All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 18 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 18 💖

சந்தனா மருத்துவமனைக்குள் நுழைய, குகேஷ் அழைத்துவிட்டான். அதில் முகம் மென்மையாக அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்தினாள்.

“ஹேப்பி பெர்த் டே சந்தனா!” அவன் வாழ்த்தை தொடர்ந்து, “ஹேப்பி பர்த்டே ம்மா...” என மூன்று வாண்டுகளும் ஒரு சேரக் கத்தவும், இவளது முகம் மலர்ந்து போனது.

“தேங்க் யூ சோ மச் செல்லக் குட்டிங்களா!” சந்தனா உணர்ந்து கூற, “சந்து, ஈவ்னிங் பெர்மிஷன் போட்டுட்டு சீக்கிரம் வா. நம்ப அவுட்டிங் போகலாம். ரெண்டு வருஷமாச்சு ஊரை சுத்தியே. கெட் ரெடி!” குகா ஆரவாரத்துடன் கூற, “இல்ல குகா, நைட் ஷிஃப்ட் டாக்டர் இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவாங்க‌. நேத்தே என்கிட்ட ஏழு மணி வரை இருக்க முடியுமான்னு கேட்டாங்க. நான் ஓகே சொல்லிட்டேன். சோ, இன்னைக்கு என்னால வர முடியாது!” என மறுதலித்தாள்.

“ப்ம்ச்... அப்போ வர மாட்ட. குழந்தைங்க ரொம்ப ஆசையா இருக்காங்க!” அவன் கொஞ்சம் கடுப்புடன் பேச, “குகா.‌.‌. சாரி டா. நீங்க ப்ளான் பண்ணது எனக்கு எப்படித் தெரியும்? நேத்தே கால் பண்ணி இருக்கலாம் இல்ல. இப்போ என்னால பெர்மிஷன் போட முடியாது டா. ஹம்ம்... ப்ளானை நாளைக்கு மாத்திக்கலாம். நான் நாளைக்கு லீவ் போட்றேன். வெளிய போகலாம்!” அவனை சமாதானம் செய்ய விழைந்தது சந்தனாவின் குரல்.

அதில் இறங்கியவனும், “கன்பார்மா நாளைக்குப் போறோம். வேற எதுவும் ரீசனை கொண்டுட்டு வந்துடாத நீ. காலைல பத்து மணிக்கு ரெடியா இரு. நாங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறோம்!” அவன் கண்டிப்பாய் கூற, “ஹம்ம் குகா... நான் ரெடியா இருப்பேன். யசோ வராளா? அம்மா, அப்பாவையும் கூட்டீட்டு வா டா. அவங்களைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு!” என்றாள் வருத்தத்துடன்.

“ஏன் சந்தனா... நீ அவங்களைப் பார்க்க வர மாட்டீயா? பார்க்குறேன் எத்தனை நாள் நீ இங்க வராம இருக்கேன்னு. சரியான அழுத்தக்காரி டி நீ” குகா குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது.

“பிறந்த நாள் அதுவுமா புள்ளையை ஏன் டா திட்டுற. ஃபோனை கொடு இங்க!” அருகே அமர்ந்திருந்த ராஜகுமாரி அலைபேசியை வாங்கினார்.

“சந்தனா... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா. எப்படி இருக்க? இந்த அம்மாவைப் பார்க்க வரணும்னு உனக்குத் தோணலையா?” அவர் உரிமையாய்க் கேட்க, இவளது முகத்தில் வருத்தமுறுவல் பிறந்தது.

“இல்ல மா... வேலை இப்போலாம் அதிகம். அதான் வரலை மா. நாளைக்கு நீங்களும் வாங்க மா. நம்ப மீட் பண்ணலாம்!” அவள் கூறுவது பொய்யென அவருக்கும் புரிந்தது.

“என்னமோ சொல்ற சந்தனா. நான் நம்புறேன்...” என்றவர் குரலின் ஆதங்கம் அவளுக்குப் புரியாமல் இல்லை. அவளுக்கு மட்டும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இல்லையா என்ன? அவளுக்கு ஒன்றென்றால் எப்போதும் நீளும் கரத்திற்கு சொந்தமானவர்களின் குடும்பமாகிற்றே. முன்பெல்லாம் வாரத்திற்கு ஒருமுறை அங்கு சென்று வருவாள். ஏனோ தன்னால்தான் குகேஷிற்கும் யசோவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது என்ற குற்றவுணர்வில் அங்கு செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தாள்.

“வயசான காலத்துல எங்களால அலைய முடியாது மா. யசோவும் குகாவும் பிள்ளைகளைக் கூட்டீட்டு வருவாங்க. நீயும் அவங்களோட வெளிய போய்ட்டு வா மா!” என்றார் வாஞ்சையாய். அந்தக் குரலிலிருந்த அன்பை முழுமையாய் உள்வாங்கியவள்,

“சரிங்க மா...” என்றாள். குகேஷின் தந்தையும் இவளுக்கு வாழ்த்தைப் பகிர்ந்தார்.

“சரி சந்து, நாளைக்கு மீட் பண்ணலாம்!” குகேஷ் அழைப்பைத் துண்டிக்க செல்ல, “குகா... யசோ விஷ் பண்ணவே இல்லையே!” என்றாள் வருத்தம் மேவிய குரலில்.

“சான்சே இல்ல சந்து. நாளைக்கு நேர்ல மீட் பண்ணும்போது நீ அவளை சமாதானம் பண்ணு, இப்போ வேணாம். பெர்த்டே அன்னிக்கு எதுவும் சொல்லிட்டான்னா, உனக்குத்தான் மனசு கஷ்டம்!” என்றான் பெருமூச்சோடு. மனதே இல்லாது அழைப்பைத் துண்டித்தவளை வேலை இழுத்துக் கொண்டது. அதில் ஆழ்ந்து போனாள்.

அன்றைய நாள் கழிய, வீடு வந்து சேர்ந்தாள் சந்தனா. “சந்துமா... மறந்தே போய்ட்டேன் டா. இன்னைக்கு உன் பிறந்த நாள் இல்ல. உன் மனசு போல என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் டா!” என லட்சுமி மனதார வாழ்த்தினார். அவர் வாழும் இந்த வாழ்க்கை சந்தனா கொடுத்தது என எப்போதும் அவருக்கு மனதில் நன்றியுணர்வு உண்டு.

“பரவாயில்லை லட்சுமி மா...” என அவரை அணைத்துப் புன்னகைத்தவள் அறைக்குள் நுழைந்திருந்தாள். அலுப்புத் தீர குளித்தால் நன்றாக இருக்குமென தோன்ற, குளித்து முடித்து வந்தாள். மனோ இல்லாத வெறுமையைப் போக்க புத்தகத்திடம் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

“ரஞ்சன்... இன்னைக்கு புதுசா யூட்யூப்ல ஒரு டிஷ் பார்த்தேன். பீட்ரூட் புலாவ். டின்னருக்கு அதை செஞ்சுடவா?” என ஷோபனா வினவ, அவன் குறும்புடன் தலையை அசைத்தான்.

“என்ன... என்ன சிரிப்பு உங்களுக்கு!” என முழங்கையால் அவனை இடித்தவள், “நான் செய்றேன். சாப்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என அங்கலாய்த்துவிட்டுப் போன மனைவியில் இவனது புன்னகை நீண்டது.

“ப்பா... நான் ஹண்ட்ரட் ஸ்டேஜ் க்ராஸ் பண்ணிட்டேன்!” என கையில் அலைபேசியுடன் அஷூ குதிக்க, “நீயே உங்கம்மாகிட்டே என்னைப் போட்டுக் கொடுத்துடாதா டா!” என மகனை மென்மையாய் முறைத்தவனை வீட்டின் அழைப்புமணி கலைத்தது. எழுந்து சென்று ரஞ்சன் கதவைத் திறக்க, எதிரில் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் இவன் கதவை பூட்ட செல்ல, “டேய்... டேய், கதவை பூட்டாத டா. எட்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கேன். செம்ம டயர்ட் டா!” என அந்த வாலிபன் அலறியபடி உள்ளே நுழைந்தான்.

அந்தக் குரலின் பரிட்சயத்தில் ஷோபனா முகம் மலர்ந்து போனது.‌ “அண்ணா, வாங்க... வாங்க. இப்போதான் பெங்களூருக்கு வழி தெரிஞ்சதா?” என புன்னகையுடன் அவனை வரவேற்றாள்.

“மாமா...” என அஷ்வின் புதியவனிடம் தாவ, புன்னகையுடன் சின்னவனைத் தூக்கினான் அவன். ரஞ்சன் அவனை முறைத்துவிட்டு நகர,

“ஏன் மா... உன் புருஷன் ரொம்ப கோவக்காரனா இருக்கானே. லாஸ்ட் டைம் பெங்களூர் வரும்போது நிஜமாவே என் ஆஃபிஸ் கொலிக்ஸ் எல்லாம் இருந்தாங்க. எனக்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ணவே டைம் சரியா போச்சு. எல்லாரும் வெளிய சுத்தீட்டு அப்படியே கிளம்பிட்டோம். இதை எத்தனை தடவை அவன்கிட்டே சொல்றது!” அவன் அலுத்துக் கொண்டான். ஷோபனா சிரித்துவிட்டாள்.

“தேஞ்ச டேப்ரிகார்டர் போல சொன்னதையே சொல்லாத டா நாயே!” ரஞ்சன் கையிலிருந்த தொலைவியக்கியை அவன் மீது எறிய அதை லாவகமாகப் பிடித்தவன், “அதானே டா உண்மை. அப்போ அதைதானே சொல்ல முடியும்!” என இவனும் முனைத்தான்.

“சண்டையை அப்புறம் போட்டுக்கலாம் அண்ணா. போங்க, போய் குளிச்சிட்டு வாங்க. நான் டின்னர் செய்றேன்!” என அவள் நகர,

இவன் தலையை அசைத்து அஷ்வினுக்கு வாங்கி வந்த பொருட்களை அவனிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

ரஞ்சன் அவனை முறைத்து விட்டு வெளியேற பார்க்க, “மனோ... ரொம்ப பண்ற டா நீ!” என்றான் அவன்.

