All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 15

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 15

ஆதவன் தினமும் உதித்து எழுந்து தன் காதலியான நிலவினைக் காண வரவே, அவளோ அதற்கு முன் மறைந்து விட இப்படி தினம் தினம் ஏமாற்றம் கொண்டே திரும்பி விடுவான்.

ஒரு சில நாட்களில் தன் கோபத்தினை வெப்பமாக வெளியிடும். இருந்தாலும் அதன் மனதிற்குள் ஏக்கங்களும், ஆசைகளும் இருக்குமோ என்னவோ யாரிடமும் கூற முடியாமல் மழைத்துளியாக அதன் அழுகையை வெளிப்படுத்துகிறது அது போல் தான் ஆதியின் மனமும்.

எதற்காக அவள் தன் மனதிற்குள் புகுந்தால் என்று தெரியாது. ஆனால் தன் இதயத்தை தொட்டவளை தன் கரம் பிடிக்க முடியாமல் தன்னை பெற்றவரே எதிர்க்க என்ன செய்ய முடியும் ? ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகளிலேயே கரைந்து கொண்டு இருந்தான். அவளைக் காண முடியாது ஏங்கி தவித்தான். அவளை பார்க்க பேச வம்பு இழுக்க என்று இருந்தவனுக்கு இப்பொழுது வாழ்க்கையை வெறுமையான உணர்வு தான். 

பெற்றவர் சொன்னதால் அவளைப் பார்க்க முடியவில்லை சரி அந்த விதியாவது எதார்த்தமாக தங்களை சந்திக்க வைக்க கூடாதா ? என்று அவன் தோப்பு வீட்டை விட்டு வெளியே எங்குச் சென்றாலும் சாலையில் அவனின் பார்வை அவளைத் தான் தேடியது. 

அன்று வயலுக்கு தேவையான உரம் வாங்குவதற்கு பணம் எடுக்க வீட்டுக்கு வந்திருந்தான் ஆதி. மூன்று நாட்களுக்கு பின் அன்று தான் வீட்டுக்கு வந்திருக்க வந்தவனுக்கு அதிர்ச்சி. காரணம் ஒருவரை அழைத்து வந்து அமர வைத்து அவரிடம் தன் திருமணத்தைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

"இதுல என் பேரனோட ஜாதகம் இருக்கு நம்ம ஜாதிப் புள்ளையா வசதிக்கு ஏத்த மாதிரி பொறுப்பான பொண்ணா பாருங்க " என்று சங்கரமணி அப்பத்தா ஜாதகத்தை கொடுக்கவே, அவரும் அதனை வாங்கினார்.

தென்னவன் நாச்சி அப்பத்தா மூவரும் வீட்டிற்கு வரப் போகும் மருமகளுக்கு என்னென்ன குணமெல்லாம் இருக்க வேண்டும் ?எவ்வளவு படித்திருக்க வேண்டும் ?நகை சீர்வரிசை எவ்வளவு கொடுக்க வேண்டும் ? என்பதை பற்றி எல்லாம் அவர்கள் பேச புரோக்கரும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இவை அனைத்தும் வாசலில் நின்று கேட்டவாறு இருந்த ஆதிக்கோ சினமோ எல்லை மீறியது. வேகமாய் வீட்டுக்குள் வந்தான். அவனின் காலடி சத்தத்திலே ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவருமே அவனைத்தான் கண்டனர்.

"இவன் தான் என் பேரன் " என்று  அப்பத்தா கூறவே,

"உங்க பேரனை எனக்கு தெரியாதா சுத்துப்பட்டு ஊருல உங்க வீட்டுப் பிள்ளையை யாருக்கு தான் தெரியாம இருக்கும் சொல்லுங்க. தம்பியை தான் நான் அடிக்கடி பார்த்து இருக்கேன்ல"

"அப்புறம் என்ன போட்டோவும் தரோம். போட்டோ கையோட வச்சுக்கோங்க பொண்ணுங்களுக்கு குடுங்க புடிச்சிருந்துச்சுன்னா மத்ததை பேசலாம் " என்க, அவரும் சரி எனக் கூறினார்.

