All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 7 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 7 💖

ரஞ்சன் ஷோபனா தம்பதியர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்து ஒரு மாதம் ஓடியிருந்தது. அவர்களுக்கும் புதிய இடம் மெல்ல பரிட்சயமாகத் தொடங்க, வாழ்க்கை இந்நகரத்திற்கு ஏற்ப மாறியிருந்தது.

அஷ்வின் அருகே உள்ள பள்ளியில் தான் ஒன்றாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். காய்ச்சல் என ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தவன், அதற்கு அடுத்ததாய் எவ்வித விடுப்பும் எடுக்காது தொடர்ந்து பள்ளிச் செல்லத் துவங்கினான்.

ஒருவாரம் தொடர் விடுமுறை என்பதால் ரஞ்சனும் ஷோபனாவும் சென்று வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் என அனைவரையும்

சந்திக்க வேண்டியதாகப் போயிற்று. ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையன் ஒரு வாரம் விடுப்பு எடுத்ததை பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதச் செல்லும் மாணவன் போல அவர்கள் பேசியது ரஞ்சனுக்கு உவப்பாய் இல்லை. ஐந்து வயது சிறுவனுக்கு இத்தனை கெடுபிடிகள் அவசியமா என்பது அவனது கேள்வி. ஆனாலும், தற்போதைய கல்வி முறையை அவனால் மனதிற்குள் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது. வேறு வழியின்றி அவர்கள் கூறிய அனைத்திற்கும் தலையை அசைத்து மன்னிப்பைக் கேட்டுவிட்டு இவர்கள் வந்தனர்.

அதற்கடுத்தடுத்த நாட்கள் வேகமாய் ஓடின. ரஞ்சனுக்கு புது அலுவலகம், உயர் பதவி என நேரமே இல்லை. தனது முழு உழைப்பையும் நேரத்தையும் அலுவலகத்திற்கே அற்பணிக்க வேண்டியதாயிருந்தது.

உழைத்துக் களைத்து சோர்ந்து வீடு வருபவனுக்கு மனைவியும் மகனும்தான் ஆறுதல். அவர்கள் முகத்தைப் பார்த்தால் அனைத்தும் மறந்துவிடும். சென்னையில் வசிக்கையில் அவ்வப்போது வெளியே சுற்றித் திரிவது அவர்களது வாடிக்கை. சினிமா செல்வது, கடற்கரை, பல்பொருள் அங்காடி, மகாபலிபுரம் என அவர்களது வார இறுதிகள் களவாடப்பட்டுவிடும். ஆனால், பெங்களுரு வந்ததிலிருந்து எங்குமே செல்லவில்லை என ரஞ்சனுக்குப் புரிந்தது.

எங்காவது செல்லலாமா? என மகன் மனைவியிடம் கேட்க, இருவருமே சென்னை செல்லலாம் என ஒன்று போல கூறிவிட்டனர். அஷ்வின் தாத்தா பாட்டியைப் பார்க்க ஏங்குகிறான் என ரஞ்சனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஷோபனாவும் மகனுக்காகப் பார்க்கிறாள் என்று உணர்ந்து முறுவலித்தவன், அந்த வார இறுதியில் ஒருநாள் விடுப்பை சேர்த்து எடுத்துக் கொண்டு சென்னை சென்று வந்தான்.

மூன்று நாட்கள் மூன்று மணி நேரம் போல கடந்துவிட்டன. வீடு நுழைந்ததும்தான் தாமதம். ரஞ்சனின் தாய், மகன் சரியாய் உணவு உண்ணவில்லையா? ஒரே மாதத்தில் இளைத்துவிட்டான் என மருமகளை ஒரு பாடுபடுத்திவிட்டார். இவன்தான் அவளை தாயிடமிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது. ஆனாலும் ஷோபனாவின் முகம் ஒருநொடி கூட அவர் கேள்வியில் சுணங்கவில்லை.

