All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 6 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 36
Topic starter  

‌அன்பு – 6 💖

மாலை மங்கிய இரவு நேரத்தில் அந்த பல்பொருள் அங்காடி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை முடித்து உழைத்து களைத்து சோர்ந்த முகங்கள்தான் முழு அங்காடியையும் ஆக்கிரமித்திருந்தனர்.

குழந்தைகளுக்கு அந்த சோர்வெல்லாம் இல்லை போல. ஓடியாடியபடி தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

மகிழுந்தை நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்த ரஞ்சனுக்கு ஐயோவென்றானது. இந்தக் கூட்டத்தில் எப்படி பொருட்களைத் தேடி எடுப்பதென அலுப்புத் தட்டியது. கைபேசி இசைக்க, அழைப்பு ஏற்று காதெலிப்பானில் இணைத்து அதை செவிக்கு ஈன்றான்.

“சொல்லு ஷோபி, என்ன வாங்கணும்?” என்றவனின் விழிகள் கடையை அலசின.

“காலைல சட்னில உப்பு கூடிருச்சே. ஏன் நீங்க சொல்லலை?” அதிமுக்கியமாய் கேள்வி கேட்ட மனைவியை இங்கிருந்தே முறைத்துத் தள்ளினான்.

“அது ரொம்ப முக்கியமாடி இப்போ?” என்றவன், “என்னென்ன வாங்கணும்னு முதல்ல சொல்லு டி!” என்றான் சற்றே கடியாய்‌. அதில் எதிலிருப்பவள் முகம் சுணங்கிப் போனது.

“வாட்சப் பண்றேன். அதை மட்டும் வாங்கிட்டு வாங்க!” என அவள் அழைப்பைத் துண்டிக்க, “ச்சு...” என உச்சுக் கொட்டியவன் புலனத்தில் தொடர் சங்கிலியாய் வந்து விழுந்த செய்தியைத் திறந்தான்.

“பால்பாக்கெட் 2, தேங்காய் 1” என உதடுகள் முணுமுணுக்க, தேவையானவற்றை தள்ளும் கூடையில் எடுத்து வைத்தவாறு கூட்டத்தில் கலந்தான்.

“பன்னீர் எங்க இருக்குன்னுத் தெரியலையே!” என விழிகளை சுழலவிட்டவன் அது அகப்பட்டதும் அருகே சென்று பன்னீரை எடுத்துக் கூடையில் சேர்த்தான்.

“மேகி வாங்கித் தராம நான் வர மாட்டேன் மா!” கையைக் கட்டிக்கொண்டு நின்ற மகனை சந்தனா கண்டு கொண்டதாய் தெரியவில்லை. தனக்குத் தேவையானவற்றிலே அவளது கவனம் குவிந்தது.

“ம்மா... மேகி வேணும்!” அடம்பிடித்தபடி அவளது முந்தியைக் கைகளில் சுற்றினான்.

“மேகி இஸ் நாட் குட் பார் ஹெல்த்!” இவள் கூற, “நோ... ஒன் டே மா. ப்ளீஸ் மா!” என்றான் சின்னவன். கண்கள் பளபளத்தன அவனுக்கு. அவன் அழுவது தெரிந்தாலும் இவள் எதிர்வினையேதும் ஆயாற்றவில்லை. அழுகிறான் என ஒருமுறை துரித உணவுகளை வாங்கிக் கொடுத்தால், கண்டிப்பாக வேறு எதுவாகினும் இதே குணம் தலை தூக்கும் என அமைதியாய் இருந்தாள்.

“ஏன் சந்தனா மா, ஒருநாள் தானே கேக்குறான். வாங்கித் தரலாமில்ல?” லட்சுமி மனோவுக்கு ஆதரவு கரம் நீட்ட, “பாட்டீ!” என அவரை கட்டிக் கொண்டு தேம்பினான்.

“லட்சுமி மா... அவனைக் காருக்கு கூட்டீட்டு போங்க. நான் பில் போட்டுட்டு வரேன்!” பேச்சு முடிந்தது என்பது போல அவள் பணம் செலுத்துமிடம் விரைய, லட்சுமி அழும் மனோகரை சமாதானம் செய்தவாறே சென்றார்.

ரஞ்சன் அவர்கள் உரையாடலைக் கேட்டாலும் கைகள் தன் போல பொருட்களை தேடி எடுத்தன. கடைசியாய் அவர்களை அன்று மின்தூக்கில் சந்தித்தது. அடுத்து ஒரு வாரம் கடந்திருக்க, சந்திக்கும் வாய்ப்பின்றி போனது.

