All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தாழம் பூ

Page 2 / 2
 

Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 52
Topic starter  

                          23

தெல்லாம் விசித்திரமாய் இருந்தது யாழிக்கு. இதுவரைக்கும் கிரகப்பிரவேச வீடுகளுக்கு சென்றது கூடயில்லை. அதிகாலையே எல்லோரும் கிளம்ப, யாழியை மட்டும் அழைச்சிட்டு போங்களேன்' என்று வானதியின் மறுப்பை ஒற்றை புருவ உயர்த்தலில் நந்தா மாற்றி இருந்தான்.

அடுத்த தெருதான். என்றாலும் நடந்து போவது கௌரவ குறைச்சல் என்பதால் மிருதுளா, வானதி, கல்பனாவோடு நந்தா காரில் கிளம்பி இருக்க, இரண்டு அக்காள்களையும் துர்யன் பைக்கில் ஏற்றிக் கொண்டு வந்தான். 

தபுவின் வயிற்றை இறுக்கி, தோளில் முகம் புதைத்த தங்கையை தபுவுக்கு நிஜமாகவே பிடித்தது.

"ஏன்டி இப்படி பயக்கறே..? பைக்கிலேயே போனது இல்லயா..?" காற்றில் வார்த்தைகளை  பின்னோக்கி பறக்க விட்டாள்.

" ம்ஹூம். யார் கூட போறது..? நான்தான் தகப்பன் கால் பிடிச்சு வளரவே இல்லயே…" என்றாள் அக்காவின் காதடியில் கேலி தெறிக்க.

தபுவுக்கு வருத்தமாக இருந்தது. தன் இடது தோளில் பதித்திருந்த யாழியின் முகத்தில் துலாவி, அவள் இடக் கன்னத்தை கொத்தாய் திருகி, முத்தமிட, மிரர் வழியாக பார்த்த துர்யன் கடுப்படித்தான்.

"என் வயசுக்கு அக்கா தங்கச்சியை எல்லாம் பின்னாடி உட்கார வச்சிட்டு போறதே பஞ்சமா பாதகம். இதுல நீங்க ஓட்டற பாசமலர் படத்தை எல்லாம் பார்க்க எனக்கு தலையெழுத்தா…அப்படியே ப்ளாட்பாரத்தில கவிழ்த்தி விட்டுட்டு போயிடுவேன்." அவன் முடிப்பதிற்குள் வீடு வந்திருந்தது. 

இவர்களை தொடர்ந்து நந்தாவின் காரும் வந்து சேர, சேர்ந்து தான் அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். யாழிக்கு அத்தனையுமே விசித்திரமாய் இருந்தது. இதுவரைக்கும் இது போன்ற விசேசங்களுக்கு சென்றதில்லை. அதுவும் இப்படி குழுமமாய், குடும்பமாய்.

பட்டு வேட்டி சட்டையில் அமரைப் பார்க்கவே கண் நிறைந்தது. அமர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் தவிர, அத்தனையும் நண்பர்கள் தான். லதாவுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் நண்பர்கள் கணிசமாக நிறைந்து இருந்தார்கள். 

கண்களை சுழற்றி சுழற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் யாழி. முதல் முறையாக இடுப்பில் சுற்றியிருந்த தாவணி வேறு நிற்கவா நழுவவா என்று மிரட்டிக் கொண்டிருக்க, சந்தனம் மணக்கும் வீட்டை கண்களால் துலாவிக் கொண்டே மாடிக்கு வந்தாள்.

இவர்கள் வீட்டைப் போல் அத்தனை பெரிதான வீடில்லை என்றாலும், நாகரீகம் வழிய வழிய கச்சிதமாய் கட்டி இருந்தார்கள். மாடியில் இருந்த ஒற்றை படுக்கையறையை திறந்து பார்த்தாள். புதுவீட்டின் வாசம் நாசியை நிறைத்தது. 

‘’பிடிச்சிருக்கா..?’’ பின்னால் இருந்து கேட்ட குரலில் கொஞ்சம் பதட்டமாகி திரும்பி பார்த்தாள். அமர் நின்று கொண்டிருக்க, யாருமில்லாத அறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோமே ‘ என்று யாழிக்குமே வெட்கமாக போய் விட்டது.

‘’சும்மா பார்த்தேன். இதான் உங்க ரூமா..?’’

‘’ஆமாம். பிடிச்சிருக்கா..? ஏதாவது மாத்தணுமா..? ‘’ என்றான் அர்த்தமான பார்வையோடு.

’’எனக்கு  ஏன் பிடிக்க..! உங்களுக்கு பிடிச்சா சரி. ஆனால் இந்த பால்கனி கதவு பக்கத்துல விண்டோ வச்சு இருக்கலாம். காலையில கர்ட்டனை விலக்கினா வெளிச்சம் நம்மைக் கேட்காமயே வீட்டுக்குள்ளே வரும்.’’

அவள் வார்த்தைகளை குறித்துக் கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘’ம். நோட்டட். வேற எதாச்சும் இருக்கா..?’’ என்றவனை விசித்திரமாய் பார்த்துக் கொண்டே அங்கிருந்து மெல்ல படியிறங்கினாள். காலையிலேயே கணபதி ஹோமம் முடித்திருக்க, பிரம்ம முகூர்த்தத்தில் கோ பூஜையும் முடித்து இருந்தார்கள். இப்போது பால் காய்ச்ச லதா, நந்தாவையும், மிருதுளாவையும் அழைக்க, மிருதுளா மெல்லிய தயக்கத்தில் நின்றாள்.

"சம்பிரதாயத்தை நான் பார்க்கிறது இல்ல மிருதுளா. ஆனால் நமக்குன்னு பார்க்கும் போது லேசா தெரியற எல்லாம், பிள்ளைகளுக்குன்னு பார்க்கும் போது, சஞ்சலமாக்குது. நீங்களும், அண்ணாவும் எனக்கு வேற இல்ல. உங்களை மாதிரி இணக்கமா, கண் நிறைஞ்சு என் குழந்தைகளும் இங்கே வாழ்ந்தா போதும்." மனதார சொன்னபோது நெகிழ்ந்து போனார்கள்.

புது பாத்திரத்தில் மஞ்சள், சந்தனம் தடவி, மல்லிகை பூ வளையமிட்டு நேரம் பார்த்து வணங்கி அடுப்பில் ஏற்றி மிருதுளா கை கூப்ப, நந்தா வந்து அடுப்பை துலங்க வைத்தான்.

பால் பொங்கி வழிய மிருதுளா நிறைவான முகத்தோடு அத்தனை பேருக்கும் ஊற்றி வினியோகம் செய்ய ஆரம்பித்தாள்.

பூஜை அறைக்குள் விளக்குகளை எடுத்து கொண்டு போய் வைத்து, ஏற்றி வைத்தார்கள்.

நந்தா குடும்பத்தோடு இருந்த நட்பு, உறவாக பூக்க இதுவொரு பாலம் என்ற எண்ணம்தான் வெகுவாய் இருந்தது.

வானதி  கல்பனாவோடு தனியாக அமர்ந்து இருந்தாள். அங்கிருந்தவர்களில் பெரிதாய் யாரையும் அவளுக்கு பரிட்சயம் இல்லை. வராமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் எல்லா நிகழ்வுகளில் இருந்தும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பது, யாழியின் மனநிலைக்கும் வாழ்க்கைக்கும் சரியல்ல என்பதாலேயே தன்னை மறந்து மகளை நினைத்து வந்து போகிறாள்.

உறவினர்கள் நண்பர்கள் என்று வந்திருந்தவர்கள் அனைவரையும் அழைத்து, நந்தாவையும் மிருதுளாவையும் அறிமுகம் செய்து வைத்தாள் லதா.

அண்ணன் முறையாய் பாவித்து நந்தா தங்க காசை சீரில் வைக்க, லதாவும் அதற்கு பதில் மரியாதையாய் இருவருக்கும் உடைகளை தர, எந்த சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.

யாழி பக்கத்தில் வந்து அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள். அங்கே நடப்பவை எல்லாவற்றையும் பார்த்து இதயம் மொத்தமாய் சுணங்கிப் போய் இருந்தது.

ஆனால் அடிக்கொரு தரமும், நொடிக்கொரு தரமும் நந்தா மட்டும் பார்வையால் இருவரையும், வளையமிட்டு விலக தவறவில்லை.

வரும்போது துல்லிய இதயத்தின் ரீங்காரம் இப்போது இல்லை. யாழியின் முகம் முழுக்க சிந்தனை ரேகை படர்ந்து கிடந்தது.

"வாங்க வானதி வீட்டை சுத்தி பார்க்கலாம். யாழி நீயும் வா." லதா வந்து அழைத்தபோது வானதி எழுந்து கொள்ள முற்பட, யாழி அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

" இல்ல ஆன்ட்டி. நீங்க வந்தவங்களை கவனிங்க. நாங்க அப்பறம் பார்த்துக்கறோம்." 

லதா நகர்ந்து கொள்ள,வானதியின் முகத்தில் புன்னகை விரிந்தது.

"என்னாச்சு யாழி பாப்பாவுக்கு  முகம் எல்லாம் சிவந்து சுண்டிப் போச்சு..?" என்றாள் கேலியாக.

" போம்மா."

"எல்லாத்துக்கும் எதுக்கு டென்சன் ஆயிட்டு இருக்கே யாழி மா..? " என்ற அம்மாவை முறைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தாள்.

சாப்பாட்டு கடை முடிந்து, நண்பர்களும், உறவினர்களும்  கிளம்பி செல்ல ஆரம்பித்தனர்.

மிக முக்கிய நண்பர்கள் தவிர சுற்றியும் யாருமில்லை. யாழியை ஆர்த்தியும், தபுவும் மாடிக்கு அழைத்து போயிருக்க, லதா பார்த்த பார்வையின் குறிப்பறிந்து அமர் அங்கிருந்து எழுந்து சென்று இருந்தான்.

"ரொம்ப நிறைவா, சிறப்பா பங்சன் நடத்தி முடிச்சிட்டீங்க லதாமா. அமரை பார்க்கும் போது, இருபது வருசத்துக்கு முன்னே எங்க நந்தாவை பார்த்த மாதிரியே இருக்கு." என்று கல்பனா உளமாறச் சொல்ல, லதா முகம் பூரிக்கப் பார்த்தாள்.

"இந்த நிறைவான வார்த்தைகளை ஆதாரமா வச்சு, நானும் இப்போ இங்கே இதை பேச ஆசைப்படறேன். எங்க அமர்க்கு உங்க சின்ன பொண்ணை தருவீங்களா நந்தாண்ணா…" 

அத்தனை பேரும் இதை எதிர்பார்த்தே இல்லாததால் வாயடைத்து திகைத்து போய் அமர்ந்திருக்க, நந்தாவுக்கு தன் உயிரையே விலைக்கு கேட்பது போல் நெஞ்சு வலித்தது.

மாடி வராண்டாவில் நின்று ஆர்த்தியோடு முகம் மலர பேசிக் கொண்டு இருந்த தபஸ்வி தான் ஒரு நொடி, தன் கண்ணாடி உலகத்தை காலடியில் நழுவ விட்டு இருந்தாள்.

அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. பெயர் சூட்டாத அலை ஒன்று அவள் பிம்பத்தை பெயர்த்துக் கொண்டு போனது போல் இருந்தது.

காதல் இல்லை. விருப்பம் தான். ஆனால் அந்த விருப்பம்தானே அத்தனை காதலுக்கும் மூல சுதி. வெற்றிக்கு எல்லாம் வித்து.

"தபு, என்னாச்சு..?" ஆர்த்தி பற்றி உலுக்கிய போது சுதாரித்தாள்.

"நத்திங். லேசா தலைவலி. '' என்றவள் நகர, இந்த நிகழ்வில் தன்னை துளிகூட இணைத்து கொள்ளாமல், சிலை போல் நின்ற யாழி கீழே நடக்கும் உரையாடலில் கவனமாய் இருந்தாள்.

நந்தாவின் மெளனம் லதாவை வருத்தி இருக்க வேண்டும்.

"உங்க அளவுக்கு இல்லாட்டியும் நாங்களும் நல்ல நிலையில் இருக்கோம். மேலே மேல படிச்சிட்டு இருக்கான் அமர். கண்டிப்பா பெரிய போஸ்டிங்குக்கு போவான். எல்லாத்துக்கும் மேலே அவன் எவ்வளவு பொறுப்பானவன்னு நான் சொல்ல வேண்டியது இல்ல.அவனுக்கும் உங்க பொண்ணு மேல விருப்பம் இருக்கு. இதுக்கு மேலே கல்யாணத்துக்கு என்ன வேணும்..?" வானதியின் கண்கள் மிருதுளாவின் மீதே லயித்து இருந்தது. அந்த முகத்தின் சின்ன ஒளிகுன்றல் வானதிக்கு எதையோ சொன்னது.

"இல்லமா யாழிக்கு இருபது முடியவே இன்னும் சில மாசம் இருக்கு. பி.ஜி.க்கு எண்ட்ரன்ஸ் எழுதி இருக்கா. படிச்சு சொந்தக் கால்ல பெண் குழந்தைகள் நிற்கணும். எல்லாத்துக்கும் மேல எங்க பெரிய பொண்னுக்கு தான் முதல்ல முடிக்கணும்." மெல்லிய குரலில் வானதி சொன்னாலும் மனசு மகள் திருமணத்திற்கு ஈடாகிவிட்டாள் என்ற நியாயத்தை சொன்னது. யாழி இல்லாத வாழ்க்கையை நினைக்க கூட விரும்பவில்லை.

"பந்தக்கால் உறவு வந்தா, சொந்தக்கால் போயிடும்னு யார் சொன்னது வானதி..? மத்திய வயசில இருக்கிற நீங்க, நான், மிருதுளா எல்லாருமே சம்பாதிக்கிறோம். சுயமாத்தான் இருக்கோம்."லதா மென்மையாக சொன்னார்.

"அமர் பத்தி யோசிக்க எதுவுமில்லை லதா மா. ஆனால் என் பொண்ணை என்னால அவ்வளவு சீக்கிரம் தள்ளி அனுப்ப முடியாது. இருபது வருடங்கள் என்னை விட்டு தள்ளியே இருந்த என் குழந்தையை என்னால உடனே தாரைவார்த்து தந்திட முடியாது. 

அவ நிறைய படிக்கணும். பெரிய இடத்துக்கு வரணும். இப்போ இந்த பேச்சு வேண்டாமே." என்ற குரலில் மென்மையான கண்டிப்பு படிந்து இருந்தது.

"யாழியை பிடிச்சிருக்குன்னா, அதற்கு தபஸ்வியை பிடிக்கலைனு இல்ல. அது எங்களோடு வளர்ந்த குழந்தை. ஆர்த்தியும்,தபஸ்வியும் எங்களுக்கு ஒண்ணு தான். இங்கே கேட்டதாலே, இங்கேயே முடிவு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்க உங்க பெண்ணை எதுவாக்க நினைக்கிறீங்களோ அதுவாக்குவான் அமர். 

பிடிமானத்தில் வரும் அபிமானங்கள் கோடி பெறும். அவனுக்கும் யாழியை பிடிச்சிருக்கு. கடவுள் பிராப்தம் இருந்தால், பேச்சு நகரட்டும்." தன்மையும், சாதுர்யமாகவும் பேசிய வார்த்தைகள் பிடித்துத் தான் இருந்தது.

கல்பனாவிற்கு ஏனோ இந்த பேச்சு பிடித்திருந்தது. ஆனாலும் மிருதுளா. தபஸ்வியின் மனநிலையை எண்ணி அமைதியாகி விட்டார். உறவுக்கு ஏங்கும் யாழிக்கு, அமரைப் போல உள்ளங்கையில் வைத்து தாங்கும் ஒருவன் தான் சரியாக இருக்கும்.

எல்லோரும் கிளம்பிய போது மனங்கள் வேறு வேறு திசையில் இருந்தது. தபஸ்வி முழுக்க உணர்விழந்து இருந்தாள். ஒரு தனிமையும், தன்னை மறக்க போதையாய் கண்ணீரும் அவளுக்கு அவசியமாய் இருந்தது.

காரில் ஏறி அமர்ந்து கொள்ள, வானதிக்கும் யாழிக்கும் இடமில்லாமல் வெளியில்  நின்றார்கள். நகர்ந்து அமரலாம். முன் பக்கம் ஒருவரும், பின்பக்கம் ஒருவரும் ஏறிக் கொள்ளலாம். ஆனால் சுணங்கிய மனசிற்கு அது இன்னும் கீழ்மையாக இருந்தது.

' இன்னும் எத்தனை விசயத்தில் சார்பு வாழ்க்கை வாழ்வது…' அயர்ந்து போனாள் யாழி. ஏற்கனவே உள்ளே நடந்த பாரபட்சங்களில் ஒடிந்து, நொடிந்து கிடந்த உள்ளம் இப்போது மொத்தமாய் மடிந்தே போனது. 

நந்தா யாருடனோ அலைபேசியில் இருந்தான். அவன் வந்து பார்த்து தள்ளி நின்ற இவர்களுக்கு வண்டியில் இடம் தருவது ஏனோ யாழிக்கு வெறுமையாக இருக்க, வானதியின் உள்ளங்கையை அழுத்தினாள்.

"மா, நாம சந்தியா ஆன்ட்டி வீட்டுக்கு போயிட்டு வரலாமா..? கொஞ்சம் வெளியே போகணும் போல இருக்கு." 

வானதியும் அதே சிந்தனையில் இருந்திருப்பாள் போல. நந்தாவிடம் சென்று சொல்லிக் கொண்டு வர, அவன் அத்தனை எளிதாய் விட்டு விடுவானா என்ன..? அவனே ஊபரை அழைத்து வண்டி ஏற்றி விட்டான்.

"...ஆயிரம் நினைவு

ஆயிரம் கனவு

காணுது மனது ஓஹோ..

பெண்ணை தொட்ட உள்ளம்

எங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்கம்.. ஹா..

எங்கே அந்த சொர்கம்…"

                   24

குளிருக்கு தலை வரை போர்த்திக் கொண்டு, அமர்ந்திருந்த சந்தியாவை பார்க்க சிரிப்பாய் இருந்தது.

" என்னாச்சு ஆன்ட்டி..? ஏன் இப்படி பழங்காலத்து போட்டோகிராபர் மாதிரி தலையை மறைச்சு, உலகத்தை மறைச்சு உட்கார்ந்து இருக்கீங்க." முகத்தை மூடி இருந்த கம்பளியை இழுத்து கேலி செய்ய, வானதி சந்தியாவுக்கு கஞ்சி வைக்க நகர்ந்து இருந்தாள்.

" ஏன்டி,கொஞ்ச நேரம் அரட்டை அடிக்கலாம்னு வந்தா, என்கிட்டியே வேலை வாங்கறே."

"செய்டி. என்ன குறைஞ்சு போயிடுவே. என்னை உன் நந்தா'னு நினைச்சுக்க. பாதாம் கஞ்சியே வைப்ப." அந்த நிலையிலும் வம்புக்கு இழுத்தாள்.

" எங்கே உன் புருசன் புள்ளைய காணோம்." 

"சிவா கூட  வேலை பார்க்கிறவர் ஒருத்தர் இறந்திட்டார். அதுக்கு போய் இருக்கான். நான் பெத்தது எங்கே ஊர் சுத்த போச்சோ. பொண்ணை பெத்திருந்தா, இப்படி காலை சுத்திட்டே இருக்கும்." 

"எப்படி ஆன்ட்டி ஜூரம் வந்தது..?"

"எப்படியோ வந்துடுச்சு. நாளைக்கு சரியாகிடும். காலையில கனவில எங்கம்மா வந்து, மருந்து தந்திருக்கேன் குணமாயிடும்னு சொல்லிட்டு போச்சு." சந்தியா சொல்ல, கண்ணை மூடி சிரிக்க ஆரம்பித்தாள் யாழி.

"உங்கம்மா செத்த பிறகு, அங்கே போய் டாக்டர்க்கு படிச்சாங்க போல. ட்ரீட்மென்ட் பண்ணிட்டு போயிருக்காங்க. " 

"குட்டி பிசாசு. இதெல்லாம் உள்ளுணர்வு. நீ என்னை கேலி பண்ற, ஆனால் உங்க ஆத்தாகாரி கொல்கத்தாவில உட்கார்ந்துட்டு, உங்க அப்பன் நெஞ்சை பிடிச்சா அவளும் பிடிச்சாளே, அப்ப இந்த கேலி எல்லாம் எங்கே போச்சாம்."

"ரொம்பத்தான்…" என்று முணுமுணுத்தபடி யாழி எழுந்து போக, சந்தியாவிடம் கஞ்சி கிண்ணத்தை தந்துவிட்டு அத்தனை விபரங்களையும் சொல்லி முடித்தாள். இப்போது சந்தியாவிற்குள்ளும் இந்த சிந்தனை வியாபித்தது.

"குழந்தை டி அவ. படிச்சு முடிக்கணும், உலகம் புரியணும் அதுக்கு முன்னாடி கல்யாணம்லாம் ரொம்ப தப்பு." சந்தியாவும் சொல்லி கொண்டிருந்தாள்.