அனைத்திற்கும் பொறுமையாய் பதிலளித்தாள். ஏனென்றால் ஒற்றை மகனென ரஞ்சனை அவர்கள் எத்தனை பாசமாய் வளர்த்திருக்கிறார்கள் என திருமணம் முடிந்து வந்த சில நாட்களிலே புரிந்து கொண்டாள். மகனுக்கு ஒன்றென்றால் அவர்கள் துடித்துவிடுவார்கள் எனத் தெரியும். அவர்களைப் போலத்தான் ஷோபனாவிற்கும் ரஞ்சன் என்றால் அலாதிப் பிரியம்.

தன் பிரியத்திற்கு உரியவர்களின் நலனை நாடுபவர்கள் எவராயினும் ஒரு போதும் நமக்கு கோபம் வருவதில்லை. மாறாய் மனம் அந்த அன்பில் நனைந்து குளிர்ந்து போகும். அப்படித்தான் ஷோபனாவும் அவருடைய திட்டுகள், கோபமான பேச்சுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அன்பை மட்டுமே பார்ப்பாள். அதனாலே அவளுக்கு மாமியார் மீது கோபம் வந்தது இல்லை.

மூன்று நாட்களும் மகனுக்கும் பேரனுக்கும் என்று அவர் அத்தனை வகையாய் சமைத்துப் போட்டார். அவர்களே சுகமாய் சலித்துக் கொள்ளுமளவிற்கு அவரது அன்பிருந்தது.

அங்கிருந்த நாட்களில் பேரனை எப்போதும் தூக்கிக் கொண்டு சுற்றினார் ரஞ்சனின் தந்தை. அவரும் மூன்று நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு வாங்கிவிட்டார். குடும்பமாய் வெளியே சென்று வந்தார்கள். சட்டென விடுப்பு முடிந்துவிட, அடுத்த மாதம் கண்டிப்பாய் அழைத்து வருவதாகக் கூறி மகனை சமாதானம் செய்து, பெரியவர்களிடமும் கூறிவிட்டு இவர்கள் பெங்களுரு வந்தடைந்தனர்.

அடுத்த நாள் திங்கள் கிழமை வழக்கமான பரபரப்புடன் நகரத் துவங்கியது. ரஞ்சன் இப்போதெல்லாம் விரைவாகவே அலுவலகம் செல்லத் துவங்கினான். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் அலுவலகத்தை அடைய அவ்வப்போது தாமதமாகிவிடுகிறது.

வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல சரியாய் நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவைப்பட்டன. போக்குவரத்து நெரிசல் அதிகமாய் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியது. அதனாலே விரைவில் செல்லத் தொடங்கினான். இரவில் சில சமயம் வேலை நீண்டுவிட்டால் வரத் தாமதமாகும். பெரும்பாலும் சரியான நேரத்திற்கு இருப்பிடம் வந்தடைந்திடுவான். ஷோபனா மகனுடன் தனியே இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை எங்கும் செல்ல அனுமதிக்காது. அங்கே சென்னையில் தன்னுடைய பெற்றவர்கள் உடனிருந்ததால் நேரத்தைப் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டான். அதுவுமில்லாமல் அக்கம் பக்கமிருந்தவர்கள் எல்லாம் நண்பர்கள், உறவினர்கள். பயமில்லாமல் இவனால் இருக்க முடிந்தது. ஆனால் இங்கே அவர்களுக்குப் பழக்கமானவர்கள் வெகு சொற்பம்.

அன்று அஷ்வினுக்கு உடல் நலமில்லாமல் போனபோதே ஷோபனா யாரிடம் உதவி கேட்பதெனத் தெரியாது நிற்கதியாய் நின்றுவிட்டாள். அப்போதே ரஞ்சனுக்கு வருத்தம்தான். இடமாற்றத்தை அவன் பெரிதாய் விரும்பவில்லை. பெற்றவர்களின் வற்புறுத்தலினாலே இங்கே குடி புகுந்திருந்தான். அவனது தந்தையும் தாயும் இங்கே வர இன்னும் ஒரு வருடமாகும். அதுவரை ஷோபனாவையும் அஷ்வினையும் கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு மனமெங்கும் வியாபித்திருந்தது.