ரஞ்சனும் பணம் செலுத்துமிடம் சென்றான். இவனுக்கு முன்னேதான் சந்தனா நின்றிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிலர் நின்றிருக்க, கூட்டம் மெதுவாய் நகர்ந்தது.

அவள் தனக்குரிய பணத்தைச் செலுத்தவும், “டென் ருபீஸ் சேஞ்ச் இருந்தா கொடுங்க மேடம்...” என பணியாள் வினவ, இவள் பணப்பையைத் துழாவினாள்.

“சேஞ்ச் இல்லையே மா...” என சந்தனா பதிலளித்து முடிய அவளுக்குப் பின்னிருந்து ஒரு கரம் பத்து ரூபாய் தாளை நீட்டியிருந்தது. இவள் யாரென பார்க்க, ரஞ்சன் நின்றிருந்தான்.

“சார், பரவாயில்லை. நானே கொடுத்துக்குறேன்...” சந்தனா கூற, “பத்து ரூபால கோட்டைக் கட்டிட மாட்டேன் டாக்டர். இட்ஸ் ஓகே...” எனப் புன்னகைத்தவன், கடை ஊழியரிடம் தான் எடுத்தப் பொருட்களை நீட்ட, இவள் நிற்பதா செல்வதா எனத் தெரியாது தயங்கி நின்றாள்.

இரண்டு நிமிடங்களிலே ரஞ்சன் வந்துவிட, இருவரும் ஒன்றாகவே வாகனத் தரிப்பிடம் சென்றனர்.

லட்சுமி பின்னிருக்கையில் அமர்ந்திருக்க, அவர் மடியில் படுத்திருந்த மனோ தாயைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதில் இவளுக்கு முறுவல் பிறந்தது. வாகனத்தை உயிர்பித்து சாலையில் கலந்தாள். ரஞ்சனும் தன் மகிழுந்தை ஒரே சீராக அவளுடனே இயக்கினான்.

 

அடுக்குமாடிக் கட்டிடம் வந்ததும் லட்சுமி பொருட்களை எடுத்துக்கொண்டு மனோவுடன் முன்னே செல்ல, இவள் மகிழுந்தை நிறுத்திவிட்டு வந்தாள். ரஞ்சனும் அவளும் மின்தூக்கியில் நுழைய, ஏற்கனவே அது நிரம்பி வழிந்தது. அவன் இரண்டு கைகளிலும் பையுடன் இருக்க, இவள் இரண்டெட்டு பின்னகர்ந்து படிகட்டில் கடகடவென ஏறத் துவங்கினாள். ரஞ்சன் எதுவும் கூறாது மின்தூக்கியில் இருந்த இடத்தில் தன்னைப் புகுத்திக் கொண்டான்.

“சொல்லு குகா...” சந்தனா ஒலியெழுப்பிய அலைபேசியை உயிர்பித்து செவிக்கு ஈன்றாள்.

“டிக்கெட் புக் பண்ணிட்டேன்...” அவன் கூற, இவளது முகம் மலர்ந்தது.

“ரொம்ப நல்லது, எப்போ புக் பண்ணிருக்க?”

“பிப்ரவரில...”

“இன்னும் மூனு மாசம் ஆகுமா டா?”

“ஆமா, அதுவரைக்கும் அப்பாய்ன்மெண்ட்ஸ் இருக்கு. என்னால கேன்சல் பண்ண முடியாது. வெய்ட் பண்ணித்தான் ஆகணும்...” என்றவன் குரலில் ஏக சலிப்பு. இரண்டு வருடத் தனிமை வாழ்க்கை எத்தனையோ பாடங்களைப் புகட்டி இருந்தது. அவனே ஏற்றுக் கொண்டது எனினும் அத்தனை கசந்தது யாருமற்ற வாழ்வு. வீடு நுழைந்ததும் மனைவி மகன், மகள் என மூவருடைய சிரித்த முகத்திற்கு ஏங்கினான்.

“ஏன் இவ்வளோ சலிச்சுக்குற குகா... போகும் போதே சொன்னேன். பேசி தீர்க்கலாம்னு. ஆனால் சார்தான் வீராப்பா மகளை மட்டும் கூட்டீட்டு போனது!” என அதட்டியவள், “ரெண்டு வருஷம் போய்டுச்சு. மூனு மாசம்தானே, சீக்கிரம் பறந்துடும். எதையும் நினைச்சுக்காம வந்து சேரு. நானும் உன்னையும் பாப்பாவையும் ரொம்ப மிஸ் பண்றேன்...” என்றாள் உணர்ந்து.

“ஹம்ம்... வரேன்!” என்றவன் பொதுவான பேச்சிற்குத் தாவியிருந்தான்.

