All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 21 📜 (முன் இறுதி அத்தியாயம்)

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 36
Topic starter  

அன்பு – 21 💖

“அண்ணா... காஃபியைக் குடிங்க!” எனத் தன் முன்னே நீண்ட கரங்களை நிமிர்ந்து பார்த்த தீனாவின் உதடுகளில் சர்வ நிச்சயமாய் உயிர்ப்பில்லை. எதிரிலிருந்தவளுக்காக என யோசித்து புன்னகையை உதிர்த்தான்.

“என்னாச்சுண்ணா... உங்க ஃப்ரெண்ட் தாத்தா இப்போ பரவாயில்லையா? ரொம்ப தெரிஞ்சவரா? உங்க ரெண்டு பேரு முகத்தையும் பார்த்தா அப்படித்தான் தோணுது?” அவள் அக்கறையாய்க் கேட்க, இவனது கண்கள் கலங்கின.

“ரொம்ப தெரிஞ்சவங்க ஷோபி. அவங்களுக்கு இப்படியொரு நிலைமை வரும்னு நாங்க நினைக்கலை!” தீனாவின் குரல் வருத்தத்தில் தோய்ந்தது.

நேற்று நள்ளிரவு கடந்தும் வராத கணவன் மற்றும் தமையனை எண்ணி ஷோபனா பயத்துடன் அமர்ந்திருக்க, இவர்கள் வெகு தாமதமாகத்தான் வந்தனர். முகமெல்லாம் சிவந்து வந்திருந்த ரஞ்சனைப் பார்த்து இவள் பதறிவிட, “ஷோபி... அது என்னோட கொலிக் ஒருத்தரோட தாத்தவுக்கு ரொம்ப முடியலை. ஹீ வாஸ் சோ சிக். அவரைப் பார்க்கத்தான் போனோம். அங்க, அவர்... அவர் யாரோன்னு நினைச்சிட்டு போனோம். பட், சின்ன வயசுல நாங்க குடியிருந்த வீட்டுப் பக்கம்தான் அவரும் இருந்தாரு. ரொம்ப நாள் கழிச்சு அவரை இப்படி பார்க்கவும் மனோ எமோஷனலாகிட்டான். அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் வலியில துடிக்கிறதை எங்களால பார்க்க முடியலை!” என்றவன் குரல் லேசாய் பிசிறு தட்டியது.

ஷோபனா எதுவும் தோண்டித் துருவவில்லை. கணவனை ஆறுதலாக அணைத்துக் கொள்ள, அவனுக்கும் பற்றுக் கோல் கிடைத்ததில், அவளை இறுகக் கட்டிப் பிடித்து கண்களை மூடினான். ஆனாலும் விழிகளை உறக்கம் அண்டவே இல்லை. பாரத்தை இறக்கி வைத்தவள் சிறிது நேரமேனும் விழிகளை மூட, அதை வாங்கிக் கொண்டவனின் தூக்கம் அவர்கள் வீட்டு வாயிலோடு மறித்திருந்தது.

“அண்ணா... ஹம்ம், நம்பளால எதுவும் பண்ண முடியாது. கண்டிப்பா அவருக்காக நான் வேண்டிக்கிறேன். அவரோட கஷ்டம் சீக்கிரம் சரியாகிடணும்னு!” அவள் கூற, இவன் மௌனமாகத் தலையை அசைத்தான்.

மனோரஞ்சன் எழுந்து வெளியே வந்தான். தூங்காத விழிகள் சிவந்து கிடந்தன. தீனாவின் அருகே அமர்ந்தவன், ஷோபியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஏனோ இந்தப் பெண்ணை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“ரஞ்சன், நான் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்!” என அவள் எழ, “வேணாம் ஷோபி, நான் வெளிய போய்ட்டு வரேன்!” என எழுந்துவிட்டான்.

“ஷோபி, அது... தாத்தாவைப் பார்த்துட்டு வரோம் நாங்க...” என தீனாவுமே எழுந்தான்.

“அண்ணா, எழுந்து அப்படியே போகணுமா? குளிச்சிட்டு போகலாம் இல்ல?” என ஷோபனா பேச்சைக் கேட்காது மனோ காலணிகளை அணிய, தீனா பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன், “ஷோபி... ஹீ இஸ் சோ அப்செட் டா. அதான், நான்... நாங்க போய்ட்டு வர்றோம்!” என்றான் சங்கடமாக.

“ப்ம்ச்... அண்ணா, என் ரஞ்சனைப் பத்தி எனக்குத் தெரியாதா? போய்ட்டு வாங்க. அப்பப்போ ஃபோன் மட்டும் போடுவேன். எடுத்துப் பேசுங்க!” என அவள் கணவனை வாஞ்சையுடன் பார்க்க, மனோவிற்கு கண் கலங்கின. யாருக்கும் தான் உண்மையாய் இல்லையென மனம் வெகுவாய்க் கனத்துப் போனது.

“சரி டா...” என்ற மனோ வெளியே வர, இருவரும் சந்தனாவின் வீட்டின் முன்னே சென்று நின்றனர்.

சந்தனா வந்து கதவைத் திறந்தாள். குளித்து முடித்திருப்பாள் போல, தலையில் தண்ணீர் சொட்டியது. அவர்களை எதிர்பார்த்தேன் என்ற பாவனை முகத்தில் கவிழ, “வா தீனா... வாங்க ரஞ்சன்!” என்றாள் புன்னகைத்து. என்ன முயன்றும் அவளிடம் தன் குட்டியைக் காண முடியவில்லை என மனோவின் மனம் அந்நொடி வெகுவாய் அடிவாங்கியது.

