All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

13. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 3 months ago
Posts: 24
Topic starter  

தலை தீபாவளியைக்  கொண்டாடி முடித்த பின்னர், அதற்கு மறுநாளே தன் மாமியார் வீட்டிற்குக் கிளம்ப முடிவெடுத்த ஆரவியிடம்,”ஏன்டி எங்களை இப்படி கஷ்டப்படுத்துற? நீ தானே எப்போடா நம்ம வீட்டுக்கு வருவேன்னு இருக்கு, எப்போ வந்து என்னைக் கூட்டிட்டுப் போவீங்கன்னு எல்லாம் கேட்டியே? அப்படியிருக்கும் போது உன் புருஷனே நாளைக்குக் கிளம்பலாம்னு சொல்லியும் நீ இன்னைக்கு ஊருக்குப் போறேன்னு அடம் பிடிக்கிற? இதெல்லாம் நல்லா இல்லைடி!” என மகளிடம் போராடிக் கொண்டிருந்தார் சோமசுந்தரி. 

 

“என்னையே எப்போ பார்த்தாலும் திட்டுங்கம்மா. அண்ணனை எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க! அதனால் தான் கிளம்புறேன்னு சொல்றேன்” என்று அடம் பிடிக்கவும், 

 

“அவனை என்னடி சொல்ல சொல்ற?” என்றவரை முறைத்தவள், 

 

“நான் இங்கே வந்த அன்னைக்கு ஒன்னு நடந்துச்சே? அதை மறந்துட்டீங்களா? அண்ணா பேசியதை எல்லாம் மறந்தாச்சு போலவே?”என்று அவரிடம் இரைந்தாள் மகள். 

 

அவள் போட்ட சத்தத்தில் அங்கே வந்த மகுடபதி,”நாங்க எதையும் மறக்கலை ஆரு. நேத்து நானும், திவ்யனும் கறிக்கடைக்குப் போயிருந்தோமே? அப்போவே அவன் கிட்ட எல்லாத்தையும் பேசிட்டேன்” என்றவுடன், 

 

“அப்படி என்னப் பேசினீங்க? எங்ககிட்ட சொல்லவே இல்லையே?” என்றார் சோமசுந்தரி. 

 

“திவ்யன் வீட்டில் இருந்ததால் சொல்லலை” என்ற தந்தையிடம், 

 

“அதான், அண்ணாவும், அவரும் வெளியே கிளம்பிப் போயாச்சே? இப்போ சொல்லுங்கப்பா” எனக் கூறினாள் ஆரவி. 

 

முன்தினம் தனக்கும், திவ்யனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை அவர்களிடம் ஒப்புவித்தார் மகுடபதி.

 

அதைக் கேட்டவுடன் தான் சோமசுந்தரிக்கு நிம்மதியாக இருந்தது.

 

ஆனால், ஆரவிக்கு இன்னும் மனம் ஆறவில்லை. 

 

ஆகவே,”அப்பவும் கூட நீங்க அந்தப் பிரஹாசினியைக் கல்யாணம் செய்யக் கூடாதுன்னு சொல்லலையேப்பா? அண்ணாவுக்குச் சாதகமாகத் தான் பேசி இருக்கீங்க” என்றவளைக் கூரிய பார்வையால் துளைத்தார் மகுடபதி. 

 

“என்னப்பா?” என்க, 

 

“அவனோட வாழ்க்கையில் நீ ஏன் முடிவு எடுக்கிற ஆரு? வாழப் போறது அவன்? அப்படி இருக்கும் போது, அவன் தனக்குப் பிடிச்ச பொண்ணுக் கூட வாழ விருப்பப்படுறதில் என்னத் தப்பு இருக்குன்னு நீயே சொல்லு?” என்றவரிடம், 

 

“அவ நம்ம வீட்டுக்கு ஏத்தப் பொண்ணு இல்லைப்பா” என்று பழைய பல்லவியையே பாடினாள் மகள். 

 

“அதை அவ கூடப் பழகாமலேயே நீ எப்படி முடிவு பண்ணுவ?” என்று அவளிடம் குரலை உயர்த்திக் கேட்டார் தந்தை. 

 

அவர்களது உரையாடல் சண்டையில் முடிந்து விடக் கூடாது என்று எண்ணிய சோமசுந்தரியோ,“ஏங்க!”எனக் கணவரை அழைத்தார். 

