துடும்டா. சப்போஸ் நீ சொன்ன மாதிரி நடத்திருந்தா, நீ இல்லாத உலகத்துல வாழ்ற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம்தான். அப்படியெல்லாம் கடவுள் என்னை விட்ற மாட்டாரு டா. நீ... நீ ஷோபனா, அஷ்வின் அப்புறம் ஷோபி மாதிரி அழகான ஒரு பெண் குழந்தைன்னு சந்தோஷமா மனசு நிறைஞ்சு நீ வாழணும் மனோ!” என்றவள், அன்பாய் காதலாய் அவன் கையைத் தட்டிக் கொடுத்தாள்.

“நான் மட்டும் வாழ்ந்தா போதுமா டி. நீ எப்போ சந்தோஷமா வாழ்றது. உனக்காக ஒரு வாழ்க்கையைத் தேடிக்கோ குட்டி!” என்றவனின் பேச்சு உவப்பாய் இல்லை என்பதை முகத்தைச் சுளித்து வெளிப்படுத்தினாள்.

“இந்த மாதிரியெல்லாம் என் மனோ என்னைக்கும் பேச மாட்டான். யாருக்காகவும் என்னை அவன் விட்டுக் கொடுக்க மாட்டான் டா. பட் நீ என் மனோ இல்லைல. அதனாலதான் இப்படி பேசுற?” கலங்கிய கண்களை சிமிட்டியபடி பேசியவளைப் பார்த்த மனோ, “யூ ரிசர்வ் பெட்டர் லைஃப் டி. நான்... நான் வேணாம் குட்டி. பார்த்த முதல் நாள்ல இருந்தே உன்னை அழ மட்டும்தானே வைக்கிறேன் நான். அப்படிப்பட்டவனுக்காக ஏன் டி இவ்வளோ பண்ற?” எனத் தொண்டை அடைக்க கேட்டான்.

“ப்ம்ச்... என் மனோவுக்கு நான் அழுதா பிடிக்காது டா‌. மனசறிஞ்சு அவன் என்னை அழ விடுவான்னு நினைக்கிறீயா என்ன?” எனக் கேட்டவள் தலையை இடம் வலமாக அசைத்தாள். மனோ வேதனையுடன் அவளைப் பார்க்க, “பேசிட்டே இருந்தா, கிச்சன்ல சமையல் அதுவா ஆகிடுமா மனோ. பசிக்குது டா!” என்றவள், “உனக்கு குக் பண்ணத் தெரியும்னு ஷோபி சொன்னாங்க. எனக்காக எதாவது சமைச்சு தரீயா டா? உன் கையால சாப்பிடணும் எனக்கு...” ஆர்வமாய்க் கேட்டாள். மனோ அவளை வெறுமையாய் பார்த்தான்.

“ப்ம்ச்... உனக்கு இஷ்டம் இல்லைன்னா வேணாம் மனோ. ஷோபனா உன் வொய்ஃப், அவங்களுக்கு சமைச்சு கொடுப்ப‌. நான் வெறும் ஃப்ரெண்ட் தானே. எனக்கெதுக்கு நீ மெனக்கெட்டு செய்யணும். நானே எதாவது குக் பண்றேன்!” முனைத்துக் கொண்டு முந்தியை உதறிவிட்டு சந்தனா நடந்து செல்ல, ரஞ்சன் முகத்தில் முறுவல் பூத்தது.

“என்ன வேணும் குட்டி?” அவன் குரல் அவளது நடையை மொத்தமாய் நிறுத்த, நொடியில் திரும்பினாள்.

“நிஜமாவா மனோ?” கண்களை விரித்து ஆசையாய் ஆர்வமாய்க் கேட்ட பெண்ணை கண்களில் நிரப்பிக் கொண்டான்‌. சிறுவயது சந்தனா நினைவிற்கு வந்தாள். அவளும் இப்படித்தான் அவன் கூறும் பொய்களை எல்லாம் கண்களை விரித்துக் கேட்பாள். மனோ தலையை அசைத்தான்.

“என்ன வேணும் உனக்கு?”

“ஹம்ம்... கறிசோறு வேணும் டா!”

“பிரியாணி!” அவன் திருத்த, “ச்சு... எனக்கு அது கறிச்சோறுதான். சமைச்சு தருவீயா மாட்டீயா?” அவள் அடமாய் நிற்க, மனோ தலையை அசைத்தான்.