அவர்களை அமர வைத்தவள், “இவ்வளோ காலைல வரணுமா? எழுந்ததும் வந்துட்டீங்க? ஷோபனா உங்களை எதுவும் கேட்கலையா ரஞ்சன்?” என விளையாட்டாய்க் கோபம் கொண்டவளிடம் நேற்றைய சுவடு துளியும் இல்லை. ஏனோ நேற்று நடந்தது எல்லாம் கனவு போல அவர்களுக்குத் தோன்றிற்று.

“குட்டி...” என மனோ அவளருகே தவிப்புடன் வர முனைய, “ரஞ்சன், உட்காருங்க!” என அதட்டலிட்டாள். அச்சிறு குரலுக்கே அவன் அமர்ந்துவிட, பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அவர்களுக்கு அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

“ஹம்ம்... நேத்து நான் ரொம்ப எமோஷனலா இருந்தேன்‌. சாரி ரஞ்சன், உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல? ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி...” என்றாள் புன்னகையுடன். அந்த சிரிப்பின் பின்னிருந்த வலியை உணர்ந்தவனுக்கு விழியோரம் ஈரம் படரப் பார்த்தது.

“அது... அது நீங்க ரெண்டு பேரும் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இல்ல. யார்கிட்டேயும் ஷேர் பண்ணாம மனசுக்குள்ளயே வச்சிருந்ததால, என் கன்ட்ரோலை மீறி நான் நடந்துகிட்டேன் ரஞ்சன். தீனா சாரி டா. உன்னையும் அப்செட் பண்ணிட்டேன் இல்ல. நீ ஆசையா என்னைப் பார்க்க வந்த. பட், உன் மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டேன்!” என்று வருத்தப் புன்னகையை உதிர்த்தவள், சில நொடிகள் தயங்கினாள். பின்னர் அதை உடைத்தெறிந்துவிட்டு,

“உங்க ரெண்டு பேர் மனசுலயும் என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனால், நிஜமா நீங்க எந்த வகையிலயும் என் டிசிஷனுக்கு காரணம் இல்ல. நம்மளாலதான் இவ இப்படி இருக்கான்னு கில்டி கான்ஷியஸ் எல்லாம் வேண்டாம். நீங்க பார்த்து பரிதாபப்படுற அளவுக்கு எல்லாம் நான் மோசமா இல்ல. படிச்சு முடிச்சிட்டு ஒரு ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்கேன். நல்ல சம்பளம், நல்ல சுகமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்குன்னு அழகான பையன், என்னோட லட்சுமிமான்னு இதான் என்னோட கூடு. என் மேல பிரியத்த வச்சிருக்க அவங்க ரெண்டு பேரும் இருக்கவரைக்கும் நான் சந்தோஷமா இருப்பேன்...” என்றவள், “நான் தனியா இருக்கதால நீங்க கவலைப்படாதீங்க. எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணாம, சிங்கிளா சந்தோஷமா வாழலையா என்ன? நான் மனோவை நினைச்சு கல்யாணம் பண்ணலைன்னு நீங்க நினைக்கிறது தப்பு. எனக்கு யாரையும் பிடிக்கலை, தட்ஸ் இட். சப்போஸ் எனக்கு ப்யூச்சர்ல யாரையும் பிடிச்சா, நான் என் வாழ்க்கையை அவங்களோட ஷேர் பண்ணிப்பேன். சோ, என் வாழ்க்கை என்னோட தனிப்பட்ட முடிவுதான். யாருக்காகவும் நான் என்னோட முடிவை மாத்திக்க மாட்டேன். எனக்கு சரின்னு பட்டதைதான் பண்ணுவேன்!” என்றாள் தெளிவான குரலில். நீங்கள் எந்த வகையிலும் என் வாழ்வில் தொடர்பில்லை என எட்ட நிறுத்து விட்டாள் பெண். கேட்டுக் கொண்டிருந்த மனோ அட்சர சுத்தமாய் அந்தப் பேச்சின் விருப்பமின்மையை முகத்தில் காண்பித்தான்.

ஏனோ நடந்து முடிந்த ஒன்றைப் பேசுவதில் என்ன பயன் இருந்துவிடப் போகிறது. இப்படித்தான் எனத் தெரிந்து தானே சந்தனா இந்த வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தாள். பிறகு யாரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற துளியும் அவளுக்கு விருப்பமில்லை. வாழ்ந்துவிட்டு போகிறேன் நான். நிம்மதியான வாழ்க்கையை கடவுள் எனக்குக் கொடுத்தால் போதும். அதுவே எனக்குப் பேரானந்தம் என்றொரு எண்ணம் அவளிடம் எப்போதும் உண்டு. சந்தோஷமான வாழ்வைவிட நிம்மதி மிகவும் முக்கியம் என்பது சந்தனாவின் சித்தாந்தம். இத்தனை நாட்கள் மனதில் அழுத்திய பாரமெல்லாம் கரைந்திருந்தது. உரியவரிடம் சேர்ப்பித்த நிம்மதியில் மனம் ஆழ்ந்த அமைதியிலிருந்தது.