தென்னவன் மகனின் கோப முகத்தைக் கண்டு, "சரிங்க அப்புறம் நீங்க உத்தரவு வாங்கிக்கோங்க " என்றதும், அவரும் சரி எனக் கூற, நாச்சி பணத்தினை தன் மாமியாரின் கரங்களில் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு புரோக்கர் அங்கிருந்துச் சென்று விட்டார்.

"வாடா பேராண்டி சாப்பிட்டியா ?" என்று அப்பத்தா கேட்கவே,

"என்ன நடக்குது இங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நான் கேட்டேனா. எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்ன கேட்காம நீங்க எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் " என்று வெஞ்சனத்தோடுக் கத்தினான்.

"என்னடா புதுசா இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க அதுவும் பெரியவங்களை எதிர்த்து " தென்னவன் கேட்க,

"நீங்க பேசாதீங்கப்பா உங்களால தான் என் வாழ்க்கை என்னை விட்டு போச்சு. நான் இப்படி இருக்கிறதுக்கு முழு காரணமே நீங்க தான். ஏன்பா என் சந்தோஷத்தை பறிக்கிறீங்க. என் விருப்பப்படி என்னை ஏன் இருக்க விட மாட்டீங்க. அப்படி என்ன பெரிய தப்பு நான் பண்ணிட்டேன் சொல்லுங்க "

"எதுக்கு அப்பனும் மகனும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க ? எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்ற நீ ? காரணம் என்ன சொல்லு " என்று சங்கரமணி அப்புச்சி கேட்கவே, அவன் கூறுவதற்கு முன் கூற விடாத தடுக்க வேண்டும் என நினைத்தார் தென்னவன்.

"அவனுக்கு வேற வேலை இல்லப்பா. அவன் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பான். கல்யாணம் பண்ணலைன்னா அப்படியே கிடக்கட்டும் விடுங்க அவன் நல்லதுக்கு தான நம்ம பண்ணி வைக்கணும்னு நினைக்கிறோம். ஆரம்பத்தில இருந்தே உன் இஷ்டப்படி விட்டதுக்கு தான் இப்படி வந்து நிற்கிற. எந்த நேரமும் ஒரே குடி. இவன் கூட ஒண்ணா சுத்திகிட்டு திரியிற அந்த உதயனோட குணம் எங்கே இவனோட குணம் " என்று தென்னவன் பேச்சினை மாற்றவே, அப்புச்சிக்கோ அது நன்கு புரிந்தது. 

தன் பேரன் உறுதியாக சொல்வதில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை தன் மகன் மறைக்கப் பார்க்கிறான் என்பதை அவரோ புரிந்துக் கொண்டார். ஆனால் அப்பத்தாவுக்கு அது புரியவில்லை.

"சரி இப்ப வேண்டாம் ஒரு  வருஷம் போகட்டுமா " அப்பத்தா கேட்கவே,

"நீங்க எனக்கு கல்யாணம் பண்ணனும் நினைச்சீங்கன்னா அப்புறம் நான் இந்த ஊர்ல இருக்க மாட்டேன். உங்க யாரு முன்னாடி இருக்காமா எங்கேயாவது போயிருவேன். இது தான் என்னோட முடிவு என் மனசு என்னைக்கும் வேற ஒரு பொண்ண ஏத்துக்காது " வேகமோடு அங்கிருந்து மாடி நோக்கிச் சென்று விட்டான்.

"என்னது வேற ஒரு பொண்ண ஏத்துக்காதா ? அப்படின்னா இவன் மனசுல ஏதோ ஒரு பொண்ணு இருக்கானா இதனால தான் அப்பனுக்கும் அவனுக்கும் பிரச்சனையா ? இதைத்தான் நீ என்கிட்ட மறைக்க பார்க்கிறாயா? என்ன நடக்குது இந்த வீட்டுல " சங்கரமணி அப்புச்சி அதிகாரமாய் கேட்கவே,

"அப்பா எந்த ஜாதி பொண்ணுன்னு தெரியாது பிழைக்க வந்த பெண்ணை போய் அவன் விரும்புறான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான் " என்று பேரன் கூறியதை எல்லாம் கூறினார். ஆனால் அந்த பெண்ணின் கடந்த காலத்தை மற்றும் கூறவில்லை தென்னவன்.

