All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 12 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 2 months ago
Posts: 16
Topic starter  

அன்பு – 12 💖

கட்டிலுக்கு மேல பெரிதாய் மாட்டப்பட்டிருந்த புகைப்படச் சட்டத்தில் பன்னிரெண்டு வயதான ரஞ்சன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனது தோளில் கையைப் போட்டவாரு நின்றிருந்தார் ஒரு பெரியவர். அது அவனுடைய தாத்தா. அவரது முகமும் மலர்ந்திருந்தது. இருவரது புன்னகையும் அத்தனையாய் உயிர்ப்புடன் இருந்தது. அவர்களுக்கு அருகில் வெள்ளை ரோஜா செடி அழகாய் மொட்டவிழ்ந்திருக்க, பின்புறம் அவர்களுடைய வீடிருந்தது. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், ஷோபனா, அஷ்வின், ரஞ்சனின் பெற்றோர் என அனைவரும் குட்டி குட்டியாய் பிம்பமாய் தெரிந்தனர்.

ஷோபனாவின் கடந்து சென்ற ஒரு வாரத்தின் காலையும் மாலையும் இந்தப் புகைப்படத்தில்தான் துவங்கி முடிவடைகிறது. சந்தனாதான் ரஞ்சன் பிறந்தநாளிற்கு இந்தப் பரிசை அளித்திருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. ரஞ்சனுக்கு கூட இந்தப் புகைப்படம் அத்தனை நிறைவை அளித்திருந்தது. அதுவும் அவனுடைய தாத்தா இறந்தப் பின்னர் அவரை அத்தனை தேடியிருக்கிறான் அவன். சென்னை வீட்டில் கூடத்தில் நுழைந்ததும் பெரிதாய் அவருடைய தாத்தா புகைப்படம்தான் இருக்கும். இங்கு இல்லையென மனம் எண்ணியிருந்தாலும், வேலை பளுவில் அவனால் அவரது புகைப்படத்தை சேகரிக்க முடியவில்லை. அந்தக் குறையை சந்தனா போக்கியிருந்தாள். 

 

வந்திருந்த பரிசுகளில் இதைவிட சிறந்தது ஒன்றுமே இருக்க முடியாது என்றளவிற்கு அந்தப் புகைப்படம் அவனது ஆழ்மனதில் பதிந்துபோனது. மனையிடம் கூட அத்தனை முறை தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தான். சந்தனாவிடமும் நன்றியைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தான்.

இவள் சந்தனாவிற்கு நன்றியை நவில்ந்து புலனத்தில் செய்தி அனுப்பியிருக்க, ஒருவாரமாய் அச்செய்தி படிக்கப்படாமலே இருந்தது. ஆம், ஷோபி சந்தனாவை சந்தித்து ஏழு நாட்கள் முடிந்திருந்தன.

ரஞ்சனின் பிறந்தாள் அன்று பார்த்ததோடு சரி, அடுத்தடுத்தாய் அவர்கள் சந்திக்க வாய்ப்பின்றி போனது. காலையில் மனோவை பள்ளிக்கு அனுப்ப லட்சுமி அம்மாதான் வந்தார். அவரிடம் இவள் விசாரிக்க, சந்தனாவிற்கு வேலை பளு அதிகம் என்று அவர் பதிலியம்ப, இவளும் சரியென்றுவிட்டாள்.

ஒரு வாரத்திலே மனம் கொஞ்சம் அவளைத் தேடியது. அப்போதுதான் சந்தனா எத்தனை தன் மனதிற்கு நெருக்கமாகி இருக்கிறாள் என இவள் உணர்ந்து கொண்டாள்.

அடுத்த வாரமும் அவளை சந்திக்க முடியாது போக, “லட்சுமி மா, எப்போதான் உங்க டாக்டரம்மாவைப் பார்க்க முடியும். ரொம்ப பிசியாகிட்டாங்க போல?” எனக் கேட்டுப் புன்னகைத்தாள்.

