All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

11. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 3 months ago
Posts: 24
Topic starter  

தங்கையின் கேள்விகளைக் காது கேட்டு முடித்த பின்னர்,”அவங்களோட அந்த சுபாவம் தான் எனக்குப் பிடிச்சிருக்குன்னு வையேன்! அதே மாதிரி, அவங்களும் என்னை லவ் பண்றாங்கன்னு எனக்கு நல்லா தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் நான் இந்த விஷயத்தை உங்க எல்லாருக்கும் சொல்லி இருக்கேன்!” என்று விளக்கிக் கூறினான் திவ்யன். 

 

“ஓஹ்! அப்போ அவங்க எல்லார் கூடவும் சகஜமாகப் பேசிட்டு, பசங்களோட ஃப்ரண்ட்ஷிப் வச்சிருந்தால் நீ அவங்களைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டியா?” என்று நக்கலாக கேட்டாள் ஆரவி. 

 

அவன் யாரையோ காதலிக்கிறான்? என்ற சந்தேகம் தனக்கு இருந்த போதும் கூட, அதை தமையனின் வாயிலாகவே அறிந்து கொள்ள விழைந்தவள், அவனுடைய விருப்பத்திற்குரிய பெண் ‘பிரஹாசினி’ என்பதை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

ஏனென்றால், அவளது அமைதியான சுபாவத்தைக் கண்டாலே ஆரவிக்கு ஆகாது. 

 

மற்ற சீனியர்களைப் போலத் தன்னிடம் கலகலப்பாகப் பேசாமல் ஒரு சின்னப் புன்னகையுடன் நகர்ந்து செல்லும் அவளைப் பார்த்தாலே சில நேரங்களில் கடுப்பாகும் ஆரவிக்கு. 

 

அந்தக் கடுப்பை அவளிடம் மறைத்துக் கொண்டுப் பலமுறை பிரஹாசினியிடம் சென்று,”உங்க கிளாஸ்மேட்ஸ் எல்லாருமே என் கூட ரொம்ப ஃப்ரண்ட்லியாகப் பேசுறாங்க. ஆனால் நீங்க மட்டும் ஏன் ஒதுங்கிப் போறீங்க?” என்று கேட்ட போதும் கூட, 

 

“இது தான் என்னோட சுபாவம்டா. இதை என்னால் மாத்திக்கவே முடியலை” எனப் பதிலளித்தவளிடம், அதன் பிறகு எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவும் இல்லை. அதேபோல், அவளைக் கடந்து செல்லும் சமயங்களில் புன்னகைக்கவும் மாட்டாள் ஆரவி. 

 

ஆனால், பிரஹாசினியின் வகுப்புத் தோழிகள் அவளது சுபாவத்தை ஏற்று முடிந்தளவு அவளைத் தனியாக விடாமல் தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள். 

 

அதனால், அவளது இருப்பைச் சகித்துக் கொள்பவள், அவளின் மீதான தன் பிடித்தமின்மையை மறைமுகமாக காட்டிக் கொண்டு தான் இருப்பாள் ஆரவி. 

 

அவள் எதற்கெடுத்தாலும் ஊமைக்கோட்டான் போல் இருந்து கொண்டு தன் தோழிகளிடம் சத்தமில்லாமல் காரியம் சாதித்துக் கொள்வதைப் போன்ற எண்ணம் அவளுக்கு. ஏனெனில், பிரஹாசினியின் விருப்பத்தை அவள் சொல்லாமலேயே அறிந்து வைத்திருக்கும் அவளது தோழிகள் அவளிடம் கேட்காமலேயே தங்களது நண்பியின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். 

 

அதனால் தான், அவள் மீது துளிர்த்த வெறுப்பு இப்போதும் மறையாமல் இருக்கிறது ஆரவிக்கு. 

 

அதே மாதிரி, பிரஹாசினியோ தன்னுடன் படிக்கும் ஆண்களுடன் கூட நட்பு வைத்துக் கொண்டதும் கிடையாது. எனவே, அந்தப் பையன்களும் அவளிடத்தில் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. 

 

இப்படியாக இருக்கும் ஒருவளைத் தன் தமையன் எப்படி விரும்பினான்? என்ற குழப்பத்தால் தலை வெடிக்க அவனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள் ஆரவி. 

 

“அவ கேட்டதுக்குப் பதில் சொல்லுடா!” என மகனை அதட்டினார் சோமசுந்தரி.