"எனக்கு இந்த கல்யாண பேச்சு பிடிச்சு இருக்கு. அதை மறுத்துப் பேசின உங்க கணவர் சொன்ன காரணம்தான் பிடிக்கல. அவர் பொண்ணாம், கைக்குள்ளே வச்சுக்க போறாராம். ஆனால் ஒரு சபை'னு வந்து மரியாதை செய்றதுன்னா அவர் மனைவிங்கிற ஸ்தானம் உனக்கும் இல்ல, மகள்ங்கிற ஸ்தானம் எனக்கும் இல்ல. அப்படித்தானே மா.?" தீர்க்கமாய் வந்து விழுந்த கேள்வியில இருவரும் விக்கித்து போனார்கள்.

அம்மாவையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே வந்தாள்.

வானதியின் எதிரில் தரையில் கால்களை மடக்கி அமர்ந்தவள், வானதியின் மடியில் தலை கவிழ்ந்து கொண்டாள்.

"அம்மா, எனக்கு இந்த கல்யாணம் வேணும். ஏன் தெரியுமா உன்னை அவர் மனைவியா பார்க்காத மொத்த சமூகத்திற்கு முன்னே, ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு இந்த ஏற்பாடுகளை செய்து, கல்யாண பத்திரிக்கையில் அவர் மனைவி'னு உன் பெயர் போட்டு, ஆயிரம் பேர்க்கும் நடுவில அவர் கூட நின்னு என்னை நீ தார வார்த்து தருவியே, அதுக்கு கூடவா தன் முதல் மனைவியை அவர் நிறுத்திடுவாரு…" முடித்தபோது தொண்டை கரகரத்து இருந்தது.

"யாழி, என்னடா இது..? எப்பவும் என்னை பத்தி மட்டுமே யோசிக்கிறியே தங்கமே, உனக்கே உனக்குன்னு எந்த கனவும் இல்லயா..?" மகளை நிமிர்த்தி நெஞ்சில் புதைக்க, யாழி விம்ம ஆரம்பித்தாள்.

"இன்னைக்கு முழுக்க உன் புருசன் பக்கத்துல இருந்தும் யாரோ மாதிரி நீ ஒதுங்கி நின்னதை பார்க்கும் போது எப்படி துடிச்சேன் தெரியுமா..? எனக்கு இதெல்லாம் பார்க்க பிடிக்கலமா."

வார்த்தைகள் விசும்பலாய் வெடித்துக் கரைந்து கொண்டு இருந்தது. சந்தியாவும் வானதியும் பேச்சற்று அமர்ந்து இருந்தார்கள்.

"நியாயம், தர்மம்னு ஆயிரம் பேசலாம். எனக்கு என்னைப் பெத்த ரெண்டுபேரும் யாரோ மாதிரி நிற்கிறது வலிக்குதுமா. நான் எனக்காக மட்டும்தானே சிந்திக்க முடியும். இந்த இரவல் உறவுகளை விட்டு, இயல்பா இருக்கறது எப்போ..?" 

மடி கவிழ்ந்து அரற்றி கொண்டிருக்க பேச வாயெடுத்த வானதியின் கைபிடித்து தடுத்தாள் சந்திரயா.

வீட்டிற்கு கிளப்பும் போது வானதியை தனியாக அழைத்து மெல்லிய குரலில் சொன்னாள்,

" யாழி பந்தங்களுக்கு ஏங்குறா வானு.  நடைமுறை எதுவுமே தெரியாம உன் கைகளுக்குள் வளர்ந்த குழந்தைக்கு, மனிதர்களும் உறவும் இப்போ அவசியமா இருக்கு. அந்த முரட்டு குழந்தையின் தவிப்புக்கு இந்த கல்யாணம் கண்டிப்பா நிம்மதியை கொடுக்கும். 

எல்லோரையும் விட, இந்த தனிமையின் வலி எனக்கு புரியும். சிவா வர்றதுக்கு முன்னாடி நான் இப்படித்தானே இருந்தேன்.யோசி. தப்பில்லை." சொல்லி விட்டுத்தான் அனுப்பி வைத்தாள்.

வீட்டிற்கு வந்தபோது இரவாகி இருந்துது. நந்தா வீட்டில் இல்லை. குளித்து உடைமாற்றிக் கொண்டு கீழே வந்து அமர்ந்தார்கள் தாயும்,மகளும்.

கல்பனா பழங்கதை பேசிக் கொண்டிருக்க, மிருதுளா ஏதோ வேலையில் கவனமாய் இருந்தாள். தபஸ்வி அறைக்குள் அடைந்து கிடந்தாள். இந்த தனிமை தன்னை ஆசுவாசப்படுத்தும் என்று ஒதுங்கி இருந்தாள். பெயர் வைக்காத அந்த உணர்வை சுத்தப்படுத்த சிறிதுகாலம் பிடிக்கும் என்று அவளுக்கே புரிந்தது.

"சந்தியா ஏன் வீட்டு பக்கமே வர்றது இல்லே. நான் வரச்சொன்னேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாம் இல்ல வானதி." கல்பனா ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நந்தா தான். உள்ளே வந்தவன், யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் மாடிக்குச் சென்று விட்டான்.

இதுவரை இப்படி ஒரு நாளும் நடந்து கொண்டது இல்லை. ஒரு சேர மிருதுளாவும், வானதியும் ஒருவரை ஒருவர் பார்த்த வேகத்தில் தலைதாழ்த்திக் கொண்டனர். அந்த புரிதல் இருவருக்குமே புதிராகவும், நெகிழ்வாகவும் இருந்தது. இருவருக்குமே ஒரு உயிர்தானே… 

சிறிது நேரம் இடைவெளி விட்டு மிருதுளா மாடிக்கு எழுந்து செல்ல, உரிமை இருந்தும் அது உதவாமல் இருப்பதை வானதியை விட அதிகமாய் உணர்ந்த யாழி, அம்மாவை பரிதாபமாய் பார்த்தாள்.

"தூக்கம் வருது. மாடிக்கு போகலாம்மா." என்றவள் எழுந்து கொள்ள வானதியும் அமைதியாக பின் தொடர்ந்தாள். முதல் மாடியை கடக்கும் போது, தவிப்பில் தாமதித்து நின்ற வானதியின் கால்களை பார்த்த நிமிசம், யாழியின் வேதனை இன்னும் கூடியது. இன்னும் எத்தனைநாள் தன்னைப் பெற்றவள் இப்படி உரிமைக்கும், உறவுக்கும் நடுவே அல்லாடிக் கொண்டு தவிப்பாள்.

மாடிக்கு வந்து வாசலுக்கும், அறைக்குமாய் நடந்து தேய்ந்தாள். நந்தா தான் மாடிக்கு வரவே இல்லை.

ஆனால், அங்கொன்றும் பெரிதாய் நடந்து விடவும் இல்லை. அறைக்குள் மிருதுளா வந்தபோது, கைகளை மடக்கி தலைக்கு தந்துவிட்டு அறையின் நெற்றியை வெறித்துக் கொண்டு படுத்து இருந்தான் நந்தா. முகத்திலும் கண்ணிலும் அப்படியொரு கலக்கம்.

" நந்தா…" பக்கத்தில் வந்தமர்ந்து தலை கோதிய போதும் அப்படியே படுத்து இருந்தான்.

"என்னாச்சு..? ஏன் யார்கிட்டயும் பேசாம வந்துட்டீங்க..? வானதி ரொம்ப குழம்பி போயிட்டாங்க. பாப்பாவும் அங்கேதான் இருந்தா." 

'பாப்பா' என்றதும் அவசரமாய் கண்களை மூடிக்கொண்டான்.

"ம். பாப்பா சாப்பிட்டாளா..? தபு' மா..?"

"எல்லாரும் சாப்பிட்டாச்சு. என்ன பிரச்சனை நந்தா..?"

"நாளைக்கு பேசிக்கலாம் மிருது. தூங்கணும் போல இருக்கு. காலையில ரொம்ப சீக்கிரம் எழுந்திட்டோம்ல கிரகப்பிரவேசத்துக்கு போக." கண்களை திறக்காமல் பேசினான்.

மிருதுளா தலையாட்டிவிட்டு நகர, திரும்பி படுத்தான். இத்தனை நேரம் கண்ணில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் தலையணையில் உருண்டது.

மூச்சு திணற ஆரம்பிக்க, வேர்வைக்கு நடுவே உடல் உதற ஆரம்பித்தது. வேகமாய் போர்வையை எடுத்து மூடி, தன்னை சமன்படுத்த போராடத் தொடங்கினான்.

"...மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோயில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ…"

                  25

காலம் கண்ணாடி குடுவையில் போட்டு கார்க் அடைத்து மூச்சை பிடித்துக் கொண்டு மூச்சையே குடித்துக் கொண்டு உயிர்வாழும் சிறு பூச்சிபோல் உயிர்ப் போடும், தகிப்போடும் கடந்தோடிக் கொண்டு இருந்தது.   

ஒரு சின்ன ஆசுவாசம் கூட இல்லாமல் காலம் பிறப்பதும் இறப்பதுமான தன்னுடைய அன்றாடத்தில் ஒரு தோய்வில்லாமல் புரண்டு புளுங்காகிதம் கொண்டு இருந்தது.

ஒரு சின்ன விள்ளலின் சிதைவு போதும், மனமும் உடலும் பூச்சி தின்று பொய்த்துப் போக. 

தகுதித் தேர்வில் வென்று வந்த யாழினியை கல்லூரியில் சேர்க்க வானதியை முடுக்கிக் கொண்டு இருந்தான் நந்தா. ஆனால் நேரிடையாக அவன் வராமல் தள்ளியே நின்றது, முன்னமே சுணங்கிக் கிடந்த யாழினிக்கு இன்னுமின்னும் அலைப்புறுதலை அந்த தவிர்ப்பு உண்டாக்கியது.

‘’நான் சொல்லல, அவர் இவ்வளவுதான்மா. எல்லாமே நமக்கு செய்ய தயாராத்தான் இருக்கார். ஆனால் தள்ளி நின்னு மட்டும். போம்மா, எனக்கு படிக்கவே பிடிக்கல.’’ கேம்பஸ் வளாகத்தில் அமர்ந்து கொண்டு யாழினி கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்ன வார்த்தைகள், வானதியை மொத்தமாய் வருத்தியது. 

ஆனால் இப்படியெல்லாம் எளிதாக நந்தாவை அவளால் எடைதூக்கி பார்த்துவிட முடியவில்லை. அவனை அகமும் புறமும் அறிந்தவளால், அவன் புறக்கணிக்கிறான் என்ற பதத்தை சிந்தனையில் தீண்டக்கூட்ட ஒவ்வவில்லை. ஆனால் இதுதான் என்று மகளிடம் விளக்க முடியாத போது, அதை மெளனமாக கடப்பதே பெரிய ஆறுதலாக இருந்தது.

யாழியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நந்தாவுக்கு அழைத்தாள். ஏனோ மனசில் இனம் புரியாத நடுக்கம்.

’’ சொல்லு வானு.’’

‘’நீங்க எதுவும் கேட்கவே இல்லயே. நான் என்ன சொல்ல..?’’ என்றபோதே, இன்று கல்லூரிக்கு அட்மிசன் விசயமாய் சென்று வருவதாய் சொல்லி இருந்ததும், அது தன் சிந்தனையில் இருந்து தள்ளி இருந்ததும் நினைவில் வந்தது. நெற்றிப் பொட்டை வருடிக் கொண்டான்.

‘’சாரி சொல்லட்டுமா..! தப்புத்தான்.’’ அந்தக் குரல் ஒன்று போதாதா, அவன் உயிருக்கு அவனை இனம்காட்ட..!

‘’என்னாச்சு நந்தா..? இப்பெல்லாம் உங்க நடவடிக்கை என்னை பயமுறுத்துது. ஏதோ இருக்கு. என்னன்னுதான் புரிய மாட்டேங்குது.’’

நிதானித்தவன், மெதுவாகச் சொன்னான்.

‘’நைட் வந்து பேசறேன். லதா மறுபடியும் கால் பண்ணி யாழி விசயமா பேசினாங்க. எனக்கு ஏனோ பாப்பாவை கல்யாணம் பண்ணி தந்திடலாம்னு தோணுது. பேசலாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வானு. வச்சிடட்டுமா..?’’ 

வெகுநேரம் கைகளை ஊன்றி திட்டிலேயே அமர்ந்து இருந்தாள். அவன் குரல், அவன் சொல்லிய விசயம், எதிலுமே அவள் நந்தா இல்லை. பார்வை போன திக்கு முழுக்க வெறுமையே மிச்சம் இருந்தது. ஆட்டோவை தவிர்த்து நடந்தே வீட்டுக்கு வந்தவள், வழியில் என்றும் அவள் சிந்தனையில் தங்கிய கிருஷ்ணர் கோயில் முன்பாக நின்றாள். தன்னால் காந்தமாய் கால்கள் உள்ளே இழுத்துச் சென்றது. 

‘...மறுபடியும் என் வாழ்க்கையில விளையாட ஆரம்பிச்சு இருக்கியா நந்தா கோபாலா..! என் நந்தாவுக்கு என்னவோ பிரச்சனை,அது உடம்பிலயா மனசிலயா அல்லது வேலையிலயா தெரியல.ஆனால் அது எதுவா இருந்தாலும், எனக்கு தந்துடு. ஏன்னா ஒரு நோவினை இரு இதயங்கள் சுமக்கிறதை விட, ஒரு மனிதருக்கே அத்தனையும் தந்திடு. என் நந்தா உடம்பால மட்டுமில்லை, உயிராலயும் துளி கசங்கிடக் கூடாது.’’ நெற்றி நிறைய குங்குமத்தை தீட்டிக் கொண்டாள். பத்திரமாய் மிருதுளாவிற்காகவும் துளி குங்குமம் எடுத்து பொட்டலத்தில் கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

   யாழி கையில் தந்து மிருதுளாவிடம் தந்துவிடச் சொல்லிவிட்டு மேலே வந்தாள். வேலையே ஓடவில்லை. ஏதோ இருக்கிறது என்ற சிந்தனையே இத்தனை கொல்கிறதே, ஏதாவது இருந்தால் என்னாவது..! 

எப்போதும் படுக்கைக்கு செல்லும் முன் வந்து பேசிக் கொண்டு இருக்கும் நந்தா, இன்று அலுவலகத்தில் இருந்து வந்ததுமே மேலே வந்தான். அதற்கே காத்திருந்தவள் போல,கண்களால் துலாவி எடுக்க ஆரம்பிக்க, அதை அறிந்தே இருந்தவன் மெல்ல தடுமாறிப் போனான்.

‘’ ஏன் நந்தா திடீர்னு யாழி கல்யாணத்தை பத்தி பேசினீங்க..?’’

‘’சொல்றேன் வானு. லதா கால் பண்ணிட்டே இருந்தாங்க. அமர்க்கு இப்போ தவறவிட்டுட்டா, அடுத்து கல்யாணம் கூட நாலஞ்சு வருசம் ஆகும்னு ஜோசியர் சொல்லிட்டே இருக்காராம். அவங்களுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இருக்கு. அதை குறை சொல்றதுல அர்த்தமில்லை.’’

‘’ ம்…’’

‘’என்ன சொல்றீங்கன்னு கேட்கறாங்க. யோசிச்சு பார்த்தால் இந்த படிப்பு, வேலை, ஓட்டம் எல்லாத்துக்கும் முதல் காரணியே நிம்மதிதான். அந்த நிம்மதியை கட்டாயம் ஒரு கல்யாணம் தரும்னா அதை செய்துட்டு, மத்த விசயங்களை தேடறது தப்பில்லை. எனக்கு அமரை சின்ன பையன்ல இருந்தே தெரியும். என்னையே அவன்கிட்ட உணர்வேன். அந்த பொறுப்பும், கண்டிப்பும், குடும்ப பாசமும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். கண்ணுக்கு முன்னாடி ஒரு நல்ல பையன், அதுவும் என் பொண்ணை விரும்பி கேட்கிறாங்க, அவனை தவற விட்டுட்டு, எல்லாம் படிச்சு முடிச்சு, வேலைக்கு போனபிறகு வர்றவன், குணத்துல மாறாட்டம் இருந்தா, என் பொண்ணு நொறுங்கிப் போயிடுவாளே..!’’

‘’ஆனால் தபுமா யாழியை விட மூணு வயசு பெரிய பொண்ணு நந்தா. இந்த பேச்சு வார்த்தை மிருதுளாவை பாதிக்கும்.’’ வானதி அவன் மீதிருந்து கண்களை அகற்றாமல் கேட்டாள்.ஆனால் அவன் மீதான ஆராய்ச்சியை அவள் நிறுத்தவில்லை இன்னுமே.

‘’ இன்னும் ஒரு வருட படிப்பு பாக்கி இருக்கு.அதுக்கும் மேல எம்.டி செய்ற ஐடியால இருக்கா தபு. இந்த பயணத்தில் அவளுக்கான கால அவகாசம் இருக்கு. எல்லாத்துக்கும் மேலே என் மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு செய்த அளவுக்கு, படிப்பிலயும், அன்பிலயும், அருகாமையிலயும், ஏன் உறவிலயும் யாழிக்குனு நான் எதுவுமே செய்யல வானதி. 

அவளுக்கு நான் தராத அன்பையும், அக்கறையையும், பாசத்தையும் பொழியற ஒருத்தன் வேணும். சொந்த தகப்பன் கூடவே உறவாட முடியாம, தள்ளி தள்ளி, தயங்கி தயங்கி உள்ளுக்குள்ளயே மருகி நிற்கிற என் மகளுக்கு, அவளுக்கே அவளுக்கா உறவையும், உலகத்தையும், நான் அமைச்சுத் தரணும். அப்படி செய்யாம போயிட்டா, அந்த ஆண்டவன் கூட என்னை மன்னிக்க மாட்டான்.’’ 

‘’நந்தா, என்னை பாருங்களேன்.’’ மெல்ல மேவாயை பற்றி தன் புறமாய் திருப்பினாள். தன் கண்களை சந்திக்க தவிர்க்கின்ற அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.

‘’ஏதாவது பிரச்சனையா..? ஏன் திடீர்னு இந்த முடிவு..? அவ குழந்தை நந்தா.’’

‘’அதனாலதான் ரொம்ப தவிக்கிறேன். படிப்பு, வேலை எல்லாமே முக்கியம் தான். ஆனால் அதைவிட வாழ்க்கையும், நிம்மதியும், பாதுகாப்பும் முக்கியம்.நிச்சயம் அமர் நாம யோசிச்சதை யாழி வாழ்க்கையில் செய்து தருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு. ‘’

’’பொண்ணுங்க சொந்தக்கால்ல நிற்கணும் நந்தா. அதுக்கு பக்குவமும், படிப்பும் வேணும்.’’

‘’கண்டிப்பா சொந்தக்கால்ல நிற்கணும். இப்ப எந்தவிதத்துல என் பொண்ணு சார்பு வாழ்க்கை வாழப் போறானு நீ நினைச்சே வானு..? ஒரு பொண்ணுக்கு படிப்பும், வேலையும் மட்டுமே சொந்தக்கால்ல நிற்கிறதுக்கான அடையாளம் கிடையாது. நல்ல துணை வேணும். அந்த துணையோடு தான் எல்லா வெற்றிகளையும் உணர முடியும். யாருக்கு என்ன தேவையோ அதை உணரவும், அடையவும் சுதந்திரம் வேணும். சொந்தக்கால்ல நிற்கிற எல்லாரும், தெருவில அனாதையா நிற்கிறது இல்லயில்ல… குடும்பத்தை அமைச்சிட்டு வாழ்க்கையை ஜெயிச்சவங்க எத்தனையோ பேர் இருக்காங்க வானு. " முடித்தபோது மெல்ல மூச்சிரைத்தது. 

வானதி அமைதியாக இருந்தாள். உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்வதாய் ஏனோ மனம் சத்தமிட்டு சொன்னது. ஆனாலும் அவன் பேரன்பில் துளிகூட சுயநலம் இருக்காது. ஏனோ யாழியும் இந்த திருமணத்தை விரும்புகிறாள். மொத்தத்தில் யாழி என்ற தன் கை குழந்தை இன்னொருவர் சொத்தாகப் போகிறாள் மெல்ல மெல்ல…

"உங்க இஷ்டம் நந்தா. யாழிக்கும் இந்த கல்யாணத்தில விருப்பம் இருக்கு." என்ற போது நந்தாவின் கண்கள் விரிந்தது.

"இங்கே வந்ததில் இருந்து இனம் புரியாத ஏக்கம், தனிமை அவளுக்கு. குழந்தை நந்தா அவ. இப்பவும் என் நெஞ்சில முகம் புதைச்சு முகத்தை ஒளிச்சுக்குவா. இவ்வளவு சீக்கிரம் என் பொண்ணு என்னை விட்டு போயிடுவானு நான் நினைக்கவே இல்ல நந்தா. " வெடித்துக் கொண்டு கண்ணீர் விட்டவள் கரத்தை பற்றி தன் நெஞ்சில் வைத்து கொண்டான். தோளில் சாய்ந்தவள் கன்னத்தை மெல்ல வருடித் தந்தான்.

