All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

8. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 3 months ago
Posts: 24
Topic starter  

அப்போது தான், சமையலறையில் தன்னுடைய தேநீரைப் பருகி முடித்தப் பிரஹாசினிக்குத் தமையனின் வண்டிச் சத்தம் கேட்கவும் உள்ளம் பதறியது. 

 

அவளது நிலையை அறிந்து இருந்தாலும் கூடத் தற்போது தன்னால் அவளிடம் சென்று ஆறுதல் சொல்ல முடியாது. ஏனெனில், வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்க அவரும் இருந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம்.

 

 எனவே, தன்னுடைய நாத்தனார் வீட்டிற்குள் நுழையும் போது கணவருக்கு அருகில் நின்றிருந்தார் உமாராணி. 

 

“உள்ளே வாங்க அத்தை” என்று அவருக்காக கதவைத் திறந்து விட்ட நீரஜ்ஜோ, தன் பெற்றோரைப் பார்த்து பெருமூச்சு விட்டான். 

 

விருச்சிகன்,“வா ரமணி”, 

 

“வா ம்மா” என்று உமாராணியும் வரவேற்றனர். 

 

“ம்ம். நல்லா இருக்கீங்களா?” என்று அவர்களிடம் குசலம் விசாரித்தார் ரமணி. 

 

“நாங்க நல்லா இருக்கோம். அங்கே எல்லாரும் சௌக்கியமா?” என்றார் விருச்சிகன். 

 

“எல்லாரும் சௌக்கியமாக இருக்காங்க அண்ணா” என்றவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அடுக்களைக்குப் போய்,”அந்தச் செம்பில் தண்ணியை எடுத்துட்டு என் பின்னாடியே வா” எனப் பிரஹாசினியிடம் மெல்லக் கூறினார் உமாராணி. 

 

“சரிங்க பெரியம்மா” என்றவள், நீர்ச் செம்பை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்றினாள். 

 

அவளது வருகையைப் பார்த்ததும்,”வா ம்மா மருமகளே!” என்றவரது அழைப்பில், அந்த’மருமகளே!’ என்ற வார்த்தையை அழுத்திக் கூறியதை அனைவரும் உணர்ந்தனர். 

 

அதில் திடுக்கிட்டுத் தன் கையிலிருந்த செம்பைக் கீழே போட்டு விடாமல் இருப்பதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டாள் பிரஹாசினி. 

 

“அதை எனக்குக் கொடுக்கத் தானே கொண்டு வந்த? அப்பறம் ஏன் கையிலேயே வச்சிட்டு நிற்கிற? கொண்டா” என்று அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டினார் ரமணி. 

 

உடனே தண்ணீர்ச் செம்பை அவரிடம் கொடுத்து விட்டுத் தமையனின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 

அவளை ஏற, இறங்கப் பார்த்து விட்டு நீரைப் பருகி முடித்தவர்,

 

“சபரீஷையும் கூடக் கூட்டி வரலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனால், நாம முதல்ல போய்ப் பேசிக்கலாம் அப்பறம் அவனைக் கூட்டிட்டு வரலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன்!” என்று அவர் கூறியதைக் கேட்டதும், 

 

’இவ வந்தவுடனேயே விஷயத்தை உடைச்சுப் பேசத் தொடங்கிட்டாளே!’என்ற பதைபதைப்புடன் விருச்சிகனும், உமாராணியும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“க்கும்” என்று தன் தொண்டையைக் கனைத்த ரமணியிடம்,

 

“தண்ணீர் மட்டும் குடிச்சா ஆச்சா? டீ போட்டுக் கொண்டு வரச் சொல்றேன். குடிம்மா” என்று நாத்தனாரிடம் சொன்னவர், பிரஹாசினியிடம் கண்ணைக் காட்ட, உடனே அவள் அந்தப் பணியைச் செய்யப் போய் விட்டாள் பிரஹாசினி. 

 

தன்னால் தான், அவளை இங்கே இருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைத்து விட்டார் தனது அண்ணி என்பதை அறிந்து கொண்டு,”வீட்டுக்கு வந்தவுடனேயே மருமக கையாலே டீ குடிக்கக் கசக்குமா என்ன? சூப்பராகப் போட்டு எடுத்துட்டு வாடா!” என்று சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தார் ரமணி. 