சந்தனா பேச பேச மனோ அவளை வெற்றுப் பார்வை பார்த்தான். அதை சந்திக்க தன்னிடம் திராணியில்லை என்றுணர்ந்தவள், விழிகளை தீனாவிடம் நகர்த்தினாள். “தீனா, அவருக்கும் உனக்கும் சேர்த்துதான். நேத்து நடந்தது வாஸ் ஆன் ஆக்ஸிடென்ட். யாரும் எக்ஸ்பெக்ட் பண்ணலை. அதை மறந்துடுங்க. அண்ட் ஷோபிக்கு இதெல்லாம் தெரிய வேணாம். நான் ரெக்வெஸ்டா தான் கேட்குறேன். அவங்களாவது நிம்மதியா, சந்தோஷமா ரஞ்சனோட வாழட்டும். யார் வாழ்க்கையிலயும் என்னால பிரச்சனை வரக் கூடாது. அதுவும் ஷோபி இஸ் சோ ஸ்வீட். அவங்க ரொம்ப நல்லவங்க‌. அவங்களோட உலகம் அவங்களோட ஹஸ்பண்ட் ரஞ்சன், பையன் அஷ்வின்னு அழாகன கூடு. அதுல அவ்வளோ ஆசையா அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. என்னைக்கோ நடந்ததை இப்போ போய் அவங்ககிட்டே சொல்லி கஷ்டப்படுத்த வேண்டாம் தீனா. ஷீ டிசர்வ்ஸ் மனோரஞ்சன்!” என்றாள். குரல் இடறினாலும் அதை நூதனமானப் புன்னகையில் மறைத்துவிட்டாள். உண்மை கச்நதாலும் அது பொய்யாகிடாது என்றொரு வலி நிறைந்த குரலில் அவள் பேச, கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மனம் கனத்தது.

“மோர் ஓவர் ரஞ்சன் ரொம்ப குடுத்து வச்சவரு. ஷோபியோட அன்பு அவ்வளோ தூய்மையானது. அவங்க பேசும்போது கூட ரஞ்சன், ரஞ்சன்னு நூறு தடவை சொல்லுவாங்க. தட் மச் ஷி லவ்ஸ் ஹெர் ஹஸ்பண்ட். இதை சொல்ல கூடாது. கம்பேரிஷன் தப்புதான். பட் இருந்தாலும் சொல்றேன். நான் அவங்க இடத்துல இருக்கதைவிட, ஷோபிதான் அந்த இடத்துக்கு ரொம்ப பொருத்தமானவங்க. அவங்களைவிட யாராலும் அவரை இந்த அளவுக்கு நேசிக்க முடியாது. பார்த்துக்கவும் முடியாதுன்றதை இந்த மூனு நாலு மாசத்துல நான் கூட இருந்து பார்த்ததை வச்சு சொல்றேன்!” என்றாள் அதிராமல் புன்னகைத்து. மனோவிடம் பதிலில்லை. முகம் முழுவதும் விரக்தி பரவியிருந்தது போல‌. மெதுவாய் தலையைக் குனிந்து விழிகளை சிமிட்டிக் கொண்டான். கைகள் அன்னிச்சையாய் தலையைத் தாங்கின. தூங்காதது அழுதது பழைய ஞாபகங்கள் மீட்டது என அவன் உடல் மிகவும் சோர்ந்திருந்தது.

தீனாவிடம் பார்வை இருந்தாலும் சந்தனாவுக்கு உள்ளே பதறத்தான் செய்தது. சில நொடிகள் தயங்கியவள், “ரஞ்சன், உங்களுக்கு என்ன பண்ணுது?” எனக் கேட்டாள். என்ன முயன்றும் குரலில் இருந்த தவிப்பை அவளால் மறைக்க முடியவில்லை. இத்தனை நேரம் பேச்சிலிருந்த தெளிவு இந்த இரண்டு வார்த்தைகளில் அருகியிருந்தது.

“தலை ரொம்ப வலிக்குது குட்டி. ஒரு காஃபி போட்டுத் தர்றீயா?” எனக் கேட்டான்.

நொடியில் எழுந்தவள், “டூ மினிட்ஸ்... வரேன் இருங்க...” என விரைவாக எழுந்து சென்று அவனுக்கொரு குளம்பியைத் தயாரித்து ஒரு மாத்திரையும் எடுத்து வந்து கொடுத்தாள்.

“இதைப் போடுங்க ரஞ்சன். யூ வில் ஃபீல் பெட்டர்!” என்றாள் மருத்துவராய். மாத்திரையை விழுங்கியவன், மெதுவாய் குளம்பியைப் பருகி முடித்தான்.

அவள் முகத்தை நிமிர்ந்து மனோ பார்க்கவும், “வேற எதுவும் வேணுமா ரஞ்சன். அது, ரொம்ப நீங்க ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க. பழைய மெமரீஸ் ரீகெய்ன் ஆகிடுச்சுல்ல. அதனால உங்களுக்குத் தலை வலிக்கலாம். எதையும் யோசிக்காதீங்க!” என்றாள் மெதுவாய். மருத்துவராகப் பேசினாலும் அவன் மீதிருந்த பிரியம்தான் வார்த்தைகளில் நிரம்பி இருந்தது.

“குட்டி, என் பக்கத்துல வந்து உக்காரு...” என்றான் மனோரஞ்சன்.

தலையை இடம்வலமாக அசைத்தவள், “ரஞ்சன், நீங்க வந்ததும் சொல்லலாம்னு நினைச்சேன். பட், அப்போ அது, வந்ததும் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடக் கூடாதுன்னு சொல்லலை. நீங்க இப்போ மனோரஞ்சன், ஷோபனாவோட ஹஸ்பண்ட், அஷ்வினோட அப்பா. அதை கொஞ்சம் மனசுல பதிய வைங்க. நீங்க ஷோபியோட ஹஸ்பண்டா என்னைப் பார்க்கலாம், பேசலாம். பட், மனோவா என்னை மீட் பண்ண ட்ரை பண்ணாதீங்க. ப்ளீஸ், அதுதான் நம்ப ரெண்டு பேருக்கும் நல்லதும் கூட. முன்னாடி ஸ்ட்ரேஞ்சர்ஸா இருந்தோம் இல்ல. அதே மாதிரி கூட என்னைப் பார்த்து க்ராஸ் பண்ணிப் போய்டுங்க. அதுதான் என்னோட விருப்பம்!” என்றாள். வலித்தாலும் கூறிவிட்டாள். கேட்டிருந்தவனின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“குட்டி...லூசா டி நீ. இப்படியெல்லாம் பேசாத. நான், நாங்க எப்பவும் உன்கூட இருப்போம்!” தீனா ஆதங்கமாய்ப் பேசினான்.