நிச்சயம் தான் அந்த பெண்ணின் கடந்த காலத்தைப் பற்றி கூறினால் தன் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மருமகளாக தன்னாலே முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் எப்படி இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தான் அந்த பெண்ணிடம் இருந்து தன் மகனை பிரிக்கவே நினைத்தார். ஆனால் மகன் இவ்வளவு உறுதியாக பிடிவாதமோடு இருக்கவே தென்னவனுக்கோ உள்ளுக்குள் கிளி மூண்டது.  மகன் நாட்கள் கடந்தால் மறந்து விடுவான் என்று நினைத்திருந்தால் அவனோ இன்னும் அந்த பெண்ணின் விஷயத்தில் தீர்மானமாக இருக்கிறானே ?

"இவ்வளவு நடந்து இருக்கா எதுக்கு என்கிட்ட நீ ஒரு வார்த்தை கூட சொல்லலை. எனக்கு என்ன மரியாதை இந்த வீட்டுல இருக்கு சொல்லு. பொறுப்புகள் எல்லாம் உன் கிட்ட கொடுத்துட்டேனா இந்த வீட்டுல  நாங்க கல்லு மாதிரியே  இருந்துக்கணுமோ எதுலையும் தலையிடாம " என்று அப்புச்சி சினமோடுக் கத்தினார்.

"அப்பா அப்படியெல்லாம் இல்லை.  இப்ப நான் சொன்னாலுமே நீங்க சம்மதிக்க மாட்டீங்கல. என்ன பண்ண அதுக்காக தான் நான் சொல்லலை" என்றதும் ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே இறங்கி வந்த ஆதி தன் அன்னையிடம் உரம் மூட்டைகள் வாங்குவதற்கு டவுனுக்கு சொல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்துக் கிளம்பி விட்டான்.

"ராசா வாட்டம் ரெக்க கட்டி சுத்திக்கிட்டு இருந்த என் பேர மனச கெடுத்து அந்த சிறுக்கி எவடா அவ மட்டும் என் கைல சிக்கட்டும் அவளுக்கு இருக்கு. வசதி வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சா அப்படியே அழகை காட்டி மயக்க புடுறாங்க இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் " என்று கோவிலில் வைத்து பார்த்த பெண் தான் தன் பேரன் விரும்புகிறான் என்பது தெரியாது அப்பத்தா புலம்பவே,

"இந்த வார்த்தைக்காக தான்மா நான் ஆரம்பத்திலேயே இதை முடிச்சு வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப நீங்க சொன்ன இதே தான் நாளைக்கு ஊருக்குள்ளேயும் பேசுவாங்க. நம்ம பையன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துனா அந்த பொண்ண தான் தப்பா பேசுவாங்க. அதனால தான் நான் அவன்கிட்ட வேண்டாம்ன்னு சொன்னேன் "

"இள ரத்தம் உடம்பெல்லாம் சூடேறும் இந்த நேரம் இந்த வயசுல அவனுக்கு இப்படி எல்லாம் பார்க்கத்தான் தோணும் கண்ணு. அதுக்காக அந்த பொண்ணு சண்டை மூட்டி விடுவாளோ பக்குவமா எடுத்து சொல்லணும். அந்த உதயன் பையன் எவளோ ஒருத்திக்காக நம்ம வீட்டுப் பிள்ளையா அடிச்சிருக்கான். அது தெரிஞ்சும் நீ எப்படி நீ சும்மா விட்டே?"

"வேற என்ன பண்ண சொல்றீங்க ? தப்பு எல்லாம் நம்ம பையன் மேல இருக்கு. அதனால தான் இவனை கண்டித்து வைக்கிறேன். இவன் பெரிய சண்டியர் ஆட்டம் முகத்தை திருப்பிக்கிட்டு சுத்திக்கிட்டு திரியிறான். இப்படி இருந்துட்டு போகட்டும் எனக்கு இதை பத்தி பேசினா டென்ஷன் தான் ஆகுது  நாச்சி அந்த பிரஷர் மாத்திரை கொஞ்சம் எடுத்துட்டு வா "  எனக் கூறி தன் அறைக்குச் சென்றார் தென்னவன்.