 

அதைக் கேட்டு,’இந்த மருமகன்ற வார்த்தையை விடவே மாட்டாங்க போலவே!’ என்று மனதினுள் சலித்துக் கொண்டான் நீரஜ். 

 

விருச்சிகன் மற்றும் உமாராணிக்கும் கூட அவரது இந்த உரிமைப் பேச்சால் எரிச்சலுற்றார்கள்.

 

“காலைச் சாப்பாடு இன்னும் செய்யலை ரமணி. உனக்கு என்ன வேணும்னு சொல்லு? காலையும், மதியமும் உனக்குப் பிடிச்சதைச் சமைக்கிறேன்” என்றார் உமாராணி. 

 

அவருக்குப் பதிலளிக்கும் முன்னர், பிரஹாசினி தன்னிடம் கொடுத்த தேநீரைப் பருகிக் கொண்டே,”எனக்கு அதிகம் எண்ணெய் விடாமல் தோசை ஊத்திச், சாம்பார் வைங்க. மதியத்துக்கு சைவத்தில் ஏதாவது செய்யுங்க அண்ணி” என்று அவரிடம் கூறினார் நாத்தனார். 

 

“சரி ம்மா” என்றவரிடம், 

 

“அவளைப் பொசுக், பொசுக்குன்னு உள்ளே அனுப்பி வைக்காதீங்க அண்ணி. நான் பேச வந்தது உங்ககிட்ட தான்! அதனால் அவளை இங்கேயே உட்கார விடுங்க” என்று தன் அண்ணியிடம் அழுத்திச் சொன்னார் ரமணி. 

 

“ம்ம். நீ போய் உட்கார். நான் சமையலைக் கவனிச்சுக்கிறேன்” என்றதும், அவரிடம் சம்மதம் தெரிவித்தாள் பிரஹாசினி. 

 

நீரஜ்,“நான் உங்களுக்கு உதவி பண்றேன்ம்மா” என உமாராணியிடம் கூறவும், 

 

“நீ வேலைக்குக் கிளம்பலையா?” என்று அவனிடம் வினவினார் விருச்சிகன். 

 

“இல்லைப்பா. இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்” என்றான் அவரது மகன்.

 

“சரி” என்று அவனை அனுப்பியதும்,

 

“நீ சிக்கன், மட்டன் இல்லைன்னா மீன் கேட்பேன்னு நினைச்சேன்ம்மா. சைவ சாப்பாட்டைச் செய்யச் சொல்லிட்டியே?” என்று தங்கையிடம் கேட்டார் விருச்சிகன். 

 

“முன்னே மாதிரி எல்லாம் இப்போ ஆசைப்பட்டு அசைவம் சாப்பிட முடியலைண்ணா. எனக்கும் வயசு ஆகுதுல்ல?” என்று அவருக்கு விளக்கினார் ரமணி. 

 

“ஓஹ், சரிம்மா. எனக்குக் கடைக்குப் போக நேரமாச்சும்மா. நான் தயாராகுறேன். உனக்கு ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணு, இல்லைன்னா நீரஜ் கிட்டே சொல்லி விடு” என்கவும், 

 

“கடைக்குப் போயிட்டு எப்போ வீடு திரும்புவீங்க அண்ணா?” என்றார்.

 

“ஏன்ம்மா?” எனக் கேட்டார் விருச்சிகன்.

 

“நான் வந்த விஷயத்தைப் பேசிட்டு ராத்திரியே ஊருக்குக் கிளம்பனும். அதான்”  

 

“அப்படியா? நான் சாயந்தரம் வீட்டுக்கு வந்துட்றேன்ம்மா” என்று கூறி விடவும்,

 

அதில் திருப்தி அடைந்து,”சரிங்கண்ணா” என்று மொழிந்தார் ரமணி. 

 

இவற்றையெல்லாம் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இன்றைக்கு அத்தை ஒரு முடிவோடு தான் இங்கே வந்திருக்கிறார் என்பது விளங்கிற்று. 