தான் வந்தும் முகத்தைக் கூடப் பார்க்காத மனைவியின் செயலில் ரஞ்சனுக்கு புன்னகை பூத்தது. எதுவும் கூறாது உடை மாற்றி வர, அஷ்வின் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் பொம்மைப் படம் பார்த்துக் கொண்டிருந்தான். இவன் வந்ததை கவனிக்காத அளவுக்கு அவன் திரையில் மூழ்கி இருந்தான். சமையல் கூடத்தை எட்டிப் பார்த்தான். சுடசுட இவனுக்கு தேநீர் சமையல் மேடையில் இருந்தது.

ஷோபனா மறுபுறம் நின்று பன்னீரை சிறு துண்டுகளாக கர்ம சிரத்தையாக வெட்டிக் கொண்டிருந்தாள்‌. அருகில் அவன் அரவம் உணர்ந்தும் நிமிரவில்லை‌.

ரஞ்சன் தேநீரை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவன், “ஷோபி, டீல சுகர் போடலையா?” எனக் கேட்க, விழுக்கென நிமிர்ந்தவள், “ச்சு... போட மறந்துட்டேன் போல!” என நெற்றியில் லேசாய் தட்டிவிட்டு சர்க்கரை டப்பாவை அவள் அவசரமாய்த் தேட, இவனது சிரிப்பு அவளைத் தொடர்ந்தது. அவன் தன்னிடம் விளையாடுகிறான் என்பதை உணர்ந்து முறைத்தாள்.

“பொய் சொன்னீங்களா?” தன்னை முறைத்த மனைவியின் தோளில் கையைப் போட்டு இழுத்தணைத்தவன், “ஆமா... பின்ன மனுஷன் உழைச்சு களைச்சு ஆபிஸ்ல இருந்து வந்ததும் பொண்டாட்டி சந்தோஷமா என்னை இன்வைட் பண்ணுவான்னுப் பார்த்தா, மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கா!” என்றான் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியபடி.

அவனது கையைத் தட்டிவிட்டவள் பன்னீரை நறுக்கத் துவங்க, “என்னடி?” என வாஞ்சை ததும்பிய குரலில் கேட்டவனிடம் அட்சர சுத்தமாய்க் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“ப்ம்ச்...” என நிமிர்ந்தவள், “நான் ரொம்ப இம்பெர்பெக்ட்-ஆ இருக்கேன் ரஞ்சன்...” என்றாள் சோர்ந்தக் குரலில். சில நாட்களாகவே அவளுக்கு தாழ்வு மனப்பான்மை அரித்தது.

“பெர்பக்டா இருந்தா யாரும் உனக்கு அவார்ட் தர போறாங்களா ஷோபி?” என கிண்டலாய் உரைத்தவனை மென்மையாய் முறைத்தாள்.

“ஒன்னைப் புரிஞ்சுக்கோ ஷோபி. எல்லாத்துலயும் எல்லாரும் பெர்பெக்டா இருக்க முடியாது!”

“எனக்கு குக்கிங் கூட ஒழுங்கா தெரியலை. வீட்டை சுத்தம் பண்ணத் தெரியலை. அஷூவை தனியா ஹேண்டில் பண்ண முடியலை...” குரலில் ஆற்றல் வடிந்திருந்தது. வீட்டில் தனிமையில் இருப்பது அவளை யோசிக்க வைத்துவிட்டதோ என எண்ணியவன்,

“ஷோபி, குக்கிங் எல்லாம் கத்துக்கிட்டா ஈஸி‌. அங்க அம்மா உன்னைக் குக் பண்ண விடலை. அஷ்வினைக் கேர் பண்றது உன்னோட பொறுப்பு மட்டும் இல்ல. அது நம்மளோட ரெஸ்பான்சிபிலிட்டி. சேர்ந்தே செய்யலாம். தெரியலன்னா கத்துக்கலாம். எதையும் போட்டு மனசைக் குழப்பிக்காத டி...” என்றான் மென்மையாய். அவன் பேச்சில் ஷோபனாவின் மனம் கொஞ்சம் சமாதானமடைந்திருந்தது.

“ஹம்ம்...” எனத் தலையை உருட்டியவள் வெங்காயத்தையும் தக்காளியையும் எடுத்து வைக்க, இவன் தன்புறம் நகர்த்தி வெட்டத் தொடங்கினான்.

“நான் பார்த்துக்குறேன். நீங்க இப்போதானே வந்தீங்க. கழுத்து வேற வலிக்கப் போகுது!” என அவன் கையிலிருந்து கத்தியை பிடுங்க முயன்றாள். ஆனால் அவன் விடாது வேலையைத் தொடரவும், இவளும் விட்டுவிட்டாள்.

