All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 8 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 8 💖

ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய சோம்பலில் புரண்டு படுத்தாள் சந்தனா. ஏனோ வாரத்தின் ஆறுநாட்கள் உடனிருக்கும் சுறுசுறுப்பு எங்கே சென்று ஒளிந்து கொள்கிறதோ என எண்ணியதும் அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் மீது கையைப் போட்டு அணைத்தவாறே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் மனோ.

கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். எட்டைத் தொட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. எக்கிக் கீழே பார்த்தாள். லட்சுமி அம்மாவும் தூங்கிக் கொண்டிருந்தார்.

இவள் மெதுவாய் மனோவின் தூக்கம் கலையாது எழுந்தமர்ந்தாள். இன்னும் உறக்கம் கண்களில் மிச்சமிருந்தது. கண்ணை சிமிட்டிவிட்டு கழிவறை சென்றுவந்தாள். அறை இருட்டாய் இருக்க ஜன்னலைத் திறந்துவிட, மெதுவாய் வெளிச்சம் படர்ந்தது.

சூடாய் ஒரு குளம்பியைத் தயாரித்து ஒரு கோப்பையில் ஊற்றிவிட்டு ஜன்னலருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவளின் மறுகையில் கைபேசி இருந்தது. ஒரு மிடறு குளம்பியைப் பருகிவிட்டு அலைபேசியை உயிர்ப்பித்து இணையத்தை இணைத்ததும் கடகடவென சங்கிலித் தொடராய் செய்திகள் வந்து விழுந்தன. அனைத்திலும் குகா என்ற பெயரே பிரதானமாய் இருக்க, இவளுக்கு முறுவல் பூத்தது.

விரல்களால் செய்தியைச் சொடுக்கி உள்ளே சென்றாள். குகனும் பப்பியும் எங்கோ வெளியே சென்றுவிட்டு புகைப்படங்களை அனுப்பி இருந்தனர். இருவரது முகமும் சிரிப்பில் மலர்ந்திருக்க, இவளது கண்ணே பட்டுவிடும் என எண்ணிக் கொண்டாள். இதய வடிவ பொம்மையை அனுப்பி வைத்தாள். பப்பி ஏதோ குரல் வழிச் செய்தி அனுப்பியிருந்தாள்.

“மம்மி... நாங்க அவுட்டிங் வந்தோம்...” என எங்கு சென்றார்கள் என உற்சாகத்துடன் அவள் விவரித்திருக்க, இவளது உதடுகள் புன்னகை ஏறின.

“யூ போத் ஆர் சோ க்யூட். என்ஜாய் யுவர் டேய்ஸ். வி மிஸ் யூ டூ” என இவளது விரல்கள் விசைப்பலகையைத் தட்டி அனுப்ப, மனோ எழுந்துவிட்டான்.

“ப்ரஷ் பண்ணீட்டு வா மனோ...” என இவள் கூற, நேராய் வந்து கீழே அமர்ந்து அவளது மடியில் முகம் புதைத்தான். சந்தனா முகம் கனிந்துவிட்டது.

“மனோ, பெட்ல போய் தூங்கு டா... ஏன் கீழே உக்காந்து இருக்க?” என வாஞ்சையாய் கேட்டாள்.

“தூக்கம் போய்டுச்சு மா!” என மங்கலாய் ஒலித்தது அவன் குரல்‌.

“சரி, ப்ரஷ் பண்ணீட்டு வா. அம்மா காஃபி தரேன்...” என்றாள் அவனது தலையைக் கலைத்து‌.

“கொஞ்ச நேரம்மா...” என அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“பப்பியும் குகாவும் போட்டோ அனுப்பி இருக்காங்க. பார்க்குறீயா நீ?” சந்தனா கேட்டதும், நொடியில் நிமிர்ந்தான் சின்னவன்.

“காட்டுங்க மா...” என அவனே அவளது கைபேசியை எடுத்து புகைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினான். இவள் எழுந்து சென்று அவனுக்கு குளம்பியை எடுத்து வர, பல்லை விலக்கிவிட்டு வந்து சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவாறு அதைப் பருகலானாள்.

“இன்னைக்கு என்ன குக் பண்ணலாம்? மனோவுக்கு என்ன வேணும்?” எனக் கேட்டுக் கொண்டே குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.