 

தன்னுடைய பெரியப்பா, பெரியம்மா மற்றும் அண்ணனைத் தாண்டி அத்தையின் விருப்பம் இங்கு எடுபடப் போவதில்லை என்ற நம்பிக்கையும் பிறந்ததால் சற்று தளர்வாகவே உட்கார்ந்து கொண்டாள் பிரஹாசினி. 

 

ஏற்கனவே குளித்து விட்டதால், உடையை மட்டும் மாற்றிக் கொள்ளச் சென்றார் விருச்சிகன். 

 

அப்போது சமையலறையில் இருந்த தாயும், மகனும் தங்களுக்குள் புலம்பிக் கொண்டே தான் வேலையைப் பார்த்தனர். 

 

“இவங்களோட உறுதியைப் பார்த்தால் அப்பாவே மனசு மாறிடுவாரோன்னு பயமாக இருக்கும்மா. அப்படி மட்டும் நடந்தால் பிரஹா ரொம்ப உடைஞ்சுப் போய்டுவா!” என்று வருந்திக் கூறினான் நீரஜ். 

 

“உங்க அப்பாவை நீயே நம்பாமல் இருந்தால் எப்படி? அமைதியாக நடக்கிறதை வேடிக்கை மட்டும் பாரு!” என்று அவனுக்கு அறிவுறுத்தினார் உமாராணி. 

 

அவர்கள் இருவரும் சேர்ந்து, சாம்பார் வைத்துக் கூட ஒரு சட்னியும் அரைத்து தாளித்தனர். 

 

“அப்பறம் உன்னோட மேக்கப் வேலையெல்லாம் எப்படி போகுது மருமகளே?” என்றவரிடம், 

 

“நல்லா போகுது அத்தை. ஆர்டர் வந்துட்டு இருக்கு” என்று கூறியதைக் கேட்டதும் திருப்தியாக உணர்ந்தார் ரமணி. 

 

தன் கணவர் சிவசாமிக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைத்த பின்னர், மகன்களின் சம்பாத்தியத்தில் தான் தன்னுடைய குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். 

 

ரமணியின் பெரிய மகன் சபரீஷ், ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இளையவன் தேவேஷ், ஒரு தனியார்க் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறான். 

 

அப்படியிருக்க, அவர்கள் இருவருக்கும் வெளியே பெண் தேடி ஓய்ந்து விட்டார் ரமணி. 

 

அவரது மகன்கள் இருவரும் நன்றாக உத்தியோகம் பார்த்து, சம்பாதித்துக் கொண்டு இருந்தாலும் கூட, அவர்களது நடத்தைச் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பதை ரமணியின் நெருங்கிய சொந்தங்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டிருக்க, வேறு வழியில்லாமல் மூத்தவனுக்குப் பிரஹாசினியைத் திருமணம் செய்து வைத்து விடக் கணக்குப் போட்டார். 

 

ஏனெனில், அவளது பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை. அவள் தங்கள் மகன்களுக்கு முறைப்பெண் தானே! பிறகென்ன கவலை? அவளைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கத் தனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்பது அவரது உறுதியான எண்ணம். 

 

அதேபோல், பிரஹாசினி நன்றாகப் படித்தும் இருக்கிறாள். அவளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் தெரிந்து இருந்தது. ஆகவே, அவளைத் தன் வீட்டு மருமகளாக்கும் முனைப்புடன் தான் இங்கு வந்திருக்கிறாள் ரமணி. 

 

ஆனால், அந்த முனைப்பை முறியடிக்க விருச்சிகனும், உமாராணியும் தயாராக இருந்தனர். 

 

சமையல் முடிந்திருக்க, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவை உண்டு முடித்த பின்,”நான் கடைக்குப் போயிட்டு வர்றேன்” எனப் பொதுவாக உரைத்தவர், பிரஹாசினியிடம் சென்று, அவளது தலையைத் தடவிக் கொடுத்து விட்டுப் போனார் விருச்சிகன்.

 

அதில் பிரஹாசினிக்குள் இன்னும் நம்பிக்கை ஊற்றெடுத்தது. 