"நான் இருக்கேன் வானு உன் கூட. என் மிச்ச மூச்சு உள்ளவரை உன்னை என் பக்கத்திலேயே தான் வச்சிருப்பேன். என் பொண்ணை அடுத்த தெருவில குடுக்கிறதே அந்த குழந்தை முகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்க்கணும். என்னால முடியாது வானு, என் பிள்ளைகளை பார்க்காம வாழறது. கூப்பிடு தூரத்தில தான் என் பொண்ணுங்க ரெண்டும் இருக்கணும். என் உயிர் போகிறதா இருந்தாலும், என் பொண்ணுங்க மடியிலதான் போகணும்." சொன்ன போது சொல்லிய அவன் குரலிலும், பற்றிய இருந்த கரத்திலும் ஒரு நடுக்கம் பரவியதை வானதி உணர்ந்தாள். ஆக, ஏதோ இருக்கிறது. ஆனாலும் அவன் கழுத்தை பற்றி உண்மையை கக்கச் சொல்லவில்லை.

கீழே வந்து மிருதுளாவிடம் சொன்ன போது, உள்ளுக்குள் அதிர்ந்து போனாள். ஒரு தாயாய் தன் மகளை பற்றிய சிந்தனை அவளுள் ஓடினாலும், நந்தாவின் முடிவு அச்சப்படுத்தியது.

"கல்யாணம் பண்ணிட்டு காலேஜ் போவாளா? அப்படி என்ன அவசரம் நந்தா ? "

" அமர் இந்த வீட்டுக்கு வேணும் மிருது. துர்யன் குழந்தை. அவனால பெரிய பொறுப்புகளை தாங்க முடியாது. நல்ல மனுசனை கை நழுவ விட்டுட்டு, பிறகு நல்ல வரனுக்காக காத்திருக்கிறது சுத்த முட்டாள்தனம். "

சில நிமிடங்கள் மெளனம் நீடித்தது. அவள் மனசு முழுக்க மகள் குறித்த ஆற்றாமை மட்டுமே ஆலவட்டம் போட்டது. அதை உணர்ந்தவன் நெருங்கி படுத்து நெற்றியில் முத்தம் வைத்தான். அவனை இறுக்கி கொண்டாள்.

"நந்தா… யாழிக்கு நல்ல வாழ்க்கை அமையறதுல எனக்கு எந்த பொறாமையும் இல்ல. ஆனால், என் பொண்ணு பின் தங்கிப் போனாளோங்கற பரிதவிப்பு ஒரு தாயா எனக்கு இருக்கு." 

"ரெண்டுமே என் குழந்தைகள் மிருது. அதுல எனக்கு பேதமை இல்ல. பாப்பாக்கு ஒரு தகப்பனோட அன்பு வேணும். அமர் அதை தருவான். நான் செய்தால் அதில் காரணம் இருக்கும்னு நீ நம்பினா, ப்ளீஸ் இதுக்கு மனப்பூர்வமா சம்மதம் சொல்லு." அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். அந்த மூச்சின் மாறாட்டத்தை ஸ்பரிச்சத்தால் உணர அவள் வானதி கிடையாது. கண்களை மூடிக் கொண்டு கிடந்தவன் நெஞ்சில் ஒரு பிரளயத்தின் நுனி பற்றி எரிய ஆரம்பித்து இருந்தது. மெல்ல மெல்ல மூச்சை காலம் தின்னத் தொடங்கி இருந்தது.

"...தகப்பன் மகளின் பந்தம் எல்லாம்

பிறந்தவர் வீட்டில் வாழும் வரை

அவள் நல்லவன் ஒருவன் நாயகியானால்

இல்லற பந்தம் இறுதிவரை

பந்தம் பாச பந்தம்

பிறக்கும் போதே

கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்…"


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 52
Topic starter  

                       

இத்தனை சீக்கிரம் பூ பூக்குமா... இத்தனை சீக்கிரம் வேர் பிடிக்குமா... இத்தனை சீக்கிரம் கனி கனியுமா... இத்தனை சீக்கிரம் மரம் தான் தளையுமா...


பெண் பார்க்க வந்தபோது, பாவாடை தாவணியில் பளிங்கு சிலை போல் நின்ற மகளை பார்த்துக் கொண்டே இருந்தான். முகத்தில் புதிதாய் மிளிர்ந்த ஒரு பேரழகை பார்க்க பார்க்க உள்ளம் விம்மியது. பக்கத்தில் அமர வைத்து கன்னம் வருட உள்ளம் தவித்தது. அவள் தான் முகம் நிமிர்த்தி கூட பார்ப்பது இல்லயே.

”படிப்பு, வேலை எல்லாம் யாழினியோட இஷ்டம் அங்கிள். வீட்டில உட்கார்னு எப்பவும் சொல்லவே மாட்டேன். அதே நேரம் எனக்கு அது தான் பிடிச்சு இருக்குன்னு யாழினி உணர்ந்தா, அதற்கான முழு உரிமையும் அவளுக்கு இருக்கு.‘’என்ற ஒரு வார்த்தையில் நந்தாவின் மனதை வென்று விட்டு இருந்தான்.

எந்தக் குறையும் இல்லாமல் பெரும் ஆர்பாட்டமாய் தான் ஏற்பாடுகளை செய்தான். அத்தனை இடத்திற்கும் வானதியை அழைத்துக் கொண்டு போனான். அழைப்பிதழ் தொட்டு, மண்டபம் வரைக்கும், தம்பதி சமேதகர்களாய் இருவருமே வலம் வந்தார்கள். எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் யாழினி அத்தனையும் உள்வாங்கிக் கொண்டே இருந்தாள்.

அழைப்பிதழ் அச்சடித்து வந்ததும் வழக்கமான மணப் பெண்ணின் பார்வை கொண்டு அமரின் பெயரை வருடாமல், ஒடிச் சென்று அவள் கண்கள் தேடியது, அவள் பெயருக்கு மேலே உட்கார்ந்து இருந்த, நந்தகோபாலன், வானதி நந்தகோபலன் தம்பதியின் மகள்...’ என்ற பதத்தையே கண்ணில் நீர் மறைக்க பார்த்துக் கொண்டு இருந்தாள். மெல்ல குனிந்து அந்த பெயர்களுக்கு முத்தமிட்டாள். நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள். நிறைவாக இருந்தது.

இந்த முழு மாதமும் நந்தாவும் வானதியும் விடுப்பு எடுத்துக் கொண்டு, சேர்ந்தே ஒடிக் கொண்டு இருந்தார்கள். நண்பர்கள், உறவினர்கள் என்று அத்தனை பேரையும் சேர்ந்து போய் அழைத்து விட்டு வந்தார்கள். சில நேரம் மாடிக்கு வந்தால், பேசிக்கொண்டே வாசலில் இருந்த கட்டிலில் படுத்து உறங்கிப் போய்விடுவான். மகள் உறங்கிப் போய்விட்டாள் என்ற தைரியத்தில், அந்த ஒற்றைக் கட்டிலில் நந்தாவை நெருக்கிக் கொண்டு, காமம் துளிர்க்காத காதலோடு வானதியும் படுத்து உறங்கிப் போவாள்.

நிலவு வெளிச்சம் இருவர் முகத்திலும் விழுந்து கிடக்கும். அந்த வெளிச்ச உபயத்தில் நந்தாவின் தலைமாட்டில் சத்தமின்றி வந்து அமர்ந்து கொண்டு, அவன் மீசையில் இருக்கும் வெள்ளை முடிகளை வெறுப்போடு பார்த்துக் கொண்டு கன்னத்தில கை வைத்து அமர்ந்து கிடப்பாள் யாழி.

தகப்பனின் கம்பீரத்துக்கு இந்த வெள்ளை முடி இடையூறு செய்யும் கோபம் அவளுக்கு.பக்குவமும் பரிசுத்த அன்பும் கொண்டிருந்த தபஸ்வியும்,தன் உள்ளத்தில் முளைத்து முறுவலித்து இருந்த ஆசைகளை களைய ஆரம்பித்து இருந்தாள். நங்கூரம் பாய்ச்சிய கப்பலுக்கு தள்ளாட்டம் இருந்தாலும், தடுமாற்றம் இருப்பதில்லை.

சிறு பிராயத்தில் இருந்து ஒற்றி ஒற்றி வளர்த்த நினைவு. வயசும், மனசும் இல்லை என்று சொன்னதை ஏற்க மறுத்து தர்க்கம் செய்தாலும், தன்னைவிட தங்கைக்குத் தான் அமரைப் போன்ற அன்பானவன் வேண்டும் என்ற பெருந்தன்மையை நந்தாவின் ரத்தம் உடலில் ஒடியதாலயோ என்னவோ உணர முடிந்தது.

கல்லும் கரைந்து தான் போகும், அது உப்பு கல்லாக இருக்கும் போது எனில், கவலைகள் கரைந்து போகாதா என்ன..?

மிருதுளா யாழியை அழைத்துப் போய் ஸ்கூட்டி வாங்கித் தந்தாள். துர்யன் மூன்றே நாளில் ஓட்ட கற்றுத் தந்து, லைசன்சும் எடுத்து தந்தான்.

”பக்கத்து தெருதான். ஆனால் வண்டி இருந்தா நினைச்சதும் பாப்பா வந்து போக வசதியா இருக்கும்ல.” மிருதுளா சொன்ன போதுதான் இந்த திருமணம் மொத்தமாய் தன்னை பறித்து நடுகிறது என்ற பேருண்மை யாழினியின் நெஞ்சில் ஓங்கி மிதித்தது.

வாழ்ந்து கடந்தாலும், வாழ்க்கையையே கடந்தாலும், மெல்ல காலம் கை கூடத்தான் செய்கிறது.

அத்தனை பெரிய ஆதவனும், சிறுதுளை வழியில் கசிந்து குகைக்குள் பிரவேசம் செய்ய தன்னை சமன்படுத்தி கொள்கிறான். உக்கிர சூட்டை உள்ளிழுத்து கொண்டவன், இண்டு இடுக்கில் விழுகின்ற நிமிசம் வெளிச்சமாக மட்டும் தன்னை சாந்தப்படுத்திக் கொள்கிறான். இடத்திற்கு ஏற்ப தன்னை நிலை மாற்றிக் கொள்ளத் தெரியாதவன் ஆதவனைப் பார்த்து அரிச்சுவடி வாசிக்க வேண்டும்.

நந்தா தாரை வார்த்து கரம் பற்றி கொடுக்க, அமர் மாங்கல்யம் பூட்டிய போது, தன்னை அறியாமல் யாழி அழ, வானதியை தாண்டி ஓடிவந்து மகளை நெஞ்சின் மீது கிடத்திக் கொண்ட காட்சியை நிறைந்த மண்டபமே நெகிழ்வாய் பார்த்துக் கொண்டு இருந்தது.

நின்று நின்று புகைப்படமும் ஒளிபடமுமாய் எடுத்து தள்ளினார்கள். காக்கி உடுப்புகளின் கூட்டத்தை பார்த்து யாழியின் முகத்தில் முதன் முறையாக மிரட்சியை கண்டான் நந்தா.ஓய்வான நண்பகலில் அமர் மெல்ல நண்பர்களோடு அரட்டையில் தள்ளி நிற்க, யாழினி மேடையை விட்டு கீழே வந்து தனியாக அமர்ந்து இருந்தாள்.

நந்தா எதிரில் வந்து அமர்ந்து மகள் முகத்தையே பார்த்துக் கொண்டு கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

”யாழி மா... இப்பக் கூட என்கிட்ட பேச மாட்டியா..? இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா பெத்த குழந்தையை கொஞ்சறதுக்குள்ள, இரவல் குடுத்த மாதிரி இருக்கு.” தொண்டை கமறியது.

”பெண் பிள்ளைகளை கல்யாணம் பண்ணித் தர்ற ஒவ்வொரு தகப்பன் நிலையும் இது தான். என்ன, எனக்கு கொஞ்சம் அதிகம். இனி உனக்கு நான் யாரோ தானே. இப்பவும் என்னை அப்படித்தானே நினைக்கிறே. ஆனாலும் நான் அப்படி உணர்ந்தது இல்ல. எத்தனை ஒதுக்கினாலும் உனக்கு நான் தான் எல்லாம்’னு ஒரு உரிமையும், கர்வமும் இருக்கும். இப்போ அந்த உரிமையை தாரை வார்த்து தந்தாச்சு.” அவன் குரல் அடைக்க பேச பேச யாழியின் நெஞ்சை அடைத்தது.

”பிள்ளைகள் கல்யாணம் பெற்றவங்களுக்கு சுகமான ரணம். சுகம் உங்களுக்கு, பிரிவின் ரணம் எங்களுக்கு. என்னை பிடிக்காட்டியும் என். யாழினி’னு நீ சர்ட்டிபிகேட்டுல கையெழுத்து போடும் போது ’என் யாழினி’-னு ஒரு இருமாப்பு வரும். இனி அதுவும் மாறிடும் இல்ல..! இனி ஏ. யாழினி அமரேந்திரன் தானே என் பொண்ணு.” கண்ணில் நீர் திரள, மகளின் கன்னத்தை தட்டித் தந்தான்.

.”என் அம்மாவை உங்க கூட பார்க்கணும். நான் மட்டுமில்லை,

இந்த ஊரே, உலகமே. அவர் உங்க மனைவி தான். ஆனால் அதுக்கான மரியாதை அம்மாக்கு யாருமே தரல, நீங்களும் தான். இதே லதா ஆன்டி தான் அன்றைக்கு அம்மாவை ஒரு பொருட்டா கூட நடத்தல.

அம்மா ஜடமில்லை. தன் ஆசைகளை வெளிக்காட்டாத தேர்ந்த நடிகை. எனக்கு அம்மாவை புரியும். நீங்க என் அம்மாவுக்கு தர தயங்கின இடத்தை, இந்த உலகமே இப்போ தந்திருக்கும்.

இந்த கல்யாணத்தை கூட அதுக்காக மட்டும்தான் நான் செய்ய நினைச்சேன். ஆயிரம் பேர் நடுவில என் அம்மாவும் உங்க வாழ்க்கையில் சகல உரிமை உள்ளவங்கன்னு காட்ட நினைச்சேன். நீங்க தரத் தவறின இடத்தை நான் வாங்கித் தந்துட்டேன் இந்த கல்யாணத்தின் மூலமா. ஆனால்... ஆனால் இப்போ அவரை பார்த்தா பயமா இருக்கு.” யாழி பார்வை போன இடத்தை நிமிர்ந்து பார்த்தான். அமர் நான்கைந்து முரட்டு காவல்துறை அதிகாரிகளுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தான்.

”யாழிமா...”

‘’அப்புறம், எனக்கு இந்த அடையாளத்தை மாத்திக்கிறதுல எல்லாம் இப்ப மட்டுமில்ல எப்பவுமே இஷ்டமில்லை. எப்பவும் நான்...” என்றவள், ஆள்காட்டி விரலை நந்தாவின் நெஞ்சில் வைத்து சுட்டிக்காட்டிச் சொன்னாள்,

‘’என். யாழினி தான்.” உன் யாழினி தான் என்று சொல்கிறாள். மருதாணி கவ்விய அந்த பிஞ்சு விரலை பற்றி முத்தமிட்டவன் எழுந்து கொண்டான்.

அமரை நோக்கி நகர, நந்தாவைப் பார்த்ததும் அமரும் நண்பர்களை தவிர்த்து விட்டு,புன்னகையுடன் நகர்ந்து வந்தான்.

‘’அங்கிள்.”

‘’பிசியா அமர்..? கொஞ்சம் பேசலாமா..?‘”

” தாராளமா.”

”யாழி... இல்ல.., நீங்க கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும்.” வார்த்தைகள் தந்தியடித்துக் கொண்டு வர, அமர் புரியாமல் கண்களை விரித்துப் பார்த்தான். சத்தமில்லாமல் பின்னால் வந்து நின்று சந்தியா இருவரையும் வேவு பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

‘’கண்டிப்பா அங்கிள். ‘’

‘’இல்ல, இல்ல, நான் சொல்ல வந்தது அது இல்ல. நீங்க போலீஸ். அதனால எல்லாத்தையும் ஒரு முரட்டுத் தனத்தோட அணுகுற இயல்பு இருக்கும். அது பாதகமில்லை. ஆனால், யாழிமா, ரொம்ப ரொம்ப பயந்த சுபாவம். இப்போகூட டிபார்ட்மெண்ட் ஆள்களை பார்த்து முகமெல்லாம் வெளிறிப் போய் நின்னுட்டு இருக்கா. அதனால கொஞ்சம், முரட்டுத்தனம் இல்லாம...” நந்தா சொல்ல வந்ததை சொல்லத் தெரியாமல் திணற, அவன் சொல்லாமலே அதை புரிந்து கொண்ட அமரின் முகம், மொத்தமாய் சிவந்து போனது.

சந்தியா தலையில் அடித்துக் கொண்டு இருவருக்கும் நடுவில் வந்து நின்றாள்.

‘’நந்தா இட்ஸ் டூ மச். உலகத்துலயே பொண்ணை குடுத்துட்டு கூடவே இப்படி டிப்ஸும் குடுத்த முதல் மாமனார் நீதான்யா.‘’ அமர் சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் அங்கிருந்து வேகமாய் நகர, நந்தா முகத்தில் டண் கணக்கில் அசடு வழிய நின்றான்.

‘’சந்தியா, உனக்குத் தெரியாது, யாழிக்கு போலீஸ்னா ரொம்ப பயம்.” தன் பாட்டுக்கு உளறிக் கொட்ட,

‘’ஏன் பயம்..? யார் வீட்டில திருடிட்டு ஓடி இருக்காளாம் உன் பொண்ணு. இதெல்லாம் இயற்கை. பந்தலைத் தேடி கொடி படருவது மாதிரி. அதுக்கு பாடம் நடத்த தேவையில்லை. உனக்கு உன் மகள் அதிசயம் தான். அதுக்காக இப்படியா..? அமர் மொத்தமா சிவந்து போயிட்டான்.” சந்தியா ஓட்டிவிட்டு நகர, நந்தாவிற்கே வெட்கம் பிடுங்கித் தின்றது.

மண்டபத்தில் இருந்தே பெண்ணை அழைத்துக் கொண்டு லதாவின் குடும்பம் செல்ல, சொல்ல முடியாத உணர்வில் நின்றார்கள் அனைவரும். காலம் காலமாய் இது நடப்பது தான் என்றாலும், தனக்கெனும் போது தாங்கத்தான் இயலவில்லை. அம்மாவின் கரத்தில் முகம் பொதித்து யாழினி அழுதபோது மிருதுளாமிருதுளாவே கலங்கிப் போனாள்.

‘’எதை எதையோ யோசிச்சனேமா, இதுக்கு முடிவில உன்னை விட்டுட்டு நான் போகணும்கிற நிஜத்தை யோசிக்க தவறிப் போயிட்டனேமா..! நான் இல்லாம நீ எப்படிமா இருப்பே.” யாழி கதறிய போதும், வானதி திடமாகத்தான் நின்றாள்.

‘’அப்படியெல்லாம் எதுவுமில்லை. பெண்ணா பிறந்தா இந்த நாளை சந்திக்காம கடக்க முடியாது. இன்னைக்கு இல்லாட்டி, நாளைக்கு அவ்வளவுதான். இயல்பா இந்த நாளும் கடந்து போயிடும். அழக்கூடாது யாழி.” மெல்ல கைகளை பற்றிக்கொண்டு திடமா சொன்னவள் அதே உறுதியோடு மகளை வழியனுப்பியும் வைத்தாள்.

அத்தனை பேர் முன்னாக வந்து நின்று தலையசைத்து விடைபெற்றவள், நந்தாவின் முன் வந்தபோது அசையாமல் நின்று, இப்போதும் அவனை அசைத்துப் பார்த்தாள். அசைவுகளையும், இசைவுகளையும் கொண்டு பாசத்தை அறிந்திட விரும்பாத நந்தா, மகளின் உள்ளங்கையை பற்றி அழுத்தமாய் உணர்வுகளை பதித்து, அணைத்துக் கொண்டபோது உள்ளுக்குள் அவளுக்குள் எதுவோ உடைந்து நழுவியது. கடைசி வரைக்கும் தகப்பனின் நிழலில் இளைப்பாறும் பேறு மட்டும் அவளுக்கு இல்லாமலே போய்விட்டது என்ற நிஜம் வலித்தது.

வீட்டிற்கு வரும் வரைக்கும் வானதி எதுவுமே பேசவில்லை. அத்தனை முகங்கள் அங்கே இருந்தும்,அவள் அடிவயிற்றில் அவதரித்த அந்த முகம், தன் சொந்த முகம் அங்கே இல்லாத வெறுமை வானதியை சுருட்டியது. சோபாவிலேயே கால்களை மடக்கி அமர்ந்து கொள்ள, நந்தா பக்கத்தில் வந்து அமர்ந்து தோள்களை தொட்டான்.

வீறிட்டு கதறி விட்டாள். மொத்த உறவுகளும் ஸ்தம்பித்து நிற்க, இத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் அணை உடைத்து கரை கடந்து இருந்தது.