“ஆமா டா... அப்படித்தான் பண்ணுவேன். தீனான்னு பேர் வச்சிருக்க யாரும் உண்மையை பேச மாட்டாங்களாம்!” என்ற ரஞ்சனின் குரலில் கொஞ்சம் கோபம்தான். சென்ற முறை சென்னைக்கு வந்த போது ரஞ்சனின் தாய் ஏதோ கூறிவிட்டார் என தீனா இவனைக் காண வரவில்லை. ரஞ்சன் அப்போதே தீனாவை சமாதானம் செய்திருந்தான். இருந்தும் அவன் அதை நினைத்து இவர்களைத் தவிர்க்க, ரஞ்சனுக்கு அதில் கோபம் பொங்கியது.

“ப்ம்ச்... சாரி டா மனோ... இனிமே எப்போ பெங்களூர் வந்தாலும் நான் இங்க வர்றேன்...” என அவனைத் தோளணைத்தான். இவனும் பெருமூச்சுடன் அவனை கட்டிக் கொண்டான்.

“அத்தை பேசுனதை எல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன் டா. அவங்க என் அத்தை தானே?” என தீனா உரைக்க, ரஞ்சன் முகத்தில் புன்னகை மீண்டிருந்தது.

“ஹம்ம்... லாஸ்ட் டைம் பார்க்க வராததுக்கு உனக்கொரு பனிஷ்மெண்ட் இருக்கு டா. குளிச்சிட்டு வா, உன் பாசமலர் யூட்யூப் பார்த்து ஏதோ செய்யப் போறா. போ...” ரஞ்சன் குறும்பாய்க் கூற, தீனாவுக்கும் சிரிப்பு பொங்கியது.

“டேய் நீ அடங்கு... அவ நல்லாதான் சமைப்பா!” தீனா ஷோபனாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டினான்.

“ஹக்கும்... அவளைவிட்டுத் தர மாட்டீயே... போடா!” ரஞ்சன் வெளியேற, தீனா குளித்து முடித்து வந்தான். ஷோபனா சமைத்ததை கேலி செய்து கொண்டே உண்டு முடித்திருந்தனர்.

“மாமா... இங்க பாருங்க. அப்பா பெர்த்டேக்கு எடுத்த போட்டோஸ்!” என அஷ்வின் ரஞ்சனின் அலைபேசியை எடுத்து ஒவ்வொன்றாய் காண்பித்தான்.

அதை பார்த்துக் கொண்டே வந்த தீனாவின் கைகள் ஒரு நொடி நின்றிருந்தன. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை உற்றுப் பார்த்தவனின் இதழ்கள் குட்டி என முணுமுணுத்தன. “மனோ... மனோ, இது!” என அவன் அவளின் புகைப்படத்தைக் காண்பித்துக் கேட்டான்.

“இவங்க டாக்டர் சந்தனா... இந்த அப்பார்ட்மெண்ட்லதான் இருக்காங்க தீனா!” என்றான் அவன்.

“டேய்... குட்டி, சந்தனா டா இவ!” தீனா திக்கியபடியே கூற, “டாக்ரை உனக்கு ஏற்கனவே தெரியுமா? இது அவங்கப் பையன் மனோகர்!” என ரஞ்சன் பதிலளித்ததும் தீனா அமர்ந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டான்.

“தீனா... என்ன டா?” எனக் கேட்ட ரஞ்சன் முகத்திலும் யோசனை.

‘குட்டி... குட்டி?’ இந்தப் பெயர் எங்கோ உள்மனதின் ஓரத்தில் எப்போதுமே ஒலித்து அவனது நிம்மதியைப் பறித்த நாட்கள் ஏராளமாகிற்றே.

“என்ன அண்ணா? என்னாச்சு?” என ஷோபனா அவர்கள் அருகே வர, தீனா சற்றே நிதானித்தான்.

“ஒன்னும் இல்ல ஷோபி... ஆஃபிஸ் கால் ஒன்னு பேசணும். அதான்!” என அலைபேசியை எடுத்து அவன் காதிற்கு ஈந்த, அவள் நகர்ந்தாள்.

அவன் பொய்யுரைப்பதை அவதானித்த ரஞ்சன், “தீனா, ஏன் டாக்டரைப் பத்தி பேசுனதும் பதட்டமாகுற நீ?” என கூர்மையாய் அவனைப் பார்த்து வினவினான்.

“இல்லயே.‌.. ஐ’யம் ஓகே டா. சின்ன வயசுல அவளோடதான் விளையாடுவோம். அதான் ஒரு எக்ஸைட்மெண்ட்ல கேட்டேன் டா!” என முயன்று குரலை சமநிலைக்குக்கொண்டு வந்தவன், “எந்த பிளாட்ல இருக்கா அவ?” என வீட்டு எண்ணை விசாரித்தான். அவனை சந்தேகமாகப் பார்த்த ரஞ்சன் சந்தனாவின் வீட்டு இலக்கத்தை உரைத்தான்.

இப்போது என்ன பொய்யுரைத்துவிட்டு அவளைப் பார்க்க செல்வது என அவன் தவிக்க, அலைபேசி கைகொடுத்தது. யாரோ அழைக்க, ஏற்றுக் காதில் பொருத்தியவன், “நான் கால் பேசிட்டு வரேன் டா!” என விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்.

தீனாவை சந்தேகமாகப் பார்த்த ரஞ்சன், அவன் பின்னே செல்ல, அலைபேசியை துண்டித்துவிட்டு கடகடவென படிகளில் ஏறினான் தீனா. அவன் சந்தனாவின் வீட்டிற்குத்தான் செல்லக் கூடும் எனக் கணித்த ரஞ்சனுக்கு யோசனையானது. தன்னிடம் கூறிவிட்டே அவளைப் பார்க்க செல்லலாமே. ஏன் இவன் பொய்யுரைக்கிறான் என எண்ணியவன், “ஷோபி... ஒரு டென் மினிட்ஸ்ல வரேன்!” எனக் குரல் கொடுத்துவிட்டு மனைவி கேள்விக்குப் பதிலளிக்காது தீனா பின்னே சென்றான்.

தீனா விறுவிறுவென சந்தனா வீட்டு வாயிலின் முன்னே நின்றான். மூச்சிரைத்தது, கதவைப் பலங்கொண்டு தட்டினான்.

“யாராது.‌.. எதுக்கு இவ்வளோ வேகமா கதவைத் தட்டுறீங்க?” எனக் குரலை உயர்த்தி வினவியவாறு கதவைத் திறந்தார் லட்சுமி.

“யாரு வேணும் பா உங்களுக்கு?” அவர் புதியவனை ஆராய்ச்சியாகப் பார்க்க, “குட்டி... குட்டி இருக்காளா? அது... டாக்டர் சந்தனா இருக்காளா?” எனக் கேட்டவன் குரலில் அவளைக் காணும் ஆர்வம் கொட்டிக் கிடந்தது‌.

அவனது ஒருமை விளிப்பில் சந்தனாவின் நண்பனாக இருக்கக் கூடுமென கருதியவர்,

“உள்ளேதான் இருக்கா தம்பி. வாங்க, வந்து உக்காருங்க!” என அவனை இருக்கையில் அமர்த்திவிட்டு சந்தனாவின் அறைக்குச் சென்றார்.

“சந்துமா... உன்னைப் பார்க்க ஒரு தம்பி வந்திருக்காரு...” என லட்சுமி உரைக்க, யாரது என்ற யோசனையுடன் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள்.

தீனாவை அந்நொடி மனம் எதிர்பார்க்கவில்லை போல. சட்டென உள்ளே ஏதோ அழுத்துவது போலிருக்க, சடுதியில் தன் முக பாவனைகளை மாற்றியவள், “தீனா, எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்?” எனப் புன்னகைக்க முயன்றாள். நீண்ட நாட்கள் கழித்து நண்பனைக் கண்டதும் முகம் உதடுகளும் மலர்ந்தன. ஆனாலும் விழிகள் உள்ளத்தை உள்ளபடியே காண்பித்துக் கொடுக்க வெகு

பிரயாசைப்பட்டன.

“குட்டி... குட்டி, எப்படி இருக்க நீ? ஏன் என் கால்ஸ் எதையும் எடுக்கலை நீ?” உரிமையாய்க் கேட்டவனுக்கு சில பல வருடங்களுக்கு பின்னர் அவளை சந்தித்ததில் குரல் முழுவதும் உற்சாகம் ததும்பி வழிந்தது.

“தீனா... ஏன் இவ்வளோ படபடன்னு பேசுற? மூச்சு வாங்குது பாரு!” என அவனை அதட்டியவள், “தண்ணியை குடி நீ...” என மேஜையின் புறம் திரும்பி நின்றவள் தண்ணீரைக் குவளையில் நிரப்பினாள். கைகளில் மெல்லிய நடுக்கம்தான். அவனறியாது மறைத்துவிட்டாள்.

ஆசுவாசமாக அமர்ந்தவன், அவள் கொடுத்த நீரை எடுத்துப் பருகினான். “சரி இப்போ சொல்லு குட்டி... லாஸ்டா நம்ப மீட் பண்ணி எத்தனை வருஷம் ஆச்சு. நான் உன்கிட்ட நம்பர் கொடுத்துட்டுதானே போனேன்? ஏன் ஒரு கால் பண்ணலை நீ? நான் பண்ணாலும் ரெஸ்பான்ஸ் இல்ல? கல்யாணமாகி குழந்தை கூட இருக்கு. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலை இல்ல?” குரலில் சற்றே கடுப்பாய் வினவினான். அவனது பேச்சில் சந்தனாவுனுக்கு புன்னகை தோன்றியது.

“சாரி டா... சாரி, என் ஃபோன் மிஸ் ஆகிடுச்சு. அதான் நான் உன்னைக் காண்டாக்ட் பண்ண முடியலை. சரி, நீ எப்படி இருக்க? என் வீடு உனக்கு எப்படி தெரியும்?” என வினவினாள்.

“நல்லா இருக்கேன். கல்யாணமாகி ரெண்டு புள்ளைங்களோட ஜெகஜோதியா இருக்கேன்!” என்றான் கிண்டலாக‌.

“பாரு டா... வொய்ஃபை கூட்டீட்டு வரலையா நீ?” எனக் கேட்டவள் அவனுக்கருகே நீள்விருக்கையில் அமர்ந்தாள்.

“இல்ல டி... நான் ஆஃபிஸ்ல மீட்டிங்க்னு வந்தேன்‌. அப்படியே மனோவையும் பார்க்கலாம்னு வந்தா, நீ இங்க இருக்கன்னு தெரிஞ்சது. அதான் உன்னைப் பார்க்க ஓடி வந்தேன். சண்டை போடணும்னுதான் நினைச்சேன் நான்!” என்றான் மென்முறைப்பாய். அவளிடம் மெல்லிய புன்னகை.