ரஞ்சன் பெற்றவர்களிடம் பேசிவிட்டு அலுவலம் கிளம்ப, ஷோபனா உணவை ஊட்டிவிட்டு மகனைப் பள்ளிக்கு தயார் செய்தாள். அவனது கழுத்துப் பட்டை சற்றே விலகியிருக்க, அதை சரி செய்தவள், “அஷு... டிவியை ஆஃப் பண்ணு. போகலாம்...” என மகனின் பள்ளிப் பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு நடக்க, சின்னவனும் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு வெளியே ஓடினான்.

பள்ளிப் பேருந்திற்காக இவர்கள் காத்திருக்க, தினமும் வழக்கமாய் சந்தனாவும் மனோவும் வந்து நின்றனர். அஷ்வினும் மனோவும் ஒரே பள்ளியில்தான் பயின்றனர்.

முதல்நாள் சந்தனாவைப் பார்த்ததும் ஷோபனா தங்களுக்கு உதவி செய்தவள் என்ற வகையில் அவளைப் பார்த்து சிரித்தாள். இருவரும் பரஸ்பர புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். ஷோபனா சட்டென யாரிடமும் எளிதில் பழகிவிட மாட்டாள். அதனாலே ஒரு மாதமாய் வெறும் புன்னகை மட்டும்தான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

சிறியவர்களுக்கு அப்படியெந்த 144 தடையும் இல்லாததால் ஒருவருக்கொருவர் நட்பாகத் தொடங்கினர். அஷ்வின் மனோவை அண்ணா என அழைத்துப் பழக, அவனும் புதிதாய் கிடைத்த உறவை கைநீட்டி அணைத்துக் கொண்டான். இருவரும் காலையில் ஒன்றாய்தான் பேருந்தில் ஏறுவார்கள். வீட்டிற்கு வரும்போது கூட ஒன்றாய்தான் வருகைதருவர்.

அஷ்வின் சந்தானவிடம் ஒட்டிக் கொண்டான். இவனாகச் சென்று அவளிடம் பேசுவான். அவளும் தூக்கி வைத்துக் கொஞ்சுவாள். மனோவுக்கு சற்று பொறாமைதான். இருந்தும் அஷூவைத் தம்பியாய் ஏற்றுக் கொண்ட காரணத்தால் கண்டு கொள்ளவில்லை.

அங்கிருந்த கல்மேஜையில் ஷோபனா அமர்ந்திருந்தாள். அவளது விழிகள் அலைபேசியில் இருந்தாலும், மகனை அடிக்கடி பார்த்துக் கொண்டன.

மனோவும் அஷ்வினும் ஏதோ குசுகுசுவென பேச, சந்தனா அவர்களை சிரிப்புடன் பார்த்தாள். அஷூ இவளிடம் ஏதோ கேட்க வருவதும், பின்னர் தயங்குவதுமாய் இருக்க, “அஷூ..‌‌. இங்க வா!” என அழைத்தாள். இவனும் அவளருகில் சென்றான்.

“என்கிட்ட எதுவும் கேட்கணுமா?” என சந்தனா வினவ, “ஆமா ஆன்ட்டி...” என தலையை பலமாய் ஆட்டினான்.

“என்ன வேணும் அஷ்வினுக்கு?” இவள் அவனது உயரத்திற்கு குனிந்து தூக்கி தன்னருகே அமர்த்தினாள்.

“எனக்கு முட்டை சப்பாத்தி வேணும் ஆன்ட்டி...” எனக் கேட்டான் ஆசையாய்.

“முட்டை சப்பாத்தி தானே? கண்டிப்பா ஆன்ட்டி உங்களுக்கு சொஞ்சுத் தரேன்!” என அவனது கன்னத்தை வாஞ்சையாய் தடவினாள்.

“அம்மா எனக்கும்...” மனோகர் மறுபுறம் அவளது இடையோடு கட்டிக் கொள்ள, திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

“உனக்கும் செஞ்சுத் தரேன் டா...” என அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

“முட்டை சப்பாத்தி வித் பன்னீர் க்ரேவி வேணும் ஆன்ட்டி...” மறுபுறமிருந்து குரல் வரவும், அஷ்வினைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் புன்னகை கவிழ்ந்தது.