‘’என் உலகத்தையே மொத்தமா தூக்கி குடுத்துட்டு வந்துட்டேனே நந்தா. இருபது வருசம் என்னைத் தவிர எதுவுமே தெரியாத என் பொண்ணை, இப்போ மொத்தமா

தூக்கி குடுத்துட்டேன். எனக்கு தாயுமான தங்கத்தை இனி முழுசா எனக்கு சொந்தமில்லைன்னு தந்துட்டு வந்துட்டனே..! யாரும் அழுத்தி ஒரு பார்வை பார்த்தா கூட, என் அடிவயிறு பதறுமே, இன்னைக்கு நானும் அவள் உலகத்தில விருந்தாளி தானே..! அவள் இல்லாத இடத்தில நான் எப்படி நந்தா இருப்பேன்.” நந்தாவின் நெஞ்சில் முகம் புதைத்து வெடித்து கதறியவளைப் பார்த்த மிருதுளா வேகமாய் தபுவின் அருகில் வந்தவள் மகளின் கைகளை இறுகபற்றிக் கொண்டபோது, அதில் நடுக்கம் தெரிந்தது. நீயும் இப்படித்தானே ஒரு நாள் என்னைக் கடந்து போய் விடுவாய்..’ என்ற தவிப்பு அந்த இறுக்கத்தில் தெரிய, ஆயிரம் மாறாட்டங்கள் இருந்தாலும், அம்மா என்ற மொத்த சாரம்சத்தில் அவர்களின் உணர்வு ஒன்றுதான் என்று புரிந்தது. 

ஆனந்தத்தை தரும் பிரசவ வலியிலும் அழுகை வராமலா இருக்கப் போகிறது. முளை விடும் பந்தத்தின் முடிவில்லாத ஒரு துவக்கத்தில் மகிழ்ச்சி மட்டும் வித்தாவதில்லை, நெகிழ்ச்சியும் தான் நெஞ்சை நிறைக்கிறது.

“...மலர் என்ற உறவு

பறிக்கும் வரை

மகள் என்ற உறவு கொடுக்கும் வரை

உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்

உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்

எந்தன் வீட்டு கன்று இன்று

எட்டி எட்டிப் போகின்றது

கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து

எட்டி எட்டிப் பார்க்கிறது

இமைகள் அதை மறைக்கிறது

மரகதவல்லிக்கு மணக்கோலம்

என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்..”

 

       அத்தியாயம் -26

 

"உன்னை சரியாவே வளர்க்கல யாழி...”என்று அமர் சொல்லிக் கொண்டே டீ போட்டபோது, அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் கரைந்து போய் இருந்தது.

சமையல் மேடையின் மீதேறி அமர்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டே பக்கவாட்டில் கையூன்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யாழினி மொத்தமாய் மாறிப் போய் இருந்தாள். நீள்வட்ட முகம் உருண்டு திரண்டு இருந்தது. எப்போதும் ஏக்கத்தில் திணறும் கண்களில் இப்போது ஏகாந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது. அவளின் ஒவ்வொரு அணுவிலும், அமரின் ஆக்ரமிப்பு தெரிந்தது.

திருமணம் மட்டும் மணக்கின்ற வரமாய் அமைந்து போனால், அதற்கு இணையான சொர்க்கம் உலகில் இல்லை.

இடக்கையில் அனாயாசமாய் அவளை அள்ளிக் கொண்டு, வலக்கையில் டீ குவளையோடு ஹாலுக்கு வந்தவன்,

சோபாவில் அவளை விட்டு விட்டு, அவசர அவசரமாய் நான்கைந்து மிடறை பருகி விட்டு மீதியை தர, கோபமாய் பார்த்தாள்.

”இந்த மிச்ச டீயை குடிக்கிற தண்டனை இன்னும் எத்தனை நாளைக்கு.?’’ என்றாலும் இதழில் தொடங்கி இதயம் வரை இனித்தது அவன் தீண்டித் தந்த தேநீர்.

”சாரி மேடம், இது ஆயுள் தண்டனை. அது சரி ட்யூட்டில இருந்தவனுக்கு ஃபோனை போட்டு, தலை வலிக்குது, வந்து டீ போட்டு தாங்கன்னு சொல்றது எல்லாம் அராஜகத்தின் உச்சம்.” என்றவன் அவள் மடியில் மல்லாந்து சரிய, அவள் கரங்கள் தன்னால் சிகை அளக்க தொடங்கி இருந்தது.

”ட்யூட்டி டைம்ல இப்படி பர்மிசன் போட்டுட்டு வந்து யாராவது ரொமான்ஸ் பண்ணுவாங்களா.?’’ என்று வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தாள்.

”என்ன செய்ய, என் டார்லிங் பிறந்து வளர்ந்தது கல்கத்தாங்கறதாலே அவளே ரசகுல்லாவா மாறிப் போன மாயம் எனக்கு மட்டும்தான தெரியும். ரசகுல்லா ஒடிசாவுக்கு சொந்தமா, மேற்கு வங்காளத்துக்கு சொந்தமானு சண்டை

போடறானுக.ஆனால், அது எனக்குத்தான் சொந்தம்னு உங்கப்பா எழுதி தந்துட்டாரு.’வார்த்தைக்கு வார்த்தை சிவக்க வைத்தான்.

”உனக்கு போலீஸ்னா பயம், என் பொண்ணை அழுத்தி பிடிக்காத, இழுத்து அணைக்காத’னு உன் நந்தா அட்வைசா பண்ணி அனுப்பிச்சாரே...’ அவன் மேற்கொண்டு பேசுவதிற்கு முன் பட்’ என்று ஒரு அடி வாயில் விழுந்தது.முறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவனை, கைகளை கட்டிக் கொண்டு அதே பார்வை பார்த்தாள்.

”அதென்ன பேர் சொல்றது. அப்படி கூப்பிடறதுக்கு எனக்கு மட்டும்தான் உரிமை. நீங்க சொன்னீங்க அவ்வளவுதான்.’ என்றாள். அவன் முறைத்துக் கொண்டே இருக்க, நெருங்கி அமர்ந்து அவனை இறுக அணைத்து மார்பில் முகம் புதைத்து சொன்னாள்.

”வீட்டில எல்லார்க்கும் தனித் தனியா வேலை இருக்கு. எனக்கு மட்டும் எதுவும் இல்ல. உங்களை கல்யாணம் பண்ணிட்டு என் வாழ்க்கையே போச்சு.” போலியாய் விசும்பியவள் முகம் நிமிர்த்தி ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தான்.

”தேவைதான்டி. இப்படி அப்படி அலைஞ்சிட்டு அட்மிசன் போடறதை தட்டி விட்டது யாரு, நானா நீயா..? அடுத்த வருசம் குண்டு கட்டா தூக்கிட்டு போய் காலேஜ்ல தள்ளிடுவேன். உங்கப்பா என்கிட்ட ஆரம்பம் முதல் போட்ட கண்டிசன் இது ஒண்ணு தான். நீ படிக்கணும்.”

கடிகாரத்தை பார்த்து எழுந்து கொண்டவன், முகம் அலம்பிக் கொண்டு வந்து யூனிபார்ம் மாற்ற ஆரம்பித்தான்.

”தனியா இருக்க கஷ்டமா இருக்கா யாழி..? உங்க வீட்டில கொண்டு போய் விட்டுட்டு போகட்டுமா?”

”வேண்டாம்” என்றாள் தீர்க்கமாக. மற்றவருடன் கூட கலந்து போகும் அவள் நேர்மை பெற்றவனிடம் மட்டும் பிரிந்தே தான் கிடைக்கிறது.

திருமணம் முடிந்து வானதியோடு ஒரிரு முறை நந்தா வந்து போனான். யாழிக்கு அந்த உணர்வை சொல்லிக் கொண்டாட மொழியே இல்லை. தனக்கொரு வீடு, அதில் விருந்தாடவேணும் வந்து போகும் உறவுகள். இதெல்லாம்

அவள் கனவில் கூட இதுவரை வந்ததில்லை.திருமணம் முடிந்த கையோடு, மதர் கேத்தரின் ரோம்’க்கு புனித பயணம் செல்ல, வானதியை அழைத்து மிஷினரியையும், மருத்துவமனையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு போய் இருந்தார்.

ஆயிற்று வானதி இங்கிருந்து சென்று இரண்டு மாதங்களாகிறது. கல்பனா தான் அடிக்கடி பேரனோடோ, பேத்தியோடோ அல்லது மிருதுளாவையோ அழைத்துக் கொண்டு வந்து பார்த்து விட்டுப் போவார். யார் வந்தாலும் யாழியின் கண்கள் ஆவலாய் நந்தாவை தேடி ஓடும். ஏமாற்றத்தின் வலியை வார்த்தைகளில் கூட ஏற்றி வைத்து காட்ட மாட்டாள்.

வீம்பாய் நந்தா எப்படி இருக்கிறான்’ என்று யாழியும் விசாரிக்க மாட்டாள். கல்கத்தாவில் இருந்த போது, மகள் குரலை கேட்கவும், முகத்தை பார்க்கவும் தவம் கிடந்த நந்தா, இப்போது கூப்பிடு தூரத்தில் மகள் இருந்தும் அழைத்து பேசுவதும் இல்லை, வந்து பார்ப்பதும் இல்லை.

எத்தனை வலுவாய் எழுப்பினாலும், யாழி விசயத்தில் மட்டும் நந்தா சரிந்து தரைமட்டமாவதை தடுக்கத்தான் இயலவில்லை. அலைபேசியில் வானதி பேசும் போது கூட நந்தா மீது குற்றம் சுமத்துவதும் இல்லை.

அம்மாவின் அடிச்சுவடு இல்லாத வீட்டிற்கு அவளும் செல்லவில்லை, என்றாலும் மனசு முழுக்க வலியின் ரணம் புரையோடிக் கொண்டே வலித்தது.

”ஈவினிங் சீக்கிரம் வந்திடறேன். வெளியில போகலாம்.”அமர் கிளம்பிப் போன பிறகு, வீடு வெறிச்சோடி போனது.

மொபைலை எடுத்து கல்யாண புகைப்படங்களில் கொண்டு வந்து நிறுத்தினாள். பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய், முகம் முழுக்க சிரிப்போடு நின்ற நந்தாவை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

’.என்னை எப்போஉணர்வீங்க..?நீங்க காட்டின பாசம் நிஜமில்லை. இரண்டு மாசமாச்சு... என்னை பார்க்கணும்னு தோணவே இல்லயில்ல… ஐ ஹேட் யூ நந்தா.’ என்றவள் முகத்தை மூடிக்கொண்டு தன்னை சமன் செய்ய போராடினாள்.

* * *

கடற்கரை காற்று உயிர்வரை வருடியது. இருட்டு மெல்ல குருட்டுதனமாய் கடலை நீவிக் கொண்டு இருந்தது. கைகளை பின்னால் ஊன்றி, மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவர்களில் எத்தனை பேர்கள் இன்னும் ஐந்தாண்டுக்குள் இறந்து போவார்கள் தன்னையும் சேர்த்து. மரணத்தின் மீது ஒரு வியப்பின் துளி கவிழ்ந்து ஆக்ரமித்துக் கொண்டது.

சிறுவயதில் பெரும் நம்பிக்கையில் இருப்பான் நந்தா. தனக்கு மரணம் வருவதிற்குள் வெள்ளை தாடியும், பூனைக் கண்ணும் கொண்ட ஏதாவது ஒரு விஞ்ஞானி மரணத்திற்கு மாற்று மருந்து கண்டுபிடித்து விடுவார் என்று. இப்போது தான் புரிந்தது, அந்த மருந்தை கண்டு பிடிப்பதிற்கு முன்னே அந்த விஞ்ஞானியே மரணித்து போய்விட்டார் என்று.

எது மாற்றவும் மறுக்கவும் முடியாதோ, அதை காதலித்து விட வேண்டும். அதைத்தான் இப்போது செய்கிறான். பந்த வேள்வியில் தன்னை விடுவித்துக் கொண்டு, பேரண்டத்தின் பிரமாண்டத்தில் தன்னை புகுத்திக் கொள்கிறான்.

கால கணக்குகள் மீது இருந்த ஒட்டுமொத்த நம்பிக்கை தகர்ந்து போய் இருக்க, கடமையை அவசரமாய் முடிக்க அவன் செய்த முதல் ஏற்பாடுதான், யாழினியின் திருமணம்.

அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளையும் துரிதமாக்கிக் கொண்டுதான் இருக்கிறான். தன் கூடு பழுதுபடும் முன்னாக.அடிவாரத்து சூரியன் குடிகாரன் கண் போல் சிவந்து போய் கிடந்தது. அதை சுட்டிக் கொண்டு இருக்கும் போதே, மனம் முட்டிக் கொண்டு அந்த நாளை நினைத்தது.

அமர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே,மெல்லிய மூச்செடுப்பு ஆரம்பித்திருக்க பக்கத்தில் அமர்ந்திருந்த குடும்பத்தின் பார்வையில் தன்னுடைய நலக்குறைவை காட்டாமல் மறைக்க வெகுவாய் சிரமப்பட்டவன், வீட்டில் மிருதுளாவை இறக்கி விட்ட கையோடுதான் லேப்பிற்கு சென்று டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு டாக்டர் ராவை பார்க்க மருத்துவமனைக்கு சென்று இருந்தான்.

வெகுஜன சிந்தனையில் தொக்கி நிற்கும் சில வியாதிகளை பற்றியே அவன் மனம் யோசித்துக் கொண்டு இருந்தது. ஒவ்வாமையோ, டஸ்ட் அலர்ஜியோ, அல்லது சின்னதாய் மார்பில் அடைப்போ..! இன்னும் ஐம்பதைத் தொடவே

இரண்டு ஆண்டுகள் மிச்சம் மீதமிருக்கிறது. ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர் ராவ், சில நிமிடங்கள் மௌனம் தின்றார்.

”நேற்றும் இரவில் வேர்வையும், களைப்பும் இருந்ததா மிஸ்டர் நந்தா.”நினைவை தேய்த்து இரவை கொண்டு வந்து பார்த்தான். இருந்தது என்றான் ஆமோதிப்பாய்.

”இந்த அறிகுறி எத்தனை நாளாய் இருக்கு..?”

அறிகுறி’ என்ற பதமே நோய் இருக்கிறது என்று கட்டியம் சொல்ல, மெல்லிய குழப்பமும் பதட்டம் வந்து அப்பிக் கொண்டது. கேள்விகள் நீண்டு கொண்டே போக, மெல்ல நிமிர்ந்து அமர்ந்தான்.

”உங்களுக்கு இருந்த அறிகுறிகளின் அடிப்படையில் தான் மிஸ்டர் நந்தா சில சோதனைகள் செய்துட்டு வரச் சொன்னேன். எஃப். பி.சி, வைரலாஜி டெஸ்ட், ஃப்ளோ சைட்ரோ மெட்ரி, அல்ட்ரா சவுண்ட், பயாப்சி’னு எழுதி தந்தேன். சிலநேரம் சந்தேகங்கள் நிவர்த்தி ஆகும்போது சந்தோசங்கள் விளையுது, சிலநேரம் சந்தேகம் நீர்த்து போயிருக்காதா” என்று மனசு ஏங்கும். அந்த இரண்டாம் நிலையில் தான் நீங்க இப்போ இருக்கீங்க.ஐ’யம் சாரி டூ சே, உங்களுக்கு லுகேமியா அட்டாக் ஆகி இருக்கு மிஸ்டர் நந்தா.’’

சில நிமிடங்கள் நடப்பு உலகம் அவன் கணுக்காலை கைவிட்டு நழுவி இருந்தது. அமைதியாகவே அமர்ந்து இருந்தான். உள்ளத்தின் பிரளயத்தை முகம் மொத்தமாய் காட்டிக் கொண்டிருக்க, கண்கள் தன்னால் மூடிக் கொண்டது.

மூடிய இமைக்குள் மொத்தமாய் அவன் உலகம் வந்து போனது. அம்மா, அவனே உலகமான மனைவிகள், குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், உள்ளம் புரிந்த நட்பு சந்தியா, பக்கத்து வீட்டு சுசீந்திரன் முதல், பேங்க் செக்கியூரிட்டு கன்னியப்பன் வரைக்கும் அத்தனை பேரும் ஒரு சுற்று வந்து போனார்கள். விட்டுப் போகப் போகிறான்... அத்தனை பேரையும் விட்டுப் போகப் போகிறான்.

”நந்தா... ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்.” டாக்டர் ராவ் சொன்னபோது, மெல்ல கண்களைத் திறந்து பார்த்தான். சிவந்து நீர் கோர்த்துக் கொண்டு இருந்தது.

”மறுக்கமுடியாத நிஜங்களை கடந்து வந்துதான் ஆகணும். ”

”அதற்கும் கால அவகாசம் தேவைப்படும் டாக்டர்.

அத்தனை இலகுவாய் மரணத்தை கையாள ஞானிகளால் கூட முடிஞ்சிருக்காது இல்லையா..?’’ தன் முன்னே இருந்த தண்ணீரை எடுத்து பருகினான். தன்னைச் சமன் செய்ய போராடுகிறான் என்று தெளிவாக புரிந்தது.

”இன்னும் எத்தனை நாள், எத்தனை வாரம் என்கிட்டே மிச்சமிருக்கு டாக்டர்..?” குரல் நடுங்கியது.

”நோ, நோ மிஸ்டர் நந்தா. இப்படி நம்பிக்கை இழந்து பேச வேண்டியது இல்லை.உங்களுடைய நோயின் தன்மை, சூழ்நிலை எல்லாம் பார்த்து சிகிச்சை எடுத்துக்கலாம். இப்போ விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவோ முன்னேறி இருக்கு. புற்றுநோய்னு சொன்னதும் அடுத்த நாளே இருமி இருமி செத்துப் போக, வாழ்க்கை ஒண்ணும் தமிழ் சினிமா கிடையாது.

டெஸ்ட் ரிப்போர்டுகள் இப்போ முதல் நிலையில இருக்கிறதா சொல்லுது. கேன்சர் இன்ஸ்ட்யூட்ல கலந்து சிகிச்சை செய்துக்கலாம். எந்த சிகிச்சைக்கும் முதல் மருந்து மன உறுதி. மனம் தளராதீங்க.”

நீண்ட பெருமூச்சு எடுத்து தன்னை சமன் செய்ய போராடினான். பிறகு தன்னால் பேச ஆரம்பித்தான்.

”எனக்கு இரண்டு மனைவிகள் டாக்டர். ஒரு ஆணுடைய வாழ்க்கையில் இரண்டு பெண்கள் இருந்தால், அதுக்கு பின்னணியில் காமமோ, முறையற்ற வாழ்க்கை முறையோதான் இருக்கணும்னு அவசியமில்லை. என் வாழ்க்கையில் வந்த இரண்டு பெண்களுமே அன்பே உருவானவர்கள். ” சொல்லும் போது குரல் உடைந்து போனது.

” கூல் நந்தா.”

”வளரும் போதே அப்பா இல்லை. மிடில் கிளாஸ் பேமிலி தான். நான் படிச்சு, பேங்க் எக்சாம் பாஸ் பண்ணிய பிறகுதான் என் குடும்பத்துக்கு ஒரு அடையாளமும், என் அம்மாவின் ஓயாத உழைப்புக்கு ஓய்வும் கிடைச்சது. தம்பி, தங்கைகள் படிப்பு, கல்யாணம் எல்லாமே என் பொறுப்புத் தான்.

இன்னைக்கு மிடில் கிளாஸ்ங்கிற நிலையில் இருந்து அப்பர் மிடில் கிளாஸ்ங்கிற நிலைக்கு நகர, இருபது வருட உழைப்பும், வாழ்க்கையும் செலவாகி இருக்கு. சட்னு அங்கேயே விட்டுட்டு கடந்து போறது சாத்தியமா, தெரியல. நடுத்தர வயதில் இரண்டு பெண்கள், முதிர்ந்த வயசுத் தாய், இத்தோடு சேர்த்து நான் நிறைவேற்றியே ஆகவேண்டிய கடமை, என் மூன்று குழந்தைகள், அதில் இரண்டு பெண் பிள்ளைகள். அதிலும் ஒரு பொண்ணு என் அன்பிற்கும், அருகாமைக்கும் இத்தனை வருசம் ஏங்கிட்டு இப்போத்தான் என் பக்கத்திலயே வந்திருக்கா. எனக்குள்ள கலந்து போன என் உயிர் அவ. கடைசி பையன் இன்னும் டீன் ஏஜ்ஜை கூட தாண்டல. என் தலைக்கு பின்னே எத்தனை எத்தனை கடமைகள். நான் இல்லாம எல்லாமே நடக்கும். ஆனால் சரியா நடக்குமா..?’’

நந்தா முழுதாய் உடைந்து போய் இருந்தான். தன் முடிவை நுகர்ந்து இழுத்த வெறுமையும், பயமும் அந்த நிமிசம் அவனை ஆட்கொண்டு இருந்தது, கழிவிரக்கத்தோடு தான், டாக்டர் ராவ் சொன்ன மறுமொழிகளை செவியேற்றியும் ஏற்றாமலும் வீடு வந்தவன் தான் அங்கே அமர்ந்திருந்த யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் மேலே சென்றது.

ஒரு முழுநாள் செலவானதும் தான், தான் மட்டுமல்ல, பிறந்த அத்தனை பேருமே மரண நோயாளிகள் தான், என்ன தன்னுடைய முடிவு மட்டும் முன் கூட்டி அறிய முடிந்தது என்ற தத்துவம் எல்லாம் உள்ளம் முழுக்க நிறைந்தது. வருந்துவதை விட, இயல்போடு பொருந்துவது சாலச் சிறப்பு என்ற சிந்தனை வந்த பிறகுதான், நந்தா எடுத்த சிறந்த முடிவு, யாழியின் திருமணம்.

இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் திக்கில்லாமல் கண் முன்னே இருந்தாலும், எதை எதை எப்படி செய்து முடிப்பது என்று திட்டமிட முடியாமல் தவித்தான். தவித்துக் கொண்டும். இருக்கிறான்.

இன்னும் யாரிடமும் தன் நோய் பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை. தன்னுடைய வார்த்தை மொத்த குடும்பத்தின் நிம்மதியையும் மொத்தமாக தின்று விடும் என்ற நிதர்சனம் மௌனத்தை மெல்ல வைத்தது.

இந்த உண்மை தெரிந்திருந்தால், வானதி கல்கத்தா சென்று இருப்பாளா, யாழி திருமணம் செய்து இருப்பாளா, மிருதுளா தான் இயல்பாக உறங்கி எழுந்து கொண்டிருப்பாளா..? ஆனால் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்..?

இருட்டு இன்னும் இன்னும் திரள, எழுந்து கொண்டவன் காரை நோக்கி நடந்தான்.

சிக்னலில் நகராமல் வண்டி நிற்க, விளக்கு நிறம் மாற காத்துக் கொண்டிருந்தான்.

மாலை வெளியில் அழைத்துப் போவதாய் சொல்லி விட்டுச் சென்ற சொல்லை நிறைவேற்ற, யாழியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் அமர்.

இடுப்பில் கரம் செலுத்தி, இறுக்கிக் கொண்டு இருந்தவள் பார்வை அனிட்சையாய் பக்கவாட்டில் திரும்ப நந்தாவின் வண்டி நின்றது.

எங்கோ கவனமாய் அமர்ந்து இருந்தான். முகம் முழுக்க கவலையாய், சோர்ந்து போய், கண்ணில் வட்டம் சேர்ந்து, பார்த்ததும் ஏதோ பொங்கிக் கொண்டு வந்தது.

” அமர்.”

”ம்”

”வண்டியை எங்க வீட்டுக்கு திருப்புங்க.” என்றாள் தீர்க்கமாக.

”...நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனது, கொஞ்சம் தூது செல்லுங்கள்.”

 

         அத்தியாயம் -27

 

வீடு வந்து சேர்ந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த நந்தா கண்கள், முழுசாய் முகம் முழுக்க நிறைந்தது.


‘’பாப்பா‘’ என்றவனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டவளை பார்த்து உள்ளம் ஒரு நிமிடம் சுருங்கினாலும், நெஞ்சு முழுக்க பரவசம் ததும்பியது.

”எப்போ வந்தீங்க அமர்..?‘’ பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

’‘இப்பத்தான். இரண்டு நிமிசம் முன்னாடி. ஹோட்டல் போயிட்டு இருந்தோம், சிக்னல்ல உங்களைப் பார்த்ததும் வண்டியை திருப்ப சொல்லியாச்சு.‘ என்றான் குறும்பாய் யாழியை பார்த்துக் கொண்டே.கல்பனா பக்கத்தில் வந்தமர்ந்து பேத்தியை ஆராய்ச்சி பார்வை பார்க்க, மிருதுளா கொண்டு வந்து கொடுத்த ஜுஸில் எல்லாம் கவனம் செல்லவில்லை.

’‘ஏன் ஷேவ் பண்ணல..? முகத்தில் ஏன் இத்தனை குழப்பம்..?‘’ முகத்துக்கு நேராய் பார்த்து பேசியதே இல்லை. சட்டென்று கேட்ட கேள்வியில் நந்தா திணறிப் போனான்.

’‘வேலை அதிகம் பாப்பா. மத்தபடி நல்லாதான் இருக்கேன்.”

”அம்மா இங்கிருந்து போய் ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புறம் என்னை வந்து பார்க்கவே இல்ல. ஏன்..? கடமையை கை கழுவியாச்சு அப்படித்தானே..?” குரலில் கோபம் கொட்டிக் கிடந்தது.

”அப்படில்லாம் இல்லடா. எனக்கு அமரைத் தெரியும். உன்னை எப்படி பார்த்துப்பார்னும் தெரியும்.”

”இப்போ கேள்வி அவர் என்னை எப்படி பார்த்துப் பார்ங்கிறது இல்லே. நீங்க ஏன் என்னை வந்து பார்க்கலைங்கிறது தான். இவ்வளவு தான் நீங்க. விடுங்க.‘’ என்றவள் சட்டென்று எழுந்து கொள்ள,

’‘யாழி...” அமரின் குரல் கண்டிப்பாக ஒலித்தது.

”சண்டை போடத்தான் இங்கே வர்றேன்னா, உன்னை கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன். சாரி அங்கிள். நீங்க போய் ப்ரெஸ் ஆகுங்க. நாங்க கிளம்பறோம்.‘

”சாப்பிட்டுட்டு போங்க ப்ளீஸ்.” நந்தா தவித்தபடி நடக்க,

”பார்த்துக்கலாம் அங்கிள். நீங்க போய் ப்ரெஸ் ஆகுங்க. இந்த சண்டைகோழியை ஏதாவது ரெஸ்டாரன்டுக்கு தள்ளிட்டு போறேன் முதல்ல.”மாமனாரின் கைகளைப் பற்றி சொல்லி விட்டு வெளியில் வந்தான்.

எப்போது வந்தாலும் பிணக்கோடு போகும் மகளோடு,மிச்சமிருக்கும் சொச்ச வாழ்க்கையில் கூட பேரன்போடு வாழ முடியாதா என்ற சிந்தனை வலித்தது.

பெருமூச்சு விட்டபடி அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு கேட்டில் நின்றான். தெருமுனை திரும்பும் போது சரியாய் திரும்பி பார்த்தபடி கடந்து போன யாழினிக்கும் உள்ளுக்குள் ஏதோ உருண்டோடிக் கொண்டு தான் இருந்தது.

”நந்தா, யாழினிக்கு இருக்கிற சந்தேகம் எனக்கும் இருக்கு என்னாச்சு உங்களுக்கு..? பக்கத்தில இல்லாத போதே அத்தனை முறை நினைச்சு நினைச்சு உயிர் தேய்ந்த மகளை இத்தனை நாள் பக்கத்தில இருந்தும் பார்க்காமல் இருக்கிறது விசித்திரமா இருக்கு.”

மிருதுளா கேட்டு விட்டு போக, பதில் சொல்லாமல் மாடியேறியவன் பாதங்கள் பலம் இழந்து கிடந்தது.

வெள்ளை அணுக்களின் உற்பத்தி பெருகி, சிவப்பு அணுக்களோடு சேர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் செயல் இழக்கச் செய்து கொண்டு இருந்தது.

கூடு பழுதடைய ஆரம்பிப்பது கண் கூடாய் தெரியத் தொடங்கி இருந்தது. ஆளுயர கண்ணாடியில் பார்த்தால், தலை பெருத்து, உடல் சிறுக்க ஆரம்பிப்பது புரிந்தது. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு மாதம் யாரிடமும் சொல்லாமல் தாக்கு பிடிக்கலாம். ஆனால் சொல்லிய பிறகு, அவன் செல்லும் வரைக்கும் காணப் போவது என்னவோ கண்ணீரை மட்டும்தான் என்ற சிந்தனை நந்தாவை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது.

மாடிக்கு வந்தவன் உடை மாற்றக்கூட தெம்பற்று கட்டிலில் மல்லாந்து சரிந்தான். தாடையை தடவிய போது முள்ளாய் குத்திய தாடியை தொட்டதும் மெல்லிய புன்னகை அரும்பியது.

”...ஏன் ஷேவ் செய்யல...” மகள் கேட்ட கேள்வி அடிநெஞ்சு வரைக்கும் தித்தித்தது.

”யாழி மா, அப்பாவை நேசிச்சுக்கோ. இன்னும் காலம் கையில அதிகமில்லை. நீ என் மேல உயிரையே வச்சிருக்கேன்னு தெரியும். அது நீருபூத்த நெருப்பாவே இருக்கட்டும். என் அன்பை காட்டி, உன்னை அதுக்கு அடிமையாக்கிட்டு, சட்னு விட்டுட்டு போனால், உன்னால தாங்க முடியாதுடா. அதான் நான் ஒதுங்கியே நிற்கிறேன், எப்பவும் போல.” மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.

மெல்லிய மலரிதழில் தன் உணர்வுகளை பொதித்து வைத்தது போல் உணர்ந்தாள் யாழினி.

அத்தனை உணர்வுகளையும் உணர்ந்து கடக்கும் வாழ்க்கை கிடைப்பது பெரிய வரம்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் வாய்க்கும் பலர்க்கு பரவசத்தை நுகர வாய்ப்பு கிட்டுவதில்லை. கோபம் கொண்டவனால் அமைதியின் சாஸ்வதத்தை தழுவ முடிவதில்லை. இப்படி ஒரு உணர்வை உள்வாங்கி வாழும் வாழ்வு கொண்டவர்களால் மற்றொரு முனையை அறிய முடியாமலே போய் விடுகிறது.

தகுந்த வயதில் திருமணம் முடித்து, மனம் பொருந்திய துணை கிடைத்தவள் நெஞ்சில் கிட்டாத தகப்பனின் பேரன்பின் மீதும், மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது.

டிபார்ட்மென்டில் டிரெயினிங் இருந்ததால் அமர் நான்கு நாட்களாய் மதுரை சென்றிருக்க, அந்த சிறு பிரிவே நெஞ்சை மலை போல அழுத்தியது. அந்த நிமிசமும் அவள் மனசு அம்மாவின் தனிமையான வாழ்க்கையை எண்ணி வேதனை கொள்ளத் தவறவில்லை.

ஆர்த்தியும், லதாவும் கல்லூரிக்கு கிளம்பி சென்றிருக்க, வரும் வருடமாவது எம்.டெக்கில் சேர்வதிற்கான சிந்தனையோடு எழுந்து நின்றவள், சோபாவில் தான் மயங்கி சரிந்தாள்.

சரியாய் இருபது நிமிடத்திற்கு பிறகு உணர்வு வந்தவள் மனமும், உடம்பும் படபடக்க ஆரம்பித்தது. நாள்களை கணக்கு பார்த்தவள் முகம் குப்பென்று சிவந்து போனது. ஆனால் இதை எப்படி உறுதி செய்து கொள்ள.ஆர்த்தியின் எண்ணிற்கு அழைக்க,அது ஸ்விட்ச் ஆஃப்பில் இருக்க, தபுவுக்கு அழைத்து கேட்கலாமா’ என்று யோசித்து, அவளுக்கு முன் திருமணம் முடித்து. குழந்தையை பற்றி அவளிடமே பேசுவது அவள் மனதை சஞ்சலப் படுத்துமோ என்று அமைதியாக நகம் கொறித்தவள், வீட்டை பூட்டிக் கொண்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு மெடிக்கல்ஸ் வந்து பிரகனன்சி டெஸ்ட் கிட்டை வாங்கிக் கொண்டு மனம் முழுக்க குதூகலத்துடன் திரும்பி வந்தாள்.

* * *

” எஸ், மிஸ்டர் நந்தா. இந்த நோயின் தன்மையே இது தான். அதுவும் உங்கள் நோய் இரண்டாம் நிலையில் தான் இருக்கு. மருந்துகளும் வெளியில் இருந்து தரப்பட்ட நோய் எதிர்ப்பு காரணிகளும் உங்கள் உடல் ஒரளவு ஏற்றுக் கொண்டாலும், ஐயம் சாரி டூ சே, இது முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புள்ள நோய் அல்ல. கட்டுப்படுத்தி வைக்க கூடிய நோய் மட்டுமே.” சொல்லி விட்டு முகம் பார்த்தார். வெறுமையை விழுங்கிக் கொண்டு பொறுமையாய் அமர்ந்து இருந்தான்.

’‘அடுத்த கட்டமா உங்களுக்கு கீமோதெரபியை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவாகி இருக்கு. பல்கி பெருகிற செல்லின் வீரியத்தை வேரோட அறுக்கணும். இனியும் இது பத்தி உங்க வீட்டில பேசாம இருக்கிறது நல்லதல்ல. நெருப்பை மறைக்க திரையிடறது நமக்குத் தான் ஆபத்து. பேசிடுங்க. கீமோ பண்றதுக்கான ஏற்பாடுகளை உடனடியா ஆரம்பிப்போம்.”

கை குலுக்கினார். மருத்துவரைப் பொறுத்தவரை நோயாளி அவர் வாழ்க்கையில் சந்திக்கும் அன்றாட கதாபாத்திரம் மட்டுமே.வெளியில் வந்தான். வானம் நிர் சலனமாய் இருந்தது. மனசு முழுக்க பாரமும், பயமும் மட்டுமே இருக்க, சிந்தனையை கலைக்கவே வானதியின் எண்ணோடு செல் சலங்கையாய் குலுங்கியது.

”வானு..’‘ குரலை வேகமாய் இயல்பாக்கி

பேசினான்.

”நந்தா ட்ரெயின்ல இருக்கேன். காலையில அங்கே இருப்பேன். நேத்தே மதர் கேத்தரின் ரிட்டர்ன் ஆயாச்சு. இன்னும் ஒரு வாரமாவது தங்கிட்டு போகச் சொல்லி வற்புறுத்தினாங்க. ஏனோ அத்தனை வருசம் உங்களை பார்க்காம இருந்த என்னால இந்த மூணு மாசத்தை கடந்து வர முடியல.‘’ குரலில் வெட்கம் சொட்ட நந்தாவின் இதழில் விரக்தி புன்னகை அப்பியது

”தட்கல்ல டிக்கெட் போட்டுட்டு மதியமே டிரெயின் ஏறிட்டேன். யாழிக்கு கூடத் தெரியாது இன்னும். இப்பத்தான் மொபைல்ல பாட்டு கேட்டுட்டு இருந்தேன். என்ன பாட்டு தெரியுமா நந்தா..?

’... நந்தா நீ என் நிலா

நாயகன் வடிவில் 

காண்பது உன்னையே...’

எஸ்.பி.பி. குரல் காதுக்குள்ள தேனாய் கரையுது. என்னால அந்த பேரைக் கேட்டதும் என் உணர்வை கட்டுப்படுத்த முடியல. அதான் கால் பண்ணிட்டேன்.‘ கண்களை மூடி காரில் சாய்ந்து கொண்டு நின்றான்.

இந்த அத்தனை மகிழ்ச்சியையும் அடியோடு சாய்த்து வீசப் போகிறான் இன்றோ, நாளையோ, அதற்கு மறுநாளோ.

விதியின் கோரக் கரம் லிட்மஸ் தாளைப் போல் சுருட்டி திண்ண காத்திருப்பது புரிந்தது. காற்று வீசி வானத்தின் மீதிருந்த மேகத்தை வழித்துக் கொண்டு போக, மேகம் இல்லாத வானத்தை பார்க்க பயமாக இருந்தது.

வானதி இப்போது வருவதும் நல்லதுதான். நாளை மாலை சந்தியாவையும் வீட்டிற்கு அழைத்து அத்தனையும் பேசி விட வேண்டும். தீர்மானித்தவனாய் வானதியிடம் பேசி முடித்து விட்டு வண்டியில் ஏறினான் சிந்தனையோடு.

”...கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ

நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை

என் கருணையே திறக்குமா சன்னிதி

என் கர்தரே கிடைக்குமா நிம்மதி...”


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 52
Topic starter  

அத்தியாயம் -28

 

எப்போ கிளம்பினீங்க அமர்..?” குரலில் கோபமும் சிணுங்கலும் பொங்கி வழிய சண்டையிட்டவளை கண்களை மூடிச் சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தவன், ஏர்போர்ட்டில் இருந்தான்.

‘’யாழி, இந்த கோபத்தை எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சு வச்சுக்க. நான் உன் முன்னாடி நிற்கும்போது எல்லாத்தையும் காட்டு. ஆனால் யாழி, ஒண்ணு