“நல்ல வேளை... அஷூ போன்ல நீ இருக்க ஃபோட்டோ காட்டுனான். அதான் என்னால கண்டு பிடிக்க முடிஞ்சது!” என்றவன் சற்றே யோசித்து, “மனோ... மனோவுக்கு உன்னைத் தெரிஞ்சதா?” எனக் கேட்டான். அந்தக் கேள்வியில் உள்ளே உடையத் தயாராகி நின்ற உணர்வுகளை அணையிட்டுத் தடுத்தவள், “அது... அது தெரியலை தீனா. அவருக்கு என்னை அடையாளம் தெரியலை!” என்றாள் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

“ப்ம்ச்... பாரேன் விதியை. ஐஞ்சு வருஷம் அவனோட பழகியிருக்க நீ. ஆனால், அவனுக்கு உன்னை அடையாளம் தெரியலை! நான் கூட இங்க வரும்போது அவனுக்குத் தெரியாம, பொய் சொல்லிட்டுத்தான் வந்தேன்” எனப் பெருமூச்சுவிட்டவன், “ஆப்ரேஷன்ல அவனோட பாஸ்ட் மெமரீஸ் போக பிஃப்டி பிஃப்டி சான்ஸ் இருக்குன்னு டாக்டர் சொன்னாரு. நாங்க அவனுக்கு மெமரி லாஸ் ஆகும்னு நினைக்கவே இல்லை குட்டி!” என்றான் வருத்தம் மிகுந்த குரலில்‌


   
ReplyQuote
VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

சந்தனா அவனை வெறுமையாய் பார்த்திருந்தாள். ஏனோ இவன் கிளம்பிவிட்டால் தேவலை என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. மீண்டும் மீண்டும் என் ரணத்தைக் கீறிப் பார்ப்பதில் ஏன் இவனுக்கு இத்தனை ஆர்வம் என நினைத்ததும் குபுக்கென விழிகள் கலங்கின.

“ஆமா குட்டி... லாஸ்ட் டைம் நான் மீட் பண்ணப்போ மனோகிட்டே பேசப் போறேன்னு நம்பர் வாங்குன. அப்போ அவன்கிட்ட பேசலையா நீ?” யோசனையாய் வினவினான்.

“அது‌... உன்கிட்ட நம்பர் வாங்குனப்போ அவர்கிட்டே பேசலாம்னு நினைச்சேன் தீனா. அந்த டைம்லதான் போன் தொலைஞ்சு போச்சு. அதனாலே காண்டாக்ட் எல்லாம் மிஸ் ஆகிடுச்சு!”

“ஓ... சரி சரி. இப்பவும் ஏன் அவன்கிட்டே நீ சொல்லலை. அவன் உன்னைப் பத்திப் பேசும்போது ஷோபியோட ப்ரெண்ட்னுதான் சொன்னான்?”

அந்தக் கேள்விக்கு என்ன பதிலுரைப்பது எனத் திணறியவள், “தீனா, அவரோட ஹெல்த் கண்டிஷன் என்னென்னு தெரியாம எப்படி நான் பழைய மெமரீஸ்ல போய் பேச முடியும். அது எதுவும் ப்ராப்ளம் ஆகிடக் கூடாதில்லை...” என்றாள் அவன் பார்வையை சந்திக்காது.

“அதுவும் சரிதான், டாக்டரம்மா சொன்னா கரெக்டாதான் இருக்கும்!” என்றவன், “ஏன் இப்படி அவனை அவர் இவர்னு ரொம்ப பார்மலா பேசுற. இதுவே பழைய மனோவா இருந்தா நம்ப இப்படி பேசிட்டு இருக்கதுக்கே செம்ம காண்டாகி உன்னைக் கூட்டீட்டுப் போய்டுவான் இல்ல?” என்றவன் முகம் சிறுவயது நினைவில் கனிந்தது. தீனா பேச பேச ஏனோ சந்தனாவிற்கு அழுகை வரும் போலிருந்தது.

அவள் அமைதியாய் இருக்க, “உன்கிட்டதான் கேட்குறேன் டாக்டரம்மா...” என்றான்.

“இப்போ என்னை அவருக்கு அடையாளமே தெரியலை தீனா. திடீர்னு புதுசா மீட் பண்ற மாதிரிதான் நான் அவரைப் பார்த்தேன். எப்படி அவன் இவன்னு பேச முடியும். அது நல்லா இருக்காது. இப்போ அவர் ஷோபியோட ஹஸ்பண்ட் ரஞ்சன்!” என்றவளுக்கு நெஞ்சடைத்துக் கொண்டது. தளும்பி நிற்கத் தயாராகும் விழியை அரட்டி உருட்டி அடக்கினாள். ஷோபனாவின் கணவன் என்பது உண்மைதானே. அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கிறது? இவன் மனோ இல்லை. அட்சர சுத்தமாய் ஷோபனாவின் கணவன் ரஞ்சன் மட்டுமே. மனோவின் அவளுக்கான பார்வையில் ஒருபோதும் அந்நியத் தன்மையிருக்காதே.

‘குட்டி... குட்டி!’ எனத் தன்னையே சுற்றி வரும் விழிகளில் அவளுக்கான நேசம் எப்போதும் ததும்பி வழியும். தன்னுடைய நலன், தான் என்ற வார்த்தையை அன்றி அவன் வேறொன்றும் அறியாதவன். பதினேழு வயதில் என்னைத்தான் காதலிக்கிறேன் என சுற்றம் மறந்து கத்தியவனாகிற்றே. நிச்சயமாய் இவன் என் மனோ கிடையாது என எண்ணும் போதே உள்ளே இதயம் உடைந்தழுதது.

“ப்ம்ச்... நான் ஒருத்தன். இதெல்லாம் யோசிக்கவே இல்லை பாரு!” என்றவனிடம் லட்சுமி பழச்சாறை நீட்டினார்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி...” என எடுத்துக் கொண்டான்.

“சாரி... சாரி தீனா, நான் உன்கிட்ட என்ன சாப்பிட்றன்னு கேட்கவே இல்ல!” என்றவளைப் பார்த்து புரிதலாய் தலையை அசைத்தவன், “ஃபார்மாலிட்டீஸ்லா எதுக்கு குட்டி...” என்றுவிட்டு, “உன்கிட்டே நாங்க வாங்கி மட்டும்தான் சாப்பிட்றோம். இப்போவும் மேடம் உங்க அம்மாவுக்கு செஞ்சு கொடுத்த ப்ராமிஸ்காக எங்ககிட்டே எதுவும் வாங்குறதில்லை?” என அன்பாய் குறைபடித்தான். இவள் புன்னகைத்தாள் அன்றி பதிலுரைக்கவில்லை.

“பையனை எங்க குட்டி? அம்மா எங்க?” என வீட்டைக் கண்களால் துழாவினான்.

“ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய்ருக்கான் அவன்...” என சில நொடி அமைதி காத்தவள், “அம்மா இல்ல தீனா...” என்றாள் வருத்தப் புன்னகையுடன்.

அந்தக் குரலின் பேதத்தை உணர்ந்தவன், “சாரி குட்டி... சாரி ஆன்ட்டிக்கு என்னாச்சு, எப்போ? எங்ககிட்டே சொல்லவே இல்ல நீ?” என ஆதங்கமாய்க் கேட்டான்.

“ஃபைவ் இயர்ஸ் ஆச்சு தீனா. அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்ஷூ!” என உரைத்தவளுக்கு குற்றவுணர்வு கழுத்துவரை மேவி உந்தியது. பெற்ற அன்னையின் இறப்பிற்கு காரணமாய் போய்விட்டோம் என்ற எண்ணம் இத்தனை வருடங்களில் அவளைக் கொன்று புதைத்திருந்தது. தன்னால்தான் பூரணி இறந்தார் என மனசாட்சி எத்தைனையோ முறை சுயகோபத்தில் கத்தியின்றி அவளைக் கிழித்து கீறி சந்தோஷசித்த நாட்கள் எல்லாம் நரகத்தையொத்த பக்கங்கள்.

அவளருகே வந்து தோளணைத்தவன், “குட்டி... நாங்க இருக்கோம் உனக்கு. இனிமே எதுனாலும் எனக்கு நீ கால் பண்ணி சொல்லணும். தனியா கிடந்து கஷ்டப்படாத!” என தன்னுடைய இலக்கத்தை அவளிடம் கொடுத்து, அவளுடைய எண்ணயும் வாங்கிக் கொண்டான். அவனின் ஆதரவான பேச்சில் வாஞ்சையான பார்வையிலும் சந்தனாவின் விழியோரம் ஈரம் கோர்த்தது.

“ஹஸ்பண்ட் என்ன பண்றாரு? எங்க இருக்காரு?” இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன் என்பதை போல பதிலை இத்தனை நேரம் உருப்போட்டிருந்தவள், “அவருக்கு ஃபாரின்ல ஜாப் தீனா. அப்போ அப்போ வருவாரு...” என்றாள்.

“சரி... சரி, ஒருநாள் ஃபேமிலியோட நம்ப வீட்டுக்கு வா குட்டி...” என்றான் அன்பாய் கையைத் தட்டிக் கொடுத்து. இவள் புன்னகைத்து தலையை அசைத்தாள்.

“ஹம்ம்... அன்டைம்ல வந்து டிஸ்டர்ப் பண்றேன் நான். சென்னை போறதுக்கு முன்னாடி ஒரு தடவை வந்து பையனைப் பார்த்துட்டுப் போறேன். இப்போ நான் கிளம்புறேன்...” என எழுந்தவன், “அப்பப்போ போன் பண்ணுங்க டாக்டரம்மா. மெசேஜும் பண்ணணும்!” என்றவன் நடக்க, இவள் தலையை அசைத்துப் புன்னகைத்தாள்.

சில எட்டுகள் வைத்தவனின் நடை நிதானப்பட, “உன் பையனுக்கு எத்தனை வயசு குட்டி?” எனக் கேட்டான்.

அந்தக் கேள்வியில் சந்தனா தடுமாற, “மனோவுக்கு பத்து வயசாகப் போகுதுப்பா...” என அந்நேரம் சமையலறையில் இருந்து வெளியே வந்த லட்சுமி பதிலளித்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னே அவன் சந்தனாவைப் பார்த்தான். அப்போது அவளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. அப்படி பார்த்தால் பத்து வயதில் இப்போது மகனிருக்க வாய்ப்பே இல்லையென மூளை கூறியது.