“இல்ல ஷோபி மா... சந்துவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். புள்ளை சுணங்கிப் போய்ட்டா. இன்னைக்குத்தான் கொஞ்சம் நல்லா இருக்கா. ஹாஸ்பிடல் கூடப் போகலை அவ...” லட்சுமி பதிலுரைக்க, “ஓ... சரிங்க லட்சுமி மா. நான் வந்து அவங்களைப் பார்க்குறேன்...” என அஷ்வினை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு அவருடனே சென்றாள்.

நாற்காலியைத் திருப்பிப் போட்டு அதன் விளிம்பில் தலை சாய்த்திருந்த சந்தனாவின் விரல்கள் அந்த வெள்ளைக் காகிதத்தை தடவின. ஒவ்வொரு முறை அதைத் தொடும்போதும் மனம் கனத்துப் போனது அவளுக்கு. அப்படியே பார்வையை ஜன்னல் வழியே பதித்தாள். மெதுவாய் மேகங்கள் கலைந்து செல்ல, இவளது மனதும் அதனோடு கலைந்து போனதொரு பிரம்மை. அப்படியே விழிஙள் தாழ்ந்து சாலையில் பதிந்தன. ஆங்காங்கு மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ஒருவாரமாக அவள் காலை நடைபயிற்சியை மறந்திருந்தாள். இல்லையில்லை, வேண்டுமென்றே மறுத்திருந்தாள் என்பதே தகும். ஏனோ எதிலுமே அவளுக்குப் பிடிப்பில்லாது போனது. மனம் நினைக்க வேண்டாம் என நினைத்தாலும் எதை எதையோ நினைத்து அவளை வருந்தச் செய்கிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது எனத் தவித்துப் போயிருந்தாள். பயமாய் இருந்தது, எங்கே மீண்டும் மோசமாய் உடைந்துவிடுவோமோ என்று? ஆறுதல் அளித்து அரவணைத்துக் கொள்ளும் குகேஷ் கூட இப்போது உடனில்லை என்ற உபரித்தகவலும் அவளை வருத்தப் போதுமாய் இருந்து விழிகளைத் தளும்பச் செய்ததது‌.

மீண்டும் பார்வை கையிலிருந்த காகிதத்தில் நிலைத்தது. மீண்டுமொருமுறை அதை எடுத்துப் படித்தாள். பணி மாற்றலுக்கான கடிதம். இரண்டு மாதங்கள் முன்பே அவளுடைய கை சேர்ந்திருந்தது.

“தேங்க் காட் டாக்டர், நீங்க ட்ரான்ஸ்பர் கேட்டதும் திருச்சில ஒரு வேகண்ட் காலியாகப் போகுது. இன்னும் ஃபோர் மந்த்ஸ் டைம். அதுக்குள்ள எப்போ வேணாலும் நீங்க அங்க ட்ரான்ஸ்பர் ஆகிடலாம். அதுக்கும் மேல டைம் எடுத்தீங்கன்னா, அந்த வேகண்ட் உங்களுக்கு இல்ல?” என தலைமை மருத்துவர் அவளிடம் கூறி கையெழுத்திட்டுக் கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. தினமும் அதை எடுத்துத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள். ஆனால் இன்னும் ஒரு வாரம் கடக்கட்டும், ஒரு மாதம் கடக்கட்டும் என மனம் இல்லாத காரணங்களைக் காண்பித்து அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் அவள் மனதிலிருப்பதை ஒருவரும் அறியார். இப்போது அதை ஒத்தி வைக்கும் எண்ணம் அட்சரசுத்தமாய் இல்ல.

‘இங்கே இருக்க வேண்டாம். கிளம்பிவிடு. இது உனக்கான இடமல்ல. அப்படியே தங்கினாலும், மனக்காயங்கள்

தான் மிஞ்சும்...’ என மனம் அவளை ஒவ்வொரு நாளும் கொன்று குவித்தது. பெருமூச்சோடு எழுதுகோலை கையிலெடுத்தவள் அதில் கையெழுத்துப் போட முனைய, “சந்தனா... என்னாச்சுங்க?” என்ற குரல் அவளுக்குப் பின்னிருந்து கேட்டது‌.

அந்தக் கடித்ததை நொடியில் மேஜையைத் திறந்து உள்ளே வைத்துப் பூட்டியவள், கண்களை சிமிட்டி உருண்டு திரண்டு நின்ற நீரை உள்ளிழுத்து, மற்றவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“டாக்டரம்மாவுக்கே ஃபீவரா? இப்போ எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவாறே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் ஷோபனா.