“ம்மா... மார்னிங் முட்டை சப்பாத்தி. அஷூ கூடக் கேட்டான் இல்ல. அவனுக்கும் எனக்கும் செஞ்சு கொடுங்க மா...” என்றான். அவளுக்குமே அப்போதுதான் அவனிடம் தான் சமைத்து தருவதாய் உரைத்தது நினைவிற்கு வந்தது. சென்ற முறை கடைக்குச் செல்லும் போதே பன்னீர் வாங்கி வந்தாள். ஆனால், வேலை பழுவில் மறந்துவிட்டாள்.

“ஆமா மனோ... அம்மா மறந்தே போய்ட்டேன். ஓகே, மார்னிங் முட்டை சப்பாத்தி வித் பன்னீர் க்ரேவி. லஞ்ச்க்கு பிரியாணி. ஓகே வா?” எனக் கேட்டாள்.

“ம்மா... பிரியாணி இஸ் போரிங் மா. அடிக்கடி செய்றீங்களே!” சின்னவன் சலித்துக் கொள்ள, “போடா... போ, எனக்குப் பிரியாணி ஃபேவரைட். அதான் செய்வேன். அடிக்கடி இல்லை. டூ வீக்ஸ் ஆச்சு பிரியாணி சாப்ட்டு...” என இவள் சிறுபிள்ளை போல முகத்தைக் கோணினாள். ஏனோ பிரியாணி மீதிருக்கும் பிரியத்தை மட்டும் அவளால் விட்டுவிட முடியவில்லை. சிறு வயதில் கறிசோறு வேண்டும் எனக் கேட்டு தாயிடம் அடம்பிடித்த நாட்கள் எல்லாம் பசுமையாய் மனதை நிறைத்தன.

பூரணியையும் நினைத்துப் பார்த்தாள். தனக்கென அவரின் மெனக்கெடல்கள் எல்லாம் இப்போது நினைத்தாலும் மனதை நிறைக்கும். வேறெதுவுமே வேண்டாம். அவர் மட்டும் அருகிலிருந்தால் போதும். அவர் மடியில் படுத்து நிம்மதியாக உறங்க வேண்டும் என்ற பேராசை அவ்வப்போது முகிழ்க்கும். ஆனாலும் திரும்ப பெற முடியாத பொக்கிஷமான தருணங்கள் அல்லவா அவை.

இப்போது பூரணி உயிரோடு இருந்திருந்தால் தன்னை நிச்சயமாய் இப்படியிருக்க அனுமதித்திருக்க மாட்டார். குகாவையும் ஒரு பாடுபடுத்தி எடுத்திருப்பார் என நினைக்கும் போது மனம் கனத்துப் போனது.

‘ஏன் மா சீக்கிரம் போனீங்க?’ என எத்தனையோ நாட்கள் விழிகளில் ஈரம் கோர்க்கும். ஆனால் யார் முன்பும் அதை காண்பித்துக் கொள்ள மாட்டாள்.

லட்சுமியம்மா எழுந்து வந்துவிட்டார். இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

“அட... ரெண்டு பேரும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வாங்கப்பா. அப்ப தானே சமைக்க முடியும்...” என்றார்.

“உங்கப் பேரன்கிட்டே நீங்களே சொல்லுங்க லட்சுமிமா...” சந்தனா சப்பாத்திக்கு மாவை எடுத்துப் பிசைந்தாள்.

“எதுக்கு சந்தனா இவ்வளோ மாவு? மூனு பேருக்கு பிசைய சொன்னா, ஆறு பேர் சாப்பிட்ற அளவுக்கு மாவு போட்டிருக்க நீ?” என லட்சுமி வினவ, “ஆமா லட்சுமி மா... ஆறு பேருக்குத்தான். அன்னைக்கு நம்ப வீட்டுக்கு வந்தாங்க இல்ல, அந்தக் குட்டிப் பையனுக்கு அவங்க அம்மா அப்பாவுக்கும் சேர்த்து செய்றேன் லட்சுமி மா...” என்றாள்.