 

“இரும்மா. இதைப் பத்தி இப்போவே பேசி முடிச்சிடலாம்” என்றவர், 

 

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு ஆரு”என்று மகளிடம் வினவினார் மகுடபதி. 

 

“அது வந்துப்பா… எனக்கு அவங்களைப் பிடிக்காது” என்றாள் மெல்லிய குரலில். 

 

உடனே,”உனக்குப் பிடிக்கலைன்னா அவனுக்கும் பிடிக்கக் கூடாதா என்ன?” என்று கேட்டார் அவளது தந்தை. 

 

“அவங்களை உங்களுக்கும், அம்மாவுக்கும் கூடப் பிடிக்காதுப்பா” என்றவுடன், 

 

“அதை நீ எப்படிம்மா முடிவு பண்ணலாம்? எங்களைப் பத்தி எல்லாமே உனக்குத் தெரியுமா என்ன?”என்ற வினாவை எழுப்பினாலும் தனது கோபத்தைக் காட்டி விடக் கூடாது என்று எண்ணியவரின் குரலில் அவ்வளவு நிதானம்.

 

“அப்பா” என்றவள் அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறினாள் ஆரவி. 

 

“அந்தப் பொண்ணு கூட நீ பழகவே இல்லாதப்போ, அவளைப் பத்தின ஜட்ஜ்மெண்ட்டை வைக்கிறதும், அதை நாங்க எல்லாரும் கூட ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறதும் நியாயமான்னு நீயே யோசிச்சுப் பாரும்மா”என்று அவளுக்கு விளக்கினார் மகுடபதி. 

 

அதில் மௌனத்தைக் கடைபிடித்த மகளிடம்,”அப்பா சொல்றதையும் நீ சிந்திச்சுப் பார்க்கிறதில் என்னத் தப்பாகிடப் போகுது ஆரு?”என்ற தாயை வெறித்துப் பார்த்து விட்டு, 

 

“சரிம்மா” என்றவள், 

 

“நீங்க சொல்றதையும் நான் யோசிக்கிறேன்ப்பா” என்று கூறி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஆரவி. 

 

“அந்தப் பொண்ணு மேல் இவ வச்சிருக்கிற இந்த எண்ணம் மாறவே மாறாதா சுந்தரி?” என்று வருத்தத்துடன் வினவினார் மகுடபதி. 

 

“அதெல்லாம் அந்தப் பொண்ணு நம்ம மகனைக் கட்டிக்கிட்டு வந்ததுக்கு அப்பறம் அவளும், ஆருவும் சிநேகிதிங்களாக மாறிடுவாங்க பாருங்க” என்று அவருக்கு உறுதி அளித்தார் மனைவி. 

 

இதே சமயம், கடைத்தெருவுக்குச் சென்றிருந்த திவ்யனும், ரஞ்சித்தும், இரண்டு இனிப்புப் பெட்டிகள் மற்றும் சில வகைப் பழங்களையும் வாங்கிக் கொண்டனர். 

 

“என்ன முடிவு எடுத்துருக்கீங்க?”என்ற தங்கையின் கணவனிடம்,

 

“அது தான் எனக்கும் தெரியலை மாப்பிள்ளை. நேத்து அப்பா கேட்ட கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியலை” என்றதும், 

 

“அப்படி என்னக் கேட்டார்?” என்றவுடன், தந்தையின் கேள்வியை அவனிடம் உரைத்தான் திவ்யன். 

 

“ஓஹோ, அவர் கேட்கிறதும் ஒரு வகையில் நியாயமாகத் தான் இருக்கு” என்றான் ரஞ்சித். 

 

“ஆமா மாப்பிள்ளை”

 

“நான் ஒரு ஐடியா கொடுக்கவா?” என்றவனைக் கேள்வியாகப் பார்த்தான் திவ்யன். 

 

“அதான், அந்தப் பொண்ணை நம்ம ஆருவுக்குத் தெரியுமே? அவகிட்டே அவங்களைப் பத்திக் கேட்டுப் பாருங்களேன். அட்லீஸ்ட் அவங்க எந்த ஊருன்னு உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்கு”எனக் கூறவும், 

 

“அதை நானும் யோசிச்சேன் தான் மாப்பிள்ளை. ஆனால், அவளுக்குத் தான் பிரஹாசினியைப் பிடிக்காதே! அப்பறம் எப்படி அவகிட்டேயே போய் உதவி கேட்கிறது?” என்று அவனிடம் கேட்டான். 