“யெஸ் ஷோபி... ஐ’யம் ஓகே. லைட்டா ஃபீவர். அவ்வளோதான்...” என மென்னகை புரிந்தாள்.

“பார்த்தா அப்படி தெரியலையே சந்தனா. முகம் ரொம்ப டல்லா இருக்கு. வெய்ட் லாஸ் பண்ண மாதிரி இருக்கீங்க. ஹோப் யூ ஆல்ரைட்?” எனக் கேட்டவளின் குரலில் உண்மையான அக்கறை கனிந்து வந்தது. ஆம், ஒரே வாரத்தில் சந்தனாவின் முகம் களையிழந்து போயிருந்தது. எப்போதும் பளிச்சென புன்னகைக்கும் உதடுகள் எங்கோ சென்று ஒளிந்து கொண்டன. கண்ணைச் சுற்றி கருவளையம் சூழ்ந்திருந்தது.

“ஷோபி... அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்...” என அவள் பதிலளிக்க, லட்சுமி ஷோபனாவுக்கு பழச்சாற்றை எடுத்து வந்து கொடுத்தார்.

“நல்லா கேளுங்க ஷோபிமா. நானும் கேட்டுட்டேன், என்னென்னு சந்தனா சொல்லவே மாட்றா!” பெரியவர் குரலில் வருத்தம் மேவியிருந்தது. ஒரு வாரமாய் சந்தனா அவளாகவே இல்லை என்பது போலொரு எண்ணம் அவருக்கு. துறுதுறுவென அங்குமிங்கும் நடந்து கொண்டேயிருக்கும் கால்கள் சில நாட்களாகவே அதீத ஓய்வில் இருந்தன. சாப்பாடு கூட அவள் சரியாய் உண்ணவில்லை என அவரும் கவனித்தார். என்னவென அவர் கேட்டும், அது இதுவென அற்பக் காரணங்களைக் அடுக்கிவிட்டாள் மருத்துவச்சி. அவராலும் ஒரு அளவிற்கு மேல் உரிமை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“டாக்டர் மேலயே கம்ப்ளைண்ட் வர்ற அளவுக்கு இருக்கா!” எனப் புன்னகைத்த ஷோபனா, “வேற எதுவும் ப்ராப்ளமா சந்தனா. உங்களுக்கு ஷேர் பண்ணணும்னு தோணுச்சுன்னா, என்கிட்ட பண்ணுங்க. உங்களோட மனசு ரிலாக்ஸாகும்...” என்றாள் அவளின் கையைப் பிடித்து ஆறுதலாக.

அதிராமல் புன்னகைத்த சந்தனா, “கண்டிப்பா ஷோபி, எனக்கு எதாவது பிரப்ளம்னா உங்ககிட்டேதான் ஷேர் பண்ணுவேன்!” என்றாள். லட்சுமி அம்மா பெருமூச்சுடன் அகன்றார்.

“சந்தனா... நீங்க கொடுத்த கிஃப்ட் அழகா இருந்துச்சு. அவருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆமா, அந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது. அவர் கூட யோசிச்சாரு, இது அவர்கிட்டயே இல்லாத போட்டோ?” இவள் வினவ, “அது... ஷோபி, ரஞ்சனோட ஃபேஸ்புக் அக்கவுண்ட்ல தான் இருந்து எடுத்தேன். ரொம்ப நாளைக்கு முன்னாடி அப்லோட் பண்ணியிருந்தார். அவர் மறந்திருப்பாரு...” என்றாள் சந்தனா.

“ஓ... பாருங்க, அவரே மறந்துட்டாரு. பட், அவர் சின்ன வயசுல இன்னுமே க்யூட் இல்ல?” ஷோபனா ஆசையாய்க் கூற, இவளது முகம் மெதுவாய் மங்கத் தொடங்கியது.

“ஹே சந்தனா... வொய்ட் ரோஸ் உங்களுக்கும் பிடிக்குமா? அவருக்கு ரோஸ்னா இஷ்டம். அதனாலே நான் பால்கனில கலர் கலர் ரோஸ் செடி வச்சிருக்கேன்...” என எழுந்து ரோஜா செடியருகே சென்றாள். சில நொடிகள் அமர்ந்த இடத்திலே இருந்த சந்தனா எழுந்து அவளருகே வந்தாள்.