“சரி, நீ குடு... நான் தேய்க்கிறேன்...” என அவர் கூற, “இல்லமா...நானே பார்த்துக்கிறேன். எப்பவும் போல சண்டே உங்களுக்கு ரெஸ்ட். போங்க, போய் டீவி பாருங்க...” என அவரை அனுப்பியவள், சப்பாத்தியை தேய்த்து கல்லில் போட்டவாறே மறுபக்கம் பன்னீர் குருமாவை வைத்து முடித்திருந்தாள். நேரம் ஒன்பதாக பதினைந்து நிமிடங்கள் இருந்தன. இவர்கள் மூவரும் உண்டு முடிக்க, சந்தனா உடையை மட்டும் மாற்றிவிட்டு வந்தாள்.

“ம்மா... நானும் மனோவும் போய் அவங்க வீட்ல கொடுத்துட்டு வர்றோம்...” என சந்தனா சமைத்தவற்றை எடுத்துக்கொண்டு ரஞ்சனின் வீட்டுக்குச் சென்றாள்.

ஷோபனா அப்போதுதான் எழுந்து தேநீரைப் பருகிவிட்டு வாரத்தில் ஏழு நாட்களும் சமைக்க வேண்டுமே என்ற அலுப்புடன் வெளியே ஏதாவது வாங்கி உண்ணலாமா? என்ற யோசனையில் அமர்ந்திருந்தாள். அழைப்புமணி ஒலித்ததும், இவள் கதவைத் திறக்க, சந்தனாவும் மனோவும் நின்றிருந்தனர்.

அவர்களை எதிர்பாராது திகைத்தவள், “வாங்க டாக்டர்...” என்றவள் மற்றவளின் முறைப்பில்,

“வாங்க சந்தனா... வா மனோ!” என இருவரையும் அழைத்து அமர வைத்தாள்.

சந்தனா கையிலிருந்த உணவை மேஜை மீது வைத்தவள், “அஷூ இல்லையா?” எனக் கேட்டாள்.

“இதோ, ரூம்ல இருக்கான்...” என ஷோபனா கை அறை நோக்கி நீள, அங்கே அஷ்வினும் ரஞ்சனும் நின்றிருந்தனர்.

“அலெக்ஸா ப்ளே ஆலுமா டோலுமா...” என சின்னவன் மெலிதாய்க் கத்த, “நோ அலெக்ஸா... ப்ளே அப்படி போடு போடு சாங்க்...” என ரஞ்சன் கத்தினான். அலெக்ஸா குழப்பத்தில் இரண்டு பாடல்களையும் விடுத்து புதிதாய் ஒரு பாடலை ஒலிக்க விட, “டாடி... போங்க...” என அவன் முகத்தை திருப்பினான்.

ரஞ்சன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அலெக்ஸா கொடுத்தப் பாடலுக்கு கையையும் காலையும் அசைத்து நடனமாட, அதைப் பார்த்திருந்த சந்தனா முகம் முழுவதும் புன்னகை.

“அஷூ... சந்தனா ஆன்ட்டி வந்திருக்காங்க பாரு...” ஷோபி குரலில் அஷ்வினும் ரஞ்சனும் ஒரு சேரத் திரும்பினர்.

“ஆன்ட்டி...” என சின்னவன் ஓடி வர, ரஞ்சன் ஒரு பக்க கையை வலதுபுறம் மற்றொரு கையை வலதுபுறம் வைத்திருந்தவன், பட்டென இரு கரங்களையும் கீழே இறக்கினான். அவன் முகத்தில் லேசான வெட்கம் வந்தது போல. காதெல்லாம் சிவந்து போக, அவளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பொன்றை உதித்தான். சந்தனா அவனை மேலும் சங்கடப்படுத்தக் கூடாதென மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

“அஷூ... அம்மாவும் நானும் உனக்கு முட்டை சப்பாத்தி எடுத்துட்டு வந்திருக்கோம்!” என மனோ உற்சாகமாய்க் கூற, அஷ்வின் முகம் மலர்ந்து போனது.

“தேங்க் யூ ஆன்ட்டி...” என அவன் சந்தனாவை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அவள் சிரிப்புடன் அவனை அணைத்தாள்.

“சந்தனா... எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்?” ஷோபி சங்கடமாய்க் கேட்டாள்.

