All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 15 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 15 💖

மணி பதினொன்றைக் கடந்தும் உறக்கம் விழிகளைத் தழுவாதிருக்க, அலைபேசி திரையில் கைகளை அலையவிட்டவாறு அதில் கண்களை ஓட்டினாள் சந்தனா. தலை வேறு வலிப்பது போலொரு எண்ணம். மறுபுறம் திரும்பிப்படுத்த மனோ அவள் மடிமீது தலையைப் புதைக்க, ஒரு கையை எடுத்து அவனைத் தட்டிக் கொடுத்தாள்.

நேரமுள்ளில் ஒருமுறை விழிகள் படர்ந்து மீற, குகாவிற்கு அவள் கடைசியாய் அனுப்பிய செய்திகளை பத்தாவது முறையாக எடுத்துப் பார்த்தாள். கடந்த இரண்டு வாரமாக சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ரஞ்சன் பிறந்த நாளன்று அவனிடம் பேசியது. அதற்கடுத்து குறுஞ்செய்திகளுக்கே பஞ்சமாகிப் போன, அழைப்புகள் அற்றுப் போனது. இவளாக அழைத்தாலும் அவன் ஏற்கவே இல்லை. 

அவ்வாறு ஏற்றாலும் இல்லாத ஒரு வேலையைக் கைக் காண்பித்து தவிர்த்துவந்தான். இவளுக்கு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதோ என அவன் செய்கையில் மனம் கனத்துப் போனது.

இரண்டு நாட்கள் முன்பு வரை செய்திகளைப் படித்தான். எதிர்வினையாற்றவில்லை. ஆனால், இப்போது செய்தி அவனை சென்று சேரவே இல்லை. வேலை பளுவாக இருக்குமோ? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என மனம் நிலையில்லாது அதிலே உழன்றது. பெருமூச்சோடு அவள் இணையத்தைத் துண்டிக்கச் செல்ல, “சந்தனா, ஆர் யூ அவேக்?” என ஷோபனாவின் இலக்கத்திலிருந்து செய்தி வந்துவிழ, இவள் அதைத் தொட்டு உள்ளே சென்றாள்.

“யெஸ் ஷோபி...” இவள் பதிலளித்ததும் அவள் அழைத்துவிட்டாள்.

“சாரி சந்தனா, இந்த டைம்ல உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” ஷோபனாவின் குரல் சோர்வாய் வந்தது.

“நாட் லைக் தட் ஷோபி... என்னாச்சு உங்களுக்கு? வாய்ஸ் டல்லா இருக்கே?”

“அது... லஞ்ச் ஹோட்டல்ல சாப்டோம் இல்ல. அது ஒத்துக்கலை போல. ஈவ்னிங்ல இருந்து ஒரே வாமிட்டிங். நானும் மேனேஜ் பண்ணிடலாம்னு பார்த்தேன். பட், முடியலை. சோ, உங்களுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!”

“அச்சோ... அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷோபி. இருங்க, டென் மினிட்ஸ்ல நானே வரேன்...” என்றாள் அன்பான அதட்டலிட்டு.

“இல்ல டாக்டரம்மா... நானும் அவரும் வரோம்!” என அவள் மறுக்க, “வேணாம், நான் சொல்றதை கேளுங்க. அலைய வேணாம். நானே வந்துட்றேன்!” சந்தனா முடிவாய்க் கூற, “ஓகே, நீங்க தனியா வர வேணாம். நான் ரஞ்சனை அனுப்புறேன். அவர் வந்து உங்களைக் கூட்டீட்டு வரட்டும்!” என்றாள்.

“ஓகே, அவரை அனுப்பிவிடுங்க!” என அழைப்பைத் துண்டித்த சந்தனா மருத்துவ உபகரணப் பெட்டியை எடுத்துக் கொண்டு கழுத்தைச் சுற்றி ஒரு துப்பட்டாவை எடுத்து அணிந்தாள். இரவு உடையாய் கால் சாராயும் மேல் சட்டையும் அணிந்திருந்தாள்.

ரஞ்சன் வருவதற்கு முன்பே கதவைத் திறந்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள். இந்த நேரத்தில் அழைப்புமணி ஒலித்தால் லட்சுமி அம்மாவும் மனோவும் எழுந்துவிடக் கூடுமென வாயிலில் நின்றாள். ரஞ்சன் வரவும் அவனைப் பார்த்து தலையை அசைத்தவள், கதவை மெதுவாகப் பூட்டிவிட்டு அவனுடன் படிகளில் நடந்தாள்.

ஷோபனா இவர்களுக்காக கூடத்திலே அமர்ந்திருந்தாள்.

