All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 14

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

நெஞ்சம் 14

ஆதிக்கு பெண் பார்க்க வேண்டும் என்ற தகவலை தன் வீட்டு பெரியவர்களிடம் கூறினால் அவர்கள் நிச்சயம் இது கருத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாச்சி கூறி விடவே, அப்பொழுது தான் அதைப்பற்றி அப்பத்தா யோசித்தார்.

"நீ சொல்றது வாஸ்துவம் தான். வீட்டுல வயசுக்கு பொண்ணு இருக்கும் போது எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ண அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்ப தான் நான் புரியுது உதயனுக்கு கல்யாணம் பண்ணா நம்ம பேரனுக்கு கல்யாணம் பண்ணனும். ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. அதுக்கப்புறம் தான் மல்லிகா பையனுக்கு கல்யாணம் பண்ணனும். அப்ப நம்ம பேரனுக்கு சீக்கிரம் கல்யாண தேதி குறிச்சிட வேண்டியது தான். இன்னைக்கு ராத்திரியேவும் என் மகன் கிட்ட பேசிட்டு அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து புரோக்கர் வரச் சொல்லுவோம். அவர் கிட்ட எப்பவுமே கைவசம் பொண்ணுங்க போட்டோ ரொம்பவே இருக்கும். சீக்கிரம் பார்த்து சட்டுபுட்டுன்னு முடிச்சு வச்சுருவோம். அவனுக்கு வயசு வந்துருச்சுல. அப்பையாவது ஒழுங்கா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு பொண்டாட்டி நினைப்புல வர்றான்னு பார்ப்போம் "என்று பாட்டி கூறவே அப்பொழுது தான் மல்லிகாவுக்கும் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

"ஆமா அண்ணி ஏதோ உதயனுக்கும் ஆதிக்கும்  பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன் ஊருக்குள்ள பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயமா சண்டை போட்டு விட்டாங்களாமே, உங்களுக்கு எதுவும் தெரியுமா ?"

"எனக்கு எதுவும் தெரியாது உன் அண்ணன் கிட்ட வேணாம் நீ கேட்டு பாரு. ஆனா இதுக ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரிஞ்சு இருக்கிறது நல்லது தான் "

"நீங்க சொல்றதும் சரி தானே எப்ப பார்த்தாலும் இந்த ஆதிக்கு உதயன் தான் ஒசத்தியா போய்ட்டான். என் மகனை கண்டுக்கிடுறதே கிடையாது " பேசிக் கொண்டிருக்கும் போதே தென்னவன் வர, அவரிடமும் சிறிது நேரம் தங்கை பேசினார். 

பின் மதிய உணவினை முடித்துக் கொண்டு மல்லிகாவோ அவரின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

பெண்கள் மூவரும் சேர்ந்து பேசிய இந்த வார்த்தைகள் எல்லாம் தென்னவனுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தென்னவனும் சங்கரமணி அப்புச்சியும் ஒரே குணம் கொண்டவர்கள் தான்.

அன்றைய மாலை நேரம் போல் இங்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதால் கோவிலுக்குச் சென்று வரலாம் என நினைத்த அப்பத்தா பூக்கூடையை கரங்களில் எடுத்துக் கொண்டு ஆன்மீக சுற்றுலா செல்லும் பொழுது வாங்கி வந்த ஒரு சில கயறுகளையும் அதில் வைத்து, அறையை விட்டு வெளியே வந்தார்.

அந்த நொடி மருமகள் வாசலை சுத்தம் செய்து விட்டு உள்ளே வர,  "மருமகளே நான் கோவிலுக்கு போயிட்டு வரேன். இன்னைக்கு பிரதோஷம்ல. " என்க,

"சரிங்க அத்தை பார்த்து போயிட்டு வாங்க, மாமா கூட வரலையா நீங்க தனியாவா போறீங்க ?"