பன்னீர் குருமாவை வாசம் பிடித்து வந்த மகனை இருவரும் சிரிப்புடன் பார்த்தனர். ஏனோ அஷ்வினுக்கு பன்னீர் மீது தனிப்பிரியம். சூடாய் ஷோபனா சப்பாத்தியை சுட, ரஞ்சன் மகனுக்கு உணவை ஊட்டினான். உண்டு முடித்து தந்தையிடம் கெஞ்சி கொஞ்சி அரைமணி நேரம் மட்டும்தான் எனக் கேட்டு அவனது அலைபேசியை எடுத்துக்கொண்டு சின்னவன் அறைக்குள் நுழைந்தான்.

“போனைக் கொடுத்துப் பழகாதீங்கன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” ஷோபனா முறைக்கவும், “நான் என்னடி பண்ண‌. கெஞ்சி வாங்கிட்டுப் போய்ட்டான்...” என்றவனை மேலும் முறைத்துவிட்டு இருவருக்கும் சப்பாத்தியை சுட்டு முடித்தாள்.

“குருமால உப்பு உறைப்புன்னு எல்லாமே கரெக்டா இருக்கு. டேஸ்டா இருக்கு...” என்றவனை முறைக்க முயன்று தோற்றவளின் முகம் மலர்ந்தது.

“பேசாம சாப்டுயா...” என்றாள் அதட்டலாய்.

“மரியாதை தேயுதே...” என அவன் கேட்க, சிரிப்புடன் இருவரும் உண்டு எழுந்தனர். ரஞ்சன் அறைக்குள் நுழைய, கைபேசியில் விளையாடியவாறே அஷ்வின் உறங்கியிருந்தான். அதை எடுத்து தூரம் வைத்தவன், போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திவிட்டான்.

ஷோபனா மீதமானவற்றை குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தினாள். ரஞ்சன் நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டிருந்தான்.

அறைக்குச் சென்று எண்ணெய் எடுத்து வந்தவள் ரஞ்சனின் கழுத்தில் மென்மையாய் தேய்த்தாள். குனிந்தே வேலை பார்ப்பதால் சில சமயம் அவனுக்கு கழுத்துவலி வருவதுண்டு. இன்றும் வலி இருப்பதாய் அவன் செய்கையை உணர்ந்து மனைவி தேய்த்துவிடவும், அவனுக்கு முறுவல் பிறந்தது.

“சுகமா இருக்கு டி...” எனக் கழுத்தை அவளுக்கு வாகாக வளைத்தான்.

“உன் கைல மேஜிக் எதுவும் வச்சிருக்கியா ஷோபி?” பெய்ன் பறந்து போய்டுச்சு...” என்றவனிடம் சிரித்து வைத்தாள் பெண்.

“போதும்... வா, வந்து உட்காரு...” என அவளை அருகே அமர்த்த, அவன் மடிமீது படுத்துக் கொண்டவள், தொலைவியைக்கியை எட்டி எடுத்து பாடலை ஒலிக்கவிட்டாள். அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு பாடல் ஓடிக் கொண்டிருக்க, இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து சிரித்தனர். 

 

ரஞ்சனின் சிரிப்பு சில நிமிடங்கள் நீள, “போதும்... போதும். சிரிக்காதீங்க...” என சிணுங்கியவளின் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான் கணவன்.

அவளுக்கும் அவனுக்குமான படம் அலைபாயுதே. திருமணமான புதிதில் ஷோபனா இந்த படத்தின் நாயகன் கார்த்திக் போல ரஞ்சன் தன்னை சுற்றி வந்து காதலிக்க வேண்டும் என கனவு கண்டதாகவும், நிஜத்தில் அதற்கு எதிர்மாறாய் நடந்ததாகவும் கூற, ரஞ்சனுக்கு அப்படியொரு சிரிப்பு. அன்றிலிருந்து இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் அவனது முகத்தில் புன்னகையைத் தோற்றுவிப்பன.

“ஷோபி, ஜாப் எதுவும் ட்ரை பண்றீயா?” அவள் முடியைக் கோதியவாறே ரஞ்சன் வினவ, “ஹம்ம்... வேணாம்ங்க. இன்ட்ரெஸ்ட் இல்ல...” என்றாள்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தாள். அஷ்வின் இரண்டாம் மாதம் வயிற்றில் உதித்துவிட, கர்ப்பக் காலத்திற்கே உரிய வாந்தி, மயக்கம் அவளை பாடாய்படுத்தியது. அதனாலே வேலையை விட்டுவிட்டாள். அதன் பிறகு அஷ்வின் பிறந்து, அவனை கவனிக்க என நாட்கள் உருண்டோட, ஷோபனாவிற்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் அற்றுப் போயிருந்தது.