சந்தனாவைப் பார்த்ததும் அவள் எழுந்து நிற்க, “ஷோபி, உட்காருங்க...” என அவளை இருக்கையில் அமர்த்திய சந்தனா அவளை பரிசோதித்தாள்.

இதயத்துடிப்புமானியை வைத்து இதயத் துடிப்பை சரி பார்த்தவள், அவளது கையைப் பிடித்து நாடியை சோதித்தாள்.

“வென் வாஸ் யுவர் லாஸ்ட் பீரியட்ஸ் ஷோபி?” மற்றவளின் கேள்வியில் ஷோபனாவின் மனம் கடைசியாக வந்த மாதவிடாய் நாளை கணக்கிட்டது. சரியாய் நினைவு இல்லை. மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்த்து நினைவு கூர்ந்தவள், இந்த மாதம் வரவேண்டிய மாதவிடாய் வரவேயில்லை என அப்போதுதான் உறைத்தது.

“ட்வென்ட்டி டேய்ஸ் ஆச்சு சந்தனா. பீரியட்ஸ் வரவேயில்லை. எனக்கு யூஸ்வலா இர்ரெகுலர் பீரியட்ஸ்தான். சோ, நான் அதை பெருசா எடுத்துக்கலை!” என்றாள் யோசனையாக.

“ஹம்ம்... யூ ஆர் பிரக்னென்ட் ஷோபனா. நீங்க அகைன் அம்மாவாகப் போறீங்க!” என்றாள் சந்தனா புன்னகையுடன். அதைக் கேட்ட மற்ற இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சிதான்.

“சந்தனா... நிஜமா வா? நல்லா செக் பண்ணீங்களா?” ஷோபி உறுதிப்படுத்தக் கேட்டாள். கடந்த ஒரு வருடமாக இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றொரு முனைப்பில்தான் இருந்தனர் தம்பதியர். இங்கு மாற்றலாகி வந்ததும் மனைவி தனியாய்க் கஷ்டப்படுவாள் என அவன் அந்த யோசனையை தள்ளி வைத்திருக்க, எதிர்பாராமல் உதித்திருந்தது இந்தக் கரு.

“நல்லா செக் பண்ணிட்டேன் ஷோபி. நாளைக்கு க்ளீனிக் வந்தீங்கன்னா, கன்பார்ம் பண்ணிடலாம். கங்கிராட்ஸ்!” என்றுரைத்த சந்தனா தன் பெட்டியில் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, வாந்தி நிற்பதற்கு மட்டும் ஒரு ஊசியில் மருந்தை ஏற்றினாள்.

“ரஞ்சன், உங்களுக்கும் என்னோட விஷ்ஸஸ். செகண்ட் டைம் அப்பாவாகப் போறீங்க!” என்றாள். ரஞ்சன் மனைவியை ஆசைத் ததும்ப பார்த்திருந்தான்.

சந்தனாவின் குரலில் கலைந்தவன், “தேங்க் யூ டாக்டர்...” உணர்ந்து நன்றியுரைத்தான்.

“ஷோபி... ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போட்றேன். வாமிட் ஸ்டாப் ஆகிடும். மார்னிங் ஹாஸ்பிடல் வாங்க, செக் பண்ணிடலாம்!” என்றவள் எழுந்து நிற்க, “சந்தனா... இன்ஜெக்ஷன் வேணாம். டேப்லெட் எதுவும் இல்லையா?” ஷோபனா பயந்த குரலில் வினவினாள்.

“ஷோபி... வலிக்காம நான் இன்ஜெக்ஷன் போட்றேன்!” என அவள் எழ, ரஞ்சன் மனைவியருகே வந்து நின்றவன் அவளது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.

ஒரு பக்க கையில் சந்தனா மருந்தை செலுத்த, ஷோபி கணவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுக்கு சந்தனா அருகில் இருக்கிறாள் என்ற எண்ணத்தை விட, ஊசிக்குப் பயம் அதிகம். அதுவே பிர்க்ஞை அற்றுப் போகச் செய்தது. கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

“ஒன்னும் இல்லடி... பயப்படாத!” என ரஞ்சன் வாஞ்சையாய் கூறி அவளுக்குத் துணையாய் நின்றான். சந்தனா ஊசியைக் குத்தியவள், நிமிர்ந்து இருவரையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, “ஷோபி, ஊசி போட்டாச்சு...” என்றாள் புன்னகையுடன்.

படக்கென கண் விழித்தவள், “சந்தனா, நிஜமா ஊசி போட்டுடீங்களா? வலிக்கவே இல்லை!” என்றாள் உற்சாகமாய். அவளின் பாவனையில் சந்தனாவுக்கு முறுவல் பிறந்தது.