 

“உங்க தங்கச்சி தானே? பேசிப் பாருங்க. உங்க பக்கத்து நியாயத்தைச் சொல்லிப் புரிய வைங்க. அவளும் ஹெல்ப் பண்ண வாய்ப்பு இருக்கு!” என்ற ரஞ்சித்திடம்,

 

“அப்படிங்குறீங்க? சரி. பேசிப் பார்க்கிறேன்” என்று கூறினான் திவ்யன். 

 

“அப்பறம் நான் தான் இந்த ஐடியாவைக் கொடுத்தேன்னு அவகிட்டே சொல்லிடாதீங்க!” என்று எச்சரிக்கவும், 

 

அதில் புன்னகைத்தவன்,”நிச்சயமாக சொல்ல மாட்டேன் மாப்பிள்ளை” என அவனுக்கு வாக்களித்தான். 

 

தாங்கள் இருவரும் வீட்டிற்குள் நுழையும் போதே ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தனர் இருவரும். 

 

எப்போதும் தாயும், மகளும் ஹாலில் அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இப்போது அவ்விடமே வெறுமையாக காணப்பட்டது. 

 

அதேபோல், அங்கே மகுடபதி மட்டுமே டிவி பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு,”என்னப்பா வீடே ரொம்ப அமைதியாக இருக்கு? ஆருவும், அம்மாவும் எங்க?” என்றான் திவ்யன். 

 

“உங்கம்மா சமைக்கிறாங்க. ஆரு ரூமில் இருக்கிறா” என்ற தந்தையிடம், 

 

“சரிப்பா” என்றவன் சமையலறைக்குச் செல்ல, தன் மனைவியைத் தேடிப் போனான் ரஞ்சித். 

 

அவனைக் கண்டதும்,”நாம நாளைக்கே ஊருக்குப் போகலாம்ங்க” என்றாள் ஆரவி.

 

“ஏன் என்னாச்சு?”

 

“நான் இன்னைக்குச் சாயந்தரமே கிளம்பலாம்ன்னு சொன்னதைக் கேட்டு அப்பாவும், அம்மாவும் சங்கடப்பட்டாங்க. அதான்” எனப் பதிலளித்தாள் அவனது மனைவி. 

 

“ஓஹோ, சரிம்மா. உன் இஷ்டம். நான் அப்பாவுக்குக் கால் செஞ்சு சொல்லிடறேன்” என்று அவளிடம் கூறி விட்டான் ரஞ்சித். 

 

ஆரவி,“அண்ணா கூட வெளியே போயிட்டு வந்தீங்களே? உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா?” 

 

“ஆமாம் சொன்னார்” 

 

“என்ன சொன்னாரு?” என்ற மனைவியிடம், தாங்கள் இருவரும் பேசியதை அவளிடம் கூறி முடித்தான் ரஞ்சித். 

 

“என்னங்க நீங்க? என்னைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சும் அண்ணா கிட்ட இப்படி சொல்லி வச்சிருக்கீங்க?”என்று அவனிடம் பொரியத் தொடங்க, 

 

“அவரும் உங்கிட்ட ஹெல்ப் கேட்கிறது நடக்காத காரியம்னு சொன்னாரு தான்”என்றவுடன், 

 

“அதெப்படி எங்கிட்ட கேட்காமலேயே என்னைப் பத்தி அவர் இப்படி சொல்லலாம்?”என்ற மனைவியை அயர்வாகப் பார்த்தவனோ,

 

”வேற எப்படி சொல்லனும்னு நினைக்கிற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயே அப்படித் தானே பேசின? அப்பறம் என்ன?” என்றான் ரஞ்சித். 

 

அதற்கு மறுமொழி கூறாமல் இருந்தவளிடம்,”ப்ளீஸ் ஆரு. அந்தப் பொண்ணு மேலே இருக்கிற வெறுப்பை ஒதுக்கி வச்சிட்டு அவங்களைப் பத்தி உனக்குத் தெரிஞ்ச விவரங்களை அவர்கிட்ட சொல்லும்மா” என்று வேண்டிக் கேட்டுக் கொள்ளவும், 

 

சில நிமிட யோசனைகளுக்குப் பின்னர்,”சரிங்க. அவங்களைப் பத்தின டீடெயில்ஸ்ஸை நாம ஊருக்குக் கிளம்புறப்போ அண்ணாகிட்ட கண்டிப்பாக சொல்லிடறேன்” என அவனுக்கு உறுதி அளித்தாள் ஆரவி. 