“பன்னீர் பிடிக்குமா அஷூவுக்கு?” சந்தனா கேட்க, “ரொம்பபபப பிடிக்கும் ஆன்ட்டி...” எனக் கையை விரித்துப் பாவனையாய்க் கூறியவனை கன்னங்கிள்ளி முத்தமிட்டாள். சின்னவன் லேசாய் வெட்கப்பட்டான்.

“ஆன்ட்டி... மனோ அண்ணாவுக்கும் உங்களுக்கும் கேக் கொண்டு வந்தேன். அம்மாவே குக் பண்ணாங்க. டேஸ்டா இருக்கும் ஆன்ட்டி...” என ஓடிச்சென்று பையைத் திறந்து ஒரு டப்பாவை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

“ஐ‌... கேக்...” என மனோ துள்ளலாய் ஒரு துண்டு அணிச்சலை எடுத்து சுவைக்க, “எனக்கு வேணாம் அஷூ. நீயும் மனோவும் சாப்ட்டுக்கோங்க...” என்றாள்.

“ஆன்ட்டி... நீங்களும் சாப்டணும். ஒரு பீஸ் எடுத்துக்கோங்க...” என அவன் விடாப்பிடியாய் நிற்க, இவள் ஒரு துண்டை எடுக்கவும், பேருந்து வந்துவிட்டது. இருவரும் கிளம்ப, ஷோபனா சந்தனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“சாரி... எனக்கு எக் அலர்ஜி. அதான் கேக் சாப்பிடலை. டோன்ட் மைண்ட் எனிதிங்க்” சந்தனா கூற, “ஐயோ... இட்ஸ் ஓகே. நான் எதுவும் நினைக்கலை டாக்டர்...” என அவள் கூற, இருவரும் ஒன்றாய் நடந்தனர்.

“உங்களுக்குப் பேக்கிங் தெரியுமா? கேக் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...”

“இப்போதான் கிளாஸ் போய்ட்டு இருக்கேன் டாக்டர். வீட்ல சும்மா இருக்கோமேன்னு ஒரு எண்ணம். அதுவுமில்லாம ரொம்ப நாளா கேக் செய்யப் பழகணும்னு ஆசை. அதான் கிளாஸ் ஜாய்ன் பண்ணேன்...” என்றாள்.

“ரொம்ப நல்ல விஷயம். குடும்பம் முக்கியம். பட், செல்ஃப் லவ்-உம் முக்கியம்தான். உங்களுக்குப் பிடிச்சதை செய்றதுல தப்பில்லை. என்ஜாய் பண்ணி கத்துக்கோங்க...” சந்தனா கூற, ஷோபி சிரித்தாள்.

“இது என்னோட பெர்சனல் சாட்டிஸ்பேக்ஷன்காக மட்டும் இல்ல. என் ஹஸ்பண்ட்காகவும் தான். அவரோட பெர்த்டேக்கு கேக் செய்ய ஆசை. ஆல்ரெடி ட்ரை பண்ணி அது ரொம்ப சொதப்பிடுச்சு. அப்போ அப்போ அவர் அதை வச்சு கிண்டல் பண்ணுவார். அதான் இந்த டைம் சர்ப்ரைஸா பண்ணிடலாம்னு இருக்கேன்...”

“உங்க ஹஸ்பண்ட் ரியலி லக்கி...”

“நிஜமா இல்ல டாக்டர். நான் தான் ரொம்ப லக்கி. அவர் என் மேல வச்சிருக்க அன்பையும் காதலையும் யார்கிட்டேயும் காட்டியிருக்க மாட்டார். இன்ஃபேக்ட் எங்களோட மேரேஜ் எனக்கு லவ் மேரேஜ், பட் ஃபார் ஹிம் அரேஜ்ட் மேரேஜ். ஆனால், இப்போ அதை யார்கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாங்க. நான் ரொம்ப இம்பெர்பெக்ட் எல்லா விஷயத்துலயும். அவர்தான் பார்த்துப்பாரு. அதனாலே அவரை ரொம்ப பிடிக்கும் எனக்கு...” என்றவளின் குரல் கணவன் மீதான அன்பில் கனிந்து போயிருந்தது.