“சரி, அப்போ வேற எதாவது கிளாஸ் ஜாய்ன் பண்றீயா?” எனக் கேட்டான்‌. மகன் பள்ளிக்குச் சென்றுவிட, தானும் அலுவலகம் செல்வதால், மனைவி வீட்டில் தனிமையை உணர்கிறாள் என அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“ஹம்ம்... நானும் யோசிச்சி இருக்கேன் ரஞ்சன். என்ன பண்றதுன்னு இன்னும் டிசைட் பண்ணலை...”

“யெஸ், என்னென்னு முடிவு பண்ணு. பார்த்துக்கலாம்...” என்றான். ஷோபனாவிற்கு உறக்கம் விழிகளைத் தழுவ, எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டே அறைக்குள் நுழைய, “பார்த்துப் போடி...” என்றவன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு வந்து மனைவியையும் இறுக அணைத்துப் படுத்துக் கொண்டான். ஷோபனாவும் அவன்புறம் திரும்பி படுத்தாள். சுகமான நித்திரையை தழுவினர்.

 

***

 

சந்தனா கண்களில் சரசரவென கண்ணீர் வடிய உண்டு கொண்டிருந்த உணவு டப்பாவை தீனாவின் கையில் கொடுத்தாள். மனோவை முறைத்துப் பார்க்கத்தான் நினைத்தாள். ஆனாலும் அழுகை வந்து தொலைத்தது.

“குட்டி, நீ அழாத. மனோ சும்மாதான் சொல்றான். அவன் அத்தைகிட்டே சொல்லிக் கொடுக்க மாட்டான்!” தீனா அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டான். சந்தனா அப்படியா என்பது போல மனோவைப் பார்க்க, “பொய் எல்லாம் இல்ல‌. உண்மையைத்தான் சொல்றேன்...” என அவன் திரும்ப, இவள் எட்டி அவனது கையைப் பிடித்தாள்.

“மேடம்கிட்ட சொல்லிடாத... தெரிஞ்சா திட்டுவாங்க. ப்ராமிஸா இனிமே எதுவும் உங்க வீட்ல சாப்பிட மாட்டேன்!” என்றவளின் விழிகள் தளும்பி நின்றன.

“அம்மாகிட்ட சொல்லக் கூடாதுன்னா, நீங்க ரெண்டு பேரும் என் கூட விளையாட வரணும். என் ரூம்ல விளையாடலாம்!” என்றான்.

சந்தனா அவன் கையைவிட்டவள், “வீட்டுக்குள்ள வந்தா மேடம் திட்டுவாங்க. அம்மா வையும். நம்ப இங்கயே விளையாடலாம்...” என்றாள் அவனை சமாதானம் செய்யும் நோக்கில்.

“என்னால இங்க விளையாட முடியாது...” என மனோ கூற,

“குட்டி... மனோ வீடியோ கேம் வச்சிருக்கான். நம்ப மூனு பேரும் விளையாடலாமா? ஜாலியா இருக்கும்...” என தீனா இடை புகுந்தான்.

“இல்ல தீனா... வீட்டுக்குள்ள வேணாம், ப்ளீஸ், இங்கேயே விளையாடலாம். மேடம்க்கு தெரிஞ்சா அம்மாவை வேலையை விட்டு அனுப்பிடுவாங்க. அம்மா அழுவாங்க...” என்றாள் தேம்பலாய்.

“நான் அம்மாகிட்ட சொல்றேன்...” என மனோ நடக்க, இருவருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. தீனாவுக்கு வேறு தன்னால் குட்டி திட்டுவாங்கப் போகிறாளோ என எண்ணம் முகிழ்க்க, “குட்டி... நீ போய் கையைக் கழுவு. நான் டிபன் பாக்ஸை ஒளிச்சு வைக்கிறேன். அத்தை வந்தா நம்ப பொய் சொல்லிடலாம்...” என்றான். சந்தனாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கையை மட்டும் கழுவி வந்தாள்.

தீனா மணலில் சிறு குழி தோண்டி அதில் டப்பாவை போட்டு மூடிவிட்டான். இனி அத்தையால் இதைக் கண்டு பிடிக்க முடியாது என எண்ணியவன், சந்தனா அருகில் சென்று நின்று கொண்டான்.

சதாம்பிகா மனோவுடன் வந்தார். சந்தனா அவரைப் பயத்துடன் பார்க்க, “தீனா, மனோ கூட விளையாட வேண்டியது தானே? ரூம்ல போய் வீடியோ கேம்ஸ் விளையாடுங்க. மாமா நிறைய வாங்கிக் கொடுத்துருக்காரு...” என்றார்.