"அவர் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இன்னும் தூங்கிக்கிட்டு கிடக்காரு. எதுக்கு தூங்குற மனுஷனா உசுப்பே, அதனால நான் போயிட்டு வரேன் "

"சரிங்கத்தே, இது என்ன ஏதோ கயிறு எல்லாம் எடுத்துட்டு போறீங்க, அங்க சாமி பாதத்தில வைக்க போறீங்களா ?" என்று கேட்கவே,

"இல்லடி அங்க எனக்கு கோவில்ல தெரிஞ்சவங்க எப்பவுமே வருவாங்க. அவங்களுக்கு இதை கொடுக்கணும். போகும் போது நான் இன்னும் ஒரு மாசம் கிட்ட வர மாட்டேன்னு சொல்லிட்டு தான் வந்து இருந்தேன். இப்போ பார்க்கும் போது அப்படியேவும் கையில கொடுக்கணும்ல. அதனால தான் " என்றதும் இவரும் சரி எனக் கூற, வீட்டினை விட்டு வெளியேறினார்.

அப்படியே உண்ட உணவு செமிக்கிறதுக்கு மெல்ல பொடி நடையாக நடந்து கோவிலுக்கு சென்றார் அப்பத்தா.

மாலை ஆறு மணி அன்று பள்ளியில் இருந்து வந்த யுகனிகா குளித்து முடித்து கோவிலுக்கு சென்று வருகிறேன் எனக் கூறினாள். அவள் வழக்கமாக செல்வது தான் என்பதால் பொன்னியின் சரியென கூறினார்.

"நீ திரும்ப வரும் போது  இருட்டா இருக்கும்ல அப்பாவ கூப்பிட வர சொல்ற ? நீ தனியா எல்லாம் ஒன்னும் வர வேண்டாம் " என்றதும், அவளும் சரி எனக் கூறி வீட்டினை விட்டு வெளியேறி அப்படியே நடந்தவாறே கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் அபிஷேகம் இருக்கவே அப்பொழுது தான் கோவிலில் சற்று கூட்டமும் வந்துக் கொண்டிருந்தது. சரியான நேரத்திற்கு வந்து விட்டோம் என நினைத்து பரபரப்பாக வந்தவளோ தன் செருப்பினை வெளியே கழட்டி விட்டு உள்ளுக்குள் உள்ளே நுழைந்தாள்.

முதல் கடவுளாகிய பிள்ளையாரை வணங்கிக் கொண்டு திரும்ப அதே நேரம் சரியாக அவளின் முன்னே தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார் பேச்சியம்மாள் அப்புச்சி.  அவரைக் கண்டதும் இன்முகமாக அவரை நோக்கி வந்தாள்.

"பாட்டி ஆன்மீக சுற்றுலா போயிட்டு எப்ப வந்தீங்க ? நல்லா இருக்கீங்களா ?" என்கவே,

"வாம்மா வா உட்காரு கூட்டமா இருக்குல்ல. அதனால தான் இப்படி உக்காந்துட்டேன். நீயும் உட்காரு நாம பொறுமையா போய் சாமியை கும்பிடுவோம். என்னத்தா முகமே வாடி போய் ஏன் ஒரு மாதிரியா இருக்கு ? எப்பவுமே அப்படியே அந்த ஆத்தா மாதிரி அலங்கரிச்சி வந்து இருப்பியே.   இன்னைக்கு என்ன எதையோ இழந்த மாதிரி வந்திருக்கே " என்று அவளுக்கு ஏதோ மனதால் பிரச்சனை என்பதை பார்த்ததுமே வயதான அப்பத்தா கண்டு பிடித்து விட்டார்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல வேலை பாக்குற இடத்துல கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருக்கு.  இப்ப தானே ஸ்கூல் முடிச்சு வந்தேன். வந்ததுமே கிளம்பி இங்க வந்தேன். அவ்வளவு தூரத்தில் இருந்து நடந்து வந்தது கொஞ்சம் அலுப்பா இருக்கு அவ்வளவு தான் பாட்டி அப்புறம் சொல்லுங்க எப்படி போச்சு ? தாத்தா நல்லா இருக்காங்களா ? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க ?" என்றுக் கேட்கவே, அவரும் சிறிது நேரம் நலம் விசாரிக்க, இருவரும் பொதுவாக பேசினர். பின் பூஜை கூடையில் இருந்த ஒரு கயிறை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

"இந்தாம்மா இது ஒரு கோவிலில் பூஜை பண்ணி கொடுத்தாங்க இந்த கயத்த நம்ம கட்டிக்கிட்டா நமக்கு எந்த ஆபத்தும் வராதாம். நான் என் பேர பேத்தி எல்லாருக்குமே கொடுத்து இருக்கேன். நீயும் என் பேத்தி மாதிரி தான் ஒன்னு கட்டிக்கோ " என்றதும் சரி என வாங்கிக் கொண்டாள். அப்பொழுதே அவரின் முன்னே அதனை தன் கரங்களில் கட்டிக் கொண்டாள்.