“நான் நிஜமா டாக்டர்தான் ஷோபி... ரெண்டு டைம் டெஸ்ட் பண்ணிட்டீங்க!” எனக் குறும்பாய் உரைத்தவள் கிளம்ப யத்தனிக்க, ரஞ்சன் அவளைப் பத்திரமாய் வீடுவரை சென்று விட்டுவிட்டு வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்த சந்தனா கையிலிருந்த மருத்துவ உதவிப் பெட்டியை அப்படியே கீழே போட்டுவிட்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்தாள். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மெல்லிய விசும்பலாக மாறத் தொடங்கியது. இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தினாள். சரசரவென வழிந்த நீர் கரங்களை நனைத்தது. கத்தி அழவில்லை. ஆனாலும் அழுதாள். மனதின் வலிகளை மொத்தமாக கரைக்கும் நோக்கோடு அழுதாள்.

இப்படியொரு நிலையில் தன்னை நிற்க வைத்த கடவுளை எண்ணித் துக்கம் தொண்டையை அடைத்தது. இத்தனை நாட்கள் முடியும் என்று இறுமாந்திருந்த இதயம் சற்று முன்னே மொத்தமாய் உடைந்து சிதறியிருந்தது. சத்தியமாய் அதை ஒட்ட வைக்கும் எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை.

தேற்ற ஆளற்ற அழுகைதான். யாரும் வந்து தன்னை தேற்ற மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இன்னுமே விழிகள் உடைப்பெடுத்தன. ஏன் தனக்கு மட்டும் இப்படியொரு நிலை என எத்தனையோ நாட்கள் எண்ணி வருந்தியிருந்தாலும், தன்னை தானே தேற்றிக் கொள்ளுவாள். ஆனால், தைரியம் நிறைந்த, தன்னம்பிக்கை மிகுந்த எதையும் கடந்துவிடக் கூடிய பெண் நான் என அவள் எண்ணியிருந்தவை எல்லாம் சில நாட்களாக மெதுவாய் உதிரத் தொடங்கியிருந்தன.

இத்தனை நாட்கள் தேற்றி வைத்திருந்த இதயம் இப்போது ஆளற்ற இருள் சூழ்ந்த அமைதியில் தன் பாரத்தை இறக்கி வைக்கும் தோளொன்று வேண்டும் என ஆர்ப்பாட்டமின்றி கத்தி கதறியது. வழிகளை மூடினால் வந்து நிற்கும் பிம்பத்திடம் என்ன பேசுவது என்று அவளுக்குமே தெரியவில்லை.

பத்து வருடங்கள் வாழ்ந்த தவவாழ்க்கை எல்லாம் அவளைப் பார்த்து எள்ளி நகையாடின. நான் நன்றாய் இருக்கிறேன் என இத்தனை நாட்கள் பசப்பு வார்த்தைகளை உதிர்த்த உதடுகள் கூட அழுகையில் விம்மித் துடித்தன. அழுத்தமாக வாயைப் பொத்தினாள். விசும்பலில் தொடங்கிய அழுகை உடைந்து மெது மெதுவாக கேவலாக மாறத் தொடங்க, லட்சுமி எழுந்துவிடுவாரோ என மனம் அஞ்சியது.

வேண்டாமென தூக்கியெறிந்துவிட்டு வந்த மிச்சங்கள் எல்லாம் தன்னைத் தொடர, என்றோ சேமித்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இன்று மொத்தமாய் உடைந்தழுதிருந்தாள். பூரணி இறந்த அன்று நீரை உகுத்த விழிகள் அதற்குப் பின்னே அவளது கட்டுப்பாட்டில் வந்திருந்தது என எண்ணி ஏமாந்திருந்த நாட்கள் இன்று மொத்தமாய் அவளை வஞ்சித்துவிட்டன.

பத்து வருடங்களுக்கும் சேர்த்தொரு அழுகை. புறத்தூண்டல் மறந்து ஸ்மரயற்றுப் போனது இதயம். எத்தனைதான் தாங்கும் என் இதயம்? வலித்து வலித்து மரத்துப் போய்விடாதா? ஏன் இன்னும் இதற்கு வலித்து தொலைக்கிறது. என்னையும் சேர்த்து ரணப்படுத்தி சந்தோஷம் கொள்கிறதா என்ன? எனத் தேம்பினாள்‌.