“சரி அத்தை...” என அவன் கூற, “ம்மா... அவளையும் வர சொல்லுங்க. மூனு பேரும் சேர்ந்து விளையாட்றோம்...” மனோ சந்தனாவைக் கைக் காட்டினான். அவளை உள்ளே அழைக்க சதாவிற்கு விருப்பமில்லை. நீண்ட நாட்கள் கழித்து மகன் இயல்பிற்கு மீண்டிருக்க, வேறு வழியின்றி அவளையும் அழைத்தார்.

“நீயும் அவங்களோட சேர்ந்து விளையாடு... வா!” என அவர் கூற, தீனா, “குட்டி... வா!” என துள்ளலாய் அவளது கையைப் பிடித்தான்.

அவனது கையை தன்னிடமிருந்து பிரித்தவள், “இல்ல மேடம்... நான் வரலை!” என்றாள். கொஞ்சம் ரோஷமும் அவர் தன்னைத் திட்டிய தினமும் நினைவு வந்தது அவளுக்கு. சின்னப் பிள்ளை எனினும் அவரது கோபமுகம் மனதிலே தங்கிவிட்டது. எல்லாவற்றிற்கும் முதல் அவர்களே அழைத்தால் கூட உள்ளே வரக்கூடாது என பூரணி மகளிடம் பலமுறை அறிவுருத்தியிருந்தார்.

‘திமிறைப் பாரேன் இந்த சின்னத்துக்கு...’ என நினைத்த சதா, “அவ வரமாட்டேன்னு சொல்றா இல்ல. நீங்க ரெண்டு பேரும் விளையாடுங்க...” என்றார் மகனிடம்.

“இல்ல மா... குட்டியும் வரட்டும். அப்போதான் விளையாடுவோம்...” எனப் பிடிவாதமாய் மனோ நிற்க, மகனை அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“பூரணி...” இவர் குரல் கொடுக்க, செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்தார் அன்னப்பூரணி.

மகள் அனைவருடனும் நிற்கவும், அவள் ஏதும் செய்துவிட்டாளோ என்ற பதைபதைப்புடன் அவர்கள் அருகே விரைந்தார்.

“சொல்லுங்க மா...” என்ற பூரணியின் பார்வை மகளை ஒரு முறை தொட்டு மீண்டது.

“மனோவும் தீனாவும் உன் மகளை விளையாடக் கூப்பிட்றாங்க. நான் அன்னைக்கு ஏதோ ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு அவ உள்ள வர மாட்றா. நீ அவளை உள்ளே கூப்பிடு...” என்றார்.

சில நொடிகள் யோசித்த பூரணி, “இல்ல மா, அவ வெளியே விளையாடட்டும். உள்ள வர வேணாம். சின்ன புள்ளை எதையும் உடைச்சுட்டான்னா போச்சு...” என்றார். அன்று சதாம்பிகா கூறிய வார்த்தைகள்தான். அவருக்குப் புரிந்ததும் எரிச்சல் படர்ந்தது.

‘ஒன்னுமே இல்லைனாலும் ஆத்தாளுக்கும் மகளுக்கும் ரோஷம் மட்டும் வரும்...’ என நினைத்தவர், “மனோ, தீனாவோட விளையாடு நீ...” என விறுவிறுவென உள்ளே நுழைந்துவிட்டார்.

மனோ எதுவும் பேசாது உள்ளே சென்றுவிட, தீனா சந்தனாவைப் பார்த்தான்.

“குட்டி... நாளைக்கும் வருவீயா நீ?” எனக் கேட்டான்.

“ஆமா, டெய்லி வருவேன்!” என அவள் கூற, “சரி, அப்போ நாளைக்கு நம்ப விளையாடலாம். இப்போ நான் மனோவோட கொஞ்ச நேரம் விளையாட்றேன். அவன் பாவம் இல்ல, தனியா இருக்கான்...” என்க, இவள் தலையை அசைத்தாள். பூரணி முன்பே உள்ளே சென்றுவிட்டார்.

அனைவரும் அகன்றதும் சந்தனா பூந்தொட்டிகள் பக்கம் சென்றாள். அப்போதுதான் அவற்றிற்கு தண்ணீர் விடாதது நினைவு வர, டப்பாவில் நீரைப் பிடித்து செடிகளுக்கு ஊற்றத் தொட்ஙகினாள். வெள்ளை நிற ரோஜா அழகாய்ப் பூத்திருந்தது. சிவப்பு வண்ண ரோஜா மட்டுமே அவள் பார்த்திருக்கிறாள். வெள்ளையைக் கண்டதும் தாயிடம் ஆர்வமாய் என்னவென விசாரித்துவிட்டாள்.