சந்தனா அவளை அமைதியாய் சில நொடிகள் பார்த்தவள், “பெர்பெக்டா இருந்தா உங்களுக்கு யாரும் அவார்ட் தரப் போறாங்களா?” எனக் கேட்டாள் மெல்லிய புன்னகையுடன்.

“ஹாஹா... அவரும் இதையே தான் சொன்னாரு. நீங்களும் சொல்றீங்க. சேம் டயலாக், வார்த்தைக் கூட மாறாம!” ஷோபனா சிரிக்க, சந்தனா தனது கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள்.

“சாரி டாக்டர், ரொம்ப நாள் கழிச்சுப் பேச ஆள் கிடைக்கவும் மொக்கை போட்டுட்டேன் போல. உங்களுக்கு கிளினிக் டைம் ஆகிடுச்சா?”

“அட... அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. எனக்கு பத்து மணிக்குத்தான் அப்பாய்ன்மெண்ட். ஒரு பிராப்ளமும் இல்ல!”

“ஓகே டாக்டர்...”

“என் பேரு டாக்டர் இல்லைங்க, சந்தனா. நான் வாங்குன பட்டம்தான் டாக்டர். சோ, சந்தனான்னு கூப்பிடுங்க...” என்றாள்.

“ஷ்யூர் சந்தனா... நான் ஷோபனா...” மெல்லிய முறுவலுடன் மற்றவள் கூறினாள்.

“தெரியுமே... உங்க ஹஸ்பண்ட் ஷோபின்னு கூப்டுவாருல்ல. நான் பார்த்திருக்கேன்...” என்றவள், “ஓகே ஷோபனா, நாளைக்கு மீட் பண்ணலாம்...” என விடை பெற்றாள். ஷோபனாவும் வீட்டை நோக்கி நகர்ந்திருந்தாள். 

 

***

மறுநாள் சந்தனா பள்ளிக்குக் கிளம்பினாள். பூரணியுடன் அந்த வீட்டிற்கு செல்ல இவளுக்கு விருப்பமில்லை. வீட்டிலே இருந்து பள்ளிக்குச் செல்லலாம் எனத் தோன்றியது.

“அம்மா... நான் வீட்ல இருந்துக்கிறேன் மா. நீ மட்டும் போறீயா? வீட்ல இருந்தே நான் ஸ்கூலுக்குப் போறேன் மா...” என்றாள் சோர்வாக. அவளது முகத்தின் வீக்கம் இன்னும் குறையவில்லை. பூரணிக்குமே மகளை அங்கே அழைத்துச் செல்வதில் விருப்பமில்லை. ஆனால், அவளை தனியே வீட்டில் விட பயம். 

 

கணவர் இருந்திருந்தால் இதுபோல கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால், ஆண் துணையில்லாத வீடு‌. யாரை இந்தக் காலத்தில் நம்புவது எனத் தெரியவில்லை. அதுவுமின்றி அவர் முன்பிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் சந்தனா வயதையொத்த சிறுமி உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட, கண்முன்னால் நிகழ்ந்த எதையும் அவரால் புறக்கணிக்க முடியவில்லை. 

 

அவளுக்கு விபரம் தெரியும் வரை எங்கேயும் தனியே விடக்கூடாது என முடிவெடுத்திருந்ததால், தான் எங்கு சென்றாலும் அவளையும் உடன் அழைத்துச் சென்றார்.

“குட்டி‌‌... அம்மா அடிச்சதையே நினைச்சுட்டு இருக்கீயா?” என வருத்தமாய்க் கேட்டார்‌.

“இல்ல மா... இல்ல. அப்போவே அதை மறந்துட்டேன்...” என்றாள் அவசரமாய். தாய் தன்னால் வருத்தம் கொள்வதை அவளால் தாங்கிக்க முடியவில்லை.