சொல்லட்டுமா, கோபத்தை கோபமா மட்டும் காட்ட வேண்டியது அவசியமில்லை. வேற மாதிரியும் காட்டலாம்.” என்றான் குறும்பாய்.
‘’ சீ போ..”
‘’அடி பாவி, மரியாதை சுத்தமா காணாம போச்சேடி. டிபார்ட்மெண்ட்டையே நடுங்க வச்சுட்டு இருக்க இன்ஸ்பெக்ர்கிட்ட பேசற பேச்சா இது.”
”நீங்க வாங்க உங்களுக்கு இருக்கு.” கோபமாக குரல் கொடுத்த யாழினியின் கோபத்தையும் ரசித்தான்.
”ஏர்போர்ட்டுல தான் இருக்கேன். சீக்கிரம் வந்துடறேன். அப்புறம் உன் அர்ச்சனையை வச்சுக்க.”
”வர்றேன்னு சொல்லி மூணு நாளாச்சு. கல்யாணமாகி நாலஞ்சு மாசத்துலயே நான் அலுத்துப் போயிட்டனா அமர்.”
”லூசு மாதிரி உளறாதே யாழி. இதை கேட்கும் போது உனக்கே சிரிப்பா இல்ல..? ட்ரெயினிங் இரண்டு நாள் எக்ஸ்டென் ஆயிடுச்சு. அதுக்காக கண்டதை எல்லாம் பேசக் கூடாது. வந்ததும் உன் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் காட்டு. கோபத்தில கட்டி பிடிச்சுக்கோ. கோபத்தில முத்தம் கொடு. ஏன் கோபத்தில்...‘ அவன் இழுத்த இழுவையில் முகம் ரத்தமேறினாலும் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றாள்.
முகமெல்லாம் பூரித்து கிடந்தவளின் இதயம் அவனிடம் பகிர்ந்து கொள்ள ஆயிரம் தித்திப்போடு காத்திருந்தது.
இன்னும் அவளையே அத்தனை பேரும் பாப்பா என்று அழைக்க, அவளுள் ஒரு பாப்பா கை முளைத்து, கால் முளைத்துக் கொண்டு நிற்கிறது.
கிட்’டில் உறுதி செய்து கொண்டதை காலையில் லேபிலும் சென்று உறுதிபடுத்திக் கொண்டு வந்திருக்கிறாள்.இந்த அற்புத உணர்வை பகிர்ந்து கொள்ள வானதியும் அருகில் இல்லை, அமரும் அருகில் இல்லை என்ற உணர்வுதான் ஏமாற்றமாய் இருந்தது.
லதாவிடமும் ஆர்த்தியிடமும் சொல்ல கூச்சமாக இருந்தது. தவிர அமர் வருகைக்கு காத்திருக்க வானதி காலையில் வந்துசேர்ந்து விட்டதாய் அழைத்துச் சொன்ன போதும் அமைதியாக இருந்தாள்.
மதியம் அமர் வந்தபோதே யாழியின் முக பளபளப்பை பார்த்துக் கொண்டே வந்தவன் ஒரளவு யூகித்தும் தான் இருந்தான்.
செக்கர் வானம் போல் சிவந்திருந்த முகத்தை, ஒற்றை விரலால் நிமிர்த்தி புருவம் உயர்த்தி ’என்ன...’ என்று கேட்ட நிமிசமே, யாழி மொத்தமாய் சரிந்து இருந்தாள்.
”நிஜமாவா பாப்பா...” என்றான் அவள் காதுகளுக்குள்
கிசுகிசுப்பாய். அவன் மார்பில் தலை அசைத்தாள். தன்னை மறந்து நின்றான் அமர். பிறப்பின் நோக்கம் நிறைவேறியது போல் உடம்பெல்லாம் தித்தித்துக் கொண்டு இருந்தது.
”ரெண்டு வீட்டிலயும் சொல்லிட்டியா யாழி..?” அவள் முதுகு வருடிக் கொண்டே கேட்டான்.
”ம்ஹூம்.அதெப்படி நான் தனியா சொல்ல? ”
”அதானே. குற்றவாளியை கையோடு கூட்டிட்டுப் போய் இல்ல ஒப்படைக்கணும்.” என்றவன் கை மெல்ல கீழிறங்கி யாழியின் வயிற்றை வருட, கூச்சத்தோடு விலகி நின்றாள்.
’‘போய் ப்ரெஸ்சாகிட்டு வந்து ஸ்வீட் வாங்கிட்டு வாங்க. ஆன்ட்டிக்கு, ஆர்த்தி அக்காக்கு பிடிச்ச ஸ்வீட் எதுவே வாங்கிக்கங்க. அப்புறம் பனீர் ஜாமூன், மக்மல் பூரி, கிருஷ்ணா மைசூர் பாகு எல்லாம் எங்க வீட்டுக்கு.‘
”அது சரி , இந்த மாசம் சம்பளம் ஒவர்” என்றான் கேலியாக சட்டை பாக்கெட்டை அழுத்திக் கொண்டே. முறைத்தபடி அவள் உள்ளே நகர, ஏகாந்த சிரிப்போடு சோபாவில் சரிந்தான்.
* * *
பேங்க் முடித்து வண்டியை நந்தாவின் வீட்டை நோக்கி திருப்பிய நிமிசமே சந்தியாவின் சிந்தனை தறி கெட்டு ஒட ஆரம்பித்து இருந்தது.
அந்தக் குரல் அவளுள் இறங்கி நங்கூரமாய் ஏதேதோ செய்து கொண்டு இருந்தது.
”ஒரு முக்கியமான விசயம் பேசணும் ஈவினிங் வந்திடு சந்தியா.” இத்தனை சுருக்கமாய், இவ்வளவு உருக்கமாய் அவன் பேசி பார்த்ததில்லை.உள்ளுக்குள் கிண்கிணி சத்தமாய் எதுவோ எச்சரித்துக் கொண்டு இருந்தது.
நந்தா வீட்டிற்கு வந்து சேர்ந்த போது மெல்லிய தூறல் சிணுங்கத் தொடங்கி இருந்தது.
நந்தா ஹாலில் தான் இருந்தான். பார்த்ததும் மனதிற்குள் குபீரென்ற உணர்வு படர்ந்தது. மெலிந்து, ரத்த பசை இழந்த முகத்தோடு இருந்தான். லேசான அழுத்தம் அவனைப் பார்த்த நொடி உள்ளுக்குள் ஓடியது. ஆனாலும் இயல்பை விடாமல் பக்கதில் சென்று அமர்ந்து, வம்பிழுக்க கேலியாய் முகத்தை குனிந்து பார்த்தாள்.
‘’வா சந்தியா. ‘’ என்றான் முறுவல் மாறாமல்.
‘’என்னய்யா இப்படி உட்கார்ந்து பேத்தாஸ் பாடிட்டு இருக்கே..! எங்கே உன் டார்லிங்சை காணோம்.” என்றாள் உள்ளே எட்டிப் பார்த்தபடி.
சத்தம் கேட்டு மிருதுளாவும், பயணக் களைப்பில் மாடியில் இருந்து இறங்கி வந்த வானதியும், சந்தியாவை அங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை. சின்ன சஞ்சலம் இதயத்தை துளையிட்டது.
அடுத்தடுத்த ஐந்து நிமிடங்களில் விக்கியும், வீணாவும் வந்து சேர கலவரமும் குழப்பமுமான முகத்தோடு வானதி நந்தாவை நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ இருக்கிறது... அதை அவள் இதயம் நுகர்கிறது... இமைகள் நனைகிறது... காரணத்தை வார்த்தைகளில் அறியப் போகும் நிமிசத்தை எண்ணி அவள் உணர்வுகள் சுடுகிறது.
‘’நந்தா, என்னய்யா விசயம்..? எதுக்கு எல்லோரையும் வரச்சொல்லி இருக்க..? எதுவும் முக்கிய முடிவா..?” கல்பனாவும் கலவரமாகத் தான் கேட்டுக் கொண்டு இருந்தார்.
‘’முக்கிய முடிவானு தெரியல மா. முடிவு எப்பவும் முக்கியம்’னு உணர்ந்த ஒரு நிகழ்வுமா.” என்றான் விரக்தியாக.
‘’அப்போ சரி. யாழி பாப்பா வருதா..”
‘’இல்லமா. அவ குழந்தை. இதை தெரிஞ்சிட்டு எதுவும் ஆகப் போறதில்லை. ஒரு தகப்பனா என் குழந்தைக்கு பக்கத்துல இருந்து எந்த சந்தோசத்தையும் கொடுக்கல. இப்போ அவளே நிறைவாவும் நிம்மதியாவும் இருக்கும்போது அதை தகர்க்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை.”
‘’நந்தா, பயமா இருக்கேய்யா. என்னென்னவோ பேசற. மனசுக்குள்ள திக்’குனு இருக்கு. ”
அம்மாவின் தோள்மீது கைபோட்டு தன் அருகில் சேர்த்துக் கொண்டு அமர்ந்தான். மாடிப்படி பிடி கட்டையில் சாய்ந்து கொண்டு வானதி, நந்தாவையே பார்த்துக் கொண்டு நின்றாள். மற்றவர்கள் அவனைச் சுற்றி சோபாவில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் சந்தோச குவியலின் மூட்டையின் முடிச்சை அவிழ்த்து சிதற விடுவதிற்கான முதல் முடிச்சை நந்தா அவிழ்க்க ஆரம்பித்து இருந்தான். வெளியில் மழை சோ’வென வேகமெடுத்து இருந்தது.
* * *
”கண்டிப்பா இந்த மழையில போகணுமா யாழி..! நாளைக்கு ஸ்வீட் கொடுக்க கூடாதா..?” தனக்கும் சேர்த்து குடை பிடித்து இருந்தவளை பக்கவாட்டில் திரும்பி பார்த்து மென்மையாக கேட்டான் அமர்.
‘’போயே ஆகணும். அம்மாவைப் பார்த்து இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சு. எனக்கே ஆச்சர்யமா இருக்கு நான் அம்மாவை பார்க்காம யாரோ ஒருத்தரை நம்பி இத்தனை நாள் இருந்திருக்கேன்னு நினைக்கயிலே.” அவன் தோளில் மேவாயை பொருத்திக் கொண்டு, காதுமடலில் மூக்கால் உரச, ப்ரேக் அடித்தவன் திரும்பி நிஜமாகவே முறைத்தான்.
‘’இந்த ரொமான்ஸ் எல்லாம் வீட்டில இருக்கும்போது தெரியாது. மழை பெய்யுது. பாதை வழுக்குது யாழி. கொஞ்சம் அமைதியா வா.” என்ற வார்த்தையில் கண்டிப்பு இருக்க, அதை கவனிக்கும் மனநிலை கூட இல்லை. தான் கர்ப்பம் என்ற விசயத்தை வீட்டில் சொன்னால், அம்மாவும், நந்தாவும், பாட்டியும் செய்யப் போகும் ஆர்பரிப்பை எண்ணியே முகமும் அகமும் பொங்கி வழிந்தது.
வீட்டைத் தொட்ட போது பெருமழை பெய்ய ஆரம்பித்து இருந்தாலும், அவள் கவனம் முழுக்க உள்ளும் வெளியும் நின்ற சந்தியா, விக்கி, வீணாவின் வண்டிகள் தான் உறுத்தியது. இத்தனை பேரும் எதற்காக மொத்தமாய் வந்து இருக்கிறார்கள்..? யாருக்கு என்ன..? நந்தாமாவிற்கு எதுவுமோ..? எதுவாக இருந்தாலும் தனக்கு ஏன் எந்த அழைப்பும் இல்லை..!
மனைவியின் குழப்ப முகத்தைப் பார்த்தவன், மெல்ல தோளில் தட்டினான்.
‘’நீ உள்ளே போ. வண்டியை விட இடமில்லை. ஒரமா தள்ளி நிறுத்திட்டு வந்திடறேன்.” ஸ்வீட் பையை யாழியின் கையில் தந்துவிட்டு, வண்டியை உருட்டிக் கொண்டு நகர, யாழினி மெல்ல செந் தகட்டு பாதையைக் கடந்து உள்ளே நடந்தாள்.
‘’...இத்தனையும் இப்போ உங்க எல்லாரையும் கூப்பிட்டு வச்சு சொல்றதுக்கு காரணம் இருக்கு. ஐந்து வருடம் என்பது அதிகபட்ச கால நீடிப்பாய் இருந்தாலும், இறுதி பயணத்துக்கு நுழைவு சீட்டு வாங்கியாச்சு. அது கசப்பா இருந்தாலும், நானும் என்னைச் சுற்றி இருக்கிற எல்லாரும் ஏத்துக்க தான் வேணும். மரணம் சம்பந்தப்பட்டவங்களை விட, மரணித்தவர்களோடு சம்பந்தப்பட்டவங்களையே பெரிதும் பாதிக்கும்.
எனக்கு இப்படியொரு வியாதி இருக்குன்னு எனக்கு தெரிய வந்து ஏழெட்டு மாசம் ஆயிடுச்சு. அதுக்கு முன்னமே எத்தனை நாளாய் அது என்கூட இருக்கோ தெரியல. அந்த நாள்களையும் கழித்தால், நான் இருக்கப் போறது எத்தனை மாதமோ, வாரங்களோ, நாட்களோ...
காலம் பூரா என் அருகாமைக்கும், அன்பிற்கும் ஏங்கின என் மகளுக்கு, என்னை மாதிரியே அவளை நேசிக்ககூடிய ஒருத்தனை கணவனாக்கி தந்திருக்கேன். அவசர அவசரமா நான் செய்த நல்லது, இதுமட்டும் தான். ஒரு பெண்ணுக்கு படிப்பைத் தரணும், வேலையைத் தரணும், தன்னம்பிக்கையை தரணும்னு, மூச்சுக்கு நூறு தரம் பேசற நாமதான், காலம் குறுகி கிடக்கும் போது, இதுல எது அவசரத் தேவைனு கேட்டால், பாதுகாப்பும், நல்ல வாழ்க்கைதுணையும் தான்கிற ஆப்சனுக்குத் தான் போறோம், நம் குழந்தைகளுக்கு. ஏன்னா, இது இரண்டும் இருந்தா மற்ற எல்லாம் தன்னால் வந்து சேர்ந்திடும் இல்லையா..?
இவ்வளவுதான் இந்த நந்தாவோட கடமையா..? இல்லையே என் பொண்ணு தபு’ வளர்ந்துட்டு நிக்கிறா. அவளுக்கும் இதுபோல ஒரு வாழ்க்கை அமைச்சு தரணும். என் பையனுக்கு வழிகாட்டி துணை நிற்கணும். அம்மாவோட அந்திம காலத்தில் அவங்களுக்கு அத்தனையுமா நிற்கணும். என்னையே நம்பி தன்னையே தந்து, யாதுமான என் இரு உயிர்களுக்கும் நியாயம் செய்யணும்.
தம்பி, தங்கச்சி, இத்தனை உறவுக்கும் ஒருதுளி சளைச்சதில்லாத என் ஆருயிர் நட்பு சந்தியா... இப்படி எல்லார் தரப்பிற்கும் நான் செய்ய வேண்டிய கடமை கொட்டி கிடக்கு.இன்னும் வாழ்க்கையில் ஆயிரம் தேவைகள் இருக்கு. நான் இங்கே எல்லோருக்கும் தேவைப்படறவனா இருக்கேன். எக்கச்சக்கமான இ.எம்.ஐ.கள் பாக்கி இருக்கு. பனிரெண்டு வருட சர்வீஸ் மிச்சம் இருக்கு. இன்னும் எத்தனையோ இருக்கு. ஆனால்,அதுவரைக்கும் நான் இருப்பேனானு தெரியல.
இது கலவரப்படுத்த உங்களை அழைச்சு பேசற பேச்சு இல்லை. என் உடல் நிலவரத்தை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். கீமோதெரபிக்கான அவசியம் வந்தாச்சு. வியாதி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்ததுன்னா, அதற்கான சிகிச்சையும் முன்னே செல்ல வேண்டியது கட்டாயம் தானே..! இனியும் மறைச்சு பயனில்லை. நான் இயல்பை ஏத்துக்கிட்டேன். நீங்களும் ஏத்துகுவீங்கன்னு நம்பறேன்.
டிரீட்மெண்ட் ஒரு பக்கம் நடந்தாலும், நான் செட்டில்மெண்ட்டும் சீக்கிரம் செய்திட ஆசைப்படறேன். சொத்துகளை என் குழந்தைகள் மூணு பேருக்கும் மாற்றி எழுதணும். விக்கி, வீணா, சந்தியா உங்களுக்கு தெரிந்த நல்ல இடம் இருந்தா சொல்லுங்க. தபு’க்கு கல்யாணத்தை செய்து முடிச்சிட்டு போயிட ஆசைப்படறேன். பணக்காரன் எல்லாம் எனக்கு அவசியம் இல்லை. தகப்பனின் அன்பையும், தாயின்
கதகதப்பையும், சகோதரனின் பாதுகாப்பையும், நண்பனின் அணுசரணையும் அவன் என் பெண்ணுக்கு தரணும்.
மரணத்தை ஏத்துகிட்டே ஆகவேண்டியது எல்லா உயிர்களுக்கு காலம் இட்ட சாபம், அல்லது வரம். மரணம்தான் நிறைவுன்னு ஆனபிறகு, பழகணும்... மரணம் பழகணும். என் இல்லாமையின் நிதர்சனத்தை என் குடும்பத்திற்கு புகுத்தியே ஆகணும் நான் இப்போ.அந்தளவு நந்தா ஆசை இல்லாதவனா’னு கேட்டால், என்ன சொல்ல..?
நிறைய கனவு நிறைவேறாமயே அப்படியே கனவாகவே என்கிட்ட பத்திரமா இருக்கு. நடைதூரத்துல தான் என் பெண்களை கல்யாணம் பண்ணித்தர எப்பவுமே ஆசைப்பட்டேன். காலையில ஒரு மகள் வீட்டிலயும், மதியம் இன்னொரு மகள் வீட்டிலயும் சாப்பிட்டுட்டு, இரவில் என் பையன் வீட்டில நிம்மதியா தூங்கணும். வீடு நிறைய பேரன் பேத்திகளை வச்சு கொஞ்சறதுக்காகவே கட்டாய ஓய்வுக்கு போகணும். அம்மாவை அவங்க ஆசைப்பட்டபடி இன்னும் ஒருமுறை கூட ஹரித்துவர் அழைச்சிட்டு போகல. மீதி இருக்கிற வாழ்க்கை முழுக்க நிம்மதி நிம்மதி... இது மட்டும்தான் வேணும்னு ஆசைப்பட்டேன்.”
நிறுத்திவிட்டு அத்தனை பேர் முகத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்தான். ஈயாடவில்லை. அத்தனை பேரும் அப்படி அப்படியே அந்தந்த இடத்தில் உறைந்து போயிருக்க, கல்பனா அமர்ந்த நிலையிலேயே மயங்கி இருந்தார். அதைக்கூட யாரும் கவனித்ததாய் தெரியவில்லை.
நந்தாவுக்கு அவர்களின் நிலையை உணர முடிந்தது. கண்ணீர் கூட கட்டியாகி இருந்திருக்க வேண்டும் அவர்கள் கண்களில். அத்தனை பேரையும் கடந்து அவன் பார்வை போய் நின்றது வானதியிடம் தான். அந்தக் கண்கள்... பேசும் அந்தக் கண்கள்...நிலைகுத்திப் போய், ’ நான் பயந்தது இதற்குத்தானே...’ என்பதுபோல் அந்த கூர் விழிகளின் கண்ணீர் இதயத்தை குத்திக் கிழிக்க, பாரவையை அவள்மீது படிய வைத்துக் கொண்டே சொன்னான்,
‘’நான் இல்லாத நிலை வந்தாலும், வானதி இனி நீ இங்கிருந்து போகவே கூடாது. நானும் இல்லாத உலகத்தில உன் தனிமையை பகிர்ந்துக்க கூட அரவம் இல்லாம நீ குறுகி போயிடுவே வானு. உனக்கும், பாப்பாவுக்கும் மட்டும்தான் நான் மனசறிய நியாயம் செய்யல. ஆனால் பாப்பாவுக்காவது ஒரு தகுந்த துணையை ஏற்படுத்தி தர முடிஞ்ச என்னால, நான் சிதைச்ச உன் வாழ்க்கையை சரி செய்ய முடியாமயே போறேனேனு நினைக்கிற தவிப்பைத் தான் என்னால தாங்க முடியல.”
அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும், கோரமான புயலாய் வீசி,அவள் நெஞ்சின் மீது ஏறிநின்று நர்த்தனம் ஆட, அப்படியே படிக்கட்டில், நிலைகெட்டு அமர்ந்து விட்டாள் வானதி. யாருக்காகவும் இந்த உலகம் நின்றெல்லாம் போகாதுதான். ஆனால் இனி யாருக்காக இந்த உலகம் சுற்றிச் சுழலப் போகிறது..?
அத்தனை பேரின் உறைநிலையையும், அத்தனை நிசப்தத்தின் மௌனத்தையும், அத்தனை பேரின் குரல்வளையையும், அத்தனை பேரின் ஓங்காரத்தையும் உள்ளடக்கிக் கொண்டு ஓங்கி தெறித்து வந்தது ஒரு குரல்...அல்ல, அலறல்.
” அ...ப்...பா...”
அங்கே சூழ்ந்து சூட்சமமாடிய வேதனையை, சவ்வைப் போல் கிழித்தது அந்தக் அலறல். துக்கத்தையும், துயரத்தையும் அத்தனை பேரும் ஒத்திப் போட்டுவிட்டு, அவசரமாகவும் அதிர்ச்சியாகவும் நிமிர்ந்து பார்க்க, வாசலில் கையறு கோலத்தில் யாழினி நின்று கொண்டு இருந்தாள்.
இன்பத்தை சுமந்து வந்தவள், துன்பத்தை சுவைத்து துவண்டு போய் நின்றாள். கண்ணில் வழிந்த கண்ணீரும் ரத்தம் தின்று இருந்தது, அவள் தகப்பன் கொண்ட நோயைப் போலவே.
இரண்டு கைகளில் நிறைந்திருந்த இனிப்பு, விசிறியதில் வீடு முழுக்க தித்திக்கும் துயரமாய் உதிர்ந்து இரைந்து இருக்க, அவள் வசம் அவளில்லை. இத்தனை நாளும் கோபமாகவும், ஆற்றாமையாகவும், அழுகையாகவும், ஏக்கமாகவும், இன்னபிற என்னனென்னவோவாகவும் இருந்த பாசம், இப்போதுதான் அடையாளம் தெரிந்தது, தகப்பன் மீது.
‘’பாப்...பா... எப்படா நீ... எப்ப...டா வந்...தே..?” என்றான் நந்தா கைகளை விரித்துக் கொண்டு தவித்தபடி.இரண்டெட்டு பின்னே வைத்தவள், இதயம் பிழிய பிழிய அழுதபடி கேட்டாள்,
‘’நான் வந்துட்டேன்பா. நீங்க என்னை விட்டு போகப் போறீங்களா..? அய்யோ... எனக்கு அப்பாவே இல்லையா எப்பவும்... ஐயோ என்னால தாங்க முடியலயே...” என்றபடி இரண்டு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டவள், மழையில் இறங்கி ஓட ஆரம்பித்தாள்.
அத்தனை பேரும் சுதாரித்து அவளை பிடிப்பதிற்குள், மழையில் நீராய் மிதந்து கொண்டிருந்த வாசலின் செந்தகடு நடைபாதையில் சென்று கை கால்களை குறுக்கி மழையில் படுக்க, அத்தனை கூட்டமும் அவளைச் சூழ்ந்து எழுப்பி நிறுத்த முயன்று தோற்றுப் போனது.
இத்தனை கனம் எப்படி வந்தது அந்த சிற்றுடலுக்கு..? ஆயிரம் மலைகளை தின்றவளைப் போல் அசுர கனம் கனத்தாள். வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்த அமரோ விசயம் புரியாமல் விக்கித்து போய் தரையில் அமர்ந்தான்.
விழுந்த மழை எல்லாம் அவர்கள் தலையில் வழிந்தது. போகிற போக்கில் மின்னல் வெட்டி வெட்டி, எட்டிப் பார்த்தது. இடி வேறு தடி கொண்டு மிரட்டிக் கொண்டு இருக்க, செயலற்று கலங்கிப் போனார்கள் அனைவரும்.
‘’என்னடா யாழி ஆச்சு உனக்கு..? அத்தனை சந்தோசமா கர்ப்பமா இருக்கேன்னு சொல்ல வந்தியே..! நான் வண்டியை நிறுத்திட்டு வர்றதுக்குள்ள உனக்கு என்னடா ஆச்சு..? எழுந்திறேன்.” அமரின் வார்த்தைகளில் மொத்த குடும்பத்தின் முகத்திலும், மழையோடு சேர்த்து கண்ணீரும் வழிய, நந்தா மடங்கி அமர்ந்து யாழியின் முகத்தை நிமிர்த்தி, கண்களில் செய்தி கேட்க, அங்கே கண்ணீரைத் தவிர எதுவுமே இல்லை.
‘’என் பொண்ணு வயித்துல இன்னொரு குட்டிபாப்பா இருக்கா..! யப்பா சாமி, இது கருணையா, தண்டணையா..? என் குழந்தையோட செல்வத்தை பார்க்கிறதுக்கு முன்னாடி, என்னை கூப்பிட்டு போயிடாதப்பா. நீ பிறந்தப்போ நான் உன்னை கையில ஏந்திக்க பக்கத்துல இல்ல. உன் பிள்ளை பிறக்கும் போது நான் இருக்கணும்... நான் இருக்கணும்... அய்யோ ஆண்டவனே, இப்பத்தானே வாழ்க்கையோட ஆசைகள் ஒவ்வொண்ணா அறுத்துட்டு என்னை விடுவிச்சுகிட்டு வந்தேன். இப்போ இந்த ஆசையை தந்து என்னை 
சோதிக்கிறயேடா சாமி... நீ விளையாட இந்த அப்பாவி நந்தாவோட ஆன்மா தான் கிடைச்சதா...” மகளை நெஞ்சில் சரித்துக் கொண்டு நந்தா கதறிய கதறலில், அந்த பிரதேசமே விண்டு போனது.
‘’அப்...பா என்..னை விட்டு..ட்டு போயிடாதீங்...கப்பா...”
கண்களை மூடி பிதற்றிக் கொண்டே இருந்தவள், எந்த சத்தமும் உள்வாங்கும் திறானி இல்லாமல் தகப்பனின் நெஞ்சிலேயே மயங்கி இருந்தாள்.
‘’...பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே...”
                 அத்தியாயம் -29

 

 

 

 

மழை வலுவிழந்து இருந்தது. துளி துளியாய் சிதறிய மணிகள் ஆங்காங்கே தேக்கமிட்டு இருக்க, கிரனைட் திட்டின் மீது கைகளை ஊன்றி அமர்ந்து இருந்த வானதியின் பிம்பம், தரையில் தேங்கி இருந்த மழை நீரில் நனைந்து கிடக்க, அவளோ கண்ணீரில் நனைந்து உலர்ந்து இருந்தாள்.