 

“மத்தவங்க கிட்ட சகஜமாகப் பேசாமல், அதுவும் பசங்க கூட நட்பு வச்சிக்காமல் இருந்தால் மட்டும் தான் அவங்க நல்லப் பொண்ணு. அப்படிப்பட்ட பொண்ணு தான் எனக்குப் பிடிக்கும். அவளைத் தான் நான் லவ் பண்ணுவேன்னு சொல்லலையே? அப்படி நடந்துக்கிறதும், பேசுவதும் அவங்க, அவங்களோட தனிப்பட்ட விருப்பம். அதில் நான் கருத்து சொல்றது தப்பு. அது அவங்க சுபாவம், குணம்ன்ற மாதிரி, பிரஹாசினிக்கு ஒரு தனிப்பட்ட குணம் இருக்கு. அதைத் தான் நான் விரும்பி அவளை லவ் பண்ண ஆரம்பிச்சேன்!” என்று அனைவருக்கும் பொதுவாக உரைத்தான் திவ்யன். 

 

அதைக் கேட்டுப் பேச்சற்றுப் போய் நின்றாள் ஆரவி. அவளுக்குப் பிடிக்காத குணம், அவனுக்குப் பிடித்துப் போய்த் தான் விரும்பிய உள்ளான் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. 

 

“எப்போ, எப்படி அந்தப் பொண்ணை விரும்ப ஆரம்பிச்சே?” என்றார் மகுடபதி. 

 

“ஆரவியைக் காலேஜூக்குக் கொண்டு போய் விடுவேன்லப்பா? அப்போ பார்த்துக் காதலிக்க ஆரம்பிச்சேன்” என்றவனை ஆயாசமாகப் பார்த்தனர் அனைவரும். 

 

”அப்படி அவங்களைப் பார்த்தவுடனேயே லவ் வர்ற அளவுக்கு அவங்க கிட்ட என்னப் பிடிச்சது திவ்யன்?”என்று தன் திருவாயைத் திறந்து வினா எழுப்பினான் ரஞ்சித். 

 

“அதான் சொன்னேனே மாப்பிள்ளை! அவளோட சுபாவம்ன்னு!” என்று மொழிந்தான் திவ்யன். 

 

“நீ ஆருவைக் காலேஜுக்குக் கொண்டு போய் விட்டுட்டு வர்றதுக்கு இடையில் ஒரு இருபது நிமிஷம் ஆகுமா? அந்தக் குறைவான நேரத்துக்குள்ளேயே உனக்கு அந்தப் பொண்ணு மேலே இந்தளவுக்கு காதல் வந்துருச்சாடா?” என்று அவனிடம் வினவினார் சோமசுந்தரி. 

 

“ஆமாம்மா. நானும் முதல்ல எல்லா பொண்ணுங்களையும் போல பிரஹாவையும் பார்த்தவுடனேயே கடந்து போகனும்னு தான் நினைச்சேன். ஆனால், என்னால் முடியலை. அவ யாரையும் நிமிர்ந்து பார்த்துப் பேசினது இல்லன்னு ஆரு சொன்னா. அது கரெக்ட் தான்! ஆனாலும், இரண்டு தடவை என்னை நிமிர்ந்து பார்த்தாள்! அப்போ அவளோட கண்ணில் தெரிஞ்ச ஏதோ ஒரு உணர்வு தான், அவளை எனக்குப் பிடிக்க வச்சது!” என்று கூறி மெலிதாகப் புன்னகை செய்தான் மகன். 

 

அதைக் கேட்ட ஆரவி,“அப்படி என்னத் தெரிஞ்சதுண்ணா?” என்றாள் வேண்டாவெறுப்பாக. 

 

“ஏதோ ஒரு சோகம்! வலி! ஆனாலும், அதையெல்லாம் சமாளிச்சுட்டு முகத்தில் வெளிப்படுத்துற சாந்தம்! இதெல்லாம் தெரிஞ்சதும்மா” என்றவனைத் திகிலுடன் ஏறிட்டார்கள் அவனது குடும்பத்தினர். 

 

“அவளோட ஃபோட்டோ எதுவும் வச்சிருக்கியா?” என்று கேட்டார் மகுடபதி. 