“அம்மா கூடவே வா குட்டி. உன்னை தனியா வீட்ல விட்டுட்டு என்னால அங்க வேலை பார்க்க முடியாது...” என்று அவர் கூற, “சரி மா... போகலாம்...” என்றாள் புன்னகைத்து. தான் கூறியவுடன் புரிந்து கொள்ளும் மகளைப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதா? இல்லை அவளை அழைக்கழிப்பதற்கு வருந்துவதா எனத் தெரியாது பெருமூச்சை வெளிவிட்டவர் வேலைக்கு கிளம்பினார்.

சந்தனா அங்கே சென்றதும் நிழலான பகுதியில் அமர்ந்து புத்தகப்பைத் திறந்து வீட்டுப் பாடங்களைச் செய்யத் துவங்கினாள். தீனா அப்போதுதான் எழுந்து வந்தான். உணவுண்ணும் போதுதான் சந்தனா நினைவு வந்தது அவனுக்கு.

“ஆன்ட்டி... குட்டி வரலையா?” பூரணி பின்னே சென்று அவன் வினவ, ஒரு நொடி தயங்கியவர், “வெளிய இருக்கா...” என்றார்.

குடுகுடுவென ஓடி வந்த தீனா மூச்சிரைக்க அவள் பக்கத்தில் அமர்ந்தான். “குட்டி.‌..” என அவன் அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் சின்னவள்.

“குட்டி... உனக்குத்தான் இது. கோகனெட் சாக்லேட், யம்மியா இருக்கும்...” என அவள் முன்னே இன்னெட்டை நீட்டினான்.

“எனக்கு... எனக்கு வேணா தீனா. நீயே சாப்டுக்கோ...” என்றாள் தயக்கமாய்.

“இங்க பாரு... நான் இன்னொரு சாக்லேட் வச்சிருக்கேன். இது உனக்குத்தான் வாங்குனேன். டெய்லி தரேன்னு நேத்து சொன்னேன் இல்ல?” அவன் இன்னெட்டை அவளது புத்தகத்தின் மீது வைத்தான்.

“தீனா... எனக்கு பூச்சி பல்லு இருக்கா.‌. நேத்து சாக்லேட் சாப்ட்டதும் பல் வலிச்சது. அம்மா திட்டிட்டாங்க. இனிமே சாக்லேட் சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.‌..” ஏற்கனவே யோசித்து வைத்திருந்த பொய்யை கூறிவிட்டாள்.

“அப்டியா... உனக்கு பல்லு வலி சரியானதும் சாக்லேட் வாங்கித் தரேன். இதை நானே இப்போ சாப்ட்டுக்கிறேன்...” என இரு இன்னெட்டையும் அவனே உண்ண, அவள் குனிந்து வீட்டுப் பாடங்களை எழுதத் துவங்கினாள்.

“குட்டி... நேத்து மாதிரி இன்னைக்கும் விளையாடலாமா?” அவன் ஆர்வமாய் வினவ, “மண்ணுல விளையாடி ட்ரெஸ்ஸூ அழுகாகிட்டா, அம்மா திட்டுவாங்க தீனா...” என்றாள்.

“சரி... நம்ப வேற கேம் விளையாடலாம். எனக்கு நிறைய தெரியும்...” என்றான். சந்தனாவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது.

“தீனா... வீடியோ கேம் விளையாடலாமா... நான் அது விளையாண்டதே இல்ல. எப்படி விளையாடணும்னு எனக்கு சொல்லித் தரீயா?”

“குட்டி... வீடியோ கேம் நல்லா இருக்கும். நீ வா, நம்ப விளையாடலாம். மாமா ப்ளே ஸ்டேஷன் வாங்கிக் கொடுத்திருக்காரு...” அவன் கூற, சந்தனா புரியாது விழித்தாள்.

“நீ வா... மனோ ரூம்ல வீடியோ கேம் இருக்கும். விளையாடலாம்...” என்றான் துள்ளலாய்.