எவ்வளவு நேரம் ஆனதென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். சுயம் பெற்றதும் தன்னிச்சையாக கால்கள் எழுந்து நிற்க, அறைக்குள் சென்று அவர்களது தூக்கத்தை கெடாதவாறு ஆணியில் மாட்டியிருந்த சாவியைக் கையிலெடுத்தாள். ஐந்து வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த அலமாரி. இதோ இப்போது மீண்டும் காயப்படுவோம் எனத் தெரிந்தே அதை திறந்தாள்.

பூரணியும் அவளும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். அப்படியே அந்தப் பையை எடுத்து வந்து நீள்விருக்கையில் அமர்ந்தாள்.

தாயின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “ஏன் மா... ஏன் மா என்னைத் தனியா விட்டுட்டுப் போன? நீ போகும் போதே என்னையும் கூட்டீட்டுப் போய்ருக்கலாம்ல மா. என்னால முடியலை மா. என்னால முடியலை. எல்லாத்தையும் மறந்துடலாம்னு நினைச்சேன் மா. ஆனால், முடியலையே மா!” என தேம்பினாள்.

“ம்மா... ப்ளீஸ் மா. ஒரு தடவை என் முன்னாடி வாங்கமா. உங்க மடியில படுக்கணும் மா. எனக்கும் யாரும் வேணாம். நீங்க மட்டும் போதும் மா!” எனக் கதறியவளின் கீழிமைத் தொட்டு மேழிமை வரைப் படர்ந்த உவர் நீர், புகைப்படத்தில் பட்டுத் தெறித்தன.

‘வேணாம்... அதை எடுக்காதே!’ என கட்டளையிட்ட மூளையைப் புறந்தள்ளி அந்தப் பையைத் தலைகீழாய்க் கவிழ்த்தினாள். மனோ! மனோ என்ற ஒற்றைச் சொல்தான் அந்தப் பை முழுவதும் நிறைந்து கிடந்தது. அவளுக்கும் அவனுக்கும் மட்டுமேயான உலகம். மீண்டும் குழந்தையாய் மாறிவிட மாட்டோமா என நினைத்து விசும்பினாள்.

‘ஏன் மனோ என்னைவிட்டுப் போன? ஏன் டா? ஏன் என்னைப் பார்க்க வரலை?’ எனப் பிதற்றியவள் பித்துப் பிடித்தது போல அமர்ந்திருந்தாள். இத்தனை நாட்கள் எல்லாவற்றையும் கடந்துவிட்டேன் என நினைத்திருந்த இதயம் இன்று மொத்தமாய் அவளுக்கு எதிராய் சதி செய்திருந்தது.

மனோவும் அவனது குட்டியும் அந்தப் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். அவனது முகத்தைத் தொட்டுத் தடவினாள்.

‘இல்லை... இப்போது அவளது மனோ இல்லையே! எங்கே தேடுவாள்? யாரிடம் சென்று கேட்பாள்? ஒவ்வொரு நாளும் இன்று மனோ வருவான். நாளை வருவான் என காத்திருந்த நாட்கள் எல்லாம் கானல் நீராய் சென்றிருக்க, யாரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதெனத் தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் தெரியாத இலக்கத்திலிருந்து அழைப்பு வரும்போது மனோ என உதடுகள் முணுமுணுக்க, உற்சாகத்துடன், “ஹலோ...” என்ற வார்த்தைகள் யாவும் மறுபுறம் அவனில்லை என்றதும் மொத்தமாய் அமிழ்ந்து போய்விட்டக் காலங்கள் எல்லாம், ‘கண்டிப்பா மனோ வருவான். எனக்காக வருவான்!’ என்ற சுயசமாதானத்தில், சுயதேற்றலில்தானே கடந்தன.

அவனுக்காகவென சேர்த்து வைத்த அன்பு மொத்தத்தையும் லாவகமாய் அவனிடம் கொட்டிக் கவிழ்க்கத் துடித்த இதயம் இறுதியில் காயம்பட்டு துடித்துப் போயிருந்தது.

நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்து அதில் தலை சாய்த்திருந்தாள்.

“குட்டி... எனக்காக வெயிட் பண்ணுவதானே டி. நான் படிச்சு முடிச்சுப் பெரிய பையனானதும் பூரணி ஆன்ட்டிகிட்டே கேட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். வெயிட் பண்ணுவீயா நீ?”

“நான்தான் ப்ராமிஸ் பண்ணிட்டேன்ல மனோ. உன்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...”

“எத்தனை வருஷமானாலுமா?”

“ஆமா... ப்ராமிஸ் பண்ணா அதைக் காப்பத்தணும் டா. நீ எப்போ வரீயோ, வா. நான் உனக்காக வெயிட் பண்றேன் மனோ...”