அவனை அன்பாய்ப் பார்த்தவள், “தேங்க்ஸ் தீனா. எனக்குன்னு யாரும் இல்லன்னு நான் ஃபீல் பண்ண மாட்டேன். கண்டிப்பா இனிமே எதுனாலும் உன்கிட்ட ஷேர் பண்றேன்!” என அவனருகே சென்று அவன் கையைப் பிடித்தாள்‌. இத்தனை வருடங்கள் கடந்தும் தன் மீதான அவனது அன்பில் அவளது முகம் கனிந்து போனது.

“தீனா, நான் அவர்கிட்டேதான் சொன்னேன் டா. நீ எப்பவும் போல வரலாம், போகலாம். பட், அவர் விஷயம் வேற டா. நான் வேற சும்மா இல்லாம நேத்து அழ வேற செஞ்சுட்டேன். என்னைப் பார்க்கும்போது எல்லாம் அவருக்கு கில்டினெஸ் வரும். அதுக்காக அவரைப் பார்க்க வர வேண்டாம்னு சொன்னேன். அதுவும் இல்லாம பிராக்டிகலா யோசிச்சு பார்த்தா, நான் சொல்றதுதான் டா சரி. அவர் இனிமே இங்க வரவோ, என்னைப் பார்க்கவோ முயற்சி பண்ண கூடாது. ஷோபியோட அவர் சந்தோஷமா வாழட்டும் டா!” என்றாள் புன்னகைத்து. மனோவுக்கு கோபம் வந்தது.

விறுவிறுவென எழுந்து வந்து தீனாவிடமிருந்து அவளது கையைப் பிடித்திழுத்தவன், தன் கரத்தை அழுத்தமாக அவள் கையுடன் சேர்த்தான். அவன் வரலாம், இவளைப் பார்க்கலாம். ஆனால், நான் வரக்கூடாதா எனக் கோபமாய் வந்தது மனோவுக்கு. அவர், இவர், ரஞ்சன் என்ற பன்மை விளிப்பு அவனுக்கு வேப்பங்காயாய் கசந்தது.

அவனது செய்கையில் சந்தனாவின் முகத்தில் மென்னகை படர்ந்தது. சிறுவயதில் மனோ இப்படித்தான் செய்வான் என எண்ணிப் புன்னகைத்தவள், “ரஞ்சன், கையை விடுங்க‌. ப்ளீஸ், வலிக்குது...” என்றாள்.

“மனோன்னு கூப்பிடு குட்டி...” என்றவன் குரல் வேதனை ததும்பி வர, இவளது உறுதியை அசைத்துப் பார்த்தது போல.

“மனோரஞ்சன், ப்ளீஸ் கையை விடுங்க. நிஜமா வலிக்குது!” என்றாள் அவனிடமிருந்து பிரிந்து‌. அவளது ஒதுக்கத்தில் இவனுள்ளே ஒரு வகை வலி பரவி அடங்கியது.

“குட்டி... இப்படியெல்லாம் பேசாத. அவனை ரொம்ப கஷ்டப்படுத்துற நீ. பாவம் மனோ!” தீனா நண்பனுக்காகப் பேச, சந்தனா புன்னகைத்தாள்.

“அதான் தீனா. அவர் என் முன்னாடி வந்தா, அவருக்குத்தான் கஷ்டம். அவர் கஷ்டப்பட்டா, ஷோபனா கவலைப்படுவாங்க டா. அதனால எனக்கு கில்டா இருக்கும். உனக்கு ஒன்னுத் தெரியுமா? நீ வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ரஞ்சன் முகத்துல எப்பவுமே ஒரு ஸ்மைல் இருக்கும் டா. ஷோபியை பார்க்கும்போதே அவரோட கண்ணுல அன்பு தெரியும். அவங்களையும் அஷ்வினையும் அவ்வளோ அனுசரணையா, அக்கறையா பார்த்துப்பாரு டா. எனக்கு பார்க்க ஆச்சரியமாக இருக்கும்... மனோ ரொம்ப பொறுப்பாகிட்டான்னு. சாரி, ரஞ்சன் அவரோட குடும்பத்தை அவ்வளோ நேசிக்கிறாரு டா...” என்றவள், “நேத்துல இருந்து அவர் முகத்துல அந்த ஸ்மைல் குறைஞ்சு போச்சுன்னு வருத்தமா இருக்கு. அவர் சந்தோஷமா இருந்தா தானே, நான்... ஐ மீன் நம்ப சந்தோஷமா இருக்க முடியும். நான் இப்போ பேசறது அவருக்கு கஷ்டமா இருந்தாலும், இன்னும் ஒரு வாரம்... அதிகபட்சம் ஒரு மாசம் கழிச்சு அவர் யோசிச்சார்னா, என் போச்சோட பிராக்டிகல்னெஸ், நியாயம் எல்லாம் புரியும் டா!” சந்தனா மனோவின் முகத்தைப் பார்க்காது ஒட்ட வைத்தப் புன்னகையுடன் கூறினாள்.

