All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 20 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 20 💖

இரண்டு கைகளிலும் முகத்தைத் தாங்கியிருந்த மனோவின் கண்கள் இரண்டும் சிவந்திருந்து செவ்வரியோடியிருந்தன. இத்தனை நேரம் கண் இரைப்பைகள் தன் வேலையை செவ்வனே செய்ததன் விளைவால் அவனது முகம் உவர்நீரில் பிசுபிசுத்துப் போயிருந்தது. உயிர்ப்பற்றிருந்த கண்களும் கனத்த இதயமும் எதிரிலிருந்தவளை தனக்குள் புகுத்திக் கொள்ள முனைந்தன. ஆனால் சத்தியமாய் முடியவில்லை. அப்பட்டமாய்த் தோல்வியைத் தழுவிய இதயம் இவனை இறுக்கிப் பிடித்து மூர்ச்சையடைய செய்தது போல. அதன் வலியில் முகத்தைச் சுளித்தவன், அப்படியே அசையாது சிலை போல அமர்ந்திருந்தான்.

அவனுக்கு என்ன செய்வது, என்ன பேசுவது என எந்த பிர்க்ஞையும் இல்லை. புறத்தூண்டல் அற்றுப் போய் சந்தனாவையே வெறித்தான். குட்டி குட்டி என உயிர் வரை தீண்டும் அழைப்பு இந்நொடி அவனை உயிர் வதை செய்தது என்னவோ உண்மை.

இதோ உயிரும் உடலுமாய் தனக்காகவென இத்தனை வருடங்கள் காத்திருந்தப் பெண்ணை மறந்திருக்கிறான். மானசீகமாக ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு வருடங்கள் தன்னுடனே வாழ்ந்தப் பெண், இப்போது தன்னுடைய நினைவில் நிஜத்தில் என எதிலுமே இல்லை என நினைத்ததும் அடிவயிற்றிலிருந்து குபுகுபுவென வாதை தொண்டையை அடைத்து, இன்னுமே விழிகளில் நீரைப் பொங்கச் செய்தது‌.

சந்தனாவிற்கு அவனுடைய அழுகையை காணப் பொறுக்கவில்லை போல. என் மனோ எங்கேயும் உடைந்துவிடக் கூடாதென எண்ணித்தானே இத்தனை நாட்கள் எத்தனை வேதனை தனக்குள்ளிருப்பினும் அதை வெளிக்காட்டாது தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாய் தன்னைக் காட்டிய விழைந்தாள். ஆனால், இந்தப் பையன் மனோ என்று வரும்போது அவளுடைய வேலிகள் எல்லாம் உதிர்ந்து விடுகின்றன. அனைத்தையும் உடைத்து தூள் தூளாக்கிவிடுகிறானே என நினைத்ததும் ஆற்றாமையில் மனம் விம்மித் துடிக்க, “மனோ... ப்ளீஸ்டா... அழாத டா!” என்றாள் விசும்பலாய். அதற்கு மேலும் பேச திராணியற்ற குரல் சதி செய்தது. இவள் பட்ட பிரயத்தனங்கள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் வீணாய்ப் போனதை நினைத்து துடித்துப் போனாள். அவனுடைய கண்ணிலிருந்து வழியும் ஒவ்வொரு சொட்டு நீரும் தனது உயிரை மெதுமெதுவாய் உறுஞ்சிக் கொண்டிருந்ததை சந்தனா மட்டுமே அறிவாள்.

“என்னைத் தேடுனியா குட்டி?” உயிரைக் கண்களில் தேக்கி கேட்டிருந்தவனின் கேள்வியில் சந்தனாவின் உணர்வுகள் பிரவாகமாகப் பொங்கின. ஏன் தேடவில்லை. இந்நொடி கூட ரஞ்சனிடம் மனோவின் சாயலைத் தேடித் தேற்றவள்தானே இந்த சந்தனா. தாயைத் தொலைத்துவிட்டு தேடும் சேயாய் பத்து வருடங்கள் அவனைப் பையத்தியமாய்த் தேடினாளே. எங்காவது மனோ என யாராவது விளித்தால் இவனாக இருக்க வேண்டுமென கடவுளிடம் மன்றாடி திரும்பி இல்லையென்றான நாட்கள் எல்லாம் அவளது தேடலின் எச்சங்கள். மனோ வாய் வழியாய்க் கேட்டதும் மனம் முழுவதும் அவனில்லாது தான் வாழ்ந்த நாட்களின் வலியை கூறி கதறச் சொல்ல, தாங்க மாட்டேனே. என் மனோ அதையெல்லாம் தாங்க மாட்டானே என மனம் அவனுக்காய்த் துடித்து தவித்துப் போனது. தன்னுடனே போகட்டும் இந்த வலியும் வேதனையும். என்னுடைய மனோ என்றைக்கும் அதையெல்லாம் புரட்டிப் பார்க்க கூடாத பக்கங்கள். இத்தனை நாட்கள் எப்படி தனக்குள்ளே புதைத்து வைத்திருந்தாளோ, இனிமேலும் அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். கடந்த காலத்தை எண்ணி அவனின் நிகழ்கால வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென மனம் இப்போது அவன் மீதான கரிசனத்தில் கவிழ, இமையோரம் ஈரம் அதிகமாய் படர்ந்தது.

அவன் பதிலுக்காய் இவளது முகத்தைப் பார்த்திருந்தான். அடிப்பட்ட பாவனை மனோவின் முகத்தில். இந்தப் பெண்ணிற்கான தவிப்பு மட்டுமே அவனிடம் இந்நொடி. அடித்த தாயிடமே சரணடையும் குழந்தை போல சந்தனாவின் விழிகள் வேகவேகமாக நனைந்தன. உதட்டைக் கடித்து, ஆமாமென தலையை அசைத்தாள். வேறு எதுவும் கூறவில்லை. வாய் வார்த்தையாய் உரைத்து அவனை ரணப்படுத்த கிஞ்சிற்றும் எண்ணவில்லை.

மனோ அசையாதிருந்தான். அந்த தலையாட்டலில் அவனது மனம் உடைந்து சிதறியிருந்தது.

தீனாவிற்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது. “குட்டி... அழாத குட்டி!” என்றான் தோழியை சமாதானம் செய்யும் விதமாக. அவளது இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியுமென தோன்றவில்லை. இந்தப் பெண் இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டாம் என ஆயிரமாவது முறையாக மனம் அவளுக்காகத் துடித்துப் போனது.

ஏனோ குற்றம் செய்த பாவனையில் அமர்ந்திருந்த மனோவைக் காண்கையில் சந்தனாவுக்கு தாளவே முடியவில்லை. தன்னை தேற்ற முயன்றாள். கண்களில் ஊற்றாகப் பெருகும் நீரை அணைப்போட்டு தடுத்து முகத்தை துடைத்தாள். நான் நன்றாய் இருக்கிறேன் என உதடுகளில் புன்னகையை புகுத்தினாள். இத்தனை நாட்கள் எல்லோரிடமும் பூசிய அரிதாரத்தை இப்போதும் முகத்தில் அப்பிக் கொண்டாள். எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்ற எண்ணத்தை தன்னுள் விதைத்தவள், “ப்ம்ச்... மனோ. என்ன டா, ஏன் இப்படி உக்காந்து இருக்க. உன் மேல எந்த தப்பும் இல்ல மனோ... நான்தான் கிறுக்கச்சி. லூசு நான். கண்டதையும் உளறி உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல. சாரி டா. சாரி.‌..” என தளும்பிய விழிகளை சிமிட்டி அவன் தோளைத் தொட்டாள். இந்நொடி கூட இந்தப் பெண் எனக்காகவென எல்லாவற்றையும் தன் தலையில் ஏற்றிக் கொள்கிறாளே என மனோ நினைத்ததும் நெஞ்சுமுட்டுமளவிற்கு வாதை வலியைப் பரப்பியது.