“இதுல என்ன கஷ்டம் ஷோபி? எங்களுக்கு சமைக்கும் போது சேர்த்து உங்க மூனு பேருக்கும் செஞ்சுக் கொடுத்தேன். அவ்வளோ தான். டெய்லியா செஞ்சுத் தரப் போறேன்?” கேள்வி கேட்ட சந்தனாவிடம் ஷோபனா புன்னகைத்தாள்.

ரஞ்சன் உடை மாற்றி வெளியே வந்தான். “வாங்க டாக்டர்...” என அவன் அழைக்க, இவள் தலையை அசைத்தாள்.

“இன்னைக்கு நமக்கு குக் பண்ற வேலையை மிச்சம் பண்ணிட்டாங்க சந்தனா. முட்டை சப்பாத்தி செஞ்சு எடுத்துட்டு வந்திருக்காங்க...” என ஷோபனா கூற, “ஹம்ம்... அப்போ இன்னைக்கு ஷோபி குக்கிங்க்ல இருந்து தப்பிச்சுட்டேன் போல...” என்ற ரஞ்சன் மனைவியைப் போல அலட்டிக் கொள்ளாமல் இருக்கையில் அமர்ந்து சந்தனா கொண்டு வந்த உணவை எடுத்து ஒரு வாய் சுவைத்தான். அவனது முகத்தில் ஆச்சரியம் வழிந்தது. ஷோபனா அவனை மென்மையாய் முறைத்தாள்.

“இட்ஸ் யம்மி... இந்த டிஷ்ஷை ஏற்கனவே நான் டேஸ்ட் பண்ணி இருக்கேன். பட், எங்கேன்னு ஞாபகம் இல்லை. மே பீ அம்மா செஞ்சு கொடுத்திருப்பாங்க போல. உங்களுக்கு அப்படியே என் அம்மா கைப்பக்குவம் இருக்கு...” என்றான் மனதில் உள்ளதை மறைக்காது. சந்தனா அமைதியாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ஆனாலும் இந்த பாராட்டுதலில் அவளுக்கொரு நிறைவு.

“டாடி... எனக்கு...” என அஷ்வினும் அவன் மடிமீது அமர்ந்து உண்டான். மனோகர் ரஞ்சனையும் சின்னவனையும் பார்த்திருந்தான். குகேஷ் நினைவு வந்தது அவனுக்கு. அவன் முகத்தைப் பார்த்தே அகத்தைக் கணித்த ரஞ்சன் தன்னியல்பாய் மற்றவனுக்கும் ஊட்டிவிட்டான்.

“இல்ல, நீங்க சாப்பிடுங்க. இப்போதான் நாங்க ப்ரேக்-பாஸ்ட் முடிச்சிட்டு வந்தோம்...” சந்தனா இடை புகுந்தாள்.

“இட்ஸ் ஓகே டாக்டர், நாங்க மூனு பேரும் சாப்பிட்றோம்...” என மனோவையும் அருகே அமர்த்திக் கொண்டான்.

“சந்தனா... என்ன சாப்பிட்றீங்க? டீ ஆர் காஃபி? சாரி, உங்களுக்கு எதுவுமே கொடுக்காம பேசிட்டு இருக்கேன்...” என்றாள் ஷோபனா.

“நான் சொன்னேன் இல்ல. வரும்போது தான் வயிறு ஃபுல்லா சாப்ட்டு வந்தேன். வயித்துல கொஞ்சம் கூட இடமில்ல ஷோபனா!” என்றாள்.

“சரி, கொஞ்சம் ஜூஸ் குடிங்க...” என்ற ஷோபி குளிர் சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பொத்தலை வெளியே எடுத்தாள்.

“நோ ஷோபி, நான் பேக்ட் ஜூஸ் குடிக்கிறதில்ல...” அவசரமாய் இவள் மறுக்க, “டாக்டரா இருக்கது ரொம்ப கஷ்டம் போல. அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முன்னே நம்ப ஃபாலோ பண்ணணும் இல்ல?” எனக் குறும்பாய்க் கேட்டான் ரஞ்சன்.

“பின்ன இல்லையா சார்? நம்ம கரெக்டா இருந்தாதானே பேஷண்ட்ஸ்க்கு அட்வைஸ் பண்ண முடியும்?” என அவளும் புன்னகைத்தாள்.