“என்னை எவ்வளோ பிடிக்கும் குட்டி?”

“ஹம்ம்... இவ்வளோ... இல்ல இல்ல, இந்த வானத்தளவு பிடிக்கும் மனோ...”

“வானத்துக்குத்தான் அளவே இல்லையே குட்டி!”

“ஆமா... அந்தளவுக்கு உன்னைப் பிடிக்கும் மனோ. உனக்கு?”

“ஹம்ம்... நீ சொல்லிட்ட. பட், நான் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குட்டி...” செவிகள் என்றோ சேமித்த நினைவுகளின் தாக்கத்தில், அது கொடுத்த வேதனையை இப்போதும் அவளுக்குப் பரிசளித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய காயத்தைக் கீறின.

எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள். தானும் அவனும் மட்டுமான ஒரு உலகம். அந்த உலகத்தில் ஒருவருக்கும் இடமில்லை. அவன், மனோ, மனோ மட்டும்தான். அவனை நிரப்பவெல்லாம் யாராலும் முடியாதே. அவனுக்கென கனவுகளை சுமந்து காத்திருந்த காலங்கள் எல்லாம் கரைந்திருந்தன.

இப்போது அதை நினைத்ததும் உதடுகளில் விரக்தி புன்னகை உதிர்ந்தது.

கண்ணை இறுக மூடிக் கொண்டாள். அனைத்திலிருந்தும் தப்பித்துப் போக வேண்டும். ஒரே ஒருநாள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பது அவளது பேராசை. ஆம், பேராசைதான். ஏனோ எல்லோருக்கும் இயல்பாய்க் கிடைத்த நிம்மதியான உறக்கம் கூட சந்தனாவிற்கு எட்டாக்கனியாகியிருந்தது.

விடியும் வரை ஒரு நொடி கூட இமைகள் அதன் இணையோடு சேராமல் போராட்டம் நிகழ்த்திவிட, கழுத்துவரை கூட தூக்கம் எட்டவில்லை என்பதே உண்மை. தன்னைப் போலவே இமைகளும் தனித்து நின்றுவிட்டன என எண்ணியதும் கசந்தது‌.

நேரத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். கைகள் நிழலாய் மாறிப்போன மனோவின் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்திக் கொண்டன. தவறென தெரிந்தும் அவளால் எளிதில் அவனைக் கடக்க முடியவில்லை. மடையை மாற்றிக் கொள்ளத் தயாராய் இருந்த இதயம் இப்போதும் மனோ விட்டுச் சென்ற இடத்திலே நின்று வாதம் செய்தது. அவன் கடந்து விட்டான். அவனுக்கென ஒரு பாதை, உலகம் என அவனுடைய வாழ்க்கை மொத்தமாய் மாற்றத்தின் மறுஉருவமாய் மாறியிருக்க, இவள் மட்டும் தாயைத் தொலைத்த சேயாய் அங்கேயே தேங்கிவிட்டாள்.

எங்கே செல்வது? யாரிடம் செல்வது? எனத் தெரியாது அழும் குழந்தையாய் மனம் அங்கேயே ஸ்தம்பித்துவிட்டது. எத்தனையோ பேரை தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகளால் மீட்டெடுத்த சந்தனா இன்று நிற்கதியாய் நிற்க, மீட்க ஒருவரும் இல்லையென்ற உபரித் தகவலை மனம் வழங்கியது போல. கசந்த முறுவலை உதிர்த்தாள். நேரம் ஆறைத் தொட பதினைந்து நிமிடங்கள் இருந்தன. லட்சுமி அம்மா எழுந்துவிடுவார் எனப் புறத்தூண்டலை கஷ்டப்பட்டுப் பிடித்து வைத்த மூளை அவளை முடுக்கிவிட, சிதறிக் கிடந்தப் பொருட்களைப் பார்த்தாள்.

அனைத்திலும் மனோவே நிரம்பியிருந்தான். அருகில் இல்லையென்றாலும் இதோ அவளுடன் ஜீவித்துக் கொண்டுதானே இருக்கிறான். துக்கம் தொண்டையை அடைத்தப் போதும் அனைத்தையும் எடுத்து பையில் வைத்து எடுத்த இடத்திலே பூட்டிவிட்டாள். ஏனோ, எடுக்கும் போது நடுங்கிய கைகளின் நடுக்கம் இப்போது எங்கு சென்றதென சந்தனா அறியாள்.

அவளுக்கும் அவனுக்கும் மட்டுமான நிஜங்கள், நிழல்கள் என எதையும் யாரிடமும் காட்சிப்படுத்த உத்தமமாய் அவளுக்கு விருப்பமில்லை.