ஏனோ இத்தனைக் காதலுக்கும் பிரியத்திற்கும் தனக்கு தகுதியில்லை எனத் தோன்றிற்று. ஆமாம், இந்த உலகத்திலே இப்போது மிகவும் அற்பமான பிறவியாய் தன்னை நினைத்தே அருவருத்துப் போனான். எனக்காகவென அனைத்தையும் உதறிவிட்டு காத்திருந்த பெண்ணின் நம்பிக்கையை உடைத்திருக்கிறேனே. எனக்கொரு குடும்பம் குழந்தை என நான் வாழ, இந்தப் பெண் அத்தனையும் எனக்கு அர்ப்பணித்திருக்கிறாளே என எண்ணி வேதனையோடு அவளை நிமிர்ந்து பார்த்தவன், சந்தனாவை இடையோடு கட்டிக் கொண்டான். ஒரு நொடி அவள் இதை எதிர்பார்க்கவில்லை போல. அந்த அணைப்பில் உயிர் வரை நடுங்கிப் போனது.

“சாரி டி... சாரி குட்டி. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல டி...” என விசும்பியவனிடம் இவளது மொத்தமும் சரணடைந்திருந்தது. இத்தனை நேரம் தயங்கித் தவித்த கரங்கள் அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டன. ஏனோ இத்தனை நாட்கள் கை சேராது என எண்ணியிருந்த தன்னுடைய மனோ இப்போது தன்னருகில் என நினைத்ததும் குபுகுபுவென கண்ணில் நீர் பெருகியது. எத்தனை வருடங்களுக்குப் பிறகான அவனுடைய ஸ்பரிசம். கிடைக்கவே கிடைக்காது என்றெண்ணிய பொக்கிஷம். அவளின் பொக்கிஷம் இந்த மனோரஞ்சன்தானே.

“மனோ... இல்ல டா. என் மனோ தப்பு பண்ண மாட்டான். உனக்கு ஞாபகம் இருந்தா, என்னைத் தேடி வந்திருப்ப மனோ. இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி டா. யாராலும் அதை மாத்த முடியாது டா!” என்றாள் தேம்பலாய். இந்நொடி கூட தன் விதியை கடவுள் மாற்றி எழுதி இருக்கலாம் என நிராசையில் அழுது கரைந்தது அவளின் குழந்தை மனது. நடந்ததை ஏற்றுக் கொண்டு நான் கடந்துவிட்டேன் என்ற பசப்பு வார்த்தைகள் யாவும் குட்டியென்ற விளிப்பில் உடைந்து சிதறியிருந்தன. தங்களை இப்படியொரு கோலத்தில் நிறுத்திய விதியை நினைத்து தேம்பினாள் சந்தனா.

மனோ அமைதியாய் அவளை அணைத்திருந்தான். நாசியெங்கும் குட்டியின் சுகந்தம்தான். அவனுடைய குட்டி. அவனுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குட்டி என எண்ணி இறுமாந்திருந்த நாட்கள் எல்லாம் இப்போது அவனை வதைத்தன. இந்தக் குட்டி, இந்த சந்தனா தனக்கில்லை என்று நினைத்து நினைத்து அழுதான் மனோ. அவனுக்கும் வலித்தது. வந்ததிலிருந்து ஒரு நொடி கூட ஏன்? எதற்காக என்னை ஏமாற்றினாய் என ஒரு கேள்வி கேட்டு தன்னைக் குற்றவாளி கூண்டில் இப்பெண் நிறுத்தியிருந்தாள் கூட மனம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கும். ஆனால், எங்கேயும் இவள் தன்னை விட்டுவிடவில்லை. இன்னுமே என்னை உயிரில் பொத்திப் பாதுகாக்கிறாள். ஆனால், நான் விட்டுவிட்டேன். என்னுடைய உயிர்ப் பெண்ணை விட்டுவிட்டேனே என எண்ணியவன் நெஞ்சம் கனத்தை சுமக்க முடியாது அவளிடமே தஞ்சம் புகுந்தது.

ஐந்து முறைக்கும் மேலே வந்த அழைப்பை நிராகரிக்க முடியாது தீனா ஏற்றுக் காதிற்கு ஈந்தான். மறுபுறம் ஷோபனா இவர்களைக் காணாது பதற்றத்தில் என்னவென விசாரிக்க, குரலை சரி செய்த தீனா, “ஹம்ம்... ஷோபி, இங்க ஒரு எமர்ஜென்சி. என் கொலிக் ஹாஸ்பிடல்ல இருக்காரு. நானும் ரஞ்சனும் வந்திருக்கோம். எங்களுக்காக வெயிட் பண்ணாத நீ?” என்றான்.

ஷோபனா என்ற பெயரில் தீச்சுட்டாற் போல மனோவிடமிருந்து விலகியிருந்தாள் சந்தனா. ஆம், இங்கே அமர்ந்திருப்பது அவளுடைய மனோ இல்லையே. ஷோபனாவின் ரஞ்சன் என அவள் வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்ட உண்மைதான். இருந்தும் இப்போதும் ரணப்பட்டது இதயம்.

“குட்டி...” மனோ அவளருகே வர விழைய, “தீனா... தீனா, நீங்க கிளம்புங்க. நீ... ரஞ்சன்... ரஞ்சனை கூட்டீட்டு கிளம்பு. பாவம், ஷோபனா வெயிட் பண்ணுவாங்க!” என்றாள் அடைத்த தொண்டையை விழுங்கி. ரஞ்சன் என்ற விளிப்பில் மனோவின் இதயம் மறித்துப் போனது. அவனுக்கும் வலித்தது. ஆம், அவள் கூறியது போல இப்போது அவன் ரஞ்சன். ஷோபனாவிற்குப் பாத்தியப்பட்ட ரஞ்சன். அவள் குட்டியின் மனோ இல்லையே.

“ஏன்டி... ஏன் இப்படி பேசுற குட்டி?” என வேதனை ததும்ப அவள் கையை இறுக்கிப் பிடித்தான். நிராசையாய் தன்னை நோக்கிய விழிகளில் சந்தனாவின் உறுதியெல்லாம் உருக, இறுகியிருந்த இதயம் இளக ஆரம்பித்தது.

வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து அவன் கையைப் பிரித்த சந்தனா, “ரஞ்சன்... ப்ளீஸ் நீங்க கிளம்புங்க!” என்றாள் அந்தியபாவனையில். எட்ட நிறுத்திவிட்டாள் பெண். சத்தியமாய் மனோவால் தாங்கவே முடியவில்லை. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“சாரி குட்டி... சாரி டி. சாரி!” என்றான் தேம்பலாய் தெளிவில்லாத குரலில். ரஞ்சன் என அழைக்காதே. எனக்குப் பிடிக்கவில்லை எனக் கத்த வேண்டும் போலிருந்தது மனோவிற்கு. நேசம் ததும்ப தன்னைப் பார்த்த பார்வையிலிருந்த அந்நியத் தன்மை அவனைக் குத்திக் கிழித்தது. வலியைத் தாங்க முடியவில்லை அவனால். இரண்டு நிமிடங்கள் கூட தன்னால் தாங்க முடியவில்லையே. இத்தனை வருடங்கள் இந்தப் பெண் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொண்டாளோ என நினைத்ததும், இதயம் முழுவதும் வேதனை படர்ந்தது.

“மனோ... ப்ளீஸ் டா. இப்போ நீ கிளம்பு. நம்ப காலைல பேசலாம்!” என்றாள் அழுகையாய். ஏனோ எத்தனை முயன்றும் இவனிடம் சந்தனாவின் கோபங்கள் எடுபடவில்லை. மனோ என்ற மந்திரச் சொல்லுக்கு முன்னால் சந்தனா வெறும் சுழியமாகிவிடுகிறாள். எப்போதுமே அப்படித்தான் என சிறுவயது நினைவில் விரக்தியாய் உதடுகள் வளைந்தன.

மனோ அசையவே இல்லை. இந்தப் பெண்ணை விட்டுவிட்டு செல்ல சத்தியமாய் அவனுக்கு தெம்பில்லை. வலுகட்டாயமாய் அவனைப் பிரித்தவள், “தீனா... ப்ளீஸ்டா டா. நீயாவது என் பேச்சை கேளு டா. அவரை... ரஞ்சனைக் கூட்டீட்டுப் போடா. ஷோபி பையனோட தனியா இருப்பாங்க. இவருக்காக வெயிட் பண்ணுவாங்க!” என்றாள் ஷோபிக்காய்ப் பார்த்து. ஏனோ ஷோபனாவிற்குத் துரோகம் இழைத்துவிடக் கூடாதென மனம் படும்பாட்டை அவள் மட்டுமே அறிவாள்.

‘குட்டியை விட்டுட்டேன்... என் குட்டியை மறந்துட்டேன். அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்!’ மனோவின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் அவளுக்காக போர்க்கொடித் தூக்க, ரஞ்சன் மொத்தமாய் வலுவிழந்து போனான். கனவிலும் இப்படியொரு நிலை வருமென அவன் எண்ணி

இருக்கவில்லையே.

சந்தனாவையே மனோ பார்த்திருக்க, அவன் முகத்தைப் பார்த்தால் இன்னுமே மோசமாய் உடைந்துவிடுவோம் என மனம் அஞ்சி நடுங்க, தீனாவைப் பாவமாய்ப் பார்த்தாள். இதற்கு மேலும் என்னை வதைக்காதே என அவள் எண்ணி அவனைக் காண, “மனோ... வா போகலாம்!” என அவன் கையைப் பிடித்தான் தீனா.

“முடியாது தீனா... என் குட்டியை நான் மறந்துட்டேன் டா. இத்தனை வருஷம் அவளைக் கஷ்டப்பட வச்சிருக்கேன். நான்... நான் ரொம்ப தப்பானவன் தீனா. இப்பவும் அவளை விட்டுட்டு வர சொல்ற நீ?” என வேதனையோடு உளறியவனைக் கண்டு இருவருக்கும் மனம் கனத்தது.

“ரஞ்சன் ப்ளீஸ்... ஷோபி வெயிட் பண்றாங்க...” என்றாள் கடுமையை குரலில் புகுத்தி.

“பதினெட்டு வருஷம் எனக்காக என் குட்டி வெயிட் பண்ணியிருக்கா!” என்றான் ரஞ்சன் வலிக்க வலிக்க. அந்த குரலில் சந்தனாவிற்கு நெஞ்சடைத்தது. ஏனோ தன்னுடைய வலியை அவன் கூறக் கேட்டதும், ஆமாம் எனக் கூறி அவனிடமே கதற வேண்டும் என்றொரு உந்துதல் பிறக்க, அதை உள்ளேயே அமிழ்த்தி விட்டாள். ஆம், யாரிடமும் இதுவரை அவள் சொல்லி அழுதது இல்லை. சொல்லி அழ வேண்டிய உரிமைப் பட்டவன் இப்போது அவளுக்கு உரிமில்லாதவன் ஆகிவிட்டான் என நினைத்ததும் நெஞ்சில் ஈட்டி குத்திய வலியை உணர்ந்தாள் சந்தனா.

“ரஞ்சன், இப்போ உங்களுக்கு வொய்ஃப், பையன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவங்களோட பொறுப்பு உங்களோடது...” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “என்னோட மனோ என்னைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மாட்டான். ப்ளீஸ் கிளம்புங்க. காலைல பேசிக்கலாம்” என்றாள் இறைஞ்சலாய்.

“மனோ...வா டா!” என தீனா அவனை இழுத்துச் செல்ல, குழந்தையைப் பிரிந்து செல்லும் தாயாய் அவளையே பார்த்துக் கொண்டே அவன் செல்ல, சந்தனா அங்கேயே உட்கார்ந்து முகத்தை மூடிக் கொண்டாள். இத்தனை நேரம் அவனுக்காகவென அடக்கி வைத்திருந்த அழுகைப் பெரிதாக வெடித்துச் சிதறியது.

லட்சுமி கதவைத் திறந்து வந்தார். இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் அவரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவர்கள் அகன்றதும் சந்தனாவின் அழுகைப் பொறுக்காது அவளருகே விரைந்தார்.

“சந்து மா... என்ன டா... ஏன் டா?” என அவர் கலங்கிப் போய் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவள், “லட்சுமி மா... எனக்கு என் அம்மா வேணும் லட்சுமி மா. அவங்களை வரச் சொல்லுங்க லட்சுமி மா. என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டாங்க மா!” என உதட்டைப் பிதுக்கி அவள் ஏங்கி ஏங்கி அழ, லட்சுமிக்கு கண் கலங்கிவிட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தப் பெண் இப்படித்தானே அழுதாள். அப்போதும் அவருக்குத் துடித்துப் போனது. இப்போதும் கூட துடித்துதான் போனார்.

அவளருகே அமர, அவரை இறுக அணைத்து தேம்பினாள். மனோ என்ற மனிதன் முன்னே அவள் போட்டிருந்த அரிதாரங்கள் எல்லாம் இந்நொடி உதிர்ந்திருந்தன. இப்போது யாரும் தன்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைத்து நினைத்து அழுதாள். சற்று முன்னே குட்டி என அவன் விளித்த அழைப்பை நினைத்து வெடித்து அழுதாள். அவள் அழுகையும் தேம்பலும் மட்டுமே வீடு முழுவதும் நிறைந்து கிடக்க, லட்சுமிக்கு மனது கேட்கவில்லை. அவளை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தார். சில பல நிமிடங்களில் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்ட, விசும்பினாள் பெண்.

“ஒன்னும் இல்ல டா சந்து மா. ஒன்னும் இல்ல. தூங்கி எழுந்தா சரியாகிடும்!” என அவர் வஞ்சையாய் அவளது தலையைத் தடவிக் கொடுத்தார்.