"ஐயோ, ஐயோ இப்ப நம்ம என்னங்க பண்றது அப்பனும் பையன் இப்படி இருக்காங்க. இவன் என்ன இப்படி வீம்பு பண்ணிக்கிட்டு இருக்கான். சரி அப்படியே அவன் விருப்பப்படி நம்ம கட்டி வச்சாலும்  ஊருக்குள்ள நம்மளை தானே பேசுவாங்க. கல்யாணம் பண்ணிட்டா மதிப்பாங்களா சொல்லுங்க. நம்ம குடும்பத்துக்கு என்ன கௌரவம் இருக்கு மகன் சொல்றது சரி தான். இந்த பேர ஏன் தான் புரிஞ்சுக்க மாட்டிக்கிறானோ " என்று அப்பத்தா புலம்பவே,

"விடு பாத்துக்கலாம் இதை நினைச்சு நீ உன்ன போட்டு வருத்துக்கிட்டு படுக்கையில விழுந்துடாத நடக்கிறது நடக்கும் " எனக் கூறியவரோ சோபாவில் அமர்ந்து காலையில் வந்த செய்தித்தாளை படிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாக பார்க்கச் சென்று விட்டனர்.

வெளியே வந்த ஆதி தன் பைக்கை எடுத்துக்கொண்டு நேராக டவுனுக்கு தான் சென்றான். அவனின் மனதை என்ன தான் மாற்ற முயற்சி செய்தாலும் அது மாறாத ஒன்று என்பது அவனுக்கு புரிந்தாலும் தன் வீட்டார்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ?

யுகனிகாவாவது தன்னை காதலித்தால் எப்படியாவது போராடி சம்மதம் பெற்று திருமணம் செய்து வைத்து விடலாம் ? ஆனால் அவளும் மாட்டேன் என்று அடம்பிடிக்கப் போய் தானே வெறுக்க வைக்கும் படி பேசுகிறார். அனைவரும் மீது இருந்த கோபம் உரிமையாக தன்னவளின் மீது இப்பொழுது பாய அவளை திட்டிக் கொண்டே நான் டவுனுக்கு வந்து சேர்ந்தான்.

அங்கு உரக்கடைக்குச் சென்று வயலுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் வாங்கி அவர்களையே கொண்டு வந்து தங்களின் குடோனில் வைக்கும் படி கூறி பணத்தினை கொடுத்துவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் உணவருந்தினான்.

வயிறு நிறைந்ததும் வெளியே வர அங்கு ஒரு புறம்  சென்றால் யுகனிகா மறுபுறம் சென்றால் உதயன் ஆனால் இருவரிடமும் தன்னால் இப்பொழுதுச் செல்ல இயலாது நண்பனும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை தான் உயிராய் நேசிப்பவளும் தன்னை ஏற்கவில்லை குடும்பத்தாரும் தன்னை வெறுக்கிறார்கள் என்னடா வாழ்க்கை இது நொந்து போய் மன அமைதிக்காக அங்கிருந்த ஒரு தியேட்டருக்கும் நுழைந்தான்.

சிறிது நேரம் அந்த படத்தை பார்த்தவனுக்கு அதற்கு மேல் அதனைப் பார்ப்பதற்கு துளி கூட விருப்பமில்லை எழுந்து வெளியே வந்து விட்டான்.

' இதுக்கு நான் என் தோப்பு வீட்ல போய் படுத்து தூங்கலாம் ' மனதுக்குள் நினைத்தவனோ டவுனில் இருந்து மீண்டும் தன் ஊருக்கு கிளம்பினான். 

அவன் அப்படிச் சென்று கொண்டிருக்கும் நேரம் அவனே எதிர்பாராத நேரம் அந்த விதி நீண்ட நாட்களுக்குப் பின் யுகனிகாவை சந்திக்க வைத்தது. அவன் சென்று கொண்டிருந்த அதே பாதையில் சற்று முன்னே ஸ்கூட்டியில் அவளோ சென்றிருந்தாள்.

அவளின் ஸ்கூட்டியைக் கண்டே அவள் தான் செல்கிறாள் என்பதை கண்டறிந்தான் ஆதி.

ஆதிக்கு அன்று நேரம் சரியில்லையோ என்னவோ அவனுக்குப் பின்னே வந்த வாகனத்தை அவனோ கவனிக்க தவறினான். அவனின் விழிகள் எல்லாம் முன்னே இருந்த தன்னவனின் மீது மட்டுமே இருந்தது.

தொடரும்...

கருத்துக்களைப் பகிர,

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page