கலைந்திருந்த முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள். இத்தனை நாட்கள் நன்றாக இருக்கிறேன் என அணிந்திருந்த மூகமுடி அரிதாரமின்றி மீண்டும் அவளது முகத்தை ஆக்கிரமிக்க, முகத்தை நீரால் அடித்துக் கழுவினாள். அழுகையோடு அவளது துக்கமும் அதில் அடித்துச் செல்லப்பட்டதென மனதை நம்ப வைத்துப் போராடினாள். இன்னும் ஒரு வாரம் மட்டும்தான் இந்த வலியும் வேதனையும்.

‘இங்கிருந்து செல்ல வேண்டும்!’ என்பதை மட்டுமே மனம் ஜெபித்துக் கொண்டிருந்தது. சிவந்த விழிகளை சிமிட்டி சரிபடுத்த முயன்றவளால் முடியாது போக, சோர்ந்த உடலை சுயதேற்றலில் மீட்க முயன்ற கணம், அழைப்புமணி ஒலித்தது.

இத்தனை விரைவாய் யார் வந்திருக்க கூடுமென எண்ணியபடி கதவைத் திறந்தாள். “சந்தும்மா...” என குகேஷ் பின்னிருந்து பாவனா குரல் கொடுக்க, பயணப்பையுடன் அவள் முன்னே நின்றிருந்தான் ஆடவன். அவனைக் கண்டதும் இத்தனை நேர சுயதேற்றல்கள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீரென வீணாக, வேக வேகமாய் விழிகள் நனைந்தன.

பளபளத்த விழிகளும் புன்னகைக்க முயன்று தோற்ற உதடுகளை இறுக்கிக் பிடித்து, “குகா...” என்றழைத்தவளின் குரல் சர்வ நிச்சயமாய் உடைந்து போனது. இத்தனை நேரம் யாருமில்லாத தனிமை சிறையில் தவித்திருந்த இதயம் எதிரிலிருந்தவனைக் கண்டதும், காயம்பட்ட குழந்தையாய் தாயிடம் அழும் சேயைப் போல அவனிடம் அழுது கரையச் சொல்லி உந்தியது‌ போல. 

 

***

விளக்கை உயிர்ப்பித்துவிட்டு வாசலை திறந்து வைத்த சந்தனா வெளியே ஒரு கண்ணும் புத்தகத்தில் மறுகண்ணுமாய் வாயிலருகே இருந்தால். மையிருட்டாய் இருட்டியிருந்த இரவு அவளை சற்றே பயப்பட வைத்தது உண்மை.

பூரணி வேலை முடித்து வர நேரம் எட்டறையைத் தொட்டிருந்தது. அவரது இருப்பை உணர்ந்ததும் சந்தனாவிடம் மெல்ல பயம் கரைய, அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.‌

“என்ன குட்டி... முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?” என வினவியவாறே அவர் உள்ளே வர, இவளும் எழுந்து கூடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

“தோசை ஊத்தவா, இட்லி சுடவா குட்டி?” எனக் கேட்டவர், காலையில் அரைத்து வைத்த மாவை சமையல் மேடையில் எடுத்து வைத்து, தண்ணீர் ஊற்றி அதை கலக்கியபடி வினவினார்.

“ம்மா... எதுனாலும் சரிதான் மா!” என்றாள் இவள் பிரக்ஞை இன்றி.

“குட்டி... என்னடி ரொம்ப யோசிக்கிற?” இவர் மகளைத் திரும்பிப் பார்த்து வினவ, சில நொடிகள் அவரை அமைதியாய்ப் பார்த்தவள், “ம்மா... அது, அது பழைய மாதிரி நானும் உன்கூட வரவா மா?” என்றாள் தயங்கியபடியே.

“ஏன் குட்டி... முன்ன மாதிரி நீ சின்ன புள்ளை இல்லடி. உன்னைக் கூடவே கூட்டீட்டுப் போனா நல்லா இருக்காது. வீட்லயே இரு...” பூரணி கூற,

“ம்மா... தனியா இருக்க பயமா இருக்கு மா. ரொம்ப இருட்டிடுது நீ வீட்டுக்கு வர. அதுவரைக்கும் தனியா இருக்கும்போது யாரோ இந்தப் பக்கம் போய்ட்டு வர மாதிரி இருக்கு மா...” என்றாள் அவர் முகத்தைப் பார்க்காது. பொய்யும் மெய்யும் கலந்துதான் உரைத்தாள்.