உள்ளுக்குள் இறுக்கி பிடித்து இத்தனை நாள் இம்சை செய்த உணர்வு, விட்டு விடுதலையானது போல் உணர்ந்தாள். ஒரு வருடத்திற்கும் மேலாய் அவளை உலுக்கி உருக்குலைத்த பெயர் தெரியாத உணர்வுக்கும், உபாதைக்கும் விடை கிடைத்து இருந்தது.

அவனுள் வாழும் அவளுக்கு, அத்தனையும் உணர முடியும். இந்த நிலையில் கூட தங்களின் மனப் பொருத்தத்தை எண்ணி பூரித்தாலும், நந்தாவின் வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்றிக் கொள்ள விரும்பாமல் மேல் வானம் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
”ஆன்ட்டி, நான் வீட்டுக்கு போய் அம்மாகிட்ட விசயத்தை சொல்லிட்டு டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வந்துடறேன். அதுக்குள்ள யாழி முழிச்சிட்டா,எனக்கு கால் பண்ணுங்க. ”
அமர் சொல்லிவிட்டு கீழே போக, எழுந்து அறைக்குள் வந்தாள்.சற்றுமுன் தபு போட்ட இன்ஜெக்சனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின், ஈர உடைகளை களைந்து நைட்டி அணிவித்து விட்டுத்தான் அமர் சென்றிருந்தான்.
பீறிட்ட அந்த அப்பா’ என்ற அழைப்பும், கதறலும், பெரும் சத்தமும், அப்படியே காதுக்குள் தான் இருக்கிறது. இருபது வருடங்களாய் கூப்பிடச் சொல்லி மன்றாடிய வார்த்தையை, அவள் சொல்லி அழைத்த போது, இந்த உலகமே விண்டுதான் போனது. எத்தனை பாசம்... எத்தனை, எத்தனை ஏக்கம். அத்தனையும் உடைந்து வெளித்தள்ளிய நிமிசம் ஊரடங்கி, உணர்வடங்கிப் போனது அல்லவா..?
”நதிமா., கீழே வாங்க. அப்பா உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார். அவரால மாடிக்கு வர முடியலயாம் ரொம்ப களைப்பா இருக்காம்.” தபு வந்து அழைத்த போது நிமிர்ந்து மகளின் முகம் பார்த்தாள்.
அழுகையையும், வெறுமையையும் மறைத்துக் கொண்டு பெரிய மனுசி வேசம் போடுகிறாள். மெல்ல மகளின் கன்னத்தை தாங்கி, நெற்றியில் முத்தம் பதிக்கவும், தபு’ விற்கு அழுகை வெடிக்கவும் சரியாக இருந்தது.
”நான் கீழே போயிட்டு வர்றேன்டா. பாப்பாவை கொஞ்சம் பார்த்துக்க.” என்று விட்டு படியிறங்க உள்ளே வந்த தபஸ்வி யாழியின் கால்மாட்டில் அமர்ந்து, உள்ளங்கையால் பாதத்தை அழுந்த தேய்த்து விட ஆரம்பித்தாள்.
நந்தா சோபாவிலேயே தான் அமர்ந்து இருந்தான். கல்பனா மகனின் மடியில் தலைவைத்து அழுது கொண்டிருந்தார்.
நந்தாவை பார்த்துக் கொண்டே படி இறங்கினாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் விழி அசைக்காமல்.
வீடு புயல் அடித்து ஒய்ந்த துறைமுகம் போல் அமானுஷ்யமாக இருந்தது.பூஜை அறை வாசலில் நிலைகுத்திய விழியோடு மிருதுளா அமர்ந்து இருந்தாள். சந்தியா, விக்கி, வீணா, மூவரும் அவரவர் துயரத்தை அள்ளிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தார்கள்.
தன்னை பிய்த்துப் போட்ட இன்னொரு துண்டைப் போல் மிருதுளாவைப் பார்த்தாள். மிருதுளாவையும் தாண்டிக் கொண்டு பூஜையறைக்குள் சென்றவள் சில நிமிடங்கள் கண்ணீர் மல்க கைகூப்பிக் கொண்டு நின்றாள்.
குங்கும பிரசாதத்தை எடுத்துக் கொண்டு மிருதுளாவின் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தவள், கலைந்திருந்த தலையை கைகளால் ஒதுக்கி விட்டு, மிருதுளாவின் முந்தானையை எடுத்தே அவள் முகத்தை துடைத்து விட்டாள். மறுப்பு காட்டக் கூட தெரியாமல் குழந்தை போல் அமர்ந்து இருந்தாள்.
கொஞ்சமாய் குங்குமத்தை விள்வி மிருதுளாவின் தாலியை எடுத்து வைத்து விட்டவள், அவள் நெற்றியிலும், உச்சியிலும் அடர்வாக வைத்து விட்டாள். நந்தா இமைக்காமல் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்.
”பாருங்க, இப்போ திடமா இருக்க வேண்டியது நாமதான். அத்தையும் சேர்த்து பரிதவிக்கிற உணர்வு குவியலாய் நான்கு குழந்தைகள் நம்மை சுத்தி இருக்கு. இப்போ நாம உடைஞ்சு போனால் இந்த குடும்பம் உடைஞ்சு போயிடும். ப்ளீஸ் மெல்ல வெளியில வாங்க.” என்று விட்டு நந்தாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
நந்தாவின் இடப்பக்க மடியில் தலைவைத்து படுத்திருந்த கல்பனா உறங்கியும் உறங்காமலும் கிடக்க, வானதி வலபக்கமாய் வந்தமர்ந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.
பேச்சே இல்லை. ஒருவர் மற்றவரை பார்த்துக் கொள்ளவுமில்லை. இலக்கின்றி இருவர் பார்வையும் தரையில் கிடந்தது.
”பாப்பா..?”
”தூங்கறா.”
”அமர்...”
”போயாச்சு.”
” சாப்பிடலயா...? ”
” முடியுமா..?’‘
’‘ நீதான் எல்லோரையும்... ”
’‘ நானும் மனுசிதான்.‘’
என்றவள் அவன் புஜத்தை இறுக்கிக் கொண்டு தோளில் முகம் புதைத்து அவன் காதுக்கு அருகில் கதற ஆரம்பித்தாள்.
* * *
காலையில் உறங்காமலே விழித்து இருந்தனர் அந்த வீட்டில். மயக்கத்தை தங்கள் கவலைகளை மறக்கும் ஆயுதமாக்கிக் கொண்டு இருந்தது யாழினியும், கல்பனாவும் மட்டும் தான்.
வானதி எழுந்து நந்த கோபாலனை தரிசித்து திரும்பி வந்தபோது கட்டிலில சாய்ந்து அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் யாழி.
”ப்ரெஸ் பண்ணிட்டு கீழே போய் சாப்பிட்டு அப்பா கூட இரு யாழி.”தலையணைகளை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தாள்.
”அம்மா, அமர் எங்கே?”
”வீட்டுக்கு போயிட்டார்.நைட் வரட்டுமா’னு கேட்டார். நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஈவினிங் வந்து அழைச்சிட்டு போறதா சொன்னாரு.”
நடந்து கொண்டே இருந்தவள் நின்று திரும்பி பார்த்தாள். கண்ணில் தீர்க்கமும், நெஞ்சில் அழுத்தமும் கூடி கொப்பளித்தது.
பத்து நிமிடத்தில் பல்துலக்கி முகம் அலம்பி தூக்கி முடியிட்ட கொண்டையோடு வந்தவள், மொபைலை எடுத்துக் கொண்டு கீழே இறங்க,
”யாழி, திடுதிடு’னு படியில ஒடாதே. பொறுமையா நடந்து போ.” வானதியின் வார்த்தைகளை வாங்க அவள் அங்கு இல்லை.
நந்தா ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான். விழி உயர்த்தி மகளைப் பார்க்க, நேற்றைய அத்தனை குழப்பத்தையும் வழித்து எறிந்த தெளிவு அந்த முகத்தில் மண்டிக் கிடந்தது.
”அப்பா.”என்றாள் நந்தாவுக்கு முந்திக் கொண்டு.
”பாப்பாக்கு டீ கொண்டு வாங்க சுசிலா மா.” மகளின் தோளில் கைபோட்டுக் கொள்ள, தோளில் முகம் பொதித்து, ஒற்றைக் கையால் நந்தாவை வளைத்துக் கொண்டாள்.
”பாப்பாக்கு, அப்பா மேல அன்பு வந்திருச்சா..?”
”அது எப்பவும் இருக்கு. அது இருக்கிறது அப்பாக்கு இப்பத்தான் தெரிஞ்சு இருக்கு.
போய் ஷேவ் செய்திட்டு வாங்க. எப்பவும் முகத்தில சொட்டுற ராஜ களை இப்படி தாடியோட இருந்தா மிஸ்ஸிங்.”
தாடையை நீவிக் கொண்டு பெரிதாய் சிரித்தான். நேற்றில் இருந்து நிலவிய இறுக்கமான சூழல் அவன் சிரிப்பு பட்டு, சிதறிக் கொண்டு இருந்தது..
”மாடியில் இருந்து ரூமை கீழே ஷிப்ட் பண்ணிக்கலாம்னு இருக்கேன் யாழி மா. தினமும் நாலு முறை ஏறி இறங்க களைப்பா இருக்கு.” சொன்னவன் முகத்தை கூர்ந்து பார்த்தவள், சட்டென்று நொடியில் மலர்ந்தாள்.
”நல்லது தான்பா. நான் இங்கேதான் இருக்கப் போறேன். எல்லாத்தையும் கொண்டு வந்து சேர்த்திடறேன்.” திடமான பதில் வந்தது.
”அம்மாடி, நீ இப்போ வெயிட் எல்லாம் தூக்க கூடாது மா.” அவசர கவலையோடு நந்தா சொன்னான்.
”அச்சோ, நான் ஏன் வேலை செய்யப் போறேன்..? அதான் துர்யன் இருக்கானே.” என்றவள் எழுந்து கிச்சனுக்குச் செல்ல மிருதுளா வெறித்த பார்வையோடு, சிந்தனை சூழ அங்கே நிற்க, சுசிலா தான் டீயை கப்புகளில் மாற்றிக் கொண்டு இருந்தார்.
”மிருதுமா”
மிருதுளாவின் இதயம் அத்தனை இக்கட்டிலும் ததும்பிக் கொண்டு வந்தது.
”யாழி பாப்பா.”
”உங்க ரூமை கீழே ஷிப்ட் பண்ணனும். துர்யன் எங்கே..?”
”நைட்டெல்லாம் அழுதிட்டு காலையில தான் படுத்தான். எழுப்பிட்டு வர்றேன்.”
மிருதுளா சென்று அழைக்கும் முன்னே கீழே இறங்கி வந்தவன், அப்பாவை பார்த்ததும் அழ முற்பட, முகம் திருப்பி யாழி அவனை முறைக்க, துர்யனின் கண்களில் அத்தனை வியப்பு.
’‘துர்யா, இன்னைக்கு ஒருநாள் காலேஜ் லீவு போட முடியும்..?‘
”முடியாது. ”
”பெரிய இவன். முடியாட்டி போ. நானா பார்த்துக்கறேன். என்ன, நான் வெய்ட் தூக்கணும். பரவாயில்லயா.” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டவளை வியப்பும் அதிர்வுமாக நிமிர்ந்து பார்த்தது துர்யன் மட்டுமல்ல, மற்றவர்களும் தான். இவளா நேற்று அத்தனை அழுது ஆர்பாட்டம் செய்தது’ என்று கேட்குமளவிற்கு முகத்தில் தெளிவு தெரிந்தது.
‘’தூக்கு, எனக்கு என்ன..?” என்றான் விட்டேர்த்தியாக.
‘’அப்புறம், நீ மாமாவாகிற சான்ஸ் மிஸ் ஆயிடும் பரவாயில்லயா..?” என்றாள் மெல்லிய முறுவலுடன்.
‘’லூசு மாதிரி பேசாதே. நான் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்.” என்றவன் அங்கிருந்து நகர, மெல்லிய புன்னகையோடே நந்தாவை நிமிர்ந்து பார்த்தாள்.
‘’அப்பா, நீங்க ஈவினிங் வர்றதுக்குள்ள ரூம் கீழே ஷிப்ட் ஆகியிருக்கும். இன்னைக்கு ஹாஸ்பிடல் போகணும் இல்ல..? எந்த டாக்டர் என்ன ட்ரீட்மெண்ட், எல்லா விபரத்தையும் என்கிட்ட தந்துட்டு போங்க. நான் அம்மா, இல்லாட்டி மிருதுமாவை கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்துடறேன்.”
‘’நீ எதுக்குமா சிரமப்படறே..? அதுவும் இந்த நிலைமையிலே..! நான் மிருதுளாவையோ, வானதியையோ அழைச்சிட்டு போறேனே.”
‘’நான் வர்றேன். அவ்வளவுதான்பா. போய் முதல்ல ஷேவ் பண்ணுங்க. இப்படி வெள்ளை தாடியோட இருந்தா எனக்கு பிடிக்காது.‘’கல்பனாவின் அறைக்குள்சென்று கத்தரிக்கோலுடன் வந்தவள், ஆங்காங்கு முளைத்துக் கொண்டிருந்த வெள்ளை முடிகளை மீசையில் இருந்து வெட்டி விட, நந்தா வெட்கம் தின்றாலும், மகளிடம் இருந்து முகத்தை மறுத்து பிடுங்கிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
பேசி முடித்து கீழே வந்த துர்யனுக்கு அந்தக் காட்சி சிரிப்பை தர, இறுக்கம் மறைய, இடுப்பில் கைவைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். வெட்டுவதில் இருந்து கழுத்தை வெட்டி தம்பியைப் பார்த்தவள், இறுமாப்போடு புருவத்தை நெளித்து அவனைப் பார்த்து என்ன..?’ என்பது போல் கேள்வி எழுப்ப,
‘’இல்ல, இப்போ எதுக்கு இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு வெட்டிட்டு இருக்கே..? நீ வெட்டுற வேகத்தைப் பார்த்தா, இன்னும் பத்து நாள்ல அப்பா மீசை இல்லாமத் தான் சுத்தணும்.”
‘’அப்பவும் எங்கப்பா அழகா சல்மான்கான் மாதிரி தான் இருப்பாரு போடா.” என்று முடித்தபோது அங்கே சிரிப்பொலி தொடங்கி இருக்க, துர்யனும் அத்தோடு தன்னை பொருத்திக் கொண்டான்.
‘’லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். என்ன செய்யணும்னு சொல்லு..? ‘’
‘’முதல்ல போய் சாப்பிட்டு வா. அப்பா ஆபிஸ் கிளம்பட்டும். ‘’ என்றவள் தானும் தயாராகிக் கொண்டு வர மாடிக்குச் சென்றாள்.
அங்கே கல்பனா மருமகள் மடி கவிழ்ந்து விசும்பிக் கொண்டு இருந்தார்.
அந்தக் காட்சியில் இதயம் இளகினாலும், மெல்லிய உறுதியோடு அம்மாவின் எதிரில் அமர்ந்தாள். கல்பனாவின் கண்கள் யாழியை தடவி தவித்தது.
‘’பாட்டி... எதுக்கு இப்போ அழறீங்க..? ஏற்கனவே உங்களுக்கு வீசிங் இருக்கு இதுல அழுதுட்டே இருந்தா, தலை குத்த ஆரம்பிச்சிடும்.”
‘’யாழிமா...” என்று எதுவோ சொல்ல வாயெடுத்த கல்பனாவை, முகம் நிமிர்த்தி கண்டிப்பாக பார்த்தாள்.
‘’நீங்க குழந்தையில்ல பாட்டி..! இங்கே இருக்கிற எல்லாருக்கும் ஆறுதல் சொல்லவேண்டிய இடத்தில நீங்க இருக்கீங்க. நீங்க அத்தனை பேர்கிட்டயும் ஆறுதல் எதிர்பார்த்துட்டு நிற்கிறீங்க.இட்ஸ் நாட் குட். ‘’
‘’நந்தாவைப் போல அப்பாவி, இந்த உலகத்துல இல்ல. தன்னைச் சேர்ந்த அத்தனை உயிர்களுக்கும் நியாயம் செய்ய நினைக்கிற மனுசன் இந்த காலத்துல ஏது..? அவனுக்கு போய் இப்படியொரு நோய் வந்தா, இந்த உலகத்தில நியாயமும், நீதியும், இல்லைனு தானே அர்த்தம்..! நான் உலவும் போதே, என் பிள்ளை கண்ணுக்கு முன்னாடி உருக்குலையறதை பார்க்கவும் இந்த வாழ்க்கை எனக்கு வேணுமா..?” கேட்டபடி அந்த கிழத்தி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கவும், யாழி பக்கத்தில் வந்து கல்பனாவின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டாள்.
மகளின் செயல்களை வியப்பும், நெகிழ்வுமாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் வானதி.
‘’மரணமும், நோயும், தகுதி பார்த்தெல்லாம் வர்றது இல்ல பாட்டி. அப்படி நினைச்சா நாமதான் உலகத்துல திருத்த முடியாத முட்டாள். ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை உலகத்துக்கு தந்த எடிசன், பிறக்கும் போதே குறையோடு தான் பிறந்தார். அப்போ அவர் சபிக்கப்பட்டவரா, இல்லை வரமளிக்கப்பட்டவரா..?
நோய்க்கு மருந்து இடணும். எந்த நோய்க்கும் முதல் மருந்து என்ன தெரியுமா, மறதி. நமக்கு வியாதி இருக்குங்கிறதை நாம முதல்ல மறக்கணும். அதுக்கு முதல்ல சுற்றி இருக்கிறவங்க ஒத்துழைக்கணும். யாரையும் மரணத்தில இருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் நோயில் இருந்து காப்பாற்ற முடியும். நான் காப்பாற்றுவேன். என் அப்பாவை காப்பாற்றுவேன். நீங்க யாரும் உங்க உணர்வின் பலகீனத்தை, அவர் முன்னால காட்டாம இருந்தாப் போதும்.” என்றாள் வானதியையும் சேர்ந்தே பார்த்து.
‘’யாழிமா, இந்த நோய் பத்தி தெரியாமா...” ஆரம்பித்த பாட்டியை கை உயர்த்தி தடுத்தாள்.
‘’உங்களுக்கு இந்த நோய் பற்றி எல்லாம் தெரியுமா..? என் அப்பாவுக்கும் மரணம் வரும். அது இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் கழிச்சு. ‘’உறுதியும் அரிதியுமாக சொல்லி விட்டு நகரும் மகளை வியப்புத் தின்ன, பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி. ஒற்றை இரவில் தன்மகள் எப்படி இத்தனை வளர்ந்து போனாள் என்று..!
கல்பனாவை சமாதானம் செய்து குளிக்க அனுப்பிவிட்டு வானதி வெளியே வர, யாழி அமருடன் போனில் பேசிக் கொண்டு இருக்க முடித்துவிட்டு வரட்டும் என்று காத்திருக்க ஆரம்பித்தாள்.
வாசலில் கிடந்த மடக்கு கட்டிலில் யோசனையாய் அமர்ந்திருந்த அம்மாவின் முன்பாக வந்து மோடாவில் அமர்ந்தாள்.
‘’மா. இனி எப்பவும் அப்பா முன்னாடி, கவலையும் குழப்பமுமா உட்கார கூடாது சரியா.” என்றபடி அம்மாவின் தலைமுடியை கைகளால் ஒழுங்கு செய்ய ஆரம்பித்தாள். நிமிர்ந்து பார்த்த வானதியின் முகத்தில் வானளாவிய வியப்பு.
‘’என் பொண்ணு எப்போ இத்தனை புத்திகாரி ஆனாள்..? என்ன பொறுப்பு, என்ன அறிவு.” என்ற வானதியின் வயிற்றில் கைவைத்து யாழினி சொன்னாள்,
‘’இங்கே இருந்தப்பவே நான் அப்படித்தானாக்கும். என்ன, என் அம்மா ரொம்ப ட்யூப்லைட்டா இருக்கிறதாலே, அதை கண்டுபிடிக்க இருபது வருசம் ஆகி இருக்கு.” என்றாள் கன்னத்தை நாக்கால் துருத்திக் கொண்டே.
”எனக்கு தேவைதான் டி. அமர் வந்ததும் வீட்டுக்கு கிளம்பறே தானே..?”
‘’இல்லமா. இனி அப்பா கூடத்தான். அதுதான் அமர்கிட்டே சொல்லிட்டு இருந்தேன்.” என்ற மகளை முதன்முறையாக கவலையாக பார்த்தாள்.
‘’இல்ல யாழிமா. அது தப்பு. இரண்டு மூணு நாள் இங்கே இருக்கலாம். பிறகு இங்கே இருக்ககூடாது. பக்கத்திலே தானே இருக்க. வந்து வந்து பார்த்துக்கோ. அப்பாகூட நாங்க எல்லாரும் இருக்கோம்.” என்ற அம்மாவை தீர்க்கமாய் பார்த்து சொன்னாள்,
‘’முடியாதுமா. நான் அமர்கிட்டே பேசிட்டேன். அத்தைகிட்டயும் தான். என்னால அப்பாவை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. இத்தனை வருடங்கள் நீதானே என்னையும், அப்பாவையும் பிரிச்சு வச்சே..? இனியும் அதை செய்ய பார்க்காதமா.”
கேலிக்குத்தான் யாழினி சொன்னாள் என்றாலும், வானதிக்கு மனசு பொக்’ன்று போனது. யாழினியின் வார்த்தைகளின் கூர்மை, கோபத்தை விட, குதர்க்கத்தில் குத்தி கிழிக்கிறது.
அம்மாவின் மௌனமும், அதன் பின் இருந்த வலியும், யாழியை சுட்டிருக்க வேண்டும். மெல்ல தரையில் இறங்கி அமர்ந்து அம்மாவின் மடி கவிழ்ந்து கொண்டாள். சும்மா பம்மென்று அமர்ந்திருந்த அம்மாவின் கரத்தை எடுத்து தன் தலையின் மீது வைத்து தடவச் சொன்னாள்.
‘’போடி பேசாமே. எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. என்னால தாங்கவே முடியல தெரியுமா..? ‘’
‘’போதும்மா. சரியோ தப்போ அப்பாவை எனக்கு தராமே தள்ளி வச்சதுக்கு பின்னாடி ஆயிரம் நியாயம் இருந்தாலும், என் இழப்பு இழப்பு தானேமா..? என் அப்பா, ஒரு வேதனையில மாட்டிட்டு இருக்கும் போது, நான் அவரை இப்படியே விட்டுட்டு எப்படிமா போவேன்.”
‘’நாங்க இல்லயா அவரை பார்த்துக்க..? உன் வாழ்க்கையை நான் தானே யாழி யோசிக்கணும்.”
”நீங்க எல்லாரும் அப்பாவை பார்த்துக்கறதை யோசிக்கிறீங்க. நான் அப்பாவை காப்பாத்தறதை மட்டுமே யோசிக்கிறேன், காப்பாத்துவேன். இதப்பாருமா நீ எதையும் அப்பாகிட்டே பேசக் கூடாது சரியா..?”
முகத்தை மட்டும் நிமிர்த்தி அம்மாவை பார்த்தாள்.
‘’ஏன் யாழி இங்கே சைக்கியார்டிஸ்ட் நீயா, நானா டி.?” என்ற கேள்வியில் ஆதங்கம் பொங்கி வழிந்தது.
‘’அம்மா, அது உங்க தொழில். இது என் உணர்வு. என் பந்தம், என் பாசம். அதுதான் உலகத்தை ஆட்சி செய்யற வேர். கண்டிப்பா அது ஜெயிக்கும். கண்டிப்பா உங்க தொழிலுக்கு நான் போட்டியாக எல்லாம் வந்துட மாட்டேன்.” என்று சொல்லி சிரித்த மகளின் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தம் பதித்தவளின் கண்கள் குளமாகி இருந்தது.
‘’யாழி, இப்போ என் உணர்வுகள் எப்படி இருக்கு தெரியுமா.? இருபத்தி நாலு வருசமா என் சகலமும் நந்தா மட்டும்தான். எனக்காக வாழாம அவர்க்குள்ளே வாழ்ந்துட்டு இருக்கேன். அந்த கூடு உடைஞ்சா, இந்த குருவியும் செத்துத்தான்டி போயிடும்.” வானதி வெடித்து கதறிச் சொன்ன போது, இதழ் முழுக்க புன்னகையும், கண்கள் முழுக்க கண்ணீருமாய் அமர்ந்திருந்தாள் யாழி.
‘’எனக்கு அது தெரியும் மா.”
‘’ யாழி...”
‘’நீ உன்னை கட்டுபடுத்திட்டு எல்லாரையும் கட்டிக்காக்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்கே. ஆனால் துயரம்ங்கிறது நொடியில் இணைப்பு கிடைக்கிற அலைவரிசை. அது ஒருத்தர்கிட்டே இருந்து வீடு முழுக்க உள்ள எல்லோர்கிட்டயும் இணைப்பை எளிமையா ஏற்படுத்தி தந்திடும். பிறகு வீடு என்னாகும்மா..?
மெல்ல மெல்ல எல்லோரையும் மீட்டெடுக்கணும் மா. ஈவினிங் டாக்டர்கிட்டே போயிட்டு வந்தோம்னா சில தெளிவுகள் கிடைக்கும். நீ வர்றியாமா..? மிருதுமா வருவாங்க.” பிடிக்குள் இருந்த மகளின் தாடையை பற்றி நிமிர்த்தி சின்ன பொறாமையுடன் கேட்டாள்.
‘’அதென்ன சட்டுனு எல்லா உறவும் ஒரு நாளையில உனக்கு வந்திருச்சு. மிருதுமா, பாட்டி, அக்கா... ம்க்கும்...”
‘’பொறாமை பொறாமை...! வானதிமாக்கு பொறாமை. அவங்களைத் தவிர நான் இதுவரைக்கும் யாரையும் முறை வச்சு கூப்பிட்டது இல்லைங்கிற பொறாமை.”
’வானதி முறைத்துக் கொண்டே எழுந்து போக, தனியாக நின்ற யாழியின் முகம் நொடியில் மாறிப் போனது. யாருமற்ற தனிமை, உள்ளுக்குள் உறங்க வைத்திருந்த உணர்வுகளை உருட்டி புரட்டி விழிக்க வைக்க, கால்களை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்தாள்.
மொபைலை எடுத்து நந்தாவின் புகைப்படத்தை எடுத்து பார்த்தவளுக்கு அழுகையும், கேவலும் வெடித்துக் கொண்டு வந்தது.
‘’என்னை மன்னிச்சிடுங்கப்பா. உங்களை நிறையவே அவமானப்படுத்திட்டேன். அழ வச்சிட்டேன். அதுக்கு பழிவாங்க, காலம் முழுக்க என்னை அழ வச்சிட்டு போயிடாதீங்கப்பா. எனக்கு நீங்க வேணும்பா.” மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே இரண்டு கைகளாலும் வாயை மூடிக் கொண்டு மடங்கி அழ ஆரம்பித்தாள்.
”...நீரு நெலம் நாலு பக்கம்
நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
அத்தனையும் நீதானே
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா
ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி
நானறிவேன் ஒன் மனச
நெஞ்சமும் புண்ணாச்சு
காரணம் கண்ணாச்சு...”
          .அத்தியாயம் -30