“ஓகே, நான் சிக்கன் ஆர்டர் போட்றேன். ஹாஃப் அன் அவர்ல வந்துடும் டா. நீ அதுக்குள்ளே தேவையானதை செய்!” என்றவள் அலைபேசியில் தலையைப் புதைத்தாள்.

மனோ அகல, இவள் இறைச்சியை முன்பதிவு செய்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். மனோ எது எங்கே இருக்கிறது எனத் தடுமாற, “மனோ... என்ன வேணும்னு சொல்லு டா. நான் எடுத்துத் தர்றேன்!” என இவள் உதவ, அவன் வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கினான்.

அவன் லாவகத்தைப் பார்த்தவள், “மனோ... மேடம் உன்னை கிச்சன்குள்ள எல்லாம் விடுவாங்களா டா? இவ்வளோ நல்லா காய் கட் பண்ற?” அவள் குரல் பின்னே கேட்க, திரும்பாது பதிலளித்தான்.

“யூகேல பீஜி பண்ணேன் குட்டி. அப்போ நானா குக் பண்ணி சப்பிடணும். சோ, கத்துக்கிட்டேன்!”

“பாருடா... பாரின் எல்லாம் போய்ருக்கீயா மனோ...” எனக் கேட்டவள், “ஆமா, மேடமும் சாரும் எப்படி இருக்காங்க டா?” எனக் கேட்டாள்.

“நல்லா இருக்காங்க‌. இப்போ அவங்க உனக்கு மேடம் சார் இல்ல. பூரணி ஆன்ட்டி எங்க வீட்ல வேலையும் பார்க்கலை. அதனால அப்படி கூப்பிட்டாத குட்டி!”

“ப்ம்ச்... எப்பவுமே அவங்க எனக்கு மேடம்தான் மனோ. அதையெல்லாம் மாத்த முடியாது. எப்படி இருக்காங்க. அவங்களுக்கு என்னை ஞாபகம் இருக்குமா டா? வேலைக்காரங்களை எல்லாம் ஞாபகம் வச்சிருக்க மாட்டாங்கல்ல டா...” அவள் மென்னகையுடன் கேட்க, மனோ அவளைப் பார்த்தாலும் பதில் கூறவில்லை.

“உன்கிட்டதான் கேட்குறேன் டா. பதில் சொல்லு!” அவள் அதட்ட, “அதான் நீயே வேலைக்கராங்களை மறந்துருப்பாங்கன்னு சொல்லிட்டீயே. அப்புறம் எப்படி ஞாபகம் வச்சிருப்பாங்க!” அவன் கூறியதும், இவளது விழிகள் லேசாய் கலங்கின. பதில் பேசாது மௌனமாய் நின்றாள். அவள் கூறும்போது தெரியாதது அவன் அதைக் குறிப்பிடும்போது வலித்தது.

வேலைக்காரப் பெண்மணியின் மகள்தானே இவள்‌. ஒருவேளை கடவுள் அதுதான் இவளை மனோவிடமிருந்து பிரித்துவிட்டாரோ? மனோவிற்கு நினைவு தப்பாமல் இருந்திருந்தால், சதாம்பிகா தன்னை மருமகளாக ஏற்றிருப்பாரா எனத் தோன்ற, கசந்த முறுவல் பிறந்தது.

“ஏன் மனோ உனக்கு மெமரி லாஸானதும் நல்லதுக்குத்தான். இந்த வேலைக்காரியோட பொண்ணை என்னைக்கும் உங்கம்மா மருமகளா அக்செப்ட் பண்ணியிருக்க மாட்டாங்க டா. ஷோபனா மாதிரி உங்களோட அந்தஸ்துக்கு ஏத்தவங்கதான் கரெக்ட். என்னதான் நான் படிச்சு முடிச்சு பெரிய டாக்டரா இருந்தாலும் நான் என்னைக்குமே உங்கம்மாவுக்கு வேலைக்காரியோட பொண்ணுதான் மனோ. என்னவோ அவங்களுக்கு என்னைக் கண்டாளே பிடிக்காதுல்ல டா. எனக்கு கூட பயமா இருக்கும் அவங்ககிட்டே பேச. ஆனால் சார் அப்படியில்ல. ரொம்ப ஸ்வீட் அவரு?” அவள் எதையோ பேச, மனோ அனைத்தையும் கேட்டாலும் எந்தவித எதிர்வினையும் இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page