“சந்தனா... மனோ உன்னோட சொந்தப் பையனில்லையா?” என முழுதாய் அவள் புறம் திரும்பிக் கேட்டான். அவனது பார்வை அவளது நெற்றி கழுத்து கால்விரல் என அளந்தன. அவளுக்குத் திருமணமான எவ்வித அடையாளமும் அதிலில்லையென மூளை உணர, பதிலுக்காய் அவள் முகத்தைப் பார்த்தான்.

ஒரு நொடி தயங்கி தலையை அசைத்தவளின் உள்ளம் பதறியது. இதற்கு மேலும் எதுவும் என்னிடம் கேட்டுவிடாதே என்ற இறைஞ்சலுடன் அவனை நோக்கினாள்.

“உன் ஹஸ்பண்ட் போட்டோ காட்டு குட்டி. நான் பார்க்கணும்!” என மீண்டும் உள்ளே நுழைந்தவனுக்கு இவள் பொய்யுரைப்பதாய் ஓர் எண்ணம் தோன்றிற்று. இத்தனை நேரம் கண்ணிலும் கருத்திலும் பதியாத அவளது தோற்றம், விழிகள் என எல்லாம் இப்போது ஏதோ கதை சொல்லின. புசுபுசுவென இருந்த தேகம் இப்போது எலும்பின் உறைவிடமாகியிருந்தது. கண்ணாடிக்குப் பின்னிருக்கும் விழிகளில் சர்வ நிச்சயமாய் உயிர்ப்பில்லை.

“என் ஃபோன்ல அவர் போட்டோஸ் இல்ல தீனா. லேப்டாப்ல தான் இருக்கு. நீ நெக்ஸ்ட் டைம் வரும்போது நான் காட்டுறேன்!” அவன் முகம் பார்க்காது பொய்

உரைத்தவளைக் கண்டு நெற்றியைச் சுருக்கியவன், “பரவாயில்லை... நான் வெயிட் பண்றேன். லேப்டாப்பை எடுத்துட்டு வா!” என இருக்கையில் அமர்ந்த தீனாவின் மனம் ஏனோ அடித்துக் கொண்டது. இவளிடம் ஏதோ சரியில்லை. எதையோ மறைக்கப் பார்க்கிறாள் என உள்ளுணர்வு விழித்துக் கொண்டது.

சந்தனாவிடம் பதிலில்லை. பொய்யாகவேணும் கணவன் என்ற இடத்தில் ஒருவரையும் இருத்திப் பார்க்க மனம் ஒப்புக் கொள்ளாதே. மனோ என்ற வார்த்தையின் இடத்தை ஒருவராலும் நிரப்ப முடியாதே என மனம் விம்மித் துடிக்க, அவனைப் பாவமாய்ப் பார்த்தாள். எதையும் கேட்டு என்னை உடைத்து விடாதே என்ற பாவம் அதில் கொட்டிக் கிடந்தது.

“என்கிட்ட பொய் சொல்றீயா சந்தனா? ஏன் கல்யாணம் பண்ணலை நீ?” எனக் கேட்டவனுக்கு இப்போதுதான் மெது மெதுவாக பயம் படரத் தொடங்கியது.

அவன் கேள்வியில் குபுகுபுவென அடிவயிற்றிலிருந்து அழுகை வரப் பார்க்க, “நான் இன்னொரு நாள் சொல்றேன் தீனா. டைமாகிடுச்சு, இப்போ நீ கிளம்பு!” அடைத்தக் குரலை பிரம்மபிரத்தனப்பட்டு சரிசெய்தவாறே கெஞ்சினாள்.

“ஹ்கூம்... நீ என் கேள்விக்கு பதில் சொல்லு. ஏன் கல்யாணம் பண்ணிக்கலை நீ?” என அடமாய் நின்றான்.

“தீனா, அது என் பெர்சனல். அதுல நீ தலையிடாத. கிளம்பு!” என்றாள் கடினமான குரலில். இப்படி பேசும்போது வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் அவளுக்கு வேறு வழியில்லையே என மனம் ஊமையாய் அரற்றியது. தாய் மடி வேண்டும் என்று இன்று இரண்டாவது முறையாக தவித்துப் போனாள் சந்தனா.

“ஓஹோ... இது உன் பெர்சனலா குட்டி?” எனக் கேட்டவன் குரலிலிருந்த வேதனை இவளை ஏதோ செய்திருக்கக் கூடும்.

“பம்ச்... சாரி தீனா. நீ, நீ இப்போ கிளம்பு டா. நம்ப இன்னொரு நாள் பேசலாம்!” என்றாள் தவிப்பாக.

“மாட்டேன் குட்டி... நீ... நீ மனோவை நினைச்சுத்தான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலையா?” இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே தீனா நூறு முறை செத்துப் பிழைத்துவிட்டான்.

“லூசு மாதிரி பேசாத தீனா. அவர், ரஞ்சன் அவர் ஷோபியோட ஹஸ்பண்ட். நான், நான் எதுக்கு அவரை இப்போ நினைக்கப் போறேன். இப்படியெல்லாம் அவங்க முன்னாடி கேட்டு வைக்காத நீ. நான், நான் கல்யாணம் பண்ணிக்காததுக்கு யாரும் காரணம் இல்ல. எனக்கு... எனக்கு விருப்பம் இல்ல. அதான் பண்ணிக்கலை போதுமா?” நடுங்கிய குரலில் மெலிதான உடல் அதிரக் கத்தினாள் சந்தனா. இந்தக் கேள்விக்கு பதிலுரைக்கும் போது மனதின் ஆதி முதல் அந்தம் வரை துடிதுடித்து செத்துப் போயிருந்தாள்.

‘இன்னும் மனோவை நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எனக் கேட்கிறான் இவன். நான் என்றைக்கு அவனை மறந்தேன். நினைப்பதற்கு. என் மூச்சு காற்று முதல் நொடிக்கு நொடி துடிக்கும் இதயம் வரை அவனின் ஜெபம் சொல்லாத நொடிகளே இல்லையே. தவறுதான். ஆனாலும் செய்தாள். அவளுடைய மனோ அவன். இப்போது இங்கே தன் முன்னிருக்கும் மனிதன் ரஞ்சன். அவனுக்கும் எனக்கும் எவ்வித பிணைப்புமில்லையே! அவனை ஏன் நான் நினைக்கப் போகிறேன். என் மனோவின் நினைவுகளே போதும். நான் வாழ்ந்துவிடுவேன் என நினைத்ததும் சரசரவென கண்ணீர் வழிந்தது.

“குட்டி... பொய் சொல்றீயா நீ?” எனக் கேட்ட தீனாவின் விழிகள் லேசாய் கலங்கப் பார்த்தன.

“நீ... அவனுக்காகத்தான் கல்யாணம் பண்ணியிருக்க மாட்ட. அவனுக்கு செஞ்சு கொடுத்த ப்ராமிஸ்காகத்தான் தனியா இருக்கீயா?” எனக் கேட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான். இதோ இப்பெண் இங்கே நிற்பதற்கு தானும் ஒரு காரணம் என எண்ணும்போதே நெஞ்சடைத்துப் போனது.

“நான் சொல்றது உனக்குப் புரியலையா தீனா?” எனக் கத்தமுயன்றவளின் குரல் உடைந்திருக்க, தீனா அவளை இறுக அணைத்திருந்தான்.

“குட்டி... குட்டி... சாரி!” என்றவன் தேம்ப, இவளுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவனை உதறித் தள்ளியவள், “தீனா... ப்ளீஸ் கிளம்புடா!” என்றாள் தொண்டை அடைக்க.

“ஏன் டி இப்படி பண்ண? நான்தான்... நான்தான் உன் நிலைமைக்கு காரணம் குட்டி. தப்பு பண்ணிட்டேன். நான்தான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு குட்டி” என அவன் குரல் மன்றாடியது.

“தீனா... ச்சு... அப்படியெல்லாம் இல்ல டா. நீ என்ன பண்ண? என்னோட விதி... கடவுள் இப்படி எழுதிட்டாரு. யாரும், யாரு வாழ்க்கையும் டிசைட் பண்ண முடியாது டா. இதெல்லாம் கடவுளோட கணக்கு. அம்மா சொல்லுவாங்க!” என சிரிக்க முயன்றவளின் கண்கள் தளும்பிற்று. இதயமும் பாரத்தை சுமக்க முடியாது நிரம்பி வழிந்தது.

“இல்ல குட்டி... நான் சொல்லி இருக்கணும். ஆப்ரேஷன் முடிஞ்சு குட்டி யாருடா... குட்டின்னு யாரையும் தெரியுமான்னு மனோ என்கிட்ட கேட்டான். டாக்டர் பழசை எதுவும் ஞாபகப்படுத்துனா, அவன் ஹெல்த் இஷ்ஷூ ஆகிடும்னு சொன்னதால, நான் அப்போ அதை சீரியஸா எடுத்துக்கலை. அப்புறம் அவனும் மறந்துட்டான். அவனுக்கு ஞாபகம் இல்ல. ஆனால், நான் ஞாபகப் படுத்தியிருக்கணும் இல்ல?” எனக் கேட்டவன் விழிகளில்

சூடான உவர் நீர் வெளியேறியது. அவன் கூறிய செய்தி சந்தனாவிற்குப் புதிது.

நினைவே இல்லாத போதும் தன்னை தேடியிருக்கிறான். என் மனோ என்னை மறக்கவில்லை என நினைத்ததும் குபுக்கென நீர் பெருக, “ப்ம்ச்... தீனா. நீ சொல்லி இருந்தா மட்டும் அவனுக்கு ஞாபகம் வந்துருக்குமா என்ன?” என விரக்தியாகக் கேட்டவளுக்கு மனமெல்லாம் வலித்தது. ஏன் என் விதி மட்டும் இப்படியென அழுகையாய் வந்தது.

எதிரிலிருப்பவன் முகத்தைப் பார்த்ததும் புறத்தூண்டல் உறைக்கப் பெற்றவள், “ச்சு... என்ன தீனா நீ?” என அதட்டலிட்டு அவனது கண்ணீரைத் துடைத்து நீரை அருந்தச் செய்தாள். தீனா அவளையே பார்த்திருந்தான். தன்னுடைய சிறிய அலட்சியம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி விட்டதே என நினைக்க நினைக்க துடித்துப் போனான்.