அந்தக் குரலில் தலையை நிமிர்த்திப் பார்த்தவள், “நிஜம்மா தூங்குனா எல்லாம் சரியாகிடுமா லட்சுமி மா. சொல்லுங்கம்மா?” எனக் கேட்டவளின் குரலில் நிராசைக் கொட்டிக் கிடந்தது. தூங்கியெழும் போது இதெல்லாம் ஒரு கனவாய் மாறிவிட்டால் எப்படியிருக்கும் என அற்பத்தனமாய் யோசித்து சில நொடிகள் மகிழ்ச்சியில் திளைத்த மனது, நிதர்சனம் உணர்ந்து இறுகிப் போனது.

சந்தனாவின் கேள்வியில் முகத்தில் குரலில் என லட்சுமிக்கும் கண்கள் கலங்கி ஏதோ செய்தது‌. “தூங்குனா சரியாப் போய்டும் சந்து மா!” என அவர் தட்டிக் கொடுக்க, அவர் மடியில் முகம் புதைத்துக் கண்ணீர் உகுத்தாள். வேண்டாம் என வெகுபிரயத்தனப்பட்டும் மனம் மீண்டும் மீண்டும் மனோ தன்னைவிட்டுச் சென்ற நாளிலே சென்று நின்றது. 

 

***

மனோரஞ்சன் சென்னைக்கு குடி பெயர்ந்தாலும் தினமும் சந்தனாவிற்கு அழைத்துப் பேசினான். புதிதாய் சேர்ந்த கல்லூரி, துளிர்விட்ட நட்பு என அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

சில மாதங்கள் நன்றாய் செல்ல, மனோவிற்கு இப்போதெல்லாம் தலை வலித்தது. அவ்வப்போது கோபமாய் பேசுவது, குழப்பத்திலே சுற்றுவது என்றிருந்தான். அவனது நடவடிக்கைகளில் பெற்றவர்களுக்கு பயம் வர, அருகிலே ஒரு மருத்துவரிடம் பரிசோதனை செய்தனர்.

“உங்கப் பையனுக்கு இருக்கது (Post-Traumatic Psychosis) போஸ்ட் ட்ராமாட்டிக் சைக்கோசிஸ். (Traumatic Brain Injury) சீவியர் ட்ராமாட்டிக் ப்ரெய்ன் இஞ்சுரி நடந்தவங்களுக்கு இது வர சான்ஸ் அதிகம். மனோரஞ்சனுக்கும் இந்தப் பிராப்ளம்தான். சின்ன வயசுல அடிபட்டதோட தாக்கம்தான். பாஸ்ட் ரிப்போர்ட் அண்ட் எக்ஸ்ரே வச்சு பார்த்ததுல, கண்டிப்பா ஒரு சர்ஜரி பண்ணணும்...” என அவர் உரைத்ததும் உமாகாந்தன்‌ மற்றும் சதாம்பிகாவின் முகத்தில் கவலையும் பயமும் குடி கொண்டது.

“பயப்படாதீங்க... சின்ன சர்ஜரிதான். ஆப்ரேஷன்ல இருக்க ஒரு டிபால்ட் என்னென்னா, உங்கப் பையனோட பாஸ்ட் மெமரீஸ் லாஸ் ஆகலாம். ஆகாமலும் போகலாம். இட் டிபர்ஸ் ஃப்ரம் பேஷண்ட் டூ பேஷண்ட்!” என அவர் சாதகப்பாதகங்களைக் கூற, ஒருமனதாக பெற்றவர்கள் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டர். மனோவிடம் சிறிய சிகிச்சை செய்ய வேண்டும் என்றளவில் மட்டுமே பகிரப்பட்டது. அவன் சந்தனாவிடம் எதையும் கூறவில்லை. அவளைக் கலவரப்படுத்த வேண்டாம், சிகிச்சைக்குப் பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்றுவிட்டான்.

ஒரு மாதத்தில் சிகிச்சை செய்யலாம் என மனோவின் உடல்நிலையை பரிசோதித்து தேதி குறித்துக் கொடுத்தார் மருத்துவர். ஒரு மாதம் நிறைவடைந்து விட, சிகிச்சை செய்யும் நாளும் வந்து, சிகிச்சை முடிந்திருந்தது.

நல்லபடியாக சிகிச்சை முடிந்திருந்தாலும் மனோவின் பழைய நினைவுகள் துடைத்தெடுத்தாற் போல அழிந்துவிட்டது. அவனது தாத்தாவுடனான விபத்து நிகழ்ந்தவை மட்டுமே அவனுக்கு நினைவிற்கு வந்தது. அதற்கடுத்து சந்தனாவை சந்தித்தது, நடந்தது என எதையுமே அவனால் நினைவு கூற முடியவில்லை.

“ம்மா... தாத்தா, தாத்தா எங்கம்மா?” என அவன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தாத்தாவிற்காக இப்போது வருந்தினான். மருத்துவர் அவனை பரிசோதித்துவிட்டு, “பழசு எதையும் ஞாபகப்படுத்த வேண்டாம். அவருக்கா ஞாபகம் வந்தா ஓகே. ரொம்ப ஃபோர்ஸ் பணணாதீங்க. அது அவருக்கு ஸ்ட்ரெஸ் ஆகிடும்!” என்று கூறிவிட, யாரும் அவனிடம் நடந்தவற்றைப் பற்றி உரைக்கவில்லை.

மனோவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிய, உடல் தேறியதும் மீண்டும் கல்லூரி செல்ல ஆரம்பித்தான். அவனது அலைபேசியை மருத்துவமனையில் தவறவிட்டிருந்தான். அதனாலே சந்தனா அவனைத் தொடர்பு கொள்ளும் வழியும் அற்றுப் போனது. மனோ புதிய நண்பர்கள், புதிய வாழ்க்கை என அதனோடு ஒத்துப் போய்விட, சந்தனா அவனின் அழைப்புகளுக்காக தினமும் காத்திருக்கத் தொடங்கினாள்.

அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என அவள் மனம் இல்லாத கற்பனைகளைத் தூவ, பயத்தில் தாயறியாது தலையணையை நனைத்திருக்கிறாள். கொஞ்சம் நாட்கள் செல்ல, மனோ கண்டிப்பாய் திரும்பி வருவான். அவனுக்கு ஏதுமாகியிருக்காது என தன்னையே தேற்றிக் கொண்டாள். இருந்தும் அவனைத் தொடர்பு கொள்ள ஏதேனும் வழித் தொன்படுகிறதா என தேடிக் கொண்டே இருந்தாள்.

ஏனோ மனோ அருகே இருக்கும் போது பெரிதாகத் தோன்றவில்லை. அவன் குரல் கேட்காமல், அவன் முகம் பார்க்காமல், குட்டி என்ற விளிப்பை ஸ்பரிசிக்காது முதன்முதலாக சந்தனா தடுமாறிப் போனாள். எதிலுமே கவனம் செல்லவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்தாள். மனோவின் மீதான தன் எண்ணத்தைக் காதலென மனம் உறுதி செய்திருந்தது. அவளுக்கு அப்போதுதான் மனோவின் உணர்வுகள் அட்சர சுத்தமாய்ப் புரிந்தது. அவனின் தவிப்புகள் எல்லாம் இப்போது இவளுக்குத் தவிப்பைக் கூட்டின. படிப்பில் கவனம் செல்லவில்லை. முயன்று நன்றாய்ப் படித்தாள்.