“அம்மா... நம்மளும் ரோஜா செடி வளர்க்கலாமா? வெள்ளை ரோஜா மா.. அழகா இருக்குல்ல?” என இவள் அடிக்கடி தாயிடம் கேட்டுக் கொண்டே இருக்க, பூரணி வாங்கித் தருவதாக உரைத்திருந்தார். ஆனால், அது என்றைக்கென அவர் கூறிப்பிட்டிருக்கவில்லை.

செடிக்கு தண்ணீர் ஊற்றி முடித்ததும் அவளது சிந்தனை தீனா கூறிச் சென்ற ‘வீடியோ கேம்’ என்ற வார்த்தையில் தேங்கி நின்றது.

‘என்ன கேமா இருக்கும்? அதை இங்கேயே விளையாடலாம் இல்ல. தீனா வரட்டும், நம்ப மண்லயே அந்த கேமை விளையாடலாம்’ என எண்ணிக் கொண்டாள். பூரணி வேலை முடித்து வர, செல்லும் வழியில் கோழிக்கறி வாங்கிச் சென்றவர், அவள் கேட்ட கறிச்சோறை சமைத்துக் கொடுத்தார்.

“குட்டி... வா, வந்து சாப்பிடு. நீ கேட்ட கறிசோறு செஞ்சிருக்கேன்...” என மகளுக்குப் பூரணி ஆசையாய் பறிமாற, அவளுக்கு உணவுண்ணும் ஆசை போயிருந்தது. தீனா சொன்ன விளையாட்டைப் பற்றி யோசித்தவாறு அமர்ந்திருக்க,

“குட்டி... என்னடி அப்படியொரு யோசனை. சாப்பிடு...” என அவர் அதட்டவும், இவள் உண்ணத் தொடங்கினாள். காலையில் தீனா கொடுத்த உணவு சுவையாய் இருந்தது. இது அத்தனை சுவையாய் இல்லயெனத் தோன்ற, “அம்மா..‌. தீனா கொடுத்த கறிசோறு இதைவிட நல்லா இருந்துச்சு மா...” என்றாள்.

மகளைப் பார்த்த பூரணி, “தீனா கிட்டே சாப்பாடு வாங்கி சாப்டீயா நீ?” என்றவர் குரல் உயர்ந்ததும்தான் சந்தனாவிற்கு உறைத்தது. தாய்க்கு தான் உண்டது தெரியாது எனப் புரிந்தவள், என்ன சொல்வதென்று அறியாது பயத்துடன் பார்த்தாள்.

“சொல்லு குட்டி, அவன்கிட்ட கறிசோறு கேட்டீயா?” என மகள் முதுகிலே பளீரென அடித்தார். சுள்ளென வலிக்கவும், இவள் எழுந்து சுவரோடு ஒன்றிவிட்டாள்.

“அம்மா... இல்ல மா, நான் அவன்கிட்ட கேக்கலை மா. அவன்தான் கொடுத்தான் மா. நான் வேணாம்னுதான் சொன்னேன். அவன்தான் கொடுத்தான் மா...” என்றாள் தேம்பியபடி.

“அவன் கொடுத்தா நீ வாங்கி சாப்டுவீயா? நான் என்ன சொல்லிருக்கேன் உன்கிட்ட. அவங்க எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” எனக் கேட்டு அவளது கன்னத்திலே அறைந்தார். பூரணிக்கு சதாம்பிகா வீட்டில் எதையும் வாங்கி உண்பதில் சுத்தமாய் விருப்பமில்லை. வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் சதா மீதமிருந்த உணவை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து இவரிடம் கொடுத்தார்.

அந்த பாத்திரத்தை அவர் வேலையாட்களுக்காக மட்டுமே உபயோகிப்பதை உணர்ந்த பூரணிக்கு மனம் கனத்தது. அதுவும் உணவை ஒரு ஓரமாய் எடுத்து தீண்ட தகாதப் பொருளைப் போல வைத்திருப்பதைக் கண்டவர், “இல்ல மா... யார்கிட்டேயும் எதையும் வாங்கி சாப்ட்டு பழக்கமில்ல. வீட்ல சமைக்கிறதே எங்களுக்குப் போதும்...” எனக் கூறிவிட்டிருந்தார். அப்போது ரோஷத்துடன் உரைத்திருந்தாலும் அவரது அதை நினைத்து மனம் வருந்தியது உண்மை. அதனாலே சதாம்பிகா வீட்டில் தண்ணீர் கூட அருந்துவது இல்லை. தானே தண்ணீர் பொத்தலையும் எடுத்துச் சென்றுவிடுவார். அப்படி இருக்கையில் மகள் அங்கே உணவுண்ணதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

 

சதாம்பிகாவிற்கு இது தெரிந்திருந்தால், ‘எத்தனை நாட்களாய் இப்படி சாப்பிடுகிறீர்கள்?’ எனக் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பூரணி அடித்த அடியில் சந்தனாவின் கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்துவிட்டன. “ம்மா... இனிமே யார் எதுக்கொடுத்தாலும் வாங்க மாட்டேன் மா. அடிக்காத மா, ரொம்ப வலிக்குது மா...” என சுவரோரத்தில் அமர்ந்துவிட்டாள். சில நொடிகள் அவர் அமைதியாய் இருந்தார்.