“எத்தனை கலர் வாங்குனாலும் அவருக்கு வொய்ட் அண்ட் ரெட் மேலதான் இஷ்டம். டெய்லி எல்லா செடிக்கும் தண்ணி ஊத்தும்போது இதுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துப்பாரு. நான் கூட ஏன் இந்த பாரபட்சம்னு கேட்டு சண்டை போட்டிருக்கேன்!” என்றவளின் முகம் கணவனின் செய்கையில் கனிந்து போயிருந்தது. அவர்களுக்கிடையேயான செல்ல சண்டைகளில் இதுவும் பிரதானமான ஒன்றாகிற்றே.

“ஷோபி... இந்த வொய்ட் ரோஸ் நீங்களே எடுத்துக்கோங்க...” சந்தனா வெள்ளை நிற ரோஜா தொட்டியை இவளிடம் எடுத்து நீட்டினாள்.

“நோ... வேணாம் சந்தனா. ஆல்ரெடி எங்க வீட்லயே நிறைய ரோஸ் இருக்கு. இதை நீங்களே வச்சுக்கோங்க...” என்றாள் மறுப்பாய்.

“இல்ல ஷோபி, இப்போ எல்லாம் செடிக்கு தண்ணி ஊத்த மறந்துடுறேன். சம்டைம்ஸ் வாடிப் போய்டுது. என்னைவிட இந்த வொய்ட் ரோஸை நீங்க நல்லா பார்த்துப்பீங்க”

“அப்படியா சொல்றீங்க? ஹம்ம், சரி நானே எடுத்துட்டுப் போறேன்...” என அதை வாங்கிக் கொண்டவள், “ரெட் ரோஸ்க்கு தண்ணி வேணாமா டாக்டர்?” எனக் குறும்பாய் கேட்டாள்.

“ரெட் ரோஸ் இங்கேயே இருக்கட்டும் ஷோபி. அதுக்கு தண்ணி வேணும்னா, நானே ஊத்திக்கிறேன். வொய்ட் ரோஸ் உங்ககிட்டதான் இருக்கணும்...” எனப் புன்னகைத்தாள்.

ஷோபி சில நொடிகள் அவளது பேச்சு புரியாது விழித்துப் பின், “சந்தனா, இந்த வீக்கெண்ட் ஷாப்பிங் போகலாமா? உங்களுக்கு கம்பர்டபிளா இருந்தா மட்டும் போகலாம். கட்டாயம் இல்ல...” தயங்கிபடியே அவளை அழைத்தாள்.

“ஷ்யூர் ஷோபி, நானும் ஷாப்பிங் போகணும்னு நினைச்சேன். போய்ட்டு வரலாம்...” என்றாள். சில நிமிடங்கள் பேசிவிட்டு மற்றவள் நகர, லட்சுமி சந்தனாவை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.

“என்ன லட்சுமி மா, என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?” இவள் வினவ, “இல்ல சந்துமா, அந்த வெள்ளை ரோஜா செடி உனக்கு எவ்வளோ இஷ்டம். அதை இவ்வளோ நாள் பொத்தி பொத்தி வச்சிருந்த. மனோவைக் கூடத் தொட விட மாட்ட. இப்போ அந்தப் பொண்ணு ஷோபனாகிட்டே கொடுத்து விட்டுட்டீயேன்னு பார்க்குறேன் டா...” என்றார்.

“லட்சுமா, அந்த வொய்ட் ரோஸ் இங்க இருந்ததை விட ஷோபனா வீட்லதான் சந்தோஷமா இருக்கும். நான் அதை நேசிச்சதை விட, அவங்க ரொம்ப நேசிப்பாங்க, நல்லா பார்த்துப்பாங்க. அதனால வொய்ட் ரோஸ் அங்க இருக்கதுதான் சரி...” எனப் புன்னகைத்துக் கடந்தவளை லட்சுமி புரியாது பார்த்தார்.

‘என்னவானது இந்தப் பிள்ளைக்கு?’ என அவர் மனம் கவலை கொண்டது.