“தீனா... நீ... அது என்னை பாவமா எல்லாம் பார்க்காத டா. நான், நான் நல்லா இருக்கேன். என்னை அம்மா மாதிரி பார்த்துக்க லட்சுமி அம்மா இருக்காங்க. என்னையே சுத்தி வர்ற மனோ இருக்கான். எல்லாத்துக்கும் மேல எனக்குன்னதும் துடிச்சுப் போற அளவுக்கு ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். நான் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்!” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “ரஞ்சனைப் பார்த்தீயா நீ? ஷோபனாவோட சந்தோஷமா இருக்காரு. என் கூட வாழ்ந்தா கூட அவர் இவ்வளோ சந்தோஷமா இருப்பாரான்னு தெரியாது டா. ஷோபி ரொம்ப நல்ல பொண்ணு டா. ரஞ்சனை ரொம்ப விரும்புறாங்க. அவரை நல்லா பார்த்துக்குறாங்க. என்னைவிட அவங்கதான் அவனுக்கு நல்ல பொருத்தம் டா!” என்றாள். வலிக்க வலிக்கத்தான் பேசினாள். மரத்துப் போகாத இதயம் இப்போதும் அவளைக் காயப்படுத்தி ரசித்தது. தன்னை தேற்றிக்கொண்டு பேசினாள். எதிரிலிருப்பவனை சமாதானம் செய்யும் நோக்கோடு பேசினாள். தீனா எதுவும் கூறாது அவளையே வெறித்திருந்தான். இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் குற்றவுணர்வொன்று அவனைக் கொன்று புதைத்திருந்தது.

“சாரி சந்தனா!” என அவளை அணைத்துக் கொண்டு அழுதவனின் முதுகில் தட்டிக் கொடுத்தவள் சுயதேற்றலில் மெது மெதுவாக வெற்றிக் கண்டிருந்தாள்.

“தீனா... ஒன்னை மட்டும் நினைச்சுக்கோ. நீ எந்த தப்பும் பண்ணலை. அதே மாதிரி நான் நல்லா இருக்கேன். எனக்கொரு குடும்பம் இருக்கு. மனோ இல்லாம நான் செத்தா போய்ட்டேன். யார் இல்லைனாலும் நம்ப செத்தெல்லாம் போக முடியாது. நமக்கான வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகணும். இப்போ ரஞ்சனுக்கு அழகான ஒரு குடும்பம் இருக்கு. அதைப் புரிஞ்சுக்கோ. நம்மளால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது டா!” என்றாள் விசும்பியபடி. அவளது தோளில் கைப்போட்டு அணைத்தவன், “அவன்கிட்டே சொல்லலையா நீ?” என்றான் வருத்தம் மிகுந்த குரலில்.

“என்ன சொல்லணும் தீனா. என்ன எதிர்பார்க்குற நீ? ரஞ்சன் ஷோபியோட சந்தோஷமா வாழ்றாரு. இப்போ போய் நான் நடந்தது எல்லாத்தையும் சொன்னா என்ன மாறிடப் போகுது. இப்படியெல்லாம் நடந்துச்சுன்னு தெரிஞ்சா என் மனோ கஷ்டப்படுவான், அழுவான். எனக்கு அதுல விருப்பம் இல்ல. என்னைக்கும் அவன் சந்தோஷமா இருக்கணும். அவன் என்கூட இருக்கணும்ன்றதை விட நிம்மதியா சந்தோஷமா இருக்கணும் டா. அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் டா. தேவையில்லாம அவன் வாழ்க்கையில தலையிட எனக்கு விருப்பம் இல்ல!” என்றவளை வேதனையோடு பார்த்தான் தீனா.

“ப்ம்ச்... தீனா, உனக்குத் தெரியுமா? மனோவுக்கு மெமரி மட்டும் போகலைன்னா, செத்தா கூட என்னை விட்டிருக்க மாட்டான்டா. என் மனோவைப் பத்தி எனக்குத் தெரியும். இப்போ இருக்கது மனோ இல்ல. ரஞ்சன், வெறும் ரஞ்சன்தான். என் மனோ... அவன் என் மனோ மட்டும்தான். யாரும் அவனை என்கிட்ட இருந்து பறிக்க முடியாது டா. தினம் தினம் நான் விடுற மூச்சு காத்துல கூட அவன் இருப்பான். சாகுற வரைக்கும் இருப்பான் டா. தப்புதான். கல்யாணமாகிட்டவனை நினைக்க கூடாதுன்னு மனசு சொல்லுது. ஆனாலும், என் மனோவை நினைக்காம இருக்க முடியலை டா!” என்று அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் விசும்பியவளின் அழுகையில் தீனா மொத்தமும் உருக்குலைந்து போயிருந்தான்.


   
ReplyQuote
VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

“அவனுக்காக வெயிட் பண்ணீயா குட்டி?” குரல் அடைக்கக் கேட்டிருந்தான். அந்தக் கேள்வியில் சந்தனாவின் கண்ணீர் பெருகியது. தலையை மட்டும் அசைத்தாள்.

பத்து வருடங்கள், நூற்றி இருபது மாதங்கள், ஆறாயிரத்து இருநூற்று நாற்பது வாரங்கள், இருண்டாயிரத்து என்னூற்று எண்பது மணி நேரங்கள், ஒரு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து என்னூறு நிமிடங்கள் காத்திருந்தாள்தான். மனோ என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே ஆதாரமாய்ப் பற்றிக்கொண்டு ஒவ்வொரு நொடியும் அவன் வருவான் என எண்ணி நம்பிக்கையுற்றிருந்த காலங்கள் எல்லாம் அவளுடைய காத்திருப்பின் சொச்சங்கள். வெறும் வார்த்தைகளால் வடித்திட முடியுமா என்ன? நூற்றில் ஒரு சதவீதம் கூட அவன் வரமாட்டான் என்ற வார்த்தையை மனம் பிடித்து வைக்கவில்லையே. என்னுடைய மனோ அவன். என்னை மட்டும் நேசிக்கும் பரிசுத்தமானவன் அவன். என் நிழலையே சுற்றி வரும் பேரன்புக்காரன். என்னுடைய சிரிப்பில் பெருமகிழ்வு கொள்ளும் காதல்காரன் அவன். சிரித்துப் பேசியே காரிங்களை ஆகச் செய்யும் வசியக்காரன். என்னுடைய மனோ... எப்போதுமே மனோ என்னுடையவன்தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னருகில் இல்லையென்ற குறையைத் தவிர, அவனோடுதானே ஆதியும் அந்தமுமாய் உணர்வுபூர்வமாக உளமாற பத்து வருடங்களைக் கழித்திருந்தாள்.

அவனுடன் நிஜத்தில் வாழ்ந்த ஐந்து வருடங்களோடு நிழலாய் வாழ்ந்த பத்து வருடங்களில் அவளுடைய அன்பு கதிமோட்சம் பெறவில்லை. இப்போது அண்டப் பெருவெளியில் அவனுக்கான அன்பை சுமந்தவாறே ஜீவித்துக் கொண்டுதான் இருக்கிறது. சாகும் வரை ஜீவிக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லையே.

சந்தனா கைகளில் முகத்தைப் புதைத்து நீள்விருக்கையில் அமர்ந்திருக்க, தீனா வார்த்தைகளற்று வேதனையாய் அவளையே பார்த்திருந்தான். இந்தப் பெண்ணின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணும் போதே கத்தியைக் கொண்டு இதயத்தை யாரோ ஓங்கி குத்தும் உணர்வு.

“தீனா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீயா டா?” என்ற சந்தனாவின் குரல் நலிந்திருந்தது. அழுததில் ஆற்றல் வடிந்திருக்க, அசையாதிருந்தாள்.

அவன் வார்த்தையில்லாது என்னவென பார்க்க, “இது... இது எதுவும் மனோவுக்குத் தெரிய வேணாம் தீனா. அவன், அவன் சந்தோஷமா இருக்கணும். தெரிஞ்சா அழுவான், வருத்தப்படுவான் டா. அவன் அழறதை என்னால பார்க்க முடியாது டா. அவன் அழுகைக்கு நான் காரணமா இருந்தா, என் மனசே என்னைக் கொன்னுடும் டா. அவன் உடைஞ்சுப் போய்டுவான். எங்கேயும் என் மனோ உடைய கூடாது. எப்பவும் நிமிர்வா இருக்கணும். உன்னையும் என்னையும் தவிர இது யாருக்கும் தெரியக் கூடாது தீனா...” என்றாள் தேம்பலாய். சொல்லி விடாதே என்ற இறைஞ்சல் குரலில் மண்டிக் கிடக்க, கையை அவன் முன்னே நீட்டினாள்.

“ப்ராமிஸ் பண்ணு தீனா...” என்றாள் குரல் அடைக்க‌.

அவளைப் பார்த்த தீனா, “நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணு குட்டி...” என்றான் கையை நீட்டி. அவள் என்னவென்பதாய்ப் பார்க்க, “நீ உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுப்பேன்னு ப்ராமிஸ் பண்ணு குட்டி?” என்றவன் பேச்சில் மீண்டும் இவளுக்கு விழிகள் உடைப்பெடுத்தன.

எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசுகிறாயே எனப் பார்த்த சந்தனா, “நீங்களாம் கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்றதால, நான் சிங்கிளா இருக்கது உனக்குப் பிடிக்கலையா தீனா?” எனக் கேட்டு மெலிதாய் சிரித்தாள். அந்தச் சிரிப்பு முழுவதும் விரக்தி நிரம்பி வழிந்தது. தீனா வேதனையோடு அவளைப் பார்த்தான்.

“ஏன் குட்டி இப்படி பேசுற. உனக்கு ஒரு வாழ்க்கை வேணும் டி‌. தனியா எத்தனை நாள் வாழ்ந்துடுவ?” எனக் கேட்டவன் குரல் முழுவதும் அவளுக்கானத் தவிப்பே கொட்டிக் கிடந்தது‌.