“அப்போ எதுவுமே சாப்பிட்ற ஐடியால இல்ல நீங்க?” ஷோபனா மென்மையாய் சந்தனாவை முறைத்தாள்.

அதற்குள்ளே லட்சுமியம்மா அழைத்துவிட்டார்.

யாரோ நோயாளி ஒருவர் அவசரமாய் அவளைப் பார்க்க வந்திருப்பதாக அவர் உரைக்க, சந்தனா அவர்களிடம் கூறிவிட்டு மகனை அழைக்க, “அம்மா... நான் அஷூவோட இருக்கேன்!” என அவன் அடம்பிடித்தான்.

“மனோ... இன்னொரு நாள் வரலாம். இப்போ கிளம்பு...” அவள் அதட்டலிட, சின்னவன் முகம் வாடிப்போனது.

“சந்தனா, அவனை ஏன் மிரட்டுறீங்க? இங்கே இருக்கட்டுமே. நாங்க பார்த்துக்குறோம்...” ஷோபனா இடைபுக, அவள் சங்கடமாய் பார்த்தாள்.

“இல்லங்க, அவன் கொஞ்சம் சேட்டை அதிகமா பண்ணுவான்!” தயங்கியபடியே கூற, “ப்ம்ச்... இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிற எனக்கு உங்கப் பையனை சமாளிக்க முடியாதா? நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்...” என அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டாள் ஷோபனா.

சந்தனா கூறியது போல மனோகர் கொஞ்சமல்ல, நிறையவே சேட்டை செய்தான். முதலில் புது இடமென்பதால் அமைதியாக இருந்தான். நேரம் செல்ல செல்ல அவனது சேட்டைகள் அளவில்லாமலானது. கூடவே அஷ்வினும் சேர்ந்து கொள்ள, வீட்டையே மொத்தமாய் கலைத்துப் போட்டனர். சிறிது நேரம் கழித்து தாய் நினைவு வந்ததும், வீட்டிற்குப் போகிறேன் என அவன் கூற, ரஞ்சன் வீடுவரை சென்று விட்டுவிட்டு வந்தான்.

பிறகு கணவனும் மனைவியும் சேர்ந்து வீட்டை ஒழுங்குப்படுத்தினர். அன்றைய நாள் இப்படியாக சிரிப்பும் முறைப்புமாய் கடந்திருந்தது. 

 

 

***

சந்தனா மாலை பள்ளி முடிந்து வந்ததும் அவளுடன் விளையாடலாம் என தீனா காத்திருந்தான். காலையிலிருந்து மனோவுடன் நிகழ்பட ஆட்டம் (வீடியோ கேம்) விளையாடினான். பின்னர் மதிய உணவை உண்டுவிட்டு சீட்டு கட்டைப் பிரித்துப் போட்டு விளையாடினர். தீனாவிற்கு ஒரே இடத்தில் அமர்ந்து விளையாட விருப்பமில்லை.

அதனாலே சந்தனா வந்ததும் அவளுடன் வேறு எதாவது விளையாடலாம் என ஆர்வமாய்க் காத்திருந்தான். அவள் பள்ளி முடிந்து வந்ததை அறையிலிருந்து பார்த்து உறுதி செய்தவன், “மனோ... நான் குட்டி கூட விளையாடப் போறேன். வரீயா?” எனக் கேட்டான்.

“அவ என் கூட விளையாட வர மாட்றா...” மனோ சோர்வாய்க் கூற, “இல்ல... நீ வா மனோ.

நம்ப மூனு பேரும் சேர்ந்து விளையாடலாம்...” என அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

“குட்டி... ஸ்கூல் முடிஞ்சிடுச்சா? உனக்குத்தான் வெயிட் பண்ணேன். ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா?” எனக் கேட்டான் தீனா. மனோ அப்படியே மெதுவாய் அங்கிருந்த வரண்டாவில் அமர்ந்து காலை நீட்டினான். அவனுடைய காலுக்கு நேரே பெரிய கல் ஒன்று இருக்க, அவனால் சரியாய் அமர முடியவில்லை. சந்தனா அந்தக் கல்லை அகற்றி வைத்தாள்.