சோம்பேறித் தனங்களை உதறிவிட்டு குளித்து முடித்து மருத்துவமனைக்குப் புறப்பட்டாள் சந்தனா. மறக்காமல் அந்த பணிமாறுதல் கடிதத்தில் கையெழுத்திட்டு, அதையும் எடுத்துக் கொண்டாள்.

“வாங்க சந்தனா... இப்போ ஹெல்த் எப்படி இருக்கு?” தலைமை மருத்துவர் வினவ,

“யெஸ் மேடம், நல்லா இருக்கேன்...” என அவர் கை காண்பித்த இருக்கையில் அமர்ந்தாள்.

பின்னர் தன் கைப்பையில் இருந்து கடிதத்தை அவர் முன்பு நீட்டியவள், “ட்ரான்ஸ்பர் லெட்டர் அக்செப்ட் பண்ணிட்டேன் மேடம். இன்னும் டூ வீக்ஸ்ல நான் திருச்சிக்கு ஷிப்ட் ஆகிட்றேன்...” என்றாள்.

“ஓகே சந்தனா, நான் இன்பார்ம் பண்ணிட்றேன்...” என அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டவர், “உங்களை இந்த ஹாஸ்பிடல் மிஸ் பண்ணும் சந்தனா. உங்களை மாதிரி டெடிகேடட் ஸ்டாஃப் இனிமேல் கிடைக்க மாட்டாங்க..” என்றார். அவர் குரலில் உண்மையான வருத்தமிருந்தது.

“எல்லாருக்கும் ரீப்ளேஸ்மெண்ட் இருக்கும் மேடம். என்னைவிட பெஸ்டா ஒருத்தர் இங்க வருவாங்க பாருங்க. அப்பறம் நீங்களே என்னை மறந்துடுவீங்க...” என சின்ன சிரிப்புடன் வெளியேறினாள். 

 

***

திங்கட்கிழமை காலை சந்தனா, பூரணி தலையைப் பின்னிவிட்டதும், “ம்மா.‌.. ரோஜா வச்சுவிடு மா...” என ஆசையாய் வெள்ளை ரோஜவை நீட்டினாள். தொட்டியில் நான்கு ரோஜாக்கள் இருக்க, ஒன்றை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

மனோவிடம் காண்பிக்க வேண்டும் என்று மனம் முழுவதும் அவா கொட்டிக் கிடந்தது. சதா வீட்டிற்குச் சென்றதும், “மனோ... வெள்ளை ரோஸ் எப்படி இருக்கு? நல்லா இருக்கா எனக்கு?” ஆசையாய்க் கேட்டாள்.

“சூப்பரா இருக்கு குட்டி... இனிமே டெய்லி ரோஸ் வச்சுக்கோ நீ!” அவனும் ஆர்ப்பாட்டமாய்க் கூறினான்.

“தேங்க்ஸ் மனோ. இன்னொரு ரோஸ் செடி மேஜிக் போட்டு வர வைக்குறீயா நீ? இதுல நாலு ரோஸ்தானே இருக்கு. எப்படி டெய்லி வச்சுட்டு வர முடியும்?” என யோசனையாகக் கேட்டாள் சந்தனா.

“குட்டி... ஒன் டைம்தான் மேஜிக் பண்ண முடியும். மறுபடியும் பண்ணா, அது பலிக்காது. ஒரு மாசம் கழிச்சுதான் பண்ண முடியும்.‌‌..” என அப்போதைக்கு வாய்க்கு வந்தப் பொய்யைக் கூறிவிட்டான்.

“அப்படியா... அப்போ சரி மனோ, நீ அடுத்த மாசம் மேஜிக் பண்ணி எனக்கு ரோஸ் குடு...” என அவள் சமாதானமாகிவிட்டாள்.

“மனோ... தக்காளி சோறு கொண்டு வந்திருக்கேன். உனக்கு வேணுமா?” இவள் அவனிடம் கேட்டவாறே டப்பாவை வெளியே எடுத்து வைத்தாள்.

“இல்ல குட்டி... உனக்கு மதியத்துக்கு வேணும்ல. நான் சாப்ட்டா, அப்புறம் உனக்கு பசிக்குமே!”