தலையை இடம் வலமாக அசைத்தவள், “இந்த ஜென்மத்துல மனோவைத் தவிர யாரும் என் வாழ்க்கைக்குள்ள வர முடியாது தீனா. என் மனோ, அவன் என் மனோ மட்டும்தான் டா. அவனை மறக்குறதை நினைக்க கூட முடியாது. அவனுக்கு நான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் தீனா‌. சாகுர வரைக்கும் அவனுக்காக காத்திருப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கேன் டா. அதை என்னால மீற முடியாது. நினைவு தப்புனதை தவிர அவன் மேல எந்த தப்பும் இல்லயே. என்னால அவனை வெறுக்கவும் முடியாது, அவன் மேல கோபப்படவும் முடியாது தீனா‌‌. இனிமேல் இதுமாதிரி பேசாத டா. கேட்கவே பிடிக்கலை..." என்றவள், "மனோவுக்கு மெமரி மிஸ்ஸாகாம இருந்திருந்தா இந்நேரம் நீ பேசுனதுக்கு உன்னை அடிச்சு வெளுத்திருப்பான் இல்ல?" எனக் கேட்டு நீள்விருக்கையில் சாய்ந்தவளின் வேதனையை சுமந்து வந்த விரக்தி சிரிப்பு அவள் வலியின் வாதையின் உச்சம். விழிகளை இறுக மூடினாள். இப்போதும் ஏன் மனோவிற்கு நினைவு தொலைந்தது என எண்ணி சிறுபிள்ளையாய் ஏங்கியழுதாள். ஏனோ அவளால் ஏற்கவே முடியவில்லை. இத்தனை நாட்கள் பொய்யாய் அரிதாரம் பூசியிருந்த நாட்களுக்கெல்லாம் இப்படியொரு விடுதலை கிடைத்திருக்க, அழுத்தம் மொத்தமும் மௌனமாய் கண்ணீரில் கரைந்தன. அவள்

முன்னிருந்த வெளிச்சம் மெதுவாய் மங்கத் தொடங்க, ஏதோ ஓர் உருவம் அங்கே சமீபிக்க, இருவரும் நிமிர்ந்தனர்.

மனோரஞ்சன், இங்கு நடந்த இத்தனைப் போராட்டங்களுக்கும் பாத்தியப்பட்டவன்தான் வந்து நின்றான். அவனை எதிர்பாராத இருவர் முகத்திலும் அதிர்ந்த பாவனை. சந்தனா விழிகளைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள். இவன் எதையும் கேட்டு விடக் கூடாதென அக்கணம் உலகில் உள்ள அத்தனை தெய்வத்திற்கும் அவள் வேண்டுதல் வைத்த நொடி, “குட்டி...” என்ற ஒரு வார்த்தையில் எதிரிலிருப்பவன் அவளது நம்பிக்கையை மொத்தமாய் உடைத்திருந்தான்.

எத்தனை ஆத்மார்த்தமான அழைப்பு. அவளின் மனோவிற்கு மட்டுமேயான அழைப்பு. பதினெட்டு வருடங்கள் கழித்து அந்தப் பெயரைக் கேட்கையில் சந்தனாவுக்கு உள்ளே உடைந்து உருகி வழிந்திருந்தது. தலையை இடம் வலமாக அசைத்து உதட்டைக் கடித்து கேவி வந்த அழுகையை அடக்க முயன்றவளின் முகம் அநியாயத்திற்கும் பாவமாய் எதிரிலிருப்பவனில் படிந்து தொலைத்தது. எங்கே விழிகளை சிமிட்டினால் அவன் மறைந்து விடுவானோ என அஞ்சியவள் தளும்பிய நீரோடு அவனைப் பார்த்திருந்தாள். என்னுடைய மனோ என்ற எண்ணமே அவளை உடைக்கப் போதுமானதாக இருந்தது.

“ஏன் டி?” எனக் கேட்டு அவளை இழுத்து இறுக அணைத்தவனில் சந்தனா மொத்தமாய் உடைந்திருந்தாள். இத்தனை வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள் என அவனுக்காய் காத்திருந்து கானல் நீராய் சென்றிருந்தவை எல்லாம் இந்நொடி இவனின் வார்த்தைகளில் சரணாகதி அடைந்திருந்தன.‌ சந்தனா மொத்தமும் சிதறியிருந்தாள்‌. முடியும் என்ற வார்த்தைகள் எல்லாம் இந்த மனோவிடம் மட்டும் தோற்றுப் போனது. விம்மித் துடித்த அழுகையில் குலுங்கிய உடலோடு சர்வ நிச்சயமாய் ரஞ்சனின் உயிர் மொத்தமும் நடுங்கிப் போயிருந்தது.

***

சந்தனா எதுவுமே பேசாது அவளுண்டு அவள் படிப்பு உண்டு என்பது போல கட்டிலில் அமர்ந்திருந்தாள். மனோ அவள் அருகே வந்ததையோ இல்லை தன்னை முறைத்துப் பார்ப்பதையோ ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை.

“நேத்து ஏன் குட்டி வரலை?” அவன் கோபமாய்க் கேட்க, அவளிடம் சில நொடிகள் மௌனம்.

“குட்டி... உன்னைத்தான் டி கேக்குறேன். பதில் சொல்லு...” அவள் புத்தகத்தைப் பிடுங்கினான். நிமிர்ந்து அவனை அனல் கக்கும் விழிகளால் பார்த்தவள், “வயித்தவலி மனோ... அதான் வரலை!” என்றாள் ஏனோ தானோவென்று.

“என்னாச்சு குட்டி.‌‌.. இப்போ வலி பரவாயில்லையா? டாக்டர்கிட்டே போனீயா? மாத்திரை சாப்டீயா?” என நொடியில் அவனது பாவனை மாறியிருந்தது. சந்தனாவும் கவனித்தாள். ஏனோ இவனிடம் சட்டென கோபம் வர மறுத்தது.

“ஏன் மனோ அப்படி சொன்ன?” எனக் கேட்டவளுக்கு விழிகள் கலங்கின.

“என்னாச்சு குட்டி... நான் என்ன சொன்னேன்?” அவன் முகம் சுருங்கியது.

“ஏன் என்னை லவ் பண்றேன்னு சொன்ன? என்னைக் காப்பாத்ததான் பொய் சொன்ன நீ. ஆனால் இது மட்டும் மிஸ்க்கு தெரிஞ்சா என்னாகும்‌. அம்மாவுக்குத் தெரிஞ்சா வெளுத்துடுவாங்க டா!” என்றாள் மெலிதாய் விசும்பியபடி. கோபம் வடிந்து அழுகை வந்தது பெண்ணுக்கு.

“குட்டி... ஏன், எதுக்கு நீ இப்படி அழற?” என அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன், “நான்... அது...” எனத் தயங்கியவன், “நான் பொய் சொல்லலை குட்டி. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. என் குட்டி எனக்கு மட்டும்தான் வேணும்!” என்றான் அவளது முகத்தைப் பார்த்து. காதலுக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அடிநாதம் கூட அறியாத வயதில் தன்னுடைய பொம்மை தனக்கு மட்டுமே என்ற மனநிலையில் இருந்தான் மனோ. அவனைப் பொருத்தவரை குட்டி அவனுக்குப் பாத்தியப்பட்டவள். அவளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் கிஞ்சிற்றும் இல்ல.

அவனது பேச்சில் சந்தனாவிற்கு விழிகள் மேலும் கலங்கின.

“மனோ... இப்படிலாம் பேசாத டா. அப்புறம் நான் இங்க வரமாட்டேன்!” என்றாள் கோபமும் அழுகையுமாய்.

“குட்டி... என் கேள்விக்குப் பதில் சொல்லு முத. நான் உனக்கு யாரு?” எனக் கடுப்புடன் கேட்டான். அவனை முறைத்தவள், “ப்ரெண்ட்...” என்றாள்.

“அப்போ சர்ஜூன் யாரு உனக்கு?” அவன் பேரைச் சொல்லும் போதே பல்லைக் கடித்தான்.

“அவனும் எனக்கு ஃப்ரெண்ட்தான் மனோ!” இவள் முறைப்புடன் கூறினாள்.

“அதான் குட்டி... அவனும் ஃப்ரெண்ட், நானும் ஃப்ரெண்டா உனக்கு. நான்... எனக்கு உன்னே ரொம்ப பிடிக்கும் குட்டி. நான் உன்னை நல்லா பார்த்துக்குறேன். என்னையே கல்யாணம் பண்ணிக்கோ டி.

எனக்கு நீ அவன் கூட பேசுறது பிடிக்கலை. இனிமே அவன் கூட சேராத நீ. பேசாத!” என்றான் தவிப்பாக.

“லூசு மாதிரி பேசாத மனோ. இப்போ இந்த மாதிரி பேசுறதெல்லாம் தப்பு. மிஸ் சொல்லி இருக்காங்க!” சந்தனா பதற்றத்துடன் கூறினாள்.

“குட்டி... இப்போவே கல்யாணம் பண்ணிக்க வேணாம். நம்ப பெரியவங்களான பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்...” என்றான்.

“அது அப்போ பார்த்துக்கலாம் மனோ!” அந்தப் பேச்சை கத்தரிக்க முயன்றாள் சந்தனா. அவளது முகத்தில் விருப்பமின்மை தெறித்தது.

“இல்ல... குட்டி என்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ ப்ராமிஸ் பண்ணு...” என அடமாய் கையை நீட்டினான் மனோ.

அதில் இவளது முகம் அதிர்ந்து பின் பயத்தில் வெளுத்தது. “மனோ... முடியாது. போடா, அதெல்லாம் பண்ண மாட்டேன். அம்மா யாரை சொல்றாங்களோ அவங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன் நான்!” என்றாள் மறுப்பாக.

“அப்போ என்னைப் பிடிக்காதா உனக்கு?” என்றவன் முகம் கசங்கிப் போனது.

“மனோ... உன்னை ரொம்ப பிடிக்கும் டா. ஆனால் கல்யாணம்... அது மட்டும் வேணாம் டா. அம்மாவுக்குத் தெரிஞ்சா முதுகே புண்ணாகிடும்!” என்றாள் பயத்துடன். பூரணி அன்றைக்கு அடித்த அடியே அவளுக்கு வாழ் நாளுக்கும் மறக்காது.

“ப்ம்ச்... புடிக்கும்னா என்னையே கல்யாணம் பண்ணிக்கோ குட்டி. அப்போதான் நீ என் கூடவே இருப்ப‌. நம்ப ரெண்டு பேரும் சேர்ந்தே இருக்கலாம்!”

“போ மனோ... இந்த மாதிரி பேசுன, நான் உன் கூட பேச மாட்டேன்...” என்றாள் சந்தனா பிடிவாதமாக.

“பேச வேணாம் குட்டி... பேசாத. நீ சர்ஜூன் கூட பேசு. நானும் உன்கூட பேச மாட்டேன். எப்போ நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு ப்ராமிஸ் பண்றீயோ, அப்போதான் பேசுவேன்...” என்றவன் கோபத்தோடு நகர, இவள் விழிகளில் வழியும் நீரோடு அவனைப் பார்த்தாள்.

“மனோ... ப்ளீஸ் டா. இந்த மாதிரி எல்லாம் பேசாத டா!” என்ற சந்தனாவின் குரல் காற்றில் கரைந்திருந்தது.