 

“ம்ஹூம். இல்லைப்பா” என்றவனை விநோதமாகப் பார்த்தவரோ, 

 

சோமசுந்தரி,“ஃபோட்டோ கூட இல்லாமல் அப்பறம் எப்படி இன்னும் அவளை லவ் பண்ணிட்டு இருக்கிற?” என்றவுடன், 

 

“அப்படித் தான் அவளோட ஞாபகத்திலேயே வாழ்ந்துட்டு இருந்தேன். அன்னைக்குக் கூட நம்ம வீட்டில் மாடி கட்டனும்னு சொன்னேனே? அதுக்கப்புறம் தான், மூனு வருஷத்துக்குப் பிறகு அவளை நேரில் பார்த்தேன்!” எனக் கூறினான் திவ்யன். 

 

ஆரவி,“எங்கே? எப்போ பார்த்தீங்க?”என்றதும், 

 

தன் மனம் கவர்ந்தவளைச் சந்தித்த அந்த அழகிய தருணத்தை வார்த்தைகளில் வடித்துச் சொல்லி முடித்தான். 

 

“ஓஹ்! அப்போ அவங்க கிட்ட பேசி இருப்பீங்களே?” என்று வினவ, 

 

“நானும் போய்ப் பேசனும்னு நினைக்கலை, அவளும் என்கிட்ட வந்து பேசலை ஆரு” என்று அவளுக்கு விளக்கம் அளித்தான் திவ்யன். 

 

ஆரவி,“இல்ல எனக்குப் புரியலை! இது காதலா ஃபர்ஸ்ட்? வருஷக்கணக்காகப் பார்க்கவும் மாட்டீங்க, அப்படியே நேரில் வந்தாலும் பேசவும் மாட்டீங்க. அப்பறம் எப்படி லவ் மட்டும் பண்ணீங்க? இதில் அவங்களைக் கல்யாணம் செய்துக்கிறதுக்கு முன்னாடியே நம்ம வீட்டில் சேஞ்சஸ் எல்லாம் கொண்டு வரனும்னு முடிவு செஞ்சிருக்கீங்க! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு!” என்றவள், 

 

”அவர் சொன்னதுல உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதா?” எனத் தன் கணவனிடம் கேட்டாள். 

 

“ம்ம். ஒரு விஷயம் புரியுது!” என்றான் ரஞ்சித். 

 

சோமசுந்தரி,“என்னப் புரிஞ்சது மாப்பிள்ளை?” 

 

“ஒரு சிலர் காதலிக்கிற அப்போவே ஒன்னா வெளியே எல்லா இடத்துக்கும் போகனும், தூரமாக எங்கேயாவது போயிட்டு வரனும்னு எல்லாம் ஆசைப்பட்டுப் போவாங்க! ஆனால், உங்க அண்ணனும், அந்தப் பொண்ணும் இன்னொரு ரகம். தங்களோட காதலை இரண்டு வீட்டிலேயும் சொல்லி, அவங்க சம்மதத்தோட, ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிட்டு, அப்பறம் உரிமையாக வெளியே சுத்தனும்னு நினைக்கிறாங்க!” என்று பதிலளித்தான் ஆரவியின் கணவன். 

 

அதைக் கேட்டதும், மகுடபதி மற்றும் சோமசுந்தரயின் முகங்களில் சிறு நிம்மதி எட்டிப் பார்த்தது. 

 

இதுநாள்வரை, தன் மகனுடன் ஒரு பெண்ணைப் பார்த்ததாகச் சொந்தங்கள் யாரும் வீடு தேடி வந்து ஒருமுறை கூடச் சொல்லிச் சென்றதில்லை என்பதை இப்போது நினைவு கூர்ந்து பார்த்தனர் இருவரும்.

 

அண்டம் முழுவதும் நிறைந்திருக்கும் மனித உயிர்கள் அனைவரும் தங்களது விருப்பப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு. ஆனால், தங்களுடைய பிள்ளைகளிடம் அவ்வாறானதொரு எதிர்பார்ப்பை வைத்திருப்பது தவறில்லை தானே? 

 

அந்த எதிர்பார்ப்பை, நம்பிக்கையைத் தங்கள் மகன் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறான் என்பதையும், அவன் காதலிக்கும் விஷயத்தை முதலில் தங்களிடம் வந்து வெளிப்படுத்தி உள்ளான் என்பதையும் நினைக்கையில் பெருமிதப்படத் தான் தோன்றிற்று மகுடபதி மற்றும் சோமசுந்தரிக்கு. 

 

ஆனாலும், இத்தனை வருடங்களாக அதைத் தங்களிடமிருந்து மறைத்து, அவனது கையில் குத்தியிருந்த பச்சையைப் பற்றிக் கூட யாரிடமும் மூச்சு விடாமல் இருந்ததை எண்ணி வருத்தம் அடைந்தனர். 