“அது என்ன கேம் தீனா... எப்படி விளையாடணும்?” இவள் யோசிக்க, “நீ விளையாண்டது இல்லையா? நான் கண்ணை மூடி ஹண்ட்ரட் கவுண்ட் பண்ணுவேன். நீ போய் ஒளிஞ்சுக்கணும். அப்புறம் நான் உன்னைக் கண்டு பிடிப்பேன்...” என்றான்.

“ஓ... ஒளிஞ்சு பிடிச்சு விளையாட்டா? எனக்கு நல்லா தெரியுமே...” என்றாள் உற்சாகமாய்.

“நான் கவுண்ட் பண்றேன். நீ போய் ஒளிஞ்சுக்கோ...” என்று தீனா சுவரின் புறம் திரும்பிக் கண்ணை மூடி எண்ணத் துவங்க, இவள் எங்கே ஒளியலாம் எனத் தேடினாள்.

“குட்டி... அங்க...” என மனோ குரலைத் தழைத்துக் கூற, அவன் சொன்ன இடத்தைக் கண்டுகொள்ளாது இவளாய் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டாள். தீனா எண்ணி முடித்ததும் அவளைத் தேடத் துவங்க, அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

சந்தனா அடிக்கடி எட்டி எட்டிப் பார்க்க, அதை கண்டு கொண்டவன், “குட்டி... அவுட்!” என அவளருகே ஓடிச் சென்றான். அவள் மாட்டிக் கொண்டதில் விழித்து நிற்க, “சரி... நீ போய் எண்ணு. நான் ஒளிஞ்சுக்கிறேன்...” என்றானவன்.

இவள் சென்று நூறு வரை எண்ணிவிட்டு சுற்றி முற்றி அவனைத் தேட, மனோ தீனா ஒளிந்திருக்கும் இடத்தைக் கைக்காட்ட இவள் ஓடிச்சென்று அவனைக் கண்டு பிடித்தாள்.

“மனோ... தீனா, ரெண்டு பேரும் வாங்க...” என சதா குரல் கொடுக்க, தீனா உள்ளே ஓடினான். மனோ அப்படியே அமர்ந்திருந்தான். சந்தனா காலில் சேறையும் சகதியையும் மிதித்துவிட்டதால் காலைக் கழுவ சென்றாள்.

“இந்தா... இந்த ஜூஸைக் குடிச்சிட்டு விளையாடப் போ. மனோவுக்கும் குடு...” என அவர் இரண்டு குவளைகளை அவனிடம் கொடுத்தார்.

“சரித்தை...” என்றவன் பழச்சாற்றை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். மனோவிடம் ஒன்றைக் கொடுத்தவன், தானும் பருகினான். சந்தனா காலைக் கழுவிவிட்டு வேண்டுமென்றே தாமதமாய் வந்தாள். இருந்தும் தீனா அவளிடம் பழச்சாற்றை நீட்டினான்.

“குட்டி ஜூஸ் குடி... ஸ்வீட்டா இருக்கு!” என அவளிடம் குவளையை நீட்டினான்.

“வேணாம் தீனா... எனக்கு பல்லு வலிக்கும். இனிப்பு சாப்டக் கூடாது...” எனக் கூறினாள்.

“ஆமால்ல... நான் மறந்துட்டேன் குட்டி...” என அவன் அனைத்தையும் குடித்து முடித்திருந்தான். அடுத்ததாய் இவள் ஒளிந்து கொள்ள அவன் கண்டுபிடிக்க என நேரம் சென்றது. மனோவை இருவருமே கண்டு கொள்ளவில்லை. விளையாட்டிற்கும் சேர்த்துக் கொள்ளவில்லை. தீனா விளையாடும் மும்மரத்தில் அவனை கவனிக்கத் தவறிவிட, சந்தனா வேண்டுமென்ற அவனைத் தவிர்த்தாள். பூரணியிடம் கேட்டுவிட்டு அவனுடன் விளையாடலாம் என நினைத்தாள். ஆனாலும் அவனைப் பார்க்க பாவமாய் இருந்தது.

இவர்கள் விளையாடி முடித்து களைத்து மனோவின் அருகே சென்று அமர்ந்தனர். தீனா வியர்க்கிறது என்று மின்விசிறியை சுழலவிட்டான்.