யுகனிக்காவை பொறுத்தவரை பேச்சியம்மாள் அப்பத்தாவை அடிக்கடி உள்ளூரில் இருக்கும் கோவிலில் வைத்து சந்தித்திருக்கிறாள். ஆனால் அவர் எந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியாது. அவருக்கு கணவன் பிள்ளைகள் பேரன் என்று அனைவரும் இருக்கிறார்கள் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் ஆதியின் அப்பத்தா என்பது அவளுக்கு தெரியாத ஒன்று தான் விதியின் செயலோ என்னவோ !

"என் பேரன் கிட்ட இப்படித்தான்மா கையில கயிற கெட்டுடான்னு சொல்லி கொடுத்தா அவன் தங்கச்சி கிட்ட குடுத்துட்டு போயிட்டான். கட்ட மாட்டேன்னு சொல்லிட்டான். ஆனா நீ இருக்கியே உன்னை மாதிரி தான் இருக்கணும்.  பாரு பெரியவர்களை மதித்து நான் கொடுத்ததும் கட்டிட்டே. கவலைப்படாத உனக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும். சரி நேரமாச்சு நம்ம சாமியை கும்பிடுவோமா " என்றதும், அவளும் சரி என கூற பின் இருவரும் சேர்ந்து சாமியை வழிபட்டனர்.

நேரம் கடக்க இருவரும் ஒன்றாக தான் வெளியே வந்து சில தூரங்கள் நடந்து வந்தனர். பின் அவரவர் பாதையில் சென்று விட்டனர்.

பேச்சியம்மாள் பாட்டிக்கு அவள் எங்கு இருக்கிறாள் எந்த வீட்டில் வசிக்கிறாள் இங்கு பிழக்க வந்தவர்கள் என்பது எல்லாம் தெரியும். அவர் தான் ஒரு ஆளிடம் பழகுகிறார் என்றால் அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்தால் மட்டுமே பழகுவார். அப்படித்தான் தன் ஜாதி பெண் இல்லை என்றாலும் தன்மையாக பழகும் குணம் கொண்ட யுகனிகாவை பேச்சியம்மாள் பாட்டிக்கு பிடித்து விட்டது. அவர்கள் இருவரும் சந்தித்ததே இதே கோவிலில் வைத்து தான் ஒரு நாள் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது திடீரென பேச்சியம்மாள் பாட்டி தடுமாறா தாங்கிப் பிடித்தாள். அதிலிருந்து இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு வளர ஆரம்பித்தது. இவர்களின் வட்டார வழக்கில் அப்புச்சி அப்பத்தா என்று கூறுவார்கள். யுகனிகாவை பொறுத்தவரை பாட்டி தாத்தா என்று தான் அழைக்க வரும் அதனால பாட்டி என்று அழைத்து விடுவாள். பேச்சியம்மாள் அப்பச்சியும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாது அவள் எப்படி அழைக்கிறாரோ அப்படியே அழைத்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவார். தன்னை அப்பத்தா என்று அழைப்பதற்கு...

இரவு நேரம் போல் நாச்சி அனைவருக்கும் பரிமாற ஒன்றாகவே அனைவரும் உண்டனர். அங்கு ஆதி மட்டும் தான் இல்லாமல் போனான்.

நாச்சி ஒரு டிபன் பாக்ஸில் அனைத்தையும் பேக் செய்யவே, " யாருக்கு தான் சாப்பாடு கூட கட்டுக்கிட்டு இருக்கே ?"  என்று கேட்டார் அப்பத்தா.

"நம்ம ஆதிக்கு தான் அத்தை. அவனுக்கு இடியாப்பம் கறி குழம்புனா ரொம்ப புடிக்கும். எங்கடா இருக்க அப்படின்னு கேட்டேன் பண்ண வீட்டுல தான் இருக்கேன்னு சொன்னா. அதான் வேலைக்காரன் கிட்ட கொடுத்து விட்டேனா நல்லா சாப்பிட்டுவான் அதனால தான் அத்தை "