“இப்போ ஃபைனலா என்ன சொல்ல வர்ற நீ?” தீனா கொஞ்சம் கோபமும் ஆதங்கமுமாய்க் கேட்டான்.

“ப்ம்ச்... தீனா, கோபப்படாத டா. பெருசா ஒன்னும் இல்ல. ரஞ்சன் இனிமே என்னைப் பார்க்க வரக்கூடாது. முக்கியமா மனோவா வரக்கூடாது. என்ன நடந்துச்சுன்னு கேட்க கூடாது. அதெல்லாம் ஜஸ்ட் பாஸ்ட் டா. அதை ஞாபகப்படுத்தி என்ன பண்ணப் போறோம் நம்ப? இப்போ நம்ப என்னவா இருக்குமோ, அதுதான் நம்பளோட பெர்மனென்ட் லைஃப். அதை அக்செப்ட் பண்ணிட்டு அவர் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். இதை தவிர வேற எதுவும் வேணாம் டா!” என்றாள். இப்போதும் கூட அவளது கட்டளைகளில் மனோவின் மீதான அன்பும் பிரியங்களும் கொட்டிக் கிடந்தன. அவனுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்க கூடாதென எண்ணிப் பேசிய தோழியைப் பார்த்த தீனா விழிகளை சிமிட்டிக் கொண்டான். மனோ எதுவும் பேசாது சந்தனாவைத்தான் பார்த்திருந்தான். அவள் பேசியது அவளுக்கு வலித்ததை விட அவன் அதிகமாய் இரணப்பட்டான்.

“குட்டி... மனோவுக்கு உன்னோட அன்புல வாழ கொடுத்து வைக்கலைடி!” என்ற தீனாவின் குரலில் சந்தனா முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். அவளது விழிகள் தளும்பிற்று.

“தீனா, நீங்க ரெண்டு கிளம்புங்க. என்னைப் பார்க்க வராதீங்க. இதுக்கும் மேல உங்ககிட்டே என்னால ஹார்ஷா சொல்ல முடியலை டா. சோ ப்ளீஸ்!” என வாயிலைக் கைகாட்டியவளின் குரல் தழுதழுத்தது.

“சோ, நான் இனிமே உன்னைப் பார்க்க வரக்கூடாது. அப்படித்தானே குட்டி?” மனோ ஆதங்கமாய்க் கேட்க, அவளிடம் பதிலில்லை. வாய் வார்த்தையாக மனோவிடம் அவளால் கூற முடியவில்லை. தலையை மட்டும் அசைத்தாள். முகம் பார்க்கவில்லை. திரும்பியபடியே பேசினாள்.

“குட்டி... வலிக்குது டி எனக்கு. நேத்துல இருந்து யார்கிட்டேயும் சொல்லி கூட அழ முடியலை. இப்படி நீ யாரோவா பேசும்போது, நீ... நீ எனக்கில்லைன்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது. கடவுள் நான் செஞ்ச தப்புக்கு எனக்கு கொடுத்த தண்டனை எது தெரியுமா? என் ஞாபகம் எல்லாம் திரும்பி வந்ததுதான். என் கண்ணு முன்னாடி உன்னை வச்சுட்டே யாரோ மாதிரி நான் துடிச்சுப் போகணும். என் வாழ்க்கையில நீ இல்லன்றதை நினைச்சு நினைச்சு நான் கொஞ்சம் கொஞ்சமாக சாகணும். அதான் எனக்கான தண்டனை. ஐ டிசர்வ் திஸ். நான் ஏத்துக்கிறேன். உனக்குப் பண்ண துரோகத்துக்கு இது கூட நான் அனுபவிக்கலைனா எப்படி டி?” எனக் கேட்டவன் குரல் ஆதங்கத்தில் தொடங்கி இறுதியில் இடறிப் போனது போல. அந்தக் குரல் சந்தனாவின் விழிகளில் குபுகுபுவென நீரைப் பெருகச் செய்தது.

“ப்ம்ச்... இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க ரஞ்சன். நான் உங்களோட மறந்து போன ஞாபகம். ஜஸ்ட் நேத்துதானே என்னை உங்களுக்குத் தெரியும்? அதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு எப்படி அறிமுகமானேனோ, அப்படியே இருக்கலாம்னுதான் சொன்னேன். உங்களை காயப்படுத்தணும்னு ஒருநாளும் நான் நினைக்க மாட்டேன்!” என்றவளின் குரல் லேசாய் தடுமாறியது.

“நீ என்னைக்கும் என்னைக் கஷ்டப்படுத்த நினைக்க மாட்டடி. ஆனால், நான் உனக்கு கொடுத்ததெல்லாம் வெறும் வலியும் வேதனையும் மட்டும்தான். அப்போ கூட என் மேல ஏன்டி கோபப்பட மாட்ற. ஏன்டா என்னை ஏமாத்துனன்னு கேட்டு நீ என்னை நாலு அடிச்சிருந்தா கூட இப்போ நான் இந்தளவுக்கு கில்டோட இருந்திருக்க மாட்டேன். எனக்கு வலிக்கும்னு அத்தனை வலியையும் நீயே சுமக்குற தெரியுமா, அதான் என்னைக் கொல்லுது. கொஞ்சம் கொஞ்சமாக செத்துட்டு இருக்கேன் டி!” என்றவன் குரல் உடைந்தழவும், “மனோ... ப்ம்ச். அப்படியெல்லாம் இல்ல ரஞ்சன். உங்களுக்காக நான் ஏன் பார்க்கணும். நான், என் மனோவுக்கு வலிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன். ஞாபகமே இல்லாதப்போ கூட குட்டின்னு என்னைக் கேட்டவன் அவன். மனசறிஞ்சு அவன் தப்பு பண்ணியிருக்க மாட்டான். தெரியாம செஞ்ச தப்பு. என் மனோவை நான் மன்னிக்காம யாரு மன்னிப்பா? என்னால அவன் மேல கோபமெல்லாம் பட முடியாது ரஞ்சன். அவன், அவன் என்னோட மனோ. என்னைக் கஷ்டப்படுத்த மாட்டான்!” உதடுகளில் சிரிப்பிருக்க, கண்களில் குளம் கட்டியிருந்தது. என் மனோ என்றொரு கர்வம் அவளிடமிருந்தது.