“இல்ல... இல்ல, நம்ப அந்தக் கேமை இங்கேயே விளையாடலாம். வீட்டுக்குள்ள வேணாம் தீனா!” இவள் மறுத்தாள்.

“ஐயோ குட்டி... வீடியோ கேம் இங்க வச்சு விளையாட முடியாது...”

“ஏன் முடியாது?”

“அதுக்கு ரிமோட், டீவி வேணும். அப்போதான் விளையாட முடியும்...” என்றான்.

“டீவில கேம் விளையாட முடியமா? எங்க வீட்ல படம் மட்டும்தான் வரும்...” அவள் யோசிக்க,

“ஆமா... உண்மைதான். நீ வந்தா நான் விளையாடிக் காட்றேன்...” என்றான்.

“இல்ல... நம்ப இங்கேயே வேற எதுவும் விளையாடலாம்..” என புத்தகத்தை மூடி வைத்தவள், “தீனா... பாவம் செடிக்கு பசிக்கும் இல்ல. அதுக்கு தண்ணீ ஊத்தீட்டு விளையாடப் போவோமா?” எனக் கேட்டாள்.

“அப்படியா... சரி, வா. நானும் ஊத்துறேன்...” என அவனும் முன்வர, இருவரும் சேர்ந்து செடிக்கு தண்ணீர் ஊற்றினர். சந்தனா சிறிய குடம் ஒன்றில் நீரைப் பிடித்து செடிகளுக்கு ஊற்ற, தீனா குடத்தைத் தூக்கத் தெரியாது வாரி இறைத்தான். அவள் மீதும் தண்ணீரை கொட்டிவிட்டான்.

அவளும் பதிலுக்கு அவன் மீது நீரைக் கொட்ட, அவன் இவளைத் துரத்தினான். மனோ மேலிருந்து இவர்களையே பார்த்திருந்தான்.

“போதும் தீனா... தண்ணீ ஊத்தாத. அம்மா பார்த்தா திட்டுவாங்க. ட்ரெஸ் வேற நனைஞ்சு போச்சு...” என்றவள் வெயில் அதிகமாக படுமாறு ஓரிடத்தில் நின்றாள்.

அலுவலகம் கிளம்பிய உமாநாதன் மகனைக் காண வந்தார். நேற்றிலிருந்து அவன் அமைதியாய் இருப்பதை பார்த்திருந்தார் தான். 

அவன் பார்வை ஜன்னலிலே இருக்க, எட்டிப் பார்த்தவர், “நீயும் போய் விளையாடு மனோ...” என்றார்.

“நான் அவங்களை என் கூட விளையாடக் கூப்ட்டேன். நிறைய டாய்ஸ், வீடியோ கேம் கூடத் தரேன்னு சொன்னேன். குட்டி வர மாட்றா‌...” என்றான் சோகமாய்.

“அவங்களை ஏன் கூப்பிட்ற. உனக்குத் தானே அவங்களோட விளையாடணும். அதனால நீதான் அவங்க இருக்க இடத்துக்குப் போகணும். முதல்ல கீழே போய் ரெண்டு பேரோட ஃப்ரெண்ட்ஸாகி விளையாடு. அப்புறம் அவங்களே உன்னோட வீடியோ கேம்ஸ் விளையாட வருவாங்க...” என்றார் மகனின் தலையைக் கோதி.

“நிஜமா வருவாங்களா பா?” இவன் திரும்பித் தந்தைப் பார்த்து வினவ, “நிச்சயமா வருவாங்க...” என்றார் மகனின் தலைக்கோதி.

“சரிப்பா... நான் கீழே போறேன்!” என அவன் அகல, மகனை மெதுவாகக் கூட்டிச் சென்றார்.

“தீனா இங்க வா...” என அவர் அழைக்க, அவன் இவரை நோக்கி வந்தான்.

“நீயும் வாம்மா...” என சந்தனாவையும் அழைத்தார். அவர்கள் இருவரும் வந்து நிற்க, “மனோவையும் உங்களோட விளையாட சேர்த்துக்கோங்க‌...” என்றார்.