"நீ இப்படியே இடம் கொடு அவன் வீட்டுக்கு வர மாட்டேன். நீ சாப்பாடு கொடுக்காம இரு பட்டினியா கிடப்பான் வீட்டுக்கு வருவான். நீ வயிறு முட்ட மூணு தரத்தை இங்கிருந்து நீ அனுப்பி விட்டா அவன் எப்படி வீட்டுக்கு வருவான் " என்று தென்னவன் மனைவியை திட்டவே,

"டேய் அதுக்காக  அவன பட்டினியாவா போட முடியும் ?அப்பங்காரனா இருந்துக்கிட்டு என்னல பேசிக்கிட்டு இருக்கே ? அப்படி என்ன உங்களுக்குள்ள சண்டை.  ஆமா மல்லிகா கூட காலையில ஆதியும் இவனும் அடிச்சு சண்டை போட்டுக்கிட்டாங்க அப்படின்னு சொன்னாலே என்ன விஷயம் ? காலையில கேட்கணும்னு நினைச்சேன். பேச்சு வாக்குல மறந்து போயிட்டேன் " என்று அப்பத்தா கேட்கவே, நிகழ்மதிக்கோ புற ஏறியது.

"பார்த்து சாப்பிடுடி " என மகனின் தலையை தட்டியவாறு தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அவளும் அதனை பருகினாள். தன் அண்ணனின் காதல் விவகாரம் அப்பத்தா அப்புச்சி இருவருக்கும் தெரிந்தால் என்ன சொல்வார்களோ ? என்ற நினைப்பில் இருந்தாள்.

"அது ஒன்னும் இல்லம்மா வளர்ப்பு சரியில்ல அதனால தான் " என்று மனைவியைப் பார்த்து முறைத்தவாறு கூறினார்.

"ஐயோ இந்த மனுஷன் வேற அவங்க அம்மா முன்னாடி என்ன பார்த்து முறைச்சிக்கிட்டு சொல்றாரே இதுக்கு வேற இந்த அத்தை என்ன வசவு வைய போகுதோ தெரியல " மனதில் படபடப்போடு நாச்சி நினைத்து கொண்டு இருக்க,

"நீ இப்படி சொல்ற அளவுக்கு என் பேரன் என்ன தப்பு பண்ணுனான் " என்று அப்புச்சியும் கேட்க, இதற்கு மேல் மறைத்து என்னாகப் போகிறது இவர்களாலும் என்ன பண்ண முடியும் ? என்ற நினைப்பில் தென்னவன் அனைத்தையும் கூறினார்.

"என்னது என் பேரனா ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு திரியுறான். என் மருமகளே அப்ப நீ சொன்னது சரி தான் இவனுக்கு  ஒரு கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் அவனுக்கு அந்த வயசு வந்துருச்சுல. அந்த வயசு தான் அவன அப்படி பார்க்க வைக்குது. வேற ஒன்னும் இல்ல.  டேய் சீக்கிரம் ஒரு நல்ல புரோக்கர் வரச் சொல்லுடா முடிச்சு வச்சுருவோம் இல்லன்னு நினைச்சுக்கோயான் அவனாட்டி வேற ஜாதி புள்ளைய கூட்டிட்டு வந்துடுவான்

"அவன் காதலிக்கிறதே வேற ஜாதி புள்ள தான்  அதனால தான் உதயன் அவனை மிரட்டி வச்சிருக்கான். அதுவும் உதயனுக்கு தெரிஞ்ச பொண்ணை இவன் காதலிச்சா அவன் சும்மா விடுவானா. இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அந்த பிள்ளைக்கு சுத்தமா பிடிக்கலையா நானும் திட்டி வச்சேன். உடனே கோவிச்சுக்கிட்டு வீட்டுக்கு வராம கிடக்கான். ஆனா இப்ப அந்த பிள்ளை பின்னாடி சுத்தமா செய்யாம தான் இருக்கானாம் கேள்வி பட்டேன். சொல் பேச்சு கேட்டு தான் இப்ப நடந்துக்கிட்டு இருக்கா. ஆனா மதிக்காம கிடக்கிறான் அதனால தான் அப்பா அவன் மேல எனக்கு கோபமே."

"சரி விடு மகனே பருவ வயசு தானே சரியா போயிரும். கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம். " என்று இவர்கள் ஆதியின் விருப்பம் இல்லாமலே அவனுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாட்டினை துவங்க ஆரம்பித்து விட்டனர்.

கருத்துக்களை பகிர,

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/

 


   
ReplyQuote

You cannot copy content of this page