“மனோ, அம்மா இன்னைக்கு ரெண்டு டப்பா சோறு குடுத்துவிட்டாங்க. நீ ஒன்னு எடுத்துக்கோ...” என அவள் நீட்ட, இவன் அதை வாங்கி உண்டான்.

“என்ன குட்டி, உங்க வீட்டு சோறு இவ்வளோ பெருசா இருக்கு. எங்க வீட்டுல சின்னதா தான் இருக்கும்...” மனோ வினவ, சந்தனா தன் தாயிடம் ஏற்கனவே இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள். பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களின் வீட்டு சோறு சிறிதாக இருக்கிறதே என வினவ, அவர் பதிலளித்திருந்தார்.

அதை நினைவு கூர்ந்தவள்,

“மனோ... நான் சின்னபிள்ளையா இருக்கேன் இல்ல. பெரிய சோறு சாப்ட்டாதான் பெருசா வளருவேனாம். சின்ன அரிசி சோறு சாப்ட்டா இப்படியே இருந்துடுவேன்னு அம்மாதான் சொன்னாங்க...” எனப் பாவனையாய்க் கூறினாள் இவள்.

“குட்டி... அப்போ நான் பெரிய பையனா வளர மாட்டேனா? எங்க வீட்டு அரிசி சின்னதா இருக்கே...” என இவன் எழுந்து நிற்க, சந்தனாவும் அவனருகே வந்து நின்றாள். அவன் இவளை விட உயரமாய் இருந்தான்.

“மனோ... நீதான் ஏற்கனவே பெரிய பையனா இருக்கீயே. அதனால சின்ன அரிசி சோறே சாப்பிடு. நான் பெரிய அரிசு சோறு சாப்ட்டு, உன் ஹைட்டுக்கு வந்துடுறேன். ரெண்டு பேரும் ஒரே ஹைட்ல இருப்போம்...” என அவள் கூற, அவனும் ஒப்புக்கொண்டான்.

அவன் உண்டு முடித்ததும் டப்பாவைக் கழுவி வைத்தவள், “மனோ... இங்கிலீஷ் மிஸ் டெஸ்ட் வைப்பேன்னு சொன்னாங்க‌. எனக்கு எதுவுமே புரியலை. எதாவது கேட்டா, மிஸ் க்ளாஸ் கவனிக்கலைன்னு திட்டுறாங்க. நீ சொல்லித் தரீயா?” எனப் புத்தகத்தை விரித்து வைத்தாள்.

“சரி குட்டி... நானே சொல்லித் தரேன்...” என இவன் அவளுக்குப் புரியும்படி விளக்கினான். சந்தனாவிற்கு அப்போதும் தெளிவாய்ப் புரியவில்லை. சரியென்று கேட்டுக் கொண்டாள்.

அந்த வாரம் முழுவதும் சந்தனாவுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற, மாலை முழுவதும் படித்தாள். மனோ அவளுக்கு உதவினான். சிறிது நேரம் விளையாட்டிற்கு ஒதுக்கினர்.

அந்த வாரயிறுதி தீனா வந்துவிட்டான். பத்து நாட்களுக்கு அவனுக்குத் தேர்வு விடுமுறை கிடைத்திருந்தது. சந்தனாவிற்கும் பள்ளி விடுமுறைதான். மூவரும் சேர்ந்து விளையாடினர்.

தீனா வரும்போது வீட்டிலிருந்து அவளுக்கு விளையாட்டுப் பொருட்கள், இன்னெட்டுகள் என நிறைய எடுத்து வந்திருந்தான். இவள் ஏதோ பொய்க் கூறி அது எதையும் வாங்கவில்லை. அவன் கோபித்துக் கொள்ள, ஒருவழியாய் சமாதானம் செய்து முடிய, மூவரும் கண்ணைக் கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாண்டனர்.

ஒருமுறை சந்தனா கண்ணைக் கட்டிக் கொள்ள, மறுமுறை தீனா கண்ணைக் கட்டிக் கொண்டான்.