“நீயா அவன்கிட்ட கேட்டியா?” என வினவ, “இல்ல மா... நான் கேக்கலை. அவனா... அவனாதான் மா கொடுத்தான்...” என்று பயத்துடன் அழுதாள். மகள் கேட்டிருக்க மாட்டாள் என நம்பிக்கை இருந்தாலும், இப்போதைய தங்களது சூழ்நிலையில் அவரால் சந்தனா ஆசைப்பட்டதை செய்ய முடியாத காரணத்தால் அவள் கேட்டிருக்க கூடுமோ என எண்ணம் பிறந்தது.

“இனிமே அவனா கொடுத்தாலும் வாங்க மாட்டேன் மா... எனக்கு கறிசோறு வேணாம் மா!” என்றாள் தேம்பலாய். மகளைப் பார்த்தவர், “சரி, இங்க வா...” என அழைக்க, அவள் பயத்துடன் மாட்டேன் என தலையை அசைத்தாள்.

“அடிக்க மாட்டேன் குட்டி...” என அவளை அழைத்து அமர வைத்து கண்ணீரை துடைத்துவிட்டார்.

“சாப்பிடு.‌..” என அவரே ஊட்டிவிட, சந்தனா அமைதியாய் உண்டாள். என்ன உண்கிறோம் என்ற உணர்வு கூட அவளிடம் இல்ல.

“குட்டி... அவங்க வீட்ல மட்டும் இல்ல, இனிமே யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது. யாராவது வந்து, ‘உங்கம்மா இதை கொடுக்க சொன்னாங்க’ன்னு எதாவது சாப்பிட கொடுத்தா வாங்கக் கூடாது. அப்படி நீ அதை சாப்பிட்டேன்னா, அதுல மயக்க மருந்து கலந்து உன்னைக் கடத்திட்டுப் போய் வித்திடுவாங்க டி...” எனக் கூறவும், அவள் அதிர்ந்து தாயைப் பார்த்தாள்.

“ஆமா குட்டி... அம்மாவைத் தவிர யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாது. என்கிட்ட வந்து சொல்லணும். கையைத் தவிர இங்க, அப்புறம் அங்கன்னு யாராவது தொட்டுப் பேசுனா, என்கிட்ட உடனே வந்து சொல்லணும்...” எனக் கூற, அவள் தலையை அசைத்தாள். ஏற்கனவே பூரணி கூறியிருந்தாலும் அதை அசட்டை செய்திருந்தாள். ஆனால், இப்போது அவர் கூறுவது எல்லாம் தன்னுடைய நண்மைக்கே என்று புரிந்தது.

தேங்காய் எண்ணெயை எடுத்து வந்து சந்தனாவின் கன்னத்திலும் முதுகிலும் தேய்த்தார். கோபத்தில் அடித்ததில் அடி பலமாய்பட்டிருக்க, அவரது விரல் அச்சு பதிந்திருந்தது.

“வலிக்கிதா குட்டி...” எனப் பூரணி வருத்தத்துடன் கேட்க, தாயைப் பார்த்துப் புன்னகைத்தவள், “இல்ல மா... அடிக்கும்போது

தான் வலிச்சுது. இப்போ வலியே இல்ல மா...” எனக் கூறியவள், அவரது கையை இழுத்துப் பிடித்து, “ப்ராமிஸா நான் அவங்க வீட்ல எதுவும் வாங்கி சாப்பிட மாட்டேன் மா!” என்றாள்.

“அவுங்க வீட்ல மட்டும் இல்ல குட்டி... யார் கொடுத்தாலும் சரி!” என அறிவுருத்த, தலையை அசைத்துக் கொண்டாள்.

“சாயங்காலம் அம்மா உனக்குப் புடிச்ச க்ரீம் ரொட்டி வாங்கிக் தரேன் குட்டி...” என்று மகளது கன்னத்தைப் பூரணி தடவ, அவள் தலையை அசைத்து பற்கள் தெரியப் புன்னகைத்தாள்.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page