“தீனா... எதுக்கு ஃபேன் போட்ட? மேடம் பார்த்தா திட்டுவாங்க!” என்றாள் பதட்டமாய்.

“குட்டி... ஃபேன் போட்டா எல்லாம் அத்தை திட்டுமாட்டாங்க...” எனக் கூற, இவளுக்குப் பயமாய் இருந்தது. பின்னர் அவர்கள் இருவரும் உடனிருப்பது அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.

“தீனா... நான் வீட்டுப் பாடம் செய்யப் போறேன். நாளைக்கு டீச்சர் கேப்பாங்க...” எனப் பையைத் திறந்து வீட்டுப்பாடம் செய்யத் தொடங்கினாள் சந்தனா. ஆங்கிலத்தில் எதையோ அவள் தவறாக எழுத, மனோ அதைக் குறிப்பிட்டான். அவளுக்குப் புரியவில்லை. அவனே வாங்கி திருத்திக் கொடுத்தான்.

தீனா சற்று நேரம்தான் அங்கே அமர்ந்திருந்தான். அதற்கு மேல் அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. வீட்டிற்குள்ளே ஓடிவிட்டான். மனோ அங்கேயே அமர்ந்திருந்தான். சந்தனா கணித வீட்டுப் பாடத்தை கடகடவென முடித்துவிட்டாள்.

“குட்டி... உனக்கு மேத்ஸ் நல்லா வருமா? எனக்கு வரவே வராது. புடிக்காது...” என்றான் பாவனையாய்‌.

“எனக்கு கணக்குப் பாடம்தான் ரொம்ப புடிக்கும். அதுல நிறைய மார்க் வாங்கிடுவேன். டீச்சர் எனக்கு பேனா வாங்கிக் கொடுப்பாங்க...” என ஆர்வமாய் பதிலளித்தாள்.

“அப்போ எனக்கு மேத்ஸ் சொல்லி தரீயா?” எனக் கேட்டாள். அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு தலையை அசைத்தாள்.

“நீ ஸ்கூலுக்குப் போகலையா?” அவள் கேட்க, “போகணும்... எனக்கு உடம்பு சரியில்லைல. அதனால லீவ்ல இருக்கேன். சீக்கிரம் போய்டுவேன்...” என்றான். அவளும் தலையை அசைத்தாள். 

 

பூரணி வேலையை முடித்துவிட்டு வர, “பாய் குட்டி...” என மனோ கையை அசைக்க, “டாடா...” என்றுவிட்டு அவளும் தாயுடன் நகர்ந்தாள்‌.

“ம்மா... நானும் தீனாவும் விளையாட்றோம்ல மா. மனோவும் எங்க கூட விளையாட வர்றேன்னு சொன்னான். அவனையும் சேர்த்துக்கவா மா?” என இவள் தாயின் முகம் பார்க்க, அவர் அமைதியாய் இருந்தார்.

“ம்மா... ப்ளீஸ் மா. மனோ பாவம். அவன் தனியா இருக்கான். உடம்பு சரியில்லையாம் அவனுக்கு. அந்த சார் கூட வந்து அவனை விளையாட்டுக்கு சேர்த்துக்க சொன்னாரு மா...” என்றாள் கெஞ்சலாய். ஏற்கனவே அவளை அடித்ததில் மனவருத்தத்திலிருந்த பூரணி மகளுக்காக சரியென்றுவிட்டார்.

“குட்டி... விளையாட்றதெல்லாம் சரி. அவனோட விளையாட்டுப் பொருளை எதுவும் நீ எடுக்க கூடாது. வெளியே விளையாடுங்க. சண்டை போடாம இருக்கணும்...” என சில பல அறிவுரைகளுடன் அவர் ஒப்புக் கொள்ள, இவளுக்கு மகிழ்ச்சிதான். இன்றைக்கு தங்கள் விளையாடும்போது அவன் தனியாய் அமர்ந்திருந்தது இவளுக்கு வருத்தமாகிப் போயிற்று. அவனது காலில் வேறு அடிபட்டிருப்பது பாவமாக இருக்க, அவனையும் நாளைக்கு விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளலாம் என அவன் செய்த தவறிற்கு பாவமன்னிப்பை பரந்த மனதுடன் வழங்கிவிட்டாள்.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page