 " இது  தீவிர சாற்றானைைய புற்றுநோய். இ
து பொதுவா பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குகிறது. இதை மருத்துவ உலகத்தில் ஏ.எம்.எல். என்று நாங்கள் சொல்வோம். இதற்கு பெஸ்ட் ட்ரீட்மெண்ட்டுன்னா இதுவரைக்கும் கீமோதெரபியும், அதன் பின்னாக ரேடியேசன் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது தான்.இதில் நோயின் தன்மையைப் பொறுத்து, ஐந்து ஆண்டுகள் வரைக்கும் உயிர் பிழைப்பதிற்கான வாய்ப்பு 40 சதவிகிதம் வரைக்கும் இருக்கு.”" இது லுகேமியாவில் ஒரு வகை. தீவிர

டாக்டர் ராவ் சொல்லிக் கொண்டிருக்க மிருதுளா உடைந்து கண்களில் நீரோடு தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள போராட, வானதி மெல்ல கைகளை பற்றி ஆறுதல் சொன்னாள். நந்தா எந்த உணர்வுகளும் இல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அவனுக்கு இந்த தகவலும் செய்தியும் பழையது என்பதால், எந்த பதட்டமும் அவனை சூழ்ந்திருக்கவில்லை.யாழியும், அமரும் மருத்துவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.
‘’ஏன் டாக்டர் கீமோதெரபி எதுக்கு தர்றோம்..? அது புற்று நோய் செல்லை அழிக்கிறதுக்கு தானே..? அது முழுசா அழிஞ்சிடுச்சுன்னா பிறகு நீங்க ஏன் இந்த காலஅளவெல்லாம் சொல்றீங்க? ” மிருதுளா தவிப்போடு கேட்க, நந்தா மெல்ல அவள் தோளை அணைத்து விடுவித்தான்.
‘’உங்க தவிப்பு புரியுது மிசஸ் நந்தா. ஆனால்,நோயும், அதன் தாக்கமும், தன்மையும் வேறு விதமானவை. இதுக்கு நோய் பற்றிய நீண்ட புரிதல்கள் வேணும். ஆனால் இப்போ நீங்க இருக்கிற மனநிலையில எத்தனை தெளிவான மனிதர்களாக இருந்தாலும் நோய் பற்றிய சிந்தனையை விட, நோயாளி பற்றிய சிந்தனையே அதிகமாக இருக்கும்.” மெல்லிய முகமுறுவலுடன் சொன்னார்.
வானதி உணர்வுகளை வெளிக்காட்டாமல் அமர்ந்து இருந்தாலும், மிருதுளா தன்னை கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் ஓய்ந்து போய் தான் அமர்ந்திருந்தாள்.
‘’நீங்க கேட்ககூடிய மனநிலையில் இல்லாது போனாலும், விளக்க வேண்டியது ஒரு மருத்துவராய் என்னுடைய கடமை. லுகேமியா’னா வெள்ளை ரத்தம்னு ஒரு பொருள் உண்டு. எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ரத்தப் புற்றுநோய் இரத்த அணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படுகிறது.
நம்ம உடலுக்கு தேவையான ஆரோக்கியமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்தும் போதோ அல்லது உயிரணுக்களின் பெருக்கம் அசாதாரணமான வேகத்தில் நிகழும்போதோ இது ஏற்படுது.
நிஜத்தில் ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கான்னு கண்டறிய எந்த ஸ்கீரினிங் டெஸ்டும் இல்லை. சமீபத்தில் நடந்த பல ஆராய்சிகள் புற்று நோயாளிகளின் வாழ்நாள் நீடிப்பிற்கான நம்பிக்கையான கருத்துகளை வெளியிட்டு இருக்கின்றன.”
‘’ஆயுள் நீடிப்பு பற்றிய ஆறுதலே வேண்டாம் கியூரபிள் ஆகணும் டாக்டர்.” உறுதியும் அழுத்தமுமாக சொன்ன யாழினியை அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தார் டாக்டர் ராவ்.
”தட்ஸ் குட். உங்களுடைய உணர்வுகள் புரியுது. ஆனாலும் மருத்துவத் துறையில் உங்க குடும்பத்துகே நெருங்கின தொடர்பும் இருக்கிறதால, எந்த தவறான வாக்குறுதிகளையும் தந்து உங்களுக்குள்ள போலி நம்பிக்கையை வளர்க்க நான் விரும்பல.பிறக்கும் போதே எக்ஸ்பயரி டேட் எல்லோருக்கும் இருக்கு. ஆனால் துரதிஷ்டவசமா அந்த தேதி நந்தா மாதிரியான சிலருக்கு தெரிய வந்திடுது. இன்னும் சொல்லப் போனால் இந்த சிகிச்சைக்கான வாரண்டி பீரியடு தான் இங்கே குறிப்பிட்டு சொல்ற ஐந்தாண்டு, பத்தாண்டுகள்ங்கிற கணக்கு எல்லாம். அதைத் தாண்டியும் வாழந்தால் எப்படின்னு ஆராயவும் முடியாது, அதற்கு முன்னாலேயே எல்லாம் முடிந்து போனால் ஏன்னு யாரிடமும் விளக்கம் கேட்கவும் முடியாது. இதுதான் இன்றைக்கும் மருத்துவத்துறை மட்டுமல்ல, மற்ற எல்லாத் துறையிலும் நிலைமை.
நம்பிக்கை முக்கியம், அதைவிட நேர்மறை சிந்தனைகள் முக்கியம். அது பெரிய ஆதார சுருதியா இருக்கும் எல்லா நோய்களுக்கும்.”
”இப்போ அப்பாவுடைய உடலில், நோயின் நிலை எப்படி இருக்கு டாக்டர்..?” யாழினியால் எத்தனை முயன்றும் குரலில் பதட்டத்தை மறைக்க முடியவில்லை.
மெல்ல மகளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் நந்தா. நேற்று மழையில் விழுந்து உருண்டு புரண்டு அழுத அதே பரிதவிப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது.காலையில் இருந்து உணர்வுகளை அடக்கி அடைகாத்து பெரிய மனுசத்தனத்தை காட்டிய யாழினியை கண்டு அந்த நிலையிலும் உள்ளம் பூரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
”இது ஒரு விசித்திர நிலை. நோயாளிக்குள் தான் நோய் பதிங்கிட்டு இருக்கு. நோய் மெலியணும், நோயாளி புத்துணர்வாகணும். ஆனால் இது இரண்டையும் ஒரே உடம்பு செய்யணும். விசித்திரமாக இல்ல..?
நந்தா இங்கே வந்தப்போ அவர் ஃபஸ்ட் ஸ்டேஜ்ல தான் இருந்தார். இப்போ இரண்டாவது நிலையை வேகமா எட்டியாச்சு.அப்போ அவருக்குள் எத்தனை நாளாய் இந்த வியாதி அரிதாரம் பூசிட்டு இருந்ததுன்னு தெரியல.
மருந்துகள் எடுத்துக் கொண்டுமே கூட அவர் செகண்ட் ஸ்டேஜ்க்கு பயணமாகிட்டார். இப்போ நம்மகிட்ட இருக்கிற வாய்ப்பு கீமோதெரபி, அதற்கு அடுத்து ரேடியேசன்.கீமோதெரபி பற்றிய தேவையான விளக்கங்கள் உங்களுக்கு சென்டரில் அளிக்கப்படும். நிறைய ஓய்வு தேவைப்படும். உங்கள் வேலையை வீட்டில் இருந்து தொடர முடியுமானு பாருங்க.” ராவ் முடித்துக் கொண்டு அடுத்த பேசண்டை பார்ப்பதிற்காக இவர்களின் முகம் பார்க்க எழுந்து வெளியில் வந்தார்கள்.
கீமோதெரபிக்கான அத்தனை செயல் முறைகளையும் வாங்கிக் கொண்டு வீடு வந்த போது இரவாகி இருந்தது. லதா மகளோடு வந்து காத்திருக்க, சந்தியாவும் குடும்பத்தோடு வந்து இருந்தாள்.
மருத்துவ அறிக்கையை விசாரித்து, அவரவர்க்கு தெரிந்த மருந்துகள் பற்றி ஆளுக்காள் ஆலோசனை கூறி சமைக்க நேரமில்லை என்று சந்தியா ஆர்டர் செய்த இட்லிகளை உண்டு முடித்து கிளம்ப, யாழி மெல்லிய தயக்கத்தோடு லதாவிடம் வந்து நின்றாள்.
சோர்ந்து போயிருந்த மருமகளின் முகத்தை கவலையாக பார்த்தார்.
”ரொம்ப எமோசனல் ஆகக்கூடாது யாழிமா. உனக்குள்ள ஒரு உயிர் இருக்கு.பெத்தவங்க வேணா நம்முடைய பொறுப்பா இருக்கலாம். ஆனால் குழந்தை இறைவன் நம்மீது வச்ச நம்பிக்கை. அதை காப்பாத்தணும்.” மெல்ல மருமகளின் வயிற்றை தடவிச் சொன்னார்.
”என்னால இந்த சந்தோசத்தை அனுபவிக்கவே முடியல ஆன்ட்டி.” என்றாள் மெல்லிய விசும்பலுடன்.
”இதான் கூடாதுன்னு சொன்னேன். நந்தாண்ணா தன் பாப்பாவை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாங்க. அதுவும் குட்டி பாப்பா வேற வரப்போகுதுங்கிற உற்சாகம் போதும். ”
”நான் இங்கேயே இருக்கட்டுமா கொஞ்சநாள்.”
”எங்கே வேணா இரு. ஆனால் பத்திரமா இரு. இது நம்ம குடும்பத்து முதல் வாரிசு. அதுக்கு எதுவும் ஆகாம நீ பார்த்துகிட்டா போதும். கூப்பிடு தூரத்தில தான் வீடு. நாங்களும் தினமும் வந்து போறோம். ” மருமகளின் கன்னத்தை தட்டிவிட்டு ஆயிரம் பாதுகாப்பு சொல்லி விட்டுத்தான் லதா சென்றார். உடன் கிளம்பிய மகனை தனியாய் அழைத்துப் போய் கிசுகிசுத்தார்,
”நீ ராத்திரி இங்கேயே படுக்க வந்திடு அமர்.”
”அம்மா, எதுக்குமா அதெல்லாம்..?” என்றான் சின்ன சங்கடத்தோடு.
”இல்லடா பொம்பளைங்களா இருக்காங்க. அவருக்கும் உடம்பு சரியில்லை. துர்யன் சின்ன பையன். அவ்வளவு விபரம் போதாது. ராத்திரியில ஏதோ அவசரம்னா கூட ரொம்பவும் கைசேதம் ஆயிடும். இதையும் போய் உன் பொண்டாட்டிகிட்டே உளறி வைக்காதே. நானும் ஆர்த்தியும் தனியா இருந்து பழக்கம்தானே. நீ யோசிக்காதே தம்பி.”
இக்கட்டுகளில் காட்டும் பக்குவம் தான் மனிதர்களின் உண்மை முகம். அமர் அங்கேயே தங்கிக் கொண்டது யாழிக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.
கீழ்தளத்தில் இருந்த அறைக்கு நந்தாவின் உடைமைகள் மாறி இருந்தது. மிருதுளாவை மாடி அறையிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னான்.இருவருக்குமான அறையாய் அது மாறிப் போனால், வானதி இந்த இறுதி நாட்களில் கூட தள்ளி இருப்பாள் என்ற சிந்தனை அவனை அழுத்தி இருந்தது.
அந்த அறைக்கு நேர் இருந்த அறையில் யாழியும் அமரும் படுக்கையை போட, நந்தா பதறிக் கொண்டு ஓடி வந்தான்.
”பாப்பா, இது ரொம்ப சின்ன ரூம் டா. உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகாது. உன் ரூம் என்னாச்சு மா?”
”இந்த நிலைமையில அடிக்கடி இரண்டு மாடி ஏறி இறங்க கூடாதுப்பா. ஃபேன் இருக்குல்ல அது போதும். ரொம்ப வேர்த்தால் உங்க ரூம்ல வந்து படுத்துக்கறேன்.” பெட்டை தரையில் இழுத்து போட்டுக் கொண்டு, கதவை விசாலமாக திறந்து வைத்துக் கொண்டு இருவரும் படுக்க, நந்தாவிற்கு யானை பலம் வந்தது போல் இருந்தது அந்த அருகாமை.
பத்து நிமிடத்தில் தலையணையோடு இரு அறைகளுக்கும் நடுவில் இருந்த சின்ன இடைவெளியில் வானதி வந்து படுத்தாள். நந்தாவும், யாழியும் கீழே இருக்க கண்ணை குத்தி எடுத்தாலும் உறக்கம் ஒத்திப் போகவே, கீழே இறங்கி வந்திருந்தாள்.
ஐந்து நிமிடத்தில் கழுத்தை ஒரு பூங்கரம் தழுவ, கண் விழித்து யாழியின் முகம் தேட, அங்கே இருந்ததோ தபஸ்வி.
”தூக்கமே வரல நதி மா. அப்பாக்கு சரி ஆயிடும் இல்ல.?”‘ காதுக்குள் பயத்தோடு கிசுகிசுத்தாள்.
”ஆயிடும் டா.” மகளை இறுக்கி நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு உறங்க விளைய, கண் அயர்ந்த இடைவெளியில் அங்கே படுக்கைகள் கூடிப் போய் இருந்தது.
உறக்கத்தில் கண் விழித்து பாத்ரூம் சென்று விட்டு அறை வாசலுக்கு வந்த நந்தா விக்கித்துப் போனான்.
அவன் அறைக்கும் யாழியின் அறைக்கும் நடுவில் இருந்தது சின்ன இடைவெளி. யாழி அறைக்கதவு திறந்து மெத்தையை தரையில் போட்டு நந்தாவின் அறையை பார்த்துக் கொண்டு உறங்கி இருக்க, கண்ணியமான இடைவெளியோடு அமர் தரையில் படுத்து இருந்தான்.
அறைவாசலில் வானதி, அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு தபஸ்வி. அதற்கடுத்து கல்பனா, அவரை ஒட்டி நந்தாவின் அறை வாசலை அடைத்துக் கொண்டு மிருதுளாவும் படுத்து இருந்தார்கள். அவர்கள் தலைமாட்டில் சோபாவை நகர்த்திப் போட்டு துர்யன் முடங்கி இருக்க, பார்த்த நந்தாவின் இதயமே பேச்சற்று இளகிப் போனது.
’இந்த பேரன்பிற்கு என்ன கைமாறு செய்துவிட்டு போகப் போகிறேன்...’ என்ற நினைப்பே நெஞ்சை அறுத்தது.
”...நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என்
நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை
பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை...”


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page