 

ஆனால் சமையலறையில், முகம் தெரியாத, எப்போதோ தனக்கு மருமகளாக வரப் போகும் பெண்ணை விடத் தற்போது பிறந்த வீட்டிற்குச் சீராட வந்திருக்கும் மகளின் சந்தோஷமே பெரியதாகத் தோன்றிற்று. 

 

அதனால்,”நானும், உங்கப்பாவும் சேர்ந்து ஆருவைச் சமாதானம் பண்றதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுச்சுடா. பொறந்த வீட்டில் தலை தீபாவளி கொண்டாடப் போறோம்ன்னு அவ்வளவு சந்தோஷமாக வந்தாள். அதே சந்தோஷம், திருப்தியோட புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கனும். அதனால், அவ இங்கே இருந்து கிளம்புற வரைக்கும் அந்தப் பொண்ணைப் பத்திப் பேசாதே!” என்று மகனிடம் கட்டளை பிறப்பித்தார் சோமசுந்தரி.

 

“சரிங்கம்மா” என்று அதற்குக் கட்டுப்பட்டவன், 

 

அதற்கு மேலும், பிரஹாசினியைப் பற்றித் தங்கையிடம் எதுவும் கேட்க வேண்டாமென முடிவு செய்து விட்டான் திவ்யன். 

 

நீரஜ்ஜூம், விருச்சிகனும் தங்களது துணிக்கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், 

 

“அப்பா, நேத்து எனக்கு யார் மெசேஜ் செய்தாங்கன்னு நீங்களும், அம்மாவும் கேட்டீங்கள்ல? அது வேற யாருமில்லை. ரமணி அத்தையோட பையன் சபரீஷ் தான். எங்கிட்ட பேசனும்னு சொன்னான்”எனத் தந்தையிடம் கூறினான் நீரஜ். 

 

“அவன் உன் கிட்ட என்னப் பேசப் போறானாம்?” என்றார் விருச்சிகன். 

 

“அதான் எனக்கும் தெரியலைப்பா. ஒருவேளை அத்தை வந்திருந்த அப்போ நடந்ததை எல்லார்கிட்டேயும் சொல்லி இருப்பாங்க போல. அதைப் பத்திக் கேட்கிறதுக்காக கூட இருக்கலாம்”

 

“அப்படியும் இருக்கலாம் நீரு. நீ அவனுக்கு ஃபோன் பண்ணி என்ன விஷயம்னு கேளு”என்றவுடன்,

 

தன் செல்பேசியில் சபரீஷூக்கு அழைத்து,“ஹலோ” என்றான் நீரஜ். 

 

சபரீஷ்,”ஹலோ” 

 

“எங்கிட்ட ஏதோ பேசனும்னு மெசேஜ் செஞ்சியே என்னன்னு சொல்லு” 

 

“எங்கம்மா அங்கே வந்திருந்த அப்போ நீங்க எல்லாரும் அவங்களைத் திட்டி அனுப்பி இருக்கீங்க! அதை எங்க கிட்ட சொல்லி சொல்லிப் புலம்புறாங்க! உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று கண்மண் தெரியாமல் கத்தியவனை அடக்கும் விதமாக, 

 

“முதல்ல கத்துறதை நிறுத்து சபரீஷ்! நாங்க ஒன்னும் உங்கம்மாவைத் திட்டலை. அவங்க தான் பிரஹாசினியைப் பேசக் கூடாததை எல்லாம் பேசிக் கஷ்டப்படுத்தினாங்க” என்றுரைத்தான் நீரஜ்.

 

“அப்படி என்னத் தப்பாகப் பேசினாங்கன்னு நீயும் இப்படி குதிக்கிற?” என அவனிடம் அலட்சியமாக கேட்டான் சபரீஷ்.

 

“ஓஹ்! அப்போ அவங்க என்னப் பேசினாங்கன்னு உனக்குத் தெரிஞ்சும் தான் நீ என்கிட்ட சண்டை போடக் கால் பண்ணி இருக்கியா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, 

 

“ஆமாம். அம்மா எங்கிட்ட எல்லாமே சொல்லிட்டாங்க” என்று ஒப்புக் கொண்டான். 

 

அதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறி விட்டது பிரஹாசினியின் தமையன் நீரஜ்ஜிற்கு! 

 

            - தொடரும்

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 1 month ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page