“அப்படி என்ன டி பண்ணேன் நான். இந்தளவுக்கு என் மேல அன்பு வச்சிருக்க உன்னை ஏமாத்தியிருக்கேன் நான். ரொம்ப மோசமானவன் நான்! என்னை ரெண்டு அடி அடிச்சிடு குட்டி!” என்று அவள் கையைப் பிடித்தான் மனோ. தலையை இடம் வலமாக அசைத்தவள், “நான் நிம்மதியா இருக்கணும்னு உங்களுக்கு எண்ணம் இருக்கா ரஞ்சன்?” எனக் கேட்டாள், உதட்டைக் கடித்து அழுகையை உள்ளடக்கினாள். அவன் வேதனையுடன் அவளைப் பார்த்தான்.

“நான் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா, இனிமே இந்த மாதிரி என்னை எமோஷனல் பிளாக் மெயில் பண்ணாதீங்க. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. என் மனோவோட ஐஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கேன். அவன் என்னை எந்த வகையிலும் கஷ்டப்படுத்துனது இல்ல. நீங்க என்னை அழ வச்சுப் பார்க்குறீங்க. நான், நான் தியாகி எல்லாம் இல்ல. எனக்கும் உணர்ச்சி எல்லாம் இருக்கு. நீங்க பேச பேச எங்க உடைஞ்சு போய்டுவேனோன்னு பயமா இருக்கு. ஏற்கனவே நடந்ததுல இருந்து மீண்டு வர ரெண்டு வருஷமாச்சு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. மறுபடியும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு என்னைத் தள்ளிடாதீங்க. நான், நான்... மனோவோட வாழ்ந்த கொஞ்ச காலமே போதும். சாகுறவரை அதை நினைச்சு சந்தோஷமா வாழ்ந்துடுவேன். நீங்க என் வாழ்க்கையில எந்த வகையிலயும் குறுக்கிடக் கூடாது. இது என் மேல சத்தியம்!” என்றாள் தேம்பலாய். மனோவின் கண்கள் சரசரவென நீர் வழிந்தது.

“தீனா உனக்கும்தான் டா சொல்றேன். உன் ஃப்ரெண்ட்காக என்கிட்ட வரக்கூடாது. என் ஃப்ரெண்டா நீ என்னைப் பார்க்க வா. அதுக்கும் மேல எதுவும் வேணாம்!” என்றாள் தீர்க்கமாய்.

ஒரு நொடி இருவரது முகத்தையும் பார்த்தவள், “ரெண்டு பேரும் போங்க. எனக்கு கொஞ்சம் அழணும் போல இருக்கு. உங்க ரெண்டு பேர் முன்னாடியும் நிம்மதியா என்னால அழக் கூட முடியலை. சோ ப்ளீஸ்!” என்றாள் கைகளைக் கூப்பி. விழிகள் இரண்டிலும் நீர் நிரம்பியிருந்தது.

மனோவிற்கு அவள் அழுகையைப் பார்க்க முடியவில்லை. இந்தப் பெண்ணை பார்த்த முதல்நாளிலிருந்தே தான் அழ வைக்கிறோம் எனத் தோன்றியதும் நெஞ்சு முட்டுமளவு வேதனைப் படர்ந்தது. இதற்கு மேலும் அவளைத் துன்பப்படுத்த திராணியற்றவனின் கால்கள் மெதுவாய் வாயிலை நோக்கி நகர்ந்தன‌. தீனா வேதனையோடு தோழியைப் பார்த்துவிட்டு தானும் அகல, சந்தனாவிடம் மெலிதாய் விசும்பல் வெளிப்பட்டது. வேகவேகமாக கண்ணை மறைத்த உவர்நீரைத் துடைத்துக்கொண்டு மனோவை விழிகளில் நிரப்ப முயன்றாள். நெஞ்சடைத்தது அவளுக்கு. தன்னுடைய மனோவை இனிமேல் பார்க்க வர வேண்டாம் என அவள் வாயாலே உரைத்ததை நினைத்து நெஞ்சு விம்மித் துடிக்க, உதட்டைக் கடித்தவள், “மனோ...” என்றாள் மெதுவாய்.

தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்க மனமற்று அழைத்து விட்டவளின் குரலுக்கு அவன் நொடியில் திரும்பினான். தீனாவும் நிற்க, “நான்.. அது கொஞ்சம் மனோ விஷயத்துல செல்ஃபிஷ்தான். இவ்வளோ நேரம் வர வேணாம்னு சொல்லிட்டு, நானே இப்படி பேசுறேன்னு நினைக்காத தீனா. எனக்கு, எனக்கு என் மனோ ஒருநாள் வேணும் டா. எனக்கே எனக்குன்னு வேணும் டா!” என்றாள் அழுகுரலில். கேட்க வேண்டாம் என நினைத்தாலும் மூளை இதயத்தின் பிடியில் நழுவியது.