“சரி மாமா... நான் கூப்ட்டேன். அவன்தான் வரலை!” தீனா புகாரளிக்க, சந்தனா தயக்கமாய், “சரிங்க சார்...” என்றாள்.

“இந்தாங்க... மூனு பேரும் ஷேர் பண்ணிக்கோங்க...” என அவர் இன்னெட்டுகளை சந்தனாவிடம் நீட்ட, அவள் வாங்கவில்லை.

“மாமா... சந்தனாவுக்கு பூச்சி பல்லு, வலி இருக்காம். அவங்கம்மா சாக்லெட் சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்...” தீனா கூற, அவர் அவளைப் பார்த்தார்.

“டாக்டர் கிட்டே போனீயா மா... இப்போ வலி பரவாயில்லையா?” அவர் கேட்க, என்னப் பதிலுரைப்பது எனத் தெரியாது திணறியவள், தலையை மட்டும் அசைத்தாள். அப்போதுதான் அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தவர், “கன்னம் ஏன் மா வீங்கி இருக்கு?” எனக் கேட்டார். கைரேகை தெரிந்தது அவருக்கும்.

“அது... சார்... நேத்து விளையாடும்போது கீழே விழுந்துட்டேன். அடி பட்டிருச்சு சார்...” என்றாள். தாய் அடித்ததைக் கூற பிஞ்சுக்கு மனம் வரவில்லை. உமாநாதனுக்கு அவள் பொய்யுரைக்கிறாள் எனத் தெரிந்தாலும் மேலும் எதையும் கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

“சரி மா... இனிமே பார்த்து நட...” என்றதோடு அகல, மனோ இருவரையும் பார்த்தான்.

“மனோ, நீ முன்னாடியே வந்திருக்கலாம் இல்ல. நாங்க தண்ணீல ஜாலியா விளையாண்டோம்...” தீனா உற்சாகமாகக் கூறினான்.

சந்தனாவிற்கு மனோவை தங்களோடு சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. அவன் அடித்தது ஒரு காரணம் என்றால், நேற்று அவன் தாயிடம் மாட்டிவிடுவேன் எனக் கூறி மிரட்டியது மற்றொரு காரணம். அவனோடு விளையாடும் போது தாய் பார்த்து திட்டுவாளோ என பயமும் எழுந்தது. ஏற்கனவே நேற்று வாங்கிய அடியில் இன்னுமே கன்னத்தைத் தொட முடியவில்லை. வலிக்கவில்லை என பூரணியிடம் கூறினாலும் முதுது இப்போது வரை எரிந்தது. காலையில் குளிக்கும் போது நீர் பட்டதும் வலித்தது. பூரணி அறியாது தேங்காய் எண்ணெயை எடுத்துப் பூசிக் கொண்டாள். இதுபோல மீண்டும் அடிவாங்க விருப்பமில்லை. அதனாலே மனோவுடன் விளையாடலாமா? வேண்டாமா? எனத் தன் அம்மாவிடமே கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தாள்.

“குட்டி... வா, நம்ம ஹைட் அண்ட் சீக் விளையாடலாம்..” தீனா கூற, “குட்டி... ஸ்கூலுக்கு டைம் ஆச்சு... கிளம்பு...” எனப் அன்னப்பூரணி உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

“இதோ போறேன் மா...” என்றவள், “சாயங்காலம் விளையாடலாம் தீனா. ஸ்கூலுக்குப் போறேன்...” என்றவள் சிதறிக் கிடந்த பொருட்களைப் பையில் எடுத்து வைத்துவிட்டு கிளம்பினாள். மனோ அவள் தன்னுடன் விளையாடவில்லை என முறைத்துப் பார்த்தான்.

“ம்மா... பாய் மா, வரேன்...” அவள் வீட்டினுள்ளே நுழையாது வெளியே நின்றே கத்திக் கூற, “பார்த்துப் போ குட்டி. நேரா ஸ்கூலுக்குத்தான் போணும்...” என்று அவர் கூறியவற்றிற்கு தலையாட்டி நகர்த்திருந்தாள் சந்தனா.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page