 

ஆனால் இதைத் தன் கழுகுப் பார்வையால் கண்டு கொண்ட ரமணிக்குத் தன் நிலைப்பாடு ஆட்டம் கண்டு விடுமோ? என்ற பயம் தொற்றிக் கொண்டது. அவர் அதைக் காட்டிக் கொள்ளத் துணியவில்லை. 

 

தன் அண்ணன் மாலை வரும் போது திருமணத்திற்கான சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு தான் அவ்வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தார் ரமணி. 

 

இதே வேளையில், தன் மகளுக்குக் கைப்பேசியில் அழைத்து,”ஆரு! உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறேன்டி!” என்று குதூகலமாக ஆரம்பித்த தாயிடம், 

 

“என்ன செய்திம்மா?” என ஆவலுடன் வினவினாள் ஆரவி. 

 

சோமசுந்தரி,“உங்க அண்ணன் தீபாவளிக்கு மூனு நாளைக்கு முன்னாடியே உன்னையும், மாப்பிள்ளையையும் அழைச்சிட்டு வரலாமான்னுக் கேட்டான்!” 

 

“என்னம்மா சொல்றீங்க? திவு அண்ணாவா இப்படி சொன்னாங்க?” என்று ஆச்சரியப்பட்டாள். 

 

“ஆமாம்டி. இப்போ நீ என்னப் பண்ற, இதை உன் வீட்டுக்காரர் கிட்டே சொல்லி லீவ் போட முடியுமான்னு கேட்டுச் சொல்லு” 

 

ஆரவி,“இதோ உங்க கூடப் பேசி முடிச்ச உடனே அவர்கிட்ட பேசுறேன்ம்மா” என்றாள் உற்சாகமாக. 

 

“சரிடி. உங்க அண்ணனோட நடவடிக்கை வர வர ரொம்ப சந்தேகப்பட வைக்குது. அதைப் பத்திப் பேசுறதுக்காகவே நீ சீக்கிரம் வீட்டுக்கு வரனும்னு தோனுது” என்றவர், அவனது சமீபத்திய பேச்சைப் பற்றி அவளிடம் விவரித்தார் சோமசுந்தரி. 

 

“நீங்க சொல்வதை எல்லாம் கேட்கும் போது அண்ணன் யாரையோ ரொம்ப லவ் பண்றா மாதிரி சந்தேகமாக இருக்கும்மா” என்று அவள் கூறியவுடன்,

 

“ஆமாம் ஆரு! அவன் பச்சைக் குத்தினதைப் பார்த்தே நமக்குச் சந்தேகமாகத் தானேடி இருந்துச்சு. அது இப்போ உறுதி ஆயிடுச்சு! அவனாக சொல்லட்டும்ன்னுப் பொறுத்திருந்தால் வேலைக்கு ஆகாது போல! அந்தப் பொண்ணு இந்த ஊரா, வெளியூரான்னுக் கூடத் தெரியலை. இவன் வாயைத் திறக்கவே மாட்டேங்கிறான்! எனக்கு மண்டைக் காயுது” என்றார் அவளது அன்னை. 

 

“நான் தான் அங்கே வந்து மூனு நாள் தங்கப் போறேன்லம்மா? அப்போவே சந்தேகம் உண்மையான்னு அண்ணன்கிட்டேயே கேட்டுடுவோம்!” என்று அவருக்கு உறுதி அளித்தாள் ஆரவி. 

 

“ம்ம். சரிடி. மாப்பிள்ளை எப்படி இருக்கார்? உன் மாமியார், மாமனார் நல்லா இருக்காங்களா?” 

 

“அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா. அவர் தான் வேலை, வேலைன்னு அடிக்கடி வெளியூர் போயிடறார்” என்று கூறிச் சலித்துக் கொண்டாள் அவரது மகள்.

 

“குடும்பத்துக்காகச் சம்பாதிக்கத் தானே வேலை பார்க்கிறார்? அப்போ அவர் அப்படி போய்த் தானே ஆகனும்? அவரோட ஹெல்த்தைக் கவனிச்சிக்கோ” என்று அவளுக்கு அறிவுரை கூறி விட்டு அழைப்பை வைத்தார் சோமசுந்தரி. 

 

                 - தொடரும்

 

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 1 month ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page