“எனக்கு இருக்க ஒரே கவலை குட்டி மட்டும்தான் கா. அவ நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போய்ட்டா, என்னை மாதிரி கஷ்டபடாம ஒரு வசதியான வீட்ல அவளைக் கட்டிக் கொடுத்துட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன் கா!” எனப் பூரணி மரிக்கொழுந்திடம் பேசியவை எல்லாம் சந்தனாவின் மனதில் ஆழப்பதிந்தன.

நன்றாய் படித்து பணக்காரர்களானால் மட்டுமே சதா தனக்கும் மனோவிற்குமான திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார் என உறைக்க, மனோவின் மீதான காதலை மானசீகமாக மனதில் வளர்த்தாலும், சந்தனா முழு மூச்சாக படித்தாள். மனோ என்ற மந்திரச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்றாள். மாநிலத்தில் முதல் மாணவியாக மதிப்பெண் பெற்று கோயம்புத்தூரிலே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றாள்.

மகள் மருத்துவ படிப்பில் சேர்ந்ததும் பூரணிக்கு மனம் நிறைந்து போனது. அவள் படித்து முடித்ததும் அவளைப் போலவே மருத்துவராய் இருக்கும் நல்ல பையனாய் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென மனதில் அப்போதே ஆசையை வளர்த்தார்.

சந்தனா கல்லூரியில் நுழைந்ததும் ஆங்கில வழிக் கல்லூரியில் பயில வெகுவாகத் திணறிப்போனாள். குகேஷ் அவளுக்குப் படிப்பில் உதவுவதாக நட்புக்கரம் நீட்ட, இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். சில நாட்களிலே யசோவும் அவர்கள் இருவருடன் சேர்ந்து மூவராகிப் போயினர்.

குகேஷின் சொந்த ஊர் பொங்களூர். அவன் இங்கே விடுதியில் தங்கிப் பயின்றான். அவ்வப்போது சந்தனா வீட்டிற்கு யசோவும் அவனும் வந்து செல்வர். சந்தனா அவனுக்கென அடிக்கடி எதாவது சமைத்து எடுத்து வருவாள். அவள் எடுத்து வராத நாட்களில் யசோதா எடுத்து வருவாள். அப்படியே அவர்கள் நட்பு பிரிக்க முடியாததாகிப் போனது.

சந்தனாவின் மனதில் மனோவிற்கான காதலும் தேடலும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. படித்து முடித்ததும் கண்டிப்பாக அவனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று மனதில் உருப்போட்ட வண்ணமிருந்தாள். யாரேனும் தன்னைப் பார்க்க வந்தால், அது மனோவாக இருக்குமென எண்ணி ஒவ்வொரு முறையும் ஏமாந்து போனாள். அப்போதெல்லாம், ‘மனோ சீக்கிரம் வருவான். வந்துடுவான்!’ என சுயசமாதானத்தில் சுயதேற்றலில்தான் நாட்களைக் கடத்தினாள்.

அவனைக் கண்டு பிடித்ததும் ஏன் தன்னைக் காண வரவில்லை, அலைபேசியில் அழைப்பு விடுக்கவில்லை என சண்டையிட வேண்டும். தான் எத்தனை அவனைத் தேடியிருக்கிறோம் என தன் பிரியங்களை அவனிடம் கொட்ட வேண்டும். அவன் முகம் பார்த்து வெட்கப்பட்டு, தயங்கி தன் அள்ள அள்ள குறையாத காதலை உரியவனிடம் சேர்பிக்க வேண்டும் என்று மனம் முழுவதும் ஆசையை சேர்த்து வைத்திருந்தாள். எங்கே சென்றாலும் மனோ என தனக்கு முன்னே வந்து நிற்கும் அவனுக்காகவென நிறைய நிறைய வாங்கிக் குவித்தாள். 

 

அவனை நேரில் காணும் போது இதையெல்லாம் கொடுத்து அவனது முகபாவனைகளை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்க வேண்டும் என எத்தனையோ எண்ணங்கள், ஆசைகள் என மானசீகமாக அவனுடனே வாழ்ந்த அழகான நாட்கள் அவை. ஒவ்வொரு நொடியும் நிமிடங்களும் மனோவுக்காகவென வாழ்ந்த அழகிய காதல் காலம் அது. அவளும் அவனும் அன்றி ஒருவருக்கும் அதில் இடமிருந்தது இல்லை. இப்போதும் இல்லையென்பது மறுக்க முடியாத மெய்.

அவளுடைய எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் நாட்கள் ஓடின. சந்தனா இளங்கலை படித்து முடித்தாள். கோயம்புத்தூரிலே ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தாள். 

 

பூரணி சந்தனா வேலைக்குச் சென்றுவிட்டதால் அவளுடைய திருமணப் பேச்சைத் துவங்க, அவளுக்கு என்ன செய்வதென தெரியாது திக்கற்றுப் போனாள். மனோ எங்கிருக்கிறான் எனத் தெரியாது என்னவென உரைப்பது எனத் தவித்துப் போனவளுக்கு பற்றுக் கோலாய்க் கிடைத்ததுதான் முதுநிலை படிப்பு. குகேஷூம் யசோவும் முதுநிலை படிக்கப் போவதாகக் கூற, இவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். 

 

முதலில் சம்மதிக்க மாட்டேன் என்ற பூரணியை நண்பர்களை வைத்துப் பேசி சம்மதித்து ஒரு வருடம் கடுமையாகப் படித்து முதுநிலை நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாள். கோயம்புத்தூரிலே இருந்தால், மனோவைக் கண்டு பிடிக்க முடியாது என்றெண்ணி முதுநிலை படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்தாள். யசோவும் குகேஷூம் கூட சென்னையில்தான் படிக்க விருப்பம் தெரிவிக்க, பூரணியை பலவகையில் சமாதானம் செய்து படிப்பில் சேர்ந்தாள்.

 

கல்லூரி விடுதியிலே தங்கிக் கொண்டனர் மூவரும். சந்தனா மனோவைக் கண்டு பிடித்துவிடலாம் என சென்னை முழுவதும் சுற்றி வந்தாள். எங்கேனும் அவன் தென்பட்டு விட மாட்டானா என தன் மனத்தவிப்பை அவள் மட்டுமே அறிவாள். 

 

அவள் முதுநிலை கடைசி வருடத்தில் இருந்தாள். அப்போதுதான் அவள் தீனாவை சந்திக்க நேர்ந்தது. ஏனோ அந்நாளை தன் வாழ்வில் இருந்து நீக்கிவிட்டால் எத்தனை நன்றாய் இருக்குமென எண்ணி மாய்ந்த நாட்கள் ஏராளம். 

 

“ஹே... குட்டி.‌.. நீங்க எங்க இங்க?” அவன் இவளைப் பார்த்ததும் ஆர்ப்பரிக்க, சந்தனாவிற்கு உயிரே திரும்பி வந்தது போலிருந்தது. தீனாவைப் பார்த்துவிட்டாள். இனி மனோவை கண்டு பிடித்துவிடலாம் என அவள் மனம் துடித்தடங்க, “தீனா..... நான் இங்கதான் பிஜி பண்றேன். நீ, நீங்க எங்கடா இங்க?” எனத் திக்கித் திணறிக் கேட்டாள்.