“என்ன... என்ன, எந்தப் பக்கம் குட்டி? யார் வர்றா?” பூரணி பதற்றத்துடன் வினவ, “தெரியலை மா. சத்தம் கேட்டுச்சு. பக்கத்தல பெரியம்மா வேற இல்ல. அதனாலே ரொம்ப பயமா இருக்கு...” என்றவள் குரலில் பயம் அப்பிக் கிடந்தது. தாயிடம் பொய் கூறுகிறோம், அவர் கண்டு பிடித்துவிட்டால் வெளுத்துவிடுவாரே என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

பூரணிக்கு மனதில் கவலைப் புகுந்தது. அவருக்குமே மகளை இரவு வீட்டில் தனியாய் விட மனதில்லை. மரிக்கொழுந்து காலை வேளையில் வீட்டில்தான் இருப்பார். இரவு நேரத்தில் இவரைப் பேலவே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வர தாமதமாகும். பக்கத்தில் வீடுகள் சற்றே தூரமாய் இருந்தன. இவர்களது இருவீடு மட்டும் ஒன்றாயிருக்க, மகளைத் தனியே விட வேண்டாம் என பயபந்து சுழன்றது. ஆண் துணையில்லாத வீடென்று அவருக்கு ஏற்கனவே அச்சம் அதிகம். 

 

இதில் சந்தனா கூறியது வேறு கற்பனைகளை வாரியிறைக்க, “குட்டி...சரி, நீ இனிமே எப்பவும் போல என்கூடவே வந்துரு...” என்றுவிட்டார் பூரணி. மகளின் பாதுக்காபின்மை ஒரு தாயாய் அவரை பயப்பட வைத்திருந்தது. கணவர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் கஷ்படத் தேவை இருந்திருக்காதே என இறந்து போன கணவரை எண்ணி அவருக்கு மனம் கனத்துப் போனது. அவரது வார்த்தைகளில் சந்தனாவிற்கு அத்தனை உவகையை அளித்தது.

மறுநாள் காலை வேளையில் பூரணி பணிக்கு கிளம்ப, சந்தனாவை அழைத்துக் கொள்ளவில்லை. மாலை மட்டும் பள்ளி முடிந்ததும் அங்கே வந்துவிடக் கூறினார். பகலில் தெரு எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம். அதிவும் இல்லாமல் மரிக்கொழுந்து காலையில் ஒன்பது மணிக்கு மேல்தான் பணிக்குச் செல்லுவார். அதனால் பயமில்லை என சந்தனாவை உடனழைத்துச் செல்லவில்லை. அவளும் மாலை வேளையில் மனோவைப் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டாள்.

காலையில் பூரணியின் குரல் கேட்டதும் மனோ விரைந்து வந்தான். அவரது பின்னே இவனது விழிகள் துழாவ, ஏமாற்றமே மிஞ்சியது. ‘குட்டி ஏன் வரலை. ப்ராமிஸ் பண்ணாலே. அதை அவ கண்டிப்பா காப்பாத்துவா!’ என மனம் அதிலே உழன்றது.

பள்ளிக்கு கிளம்பிச் சென்றுவிட்டான். மாலை கண்டிப்பாக குட்டி வந்துவிடுவாள் என மனோ உற்சாகத்துடன் வீடு வர, அவர்களது ஆஸ்தான இடத்தில் அமர்ந்து சந்தனா வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருந்தாள்.

“குட்டி... வந்துட்டீயா?” அகமும் முகமும் மலர்ந்து போனது மனோவுக்கு. வேக வேகமாக நடந்து வந்தவனைப் பார்த்து பதறிய சந்தனா, “மனோ... ஏன் டா இவ்வளோ பாஸ்டா வர்ற? மெதுவா நட...” எனக் கடிந்தபடியே அவனருகே விரைந்தாள்.

“கால் வலி எப்படி இருக்கு மனோ? இப்போ சரியாகிடுச்சா?” என அவள் பார்வை அவனது காலை சமீபித்தது.

“குட்டி... அதான் நீ வந்துட்டல்ல. என் கால் வலி சரியாகிடுச்சு...” அவன் புன்னகையுடன் கூற, சந்தனா அவனை முறைத்தாள்.

“ஒரு வாரமா உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டி...” என்றவன் உரிமையாய் அவளது தோளில் கையைப் போட, சந்தனாவிற்கு சட்டென ஏதோ அசௌகரியம் தொற்றிக் கொண்டது.

அவனது கையை நாசூக்காக எடுத்து விட்டாள். “என்ன குட்டி...?” என முறைத்து அவளருகே வந்தவன், மீண்டும் கையைப் போட முயல, “மனோ... இனிமே என்னைத் தொட்டுப் பேசாத டா!” என்றாள் தயங்கியபடியே.