அவளது அழுகை நிறைந்த குரலில் மனோரஞ்சன் வெகுவாய் அடிபட்டுப் போனான். சந்தனாவின் பேச்சில் தீனாவின் முகம் ஒரு நொடி மாறிவிட, இவளது உதடுகளில் கேலியான புன்னகை.

“தீனா... நீ நினைக்கிற அளவுக்கு நான் மோசமான பொண்ணு இல்ல டா. எனக்கு என் ஃப்ரெண்ட் மனோ மட்டும்தான் வேணும். அவ்வளோதான் டா. வேற எதுவும் நான் எதிர்பாக்கலை. எப்பவும் தப்பான எண்ணம் எனக்கு வந்தது இல்ல டா. அவங்க வாழ்க்கைல என்னால எந்தப் பிரச்சினையும் வராது டா!” என்றாள் ஒரு விரக்தி சிரிப்புடன். ஏனோ அவன் முகமாறுதல் இவளுக்கு வலித்து தொலைத்தது. கேட்டிருக்க கூடாதோ என நொடியில் எண்ணம் பிறக்க, “வேணாம்... நான், ஏதோ சும்மா கேட்டேன் தீனா. இதெல்லாம் சரி வராது. நீங்க போங்க!” என்றாள் கண்களைத் துடைத்து தன்னை தேற்றிக் கொண்ட பாவனையில் புன்னகைத்தாள். ஆனாலும் அழுகையாய் வந்து தொலைத்தது.

“குட்டி... ப்ம்ச்... லூசாடி நீ? நான் நான் போய் உன்னை தப்பா நினைப்பேனா?” அவன் அதட்டலுடன் அவளருகே சென்று அணைத்துக் கொள்ள, சந்தனாவும் அவனை இறுக அணைத்தாள்.

“சாரி தீனா... என்னால முடியலை டா. உங்க ரெண்டு பேரையும் வச்சிட்டு நடிக்க கூட முடியலை‌ பொய் சொல்ல முடியலை. ரொம்ப வலிக்குது டா. இப்படியெல்லாம் நடக்கும்னுதான் நான்... உங்களை யாரையும் மீட் பண்ணாம இருந்தேன். அட்லீஸ்ட் நீங்களாவது நிம்மதியா இருப்பீங்கன்னு. இப்போ உங்க நிம்மதியையும் குலைச்சுட்டேன் இல்ல?” என அவள் தேம்ப, ஆண்கள் இருவரது கண்ணிலும் நீர் நிரம்பி வழிந்தது.

“குட்டி...” என மனோ அவளைப் பிடித்திழுத்து தோளணைக்க, அவன் தோளில் முகத்தைப் புதைத்தவள், “எனக்கு என் மனோ வேணும். ஒரு ஃப்ரெண்டா வேணும்.

ரொம்ப வேணாம்... இன்னைக்கு ஒருநாள் மட்டும் கூடப் போதும். அவனோட பேசணும். அவனோட இருக்கணும். அவனுக்கு என் கையால சமைச்சுக் கொடுக்கணும். தெரியலை, உனக்கு ஞாபகம் இல்லாதப்ப வரைக்கும் இந்த மாதிரி எனக்குத் தோணலை டா. குட்டின்னு நீ கூப்பிடும் போது என் மனோன்னு மனசு சொல்லுதுடா. போன்னு தொரத்தவும் முடியலை. கிட்டே வச்சுட்டு ஷோபனாவுக்கு துரோகமும் பண்ண முடியலை. நரக வேதனையா இருக்கு டா. எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு அழுகை வருது மனோ. நான் என்ன டா தப்பு பண்ணேன். நான் ரொம்ப நேசிச்ச ரெண்டு பேர், என் அம்மாவும் என் கூட இல்லை. நீயும் இல்ல. நீங்க ரெண்டு பேரும் இல்லாம, நான் என்னாவேன்னு யோசிக்கவே இல்ல கடவுள். எப்படியோ போன்னு விட்டுட்டாரு டா. யாருக்குமே நான் வேணாம்னு தோணும் போதெல்லாம் செத்துடலாம் போல இருக்கு டா. உன்னை ஃபர்ஸ்ட் டைம் இங்கப் பார்த்தப்போ எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா மனோ. என்னமோ போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிட்டேன் போல. அதான் கடவுள் உன்னை என் முன்னாடி இப்படி நிப்பாட்டியிருக்காரு போலன்னு நைட்டெல்லம் தூங்கவே இல்ல டா. நீ யாரோ மாதிரி பார்க்கும்போது ரொம்ப வலிச்சுது டா. குட்டின்னு என்னை சுத்தி வர்ற மனோ இவரில்லை. இவர், வெறும் ரஞ்சன்னு இத்தனை நாள் என்னை நானே தேத்திப்பேன் மனோ. ஏன் டா என்னைவிட்டுப் போன?” என்றவள் உடைந்து கதற, மனோ அவளை இறுக அணைத்துக் கொண்டான். 

This topic was modified 1 month ago by VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா

   
ReplyQuote
VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 36
Topic starter  

கொட்ட வேண்டாம்‌ என மனம் கொண்ட உறுதியெல்லாம் வடிந்திருந்தது. இனிமேல் இவனைக் காண முடியாது. கடைசியாக ஒரு முறைக் கண்களில் நிரப்பப் போகிறோம் என்று நினைத்ததும் மனதிலிருந்த வார்த்தையெல்லாம் கொட்டியிருந்தாள் பெண்.