This topic was modified 9 hours ago by VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா

   
ReplyQuote
VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

“குட்டி‌... நான் ஃப்ரெண்ட் ஒருத்தன் அட்மிட் ஆகியிருக்கான்னு பார்க்க வந்தேன்!” என்றான்‌.

“தீனா... மனோ, மனோ எங்க இருக்கான் டா. அவன் ஃபோன் நம்பர் கொடு டா!” என்றாள் தனக்குள்ளிருந்த தவிப்பை மறைத்து.

“குட்டி, உன் ஃபோனை கொடு...” என வாங்கியவன் தனது எண்ணையும் மனோவின் இலக்கத்தையும் பதிந்து கொடுத்தான். இருவரும் பனிமணைக்குச் சென்று தேநீர் அருந்தினர். இத்தனை வருட இடைவெளியை நிரப்ப, பேச என ஆயிரம் இருந்தது. ஆனாலும் தீனாவிற்கு நேரமில்லை.

“இப்போ எனக்கு அர்ஜெண்ட் வொர்க் இருக்கு டி. நான் கிளம்பணும். நீ இங்கதானே இருப்ப. கண்டிப்பா வீட்டுக்கு வரணும். வீக்கெண்ட் மீட் பண்ணலாம். மனோவுக்குப் ஃபோன் பண்ணி பேசு. உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு. அவனே சொல்லுவான்!” என இவன் அவசரத்தில் மனோவின் மறதியைப் பற்றி உரைக்காது நகர்ந்திருந்தான்.

சந்தனாவுக்கு சந்தோஷத்தில் மூச்சடைத்துப் போனது. விறுவிறுவென தனது அறைக்குள் சென்று தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள். மனோவிடம் என்ன பேசவென இத்தனை நாட்கள் உருப்போட்டிருந்த மனது இப்போது வெற்றிடமாக இருந்தது. சண்டையிட வேண்டும், ஏன் இத்தனை நாட்கள் தன்னைப் பார்க்க வரவில்லை. பேசவில்லை என செல்லக் கோபம் கொள்ள வேண்டும். மனோ எப்படி தன்னை சமாதானம் செய்வான் என அவன் குரல் கேட்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்திருந்தது. அவளின் மனோவிடம் பேசப் போகிறோம் என்ற நினைப்பே புதுத் தெம்பை அளிக்க, தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள்.

கைகள் லேசாய் வியர்க்க, சில நொடிகள் நிதானித்தாள். ‘அவன் என்னோட மனோ. எதுக்கு இவ்வளோ பதட்டம் எனக்கு. ஹீ இஸ் மை மனோ!’ என தன்னை இயல்புக்கு கொண்டு வந்தவள், அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.

“ஹலோ...” மனோரஞ்சன் அழைப்பை ஏற்றதும் பேச, இவளுக்கு விழிகள் வேகமாக வேகமாக நனைந்து தளும்பிற்று. எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரான அவன் குரல் கேட்கிறாள். சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை போல. மொழியறியாத குழந்தை போல சில நொடிகள் விழித்தாள்.

“ஹலோ... லைன்ல இருக்கீங்களா?” அவன் மீண்டும் கேட்க, அடைத்த தொண்டையை சரிசெய்தவள், “ஹம்ம்... மனோ!” என்றாள் காற்றுக்கும் வலிக்காத குரலில்.

“யெஸ், யாரு பேசுறது?” என அவன் கேட்க, இவளுக்கு மனம் சுணங்கிற்று.

‘என்னை யாருன்னு கேட்குறீயா மனோ?’ மனம் அவனிடம் செல்ல சண்டையிடத் தயாராக, மறுபுறம் யாருடைய பேச்சு சத்தமோ கேட்டது.

“கங்கிராட்ஸ் மை பாய். அப்பாவாகிட்ட. இப்போதான் உங்கம்மா நீ பொறந்து இருக்கன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ளேயும் இந்தப் பையன் மனோவுக்கு ஒரு பையன் பொறந்துட்டான்!” என அவர் பேசியதும், “தேங்க் யூ மாமா...” என இவன் பதிலளித்தான். சந்தனாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை போல.

‘சே... கண்டிப்பாய் அப்படியெல்லாம் இருக்காது. என் மனோ எனக்கு ஒரு போதும் துரோகமிழைத்திருக்க மாட்டான்!’ என பரிதவித்துப் போனது மனம்.

“ஹலோ... லைன்ல இருக்கீங்களா?” இவளிடம் அவன் பேச, சந்தனாவிற்கு வார்த்தைகள் நடுங்கின.

“மனோ... நான்...” என அவள் பேச வர, “இங்க மனோரஞ்சன் யாரு?” என செவிலியர் அழைத்துவிட்டார்.

“சிஸ்டர், நான்தான்!”

“சார், உங்க வொய்ஃப் ஷோபனா கண் முழிச்சுட்டாங்க. உங்கப் பையனையும் ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டோம். உங்களை அவங்க வர சொல்றாங்க!” என செவிலியர் கூற, “ஓகே சிஸ்டர், இதோ வரேன்...” என்று உரைத்தவனின் குரலில் இருந்த மகிழ்ச்சி சந்தனாவை மறிக்க செய்திருந்தது. கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வடிய, வாயைப் பொத்திக் கொண்டாள். எங்கே கதறிவிடுவோமோ என அவளுக்குப் பயமாய் போய்விட்டது.

“ஹலோ... ஷோபியோட ஃப்ரெண்டா? அவளைப் பார்க்கணும்னா, சகாயம் ஹாஸ்பிடல் வாங்க. இங்கதான் இருக்கோம்!” என அவன் அழைப்பைத் துண்டித்து சென்றுவிட, சந்தனாவின் மொத்த உலகமும் அந்நொடி தலைகீழாய் சுழன்றிருந்தது. கையிலிருந்த அலைபேசி நழுவி விழுந்து உடைய, அவளது இதயமும் மனோவின் வார்த்தையில் உடைந்து சிதறியிருந்தது.

“ட்யூட்டி டைம்ல இங்க என்ன பண்ற டி?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த யசோதா இவளது தோளைத் தொடவும், சந்தனா மயங்கிச் சரிந்திருந்தாள்.

“ஹே... சந்து... சந்தனா, என்னாச்சு டி?” என அவள் பதற, குகேஷ் வந்துவிட்டான். அவளை பரிசோதித்து அங்கேயே அனுமதித்தனர். இரண்டு மணிநேரங்கள் கழித்து கண்விழித்த சந்தனாவிற்கு புறத்தூண்டல் எதுவுமே உறைக்கவில்லை. எதையோ வெறித்தவாறே இருந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்த வண்ணமிருக்க, அவளிடம் எந்தவித அசைவும் இல்லை. மனம் மட்டும் மனோ மனோ என்ற ஜெபத்தை மட்டும் உதிர்த்த வண்ணமிருந்தது.

“சந்து... என்னாச்சு டி உனக்கு? ஏன் இப்படி இருக்க? எதாவது பேசு டி?” அவள் கண்களிலிருந்து ஊற்றாய்ப் பெருகும் கண்ணீரை துடைத்த யசோ தோழியை உலுக்க, அவளிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை. யார் வந்தார்கள், போனார்கள், என்ன பேசினார்கள் என எதுவுமே அவளுக்கு சிந்தையில் பதியவில்லை. மனோ என்ற வார்த்தையை மட்டுமே உதிர்த்தாள். குகேஷ் அவளை அதட்டி, அடித்துக் கூடப் பார்த்துவிட, ஒரு வார்த்தையை அவளிடமிருந்து வாங்க முடியவில்லை.