“குட்டி... இப்போ மனோ கண்ணைக் கட்டலாம்...” தீனா அவனருகே செல்ல, “தீனா... மனோவுக்குப் பதிலா நானே கண்ணைக் கட்டிக்கிறேன். அவன் பாவம், கால் வலிக்கும். எங்கேயும் கால் இடிச்சிடும்!” என இவளே அவனுக்குப் பதில் கண்ணைக் கட்டிக் கொண்டாள்.

மறுமுறை தீனா கண்ணைக் கட்டவில்லை. “குட்டி... மனோக்கு பதிலா நீதானே கண்ணைக் கட்டிக்கிட்டே. இப்போ எனக்குப் பதிலாவும் நீயே கட்டிக்கோ...” என்றான் அவன்.

“தீனா... போ, நான் மாட்டேன்!” கையிலிருந்த துணியை அவனை நோக்கி எறிந்தாள் சந்தனா.

“குட்டி, அப்போ அவன்தானே உன் ஃப்ரெண்ட். அவனுக்காக மட்டும்தான் நீ செய்வ. நான் உன் ஃப்ரெண்ட் இல்லையா?” அவன் கோபம் கொள்ள, சந்தனா விழித்து நின்றாள்.

“தீனா... பாவம் குட்டி. எத்தனை தடவை கண்ணைக் கட்டுவா. இந்த டைம் நீ தான் கட்டணும்!” என மனோ சந்தனாவிற்கு ஆதரவு தெரிவித்தான்‌.

“நீ போ டா... நான் குட்டிட்டதான் கேக்குறேன். உனக்கு பதிலா பண்ணால்ல. எனக்கும் பதிலா அவளே கண்ணைக் கட்டிக்கிடட்டும்...” தீனா அடமாய் நிற்க, மனோ அவனை முறைத்துப் பார்த்தான். 

 

தன்னால் சண்டை வேண்டாம் என நினைத்தவள், “விடு மனோ... நானே கண்ணைக் கட்டிக்கிறேன்...” எனத் துணியை எடுத்து வந்து தீனாவிடம் கொடுத்தாள். அவன் இவளது கண்ணை இறுக கட்டிவிட்டான்.

சந்தனா அங்கிங்கு தேடி மனோவின் கையைப் பிடித்தாள். “அவுட்டே... மனோ அவுட்டே...” என அவள் கூறிக் கொண்டே கண்கட்டை அவிழ்க்க, “குட்டி... போதும். போய் உக்காரலாம்!” என்றான் அவன்.

“என்னாச்சு மனோ... கால் வலிக்கிதா உனக்கு. வா, நம்ப உக்காரலாம்...” என அவனை கொட்டகைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தியவள், அவன் காலை மெதுவாகப் பிடித்துவிட்டாள்.

சில நிமிடங்களிலே அவளருகே அமர்ந்த தீனா, “குட்டி... எனக்கும் கால் வலிக்குது. என் காலையும் அமுக்கிவிடு...” என அவள் மடியில் காலைத் தூக்கி சட்டமாய் வைத்தான்.

“தீனா... அவ மேலருந்து காலை எடு. குட்டி உனக்கு காலை அமுக்கிவிட மாட்டா...” மனோ வெடுக்கென அவனது காலைத் தட்டிவிட்டான்‌

“குட்டி... எனக்கு காலை அமுக்கிவிடுவீயா? மாட்டீயா?” அவன் இவளிடம் கோபமாகக் கேட்க, “அவ அமுக்கிவிட மாட்டா...” என மனோவே பதில் கொடுத்தான்.

“குட்டி... உனக்கு மனோவை மட்டும்தான் புடிக்குமா? அவனுக்கு மட்டும்தான் காலை அமுக்கி விடுவியா?” தீனா கோபமாய்க் கேட்டான்.

“தீனா...இல்ல, இல்ல. உனக்கும் காலை அமுக்கிவிடுறேன்...” என அவள் பதிலளிக்க, மனோ அவளைத் தன்புறம் பிடித்திழுத்தான்.

“குட்டிக்கு என்னை மட்டும்தான் புடிக்கும். எனக்கு மட்டும்தான் அவ காலை அமுக்கிவிடுவா...” அவன் தீனாவைப் பார்த்து கூற, அவனுக்கு ரோஷம் வந்துவிட்டது.