 

அவர்களுக்கு நேர்மாறாக,”ஆமாம். பொல்லாத அமரக் காதல் பாருங்க!” என்று நொடித்துக் கொண்டாள் ஆரவி.

 

“ஆஹான்! அப்படி இல்லைம்மா. உங்க அண்ணனோடது அன்னியோன்யமான காதல்!” என மனைவிக்கு எடுத்துரைத்தான் ரஞ்சித். 

 

“ம்ஹூம்! நீங்க வேற உங்க வாயை வச்சிட்டு சும்மா இருங்க. ப்ளீஸ்!” என்றவளை மேலும் கடுப்பாகச் செய்யாமல் அமைதியாகி விட்டான் அவளது கணவன்.

 

“இப்போ முடிவாக என்ன சொல்றீங்க அண்ணா?” எனக் கேட்டாள் ஆரவி. 

 

“இதுக்கு மேலே எப்படி தெளிவாகச் சொல்றதும்மா? நான் பிரஹாசினியைக் கல்யாணம் செய்துக்க விருப்பப்பட்றேன்” என்று தடாலடியாக உரைத்து விட்டான் திவ்யன். 

 

“அண்ணா! நான் அவங்களைப் பத்தி அவ்வளவு சொல்லியும் நீங்க மறுபடியும் இப்படியே பேசுறீங்களே!” என்றாள் அவனது தங்கை. 

 

“அவளை நான் கல்யாணம் செய்துக்கிறதுல உனக்கு என்னப் பிரச்சினை ஆரு?” என்றவனிடம், 

 

“எனக்குப் பிரச்சினை தான் அண்ணா. நான் தான் அவங்களோட பேசிப், பழகி இருக்கேனே! அப்போ எனக்கு அவங்களைப் பத்தித் தெரியாதா? நான் சொல்வது சரியாகத் தானே இருக்கும்?” என்று அவனிடம் விதண்டாவாதம் செய்தாள் ஆரவி. 

 

“நீ சொன்னதை வச்சிப் பார்த்தால் நீ அவ கிட்ட சரியாகப் பேசியதும் இல்லை, பழகவும் முயற்சி செய்யலை. அவளைப் பத்தி மேலோட்டமாகப் பார்த்ததையும், கவனிச்சதையும் வச்சு தான், நீ அவளைப் பத்தின ஒரு முடிவுக்கு வந்திருக்கிற!” என்று அவளுக்கு விளக்கினான் திவ்யன். 

 

“ப்ச்! அண்ணா!” என்றவளைக் கையமர்த்தும் விதமாக, 

 

“ஆரும்மா! அமைதியாக இருடா! தலை தீபாவளிக்கு வந்த இடத்தில் உனக்கும், உங்க அண்ணனுக்கும் எந்த வித மனக் கசப்பும் வந்துடக் கூடாது! அதனால், முதல்ல குடும்பத்தோட தீபாவளியைக் கொண்டாடிட்டு அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு இதையெல்லாம் நிதானமாகப் பேசுவோம்” என்று மனைவிக்கு அறிவுறுத்தினான் ரஞ்சித். 

 

“ஏங்க!” என்று தொடங்கிய ஆரவியிடம்,

 

“மாப்பிள்ளை சொல்றது தான் சரிம்மா. நானும் அவனை விஷயத்தைச் சொல்ல வைக்கனும்னு தான் நினைச்சேனே தவிர, இப்படி ரெண்டு பேருக்கு இடையிலும் சண்டை வரும்ன்னு நினைக்கவே இல்லை. அதனால், இதை இப்படியே விட்றலாம். தீபாவளி முடிஞ்சு நீ அடுத்த தடவை வரும் போது பொறுமையாகப் பேசிக்கலாம்” என மகளிடம் தெரிவித்தார் சோமசுந்தரி. 

 

“ஆமா ஆரு. நீயும் டென்ஷன் ஆகாத! மாப்பிள்ளையும் சங்கடப்பட்றார் பாரு” என்று அவளுக்கு வலியுறுத்தினார் மகுடபதி. 

 

அவர்கள் அப்படி சொல்லும் போது தானும் தன்னுடைய கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்காமல் மலையிறங்கினாள் ஆரவி. 

 

அதன் பின்னர், எதிர்வரும் தீபாவளிக்கு என்னவெல்லாம் செய்யலாம்? என்று திட்டமிடத் தொடங்கினர் நால்வரும். 

 

                - தொடரும்

 

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 1 month ago 2 times by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page