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. துளி உணவு ஆகாரமின்றி சாதித்து விட்டாள் இந்தப் பெண். யசோவுக்கும் குகேஷூக்குதான் பயம் அப்பியது. ஒரு வாரம் இதே போலவே கடக்க, கண்கள் உள்ளே சென்று தேகம் மெலிந்து சந்தனாவைக் காண்போருக்கு நெஞ்சம் பதைபதைத்துப் போனது. தூங்காத விழிகள் செவ்வரியோடியிருந்தன. உயிர்ப்பற்றிருந்த விழிகளில் கண்ணீர் மட்டும் வற்றவில்லை.

பேராசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள் என அவளை எத்தனை வற்புறுத்தியும் சந்தனாவின் சிந்தனை இங்கே இல்லை. மனோ தன்னை விட்டுவிட்டான் என்ற நிதர்சனத்தை அவளால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனோ என்றைக்கும் அப்படி செய்பவன் இல்லையே என செயல் சிந்தனை முழுவதும் மனோரஞ்சன் மட்டுமே நிறைந்து கிடந்தான்.

ஆசை ஆசையாய் அவர்களுக்கென அவள் கட்டியிருந்த வீடு குடிபுகுமுன்னே இடிந்து சரிந்து விழுந்ததை அவளால் துளியும் நம்பமுடியவில்லை. காதில் கேட்ட வார்த்தைகள் பொய்யாய் இருக்குமென தன்னைத் தானே சுறத்தேற்றலில் மீட்க முனைந்தவள், மோசமாய் உடைந்தழுதாள். ஏனோ மனோ தனக்கில்லை என்பதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

மனோவை தன் உயிரில் பொத்திப் பாதுகாத்த்திருந்தாளே. அவளது ஊன் உயிர் என அனைத்தையும் அவனுக்காகவென அர்பணிக்கும் அளவிற்கு தனது ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து கிடப்பவன், தன்னை விட்டுச் செல்ல மாட்டான் என பேதை மனம் நம்பியது.

‘மனோ... என்னை விட மாட்டான். மனோ என்னை விட மாட்டான்!’ என மனம் பதறித் துடிக்க, யாரிடமும் கூறாது சகாயம் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள். இவள் உள்ளே செல்ல, அன்றைக்குத்தான் ஷோபனாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மொத்தக் குடும்பமும் அங்கே குழுமியிருந்தது.

ரஞ்சன் மனைவியைக் கைத்தாங்கலாக அழைத்து வர, சதாவின் கைகளில் அவளது பேரன் வீற்றிருந்தான். குடும்பமாய் அவர்களைக் கண்டதும் சந்தனா உடல் அங்கேயே சரிந்து விழுந்தது. உணவு ஈயாத உடலில் துளியளவும் தெம்பில்லை. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவளை மருத்துவமனையில் சேர்க்க, அவளது அலைபேசியில் கடைசியாய் அழைத்த குகேஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவனும் யசோவும் அடித்துப் பிடித்து வந்திருந்தனர். ஏனோ தோழியை இப்படிக் கண்டதும் அவர்களுக்கு உயிரே போய்விட்டது.

இதற்கு மேலும் இவளை இங்கே வைத்திருக்க முடியாதென கருதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சொல்லாமல் கொல்லாமல் வந்திருப்பவர்களைப் பார்த்த பூரணி, “வாமா யசோ...வா குகா!” என அழைத்தவருக்கு அப்போதுதான் மகளின் ஓய்ந்த தோற்றம் கண்களில் தென்பட்டது போல.

“ஐயோ...குட்டி... குட்டி என்னாச்சு டி?” என அவர் பதறிப் போய் மகளது கையைத் தொட, இத்தனை நாட்கள் ஸ்மரனையற்றிருந்தவள் தாயின் குரலில் உயிர்ப்புற்றாள். 

 

அவரைக் கண்டதும் அடிவயிற்றிலிருந்து கேவி அழுகை வர, “அம்மா... மனோ என்னைவிட்டுப் போய்ட்டான் மா. என்னை மறந்துட்டான் மா!” என இவள் வெடித்து கதறி அழுததில், பூரணியின் சர்வமும் ஆட்டம் கண்டிருந்தது.

“குட்டி... என்னாச்சு டி?” என அவர் பதறித் துடிக்க, மகள் அழுது கரைந்திருந்தாள்‌. இரண்டு நாட்களும் அவள் கதறலும் அழுகையும் மட்டுமே கண்டிருந்தது அந்த வீடு. குகேஷூம் யசோவும் படிப்பு மற்றும் பணியின் பொருட்டு சந்தனாவை மனதே இல்லாமல் விட்டுட்டு சென்றனர்.

பூரணி மகளை ஒருவழியாய் தேற்றி உண்ண வைத்து என கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார். அவளிடம் முன்பு போல அவளிடம் எந்தப் பேச்சுகளும் இல்லை. எப்போதும் அமைதியாய் இருந்தாள். அவளது விழிகள் எதையோ வெறித்த வண்ணமிருந்தன. இவர் எப்படியோ அவளைக் கெஞ்சி அதட்டி என உண்மையை வாங்கிவிட்டார். அவள் கூறிய செய்தியில் பூரணி அதிர்ந்து போனார்.

“அறிவிருக்காடி உனக்கு? ஏன் டி இப்படி பண்ண? அந்தம்மா நம்ப சாப்பிட்ட தட்டுல கூட சாப்பிட கூடாதுன்னு தனியா தட்டு வாங்கி வச்சிருந்தவங்க. அவங்க பையனை எப்படிடி உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு நீ எதிர்பார்த்த? ஏன் குட்டி இப்படி பண்ற?” என மகளை கன்னம் கன்னமாக அறைய, அவள் எந்த எதிர்வினையும் ஆற்றாது அடியைப் பெற்றுக் கொண்டாள். வலித்தாலும் ஒரு நொடி கூட முகத்தைச் சுளிக்கவில்லை.

பூரணிக்குத் தாயாய் பயம் நெஞ்சைக் கவ்வியது. பொறுமையாய் அவளிடம் பேசி நிதர்சனத்தைப் புரிய வைக்க முயன்றார். அவரால் முடியாது போனது. மகளிடம் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவளை நினைத்தே கவலை அரிக்க, அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருகிக் கொண்டே சென்றது.

“பூரணி, நான் சொல்றதை கேளு. பேசாம உன் மகளுக்கு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடு. அதுக்கப்புறம் அவ சரியாகிடுவான்னு எனக்குத் தோணுது. இந்தக் காலத்து பிள்ளைக காதல்னு வந்து நிக்கிறது எல்லாம் சாதாரணம் தான். நீ இதுக்கெல்லாம் விசனப்பட்டுட்டு இருக்காதே!” என உறவினர்கள் அனைவரும் ஒன்று போல கூற, பூரணிக்கும் அதுவே சரியெனப்பட்டது. ஒரு நல்ல பையனாகப் பார்த்து மகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால், அவள் சரியாகிவிடுவாள் என அவர் மாப்பிள்ளையைத் தேட, ஒரு மாதத்திலே ஒரு வரன் அமைந்தது. பையனும் மருத்துவம் பயின்றிருக்க, சந்தனாவின் புகைப்படம் பார்த்து மாப்பிள்ளையின் வீட்டார் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

“குட்டி... இந்தப் போட்டோவைப் பாரு டி. இந்தப் பையனைதான் உனக்குப் பார்த்திருக்கேன். உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாரு!” என்ற பூரணியின் வார்த்தைகளில் வெற்றுப் பார்வை பார்த்தவள் எதையும் கூறாது சுவரை வெறித்தாள்.