“குட்டி... நீ கேட்குற எந்த கேள்விக்கும் என்கிட்டே பதில் இல்ல டி. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, உன்னை விட்டுட்டு நான் போய்ருக்கவே மாட்டேன் டி. சாரி டி... சாரியைத் தவிர என்கிட்ட எதுவுமே இல்ல!” என்றவன், “இப்பவும் நான் உன் மனோதான் குட்டி. உன் ஃப்ரெண்டா எப்பவும் உன் கூட நான் இருப்பேன். பேசாத, பார்க்காதன்னு எல்லாம் சொல்லாத டி. உன் கூட வாழக் கொடுத்து வைக்கலை. அட்லீஸ்ட் என் குட்டியோட ஃப்ரெண்ட்ஷிப்பாவது வேணும்!” என அவன் குரல் கலங்கி ஆதங்கத்துடன் வந்தது. சந்தனா எதுவுமே பேசவில்லை. சில நிமிடங்கள் அவனின் அணைப்பில் இருந்தாள்.

‘சாரி ஷோபி’ என மானசீகமாக ஷோபனாவிடம் மன்னிப்பை வேண்டியவள், அவனிடமிருந்து பிரிந்தாள். “மனோ... தீனா, ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்!” என்றவள், மனோவின் பேச்சைக் கவனிக்கவில்லை என்பது போல கத்தரித்தாள்.

“போங்க... ரெண்டு பேரும் இப்படியே நின்னா என்ன அர்த்தம். ஹம்ம், எனக்கு ஆறுமணி வரைதான் டைம் இருக்கு!” என்று வருத்தப் புன்னகையை உதிர்த்தாள். அந்த வார்த்தையில் குரலில் அதிலிருந்த ஏக்கத்தில் எதிரிலிருந்தவனுக்கு நிறைய வலித்தது.

அவர்கள் அகல முயல, “மனோ, ஒரு நிமிஷம் இரு...” என்றவள் உள்ளே சென்று ஒரு பையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

“அது... உன் பெர்த் டேக்கு கொடுக்கலாம்னு ட்ரெஸ் எடுத்தேன். பட், எந்த உரிமைல கொடுக்கன்னு தெரியாம குடுக்கலை. இதை போட்டுட்டு வரீயா மனோ, ப்ளீஸ்?” என்றாள் இறைஞ்சுதலாய். 

 

அவன் வருத்தமாய் இந்தப் பெண்ணைப் பார்க்க, “ப்ம்ச்... உனக்கு வேணாம்னா விடு மனோ. நான் கட்டாயப்படுத்தலை. நீ... நீ இன்னைக்கு என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணாலே போதும்!” என பின்னிழுக்க முயன்ற கைகளைப் பிடித்திழுத்து அந்த உடையை எடுத்துப் பார்த்தான் மனோரஞ்சன். அவனது அளவுகளுக்கு சரியாய் வாங்கி இருந்தாள்.

ஆலீவ் இலை நிறத்தில் சட்டையும் அடர் கருமை நிறத்தில் கால்சராயும் வாங்கியிருந்தாள். நொடி நேரம் எனினும் அவனது முகத்தை சந்தனா ஆர்வமாய்ப் பார்த்தாள். அவனிடமிருந்து எதையோ எதிர்பார்த்து பின் தன்னையே தேற்றிக் கொண்டாள்.

“உன் செலக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு குட்டி!” என்றவன் கூற்றில் அவளது முகம் மலர்ந்து போனது. ஏதோ அந்த ஒரு வார்த்தையில் அந்நொடி அவளது கஷ்டங்கள் அகன்றிருந்தன.‌

“ஏன் குட்டி...அவன் மட்டும்தானே உன் ஃப்ரெண்ட். அவனுக்கு மட்டும்தானே வாங்கிக் கொடுப்ப. நான் யாரு உனக்கு?” தீனா முகத்தை திருப்ப, இவளுக்குப் புன்னகை முளைத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தன்னவர்கள் தன்னருகில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவளது மனம் ஆசுவாசம் அடைந்தது.

“ப்ம்ச்... தீனா, அவனுக்கு பெர்த் டேன்னு வாங்குனேன் டா. கொடுக்க மறந்துட்டேன். அதான் இப்ப கொடுத்தேன்!” அவள் கூற, அவன், “ஓ... அப்படியா சரி. என் பெர்த் டே எப்போன்னு சொல்லு!” என தீனா கேட்க, சந்தனா தெரியாது விழித்தாள்.

“அதானே... அவன்தானே உன் ஃப்ரெண்ட். நான்லாம் யாரு?” என தீனா சிலிர்த்துக்கொண்டு வெளியேற, சந்தனா மனம் நிறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். மனோ சிறிய தலையசைப்புடன் நகர, இவள் நேரே சென்று தாயின் புகைப்படம் முன்பு நின்றாள். சில நொடிகள் அவரது முகத்தைப் பார்த்தவள், ‘கடவுளுக்கு கொஞ்சம் என் மேல கருணை இருக்கு போல மா. என் மனோ ஒருநாள் முழுசும் என் கூட எனக்காக இருக்கப் போறான். எனக்கு இது போதும் மா. ஆனாலும் கொஞ்சம் குற்றவுணர்வா தான் இருக்கு, ஷோபியை நினைச்சு. நான்... நான் அவங்களுக்குத் துரோகம் எல்லாம் செய்யலை. ஒரு ஃப்ரெண்டா மனோ கூட இருக்கணும்னு ஆசை மா. என்னை மன்னிச்சிடு மா. ஷோபியும் என்னை மன்னிச்சிடுவாங்க!’ மனதிலே மன்னிப்பை வேண்டினாள் பெண்.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page