“ஏன் குட்டி?” என அவன் கேள்வியாக நோக்க, “அது... அது வந்து நான் இங்க வரணுமா? வேணாமா?” என வினவினாள்.

“ப்ராமிஸ் பண்ணியிருக்க குட்டி நீ. கண்டிப்பா டெய்லி வரணும்!” மனோ குரலில் மெலிதான கோபம் எட்டிப் பார்த்தது.

“அப்போ என்னைத் தொடாம பேசு மனோ. அப்போதான் வருவேன் நான்!” என அவள் கூற, அவனும் சரியென்றுவிட்டான். மனோவுக்குப் புரிந்து தான் இருந்தது. முதலில் தாய் தந்தை கூறிய போது எதுவும் விளங்கவில்லை. ஆனால் அவனது வகுப்புத் தோழிகள் பூப்பெய்தியதைக் கேள்விப்பட்டிருக்கிறான். மாணவர்களுக்குள்ளே இதைப் பற்றிய பேச்சும் உண்டு என்பதால் மேலும் அவன் எதுவும் துருவித் துருவிக் கேட்காது தலையை அசைத்தான்.

ஒரு வாரத்தில் சந்தனா அழகாகிவிட்டதாய் அவனுக்குள்ளே ஒரு எண்ணம் தோன்றியது என்னவோ உண்மை. மஞ்சள் பூசியிருந்தாள். தலை நிறைய பூ வைத்தும் இருந்தாள். அதை அவளிடம் கூற வேண்டும் எனத் தோன்றினாலும், அந்த எண்ணத்தை தள்ளி வைத்தான்.

“குட்டி...இந்தா, இந்த அசைமெண்ட் மட்டும் செஞ்சு கொடு...” என சில தாள்களை அவளிடம் கொடுத்தான் மனோ.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னை இனிமே அசைமெண்ட் செய்ய சொல்ல மாட்டேன்னு நேத்து சொன்ன மனோ?” கேள்வி கேட்க, மனோ திருதிருவென விழித்தான்.

“அது... குட்டி, இன்னைக்கு ரெண்டு அசைமெண்ட் கொடுத்துட்டாங்க. அதான், எனக்கு கை வலிக்குது குட்டி. காலும் வலிக்குது. நிக்க முடியலை!” என அவளருகே அமர்ந்தான்.

“பொய் சொல்றீயா மனோ? இப்போதான் கால் வலிக்கலைன்னு சொன்ன?” என அவள் கேட்க, “அப்போ வலிக்கலை குட்டி‌. இப்போ நின்னுட்டே இருந்தது வலிக்குது. நீ எனக்கு அசைமெண்ட் எழுதி தருவீயா மாட்டியா டி?” என மெல்லிய கடுப்புடன் கேட்டான்.

“சரி... சரி. குடு, நானே எழுதி தரேன்!” என அவள் அவனது கால்வலி என்ற வார்த்தையிலே சரியென்றுவிட்டாள்.

“ஹம்ம்... இதை எழுது. நான் வரேன்!” என்றவன் உள்ளே சென்று உடைமாற்றி தன்னை சுத்தம் செய்து வந்தான். சதா அவனுக்கு குளம்பியையும் ரொட்டி துண்டுகளையும் கொடுத்தார்.

குளம்பியை ஒரு மிடறு பருகியவன் இடது கையால் ரொட்டியிருந்த கிண்ணத்தை எடுக்கச் சென்று பின்னர், வேண்டாம் என்று கையைப் பின்னிழுத்துக் கொண்டான். இப்போதெல்லாம் சந்தானவின் முன்னே தான் மட்டும் உண்ணுவது அவனுக்கு விருப்பமில்லாது போனது. அவள் அவனிடம் எதையும் வாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவன், அவள் முன்னே உண்பதை சிறிது சிறிதாக தவிர்த்தான்.

குளம்பிக் கோப்பையோடு அவளருகே அமர்ந்தான்.‌ “எழுதீட்டிட்டியா குட்டி?” எனக் கேட்க, “இன்னும் ரெண்டு பக்கம்தான் இருக்கு மனோ. எழுதித் தரேன்!” என்று அவனுடைய ஒப்படைப்பை எழுதி முடித்தவளை கெஞ்சியே மற்றொன்றையும் எழுத வைத்திருந்தான்.

பேச்சு மும்முரத்தில் மனோ அவளருகே அமர்ந்து விட, சந்தனா தள்ளியமர்ந்தாள். பின்னர் பூரணி வர, இவள் மனோவிடம் விடை பெற்றுக் கிளம்பினாள்.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page