“குட்டி... மனோவுக்கு முன்னாடி நான்தானே உனக்கு ஃப்ரெண்டானேன். அப்போ என்னைதானே உனக்கு ரொம்ப பிடிக்கும். அவனைப் புடிக்காதுதானே?” பொறாமையாய்க் கேட்டான். சந்தனா அவர்கள் இருவரையும் பார்த்து என்ன செய்வதெனத் தெரியாது தவித்துப் போய் நின்றாள்.

“தீனா, மனோவையும் புடிக்கும். உன்னையும் புடிக்கும். ரெண்டு பேரும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் தான்...” என அவள் கூற, “அப்போ எனக்கு காலை அமுக்கிவிடு...” என அவள் மடிமீது காலை வைத்தான்.

“குட்டி... அவனுக்கு காலை அமுக்கிவிட்டா, நான் உன் கூடப் பேச மாட்டேன். உனக்கு மேஜிக் பண்ணி ரோஸ் வர வைக்க மாட்டேன்!” மனோ கோபமாய்க் கூறினான்.

“குட்டி... கால் ரொம்ப வலிக்குது எனக்கு...” தீனா இடைபுக, “மனோ... பாவம் தீனா. அவனுக்கும் கால் வலிக்கும்ல. நான் அமுக்கி விட்றேன்...” என இவள் அவனது காலை அமுக்கிவிட, மனோ சட்டென எழுந்து கோபமாய் நடக்கத் தொடங்கினான். சந்தனா அவனைக் கவலையாகப் பார்த்தாள். அவள் தன்னைத் தொடர்ந்து வரவில்லை என்பதை உணர்ந்த மனோ வேண்டுமென்றே காலைக்

கல்லில் இடித்துவிட்டான்.

அப்படியே அவன் கீழே விழுந்துவிட, சந்தனா பதறிக்கொண்டு அவனருகே சென்றாள். “ஐயோ... மனோ, என்னாச்சு மனோ. என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல. ஏன் தனியா நடந்த மனோ. ரொம்ப வலிக்குதா?” என இவள் கண்களில் சரசரவென நீர் கோர்த்தது. தீனா கூட ஓடிவந்து அவனது காலை ஆராய்ந்தான்.

“ஆ... வலிக்குது குட்டி... கால் இடிச்சிடுச்சு...” என மனோ கூற, சந்தனா அவனை மெதுவாய் அழைத்துச் சென்று அமர வைத்துக் காலை எடுத்துப் பார்த்தாள்.

“எங்க வலிக்குது மனோ?” அவள் கவலையாய்க் கேட்க, “இங்க... இங்க, அப்புறம் இங்க கூட...” என வலிக்காத இடத்தைக் கூட காண்பித்தான். அவள் மெதுவாக அவனது காலைத் தடவிக் கொடுத்தாள். தீனா சற்று முன்னே நடந்த சண்டையை மறந்துவிட்டான்.

“மனோ, ரொம்ப வலிக்கிதா டா. நான் போய் அத்தையைக் கூட்டீட்டு வரவா?” என அவன் வினவினான்.

“இல்ல தீனா... இப்போ வலி குறைஞ்சுடுச்சு...” என்றவனுக்கு சந்தனா தீனாவுக்கு உதவுவது பிடிக்கவில்லை. அவள் தன் தோழி, தனக்கு மட்டுமே வேண்டும் என்கிற உரிமை உணர்வு இப்படி நடந்து கொள்ள வைத்திருந்தது.

அதற்குப் பின்னர் தீனா சந்தனாவுடன் சண்டை போடவில்லை. மனோவின் காலில் அடிபட்டிருப்பதால், அவனே விட்டுக்கொடுத்துப் போனான். 

 

பத்து நாட்கள் விரைவில் ஓடிவிட, “குட்டி... நெக்ஸ்ட் எக்ஸாம் லீவுக்கு வரேன்...” என அவன் விடைபெற்றான். மனோ அவனுக்கு சந்தோஷமாய்க் கையை அசைத்து அனுப்பிவைத்தான். இனிமே சந்தனாவை சொந்தம் கொண்டாட ஒருவரும் வரமாட்டார்கள் என்கிற அற்ப சந்தோஷம் அவனுக்கு முளைத்தது.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page