ஒரு வாரம் ஓடியிருந்தது. மனோ சந்தனாவிடம் பேசவே இல்லை. காலையில் மட்டைப்பந்து விளையாட சென்றவன், மாலை வேண்டுமென்றே வீட்டிற்குள் முடங்கினான். சந்தனாவைக் கண்டும் காணததுமாய் அவன் இருந்துவிட, இவளால் அப்படி இருக்க முடியவில்லை. மனோ என்ற ஒருவன் அவளது வாழ்வின் பெரும்பகுதியை எவ்வித முகாந்திரம் இன்றி ஆக்கிரமித்திருந்தான். இவள் அவ்வப்போது அவனிடம் பேச முயற்சிக்க, மனோ பிடி கொடுக்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றான். அவன் வழிக்கு சந்தனா வரும்வரை மனோ இறங்கிவரும் எண்ணம் உத்தமமாய் அவனுக்கில்லை என்பதே உண்மை.

வேண்டுமென்றே நீண்ட நேரம் விளையாடி கால் வீங்கிப் போய் வீட்டிற்குள் நுழைந்தவனைக் கண்டு சர்வ நிச்சயமாய் சந்தனா துடித்துப் போயிருந்தாள். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அவன் பள்ளி செல்லவில்லை. வீட்டில்தான் இருந்தான். ஆனாலும் இவளிடம் ஒரு வார்த்தையை உதிர்க்கவில்லை.

“மனோ... ஏன் டா இப்படி பண்ற. அறிவிருக்கா உனக்கு? ரொம்ப நேரம் நிக்க கூடாது. விளையாட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல. கால் வீங்கிப் போச்சு. ரெண்டு நாள் ஸ்கூலுக்கும் போகலை. படிப்பும் கெட்டுப் போகுது. ஒழுங்கா படி டா!” என்ற சதாவின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு சரசரவென கண்ணில் நீர் வழிந்தது.

இரண்டு நாட்கள் பின்னர் ஓரளவிற்கு கால் சரியானதுதான். ஆனாலும் மிதிவண்டியை அவனால் மிதிக்க முடியவில்லை. உமாநாதன் மகிழுந்தில் மகனை அழைத்துச் சென்றார். மாலை ஒரு தானி ஏற்பாடு செய்தார். மனோ வேண்டாம் எனத் தடுத்தும் பெற்றவர்கள் கேட்கவில்லை. கால் வலி நன்றாய் குறையும் வரை இப்படியே பள்ளிச் சென்று வரட்டும் என்று விட்டனர்.

அவன் வந்திறங்கியதும் எழுந்து நின்ற சந்தனா தவிப்பாய் அவன் முகத்தைப் பார்த்தாள். அருகே சென்று பேச முயற்சிக்கவில்லை. சதா அவனது பள்ளிப் பையை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, இவள் கண்ணீரைத் துடைத்தவாறே அவனைப் பார்த்தாள். சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன்,

உள்ளே சென்றுவிட, சந்தனா அமர்ந்துவிட்டாள்.

ஒரு வாரமாய் அவளால் சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எங்கு சென்றாலும் மனோதான் கண்முன்னே வந்து நின்றான். அவன் பேசவில்லை என்பது அவள் நாட்களின் பெரும் பகுதியை இழந்தது போலொரு எண்ணத்தை விதைத்திருந்தது.


   
ReplyQuote
VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

 