“வாயைத் தொறந்து சொல்லு டி. உன்னை இப்படி பார்க்க பயமா இருக்கு டி. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமையணும் குட்டி. அம்மா உன் நல்லதுக்கு மட்டும்தான் டி செய்வேன். இந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா வாழ்றதை நான் பார்க்கணும் டி!” என அவர் குரல் தளுதளுக்க, சந்தனாவின் விழிகள் நனைந்தன.

“செத்துருவேன் மா. யாரையும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா, நான் செத்துப் போய்டுவேன் மா. என் மனோவைத் தவிர யாரையும் நான் நினைக்க கூட மாட்டேன். அவனுக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் மா. என்னை உயிரோட கொன்னு புதைச்சுடாதா மா. இனிமே கல்யாணம்னு ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து வந்தா, இந்த சந்தனா உனக்கில்லை. உன் கூடவே கடைசி வரை இப்படியே உன் மகளா இருந்துட்றேன் மா...” என அவள் தேம்பியழ, பூரணி துடித்துப் போனார். அதுதான் அவர் கேட்ட மகளின் கடைசி அழுகை. சந்தனாவைப் பற்றிய கவலையிலே இரண்டு நாட்களில் அவரது உயிர் பிரிந்திருந்தது.

காலையிலிருந்து திறக்கப்படாத கதவும் தெளிக்கப்படாத வாசலும் சந்தனாவை சிந்திக்க செய்தன. தயாருகே சென்று அமர்ந்தாள்.

“ம்மா...” என அவரைத் தொட்டாள். உடல் ஜில்லென்றிருந்தது.

“ம்மா... எழுந்திரி மா. நேரமாச்சு மா!” என அவள் பதற்றத்தில் அவரை உலுக்க, பூரணியின் உடலில் உயிரில்லை என மகளுக்கு உறைத்தது.

“ம்மா... ப்ளீஸ் மா. ம்மா, என்னை பயமுறுத்த தானே இப்படி படுத்திருக்க‌. ப்ளீஸ் மா. எழுந்திரி மா!” என அவள் கதறல்கள் எல்லாம் படுத்திருந்த பூரணியை எழுப்பிவிடவில்லை‌.

“ம்மா... இனிமே உன் பேச்சை கேட்குறேன் மா. ப்ளீஸ் மா, எழுந்திரி மா!” என அவள் அழுதாள், கதறினாள், தேம்பினாள். பூரணியின் உயிரற்ற உடல் அவளுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. ‌அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவரை இறுக்கியணைத்துக் கொண்டு படுத்தாள். எத்தனை நேரம் அப்படியே படுத்திருந்தாள் என்பது அவள் மட்டுமே அறிவாள்.

அலைபேசி அடித்து அடித்து ஓய்ந்தது. சிறிது நேரத்தில் எடுத்துப் பேசினாள். “குகா... குகா, அம்மா எழுந்திரிக்கவே மாட்றாங்க டா. நீ வந்து சொல்லு டா!” என அவள் விசும்ப, குகேஷிற்கு என்ன செய்வதென தெரியவில்லை. அவன் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வர நேரமாகும் என்பதால், இளங்கலையில் படித்த நண்பர்களை சந்தனாவின் வீட்டிற்குச் சென்று பார்க்க பணித்துவிட்டு இவனும் யசோவும் அங்கே விரைந்தனர்.

பூரணியின் மரணத்தைக் கேட்டதும் நண்பனாய் இவன் துடித்துப் போனான். யசோவிற்கு சந்தனாவின் நிலையை எண்ணி துக்கம் தொண்டையை அடைத்தது. தாய் இறந்ததை கூட உணர முடியாது பித்துப் பிடித்தது போல அமர்ந்திருந்தாள் அவள். இவர்களைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்து வெடித்தழுதாள்.

“அம்மாவை வர சொல்லு குகா. நான் இனிமே அவங்க பேச்சைக் கேட்குறேன். அவங்களை வர சொல்லு டா!” என இவள் அழுது கரைய, பூரணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வந்திருந்த உறவினர்கள் இரண்டு நாட்களில் விடை பெற, சந்தனாவை தனித்து விட்டுச் செல்ல யசோவிற்கும் குகேஷூக்கும் மனதில்லை. அவளைத் தங்களுடனே அழைத்துச் சென்றனர்.

சந்தனாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. யசோதா அன்னையாய் அவளைத் தாங்கி உடனிருந்து பார்த்துக் கொண்டாள். அவளைத் தேற்றி மனநல மருத்துவரிடம் காண்பித்து பழைய சந்தனாவை மீட்க முழுதாய் இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. சந்தனா மீண்டிருந்தாள். ஆனால் எதையும் மறக்கவுமில்லை, கடக்கவும் இல்லை. மனமென்னும் உள்ளக்கிடங்கில் பதுக்கிக் கொண்டாள்.

மனோ இல்லையென்ற நிதர்சனம் கன்னத்தில் அறைய, வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டாள். முதுகலையை அவள் முடித்திருக்க, இடைப்பட்ட வருடத்தில் யசோவிற்கும் குகேஷிற்கும் திருமணம் முடித்திருந்தது.

குகேஷ் பெங்களூரிலே ஒரு மருத்துவமனையில் சந்தனாவிற்கு பணியைத் தேடி, தன்னருகே இருத்திக் கொண்டான். லட்சுமி அம்மா சந்தனா தங்கியிருந்த விடுதியில் வேலை பார்த்தவர். யசோவுடன் சேர்ந்து சந்தனாவை அவரும் கவனித்துக் கொண்டார். உடல்நிலை காரணமாக அவரால் வேலை பார்க்க முடியவில்லை. வயதின் மூப்பும் அனுமதிக்கவில்லை. அவருக்கென யாருமற்று நின்றுவிட, சந்தனா அவரைத் தன்னுடன் அழைத்துக்

கொண்டாள்‌.

நடந்ததை அசைப்போட்டவாறு முயன்று மெதுமெதுவாக சந்தனாவின் விழிகள் உறக்கத்தை தழுவின. லட்சுமி அவளைக் கவலையாகப் பார்த்தார். இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவை அவரறியாதது. இப்போது தான் அனைத்தையும் தெரிந்து கொண்டார்.

காலையில் ரஞ்சன் விடிந்ததும் சந்தனாவிடம் வந்து நிற்க, “என் மனோ ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு கிடைப்பானா?” என நிராசையாய் உயிரை விழிகளில் தேக்கி கேட்டவளின் முன்னே அவனின் மொத்தமும் சரணடைந்திருந்தது. உடைந்தழுதிருந்தான்.

தொடரும்.‌.

 

This post was modified 9 hours ago by VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா

   
ReplyQuote

You cannot copy content of this page