வகுப்பாசிரியர் கூட, “சந்தனா, என்னாச்சு? ஏன் லாஸ்ட் டெஸ்ட்ல ரொம்ப லோ மார்க் எடுத்திருக்க?” எனக் கேட்டிருந்தார். என்ன பதிலுறுப்பது எனத் தெரியாது அவள் விழிக்க, “நெக்ஸ்ட் டெஸ்ட் ஒழுங்கா பண்ணலைன்னா, உன் பேரண்ஸோடதான் வரணும்...” என்ற அறிவுறுத்தியிருக்க, அதில் இன்னுமே இவளுக்கு அழுகை வந்தது.
விசும்பிய படியே சந்தனா புத்தகத்தையே பார்த்திருந்தாள். விழிகளை மறைத்த நீர் எழுத்துக்களை மங்கலாக்க, அவளருகே வந்து அமர்ந்தான் மனோ. அவனைப் பார்த்ததும் கோபம் கொள்ள வேண்டும் என்றெண்ணியிருந்தவை எல்லாம் கானல் நீராகியிருந்தன.
“மனோ... கால் எப்படி இருக்கு டா?” என அவனது காலைப் பிடித்துப் பார்த்தாள். வீக்கம் சற்றே குறைந்திருந்தாலும், இன்னுமே அவனால் சரியாக நடக்க முடியாது தாங்கி தாங்கிதான் நடந்தான்.
“ஏன் மனோ இப்படி பண்ற? எதுக்கு ரொம்ப நேரம் க்ரவுண்ட்ல விளையாடின நீ? அறிவே இல்லையா உனக்கு? மத்தவங்க கூப்ட்டா உனக்கு சொந்தமா அறிவு கிடையாதா? எக்ஸாம் வேற வரப்போகுது!” என்றாள் அக்கறையும் கோபமுமாய். மனோவுக்கு இந்த அக்கறை நிரம்ப பிடித்தது. தனக்காக அவள் கண்ணீர் சுகித்தது. இத்தனை நாட்கள் சந்தனா அவனுடைய குட்டி. அவ்வளவுதான். அவள் அவனுடைய உடைமை என்றொரு எண்ணம். ஆனால், இப்போது சந்தனாவை அவன் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் வேறுபாடிருந்தது. ஈர்ப்பிற்கும் காதலுக்கும் இடையில் அவன் இளமனது ஊஞ்சலாடியது. இந்த அன்பும் அக்கறையும் வாழ் முழுவதும் வேண்டும் என்றொரு உந்துதல்.
அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவன், “குட்டி என்னைக் கல்யாணம் பண்ணிக்குறீயா?” எனக் கேட்டான். ஒரு வாரத்திற்கு முன்பு வெறும் அடம்தான் பிரதானமாய் இருந்தது. ஆனால் இப்போது உத்தமமாய் அப்படியில்லை. அன்பாய்க் கேட்டான், ஆசையாய்க் கேட்டான். நேசம் ததும்பியபடி அவளைப் பார்த்திருந்தான்.
தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாது மீண்டும் மீண்டும் அதையே சுற்றி வருகிறானே என வேதனையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சந்தனா. “ஏன் மனோ இப்படி பண்ற? இதை தவிர வேற எதுவும் பேசு டா!” என்றாள் அழும் குரலில்.
“முதல்ல நீ அழாத குட்டி. மூஞ்சியைக் கழுவிட்டு வா, போ...” என்றவன் காலை மெதுவாய் தூக்கி அமர முயற்சிக்க, சந்தனா குனிந்து அவனது காலைத் தூக்கி மேலே வைத்தாள்.
“ஓகே வா மனோ... தள்ளி உக்கர்றீயா? சாஞ்சுக்கோ!” என அவனைத் தாங்கி சாய்த்து அமர வைத்தவளின் மீது மனோவின் பார்வை வாஞ்சையாய் படிந்தது. என்னுடைய குட்டி என மனம் முழுவதும் தித்தித்தது.
முகத்தைக் கழுவிவிட்டு அவன் முன்னே அமர்ந்தாள் சந்தனா. அவளது கையைப் பிடித்தான் மனோ. அவள் கையை இழுக்கப் பார்க்க, “குட்டி... அமைதியா நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு. என்னைப் பிடிக்குமா? இல்லையா?” எனக் கேட்டான். அவளது தலை ஆமாம் என்பது போல அசைந்தது.
“எவ்வளோ பிடிக்கும்?” என அவன் விவன, சில நொடிகள் யோசித்தவள், “அது... ரொம்ப பிடிக்கும் மனோ. எவ்வளோன்னு தெரியலை. ஹம்ம், இந்த வானத்து அளவுக்குப் பிடிக்கும் டா!” என்றாள் தயங்கியபடி‌.
“லைஃப் லாங் என் கூட இருக்க உனக்கு ஆசையா இல்லையா ? நான் உன்கூட இப்படியே இருக்கணுமா? வேணாமா?” எனக் கேட்டான். ஆமாம் எனத் தலையை அசைத்தாள் அவள்.
“நமக்குப் பிடிச்சவங்க நம்ம கூட இருக்கணும்னா அவங்களை நம்ம கல்யாணம் பண்ணிக்கணும் குட்டி. நான் பெரியவனாகி உன்னைக் கல்யாணம் பண்ணிட்டா, உன்னை யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது டி. உனக்கு என்ன வேணுமோ நான் வாங்கித் தரேன். நீ டாக்டரானதும் நான் பெரிய ஹாஸ்பிடல் கூட கட்டித் தரேன் குட்டி. நீ என்கூடவே இருப்பீயா?” என்றான் உணர்வு பூர்வமாக.
அவனையேப் பார்த்த சந்தனா விழிகள் துளிர்த்தன. சில நொடிகள் தயங்கியவள், “வேணாம் மனோ... நான், அது என் அம்மாவுக்குப் பிடிக்காது டா!” என்றாள் தயங்கியபடி.
“குட்டி... நான் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்குப் போய்ட்டு ஆன்ட்டிகிட்டே வந்து பேசுறேன். கண்டிப்பா அவங்களை சம்மதிக்க வைச்சுடலாம்!” என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்கோடு.
“இல்ல மனோ... நீங்க... நீங்க பணக்காரங்க டா. நாங்க உங்க வீட்ல வேலைதானே பார்க்குறோம். உங்க அம்மாவுக்கு எங்களையெல்லாம் பிடிக்காது டா. நான் வீட்டுக்குள்ள வராததுக்கு அதான் காரணம். அம்மா கூட சொல்லி இருக்காங்க. உங்களுக்கு நிறைய சொத்து இருக்காம். உங்கப்பா பெரிய வேலை பார்க்குறாரு. இவ்வளோ பெரிய வீடெல்லாம் வச்சிருக்கீங்க. உங்க வீட்ல எதுவும் வாங்க மாட்டேன் நான். ஏன்னு உனக்குத் தெரியும் தானே. அம்மாவுக்கு உங்க வீட்ல எதுவும் சாப்பிட்றது பிடிக்காது டா. அப்போ எப்படி சம்மதிப்பாங்க...” என்றாள் தேம்பலாய். மரிக்கொழுந்து பேசும்போது ஒரு சிலமுறை மனோ வீட்டின் செல்வ செழிப்பை பற்றிக் கூறியிருக்கிறார்.
அதுவும் இல்லாது பூரணி கூட இவளுக்கு விவரம் தெரிந்ததும் சதா வேலைக்காரர்களை வீட்டில் உண்ண அனுமதிக்க மாட்டார். அவர்களுக்கென்று தனியாய் தட்டு வைத்திருப்பார். வேலை பார்க்கும் நம்மை போன்றவர்கள் அவர்களைப் பொருத்தவரை கீழானவர்களாகத்தான் மதிப்பார். அவர்கள் வீட்டில் எதையும் வாங்கி உண்ணக் கூடாது. நன்றாக படித்து முன்னேற வேண்டும். படிப்பு மட்டும்தான் நமது சொத்து. அதைப் பிடித்துக் கொண்டு உன்னுடைய வாழ்க்கையை நீ நன்றாய் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ முறை அறிவுறுத்தியிருக்க, இவளுக்குத் தங்களது நிலை புரிந்தது. சதாவின் குணமும் இப்போது நன்றாய் விளங்கியிருந்தது. அதனாலே தாய் சொன்னவை மனதில் ஆழப்பதிந்து போயின.
மனோ தன்னிடம் நட்பு பாராட்டுவதே சதாவிற்குப் பிடிக்கவில்லை என்று அவரது முக பாவத்திலே உணர்ந்திருந்தவள், அவர் முன்னே அவனிடம் அதிகமாகப் பேச மாட்டாள். சற்று முன்னே கூட அதனால்தான் தயங்கி நின்றாள். இதன் பொருட்டே சில சமயங்களில் அவளால் இயல்பாக இருக்க முடிந்ததில்லை.
“குட்டி... மனோ கிட்டே பேச்சைக் குறைச்சுக்கோ. நீ பேசி அரட்டையடிக்குறதாலதான் அவன் படிக்கலைன்னு அவங்கம்மா நினைச்சுடுவாங்க. ஒழுங்கா அங்க வந்து புத்தகத்தை எடுத்து வச்சு படிடி. உங்கப்பா போனப்புறம் கருமாயப்பட்டு உன்னை வளர்க்குறேன். ஒழுங்கா படி!” என அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். மகள் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதப் போகிறாள் என அவருக்கும் பயம் வந்தது. தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாள் சந்தனா.
மனோ அளவிற்கு தங்களிடம் பணமில்லை, சொத்தில்லை. ஏன் அவன் படிக்கும் பள்ளின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று அவளுக்கு நிறைய ஆசையிருந்தது. ஆனாலும் உள்ளே செல்ல விட மாட்டார்கள் என தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு வருவாள். அப்படியிருக்கையில் மனோவின் தாய் தன்னை எப்படி ஏற்றுக் கொள்வார் என அச்சிறு பெண்ணின் மூளை யோசிக்க கூடாதது அனைத்தையும் யோசித்தன.
பக்குவம் என்பது வயதைப் பொருத்தது அல்ல. வாழும் சூழ்நிலையை, வறுமையைப் பொருத்தது என்பதை சந்தனா நிரூபித்திருந்தாள்.
“லூசா டி நீ.‌. யார் இப்படியெல்லாம் உனக்கு சொன்னது?” மனோ கோபமாய்க் கேட்டான்.
“யாரும் சொல்லலை மனோ. எனக்குத்தான் தெரியுமே. உங்க வீட்ல கார், வீடியோ கேம், பெரிய டீவி எல்லாம் இருக்கு. உங்க வீடு எவ்வளோ பெருசா இருக்கு. இப்படியிருந்தா அவங்க பணக்காரங்கதானே. அப்போ நீங்க பணக்காரங்க மனோ!” என்றாள் குரலில் சற்றே நிராசை எட்டிப் பார்த்ததோ. அவளுக்கும் நிறைய ஆசைகள் இருந்தன.
மனோவுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாட வேண்டும், அவன் தந்தை வாங்கி வருவது போல பெரிய பெரிய இன்னெட்டுகளை வாங்கி உண்ண வேண்டும். மனோ போல கேட்கும் போதெல்லாம் தாய் காசு கொடுக்க வேண்டும். ஆசைப்பட்டதை வாங்கி உண்ண வேண்டும். அவளைப் போல நிறைய புது புது உடைகள் உடுக்க வேண்டும் என்று வயதிற்கு உரிய ஆசைகள் ஏராளம். எதையும் அவள் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. பூரணி ஓடியாடி வேலை பார்த்து தன்னைப் படிக்க வைப்பதற்கே கஷ்டப்படுகிறார் என மகளுக்குப் புரிந்தது. அதனாலே இப்போதெல்லாம் அது இது வேண்டும் என்று தாயிடம் அவள் அடம் பிடிப்பது இல்லை.
பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடை கிழிந்திருக்க, அடுத்த வருடம் புது உடை எடுத்து தருவதாகக் தாய் கூறியிருக்க, கிழிந்ததை தைத்துப் போட்டுக் கொண்டுதான் சுற்றுகிறாள். எங்கே மீண்டும் அது கிழிந்து விடுமோ என்ற பிரக்ஞை எப்போதும் அவளுக்கு உண்டு. இது போல நிலையெல்லாம் படித்தால் மாறிவிடும் என பூரணிக் கூறிய வார்த்தையைப் பற்றுக் கோலாகக் கொண்டு தீவிரமாகப் படிக்கிறாள். அப்படியிருக்கையில் சர்ஜூன் காதல் என்று வந்து நின்ற போது தன் படிப்பு கெட்டுவிடும் என மனம் முழுவதும் பயம்தான் படர்ந்தது.
ஆனால் மனோவிடம் சர்ஜூனிடம் காட்டிய கடுமையைக் காண்பிக்க முடியவில்லை. அவளுக்கும் மனோவை நிரம்ப பிடிக்கும். அவன் பேசவில்லை என்றால் அழுவாள். ஆனால் இதெல்லாம் அவளைப் பொருத்தவரை நட்பு என்ற வார்த்தையில்தான். அதற்கு மேலே யோசிக்க விருப்பமில்லை.
“இந்த வயசுல லவ் எல்லாம் சொல்ல நல்லா இருக்கும். ஆனால் படிப்பு கெட்டுப் போய் கஷ்டப்படும் போதுதான் எல்லாம் புரியும். உங்களோட வாழ்க்கை உங்க கையில்தான். காதல்னு வாழ்க்கையை இழந்துடாதீங்க!” என ஆசிரியர் கூறிய வார்த்தைகள் காதில் எதிரொலித்தன.
“குட்டி... இப்படிலாம் பேசாத முதல்ல. பணக்காரங்க, ஏழை அப்படிலாம் இல்ல. எல்லாரும் ஒன்னுதான். இது மாதிரி பெரிய வீடா உனக்கு நான் கட்டித் தரேன் குட்டி. படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதும் நான் வீடு கட்ட ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் உங்கம்மா கிட்டே வந்து பேசுறேன். நீ, நான், ஆன்ட்டி, என் அம்மா, அப்பா எல்லாம் ஒன்னா சந்தோஷமா இருக்கலாம் குட்டி. நான் அம்மாகிட்டே சொல்றேன். குட்டியைத்தான் எனக்கு பிடிக்கும், அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுவேன்!” என்றான் வேகவேகமாக. சந்தனா எதுவும் பேசாது அவனையே வெறித்திருக்க, மனோவுக்குக் கோபம் வந்தது.
“நீ ஒன்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை!” என அவன் விருட்டென்று எழ முயல, இத்தனை நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்ததில் காலில் ரத்தம் ஒட்டம் குறைந்திருந்து மதமதத்திருக்க, எழத் தடுமாறியவனைத் தாங்கிப் பிடித்த சந்தனா, “நான் உன்னை கல்யாணம் பண்ணக்கிறேன் மனோ!” என்றுவிட்டாள்.
அந்த வார்த்தையில் கடுகடுவென்றிருந்த மனோவின் முகம் மலர்ந்து விகசித்தது. “உண்மையா குட்டி... என்னைக் கல்யாணம் பண்ணிப்ப தானே?” எனக் கேட்டு பொத்தென அமர்ந்தான். அவள் தலையை ஆமாம் என்பது போல அசைத்தாள்.
“ப்ராமிஸ் பண்ணு குட்டி...” என அவன் கையை நீட்ட, “அதுக்கு முன்னாடி நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணு மனோ. இதுதான் இதைப் பத்தி பேசுற கடைசியா இருக்கணும். நீ படிச்சு நல்ல வேளைக்குப் போ. நானும் டாக்டராகுறேன்‌. அம்மா எனக்கு கல்யாணம்னு பேசும்போது நான் உன்கிட்ட சொல்றேன். நீ வந்து என் அம்மாகிட்ட பேசு. அதுவரைக்கும் இந்தப் பேச்சு வேணாம் டா!” என்றாள்.
“ப்ராமிஸா குட்டி...” யோசிக்காமல் சத்தியம் செய்தவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தனா தன்னுடன் இருப்பாளென்றால் ஆயிரம் சத்தியம் கூட செய்யலாம் எனத் தோன்றிற்று.
“அதே மாதிரி இனிமே நீ காலை பத்திரமா பார்த்துக்கணும். ஓடக் கூடாது. நிறைய நேரம் விளையாடக் கூடாது. டெய்லி என்னோட உக்காந்து படிக்கணும். நல்ல மார்க் வாங்கணும்!” என்றாள்.
“கண்டிப்பா குட்டி. நான் நல்ல மார்க் எடுப்பேன்!” என்றான் உறுதியாக.
‘சாரி மா... சாரி. மனோவை எனக்கு ரொம்ப பிடிக்கும் மா. அவன் கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியல. அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நான் அவனை நல்லா பார்த்துப்பேன் மா. உனக்குத் தெரியாம தப்பு பண்றேன். என்னை மன்னிச்சிடு மா!’ என மனதில் மானசீகமாக தாயிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மனோவின் கையில் தன் கையை சேர்த்தவள், “ப்ராமிஸா உன்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன் மனோ. உன்னைத் தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்!” என்றவளின் கரத்தை அழுத்திய மனோ சாகும்வரை அவளை விடக்கூடாது என உறுதியெடுத்திருந்தான். மனோவைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாதென சந்தனா அந்நொடி சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தாள். ஆம், அவளைப் பொறுத்தவரை அது சத்தியப்பிரமாணம்
தான்.
 
 
தொடரும்...

   
ReplyQuote

You cannot copy content of this page